﻿<?xml version="1.0" encoding="UTF-8"?>
<bible translation="Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)" status="இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc. அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை. Tamil Readerʼs Version™ New Testament Copyright © 2002, 2022 by Biblica, Inc. Used with permission. All rights reserved worldwide." link="https://www.bible.com/bible/3281/MAT.7.TRV">
	<testament name="New">
		<book number="40">
			<chapter number="1">
				<verse number="1">ஆபிரகாமின் மகனான, தாவீதின் மகன் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் பெயர் அட்டவணை:</verse>
				<verse number="2">ஆபிரகாம், ஈசாக்கின் தகப்பன். ஈசாக்கு, யாக்கோபின் தகப்பன். யாக்கோபு, யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்.</verse>
				<verse number="3">யூதா, பாரேஸ் மற்றும் சாராவின் தகப்பன். அவர்களின் தாய் தாமார். பாரேஸ், எஸ்ரோமின் தகப்பன். எஸ்ரோம், ஆராமின் தகப்பன்.</verse>
				<verse number="4">ஆராம், அம்மினதாபின் தகப்பன். அம்மினதாப், நகசோனின் தகப்பன். நகசோன், சல்மோனின் தகப்பன்.</verse>
				<verse number="5">சல்மோன், போவாஸின் தகப்பன். போவாஸினுடைய தாய் ராகாப். போவாஸ், ஓபேத்தின் தகப்பன். ஓபேத்தினுடைய தாய் ரூத், ஓபேத், ஈசாயின் தகப்பன்.</verse>
				<verse number="6">ஈசாய், தாவீது அரசனின் தகப்பன். தாவீது, சாலொமோனின் தகப்பன். சாலொமோனுடைய தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.</verse>
				<verse number="7">சாலொமோன், ரெகொபெயாமின் தகப்பன். ரெகொபெயாம், அபியாவின் தகப்பன். அபியா, ஆஷாவின் தகப்பன்.</verse>
				<verse number="8">ஆஷா, யோசபாத்தின் தகப்பன். யோசபாத், யோராமின் தகப்பன். யோராம், உசியாவின் தகப்பன்.</verse>
				<verse number="9">உசியா, யோதாமின் தகப்பன். யோதாம், ஆகாஸின் தகப்பன். ஆகாஸ், எசேக்கியாவின் தகப்பன்.</verse>
				<verse number="10">எசேக்கியா, மனாசேயின் தகப்பன். மனாசே, ஆமோனின் தகப்பன். ஆமோன், யோசியாவின் தகப்பன்.</verse>
				<verse number="11">யோசியா, எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.</verse>
				<verse number="12">பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட பின்: எகோனியா, சலாத்தியேலின் தகப்பன். சலாத்தியேல், சொரொபாபேலின் தகப்பன்.</verse>
				<verse number="13">சொரொபாபேல், அபியூத்தின் தகப்பன். அபியூத், எலியாக்கீமின் தகப்பன். எலியாக்கீம், ஆசோரின் தகப்பன்.</verse>
				<verse number="14">ஆசோர், சாதோக்கின் தகப்பன். சாதோக், ஆகீமின் தகப்பன். ஆகீம், எலியூத்தின் தகப்பன்.</verse>
				<verse number="15">எலியூத், எலியேசரின் தகப்பன். எலியேசர், மாத்தானின் தகப்பன். மாத்தான், யாக்கோபின் தகப்பன்.</verse>
				<verse number="16">யாக்கோபு, யோசேப்பின் தகப்பன். யோசேப்பு, மரியாளின் கணவன். மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார்.</verse>
				<verse number="17">இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீது வரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும் வரை பதினான்கு தலைமுறைகளும், நாடு கடத்தப்பட்டதிலிருந்து கிறிஸ்து வரையிலும், பதினான்கு தலைமுறைகளும் இருந்தன.</verse>
				<verse number="18">இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: அவரது தாய் மரியாள், யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேரும் முன்பே, அவள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள் எனத் தெரியவந்தது.</verse>
				<verse number="19">அவளது கணவன் யோசேப்பு, நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன் பகிரங்கமாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக ரத்துச் செய்துவிட நினைத்தான்.</verse>
				<verse number="20">அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனே, யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதைக் குறித்துப் பயப்படாதே; ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியானவரினால் உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள்.</verse>
				<verse number="21">அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு ‘இயேசு’ என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களது பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான்.</verse>
				<verse number="22">கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாய் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன:</verse>
				<verse number="23">“ஒரு கன்னிப்பெண் கருவுற்று ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுவேல் என அழைப்பார்கள்.” இம்மானுவேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்முடன் இருக்கின்றார்” என்பதே.</verse>
				<verse number="24">யோசேப்பு தூக்கம் கலைந்து எழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.</verse>
				<verse number="25">ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை, யோசேப்பு அவளுடன் தாம்பத்திய உறவுகொள்ளவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு எனப் பெயரிட்டான்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">ஏரோது அரசனாய் இருந்த காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்து,</verse>
				<verse number="2">“யூதருக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே இருக்கின்றார்? நாங்கள் அவரின் நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம். அவரை வழிபட வந்திருக்கிறோம்” எனக் கேட்டார்கள்.</verse>
				<verse number="3">ஏரோது அரசன் இதைக் கேட்டபோது கலக்கமடைந்தான். எருசலேம் மக்களும் அவனுடன் சேர்ந்து கலக்கமடைந்தனர்.</verse>
				<verse number="4">அப்போது அவன் எல்லா தலைமை மதகுருக்களையும், நீதிச்சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, “மேசியா எங்கே பிறப்பார்?” எனக் கேட்டான்.</verse>
				<verse number="5">அவர்களோ, “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார்; ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே:</verse>
				<verse number="6">“ ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே, யூதாவை ஆட்சி செய்பவர்களுள் நீ அற்பமானவனல்ல; ஏனெனில், உன்னிடத்திலிருந்து ஆள்பவர் ஒருவர் வருவார். அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்’ ” எனப் பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="7">அதன்பின் ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை அவர்களிடமிருந்து கேட்டு அறிந்துகொண்டான்.</verse>
				<verse number="8">அவன் அவர்களிடம், “நீங்கள் போய் குழந்தையைக் கவனமாய்த் தேடிப் பாருங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரைப் பணிந்துகொள்ளும்படி உடனே எனக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.</verse>
				<verse number="9">அரசன் கூறியதைக் கேட்ட பின், அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள். அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம், அவர்களுக்கு முன்னாகச் சென்றது. அது குழந்தை இருக்கும் இடம் வரை வந்து, அதற்கு மேலாக நின்றது.</verse>
				<verse number="10">அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, அதிக மனமகிழ்ச்சி கொண்டவர்களாய் சந்தோஷமடைந்தார்கள்.</verse>
				<verse number="11">அவர்கள் வீட்டிற்குள் சென்றபோது, தாய் மரியாளுடன் குழந்தை இருக்கக் கண்டு, தரையில் விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள். பின்பு தங்கள் திரவியப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றை பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="12">அதன்பின் ஏரோதிடம் திரும்பவும் போகக் கூடாது என அவர்கள் கனவிலே எச்சரிக்கப்பட்டிருந்தபடியால், தங்கள் நாட்டிற்கு வேறு வழியாகத் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="13">அவர்கள் திரும்பிச் சென்ற பின்பு, கர்த்தரின் தூதன் ஒருவன் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டு, எகிப்துக்குத் தப்பிப் போ. நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு. ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காக வழி தேடுகிறான்” என்றான்.</verse>
				<verse number="14">உடனே யோசேப்பு எழுந்திருந்து, குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றான்.</verse>
				<verse number="15">அவன் ஏரோது மரணமடையும் வரைக்கும் அங்கேயே இருந்தான். இவ்வாறு கர்த்தர் தனது இறைவாக்கினன் மூலமாக, “எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்” என்று கூறியிருந்தது நிறைவேறியது.</verse>
				<verse number="16">தான் அறிஞர்களினால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபோது, ஏரோது கடுங்கோபம் கொண்டான். அதனால் அவன் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள இரண்டு வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடைய எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான்.</verse>
				<verse number="17">அப்போது இறைவாக்கினன் எரேமியா மூலமாய் கூறப்பட்டது நிறைவேறியது:</verse>
				<verse number="18">“ராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது, அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள். அவர்களை இழந்ததனால் ஆறுதல் பெற மறுக்கிறாள்.”</verse>
				<verse number="19">ஏரோது மரணித்த பின், கர்த்தரின் தூதன் எகிப்தில் இருந்த யோசேப்புக்குக் கனவில் தோன்றி,</verse>
				<verse number="20">“எழுந்திரு, குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குப் போ; ஏனெனில் குழந்தையின் உயிரை வாங்கத் தேடியவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றான்.</verse>
				<verse number="21">எனவே அவன் எழுந்து, குழந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டிற்கு வந்தான்.</verse>
				<verse number="22">ஆனால் ஏரோதின் வாரிசான அவனது மகன் அர்கெலாயு, யூதேயா பிரதேசத்தில் ஆட்சி செய்கின்றான் என யோசேப்பு கேள்விப்பட்டபோது, அவன் யூதேயாவுக்குப் போகப் பயந்தான். அத்துடன் அவன் கனவிலே எச்சரிக்கப்பட்ட படியால், கலிலேயா மாவட்டத்திற்குப் போய்,</verse>
				<verse number="23">அங்கு நாசரேத் என்ற ஊருக்குச் சென்று, அங்கே குடியிருந்தான். எனவே, “அவர் நசரேயன் என அழைக்கப்படுவார்” என இறைவாக்கினரால் இயேசுவைக் குறித்து சொல்லப்பட்டது இவ்வாறு நிறைவேறியது.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">அந்நாட்களில் யோவான் ஸ்நானகன், யூதேயாவின் பாலைநிலப் பகுதியில் வருகை தந்து,</verse>
				<verse number="2">“மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” என்று பிரசங்கித்தான்.</verse>
				<verse number="3">“ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கென நேரான பாதைகளை உண்டுபண்ணுங்கள்’ என்று பாலைநிலத்தில் ஒரு குரல் அழைக்கின்றது” என இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாக கூறப்பட்டவன் இவனே.</verse>
				<verse number="4">யோவானின் உடைகள் ஒட்டக உரோமத்தினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.</verse>
				<verse number="5">மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பிரதேசம் அனைத்திலிருந்தும், அவனிடம் போனார்கள்.</verse>
				<verse number="6">அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, யோர்தான் ஆற்றிலே அவனிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="7">ஆனால், தான் ஞானஸ்நானம் கொடுக்கும் இடத்திற்கு அநேக பரிசேயரும் சதுசேயரும் வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது: “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களுக்கு எச்சரிக்கை செய்தது யார்?</verse>
				<verse number="8">நீங்கள் மனந்திரும்பியது உண்மையெனில், அதை நற்செயலில் காண்பியுங்கள்.</verse>
				<verse number="9">‘ஆபிரகாம் எங்கள் தகப்பனாய் இருக்கின்றார்’ என்று நீங்கள் உங்களுக்குள் சொல்லிக்கொள்ளலாம் என நினைக்க வேண்டாம். இந்தக் கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="10">ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே கோடரி ஆயத்தமாய் இருக்கின்றது. நல்ல கனி கொடாத ஒவ்வொரு மரமும் வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பிலே எறியப்படும்.</verse>
				<verse number="11">“மனந்திரும்பியவர்களுக்கு நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். ஆயினும் என்னிலும் வல்லமையுடைய ஒருவர், எனக்குப் பின் வருகின்றார். அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியானவன் அல்ல. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலும், நெருப்பினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.</verse>
				<verse number="12">தானியம் தூற்றுகின்ற உபகரணம் அவர் கையில் இருக்கின்றது. அவர் தமது கதிரடிக்கும் களத்தை அதனால் சுத்தம் செய்து, கோதுமையைத் தனது களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்வார். பதர்களையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப் போடுவார்” என்றான்.</verse>
				<verse number="13">அப்போது யோவானிடம் ஞானஸ்நானம் பெறுவதற்காக இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.</verse>
				<verse number="14">ஆனால் யோவான் அவரிடம், “நான் உம்மிடம் ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க, நீர் என்னிடம் வரலாமா?” என்று சொல்லி, அவரைத் தடுக்க முயற்சித்தான்.</verse>
				<verse number="15">அதற்கு இயேசு, “இப்போது இப்படியே இருக்கட்டும்; இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குப் பொருத்தமானதாய் இருக்கின்றது” எனப் பதிலளித்தார். அப்போது யோவான் அதற்கு இணங்கினான்.</verse>
				<verse number="16">இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடனே தண்ணீரைவிட்டு வெளியேறினார். இதோ! உடனே பரலோகம் திறக்கப்பட்டு, இறைவனின் ஆவியானவர் புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய், அவர்மீது தங்குவதை யோவான் கண்டான்.</verse>
				<verse number="17">அப்போது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “இவரே என் அன்பு மகன், இவரில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என ஒலித்தது.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">அதன்பின்பு இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார்.</verse>
				<verse number="2">அவர் இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்த பின், பசியாய் இருந்தார்.</verse>
				<verse number="3">சோதனைக்காரன் அவரிடம் வந்து, “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான்.</verse>
				<verse number="4">அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும், ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.</verse>
				<verse number="5">பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி,</verse>
				<verse number="6">“நீர் இறைவனின் மகனானால், கீழே குதியும். “ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது பாதம் கற்களின் மீது மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கைகளினால் தாங்கிக்கொள்வார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றான்.</verse>
				<verse number="7">இயேசு அவனிடம், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.</verse>
				<verse number="8">மீண்டும் பிசாசு அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோய், உலகத்தின் எல்லா அரசுகளையும், அதன் மேன்மையையும் அவருக்குக் காண்பித்து,</verse>
				<verse number="9">“நீர் என் முன் மண்டியிட்டு விழுந்து என்னை ஆராதித்தால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன்” என்றான்.</verse>
				<verse number="10">இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு விலகிப் போ! ‘உனது இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னார்.</verse>
				<verse number="11">அப்போது பிசாசு அவரைவிட்டுச் சென்றான்; இறைதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.</verse>
				<verse number="12">யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்.</verse>
				<verse number="13">அவர் நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடலருகே இருந்தது.</verse>
				<verse number="14">இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:</verse>
				<verse number="15">“செபுலோன் நாடே! நப்தலி நாடே! யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே! யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவே!</verse>
				<verse number="16">இருளில் வாழும் மக்கள் பெரிய ஒளியைக் கண்டார்கள்; மரண நிழல் சூழ்ந்த நாட்டில் வாழ்வோர் மீது ஒளி உதித்தது” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.</verse>
				<verse number="17">அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” எனப் பிரசங்கம் பண்ணத் தொடங்கினார்.</verse>
				<verse number="18">இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய சகோதரர்கள் இருவரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="19">இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை, மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவனாக்குவேன்” என்றார்.</verse>
				<verse number="20">உடனே அவர்கள், தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.</verse>
				<verse number="21">அவர் அங்கிருந்து போகையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.</verse>
				<verse number="22">உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்.</verse>
				<verse number="23">இயேசு கலிலேயா முழுவதும் சென்று, அவர்களுடைய ஜெபஆலயங்களில் கற்பித்து, இறையரசின் நற்செய்தியைப் போதித்தார். அத்துடன் மக்களுக்கு இருந்த எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார்.</verse>
				<verse number="24">அவரைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு வியாதி உள்ளவர்களையும், வேதனை உள்ளவர்களையும், பேய் பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; அவர் அவர்களை குணமாக்கினார்.</verse>
				<verse number="25">கலிலேயா, தெக்கப்போலி, எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுகரையில் இருந்தும் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார். அப்போது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள்.</verse>
				<verse number="2">அவர் அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கி சொன்னதாவது:</verse>
				<verse number="3">“ஆவியில் தாழ்மையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்கே உரியது.</verse>
				<verse number="4">துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.</verse>
				<verse number="5">சாந்த குணமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பூமியை சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்வார்கள்.</verse>
				<verse number="6">நீதியை நிலைநாட்ட பசியும் தாகமும் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.</verse>
				<verse number="7">இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு இரக்கம் காட்டப்படும்.</verse>
				<verse number="8">உள்ளத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனைக் காண்பார்கள்.</verse>
				<verse number="9">சமாதானம் செய்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள்.</verse>
				<verse number="10">நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே.</verse>
				<verse number="11">“என் பொருட்டு மக்கள் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராய்ப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள்.</verse>
				<verse number="12">சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதியுங்கள். பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப் பெரிதாய் இருக்கும்; ஏனெனில் உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் இதைப் போலவே துன்புறுத்தினார்கள்.</verse>
				<verse number="13">“நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாய் இருக்கின்றீர்கள். ஆனால் உப்பு அதன் சாரத்தை இழந்து போனால், திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? அது வேறொன்றுக்கும் பயன்படாமல் வெளியே வீசப்பட்டு, மனிதரால் மிதிக்கப்படும்.</verse>
				<verse number="14">“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கின்றீர்கள். ஒரு குன்றின் மீதுள்ள பட்டணம் மறைவாயிருக்காது.</verse>
				<verse number="15">மக்கள் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்க மாட்டார்களல்லவா? மாறாக அவர்கள் அதை விளக்குத் தண்டின் மீது உயர்த்தி வைப்பார்கள். அப்போது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும்.</verse>
				<verse number="16">அதுபோலவே, உங்கள் வெளிச்சம் மனிதர்கள் முன்பாகப் பிரகாசிக்கட்டும். அப்போது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவைப் போற்றுவார்கள்.</verse>
				<verse number="17">“நான் நீதிச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்க வந்தேன் என நினைக்க வேண்டாம்; நான் அவற்றை அழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தேன்.</verse>
				<verse number="18">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், வானமும் பூமியும் மறைந்து போனாலும், நீதிச்சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் நிறைவேறும் வரைக்கும், அதில் உள்ள மிகச் சிறிய எழுத்தோ, எழுத்தின் சிறு புள்ளியோ மறைந்து போகாது.</verse>
				<verse number="19">இந்தக் கட்டளைகளில் சிறிதான ஒன்றையாகிலும் மீறி, அப்படிச் செய்யும்படி மற்றவர்களுக்குப் போதிக்கிறவன், பரலோக அரசில் சிறியவன் எனக் கருதப்படுவான்; ஆனால் இந்தக் கட்டளைகளைத் தானும் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் கற்பிக்கிறவன் பரலோக அரசில் பெரியவன் எனக் கருதப்படுவான்.</verse>
				<verse number="20">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசேயர்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் இறைவனைப் பின்பற்றும் விதத்தைவிட, நீங்கள் இறைவனைப் பின்பற்றும் விதம் மிக மேலானதாய் இருக்க வேண்டும்; இல்லையென்றால் நீங்கள் பரலோக அரசுக்குள் செல்ல மாட்டீர்கள்.</verse>
				<verse number="21">“ ‘கொலை செய்யாதே, கொலை செய்கின்றவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவான்’ என்று வெகு காலத்திற்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="22">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், யாராவது தனது சகோதரனுடன் கோபமாயிருந்தால், அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவான். மேலும், தனது சகோதரனை ‘ஒன்றுக்கும் உதவாத முட்டாள்!’ என்று நிந்திக்கிறவன், நியாயசபையில் அதற்குப் பதில் சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் ஒருவனை ‘புத்தி கெட்டவன்!’ என்று தூசிக்கிறவன், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறான்.</verse>
				<verse number="23">“அதனால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது, உங்கள் சகோதரனுக்கு உங்கள் மீது ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால்,</verse>
				<verse number="24">பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உங்கள் சகோதரனுடன் ஒப்புரவாகுங்கள்; அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள்.</verse>
				<verse number="25">“உங்களது பகைவன் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது, வழியிலேயே அவனோடு விரைவாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கக் கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் போடப்படலாம்.</verse>
				<verse number="26">நான் உங்களுக்கு உண்மையாய்ச் சொல்கின்றேன், உங்கள் தண்டப் பணத்தின் கடைசி சதம் வரை செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வர மாட்டீர்கள்.</verse>
				<verse number="27">“ ‘தகாத உறவுகொள்ளாதே’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="28">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஒரு பெண் மீது ஆசைகொண்டு பார்க்கும் எவனும், அவளுடன் அப்பொழுதே தன் உள்ளத்தில் தகாத உறவு கொண்டவன் ஆகிறான்.</verse>
				<verse number="29">உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத் தோண்டி எறிந்து விடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது.</verse>
				<verse number="30">உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்து விடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது.</verse>
				<verse number="31">“ ‘தனது மனைவியை விவாகரத்து செய்கின்றவன், அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="32">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எவனாவது ஒருவன், தன் மனைவி முறைகேடான பாலுறவில் ஈடுபட்டாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்துச் செய்தால், அவன் அவளை தகாத உறவுகொள்ள வைக்கிறான். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் தகாத உறவுகொள்கின்றான்.</verse>
				<verse number="33">“மேலும், ‘நீங்கள் கர்த்தருக்குக் கொடுத்த வாக்கை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுங்கள்’ என்று, முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="34">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் சொல்வது உண்மை என்று ஒருபோதும், எதன் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம். பரலோகத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை;</verse>
				<verse number="35">பூமியின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில் அது அவரது பாதபீடம்; எருசலேமின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம்.</verse>
				<verse number="36">உனது தலையில் அடித்தும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனெனில் உன்னால் ஒரு முடியைக் கூட வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ முடியாதே.</verse>
				<verse number="37">ஆகவே, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று உண்மையான பதிலை மட்டுமே கொடுங்கள்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகின்றது.</verse>
				<verse number="38">“ ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="39">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய மனிதனுடன் போராட வேண்டாம். யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.</verse>
				<verse number="40">யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் உடையை எடுக்க விரும்பினால், உங்களது மேலாடையையும் கொடுத்து விடுங்கள்.</verse>
				<verse number="41">யாராவது உங்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அவனோடு இரண்டு கிலோ மீட்டர் தூரம் போங்கள்.</verse>
				<verse number="42">உங்களிடத்தில் கேட்கின்றவனுக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன் வாங்க விரும்புகிறவனிடமிருந்து விலகிச் செல்ல வேண்டாம்.</verse>
				<verse number="43">“ ‘உங்கள் அயலவனுக்கு அன்பு காட்டுங்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பதையும் ‘உங்கள் பகைவனுக்கு வெறுப்பைக் காட்டுங்கள்’ என்று கூறுவதையும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="44">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன்: உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள்.</verse>
				<verse number="45">இப்படிச் செய்வதனால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவிற்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்கள் மீதும், நல்லவர்கள் மீதும் தனது சூரியனை உதிக்கச் செய்கின்றார். நீதியுள்ளவர்கள் மீதும், நீதியற்றவர்கள் மீதும் மழையை பெய்யப் பண்ணுகிறார்.</verse>
				<verse number="46">உங்களை அன்பு செய்வோரையே நீங்களும் அன்பு செய்தால், நீங்கள் பெறும் வெகுமதி என்ன? வரி சேகரிப்பவர்களும் அப்படிச் செய்வதில்லையா?</verse>
				<verse number="47">நீங்கள் உங்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஆசி கூறுவீர்களானால் மற்றவர்களைப் பார்க்கிலும் நீங்கள் செய்யும் மேலான காரியம் என்ன? இறைவனை அறியாதவர்களும் அப்படித்தானே செய்கின்றார்கள்?</verse>
				<verse number="48">எனவே, உங்கள் பரலோகப் பிதா நற்குணங்களில் முழுநிறைவு உடையவராய் இருப்பது போல, நீங்களும் நற்குணங்களில் முழுநிறைவு உடையவர்களாய் இருங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">“நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர்கள் முன்பாக, அவர்கள் காண வேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது.</verse>
				<verse number="2">“ஆகவே நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களின் புகழ்ச்சியை பெறுவதற்காக, வெளிவேடக்காரர்கள் ஜெபஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வது போல செய்ய வேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள்.</verse>
				<verse number="3">ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாமல் செய்யுங்கள்.</verse>
				<verse number="4">அப்போது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கின்ற உங்கள் பிதா, ஏற்ற வெகுமதியை உங்களுக்கு அளிப்பார்.</verse>
				<verse number="5">“நீங்கள் மன்றாடும்போது, வெளிவேடக்காரர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் மனிதர்கள் காணும்படி ஜெபஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள்.</verse>
				<verse number="6">ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்போது நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கின்ற உங்கள் பிதா, உங்களுக்கு தக்க வெகுமதியளிப்பார்.</verse>
				<verse number="7">நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப் போல் அதிக வார்த்தைகளைப் பேசாதிருங்கள். ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் பொருட்டு, தங்கள் மன்றாடல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.</verse>
				<verse number="8">நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்பதற்கு முன்பே, உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார்.</verse>
				<verse number="9">“ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டியவிதம் இதுவே: “ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக.</verse>
				<verse number="10">உமது அரசு வருவதாக. உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக.</verse>
				<verse number="11">எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்.</verse>
				<verse number="12">எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல், எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்.</verse>
				<verse number="13">எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளும். அரசும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.’</verse>
				<verse number="14">ஏனெனில், மனிதர்கள் பாவம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோக பிதாவும் உங்களை மன்னிப்பார்.</verse>
				<verse number="15">ஆனால் மனிதருடைய பாவங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதுவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்க மாட்டார்.</verse>
				<verse number="16">“நீங்கள் உபவாசிக்கும்போது, வெளிவேடக்காரர் செய்வது போல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காகத், தங்கள் முகங்களை வாடப் பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள்.</verse>
				<verse number="17">ஆனால், நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் பூசி, முகத்தைக் கழுவுங்கள்.</verse>
				<verse number="18">அப்போது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாமல் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; ஆகையால் மறைவில் செய்பவற்றை காண்கின்ற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.</verse>
				<verse number="19">“நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் புகுந்து திருடிச் செல்வார்கள்.</verse>
				<verse number="20">ஆகவே உங்களுக்காகச் செல்வங்களை பரலோகத்திலே சேர்த்து வையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடர் புகுந்து திருடிச் செல்லவும் மாட்டார்கள்.</verse>
				<verse number="21">உங்கள் செல்வம் எங்கே இருக்கின்றதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.</verse>
				<verse number="22">“கண்தான் உடலின் விளக்கு. உங்கள் கண் நல்லதாய் இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாய் இருக்கும்.</verse>
				<verse number="23">ஆனால் உங்கள் கண் கெட்டுப்போய் இருந்தால், உங்கள் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உங்களுக்குள் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!</verse>
				<verse number="24">“ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு பணி செய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து இன்னொருவனில் அன்பு செலுத்துவான் அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும் பணத்துக்கும் பணி செய்ய முடியாது.</verse>
				<verse number="25">“ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எதை உண்போம் எதைக் குடிப்போம் என்று உங்கள் வாழ்வைக் குறித்தும், எதை அணிவோம் என்று உங்கள் உடலைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் மேலானவை.</verse>
				<verse number="26">ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படியிருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா?</verse>
				<verse number="27">கவலைப்படுவதால், உங்களில் எவனாவது தன் வாழ்நாளுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டிக்கொள்ள முடியுமா?</verse>
				<verse number="28">“உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுப் பூக்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்பதுமில்லை;</verse>
				<verse number="29">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப் போல் உடை அணிந்ததில்லை.</verse>
				<verse number="30">இன்றைக்கு இருந்து, நாளை நெருப்பில் எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே இறைவன் இவ்விதம் அணிவித்தால், விசுவாசக் குறைவுள்ளவர்களே, அவர் உங்களுக்கு அதிலும் மேலாக அணிவிப்பது நிச்சயம் அல்லவா?</verse>
				<verse number="31">எனவே, ‘எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்?’ என்று கவலைப்பட வேண்டாம்.</verse>
				<verse number="32">ஏனெனில் இறைவனை அறியாதவர்கள், இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பரலோக பிதாவோ, இவையெல்லாம் உங்களுக்கு அவசியம் என்று அறிந்திருக்கிறார்.</verse>
				<verse number="33">எனவே முதலாவதாக அவருடைய அரசையும், அவரது நீதியையும் தேடுங்கள், அப்போது இவைகளும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="34">நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைகொள்ள வேண்டாம். ஏனெனில் நாளைய தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும் அந்தந்த நாளுக்குரிய பிரச்சினைகளே போதுமானவை.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">“நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்புச் செய்யாதிருங்கள்;</verse>
				<verse number="2">நீங்கள் மற்றவர்களை குற்றவாளிகளாகத் தீர்ப்பது போலவே, நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.</verse>
				<verse number="3">“நீ உனது கண்ணிலுள்ள மரக்கட்டையைக் கவனிக்கத் தவறி, உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பைப் பார்ப்பது ஏன்?</verse>
				<verse number="4">உன் கண்ணில் மரக்கட்டை இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள சிறு துரும்பை எடுத்துப் போடுகிறேன்’ என எப்படிச் சொல்லலாம்?</verse>
				<verse number="5">வெளிவேடக்காரனே! முதலில் உனது கண்ணிலுள்ள மரக்கட்டையை எடுத்துப் போடு; அப்போது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக உன்னால் தெளிவாகப் பார்க்க முடியும்.</verse>
				<verse number="6">“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவைகளை மிதித்துவிட்டு, திரும்பி வந்து உங்களைக் குதறிவிடும்.</verse>
				<verse number="7">“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டுகொள்வீர்கள்; கதவைத் தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.</verse>
				<verse number="8">ஏனெனில், கேட்கின்ற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான்; தேடுகிறவன், கண்டுகொள்கின்றான்; கதவைத் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படுகிறது.</verse>
				<verse number="9">“உங்களில் யார் அப்பம் கேட்கும் தன் மகனுக்கு கல்லைக் கொடுப்பான்?</verse>
				<verse number="10">அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பைக் கொடுப்பான்?</verse>
				<verse number="11">நீங்கள் தீயவர்களாய் இருந்தும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!</verse>
				<verse number="12">ஆகவே மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; ஏனென்றால் இவையே நீதிச்சட்டத்தினதும் இறைவாக்கினர்களினதும் கருப்பொருள்.</verse>
				<verse number="13">“ஒடுக்கமான வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள். ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. அநேகர் அதன் வழியாகவே உள்ளே நுழைகிறார்கள்.</verse>
				<verse number="14">ஆனால் ஒடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.</verse>
				<verse number="15">“போலி இறைவாக்கினரைக் குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள்.</verse>
				<verse number="16">அவர்களது செயல்களின் விளைவினால் நீங்கள் அவர்களை அறிந்துகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லையே,</verse>
				<verse number="17">அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். ஆனால் பழுதான மரமோ, பழுதான கனியையே கொடுக்கும்.</verse>
				<verse number="18">நல்ல மரம் பழுதான கனிகளைக் கொடுக்க மாட்டாது, பழுதான மரம் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை.</verse>
				<verse number="19">நல்ல கனி கொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பினுள் எறியப்படும்.</verse>
				<verse number="20">இப்படியே அவர்களின் செயல்களின் விளைவினால் அவர்களை இனங்கண்டுகொள்வீர்கள்.</verse>
				<verse number="21">“என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று அழைக்கின்றவர்கள் எல்லோரும் பரலோக அரசிற்குள் செல்வதில்லை. மாறாக பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கின்றவர்கள் மட்டுமே அதன் உள்ளே செல்வார்கள்.</verse>
				<verse number="22">அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு சொல்லவில்லையா? உமது பெயரில் பேய்களைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள்.</verse>
				<verse number="23">அப்போது நான் அவர்களிடம், ‘இறைவனின் கட்டளைகளை மீறுகிறவர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்று அப்பாலே போங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.</verse>
				<verse number="24">“எனவே நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கின்ற ஒவ்வொருவனும், கற்பாறையின் மீது தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனிதனைப் போலிருப்பான்.</verse>
				<verse number="25">மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது; இருந்தும், அது விழுந்து போகவில்லை. ஏனெனில் அதன் அத்திவாரம் கற்பாறையின் மீது போடப்பட்டிருந்தது.</verse>
				<verse number="26">ஆனால் எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின் மீது தன் வீட்டைக் கட்டிய மூடனைப் போலிருப்பான்.</verse>
				<verse number="27">மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.”</verse>
				<verse number="28">இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, அவரது போதனையைக் கேட்டு, மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.</verse>
				<verse number="29">ஏனெனில் அவர் அவர்களது நீதிச்சட்ட ஆசிரியர்களைப் போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் போதித்தார்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">இயேசு மலைப் பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.</verse>
				<verse number="2">அப்போது, தொழுநோயுள்ள ஒரு மனிதன் வந்து, அவர் முன் முழந்தாழிட்டு, “ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைக் குணமாக்கிச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.</verse>
				<verse number="3">இயேசு தன் கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்று சொன்னார். உடனே, அவன் தனது தொழுநோயிலிருந்து குணமாகி சுத்தமானான்.</verse>
				<verse number="4">அப்போது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் மதகுருவுக்கு உன்னைக் காண்பித்து, நீ குணமடைந்ததற்கான ஒரு அத்தாட்சியாய் மோசே கட்டளையிட்ட காணிக்கைப் பலிகளைச் செலுத்து” என்றார்.</verse>
				<verse number="5">இயேசு கப்பர்நகூமிற்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தளபதி உதவி கேட்டு அவரிடம் வந்து,</verse>
				<verse number="6">“ஆண்டவரே! வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான்.</verse>
				<verse number="7">இயேசு அவனிடம், “நான் அங்கே வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.</verse>
				<verse number="8">நூற்றுக்குத் தளபதி அதற்குப் பதிலாக, “ஆண்டவரே! நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியுடையவன் அல்ல. ஒரு வார்த்தை கட்டளையிடும், அப்போது என் வேலைக்காரன் குணமடைவான்.</verse>
				<verse number="9">ஏனெனில், நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட ஒருவனாய் இருக்கின்றேன்; எனக்குக் கீழேயும் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் இவனைப் பார்த்து ‘போ’ என்றால் இவன் போகின்றான்; அவனைப் பார்த்து ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்” என்றான்.</verse>
				<verse number="10">இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தவராய், தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் கண்டதில்லை.</verse>
				<verse number="11">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வந்து, பரலோக அரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விருந்து வைபவத்தில் பங்கு பெறுவார்கள்.</verse>
				<verse number="12">ஆனால் அந்த அரசுக்கு உரிய குடிமக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார்.</verse>
				<verse number="13">அதன்பின் இயேசு நூற்றுக்குத் தளபதியிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு நடக்கட்டும்” என்றார். உடனடியாக அவனது வேலைக்காரன் குணமடைந்தான்.</verse>
				<verse number="14">இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமி காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை கண்டார்.</verse>
				<verse number="15">அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.</verse>
				<verse number="16">பொழுது சாயும் வேளையானபோது, பேய் பிடித்திருந்த பலரை அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே கட்டளையிட்டு அந்த ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார்.</verse>
				<verse number="17">“அவர் நம்மை பலவீனப்படுத்தும் வியாதிகளை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களைச் சுமந்தார்” என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டவை நிறைவேறும்படி இப்படி நடந்தது.</verse>
				<verse number="18">தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி கட்டளையிட்டார்.</verse>
				<verse number="19">அப்போது நீதிச்சட்ட ஆசிரியன் ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.</verse>
				<verse number="20">இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை” என்றார்.</verse>
				<verse number="21">இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை முடித்து வர அனுமதி தாரும்” என்றான்.</verse>
				<verse number="22">அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. இறந்தவர்களை அடக்கம் செய்ய, இறந்தவர்கள் இருக்கின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="23">அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரைப் பின்தொடர்ந்து அவரது சீடர்களும் ஏறினார்கள்.</verse>
				<verse number="24">அப்போது திடீரென கடும் புயல் காற்று கடலின் மீது வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதின. இயேசுவோ தூங்கிக் கொண்டிருந்தார்.</verse>
				<verse number="25">சீடர்கள் அவரிடம் சென்று, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் மூழ்கி அழியப் போகின்றோம்!” என்று சொன்னார்கள்.</verse>
				<verse number="26">அதற்கு அவர், “விசுவாசம் குறைந்தவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்து கொண்டார். அப்போது மிகுந்த அமைதி உண்டாயிற்று.</verse>
				<verse number="27">அவர்கள் வியப்படைந்து, “காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எப்படிப்பட்டவரோ?” என்று பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="28">அவர் மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய பிரதேசத்திற்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய் போக முடியாதபடி, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள்.</verse>
				<verse number="29">அவர்கள் இருவரும் இயேசுவை நோக்கி, “இறைவனின் மகனே! எங்களிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைத் துன்புறுத்தவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="30">அவர்களுக்கு சற்று தூரத்தில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.</verse>
				<verse number="31">அந்த பேய்கள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதாக இருந்தால், பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பி விடும்” என கெஞ்சிக் கேட்டன.</verse>
				<verse number="32">அவர் அவைகளிடம், “போங்கள்” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அந்தப் பன்றிகள், மலைச்சரிவினூடாக, கீழே விரைந்து ஓடி, ஏரியில் விழுந்து மூழ்கின.</verse>
				<verse number="33">பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் விரைந்து ஓடிப் போய், பேய் பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.</verse>
				<verse number="34">அப்போது பட்டணத்திலுள்ள எல்லோரும் இயேசுவைச் சந்திக்க புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பிரதேசத்தைவிட்டு போய்விடும்படி, வேண்டிக் கொண்டார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார்.</verse>
				<verse number="2">அப்போது சிலர், முடக்குவாதமுடைய ஒருவனை படுக்கையோடு அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார்.</verse>
				<verse number="3">இதைக் கேட்ட சில நீதிச்சட்ட ஆசிரியர்கள், “இந்த மனிதன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="4">அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்?</verse>
				<verse number="5">‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது இலகுவானது?</verse>
				<verse number="6">ஆனாலும் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை, நீங்கள் அறிய வேண்டும்” என்றார். பின்பு அவர் அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போ” என்றார்.</verse>
				<verse number="7">உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குச் சென்றான்.</verse>
				<verse number="8">கூடியிருந்த மக்கள் இதைக் கண்டபோது, இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்குக் கொடுத்ததற்காக இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள்.</verse>
				<verse number="9">இயேசு அங்கிருந்து போகையில், மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி சேகரிக்கும் இடத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான்.</verse>
				<verse number="10">பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து உண்ணும்போது, வரி சேகரிப்போர் அநேகரும், பாவிகள் பலரும் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="11">இதைப் பரிசேயர்கள் கண்டபோது, அவரது சீடர்களிடம், “ஏன் உங்கள் போதகர் வரி சேகரிப்போருடனும், பாவிகளுடனும் சாப்பிடுகிறார்?” எனக் கேட்டார்கள்.</verse>
				<verse number="12">இதைக் கேட்டபோது இயேசு, “குணநலத்துடன் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார்.</verse>
				<verse number="13">மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவாக்கின் கருத்து என்ன என்பதை, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.</verse>
				<verse number="14">அதன்பின்பு யோவானின் சீடர்கள் அவரிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="15">அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, அவனுடைய விருந்தின நண்பர்கள் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார்.</verse>
				<verse number="16">“ஒருவனும் இதுவரை சலவை செய்யாத புதிய துணித் துண்டை, பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைக்க மாட்டான். ஏனெனில் அப்படித் தைத்தால், புதிய துண்டு சுருங்கும்போது, பழைய உடையைக் கிழித்து விடும், கிழிசல் முன்னிருந்ததைவிட பெரிதாகி விடும்.</verse>
				<verse number="17">மனிதர்கள் புதிய திராட்சை ரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோற்பைகள் வெடித்து விடும்; திராட்சை ரசமும் சிந்தி விடும். தோற்பைகளும் பாழாய்ப் போகும். ஆகவேதான், புது திராட்சை ரசத்தை இதுவரை பாவிக்காத புது தோற்பைகளில் ஊற்றி வைக்கிறார்கள். அப்போது, அவை இரண்டும் பாதுகாக்கப்படும்” என்றார்.</verse>
				<verse number="18">அவர் இதைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அதிகாரி ஒருவன் வந்து அவர் முன் முழந்தாழிட்டு, அவரிடம், “எனது மகள் சற்று நேரத்திற்கு முன் இறந்துவிட்டாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள் மீது வைப்பீராக. அப்போது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான்</verse>
				<verse number="19">இயேசு எழுந்து, அவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின் சென்றார்கள்.</verse>
				<verse number="20">அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண், அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலாடையின் ஓரத்தைத் தொட்டாள்.</verse>
				<verse number="21">அவள், “நான் அவரது மேலாடையைத் தொட்டால் போதும். நான் குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.</verse>
				<verse number="22">இயேசு அவளைத் திரும்பிப் பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். அந்த நொடியே அவள் குணமானாள்.</verse>
				<verse number="23">பின்பு, இயேசு அந்த அதிகாரியின் வீட்டிற்குள் போனவுடன் மரணச் சடங்கிற்கு குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார்.</verse>
				<verse number="24">இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி இறந்து போகவில்லை, தூக்கமாயிருக்கிறாள்” என்றார். அவர்களோ, அதைக் கேட்டு ஏளனமாக சிரித்தார்கள்.</verse>
				<verse number="25">மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பிய பின், அவர் உள்ளே சென்று, அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள்.</verse>
				<verse number="26">இச்செய்தி, அப்பிரதேசம் எங்கும் பரவியது.</verse>
				<verse number="27">இயேசு அங்கிருந்து போகும்போது, பார்வையற்ற இரண்டு பேர் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள் மீது இரக்கம் காட்டும்” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="28">அவர் வீட்டிற்குள் சென்றபோது, பார்வையற்ற அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து, அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்ய முடியும் என நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா?” எனக் கேட்டார். “ஆம் ஆண்டவரே” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="29">பின்பு அவர், அவர்களின் கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார்.</verse>
				<verse number="30">உடனே அவர்களுக்குப் பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைக் குறித்து ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” என கண்டிப்புடன் எச்சரித்தார்.</verse>
				<verse number="31">ஆனால் அவர்களோ வெளியே போய், அவரைப்பற்றிய செய்தியை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.</verse>
				<verse number="32">அவர்கள் வெளியே புறப்பட்டுப் போகும்போது, பேய் பிடித்ததனால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="33">அந்தப் பேய் துரத்தப்பட்டபோது, பேச இயலாது இருந்த அவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள்.</verse>
				<verse number="34">ஆனால் பரிசேயரோ, “பேய்களின் தலைவனாலேயே, இவன் பேய்களை விரட்டுகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="35">இயேசு எல்லாப் பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் பிரயாணம் செய்து, அங்கே யூதருடைய ஜெபஆலயங்களில் போதித்து, இறையரசின் நற்செய்தியை அறிவித்தார்; அத்துடன் எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார்.</verse>
				<verse number="36">அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மீது மனம் உருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் துன்புறுத்தப்பட்டவர்களாயும், உதவியற்றவர்களாயும் இருந்தார்கள்.</verse>
				<verse number="37">அப்போது அவர் தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கின்றது, ஆனால் வேலையாட்களோ குறைவாக இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="38">ஆகையால் அறுவடை செய்ய வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையின் ஆண்டவரை வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்திற்கு அழைத்து, தீய ஆவிகளை விரட்டவும், எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.</verse>
				<verse number="2">அந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களாவன: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;</verse>
				<verse number="3">பிலிப்பு, பர்த்தொலொமேயு; தோமா, வரி சேகரிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு;</verse>
				<verse number="4">கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து ஆகியோர்.</verse>
				<verse number="5">இயேசு இந்த பன்னிரண்டு பேருக்கும் இந்த அறிவுறுத்தல்களைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போக வேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்ல வேண்டாம்.</verse>
				<verse number="6">வழி தவறிப் போன செம்மறியாடுகளான இஸ்ரயேலர்களிடம் மட்டும் போங்கள்.</verse>
				<verse number="7">நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகின்றது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள்.</verse>
				<verse number="8">நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், தொழுநோயாளர்களைச் சுத்தப்படுத்துங்கள், பேய்களை விரட்டுங்கள். நீங்கள் விலை கொடுத்து வாங்கவில்லை, எனவே விலையின்றிக் கொடுங்கள்.</verse>
				<verse number="9">“நீங்கள் போகும்போது, எவ்விதமான தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் இடுப்பில் உள்ள பணப் பையில் கொண்டுபோக வேண்டாம்;</verse>
				<verse number="10">பயணப் பையையோ, மாற்று உடையையோ, காலணிகளையோ, கைத்தடியையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாளுக்கு உரியது அவனுக்குக் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="11">நீங்கள் எந்தவொரு பட்டணத்திற்குள்ளோ கிராமத்திற்குள்ளோ சென்றாலும், அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும் வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள்.</verse>
				<verse number="12">அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துதலை அறிவியுங்கள்.</verse>
				<verse number="13">அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பி வரும்.</verse>
				<verse number="14">எவராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தையைக் கேட்பதற்கு மனதற்றவர்களாகவோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோவிட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறி விடுங்கள்.</verse>
				<verse number="15">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பு நாளில், அந்தப் பட்டணத்திற்குக் கிடைக்கப் போவதைவிட சோதோம், கொமோரா பட்டணங்களுக்குக் கிடைக்கும் தண்டனையானது தாங்கக் கூடியதாக இருக்கும்.</verse>
				<verse number="16">“செம்மறியாடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவது போல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப் போல விவேகம் உள்ளவர்களாயும், புறாக்களைப் போல கபடமற்றவர்களாயும் இருங்கள்.</verse>
				<verse number="17">மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நியாயசபைகளில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெபஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.</verse>
				<verse number="18">என் பொருட்டாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்.</verse>
				<verse number="19">அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், பேச வேண்டிய வார்த்தை உங்களுக்குக் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="20">ஏனெனில் பேசுவது நீங்களல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.</verse>
				<verse number="21">“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராகக் கலகம் செய்து, அவர்களை சாவுக்கு உட்படுத்துவார்கள்.</verse>
				<verse number="22">என்னைப் பின்பற்றும் காரணமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவு வரை உறுதியாய் நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.</verse>
				<verse number="23">நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், வேறொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், மனுமகன் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்க மாட்டீர்கள்.</verse>
				<verse number="24">“பயிற்சி பெறுபவன் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல.</verse>
				<verse number="25">பயிற்சி பெறுபவன் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயெல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக தூற்றப்படுவார்கள்!</verse>
				<verse number="26">“எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்பட வேண்டாம். மறைத்து வைக்கப்பட்டது எதுவும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதும் இல்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியாமல் போவதும் இல்லை.</verse>
				<verse number="27">நான் உங்களுக்கு இருளில் சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, கூரையின் மேலிருந்து அறிவியுங்கள்.</verse>
				<verse number="28">உடலைக் கொன்றாலும் ஆத்துமாவைக் கொல்ல முடியாதவர்களுக்குப் பயப்பட வேண்டாம். உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள்.</verse>
				<verse number="29">ஒரு சிறு தொகைப் பணத்திற்கு, இரண்டு சிட்டுக் குருவிகள் விற்கப்படுகின்றன அல்லவா? ஆனாலும், அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல், நிலத்திலே விழுவதில்லை.</verse>
				<verse number="30">உங்கள் தலைமுடிகளின் எண்ணிக்கையும் அறியப்பட்டிருக்கின்றது.</verse>
				<verse number="31">எனவே பயப்பட வேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும், அதிக பெறுமதியுடையவர்கள்.</verse>
				<verse number="32">“மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ, பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன்.</verse>
				<verse number="33">மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.</verse>
				<verse number="34">“பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, முரண்பாட்டை உருவாக்கவே வந்தேன்.</verse>
				<verse number="35">“ஏனெனில், ‘ஒருவனை அவனது தகப்பனுக்கு எதிராகவும், ஒரு மகளை அவளது தாய்க்கு எதிராகவும், ஒரு மருமகளை அவளது மாமியாருக்கு எதிராகவும் முரண்படச் செய்யவே நான் வந்தேன்.</verse>
				<verse number="36">ஒருவனுக்கு அவனுடைய சொந்தக் குடும்பத்தவர்களே எதிரிகளாய் இருப்பார்கள்.’</verse>
				<verse number="37">“தன் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல; தனது மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல;</verse>
				<verse number="38">தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எவனும், எனக்குத் தகுதியுடையவன் அல்ல.</verse>
				<verse number="39">தனது வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவன், அதை இழந்து போவான். தன் வாழ்வை எனக்காக இழக்கிறவனோ, அதைக் காத்துக்கொள்வான்.</verse>
				<verse number="40">“உங்களை ஏற்றுக்கொள்கின்றவன் என்னையும் ஏற்றுக்கொள்கின்றான். என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கின்றான்.</verse>
				<verse number="41">இறைவாக்கு உரைக்கின்ற ஒருவரை எவனாவது இறைவாக்கினராக ஏற்றுக்கொண்டால், அவன் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெற்றுக்கொள்வான். ஒருவர் நீதிமானாய் இருப்பதனால், எவனாவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவன் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெற்றுக்கொள்வான்.</verse>
				<verse number="42">இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு, எவனாவது ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால், கொடுத்தவன் நிச்சயமாய் தனக்குரிய வெகுமதியை பெறாமல் போக மாட்டான் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.”</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறி முடிந்ததும், அவர் கலிலேயாவிலுள்ள பட்டணங்களில் போதிப்பதற்கும், பிரசங்கிப்பதற்கும் சென்றார்.</verse>
				<verse number="2">யோவான் சிறையில் இருக்கையில் கிறிஸ்து செய்ததையெல்லாம் கேள்விப்பட்டு தன் சீடர்களை அனுப்பி,</verse>
				<verse number="3">“வர வேண்டியவர் நீர்தானா? அல்லது, இன்னொருவர் வரும்வரை எதிர்பார்த்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான்.</verse>
				<verse number="4">அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப் போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்:</verse>
				<verse number="5">பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கின்றார்கள், தொழுநோயாளர் குணமடைகிறார்கள், செவிப்புலனற்றோர் கேட்கின்றார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.</verse>
				<verse number="6">என் பொருட்டு இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.</verse>
				<verse number="7">யோவானின் சீடர்கள் அவ்விடம் விட்டுப் போகும்போது, இயேசு கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத் தொடங்கினார்: “எதைப் பார்க்க பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் ஆடும் ஒரு நாணற் புல்லைப் பார்க்கவா?</verse>
				<verse number="8">இல்லையென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடையணிந்த ஒரு மனிதனைப் பார்க்கவா? இதோ, விலையுயர்ந்த உடை அணிந்து, ஆடம்பரமாக வாழ்பவர்கள் அரண்மனைகளில் அல்லவா இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="9">அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? ஒரு இறைவாக்கினனையா? ஆம், அவர் ஒரு இறைவாக்கினனிலும் மேலானவர் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="10">“ ‘உமக்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புவேன். அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்’ என்று, அவரைப் பற்றியே எழுதப்பட்டுள்ளது.</verse>
				<verse number="11">“நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், இதுவரை பிறந்தவர்களுள் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆயினும், பரலோக அரசில் சிறியவனாய் இருக்கின்றவன், யோவானிலும் பெரியவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="12">யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள் வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர்.</verse>
				<verse number="13">ஏனெனில், எல்லா இறைவாக்குகளும் நீதிச்சட்டமும் யோவானின் காலம் வரை இறைவாக்கு உரைத்தன.</verse>
				<verse number="14">நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால், வரவேண்டியிருந்த எலியா இவனே.</verse>
				<verse number="15">கேட்பதற்குக் காதுகள் உள்ளவன் கேட்கட்டும்.</verse>
				<verse number="16">“இந்தத் தலைமுறையைச் சேர்ந்த, இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? இவர்களை சந்தை கூடும் இடங்களில் உட்கார்ந்து,</verse>
				<verse number="17">“ ‘நாங்கள் உங்களுக்காக சந்தோஷக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கம் கொண்டாடவில்லை’ என்று சத்தமிட்டு தமது நண்பர்களைக் கூப்பிடும் சிறுவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.</verse>
				<verse number="18">“யோவான் நல்ல உணவை உண்ணாதவனும், பானம் பருகாதவனுமாக வந்தான்; அதனால் அவர்களோ, ‘அவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்கிறார்கள்.</verse>
				<verse number="19">மனுமகனோ நல்ல உணவை உண்பவராகவும், பானம் பருகுபவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப் பிரியன், குடிகாரன்’ என்றும் ‘வரி சேகரிப்போருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்றும் சொல்கின்றீர்கள். ஆயினும் ஞானமான செயல் எது என்பதை, அதை ஏற்று நடக்கின்றவர்களின் செயல்களே நிரூபிக்கும்” என்றார்.</verse>
				<verse number="20">பின்பு அவர் அநேக அற்புதங்களைச் செய்திருந்த பட்டணங்களை கடிந்துகொள்ளத் தொடங்கினார். ஏனெனில் அங்கிருந்தோர் அற்புதங்களைக் கண்டும் மனந்திரும்பவில்லை.</verse>
				<verse number="21">“கோரோசீனே, உனக்கு ஐயோ பேரழிவு! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ பேரழிவு! உங்களிடையே செய்யப்பட்ட அற்புதங்கள் தீரு, சீதோன் பட்டணங்களில் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் எப்பொழுதோ மனந்திரும்பி, துக்க உடை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்திருப்பார்கள்.</verse>
				<verse number="22">ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுக்கு நடக்கப் போவதைவிட, தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப் போவது தாங்கக் கூடியதாக இருக்கும்.</verse>
				<verse number="23">கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளத்திற்கே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாதிருந்திருக்கும்.</verse>
				<verse number="24">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பின் நாளிலே உங்களுக்கு நடக்கப் போவதைவிட, சோதோமுக்கு நடக்கப் போவது தாங்கக் கூடியதாக இருக்கும்” என்றார்.</verse>
				<verse number="25">அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறு பிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், நான் உம்மைத் துதிக்கிறேன்.</verse>
				<verse number="26">ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது.</verse>
				<verse number="27">“என் பிதாவினால் எல்லாமே என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பிதாவைத் தவிர, வேறு ஒருவனும் மகன் யார் என்று அறிய மாட்டான். மகனைத் தவிர, வேறு ஒருவனும் பிதா யாரென்றும் அறிய மாட்டான். பிதாவை வெளிப்படுத்த யாரையெல்லாம் மகன் தெரிவு செய்கின்றாரோ, அவர்களைத் தவிர வேறு ஒருவரும் பிதாவை அறிய மாட்டார்கள்.”</verse>
				<verse number="28">“வருத்தத்துடன் பாரம் சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.</verse>
				<verse number="29">எனது நுகத்தை உங்கள் மீது ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் உள்ளத்தில் தயவும் தாழ்மையும் உடையவராய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="30">என் நுகம் எளிதானது, நான் சுமத்தும் சுமையோ பாரம் குறைந்தது.”</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">ஒரு ஓய்வுநாளில் இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார். பசியாயிருந்ததனால், அவருடைய சீடர்கள் தானியக் கதிர்களைப் பறித்து உண்ணத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="2">பரிசேயர்கள் இதைக் கண்டபோது, அவரிடம், “பாரும்! உமது சீடர்கள் நீதிச்சட்டத்தின்படி சபத் ஓய்வுநாளில் தடை விதிக்கப்பட்ட காரியத்தைச் செய்கின்றார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="3">அதற்கு அவர் பதிலாக, “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபோது, அவர் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?</verse>
				<verse number="4">அவர் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்டார்களே. அவர்கள் அப்படிச் செய்தது நீதிச்சட்டத்துக்கு முரணாயிருந்தது. ஏனெனில் அந்த அப்பங்கள் மதகுருக்களுக்கு மட்டுமே உரியவை.</verse>
				<verse number="5">மேலும், ஓய்வுநாளில் மதகுருக்கள் ஆலயத்தில் வேலை செய்து, ஓய்வுநாளின் சட்டத்தை மீறினாலும், அவர்கள் குற்றமற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்றுள்ளதை நீதிச்சட்டத்தில் நீங்கள் வாசித்ததில்லையா?</verse>
				<verse number="6">ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஆலயத்தை விடவும் பெரியவர் இங்கே இருக்கின்றார்.</verse>
				<verse number="7">‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்க மாட்டீர்கள்.</verse>
				<verse number="8">ஏனெனில், மனுமகனே ஓய்வுநாளின் ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” எனச் சொன்னார்.</verse>
				<verse number="9">அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெபஆலயத்திற்குள் சென்றார்.</verse>
				<verse number="10">அங்கே ஊனமுற்ற கையையுடைய ஒருவன் இருந்தான். இயேசுவைக் குற்றம் காண்பதற்கு பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது நீதிச்சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="11">அவர் அவர்களிடம், “உங்களில் யாரிடமாவது ஒரு செம்மறியாடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைப் பிடித்து வெளியே தூக்கிவிட மாட்டீர்களா?</verse>
				<verse number="12">செம்மறியாட்டைவிட மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன்! ஆதலால் ஓய்வுநாளில் நன்மை செய்வது, நீதிச்சட்டத்தின்படி சரியானதே” என்றார்.</verse>
				<verse number="13">அதன்பின் அவர், அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப் போல முற்றிலும் குணமடைந்தது.</verse>
				<verse number="14">அப்போது பரிசேயர்கள் வெளியே போய், இயேசுவை எப்படிக் கொன்றொழிக்கலாம் என சதித் திட்டம் தீட்டினார்கள்.</verse>
				<verse number="15">இதை அறிந்த இயேசுவோ, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். அநேகர் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். அவர்களில் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கி,</verse>
				<verse number="16">தான் யாரென ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என, அவர்களை எச்சரித்தார்.</verse>
				<verse number="17">இறைவாக்கினன் ஏசாயா மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி, இது நடந்தது:</verse>
				<verse number="18">“இதோ, நான் தெரிவுசெய்த எனது ஊழியர் இவரே; நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே. இவர் மீது என் ஆவியானவரை அமரப் பண்ணுவேன். இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார்.</verse>
				<verse number="19">இவர் வாக்குவாதம் செய்ய மாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவும் மாட்டார்கள்.</verse>
				<verse number="20">நீதிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் வரை இவர் நசுங்குண்ட நாணலை முறிக்க மாட்டார். புகைந்து அணைந்து கொண்டிருக்கும் திரியைக்கூட அணைக்க மாட்டார்.</verse>
				<verse number="21">இவருடைய பெயரில் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்.”</verse>
				<verse number="22">அப்போது பேய் பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவன் பார்வையற்றவனும், வாய் பேச இயலாதவனுமாய் இருந்தான். அவனால் பேசவும் பார்க்கவும் கூடியதாக இயேசு அவனைக் குணமாக்கினார்.</verse>
				<verse number="23">மக்கள் எல்லோரும் வியப்படைந்து, “இவர்தான் தாவீதின் மகனோ?” என்றார்கள்.</verse>
				<verse number="24">ஆனால் பரிசேயர்கள் இதைக் கேட்டபோது, “இந்த ஆள் பேய்களின் தலைவனாகிய பெயெல்செபூலினாலேயே பேய்களை விரட்டுகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="25">இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம், “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப் போகும். தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற, எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது.</verse>
				<verse number="26">சாத்தானை சாத்தான் விரட்டினால், அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான். அப்படியானால், எப்படி அவனுடைய அரசு நிலைத்து நிற்கும்?</verse>
				<verse number="27">நான் பெயெல்செபூலைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறேன் என்றால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.</verse>
				<verse number="28">ஆனால் நானோ, இறைவனுடைய ஆவியானவரினால் பேய்களைத் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்திருக்கிறது.</verse>
				<verse number="29">“மேலும் ஒரு பலசாலியின் வீட்டுக்குள் நுழைந்து, அவனது உடைமைகளைக் கொள்ளையிட வேண்டுமானால், முதலில் அவனைக் கட்டிப் போடாமல் அதைச் செய்வது எப்படி?</verse>
				<verse number="30">“என்னோடுகூட இராதவன், எனக்கு விரோதமாய் இருக்கின்றான். என்னுடன் இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவன், அவர்களைச் சிதறடிக்கிறான்.</verse>
				<verse number="31">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஒவ்வொரு பாவமும், நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக, அவரை நிந்திப்பது மன்னிக்கப்பட மாட்டாது.</verse>
				<verse number="32">மனுமகனுக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது மன்னிக்கப்படும்; ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது மன்னிக்கப்படவே மாட்டாது. இந்த யுகத்திலோ புது யுகத்திலோ அது மன்னிக்கப்பட மாட்டாது.</verse>
				<verse number="33">“மரம் நல்லதெனின் அதன் கனிகளும் நல்லதாயிருக்கும். அவ்வாறே மரம் பழுதெனின் அதன் கனிகளும் பழுதானவையாய் இருக்குமே. ஏனெனில் ஒரு மரத்தின் கனிகளைக் கொண்டே மரத்தைப்பற்றி அறிகின்றோம்.</verse>
				<verse number="34">விரியன் பாம்புக் குட்டிகளே! தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள்? ஏனெனில் ஒருவனுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதையே அவனுடைய வாய் பேசும்.</verse>
				<verse number="35">நல்ல மனிதன் தன் உள்ளத்தில் சேர்த்து வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான்; தீய மனிதன் தன் உள்ளத்தில் சேர்த்து வைத்திருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான்.</verse>
				<verse number="36">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், மனிதர்கள் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்.</verse>
				<verse number="37">ஏனெனில், உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாகத் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே, நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”</verse>
				<verse number="38">அப்போது பரிசேயரிலும், நீதிச்சட்ட ஆசிரியரிலும் சிலர் அவரிடம் வந்து, “போதகரே, நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம்” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="39">அதற்கு அவர், “கொடுமையும், இறை துரோகமும் செய்கின்ற இந்த தலைமுறையினர், அற்புத அடையாளத்தைக் கேட்கின்றார்கள். ஆயினும், இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.</verse>
				<verse number="40">யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றுக்குள் இருந்தது போல, மனுமகனும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் உள்ளே இருப்பார்.</verse>
				<verse number="41">நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார்.</verse>
				<verse number="42">நியாயத்தீர்ப்பின்போது தென்னாட்டு அரசியும்கூட, இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவாள்; ஏனெனில், அவள் பூமியின் மிகத் தொலைவிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாள். ஆனால் இப்பொழுதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார்.</verse>
				<verse number="43">“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வரண்ட இடங்களுக்கூடாகப் போய், இளைப்பாற இடம் தேடுகிறது; ஆனாலும் அது அதைக் கண்டுபிடிக்க முடியாததால்,</verse>
				<verse number="44">‘நான் விட்டுப் புறப்பட்டு வந்த வீட்டிற்கே திரும்பிப் போவேன்’ என்று சொல்லும். அது அந்த வீட்டிற்கு வரும்போது, அந்த வீடு வெறுமையாயும், கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டும் ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதைக் காணும்.</verse>
				<verse number="45">அப்போது அந்த தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் கொடிதான வேறு ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து, வீட்டிற்குள் புகுந்து அவையெல்லாம் அங்கேயே வசிக்கும். அதனால் அந்த மனிதனுடைய பிந்திய நிலைமை, அவனது முந்திய நிலைமையைவிட மோசமடையும். இவ்விதமாகவே, இந்தக் கொடுமையான தலைமுறையினருக்கும் நடக்கும்” என்றார்.</verse>
				<verse number="46">இயேசு கூடியிருந்த மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய தாயும், சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி, வெளியே காத்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="47">அப்போது ஒருவன் அவரிடம் வந்து, “உமது தாயும், சகோதரர்களும் உம்முடன் பேசுவதற்காக வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான்.</verse>
				<verse number="48">அவர் அவனிடம், “யார் எனது தாய்? யார் எனது சகோதரர்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="49">பின்பு அவர் தமது சீடர்களைச் சுட்டிக் காட்டி, “இவர்களே எனது தாயும், எனது சகோதரர்களுமாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="50">எனது பரலோக பிதாவின் மனவிருப்பத்தைச் செய்கின்றவர்களே எனது சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கின்றார்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">அதே நாளில், இயேசு வீட்டை விட்டு வெளியே போய், கடலோரமாக உட்கார்ந்திருந்தார்.</verse>
				<verse number="2">அப்போது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடி வந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள்.</verse>
				<verse number="3">அவர் அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகளாகச் சொன்னார்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.</verse>
				<verse number="4">அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதை ஓரத்தில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.</verse>
				<verse number="5">சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும்,</verse>
				<verse number="6">வெயில் அதிகமான போதோ, பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்து போயின.</verse>
				<verse number="7">வேறு சில விதைகள் முட்செடிகளின் நடுவிலே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை மூடி நெருக்கிப் போட்டன.</verse>
				<verse number="8">ஆனால் வேறு சில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.</verse>
				<verse number="9">காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.</verse>
				<verse number="10">அப்போது சீடர்கள் அவரிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலமாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="11">அவர் அதற்கு, “பரலோக அரசின் இரகசியங்களைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கோ, அது கொடுக்கப்படவில்லை.</verse>
				<verse number="12">இருக்கின்றவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிரம்பி வழியுமளவுக்கு பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடமிருந்து அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.</verse>
				<verse number="13">இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலமாகப் பேசுகின்றேன்: “ ‘அவர்கள் கண்டும் அதை அறியாதவர்களாகவும் கேட்டும் அதை புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.’</verse>
				<verse number="14">ஏசாயா கூறிய இறைவாக்கு அவர்களில் நிறைவேறுகிறது: “ ‘நீங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; நீங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டீர்கள்.</verse>
				<verse number="15">ஏனெனில் இந்த மக்களின் இருதயம் சுரணையற்றுப் போயிற்று; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கின்றார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கின்றார்கள். இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் கண்களால் பார்த்திருப்பார்கள். காதுகளால் கேட்டிருப்பார்கள். இருதயத்தால் அறிந்து உணர்ந்திருப்பார்கள். அவர்கள் என்னிடமாய் திரும்பியிருப்பார்கள். நான் அவர்களைக் குணமாக்கியிருப்பேன்.’</verse>
				<verse number="16">உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன.</verse>
				<verse number="17">நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் நீங்கள் பார்ப்பதைக் காண ஆவலாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பதை அவர்கள் கேட்கவும் ஆவலாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.</verse>
				<verse number="18">“ஆகையால் இப்போது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:</verse>
				<verse number="19">எவராவது இறைவனின் அரசைப் பற்றிய செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதையருகே விதைகள் விழுந்ததைக் குறிக்கும்.</verse>
				<verse number="20">கற்பாறையின் மீது விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ, வார்த்தையைக் கேட்டு, அதை உடனே மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள்.</verse>
				<verse number="21">ஆயினும் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக் காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் பொருட்டு கஷ்டங்களும் துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாக விழுந்து போகின்றார்கள்.</verse>
				<verse number="22">முட்செடிகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கிறார்கள், ஆனாலும் உலக வாழ்வின் கவலைகளும் செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும் அவர்கள் கேட்ட அந்த வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. அதனால் அது பலனற்றுப் போகின்றது.</verse>
				<verse number="23">விதை விதைக்கப்பட்ட நல்ல நிலத்திற்கு ஒப்பான மற்றவர்களோ, வார்த்தையைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்கின்றவர்கள். இவர்கள் முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுக்கின்றார்கள்.”</verse>
				<verse number="24">இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது.</verse>
				<verse number="25">எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுச் சென்றான்.</verse>
				<verse number="26">கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்போது களைகளும் காணப்பட்டன.</verse>
				<verse number="27">“வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="28">“அதற்கு அவன், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="29">“அதற்கு அவன், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கி விடக் கூடும்.</verse>
				<verse number="30">அறுவடை வரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்போது நான் அறுவடை செய்கின்றவர்களிடம், முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதன்பின் கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்’ என்றான்.”</verse>
				<verse number="31">அவர் அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒரு மனிதன் தனது நிலத்தில் நட்ட கடுகு விதையைப் போன்றது.</verse>
				<verse number="32">அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.</verse>
				<verse number="33">அவர் அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, புளிப்பூட்டும் பதார்த்தத்திற்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் மிகவும் அதிகளவான மாவிலே புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் கலந்து வைத்தாள். அது மாவு முழுவதற்கும் புளிப்பூட்டியது” என்றார்.</verse>
				<verse number="34">இயேசு இந்தக் காரியங்களையெல்லாம், கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர் அவர்களுடன் எதையுமே பேசவில்லை.</verse>
				<verse number="35">இறைவாக்கினன் மூலமாகக் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”</verse>
				<verse number="36">அதன்பின் அவர், மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச் சொல்லும்” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="37">அவர் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மனுமகன்.</verse>
				<verse number="38">வயல் என்பது உலகம். நல்ல விதை, இறையரசின் பிள்ளைகள். களைகள், தீயவனின் பிள்ளைகள்.</verse>
				<verse number="39">அவற்றை விதைக்கிற பகைவன், பிசாசு. அறுவடை என்பது, உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள், இறைதூதர்கள்.</verse>
				<verse number="40">“களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுவது போல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும்.</verse>
				<verse number="41">மனுமகன் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் போய் அவரது அரசில் இருக்கின்ற பாவத்திற்குக் காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கின்ற எல்லோரையும் ஒன்றுசேர்த்து,</verse>
				<verse number="42">எரியும் சூளைக்குள் எறிந்து விடுவார்கள். அங்கே அழுகையும், வேதனையான பற்கடிப்பும் இருக்கும்.</verse>
				<verse number="43">அப்போது நீதிமான்களோ, தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப் போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.</verse>
				<verse number="44">“பரலோக அரசு, ஒருவன் ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலைக் கண்டுபிடித்து, அதைத் திரும்பவும் மறைத்து வைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது. எனவே அவன் போய் தனது மனமகிழ்ச்சியின் பொருட்டு, தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, புதையல் உள்ள அந்த வயலை வாங்குகிறான்.</verse>
				<verse number="45">“மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் சிறந்த முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கின்றது.</verse>
				<verse number="46">பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.</verse>
				<verse number="47">“மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லாவிதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.</verse>
				<verse number="48">வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். மோசமானவற்றையோ எறிந்துவிட்டார்கள்.</verse>
				<verse number="49">இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைதூதர்கள் வந்து நீதிமான்களிலிருந்து தீமையானவர்களைப் பிரித்தெடுத்து,</verse>
				<verse number="50">அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்து விடுவார்கள். அங்கே அழுகையும், வேதனையான பற்கடிப்பும் இருக்கும்.</verse>
				<verse number="51">“இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக் கொண்டீர்களா?” என்று இயேசு கேட்டார். அவர்கள், “ஆம்” என பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="52">“ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு நீதிச்சட்ட ஆசிரியனும், தனது களஞ்சிய அறையிலிருந்து, புதியவைகளையும் பழையவைகளையும் வெளியே கொண்டுவருகின்ற, ஒரு வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார்.</verse>
				<verse number="53">இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்த பின், அங்கிருந்து சென்றார்.</verse>
				<verse number="54">அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர்கள் வியப்புற்று, “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="55">அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா?</verse>
				<verse number="56">இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கின்றார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி,</verse>
				<verse number="57">அவரை ஏற்றுக்கொள்ளாது எரிச்சலும் கோபமும் அடைந்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினனுக்கு அவனது சொந்த ஊரிலும், அவனது சொந்த வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மதிப்புக் கிடைக்கிறது” என்றார்.</verse>
				<verse number="58">அவர்களுடைய விசுவாசக் குறைவின் காரணமாக, அவர் அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">அக்காலத்திலே சிற்றரசனான ஏரோது, இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான்.</verse>
				<verse number="2">ஏரோது தனது ஏவலாட்களிடம், “இவன் யோவான் ஸ்நானகனே; இவன் திரும்பவும் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான். அதனாலேயே, இவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகின்றன” என்று சொன்னான்.</verse>
				<verse number="3">தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஏரோது ஏற்கெனவே யோவானைக் கைது செய்து, அவனை விலங்குகளால் கட்டி, சிறையில் அடைத்திருந்தான்.</verse>
				<verse number="4">ஏனெனில் யோவான் அவனிடம், “அவளை நீ வைத்திருப்பது நீதிச்சட்டத்திற்கு முரணானது” என்று சொல்லியிருந்தான்.</verse>
				<verse number="5">ஏரோது யோவானைக் கொலை செய்ய விரும்பினான், ஆயினும் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள்.</verse>
				<verse number="6">ஏரோதின் பிறந்த நாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள்.</verse>
				<verse number="7">அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்.</verse>
				<verse number="8">அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள்.</verse>
				<verse number="9">அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனாலும் தனது ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும், அவள் கேட்டதைக் கொடுக்கும்படி அவன் உத்தரவிட்டான்.</verse>
				<verse number="10">அவ்வாறே அரசனின் உத்தரவை நிறைவேற்றி, யோவானை சிறையில் வைத்து சிரச்சேதம் செய்தார்கள்.</verse>
				<verse number="11">அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறு பெண்ணிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.</verse>
				<verse number="12">யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம் பண்ணினார்கள். அதன்பின்பு அவர்கள், இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.</verse>
				<verse number="13">இப்படி நடந்ததைக் கேள்விப்பட்டதும், இயேசு யாருக்கும் தெரியாமல் தனிமையான ஒரு இடத்திற்குப் படகில் ஏறிச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்.</verse>
				<verse number="14">இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மீது இரக்கம் கொண்டு, அவர்களில் நோயுற்று இருந்தோரைக் குணமாக்கினார்.</verse>
				<verse number="15">மாலை வேளையானபோது, சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒரு ஒதுக்குப்புறமான இடம். நேரமாகிவிட்டதால், கூடியிருப்பவர்களை அனுப்பி விடும். அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய உணவை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள்.</verse>
				<verse number="16">அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="17">“இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள்.</verse>
				<verse number="18">“அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.</verse>
				<verse number="19">அதன்பின்பு, மக்களை புற்தரையில் உட்காரும்படி செய்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைத் துண்டு துண்டுகளாக்கிச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="20">அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள். அவர்கள் உண்ட பின்னர் மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.</verse>
				<verse number="21">உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளும்கூட இருந்தார்கள்.</verse>
				<verse number="22">பின்பு அவர் மக்கள் கூட்டத்தை அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கையில், தனக்கு முன்பாகவே சீடர்களை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார்.</verse>
				<verse number="23">அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார்.</verse>
				<verse number="24">ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையைவிட்டு வெகு தூரம் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால், படகு அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டது.</verse>
				<verse number="25">அதிகாலை மூன்று மணியளவில் இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார்.</verse>
				<verse number="26">அவர் கடலின் மேல் நடந்து வருவதை சீடர்கள் கண்டபோது, அவர்கள் திகிலடைந்து, “பேய்!” என்று பயத்தில் அலறினார்கள்.</verse>
				<verse number="27">உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.</verse>
				<verse number="28">அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர் மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான்.</verse>
				<verse number="29">அதற்கு அவர், “வா” என்றார். அப்போது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான்.</verse>
				<verse number="30">ஆனால் அவன் காற்றைக் கண்டபோது, பயமடைந்து அமிழத் தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான்.</verse>
				<verse number="31">உடனே இயேசு தமது கையை நீட்டி, அவனைப் பிடித்து, “விசுவாசம் குறைந்தவனே! நீ ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார்.</verse>
				<verse number="32">அவர்கள் படகில் ஏறியபோது காற்று தணிந்தது.</verse>
				<verse number="33">படகில் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்” என்றார்கள்.</verse>
				<verse number="34">அவர்கள் மறுகரைக்குப் போய், கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள்.</verse>
				<verse number="35">அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டுகொண்டதும், சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள். மக்களோ, தங்களில் நோயுற்றிருந்தவர்களையெல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="36">நோயாளிகள் அவரது மேலாடையின் ஓரத்தையேனும் தொடுவதற்கு, அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">பின்பு பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,</verse>
				<verse number="2">“உமது சீடர்கள் ஏன் முன்னோரின் சம்பிரதாய வழக்கத்தை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் உண்பதற்கு முன்பு, தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="3">அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுடைய சம்பிரதாய வழக்கத்தின் காரணமாக, நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்?</verse>
				<verse number="4">ஏனெனில், ‘உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணு’ என்றும் ‘எவனாவது தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்பட வேண்டும்’ என்றும், இறைவன் சொன்னாரே.</verse>
				<verse number="5">ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தகப்பனிடமோ தாயிடமோ, ‘உங்களுக்கு உதவியாக செய்யக்கூடிய எல்லாவற்றையும் இறைவனுக்கு காணிக்கையாக அர்ப்பணித்துவிட்டேன்’ என்று சொன்னால்,</verse>
				<verse number="6">அவன் தன் தகப்பனையோ, தாயையோ கனம் பண்ண வேண்டிய அவசியமில்லை என்று சொல்கின்றீர்கள். நீங்கள் உங்கள் சம்பிரதாயத்தின் காரணமாக, இறைவனின் வார்த்தைகளை உதாசீனம் செய்கின்றீர்கள்.</verse>
				<verse number="7">வெளிவேடக்காரர்களே! உங்களைக் குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்கு உரைத்தார்:</verse>
				<verse number="8">“ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். ஆனால், அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.</verse>
				<verse number="9">அவர்கள் என்னை வீணாகவே ஆராதிக்கின்றார்கள்; அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’ ” என்றார்.</verse>
				<verse number="10">பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடமாய் அழைத்துச் சொன்னதாவது: “கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="11">மனிதனுடைய வாய்க்குள் போவது அவனை அசுத்தப்படுத்தாது. ஆனால் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவது எதுவோ, அதுவே அவனை அசுத்தப்படுத்தும்” என்றார்.</verse>
				<verse number="12">அப்போது சீடர்கள் அவரிடம் வந்து, “இவற்றைப் பரிசேயர்கள் கேட்டு, கோபித்துக் கொண்டார்கள் என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="13">அதற்கு அவர், “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடு பிடுங்கிப் போடப்படும்.</verse>
				<verse number="14">அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் கண் பார்வை இழந்த வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவனுக்குப் பார்வையற்ற இன்னொருவன் வழிகாட்டினால், இருவரும் குழியிலே விழுவார்களே” எனப் பதிலளித்தார்.</verse>
				<verse number="15">அப்போது பேதுரு, “இந்த உவமையை எங்களுக்கு விளக்கமாகச் சொல்லும்” என்றான்.</verse>
				<verse number="16">அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்கள் இன்னுமா இதைப் புரிந்துகொள்ளவில்லை?</verse>
				<verse number="17">வாய்க்குள் போவதெல்லாம் வயிற்றுக்குள் போய், உடலைவிட்டு வெளியேறுகிறது என்று தெரியாதா?</verse>
				<verse number="18">ஆனால் வாயிலிருந்து வெளியே வருகின்றவைகளோ இருதயத்திலிருந்தே வருகின்றன. அதுவே மனிதரை அசுத்தப்படுத்தும். இவையே ஒரு மனிதனை ‘அசுத்தம்’ உள்ளவனாக்குகின்றன.</verse>
				<verse number="19">ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, தகாத உறவு, முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச் சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன.</verse>
				<verse number="20">இவையே மனிதனை அசுத்தப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுவது மனிதரை அசுத்தப்படுத்தாது” என்றார்.</verse>
				<verse number="21">இயேசு அவ்விடம்விட்டு தீரு, சீதோன் பிரதேசத்திற்குச் சென்றார்.</verse>
				<verse number="22">அப்பிரதேசத்திலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடம் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மீது இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பேய் பிடித்திருப்பதனால், மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள்.</verse>
				<verse number="23">ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பி விடும், இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகின்றாளே” என வேண்டிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="24">அப்போது அவர், “நான் இஸ்ரயேலில் வழி தவறிப் போன செம்மறியாடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார்.</verse>
				<verse number="25">அந்தப் பெண் வந்து, அவரின் முன்பாக முழந்தாழிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்!” என்றாள்.</verse>
				<verse number="26">அவர் அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார்.</verse>
				<verse number="27">அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள், எஜமானின் மேசையில் இருந்து விழும் அப்பத் துண்டுகளைத் தின்னுமே” என்றாள்.</verse>
				<verse number="28">அப்போது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ கேட்டது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் குணமடைந்தாள்.</verse>
				<verse number="29">இயேசு அவ்விடம்விட்டு, கலிலேயா கடலோரமாக வந்தார். பின்பு அவர் மலைச்சரிவில் ஏறிச் சென்று, அங்கே உட்கார்ந்தார்.</verse>
				<verse number="30">மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். அவர்கள் கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோர்களையும், அங்கவீனர்களையும், வாய் பேச முடியாதவர்களையும், அவர்களுடன் மற்றும் அநேக நோயாளிகளையும் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் கிடத்தினார்கள்; அவர் அவர்களைக் குணமாக்கினார்.</verse>
				<verse number="31">பேச முடியாதவர்கள் பேசுவதையும், அங்கவீனர் குணமடைவதையும், கால் ஊனமுற்றோர் நடப்பதையும், பார்வையற்றோர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனைத் துதித்தார்கள்.</verse>
				<verse number="32">இயேசு தமது சீடர்களைத் தன்னிடமாக அழைத்து, “நான் இந்த மக்களுக்காக அனுதாபப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். உண்பதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. நான் இவர்களை பசியோடு அனுப்ப விரும்பவில்லை, அனுப்பினால் இவர்கள் வழியில் சோர்ந்து விழுவார்களே” என்றார்.</verse>
				<verse number="33">அதற்கு அவரது சீடர்கள், “இவ்வளவு பெரிய கூட்டத்திற்குக் கொடுப்பதற்குத் தேவையான உணவை, இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் நாம் எங்கிருந்து பெற முடியும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="34">இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். “ஏழு அப்பங்களும், சில சிறு மீன்களும் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="35">அவர் மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார்.</verse>
				<verse number="36">பின்பு அவர் ஏழு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாக்கி சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="37">அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளை சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்தார்கள்.</verse>
				<verse number="38">சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை நாலாயிரமாயிருந்தது. அவர்களைத் தவிர பெண்களும், பிள்ளைகளும்கூட இருந்தார்கள்.</verse>
				<verse number="39">இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்ட பின், படகில் ஏறி மக்தலா நாட்டின் பக்கமாக சென்றார்.</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தார்கள்.</verse>
				<verse number="2">அவர் அதற்கு பதிலாக, “மாலை வேளையாகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘வானிலை நன்றாக இருக்கும்’ என்று சொல்கின்றீர்கள்.</verse>
				<verse number="3">காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல் காற்று வீசும்’ என்று சொல்கின்றீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்குத் தெரிகிறது, ஆனால் காலங்களின் அடையாளங்களைப் புரிந்துகொள்ள உங்களால் முடியவில்லையே.</verse>
				<verse number="4">கொடுமையும் இறை துரோகமும் நிறைந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கின்றார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்று சொன்னார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.</verse>
				<verse number="5">அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள்.</verse>
				<verse number="6">இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களுக்குச் சொன்னார்.</verse>
				<verse number="7">அப்போது அவர்கள், “இது நாம் அப்பம் கொண்டுவராதபடியினால்தான்” என்று அர்த்தப்படுத்தி தங்களுக்குள்ளே கலந்தாலோசிக்க ஆரம்பித்தார்கள்.</verse>
				<verse number="8">அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசியதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, உணவு இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகின்றீர்கள்.</verse>
				<verse number="9">நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மிகுதியை எத்தனை கூடைகள் நிறைய சேர்த்தீர்கள் என்று நினைவில்லையா?</verse>
				<verse number="10">அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மிகுதியை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள் என்பது நினைவில்லையா?</verse>
				<verse number="11">இப்படியிருக்க நான் உணவைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை, நீங்கள் விளங்கிக்கொள்ளாமல் போனது எப்படி? பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்தே விழிப்பாயிருங்கள்” என்றார்.</verse>
				<verse number="12">அப்பத்திற்கு புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக் குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்போது விளங்கிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="13">இயேசு செசரியா-பிலிப்பு பிரதேசத்துக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மனுமகனை, யார் என்று மக்கள் சொல்கின்றார்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="14">அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்றும் சொல்கின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="15">அப்போது அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="16">அதற்கு சீமோன் பேதுரு, “நீர் மேசியா, உயிருள்ள இறைவனின் மகன்” என்றான்.</verse>
				<verse number="17">அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கின்ற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.</verse>
				<verse number="18">நான் உனக்குச் சொல்கின்றேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின் மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள மாட்டாது.</verse>
				<verse number="19">நான் உனக்கு பரலோக அரசின் சாவிகளைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார்.</verse>
				<verse number="20">அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களிடம், தான் மேசியா என்பதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என கடுமையாகக் கட்டளையிட்டார்.</verse>
				<verse number="21">அந்த வேளையிலிருந்து, இயேசு தமது சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போக வேண்டும் என்றும், சமூகத் தலைவர்களாலும் தலைமை மதகுருக்களாலும் நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.</verse>
				<verse number="22">அப்போது பேதுரு, அவரை தனியே அழைத்துக்கொண்டு போய், “ஆண்டவரே, இது உமக்கு நேரிட இறைவன் அனுமதியாமல் இருப்பாராக! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.</verse>
				<verse number="23">ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, “எனக்குப் பின்னால் போ சாத்தானே! நீ எனக்கு இடறல் ஏற்படுத்தும் தடையாய் இருக்கின்றாய்; நீ இறைவனுக்கு ஏற்றவிதமாய் சிந்திக்காமல், மனிதனுக்கு ஏற்றவிதமாய் சிந்திக்கிறாய்” என்றார்.</verse>
				<verse number="24">இதன்பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “எவனாவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து, தனது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்ற வேண்டும்.</verse>
				<verse number="25">தனது உயிரை தனக்கென்று காத்துக்கொள்கின்றவன், அதை இழந்து போவான். ஆனால் தனது உயிரை எனக்காக இழக்கிறவன், அதைக் காத்துக்கொள்வான்.</verse>
				<verse number="26">ஏனெனில், ஒருவன் உலகம் முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டாலும், தனது ஆத்துமாவை இழந்து போனால், அதனால் அவனுக்குப் பலன் என்ன? அல்லது ஒருவன் தனது ஆத்துமாவுக்கு மாற்றீடாக எதைக் கொடுக்கலாம்?</verse>
				<verse number="27">ஆகவே மனுமகன் தமது தூதர்களுடன் தமது பிதாவின் மகிமையில் வரும்போது, ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதி கொடுப்பார்.</verse>
				<verse number="28">“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுமகன் தமது அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="17">
				<verse number="1">ஆறு நாட்களின் பின் பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்முடன் தனியாக அழைத்துக்கொண்டு இயேசு உயரமான ஒரு மலைக்குச் சென்றார்.</verse>
				<verse number="2">அங்கே அவர்களுக்கு முன்பாக அவருடைய தோற்றம் மாறி, அவருடைய முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது. அவருடைய உடைகள் வெளிச்சத்தைப் போல் வெண்மையாக மாறின.</verse>
				<verse number="3">திடீரென எலியாவும் மோசேயும் அங்கு தோன்றி, இயேசுவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.</verse>
				<verse number="4">அப்போது பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக, நான் மூன்று கூடாரங்களை அமைக்கிறேன்” என்றான்.</verse>
				<verse number="5">அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, இதோ பிரகாசமுள்ள ஒரு மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர்தான் என் அன்பு மகன், இவரில் நான் பெருமகிழ்ச்சியாய் இருக்கின்றேன். இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று சொன்னது.</verse>
				<verse number="6">சீடர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் பயமடைந்து, தரையில் முகங்குப்புற விழுந்தார்கள்.</verse>
				<verse number="7">ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார்.</verse>
				<verse number="8">அவர்கள் தலை நிமிர்ந்து உற்றுப் பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை.</verse>
				<verse number="9">அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்போது, இயேசு அவர்களிடம், “மனுமகன் மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்படும் வரை, நீங்கள் கண்ட இந்த தரிசனத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று கட்டளையிட்டார்.</verse>
				<verse number="10">சீடர்கள் அவரிடம், “அப்படியானால் முதலாவது எலியா வர வேண்டும் என்று நீதிச்சட்ட ஆசிரியர்கள் சொல்கின்றார்களே, அது ஏன்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="11">இயேசு அதற்குப் பதிலாக, “நிச்சயமாகவே எலியா வந்து எல்லாவற்றையும், சீர்படுத்தி முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது.</verse>
				<verse number="12">ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவர்கள் அவரை யாரென்று அறிந்துகொள்ளாமல் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அதைப்போலவே, மனுமகனும் அவர்களுடைய கைகளில் துன்பப்படப் போகின்றார்” என்று சொன்னார்.</verse>
				<verse number="13">அப்போது சீடர்கள், அவர் யோவான் ஸ்நானகனைப் பற்றியே பேசுகின்றார் என விளங்கிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="14">மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழந்தாழிட்டு,</verse>
				<verse number="15">“ஆண்டவரே, எனது மகன்மீது இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் விழுந்து விடுகிறான்.</verse>
				<verse number="16">நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான்.</verse>
				<verse number="17">அப்போது இயேசு, “விசுவாசமில்லாத, இறைவழிக்கு மாறுபட்டு நடக்கும் தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைச் சகித்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.</verse>
				<verse number="18">இயேசு அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயை அதட்டினார், அது அவனைவிட்டு வெளியேறியது. அந்த வினாடியே அவன் குணமடைந்தான்.</verse>
				<verse number="19">அப்போது சீடர்கள் இயேசுவிடம் தனிமையில் வந்து, “ஏன் அதை எங்களால் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="20">அதற்கு அவர், “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்களுக்குக் கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்ல முடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது.</verse>
				<verse number="21">ஆயினும் இவ்விதமான பேய், ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியேறாது” என்றார்.</verse>
				<verse number="22">அவர்கள் கலிலேயாவிலே ஒன்றுகூடி வந்தபோது இயேசு அவர்களிடம், “மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு, மனிதருடைய கைகளிலே ஒப்புக்கொடுக்கப்படுவார்.</verse>
				<verse number="23">அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே அவர் உயிருடனே எழுப்பப்படுவார்” என்று சொன்னார். அப்போது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள்.</verse>
				<verse number="24">இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது, ஆலய வரியாக இரண்டு வெள்ளி நாணயங்களை சேகரிக்கின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="25">“ஆம் செலுத்துவார்” என அவன் பதிலளித்தான். பின்பு பேதுரு வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசத் தொடங்குவதற்கு முன் இயேசு அவனிடம், “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார்.</verse>
				<verse number="26">“அந்நியர்களிடமிருந்து” என பேதுரு பதில் சொன்னான். அப்போது இயேசு, “அப்படியானால் சொந்த மக்கள் அதற்கு உட்பட்டவர்களல்ல.</verse>
				<verse number="27">ஆனாலும் நாம் அவர்கள் கோபம் அடையாதபடி, கடலுக்குப் போய் தூண்டிலைப் போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத் திற, அதற்குள் ஒரு வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும் உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="18">
				<verse number="1">அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="2">அவர் ஒரு சிறு பிள்ளையைத் தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார்.</verse>
				<verse number="3">அவர் அவர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொண்டவர்களாக, சிறு பிள்ளைகளைப் போல் மாறாவிட்டால் நீங்கள் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்ல மாட்டீர்கள்.</verse>
				<verse number="4">ஆதலால், இந்தச் சிறு பிள்ளையைப் போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கின்றான்” என்றார்.</verse>
				<verse number="5">“இப்படி ஒரு சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.</verse>
				<verse number="6">“ஆனால், என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே ஒரு பெரிய திரிகைக்கல் கட்டப்பட்டு, கடலின் ஆழத்தில் தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும்.</verse>
				<verse number="7">மக்களைப் பாவம் செய்யப் பண்ணுகிற சோதனைகளின் காரணமாக, உலகத்திற்கு ஐயோ பேரழிவு! இப்படிப்பட்ட சோதனைகள் வர வேண்டியதே. ஆனால் யார் மூலமாக அது வருகின்றதோ அந்த மனிதனுக்கு ஐயோ பேரழிவு!</verse>
				<verse number="8">உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்து போடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைவிட, ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது.</verse>
				<verse number="9">உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத் தோண்டி எறிந்து விடு. இரு கண்ணுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைவிட, ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது.</verse>
				<verse number="10">“நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையாவது அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைதூதர்கள், எனது பரலோக பிதாவின் முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.</verse>
				<verse number="11">ஏனெனில் வழி தவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார்.</verse>
				<verse number="12">“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு செம்மறியாடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழி தவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் மலைப் பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போக மாட்டானோ?</verse>
				<verse number="13">நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழி தவறிப் போகாத தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளைவிட, அந்த ஒரு செம்மறியாட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான்.</verse>
				<verse number="14">அதுபோலவே, இந்த சிறியவர்களில் ஒருவனாவது வழி தவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் திட்டமல்ல.</verse>
				<verse number="15">“உன் சகோதரன் உனக்கு எதிராகப் பாவம் செய்தால், நீ போய் அவனுடைய குற்றத்தை அவனுக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே, அது செய்யப்படட்டும். அவன் அதை ஏற்றுக்கொண்டால், நீ உனது சகோதரனை இழக்காமல் காத்துக்கொள்வாய்.</verse>
				<verse number="16">ஆனால் அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டால், வேறு ஒருவரையோ, இருவரையோ உன்னுடன்கூட அழைத்துக்கொண்டு போய், அதைத் திரும்பவும் சொல்லு. ஏனெனில், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சியங்களின் மூலமாக உறுதி செய்யப்பட வேண்டுமென, இறை வார்த்தையில் சொல்லப்பட்டுள்ளது.’</verse>
				<verse number="17">அவர்கள் சொல்வதையும் அவன் கேட்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; திருச்சபை சொல்வதையும் அவன் கேட்க மறுத்தால், இறைவனை அறியாத ஒருவனைப் போலவும், அநியாயமாய் வரி சேகரிக்கின்ற ஒருவனைப் போலவும் அவனை நடத்து.</verse>
				<verse number="18">“மேலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் எதைப் பூமியில் தடை செய்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் தடை செய்யப்படும். எதைப் பூமியில் அனுமதிக்கிறீர்களோ, அது பரலோகத்திலும் அனுமதிக்கப்படும்.</verse>
				<verse number="19">“திரும்பவும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் இணக்கம் கொண்டால், பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவினால், அது உங்களுக்காகச் செய்யப்படும்.</verse>
				<verse number="20">ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரில் ஒன்றாய்கூடி வருகின்றார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="21">அதன்பின் பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.</verse>
				<verse number="22">இயேசு மறுமொழியாக, “ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறைக்கும் அதிகமாக என்று நான் உனக்குச் சொல்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="23">“பரலோக அரசானது, ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்தது போல் இருக்கின்றது.</verse>
				<verse number="24">அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்தாயிரம் தாலந்து பணம் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான்.</verse>
				<verse number="25">அவனோ அதை செலுத்த முடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.</verse>
				<verse number="26">“வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்மீது பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.</verse>
				<verse number="27">வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான்.</verse>
				<verse number="28">“ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு தினாரி பணம் கடன்பட்டிருந்த தன் சக வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து கழுத்தை நெரித்து, ‘நீ என்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.</verse>
				<verse number="29">“அவனுடைய சக வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்மீது பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக் கேட்டான்.</verse>
				<verse number="30">“ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும்வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான்.</verse>
				<verse number="31">நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் எஜமானுக்குப் போய்ச் சொன்னார்கள்.</verse>
				<verse number="32">“அப்போது எஜமான் வேலைக்காரனை அழைத்து, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடன்களையெல்லாம் ரத்து செய்தேன்.</verse>
				<verse number="33">நான் உன்னில் இரக்கம் காட்டியது போல, நீயும் உனது சக வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான்.</verse>
				<verse number="34">அவனுடைய எஜமான் கோபம்கொண்டு, அவன் கடன்பட்டதை முழுவதும் கொடுத்துத் தீர்க்கும்வரை, அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி, சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.</verse>
				<verse number="35">“நீங்களும் உங்கள் சகோதரனை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="19">
				<verse number="1">இயேசு இவற்றைச் சொல்லி முடித்த பின்பு அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்தில் உள்ள யூதேயா பகுதிகளுக்குச் சென்றார்.</verse>
				<verse number="2">மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணமாக்கினார்.</verse>
				<verse number="3">சில பரிசேயர்கள் அவருடைய வார்த்தைகளால் அவரைச் சிக்க வைப்பதற்காக, அவரிடம் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை தான் விரும்பிய எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்துச் செய்வது நீதிச்சட்டத்திற்கு உகந்ததா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="4">அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பின் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்பதை நீங்கள் வாசித்ததில்லையா?</verse>
				<verse number="5">‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’</verse>
				<verse number="6">எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கின்றார்கள். ஆகையால், இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.</verse>
				<verse number="7">அதற்கு அவர்கள், “அப்படியானால் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து, அவளை அனுப்பி விடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="8">இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் ஆரம்பத்திலிருந்து அப்படியிருக்கவில்லை.</verse>
				<verse number="9">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், தன் மனைவி முறைகேடான பாலுறவில் ஈடுபட்டாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்துச் செய்துவிட்டு, அதன்பின் வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவன் தகாத உறவுகொள்கின்றான்” என்றார்.</verse>
				<verse number="10">சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படிப்பட்டதென்றால், திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதே” என்றார்கள்.</verse>
				<verse number="11">இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தை யாருக்குக் கொடுக்கப்பட்டதோ அவர்களால் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ள முடியும்.</verse>
				<verse number="12">சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கின்றார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.</verse>
				<verse number="13">அதன்பின்பு, சிறு பிள்ளைகளின் மேல் இயேசு கைகளை வைத்து, ஜெபிக்க வேண்டும் என்பதற்காக, சிறு பிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள்.</verse>
				<verse number="14">இயேசு அவர்களிடம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் பரலோக அரசு இப்படிப்பட்டவர்களுக்கே சொந்தமானது” என்றார்.</verse>
				<verse number="15">பிள்ளைகள் மேல் தமது கைகளை வைத்து ஆசீர்வதித்த பின்பு, அவர் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.</verse>
				<verse number="16">அப்போது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்ய வேண்டிய நல்ல காரியம் என்ன?” எனக் கேட்டான்.</verse>
				<verse number="17">“நல்லதைக் குறித்து, நீ ஏன் என்னிடம் கேட்கின்றாய்? நல்லவர் ஒருவரே இருக்கின்றார். நீ நித்திய வாழ்விற்குள் செல்ல வேண்டுமானால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார்.</verse>
				<verse number="18">“எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான். அதற்கு இயேசு, “கொலை செய்யாதே, தகாத உறவுகொள்ளாதே, திருடாதே, பொய்ச் சாட்சி கூறாதே,</verse>
				<verse number="19">உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு, நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலானிடமும் அன்பாய் இரு என்பவைகளே” என்றார்.</verse>
				<verse number="20">அதற்கு அந்த வாலிபன், “இவை எல்லாவற்றையும் கடைப்பிடித்து வருகின்றேன், இன்னும் எனக்குள் என்ன குறைபாடு?” என்றான்.</verse>
				<verse number="21">இயேசு அதற்குப் பதிலாக, “நீ முழு நிறைவுள்ளவனாக இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். அதன்பின் வந்து என்னைப் பின்பற்று” என்றார்.</verse>
				<verse number="22">இதை அந்த வாலிபன் கேட்டபோது, துக்கத்துடன் திரும்பிச் சென்றான். ஏனெனில் அவனிடம் அதிக செல்வம் இருந்தது.</verse>
				<verse number="23">அப்போது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், ஒரு பணக்காரன் பரலோக அரசுக்குள் செல்வது மிகக் கடினமானது.</verse>
				<verse number="24">மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பணம் படைத்த ஒருவர் இறைவனின் அரசுக்குள் செல்வதைவிட, ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.</verse>
				<verse number="25">சீடர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள்.</verse>
				<verse number="26">இயேசு அவர்களை நோக்கிப் பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார்.</verse>
				<verse number="27">பேதுரு அவரிடம் மறுமொழியாக, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அப்படியானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான்.</verse>
				<verse number="28">இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மனுமகன் தமது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பார். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்ப்பீர்கள்.</verse>
				<verse number="29">என்னைப் பின்பற்றுவதன் காரணமாக வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறு மடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான்.</verse>
				<verse number="30">ஆனால், கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="20">
				<verse number="1">“பரலோக அரசு, தனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கென கூலியாட்களை அமர்த்த, அதிகாலையிலே புறப்பட்டுச் சென்ற, நிலச்சொந்தக்காரன் ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.</verse>
				<verse number="2">அவன் அவர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக ஒரு தினாரி பணம் கொடுப்பதற்கு இணங்கி, அவர்களைத் திராட்சைத் தோட்டத்திற்குள் அனுப்பினான்.</verse>
				<verse number="3">“விடிந்த பின்பு, சுமார் காலை ஒன்பது மணியளவில் அவன் வெளியே போனபோது, வேறு சிலர் சந்தை கூடும் இடத்தில் வேலை எதுவும் செய்யாமல் நிற்பதைக் கண்டான்.</verse>
				<verse number="4">அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள். நியாயமான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றான்.</verse>
				<verse number="5">அப்படியே அவர்களும் போனார்கள். “அவன் திரும்பவும் நண்பகல் வேளையிலும், பிற்பகல் சுமார் மூன்று மணியளவிலும், வெளியே போனபோது, இன்னும் சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டு முன்பு போலவே செய்தான்.</verse>
				<verse number="6">மாலை சுமார் ஐந்து மணியளவில் அவன் வெளியே போய், இன்னும் சிலர் ஒரு வேலையுமின்றி நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம், ‘நாள் முழுவதும் ஒரு வேலையும் செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.</verse>
				<verse number="7">“அதற்கு அவர்கள், ‘ஒருவரும் எங்களை வேலைக்கு அழைக்கவில்லை’ என்றார்கள். “அவன் அவர்களிடம், ‘நீங்களும் போய் எனது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள்’ என்றான்.</verse>
				<verse number="8">“மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்தபோது, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் தனது மேற்பார்வையாளனிடம், ‘வேலையாட்களை அழைத்து, கடைசியாக வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி, முதலில் வந்தவர்கள் வரை அவர்களுடைய கூலியைக் கொடு’ என்றான்.</verse>
				<verse number="9">“மாலை ஐந்து மணிக்குப் பின் கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்கள் வந்து, ஒவ்வொருவரும் ஒரு முழுநாளுக்குரிய ஒரு தினாரி பணத்தை கூலியாகப் பெற்றார்கள்.</verse>
				<verse number="10">எனவே முதலாவதாக கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது, அதிகமான கூலி கிடைக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களும், தலா ஒரு தினாரி பணத்தையே நாள் கூலியாகப் பெற்றார்கள்.</verse>
				<verse number="11">அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள்.</verse>
				<verse number="12">அவர்கள் அவனிடம், ‘கடைசியாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார்கள். நாங்களோ வேலையின் கஷ்டத்தையும் பகலின் வெப்பத்தையும் சகித்தோம்; அப்படியிருக்க நீர் அவர்களை எங்களுக்குச் சமமாக்கினீரே’ என்றார்கள்.</verse>
				<verse number="13">“அவனோ அவர்களில் ஒருவனைப் பார்த்து, ‘நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லையே. ஒரு தினாரி பணத்துக்கு வேலை செய்ய நீ ஒத்துக்கொள்ளவில்லையா?</verse>
				<verse number="14">உனது கூலியைப் பெற்றுக்கொண்டு போ. கடைசி நேரத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவனுக்கும், உனக்குக் கொடுத்தது போலவே, நான் கொடுக்க விரும்புகிறேன்.</verse>
				<verse number="15">எனது சொந்தப் பணத்தை நான் விரும்பியபடி செலவு செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் தாராள குணமுள்ளவனாய் இருக்கின்றேன் என்பதற்காக நீ பொறாமை அடையலாமா?’ என்றான்.</verse>
				<verse number="16">“அப்படியே கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.</verse>
				<verse number="17">இயேசு எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக்கொண்டு போய், அவர்களுக்குச் சொன்னதாவது:</verse>
				<verse number="18">“இதோ, நாம் எருசலேமுக்குப் போகின்றோம். அங்கே மனுமகன் தலைமை மதகுருக்களிடத்திலும், நீதிச்சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை மரணதண்டனைக்கு உட்படுத்துவார்கள்.</verse>
				<verse number="19">அவரை ஏளனம் செய்து சாட்டையினால் அடித்துச் சிலுவையில் அறையும்படி, அவரை யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆயினும் அவர் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்திருப்பார்.”</verse>
				<verse number="20">அப்போது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய், இயேசுவிடம் தனது மகன்களை அழைத்துக்கொண்டு வந்து, முழந்தாழிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள்.</verse>
				<verse number="21">அவர் அவளிடம், “நீ விரும்புவது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்க வேண்டும்” என்றாள்.</verse>
				<verse number="22">இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கவிருக்கும் கிண்ணத்திலிருந்து நீங்களும் குடிக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள்.</verse>
				<verse number="23">அப்போது இயேசு அவர்களிடம், “உண்மையாகவே எனது கிண்ணத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள். ஆனாலும் எனது வலது பக்கத்தில் உட்காருவதையோ, இடது பக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் என் பிதாவினால் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.</verse>
				<verse number="24">இதைக் கேட்ட மற்ற பத்துப் பேரும், அந்த இரண்டு சகோதரர்கள் மேலும் கோபமடைந்தார்கள்.</verse>
				<verse number="25">இயேசு அவர்கள் அனைவரையும் தம்மிடமாய் அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="26">ஆனால் நீங்களோ அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்க வேண்டும்;</verse>
				<verse number="27">முதன்மையாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="28">அப்படியே, மனுமகனும் மற்றவர்களிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அல்ல, மற்றவர்களுக்குச் சேவை செய்யவும், அநேகரை மீட்கும் கட்டணமாகத் தனது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.</verse>
				<verse number="29">இயேசுவும் அவருடைய சீடர்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகையில், மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.</verse>
				<verse number="30">அந்த வீதியின் அருகே பார்வையற்ற இருவர் உட்கார்ந்திருந்தார்கள். இயேசு அந்த வழியாய் போகின்றார் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, “ஆண்டவரே, தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="31">மக்கள் கூட்டத்தினரோ அவர்களை அதட்டி அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவர்களோ, “ஆண்டவரே, தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும்” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="32">நடந்து சென்று கொண்டிருந்த இயேசு நின்று, அவர்களை அழைத்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="33">அதற்கு அவர்கள், “ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்து விடும்” என்றார்கள்.</verse>
				<verse number="34">இயேசு அவர்கள்மீது அனுதாபங்கொண்டு, அவர்களுடைய கண்களைத் தொட்டார். உடனே அவர்கள் பார்வை பெற்று, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="21">
				<verse number="1">அவர்கள் எருசலேமை நெருங்கிச் சேர்ந்தபோது, ஒலிவமலைக்கு அருகிலுள்ள பெத்பகே ஊருக்கு வந்தார்கள். அப்போது இயேசு, சீடர்களில் இருவரை அனுப்பிச் சொன்னதாவது:</verse>
				<verse number="2">“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். போனவுடன் ஒரு கழுதையும், அதனுடன் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்.</verse>
				<verse number="3">யாராவது உங்களுக்கு ஏதாவது சொன்னால், நீங்கள் அவனிடம், ‘இவை ஆண்டவருக்கு தேவைப்படுகின்றன’ என்று சொல்லுங்கள். அவன் அவற்றை உடனே அனுப்பி விடுவான்” என்றார்.</verse>
				<verse number="4">இறைவாக்கினன் மூலமாய் கூறப்பட்டது நிறைவேறும்படி இது நடைபெற்றது:</verse>
				<verse number="5">“சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்: உன் அரசர் உன்னிடம் வருகின்றார், தாழ்மையுள்ள அவர் கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் அமர்ந்து வருகின்றார்.”</verse>
				<verse number="6">சீடர்கள் போய், இயேசு தங்களுக்கு சொல்லியிருந்தபடியே செய்தார்கள்.</verse>
				<verse number="7">அவர்கள் கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவந்து, அதன்மீது தங்கள் மேலாடைகளைப் போட்டதும், இயேசு ஏறி உட்கார்ந்தார்.</verse>
				<verse number="8">ஒரு பெரும் மக்கள் கூட்டத்தினர், வீதியில் தங்களது மேலாடைகளை விரித்தார்கள். மற்றவர்கள் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி வீதியில் பரப்பினார்கள்.</verse>
				<verse number="9">அவருக்கு முன்னாலும், பின்னாலும் சென்ற மக்கள் கூட்டத்தினர்: “தாவீதின் மகனுக்கு ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “உன்னதத்தில் ஓசன்னா!” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="10">இயேசு எருசலேமுக்குள் சென்றபோது, பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் குழப்பமடைந்து, “இவர் யார்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="11">அதற்கு மக்கள் கூட்டத்தினர், “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்த இறைவாக்கினர்” எனப் பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="12">இயேசு ஆலய வளாகத்துக்குள் சென்று, அங்கே விற்றுக் கொண்டும், வாங்கிக் கொண்டும் இருந்த எல்லோரையும் வெளியே துரத்தினார். அவர் நாணயமாற்று செய்வோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.</verse>
				<verse number="13">இயேசு அவர்களிடம், “எனது வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்” என்றார்.</verse>
				<verse number="14">பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் ஆலயத்தில் இருந்த அவரிடம் வந்தார்கள். அவர் அவர்களைக் குணமாக்கினார்.</verse>
				<verse number="15">அவர் செய்த இந்த ஆச்சரியமான காரியங்களையும், சிறு பிள்ளைகள் ஆலய வளாகத்துக்குள் இருந்து, “தாவீதின் மகனுக்கு ஓசன்னா” என்று ஆரவாரம் செய்வதையும் தலைமை மதகுருக்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் கண்டார்கள். அதனால் அவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து,</verse>
				<verse number="16">“இந்தப் பிள்ளைகள் சொல்வது உமக்குக் கேட்கின்றதா?” என்று இயேசுவிடம் கேட்டார்கள். இயேசு அதற்கு பதிலாக, “ஆம், “ ‘சிறு பிள்ளைகளின் உதடுகளிலிருந்தும் குழந்தைகளின் உதடுகளிலிருந்தும் துதிகளை ஏற்படுத்தினீர்’ என்று எழுதியிருப்பதை, நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="17">அதன்பின் அவர் அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து வெளியேறி பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவைக் கழித்தார்.</verse>
				<verse number="18">மறுநாள் அதிகாலையில், அவர் பட்டணத்திற்குத் திரும்பி வருகையில் பசியாயிருந்தார்.</verse>
				<verse number="19">வீதி அருகே ஒரு அத்தி மரம் இருப்பதை அவர் கண்டு, அங்கே சென்றார். ஆனால் அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருப்பதைக் கண்டார். அப்போது அவர், “நீ இனி ஒருபோதும் பழம் கொடாதிருப்பாயாக!” என்று அதற்குச் சொன்னார். உடனேயே அந்த மரம் பட்டுப் போயிற்று.</verse>
				<verse number="20">சீடர்கள் இதைக் கண்டு வியப்படைந்து, “இவ்வளவு சீக்கிரம் இந்த அத்தி மரம் எப்படி பட்டுப் போயிற்று?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="21">இயேசு அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், இந்த அத்தி மரத்துக்குச் செய்யப்பட்டது போல உங்களாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய் கடலிலே விழு’ என்று சொன்னால், அதுவும் அப்படியே நடக்கும்.</verse>
				<verse number="22">நீங்கள் விசுவாசித்தால், மன்றாடுதலில் எவற்றைக் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றார்.</verse>
				<verse number="23">இயேசு ஆலய முற்றத்திற்குள் சென்று அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அப்போது தலைமை மதகுருக்களும் சமூகத் தலைவர்களும் அவரிடம் வந்து அவரிடம், “எந்த அதிகாரத்தைக்கொண்டு, நீர் இவற்றைச் செய்கின்றீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="24">அதற்கு இயேசு, “நானும் உங்களிடத்தில் ஒரு கேள்வி கேட்கின்றேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தைக்கொண்டு நான் இவற்றைச் செய்கின்றேன் என்று உங்களுக்குச் சொல்வேன்” என்றார்.</verse>
				<verse number="25">“யோவானின் ஞானஸ்நானம் எங்கிருந்து வந்தது? அது பரலோகத்திலிருந்தா அல்லது மனிதரிடமிருந்தா?” என்று கேட்டார். அவர்கள் இதைக் குறித்துத் தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள்: “அது பரலோகத்திலிருந்து வந்தது” என்று நாம் சொன்னால், பின் ஏன் நீங்கள் யோவானை விசுவாசிக்கவில்லை? என்று கேட்பார்.</verse>
				<verse number="26">“மனிதரிடமிருந்து” என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது. ஏனெனில் இந்த பாமர மக்கள் எல்லோரும் யோவானை ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொள்கின்றார்கள்.</verse>
				<verse number="27">எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். அதற்கு இயேசு, “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.</verse>
				<verse number="28">பின்பு இயேசு, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவன் மூத்தவனிடம், ‘மகனே, நீ போய் இன்று திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்’ என்றான்.</verse>
				<verse number="29">“அவனோ, ‘நான் போக மாட்டேன்’ என்றான், ஆயினும் பின்பு மனம் வருந்தி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு வேலை செய்யச் சென்றான்.</verse>
				<verse number="30">“பின்பு அந்த தகப்பன் தனது மற்ற மகனிடம் போய், அதேவிதமாகச் சொன்னான். அதற்கு அவன், ‘அப்பா, நான் போகின்றேன்’ என்றான், ஆனாலும் அவன் போகவில்லை.</verse>
				<verse number="31">“இவர்கள் இருவரில், யார் தகப்பன் விரும்பியதைச் செய்தவன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “மூத்த மகனே” என்று பதிலளித்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “ஆம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், வரி சேகரிப்பவர்களும் விலைமாதர்களும் உங்களுக்கு முன்னதாகவே இறைவனின் அரசிற்குள் போகின்றார்கள்.</verse>
				<verse number="32">ஏனெனில் நீதியின் வழியை உங்களுக்குக் காட்டுவதற்கு, யோவான் உங்களிடம் வந்தான். நீங்கள் அவனை நம்பவில்லை. ஆனால் வரி சேகரிப்பவர்களும் விலைமாதர்களுமோ அவனை நம்பினார்கள். அதைக் கண்ட பின்பும்கூட, நீங்கள் மனம் வருந்தி உங்கள் எண்ணத்தை மாற்றி அவனை நம்பவில்லை.</verse>
				<verse number="33">“மேலும் ஒரு உவமையைக் கேளுங்கள்: நிலச்சொந்தக்காரன் ஒருவன், ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, பழங்களைப் பிழியும் தொட்டியையும், ஒரு காவற் கோபுரத்தையும் கட்டினான். பின்பு அவன், அந்தத் திராட்சைத் தோட்டத்தை சில விவசாயிகளுக்கு குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பயணத்தை மேற்கொண்டான்.</verse>
				<verse number="34">அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி, அவன் தனது வேலைக்காரரை குத்தகைக்காரரிடம் அனுப்பினான்.</verse>
				<verse number="35">“குத்தகைக்காரர்களோ அவனுடைய வேலையாட்களைப் பிடித்து, ஒருவனை அடித்து, இன்னொருவனைக் கொலை செய்து, மற்றவனைக் கல்லால் எறிந்தார்கள்.</verse>
				<verse number="36">பின்பு சொந்தக்காரன், தனது மற்ற வேலையாட்களை அவர்களிடம் அனுப்பினான். முதலில் அனுப்பியவர்களைப் பார்க்கிலும் இன்னும் பலரை அனுப்பினான்; அந்தக் குத்தகைக்காரர்களோ, இவர்களையும் அவ்விதமாகவே நடத்தினார்கள்.</verse>
				<verse number="37">‘அவர்கள் என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, கடைசியாக அவன் தன் மகனையும் அவர்களிடம் அனுப்பினான்.</verse>
				<verse number="38">“ஆனால் குத்தகைக்காரர்களோ, மகனைக் கண்டபோது, ‘இவனே சொத்துக்கு வாரிசு. வாருங்கள், இவனைக் கொலை செய்து, இவனுடைய உரிமைச் சொத்தை நாம் எடுத்துக்கொள்வோம்’ என்று ஒருவரோடொருவர் தங்களிடையே சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="39">அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலை செய்தார்கள்.</verse>
				<verse number="40">“ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் வரும்போது, அந்த குத்தகைக்காரர்களை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="41">அதற்கு அவர்கள், “அவன் அந்தக் கொடியவர்களுக்கு, அதேவித கொடுமையான மரணதண்டனை கொடுத்து, அறுவடையின்போது தனக்குரிய விளைச்சலின் பங்கை ஒழுங்காகக் கொடுக்கக் கூடிய, வேறு குத்தகைக்காரருக்கு தனது திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பான்” என்று பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="42">இயேசு அவர்களிடம், “ ‘கட்டடம் கட்டுகிறவர்கள் வேண்டாம் என்று நிராகரித்த கல்லே கட்டடத்தின் மிக முக்கியமான கல் ஆயிற்று; கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது’ என்பதை நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?</verse>
				<verse number="43">“ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்பட்டு, அதற்கேற்ற பலன்களைத் தரும் மக்களுக்குக் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="44">இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் துண்டுதுண்டாக நொருங்கிப் போவான். இந்தக் கல் எவன் மேலாவது விழுந்தால், அது அவனை நசுக்கி விடும்” என்றார்.</verse>
				<verse number="45">தலைமை மதகுருக்களும், பரிசேயரும் இயேசுவின் உவமைகளைக் கேட்டபோது, அவர் தங்களைக் குறித்தே பேசுகின்றார் என்று அறிந்துகொண்டார்கள்.</verse>
				<verse number="46">எனவே, அவர்கள் அவரைக் கைது செய்ய வழி தேடினார்கள். ஆனாலும் பொதுமக்கள் அவரை ஒரு இறைவாக்கினர் என்று எண்ணியிருந்தபடியால், அப்படிச் செய்ய பயந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="22">
				<verse number="1">திரும்பவும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலமாகப் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது:</verse>
				<verse number="2">“பரலோக அரசு, ஒரு அரசன் தனது மகனுக்கென ஒரு திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது.</verse>
				<verse number="3">விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் பணியாட்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள்.</verse>
				<verse number="4">“அவன் இன்னும் சில பணியாட்களை அனுப்பி, ‘நான் என்னுடைய விருந்தை ஆயத்தப்படுத்தி விட்டேன்; சிறப்பான மாமிச விருந்து உங்களுக்கென்று ஆயத்தமாய் இருக்கின்றது. திருமண விருந்துக்கு வாருங்கள்’ என்று அழைக்கப்பட்டவர்களிடம் சொல்லுங்கள் என்றான்.</verse>
				<verse number="5">“ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள். ஒருவன் தனது வயலுக்கும், வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் சென்றான்.</verse>
				<verse number="6">மற்றவர்களோ, அரசனுடைய பணியாட்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள்.</verse>
				<verse number="7">அரசன் கடுங் கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான்.</verse>
				<verse number="8">“பின்பு அவன் தன் பணியாட்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் வரத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள்.</verse>
				<verse number="9">இப்போது வீதிகளின் மூலைகளுக்குப் போங்கள், யாரையெல்லாம் நீங்கள் காண்கின்றீர்களோ, அவர்களையெல்லாம் விருந்துக்கு அழையுங்கள்’ என்றான்.</verse>
				<verse number="10">எனவே பணியாட்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் அழைத்து ஒன்றுசேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது.</verse>
				<verse number="11">“அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை அணிந்திராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான்.</verse>
				<verse number="12">அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டபோது, அவன் பேச்சற்று நின்றான்.</verse>
				<verse number="13">“அப்போது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே வேதனையான பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான்.</verse>
				<verse number="14">“ஏனெனில் அநேகர் அழைக்கப்பட்டாலும், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலரே.”</verse>
				<verse number="15">பின்பு பரிசேயர்கள் போய், இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அவரைச் சிக்க வைக்க சதித் திட்டமிட்டார்கள்.</verse>
				<verse number="16">அவர்கள், தங்கள் சீடர்களை ஏரோதியர்களுடன் இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை உண்மையின்படி போதிக்கிறவருமாய் இருக்கின்றீர். நீர் எவருடைய தராதரத்தையும் பார்க்காதவர். எனவே நீர் பிறருடைய கருத்துக்களை எல்லாம் ஏற்பவர் அல்ல என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="17">ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா இல்லையா? உம்முடைய அபிப்பிராயம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.</verse>
				<verse number="18">ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வெளிவேடக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?</verse>
				<verse number="19">வரி செலுத்துவதற்காக உபயோகிக்கும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தினாரி பணத்தை அவரிடம் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="20">அவர் அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இதில் உள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையது?” என்று கேட்டார்.</verse>
				<verse number="21">அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்போது அவர் அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="22">அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து, அவரைவிட்டுப் போனார்கள்.</verse>
				<verse number="23">அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கின்ற சதுசேயர், அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள்.</verse>
				<verse number="24">“போதகரே, ‘ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் இறந்துபோனால், இறந்தவனின் மனைவியை, அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்.</verse>
				<verse number="25">எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்து போனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்குவிட்டுச் சென்றான்.</verse>
				<verse number="26">அதன்படி, இரண்டாம் மூன்றாம் சகோதரன் என ஏழாவது சகோதரன் வரை அப்படியே நடந்தது.</verse>
				<verse number="27">இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.</verse>
				<verse number="28">அப்படியானால், இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="29">இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றீர்கள், ஏனெனில் வேதவசனங்களையோ, இறைவனின் வல்லமையையோ நீங்கள் அறியவில்லை.</verse>
				<verse number="30">உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள்.</verse>
				<verse number="31">இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?</verse>
				<verse number="32">‘நானே ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமாயிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கின்றாரே. அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார்.</verse>
				<verse number="33">மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து பெரிதும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.</verse>
				<verse number="34">இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர்கள் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள்.</verse>
				<verse number="35">அவர்களில் நீதிச்சட்டத்தில் நிபுணனான ஒருவன், கேள்வி கேட்டு அவரைச் சோதிப்பதற்காக,</verse>
				<verse number="36">“போதகரே, நீதிச்சட்டத்தில் மிகப் பெரிய கட்டளை எது?” என்றான்.</verse>
				<verse number="37">இயேசு அவனுக்குப் பதிலாக, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக.’</verse>
				<verse number="38">இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.</verse>
				<verse number="39">இரண்டாவதும் இதைப் போன்றதே: ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு.’</verse>
				<verse number="40">முழு நீதிச்சட்டத்துக்கும், இறைவாக்குகளுக்கும் இந்த இரண்டு கட்டளைகளே அடிப்படையாக இருக்கின்றன” என்றார்.</verse>
				<verse number="41">பரிசேயர்கள் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,</verse>
				<verse number="42">“நீங்கள் மேசியாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="43">அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியினால் பேசுகையில், அவரை ‘ஆண்டவர்’ என்று அழைத்தது எப்படி? ஏனெனில்,</verse>
				<verse number="44">“கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம்: ‘நான் உமது பகைவரை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை, எனது வலது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்’ என்று தாவீது சொல்லியிருக்கின்றாரே.</verse>
				<verse number="45">எனவே, தாவீதே மேசியாவை ஆண்டவர் என்று அழைத்திருக்கிறார். அப்படியென்றால் அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="46">ஒருவராலும் ஒரு வார்த்தையைக்கூட அவருக்குப் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.</verse>
			</chapter>
			<chapter number="23">
				<verse number="1">பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடர்களையும் பார்த்துச் சொன்னதாவது:</verse>
				<verse number="2">“நீதிச்சட்ட ஆசிரியர்களும் பரிசேயரும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="3">ஆகவே நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்யுங்கள். ஆனால் அவர்கள் செய்வதை நீங்கள் செய்ய வேண்டாம். ஏனெனில், அவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைத் தாங்களே செய்வதில்லை.</verse>
				<verse number="4">அவர்கள் சுமக்க முடியாத பாரச் சுமைகளைக் கட்டி, மக்களின் தோள்கள்மீது வைக்கிறார்கள். ஆனால் அவர்களோ, அவற்றை நகர்த்துவதற்கு தங்களது ஒரு விரலைக்கூட நீட்டவும் மனதற்றவர்களாக இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="5">“அவர்கள் செய்வதெல்லாம் மனிதர்கள் பார்க்க வேண்டுமென்றே செய்யப்படுகின்றன: வேதவசனம் பொறித்த இடைப்பட்டிகளை அகலமாக்கி, தங்கள் உடைகளின் குஞ்சங்களை நீளமாக்குகிறார்கள்;</verse>
				<verse number="6">அவர்கள் விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும் பெற விரும்புகிறார்கள்;</verse>
				<verse number="7">மேலும் சந்தை கூடும் இடங்களில், மக்களின் வாழ்த்துதல்களைப் பெறவும், ‘போதகர்’ என்று மற்றவர்களால் அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.</verse>
				<verse number="8">“ஆனால் நீங்களோ ‘போதகர்’ என்று அழைக்கப்படக் கூடாது; ஏனெனில், உங்களுக்கு ஒரு போதகர் மட்டுமே இருக்கின்றார். நீங்கள் எல்லோரும் சகோதரராய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="9">பூமியிலுள்ள யாரையும் ‘பிதா’ என்று அழைக்காதிருங்கள். ஏனெனில் உங்களுக்கு ஒரே பிதா பரலோகத்தில் இருக்கின்றார்.</verse>
				<verse number="10">நீங்கள், ‘ஆசிரியர்’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனெனில் மேசியாவே உங்களுக்கு ஒரே ஆசிரியராக இருக்கின்றார்.</verse>
				<verse number="11">உங்களில் மிகவும் பெரியவனாய் இருக்கின்றவன், உங்களுக்குப் பணி செய்கின்றவனாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="12">ஏனெனில், தன்னைத் தானே உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.</verse>
				<verse number="13">“வெளிவேடக்காரர்களாகிய நீதிச்சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ பேரழிவு! நீங்கள் பரலோக அரசின் கதவுகளை மனிதரின் முகத்துக்கு முன்பாக மூடி விடுகிறீர்கள். நீங்களும் அதற்குள் செல்வதில்லை. செல்ல விரும்புகிறவர்களையும் அனுமதிப்பதில்லை.</verse>
				<verse number="14">வெளிவேடக்காரர்களாகிய நீதிச்சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ பேரழிவு! நீங்கள் விதவைகளின் வீடுகளை அபகரிக்கிறீர்கள். ஆனால் மக்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் மன்றாடுகிறீர்கள். இதனால் நீங்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள்.</verse>
				<verse number="15">“வெளிவேடக்காரர்களாகிய நீதிச்சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஒருவனை உங்கள் மதத்திற்கு மாற்றுவதற்குத் தரை வழியாகவும், கடல் வழியாகவும் தூரப் பயணம் மேற்கொள்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மதத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள்.</verse>
				<verse number="16">“பார்வை இழந்த வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ பேரழிவு! ‘எவனாவது ஆலயத்தின் மீது சத்தியம் பண்ணினால், அது பரவாயில்லை; ஆனால் எவனாவது ஆலயத்திலுள்ள தங்கத்தின் மேல் சத்தியம் பண்ணினால், அதை நிறைவேற்றியே தீர வேண்டும்’ என்கிறீர்கள்.</verse>
				<verse number="17">பார்வை இழந்த முட்டாள்களே! தங்கமா, தங்கத்தைப் புனிதமாக்கும் ஆலயமா, எது பெரியது?</verse>
				<verse number="18">மேலும் நீங்கள், ‘எவனாவது பலிபீடத்தின் மீது சத்தியம் செய்தால், அது பரவாயில்லை; ஆனால் எவனாவது பலிபீடத்தின் மேலுள்ள காணிக்கையின் மேல் சத்தியம் பண்ணினால், அவன் அதை நிறைவேற்றியே தீர வேண்டும்’ என்கிறீர்கள்.</verse>
				<verse number="19">பார்வை இழந்த மனிதர்களே! காணிக்கையா, காணிக்கையைப் புனிதமாக்கும் பலிபீடமா, எது பெரியது?</verse>
				<verse number="20">எனவே பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்பவன் பலிபீடத்தைக் கொண்டு மட்டுமல்ல, அதன் மீதுள்ள எல்லாவற்றையும் கொண்டு சத்தியம் செய்கின்றானே.</verse>
				<verse number="21">ஆலயத்தைக் கொண்டு சத்தியம் செய்பவன் ஆலயத்தைக் கொண்டு மட்டுமல்ல, ஆலயத்தில் குடிகொண்டிருப்பவரைக் கொண்டே சத்தியம் செய்கின்றான்.</verse>
				<verse number="22">பரலோகத்தின் பேரில் சத்தியம் செய்கின்றவன் இறைவனின் அரியணையைக் கொண்டும், அதில் அமர்ந்திருப்பவரைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.</verse>
				<verse number="23">“வெளிவேடக்காரர்களாகிய நீதிச்சட்ட ஆசிரியரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! நீங்கள் புதினாவையும், வெந்தயத்தையும், சீரகத்தையும் பத்திலொன்றாக காணிக்கை கொடுக்கின்றீர்கள். ஆனால் நீதிச்சட்டத்தின் மிக முக்கியமான நீதி, இரக்கம், நம்பகம் ஆகியவற்றை அலட்சியம் செய்துவிட்டீர்கள். இவைகளையே நீங்கள் செய்திருக்க வேண்டும். அதேவேளை, முன்பு செய்தவற்றையும் கைவிடக் கூடாது.</verse>
				<verse number="24">பார்வை இழந்த வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டி, ஒட்டகத்தையல்லவோ விழுங்குகிறீர்கள்.</verse>
				<verse number="25">“வெளிவேடக்காரர்களாகிய நீதிச்சட்ட ஆசிரியரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! கிண்ணங்கள் மற்றும் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கின்றீர்கள். ஆனால் உட்புறமோ, கொள்ளையினாலும் பேராசைகளினாலும் நிரம்பியிருக்கிறது.</verse>
				<verse number="26">பார்வை இழந்த பரிசேயரே! முதலில் கிண்ணங்கள் மற்றும் உணவுப் பாத்திரங்களின் உட்புறத்தைச் சுத்தம் செய்யுங்கள். அப்போது அவற்றின் வெளிப்புறமும் சுத்தமாயிருக்கும்.</verse>
				<verse number="27">“வெளிவேடக்காரர்களாகிய நீதிச்சட்ட ஆசிரியரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருக்கின்றீர்கள், அவை வெளியே அழகாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் உட்புறமோ இறந்தவர்களின் எலும்புகளினாலும், எல்லாவிதமான அசுத்தங்களினாலும் நிறைந்திருக்கின்றது.</verse>
				<verse number="28">அதுபோலவே, வெளித்தோற்றத்திற்கு மனிதர்கள் பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் உள்ளத்திலோ போலித்தனத்தாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="29">“வெளிவேடக்காரர்களாகிய நீதிச்சட்ட ஆசிரியரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! நீங்கள் முன்பிருந்த இறைவாக்கினர்களுக்கு கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் நினைவுச் சின்னங்களை அலங்கரிக்கிறீர்கள்.</verse>
				<verse number="30">‘எங்கள் முற்பிதாக்களின் காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தால், இறைவாக்கினரின் இரத்தத்தைச் சிந்துவதற்கு, நாங்கள் அவர்களுடன் பங்காளிகளாய் இருந்திருக்க மாட்டோம்’ என்றும் சொல்கின்றீர்கள்.</verse>
				<verse number="31">ஆனால் நீங்கள் இறைவாக்கினரைக் கொலை செய்தவர்களின் தலைமுறை என்று, உங்களுக்கு எதிராக நீங்களே சாட்சி கொடுக்கின்றீர்கள்.</verse>
				<verse number="32">ஆகவே, உங்கள் முற்பிதாக்கள் தொடங்கிய பாவத்தை நீங்களும் செய்து முடிக்கிறீர்கள்.</verse>
				<verse number="33">“பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்?</verse>
				<verse number="34">ஆகவே நான் இறைவாக்கினரையும், ஞானமுள்ளவர்களையும், ஆசிரியர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரை நீங்கள் சிலுவையில் அறைந்து கொலை செய்வீர்கள்; மற்றவர்களை உங்கள் ஜெபஆலயங்களில் சவுக்கினால் அடித்து, பட்டணம் பட்டணமாகத் துரத்திச் சென்று துன்புறுத்துவீர்கள்.</verse>
				<verse number="35">அப்படியே நீதிமானான ஆபேலின் இரத்தம் தொடங்கி, ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே, நீங்கள் கொலை செய்த பரக்கியாவின் மகன் சகரியாவின் இரத்தம் வரைக்கும், பூமியில் சிந்தப்பட்ட நீதிமான்கள் அனைவரது இரத்தப் பழியும் உங்கள் மீது வரும்.</verse>
				<verse number="36">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவை எல்லாம் இந்தத் தலைமுறையினர் மேல் வந்தே தீரும்.</verse>
				<verse number="37">“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலை செய்து, உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள் மீது கல்லெறிகிற பட்டணமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் அணைத்து, சேர்த்துக்கொள்வது போல, எத்தனையோ முறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், நீயோ அதை விரும்பவில்லை.</verse>
				<verse number="38">ஆகவே இதோ, உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="39">நான் உனக்குச் சொல்கின்றேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று நீ சொல்லும் வரைக்கும், இனிமேல் நீ என்னைக் காண மாட்டாய்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="24">
				<verse number="1">இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்கள் ஆலயக் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடம் வந்தார்கள்.</verse>
				<verse number="2">ஆனால் இயேசு அவர்களிடம், “இவற்றையெல்லாம் பார்க்கின்றீர்கள் அல்லவா? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்குள்ள ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதவாறு, ஒவ்வொரு கல்லும் இடிக்கப்படும்” என்றார்.</verse>
				<verse number="3">இயேசு ஒலிவமலையின் மேல் இருக்கையில், சீடர்கள் தனிமையாக அவரிடம் வந்து, “எப்போது இவை நிகழும்? உமது வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்குமான அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="4">இயேசு அவர்களிடம், “உங்களை யாரும் வழிவிலகச் செய்யாதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.</verse>
				<verse number="5">ஏனெனில் ‘நானே மேசியா,’ என்று சொல்லிக்கொண்டு, அநேகர் எனது பெயரில் வந்து, பலரை ஏமாற்றுவார்கள்.</verse>
				<verse number="6">யுத்தங்களைப் பற்றியும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் நீங்களோ கலங்காதபடி இருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நிகழ வேண்டியவையே. ஆனாலும் முடிவு வர, இன்னும் காலம் இருக்கின்றது.</verse>
				<verse number="7">நாட்டிற்கு விரோதமாய் நாடும், அரசுக்கு எதிராய் அரசும் எழும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும்.</verse>
				<verse number="8">இவை எல்லாம் பிரசவ வேதனையின் ஆரம்பம் மட்டுமே.</verse>
				<verse number="9">“அப்போது நீங்கள் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். என் பெயரின் பொருட்டு அனைத்து இனத்தாராலும் வெறுக்கப்படுவீர்கள்.</verse>
				<verse number="10">அக்காலத்தில் அநேகர் விசுவாசத்திலிருந்து விலகிப் போவார்கள். அத்துடன் அவர்கள் ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கின்றவர்களாகவும், வெறுக்கிறவர்களாகவும் இருப்பார்கள்.</verse>
				<verse number="11">அநேக போலி இறைவாக்கினர்களும் தோன்றி, அநேக மக்களை ஏமாற்றுவார்கள்.</verse>
				<verse number="12">அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்து போகும்.</verse>
				<verse number="13">ஆனால் முடிவு வரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.</verse>
				<verse number="14">இறை அரசின் இந்த நற்செய்தி, முழு உலகமும் அறியும்படி அனைத்து இனத்தவருக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும். அதன்பின்பே முடிவு வரும்.</verse>
				<verse number="15">“எனவே இறைவாக்கினன் தானியேல் மூலமாக சொல்லப்பட்ட, ‘பேரழிவை ஏற்படுத்துகின்ற அருவருப்பு’ ஆலயப் பரிசுத்த இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, வாசிக்கின்ற நீங்கள் அதை விளங்கிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="16">அப்போது யூதேயாவில் இருக்கின்றவர்கள் மலைகளுக்குத் தப்பியோடட்டும்.</verse>
				<verse number="17">வீட்டின் கூரையின் மேல் இருக்கின்ற எவனும், தனது வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகக் கூடாது.</verse>
				<verse number="18">வயலில் இருக்கும் எவனும், தனது மேலாடையை எடுக்கும்படி திரும்பிப் போகக் கூடாது.</verse>
				<verse number="19">அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்!</verse>
				<verse number="20">நீங்கள் ஓடிப் போவது குளிர் காலத்திலாவது அல்லது ஓய்வுநாளிலாவது நேரிடாதபடி மன்றாடுங்கள்.</verse>
				<verse number="21">ஏனென்றால், அக்காலத்தில் பெரும் துன்பம் ஏற்படும்; அப்படிப்பட்ட துன்பம் உலகத் தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஏற்பட்டதும் இல்லை, இனி ஒருபோதும் ஏற்படப் போவதும் இல்லை.</verse>
				<verse number="22">“அந்த நாட்கள் குறைக்கப்படாவிட்டால், ஒருவராலும் தப்ப முடியாது. ஆயினும், தெரிவு செய்யப்பட்டவர்களின் பொருட்டு, அந்த நாட்கள் குறைக்கப்படும்.</verse>
				<verse number="23">அக்காலத்தில் எவனாவது உங்களிடம் வந்து, ‘இதோ, மேசியா இங்கே இருக்கின்றார்!’ அல்லது ‘அதோ அங்கே இருக்கின்றார்!’ என்று சொன்னால், அதை நம்ப வேண்டாம்.</verse>
				<verse number="24">ஏனெனில் போலி மேசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் பெரிதான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.</verse>
				<verse number="25">பாருங்கள், அக்காலம் வருமுன்பே, நான் உங்களுக்குச் சொல்லி எச்சரிக்கிறேன்.</verse>
				<verse number="26">“ஆகவே எவனாவது உங்களிடம், ‘அதோ அங்கே அவர், வெளியே பாலைநிலத்தில் இருக்கின்றார்’ என்று சொன்னால், அங்கே போகாதிருங்கள்; ‘இதோ இங்கே அவர், உள் அறையில் இருக்கின்றார்’ என்று சொன்னால், அதையும் நம்பாதிருங்கள்.</verse>
				<verse number="27">ஏனெனில் கிழக்கிலிருந்து வரும் மின்னல் மேற்கிலும் தெரிவது போலவே, மனுமகனின் வருகையும் இருக்கும்.</verse>
				<verse number="28">எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்.</verse>
				<verse number="29">“அந்த நாட்களின் பெருந்துன்பம் முடிந்த உடனேயே, “ ‘சூரியன் இருள் அடையும், சந்திரன் தனது வெளிச்சத்தை கொடாதிருக்கும்; நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருந்து விழும். வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’</verse>
				<verse number="30">“அவ்வேளையில், மனுமகன் திரும்பி வருவதன் அறிகுறி ஆகாயத்தில் தோன்றும். பூமியிலுள்ள இனங்களெல்லாம் புலம்புவார்கள். மனுமகன் அதிகாரத்துடனும், மிகுந்த மகிமையுடனும், ஆகாயத்து மேகங்கள் மேல் வருவதை, அவர்கள் காண்பார்கள்.</verse>
				<verse number="31">அவர் தமது தூதர்களை உரத்த சத்தமான எக்காள அழைப்புடன் அனுப்புவார். அவர்கள் வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்தும் அவரால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஒன்றுகூட்டிச் சேர்ப்பார்கள்.</verse>
				<verse number="32">“இப்பொழுதே அத்தி மரத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் இளங்கிளைகள் துளிர்த்து, இலைகள் வரும்போது, கோடை காலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள்.</verse>
				<verse number="33">அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவு நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="34">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவையெல்லாம் நடந்து முடியும் வரைக்கும், இந்தத் தலைமுறையினர் ஒழிந்து போக மாட்டார்கள்.</verse>
				<verse number="35">வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.</verse>
				<verse number="36">“அந்த நாளையோ, அந்த நேரத்தையோபற்றி எவருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கின்ற தூதர்களுக்கும், மனுமகனுக்கும்கூட தெரியாது. ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார்.</verse>
				<verse number="37">நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, மனுமகனது வருகையின் நாட்களிலும் இருக்கும்.</verse>
				<verse number="38">ஏனெனில் பெருவெள்ளத்திற்கு முன்பு இருந்த நாட்களில், நோவா பேழைக்குள் போகும் வரைக்கும், மக்கள் உணவு உண்டும், குடித்துக் கொண்டும், திருமணம் செய்து கொண்டும், திருமணம் செய்து கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.</verse>
				<verse number="39">பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லோரையும் அடித்துக் கொண்டுபோகும் வரைக்கும், என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் ஒன்றுமே அறியாதிருந்தார்கள். இதைப் போலவே, மனுமகனின் வருகையின்போதும் இருக்கும்.</verse>
				<verse number="40">இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்பட, மற்றவன் விடப்படுவான்.</verse>
				<verse number="41">இரண்டு பெண்கள் திரிகைக்கல்லில் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்பட, மற்றவள் கைவிடப்படுவாள்.</verse>
				<verse number="42">“ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என்று உங்களுக்குத் தெரியாதே.</verse>
				<verse number="43">நீங்கள் இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் இரவில் எந்த நேரம் வருவான் என்று வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.</verse>
				<verse number="44">எனவே நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பாராத நேரத்திலே மனுமகன் வருவார்.</verse>
				<verse number="45">“அப்படியானால் நம்பகமும் ஞானமும் உள்ள பணியாளன் யார்? அவனே தனது வீட்டில் உள்ள வேலைக்காரருக்கு ஏற்ற வேளையில் உணவு கொடுக்கும்படி, எஜமான் பொறுப்பாக வைத்த பணியாளன்.</verse>
				<verse number="46">எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கின்றவனாகக் காணப்படுகிற பணியாளன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.</verse>
				<verse number="47">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எஜமான் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும், அவனையே பொறுப்பாக வைப்பான்.</verse>
				<verse number="48">ஆனால் அந்த பணியாளன் மோசமானவனாய் இருந்து, ‘எனது எஜமான் வர தாமதிக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு,</verse>
				<verse number="49">தனது சக வேலையாட்களை அடிக்கவும், குடிகாரருடன் சேர்ந்து சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,</verse>
				<verse number="50">அந்த பணியாளனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத நேரத்திலும் வருவான்.</verse>
				<verse number="51">எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி வெளிவேடக்காரருக்குரிய இடத்தில் தள்ளி விடுவான்; அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் இருக்கும்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="25">
				<verse number="1">“அந்நாளிலே, பரலோக அரசானது பத்து கன்னிப்பெண்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு, மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும்.</verse>
				<verse number="2">அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்களாகவும், ஐந்து பேர் ஞானமுள்ளவர்களாகவும் இருந்தார்கள்.</verse>
				<verse number="3">அந்த புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெயையோ எடுத்துச் செல்லவில்லை.</verse>
				<verse number="4">ஞானமுள்ளவர்களோ, தங்கள் விளக்குகளுடன் குப்பிகளில் எண்ணெயையும் எடுத்துச் சென்றார்கள்.</verse>
				<verse number="5">மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.</verse>
				<verse number="6">“நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகின்றார்! அவரைச் சந்திக்க புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.</verse>
				<verse number="7">“அப்போது எல்லா கன்னிப்பெண்களும் விழித்தெழுந்து, அவர்களுடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள்.</verse>
				<verse number="8">புத்தியில்லாதவர்களோ ஞானமுள்ளவர்களிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.</verse>
				<verse number="9">“அதற்கு ஞானமுள்ளவர்கள், ‘இல்லை, அது எங்களுக்கும் உங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.</verse>
				<verse number="10">“அவர்கள் எண்ணெய் வாங்குவதற்காக போய்க் கொண்டிருக்கையில், மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிப்பெண்கள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே போனார்கள். கதவோ அடைக்கப்பட்டது.</verse>
				<verse number="11">“பின்பு மற்றக் கன்னிப்பெண்களும் வந்து, ‘ஆண்டவனே, ஆண்டவனே, எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.</verse>
				<verse number="12">“ஆனால் அவரோ, ‘உண்மையாகவே சொல்கின்றேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.</verse>
				<verse number="13">“எனவே விழிப்பாயிருங்கள், ஏனெனில் அந்த நாளையும், அந்த நேரத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்றார்.</verse>
				<verse number="14">“மேலும், பரலோக அரசு, பயணம் போகின்ற ஒருவன், தனது வேலையாட்களை அழைத்து, தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்தது போல் இருக்கும்.</verse>
				<verse number="15">அவன், ஒருவனுக்கு ஐந்து தாலந்து பணம், இன்னொருவனுக்கு இரண்டு தாலந்து பணம், வேறொருவனுக்கு ஒரு தாலந்து பணம் என பெருந் தொகைப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான்.</verse>
				<verse number="16">ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், உடனே போய் அதை முதலீடு செய்து, இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்தான்.</verse>
				<verse number="17">அவ்வாறே இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்தான்.</verse>
				<verse number="18">ஆனால் ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனோ புறப்பட்டுப் போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.</verse>
				<verse number="19">“நீண்ட காலத்தின் பின் அந்த வேலையாட்களின் எஜமான் திரும்பி வந்து, கணக்கு கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டான்.</verse>
				<verse number="20">ஐந்து தாலந்து பணத்தைப் பெற்றவன், இன்னும் ஐந்து தாலந்து பணத்தைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான்.</verse>
				<verse number="21">“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேகமானவைகளுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.</verse>
				<verse number="22">“இரண்டு தாலந்து பணத்தைப் பெற்றுக்கொண்டவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு தாலந்து பணத்தை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு தாலந்து பணத்தைச் சம்பாதித்துள்ளேன்’ என்றான்.</verse>
				<verse number="23">“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.</verse>
				<verse number="24">“பின்பு ஒரு தாலந்து பணத்தைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமான மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும், அவ்விடத்தில் அறுவடை செய்கின்றவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும், அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன்.</verse>
				<verse number="25">எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய், உமது ஒரு தாலந்து பணத்தை நிலத்திலே புதைத்து வைத்தேன். இதோ, உமக்குரிய பணம்’ என்றான்.</verse>
				<verse number="26">“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாதவனே! சோம்பேறியான வேலைக்காரனே! நான் ஒரு இடத்தில் விதைக்காமல், அங்கு அறுவடை செய்கின்றவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல், அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே.</verse>
				<verse number="27">அப்படியானால், நீ என் பணத்தை வங்கியில் வைப்பீடு செய்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வந்ததும், அதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.</verse>
				<verse number="28">“அவன், ‘அந்த ஒரு தாலந்து பணத்தை அவனிடமிருந்து எடுத்து, பத்து தாலந்து பணம் வைத்திருக்கின்றவனிடத்தில் கொடுங்கள்.</verse>
				<verse number="29">ஏனெனில் உள்ளவனாய் இருக்கின்ற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். அவன் நிறைவாய் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடத்திலிருந்தோ அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.</verse>
				<verse number="30">அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் இருக்கும்’ என்றான்.</verse>
				<verse number="31">“மனுமகன் தமது மகிமையில், இறைதூதர்கள் எல்லோருடனும் வரும்போது அவர் தமது மகிமையின் அரியணையில் அமருவார்.</verse>
				<verse number="32">சகல இன மக்களும் அவருக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பது போல், அவர் மக்களையும் இரண்டு குழுக்களாக வேறு பிரிப்பார்.</verse>
				<verse number="33">செம்மறியாடுகளை அவர் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.</verse>
				<verse number="34">“அப்போது அரசர் வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை உரித்தாக்கிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="35">ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், எனக்கு அருந்தக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்;</verse>
				<verse number="36">நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்போது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.</verse>
				<verse number="37">“அப்போது நீதிமான்கள் அவரிடம், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்?</verse>
				<verse number="38">எப்போது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடையில்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்?</verse>
				<verse number="39">எப்போது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள்.</verse>
				<verse number="40">“அதற்கு அரசர், ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளித்தார்.</verse>
				<verse number="41">“பின்பு அவர் தமது இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்.</verse>
				<verse number="42">ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்கு அருந்தக் கொடுக்கவில்லை;</verse>
				<verse number="43">நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை’ என்று சொல்வார்.</verse>
				<verse number="44">“அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்போது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவோ தாகமுள்ளவராகவோ அல்லது அந்நியராகவோ உடையில்லாதவராகவோ அல்லது வியாதியுள்ளவராகவோ சிறையிலிருப்பவராகவோ கண்டோம்? எப்போது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.</verse>
				<verse number="45">“அதற்கு அவர், ‘நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யாமல் விட்டீர்கள்’ என்பார்.</verse>
				<verse number="46">“அப்போது, அவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும் நீதிமான்களோ, நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="26">
				<verse number="1">இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்த பின்பு, அவர் தமது சீடருக்குச் சொன்னதாவது:</verse>
				<verse number="2">“நீங்கள் அறிந்திருக்கின்றபடி, பஸ்கா பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுக்கப்படுவார்” என்றார்.</verse>
				<verse number="3">அவ்வேளையில் தலைமை மதகுருக்களும், சமூகத் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதம மதகுருவின் அரண்மனையில் ஒன்றுகூடி,</verse>
				<verse number="4">இயேசுவை இரகசியமாகக் கைது செய்து, அவரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டினார்கள்.</verse>
				<verse number="5">ஆனாலும், “பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக் கூடாது, அப்படிச் செய்தால் மக்கள் மத்தியில் கலகம் ஏற்படலாம்” என்று சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="6">பெத்தானியாவிலே, முன்பு தொழுநோயாளியாயிருந்த சீமோன் என்பவனுடைய வீட்டில் இயேசு இருந்தபோது,</verse>
				<verse number="7">ஒரு பெண் மிகவும் விலையுயர்ந்த வாசனைத் தைலம் உள்ள, வெள்ளைக் கல் குடுவையுடன் அவரிடம் வந்தாள். அவர் உணவுப் பந்தியில் இருக்கையில், அவள் அந்த வாசனைத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.</verse>
				<verse number="8">சீடர்கள் இதைக் கண்டபோது, அவர்கள் ஆத்திரமடைந்து, “ஏன் இந்த வீண்விரயம்?</verse>
				<verse number="9">இந்த வாசனைத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள்.</verse>
				<verse number="10">இயேசு இதை அறிந்து அவர்களிடம், “இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்த நற்காரியத்தை எனக்குச் செய்திருக்கின்றாள்.</verse>
				<verse number="11">ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நானோ, எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டேன்.</verse>
				<verse number="12">இவள் இந்த வாசனைத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றி, அடக்கம் செய்வதற்கு என்னைத் தயார் செய்திருக்கின்றாள்.</verse>
				<verse number="13">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளை ஞாபகப்படுத்த சொல்லப்படும்” என்றார்.</verse>
				<verse number="14">பின்னர், யூதாஸ் ஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு பேரில் ஒருவன், தலைமை மதகுருக்களிடம் போய்,</verse>
				<verse number="15">“நான் இயேசுவை உங்களிடம் ஒப்புக்கொடுத்தால், நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="16">அவ்வேளையிலிருந்து யூதாஸ், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="17">புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா உணவை உண்ணும்படி, உமக்காக நாங்கள் எங்கே ஆயத்தம் செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்” எனக் கேட்டார்கள்.</verse>
				<verse number="18">அதற்கு இயேசு, “பட்டணத்திற்குள்ளே நான் குறிப்பிடும் மனிதனிடம் போய், ‘போதகர் உமக்குச் சொல்கின்றதாவது: நியமிக்கப்பட்ட எனது வேளை நெருங்கிவிட்டது. நான் உமது வீட்டில், எனது சீடர்களுடன் பஸ்காவை அனுசரிக்கப் போகின்றேன் என்கிறார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.</verse>
				<verse number="19">இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை அனுசரிக்க ஆயத்தம் செய்தார்கள்.</verse>
				<verse number="20">மாலை வேளையானபோது, இயேசு பன்னிருவரோடும்கூட பந்தியில் இருந்தார்.</verse>
				<verse number="21">அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.</verse>
				<verse number="22">அப்போது அவர்கள் மிகவும் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “ஆண்டவரே, அது நானா?” என்று கேட்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="23">அதற்குப் பதிலாக இயேசு அவர்களிடம், “பாத்திரத்தில் என்னுடன்கூட கை போட்டவனே, என்னைக் காட்டிக் கொடுப்பான்.</verse>
				<verse number="24">தம்மைக் குறித்து வேதவசனத்தில் எழுதியிருக்கின்றபடியே மனுமகன் போகப் போகின்றார். ஆனால் அவரைக் காட்டிக் கொடுக்கின்ற மனிதனுக்கோ ஐயோ பேரழிவு! அவன் பிறக்காமலே இருந்திருந்தால், அது அவனுக்கு நலமாயிருக்குமே” என்றார்.</verse>
				<verse number="25">அப்போது அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனான யூதாஸ், “போதகரே, நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அதை நீயே சொல்லிவிட்டாய்” என்று பதிலளித்தார்.</verse>
				<verse number="26">அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து அவர்களிடம், “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார்.</verse>
				<verse number="27">பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர் அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் இதிலிருந்து குடியுங்கள்.</verse>
				<verse number="28">இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, அநேகருடைய பாவங்களின் மன்னிப்புக்காக இது சிந்தப்படுகிறது” என்று சொன்னார்.</verse>
				<verse number="29">“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இவ்வேளையிலிருந்து, என் பிதாவின் அரசில் இதைப் புதியதாக உங்களோடு நான் குடிக்கும் நாள்வரை, இந்த திராட்சைப் பழரசத்தை குடிக்க மாட்டேன்” என்றார்.</verse>
				<verse number="30">ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, அவர்கள் ஒலிவமலைக்குச் சென்றார்கள்.</verse>
				<verse number="31">அப்போது இயேசு அவர்களிடம், “இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப் போவீர்கள். ஏனெனில், “ ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன். அப்போது மந்தையின் செம்மறியாடுகள் சிதறடிக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறது.</verse>
				<verse number="32">“ஆயினும் நான் உயிரோடு எழுந்த பின், உங்களுக்கு முன்னதாக கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.</verse>
				<verse number="33">அதற்குப் பேதுரு, “மற்ற எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் ஒருபோதும் ஓடிப் போக மாட்டேன்” என்றான்.</verse>
				<verse number="34">இயேசு அதற்கு அவனிடம், “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இந்த இரவிலே சேவல் கூவுவதற்கு முன் நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று பதிலளித்தார்.</verse>
				<verse number="35">ஆனால் பேதுருவோ, “நான் உம்முடனேகூட உயிர் துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும், நான் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றான். சீடர்கள் எல்லோரும் அவ்விதமாகவே சொன்னார்கள்.</verse>
				<verse number="36">பின்பு இயேசு தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஒரு இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் அவர்களிடம், “நான் அங்கு போய் மன்றாடும் வரை இங்கே உட்கார்ந்திருங்கள்” என்றார்.</verse>
				<verse number="37">அவர் பேதுருவையும், செபெதேயுவின் மகன்கள் இருவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போய், மிகவும் துயரமுற்றுக் கலக்கமடையத் தொடங்கினார்.</verse>
				<verse number="38">அவர் அவர்களிடம், “என் ஆத்துமா மரணமடையும் அளவுக்கு துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னுடன் விழித்துக் காத்திருங்கள்” என்றார்.</verse>
				<verse number="39">அவர் சற்றுத் தூரமாய்ப் போய் தரையில் முகங்குப்புற விழுந்து, “என் பிதாவே, முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீக்கப்படுவதாக. ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்று மன்றாடினார்.</verse>
				<verse number="40">பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் நித்திரையாய் இருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரமாவது என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="41">“விழித்திருந்து மன்றாடுங்கள், அப்போது நீங்கள் சோதனைக்குள் விழ மாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.</verse>
				<verse number="42">அவர் இரண்டாவது தடவையும் போய், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்திலிருந்து நான் குடித்தாலொழிய இது என்னைவிட்டு நீங்காதெனில் உம்முடைய நோக்கமே நிறைவேறட்டும்” என்று மன்றாடினார்.</verse>
				<verse number="43">அவர் திரும்பி வந்தபோது, அவர்கள் மீண்டும் நித்திரை செய்வதைக் கண்டார்; ஏனெனில் அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தன.</verse>
				<verse number="44">எனவே மீண்டும், அவர் அவர்களைவிட்டு விலகிப் போய், திரும்பவும் மூன்றாவது தடவையாக, அதே வார்த்தைகளைச் சொல்லி மன்றாடினார்.</verse>
				<verse number="45">பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்து, அவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ பாருங்கள், வேளை நெருங்கிவிட்டது. மனுமகன் பாவிகளின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.</verse>
				<verse number="46">எழுந்திருங்கள், நாம் போவோம். என்னைக் காட்டிக் கொடுப்பவன் வருகின்றான்!” என்றார்.</verse>
				<verse number="47">இயேசு இன்னும் பேசிக் கொண்டிருக்கையில், பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன், தலைமை மதகுருக்களாலும் சமூகத் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்த பெருங் கூட்டம், வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தது.</verse>
				<verse number="48">அவரைக் காட்டிக் கொடுப்பவன், “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே அந்த மனிதர்; அவரைக் கைது செய்யுங்கள்” என்று ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தான்.</verse>
				<verse number="49">ஆகவே, யூதாஸ் இயேசுவை நோக்கி அவரருகில் வந்து, “போதகரே வாழ்க!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.</verse>
				<verse number="50">இயேசு யூதாஸிடம், “நண்பனே, நீ எதற்காக வந்தாயோ, அதைச் செய்” என்றார். அப்போது அவனுடன் வந்தவர்கள் முன்னே வந்து, இயேசுவைப் பிடித்து அவரைக் கைது செய்தார்கள்.</verse>
				<verse number="51">அவ்வேளையில் இயேசுவுடன் இருந்தவர்களில் ஒருவன் தனது வாளை உருவி, தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது காதை வெட்டினான்.</verse>
				<verse number="52">இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கின்ற அனைவரும் வாளினாலேயே சாவார்கள்.</verse>
				<verse number="53">என் பிதாவை நோக்கி, என்னால் கூப்பிட முடியாது என்று நீ நினைக்கிறாயா? நான் கேட்டால் அவர் உடனே எனக்காக பன்னிரண்டுக்கும் அதிகமான பெரும் படைகொண்ட இறைதூதர்களை அனுப்புவார் அல்லவா?</verse>
				<verse number="54">ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிறைவேற வேண்டும் என்று சொல்கின்ற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார்.</verse>
				<verse number="55">அவ்வேளையில் இயேசு அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, “நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து என்னைப் பிடிப்பதற்கு, நான் ஒரு ஆபத்தான கொள்ளைக்காரனா? நான் தினமும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை.</verse>
				<verse number="56">ஆயினும் இறைவாக்கினர் எழுதி வைத்தவை நிறைவேறும்படியே இவை எல்லாம் நிகழ்கின்றன” என்றார். அப்போது சீடர்கள் எல்லோரும், அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப் போனார்கள்.</verse>
				<verse number="57">இயேசுவைக் கைது செய்தவர்கள், அவரைத் தலைமை மதகுரு காய்பாவிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் கூடியிருந்தார்கள்.</verse>
				<verse number="58">பேதுருவோ, சற்று தொலைவிலே அவரைப் பின்தொடர்ந்து போய், தலைமை மதகுருவின் முற்றம் வரைக்கும் சென்றான். அவன் உள்ளே போய் நடக்கப் போவதை அறியும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தான்.</verse>
				<verse number="59">தலைமை மதகுருக்களும் நியாயசபையில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை கொடுப்பதற்காக, அவருக்கு எதிராக பொய்யான சாட்சியைத் தேடிக் கொண்டிருந்தார்கள்;</verse>
				<verse number="60">பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஏற்ற சாட்சியம் கிடைக்கவில்லை. கடைசியாக இரண்டு பேர் முன்வந்து,</verse>
				<verse number="61">“ ‘இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப் போடவும், அதை மூன்று நாளில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும்’ என்று சொன்னான்” என்றார்கள்.</verse>
				<verse number="62">அப்போது தலைமை மதகுரு எழுந்து நின்று இயேசுவிடம், “நீ இதற்குப் பதில் சொல்ல மாட்டாயா? இவர்கள் உனக்கு எதிராக சாட்சி சொல்கின்றார்களே, என்ன இது?” என்று கேட்டான்.</verse>
				<verse number="63">ஆனால் இயேசுவோ ஒன்றும் பேசாதிருந்தார். தலைமை மதகுரு அவரிடம், “உயிருள்ள இறைவன் பெயரில் ஆணையிட்டுக் கேட்கின்றேன். நீ இறைவனின் மகனான மேசியா என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றான்.</verse>
				<verse number="64">இயேசு அதற்குப் பதிலாக, “ஆம், நீர் சொல்கின்றபடிதான். ஆனாலும் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கின்றேன்: இதுமுதல் மனுமகன், வல்லமையுள்ள இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.</verse>
				<verse number="65">அப்போது தலைமை மதகுரு, தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இவன் இறைவனை நிந்தித்துப் பேசுகின்றான்! இதைவிட நமக்கு வேறு சாட்சிகள் தேவையோ? பாருங்கள், இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="66">அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” என்றார்கள்.</verse>
				<verse number="67">பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரை குட்டினார்கள். மற்றவர்கள் அவரது முகத்தில் அறைந்து,</verse>
				<verse number="68">“மேசியாவே, உம்மை அடித்தது யார் என்று இறைவாக்குச் சொல்லும்” என்றார்கள்.</verse>
				<verse number="69">பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்போது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள்.</verse>
				<verse number="70">அதற்கு அவன், “நீ என்ன சொல்கின்றாய் என்றே எனக்குத் தெரியாது” என்று சொல்லி எல்லோருக்கும் முன்பாக அதை மறுதலித்தான்.</verse>
				<verse number="71">பின்பு அவன் வெளியே முற்றத்து வாசலுக்குச் சென்றான்; அங்கே வேறொரு வேலைக்காரப் பெண் அவனைக் கண்டு, அங்கிருந்த மக்களிடம், “இவன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவோடு இருந்தவன்” என்றாள்.</verse>
				<verse number="72">அதற்கு அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சத்தியம் செய்து மீண்டும் மறுதலித்தான்.</verse>
				<verse number="73">சிறிது நேரத்திற்குப் பின் அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக் கொடுக்கின்றது” என்றார்கள்.</verse>
				<verse number="74">அப்போது அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்றும், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன் மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி, சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.</verse>
				<verse number="75">“சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவு கூர்ந்தான். அதனால் அவன் வெளியே போய் மனம் வெதும்பி அழுதான்.</verse>
			</chapter>
			<chapter number="27">
				<verse number="1">மறுநாள் அதிகாலையில் தலைமை மதகுருக்களும் மக்கள் சமூகத் தலைவர்களும் இயேசுவை மரணதண்டனைக்கு உள்ளாக்கும் ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள்.</verse>
				<verse number="2">அவர்கள் அவரைக் கட்டி, ஆளுநர் பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.</verse>
				<verse number="3">அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், இயேசு மரணத் தீர்ப்புக்குள்ளானதைக் கண்டு, மனத்துயரம் அடைந்தான். எனவே, தனக்குக் கொடுத்த முப்பது வெள்ளிக் காசுகளை தலைமை மதகுருக்களிடமும் சமூகத் தலைவர்களிடமும் திருப்பி கொடுத்தான். அவன் அவர்களிடம்,</verse>
				<verse number="4">“நான் குற்றமற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து, பாவம் செய்துவிட்டேன்” என்றான். அதற்கு அவர்கள், “அதுபற்றி எங்களுக்கு என்ன? அது உன் பாடு” என்றார்கள்.</verse>
				<verse number="5">எனவே யூதாஸ் பணத்தை ஆலயத்தினுள் எறிந்துவிட்டு, அங்கிருந்து சென்று தூக்கிலிட்டுக் கொண்டான்.</verse>
				<verse number="6">தலைமை மதகுருக்கள் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப் பழியுள்ள பணம். ஆகையால் இதை திரவியக் களஞ்சியத்தில் போடுவது, நீதிச்சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள்.</verse>
				<verse number="7">எனவே அவர்கள் கலந்தாலோசித்து, அந்நியரை அடக்கம் செய்வதற்காக அந்தப் பணத்தைக்கொண்டு, குயவனுடைய நிலத்தை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள்.</verse>
				<verse number="8">அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்த நிலம்” என்று அழைக்கப்படுகிறது.</verse>
				<verse number="9">இறைவாக்கினன் எரேமியாவினால், “இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலையான முப்பது வெள்ளிக் காசுகளை அவர்கள் எடுத்து,</verse>
				<verse number="10">கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே, அதைக்கொண்டு குயவனுடைய நிலத்தை வாங்கினார்கள்” என்று கூறப்பட்டது நிறைவேறியது.</verse>
				<verse number="11">இயேசுவை கொண்டுவந்து ஆளுநர் முன்னால் நிறுத்தினார்கள். ஆளுநர் அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.</verse>
				<verse number="12">ஆனால் தலைமை மதகுருக்களாலும் சமூகத் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.</verse>
				<verse number="13">அப்போது பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக இவர்கள் கொண்டுவரும் சாட்சியத்தை நீ கேட்கவில்லையா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="14">ஆனால் இயேசுவோ ஒரு குற்றச்சாட்டுக்கும் பதில் கூறாததும், மறுமொழி ஒன்றும் சொல்லாததும் ஆளுநரை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.</verse>
				<verse number="15">பண்டிகையின்போது, மக்கள் கேட்டுக்கொள்ளும் சிறைக் கைதியை விடுதலை செய்வது ஆளுநரின் வழக்கமாயிருந்தது.</verse>
				<verse number="16">அக்காலத்தில் பரபாஸ் என்னும் பேர்போன ஒரு கைதி அவர்களது காவலில் இருந்தான்.</verse>
				<verse number="17">எனவே ஆளுநரின் வீட்டிற்கு முன் மக்கள் ஒன்றுகூடி வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “யாரை நான் உங்களுக்காக விடுதலை செய்ய வேண்டும்: பரபாசையா அல்லது கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவையா?” எனக் கேட்டார்.</verse>
				<verse number="18">ஏனெனில், பொறாமையினாலேயே அவர்கள் இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.</verse>
				<verse number="19">பிலாத்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, அவனுடைய மனைவி, “அந்த குற்றமற்ற மனிதரை ஒன்றும் செய்ய வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு நான் இன்று கனவில் மிகவும் வேதனைப்பட்டேன்” என்று ஒரு செய்தியை அவனுக்கு அனுப்பினாள்.</verse>
				<verse number="20">ஆனால் தலைமை மதகுருக்களும் மூப்பர்களும், பரபாசை விடுதலை செய்யும்படியும், இயேசுவை கொலை செய்யும்படியும் கேட்பதற்காக மக்களைத் தூண்டிவிட்டார்கள்.</verse>
				<verse number="21">“இந்த இருவரில், யாரை நான் உங்களுக்கு விடுதலை செய்ய வேண்டும்?” என ஆளுநர் கேட்டார். “பரபாசை” என அவர்கள் பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="22">“அப்படியானால் கிறிஸ்து என அழைக்கப்படும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பிலாத்து கேட்டான். அவர்கள் எல்லோரும், “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="23">“ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="24">தனது முயற்சியால் பயன் இல்லை என்றும், மாறாக ஒரு கலகம் ஆரம்பிக்கிறது என்றும் பிலாத்து கண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, மக்கள் கூட்டத்திற்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவினான். பின்பு அவன், “இந்த மனிதனுடைய இரத்தப் பழிக்கு, நீங்களே பொறுப்பாளிகள். நானோ குற்றமற்றவன்” என்றான்.</verse>
				<verse number="25">அதற்கு எல்லா மக்களும், “அவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் சுமத்தப்படட்டும்” என்றார்கள்.</verse>
				<verse number="26">அப்போது பிலாத்து, அவர்கள் கேட்டபடியே பரபாசை விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையடிக்கும், சிலுவையில் அறையப்படுவதற்கும் ஒப்படைத்தான்.</verse>
				<verse number="27">அதன்பின் ஆளுநரின் இராணுவ வீரர்கள், இயேசுவைத் தங்கள் தலைமையகத்துக்குக் கொண்டுபோய், அவரைச் சுற்றி முழு இராணுவ வீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.</verse>
				<verse number="28">அங்கே அவர்கள் அவரது உடைகளைக் களைந்து, கருஞ்சிவப்பு மேலாடையை அவருக்கு அணிந்தார்கள்.</verse>
				<verse number="29">அவர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தைச் செய்து, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள். அவர்கள் அவரது வலதுகையில் ஒரு தடியைக் கொடுத்து, அவர் முன்னால் முழந்தாழிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி, அவரை ஏளனம் செய்தார்கள்.</verse>
				<verse number="30">அவர்கள் அவர்மீது துப்பி, அந்தத் தடியை எடுத்து அவருடைய தலையில் தொடர்ந்து அடித்தார்கள்.</verse>
				<verse number="31">அவர்கள் அவரை ஏளனம் செய்த பின், அந்த மேலாடையைக் கழற்றிவிட்டு அவரது உடையை உடுத்தினார்கள். அதன்பின் அவர்கள் அவரைச் சிலுவையில் அறைவதற்கு கொண்டுபோனார்கள்.</verse>
				<verse number="32">அவர்கள் அவரை வெளியே கொண்டுபோகும்போது, சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டு, சிலுவையைத் தூக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.</verse>
				<verse number="33">மண்டையோட்டின் இடம் என்று அர்த்தமுள்ள கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்கு அவர்கள் வந்தபோது,</verse>
				<verse number="34">இயேசுவுக்கு கசப்பு கலந்த திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதை ருசி பார்த்த பின் குடிக்க மறுத்தார்.</verse>
				<verse number="35">அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின், அவரது உடைகளுக்காக சீட்டு போட்டு, அவற்றைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.</verse>
				<verse number="36">பின்பு, அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல் காத்தார்கள்.</verse>
				<verse number="37">அவருடைய தலைக்கு மேலாக அவருக்கெதிரான குற்றச்சாட்டாக இப்படி எழுதி வைத்தார்கள்: இவர் இயேசு, யூதரின் அரசன்.</verse>
				<verse number="38">அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும், இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்வர்களும் அவருடனே சிலுவைகளில் அறையப்பட்டிருந்தனர்.</verse>
				<verse number="39">அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, அவரைப் பழித்துரைத்து,</verse>
				<verse number="40">“ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே! உன்னை நீயே விடுவித்துக்கொள். நீ இறைவனின் மகனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்றார்கள்.</verse>
				<verse number="41">அவ்விதமாகவே தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், மூப்பர்களும், அவரை ஏளனம் செய்து,</verse>
				<verse number="42">“இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையே இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இஸ்ரயேலின் அரசனான இவன், இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் இவனில் விசுவாசம் வைப்போம்.</verse>
				<verse number="43">இவன், ‘நான் இறைவனின் மகன்’ என்றானே. இறைவனில் நம்பிக்கையாயிருக்கிறான். இறைவன் இவன்மேல் பிரியமாயிருந்தால், இப்போது அவர் இவனை விடுவிக்கட்டும்” என்றார்கள்.</verse>
				<verse number="44">அவ்விதமாகவே, அவருடனேகூட சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள்.</verse>
				<verse number="45">நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் சூழ்ந்து கொண்டது.</verse>
				<verse number="46">பிற்பகல் மூன்று மணியளவில், இயேசு பலத்த குரலில், “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கதறினார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பதே அதன் அர்த்தமாகும்.</verse>
				<verse number="47">அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="48">உடனே அவர்களில் ஒருவன் ஓடிப் போய் கடற் பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை ரசத்தில் தோய்த்து, அதை ஒரு தடியில் கட்டி, இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.</verse>
				<verse number="49">மற்றவர்களோ, “அவனை விட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகின்றானா பார்ப்போம்” என்றார்கள்.</verse>
				<verse number="50">இயேசு திரும்பவும் பலத்த சத்தத்தோடு அழைத்து, தமது இறுதி மூச்சை விட்டார்.</verse>
				<verse number="51">அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன;</verse>
				<verse number="52">கல்லறைகளும் நொருங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்த மக்களின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.</verse>
				<verse number="53">அவர்கள் கல்லறைகளைவிட்டு வெளியே வந்தார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெற்ற பின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்கு தென்பட்டார்கள்.</verse>
				<verse number="54">இயேசுவைக் காவல் காத்துக் கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதியும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு பயமடைந்தார்கள். “நிச்சயமாக இவர் இறைவனின் மகனே!” என்று வியப்புடன் சொன்னார்கள்.</verse>
				<verse number="55">இயேசுவின் தேவைகளைக் கவனிப்பதற்கு, கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்த பல பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="56">அவர்களுள் மகதலேனா மரியாளும், யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் மகன்களின் தாயும் இருந்தார்கள்.</verse>
				<verse number="57">மாலை வேளையானபோது, இயேசுவுக்கு சீடனாயிருந்த அரிமத்தியா பட்டணத்தை சேர்ந்த யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன்,</verse>
				<verse number="58">பிலாத்துவினிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான்.</verse>
				<verse number="59">யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான விலையுயர்ந்த மெல்லிய துணியில் சுற்றி,</verse>
				<verse number="60">அவன் கற்பாறையில் குடைந்து வைத்திருந்த அவனுக்கு சொந்தமான புதிய கல்லறையில் வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுச் சென்றான்.</verse>
				<verse number="61">அந்நேரம் மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.</verse>
				<verse number="62">மறுநாள் பஸ்கா பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை மதகுருக்களும், பரிசேயர்களும் பிலாத்துவினிடத்திற்குப் போய்,</verse>
				<verse number="63">அவனிடம், “ஐயா அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, ‘மூன்று நாட்களுக்கு பின் நான் உயிரோடு எழுந்திருப்பேன்’ என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.</verse>
				<verse number="64">ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள் வரைக்கும் பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஒருவேளை அவனது சீடர்கள் வந்து, அந்த உடலைக் களவாடிச் சென்றுவிட்டு, ‘இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்துவிட்டான்’ என்று மக்களுக்குச் சொல்லுவார்கள். அப்படி நடந்தால் முந்திய ஏமாற்று வேலையைவிட பிந்தியது மோசமானதாயிருக்கும்” என்றார்கள்.</verse>
				<verse number="65">அதற்குப் பிலாத்து அவர்களிடம், “காவல் வீரர்களைக் அழைத்துக்கொண்டு போய் உங்களுக்குத் தெரிந்தபடி கல்லறையைப் பத்திரமாய்க் காவல் செய்யுங்கள்” என்றான்.</verse>
				<verse number="66">எனவே அவர்கள் போய், கல்லறையை மூடியிருந்த வாசற் கல்லின் மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="28">
				<verse number="1">சபத் ஓய்வுநாளின் மறுநாளான வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்ப்பதற்குப் போனார்கள்.</verse>
				<verse number="2">அப்போது திடீரென பெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. கர்த்தரின் தூதன் ஒருவன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறைக்குப் போய், அதன் வாசற்கல்லை புரட்டித் தள்ளி, அதன்மீது உட்கார்ந்திருந்தான். இதனால் பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது</verse>
				<verse number="3">அவனுடைய தோற்றம் மின்னலைப் போல இருந்தது. அவனுடைய உடை உறை பனியைப் போல் வெண்மையாய் இருந்தது.</verse>
				<verse number="4">காவல் செய்தவர்கள் மிகவும் பயமடைந்து நடுங்கி, உயிரிழந்த மனிதரைப் போலானார்கள்.</verse>
				<verse number="5">அப்போது கர்த்தரின் தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்பட வேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.</verse>
				<verse number="6">அவர் தாம் சொன்னது போலவே, உயிருடன் எழுந்துவிட்டார், அவர் இங்கே இல்லை; அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான்.</verse>
				<verse number="7">“நீங்கள் விரைவாகப் போய், ‘அவர் மரணத்திலிருந்து எழுந்துவிட்டார். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகின்றார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்’ என்று அவருடைய சீடர்களிடம் சொல்லுங்கள். இதோ நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேன்” என்றும் சொன்னான்.</verse>
				<verse number="8">எனவே, அந்தப் பெண்கள் கல்லறையைவிட்டு விரைவாக வெளியேறி, பயமடைந்தவர்களாகவும் மனமகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் நடந்ததை சீடர்களிடம் சொல்வதற்கு ஓடினார்கள்.</verse>
				<verse number="9">ஆனால் திடீரென இயேசு அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அவர்களும் அவரிடம் வந்து, அவருடைய பாதங்களைப் பற்றிப் பிடித்து, அவரை வழிபட்டார்கள்.</verse>
				<verse number="10">இயேசு அவர்களிடம், “பயப்பட வேண்டாம். நீங்கள் போய், என் சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.</verse>
				<verse number="11">அந்தப் பெண்கள் வழியில் போய்க் கொண்டிருக்கையில், அந்தக் காவலாளர்களில் சிலர் பட்டணத்திற்குள் போய் தலைமை மதகுருக்களிடம் நடந்த யாவற்றையும் அறிவித்தார்கள்.</verse>
				<verse number="12">தலைமை மதகுருக்கள் சமூகத் தலைவர்களைச் சந்தித்து, திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அவர்கள் அந்த இராணுவ வீரருக்கு ஒரு பெருந் தொகைப் பணத்தைக் கொடுத்து,</verse>
				<verse number="13">“நீங்கள் போய், ‘இரவிலே நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில், அவருடைய சீடர்கள் வந்து அவரது உடலைத் திருடிச் சென்று விட்டார்கள்’ என்று சொல்லுங்கள்.</verse>
				<verse number="14">இந்தச் செய்தி ஆளுநரின் காதுகளுக்கு எட்டினால், நாங்கள் அவரைச் சமாளித்து, உங்களுக்குப் பிரச்சினை ஏற்படாதபடி பார்த்துக்கொள்வோம்” என்றார்கள்.</verse>
				<verse number="15">எனவே இராணுவ வீரர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்குக் கூறப்பட்டதையே சொன்னார்கள். இந்தக் கதை இந்த நாள்வரை யூதர்கள் மத்தியில் பரவலாய் அறியப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="16">அப்போது பதினொரு சீடர்களும் அவர்களைப் போகும்படி, இயேசுவினால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருந்த கலிலேயாவிலிருந்த மலைக்கு போனார்கள்.</verse>
				<verse number="17">அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவரை வழிபட்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.</verse>
				<verse number="18">பின்பு இயேசு அவர்களிடம் வந்து, “வானத்திலும், பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.</verse>
				<verse number="19">எனவே நீங்கள் புறப்பட்டுப் போய் அனைத்து இன மக்களையும் சீடராக்கி, பிதாவினதும் மகனினதும், பரிசுத்த ஆவியானவரினதும் பெயரில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,</verse>
				<verse number="20">நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றிற்கும் கீழ்ப்படியும்படி அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இதோ! நான் நிச்சயமாகவே எப்போதும் உங்களுடனே இருக்கின்றேன், இந்த யுகத்தின் முடிவு வரையும்கூட இருக்கின்றேன்” என்றார்.</verse>
			</chapter>
		</book>
		<book number="41">
			<chapter number="1">
				<verse number="1">இறைவனின் மகன் இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.</verse>
				<verse number="2">ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில், “நான் என்னுடைய தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உம்முடைய வழியை ஆயத்தம் செய்வான்”</verse>
				<verse number="3">“ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்கென நேரான பாதைகளை உண்டுபண்ணுங்கள்’ என்று, ஒருவனுடைய குரல் பாலைநிலத்திலே சத்தமிட்டது” என எழுதப்பட்டுள்ளது.</verse>
				<verse number="4">அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைநிலத்தில் வந்து, ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தான். அத்துடன், மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பி பெற வேண்டிய ஞானஸ்நானத்தைக் குறித்தும் பிரசங்கித்துக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="5">யூதேயாவின் எல்லா நாட்டுப் புறத்திலும் எருசலேம் நகரத்திலுமிருந்தும், எல்லோரும் அவனிடம் போனார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.</verse>
				<verse number="6">யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அத்துடன் அவன் வெட்டுக்கிளியையும், காட்டுத்தேனையும் தன் உணவாய் கொண்டான்.</verse>
				<verse number="7">அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுடைய ஒருவர் எனக்குப் பின் வரவிருக்கிறார். நானோ அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் தகுதியற்றவன்.</verse>
				<verse number="8">நான் உங்களுக்குத் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுப்பார்.”</verse>
				<verse number="9">அந்நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.</verse>
				<verse number="10">இயேசு தண்ணீரிலிருந்து கரையேறியவுடன், வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல் உருவம் கொண்டவராய் தம்மீது இறங்குவதையும் கண்டார்.</verse>
				<verse number="11">அப்போது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என் அன்புக்குரிய மகன், உம்மில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என ஒலித்தது.</verse>
				<verse number="12">உடனே ஆவியானவர் அவரைப் பாலைநிலத்துக்கு அனுப்பினார்.</verse>
				<verse number="13">அவர் பாலைநிலத்தில் காட்டு மிருகங்களுடனே இருந்து, நாற்பது நாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். இறைதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.</verse>
				<verse number="14">யோவான் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக் கொண்டே கலிலேயாவை வந்தடைந்து,</verse>
				<verse number="15">“வேளை வந்துவிட்டது, இறைவனுடைய அரசு சமீபமாய் இருக்கின்றது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.</verse>
				<verse number="16">கலிலேயா கடலோரமாய் இயேசு நடந்து போகையில் சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; அவர்கள் மீனவர்களாய் இருந்ததால் கடலிலே வலை வீசிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="17">இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவர்களாக மாற்றுவேன்” என்றார்.</verse>
				<verse number="18">உடனே அவர்கள் தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.</verse>
				<verse number="19">அவர் சிறிது தூரம் போன பின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="20">உடனே அவர், அவர்களையும் அழைத்தார். அவர்கள் தங்கள் தகப்பன் செபெதேயுவை கூலியாட்களோடு படகில் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.</verse>
				<verse number="21">பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள்; ஓய்வுநாளிலே இயேசு யூத ஜெபஆலயத்திற்குள் போய், அங்கு போதித்தார்.</verse>
				<verse number="22">அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் குறித்து வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் நீதிச்சட்ட ஆசிரியர்களைப் போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்குப் போதித்தார்.</verse>
				<verse number="23">அப்போது, அந்த ஜெபஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,</verse>
				<verse number="24">“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே, எங்களோடு உமக்கு என்ன வேலை? எங்களை அழிப்பதற்காகவா வந்திருக்கிறீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.</verse>
				<verse number="25">ஆனால் இயேசுவோ “பேசாதே, இவனைவிட்டு வெளியே போ” என்று அதட்டினார்.</verse>
				<verse number="26">அப்போது தீய ஆவி அந்த மனிதனுக்கு வலிப்பு ஏற்படுத்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அவனைவிட்டு வெளியேறியது.</verse>
				<verse number="27">எல்லோரும் வியப்படைந்து, “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கின்றதே! இவர் தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="28">அவரைப்பற்றிய செய்தி கலிலேயா பிரதேசம் முழுவதும் விரைவாய் பரவியது.</verse>
				<verse number="29">ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டவுடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குப் போனார்கள்.</verse>
				<verse number="30">அங்கே சீமோனுடைய மாமி காய்ச்சலாய் படுத்துக் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.</verse>
				<verse number="31">எனவே அவர் அவளிடத்தில் போய், அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்திருக்க உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.</verse>
				<verse number="32">அன்று மாலை, பொழுது சாய்ந்த பின்பு, மக்கள் வியாதிப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் எல்லோரையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="33">பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலில் கூடியிருந்தார்கள்.</verse>
				<verse number="34">பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்ட அநேகரை இயேசு குணமாக்கினார். அவர் அநேக பேய்களையும் துரத்தினார். அந்தப் பேய்கள் அவரை யாரென்று அறிந்திருந்தபடியால், அவை பேசுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை.</verse>
				<verse number="35">விடியற்காலையில், இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து வெளியே புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.</verse>
				<verse number="36">சீமோனும் அவனுடைய நண்பர்களும், அவனோடு இருந்தவர்களும் அவரைத் தேடிப் போனார்கள்.</verse>
				<verse number="37">அவர்கள் அவரைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="38">இயேசு அவர்களிடம், “நாம் வேறு சில கிராமங்களுக்குப் போவோம், அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.</verse>
				<verse number="39">எனவே, அவர் கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து ஜெபஆலயங்களில் போதித்து, பேய்களையும் துரத்தினார்.</verse>
				<verse number="40">தொழுநோயுள்ள ஒருவன், அவரிடம் வந்து முழந்தாழிட்டு, “உமக்கு விருப்பமானால், என்னைக் குணமாக்கிச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.</verse>
				<verse number="41">இயேசு மனம் உருகியவராய் தம்முடைய கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்றார்.</verse>
				<verse number="42">உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்கி, அவன் குணமடைந்தான்.</verse>
				<verse number="43">இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிக்கையைக் கொடுத்து,</verse>
				<verse number="44">“நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆயினும், நீ போய் மதகுருவுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ குணமடைந்ததற்கான ஒரு அத்தாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.</verse>
				<verse number="45">ஆனால் அவனோ புறப்பட்டுப் போய், தனக்கு நடந்ததைக் குறித்து தாராளமாய் பேசத் தொடங்கி, அந்தச் செய்தியை எங்கும் பரப்பினான். அதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாய் செல்ல முடியவில்லை, அவர் தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆயினும் எல்லா இடங்களிலும் இருந்தும் மக்கள் அவரிடம் வந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">சில நாட்களுக்குப் பின், இயேசு திரும்பவும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டில் இருக்கின்றார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள்.</verse>
				<verse number="2">எனவே மக்கள் அங்கு திரளாய் கூடி வந்தார்கள். இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியிலும்கூட இடம் இல்லாமற் போயிற்று. அவர் அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.</verse>
				<verse number="3">அப்போது நான்கு பேர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.</verse>
				<verse number="4">ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவிடம் கொண்டுவர முடியவில்லை; எனவே அவர்கள், இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்து திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனை அவன் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.</verse>
				<verse number="5">இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.</verse>
				<verse number="6">அங்கே அமர்ந்திருந்த நீதிச்சட்ட ஆசிரியர்கள் சிலர் தங்கள் இருதயங்களில்,</verse>
				<verse number="7">“இவன் ஏன் இப்படிப் பேசுகின்றான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="8">அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை இயேசு உடனே தமது ஆவியில் அறிந்து கொண்டார். எனவே அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?</verse>
				<verse number="9">நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது இலகுவானது?</verse>
				<verse number="10">ஆயினும், பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்” என்று சொல்லிவிட்டு, அவர் முடக்குவாதக்காரனிடம்,</verse>
				<verse number="11">“நான் உனக்குச் சொல்கின்றேன், எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, வீட்டுக்குப் போ” என்றார்.</verse>
				<verse number="12">உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்து சென்றான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.</verse>
				<verse number="13">திரும்பவும் இயேசு புறப்பட்டு, கடலோரமாகச் சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; அவர் அவர்களுக்குப் போதித்தார்.</verse>
				<verse number="14">பின்பு அவர் தொடர்ந்து நடந்து போகையில், அல்பேயுவின் மகனான லேவி, வரி சேகரிக்கும் இடத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்போது லேவி எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான்.</verse>
				<verse number="15">இயேசு லேவியின் வீட்டில் விருந்து உண்ணும்போது, வரி சேகரிப்போர் பலரும் பாவிகளும் அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சேர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.</verse>
				<verse number="16">அவர் பாவிகளோடும் வரி சேகரிப்போருடனும் உண்டு கொண்டிருப்பதை, நீதிச்சட்ட ஆசிரியர்களான பரிசேயர்கள் கண்டபோது, “அவர் ஏன் வரி சேகரிப்போருடனும் பாவிகளோடும் சேர்ந்து உண்கிறார்?” என அவருடைய சீடர்களிடம் கேட்டார்கள்.</verse>
				<verse number="17">இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “நலமாய் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை. வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.</verse>
				<verse number="18">அந்நாட்களில் யோவானுடைய சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் இயேசுவிடம் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசம் செய்கின்றார்கள். ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன் உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="19">அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, அவனுடைய விருந்தின நண்பர்கள் உபவாசம் இருக்க முடியுமோ? மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவர்கள் உபவாசமிருக்க முடியாது.</verse>
				<verse number="20">ஆயினும், மணமகன் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.</verse>
				<verse number="21">“ஒருவனும் ஒரு புதிய துணித் துண்டை பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைக்க மாட்டான். அப்படிச் செய்தால், புதிய துண்டு பழைய உடையிலிருந்து இழுபட்டு கிழிந்து, கிழிந்த இடம் முன்னிருந்ததைவிட பெரிதாகி விடும்.</verse>
				<verse number="22">ஒருவனும் புதிய திராட்சை ரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அவன் அப்படி செய்தால், புதிய திராட்சை ரசம் பழைய தோற்பைகளை வெடிக்கச் செய்யும். அதனால் திராட்சை ரசம், தோற்பை ஆகிய இரண்டுமே பாழாய்ப் போகும். அதனாலே அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை ரசத்தைப் புதிய தோற்பைகளில் ஊற்றி வைப்பார்கள்” என்றார்.</verse>
				<verse number="23">ஒரு ஓய்வுநாளிலே இயேசு, தானியம் விளைந்திருந்த வயல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அவருடனே கூடப் போய்க் கொண்டிருந்த சீடர்கள், தானியக் கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="24">பரிசேயர்கள் இயேசுவிடம், “பாரும், நீதிச்சட்டத்தின்படி சபத் ஓய்வுநாளில் தடை விதிக்கப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கின்றார்கள்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="25">அதற்கு அவர், “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபோது, என்ன செய்தனர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா?</verse>
				<verse number="26">அபியத்தார் தலைமை மதகுருவாய் இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், நீதிச்சட்டத்தின்படி மதகுருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்டதுடன், தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தாரே” என்றார்.</verse>
				<verse number="27">பின்பு அவர் அவர்களிடம், “மனிதனுக்காகவே ஓய்வுநாள் ஏற்படுத்தப்பட்டது; ஓய்வுநாளுக்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை.</verse>
				<verse number="28">ஆகவே மனுமகனே ஓய்வுநாளின் ஆண்டவர்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">இயேசு மறுபடியும் ஜெபஆலயத்திற்குள் சென்றார். அங்கு ஊனமுற்ற கையுடைய ஒருவன் இருந்தான்.</verse>
				<verse number="2">இயேசுவைக் குற்றம் சாட்டுவதற்கான ஒரு ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்த சிலர், ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="3">இயேசு ஊனமுற்ற கையுடைய அந்த மனிதனிடம், “எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்து நில்” என்றார்.</verse>
				<verse number="4">பின்பு இயேசு அவர்களிடம், “நீதிச்சட்டத்தின்படி ஓய்வுநாளில் செய்யத் தகுந்தது எது? நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா, ஒரு உயிரைக் காப்பாற்றுவதா அல்லது உயிரை அழிப்பதா?” என்று கேட்டார். அவர்களோ, ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.</verse>
				<verse number="5">அவர்களை அவர் கோபத்துடன் பார்த்து, அவர்களுடைய கடின இருதயத்தின் காரணமாக மனம் வருந்தினார். பின்பு அந்த மனிதனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவனும் தன் கையை நீட்டினான். அது முற்றிலும் குணமாகியது.</verse>
				<verse number="6">அப்போது பரிசேயர்கள் வெளியே போய், அவரைக் கொலை செய்வதற்கு, ஏரோதியர்களுடனே சதித் திட்டம் தீட்டத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="7">இயேசு தம்முடைய சீடர்களுடனே புறப்பட்டு, கடலோரமாகச் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.</verse>
				<verse number="8">அவர் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டு, அநேக மக்கள் யூதேயா, எருசலேம், இதுமேயா ஆகிய இடங்களிலிருந்தும், யோர்தான் ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்திலிருந்தும், தீரு, சீதோன் பட்டணங்களின் சுற்றுப்புறங்களிலிருந்தும் அவரிடம் வந்தார்கள்.</verse>
				<verse number="9">மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்தபடியால், அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்கென்று ஒரு படகை ஆயத்தம் செய்யும்படி, அவர் தமது சீடருக்குச் சொன்னார்.</verse>
				<verse number="10">அநேகரை அவர் குணமாக்கியபடியால், வியாதிப்பட்டிருந்தவர்கள் அவரைத் தொடுவதற்காக, முன்னே நெருக்கிக்கொண்டு வந்தார்கள்.</verse>
				<verse number="11">தீய ஆவி பிடித்திருந்தவர்கள் அவரைக் கண்டபோது அவருக்கு முன்பாகக் கீழே விழுந்து, “நீர் இறைவனின் மகன்” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="12">ஆனால் அவரோ தான் யார் என்பதைச் சொல்லாதிருக்கும்படி அவைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.</verse>
				<verse number="13">பின்பு இயேசு ஒரு மலையின்மேல் ஏறிப் போய், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரும்படி அழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.</verse>
				<verse number="14">இயேசு பன்னிரண்டு பேரை நியமித்து, அவர்களை அப்போஸ்தலர்கள் என அழைத்தார்; தம்முடனேகூட அவர்கள் இருப்பதற்காகவும், நற்செய்தி அறிவிக்கும்படி தாம் அவர்களை அனுப்புவதற்காகவும்,</verse>
				<verse number="15">பேய்களைத் துரத்தும் அதிகாரத்தை அவர்கள் கொண்டிருப்பதற்காகவும் அவர்களை நியமித்தார்.</verse>
				<verse number="16">அவர் நியமித்த பன்னிரண்டு பேர்களும் இவர்களே: சீமோன், இவனுக்கு அவர் பேதுரு எனப் பெயரிட்டார்;</verse>
				<verse number="17">செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான் இவர்கள் இருவருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார், “இடிமுழக்கத்தின் மகன்கள்” என்பதே அதனுடைய அர்த்தமாகும்,</verse>
				<verse number="18">அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,</verse>
				<verse number="19">மற்றும் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து.</verse>
				<verse number="20">பின்பு இயேசு, ஒரு வீட்டுக்குள் போனார்; மக்கள் திரும்பவும் பெருங்கூட்டமாய் அங்கு வந்தார்கள். அதனால் அவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உண்பதற்குக்கூட முடியாதிருந்தது.</verse>
				<verse number="21">அவருடைய குடும்பத்தார் இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, “அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் பிடித்துக் கொண்டுவர அங்கே போனார்கள்.</verse>
				<verse number="22">எருசலேமிலிருந்து வந்த நீதிச்சட்ட ஆசிரியர்கள், “இவனைப் பெயெல்செபூல் பிடித்திருக்கிறது, பேய்களின் தலைவனாலேயே இவன் பேய்களைத் துரத்துகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="23">எனவே இயேசு அவர்களை அழைத்து, அவர்களோடு உவமைகள் மூலமாய் பேசினார்: “சாத்தானால் எப்படி சாத்தானை துரத்த முடியும்?</verse>
				<verse number="24">ஒரு அரசு தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால், அந்த அரசு நிலைபெறாது.</verse>
				<verse number="25">ஒரு குடும்பம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுமானால் அந்தக் குடும்பம் நிலைபெறாது.</verse>
				<verse number="26">எனவே சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழுந்து பிளவுபட்டால், அவனால் நிலைத்துநிற்க முடியாது; அவனது முடிவு வந்து விடும்.</verse>
				<verse number="27">முதலில் பலமுள்ள ஒருவனைக் கட்டிப் போடாமல் அந்த பலமுள்ளவனுடைய வீட்டிற்குள் புகுந்து அவனுடைய உடைமைகளை எவராலும் கொள்ளையிட முடியாது. அவனைக் கட்டிப் போட்ட பின்பே, அவனுடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.</verse>
				<verse number="28">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், மனிதர்களுடைய எல்லாப் பாவங்களும், அவர்கள் பேசும் எல்லா இறை நிந்தனைகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.</verse>
				<verse number="29">ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசப்படுகின்ற இறை நிந்தனைக்கோ ஒருபோதும் மன்னிப்பு கிடையாது. அவன் நித்தியமான பாவத்தைச் செய்த குற்றவாளியாகிறான்.”</verse>
				<verse number="30">“தீய ஆவி அவரைப் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் சொன்னதனாலேயே, அவர் இப்படிச் சொன்னார்.</verse>
				<verse number="31">அப்போது இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அங்கு வந்தார்கள். அவர்கள் வெளியே நின்று, அவரை அழைத்து வர ஆளனுப்பினார்கள்.</verse>
				<verse number="32">மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றியிருந்தார்கள். போனவர்கள் அவரிடம், “உம்முடைய தாயும், உம்முடைய சகோதரர்களும் உம்மைக் காண வெளியே நிற்கிறார்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="33">அதற்கு இயேசு அவர்களிடம், “யார் என்னுடைய தாய், யார் என்னுடைய சகோதரர்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="34">பின்பு, அவர் தம்மைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, “இதோ! என் தாயும், என் சகோதரர்களும் இவர்களே!</verse>
				<verse number="35">இறைவனுடைய விருப்பத்தைச் செய்கின்றவர்களே என் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கின்றார்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">திரும்பவும் இயேசு கடலோரத்திலிருந்து போதிக்கத் தொடங்கினார். அவரிடத்தில் மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபடியால், அவர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகொன்றில் ஏறி அதில் உட்கார்ந்தார். மக்களோ கடலோரமாய் நின்றார்கள்.</verse>
				<verse number="2">அவர் பல காரியங்களை அவர்களுக்கு உவமைகள் மூலமாக போதித்தார். அவர் கற்பித்தபோது அவர்களுக்குச் சொன்னதாவது:</verse>
				<verse number="3">“கேளுங்கள்! ஒரு விவசாயி விதைகளை விதைப்பதற்குச் சென்றான்.</verse>
				<verse number="4">அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.</verse>
				<verse number="5">சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இராததால் அவை விரைவாக முளைத்தன.</verse>
				<verse number="6">ஆனால் வெயில் அதிகமானபோது பயிர்கள் வாடிப் போயின; வேர் இல்லாததனாலே, அவை காய்ந்து போயின.</verse>
				<verse number="7">வேறு சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன, முட்செடிகள் வளர்ந்து பயிர்களை நெருக்கிப் போட்டன. அதனால், அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.</verse>
				<verse number="8">வேறு சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன; அவை முளைவிட்டு வளர்ந்து, முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன” என்றார்.</verse>
				<verse number="9">பின்பு இயேசு, “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார்.</verse>
				<verse number="10">அவர் தனிமையாய் இருந்தபோது, அந்த பன்னிரண்டு பேரும் அவருடன் இருந்த மற்றவர்களும் அந்த உவமையைக் குறித்த விளக்கத்தைக் கேட்டார்கள்.</verse>
				<verse number="11">அவர் அவர்களிடம், “இறைவனுடைய அரசின் இரகசியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெளியில் இருக்கின்றவர்களுக்கோ எல்லா காரியங்களும் உவமைகளாகவே சொல்லப்படுகின்றன.</verse>
				<verse number="12">இதனால், “ ‘அவர்கள் எப்போதும் காண்பார்கள், ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் எப்போதும் கேட்பார்கள், ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்; இல்லாவிட்டால் அவர்கள் இறைவனிடம் திரும்பி மன்னிப்பைப் பெறுவார்களே’ ” என்றார்.</verse>
				<verse number="13">பின்பு இயேசு அவர்களிடம், “இந்த உவமை உங்களுக்கு விளங்கவில்லையா? அப்படியானால், மற்ற உவமைகளையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வீர்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="14">“விவசாயி வார்த்தையை விதைக்கிறவர்.</verse>
				<verse number="15">சில மக்கள் பாதையருகே விதைகள் விழுந்ததைப் போன்றவர்கள். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களில் விதைக்கப்பட்ட வார்த்தைகளை எடுத்துப் போடுகிறான்.</verse>
				<verse number="16">கற்பாறையின் மேல் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கும் மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை உடனே மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றார்கள்.</verse>
				<verse number="17">ஆனால் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக் காலம் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள். வார்த்தையின் பொருட்டு கஷ்டமும் துன்பமும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்து போகின்றார்கள்.</verse>
				<verse number="18">முட்செடிகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கின்றார்கள்.</verse>
				<verse number="19">ஆயினும் இந்த உலகத்திற்குரிய கவலைகளும் செல்வத்தின் போலியான கவர்ச்சிகளும் இன்னும் வேறு காரியங்களின் ஆசைகளும் உள்ளே வந்து வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் அது பலனற்றுப் போய் விடுகிறது.</verse>
				<verse number="20">விதை விதைக்கப்பட்ட நல்ல நிலத்திற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்கின்றவர்கள்; அவர்கள் முப்பது மடங்காகவும் அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் விளைச்சலை கொடுக்கின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="21">மேலும் அவர் அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவந்து, அதை ஒரு பாத்திரத்தினால் மூடியோ அல்லது ஒரு கட்டிலின் கீழ் மறைத்தோ வைப்பார்களா? இல்லையே, அதை விளக்குத் தண்டின் மேல்தானே வைப்பார்கள்?</verse>
				<verse number="22">ஒளித்து வைக்கப்பட்டவை யாவும் வெளியில் தெரிய வரும், மறைத்து வைக்கப்பட்டவை அனைத்தும் பகிரங்கமாகும்.</verse>
				<verse number="23">காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.</verse>
				<verse number="24">அவர் தொடர்ந்தும்: “நீங்கள் கேட்கும் காரியங்களை கவனமாய் யோசியுங்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். அப்போது கேட்கின்ற உங்களுக்கு அதிகமாகவும் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="25">இருக்கின்றவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.</verse>
				<verse number="26">மேலும் அவர் சொன்னதாவது: “இறைவனுடைய அரசானது ஒருவர் நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.</verse>
				<verse number="27">அவன் இரவு வேளைகளில் நித்திரைகொண்டு பகல் வேளைகளில் விழித்தெழும்பும்போது, அவனுக்கே தெரியாமல் அந்த விதை முளைவிட்டு வளருகிறது.</verse>
				<verse number="28">மண் தானாகவே பலன் கொடுத்து, முதலில் பயிரையும் பின்பு கதிரையும், அதன்பின் கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கின்றது.</verse>
				<verse number="29">பயிர் விளைந்து அறுவடைக் காலம் வந்தவுடன், விதைத்தவன் அதன்மீது அரிவாளை வைக்கிறான்.”</verse>
				<verse number="30">திரும்பவும் அவர்: “இறைவனுடைய அரசை நாம் எதற்கு ஒப்பிட்டுச் சொல்வோம், எந்த உவமையினால் அதை விபரித்துக் கூறுவோம்?</verse>
				<verse number="31">அது கடுகு விதையைப் போன்றது. அது பூமியிலுள்ள எல்லா விதைகளிலும் சிறியதாக இருக்கின்றது.</verse>
				<verse number="32">இருந்தாலும், அது விதைக்கப்பட்டு, முளைத்து, தோட்டத்திலுள்ள மற்ற எல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்கிறது. அதனால், ஆகாயத்துப் பறவைகள் அதன் நிழலில் வந்து தங்கக் கூடிய அளவுக்குப் பெரியதான கிளைகளையும் விடுகிறது” என்றார்.</verse>
				<verse number="33">அவர்கள் கேட்டு விளங்கக் கூடிய அளவுக்கு இயேசு இதேவிதமான பல உவமைகள் மூலமாக அவர்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.</verse>
				<verse number="34">உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர் அவர்களுடன் எதையுமே பேசவில்லை. ஆனால் அவர் தம்முடைய சீடர்களுடன் தனித்திருந்தபோது அவர்களுக்கு எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினார்.</verse>
				<verse number="35">அன்று மாலை வேளையானபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், “நாம் மறுகரைக்குப் போவோம்” என்றார்.</verse>
				<verse number="36">அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு அவர் இருந்த படகில் இருந்தவண்ணமாகவே அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போனார்கள். அவருடன் வேறு சில படகுகளும் சென்றன.</verse>
				<verse number="37">அப்போது பலத்த புயல் காற்று உண்டாகி, அலைகள் படகின் மேல் மோதின. அதனால் படகு மூழ்கத் தொடங்கியது.</verse>
				<verse number="38">இயேசுவோ படகின் பின்பகுதியில் ஒரு தலையணையை வைத்து நித்திரை செய்து கொண்டிருந்தார். சீடர்கள் அவரை எழுப்பி அவரிடம், “போதகரே! நாங்கள் மூழ்கப் போகின்றோம், அதைப்பற்றி உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.</verse>
				<verse number="39">அவர் விழித்தெழுந்து, காற்றைக் கடிந்து கொண்டார். கடலைப் பார்த்து, “அமைதியாயிரு! இரையாதே” என்றார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டாயிற்று.</verse>
				<verse number="40">அவர் தமது சீடர்களிடம், “நீங்கள் ஏன் இந்தளவு பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்றார்.</verse>
				<verse number="41">அப்போது அவர்கள் பயமடைந்து, “இவர் யாரோ? காற்றும் கடலும்கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய பிரதேசத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="2">இயேசு படகைவிட்டு இறங்கியவுடன் தீய ஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்தான்.</verse>
				<verse number="3">அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது.</verse>
				<verse number="4">ஏனெனில் அவனுடைய கையையும் காலையும் சங்கிலியினால் கட்டிப் போட்டாலும், அவன் சங்கிலிகளை அறுத்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்து விடுவான். அவனைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது.</verse>
				<verse number="5">அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் இரவு பகலாய் கூச்சலிட்டுக் கொண்டும், தன்னைத் தானே கூரிய கற்களினால் காயப்படுத்திக் கொண்டும் இருப்பான்.</verse>
				<verse number="6">அவன் இயேசுவை தூரத்தில் கண்டபோது ஓடிப் போய் அவருக்கு முன்பாக விழுந்து,</verse>
				<verse number="7">உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, அதி உன்னதமான இறைவனின் மகனே, என்னிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்த மாட்டீர் என இறைவன் மேல் ஆணையிடும்!” என்றான்.</verse>
				<verse number="8">ஏனெனில் இயேசு அவனிடம், “தீய ஆவியே, இவனைவிட்டு வெளியேறு!” என்று சொல்லியிருந்தார்.</verse>
				<verse number="9">அப்போது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவன், “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று பதிலளித்தான்.</verse>
				<verse number="10">மேலும், அந்தப் பகுதியைவிட்டு தங்களை அனுப்ப வேண்டாம் என்று திரும்பத் திரும்ப அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.</verse>
				<verse number="11">அங்கே அருகேயிருந்த மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தபடியால்,</verse>
				<verse number="12">பேய்கள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; நாங்கள் அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதி கொடும்” என்று கெஞ்சிக் கேட்டன.</verse>
				<verse number="13">அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார். அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன; அந்தப் பன்றிக் கூட்டத்தில் இருந்த சுமார் இரண்டாயிரம் பன்றிகள் மலைச்சரிவினூடாக கீழே விரைந்து ஓடி, ஏரியில் விழுந்து மூழ்கின.</verse>
				<verse number="14">பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப் போய், பட்டணத்திலும் நாட்டுப் புறத்திலும் இருந்தவர்களிடம் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்பதைப் பார்ப்பதற்கு, மக்கள் அங்கே போனார்கள்.</verse>
				<verse number="15">அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, லேகியோன் என்னும் பேய்கள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள்.</verse>
				<verse number="16">நடந்ததைக் கண்டவர்கள், பேய் பிடித்தவனுக்கும் பன்றிகளுக்கும் நிகழ்ந்ததைப்பற்றி அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள்.</verse>
				<verse number="17">அப்போது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பிரதேசத்தை விட்டுப் போய்விடும்படி கெஞ்சிக் கேட்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="18">இயேசு படகில் ஏறியபோது, பேய் பிடித்திருந்தவன் அவருடன் இருக்க விரும்பி கெஞ்சிக் கேட்டான்.</verse>
				<verse number="19">இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல், “நீ உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் அவர் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார்.</verse>
				<verse number="20">அவன் புறப்பட்டுப் போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி பட்டணங்கள் எங்கும் சொல்லத் தொடங்கினான். அவர்கள் எல்லோரும் வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="21">இயேசு திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்தார். அவர் கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் அவரைச் சுற்றித் திரண்டு வந்தார்கள்.</verse>
				<verse number="22">அப்போது யூத ஜெபஆலயத் தலைவர்களுள் ஒருவனான யவீரு என்ற பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்து,</verse>
				<verse number="23">அவரிடம், “எனது சிறிய மகள் மரணத் தறுவாயில் இருக்கின்றாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள் மீது வைப்பீராக. அப்போது அவள் குணமடைந்து பிழைத்துக்கொள்வாள்” என்று சொல்லி மிகவும் கெஞ்சி மன்றாடிக் கேட்டான்.</verse>
				<verse number="24">அதனால் இயேசு அவனுடன் சென்றார். அப்போது, மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக்கொண்டு பின்னால் சென்றது.</verse>
				<verse number="25">பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் அங்கே இருந்தாள்.</verse>
				<verse number="26">அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவழித்து முடித்தும் குணமடையவில்லை. அவளுடைய நிலைமை மேலும் மோசமடைந்திருந்தது.</verse>
				<verse number="27">அவள் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டபோது அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள் வந்து அவருடைய மேலாடையைத் தொட்டாள்.</verse>
				<verse number="28">ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டாலே குணமடைவேன்” என்று அவள் எண்ணியிருந்தாள்.</verse>
				<verse number="29">உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னுடைய வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.</verse>
				<verse number="30">இயேசு தன்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை உடனே அறிந்து மக்கள் கூட்டத்தாரிடம் திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="31">அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.</verse>
				<verse number="32">ஆனாலும் இயேசு, தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிலும் பார்த்தார்.</verse>
				<verse number="33">அப்போது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கியபடி உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள்.</verse>
				<verse number="34">அவர் அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது. சமாதானத்துடனே போ. உன் வேதனை நீங்கி குணமடை” என்றார்.</verse>
				<verse number="35">இயேசு தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவனின் வீட்டிலிருந்து சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். ஏன் இனிமேலும் போதகருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும்?” என்றார்கள்.</verse>
				<verse number="36">அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல் ஜெபஆலயத் தலைவனிடம், “பயப்படாதே, நம்பிக்கையாயிரு” என்றார்.</verse>
				<verse number="37">பின்பு அவர், பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர வேறு எவரையும் தம்முடன் வர அனுமதிக்கவில்லை.</verse>
				<verse number="38">அவர்கள் ஜெபஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு மக்கள் அழுவதனாலும் சத்தமிட்டுப் புலம்புவதனாலும் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை இயேசு கண்டார்.</verse>
				<verse number="39">அவர் உள்ளே போனதும் அவர்களிடம், “ஏன் இப்படிச் சத்தமிட்டு புலம்புகிறீர்கள்? பிள்ளை மரணமடையவில்லை, தூங்குகிறாள்” என்றார்.</verse>
				<verse number="40">அவர்களோ அவரைப் பார்த்து ஏளனமாக சிரித்தார்கள். அவர் அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு, அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தன்னுடன் இருந்த சீடர்களையும் அழைத்துக்கொண்டு பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார்.</verse>
				<verse number="41">அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூமி” என்றார். அதற்கு, “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்கின்றேன், உயிரோடு எழுந்திரு” என்பது அர்த்தமாகும்.</verse>
				<verse number="42">அந்தச் சிறு பெண் உடனே எழுந்து நடந்ததைப் பார்த்ததும் அவர்கள் மிகவும் வியப்படைந்தார்கள். அவளுக்கு பன்னிரண்டு வயது.</verse>
				<verse number="43">அங்கு நடந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று, அவர் கண்டிப்பாக உத்தரவிட்டார். பின்பு அந்த சிறு பெண்ணுக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">இயேசு அங்கிருந்து புறப்பட்டு தமது சொந்த பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவருடன் போனார்கள்.</verse>
				<verse number="2">ஓய்வுநாளிலே அவர் அவர்களுக்கு ஜெபஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட அநேகர் வியப்படைந்தவர்களாய், “இந்தக் காரியங்களை இவன் எங்கிருந்து பெற்றான்? இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஞானம் எப்படிப்பட்டது? இவனால் எப்படி இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய முடிகின்றது?</verse>
				<verse number="3">இவன் மரியாளின் மகனான தச்சன் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரன் அல்லவா? இவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கின்றார்களே” என்று சொல்லி அவரை ஏற்றுக்கொள்ளாமல் எரிச்சலும் கோபமும் அடைந்தார்கள்.</verse>
				<verse number="4">இயேசு அவர்களிடம், “ஒரு இறைவாக்கினருக்கு அவரது சொந்த ஊரிலும், அவரது உறவினர் மத்தியிலும், அவரது குடும்பத்தவருக்குள்ளும் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மதிப்புண்டு” என்றார்.</verse>
				<verse number="5">நோயுற்ற ஒரு சிலர் மேல் தமது கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர அங்கு அவரால் வேறு அற்புதங்களை செய்ய முடியவில்லை.</verse>
				<verse number="6">அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தார். பின்பு இயேசு கிராமம் கிராமமாகச் சென்று போதித்தார்.</verse>
				<verse number="7">அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பி அவர்களுக்கு தீய ஆவிகளுக்கு மேலாக அதிகாரத்தையும் கொடுத்தார்.</verse>
				<verse number="8">அவர் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “ஒரு கைத்தடியைத் தவிர பயணத்திற்கென்று எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம். உணவோ, பயணப்பையோ, மடிப்பையில் பணமோ கொண்டுபோக வேண்டாம்.</verse>
				<verse number="9">காலணிகளை அணிந்துகொள்ளுங்கள், ஆனால் மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம்.”</verse>
				<verse number="10">மேலும் அவர் அவர்களிடம், “நீங்கள் போகும் பட்டணங்களில் ஒரு வீட்டிற்குள் போனால் அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும் வரை அங்கேயே தங்கியிருங்கள்.</verse>
				<verse number="11">எதாவது ஒரு இடத்திலுள்ளவர்கள் உங்களை வரவேற்காமலோ, நீங்கள் செல்வதைக் கேட்பதற்கு மனதற்றவர்களாகவோ இருந்தால், நீங்கள் அங்கிருந்து புறப்படும்போது உங்கள் கால் தூசியை அங்கே உதறிவிட்டுப் போங்கள். அது அவர்களுக்கு எதிரான சாட்சியாய் இருக்கும்” என்றார்.</verse>
				<verse number="12">அவர்கள் புறப்பட்டுப் போய் மனிதர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று பிரசங்கித்தார்கள்.</verse>
				<verse number="13">அத்துடன் அவர்கள் அநேக பேய்களைத் துரத்தி, நோயாளிகள் பலருக்கு எண்ணெய் பூசி, அவர்களைக் குணமாக்கினார்கள்.</verse>
				<verse number="14">இயேசுவின் பெயர் பிரபல்யம் அடைந்திருந்தபடியால் ஏரோது அரசனும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டான். சிலரோ, “யோவான் ஸ்நானகன் திரும்பவும் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான், அதனால்தான் இவனால் வல்லமையான அற்புதங்களைச் செய்ய முடிகின்றது” என்றார்கள்.</verse>
				<verse number="15">மற்றவர்களோ, “இவன் எலியா” என்றார்கள். இன்னும் சிலரோ, “இவன் முற்காலத்தில் இருந்த இறைவாக்கினரைப் போன்ற ஒரு இறைவாக்கினன்” என்றார்கள்.</verse>
				<verse number="16">ஆனால் ஏரோது இதைக் கேள்விப்பட்டபோது, “நான் சிரச்சேதம் செய்த யோவானே இறந்தோரிலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறான்!” என்றான்.</verse>
				<verse number="17">ஏனெனில், ஏரோதுவே யோவானைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைக் கட்டி சிறையில் அடைத்திருந்தான். தான் திருமணம் செய்திருந்திருந்த தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு அவன் இதைச் செய்திருந்தான்.</verse>
				<verse number="18">யோவான் ஏரோதுவிடம், “உன் சகோதரனின் மனைவியை நீ வைத்திருப்பது நீதிச்சட்டத்திற்கு மாறானது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="19">இதனால் ஏரோதியாள், யோவானுக்கு விரோதமாய் பகையுணர்வு கொண்டு அவனைக் கொலை செய்ய விரும்பினாள். ஆனால் அவளால் அதைச் செய்ய முடியவில்லை.</verse>
				<verse number="20">ஏனெனில் யோவான் நீதிமான் என்பதையும் பரிசுத்தம் உள்ளவன் என்பதையும் ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து அவனைப் பாதுகாத்து வந்தான். யோவான் பேசுவதை கேட்ட போதெல்லாம் ஏரோது மிகவும் குழப்பமடைந்தான்; இருப்பினும், யோவான் பேசுவதை விருப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="21">கடைசியாக, ஏரோதியாளுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஏரோது தனது பிறந்த நாளிலே தனது உயர் அதிகாரிகளுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயாவிலுள்ள பிரமுகர்களுக்கும் ஒரு விருந்து கொடுத்தான்.</verse>
				<verse number="22">ஏரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் அவனுடைய விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினாள். எனவே அரசன் அந்தச் சிறுமியிடம், “உனக்கு விருப்பமான எதையும் கேள். அதை நான் உனக்குத் தருவேன்” என்றான்.</verse>
				<verse number="23">மேலும், “நீ எதைக் கேட்டாலும், அது எனது அரசில் பாதியாய் இருந்தாலும், நான் தருவேன்” என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்.</verse>
				<verse number="24">அவள் வெளியே போய் தனது தாயிடம் இதைச் சொல்லி, “நான் எதைக் கேட்க வேண்டும்?” என்று கேட்டாள். அதற்கு அவள், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்றாள்.</verse>
				<verse number="25">உடனே அந்தச் சிறுமி வேகமாய் அரசனிடம் வந்து, “இப்பொழுதே யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து, நீர் எனக்குத் தர வேண்டும்” என்று கேட்டாள்.</verse>
				<verse number="26">அரசனோ மிகவும் துக்கமடைந்தான். ஆயினும், அவன் தான் கொடுத்த ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும் அதை அவளுக்கு மறுக்க விரும்பவில்லை.</verse>
				<verse number="27">எனவே உடனடியாக யோவானின் தலையைக் கொண்டுவரும்படி அரசன் உத்தரவிட்டு, ஒரு காவலனை அனுப்பினான். அவன் போய் சிறையிலிருந்த யோவானைச் சிரச்சேதம் செய்து,</verse>
				<verse number="28">அவனுடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவந்து அதை அந்தச் சிறுமிக்குக் கொடுத்தான்; அவள் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.</verse>
				<verse number="29">யோவானின் சீடர்கள் இதைக் கேள்விப்பட்டபோது, அவர்கள் வந்து அவனது உடலை எடுத்து அதை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.</verse>
				<verse number="30">அப்போஸ்தலர்கள் இயேசுவினிடம் திரும்பி வந்து, தாங்கள் செய்தவற்றையும், போதித்தவற்றையும் அறிவித்தார்கள்.</verse>
				<verse number="31">அங்கே அநேகர் வருவதும் போவதுமாய் இருந்தபடியால் அவர்களுக்குச் சாப்பிடக்கூட நேரமில்லாதிருந்தது. எனவே அவர் அவர்களிடம், “நாம் போய் அமைதியான இடத்தில் இளைப்பாறுவோம்” என்றார்.</verse>
				<verse number="32">எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி ஒரு தனிமையான இடத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="33">அவர்கள் புறப்பட்டுப் போவதை அநேகர் கண்டு, அவர்களை யாரென்று தெரிந்து கொண்டார்கள். எனவே, எல்லாப் பட்டணங்களிலிருந்தும் வந்திருந்த அந்த மக்கள் நடையாக விரைந்தோடிச் சென்று அவர்களுக்கு முன்னால் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.</verse>
				<verse number="34">அவர் கரை இறங்கியபோது திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் இருந்ததால், அவர்கள்மீது அவர் அனுதாபம்கொண்டு அவர்களுக்கு அநேக காரியங்களைப் போதிக்கத் தொடங்கினார்.</verse>
				<verse number="35">இப்படியாக அதிக நேரம் கடந்துவிட்டதால் அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான ஒரு இடம், வெகு நேரமுமாகிவிட்டது.</verse>
				<verse number="36">ஆகவே இந்த மக்களை அனுப்பி விடும். இவர்கள் சுற்றியுள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய் தங்களுக்கு உண்பதற்கு எதையாவது வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள்.</verse>
				<verse number="37">அதற்கு அவர், “நீங்களே இவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார். சீடர்கள் அவரிடம், “நாங்கள் போய் இருநூறு தினாரி பணத்துக்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க முடியுமா?” என்றார்கள்.</verse>
				<verse number="38">அப்போது அவர், “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன என்று போய்ப் பாருங்கள்” என்றார். அவர்கள் பார்த்துவிட்டு, “ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.</verse>
				<verse number="39">அப்போது இயேசு, எல்லா மக்களையும் புற்தரையில் கூட்டம் கூட்டமாக உட்காரும்படி சொன்னார்.</verse>
				<verse number="40">அப்படியே அவர்கள் நூறுநூறு பேராகவும் ஐம்பதைம்பது பேராகவும் உட்கார்ந்தார்கள்.</verse>
				<verse number="41">அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி அப்பங்களைத் துண்டுகளாக்கினார். பின்பு அவர் அந்த அப்பங்களை மக்களுக்குக் கொடுக்கும்படி சீடர்களிடம் கொடுத்தார். அத்துடன் அந்த இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.</verse>
				<verse number="42">அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள்.</verse>
				<verse number="43">சீடர்கள் மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.</verse>
				<verse number="44">உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.</verse>
				<verse number="45">பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில், தமக்கு முன்னதாக சீடர்களைப் படகில் ஏறி பெத்சாயிதாவுக்கு உடனே போகும்படி செய்தார்.</verse>
				<verse number="46">அவர் அவர்களைவிட்டுப் புறப்பட்ட பின்பு மன்றாடும்படி மலையின்மேல் ஏறினார்.</verse>
				<verse number="47">மாலை வேளையானபோது சீடர்கள் ஏறிச் சென்ற படகு நடுக்கடலில் போய்க் கொண்டிருந்தது. அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.</verse>
				<verse number="48">எதிர்க்காற்று வீசியதால் அவர்கள் படகைச் செலுத்தக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் கண்டார்; அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் அவர்களைக் கடந்து போகும்போது,</verse>
				<verse number="49">அவர் கடலின் மேல் நடப்பதை அவர்கள் கண்டபோது அவரை ஒரு பேய் என்று நினைத்து அலறினார்கள்.</verse>
				<verse number="50">ஏனெனில் அவர்கள் எல்லோரும் அவரைக் கண்டு பயமடைந்திருந்தார்கள். உடனே அவர் அவர்களுடன் பேசி, “தைரியமாயிருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.</verse>
				<verse number="51">பின்பு அவர், அவர்களுடன் அந்தப் படகில் ஏறினார், அப்போது காற்று தணிந்து போயிற்று. அவர்கள் மிகவும் வியந்து திகைத்தார்கள்.</verse>
				<verse number="52">ஏனெனில் அப்பங்களைத் துண்டுகளாக்கி அநேகருக்கு கொடுத்த அவரது வல்லமையைப் புரிந்துகொள்ளாதபடி அவர்களுடைய மனம் கடினப்பட்டு இருந்தது.</verse>
				<verse number="53">அவர்கள் மறுகரைக்குச் சென்று கெனேசரேத்து என்னும் இடத்திற்கு வந்து படகைக் கரை சேர்த்தார்கள்.</verse>
				<verse number="54">அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனேயே அங்கிருந்த மக்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.</verse>
				<verse number="55">ஆகவே அந்தப் பகுதி எங்கும் ஓடி அவர் இருப்பதாக கேள்விப்பட்ட இடங்களுக்கு நோயாளிகளை அவர்களின் படுக்கைகளோடு கொண்டுவரத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="56">கிராமங்களிலும், பட்டணங்களிலும், நாட்டுப் புறங்களிலும் அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் இருந்த சந்தை கூடும் இடங்களில் நோயாளிகளைக் கிடத்தினார்கள். அந்த நோயாளிகள் அவருடைய உடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அனுமதிக்கும்படி அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">ஒரு நாள் எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியரில் சிலரும் இயேசுவைச் சுற்றி கூடி நின்றார்கள்.</verse>
				<verse number="2">இயேசுவின் சீடர்களில் சிலர் கைகழுவாமல் அசுத்தமான கைகளினால் உணவு உண்பதை அவர்கள் கண்டார்கள்.</verse>
				<verse number="3">பரிசேயரும், யூதர் அனைவரும் முன்னோரின் சம்பிரதாய முறைப்படி கைகளைக் கழுவினாலன்றி உணவு உண்ண மாட்டார்கள்.</verse>
				<verse number="4">சந்தை கூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவிக்கொள்ளாமல் அவர்கள் உணவு உண்பதில்லை. அதைவிட செம்புகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக சம்பிரதாய முறைகளையும் கைக்கொண்டார்கள்.</verse>
				<verse number="5">எனவே பரிசேயரும், நீதிச்சட்ட ஆசிரியரும் இயேசுவிடம், “உமது சீடர்கள் முன்னோரின் சம்பிரதாய முறைப்படி நடந்துகொள்ளாதிருப்பது ஏன்? அவர்கள் அசுத்தமான கைகளினால் உணவு உண்கிறார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="6">அதற்கு அவர், “வெளிவேடக்காரராகிய உங்களைக் குறித்து ஏசாயா சரியாகத்தான் இறைவாக்கு உரைத்திருக்கிறார். அதென்னவெனில்: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.</verse>
				<verse number="7">அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கின்றார்கள்; அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’ என்பதாக எழுதப்பட்டுள்ளது.</verse>
				<verse number="8">நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதரின் சம்பிரதாய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.</verse>
				<verse number="9">மேலும், அவர் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சம்பிரதாய முறைகளைக் கைக்கொள்வதற்காக இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் திறமைசாலிகள்.</verse>
				<verse number="10">ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ என்றும், ‘தனது தகப்பனையாவது தாயையாவது சபிக்கிறவன் கொல்லப்பட வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கின்றார்.</verse>
				<verse number="11">ஆனால் நீங்களோ ஒருவன் தன் தகப்பனையோ தாயையோ பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய உதவியை இறைவனுக்கு காணிக்கையாக அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள்.</verse>
				<verse number="12">அதன் பிறகு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எதையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.</verse>
				<verse number="13">இவ்விதமாய் நீங்கள் கைக்கொண்டுவரும் சம்பிரதாய முறையினால் இறைவனுடைய வார்த்தையை செல்லுபடியற்றதாக்குகிறீர்கள். அத்துடன் நீங்கள் இதுபோன்று வேறு அநேக காரியங்களையும் செய்கின்றீர்கள்” என்றார்.</verse>
				<verse number="14">மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் கவனித்துக் கேட்டு, நான் சொல்வதை விளங்கிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="15">மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும் அவனுக்குள்ளே போவதனால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால் மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகின்றவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன.</verse>
				<verse number="16">காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்று கூறினார்.</verse>
				<verse number="17">பின்பு மக்கள் கூட்டத்தைவிட்டு அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது அவருடைய சீடர்கள், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடம் கேட்டார்கள்.</verse>
				<verse number="18">அவர் அவர்களிடம், “நீங்களும் புரிந்துகொள்வதில் மந்தமானவர்களா? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகின்றவை அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா?</verse>
				<verse number="19">ஏனெனில் அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல் அவனுடைய வயிற்றுக்குள் போய் அவனது உடலைவிட்டு வெளியேறி விடுகிறது அல்லவா?” என்றார். (இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களுமே தீட்டற்றவை என்று அறிவித்தார்.)</verse>
				<verse number="20">அவர் தொடர்ந்து: “ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியே வருவதே அவனை அசுத்தப்படுத்தும்.</verse>
				<verse number="21">ஏனெனில், மனிதருடைய இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், முறைகேடான பாலுறவு, களவு, கொலை,</verse>
				<verse number="22">தகாத உறவு, பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்றவை வருகின்றன.</verse>
				<verse number="23">தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதனை அசுத்தப்படுத்துகின்றன” என்றார்.</verse>
				<verse number="24">இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு பட்டணத்தின் சுற்றுப்புறத்திற்குச் சென்றார். அவர் ஒரு வீட்டிற்குள் போய், தான் அங்கு இருப்பதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டும் என்று விரும்பினார்; ஆயினும், அவரால் மறைவாய் இருக்க முடியவில்லை.</verse>
				<verse number="25">அவரைக் குறித்து கேள்விப்பட்ட ஒரு பெண் உடனே அவரிடம் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது சிறிய மகளை ஒரு தீய ஆவி பிடித்திருந்தது.</verse>
				<verse number="26">சீரோபேனிக்கியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த கிரேக்கப் பெண் தனது மகளிடத்திலிருக்கும் அந்தப் பேயைத் துரத்திவிடும்படி, இயேசுவைக் கெஞ்சிக் கேட்டாள்.</verse>
				<verse number="27">அவர் அவளிடம், “முதலில் பிள்ளைகள், அவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிடட்டும். ஏனெனில் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார்.</verse>
				<verse number="28">அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆயினும் மேசையின் கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத் துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள்.</verse>
				<verse number="29">அப்போது அவர் அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பேய் உன் மகளைவிட்டுச் சென்றுவிட்டது” என்றார்.</verse>
				<verse number="30">அப்படியே அவள் வீட்டிற்குப் போய் தனது பிள்ளை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். அந்தப் பேய் அவளைவிட்டுப் போயிருந்தது.</verse>
				<verse number="31">அதற்குப் பின்பு இயேசு, தீருவின் சுற்றுப்புறத்தைவிட்டுப் புறப்பட்டு சீதோன் வழியாகப் போய் தெக்கப்போலி பிரதேசத்திலுள்ள கலிலேயாக் கடல் பகுதியை அடைந்தார்.</verse>
				<verse number="32">அங்கே காது கேளாதவனும் பேச்சுக் குறைபாடு உள்ளவனுமாயிருந்த ஒருவனை சிலர் அவரிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள். அவன்மீது இயேசு தமது கைகளை வைக்க வேண்டுமென்று அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள்.</verse>
				<verse number="33">அப்போது அவர் மக்கள் கூட்டத்திலிருந்து அவனைத் தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துப் போய், அவனுடைய காதுகளுக்குள் தமது விரல்களை வைத்தார். பின்பு அவர் துப்பி அவனது நாவைத் தொட்டார்.</verse>
				<verse number="34">அவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் வானத்தை நோக்கிப் பார்த்து, “எப்பத்தா!” என்றார். அதன் அர்த்தம் “திறக்கப்படுவாயாக” என்பதாகும்.</verse>
				<verse number="35">உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாகப் பேசத் தொடங்கினான்.</verse>
				<verse number="36">இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர் சொல்ல வேண்டாம் என்று எவ்வளவு அதிகமாய்ச் சொன்னாரோ, அவ்வளவு அதிகமாய் அந்தச் செய்தியை அவர்கள் பரப்பினார்கள்.</verse>
				<verse number="37">மக்களோ வியப்படைந்து மலைத்துப் போனவர்களாக, “அவர் எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார். அவர் செவிப்புலனற்றவர்களைக் கேட்கவும், பேச முடியாதவர்களைப் பேசவும் வைக்கிறாரே” என்றார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">அந்நாட்களில், மக்கள் திரும்பவும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தபோது அவர்களிடம் உண்பதற்கு ஒன்றுமில்லாதிருந்தது. அதனால் இயேசு தமது சீடர்களைத் தம்மிடமாய் அழைத்து,</verse>
				<verse number="2">“நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன். அவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கின்றார்கள். உண்பதற்கோ ஒன்றுமில்லை.</verse>
				<verse number="3">நான் அவர்களைப் பசியோடு வீட்டிற்கு அனுப்பினால் வழியில் அவர்கள் மயங்கி விழுவார்கள். மேலும், இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்” என்றார்.</verse>
				<verse number="4">அதற்கு அவருடைய சீடர்கள், “ஒருவரால் இந்த ஒதுக்குப்புறமான இடத்திலே இவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="5">இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="6">அப்போது அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தாரைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்திய பின், அவற்றைத் துண்டுகளாக்கி, மக்களுக்குக் கொடுக்கும்படி அதைத் தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="7">அவர்களிடம் சில சிறிய மீன்களும் இருந்தன; அவற்றுக்காகவும் அவர் நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி சீடர்களுக்குச் சொன்னார்.</verse>
				<verse number="8">மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். பின்பு மீதியான அப்பத் துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய அவர்கள் சேகரித்தார்கள்.</verse>
				<verse number="9">அங்கு ஏறக்குறைய நாலாயிரம் பேர் இருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்ட பின்பு,</verse>
				<verse number="10">தமது சீடர்களுடனே படகில் ஏறி தல்மனூத்தா பிரதேசத்திற்குச் சென்றார்.</verse>
				<verse number="11">அப்போது பரிசேயர்கள் வந்து இயேசுவோடு விவாதம் செய்யத் தொடங்கினார்கள். அவரைச் சோதிக்கும்படியாக வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார்கள்.</verse>
				<verse number="12">அவர் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர், அடையாளத்தைத் தேடுவது ஏன்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவர்களுக்கு எந்த அடையாளமும் கொடுக்கப்படுவதில்லை” என்றார்.</verse>
				<verse number="13">பின்பு அவர் அவர்களைவிட்டு திரும்பவும் படகில் ஏறி கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார்.</verse>
				<verse number="14">சீடர்கள் அவ்வேளையில் தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்து போனார்கள். அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே படகில் இருந்தது.</verse>
				<verse number="15">இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள், பரிசேயர்களினதும் ஏரோதினதும் புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார்.</verse>
				<verse number="16">அப்போது அவர்கள் தங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="17">அவர்கள் பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம்: “உங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? நீங்கள் இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கின்றீர்கள்? உங்களுடைய இருதயங்கள் கடினமாய் இருக்கின்றனவோ?</verse>
				<verse number="18">நீங்கள் கண்கள் இருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா?</verse>
				<verse number="19">நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பங்கிட்டுக் கொடுத்தபோது மீதியான அப்பத் துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.</verse>
				<verse number="20">“நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தபோது, மீதியான அப்பத் துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள் “ஏழு” என்றார்கள்.</verse>
				<verse number="21">அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் இன்னுமா விளங்கிக்கொள்ளவில்லை?” என்று கேட்டார்.</verse>
				<verse number="22">அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்தபோது பார்வையற்ற ஒருவனை சிலர் கொண்டுவந்து, இயேசு அவனைத் தொட வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.</verse>
				<verse number="23">ஆகவே, அவர் அவனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுசென்றார். பின்பு, அவனுடைய கண்களின் மேல் துப்பி தமது கைகளை அவன்மீது வைத்து, “நீ எதையாவது காண்கின்றாயா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="24">அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கின்றேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகின்ற மரங்களைப் போல் காணப்படுகிறார்கள்” என்றான்.</verse>
				<verse number="25">இயேசு மீண்டும் ஒருமுறை தமது கைகளை அவனுடைய கண்களின் மேல் வைத்தார்; அப்போது அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் தன்னுடைய பார்வையைத் திரும்பப் பெற்று, எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்தான்.</verse>
				<verse number="26">இயேசு அவனிடம், “கிராமத்துக்குள் போகாதே” என்று சொல்லி அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.</verse>
				<verse number="27">இயேசுவும் அவருடைய சீடர்களும் செசரியா-பிலிப்பி பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கின்றார்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="28">அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எலியா என்றும், இன்னும் சிலர் இறைவாக்கினரில் ஒருவர் என்றும் சொல்கின்றார்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="29">அதற்கு அவர், “அப்படியானால், நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் மேசியா” என்றான்.</verse>
				<verse number="30">அப்போது இயேசு, “தம்மைக் குறித்து ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்” என எச்சரித்தார்.</verse>
				<verse number="31">மனுமகன் அநேக பாடுகள் பட வேண்டும் என்றும், சமூகத் தலைவர்களாலும் தலைமை மதகுருக்களாலும் நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் எழுந்திருக்க வேண்டும் என்றும் அவர் அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.</verse>
				<verse number="32">இதையெல்லாம் இயேசு வெளிப்படையாகவே சொன்னார். அப்போது, பேதுரு அவரை தனியே அழைத்துக்கொண்டு போய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.</verse>
				<verse number="33">அப்போது, தனது சீடர்களை திரும்பிப் பார்த்த இயேசு பேதுருவைக் கண்டித்து, “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்குரிய காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.</verse>
				<verse number="34">பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் தமது சீடர்களையும் தம்மிடம் அழைத்து, “யாராவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து தனது சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்.</verse>
				<verse number="35">ஏனெனில், தன்னுடைய உயிரைக் காப்பாற்ற விரும்புகின்றவன் அதை இழந்து போவான். எனக்காகவோ, நற்செய்திக்காகவோ தன் உயிரை இழக்கிறவன் அதைக் காத்துக்கொள்வான்.</verse>
				<verse number="36">ஒருவன் உலகம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்து போனால் அதனால் அவனுக்கு நன்மை என்ன?</verse>
				<verse number="37">ஒருவன் தனது ஆத்துமாவுக்கு மாற்றீடாக எதைக் கொடுக்க முடியும்?</verse>
				<verse number="38">இறை துரோகமும், பாவமும் நிறைந்த இந்தத் தலைமுறையினர் மத்தியில் யாராவது என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால் மனுமகனும் பரிசுத்த தூதர்களுடன் தன்னுடைய பிதாவின் மகிமையில் வரும்போது, அவனைக் குறித்து வெட்கப்படுவார்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">பின்பு இயேசு அவர்களிடம், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் இறைவனுடைய அரசு வல்லமையுடன் வருவதைக் காணுமுன் மரணமடைய மாட்டார்கள்” என்றார்.</verse>
				<verse number="2">ஆறு நாட்களுக்குப் பின் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் தம்முடன் அழைத்துக்கொண்டு, இயேசு ஒரு உயரமான மலைக்குச் சென்றார். அங்கே அவர்கள் மாத்திரமே இருக்கையில், அவர்களுக்கு முன்பாக அவருடைய தோற்றம் மாறியது.</verse>
				<verse number="3">அப்போது, அவருடைய உடைகள் இந்தப் பூமியிலுள்ள எவராலும் வெளுக்க முடியாதளவு மிகவும் பிரகாசமான வெண்மையாயிருந்தன.</verse>
				<verse number="4">அத்துடன் எலியாவும் மோசேயும் அங்கே அவர்களுக்குத் தென்பட்டு, இயேசுவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="5">உடனே பேதுரு இயேசுவிடம், “போதகரே, நாம் இங்கே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான்.</verse>
				<verse number="6">அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தபடியால் அவனுக்குத் தான் சொல்வது என்னவென்றே தெரியவில்லை.</verse>
				<verse number="7">அப்போது ஒரு மேகம் தோன்றி அவர்களை மூடிக்கொண்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர்தான் என் அன்பு மகன், இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்றது.</verse>
				<verse number="8">உடனே அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது இயேசுவைத் தவிர தங்களோடு வேறு எவரையும் அவர்கள் காணவில்லை.</verse>
				<verse number="9">அவர்கள் மலையிலிருந்து இறங்கி வருகின்றபோது இயேசு அவர்களிடம் மனுமகன் இறந்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும் வரைக்கும், அவர்கள் கண்டதை வேறு எவருக்கும் சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டார்.</verse>
				<verse number="10">அவர்கள் இந்தக் காரியத்தைத் தங்களுக்குள்ளேயே வைத்து, “இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="11">அவர்கள் அவரிடம், “அப்படியானால் முதலாவது எலியா வர வேண்டும் என்று நீதிச்சட்ட ஆசிரியர்கள் சொல்வது ஏன்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="12">அதற்கு இயேசு, “உண்மையாக எலியாவே முதலாவதாய் வந்து எல்லாவற்றையும் முன்னிருந்த நிலைக்குக் கொண்டுவருவான். அப்படியானால் மனுமகன் அதிகமாகத் துன்பப்பட்டு, புறக்கணிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பது ஏன்?</verse>
				<verse number="13">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எலியா வந்துவிட்டான். அவனைக் குறித்து எழுதியிருக்கின்றபடியே அவர்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள்” என்றார்.</verse>
				<verse number="14">அவர்கள் மற்றச் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு பெருங் கூட்டம் கூடியிருப்பதையும், நீதிச்சட்ட ஆசிரியர்கள் சீடர்களுடன் விவாதித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள்.</verse>
				<verse number="15">மக்கள் எல்லோரும் இயேசுவைக் கண்டவுடன் வியப்பு மேலிட்டவர்களாய் ஓடிப் போய் அவருக்கு ஆசி கூறினார்கள்.</verse>
				<verse number="16">இயேசு அவர்களிடம், “நீங்கள் எதைப்பற்றி இவர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="17">மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன், “போதகரே, நான் என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். அவனை ஒரு தீய ஆவி பீடித்திருப்பதால், அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.</verse>
				<verse number="18">அது அவனைப் பிடிக்கும் போதெல்லாம், அது அவனைத் தரையில் வீழ்த்துகிறது. அவன் வாயில் நுரைதள்ளி, பல்லைக் கடித்துக்கொண்டு, விறைப்படைந்து போகின்றான். அந்த தீய ஆவியைத் துரத்தும்படி நான் உமது சீடர்களிடம் கேட்டேன்; ஆனால் அவர்களால் அதைத் துரத்த முடியவில்லை” என்றான்.</verse>
				<verse number="19">அப்போது இயேசு, “விசுவாசமில்லாத தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருப்பேன்? எவ்வளவு காலம் நான் உங்களைச் சகித்துக் கொண்டிருப்பேன்? அந்தச் சிறுவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.</verse>
				<verse number="20">அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அந்தத் தீய ஆவி இயேசுவைக் கண்டவுடனே, சிறுவனுக்கு வலிப்பு உண்டாக்கியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். அவன் வாயிலிருந்து நுரை தள்ளியது.</verse>
				<verse number="21">இயேசு அவனுடைய தகப்பனிடம், “எவ்வளவு காலமாக இவனுக்கு இப்படியிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவன், “இவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இப்படி இருக்கின்றது” என்று சொல்லிவிட்டு,</verse>
				<verse number="22">“இந்த தீய ஆவி இவனைக் கொல்லும்படி நெருப்புக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் பல முறை தள்ளி வீழ்த்தியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்ய முடிந்தால் எங்கள்மேல் இரக்கம் கொண்டு, எங்களுக்கு உதவி செய்யும்” என்றான்.</verse>
				<verse number="23">அதற்கு இயேசு, “உங்களால் முடியுமா, என்று கேட்கின்றாயா? விசுவாசிக்கின்றவனுக்கு எல்லாம் சாத்தியமே” என்றார்.</verse>
				<verse number="24">உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கின்றேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்” என்றான்.</verse>
				<verse number="25">அப்போது மக்கள் திரண்டு, அவ்விடத்திற்கு ஓடி வருவதை இயேசு கண்டபோது, அவர் அந்த தீய ஆவியைப் பார்த்து, “கேட்கவும் பேசவும் முடியாத ஆவியே, இவனைவிட்டு வெளியே போ; இனி ஒருபோதும் இவனுக்குள் நுழையாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றார்.</verse>
				<verse number="26">அந்த தீய ஆவி கூச்சலிட்டு, அவனுக்கு அதிகமாய் வலிப்பு உண்டாக்கி, அவனைவிட்டு வெளியேறியது. பலர் அவனைப் பார்த்து, “இவன் இறந்துவிட்டான்” எனச் சொல்லுமளவுக்கு அவன் இறந்தவனைப் போல கிடந்தான்.</verse>
				<verse number="27">ஆனால் இயேசுவோ அவனது கையைப் பிடித்து, அவனைத் தூக்கி நிறுத்தினார். அவன் எழுந்து நின்றான்.</verse>
				<verse number="28">பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் அவரிடம் தனியாக வந்து, “ஏன் அதை எங்களால் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="29">அதற்கு அவர், “இவ்வகையான தீய ஆவி மன்றாடலினாலும் உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.</verse>
				<verse number="30">அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயா வழியாகக் கடந்து சென்றார்கள். தாங்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை எவரும் அறிவதை இயேசு விரும்பவில்லை.</verse>
				<verse number="31">ஏனெனில் இயேசு தமது சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம், “மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு மனிதருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார், அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், மூன்று நாட்களுக்கு பின் அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்றும் சொன்னார்.</verse>
				<verse number="32">ஆனால் அவர்களோ அவர் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதைக் குறித்து அவரிடம் கேட்கவும் பயப்பட்டார்கள்.</verse>
				<verse number="33">அவர்கள் கப்பர்நகூமை வந்தடைந்து வீட்டில் இருந்தபோது, “வழியிலே நீங்கள் எதைப்பற்றி விவாதித்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.</verse>
				<verse number="34">அவர்கள் ஒரு பதிலும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்கள்; ஏனெனில், தங்களில் யார் பெரியவன் என்று வழியிலே அவர்கள் விவாதித்துக்கொண்டு வந்தார்கள்.</verse>
				<verse number="35">இயேசு உட்கார்ந்து, பன்னிருவரையும் தம்மிடம் வரும்படி அழைத்து, “யாராவது முதன்மையானவனாக இருக்க விரும்பினால் அவனே எல்லோரிலும் கடைசியானவனாக இருக்க வேண்டும். அவன் எல்லோருக்கும் பணியாளனாகவும் இருக்க வேண்டும்” என்றார்.</verse>
				<verse number="36">அவர் ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி தமது கைகளால் அணைத்தபடி, அவர்களிடம்:</verse>
				<verse number="37">“இப்படிப்பட்ட ஒரு சிறு பிள்ளையை எனது பெயரில் ஏற்றுக்கொள்கின்றவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றான்” என்றார்.</verse>
				<verse number="38">அப்போது யோவான் அவரிடம், “போதகரே, ஒருவன் உமது பெயரில் பேய்களைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவன் அல்லாதபடியினால் நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.</verse>
				<verse number="39">இயேசு அவர்களிடம், “அவனைத் தடுக்க வேண்டாம். எனது பெயரினால் அற்புதத்தைச் செய்கின்றவன், விரைவாக என்னைக் குறித்து தீமையாய்ப் பேச மாட்டான்.</verse>
				<verse number="40">ஏனெனில் நமக்கு விரோதமாய் இல்லாதவன் நமக்குச் சார்பாகவே இருக்கின்றான்.</verse>
				<verse number="41">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால் யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால், அவன் நிச்சயமாக தனக்குரிய வெகுமதியைப் பெறாமல் போக மாட்டான்” என்றார்.</verse>
				<verse number="42">என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டப்பட்டு கடலிலே தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும்.</verse>
				<verse number="43">உனது கை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கைகளுடன் ஒருபோதும் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள் போவதைப் பார்க்கிலும் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது சிறந்தது.</verse>
				<verse number="44">நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை.</verse>
				<verse number="45">உனது கால் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டிப் போடு. நீ இரண்டு கால்களுடன் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும் கால் ஊனமுற்றவனாய் நித்திய வாழ்விற்குள் போவது உனக்குச் சிறந்தது.</verse>
				<verse number="46">நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைவதுமில்லை.</verse>
				<verse number="47">உனது கண் உன்னைப் பாவம் செய்யப் பண்ணினால் அதைத் தோண்டி எடுத்து விடு. நீ இரண்டு கண்களுடன் நரகத்திற்குள் எறியப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் இறையரசுக்குள் போவது உனக்குச் சிறந்தது.</verse>
				<verse number="48">நரகத்தில், அவர்களைத் தின்னும் புழு சாவதுமில்லை, அங்குள்ள நெருப்பு அணைந்து போவதுமில்லை.</verse>
				<verse number="49">உப்பிட்டு பதனிடுவது போல ஒவ்வொருவரும் நெருப்பினால் பதனிடப்படுவார்கள்.</verse>
				<verse number="50">“உப்பு நல்லதுதான், ஆனால் அது தனது சாரத்தை இழந்து போனால் திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? நீங்கள் உங்களுக்குள்ளே உப்பின் சாரம் உள்ளவர்களாக இருந்து, ஒருவரோடொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயாவுக்கும் யோர்தானுக்கு அப்பாலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். திரும்பவும் மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். வழக்கம் போல் அவர் அவர்களுக்குப் போதித்தார்.</verse>
				<verse number="2">சில பரிசேயர்கள் வந்து அவரைச் சோதிக்கும் நோக்கில், “ஒருவன் தனது மனைவியை விவாகரத்துச் செய்வது, நீதிச்சட்டத்தின்படி சரியா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="3">அதற்கு இயேசு, “மோசே உங்களுக்கு என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="4">அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி, அவளை விவாகரத்துச் செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.</verse>
				<verse number="5">இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே மோசே இந்த நீதிச்சட்டத்தை உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்.</verse>
				<verse number="6">ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார்.</verse>
				<verse number="7">‘இந்தக் காரணத்தினால், ஒருவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டு தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;</verse>
				<verse number="8">அவர்கள் இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இனி இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.</verse>
				<verse number="9">ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.</verse>
				<verse number="10">அவர்கள் மறுபடியும் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள்.</verse>
				<verse number="11">அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கின்ற ஒருவன் அவளுக்கு விரோதமாக தகாத உறவுகொள்கின்றான்.</verse>
				<verse number="12">ஒரு பெண் தனது கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு இன்னொருவனைத் திருமணம் செய்தால் அவள் தகாத உறவுகொள்கிறாள்” என்றார்.</verse>
				<verse number="13">அதன்பின்பு சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டும் என்பதற்காக மக்கள் அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ அவர்களைக் கண்டித்தார்கள்.</verse>
				<verse number="14">இயேசு இதைக் கண்டபோது கோபமடைந்து அவர்களிடம், “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.</verse>
				<verse number="15">நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கின்றேன், ஒரு சிறு பிள்ளையைப் போல இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன் ஒருபோதும் அதற்குள் செல்ல மாட்டான்” என்றார்.</verse>
				<verse number="16">அத்துடன் அவர் அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு தமது கைகளை அவர்கள்மீது வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.</verse>
				<verse number="17">இயேசு அங்கிருந்து போய்க் கொண்டிருக்கையில் ஒருவன் அவரிடம் ஓடி வந்து அவருக்கு முன்பாக முழந்தாழிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="18">அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கின்றாய்? இறைவனைத் தவிர நல்லவர் எவருமில்லையே.</verse>
				<verse number="19">‘கொலை செய்யாதே, தகாத உறவுகொள்ளாதே, களவு செய்யாதே, பொய்ச் சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.</verse>
				<verse number="20">அதற்கு அவன், “போதகரே, இவற்றையெல்லாம் நான் சிறுவனாயிருந்த காலம் முதல் கைக்கொண்டு வருகின்றேன்” என்றான்.</verse>
				<verse number="21">இயேசு அவனை நோக்கிப் பார்த்து அவன்மீது அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடம் குறைவுபடுகிறது. நீ போய் உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது, உனக்கு பரலோகத்தில் செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.</verse>
				<verse number="22">அவனிடம் பெருமளவு செல்வம் இருந்தபடியால் அதைக் கேட்டு முகம் வாடியவனாய் துக்கத்துடன் திரும்பிச் சென்றான்.</verse>
				<verse number="23">இயேசு சுற்றிப் பார்த்து தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன், இறைவனுடைய அரசுக்குள் செல்வது எவ்வளவு கடினமானது!” என்றார்.</verse>
				<verse number="24">அவருடைய வார்த்தைகளைக் குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு திரும்பவும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் செல்வது எவ்வளவு கடினமானது!</verse>
				<verse number="25">ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைவிட ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.</verse>
				<verse number="26">சீடர்களோ இன்னும் அதிக வியப்படைந்தவர்களாய், “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="27">இயேசு அவர்களை நோக்கிப் பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார்.</verse>
				<verse number="28">அப்போது பேதுரு அவரிடம், “நாங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு உம்மைப் பின்பற்றி வந்தோமே” என்றான்.</verse>
				<verse number="29">அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால்,</verse>
				<verse number="30">அவன் இந்த வாழ்வில் வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்மார்களையும், வயல்களையும் நூறு மடங்காகப் பெற்றுக்கொள்வதோடு அவனுக்குத் துன்புறுத்தல்களும் ஏற்படும். அத்தோடு, வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான்.</verse>
				<verse number="31">ஆனாலும், கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.</verse>
				<verse number="32">அவர்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டிருக்கும் வழியில் இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தார்; அதைக் கண்ட சீடர்கள் வியப்படைய, அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்தார்கள். மீண்டும் அவர் பன்னிருவரையும் ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்.</verse>
				<verse number="33">“இதோ, நாம் எருசலேமுக்குப் போகின்றோம். அங்கே மனுமகன் தலைமை மதகுருக்களிடமும் நீதிச்சட்ட ஆசிரியர்களிடமும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரணதண்டனை விதித்து யூதரல்லாதவர்களிடம் அவரை ஒப்புக்கொடுப்பார்கள்.</verse>
				<verse number="34">அவர்களோ அவரை ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, அவரைச் சாட்டையினால் அடித்து, அவரைக் கொலை செய்வார்கள். ஆனாலும் மூன்று நாட்களின் பின், அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்றார்.</verse>
				<verse number="35">அப்போது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள்.</verse>
				<verse number="36">அதற்கு அவர், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="37">அதற்கு அவர்கள், “நீர் உமது மகிமைப் பிரகாசத்தில் அமரும்போது எங்களில் ஒருவன் உமது வலது பக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலுமாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்கள்.</verse>
				<verse number="38">அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து உங்களால் அருந்த முடியுமா அல்லது எனக்கிருக்கும் ஞானஸ்நானத்தில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="39">அதற்கு அவர்கள், “எங்களாலும் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் அருந்தும் கிண்ணத்திலிருந்து நீங்கள் அருந்துவீர்கள், நான் பெற்ற ஞானஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்கள்.</verse>
				<verse number="40">ஆனால் எனது வலது பக்கத்தில் அமருவதையோ இடது பக்கத்தில் அமருவதையோ அனுமதிப்பது என்னுடைய செயலல்ல. இந்த இடங்கள் யாருக்கென ஆயத்தமாக்கப்பட்டு இருக்கின்றனவோ அவர்களுக்கே அவை உரியவை” என்றார்.</verse>
				<verse number="41">இதைக் கேட்டபோது மற்ற பத்துப் பேரும், யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் கோபமடைந்தார்கள்.</verse>
				<verse number="42">இயேசு அவர்களை ஒன்றாக அழைத்து, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள் அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களின் உயர் அதிகாரிகள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="43">ஆனால் உங்களுள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் உங்களுக்குப் பணியாளனாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="44">முதன்மையாயிருக்க விரும்புகிறவன் எவனோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும்.</verse>
				<verse number="45">ஏனென்றால், மனுமகனும்கூட பணிவிடையைப் பெறுவதற்கு அல்ல, மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யவும், அநேகரை மீட்கும் பொருட்டாகத் தமது உயிரைக் கொடுக்கவுமே வந்தார்” என்றார்.</verse>
				<verse number="46">அதன்பின் அவர்கள் எரிகோவுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசுவும், அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமான மக்களோடு அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் பார்வையற்ற ஒருவன் வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="47">அவன், நாசரேத்தைச் சேர்ந்த இயேசு போகின்றார் என கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான்.</verse>
				<verse number="48">பலர் அவனைக் கண்டித்து அமைதியாய் இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டு அழைத்தான்.</verse>
				<verse number="49">இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் பார்வையற்ற அந்த மனிதனை அழைத்து, “தைரியமாய் இரு! எழுந்து நில்! அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.</verse>
				<verse number="50">அவன் தனது மேலாடையை எறிந்துவிட்டு துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான்.</verse>
				<verse number="51">இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு பார்வையற்ற அந்த மனிதன், “ஆண்டவரே, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.</verse>
				<verse number="52">அப்போது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையடைந்து அந்த வீதி வழியே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">அவர்கள் எருசலேமை அண்மித்துச் சென்றடைந்தபோது, ஒலிவமலைக்கு அருகிலுள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்து தமது சீடர்களில் இருவரை அனுப்பி,</verse>
				<verse number="2">“உங்களுக்கு முன்னே இருக்கின்ற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகையில் ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.</verse>
				<verse number="3">யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவைப்படுகிறது. அவர் விரைவாக இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.</verse>
				<verse number="4">அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலருகே ஒரு கழுதைக்குட்டி கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது</verse>
				<verse number="5">அங்கே நின்று கொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="6">அதற்கு, இயேசு சொன்னபடியே அவர்கள் பதிலளித்தபோது அவர்களைப் போகவிட்டார்கள்.</verse>
				<verse number="7">அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் மேலாடைகளை அதன்மீது போட்டபோது அவர் அதன்மீது உட்கார்ந்தார்.</verse>
				<verse number="8">அநேகர் தங்களுடைய மேலாடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல் வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.</verse>
				<verse number="9">அவருக்கு முன்பாக சென்றவர்களும், பின்தொடர்ந்து சென்றவர்களும் சத்தமிட்டு, “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!”</verse>
				<verse number="10">“வரப் போகின்ற நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” “உன்னதங்களில் ஓசன்னா!” என ஆர்ப்பரித்தார்கள்.</verse>
				<verse number="11">பின்பு இயேசு எருசலேமுக்குள் சென்று ஆலயத்திற்குப் போனார். அங்கு அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகிவிட்டதால் பன்னிருவருடனும் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார்.</verse>
				<verse number="12">மறுநாள் அவர்கள் பெத்தானியாவைவிட்டுப் புறப்படுகையில் இயேசு பசியாயிருந்தார்.</verse>
				<verse number="13">அவர் தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தை கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்குச் சென்றார். அவர் அதற்கு அருகில் வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக் காலம் அல்ல.</verse>
				<verse number="14">அப்போது அவர் அந்த மரத்தைப் பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடாமல் இருக்கட்டும்” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டார்கள்.</verse>
				<verse number="15">பின்னர் அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது இயேசு ஆலய வளாகத்துக்குள் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். நாணயமாற்று செய்வோரின் மேசைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.</verse>
				<verse number="16">அத்துடன் அவர் ஆலய வளாகத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஒருவரையும் அனுமதிக்கவில்லை.</verse>
				<verse number="17">பின்பு, அவர் அவர்களுக்குப் போதித்து, “ ‘எனது வீடு எல்லா இன மக்களுக்கும் ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என்று எழுதியிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்” என்று சொன்னார்.</verse>
				<verse number="18">தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது அவரைக் கொலை செய்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனாலும், கூடியிருந்த மக்கள் கூட்டத்தார் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்ததால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள்.</verse>
				<verse number="19">மாலை வேளையானபோது இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே போனார்கள்.</verse>
				<verse number="20">மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப் போய் இருந்ததைச் சீடர்கள் கண்டார்கள்.</verse>
				<verse number="21">பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்தி மரம் பட்டுப்போனது!” என்றான்.</verse>
				<verse number="22">அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="23">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி தனது இருதயத்தில் சந்தேகப்படாமல் தான் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.</verse>
				<verse number="24">ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்கள் மன்றாடலில் நீங்கள் எதைக் கேட்கின்றீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்போது அது உங்களுடையதாகும்.</verse>
				<verse number="25">ஆனால், நீங்கள் நின்று மன்றாடும்போது உங்கள் மனதில் யார் மீதாவது கசப்பேதும் இருக்குமானால் அவரை மன்னியுங்கள்; அப்போது பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார்.</verse>
				<verse number="26">அப்படி நீங்கள் மன்னிக்காதுவிட்டால் உங்கள் பரலோக பிதாவும், உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டார்” என்றார்.</verse>
				<verse number="27">அவர்கள் திரும்பவும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய வளாகத்தில் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள்.</verse>
				<verse number="28">அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கின்றீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள்.</verse>
				<verse number="29">அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். அப்போது எந்த அதிகாரத்தைக்கொண்டு நான் இவற்றைச் செய்கின்றேன் என்று உங்களுக்குச் சொல்வேன்.</verse>
				<verse number="30">யோவானின் ஞானஸ்நானம், பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.</verse>
				<verse number="31">அவர்கள் அதைக் குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக் கொண்டவர்களாய், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மிடம் கேட்பார்.</verse>
				<verse number="32">அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்வோமானால், யோவான் ஒரு இறைவாக்கினன் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றபடியால், மக்களுக்குப் பயப்பட வேண்டியிருக்குமே” என்றார்கள்.</verse>
				<verse number="33">எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால், எந்த அதிகாரத்தினால் நான் இவற்றைச் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">பின்பு இயேசு அவர்களுடன் உவமைகள் மூலமாகப் பேசினார்: “ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, ஒரு திராட்சை ஆலையைக் கட்டி, அங்கு ஒரு காவற் கோபுரத்தையும் அமைத்தான். அதன்பின்பு அவன் அந்தத் திராட்சைத் தோட்டத்தை சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு தூர இடத்திற்குப் பயணம் சென்றான்.</verse>
				<verse number="2">அறுவடைக் காலம் வந்தபோது திராட்சைத் தோட்டத்திலிருந்து தனது பங்குக்குரிய பழங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அவன் ஒரு வேலைக்காரனைக் குத்தகைக்காரர்களிடம் அனுப்பினான்.</verse>
				<verse number="3">அந்தக் குத்தகைக்காரர்களோ அவனைப் பிடித்து, அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.</verse>
				<verse number="4">அப்போது அவன் வேறொரு வேலைக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான். அவர்கள் அவனுடைய தலையில் அடித்து, அவனை அவமானப் படுத்தினார்கள்.</verse>
				<verse number="5">அவன் மறுபடியும் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவர்கள் அவனை கொன்றுவிட்டார்கள். அவன் இன்னும் பலரை அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்தார்கள், மற்றவர்களைக் கொன்றுவிட்டார்கள்.</verse>
				<verse number="6">“இனிமேல் அனுப்புவதற்கு அவனுடைய அன்பு மகன் மட்டுமே இருந்தான். ‘எனது மகனுக்கு அவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, கடைசியாக அவன் தன் மகனை அனுப்பினான்.</verse>
				<verse number="7">“ஆனால் அந்தக் குத்தகைக்காரர்களோ, ‘இவனே சொத்துக்கு வாரிசு. வாருங்கள் நாம் இவனைக் கொன்று விடுவோம். அப்போது இந்த உரிமைச் சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு,</verse>
				<verse number="8">அவனைப் பிடித்து கொலை செய்து, தோட்டத்திற்கு வெளியே வீசிவிட்டார்கள்.</verse>
				<verse number="9">“அப்படியானால் இப்போது அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் என்ன செய்வான்? அவன் வந்து, அந்தக் குத்தகைக்காரர்களை கொலை செய்துவிட்டு அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான் அல்லவா?</verse>
				<verse number="10">வேதவசனத்தில் எழுதியிருக்கின்றபடி: “ ‘கட்டடம் கட்டுகிறவர்கள் நிராகரித்த கல்லே மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று;</verse>
				<verse number="11">கர்த்தர் இதைச் செய்திருக்கின்றார். இது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது’ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா” என்றார்.</verse>
				<verse number="12">அப்போது அவர்கள் அவரைக் கைது செய்ய வழி தேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்ததனால், அவரைவிட்டுப் போய் விட்டார்கள்.</verse>
				<verse number="13">பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் காணும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள்.</verse>
				<verse number="14">அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை உண்மையின்படி போதிக்கின்றவருமாய் இருக்கின்றீர். அத்துடன் நீர் யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர், ஆகையால் எதையும் தராதரம் பார்த்து செய்பவரல்ல என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா, இல்லையா?</verse>
				<verse number="15">நாங்கள் அதைச் செலுத்த வேண்டுமா? செலுத்த வேண்டியதில்லையா?” என்று கேட்டார்கள். ஆனால் இயேசுவுக்கோ அவர்களின் போலி வேடம் தெரிந்திருந்தது. அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு தினாரி நாணயத்தைக் கொண்டுவந்து எனக்குக் காட்டுங்கள்” என்றார்.</verse>
				<verse number="16">அவர்கள் அதைக்கொண்டு வந்தபோது அவர் அவர்களிடம், “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோம பேரரசன் சீசருடையது” என்றார்கள்.</verse>
				<verse number="17">அப்போது இயேசு அவர்களிடம், “அப்படியானால், சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு, அவர்கள் வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="18">அப்போது உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறுகின்ற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.</verse>
				<verse number="19">அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளைகள் அற்றவனாய் தனது மனைவியைவிட்டு இறந்துபோனால் இறந்தவனுடைய சகோதரன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், இறந்துபோன தன் சகோதரனுக்காகப் பிள்ளைகளைப் பெறவேண்டும் என்றும் எங்களுக்கு மோசே எழுதிக் கொடுத்திருக்கிறார்.</verse>
				<verse number="20">இங்கே ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்து போனான்.</verse>
				<verse number="21">அந்த விதவையை இரண்டாவது சகோதரன் திருமணம் செய்தான். ஆனால் அவனும் பிள்ளைகள் இல்லாமலே இறந்து போனான். மூன்றாவது சகோதரனுக்கும் இதுவே நடந்தது.</verse>
				<verse number="22">அந்த ஏழு பேருமே பிள்ளைகள் இல்லாமல் இறந்து போனார்கள். இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.</verse>
				<verse number="23">இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="24">அதற்கு இயேசு, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனின் வல்லமையையும் அறியாமல் இருக்கின்றபடியால், தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றீர்கள் அல்லவா?</verse>
				<verse number="25">இறந்தவர்கள் உயிர்த்தெழும்போது திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலிருக்கின்ற தூதர்களைப் போலிருப்பார்கள்.</verse>
				<verse number="26">இறந்தோர் உயிர்த்தெழுவதைப் பற்றி, நீங்கள் மோசேயின் புத்தகத்தில் வாசிக்கவில்லையா? முட்செடியில் தோன்றிய இறைவன் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ என்று சொன்னாரே.</verse>
				<verse number="27">அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கின்றார். எனவே அவர்கள் இறந்தும் உயிரோடிருக்கிறார்கள் என்பது புலனாகிறது. ஆகையால் நீங்கள் முற்றிலும் தப்பான எண்ணம் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.</verse>
				<verse number="28">நீதிச்சட்ட ஆசிரியரில் ஒருவன் வந்து அவர்கள் விவாதித்ததைக் கேட்டுக் கொண்டிருந்தான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தார் என்று அவன் கண்டபோது, அவன் அவரிடம், “கட்டளைகள் எல்லாவற்றிலும் மிக முக்கியமான கட்டளை எது?” என்று கேட்டான்.</verse>
				<verse number="29">அதற்கு இயேசு, “ ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.</verse>
				<verse number="30">உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு மனதுடனும், உன் முழு பலத்துடனும் அன்பு செய்வாயாக’ என்பதே மிகவும் முக்கியமான கட்டளை.</verse>
				<verse number="31">அதற்கு அடுத்த கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போலவே, உன் அயலானிலும் அன்பாய் இரு.’ இவற்றைவிட பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார்.</verse>
				<verse number="32">அதற்கு அந்த நீதிச்சட்ட ஆசிரியன், “போதகரே! நன்றாய்ச் சொன்னீர். இறைவன் ஒருவரே, அவரைத் தவிர வேறு ஒரு இறைவன் இல்லை என்று நீர் சொன்னது சரியானதே.</verse>
				<verse number="33">அவரை முழு இருதயத்துடனும், முழு ஆற்றலுடனும், முழுப் பலத்துடனும் அன்பு செய்வதும் தன் மேல் அன்பாயிருப்பது போல் தன் அயலானில் அன்பாய் இருப்பதுமே எல்லா தகன காணிக்கைகளையும் பலிகளையும்விட மிக முக்கியமானது” என்றான்.</verse>
				<verse number="34">அவன் ஞானத்துடன் பதில் சொன்னதை இயேசு கண்டபோது, அவர் அவனிடம், “நீ இறைவனுடைய அரசுக்குத் தூரமாக இல்லை” என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.</verse>
				<verse number="35">இயேசு ஆலய முற்றத்தில் போதித்துக் கொண்டிருக்கையில், அவர் அவர்களிடம், “மேசியாவை தாவீதின் மகன் என்று நீதிச்சட்ட ஆசிரியர் சொல்கின்றார்களே, அது எப்படி?</verse>
				<verse number="36">தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், “கர்த்தர் என்னுடைய ஆண்டவரிடம், ‘நான் உமது பகைவர்களை உமது பாதத்தின் கீழ் கொண்டுவரும் வரை, எனது வலது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்’ என்று சொல்லியிருக்கின்றாரே.</verse>
				<verse number="37">“எனவே தாவீதே அவரை ஆண்டவர் என்று அழைத்திருக்கிறார், அப்படியென்றால் அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்று கேட்டார். கூடியிருந்த மக்கள் அவர் சொல்வதை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="38">இயேசு தொடர்ந்து போதித்துக் கொண்டிருக்கையில் அவர் அவர்களிடம், “நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களைப் பெறுவதையும் விரும்புகிறார்கள்.</verse>
				<verse number="39">ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், விருந்துகளிலே மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.</verse>
				<verse number="40">அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளை அடிக்கின்றார்கள்; அத்துடன் மற்றவர்கள் காண வேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.</verse>
				<verse number="41">இயேசு காணிக்கைகள் போடும் இடத்துக்கு எதிராக உட்கார்ந்து, திரண்டிருந்த மக்கள் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியிலே பணத்தைப் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பல செல்வந்தர்கள் அதிக பணத்தைப் போட்டார்கள்.</verse>
				<verse number="42">ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு செப்பு நாணயங்களைப் போட்டாள்.</verse>
				<verse number="43">அப்போது இயேசு தமது சீடர்களைத் தம்மிடம் அழைத்து அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இந்த ஏழை விதவை மற்ற எல்லோரையும்விட அந்தத் காணிக்கைப் பெட்டியிலே அதிகமாய்ப் போட்டிருக்கிறாள்.</verse>
				<verse number="44">மற்றவர்கள் எல்லோரும் தங்கள் செல்வத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள்; ஆனால் இவளோ தனது ஏழ்மையிலிருந்து தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படுகையில் அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து, “போதகரே! இதோ, இவை எவ்வளவு பெரிய கற்கள்! இவை எவ்வளவு பிரமிக்கத்தக்க கட்டடங்கள்!” என்றான்.</verse>
				<verse number="2">அதற்கு இயேசு அவர்களிடம், “ஆம்; நீங்கள் இந்த பெரும் கட்டடங்கள் எல்லாவற்றையும் காண்கின்றீர்கள் அல்லவா? ஆனால் இங்கே ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதவாறு அனைத்தும் இடிக்கப்பட்டுப் போகும்” என்றார்.</verse>
				<verse number="3">பின்பு ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவ்விடத்தில் வந்து,</verse>
				<verse number="4">“இந்தக் காரியங்கள் எப்போது நிகழும்? இவை எல்லாம் நிறைவேறப் போகின்றன என்பதற்கு முன் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="5">அதற்கு இயேசு அவர்களிடம், “ஒருவனும் உங்களை வழிவிலகச் செய்யாதபடி எச்சரிக்கையாய் இருங்கள்.</verse>
				<verse number="6">பலர் என்னுடைய பெயரால் வந்து, ‘நான்தான் அவர்’ என்று சொல்லி, பலரை ஏமாற்றுவார்கள்.</verse>
				<verse number="7">நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்க வேண்டாம். இவை நிகழ வேண்டியவையே. ஆயினும் முடிவு வர இன்னும் காலம் இருக்கின்றது.</verse>
				<verse number="8">இனத்திற்கு விரோதமாய் இனமும், நாட்டிற்கு விரோதமாய் நாடும் எழும். பல இடங்களில் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும் ஏற்படும். இவையோ பிரசவ வேதனையின் ஆரம்பமே.</verse>
				<verse number="9">“அப்போது நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் நியாயசபைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஜெபஆலயங்களில் சாட்டையினால் அடிக்கப்படுவீர்கள், என் பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக என் சாட்சிகளாய் நிற்பீர்கள்.</verse>
				<verse number="10">நற்செய்தியானது எல்லா இன மக்களுக்கும் முதலாவது அறிவிக்கப்பட வேண்டும்.</verse>
				<verse number="11">நீங்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் கொண்டுவரப்படும் போதெல்லாம், எதைச் சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில் பேச வேண்டிய வார்த்தை உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.</verse>
				<verse number="12">“சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக் கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராகக் கலகம் செய்து, அவர்களை மரணத்துக்கு உட்படுத்துவார்கள்.</verse>
				<verse number="13">என் பொருட்டு எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவு வரை உறுதியாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.</verse>
				<verse number="14">“ ‘பேரழிவை ஏற்படுத்துகின்ற அருவருப்பு’ இருக்கக் கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது, வாசிக்கிறவன் அதை விளங்கிக்கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் இருக்கின்றவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.</verse>
				<verse number="15">தனது வீட்டின் கூரையின் மேல் இருக்கின்ற எவனும் தனது வீட்டிலிருந்து எதையாவது எடுக்கும்படி உள்ளே போகக் கூடாது.</verse>
				<verse number="16">வயலில் இருக்கும் எவனும் தனது மேலாடையை எடுத்துக்கொள்வதற்கு திரும்பிப் போகக் கூடாது.</verse>
				<verse number="17">அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்!</verse>
				<verse number="18">இது குளிர் காலத்தில் நேரிடாதபடி மன்றாடுங்கள்.</verse>
				<verse number="19">ஏனெனில் அந்த நாட்கள் துன்பத்தின் நாட்களாக இருக்கும்; இறைவன் உலகத்தைப் படைத்ததிலிருந்து இன்றுவரை அப்படிப்பட்ட துன்பம் ஏற்பட்டிருக்காது, இனி ஒருபோதும் ஏற்படவும் மாட்டாது.</verse>
				<verse number="20">“கர்த்தர் அந்த நாட்களைக் குறைக்காவிட்டால் ஒருவரும் தப்ப மாட்டார்கள். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களின் பொருட்டு அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.</verse>
				<verse number="21">அக்காலத்தில் யாராவது உங்களிடம், ‘இதோ, மேசியா இங்கே இருக்கின்றார்!’ அல்லது ‘அதோ அங்கே இருக்கின்றார்!’ என்று சொன்னால் அதை நம்ப வேண்டாம்.</verse>
				<verse number="22">ஏனெனில் போலி மேசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றுவார்கள். இயலுமானால், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் ஏமாற்றும்படி அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.</verse>
				<verse number="23">எனவே நீங்கள் கவனமாய் இருங்கள்; அக்காலம் வருமுன்பே நான் உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கின்றேன்.</verse>
				<verse number="24">“அந்நாட்களில் உண்டாகும் துன்பத்தைத் தொடர்ந்து, “ ‘சூரியன் இருளடையும், சந்திரன் தனது வெளிச்சத்தைக் கொடாதிருக்கும்;</verse>
				<verse number="25">நட்சத்திரங்கள் ஆகாயத்தில் இருந்து விழும். வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படும்.’</verse>
				<verse number="26">“அவ்வேளையில் மனுமகன் மிகுந்த வல்லமையுடனும், மகிமையுடனும் மேகங்களில் வருவதை மனிதர்கள் காண்பார்கள்.</verse>
				<verse number="27">அவர் தமது தூதர்களை அனுப்பி பூமியின் ஒரு முனையிலிருந்து வானத்தின் மறுமுனை வரைக்குமுள்ள நான்கு திசைகளிலுமிருந்தும் தம்மால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்.</verse>
				<verse number="28">“அத்தி மரத்திலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அது துளிர்த்து இலைகள் வரும்போது கோடை காலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள்.</verse>
				<verse number="29">அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது முடிவு காலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="30">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவையெல்லாம் நடந்து முடியும் வரைக்கும் இந்தத் தலைமுறையினர் ஒழிந்து போக மாட்டார்கள்.</verse>
				<verse number="31">வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.”</verse>
				<verse number="32">“அந்த நாளையோ, அந்த நேரத்தையோபற்றி எவருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கின்ற தூதர்களுக்கும், மனுமகனுக்கும்கூட தெரியாது. ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார்.</verse>
				<verse number="33">நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்த நேரம் எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே.</verse>
				<verse number="34">இது தூரப் பயணம் போகின்ற ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கின்றது; அவன் தன்னுடைய வீட்டை வேலைக்காரரின் பொறுப்பில் ஒப்படைத்து அவர்கள் ஒவ்வொருவருக்குமான வேலையையும் கொடுத்துவிட்டு, வாசலில் இருப்பவனைக் காவல் காக்கும்படி சொல்லிவிட்டுப் போகின்றான்.</verse>
				<verse number="35">“ஆகவே விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன், மாலையிலா நள்ளிரவிலா சேவல் கூவும் வேளையிலா அல்லது அதிகாலையிலா, எப்போது திரும்பி வருவான் என்று உங்களுக்குத் தெரியாதே.</verse>
				<verse number="36">அவன் திடீரென வந்தால், அவன் வரும் வேளையில் உங்களை நித்திரை செய்கின்றவர்களாய் காணக் கூடாது.</verse>
				<verse number="37">நான் உங்களுக்குச் சொல்கின்றதை எல்லோருக்குமே சொல்கின்றேன், ‘விழிப்பாயிருங்கள்’ ” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">பஸ்கா பண்டிகையும், புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைது செய்து, அவரைக் கொலை செய்வதற்காக தந்திரமான ஒரு வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="2">ஆனால், “பண்டிகைக் காலத்தில் அப்படிச் செய்யக் கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்” என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="3">பெத்தானியாவிலே முன்பு தொழுநோயாளியாயிருந்த சீமோன் என்பவனுடைய வீட்டில் இயேசு உணவுப் பந்தியில் அமர்ந்திருக்கும்போது, ஒரு பெண் மிகவும் விலையுயர்ந்த நளதம் என்னும் வாசனைத் தைலம் நிறைந்த ஒரு வெள்ளைக் கல் குடுவையைக் கொண்டுவந்து, அதை உடைத்து அந்த வாசனைத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.</verse>
				<verse number="4">அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="5">அத்துடன், “இதை முந்நூறு தினாரி பணத்துக்கும் கூடுதலாக விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள்.</verse>
				<verse number="6">அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விட்டுவிடுங்கள். ஏன் அவளைத் தொந்தரவு செய்கின்றீர்கள்? அவள் ஒரு சிறந்த நோக்கத்துடனேயே இந்தச் செயலை செய்தாள்.</verse>
				<verse number="7">ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்; எனவே, விரும்புகிற போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஆனால் நானோ எப்போதும் உங்களுடன் இருக்கப் போவதில்லை.</verse>
				<verse number="8">அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம் பண்ணுவதற்கென முன்னதாகத் தயார் செய்யும்படியே அவள் இந்த வாசனைத் தைலத்தை என்னுடைய உடலின்மேல் ஊற்றினாள்.</verse>
				<verse number="9">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார்.</verse>
				<verse number="10">அப்போது பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக தலைமை மதகுருக்களிடம் சென்றான்.</verse>
				<verse number="11">அவர்கள் அதைக் கேட்டு சந்தோஷமடைந்து அவனுக்குப் பணம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="12">புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது வழக்கமாயிருந்தது. எனவே இயேசுவினுடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “பஸ்கா உணவை உண்பதற்கு நாங்கள் எங்கே போய் அதற்கான ஆயத்தத்தைச் செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="13">அப்போது அவர் தம்முடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடம், “பட்டணத்திற்குள்ளே போங்கள். அப்போது தண்ணீர்க் குடத்தைச் சுமந்து வருகின்ற ஒரு மனிதனைச் சந்திப்பீர்கள். அவனைப் பின்தொடர்ந்து போய்,</verse>
				<verse number="14">அவன் பிரவேசிக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘நான் எனது சீடர்களுடன் பஸ்கா உணவை உண்ண எனது விருந்தினர் அறை எங்கே இருக்கின்றது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்கா உணவை உண்ண வேண்டும்’ என்று போதகர் கேட்கின்றார் என அவனுக்குச் சொல்லுங்கள்.</verse>
				<verse number="15">தேவையான அனைத்து தளபாடங்களுடன் கூடிய ஒரு பெரிய மேல்வீட்டு அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பினார்.</verse>
				<verse number="16">சீடர்கள் புறப்பட்டு பட்டணத்துக்குள் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருக்கக் கண்டு பஸ்கா உணவை ஆயத்தம் செய்தார்கள்.</verse>
				<verse number="17">மாலை வேளையானபோது, இயேசு பன்னிருவரோடும் அங்கு வந்து சேர்ந்தார்.</verse>
				<verse number="18">அவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான். என்னோடு சாப்பிடுகின்றவர்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.</verse>
				<verse number="19">அவர்கள் துக்கமடைந்து, ஒவ்வொருவராக, “அது நானா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="20">“என்னுடனே ஒரே பாத்திரத்தில் தொட்டு உண்ணுகின்ற பன்னிருவரில் ஒருவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்” என அவர் பதிலளித்தார்.</verse>
				<verse number="21">“தம்மைக் குறித்து எழுதியிருக்கின்றபடியே மனுமகன் போய் விடுவார். ஆனால் அவரைக் காட்டிக் கொடுக்கின்ற மனிதனுக்கோ ஐயோ பேரழிவு! அவன் பிறக்காமலே இருந்திருந்தால், அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.</verse>
				<verse number="22">அவர்கள் உணவு உட்கொண்டிருக்கையில் இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், இது என்னுடைய உடல்.”</verse>
				<verse number="23">பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும் அந்தக் கிண்ணத்திலிருந்து அருந்தினார்கள்.</verse>
				<verse number="24">அவர் அவர்களைப் பார்த்து, “இது புதிய உடன்படிக்கையின் என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இது அநேகருக்காக சிந்தப்படுகிறது.</verse>
				<verse number="25">உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நான் இறைவனுடைய அரசில் திராட்சைப் பழரசத்தைப் புதிதானதாக அருந்தும் அந்த நாள் வரைக்கும், இனிமேல் இதை நான் அருந்த மாட்டேன்” என்றார்.</verse>
				<verse number="26">அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு ஒலிவமலைக்குப் போனார்கள்.</verse>
				<verse number="27">இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன், அப்போது செம்மறியாடுகள் சிதறடிக்கப்படும்’ என்று எழுதியிருக்கின்றபடியே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப் போவீர்கள்.</verse>
				<verse number="28">ஆயினும் நான் உயிரோடு எழுந்த பின் உங்களுக்கு முன்னதாக கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.</verse>
				<verse number="29">அதற்கு பேதுரு, “எல்லோரும் உம்மைவிட்டு ஓடிப் போனாலும் நான் போக மாட்டேன்” என்றான்.</verse>
				<verse number="30">அப்போது இயேசு, “உண்மையாகவே நான் உனக்கு சொல்கின்றேன், இன்று இரவே சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னதாகவே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.</verse>
				<verse number="31">ஆனால் பேதுருவோ, “நான் உம்முடன் உயிர் துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று வலியுறுத்திச் சொன்னான். மற்ற அனைவரும் அவ்விதமாகவே சொன்னார்கள்.</verse>
				<verse number="32">அவர்கள் கெத்செமனே என்று சொல்லப்பட்ட ஒரு இடத்துக்குப் போனார்கள். அங்கு இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் மன்றாடப் போகின்றேன், அதுவரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்” என்றார்.</verse>
				<verse number="33">அவர் பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் அழைத்துக்கொண்டு போய் மிகவும் துயருற்று கலக்கமடையத் தொடங்கினார்.</verse>
				<verse number="34">அத்துடன் அவர், “உயிர் நீங்கும் அளவுக்கு என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள்” என்றார்.</verse>
				<verse number="35">அவர் சற்றுத் தூரமாய்ப் போய் தரையில் விழுந்து மன்றாடி, முடியுமானால் அந்தவேளை தம்மைவிட்டுக் கடந்து போகும்படி வேண்டிக் கொண்டார்.</verse>
				<verse number="36">அவர் தொடர்ந்து, “அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்து விடும். ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்றார்.</verse>
				<verse number="37">பின்பு அவர் தமது சீடர்களிடம் திரும்பி வந்தபோது, அவர்கள் நித்திரையாய் இருப்பதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து, “சீமோனே, நீ நித்திரை செய்கின்றாயோ? உன்னால் ஒரு மணி நேரம் விழித்திருக்க முடியவில்லையா?</verse>
				<verse number="38">நீங்கள் விழித்திருந்து மன்றாடுங்கள், அப்போது சோதனைக்குள் விழ மாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.</verse>
				<verse number="39">அவர் திரும்பவும் போய் அதேவிதமாகவே மன்றாடினார்.</verse>
				<verse number="40">அவர் திரும்பி வந்தபோது அவர்கள் மறுபடியும் நித்திரை செய்கின்றதைக் கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கத்தில் இருந்தபடியால் அவருக்கு என்ன சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.</verse>
				<verse number="41">அவர் மூன்றாம் தடவையும் திரும்பி வந்து சீடர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னும் நித்திரை செய்து இளைப்பாறுகிறீர்களோ? போதும்! வேளை வந்துவிட்டது. இதோ, மனுமகன் பாவிகளின் கைகளில் காட்டிக் கொடுக்கப்படப் போகின்றார்.</verse>
				<verse number="42">எழுந்திருங்கள், நாம் போவோம்! இதோ என்னைக் காட்டிக் கொடுப்பவன் வந்துவிட்டான்!” என்றார்.</verse>
				<verse number="43">அவர் பேசிக் கொண்டிருக்கையில், பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் அங்கே வந்தான். அவனுடன் ஒரு கூட்ட மக்கள் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் தலைமை மதகுருக்களாலும், நீதிச்சட்ட ஆசிரியர்களாலும், சமூகத் தலைவர்களாலும் அனுப்பப்பட்டிருந்தனர்.</verse>
				<verse number="44">அவரைக் காட்டிக் கொடுப்பவன், தான் அவர்களுக்கு ஒரு சைகையைக் காண்பிப்பதாக சொல்லியிருந்தான். “நான் யாரை முத்தமிடுகிறேனோ, அவரே அந்த ஆள்; அவரைக் கைது செய்து காவலுடன் அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லியிருந்தான்.</verse>
				<verse number="45">யூதாஸ் இயேசுவுக்குச் சமீபமாக வந்து, “போதகரே!” என்று சொல்லி, அவரை முத்தமிட்டான்.</verse>
				<verse number="46">அப்போது அவர்கள் இயேசுவைப் பிடித்து, அவரைக் கைது செய்தார்கள்.</verse>
				<verse number="47">அவ்வேளையில் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன், தன்னுடைய வாளை உருவி தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது காதை வெட்டினான்.</verse>
				<verse number="48">இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து என்னைப் பிடிப்பதற்கு நான் ஒரு ஆபத்தான கொள்ளைக்காரனா?</verse>
				<verse number="49">ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்திலே போதித்துக்கொண்டு உங்களோடுதானே இருந்தேன். அப்போது நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. ஏனெனில், வேதவசனங்கள் நிறைவேற வேண்டியிருக்கிறதே” என்றார்.</verse>
				<verse number="50">அப்போது எல்லோரும் அவரை தனியேவிட்டு ஓடிப் போனார்கள்.</verse>
				<verse number="51">அப்போது இயேசுவைப் பின்பற்றிய ஒரு இளைஞன் விலையுயர்ந்த மெல்லிய மேலாடையை அணிந்து கொண்டவனாய் இருந்தான். அவர்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது,</verse>
				<verse number="52">அவன் தன்னுடைய மேலாடையை விட்டுவிட்டு, நிர்வாணமாய்த் தப்பி ஓடினான்.</verse>
				<verse number="53">அவர்கள் இயேசுவை பிரதம மதகுருவிடம் கொண்டுபோனார்கள். அங்கே எல்லா தலைமை மதகுருக்களும், சமூகத் தலைவர்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் ஒன்றுகூடி இருந்தார்கள்.</verse>
				<verse number="54">பேதுரு சற்றுத் தொலைவில் இயேசுவைப் பின்தொடர்ந்து போய், தலைமை மதகுருவினுடைய முற்றத்திற்குள் சென்றான். அங்கே அவன் காவலருடன் நெருப்பின் அருகே உட்கார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.</verse>
				<verse number="55">தலைமை மதகுருக்களும், நியாயசபையில் இருந்த அனைவரும் இயேசுவுக்கு மரணதண்டனை கொடுப்பதற்காக அவருக்கு எதிரான சாட்சியத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித சாட்சியமும் கிடைக்கவில்லை.</verse>
				<verse number="56">பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய் இருந்தன.</verse>
				<verse number="57">பின்பு சிலர் எழுந்து நின்று அவருக்கு எதிராக இவ்விதமாகப் பொய்ச் சாட்சி கொடுத்தார்கள்:</verse>
				<verse number="58">“ ‘மனிதருடைய கைகளினால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை நான் இடித்துவிட்டு, பின்பு மூன்று நாட்களுக்குள் கைகளினால் கட்டப்படாத வேறொரு ஆலயத்தைக் கட்டுவேன்’ என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.</verse>
				<verse number="59">அப்படியிருந்தும் அவர்களுடைய சாட்சியம் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய் இருந்தது.</verse>
				<verse number="60">அப்போது தலைமை மதகுரு அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று இயேசுவைப் பார்த்து, “நீ பதில் சொல்ல மாட்டாயோ? இவர்கள் உனக்கு எதிராய் கொடுக்கின்ற சாட்சியம் என்ன?” என்று கேட்டான்.</verse>
				<verse number="61">ஆனால் இயேசுவோ, பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார். திரும்பவும் தலைமை மதகுரு அவரைப் பார்த்து, “நீ துதிக்கப்படுபவரின் மகனான மேசியாவா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="62">அதற்கு இயேசு, “ஆம், நானே அவர், மனுமகன் வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.</verse>
				<verse number="63">அப்போது தலைமை மதகுரு தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு, “இதைவிட நமக்கு வேறு சாட்சிகள் தேவையோ?</verse>
				<verse number="64">இவன் இறைவனை நிந்தித்துப் பேசியதை நீங்கள் கேட்டீர்களே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். அவர்கள் எல்லோரும் அவரை மரணதண்டனைக்குரியவர் என தீர்ப்புக் கூறினார்கள்.</verse>
				<verse number="65">அப்போது சிலர் அவர்மீது துப்பத் தொடங்கி, அவருடைய கண்களைக் கட்டி, தங்களுடைய கைகளால் அவரைக் குத்தி, “உன்னை அடித்தது யார் என்று இறைவாக்காகச் சொல்” என்று சொன்னார்கள். பின்பு காவலாளிகளும் அவரைக் கொண்டுபோய் அடித்தார்கள்.</verse>
				<verse number="66">அவ்வேளையில் பேதுரு கீழே அந்த முற்றத்திலேயே இருந்தான். அப்போது தலைமை மதகுருவின் வேலைக்காரிகளில் ஒருத்தி அவ்வழியாய் வந்தாள்.</verse>
				<verse number="67">அவள் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, அவனை உற்றுப் பார்த்து, “நீயும் நாசரேத்து ஊரானாகிய, அந்த இயேசுவோடுகூட இருந்தவன்” என்றாள்.</verse>
				<verse number="68">ஆனால் அவனோ, “எனக்குத் தெரியாது, நீ என்ன சொல்கின்றாய் என்று எனக்கு விளங்கவும் இல்லை” என்று மறுதலித்தான். அவன் இவ்வாறு சொல்லிவிட்டு முற்றத்தின் வாசல் பக்கமாகச் சென்றான். அப்போது சேவல் கூவிற்று.</verse>
				<verse number="69">அந்த வேலைக்காரி அவனை அங்கேயும் கண்டு, அங்கே சுற்றி இருந்தவர்களைப் பார்த்து, “இவனும் அவர்களில் ஒருவன்” என்றாள்.</verse>
				<verse number="70">அவன் திரும்பவும் அதை மறுதலித்தான். சிறிது நேரத்தின் பின் அங்கே நின்றவர்கள் பேதுருவைப் பார்த்து, “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். ஏனென்றால் நீ ஒரு கலிலேயன்” என்றார்கள்.</verse>
				<verse number="71">அப்போது அவன், “அந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்றும், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன் மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி சத்தியம் செய்யவும் தொடங்கினான்.</verse>
				<verse number="72">உடனே சேவல் இரண்டாம் முறை கூவிற்று. அப்போது, “சேவல் இரு முறை கூவுவதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தைகளைப் பேதுரு நினைவு கூர்ந்தான். அதனால் அவன் மனங்கசந்து அழுதான்.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">அதிகாலையிலேயே தலைமை மதகுருக்கள், மூப்பர்களுடனும் நீதிச்சட்ட ஆசிரியர்களுடனும் முழு நியாயசபையினருடனும் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவை பிணைத்துக் கட்டி பிலாத்துவிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்கள்.</verse>
				<verse number="2">பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.</verse>
				<verse number="3">தலைமை மதகுருக்கள் அநேக குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தினார்கள்.</verse>
				<verse number="4">எனவே பிலாத்து திரும்பவும் அவரிடம், “நீ பதில் சொல்ல மாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுக்களை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்றான்.</verse>
				<verse number="5">இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான்.</verse>
				<verse number="6">பண்டிகையின்போது, மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது.</verse>
				<verse number="7">அந்நாட்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டு கொலை செய்ததற்காக சில கிளர்ச்சிக்காரர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பரபாஸ் என்ற ஒருவனும் இருந்தான்.</verse>
				<verse number="8">மக்கள் கூட்டமாக வந்து, வழக்கமாக செய்துவந்தது போல் இம்முறையும் தங்களுக்காக ஒருவனை விடுவிக்கும்படி பிலாத்துவிடம் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="9">அப்போது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="10">தலைமை மதகுருக்கள் பொறாமையின் காரணமாகவே இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.</verse>
				<verse number="11">ஆனால் தலைமை மதகுருக்களோ பரபாசையே விடுதலை செய்ய வேண்டும் என்று பிலாத்துவிடம் கேட்கச் சொல்லி கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள்.</verse>
				<verse number="12">எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்கின்ற இவனுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="13">அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="14">பிலாத்து, அவர்களைப் பார்த்து, “ஏன், அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="15">பிலாத்து, கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி பரபாஸை அவர்களுக்காக விடுதலை செய்தான். இயேசுவையோ அவன் சாட்டையால் அடித்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்படைத்தான்.</verse>
				<verse number="16">இராணுவ வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டு சென்று மற்ற எல்லா இராணுவ வீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.</verse>
				<verse number="17">அவர்கள் அவருக்கு கருஞ்சிவப்பு மேலாடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள்.</verse>
				<verse number="18">பின்பு அவர்கள், “யூதரின் அரசனே வாழ்க!” என்று அவரை ஏளனம் செய்தார்கள்.</verse>
				<verse number="19">அத்துடன் ஒரு தடியினால் திரும்பத் திரும்ப அவரின் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, அவர் முன்பாக முழந்தாழிட்டு, அவரை வணங்கினார்கள்.</verse>
				<verse number="20">இவ்வாறு அவரை ஏளனம் செய்த பின்பு அந்த கருஞ்சிவப்பு மேலாடையைக் கழற்றி, மீண்டும் அவருடைய உடையையே அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறைவதற்காக கொண்டுபோனார்கள்.</verse>
				<verse number="21">அப்போது நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியாய் வந்து கொண்டிருந்த சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதனைக் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமந்து வரும்படி இராணுவ வீரர்கள் அவனை வற்புறுத்தினார்கள்; அவன் அலெக்சாந்தர் மற்றும் ரூபு என்பவர்களின் தகப்பன்.</verse>
				<verse number="22">அவர்கள் இயேசுவை மண்டையோட்டின் இடம் என்று அர்த்தமுள்ள கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து,</verse>
				<verse number="23">வெள்ளை கற்றாழைச் சாறு கலந்த திராட்சை ரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவரோ அதைக் குடிக்க மறுத்தார்.</verse>
				<verse number="24">பின்பு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடையில் யார் எதை எடுத்துக்கொள்வது என்று சீட்டுப் போட்டு அவற்றைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.</verse>
				<verse number="25">அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.</verse>
				<verse number="26">அத்தோடு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டாக சிலுவையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது: “யூதருடைய அரசன்.”</verse>
				<verse number="27">அவர்கள் அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும், இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்வர்களையும் அவருடனே சிலுவைகளில் அறைந்தார்கள்.</verse>
				<verse number="28">இதன் மூலமாய், “குற்றவாளிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.</verse>
				<verse number="29">அவ்வழியாய் கடந்து சென்றவர்கள் அவரைப் பழித்துரைக்கும் விதமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே,</verse>
				<verse number="30">சிலுவையிலிருந்து இறங்கி வந்து உன்னை நீயே காப்பாற்றிக்கொள்!” என்றார்கள்.</verse>
				<verse number="31">அவ்விதமாகவே தலைமை மதகுருக்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் அவரைக் குறித்து ஒருவரோடொருவர் ஏளனமாய்ப் பேசி, “இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னையோ காப்பாற்றிக்கொள்ள முடியாதிருக்கிறான்!</verse>
				<verse number="32">இஸ்ரயேலின் அரசனான இந்த மேசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்போது அதைக் கண்டு நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். அப்படியே அவருடனே சிலுவையில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.</verse>
				<verse number="33">பகல் பன்னிரண்டு மணியானபோது, பூமியெங்கும் இருள் சூழ ஆரம்பித்து பிற்பகல் மூன்று மணி வரை நீடித்திருந்தது.</verse>
				<verse number="34">பிற்பகல் மூன்று மணியானபோது இயேசு உரத்த குரலில், “ஏலோயி, ஏலோயி, லாமா சபக்தானி” என்று கதறினார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.</verse>
				<verse number="35">அருகே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டபோது, “இதோ, இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="36">அப்போது ஒருவன் ஓடிப் போய் கடற் பஞ்சை எடுத்து புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து ஒரு தடியில் கட்டி அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்து, “இப்போது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகின்றானோ பார்ப்போம்” என்றான்.</verse>
				<verse number="37">அப்போது இயேசு சத்தமிட்டுக் கதறி தமது இறுதி மூச்சை விட்டார்.</verse>
				<verse number="38">அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.</verse>
				<verse number="39">இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்று கொண்டிருந்த நூற்றுக்குத் தளபதி அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டு, “நிச்சயமாகவே இவர் இறைவனுடைய மகனே தான்” என்றான்.</verse>
				<verse number="40">சில பெண்கள் தூரத்தில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்.</verse>
				<verse number="41">அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரைப் பின்பற்றி, அவருடைய தேவைகளைக் கவனித்தவர்கள் இவர்கள்தான். அத்தோடு, அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேக பெண்களும் அங்கே இருந்தார்கள்.</verse>
				<verse number="42">அது ஓய்வுநாளுக்கு முந்திய நாளான ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது,</verse>
				<verse number="43">அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்தவனும், நியாயசபையின் முக்கிய அங்கத்தவனும், இறைவனின் அரசுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன், துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய் இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான்.</verse>
				<verse number="44">இயேசு அதற்குள் இறந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட பிலாத்து வியப்படைந்து நூற்றுக்குத் தளபதியை அழைத்து, “இயேசு அதற்குள் இறந்துவிட்டாரா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="45">அவன் நூற்றுக்குத் தளபதியிடமிருந்து, அதை உறுதி செய்துகொண்ட பின், இயேசுவின் உடலை யோசேப்பிடம் கையளித்தான்.</verse>
				<verse number="46">எனவே யோசேப்பு விலையுயர்ந்த மெல்லிய துணியைக் கொண்டுவந்து அவரது உடலைக் கீழே இறக்கி துணியினால் சுற்றி, கற்பாறையில் வெட்டப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்து அதன் வாசலில் ஒரு கல்லை உருட்டி மூடினான்.</verse>
				<verse number="47">மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தைப் பார்த்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">சபத் ஓய்வுநாள் முடிவடைந்தபோது மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமியும் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்களை பூசுவதற்காக அவற்றை வாங்கி,</verse>
				<verse number="2">வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே பொழுது விடிகையில் கல்லறையை நோக்கிப் போனார்கள்.</verse>
				<verse number="3">அவர்கள் போகும் வழியில், “கல்லறையின் வாயிலில் இருக்கும் கல்லை யார் நமக்காகப் புரட்டித் தள்ளுவான்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="4">ஆனால் அவர்கள் வந்து பார்த்த போதோ, மிகவும் பெரிதான அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.</verse>
				<verse number="5">அவர்கள் கல்லறைக்குள்ளே போனபோது, வெள்ளை உடை உடுத்திய ஒரு இளைஞன் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கண்டு பயந்தார்கள்.</verse>
				<verse number="6">அப்போது அவன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.</verse>
				<verse number="7">நீங்கள் போய் அவருடைய சீடர்களுக்கும், பேதுருவுக்கும் ‘அவர் உங்களுக்குச் சொன்னது போலவே, உங்களுக்கு முன்பாகவே கலிலேயாவுக்குப் போகின்றார். எனவே, அவரை அங்கே காண்பீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றான்.</verse>
				<verse number="8">அவர்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் பயந்ததனால் ஒருவருக்குமே ஒன்றும் சொல்லவில்லை.</verse>
				<verse number="9">வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில் மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடமிருந்து ஏழு பேய்களை அவர் துரத்தியிருந்தார்.</verse>
				<verse number="10">அவள் போய் அவரோடிருந்தவர்களுக்கும், அழுது புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கும் அதைச் சொன்னாள்.</verse>
				<verse number="11">இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை அவர்கள் நம்பவில்லை.</verse>
				<verse number="12">இதன்பின்பு நாட்டுப் புறமாய் நடந்து போய்க் கொண்டிருந்த அவர்களில் இருவருக்கு, இயேசு தம்மை மாறுபட்ட ஒரு தோற்றத்தில் வெளிப்படுத்தினார்.</verse>
				<verse number="13">இவர்கள் போய் அதை மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள். ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை.</verse>
				<verse number="14">பின்பு சீடர்கள் பதினொரு பேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் அவர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் பிடிவாதமாய் நம்ப மறுத்ததைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.</verse>
				<verse number="15">அவர் அவர்களிடம், “நீங்கள் உலகம் எங்கும் போய் எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்.</verse>
				<verse number="16">யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள்.</verse>
				<verse number="17">விசுவாசிக்கின்றவர்கள் மத்தியில் காணப்படும் அடையாளங்களாவன: எனது பெயரில் அவர்கள் பேய்களைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளில் பேசுவார்கள்;</verse>
				<verse number="18">பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடு விளைவிக்காது; நோயாளிகளின் மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்போது அவர்கள் குணமடைவார்கள்” என்றார்.</verse>
				<verse number="19">ஆண்டவர் இயேசு அவர்களுடன் பேசி முடித்த பின்பு, அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.</verse>
				<verse number="20">அதன்பின்பு அவருடைய சீடர்கள் புறப்பட்டுப் போய் எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார்.</verse>
			</chapter>
		</book>
		<book number="42">
			<chapter number="1">
				<verse number="1">மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விபரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் பெருமுயற்சி செய்தார்கள்.</verse>
				<verse number="2">தொடக்கத்தில் இருந்தே கண் கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்தவர்கள் எங்களுக்குக் கையளித்தபடியே எழுதினார்கள்.</verse>
				<verse number="3">நடந்த எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்து நான் கவனமாய் விசாரித்தறிந்ததால், உமக்கு அவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு நானும் தீர்மானித்தேன்.</verse>
				<verse number="4">இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விடயங்கள் நிச்சயமாக நம்பத்தகுந்த உண்மைகள் என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.</verse>
				<verse number="5">ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு மதகுரு இருந்தார். இவர் அபியாவின் மதகுரு பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி எலிசபெத்தும், மதகுருவான ஆரோனின் வழித்தோன்றலாயிருந்தாள்.</verse>
				<verse number="6">அவர்கள் இருவரும் மற்றவர்களால் குற்றம் சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டு, இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள்.</verse>
				<verse number="7">ஆனாலும் எலிசபெத் கருத்தரிக்க முடியாதவளாக இருந்ததனால், அவர்களுக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை; அவர்கள் இருவரும், வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.</verse>
				<verse number="8">ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் கடமை புரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக மதகுருவின் பணிகளைச் செய்தார்.</verse>
				<verse number="9">ஒரு நாள் மதகுருவினருக்குரிய வழக்கத்தின்படி மதக் கடமைகளைச் செய்வதற்கு யாரைத் தெரிவு செய்வதெனச் சீட்டுப் போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்று தூபம் காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டார்.</verse>
				<verse number="10">தூபம் காட்டும் வேளை வந்தபோது, வழிபாட்டிற்கு ஒன்றுகூடி வந்த பெருந்தொகையான மக்கள், வெளியே மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="11">அப்போது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.</verse>
				<verse number="12">அப்போது சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டார், பெரும் பீதி அவரை பற்றிக்கொண்டது.</verse>
				<verse number="13">அந்தத் தூதனோ அவரைப் பார்த்து: “சகரியாவே பயப்படாதீர்! உமது மன்றாடல் கேட்கப்பட்டது. உமது மனைவி எலிசபெத் உமக்கு ஒரு மகனைப் பெறுவாள். நீர் அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.</verse>
				<verse number="14">அவன் உமக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்பும் தருவான். அவனுடைய பிறப்பின் காரணமாக, அநேகர் மனமகிழ்ச்சியடைவார்கள்;</verse>
				<verse number="15">ஏனெனில் அவன் கர்த்தருடைய பார்வையில் உயர்வானவனாய் இருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை ரசத்தையோ மதுபானத்தையோ குடிக்கக் கூடாது. அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.</verse>
				<verse number="16">அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்கு திரும்பவும் கொண்டுவருவான்.</verse>
				<verse number="17">அவன் கர்த்தருக்கு முன்பாக எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் செல்வான். தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகளின் பக்கமாகத் திருப்புவான். கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானமான வழிக்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக ஆயத்தமாக்கப்பட்ட மக்களை அவருக்காகத் தயார் செய்வான்” என்றான்.</verse>
				<verse number="18">அப்போது சகரியா அந்த தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் வயோதிபனாய் இருக்கின்றேன். என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே” என்றார்.</verse>
				<verse number="19">அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் பிரசன்னத்தில் நிற்கின்ற காபிரியேல். உம்மிடம் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உமக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="20">ஆனாலும், நீரோ குறித்த காலத்தில் நிறைவேறப் போகின்ற என் வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இப்போதிலிருந்து இவையெல்லாம் நிகழும் நாள் வரைக்கும் நீர் பேச முடியாதவராக மௌனமாய் இருப்பீர்” என்றான்.</verse>
				<verse number="21">அதேவேளையில் சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மக்கள், அவர் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கின்றார் என யோசிக்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="22">அவர் வெளியே வந்தபோது, அவரால் அவர்களோடு பேச முடியவில்லை. அதனால் அவர் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் பேச முடியாதவராக இருந்தபடியால் அவர்களுடன் சைகை மூலமாக பேசினார்.</verse>
				<verse number="23">அவரது பணி செய்யும் காலம் முடிவடைந்தபோது, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.</verse>
				<verse number="24">இந்த நாட்களுக்குப் பின் அவரது மனைவி எலிசபெத் கருத்தரித்து, ஐந்து மாதங்களாக பிறர் கண்ணில் படாதிருந்தாள்.</verse>
				<verse number="25">அப்போது அவள், “கர்த்தரே இதைச் செய்தார். இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவு காட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.</verse>
				<verse number="26">ஆறாம் மாதத்தில், கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்ற பட்டணத்திலுள்ள ஒரு கன்னிப்பெண்ணிடம், காபிரியேல் தூதனை இறைவன் அனுப்பினார்.</verse>
				<verse number="27">அந்த கன்னிப்பெண்ணின் பெயர் மரியாள். அவள் தாவீதின் வழித்தோன்றலான யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள்.</verse>
				<verse number="28">அந்தத் தூதன் அவளிடம் வந்து, “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கின்றார்” என்றான்.</verse>
				<verse number="29">அவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்தவளாய், இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.</verse>
				<verse number="30">அப்போது அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.</verse>
				<verse number="31">நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.</verse>
				<verse number="32">அவர் உயர்வானவராய் இருப்பார். அதி உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.</verse>
				<verse number="33">அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவு பெறாது” என்றான்.</verse>
				<verse number="34">அப்போது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படி நடக்கும்? இன்னும் நான் கன்னியாய் இருக்கின்றேனே” என்றாள்.</verse>
				<verse number="35">அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார், அதி உன்னதமானவரின் வல்லமை உன்னை சூழ்ந்துகொள்ளும். எனவே பிறக்கப் போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், இறைவனின் மகன் என்றும் அழைக்கப்படுவார்.</verse>
				<verse number="36">உனது உறவினளான எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கின்றாள். கருத்தரிக்க முடியாதவள் என எண்ணப்பட்டவள் இப்போது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.</verse>
				<verse number="37">இறைவனால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை” என்றான்.</verse>
				<verse number="38">அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை. நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது தூதன் அவளை விட்டுச் சென்றான்.</verse>
				<verse number="39">அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு ஆர்வத்தோடு விரைந்து சென்றாள்.</verse>
				<verse number="40">அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் சென்று, எலிசபெத்துக்கு ஆசி கூறினாள்.</verse>
				<verse number="41">மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டதும், அவளுடைய வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. அப்போது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,</verse>
				<verse number="42">உரத்த குரலில், “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப் போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!</verse>
				<verse number="43">எனது ஆண்டவரின் தாய் என்னிடம் வர, நான் எவ்வளவாய் தயவு பெற்றேன்!</verse>
				<verse number="44">உமது வாழ்த்துதலின் சத்தம் கேட்டதுமே, எனது வயிற்றில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.</verse>
				<verse number="45">கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.</verse>
				<verse number="46">அப்போது மரியாள்: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.</verse>
				<verse number="47">என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.</verse>
				<verse number="48">ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்.</verse>
				<verse number="49">ஏனெனில் வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார். பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.</verse>
				<verse number="50">அவருக்குப் பயப்படுகின்றவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக இரக்கம் காண்பிக்கிறார்.</verse>
				<verse number="51">அவர் தமது வலிய கரத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை சிதறடித்தார்.</verse>
				<verse number="52">ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ உயர்த்தினார்.</verse>
				<verse number="53">பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.</verse>
				<verse number="54">ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் என்றென்றுமாக இரக்கம் காண்பிப்பேன் என,</verse>
				<verse number="55">அவர் நம்முடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவில்கொண்டு, தமது பணியாளனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்” என்று பாடினாள்.</verse>
				<verse number="56">மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதன்பின் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.</verse>
				<verse number="57">எலிசபெத்திற்கு பிள்ளை பெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.</verse>
				<verse number="58">அவளுடைய அயலவர்களும், உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.</verse>
				<verse number="59">எட்டாம் நாளில், பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்வதற்காக அயலவர்களும் உறவினர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே, சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.</verse>
				<verse number="60">ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.</verse>
				<verse number="61">அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினர்களுள் அந்தப் பெயருடைய எவரும் இல்லையே” என்றார்கள்.</verse>
				<verse number="62">பின்னர் அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறார் என்று அறிவதற்கு, அவரிடம் சைகையினால் கேட்டார்கள்.</verse>
				<verse number="63">அவர் ஒரு கற்பலகையைக் கேட்டு வாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினார்.</verse>
				<verse number="64">உடனே அவரது வாய் திறக்கப்பட்டு பேசத் தொடங்கி, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.</verse>
				<verse number="65">அயலவர்கள் எல்லோரும் திகிலடைந்தார்கள். இந்தக் காரியங்களைக் குறித்து யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="66">இதைக் கேள்விப்பட்ட எல்லோரும், “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்று சிந்தித்தார்கள். ஏனெனில், கர்த்தரின் கரம் அவனுடன் இருந்தது.</verse>
				<verse number="67">அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:</verse>
				<verse number="68">“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக! ஏனெனில் அவர் தம்முடைய மக்களைத் தேடி வந்து மீட்டுக்கொண்டார்.</verse>
				<verse number="69">அவர் தமது அடியவன் தாவீதின் குடும்பத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான வல்லமையான இரட்சணியக் கொம்பை எழுப்பியிருக்கிறார்.</verse>
				<verse number="70">இதை தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக நெடுங்காலத்திற்கு முன்பே அவர் சொல்லியிருந்தார்.</verse>
				<verse number="71">அதன்படி, நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,</verse>
				<verse number="72">அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய முற்பிதாக்களுக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கின்றார்.</verse>
				<verse number="73">மேலும், நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருக்கின்றபடி,</verse>
				<verse number="74">நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, அவருக்கு முன்பாகப் பயமின்றி பணி செய்யவும்,</verse>
				<verse number="75">நாம் உயிரோடிருக்கின்ற காலமெல்லாம் அப்பணியை பரிசுத்தத்தோடும் நீதியோடும் செய்யவும் நமக்கு வழியமைத்தார்.</verse>
				<verse number="76">“என் பிள்ளையே, நீயோ, அதி உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்று அழைக்கப்படுவாய்; ஏனெனில், நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி அவருக்கு முன்பாகப் போவாய்.</verse>
				<verse number="77">அவருடைய மக்களுக்கு, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதனால் கிடைக்கும் இரட்சிப்பின் அறிவைத் தெரிவிப்பாய்.</verse>
				<verse number="78">நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தினாலே, பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மிடம் வருகின்றது.</verse>
				<verse number="79">அது இருளில் வாழ்கின்றவர்களுக்கும், மரண இருளில் இருக்கின்றவர்களுக்கும் ஒளியைத் தந்து, நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்தும்.”</verse>
				<verse number="80">குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தான்; அவன் இஸ்ரயேலரின் முன் வெளியரங்கமாக வரும் காலம் வரைக்கும் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தான்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு எங்கும் குடிமதிப்பு எடுக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான்.</verse>
				<verse number="2">சீரியா நாட்டிற்கு சிரேனியு என்பவர் ஆளுநராய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிமதிப்பு இதுவேயாகும்.</verse>
				<verse number="3">எனவே ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்வதற்காக தத்தமது ஊர்களுக்குப் போனார்கள்.</verse>
				<verse number="4">அப்போது யோசேப்பும் கலிலேயாவிலுள்ள நாசரேத்துப் பட்டணத்திலிருந்து, யூதேயாவிலுள்ள தாவீதின் பட்டணமான பெத்லகேமுக்குச் சென்றான். ஏனெனில் அவன் தாவீதின் குடும்பத்தையும் அந்த வம்சத்தையும் சேர்ந்தவனாயிருந்தான்.</verse>
				<verse number="5">அவன் தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்டிருந்தவளான, கர்ப்பிணியாக இருந்த மரியாளையும் அழைத்துக்கொண்டு பதிவு செய்யும்படி சென்றான்.</verse>
				<verse number="6">அவர்கள் அங்கிருக்கையில் அவளுக்குப் பிரசவ நேரம் வந்தது;</verse>
				<verse number="7">அவள் தன்னுடைய முதல் பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்று, பிள்ளையைத் துணிகளினால் சுற்றி, தொழுவத்திலிருந்த தொட்டியில் கிடத்தினாள். ஏனெனில் விடுதியில் தங்குவதற்கு அவர்களுக்கு இடம் இருக்கவில்லை.</verse>
				<verse number="8">அன்றிரவு அருகேயிருந்த வயல் வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="9">கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்ததால் அவர்கள் மிகவும் பயந்தார்கள்.</verse>
				<verse number="10">ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், எல்லா மக்களுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இச்செய்தி எல்லா மக்களுக்கும் உரியதாகும்.</verse>
				<verse number="11">இன்று தாவீதின் பட்டணத்திலே, ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே ஆண்டவர், அவரே மேசியா.</verse>
				<verse number="12">துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தையை, தொழுவத்திலுள்ள தொட்டியில் கிடத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம்” என்றான்.</verse>
				<verse number="13">அப்போது திடீரென பரலோக தூதர்கள் ஒரு பெரும் கூட்டமாகப் படையெடுத்து, அந்தத் தூதனுடன் இணைந்து காட்சியளித்து,</verse>
				<verse number="14">“உன்னதத்தில் இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும். பூமியில் அவர் தயவு காட்டுகிற மனிதருக்கு சமாதானம் உண்டாகட்டும்” என்று இறைவனைத் துதித்தார்கள்.</verse>
				<verse number="15">அந்தத் தூதர் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குத் திரும்பிப் போன பின்பு, மேய்ப்பர் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் பெத்லகேமுக்குப் போய், நிகழ்ந்திருப்பதாகக் கர்த்தர் நமக்குச் சொல்லியிருக்கின்ற இந்தச் சம்பவத்தைப் பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="16">அப்படியே அவர்கள் விரைவாய் சென்று, மரியாளையும் யோசேப்பையும் தொழுவத்திலே கிடத்தப்பட்டிருந்த குழந்தையையும் கண்டார்கள்.</verse>
				<verse number="17">அவர்கள் குழந்தையைக் கண்ட பின்பு, அக்குழந்தையைக் குறித்து இறைதூதர்களால் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பரப்பினார்கள்.</verse>
				<verse number="18">மேய்ப்பர்கள் சொன்னதைக் கேட்ட எல்லோரும் வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="19">மரியாளோ இந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, ஆழ்ந்து யோசித்தாள்.</verse>
				<verse number="20">தங்களுக்கு சொல்லப்பட்டபடியே நடந்திருந்தபடியால், மேய்ப்பர்கள் தாங்கள் கண்டதும் கேட்டதுமான எல்லாவற்றையும் குறித்து, இறைவனைத் துதித்து மகிமைப்படுத்திக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்.</verse>
				<verse number="21">குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டிய எட்டாம் நாளிலே அவருக்கு இயேசு என்று பெயரிடப்பட்டது. தாயின் கர்ப்பத்தில் குழந்தை உருவாகும் முன்பே, அந்தப் பெயர் இறைவனின் தூதனால் கொடுக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="22">மோசேயின் நீதிச்சட்டத்தின்படி அவர்களுக்குரிய சுத்திகரிப்பின் காலம் முடிவடைந்ததும், யோசேப்பும் மரியாளும் குழந்தையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.</verse>
				<verse number="23">ஏனெனில் “ஒவ்வொரு முதற்பேறான ஆண் குழந்தையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்” என்று கர்த்தருடைய நீதிச்சட்டத்தில் எழுதியிருக்கிறது.</verse>
				<verse number="24">மேலும் கர்த்தருடைய நீதிச்சட்டத்தில் சொல்லப்பட்டபடியே “ஒரு சோடிப் புறாக்களை அல்லது, இரண்டு மாடப் புறாக் குஞ்சுகளை” பலியாகச் செலுத்தும் வகையில் அங்கு போனார்கள்.</verse>
				<verse number="25">அப்போது எருசலேமில் சிமியோன் எனப்பட்ட ஒருவர் இருந்தார்; அவர் நீதிமானும், இறைபக்தி உள்ளவரும், இஸ்ரயேலர்களுக்கு ஆறுதல் அளிப்பவரின் வருகைக்காகக் காத்திருக்கின்றவருமாய் இருந்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இருந்தார்.</verse>
				<verse number="26">எனவே, கர்த்தருடைய மேசியாவைக் காண முன் அவர் இறந்துபோக மாட்டார் என்று பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.</verse>
				<verse number="27">அன்று அவர் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலய வளாகத்துக்குள் வந்திருந்தார். குழந்தை இயேசுவுக்கு நீதிச்சட்ட வழக்கத்தின்படி செய்ய வேண்டியவைகளைச் செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை ஆலயத்திற்குள் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="28">அப்போது சிமியோன் அவரைத் தனது கையில் எடுத்து, இறைவனைத் துதித்துச் சொன்னதாவது:</verse>
				<verse number="29">“ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது பணியாளனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்போது அனுப்பும்.</verse>
				<verse number="30">ஏனெனில், எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன;</verse>
				<verse number="31">இந்த இரட்சிப்பை எல்லா மக்களும் காணும்படி, நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்.</verse>
				<verse number="32">இது யூதரல்லாத மற்றைய இனத்தவருக்கு வெளிப்படுத்துதலைக் கொடுக்கும் ஒளியாயிற்று. இதுவே உமது மக்களான இஸ்ரயேலரின் மகிமை” என்றார்.</verse>
				<verse number="33">குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="34">அப்போது சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தையின் தாயாகிய மரியாளுக்குச் சொன்னதாவது: “இஸ்ரயேலில் பலர் வீழ்வதற்கும், எழுச்சி அடைவதற்கும் காரணமாக இந்தக் குழந்தை நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர் பலரால் எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருப்பார்.</verse>
				<verse number="35">இதனால் அநேகருடைய இருதயத்தின் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும். உனது ஆத்துமாவையும் ஒரு வாள் ஊடுருவிச் செல்லும்” என்றார்.</verse>
				<verse number="36">ஆலயத்தில் அன்னாள் எனப்பட்ட ஒரு இறைவாக்கினளும் இருந்தாள். இவள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் மகள். இவள் மிகவும் வயது சென்றவள்; தனது திருமணத்திற்குப் பின் ஏழு வருடங்களே தனது கணவனுடன் வாழ்ந்திருந்தாள்.</verse>
				<verse number="37">அதன்பின் எண்பத்து நான்கு வயது வரைக்கும் அவள் விதவையாகவே இருந்தாள். அவள் ஒருபோதும் ஆலயத்தைவிட்டு விலகாமல், இரவும் பகலும் உபவாசத்துடனும் மன்றாடுதலுடனும் வழிபட்டுக் கொண்டிருந்தாள்.</verse>
				<verse number="38">அந்த வேளையில், அவள் அங்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, எருசலேமின் மீட்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடனும், அந்தக் குழந்தையைக் குறித்துப் பேசினாள்.</verse>
				<verse number="39">கர்த்தருடைய நீதிச்சட்டத்தின்படி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு, யோசேப்பும் மரியாளும் கலிலேயாவில் அவர்கள் வசித்து வந்த, தங்கள் சொந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="40">பிள்ளை வளர்ந்து, பலம் கொண்டு, இறையறிவோடு ஞானம் நிறைந்தவராய் இருந்தார்; இறைவனின் கிருபையும் அவர்மீது இருந்தது.</verse>
				<verse number="41">இயேசுவின் பெற்றோர், ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்கு எருசலேமுக்குப் போவது வழக்கம்.</verse>
				<verse number="42">இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, வழக்கத்தின்படியே அவர்கள் பண்டிகைக்குப் போனார்கள்.</verse>
				<verse number="43">பண்டிகை முடிந்து அவருடைய பெற்றோர் வீடு திரும்புகையில், சிறுவன் இயேசுவோ எருசலேமில் தங்கிவிட்டார். ஆனால் பெற்றோர் அதை அறியாதிருந்தார்கள்.</verse>
				<verse number="44">தங்களோடு வந்தவர்களுடன் அவரும் இருக்கின்றார் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் தங்களுடைய உறவினர் மத்தியிலும் நண்பர் மத்தியிலும் அவரைத் தேடத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="45">அவர்கள் இயேசுவைத் தேடியும் காணாதபோது, அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="46">மூன்று நாட்களுக்குப் பின் அவர் ஆலய வளாகத்தில் இருப்பதைக் கண்டார்கள். அவர் நீதிச்சட்ட ஆசிரியர்களுடன் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் இருந்தார்.</verse>
				<verse number="47">அவர் சொன்னதைக் கேட்ட எல்லோரும், அவருடைய அறிவாற்றலைக் குறித்தும், அவர் கொடுத்த பதில்களைக் குறித்தும் வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="48">அவருடைய பெற்றோர் அவரைக் கண்டபோது, அவர்களும் வியப்படைந்தார்கள். அவருடைய தாய் அவரிடம், “மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? உனது தகப்பனும் நானும் மிகுந்த கவலையுடன் உன்னைத் தேடிக் கொண்டிருந்தோமே” என்றாள்.</verse>
				<verse number="49">அதற்கு இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள், நான் எனது பிதாவின் வீட்டிலிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="50">அவர்களோ, அவர் தங்களுக்குச் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை.</verse>
				<verse number="51">பின்பு அவர் அவர்களோடு நாசரேத்திற்குப் போய், அங்கே அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். ஆனால் அவருடைய தாயோ, இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டாள்.</verse>
				<verse number="52">இயேசு ஞானத்திலும் சரீரத்திலும் விருத்தியடைந்தார்; இறைவனுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளர்ந்தார்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">ரோம பேரரசன் திபேரியு சீசரது ஆட்சியின் பதினைந்தாவது வருடத்தில் பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், ஏரோது கலிலேயாவை ஆளுகிற சிற்றரசனாகவும், அவனது சகோதரன் பிலிப்பு என்பவன் இத்துரேயா மற்றும் திராகோனித்து ஆகிய பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாகவும், லிசானியா என்பவன் அபிலேனே பகுதிகளை ஆளுகிற சிற்றரசனாகவும்,</verse>
				<verse number="2">அன்னாவும் காய்பாவும் தலைமை மதகுருக்களாகவும் இருந்தனர். அப்போது பாலைநிலத்தில் இருந்த சகரியாவின் மகன் யோவானுக்கு இறைவனுடைய வார்த்தை வந்தது.</verse>
				<verse number="3">அவன் யோர்தான் நதியைச் சுற்றியுள்ள நாட்டுப்புறம் எங்கும் சென்று, மக்கள் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு, அவர்கள் மனந்திரும்பி பெற வேண்டிய ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.</verse>
				<verse number="4">இதைப்பற்றி இறைவாக்கினன் ஏசாயாவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “பாலைநிலத்தில் கூப்பிடுகின்ற ஒருவனின் குரல் கேட்கின்றது. ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கென நேரான பாதைகளை உண்டுபண்ணுங்கள்,</verse>
				<verse number="5">பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், கோணலான வீதிகள் நேராகும். கரடுமுரடான வழிகள் செவ்வையாகும்,</verse>
				<verse number="6">மனுக்குலம் அனைத்தும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”</verse>
				<verse number="7">யோவான் தன்னிடம் ஞானஸ்நானம் பெறும்படி ஒன்றுகூடி வந்த மக்களுக்குச் சொன்னதாவது, “விரியன் பாம்புக் குட்டிகளே! வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களுக்கு எச்சரிக்கை செய்தது யார்?</verse>
				<verse number="8">நீங்கள் மனந்திரும்பியதுண்டானால், அதற்கேற்ற நற்கனியை வாழ்க்கையில் காண்பியுங்கள். ‘ஆபிரகாம் எங்கள் தகப்பனாய் இருக்கின்றார்’ என்று உங்களுக்குள்ளே சொல்லத் தொடங்காதிருங்கள். ஏனெனில், இந்தக் கற்களிலிருந்து ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று உங்களுக்குச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="9">கோடரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது; நல்ல கனி கொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்” என்றான்.</verse>
				<verse number="10">அப்போது கூடியிருந்த மக்கள் அவனிடம், “அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="11">யோவான் அதற்குப் பதிலாக, “இரண்டு உடைகளை வைத்திருப்பவன், உடைகள் இல்லாதவனுடன் பகிர்ந்துகொள்ளட்டும். உணவை வைத்திருக்கிறவனும் அப்படியே செய்யட்டும்” என்றான்.</verse>
				<verse number="12">வரி சேகரிக்கின்றவர்களும் ஞானஸ்நானம் பெறும்படி வந்தார்கள். அவர்கள் அவனிடம், “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="13">அவன், “சேகரிக்கும்படி உங்களுக்குச் சொல்லப்பட்ட தொகைக்கு மேல் எதையும் சேகரிக்க வேண்டாம்” என்று பதிலளித்தான்.</verse>
				<verse number="14">அப்போது சில இராணுவ வீரர்கள் அவனிடம், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அவன் அவர்களிடம், “மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்க வேண்டாம். எவர் மீதும் பொய்க் குற்றம் சுமத்த வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்துடன் திருப்தியாய் இருங்கள்” என்று பதிலளித்தான்.</verse>
				<verse number="15">மக்கள் மேசியாவுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்ததால், “யோவான்தான் மேசியாவாயிருப்பாரோ?” என்று தங்கள் மனதில் யோசித்தார்கள்.</verse>
				<verse number="16">யோவான் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “நான் உங்களுக்குத் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். என்னைப் பார்க்கிலும் மிகவும் வல்லமையுடைய ஒருவர் வருகின்றார். அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியற்றவன். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலும், நெருப்பினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.</verse>
				<verse number="17">தானியம் தூற்றுகின்ற உபகரணம் அவர் கையில் இருக்கின்றது. அவர் தமது கதிரடிக்கும் களத்தை அதனால் சுத்தம் செய்து, கோதுமையைத் தனது களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்வார். பதர்களையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப் போடுவார்” என்றான்.</verse>
				<verse number="18">யோவான் இன்னும் பல வார்த்தைகளால் அவர்களுக்குப் புத்திமதி சொல்லி, நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தான்.</verse>
				<verse number="19">அதேவேளை, சிற்றரசனான ஏரோது தனது சகோதரனின் மனைவி ஏரோதியாளை மணமுடித்திருந்ததனாலும், வேறு பல தீய காரியங்களை செய்ததனாலும் யோவான் ஏரோதைக் கண்டித்தான்.</verse>
				<verse number="20">இதனால் ஏரோது யோவானைச் சிறையில் அடைத்து, தான் செய்த தீய செயல்களுடன் இதையும் கூட்டிக் கொண்டான்.</verse>
				<verse number="21">இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டிருந்தபோது, இயேசுவும் வந்து ஞானஸ்நானம் பெற்றார். அவர் மன்றாடிக் கொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு,</verse>
				<verse number="22">பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய், அவர்மீது இறங்கினார். அப்போது பரலோகத்திலிருந்து ஒரு குரல்: “இவர் என் அன்புக்குரிய மகன், இவரில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று சொன்னது.</verse>
				<verse number="23">இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் சுமார் முப்பது வயதுடையவராய் இருந்தார். அவரை யோசேப்பின் மகன் என்றே மக்கள் கருதினர். யோசேப்பு ஏலியின் மகன்,</verse>
				<verse number="24">ஏலி மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன், லேவி மெல்கியின் மகன், மெல்கி யன்னாவின் மகன், யன்னா யோசேப்பின் மகன்,</verse>
				<verse number="25">யோசேப்பு மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா ஆமோசின் மகன், ஆமோஸ் நாகூமின் மகன், நாகூம் எஸ்லியின் மகன், எஸ்லி நங்காயின் மகன்,</verse>
				<verse number="26">நங்காய் மாகாத்தின் மகன், மாகாத் மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா சேமேயின் மகன், சேமேய் யோசேக்கின் மகன், யோசேக்கு யோதாவின் மகன்,</verse>
				<verse number="27">யோதா யோவன்னாவின் மகன், யோவன்னா ரேசாவின் மகன், ரேசா சொரொபாபேலின் மகன், சொரொபாபேல் சலாத்தியேலின் மகன், சலாத்தியேல் நேரியின் மகன்,</verse>
				<verse number="28">நேரி மெல்கியின் மகன், மெல்கி அத்தியின் மகன், அத்தி கோசாமின் மகன், கோசாம் எல்மோதாமின் மகன், எல்மோதாம் ஏரின் மகன்,</verse>
				<verse number="29">ஏர் யோசேயின் மகன், யோசே எலியேசரின் மகன், எலியேசர் யோரீமின் மகன், யோரீம் மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன்,</verse>
				<verse number="30">லேவி சிமியோனின் மகன், சிமியோன் யூதாவின் மகன், யூதா யோசேப்பின் மகன், யோசேப்பு யோனானின் மகன், யோனான் எலியாக்கீமின் மகன்,</verse>
				<verse number="31">எலியாக்கீம் மெலெயாவின் மகன், மெலெயா மயினானின் மகன், மயினான் மாத்தாத்தாவின் மகன், மாத்தாத்தா நாத்தானின் மகன், நாத்தான் தாவீதின் மகன்,</verse>
				<verse number="32">தாவீது ஈசாயின் மகன், ஈசாய் ஓபேத்தின் மகன், ஓபேத் போவாசின் மகன், போவாஸ் சல்மோனின் மகன், சல்மோன் நகசோனின் மகன்,</verse>
				<verse number="33">நகசோன் அம்மினதாபின் மகன், அம்மினதாப் ஆராமின் மகன், ஆராம் எஸ்ரோமின் மகன், எஸ்ரோம் பாரேஸின் மகன், பாரேஸ் யூதாவின் மகன்,</verse>
				<verse number="34">யூதா யாக்கோபின் மகன், யாக்கோபு ஈசாக்கின் மகன், ஈசாக்கு ஆபிரகாமின் மகன், ஆபிரகாம் தேராவின் மகன், தேரா நாகோரின் மகன்,</verse>
				<verse number="35">நாகோர் சேரூக்கின் மகன், சேரூக் ரெகூவின் மகன், ரெகூ பேலேக்கின் மகன், பேலேக் ஏபேரின் மகன், ஏபேர் சாலாவின் மகன்,</verse>
				<verse number="36">சாலா காயினானின் மகன், காயினான் அர்ப்பகசாத்தின் மகன், அர்ப்பகசாத் சேமின் மகன், சேம் நோவாவின் மகன், நோவா லாமேக்கின் மகன்,</verse>
				<verse number="37">லாமேக்கு மெத்தூசலாவின் மகன், மெத்தூசலா ஏனோக்கின் மகன், ஏனோக்கு யாரேத்தின் மகன், யாரேத் மகலாலெயேலின் மகன், மகலாலெயேல் கேனானின் மகன்,</verse>
				<verse number="38">கேனான் ஏனோஸின் மகன், ஏனோஸ் சேத்தின் மகன், சேத் ஆதாமின் மகன், ஆதாம் இறைவனின் மகன்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராய், யோர்தான் நதியிலிருந்து திரும்புகையில் ஆவியானவரால் பாலைநிலத்திற்கு வழிநடத்தப்பட்டார்.</verse>
				<verse number="2">அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில், அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் முடிந்தவுடன், அவர் பசியாயிருந்தார்.</verse>
				<verse number="3">பிசாசு அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.</verse>
				<verse number="4">அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினாலே மட்டும் உயிர் வாழ்வதில்லை’ என்று எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.</verse>
				<verse number="5">பிசாசு அவரை உயரமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நொடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான்.</verse>
				<verse number="6">பிசாசு அவரிடம், “இந்த அரசுகள் எல்லாவற்றின் அதிகாரத்தையும், மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன். ஏனெனில் இவை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் விரும்பினால் இவற்றை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும்.</verse>
				<verse number="7">எனவே நீர் என்னை ஆராதித்தால், இவையெல்லாம் உமக்குச் சொந்தமாகும்” என்றான்.</verse>
				<verse number="8">அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்று எழுதியிருக்கின்றதே” என்று பதிலளித்தார்.</verse>
				<verse number="9">பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி, “நீர் இறைவனின் மகனானால், இங்கிருந்து கீழே குதியும்.</verse>
				<verse number="10">ஏனெனில், “ ‘உம்மை கவனமாய் பாதுகாக்கும்படி, இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்;</verse>
				<verse number="11">உமது பாதம் கற்களின் மீது மோதாதபடி, அவர்கள் தமது கைகளினால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றான்.</verse>
				<verse number="12">அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.</verse>
				<verse number="13">பிசாசு இவ்விதமாக எல்லா சோதனைகளையும் முடித்த பின்பு, ஒரு சரியான தருணம் கிடைக்கும் வரை இயேசுவைவிட்டு விலகிச் சென்றான்.</verse>
				<verse number="14">இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன், கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். அவரைப்பற்றிய செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது.</verse>
				<verse number="15">அவர் அவர்களுடைய ஜெபஆலயங்களில் போதித்தார். எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்.</verse>
				<verse number="16">அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்குச் சென்றார். ஓய்வுநாளிலே, தமது வழக்கத்தின்படி அவர் ஜெபஆலயத்திற்குப் போய், அங்கே வேதவசனத்தை வாசிக்கும்படி எழுந்து நின்றார்.</verse>
				<verse number="17">அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச் சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதை விரித்து, பின்வரும் பகுதி எழுதப்பட்டிருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வாசித்ததாவது:</verse>
				<verse number="18">“கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கின்றார். ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, அவர் என்னை அபிஷேகம் செய்தார். கைதிகளுக்கு விடுதலையை அறிவிக்கவும், பார்வையற்றோருக்குப் பார்வை கிடைக்குமென்று அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,</verse>
				<verse number="19">கர்த்தருடைய தயவு நிறைந்த காலத்தைப் பிரசித்தப்படுத்தவுமே அவர் என்னை அனுப்பினார்.”</verse>
				<verse number="20">வாசித்த பின் அவர் அந்தப் புத்தகச் சுருளைச் சுருட்டி, பணியாளனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அமர்ந்தார். ஜெபஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன.</verse>
				<verse number="21">அப்பொழுது அவர் தமது உரையை ஆரம்பித்து, “நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறியது” என்றார்.</verse>
				<verse number="22">எல்லோரும் அவரைக் குறித்து நன்றாகப் பேசி, அவருடைய உதடுகளிலிருந்து வந்த கருணை நிறைந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஆனாலும் அவர்கள், “இவன் யோசேப்பின் மகன் அல்லவா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="23">இயேசு அவர்களிடம், “ ‘வைத்தியனே உன்னையே குணமாக்கிக் கொள்!’ என்ற பழமொழியை நிச்சயமாகவே நீங்கள் எனக்குச் சொல்வீர்கள். ‘கப்பர்நகூமில் நீ செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதை, உனது சொந்த ஊராகிய இங்கேயும் செய்’ என்றும் சொல்வீர்கள்” என்றார்.</verse>
				<verse number="24">பின்பு அவர்களிடம், “ஆயினும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், எந்த இறைவாக்கினனும் தனது சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.</verse>
				<verse number="25">எலியாவின் காலத்தில் மூன்றரை வருடங்களாக மழை வராமல் வானம் அடைபட்டு, இஸ்ரயேல் எங்கும் கடுமையான பஞ்சம் நிலவியபோது, அங்கே அநேக விதவைகள் இருந்தார்கள் என்பதை நான் நிச்சயமாகச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="26">ஆயினும் இஸ்ரயேலில் உள்ள அந்த விதவைகள் எவரிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. ஆனால் சீதோன் நாட்டிலுள்ள சாரிபாத் ஊரிலிருந்த விதவையினிடத்திற்கே அனுப்பப்பட்டார்.</verse>
				<verse number="27">இறைவாக்கினன் எலிசாவின் காலத்தில், இஸ்ரயேலில் பல தொழுநோயாளிகள் இருந்தார்கள். ஆயினும் அவர்களில் ஒருவனும் அதிலிருந்து எலிசாவினால் குணமாக்கப்படவில்லை; மாறாக சீரியாவைச் சேர்ந்த நாகமான் மட்டுமே குணமாக்கப்பட்டான்” என்றார்.</verse>
				<verse number="28">இதைக் கேட்டபோது, ஜெபஆலயத்திலிருந்த எல்லா மக்களும் கடுங் கோபமடைந்தார்கள்.</verse>
				<verse number="29">அவர்கள் எழுந்து பட்டணத்தைவிட்டு அவரைத் துரத்தி, அந்தப் பட்டணம் கட்டப்பட்டிருந்த மலையிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிடும்படி, மலையுச்சியின் ஓரத்திற்கு அவரைக் கொண்டுபோனார்கள்.</verse>
				<verse number="30">ஆனால் அவரோ, மக்கள் நடுவே நடந்து அங்கிருந்து சென்று விட்டார்.</verse>
				<verse number="31">பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு போய், ஓய்வுநாளிலே அங்குள்ள மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.</verse>
				<verse number="32">அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையனவாய் இருந்தன.</verse>
				<verse number="33">ஜெபஆலயத்திலே தீய ஆவியான பேயால் பீடிக்கப்பட்ட ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய் அழைத்து,</verse>
				<verse number="34">“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவே போய்விடும்; எங்களோடு உமக்கு என்ன வேலை? எங்களை அழிப்பதற்காகவா வந்திருக்கிறீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும். நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.</verse>
				<verse number="35">அதற்கு இயேசு, “பேசாதே! அவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டினார். அப்போது அந்த தீய ஆவி, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனைக் கீழே தள்ளிவிட்டு, அவனுக்கு காயம் ஏதும் உண்டாக்காமல் அவனைவிட்டு வெளியேறியது.</verse>
				<verse number="36">அப்போது எல்லா மக்களும் வியப்படைந்து, “இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும், வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார். அவையும் வெளியேறுகின்றனவே!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="37">அவரைப்பற்றிய இந்தச் செய்தி சுற்றுப்புறத்திலுள்ள பிரதேசம் எங்கும் பரவியது.</verse>
				<verse number="38">இயேசு ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமி கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு உதவி செய்யும்படி, அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.</verse>
				<verse number="39">இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலை விலகும்படி அதட்டினார். அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் எழுந்து, அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.</verse>
				<verse number="40">பொழுது சாயும் வேளையானபோது, மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்களை இயேசுவினிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அவர் தமது கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார்.</verse>
				<verse number="41">அத்துடன், பலரில் இருந்த பேய்களும், “நீர் இறைவனின் மகன்!” என்று சத்தமிட்டுக்கொண்டு அவர்களிலிருந்து வெளியேறின. அந்தப் பேய்கள் அவரே மேசியா என்று அறிந்திருந்தன. ஆகையால் அவை பேசுவதற்கு இடங்கொடாமல், அவர் அவற்றை அதட்டினார்.</verse>
				<verse number="42">அதிகாலை வேளையிலே இயேசு புறப்பட்டு, ஒரு தனிமையான இடத்திற்குச் சென்றார். மக்கள் அவரைத் தேடிக்கொண்டு, அவர் இருந்த இடத்திற்கு வந்தபோது, அவர் தங்களைவிட்டு வேறெங்கும் போகாதபடி, அவரைத் தங்களுடன் வைத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள்.</verse>
				<verse number="43">ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, “நான் மற்றப் பட்டணங்களில் உள்ளவர்களுக்கும் இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.</verse>
				<verse number="44">எனவே அவர் யூதேயாவிலுள்ள ஜெபஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்தும் நற்செய்தியைப் போதித்தார்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே நின்று கொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் ஒன்றுகூடி வந்தார்கள்.</verse>
				<verse number="2">அவர் கரையிலே இரண்டு படகுகளைக் கண்டார். மீனவர்கள் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="3">அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து சிறிது தூரம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டார். பின்பு அவர் படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதித்தார்.</verse>
				<verse number="4">அவர் பேசி முடித்த பின்பு சீமோனிடம், “படகைத் தண்ணீருள் ஆழமான இடத்திற்குக் கொண்டுபோய், மீன்களைப் பிடிக்க உன் வலைகளைப் போடு” என்றார்.</verse>
				<verse number="5">அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தோம், ஒன்றுமே பிடிபடவில்லை. ஆயினும் நீர் இப்படிச் சொல்வதனால், நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான்.</verse>
				<verse number="6">அவர்கள் அப்படிச் செய்தபோது, பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். அதனால் அவர்களுடைய வலைகள் கிழியத் தொடங்கின.</verse>
				<verse number="7">எனவே தங்களுக்கு வந்து உதவி செய்யும்படி, மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகளுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்ததும், அவர்களோடு சேர்ந்து இரண்டு படகுகளும் மூழ்கும் அளவுக்கு மீன்களினால் நிரப்பினார்கள்.</verse>
				<verse number="8">சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவம் நிறைந்த ஒரு மனிதன்!” என்றான்.</verse>
				<verse number="9">ஏனெனில் அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும், தாங்கள் இவ்வளவு திரளான மீன்களைப் பிடித்ததைக் கண்டு வியந்து, பயமடைந்தார்கள்.</verse>
				<verse number="10">அப்படியே, சீமோனின் பங்காளிகளான, செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியந்து, பயமடைந்தார்கள். அப்போது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவனாவாய்” என்றார்.</verse>
				<verse number="11">எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரைசேர்த்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.</verse>
				<verse number="12">இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், உடல் முழுவதும் தொழுநோயுள்ள ஒரு மனிதன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைக் குணமாக்கிச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று மன்றாடினான்.</verse>
				<verse number="13">அப்போது இயேசு தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்றார். உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்கியது.</verse>
				<verse number="14">அப்போது இயேசு அவனிடம், “நீ இதைக் குறித்து ஒருவருக்கும் சொல்லாமல், நேரே போய் மதகுருவுக்கு உன்னைக் காண்பித்து, உனது சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு அத்தாட்சியாய் இருக்கும்” என்று உத்தரவிட்டார்.</verse>
				<verse number="15">ஆயினும் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று. இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களிலிருந்து குணமடைவதற்கும், மக்கள் கூட்டங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள்.</verse>
				<verse number="16">ஆனால் இயேசுவோ அடிக்கடி அவர்களைவிட்டு விலகி, தனிமையான இடங்களுக்குப் போய், அங்கிருந்து மன்றாடினார்.</verse>
				<verse number="17">ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் யூதேயாவிலும் எருசலேமிலும் இருந்து வந்த, பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளைக் குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.</verse>
				<verse number="18">அப்போது சிலர், முடக்குவாதமுடைய ஒருவனை படுக்கையோடு தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு, அவர்கள் முயற்சி செய்தார்கள்.</verse>
				<verse number="19">ஆனாலும் மக்கள் அதிகமாய் கூடியிருந்தபடியால், அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின் மேல் ஏறி, கூரையின் ஓடுகள் வழியாக படுக்கையில் கிடந்த அவனை கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.</verse>
				<verse number="20">இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.</verse>
				<verse number="21">பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகின்ற இவன் யார்? இறைவனாலன்றி, யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="22">அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள்?</verse>
				<verse number="23">‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதோ, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதோ, எது இலகுவானது?</verse>
				<verse number="24">ஆனாலும், பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்” என்றார். எனவே அவர் அந்த முடக்குவாதக்காரனைப் பார்த்து, “நான் உனக்குச் சொல்கின்றேன், எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ” என்றார்.</verse>
				<verse number="25">உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு, இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குச் சென்றான்.</verse>
				<verse number="26">எல்லோரும் வியப்படைந்து, இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “இன்று நாங்கள் அதிசயமானவற்றைக் கண்டோம்!” என்றார்கள்.</verse>
				<verse number="27">இதன்பின்பு இயேசு வெளியே போகையில், வரி சேகரிக்கின்றவனான லேவி என்பவன் வரி சேகரிக்கும் இடத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.</verse>
				<verse number="28">லேவி எழுந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினான்.</verse>
				<verse number="29">பின்பு லேவி தன்னுடைய வீட்டில், இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்தளித்தான்; வரி சேகரிப்போரும், வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="30">அப்போது பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த நீதிச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் ஏன் வரி சேகரிப்போருடனும், பாவிகளுடனும் சேர்ந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="31">அதற்கு இயேசு அவர்களிடம், “நலமாய் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை. வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை.</verse>
				<verse number="32">நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்பும்படி நான் அழைக்க வந்தேன்” என்றார்.</verse>
				<verse number="33">சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள். பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கின்றார்கள். ஆனால் உம்முடைய சீடர்களோ, உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="34">அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, அவனுடைய விருந்தின நண்பர்களை உபவாசிக்க செய்ய உங்களால் முடியுமா?</verse>
				<verse number="35">ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார்.</verse>
				<verse number="36">அத்தோடு, அவர் அவர்களுக்கு இந்த விளக்க உதாரணத்தையும் சொன்னார்: “ஒருவனுமே ஒரு புதிய உடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்தெடுத்து, அதை ஒரு பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைப்பதில்லை. அப்படிச் செய்தால் புதிய உடையும் கிழியும், புதியதிலிருந்து அவன் கிழித்தெடுத்து தைத்த துண்டும் பழைய உடைக்குப் பொருந்தாது.</verse>
				<verse number="37">ஒருவனுமே புதிய திராட்சை ரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அவன் அப்படிச் செய்தால், புதிய திராட்சை ரசம், அந்த தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; திராட்சை ரசமும் வெளியே சிந்தி விடும், தோற்பைகளும் பாழாய்ப் போகும்.</verse>
				<verse number="38">ஆகவே, அப்படிச் செய்யக் கூடாது. புதிய திராட்சை ரசம் பாவிக்கப்படாத புதிய தோற்பைகளில் ஊற்றி வைக்கப்பட வேண்டும்.</verse>
				<verse number="39">பழைய திராட்சை ரசத்தைக் குடித்த எவரும், புதியதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள், ‘பழையதே நல்லது’ என்பார்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">ஒரு சபத் ஓய்வுநாளிலே, இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகப் போகையில் அவருடைய சீடர்கள் தானியக் கதிர்கள் சிலவற்றைப் பறித்து, தங்கள் கைகளால் தேய்த்து கோதுகளை அகற்றி, தானியங்களை உண்ணத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="2">அப்போது சில பரிசேயர்கள் அவர்களிடம், “நீதிச்சட்டத்தின்படி சபத் ஓய்வுநாளில் தடை விதிக்கப்பட்டதை ஏன் செய்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="3">அதற்கு இயேசு அவர்களிடம், “தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாயிருந்தபோது, அவர் என்ன செய்தார் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையா?</verse>
				<verse number="4">அவர் இறைவனுடைய வீட்டிற்குள் போய், அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை எடுத்தார்; நீதிச்சட்டத்தின்படி மதகுருக்கள் மட்டுமே உண்ணக் கூடிய அப்பத்தை அவர் உண்டதுடன், தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தார்” என்றார்.</verse>
				<verse number="5">மேலும் இயேசு அவர்களிடம், “மனுமகனே ஓய்வுநாளின் ஆண்டவர்” என்றார்.</verse>
				<verse number="6">இன்னுமொரு சபத் ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்திற்குள் போய் அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே வலதுகை ஊனமுற்ற ஒருவன் இருந்தான்.</verse>
				<verse number="7">பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும், இயேசு மீது குற்றம் சுமத்துவதற்கான ஒரு ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். எனவே அவர் ஓய்வுநாளில் அவனைக் குணமாக்குவாரோ என்று இயேசுவை குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="8">ஆனால் இயேசுவோ, அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, ஊனமுற்ற கையையுடையவனைப் பார்த்து, “நீ எழுந்து, எல்லோருக்கும் முன்பாக நில்” என்றார். அப்படியே அவன் எழுந்து நின்றான்.</verse>
				<verse number="9">அப்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் எனக்குப் பதிலளியுங்கள்; ஓய்வுநாளிலே நீதிச்சட்டத்தின்படி செய்யத் தகுந்தது எது? நன்மை செய்வதா அல்லது தீமை செய்வதா? ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="10">பின்பு அவர்கள் எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவர் அவனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் அப்படியே தன் கையை நீட்டினான். அவனுடைய கை முற்றிலும் குணமடைந்தது.</verse>
				<verse number="11">ஆனால் பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் கோபவெறியுடன், தாங்கள் இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று ஒருவரோடொருவர் ஆலோசிக்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="12">அந்நாட்களில், இயேசு மன்றாடுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். அங்கே இரவு முழுவதும் இறைவனை நோக்கி மன்றாடினார்.</verse>
				<verse number="13">விடிந்ததும், அவர் தமது சீடர்களைத் தம்மிடம் வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என பெயரிட்டார்; அவர்கள் யாரெனில்:</verse>
				<verse number="14">பேதுரு என அவர் பெயரிட்ட சீமோன், பேதுருவின் சகோதரன் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு,</verse>
				<verse number="15">மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, செலோத்தே என அழைக்கப்பட்ட சீமோன்,</verse>
				<verse number="16">யாக்கோபின் மகன் யூதா, துரோகியாய் மாறிய யூதாஸ் ஸ்காரியோத்து என்பவர்களே.</verse>
				<verse number="17">இயேசு அவர்களுடன் கீழே இறங்கிப் போய் சமவெளியான ஒரு இடத்தில் நின்றார். திரளான அவருடைய மற்றைய சீடர்களும், யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீரு, சீதோன் பட்டணங்களின் கரையோரங்களிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தினரும் அங்கே இருந்தார்கள்.</verse>
				<verse number="18">அவர்கள் அவர் சொல்வதைக் கேட்கவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமடையவும் வந்திருந்தார்கள். தீய ஆவிகளினால் துன்பப்பட்டவர்களும் குணமடைந்தார்கள்.</verse>
				<verse number="19">அவரிலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கியபடியினால், எல்லா மக்களும் அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்தார்கள்.</verse>
				<verse number="20">அப்போது அவர் தமது சீடர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “ஏழைகளாய் இருக்கின்ற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் இறைவனுடைய அரசு உங்களுக்கே உரியது.</verse>
				<verse number="21">இப்போது பசியாய் இருக்கின்ற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் நீங்கள் திருப்தியடைவீர்கள். இப்போது அழுகின்றவர்களாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சியால் சிரிப்பீர்கள்.</verse>
				<verse number="22">மனுமகனின் பொருட்டு மனிதர்கள் உங்களை வெறுக்கும்போதும், உங்களைப் புறக்கணிக்கும்போதும், உங்களை அவமதிக்கும்போதும், உங்களைத் தீமையானவர்கள் என்று தள்ளி விடும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="23">“அவை நடக்கும் அந்நாளிலே சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதியுங்கள். ஏனெனில், பரலோகத்தில் கிடைக்கப் போகும் உங்கள் வெகுமதி பெரியது. இந்த மக்களுடைய முற்பிதாக்களும் இறைவாக்கினரை அப்படித்தான் நடத்தினார்கள்.</verse>
				<verse number="24">“ஆனால், செல்வந்தர்களாய் இருக்கின்ற உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆறுதலைப் பெற்றுவிட்டீர்கள்.</verse>
				<verse number="25">நன்றாய் சாப்பிட்டு திருப்தியாய் இருக்கின்றவர்களே, உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் பட்டினியாய் இருப்பீர்கள். இப்போது சிரித்து மகிழ்கின்றவர்களே உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் புலம்பி அழுவீர்கள்.</verse>
				<verse number="26">எல்லா மனிதரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்களும் போலி இறைவாக்கினர்களை அப்படித்தான் புகழ்ந்தார்கள்.</verse>
				<verse number="27">“நான் சொல்வதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றவர்களுக்குச் சொல்கின்றேன்: உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள். உங்களை வெறுக்கின்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.</verse>
				<verse number="28">உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைத் துன்புறுத்துகின்றவர்களுக்காக மன்றாடுங்கள்.</verse>
				<verse number="29">ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவன் உங்கள் மேலாடையை எடுத்துக் கொண்டால், உங்களது உடையையும் எடுப்பதிலிருந்து அவனைத் தடுக்காதிருங்கள்.</verse>
				<verse number="30">உங்களிடம் கேட்கின்ற எல்லோருக்கும் கொடுங்கள். உங்களுக்கு உரியதை யாரேனும் எடுத்துக் கொண்டால், அதைத் திருப்பித் தரும்படி வற்புறுத்திக் கேளாதிருங்கள்.</verse>
				<verse number="31">மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.</verse>
				<verse number="32">“உங்களை அன்பு செய்வோரையே நீங்களும் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும்கூட தங்களை அன்பு செய்பவர்களை அன்பு செய்கின்றார்கள்.</verse>
				<verse number="33">உங்களுக்கு நன்மை செய்கின்றவர்களுக்கே நீங்களும் நன்மை செய்தால், உங்களுக்கு என்ன மேன்மை? பாவிகளும் அப்படிச் செய்கின்றார்களே.</verse>
				<verse number="34">மீண்டும் திருப்பிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு என்ன மேன்மை? கடனாகக் கொடுத்ததை முழுவதுமாக திரும்ப பெற்றுக்கொள்ளும்படி பாவிகளும் பாவிகளுக்கு கடன் கொடுக்கின்றார்களே.</verse>
				<verse number="35">ஆனால் நீங்களோ உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பிப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அவர்களுக்குக் கடன் கொடுங்கள். அப்போது உங்களுக்குக் கிடைக்கும் பிரதிபலன் பெரிதாயிருக்கும். நீங்கள் அதி உன்னதமான இறைவனின் பிள்ளைகளாயிருப்பீர்கள்; ஏனெனில், அவர் நன்றி கெட்டவர்களுக்கும், கொடுமையானவர்களுக்கும் தயவுள்ளவராய் இருக்கின்றாரே.</verse>
				<verse number="36">உங்கள் பிதா இரக்கமுள்ளவராக இருக்கின்றது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.</verse>
				<verse number="37">“மற்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்காதிருங்கள், அப்போது நீங்களும் நியாயத்தீர்ப்பு பெற மாட்டீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பு செய்யாதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட மாட்டீர்கள். மன்னியுங்கள், அப்போது நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.</verse>
				<verse number="38">கொடுங்கள், அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நிரம்பி வழியத்தக்கதாக, தாராளமான அளவினாலே அளக்கப்பட்டு, உங்கள் மடியில் உள்ள பையிலே போடப்படும். நீங்கள் எந்த அளவினால் அளக்கின்றீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” என்றார்.</verse>
				<verse number="39">மேலும், அவர் இந்த விளக்க உதாரணத்தைச் சொன்னார்: “பார்வையிழந்த ஒருவன் மற்றொரு பார்வையிழந்தவனுக்கு வழிகாட்ட முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள் அல்லவா?</verse>
				<verse number="40">பயிற்சி பெறுபவன் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைவிட மேலானவன் அல்ல, ஆனால் முழுமையாய் பயிற்சி பெற்ற ஒவ்வொருவனும் தனக்குப் பயிற்சி கொடுப்பவனைப் போல இருப்பான்.</verse>
				<verse number="41">“நீ உனது கண்ணிலுள்ள, மரக்கட்டையைக் கவனிக்கத் தவறி, உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பைப் பார்ப்பது ஏன்?</verse>
				<verse number="42">உன் கண்ணில் மரக்கட்டை இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்’ என எப்படிச் சொல்லலாம்? வெளிவேடக்காரனே! முதலில் உனது கண்ணிலுள்ள மரக்கட்டையை எடுத்துப் போடு. அப்போது உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக உன்னால் தெளிவாகப் பார்க்க முடியும்.”</verse>
				<verse number="43">“நல்ல மரம் எதுவும் பழுதான கனியைக் கொடுப்பதில்லை, பழுதான மரம் எதுவும் நல்ல கனியைக் கொடுப்பதில்லை.</verse>
				<verse number="44">ஒவ்வொரு மரமும் எப்படிப்பட்டது என்பதை அதன் கனியை வைத்து இனங்காணலாம். முட்புதர்களிலிருந்து ஒருவரும் அத்திப் பழங்களைச் சேகரிப்பதில்லை. முட்செடிகளிலிருந்து திராட்சைப் பழங்களைச் சேகரிப்பதுமில்லை.</verse>
				<verse number="45">நல்ல மனிதன் தன் உள்ளத்தில் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருக்கிற நன்மையிலிருந்து, நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான்; தீய மனிதன் தன் உள்ளத்தில் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருக்கிற தீமையிலிருந்து, தீய காரியங்களை வெளியே கொண்டுவருகின்றான். ஏனெனில், ஒருவனுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதையே அவனுடைய வாய் பேசும்.</verse>
				<verse number="46">“நான் சொல்வதைச் செய்யாமல், ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறீர்கள்?</verse>
				<verse number="47">என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைச் செயற்படுத்துகின்றவன், எதற்கு ஒப்பானவன் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்.</verse>
				<verse number="48">அவன் ஆழமாய்த் தோண்டி, கீழேயுள்ள கற்பாறையின் மேல் அத்திவாரமிட்டு, வீடு கட்டுகின்ற ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். வெள்ளம் வந்தபோது, நீரோட்டம் அந்த வீட்டின் மேல் மோதியது; ஆயினும் அது உறுதியாகக் கட்டப்பட்டிருந்ததால், அதை அசைக்க முடியவில்லை.</verse>
				<verse number="49">ஆனால் என் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றை நடைமுறைப்படுத்தாதவனோ, அத்திவாரமின்றி வெறும் தரை மீது வீட்டைக் கட்டிய மனிதனைப் போல் இருக்கின்றான். நீரோட்டம் அந்த வீட்டின் மேல் மோதியவுடனே, அது இடிந்து விழுந்து, முற்றிலும் அழிந்தது.”</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">இயேசுவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் சொல்லி முடித்த பின்பு, அவர் கப்பர்நகூமுக்குச் சென்றார்.</verse>
				<verse number="2">அங்கே நூற்றுக்குத் தளபதியின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தறுவாயில் இருந்தான். இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானின் மதிப்புக்குரியவனாய் இருந்தான்.</verse>
				<verse number="3">நூற்றுக்குத் தளபதி இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். எனவே இயேசு வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரிடம் கேட்டுக்கொள்வதற்காக, யூதர்களின் சமூகத் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பினான்.</verse>
				<verse number="4">அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவரிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டு, “நீர் இதை அந்த அதிகாரிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன்.</verse>
				<verse number="5">ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெபஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="6">எனவே இயேசு அவர்களுடன் போனார். நூற்றுக்குத் தளபதியின் வீட்டிற்குச் சமீபமாய் இயேசு வந்து கொண்டிருக்கையில், அவன் தனது நண்பர்களை அவரிடம் அனுப்பி, அவர்களுக்கூடாகச் சொன்னதாவது: “ஆண்டவரே! நீர் சிரமப்பட வேண்டாம், நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியுடையவன் அல்ல.</verse>
				<verse number="7">உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை கட்டளையிடும், அப்போது என் வேலைக்காரன் குணமடைவான்.</verse>
				<verse number="8">ஏனெனில், நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட ஒருவனாய் இருக்கின்றேன்; எனக்குக் கீழேயும் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் இவனைப் பார்த்து ‘போ’ என்றால் இவன் போகின்றான்; அவனைப் பார்த்து ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்.”</verse>
				<verse number="9">இயேசு இதைக் கேட்டபோது, அவனைக் குறித்து வியப்படைந்தவராய், தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும்கூட கண்டதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="10">அப்போது, இயேசுவிடம் அனுப்பப்பட்ட மனிதர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் குணமடைந்திருப்பதைக் கண்டார்கள்.</verse>
				<verse number="11">இதற்குப் பின்பு இயேசு, நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும், பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் போனார்கள்.</verse>
				<verse number="12">அவர் பட்டணத்து வாசலுக்குச் சமீபமாய் வந்தபோது மரணித்த ஒருவனை சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். ஒரு விதவைத் தாய்க்கு இவன் ஒரே மகன். அவளுடன் பட்டணத்திலிருந்து மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள்.</verse>
				<verse number="13">ஆண்டவர் அவளைக் கண்டபோது, அவள் மீது மனம் உருகி, “அழாதே” என்று சொன்னார்.</verse>
				<verse number="14">பின்பு அவர் போய், பாடையைத் தொட்டார். அதைச் சுமந்துகொண்டு நடந்தவர்கள் நின்றார்கள். அவர், “நான் உனக்குச் சொல்கின்றேன், வாலிபனே, எழுந்திரு!” என்றார்.</verse>
				<verse number="15">இறந்தவன் உயிர் பெற்று எழுந்து, பேசத் தொடங்கினான். இயேசு அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார்.</verse>
				<verse number="16">அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவி செய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள்.</verse>
				<verse number="17">இயேசு செய்தவற்றைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திலும் பரவியது.</verse>
				<verse number="18">யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரை அழைத்து,</verse>
				<verse number="19">“வரப் போகின்ற மேசியா நீர்தானா? இல்லாவிட்டால் இன்னொருவர் வரும்வரை எதிர்பார்த்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, ஆண்டவர் இயேசுவிடம் அவர்களை அனுப்பினான்.</verse>
				<verse number="20">அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப் போகின்ற மேசியா நீர்தானா? இல்லாவிட்டால் இன்னொருவர் வரும்வரை எதிர்பார்த்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள்.</verse>
				<verse number="21">அதேவேளை வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பீடிக்கப்பட்டிருந்ததான பலரை இயேசு குணமாக்கினார்; கண் பார்வையற்ற பலருக்கும் அவர் பார்வை கொடுத்தார்.</verse>
				<verse number="22">எனவே அவர் அந்த தூதுவர்களிடம், “நீங்கள் திரும்பிப் போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கின்றார்கள், தொழுநோயாளர் குணமடைகிறார்கள், செவிப்புலனற்றோர் கேட்கின்றார்கள், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.</verse>
				<verse number="23">என் பொருட்டு இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.</verse>
				<verse number="24">யோவானின் தூதுவர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களிடம் யோவானைக் குறித்து இயேசு பேசத் தொடங்கினார்: “எதைப் பார்க்க பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் ஆடும் ஒரு நாணற் புல்லைப் பார்க்கவா?</verse>
				<verse number="25">இல்லையென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடையணிந்த ஒரு மனிதனைப் பார்க்கவா? இதோ, விலையுயர்ந்த உடை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளில் அல்லவோ இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="26">அப்படியானால் எதைப் பார்ப்பதற்குப் போனீர்கள்? ஒரு இறைவாக்கினனையா? ஆம், அவர் ஒரு இறைவாக்கினனிலும் மேலானவர் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="27">இவனைக் குறித்தே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “ ‘உமக்கு முன்பாக என்னுடைய தூதுவனை அனுப்புவேன், அவன் உமக்கு முன்பாக உம்முடைய வழியை ஆயத்தப்படுத்துவான்.’</verse>
				<verse number="28">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இதுவரை பிறந்தவர்களுள் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை. ஆயினும் இறைவனுடைய அரசில் மிகச் சிறியவனாய் இருக்கின்றவன் யோவானிலும் பெரியவனாய் இருக்கின்றான்” என்றார்.</verse>
				<verse number="29">வரி சேகரிப்போர் உட்பட எல்லா மக்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, இறைவன் நீதியுள்ளவர் என்று ஏற்றுக்கொண்டார்கள்; ஏனெனில், அவர்கள் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள்.</verse>
				<verse number="30">ஆனால் பரிசேயரும் நீதிச்சட்ட நிபுணர்களுமோ, யோவானிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்களாய் தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள்.</verse>
				<verse number="31">இயேசு தொடர்ந்து கூறியதாவது, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்த, இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப் போல் இருக்கின்றார்கள்?</verse>
				<verse number="32">அவர்கள் சந்தை கூடும் இடங்களில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் அழைத்து, “ ‘நாங்கள் உங்களுக்காக சந்தோஷக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; நாங்கள் ஒப்பாரி பாடினோம், நீங்கள் அழவில்லை’ என்று சொல்கின்ற சிறுவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.</verse>
				<verse number="33">யோவான் ஸ்நானகன் நல்ல உணவை உண்ணாதவனும், திராட்சை ரசம் குடிக்காதவனுமாய் வந்தான். அவனைப் பார்த்து, ‘அவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்று சொல்கின்றீர்கள்.</verse>
				<verse number="34">மனுமகனாகிய நானோ நல்ல உணவை உண்பவனாகவும், பானம் பருகுகிறவனாகவும் வந்தேன். என்னைப் பார்த்து, ‘இவனோ உணவுப் பிரியன், குடிகாரன், வரி சேகரிப்போருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கின்றீர்கள்.</verse>
				<verse number="35">ஆயினும் ஞானம் சரியானது என்பது, அதை ஏற்று நடக்கின்றவர்கள் எல்லோராலும் நிரூபிக்கப்படும்” என்றார்.</verse>
				<verse number="36">பரிசேயரில் ஒருவன், தன்னுடன் விருந்து உண்ணும்படி இயேசுவை அழைத்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப் போய், பந்தியில் உட்கார்ந்திருந்தார்.</verse>
				<verse number="37">அந்தப் பட்டணத்தில் பாவ வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, வாசனைத் தைலம் நிறைந்த ஒரு வெள்ளைக் கல் குடுவையுடன் அவள் அங்கு வந்தாள்.</verse>
				<verse number="38">அவள், அவருக்குப் பின்னே அழுதுகொண்டு அவருடைய பாதத்தின் அருகே நின்று, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால் நனைக்கத் தொடங்கினாள். அதன்பின், அவள் அவர் பாதங்களைத் தன் தலைமுடியினால் துடைத்து, அவற்றை முத்தம் இட்டு, வாசனைத் தைலத்தை அவருடைய பாதங்களில் பூசினாள்.</verse>
				<verse number="39">அவரை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடும் இவள் யார், இவள் எப்படிப்பட்ட பெண் என்பதை அறிந்திருப்பாரே. இவள் ஒரு பாவியல்லவா” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.</verse>
				<verse number="40">இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். அவன், “போதகரே சொல்லும்” என்றான்.</verse>
				<verse number="41">அப்போது அவர், “வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒருவனிடம், இரண்டு பேர் கடன் பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு தினாரி பணம் கொடுக்க வேண்டியிருந்தது. மற்றவன் ஐம்பது தினாரி பணம் கொடுக்க வேண்டியிருந்தது.</verse>
				<verse number="42">இரண்டு பேரிடத்திலுமே திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே நீக்கிவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="43">அதற்கு சீமோன், “அதிக கடன் நீக்கப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ சரியாக நிதானித்துச் சொன்னாய்” என்றார்.</verse>
				<verse number="44">பின்பு அவர், அந்தப் பெண்ணின் பக்கமாகத் திரும்பி, சீமோனுக்குச் சொன்னதாவது: “நீ இந்தப் பெண்ணைப் பார்க்கின்றாய் அல்லவா? நான் உனது வீட்டிற்குள் வந்தேன், நீ என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ, தன்னுடைய கண்ணீரினால் என் பாதங்களை நனைத்து, தன் தலைமுடியினால் அவற்றைத் துடைத்தாள்.</verse>
				<verse number="45">நீ என்னை முத்தம் இடவில்லை, ஆனால் இந்தப் பெண்னோ, நான் இங்கு உள்ளே வந்ததிலிருந்து, என் பாதங்களை ஓயாமல் முத்தம் இட்டாள்.</verse>
				<verse number="46">நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவளோ, என் பாதங்களில் வாசனைத் தைலத்தை ஊற்றினாள்.</verse>
				<verse number="47">எனவே நான் உனக்குச் சொல்கின்றேன், இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. அதனால் இவள் என்மீது அதிகமாய் அன்பு செலுத்துகிறாள். ஆனால் சிறிதளவாய் மன்னிப்பைப் பெற்றவன், சிறிதளவாகவே அன்பு காட்டுகிறான்” என்றார்.</verse>
				<verse number="48">அதன்பின்பு இயேசு அவளிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.</verse>
				<verse number="49">அங்கு இருந்த மற்ற விருந்தாளிகள், “பாவங்களை மன்னிக்கும் இவர் யார்?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="50">இயேசு அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்துடனே போ” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">அதன்பின், இயேசு பட்டணம் பட்டணமாக, கிராமம் கிராமமாகப் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அந்தப் பன்னிரண்டு பேரும் அவருடனே போனார்கள்.</verse>
				<verse number="2">அத்துடன் தீய ஆவிகளின் பிடிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் குணமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பேய்கள் துரத்தப்பட்டிருந்த மகதலேனா என அழைக்கப்பட்ட மரியாளும் அவர்களுடன் இருந்தாள்.</verse>
				<verse number="3">ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசா என்பவனின் மனைவி யோவன்னாளும், சூசன்னாளும் தங்களுடைய வருமானத்திலிருந்து அவர்களுக்கு ஆதரவளித்து உதவி செய்த வேறு பல பெண்களும் அவருடன் இருந்தார்கள்.</verse>
				<verse number="4">பல்வேறு பட்டணங்களிலிருந்து, மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர், அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:</verse>
				<verse number="5">“ஒரு விவசாயி தனது விதைகளை விதைப்பதற்குச் சென்றான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில் சில விதைகள் பாதையருகே விழுந்து மிதியுண்டன, ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.</verse>
				<verse number="6">சில விதைகள் கற்பாறையின் மேல் விழுந்தன; அவை முளைத்தபோது ஈரம் இல்லாததனால், அப்பயிர்கள் வாடிப் போயின.</verse>
				<verse number="7">வேறு சில விதைகளோ முட்செடிகளின் இடையே விழுந்தன, அவை முளைத்து வளர்ந்தபோது, முட்களும்கூட வளர்ந்து பயிர்களை மூடி நெருக்கிவிட்டன.</verse>
				<verse number="8">இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு அதிகமான விளைச்சலைக் கொடுத்தன.” அவர் இதைச் சொல்லி முடித்த பின்பு, சத்தமாய் அழைத்து, “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.</verse>
				<verse number="9">பின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இந்த உவமையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="10">அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியம் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றவர்களுடனோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகின்றேன். இதனால் அவர்கள், “ ‘கண்டும் அதை அறியாதவர்களாகவும் கேட்டும் அதை புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.’</verse>
				<verse number="11">“இந்த உவமையின் அர்த்தமாவது: விதை இறைவனுடைய வார்த்தை.</verse>
				<verse number="12">பாதையருகே விதைகள் விழுந்ததானது, வார்த்தையைக் கேட்கும் மக்களில் சிலருக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடி பிசாசு வந்து, அவர்களின் இருதயத்திலிருந்து அந்த வார்த்தையை எடுத்து விடுகிறான்.</verse>
				<verse number="13">கற்பாறையின் மேல் விதைகள் விழுந்ததானது, வார்த்தையைக் கேட்கும் மக்களில் வேறு சிலருக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கும்போது மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாலும், வேரற்றவர்களாய் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் சிறிது காலம் விசுவாசிக்கின்றார்கள்; பரீட்சிக்கப்படும் காலத்திலே, விழுந்து போகின்றார்கள்.</verse>
				<verse number="14">முட்செடிகளுக்குள் விதைகள் விழுந்ததானது, வார்த்தையைக் கேட்ட மற்றும் சிலருக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில், தமது சொந்த வழியில் போய்க் கொண்டிருக்கும்போது, வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும் செல்வங்களினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு முதிர்ச்சியடையாது போகின்றார்கள்.</verse>
				<verse number="15">நல்ல நிலத்தில் விதைகள் விழுந்ததானதோ, நற்குணமுள்ள நல்ல உள்ளம் உள்ளவர்களுக்கு நடந்ததைக் குறிக்கிறது. அவர்கள் வார்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொண்டு, விடாமுயற்சியுடன் செயற்பட்டு, பலன் கொடுக்கின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="16">“எவரும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பானைக்குள்ளோ அல்லது கட்டிலின் கீழோ மறைத்து வைப்பதில்லை. உள்ளே வருகின்றவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை ஒரு விளக்குத் தண்டின் மேலேயே வைப்பார்கள்.</verse>
				<verse number="17">எனவே, மூடிமறைக்கப்பட்டது எதுவும் வெளிவராமல் இருக்க மாட்டாது. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் தெரியவராமலும், பகிரங்கமாகாமலும் இருக்க மாட்டாது.</verse>
				<verse number="18">ஆகையால் நீங்கள் கேட்கின்ற விதத்தைக் குறித்து அவதானமாய் இருங்கள். உள்ளவனுக்கு இன்னும் அதிகம் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்தோ, அவன் தன்னிடத்தில் இருக்கின்றதாக நினைத்துக் கொண்டிருப்பதுவும் எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.</verse>
				<verse number="19">ஒருமுறை இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைப் பார்ப்பதற்கு வந்தார்கள். ஆயினும் மக்கள் திரளாய்க் கூடியிருந்தபடியால், அவர்களால் அவருக்கு அருகே போக முடியவில்லை.</verse>
				<verse number="20">அப்போது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான்.</verse>
				<verse number="21">அதற்கு அவர், “இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றவர்களே, என் தாயும் என் சகோதரர்களுமாய் இருக்கின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="22">ஒரு நாள் இயேசு தமது சீடர்களைப் பார்த்து, “ஏரியின் மறுகரைக்குப் போவோம் வாருங்கள்” என்றார். அப்படியே அவர்கள் ஒரு படகில் ஏறிப் புறப்பட்டார்கள்.</verse>
				<verse number="23">அவர்கள் போய்க் கொண்டிருக்கையில், அவர் தூங்கிவிட்டார். அப்போது புயல் காற்று ஏரியின் மேல் வீசியது. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், அவர்கள் பெரும் ஆபத்துக்குள்ளானார்கள்.</verse>
				<verse number="24">அப்போது சீடர்கள், இயேசுவிடம் போய் அவரை எழுப்பி, “ஐயா, ஐயா, நாங்கள் மூழ்கப் போகின்றோம்” என்றார்கள். அவர் எழுந்து காற்றையும், கொந்தளிக்கும் தண்ணீரையும் கடிந்து கொண்டார்; புயல் தணிந்து, எல்லாம் அமைதியாயிற்று.</verse>
				<verse number="25">அப்போது அவர் தமது சீடர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவர் யாரோ? காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார். அவையும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன” என்று பயத்துடனும் வியப்புடனும் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="26">அவர்கள் கலிலேயாவின் மறுகரையிலுள்ள, கதரேனருடைய பிரதேசத்திற்குப் படகில் சென்றார்கள்.</verse>
				<verse number="27">இயேசு கரையில் இறங்கியபோது, அந்தப் பட்டணத்திலிருந்து பேய் பிடித்த ஒருவன், அவருக்கு எதிர்ப்பட்டான். அவன், நீண்ட காலமாக உடைகள் உடுத்தாதவனும், வீட்டில் வாழாதவனுமாய், கல்லறைகளிலேயே தங்கியிருந்தான்.</verse>
				<verse number="28">அவன் இயேசுவைக் கண்டபோது, கூச்சலிட்டு அவருடைய பாதத்தில் விழுந்து அவரிடம், “இயேசுவே, அதி உன்னதமான இறைவனின் மகனே, என்னிடமிருந்து உமக்கு என்ன வேண்டும்? நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன், என்னைத் துன்புறுத்த வேண்டாம்” என்று உரத்த சத்தமிட்டுச் சொன்னான்.</verse>
				<verse number="29">ஏனெனில், அவனைவிட்டு வெளியே வரும்படி, இயேசு அந்தத் தீய ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். பல முறை அது அவனை முற்றாகப் பிடித்திருந்தது. அதனால் அவனுடைய கையையும் காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதும்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து விடுவான். அந்தப் பேய், தனிமையான இடங்களுக்கு அவனை இழுத்துக்கொண்டு போனது.</verse>
				<verse number="30">இயேசு அவனிடம், “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். அவன் அதற்குப் பதிலாக, “நாங்கள் ஒரு படையணி” என்றான். ஏனெனில், பல பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன.</verse>
				<verse number="31">அவை அவரிடம், தங்களை பாதாளத்துக்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக் கேட்டன.</verse>
				<verse number="32">அங்கிருந்த மலைப் பக்கத்திலே, பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. அந்தப் பேய்கள், தாங்கள் அந்தப் பன்றிகளுக்குள்ளே போவதற்கு இயேசு அனுமதிக்க வேண்டும் என்று அவரைக் கெஞ்சிக் கேட்டன. அப்படியே அவர் அவற்றிற்கு அனுமதி கொடுத்தார்.</verse>
				<verse number="33">அப்போது, அந்தப் பேய்கள் அவனைவிட்டு வெளியேறி பன்றிகளுக்குள்ளே புகுந்துகொள்ளவே, அந்தப் பன்றிகள் மலைச்சரிவினூடாக, கூட்டமாய் கீழே விரைந்து ஓடி ஏரியில் விழுந்து மூழ்கின.</verse>
				<verse number="34">பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பன்றிகளுக்கு நடந்ததைக் கண்டபோது, ஓடிப் போய் பட்டணத்திலுள்ளவர்களுக்கும், நாட்டுப் புறத்திலுள்ளவர்களுக்கும் அதை அறிவித்தார்கள்.</verse>
				<verse number="35">என்ன நடந்தது என அறிவதற்கு மக்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய்களிலிருந்து விடுதலை பெற்றவன் புத்தி தெளிந்தவனாய், உடை அணிந்து, இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள்.</verse>
				<verse number="36">சம்பவித்ததைக் கண்டவர்கள், பேய் பிடித்திருந்தவன் எவ்விதமாய் குணமடைந்தான் என்று அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள்.</verse>
				<verse number="37">அப்போது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும், தங்களைவிட்டுப் போகும்படி இயேசுவை வேண்டிக் கொண்டார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் பயமடைந்திருந்தார்கள். எனவே, அவர் படகில் ஏறி அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார்.</verse>
				<verse number="38">பேய்களிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவோடு இணைந்து போக விரும்பி, அவரைக் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவரோ அதற்கு மறுத்து,</verse>
				<verse number="39">“நீ உன் வீட்டிற்குத் திரும்பிப் போய், இறைவன் உனக்கு செய்த எல்லாவற்றையும் எடுத்துக்கூறு” என்றார். அப்படியே அவன் புறப்பட்டு, இயேசு தனக்குச் செய்த எல்லாவற்றையும் பட்டணத்திலுள்ள எல்லோருக்கும் அறிவித்தான்.</verse>
				<verse number="40">இயேசு திரும்பி வந்தபோது, கூடியிருந்தவர்கள் அவரை வரவேற்றார்கள்; ஏனெனில், அவர்கள் எல்லோரும் அவரை எதிர்பார்த்து, காத்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="41">அப்போது ஜெபஆலயத் தலைவனான யவீரு என்னும் பெயருடைய ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கெஞ்சினான்.</verse>
				<verse number="42">ஏனெனில், அவனுடைய ஒரே மகளான பன்னிரண்டு வயதுடைய சிறுமி மரணத் தறுவாயில் இருந்தாள். இயேசு அவனுடன் போய்க் கொண்டிருக்கையில், ஒன்றுகூடிச் சென்ற மக்கள் அவரை நெருக்கியபடி வந்தார்கள்.</verse>
				<verse number="43">அக்கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவர்களிடம் செலவழித்தும், அவளை ஒருவராலும் குணமாக்க முடியவில்லை.</verse>
				<verse number="44">அவள் அவருக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலாடையின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது.</verse>
				<verse number="45">அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லோரும் அதை மறுத்தபோது, பேதுரு அவரிடம், “ஐயா, மக்கள் கூட்டமாய்க் கூடி உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே” என்றான்.</verse>
				<verse number="46">ஆனால் இயேசுவோ, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டிருக்கிறார்; ஏனெனில், என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார்.</verse>
				<verse number="47">அப்போது அந்தப் பெண், தான் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, நடுங்கிக் கொண்டு அவருடைய பாதத்தில் வந்து விழுந்தாள். தான் அவரைத் தொட்ட காரணத்தையும், தான் எவ்விதமாய் உடனடியாக குணமடைந்தாள் என்பதையும் அவள் எல்லா மக்களுக்கும் முன்பாகச் சொன்னாள்.</verse>
				<verse number="48">அப்போது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, சமாதானத்தோடு போ” என்றார்.</verse>
				<verse number="49">இயேசு தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவன் யவீருவின் வீட்டில் இருந்து ஒருவன் வந்தான். அவன் யவீருவிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றான்.</verse>
				<verse number="50">இயேசு இதைக் கேட்டதும் யவீருவிடம், “பயப்பட வேண்டாம்; நம்பிக்கையாயிரு, அவள் குணமடைவாள்” என்றார்.</verse>
				<verse number="51">அவர் யவீருவினுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது பேதுரு, யோவான், யாக்கோபு மற்றும் அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர, வேறு ஒருவரையும் தன்னுடன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.</verse>
				<verse number="52">இதற்கிடையில், அங்கிருந்த மக்கள் எல்லோரும் இறந்த சிறுமிக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழுவதை நிறுத்துங்கள். அவள் இறந்து போகவில்லை, தூங்குகிறாள்” என்றார்.</verse>
				<verse number="53">அவள் இறந்து போனதை அறிந்திருந்த அவர்கள், அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள்.</verse>
				<verse number="54">ஆனால் இயேசுவோ அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, உயிரோடு எழுந்திரு!” என்றார்.</verse>
				<verse number="55">அப்போது, அவளுடைய உயிர் அவளுக்குள் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார்.</verse>
				<verse number="56">அவளுடைய பெற்றோர் வியப்படைந்தார்கள். அவர் அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று கட்டளையிட்டார்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">இயேசு பன்னிரண்டு பேரையும் ஒன்றாக அழைத்து, பேய்களைத் துரத்தவும், நோய்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்.</verse>
				<verse number="2">அத்துடன், இறைவனுடைய அரசைப் பற்றிப் பிரசங்கிக்கவும், நோயுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களை அனுப்பினார்.</verse>
				<verse number="3">அவர் அவர்களிடம்: “பயணத்திற்கென்று ஒன்றையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். கைத்தடியையோ, பயணப் பையையோ, உணவையோ, பணத்தையோ, மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம்.</verse>
				<verse number="4">நீங்கள் எந்த வீட்டுக்குள் போனாலும் அந்த இடத்திலேயே தங்கியிருந்துவிட்டு, பின் அந்த பிரதேசத்தை விட்டுப் புறப்படுங்கள்.</verse>
				<verse number="5">மக்கள் உங்களை வரவேற்காது போனால், நீங்கள் அவர்களின் பட்டணத்தைவிட்டுப் போகும்போது, அவர்களுக்கு எதிரான சாட்சியாக உங்கள் கால் தூசியை உதறி விடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="6">அப்படியே அவர்கள் புறப்பட்டு, கிராமம் கிராமமாகச் சென்று எல்லா இடங்களிலும் நற்செய்தியை அறிவித்து மக்களைக் குணமாக்கினார்கள்.</verse>
				<verse number="7">சிற்றரசனான ஏரோது, நடந்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டான். யோவானே இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான் என்று சிலர் சொன்னதால், அவன் குழப்பமடைந்தான்.</verse>
				<verse number="8">வேறு சிலர் எலியா தோன்றியிருக்கிறார் என்றும், இன்னும் சிலர் முற்காலத்திலிருந்த இறைவாக்கினர் ஒருவர் உயிர் பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="9">ஆனால் ஏரோதுவோ, “நான் யோவானைச் சிரச்சேதம் செய்தேன். ஆயினும் இப்படிப்பட்ட காரியங்களைக் கேள்விப்படுகிறேனே, இவன் யார்?” என்று சொல்லி, இயேசுவைப் பார்க்க முயற்சி செய்தான்.</verse>
				<verse number="10">அப்போஸ்தலர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்ததை இயேசுவுக்கு அறிவித்தார்கள். அவர் அவர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தனித்திருப்பதற்காகப் பெத்சாயிதா எனப்பட்ட ஒரு பட்டணத்திற்கு சென்றார்.</verse>
				<verse number="11">ஆனால் மக்கள் அதை அறிந்து, கூட்டமாய் அவருக்குப் பின் சென்றார்கள். அவர் அவர்களை வரவேற்று, இறைவனுடைய அரசைப்பற்றி அவர்களுடன் பேசி, சுகவீனமாய் இருந்தோரை குணமாக்கினார்.</verse>
				<verse number="12">மாலை வேளையானபோது பன்னிரண்டு பேரும் அவரிடம் வந்து, “கூடியிருக்கும் இந்த மக்களை அனுப்பி விடும். அவர்கள் சுற்றுப்புறத்திலுள்ள கிராமங்களுக்கும் நாட்டுப் புறத்திற்கும் போய், உணவையும் இருப்பிடத்தையும் தேடிக்கொள்ளட்டும். ஏனெனில், நாம் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கின்றோம்” என்றார்கள்.</verse>
				<verse number="13">அதற்கு இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன. நாங்கள் போய் இந்த மக்களுக்கெல்லாம் உணவை வாங்கி வர வேண்டுமோ?” என்றார்கள்.</verse>
				<verse number="14">அங்கே ஆண்கள் மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தார்கள். ஆனாலும், அவர் தன்னுடைய சீடர்களிடம், “அவர்களை ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக உட்கார வையுங்கள்” என்றார்.</verse>
				<verse number="15">சீடர்களும் அப்படியே செய்தார்கள். எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.</verse>
				<verse number="16">அப்போது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, மேலே வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அவற்றைத் துண்டுகளாகப் பிட்டார். பின்பு அவர், அந்தத் துண்டுகளைச் சீடர்களிடத்தில் கொடுத்து, மக்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.</verse>
				<verse number="17">அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.</verse>
				<verse number="18">ஒருமுறை இயேசு தனிமையாக மன்றாடிக் கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும் அவருடனே இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கின்றார்கள்?” எனக் கேட்டார்.</verse>
				<verse number="19">அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கிறார்கள்; வேறு சிலர் உம்மை எலியா என்கிறார்கள்; இன்னும் சிலர் உம்மைக் குறித்து, வெகு காலத்திற்கு முன் வாழ்ந்த இறைவாக்கினரில் ஒருவர் உயிர் பெற்று வந்திருப்பதாகச் சொல்கின்றார்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="20">அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” எனக் கேட்டார். பேதுரு அதற்கு, “நீர் இறைவனின் மேசியா” என்றான்.</verse>
				<verse number="21">இயேசு அவர்களிடம், “இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்” என கண்டிப்பாய் எச்சரித்தார்.</verse>
				<verse number="22">மேலும் அவர் அவர்களிடம், “மனுமகன் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்; சமூகத் தலைவர்களாலும், தலைமை மதகுருக்களாலும், நீதிச்சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்றார்.</verse>
				<verse number="23">பின்பு அவர் அவர்கள் எல்லோரையும் பார்த்து, “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து, தினந்தோறும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்ற வேண்டும்.</verse>
				<verse number="24">ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகின்றவன் எவனும், அதை இழந்து போவான். என் பொருட்டு தன் உயிரை இழந்து விடுகின்றவனோ, அதைக் காத்துக்கொள்வான்.</verse>
				<verse number="25">ஒருவன் உலகம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமாவை இழந்து போனாலோ அல்லது பறிகொடுத்தாலோ, அதனால் அவனுக்கு நன்மை என்ன?</verse>
				<verse number="26">எவனாவது என்னைக் குறித்தும், என் வார்த்தையைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனுமகனும் தனது மகிமையிலும் பிதாவின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது, அவனைக் குறித்தும் வெட்கப்படுவார்.</verse>
				<verse number="27">“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர், இறைவனுடைய அரசைக் காணும் முன் மரணமடைய மாட்டார்கள்” என்றார்.</verse>
				<verse number="28">இயேசு இதைச் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப் பின், அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் தன்னுடனே அழைத்துக்கொண்டு, மன்றாடுவதற்கு ஒரு மலைக்குச் சென்றார்.</verse>
				<verse number="29">அவர் மன்றாடிக் கொண்டிருக்கையில், அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது. அவருடைய உடைகள் வெண்மையாய் மின்னின.</verse>
				<verse number="30">மோசே, எலியா ஆகிய இரண்டு பேரும் மகிமையான பிரகாசத்தில் தோன்றி இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="31">அவர்கள், எருசலேமில் விரைவாய் இயேசு நிறைவேற்றப் போகின்ற அவருடைய மரணத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="32">பேதுருவும் அவனோடு இருந்தவர்களும் கடுமையான தூக்க மயக்கத்திலிருந்தார்கள். அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது, அவருடைய மகிமையையும் அவருடன் நின்ற இரண்டு மனிதர்களையும் கண்டார்கள்.</verse>
				<verse number="33">அந்த மனிதர்கள் இயேசுவைவிட்டுப் புறப்படும்போது, பேதுரு அவரிடம், “ஐயா, நாம் இங்கே இருப்பது நல்லது, உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக நாம் மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றான். தான் சொல்வது என்னவென்று அறியாமல் அவன் அப்படிச் சொன்னான்.</verse>
				<verse number="34">அவன் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு மேகம் அவர்களை மூடிக்கொண்டது. அம்மேகம் அவர்களை சூழ்ந்து கொண்டபோது, அவர்கள் பயந்தார்கள்.</verse>
				<verse number="35">அப்போது மேகத்திலிருந்து, “இவர் என் மகன், நான் தெரிவு செய்தவர்; இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று ஒரு குரல் கேட்டது;</verse>
				<verse number="36">அந்தக் குரல் ஒலித்த பின்பு இயேசு மட்டுமே இருப்பதைக் கண்டார்கள். சீடர்களோ, தாங்கள் கண்டதை அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லவில்லை, அவர்கள் இதைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.</verse>
				<verse number="37">மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெரும் மக்கள் கூட்டம் அவரைச் சந்தித்தது.</verse>
				<verse number="38">மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை அழைத்து, “போதகரே, என் பிள்ளையைப் பார்க்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன். அவன் எனக்கு ஒரே பிள்ளை.</verse>
				<verse number="39">ஒரு ஆவி அவனைப் பிடித்துக்கொள்கின்றது. அப்போது அவன் திடீரென கூச்சலிடுகிறான்; அது அவனை வலிப்புக்குள்ளாக்கும்போது, அவனுடைய வாயில் நுரை தள்ளுகிறது. அது அவனை ஒருபோதும் விட்டுப்போகாமல் அவனை வேதனைப் படுத்துகிறது.</verse>
				<verse number="40">அதைத் துரத்தும்படி உமது சீடர்களிடம் கெஞ்சிக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை” என்றான்.</verse>
				<verse number="41">அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைச் சகித்துக்கொள்ளக் கூடும்? உன் மகனை இங்கே கொண்டுவா” என்றார்.</verse>
				<verse number="42">அச்சிறுவன் வந்துகொண்டிருக்கும் போதே, பேய் அவனை வலிப்புக்குள்ளாக்கி தரையில் தள்ளி வீழ்த்தியது. ஆனால் இயேசுவோ அந்த தீய ஆவியை அதட்டி, அச்சிறுவனைக் குணமாக்கி, அவனை அவனுடைய தகப்பனிடம் ஒப்படைத்தார்.</verse>
				<verse number="43">அவர்கள் எல்லோரும் இறைவனுடைய மகத்துவத்தைக் குறித்து வியப்படைந்தார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் குறித்து அனைவரும் வியப்படைந்தபோது, அவர் தமது சீடர்களிடம்,</verse>
				<verse number="44">“நான் உங்களுக்குச் சொல்லப் போவதைக் கவனமாய்க் கேளுங்கள்: மனுமகன் காட்டிக் கொடுக்கப்பட்டு, மனிதருடைய கைகளிலே ஒப்புக்கொடுக்கப்படுவார்” என்றார்.</verse>
				<verse number="45">ஆனால் அவர்களோ, அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ளவில்லை. அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்ததனால், அவர்களால் அதை அறிந்துகொள்ள முடியவில்லை. அதைக் குறித்து அவரிடம் கேட்கவும் பயந்தார்கள்.</verse>
				<verse number="46">சீடர்களுக்கிடையில், தங்களில் யார் பெரியவன் என்பதுபற்றி ஒரு வாக்குவாதம் எழுந்தது.</verse>
				<verse number="47">இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, ஒரு சிறு பிள்ளையைத் தூக்கியெடுத்து, தம் அருகே நிறுத்தினார்.</verse>
				<verse number="48">பின்பு அவர் அவர்களிடம், “இந்தச் சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கின்றான். உங்கள் எல்லோரிலும் சிறியவனாய் இருக்கின்றவன் எவனோ, அவனே பெரியவனாய் இருக்கின்றான்” என்றார்.</verse>
				<verse number="49">அப்போது யோவான் அவரிடம், “ஆண்டவரே, ஒருவன் உமது பெயரில் பேய்களைத் துரத்துவதை நாங்கள் கண்டோம். அவன் எங்களில் ஒருவனல்லாதபடியால், நாங்கள் அவனைத் தடுக்க முயற்சித்தோம்” என்றான்.</verse>
				<verse number="50">அதற்கு இயேசு, “அவனைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் நமக்கு விரோதமாய் இராதவன், நமது சார்பாகவே இருக்கின்றான்” என்றார்.</verse>
				<verse number="51">தாம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம் நெருங்கியபோது, இயேசு மனவுறுதியோடு எருசலேமை நோக்கிப் புறப்பட்டார்.</verse>
				<verse number="52">அவருக்கான ஆயத்தங்களைச் செய்யும்படி, அவர் தமக்கு முன்னால் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் சமாரியாவின் ஒரு கிராமத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="53">அவர் எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபடியால், அக்கிராமத்திலுள்ள மக்கள் அவரை வரவேற்கவில்லை.</verse>
				<verse number="54">அவருடைய சீடர்களான யாக்கோபும் யோவானும் இதைக் கண்டபோது அவரிடம், “ஆண்டவரே, எலியா செய்தது போல், இவர்களை அழிக்கும்படி நாங்கள் வானத்திலிருந்து நெருப்பை வரவழைக்க நீர் விரும்புகிறீரா?” என்றார்கள்.</verse>
				<verse number="55">ஆனால் இயேசுவோ அவர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்கள் எப்படிப்பட்ட ஆவிக்கு உரியவர்கள் என்று அறியாமல் இருக்கின்றீர்களே. ஏனெனில், மனுமகன் மனிதருடைய உயிர்களை அழிக்க வரவில்லை. அவற்றை இரட்சிக்கவே வந்தார்” என்று கண்டித்தார்.</verse>
				<verse number="56">அதன்பின் அவர்கள் வேறு கிராமத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="57">அவர்கள் வழியில் நடந்து போய்க் கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடம், “நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.</verse>
				<verse number="58">இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.</verse>
				<verse number="59">அவர் இன்னொருவனைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஆனால் அவனோ, “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனின் மரண அடக்கத்தை முடித்துவிட்டு வர அனுமதி தாரும்” என்றான்.</verse>
				<verse number="60">அப்போது இயேசு அவனிடம், “இறந்தவர்களை அடக்கம் செய்ய, இறந்தவர்கள் இருக்கின்றார்கள். நீ போய் இறைவனுடைய அரசைப் பிரசித்தப்படுத்து” என்றார்.</verse>
				<verse number="61">இன்னொருவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன்; ஆனால், நான் முதலில் திரும்பிப் போய், எனது குடும்பத்தவர்களிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்” என்றான்.</verse>
				<verse number="62">அதற்கு இயேசு, “கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னால் திரும்பிப் பார்க்கின்ற எவனும், இறைவனுடைய அரசின் பணிக்கு உகந்தவனல்ல” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">இதன்பின்பு ஆண்டவர், வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்தார். அவர்களை தாம் போக இருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும், இடத்திற்கும் தமக்கு முன்பாக இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.</verse>
				<verse number="2">அவர் அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கின்றது, ஆனால் வேலையாட்களோ மிகச் சிலராய் இருக்கின்றார்கள். ஆகவே அறுவடை செய்ய வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையின் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="3">புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போல, நான் உங்களை அனுப்புகிறேன்.</verse>
				<verse number="4">நீங்கள் பணப்பையையோ, பயணப் பையையோ, மேலதிகமாக காலணிகளையோ கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் ஆசி கூறவும் வேண்டாம்.</verse>
				<verse number="5">“நீங்கள் ஒரு வீட்டிற்குள் செல்லும்போது, ‘இந்த வீட்டிற்கு சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள்.</verse>
				<verse number="6">சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பி வரும்.</verse>
				<verse number="7">நீங்கள் அந்த வீட்டிலே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் சாப்பிட்டுக் குடியுங்கள். ஏனெனில், வேலையாள் தன் கூலிக்கு உரிமையுள்ளவனாய் இருக்கின்றான். நீங்கள் வீட்டிற்கு வீடு மாறிமாறிச் செல்ல வேண்டாம்.</verse>
				<verse number="8">“நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை உண்ணுங்கள்.</verse>
				<verse number="9">அங்குள்ள நோயாளிகளைக் குணமாக்குங்கள். ‘இறைவனுடைய அரசு உங்களருகே இருக்கின்றது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.</verse>
				<verse number="10">ஆனால், நீங்கள் ஒரு பட்டணத்திற்குப் போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று,</verse>
				<verse number="11">‘எங்கள் காலில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆயினும், இறைவனுடைய அரசு சமீபமாய் இருக்கின்றது என்பதை நீங்கள் நிச்சயித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்.</verse>
				<verse number="12">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்குக் கிடைக்கப் போவதைவிட, சோதோம் பட்டணத்திற்குக் கிடைக்கும் தண்டனையானது தாங்கக் கூடியதாக இருக்கும்.</verse>
				<verse number="13">“கோரோசீனே! உனக்கு ஐயோ பேரழிவு! பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ பேரழிவு! உங்களிடையே செய்யப்பட்ட அற்புதங்கள் தீரு, சீதோன் பட்டணங்களில் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் எப்பொழுதோ மனந்திரும்பி, துக்க உடை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்திருப்பார்கள்.</verse>
				<verse number="14">ஆனாலும் நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட, தீருவுக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனை தாங்கக் கூடியதாக இருக்கும்.</verse>
				<verse number="15">கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளத்திற்கே தாழ்த்தப்படுவாய்.</verse>
				<verse number="16">“நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவன், நான் சொல்வதைக் கேட்டு நடக்கின்றவனாய் இருக்கின்றான்; உங்களைப் புறக்கணிக்கின்றவன் என்னைப் புறக்கணிக்கின்றான்; என்னைப் புறக்கணிக்கிறவன் என்னை அனுப்பியவரைப் புறக்கணிக்கிறான்” என்றார்.</verse>
				<verse number="17">அந்த எழுபத்திரண்டு பேரும் அப்படியே போய், மனமகிழ்ச்சியுடனே திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பேய்களும் எங்களுக்குக் கீழ்ப்படிகின்றன” என்றார்கள்.</verse>
				<verse number="18">அவர் அதற்கு மறுமொழியாக, “ஆம்; சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப் போல் விழுவதை நான் கண்டேன்.</verse>
				<verse number="19">பாம்புகளையும் தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்வதற்கும் நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவுமே உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது.</verse>
				<verse number="20">ஆயினும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிவதைப்பற்றி மகிழ்ச்சியடைய வேண்டாம். உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டதைக் குறித்தே மகிழ்ச்சியடையுங்கள்” என்றார்.</verse>
				<verse number="21">அவ்வேளையில் இயேசு, பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தால் நிறைந்தவராய், “பிதாவே, பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறு பிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், நான் உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.</verse>
				<verse number="22">“என் பிதாவினால் எல்லாமே என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பிதாவைத் தவிர, வேறு ஒருவனும் மகன் யார் என்று அறிய மாட்டான். மகனைத் தவிர, வேறு ஒருவனும் பிதா யாரென்றும் அறிய மாட்டான். பிதாவை வெளிப்படுத்த யாரையெல்லாம் மகன் தெரிவு செய்கின்றாரோ, அவர்களைத் தவிர வேறு ஒருவரும் பிதாவை அறிய மாட்டார்கள்” என்றார்.</verse>
				<verse number="23">பின்பு அவர் தமது சீடர்களின் பக்கமாய்த் திரும்பிப் பார்த்து, தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சொன்னதாவது: “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை.</verse>
				<verse number="24">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காணுகின்றவற்றைக் காண விரும்பினார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பினார்கள். ஆனாலும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.”</verse>
				<verse number="25">நீதிச்சட்ட நிபுணன் ஒருவன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று, “போதகரே, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டான்.</verse>
				<verse number="26">அதற்கு அவர், “நீதிச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ அதில் வாசிப்பவை எவை?” என்று கேட்டார்.</verse>
				<verse number="27">அதற்கு அவன், “உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக. அத்துடன், நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாய் இரு என்பதே” எனப் பதிலளித்தான்.</verse>
				<verse number="28">அப்போது இயேசு அவனிடம், “நீ சரியாக பதில் சொன்னாய். அப்படியே செய். அப்போது நீ வாழ்வடைவாய்” என்றார்.</verse>
				<verse number="29">ஆனால் அவனோ தொடர்ந்தும், தன் எண்ணம் சரியெனக் காட்ட விரும்பி, “என் அயலவன் யார்?” என்று இயேசுவிடம் கேட்டான்.</verse>
				<verse number="30">அதற்கு இயேசு அவனிடம், “ஒருவன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போய்க் கொண்டிருந்தான். அப்போது அவன் கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைக் களைந்து, அவனை அடித்து, குற்றுயிராய்விட்டுப் போனார்கள்.</verse>
				<verse number="31">ஒரு மதகுரு அதே வழியாய் போய்க் கொண்டிருந்தான், அவன் அந்த மனிதனைக் கண்டபோது, மறுபக்கமாய் போய் அவனைவிட்டு விலகிச் சென்றான்.</verse>
				<verse number="32">அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அந்த மனிதனைக் கண்டபோது, மறுபக்கமாய் போய், அவனைவிட்டு விலகிச் சென்றான்.</verse>
				<verse number="33">ஆனால் அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன், அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டபோது, அவன்மீது அனுதாபம் கொண்டான்.</verse>
				<verse number="34">அவன் அந்த மனிதனிடம் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை ரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின் மேல் கிடத்தி, ஒரு விடுதிக்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான்.</verse>
				<verse number="35">மறுநாள் அவன் இரண்டு தினாரி பணத்தை விடுதியின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகின்றபோது, நீ ஏதாவது அதிகமாய் செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.</verse>
				<verse number="36">“இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அந்த மனிதனுக்கு, அயலவனாய் இருந்தது யாரென்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="37">அதற்கு நீதிச்சட்ட நிபுணன், “அவன்மீது இரக்கம் காட்டியவனே” என்றான். அப்போது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார்.</verse>
				<verse number="38">இயேசுவும் அவருடைய சீடர்களும் தங்கள் பயணத்தைத் தொடர்கையில், அவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் வரவேற்று ஏற்றுக்கொண்டாள்.</verse>
				<verse number="39">அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் ஆண்டவருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.</verse>
				<verse number="40">ஆனால் மார்த்தாளோ, அதிக வேலைப் பளுவினால் வருந்தி, இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டதைப்பற்றி உமக்கு கரிசனையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள்.</verse>
				<verse number="41">அதற்கு ஆண்டவர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ பல காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பிப் போய் இருக்கின்றாய்.</verse>
				<verse number="42">ஆனாலும் அவசியமானது ஒன்றே. மரியாள் தன்னிடமிருந்து எடுபடாத சிறப்பானதைத் தெரிந்தெடுத்திருக்கிறாள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">ஒரு நாள் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மன்றாடிக் கொண்டிருந்தார். அவர் மன்றாடி முடித்தபோது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, யோவான் தனது சீடர்களுக்கு மன்றாடக் கற்றுக் கொடுத்தது போல, நீரும் எங்களுக்கு மன்றாடக் கற்றுத் தாரும்” என்றான்.</verse>
				<verse number="2">அப்போது அவர், “நீங்கள் மன்றாடும்போது சொல்ல வேண்டியது: “ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உமது அரசு வருவதாக. உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக.</verse>
				<verse number="3">எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்.</verse>
				<verse number="4">எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். ஏனெனில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிக்கின்றோமே. எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளும்’ ” என்பதே.</verse>
				<verse number="5">அதன்பின்பு அவர் அவர்களிடம், “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருந்தால் அவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு.</verse>
				<verse number="6">ஏனெனில், பயணம் போய்க் கொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால்,</verse>
				<verse number="7">அப்போது உள்ளே இருக்கின்றவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டு விட்டது. என் பிள்ளைகளும் என்னுடன் படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ?</verse>
				<verse number="8">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் காரணமாக எழுந்து, அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும்கூட, விடாப்பிடியாக கேட்ட அவனது துணிச்சலின் காரணமாக எழுந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.</verse>
				<verse number="9">“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டுகொள்வீர்கள்; கதவைத் தட்டுங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.</verse>
				<verse number="10">ஏனெனில், கேட்கின்ற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான்; தேடுகிறவன் கண்டுகொள்கின்றான்; கதவைத் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படுகிறது.</verse>
				<verse number="11">“உங்களில் எந்த தகப்பனாவது, மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா?</verse>
				<verse number="12">அல்லது ஒரு முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?</verse>
				<verse number="13">தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!” என்றார்.</verse>
				<verse number="14">ஒரு நாள் இயேசு, வாய் பேச இயலாத ஒரு பேயை ஒருவனிடமிருந்து துரத்தினார். அவனிலிருந்த பேய் வெளியேறியபோது, பேச முடியாமல் இருந்த அவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக் கண்டு வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="15">ஆனாலும் அவர்களில் சிலர், “பேய்களின் தலைவனான பெயெல்செபூலைக் கொண்டே இவன் பேய்களைத் துரத்துகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="16">வேறு சிலர் அவரைச் சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள்.</verse>
				<verse number="17">இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கின்ற எந்த அரசும் பாழாய்ப் போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கின்ற எந்தக் குடும்பமும் விழுந்து போகும்.</verse>
				<verse number="18">சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், அவனுடைய அரசு எப்படி நிலைத்து நிற்கும்? நான் பெயெல்செபூலைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்கின்றீர்களே,</verse>
				<verse number="19">நான் பெயெல்செபூலைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறேன் என்றால், உங்களைப் பின்பற்றுகின்றவர்கள் யாரைக்கொண்டு பேய்களைத் துரத்துகிறார்கள்? ஆகவே அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.</verse>
				<verse number="20">ஆனால், நான் பேய்களை இறைவனுடைய விரலினால் துரத்துகிறபடியால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்திருக்கிறது என்பது தெளிவாகின்றது.</verse>
				<verse number="21">“வலிமை மிக்க ஒருவன், ஆயுதம் தாங்கியவனாய் தன் மாளிகையைக் காவல் செய்யும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும்.</verse>
				<verse number="22">ஆனால், இவனைப் பார்க்கிலும் வலிமையுள்ள வேறொருவன், இவன்மீது தாக்குதலை மேற்கொள்ளும்போதோ, இவன் நம்பியிருந்த ஆயுதங்களைப் பறித்துச் செல்வதோடு, இவனிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் பிறருக்கு பங்கிட்டுக் கொடுப்பான்.</verse>
				<verse number="23">“என்னோடு கூடவே இராதவன், எனக்கு விரோதமாய் இருக்கின்றான். என்னுடன் இணைந்து மக்களை ஒன்றுசேர்க்காதவன், அவர்களைச் சிதறடிக்கிறான்.</verse>
				<verse number="24">“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வரண்ட இடங்களுக்கூடாகப் போய், இளைப்பாற இடம் தேடுகிறது; ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாததால், ‘நான் விட்டுப் புறப்பட்டு வந்த வீட்டிற்கே திரும்பிப் போவேன்’ என்று சொல்கின்றது.</verse>
				<verse number="25">அது அந்த வீட்டிற்கு வரும்போது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்குபடுத்தப் பட்டிருப்பதைக் காண்கின்றது.</verse>
				<verse number="26">எனவே அது போய், தன்னைப் பார்க்கிலும் கொடிதான வேறு ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து, வீட்டிற்குள் புகுந்து அவையெல்லாம் அங்கேயே வசிக்கும். அதனால் அந்த மனிதனுடைய பிந்திய நிலைமை, அவனது முந்திய நிலைமையைவிட மோசமானதாக மாறும்” என்றார்.</verse>
				<verse number="27">இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் தனது குரலை உயர்த்தி அவரிடம், “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.</verse>
				<verse number="28">அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகின்றவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.</verse>
				<verse number="29">மக்கள் இன்னும் அதிகமாய் ஒன்றுகூடி வந்தபோது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “இவர்கள் ஒரு கொடிய தலைமுறையினர். இவர்கள் ஒரு அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை.</verse>
				<verse number="30">நினிவே பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யோனா அடையாளமாய் இருந்தது போல, இந்தத் தலைமுறையினருக்கு மனுமகன் அடையாளமாய் இருப்பார்.</verse>
				<verse number="31">நியாயத்தீர்ப்பின்போது தென்னாட்டு அரசியும்கூட, இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவாள்; ஏனெனில், அவள் பூமியின் மிகத் தொலைவிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாள். ஆனால் இப்பொழுதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார்.</verse>
				<verse number="32">நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார்” என்றார்.</verse>
				<verse number="33">“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைவான ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகின்றவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்.</verse>
				<verse number="34">உங்களுடைய கண் உங்கள் உடலின் விளக்காய் இருக்கின்றது. உங்களுடைய கண்கள் நல்லதாய் இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாய் இருக்கும். ஆனால் அவை கெட்டுப்போய் இருந்தால், உங்கள் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும்.</verse>
				<verse number="35">ஆகவே, உங்களுக்குள்ளே இருக்கும் வெளிச்சம் இருளடையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="36">உங்கள் உடலின் எந்தப் பகுதியேனும் இருளடையாமல் முழுவதும் பிரகாசமாக இருந்தால், ஒரு விளக்கின் வெளிச்சமானது உங்களுக்குப் பிரகாசத்தைத் தருவது போல், உங்களுடைய முழு உடலும் வெளிச்சம் உடையதாய் இருக்கும்” என்றார்.</verse>
				<verse number="37">இயேசு பேசிக் கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உண்பதற்கு வரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று உணவுப் பந்தியில் உட்கார்ந்தார்.</verse>
				<verse number="38">உண்பதற்கு முன்னதாக, இயேசு தம்முடைய கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியப்பட்டான்.</verse>
				<verse number="39">அப்போது ஆண்டவர் அவனிடம், “பரிசேயரே, நீங்களோ கிண்ணங்கள் மற்றும் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கின்றீர்கள். ஆனால், உங்களுடைய உட்புறமோ பேராசையினாலும், கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது.</verse>
				<verse number="40">மூடர்களான மக்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?</verse>
				<verse number="41">வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கு மாறாக, உள்ளே இருப்பதை ஏழைகளுக்கு கொடுங்கள். அப்போது அனைத்துமே உங்களுக்கு சுத்தமாக இருக்கும்.</verse>
				<verse number="42">“பரிசேயரே, உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறி வகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் நியாயத்தையும், இறை அன்பையும், அலட்சியம் செய்கின்றீர்கள். இவைகளையே நீங்கள் செய்திருக்க வேண்டும். அதேவேளை, முன்பு செய்தவற்றையும் கைவிடக் கூடாது.</verse>
				<verse number="43">“பரிசேயரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் நீங்கள் ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களையும் பெற விரும்புகிறீர்கள்.</verse>
				<verse number="44">“உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில், நீங்கள் அடையாளச் சின்னம் இல்லாத கல்லறைகளைப் போல் இருக்கின்றீர்கள். ஆகவே, அது என்னவென்பதை அறியாமல், மனிதர்கள் அதன்மீது நடந்து போகின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="45">நீதிச்சட்ட அறிஞரில் ஒருவன் அவரிடம், “போதகரே, நீர் இவற்றைச் சொல்கின்றபோது, எங்களையும் நிந்திக்கிறீர்” என்றான்.</verse>
				<verse number="46">அதற்கு இயேசு, “நீதிச்சட்ட அறிஞர்களே, உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில் மக்களால் சுமக்க முடியாத சுமைகளை நீங்கள் அவர்கள்மீது சுமத்துகிறீர்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்கென, நீங்களோ உங்கள் ஒரு விரலைக்கூட அசைப்பதில்லை.</verse>
				<verse number="47">“உங்களுக்கு ஐயோ பேரழிவு! ஏனெனில், உங்கள் முற்பிதாக்கள் கொலை செய்த இறைவாக்கினர்களுக்கு நீங்கள் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.</verse>
				<verse number="48">எனவே உங்கள் முற்பிதாக்கள் செய்ததை நீங்களும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்று இவ்விதமாய்ச் சாட்சி கொடுக்கின்றீர்கள்; அவர்கள் இறைவாக்கினர்களைக் கொன்றார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.</verse>
				<verse number="49">இதன் காரணமாகவே, இறைவன் தம்முடைய ஞானத்தின்படி, ‘நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், அப்போஸ்தலர்களையும் அனுப்புவேன். அவர்களில் சிலரை, இவர்கள் கொலை செய்வார்கள். மற்றவர்களையோ இவர்கள் கடுமையாய் துன்புறுத்துவார்கள்’ என்று சொல்லி இருக்கின்றார்.</verse>
				<verse number="50">ஆகையால் உலகம் தொடங்கியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவருடைய இரத்தத்திற்கும், இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும்.</verse>
				<verse number="51">அவ்விதமே ஆபேலுடைய இரத்தம் முதற்கொண்டு, ஆலய பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலை செய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும் இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="52">“நீதிச்சட்ட அறிஞரே உங்களுக்கு ஐயோ பேரழிவு! அறிவிற்குரிய சாவியை நீங்கள் எடுத்துப் போட்டீர்கள். அதற்குள் நீங்களும் செல்வதில்லை. செல்கிறவர்களையும் தடைசெய்து விடுகிறீர்கள்” என்றார்.</verse>
				<verse number="53">இயேசு அங்கிருந்து புறப்படும்போது, பரிசேயர்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் அவரைக் கடுமையாக எதிர்த்து, அவரிடம் கேள்விகளைக் கேட்டு,</verse>
				<verse number="54">அவருடைய வார்த்தைகளிலிருந்தே அவரைக் குற்றம் பிடிப்பதற்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">இதற்கிடையே, ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். அப்போது இயேசு, முதலில் தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் புளிப்பூட்டும் பதார்த்தம் குறித்து, அதாவது அவர்களது வெளிவேடத்தைக் குறித்துக் கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="2">மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளிப்படுத்தப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் தெரியவராமல் போவதுமில்லை.</verse>
				<verse number="3">நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து காதோடு காதாய் இரகசியமாய் பேசியது, கூரையின் மேலிருந்து அறிவிக்கப்படும்.</verse>
				<verse number="4">“என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உடலைக் கொல்லுகின்றவர்களுக்குப் பயப்பட வேண்டாம். அதற்குமேல், அவர்களால் உங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது.</verse>
				<verse number="5">ஆயினும், நீங்கள் யாருக்குப் பயப்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொலை செய்த பின்பு, நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவருக்கே பயப்படுங்கள்.</verse>
				<verse number="6">இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக் குருவிகள் விற்கப்படுகின்றன அல்லவா? ஆயினும், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை.</verse>
				<verse number="7">உங்கள் தலைமுடிகளெல்லாம் எண்ணிக்கை செய்யப்பட்டுள்ளன. எனவே பயப்பட வேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும், அதிக பெறுமதியுடையவர்கள்.</verse>
				<verse number="8">“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கின்றவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மனுமகனும் ஏற்றுக்கொள்வார்.</verse>
				<verse number="9">ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை புறக்கணிக்கின்றவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக புறக்கணிக்கப்படுவான்.</verse>
				<verse number="10">யாராவது மனுமகனுக்கு எதிராய் ஒரு வார்த்தை பேசினால், அது மன்னிக்கப்படும். ஆனால், எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது மன்னிக்கப்பட மாட்டாது.</verse>
				<verse number="11">“நீங்கள் ஜெபஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டு வரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, எவற்றைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள்.</verse>
				<verse number="12">ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்ல வேண்டும் என்பதை, பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.</verse>
				<verse number="13">கூடியிருந்த மக்களில் ஒருவன் அவரிடம், “போதகரே, உரிமைச் சொத்தில் எனக்குரியதைப் பிரித்துக் கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.</verse>
				<verse number="14">அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="15">பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லாவிதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.</verse>
				<verse number="16">மேலும் அவர், அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது.</verse>
				<verse number="17">அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.</verse>
				<verse number="18">“பின்பு அவன், ‘ஒரு காரியம் செய்யலாம்: என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைப்பேன்.</verse>
				<verse number="19">அதன்பின்பு, நான் என் ஆத்துமாவிடம், பல வருடங்களுக்குப் போதுமான பொருட்கள் உனக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றன. நீ ஓய்வெடுத்து, சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.</verse>
				<verse number="20">“அப்போது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுக்கப்படும். அப்போது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.</verse>
				<verse number="21">“தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கின்றது” என்றார்.</verse>
				<verse number="22">பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எதை உண்போம் என்று உங்கள் வாழ்வைக் குறித்தும், எதை அணிவோம் என்று உங்கள் உடலைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம்.</verse>
				<verse number="23">ஏனெனில், உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் மேலானவை.</verse>
				<verse number="24">காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைப்பதுமில்லை, அறுவடை செய்வதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனாலும், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கின்றார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்புமிக்கவர்களாய் இருக்கின்றீர்களே!</verse>
				<verse number="25">கவலைப்படுவதால், உங்களில் எவனாவது தன் வாழ்நாளுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டிக்கொள்ள முடியுமா?</verse>
				<verse number="26">எனவே இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்ய முடியாதிருக்கும்போது, மற்றைய காரியங்களைக் குறித்து ஏன் கவலைப்படுகிறீர்கள்?</verse>
				<verse number="27">“காட்டுப் பூக்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்பதுமில்லை; ஆயினும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப் போல் உடை அணிந்ததில்லை.</verse>
				<verse number="28">விசுவாசம் குறைந்தவர்களே! இன்றிருந்து நாளை நெருப்பில் போடப்படும் காட்டுப் புல்லை இறைவன் இவ்விதம் அணிவித்தால், எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு அணிவிப்பார்.</verse>
				<verse number="29">எதை உண்ணுவோம், எதைக் குடிப்போம் என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக் குறித்து கவலைப்படாதிருங்கள்.</verse>
				<verse number="30">ஏனெனில், இறைவனை அறியாத உலகத்தார் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவையெல்லாம் உங்களுக்கு அவசியம் என்று அறிந்திருக்கிறார்.</verse>
				<verse number="31">நீங்களோ அவருடைய அரசைத் தேடுங்கள். அப்போது இவைகளும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="32">“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் இருக்கின்றார்.</verse>
				<verse number="33">உங்கள் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள். பழையதாய்ப் போகாத பணப்பைகளை உங்களுக்கென இவ்விதமாய் உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தை பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை.</verse>
				<verse number="34">ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கின்றதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.</verse>
				<verse number="35">“பணி செய்வதற்கு ஆயத்தமாய் உங்கள் உடையை அணிந்துகொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.</verse>
				<verse number="36">திருமண விருந்திலிருந்து திரும்பி வரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால், அவன் வந்து கதவைத் தட்டும்போது, உடனடியாக கதவைத் திறக்க முடியும்.</verse>
				<verse number="37">எஜமான் வரும்போது விழித்திருக்கிறவர்களாய் காணப்படும் வேலைக்காரர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பணி செய்வதற்கான உடையை எஜமான் அணிந்துகொண்டு, தன் வேலைக்காரர்களை உணவுப் பந்தியில் உட்காரச் செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணி செய்வான்.</verse>
				<verse number="38">அந்த எஜமான் இரவின் இரண்டாம் காவல் நேரத்திலோ அல்லது மூன்றாம் காவல் நேரத்திலோ தாமதித்து வந்தாலும்கூட, அப்பொழுதும் ஆயத்தமாய் காணப்படும் வேலையாட்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="39">எனவே திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீடு உடைக்கப்படுவதற்கு அவன் இடமளிக்க மாட்டான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="40">அதைப்போலவே, நீங்களும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத நேரத்திலேயே மனுமகன் வருவார்” என்றார்.</verse>
				<verse number="41">அப்போது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத்தான் சொல்கின்றீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கின்றீரோ?” என்று கேட்டான்.</verse>
				<verse number="42">ஆண்டவர், அதற்கு மறுமொழியாக, “அந்த நிர்வாகியைப் போன்று உண்மையும் ஞானமும் உள்ளவன் யார்? அவனையே அந்த எஜமான், ஏற்ற வேளையில் தன்னுடைய வேலைக்காரருக்கு உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான்.</verse>
				<verse number="43">எஜமான் திரும்பி வரும்போது, தனது கடமையை அப்படியே செய்துகொண்டிருக்கும் நிர்வாகி நன்மை பெறுவான்.</verse>
				<verse number="44">நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தன்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான்.</verse>
				<verse number="45">ஆயினும் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்ட காலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடித்து, தானே உண்டு குடித்து வெறிகொள்ளத் தொடங்கினால்,</verse>
				<verse number="46">அந்த நிர்வாகியின் எஜமான், அவன் எதிர்பார்க்காத ஒரு நாளிலும், அவன் அறியாத நேரத்திலும் வருவான். எஜமான் வந்து, அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, நம்பத் தகுதியற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளி விடுவான்.</verse>
				<verse number="47">“தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும் தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருக்கும் வேலைக்காரனுக்கு, அநேக அடிகள் அடிக்கப்படும்.</verse>
				<verse number="48">ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய் தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கின்றவனுக்கோ, சில அடிகளே அடிக்கப்படும். எவனிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும்; அப்படியே அதிகம் ஒப்படைக்கப்பட்டவனிடம், இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.</verse>
				<verse number="49">“பூமியிலே நெருப்பை பற்ற வைக்கவே நான் வந்தேன்; அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.</verse>
				<verse number="50">ஆயினும், நான் கட்டாயமாக பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று இருக்கின்றது. அது நிறைவேறும் வரை நான் அனுபவிக்கும் மனக்கஷ்டமோ அதிகம்.</verse>
				<verse number="51">பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வருகை தந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன்.</verse>
				<verse number="52">இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்று பேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டு பேர் மூன்று பேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.</verse>
				<verse number="53">தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராக தாயும், மருமகளுக்கு எதிராக மாமியும், மாமிக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.</verse>
				<verse number="54">அவர் கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழுகின்றதை நீங்கள் காணும்போது, உடனே நீங்கள், ‘இதோ மழை பெய்யப் போகின்றது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது.</verse>
				<verse number="55">தெற்கிலிருந்து காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப் போகின்றது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="56">வெளிவேடக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் கொடுக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி?</verse>
				<verse number="57">“சரியானது எது என்று, உங்களை நீங்களே நிதானிக்காமல் இருக்கின்றீர்களே, ஏன்?</verse>
				<verse number="58">நீங்கள் உங்கள் எதிரியுடனே நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள கடும் முயற்சி செய்யுங்கள்; இல்லாவிட்டால், அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக் கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையில் போடவும் கூடும்.</verse>
				<verse number="59">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், தண்டப் பணத்தின் கடைசி நாணயத்தை செலுத்தித் தீர்க்கும்வரை, நீங்கள் அங்கிருந்து வெளியே வர மாட்டீர்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">அப்போது அங்கிருந்தவர்களில் சிலர் இயேசுவிடம், கலிலேயர் சிலரைப் பிலாத்து கொலை செய்து, அவர்களுடைய இரத்தத்தை, அவர்கள் செலுத்திய பலிகளுடனே கலந்துவிட்ட செயலைப் பற்றிச் சொன்னார்கள்.</verse>
				<verse number="2">அதற்கு இயேசு, “அந்த கலிலேயருக்கு இவை நேர்ந்ததால், அவர்கள் மற்றெல்லா கலிலேயரைப் பார்க்கிலும் மோசமான பாவிகளாய் இருந்தார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?</verse>
				<verse number="3">இல்லை! நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் எல்லோரும் மனந்திரும்பாவிட்டால், நீங்களும்கூட அழிந்தே போவீர்கள்.</verse>
				<verse number="4">சீலோவாமில் கோபுரம் விழுந்தபோது, அதில் பதினெட்டுப் பேர் இறந்தார்களே! எருசலேமில் வாழ்கின்ற மற்றெல்லோரையும்விட அவர்கள் அதிக குற்றவாளிகள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?</verse>
				<verse number="5">அப்படியல்ல! நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் எல்லோரும் மனந்திரும்பாவிட்டால், நீங்களும் அழிந்து போவீர்கள்” என்றார்.</verse>
				<verse number="6">அதன்பின்பு அவர் அவர்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தனது திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்தி மரத்தை நட்டு வைத்திருந்தான். அவன் அதிலே பழத்தைத் தேடிப் போனபோது, அதில் பழம் எதுவும் காணப்படவில்லை.</verse>
				<verse number="7">எனவே அவன், அந்த திராட்சைத் தோட்டத்தின் பராமரிப்பாளனிடம், ‘நான் மூன்று வருடங்களாக இந்த அத்தி மரத்தில் பழங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். ஆயினும் இந்த மரத்தில் பழம் எதையுமே நான் காணவில்லை. இதை வெட்டிப் போடு. இது ஏன் நிலத்தை வீணாக்க வேண்டும்?’ என்றான்.</verse>
				<verse number="8">“அதற்கு அந்த மனிதன், ‘ஐயா, இன்னொரு வருடத்திற்கு அதை விட்டுவையும். நான் அதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்.</verse>
				<verse number="9">அடுத்த வருடம் பழம் கொடுத்தால் நல்லது, இல்லாவிட்டால் அதை வெட்டிப் போடும்’ என்றான்.”</verse>
				<verse number="10">ஒரு சபத் ஓய்வுநாளிலே இயேசு ஜெபஆலயம் ஒன்றில் போதித்துக் கொண்டிருந்தார்.</verse>
				<verse number="11">அங்கே பதினெட்டு வருடமாய் பலவீனப்படுத்தும் ஒரு தீய ஆவி பிடித்திருந்ததால், ஊனமுற்றிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் முற்றிலும் நிமிர முடியாத அளவுக்கு கூனிப் போய் இருந்தாள்.</verse>
				<verse number="12">இயேசு அவளைக் கண்டபோது, அவளை முன்னே வரும்படி அழைத்து, “பெண்மணியே, உன் பலவீனத்திலிருந்து நீ விடுதலையாக்கப்பட்டாய்” என்றார்.</verse>
				<verse number="13">பின்பு அவர், அவள் மீது தன் கையை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து நின்று இறைவனைத் துதித்தாள்.</verse>
				<verse number="14">சபத் ஓய்வுநாளில் இயேசு குணமாக்கியபடியால், அங்கிருந்த ஜெபஆலயத் தலைவன் கடும் கோபமடைந்து அங்கிருந்த மக்களிடம், “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் இருக்கின்றதே. அந்த நாட்களிலே வந்து குணமடையுங்கள். சபத் ஓய்வுநாளில் அப்படிச் செய்ய வேண்டாம்” என்றான்.</verse>
				<verse number="15">அதற்கு ஆண்டவர் அவனிடம், “வெளிவேடக்காரர்களே! ஓய்வுநாளிலே நீங்கள் ஒவ்வொருவரும், அவனவன் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்து, தண்ணீர் காட்டுவதற்குக் கொண்டுபோவதில்லையா?</verse>
				<verse number="16">ஆபிரகாமின் மகளான இந்தப் பெண்ணை, சாத்தான் இப்படியாக பதினெட்டு வருட காலமாய் கட்டி வைத்திருக்கிறானே! எனவே அவள் ஓய்வுநாளிலே, அவளுடைய கட்டிலிருந்து விடுதலை பெறக் கூடாதோ?” என்றார்.</verse>
				<verse number="17">அவர் இதைச் சொன்னபோது, அவருடைய எதிரிகள் எல்லோரும் வெட்கத்துக்குள்ளானார்கள். ஆனால் மக்களோ, அவர் செய்த அதிசயமான காரியங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.</verse>
				<verse number="18">பின்பு இயேசு அவர்களிடம், “இறைவனுடைய அரசு எதைப் போல் இருக்கின்றது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?</verse>
				<verse number="19">அது, ஒரு மனிதன் தனது தோட்டத்தில் நட்ட ஒரு கடுகு விதைக்கு ஒப்பாய் இருக்கின்றது. அது வளர்ந்து ஒரு மரமாகி, ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கின” என்றார்.</verse>
				<verse number="20">மேலும் அவர், “இறைவனுடைய அரசை நான் எதற்கு ஒப்பிடுவேன்?</verse>
				<verse number="21">ஒரு பெண் மிகவும் அதிகளவான மாவிலே புளிப்பூட்டும் பதார்த்தத்தைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும் வரை வைத்ததற்கு ஒப்பாய் இருக்கின்றது” என்றார்.</verse>
				<verse number="22">பின்பு இயேசு தாம் எருசலேமுக்குப் போகும் வழியிலே, அங்குள்ள பட்டணங்களிலும் கிராமங்களிலும் போதித்துக் கொண்டே சென்றார்.</verse>
				<verse number="23">அப்போது ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, ஒரு சிலர் மட்டும்தான் இரட்சிக்கப்படுவார்களோ?” என்று கேட்டான். அவர் அவர்களிடம்,</verse>
				<verse number="24">“ஒடுக்கமான கதவின் வழியாக உட்செல்வதற்கு எல்லா முயற்சியும் எடுங்கள். ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அநேகர் அதற்குள் செல்ல முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களால் முடியாதிருக்கும்.</verse>
				<verse number="25">வீட்டுச் சொந்தக்காரன் எழுந்து கதவை மூடிய பின், நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டி, ‘ஐயா எங்களுக்குக் கதவைத் திறவுங்கள்’ என்று கெஞ்சுவீர்கள். “ஆனால் அவரோ, ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கேயிருந்து வருகின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியாது’ என்று சொல்வார்.</verse>
				<verse number="26">“அப்போது நீங்கள் அவரைப் பார்த்து, ‘நாங்கள் உம்முடன் உணவுண்டு குடித்தோமே. நீர் எங்களுடைய வீதிகளில் போதித்தீரே’ என்பீர்கள்.</verse>
				<verse number="27">“ஆனால் அவரோ, ‘உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. தீமை செய்கின்றவர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப் போங்கள்’ என்று பதிலளிப்பார்.</verse>
				<verse number="28">“ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் எல்லா இறைவாக்கினரும் இறைவனுடைய அரசில் இருப்பதையும், நீங்கள் புறக்கணிக்கப்படுவதையும் காணும்போது, அங்கே அழுகையும் வேதனையான பற்கடிப்பும் இருக்கும்.</verse>
				<verse number="29">கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் மக்கள் வந்து, இறைவனுடைய அரசிலே நடைபெறும் விருந்து வைபவத்தில், அவரவர்களுக்குரிய இடங்களில் அமர்ந்துகொள்வார்கள்.</verse>
				<verse number="30">உண்மையாகவே, இப்போது கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.</verse>
				<verse number="31">அவ்வேளையில் சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்விடத்தை விட்டு வேறு எங்காவது போய்விடும். ஏனெனில், ஏரோது உம்மைக் கொலை செய்ய இருக்கின்றான்” என்றார்கள்.</verse>
				<verse number="32">அதற்கு அவர் அவர்களிடம், “நான் இன்றும் நாளையும் பேய்களைத் துரத்தி, மக்களைக் குணமாக்குவேன். மூன்றாவது நாளிலே, நான் எனது பணியின் நோக்கத்தை செய்து முடிப்பேன் என அந்த நரிக்குப் போய் சொல்லுங்கள்,</verse>
				<verse number="33">ஆயினும் இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும், என் பயணத்தைத் தொடர்வேன். ஏனெனில், நிச்சயமாகவே இறைவாக்கினர் எவரும் எருசலேமுக்கு வெளியே மரணிக்க முடியாது.</verse>
				<verse number="34">“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலை செய்து, உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள் மீது கல்லெறியும் பட்டணமே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் அணைத்து, சேர்த்துக்கொள்வது போல, நானும் எத்தனையோ முறை உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், நீயோ அதை விரும்பவில்லை.</verse>
				<verse number="35">இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. நான் உனக்குச் சொல்கின்றேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று நீ சொல்லும் வரைக்கும், இனிமேல் நீ என்னைக் காண மாட்டாய்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">ஒரு சபத் ஓய்வுநாளிலே, பரிசேயரின் தலைவன் ஒருவனுடைய வீட்டிலே, இயேசு உணவருந்தப் போயிருந்தார். அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="2">அங்கே அவருக்கு முன்பாக, நீர்க்கோவை வியாதியினால் உடல் வீக்கமுற்று துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் இருந்தான்.</verse>
				<verse number="3">இயேசு பரிசேயரையும் நீதிச்சட்ட அறிஞரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணமாக்குவது நீதிச்சட்டத்திற்கு ஏற்றதா, இல்லையா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="4">அவர்களோ ஒன்றும் பேசாதிருந்தார்கள். எனவே அவர் அவனைக் கையால் பிடித்து, அவனைக் குணமாக்கி அனுப்பிவிட்டார்.</verse>
				<verse number="5">அப்போது அவர் அவர்களிடம், “உங்களில் ஒருவனுடைய மகனோ, மாடோ ஓய்வுநாளிலே கிணற்றில் விழுந்தால், நீங்கள் உடனடியாக அவனையோ, மாட்டையோ வெளியே தூக்கிவிட மாட்டீர்களா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="6">அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.</verse>
				<verse number="7">உணவுப் பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை அவர் கவனித்தபோது, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்:</verse>
				<verse number="8">“யாராவது உங்களை ஒரு திருமண விருந்துக்கு அழைக்கும்போது, முதன்மையான இடத்தில் போய் உட்கார வேண்டாம். ஏனெனில், உங்களைவிட மதிப்புக்குரிய வேறொருவரும் அழைக்கப்பட்டிருக்கலாம்.</verse>
				<verse number="9">எனவே, உங்கள் இருவரையும் அழைத்தவன் உங்களிடத்தில் வந்து, ‘நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை இந்த மனிதனுக்குக் கொடு’ என்று உங்களிடம் சொல்லக் கூடும். அப்போது நீங்கள் வெட்கத்துக்குள்ளாகி, கடைசி இடத்தில் போய் உட்கார நேரிடும்.</verse>
				<verse number="10">ஆகவே நீங்கள் எங்கேயாவது அழைக்கப்படும்போது, கடைசி இடத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். அப்போது உங்களை அழைத்தவன் உங்களிடம் வந்து, ‘நண்பனே, உயர்வான இடத்தில் வந்து உட்கார்ந்துகொள்’ என்று சொல்வான். அப்போது உங்களுடன்கூட வந்திருக்கும் எல்லா விருந்தாளிகளின் முன்னிலையிலும் நீங்கள் மதிப்பைப் பெறுவீர்கள்.</verse>
				<verse number="11">ஏனெனில், தன்னைத் தானே உயர்த்துகின்ற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தானே தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்” என்றார்.</verse>
				<verse number="12">பின்பு இயேசு தம்மை அழைத்தவனிடம், “நீ ஒரு மதிய உணவையோ இரவு உணவையோ, கொடுக்கும்போது, உனது நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அல்லது செல்வந்தர்களான உன் அயலவரையோ அழைக்க வேண்டாம்; அப்படி நீ அழைத்தால், அவர்களும் உன்னைத் திரும்ப அழைப்பார்கள். இவ்விதமாய் அவர்கள் உனக்குக் கைம்மாறு செய்துவிடுவார்கள்.</verse>
				<verse number="13">எனவே நீ ஒரு விருந்தைக் கொடுக்கும்போது, ஏழைகளையும், ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழைப்பாயாக;</verse>
				<verse number="14">அப்போது நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களால் அதற்கான கைம்மாறு எதையும் உனக்குச் செய்ய முடியாது. ஆனால் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில், அதற்கான பிரதிபலனைப் பெற்றுக்கொள்வாய்” என்றார்.</verse>
				<verse number="15">அவரோடு உணவுப் பந்தியில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் இதைக் கேட்டபோது, அவன் இயேசுவிடம், “இறைவனுடைய அரசின் விருந்தில் உண்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றான்.</verse>
				<verse number="16">அதற்கு மறுமொழியாக இயேசு சொன்னதாவது: “ஒரு மனிதன் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி, அதற்குப் பல விருந்தினர்களை அழைத்திருந்தான்.</verse>
				<verse number="17">விருந்துக்கான நேரம் வந்தபோது, அழைக்கப்பட்டவர்களிடம், ‘வாருங்கள் விருந்து ஆயத்தமாகிவிட்டது’ என்று சொல்லும்படி, தனது வேலைக்காரனை அனுப்பினான்.</verse>
				<verse number="18">“ஆனால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஒருமித்து சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். முதலாவது ஆள், ‘இப்போதுதான், நான் ஒரு வயலை வாங்கியிருக்கிறேன். நான் அதைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.</verse>
				<verse number="19">“இன்னொருவன், ‘இப்போதுதான், நான் ஐந்து சோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் அவற்றை வேலையில் ஈடுபடுத்திப் பார்க்கப் போகின்றேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.</verse>
				<verse number="20">“மற்றவனோ, ‘இப்போதுதான், நான் திருமணம் செய்து கொண்டேன். எனவே என்னால் வர முடியாது’ என்றான்.</verse>
				<verse number="21">“அந்த வேலைக்காரன் திரும்பி வந்து, தனது எஜமானிடம் நடந்தவற்றைச் சொன்னான். அப்போது அந்த வீட்டுச் சொந்தக்காரன் கோபமடைந்தான். அவன் தனது வேலைக்காரனிடம், ‘நீ விரைவாய் புறப்பட்டுப் போய், பட்டணத்து வீதிகளிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் அழைத்துக்கொண்டு வா’ என உத்தரவிட்டான்.</verse>
				<verse number="22">“அந்த வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீர் உத்தரவிட்டபடியே செய்தாயிற்று. ஆனால் இன்னும் இடம் இருக்கின்றது’ என்றான்.</verse>
				<verse number="23">“அப்போது அந்த எஜமான் தன் வேலைக்காரனிடம், ‘நீ புறப்பட்டுப் போய் நாட்டுப்புறத்தின் தெருக்களிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஆட்களை வற்புறுத்தி உள்ளே கொண்டுவா. அவ்விதமாகவே என் வீடு நிறையட்டும்.</verse>
				<verse number="24">நான் உனக்குச் சொல்கின்றேன், முதலில் அழைக்கப்பட்டவர்களில் ஒருவனாவது எனது விருந்தில் சிறிதளவைக்கூட சுவை பார்க்கப் போவதில்லை’ என்றான்.”</verse>
				<verse number="25">மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைத் திரும்பிப் பார்த்துச் சொன்னதாவது:</verse>
				<verse number="26">“ஒருவன் என்னிடம் வந்து, தனது தகப்பனையும் தாயையும், தன் மனைவியையும் பிள்ளைகளையும், தன் சகோதரர்களையும் சகோதரிகளையும் வெறுக்காவிட்டால், ஏன், தனது வாழ்வையும்கூட வெறுக்காவிட்டால், அவன் என் சீடனாய் இருக்க முடியாது.</verse>
				<verse number="27">ஒருவன் தனது சிலுவையைச் சுமந்துகொண்டு, என்னைப் பின்பற்றாவிட்டால், எனக்குச் சீடனாய் இருக்க முடியாது.</verse>
				<verse number="28">“உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவன் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குத் தன்னிடம் போதிய பணம் இருக்கின்றதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பானோ?</verse>
				<verse number="29">ஏனெனில், அத்திவாரத்தைப் போட்டுவிட்டு, அதைக் கட்டி முடிக்க அவனால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவனைக் கேலி செய்வார்கள்.</verse>
				<verse number="30">‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும் இவனால் அதைக் கட்டி முடிக்க முடியவில்லை’ என்பார்கள்.</verse>
				<verse number="31">“அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் அவன் உட்கார்ந்து, இருபதாயிரம் வீரர்களோடு தன்னை எதிர்த்து வருபவனை, தன்னிடமுள்ள பத்தாயிரம் வீரர்களைக் கொண்டு தோற்கடிக்க முடியுமோ என்று யோசித்துப் பார்க்க மாட்டானோ?</verse>
				<verse number="32">அவனால் அப்படி முடியாவிட்டால், எதிரி தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, தனது பிரதிநிதிகளை அனுப்பி, சமாதான உடன்பாட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்வான்.</verse>
				<verse number="33">அவ்விதமாகவே, உங்களில் ஒருவன் தன்னிடமுள்ள அனைத்தையும் விட்டுவிடாவிட்டால், எனக்கு சீடனாக இருக்க முடியாது.</verse>
				<verse number="34">“உப்பு நல்லதே. ஆனால் அது தன் சாரத்தை இழந்து போனால், திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்?</verse>
				<verse number="35">அது மண்ணுக்கும் நல்லதல்ல அதை உரமாகவும் பாவிக்க முடியாது; அதை வெளியேதான் எறிந்துவிட வேண்டும். “காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">இயேசு சொல்வதைக் கேட்பதற்காக வரி சேகரிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள்.</verse>
				<verse number="2">அப்போது பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முணுமுணுத்தார்கள்.</verse>
				<verse number="3">அப்போது இயேசு அவர்களுக்கு, இந்த உவமையைச் சொன்னார்:</verse>
				<verse number="4">“உங்களில் ஒருவனிடம் நூறு செம்மறியாடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமற் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் பாதுகாப்பான ஒரு வெளியிடத்தில் விட்டுவிட்டு, காணாமற் போன செம்மறியாட்டைக் கண்டுபிடிக்கும் வரைக்கும், அதைத் தேடிப் போவான் அல்லவா?</verse>
				<verse number="5">அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் அதைத் தனது தோளில் போட்டுக்கொள்வான்.</verse>
				<verse number="6">அவன் வீட்டுக்கு வந்ததும், தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் ஒன்றுகூட்டி, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமற் போன எனது செம்மறியாட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான்.</verse>
				<verse number="7">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே மனமகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.</verse>
				<verse number="8">“ஒரு பெண்ணிடம், பத்து திராக்மா வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமற் போனால், அவள் அதைக் கண்டுபிடிக்கும் வரை ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ?</verse>
				<verse number="9">அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் ஒன்றுகூட்டி, ‘என்னுடனே மகிழ்ச்சிகொள்ளுங்கள்; காணாமற் போன எனது நாணயத்தை நான் கண்டெடுத்துவிட்டேன்’ என்று சொல்வாள் அல்லவா?</verse>
				<verse number="10">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவ்விதமாகவே மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் மனமகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.</verse>
				<verse number="11">இயேசு தொடர்ந்தும் சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு மகன்மார் இருந்தார்கள்.</verse>
				<verse number="12">அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாருங்கள்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இருவருக்கும் இடையில் பிரித்துக் கொடுத்தான்.</verse>
				<verse number="13">“சில நாட்களுக்குள்ளாகவே, இளைய மகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரமாயுள்ள ஒரு நாட்டிற்குச் சென்றான். அங்கே அவன் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் அழித்துவிட்டான்.</verse>
				<verse number="14">அவன் எல்லாவற்றையும் செலவு செய்து முடித்த பின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் உண்டானது, அதனால் அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது.</verse>
				<verse number="15">எனவே அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் வேலைக்குச் சேர்ந்தான். அங்கு பன்றிகளை மேய்க்கும்படி அவன் வயலுக்கு அனுப்பப்பட்டான்.</verse>
				<verse number="16">அப்போது அவன், பன்றிகள் உண்ணுகின்ற தவிட்டினாலேயே தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு எதையும் கொடுக்கவில்லை.</verse>
				<verse number="17">“அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கின்றார்கள். நானோ இங்கே பட்டினியில் சாகின்றேன்.</verse>
				<verse number="18">நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப் போய், அவரிடம், அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன்.</verse>
				<verse number="19">நான் இனிமேலும் உங்களுடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உங்கள் கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளுங்கள் என்பேன்’ என்று சொல்லிக் கொண்டான்.</verse>
				<verse number="20">எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குச் சென்றான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மன உருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப் போய் தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.</verse>
				<verse number="21">“மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உங்களுக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும் உங்களுடைய மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான்.</verse>
				<verse number="22">“ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், உள்ளவற்றில் முதற் தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு அணிவியுங்கள். இவனது கைவிரலிலே மோதிரமும் கால்களிலே காலணியும் அணியுங்கள்.</verse>
				<verse number="23">மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம்.</verse>
				<verse number="24">ஏனெனில், எனது இந்த மகன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, திரும்பவும் உயிர் பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ இவன் எனக்குக் கிடைத்துவிட்டான்’ என்றான். எனவே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="25">“இவ்வேளையில், மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கையில், ஆடல் பாடலின் சத்தம் அவனுக்குக் கேட்டது.</verse>
				<verse number="26">எனவே அவன் வேலைக்காரரில் ஒருவனை அழைத்து, ‘என்ன நடக்கின்றது?’ என்று விசாரித்தான்.</verse>
				<verse number="27">அதற்கு அவன், ‘உமது சகோதரன் வந்துவிட்டார். அவர் சுக நலத்துடன் தன்னிடம் திரும்பவும் வந்து சேர்ந்ததால், உமது தந்தை மிகச் சிறப்பான விருந்தை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்’ என்றான்.</verse>
				<verse number="28">“ஆனால் அந்த மூத்த சகோதரனோ கோபமடைந்து, உள்ளே போக மறுத்தான். எனவே அவனது தந்தை வெளியே போய், அவனை உள்ளே வரும்படி கெஞ்சிக் கேட்டான்.</verse>
				<verse number="29">அவனோ தன் தந்தையிடம், ‘இதோ! இத்தனை வருடங்களாக நான் உங்களுக்கு அடிமையாய் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒருபோதும் உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதில்லை. அப்படியிருந்தும், நான் எனது நண்பர்களுடன் விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையேனும் தரவில்லை.</verse>
				<verse number="30">ஆனால் உங்கள் சொத்தை, விலைமாதர்களுடன் செலவழித்து வீணடித்த உங்களது இந்த மகன் வீட்டிற்கு வந்தபோதோ, அவனுக்காக நீங்கள் மிக சிறப்பான விருந்தை ஆயத்தப்படுத்தியிருக்கிறீர்கள்’ என்றான்.</verse>
				<verse number="31">“அப்போது தந்தை, ‘என் மகனே! நீ எப்போதும் என்னுடனே இருக்கின்றாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே.</verse>
				<verse number="32">ஆனால் உனது சகோதரனான இவனோ இறந்து போயிருந்தான்; இப்போது திரும்பவும் உயிர் பெற்றிருக்கிறான். காணாமற் போயிருந்தான்; திரும்பவும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால் நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “செல்வந்தன் ஒருவனுக்கு ஒரு நிர்வாகி இருந்தான். தன் எஜமானின் உடைமைகளையெல்லாம் அந்த நிர்வாகி வீணடிப்பதாக அவன்மீது குற்றம் சுமத்தப்பட்டது.</verse>
				<verse number="2">எனவே அந்த செல்வந்தன் அவனை அழைத்து, ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்க முடியாது, எனவே நீ வந்து உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்து விடு’ என்றான்.</verse>
				<verse number="3">“அதைக் கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப் போகின்றாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பலமில்லை. பிச்சை கேட்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="4">இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.</verse>
				<verse number="5">“ஆகவே, அவன் தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வந்தவர்களில் முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.</verse>
				<verse number="6">“அதற்கு அவன், ‘நூறு கொள்கலன் ஒலிவ எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘விரைவாக உட்கார்ந்து, உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதில் ஐம்பது என்று எழுதிக்கொள்’ என்றான்.</verse>
				<verse number="7">“பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “ ‘ஆயிரம் மூடை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்போது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.</verse>
				<verse number="8">“நேர்மையற்ற இந்த நிர்வாகி, இப்படிச் சாதுரியமாகச் செயல்பட்டதை அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கின்றவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="9">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அவை இல்லாமல் போகும்போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள்.</verse>
				<verse number="10">“மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் நேர்மையற்றவனாய் இருக்கின்றவன், பெரியவற்றிலும் நேர்மையற்றவனாய் இருப்பான்.</verse>
				<verse number="11">எனவே இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில் நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மையான செல்வத்தை உங்கள் கையில் கொடுப்பவர் யார்?</verse>
				<verse number="12">இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், தன் சொத்தை உங்களுக்குச் சொந்தமாய் கொடுப்பவர் யார்?</verse>
				<verse number="13">“எந்த வேலைக்காரனாலும், இரண்டு எஜமான்களுக்கு பணி செய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவன் மீது அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும் பணத்துக்கும் பணி செய்ய முடியாது” என்றார்.</verse>
				<verse number="14">பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர்கள் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள்.</verse>
				<verse number="15">அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில் உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ உங்கள் இருதயங்களை அறிவார். மனிதருடைய பார்வையில் உயர்வாய் மதிக்கப்படுவது, இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கும்.</verse>
				<verse number="16">“நீதிச்சட்டமும் இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவானுடைய காலம் வரை மட்டுமே; அதுமுதல், இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது, ஆகவே அனைவரும் தீவிரமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.</verse>
				<verse number="17">வானமும் பூமியும் மறைந்து போனாலும், நீதிச்சட்டத்தில் இருக்கின்ற எழுத்தின் ஒரு சிறிய புள்ளிகூட மறைந்து போகாது.</verse>
				<verse number="18">“தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், தகாத உறவுகொள்கின்றான். விவாகரத்துச் செய்யப்பட்ட ஒரு பெண்ணை எவனாவது திருமணம் செய்தால், அவனும் தகாத உறவுகொள்கின்றான்.</verse>
				<verse number="19">“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை அணிந்து, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.</verse>
				<verse number="20">அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய்,</verse>
				<verse number="21">பணக்காரனின் மேசையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களும் வந்து அவன் புண்களை நக்கின.</verse>
				<verse number="22">“காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்து போனான். இறைதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போய், ஆபிரகாமின் அருகே உட்கார வைத்தார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம் பண்ணப்பட்டான்.</verse>
				<verse number="23">இறந்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில், மேலே நோக்கிப் பார்த்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவருடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான்.</verse>
				<verse number="24">எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவரை அழைத்து, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப் பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.</verse>
				<verse number="25">“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலமானவற்றை அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ கஷ்டங்களை அனுபவித்தான். இப்போது அவன் இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய்.</verse>
				<verse number="26">இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்து வர விரும்புகிறவர்களால் அப்படி வர முடியாது, அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் ஒருவராலும் முடியாது’ என்றார்.</verse>
				<verse number="27">“அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக் கேட்கின்றேன், லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்.</verse>
				<verse number="28">ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவன் போய் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.</verse>
				<verse number="29">“அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவைகள் அவர்களிடம் உள்ளன; அவர்கள் அவற்றைக் கேட்டு கீழ்ப்படியட்டும்’ என்றார்.</verse>
				<verse number="30">“அதற்கு அவன், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால் அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.</verse>
				<verse number="31">“அப்போது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் சொன்னதைக் கேட்பதற்கு அவர்கள் மனதற்றவர்களாக இருந்தால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும்கூட, அவர்கள் நம்ப மாட்டார்கள்’ என்று சொன்னார்.”</verse>
			</chapter>
			<chapter number="17">
				<verse number="1">இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “பாவம் செய்வதற்கான சோதனைகள் வருவது நிச்சயம். ஆனால் அவை யாரால் வருகின்றதோ அவனுக்கு ஐயோ பேரழிவு!</verse>
				<verse number="2">இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டப்பட்டு, கடலிலே தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும்.</verse>
				<verse number="3">எனவே நீங்கள் கவனமாய் இருங்கள். “உங்கள் சகோதரன் பாவம் செய்தால், அவனைக் கடிந்துகொள்ளுங்கள். அவன் மனந்திரும்பினால், அவனை மன்னித்து விடுங்கள்.</verse>
				<verse number="4">அவன் ஒரே நாளில் ஏழு தடவை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழு தடவையும் அவன் உங்களிடம் வந்து, ‘நான் மனந்திரும்பிவிட்டேன்’ என்றால், அவனை மன்னித்து விடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="5">அப்போஸ்தலர்கள் ஆண்டவரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப் பண்ணும்” என்றார்கள்.</verse>
				<verse number="6">அதற்கு அவர், “உங்களுக்கு கடுகு விதையளவு சிறிய விசுவாசம் இருந்தால், நீங்கள் இந்த பெரிய காட்டத்தி மரத்தைப் பார்த்து, ‘நீ வேரோடு பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.</verse>
				<verse number="7">“உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்து, அவன் வயலை உழுதுவிட்டோ அல்லது ஆடுகளை மேய்த்துவிட்டோ திரும்பி வந்தவுடனே, எஜமான் அவனிடம், ‘வா, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா?</verse>
				<verse number="8">மாறாக அவனிடம், ‘எனது உணவைத் தயாராக்கி, நீயும் பொருத்தமாக அணிந்து ஆயத்தமாகி, நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும் வரை எனக்குப் பணி செய்; அதன்பின் நீ சாப்பிடலாம்’ என்று சொல்வான் அல்லவா?</verse>
				<verse number="9">கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா?</verse>
				<verse number="10">எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்து முடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.</verse>
				<verse number="11">இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா எல்லைகளுக்கூடாகப் பயணம் செய்தார்.</verse>
				<verse number="12">அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, தொழுநோயுள்ள பத்துப் பேர் அவரை சந்தித்தார்கள். அவர்கள் தூரத்தில் நின்றபடி,</verse>
				<verse number="13">“ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டு அழைத்தார்கள்.</verse>
				<verse number="14">அவர் அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் மதகுருக்களிடம் உங்களைக் காண்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் போகும்போது, அவர்கள் குணமடைந்தார்கள்.</verse>
				<verse number="15">அவர்களில் ஒருவன், தான் குணமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பி வந்தான்.</verse>
				<verse number="16">அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான்; அவன் ஒரு சமாரியன்.</verse>
				<verse number="17">அப்போது இயேசு, “பத்துப் பேரும் குணமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேரும் எங்கே?</verse>
				<verse number="18">இந்த வெளிநாட்டவனைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு எவரும் திரும்பி வரக் காணவில்லையே” என்று கேட்டார்.</verse>
				<verse number="19">பின்பு அவர் அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்று சொன்னார்.</verse>
				<verse number="20">இறைவனின் அரசு எப்போது வரும் என்று, பரிசேயர்கள் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு அவர், “இறைவனின் அரசு, கண்களுக்குப் புலப்படும் விதத்தில், வெளிப்படையான அடையாளங்களோடு வருவதில்லை.</verse>
				<verse number="21">‘இதோ இங்கே!’ என்றும் ‘அதோ அங்கே!’ என்றும் மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலேயே இருக்கின்றது” என்றார்.</verse>
				<verse number="22">பின்பு அவர் சீடர்களிடம், “மனுமகனின் நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வருகின்றது. ஆனாலும், நீங்கள் அதைக் காண மாட்டீர்கள்.</verse>
				<verse number="23">‘அங்கே பாருங்கள்’ என்றும், ‘இங்கே பாருங்கள்’ என்றும் மனிதர்கள் சொல்வார்கள். நீங்கள் அவர்கள் பின்னால் ஓட வேண்டாம்.</verse>
				<verse number="24">ஏனெனில் மனுமகன் தம்முடைய நாளிலே, வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை பிரகாசித்து மின்னும் மின்னலைப் போல் காணப்படுவார்.</verse>
				<verse number="25">ஆனால் முதலாவது, அவர் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியிருக்கிறது.</verse>
				<verse number="26">“நோவாவின் நாட்களில் இருந்தது போலவே, மனுமகனின் நாட்களிலும் இருக்கும்.</verse>
				<verse number="27">நோவா பேழைக்குள் போகும் வரைக்கும், அந்த மக்கள் சாப்பிட்டும், குடித்தும், திருமணம் செய்தும், திருமணம் செய்து கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள். அப்போது வெள்ளம் வந்து எல்லோரையும் அழித்துவிட்டது.</verse>
				<verse number="28">“லோத்துவின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டும், குடித்தும், வாங்கியும், விற்றும், நட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள்.</verse>
				<verse number="29">ஆனால் லோத்து, சோதோமைவிட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துவிட்டது.</verse>
				<verse number="30">“மனுமகன் வெளிப்படும் நாளிலும் இதைப் போலவே இருக்கும்.</verse>
				<verse number="31">அந்த நாளிலே, தனது வீட்டின் கூரையின் மேல் இருப்பவன், தனது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக் கூடாது. அப்படியே, வயலில் இருக்கும் எவனும், எதற்காகவும் திரும்பிப் போகக் கூடாது.</verse>
				<verse number="32">லோத்துவின் மனைவியை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="33">தனது வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவன் எவனோ, அவன் அதை இழந்து விடுவான். தன்னுடைய வாழ்வை இழக்கின்றவன் எவனோ, அவன் அதைக் காத்துக்கொள்வான்.</verse>
				<verse number="34">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அந்த இரவிலே இரண்டு பேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்பட, மற்றவன் விடப்படுவான்.</verse>
				<verse number="35">இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விடப்படுவாள்.</verse>
				<verse number="36">இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விடப்படுவான்” என்றார்.</verse>
				<verse number="37">அதற்கு அவர்கள், “எங்கே இது நடக்கும் ஆண்டவரே?” என்றார்கள். அவர் அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கேதான் கழுகுகளும் ஒன்றுகூடும்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="18">
				<verse number="1">அதன்பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகின்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதைக் காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைக் கூறினார்:</verse>
				<verse number="2">“ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன், மக்களையும் மதிக்காதவன்.</verse>
				<verse number="3">அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது பகைவனுக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.</verse>
				<verse number="4">“கொஞ்சக் காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். ஆனாலும் இறுதியாக அவன், ‘நானோ இறைவனுக்குப் பயப்படாதவன், மனிதரையும் மதிக்காதவன். இருந்தாலும்கூட,</verse>
				<verse number="5">இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கின்றாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்போது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்ய மாட்டாள்’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்” என்றார்.</verse>
				<verse number="6">பின்னும் ஆண்டவர், “அநீதியான அந்த நீதிபதி சொன்னதைக் கேட்டீர்களா?</verse>
				<verse number="7">அப்படியிருக்கும்போது, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ?</verse>
				<verse number="8">நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்களுக்கு அவர் விரைவாகவே நீதி வழங்குவார். ஆயினும் மனுமகன் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” என்றார்.</verse>
				<verse number="9">தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்களைக் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்:</verse>
				<verse number="10">“இரண்டு பேர் மன்றாடும்படி ஆலயத்திற்குப் போனார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி சேகரிப்பவன்.</verse>
				<verse number="11">அந்தப் பரிசேயன் எழுந்து நின்று, ‘இறைவனே, நான் மற்ற மனிதர்களைப் போலவோ, கள்வர்கள், தீயவர்கள், தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள் அல்லது இந்த வரி சேகரிப்பவனைப் போலவோ இல்லாதபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="12">வாரத்தில் நான் இரண்டு தடவை உபவாசிக்கிறேன், எனது எல்லா வருமானத்திலும் பத்திலொன்றைக் கொடுக்கின்றேன்’ என்று தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.</verse>
				<verse number="13">“ஆனால், வரி சேகரிப்பவனோ தூரமாய் நின்று, வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியான எனக்கு இரக்கம் காட்டும்’ என்றான்.</verse>
				<verse number="14">“நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசேயன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். ஏனெனில், தன்னைத் தானே உயர்த்துகின்ற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தானே தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்.”</verse>
				<verse number="15">குழந்தைகளை இயேசு தொட வேண்டும் என்பதற்காக, மக்கள் அவர்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்கள் இதைக் கண்டபோது, அவர்களைக் கண்டித்தார்கள்.</verse>
				<verse number="16">ஆனால் இயேசுவோ பிள்ளைகளைத் தம்மிடம் வரவழைத்து, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.</verse>
				<verse number="17">உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எவனாவது ஒரு சிறு பிள்ளையைப் போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் ஒருபோதும் அதற்குள் செல்ல மாட்டான்” என்றார்.</verse>
				<verse number="18">அப்போது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="19">அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கின்றாய்? இறைவனைத் தவிர நல்லவர் எவருமில்லையே.</verse>
				<verse number="20">‘தகாத உறவுகொள்ளாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.</verse>
				<verse number="21">அதற்கு அவன், “என்னுடைய சிறு வயதிலிருந்தே, இவற்றையெல்லாம் நான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்” என்றான்.</verse>
				<verse number="22">இயேசு இதைக் கேட்டபோது, அவர் அவனிடம், “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கின்றது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.</verse>
				<verse number="23">இதைக் கேட்டபோது அவன் மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான்.</verse>
				<verse number="24">இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரர்கள் இறைவனுடைய அரசிற்குள் செல்வது எவ்வளவு கடினமாய் இருக்கின்றது!</verse>
				<verse number="25">பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைவிட, ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள்ளாக நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.</verse>
				<verse number="26">இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="27">அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்ய முடியும்” என்றார்.</verse>
				<verse number="28">பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் கைவிட்டு வந்தோமே” என்றான்.</verse>
				<verse number="29">அதற்கு இயேசு, “ஒருவன் இறைவனுடைய அரசின் பொருட்டு, வீட்டையோ மனைவியையோ சகோதரர்களையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால்,</verse>
				<verse number="30">அவன் இந்த வாழ்வில் பல மடங்கு அதிகமாகப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் தவறாது பெற்றுக்கொள்வான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="31">இயேசு பன்னிருவரையும் ஒரு பக்கமாய் அழைத்து அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகின்றோம், மனுமகனைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும்.</verse>
				<verse number="32">மனுமகன் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து, அவமதித்து, அவர்மீது துப்பி,</verse>
				<verse number="33">அவரைச் சாட்டையினால் அடித்து, கொலை செய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலோ, அவர் உயிருடன் எழுந்திருப்பார்” என்று சொன்னார்.</verse>
				<verse number="34">சீடர்களோ, இவைகளில் ஒன்றையும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர் சொன்னதன் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் பேசுவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.</verse>
				<verse number="35">இயேசு எரிகோவை நெருங்கியபோது, பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="36">மக்கள் கூட்டமாகச் செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நடக்கின்றதென்று விசாரித்தான்.</verse>
				<verse number="37">அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு போகின்றார்” என்று அவனுக்குச் சொன்னார்கள்.</verse>
				<verse number="38">உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று சத்தமாய் அழைத்தான்.</verse>
				<verse number="39">முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள், அவனை சத்தமிடாதிருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் அவனோ, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கம் காட்டும்” என்று இன்னும் அதிக சத்தமாய் அழைத்தான்.</verse>
				<verse number="40">இயேசு நின்று, அந்த மனிதனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனிடம்,</verse>
				<verse number="41">“நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வையடைய விரும்புகிறேன்” என்றான்.</verse>
				<verse number="42">இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன்னுடைய விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது” என்றார்.</verse>
				<verse number="43">உடனே அவன் பார்வை பெற்று, இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="19">
				<verse number="1">இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்.</verse>
				<verse number="2">அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் வரி சேகரிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான்.</verse>
				<verse number="3">அவன், இயேசு யார் எனப் பார்க்க விரும்பினான். ஆனால் அவன் குள்ளமாயிருந்தபடியால், அந்த மக்கள் கூட்டத்தில் அவனால் அவரைப் பார்க்க முடியவில்லை.</verse>
				<verse number="4">எனவே, அந்த வழியாக வந்து கொண்டிருந்த இயேசுவைப் பார்ப்பதற்காக, முன்னால் ஓடிப் போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக் கொண்டான்.</verse>
				<verse number="5">இயேசு அவ்விடத்திற்கு வந்தபோது, மேலே அண்ணாந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்க வேண்டும்” என்று அவனுக்குச் சொன்னார்.</verse>
				<verse number="6">அவன் உடனே இறங்கி வந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.</verse>
				<verse number="7">எல்லா மக்களும் இதைக் கண்டு, “ஒரு பாவியின் வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="8">ஆனால் சகேயுவோ எழுந்து நின்று ஆண்டவரிடம், “ஆண்டவரே! இதோ, என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கின்றேன். நான் யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால், அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான்.</verse>
				<verse number="9">அப்போது இயேசு அவனைப் பார்த்து, “இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில் இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே.</verse>
				<verse number="10">வழி தவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார்” என்றார்.</verse>
				<verse number="11">அவர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்; அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு உடனடியாகவே வரப் போகின்றது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், அவர் இதைச் சொன்னார்:</verse>
				<verse number="12">“அரச குலத்தைச் சேர்ந்த ஒருவன், தான் ஒரு அரசனாக நியமனம் பெற்றுத் திரும்பி வர, தூர நாடொன்றுக்குப் புறப்பட்டான்.</verse>
				<verse number="13">அப்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப் பேரை அழைத்து, பத்து மினா பணத்தில் அவர்களுக்கு ஆளுக்கொரு பணத்தைக் கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான்.</verse>
				<verse number="14">“ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இந்த மனிதன் எங்களை அரசாளுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.</verse>
				<verse number="15">“ஆயினும், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுத் திரும்பி வந்தபோது, தான் பணம் கொடுத்த வேலையாட்கள், வியாபாரம் செய்து எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிவதற்கு அவர்களை அழைத்தான்.</verse>
				<verse number="16">“முதலாவது ஆள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு மினா பணத்தைக்கொண்டு, இன்னும் பத்து மினா பணத்தைச் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான்.</verse>
				<verse number="17">“அதற்கு அவனுடைய எஜமான், ‘நல்ல பணியாளனே! நன்றாய் செய்தாய். நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான்.</verse>
				<verse number="18">“இரண்டாவது ஆள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு மினா பணத்தைக்கொண்டு இன்னும் ஐந்து மினா பணத்தைச் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான்.</verse>
				<verse number="19">“அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான்.</verse>
				<verse number="20">“பின்பு இன்னொருவன் வந்து, ‘ஐயா, இதோ நீர் தந்த ஒரு மினா பணம்; நான் அதை ஒரு கைக்குட்டையில் சுற்றி வைத்திருந்தேன்.</verse>
				<verse number="21">நீர் கடினமான ஒரு மனிதர், ஆனபடியால் நான் பயந்திருந்தேன். நீர் சேர்த்து வைக்காததை எடுக்கின்றவர், விதைக்காததை அறுவடை செய்கின்றவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான்.</verse>
				<verse number="22">“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கின்றேன்; நான் சேர்த்து வைக்காததை எடுக்கின்றவனும், விதைக்காததை அறுவடை செய்கின்றதுமான, கடினமான ஒரு மனிதன் என்று அறிந்திருந்தாயே.</verse>
				<verse number="23">அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வங்கியில் சேர்த்து வைக்கவில்லை? நான் திரும்பி வரும்போது, அந்தப் பணத்தை வட்டியோடு எடுத்திருப்பேனே’ என்றான்.</verse>
				<verse number="24">“பின்பு அவன், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த மினா பணத்தை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினா வைத்திருக்கின்றவனிடத்தில் கொடுங்கள்’ என்றான்.</verse>
				<verse number="25">“அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து மினா பணம் இருக்கின்றதே’ என்றார்கள்.</verse>
				<verse number="26">“அதற்கு அவன், ‘நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உள்ளவன் ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.</verse>
				<verse number="27">நான் தங்கள் மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை எனக்கு முன்பாகக் கொன்று போடுங்கள்’ என்றான்.”</verse>
				<verse number="28">இயேசு இவைகளைச் சொன்ன பின்பு, எருசலேமை நோக்கி முன்னே நடந்து சென்றார்.</verse>
				<verse number="29">அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு அருகில் வந்தபோது, தம்முடைய சீடர்களில் இருவரை அழைத்து,</verse>
				<verse number="30">“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச் சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்.</verse>
				<verse number="31">யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்கு தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார்.</verse>
				<verse number="32">இப்படியாக அனுப்பப்பட்டவர்கள் போனபோது, அவர் தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே கழுதைக்குட்டி அங்கே இருப்பதைக் கண்டார்கள்.</verse>
				<verse number="33">அவர்கள் அதை அவிழ்க்கின்றபோது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="34">அதற்கு அவர்கள், “ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள்.</verse>
				<verse number="35">அவர்கள் அதை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் மேலாடைகளை அந்தக் கழுதைக்குட்டியின் மீது போட்டு, அதன்மீது இயேசுவை உட்கார வைத்தார்கள்.</verse>
				<verse number="36">அவர் போய்க் கொண்டிருக்கையில், மக்கள் தங்கள் மேலாடைகளை வீதியிலே விரித்தார்கள்.</verse>
				<verse number="37">ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகின்ற, பாதைக்கு அருகில் இயேசு வந்தபோது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்:</verse>
				<verse number="38">“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!”</verse>
				<verse number="39">மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடர்களைக் கண்டியும்” என்றார்கள்.</verse>
				<verse number="40">அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்கள் பேசாமல் மௌனமாய் இருந்தால், இந்தக் கற்களே சத்தமிடும்” என்றார்.</verse>
				<verse number="41">அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது,</verse>
				<verse number="42">“உங்களுக்குச் சமாதானத்தைத் தரக் கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்பொழுதோ, அது உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கின்றது.</verse>
				<verse number="43">உங்கள் பகைவர்கள், பட்டணத்தைச் சுற்றி போர்க்கள அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கி,</verse>
				<verse number="44">உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கின்ற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிக்கும் நாட்கள் வரும். அத்துடன், ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இராதபடி, பட்டணத்தைத் தரைமட்டமாக்கி விடுவார்கள். ஏனெனில், இறைவனின் வருகையை நீங்கள் அறிந்துகொள்ளவில்லையே” என்றார்.</verse>
				<verse number="45">பின்பு அவர் ஆலய வளாகத்துக்குள் போய், அங்கே பொருட்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார்.</verse>
				<verse number="46">அவர் அவர்களிடம், “ ‘எனது வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதியிருக்கிறதே; ஆனால் நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கி விட்டீர்கள்” என்றார்.</verse>
				<verse number="47">அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களும் அவரைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள்.</verse>
				<verse number="48">இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.</verse>
			</chapter>
			<chapter number="20">
				<verse number="1">ஒரு நாள் இயேசு ஆலயத்தில் போதித்துக்கொண்டும், நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டும் இருந்தபோது தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், சமூகத் தலைவர்களுடன் ஒன்றுசேர்ந்து அவரிடம் வந்து,</verse>
				<verse number="2">“நீர் எந்த அதிகாரத்தினால் இவற்றைச் செய்கின்றீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="3">அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்.</verse>
				<verse number="4">யோவானின் ஞானஸ்நானம் பரலோகத்திலிருந்து வந்ததா, அல்லது மனிதரிடமிருந்து வந்ததா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="5">அவர்கள் தங்களுக்குள்ளே அதைக் குறித்து கலந்து பேசி, “ ‘அது பரலோகத்திலிருந்து வந்தது’ என்று நாம் சொல்வோமானால், ‘நீங்கள் ஏன் யோவானை விசுவாசிக்கவில்லை?’ என்று இவர் நம்மைக் கேட்பார்.</verse>
				<verse number="6">‘அது மனிதரிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், எல்லா மக்களும் நம்மைக் கல்லால் அடிப்பார்கள்; ஏனெனில் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று அவர்கள் நம்புகிறார்களே” என்று சொன்னார்கள்.</verse>
				<verse number="7">எனவே அவர்கள் இயேசுவிடம், “அது எங்கிருந்து வந்ததோ, எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.</verse>
				<verse number="8">அதற்கு இயேசு, “எந்த அதிகாரத்தினால் நான் இதைச் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.</verse>
				<verse number="9">இயேசு தொடர்ந்து, மக்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கினான். அவன் அதைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, நீண்ட காலத்திற்கு ஒரு பயணம் சென்றான்.</verse>
				<verse number="10">அறுவடைக் காலத்தின்போது திராட்சைத் தோட்டத்திலிருந்து, தனது பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக, தோட்டத்தின் சொந்தக்காரன் தனது வேலைக்காரனை குத்தகைக்காரர்களிடம் அனுப்பினான். ஆனால் அந்த குத்தகைக்காரர்களோ, அவனை அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.</verse>
				<verse number="11">தோட்டத்தின் சொந்தக்காரன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.</verse>
				<verse number="12">மூன்றாவது முறையும் வேறொருவனை அனுப்பினான். அவர்கள் அவனையும் காயப்படுத்தி, வெளியே துரத்திவிட்டார்கள்.</verse>
				<verse number="13">“அப்போது திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், ‘நான் என்ன செய்வேன்? நான் நேசிக்கின்ற என் மகனை அனுப்புவேன்; ஒருவேளை, அவர்கள் அவனுக்கு மரியாதை கொடுப்பார்கள்’ என்றான்.</verse>
				<verse number="14">“ஆனால் குத்தகைக்காரர்கள், மகனைக் கண்டபோது, ‘இவனே உரிமையாளனின் வாரிசு, இவனைக் கொலை செய்வோம்; அப்போது இந்த உரிமைச் சொத்து நம்முடையதாகும்’ என தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="15">அவ்வாறே, அவர்கள் அவனைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, கொலை செய்தார்கள். “அப்படியானால், அந்த திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன், அவர்களுக்கு என்ன செய்வான்?</verse>
				<verse number="16">அவன் வந்து, அந்த குத்தகைக்காரர்களைக் கொலை செய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்” என்றார். மக்கள் இதைக் கேட்டபோது, “அப்படி ஒருபோதும் ஆகாதிருப்பதாக!” என்றார்கள்.</verse>
				<verse number="17">அப்போது இயேசு அவர்களை உற்று நோக்கி, “அப்படியானால், “ ‘கட்டடம் கட்டுகின்றவர்கள் நிராகரித்த கல்லே, மூலைக்குத் தலைக்கல் ஆயிற்று’ என்று, எழுதியிருப்பதன் அர்த்தம் என்ன?</verse>
				<verse number="18">அந்தக் கல்லின் மேல் விழுகின்ற ஒவ்வொருவனும், துண்டு துண்டாகச் சிதறிப் போவான். அந்தக் கல் யார்மேல் விழுகிறதோ, அது அவனை நசுக்கிப் போடும்” என்றார்.</verse>
				<verse number="19">அவர் இந்த உவமையை தங்களுக்கு எதிராகவே சொன்னார் என்று நீதிச்சட்ட ஆசிரியர்களும், தலைமை மதகுருக்களும் அறிந்து, அவரைக் கைது செய்ய வழி தேடினார்கள். ஆனாலும், அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்தார்கள்.</verse>
				<verse number="20">இயேசுவை மிகக் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்த அவர்கள், நீதிமான்களைப் போல் பாசாங்கு செய்யும் ஒற்றர்களை அவரிடம் அனுப்பினார்கள். அவர்களோ இயேசு சொல்லும் வார்த்தையினால் அவரைக் குற்றம் சாட்டி, ஆளுநரின் சட்ட வரையறைக்குள்ளான அதிகாரத்திற்கு ஒப்படைக்க நினைத்தார்கள்.</verse>
				<verse number="21">எனவே அந்த ஒற்றர்கள் அவரிடம், “போதகரே, நீர் சரியானதையே பேசுகின்றீர் என்றும், போதிக்கின்றீர் என்றும் நாங்கள் அறிவோம். நீர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்றும், இறைவனின் வழியை உண்மையின்படியே போதிக்கிறீர் என்றும் அறிவோம்.</verse>
				<verse number="22">நாங்கள், ரோம பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியா, இல்லையா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="23">அவர் அவர்களின் தந்திரத்தை அறிந்து கொண்டவராய் அவர்களிடம்,</verse>
				<verse number="24">“ஒரு தினாரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள். இந்த நாணயத்திலே இருக்கும் உருவமும், பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “பேரரசன் சீசருடையது” என்று பதிலளித்தார்கள்.</verse>
				<verse number="25">அவர் அவர்களிடம், “அப்படியானால் சீசருக்குரியதை சீசருக்கும், இறைவனுக்குரியதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="26">மக்களுக்கு முன்பாக அவர் சொன்ன வார்த்தைகளிலே, அவர்களால் அவர்மீது குற்றம் காண முடியவில்லை. அவர்கள் அவருடைய பதிலைக் கேட்டு, வியப்புற்று மௌனமானார்கள்.</verse>
				<verse number="27">உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லும் சதுசேயரில் சிலர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.</verse>
				<verse number="28">அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளை இல்லாதவனாய் இறந்துபோனால், இறந்தவனின் மனைவியை, அவனது சகோதரன் திருமணம் செய்து, இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியை உருவாக்க வேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்.</verse>
				<verse number="29">இப்படியாக, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்து போனான்.</verse>
				<verse number="30">இரண்டாவது சகோதரனும்,</verse>
				<verse number="31">பின் மூன்றாவது சகோதரனுமாக, முறையே அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவர்களாக இறந்து போனார்கள். அப்படியே ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாமல் இறந்து போனார்கள்.</verse>
				<verse number="32">இறுதியில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.</verse>
				<verse number="33">அப்படியானால், இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="34">இயேசு அதற்கு அவர்களிடம், “இந்த வாழ்விலே மக்கள் திருமணம் செய்கின்றார்கள், திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள்.</verse>
				<verse number="35">ஆனால் வரப் போகின்ற காலத்தையும் இறந்தோரின் உயிர்த்தெழுதலையும் அடைந்து, அதை அனுபவிக்க தகுதியுள்ளவர்களாய் கருதப்படுகின்றவர்களோ, அப்போது திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் இல்லை.</verse>
				<verse number="36">அவர்களால் இறந்து போகவும் முடியாது; ஏனெனில் அவர்கள் தூதர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலுக்குரிய பிள்ளைகளாயிருப்பதால், அவர்கள் இறைவனின் பிள்ளைகள்.</verse>
				<verse number="37">இறந்தோர் உயிர்த்தெழுகிறார்கள் என்ற உண்மையை, மோசேயும்கூட முட்புதரைப் பற்றிய அவரது பதிவிலே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். ஏனெனில் அவர் கர்த்தரை ஆபிரகாமின் இறைவன் என்றும், ஈசாக்கின் இறைவன் என்றும், யாக்கோபின் இறைவன் என்றும் அழைக்கின்றார்.</verse>
				<verse number="38">அவர் இறந்தவர்களின் இறைவனல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கின்றார். ஏனெனில், இறைவனைப் பொறுத்தவரையில் அவர்கள் எல்லோரும் உயிருள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="39">நீதிச்சட்ட ஆசிரியர்களில் சிலர், “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றார்கள்.</verse>
				<verse number="40">அதன்பின்பு, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.</verse>
				<verse number="41">இயேசு அவர்களிடம், “மேசியாவை தாவீதின் மகன் என்று சொல்கின்றார்களே, அது எப்படி?</verse>
				<verse number="42">சங்கீதப் புத்தகத்தில் தாவீதும், “கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னதாவது: ‘நீர் எனது வலது பக்கத்தில் அமர்ந்திரும்,</verse>
				<verse number="43">நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திரும்.’</verse>
				<verse number="44">தாவீது அவரை ஆண்டவர் என்று அழைக்கின்றபடியால், அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்றார்.</verse>
				<verse number="45">மக்கள் எல்லோரும் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு தமது சீடர்களிடம்,</verse>
				<verse number="46">“நீதிச்சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்து திரிவதையும், சந்தை கூடும் இடங்களில் வாழ்த்துதல்களைப் பெறுவதையும் விரும்புகிறார்கள். ஜெபஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், விருந்துகளிலே மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.</verse>
				<verse number="47">அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளையடிப்பதுடன், மற்றவர்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட மன்றாடுதலைச் செய்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="21">
				<verse number="1">இயேசு ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் தமது காணிக்கைகளை ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகளில் போடுவதைக் கண்டார்.</verse>
				<verse number="2">ஒரு ஏழை விதவை, இரண்டு சிறிய செப்பு நாணயங்களை அதிலே போடுவதையும் அவர் கண்டார்.</verse>
				<verse number="3">அப்போது அவர், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன். இந்த ஏழை விதவை, மற்ற எல்லோரைப் பார்க்கிலும் அதிகமாய் போட்டிருக்கிறாள்.</verse>
				<verse number="4">மற்றவர்கள் எல்லோரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; ஆனால் இவளோ தனது ஏழ்மையிலிருந்து, தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்” என்றார்.</verse>
				<verse number="5">அவருடைய சீடர்களில் சிலர், “ஆலயம் அழகான கற்களாலும் இறைவனுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகளினாலும் எவ்வளவாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்,</verse>
				<verse number="6">“நீங்கள் இங்கே காண்கின்ற இவையெல்லாம், ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் இருக்காதவாறு இடிக்கப்பட்டு, இவை அனைத்தும் தரைமட்டமாக்கப்படும் நாட்கள் வரும்” என்றார்.</verse>
				<verse number="7">அவர்கள் அவரிடம், “போதகரே, இவை எப்போது நிகழும்? இவை நிகழப் போவற்கான அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="8">அதற்கு அவர், “நீங்கள் ஏமாற்றப்படாதபடி எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அநேகர் ‘நான்தான் அவர்’ என்றும், ‘காலம் நெருங்கிவிட்டது’ என்றும் சொல்லிக்கொண்டு, என் பெயராலே வருவார்கள். அவர்களைப் பின்பற்ற வேண்டாம்.</verse>
				<verse number="9">நீங்கள் யுத்தங்களையும், கிளர்ச்சிகளையும் கேள்விப்படும்போது பயப்பட வேண்டாம். முதலில் இவையெல்லாம் நிகழும். ஆனாலும், முடிவோ உடனே வராது” என்றார்.</verse>
				<verse number="10">பின்பு அவர் அவர்களிடம் சொன்னதாவது: “இனத்திற்கு விரோதமாய் இனமும், நாட்டிற்கு விரோதமாய் நாடும் எழும்.</verse>
				<verse number="11">பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கரத் தோற்றங்களும், வானத்திலிருந்து மாபெரும் அடையாளங்களும் தோன்றும்.</verse>
				<verse number="12">“ஆனால் இவை எல்லாவற்றிற்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை ஜெபஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசருக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவையெல்லாம் என் பெயரின் காரணமாகவே நிகழும்.</verse>
				<verse number="13">நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும்.</verse>
				<verse number="14">ஆனாலும், எப்படிப் பதில் கொடுக்கலாம் என்று முன்கூட்டியே கவலைப்படாமல் இருக்க உங்கள் மனதில் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="15">ஏனெனில், உங்கள் எதிரிகளில் எவனும் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ முடியாத அளவுக்கு, வார்த்தைகளையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.</verse>
				<verse number="16">நீங்கள் பெற்றோர்களாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும்கூட காட்டிக் கொடுக்கப்படுவீர்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொலை செய்வார்கள்.</verse>
				<verse number="17">என் பெயரின் பொருட்டு எல்லா மனிதரும் உங்களை வெறுப்பார்கள்.</verse>
				<verse number="18">ஆனால் உங்கள் தலையிலுள்ள ஒரு முடிகூட அழிந்து போகாது.</verse>
				<verse number="19">நீங்கள் உறுதியாய் இருப்பதால், நித்திய வாழ்வை ஆதாயப்படுத்திக்கொள்வீர்கள்.</verse>
				<verse number="20">“இராணுவத்தினர் எருசலேமைச் சுற்றிவளைத்திருப்பதை நீங்கள் காணும்போது, அதற்கு அழிவு நெருங்கிவிட்டது என அறிந்துகொள்வீர்கள்.</verse>
				<verse number="21">அப்போது யூதேயாவில் இருக்கின்றவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகட்டும். எருசலேம் நகரத்தில் இருக்கின்றவர்கள் வெளியேறட்டும். நாட்டுப்புறங்களில் இருக்கின்றவர்கள் நகரத்துக்குள் போகாமல் இருக்கட்டும்.</verse>
				<verse number="22">ஏனெனில் எழுதப்பட்டிருப்பவை எல்லாம் நிறைவேறப் போகும் தண்டனையின் காலம் இதுவே.</verse>
				<verse number="23">அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் ஐயோ பயங்கரமாய் இருக்கும்! தேசத்திலே கொடிய துன்பமும் உண்டாகும். இந்த மக்களுக்கு எதிராக கடுங்கோபமும் வெளிப்படும்.</verse>
				<verse number="24">அவர்கள் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். அனைத்து நாடுகளுக்கும் கைதிகளாய் கொண்டு செல்லப்படுவார்கள்; யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும் வரை, எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும்.</verse>
				<verse number="25">“சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் ஏற்படும். பூமியிலோ மக்கள் கடலின் முழக்கத்தினாலும், கொந்தளிப்பினாலும், பெருந்துன்பத்திற்கும் கலக்கத்திற்கும் உட்படுவார்கள்.</verse>
				<verse number="26">வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படுவதனால், உலகத்திற்கு என்ன ஏற்படுமோ என்று பயத்தினால், மனிதர்கள் மனம் சோர்ந்து போவார்கள்.</verse>
				<verse number="27">அவ்வேளையில் மனுமகன், வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் மேகத்தில் வருவதை மனிதர்கள் காண்பார்கள்.</verse>
				<verse number="28">இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் உங்கள் தலைகளை நிமிர்த்தி எழுந்து நில்லுங்கள். ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”</verse>
				<verse number="29">அத்துடன், இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “அத்தி மரத்தையும் மற்ற எல்லா மரங்களையும் நோக்கிப் பாருங்கள்.</verse>
				<verse number="30">அவை துளிர் விடும்போது, கோடை காலம் நெருங்கிவிட்டது என்று நீங்களே பார்த்து அறிந்துகொள்கின்றீர்கள்.</verse>
				<verse number="31">அவ்வாறே, இவையெல்லாம் நிகழ்வதை நீங்கள் காணும்போது, இறைவனுடைய அரசு சமீபமாய் வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="32">“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், இவையெல்லாம் நடந்து முடியும் வரைக்கும், இந்தத் தலைமுறையினர் ஒழிந்து போக மாட்டார்கள்.</verse>
				<verse number="33">வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்து போகாது.</verse>
				<verse number="34">“களியாட்டத்தினாலும், மதுபான வெறியினாலும், வாழ்க்கைக்குரிய கவலைகளினாலும் உங்கள் இருதயங்கள் பாரமடைந்து போகாதபடி நீங்கள் கவனமாய் இருங்கள்; ஏனெனில் அந்த நாள், ஒரு கண்ணிப் பொறியைப் போல எதிர்பாராத விதத்தில் உங்கள் மீது வரும்.</verse>
				<verse number="35">பூமி முழுவதிலும் வாழ்கின்ற எல்லோர் மேலும் அது வரும்.</verse>
				<verse number="36">எப்போதும் விழிப்புடன் இருந்து, நடக்கப் போகின்ற எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்காகவும், மனுமகனுக்கு முன்பாக உங்களால் நிற்கக் கூடிய வல்லமை இருக்கவும் மன்றாடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="37">இயேசு ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்து, இரவு நேரங்களிலோ வெளியே போய், ஒலிவமலை எனப்பட்ட குன்றில் தங்கி வந்தார்.</verse>
				<verse number="38">ஆலயத்திலே அவர் சொல்வதைக் கேட்பதற்காக, எல்லா மக்களும் அதிகாலையிலேயே எழுந்து அவரிடம் வந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="22">
				<verse number="1">பஸ்கா என அழைக்கப்படும், புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகை நெருங்கி இருந்தது.</verse>
				<verse number="2">தலைமை மதகுருக்களும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கொலை செய்வதற்கு வழி தேடிக் கொண்டிருந்தார்கள், ஆனாலும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள்.</verse>
				<verse number="3">அப்போது பன்னிருவருள் ஒருவனான, ஸ்காரியோத்து என அழைக்கப்பட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.</verse>
				<verse number="4">யூதாஸ், தலைமை மதகுருக்களிடமும் ஆலயத்தின் காவல் அதிகாரிகளிடமும் போய், தான் இயேசுவை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று அவர்களுடன் கலந்து பேசினான்.</verse>
				<verse number="5">அவர்கள் மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் கொடுக்க இணங்கினார்கள்.</verse>
				<verse number="6">அவனும் அதற்குச் சம்மதித்து, மக்கள் கூடியிருக்காத வேளையில் அவர்களிடம் இயேசுவைப் பிடித்துக் கொடுப்பதற்குச் சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="7">அப்போது, பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்படும் நாளான புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது.</verse>
				<verse number="8">இயேசு பேதுருவிடமும், யோவானிடமும், “நீங்கள் போய், நாம் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.</verse>
				<verse number="9">அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கே அதற்கான ஆயத்தத்தைச் செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="10">அவர் அவர்களிடம், “நீங்கள் பட்டணத்திற்குள் போகும்போது, தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகின்ற ஒரு மனிதனைச் சந்திப்பீர்கள். அவன் போகும் வீட்டிற்குள், அவனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்.</verse>
				<verse number="11">வீட்டுச் சொந்தக்காரனிடம், ‘நான் எனது சீடர்களுடன் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே இருக்கின்றது என போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ என்று கேளுங்கள்.</verse>
				<verse number="12">தேவையான அனைத்து தளபாடங்களுடன் கூடிய, ஒரு பெரிய மேல்வீட்டு அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொன்னார்.</verse>
				<verse number="13">அவர்கள் புறப்பட்டுப் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருக்கக் கண்டு, பஸ்காவை அனுசரிக்க ஆயத்தம் செய்தார்கள்.</verse>
				<verse number="14">அதற்கான நேரம் வந்தபோது, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பந்தியில் உட்கார்ந்தார்கள்.</verse>
				<verse number="15">அவர் அவர்களிடம், “நான் துன்பம் அனுபவிக்கும் முன்னதாக, உங்களுடனே இந்தப் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தேன்.</verse>
				<verse number="16">இறைவனுடைய அரசில் இவையெல்லாம் நிறைவேறும் வரைக்கும், இதை நான் மீண்டும் சாப்பிட மாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="17">பின்பு, அவர் கிண்ணத்தை எடுத்து, நன்றி செலுத்தி, “இதை எடுத்து உங்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="18">ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இறைவனுடைய அரசு வரும் வரைக்கும் திராட்சைப் பழரசத்தை இனி நான் குடிக்க மாட்டேன்” என்றார்.</verse>
				<verse number="19">பின்பு, அவர் அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி, அதை அவர்களுக்குக் கொடுத்து, “உங்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற என்னுடைய உடல்; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.</verse>
				<verse number="20">அவ்விதமாகவே உணவை முடித்த பின்பு, அந்தக் கிண்ணத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தக் கிண்ணம் உங்களுக்காக சிந்தப்படுகின்ற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை.</verse>
				<verse number="21">ஆனாலும், என்னைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனின் கையோ, என்னோடுதான் இந்தப் பந்தியிலே இருக்கின்றது.</verse>
				<verse number="22">நியமிக்கப்பட்டிருக்கிறபடியே மனுமகன் போக வேண்டும். ஆனால் அவரைக் காட்டிக் கொடுக்கின்றவனுக்கு ஐயோ பேரழிவு!” என்றார்.</verse>
				<verse number="23">அவர்களோ, தங்களில் யார் அப்படிச் செய்வார்கள்? என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="24">மேலும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்பதுபற்றி, ஒரு வாக்குவாதமும் மூண்டது.</verse>
				<verse number="25">அப்போது இயேசு அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் அரசர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்; அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிறவர்கள், ‘கொடைவள்ளல்கள்’ என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்கின்றார்கள்.</verse>
				<verse number="26">ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்களில் பெரியவனாய் இருக்கின்றவன், சிறியவனைப் போல் இருக்க வேண்டும். ஆளுகை செய்கின்றவன், பணிவிடை செய்கின்றவனைப் போல் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="27">பந்தியில் அமர்ந்திருப்பவனா அல்லது அதில் பணி செய்கின்றவனா, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? ஆனால் நானோ, உங்களிடையே பணி செய்கின்றவனைப் போல் இருக்கின்றேன்.</verse>
				<verse number="28">எனது சோதனைகளில் நீங்களே என்னுடன் நின்றவர்கள்.</verse>
				<verse number="29">எனவே, என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தித் தந்தது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறேன்.</verse>
				<verse number="30">இதனால் நீங்களும் என்னுடைய அரசிலே, என்னுடைய பந்தியில் உணவுண்டு, அருந்துவீர்கள். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கின்றவர்களாய் அரியணையில் உட்காருவீர்கள்.</verse>
				<verse number="31">“சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பது போல் உங்கள் எல்லோரையும் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான்.</verse>
				<verse number="32">ஆனாலும் உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். அதிலிருந்து நீ திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பலப்படுத்து” என்றார்.</verse>
				<verse number="33">அப்போது அவன் அவரிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், உயிர் துறக்கவும் ஆயத்தமாய் இருக்கின்றேன்” என்றான்.</verse>
				<verse number="34">அதற்கு இயேசு, “பேதுருவே, இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாக, என்னை உனக்குத் தெரியாது என்று நீ மூன்று முறை மறுதலிப்பாய் என நான் உனக்குச் சொல்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="35">பின்பு, இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, காலணிகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள்.</verse>
				<verse number="36">அவர் அவர்களிடம், “இப்போது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், வாள் இல்லாதவன் தன்னுடைய மேலாடையை விற்று, வாள் ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும்.</verse>
				<verse number="37">‘குற்றவாளிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்’ என்று எழுதியிருப்பது என்னில் நிறைவேற வேண்டும் என நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஆம், என்னைக் குறித்து எழுதப்பட்டிருப்பது நிறைவேறப் போகின்றது” என்றார்.</verse>
				<verse number="38">அப்போது சீடர்கள் அவரிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள். அதற்கு அவர், “அதுபோதும்” என்றார்.</verse>
				<verse number="39">வழக்கம் போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிப் போனார்கள்.</verse>
				<verse number="40">அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, அவர் அவர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடி மன்றாடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="41">அவர் அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப் போய், முழந்தாழிட்டு மன்றாடினார்.</verse>
				<verse number="42">அவர், “பிதாவே! உமக்கு விருப்பமானால் என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்து விடும்; ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்றார்.</verse>
				<verse number="43">ஒரு தூதன் பரலோகத்திலிருந்து அவருக்கு முன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான்.</verse>
				<verse number="44">அவர் மிகவும் வேதனையடைந்தவராய், அதி தீவிரமாக மன்றாடினார். அவருடைய வியர்வை இரத்தத் துளிகளைப் போல தரையில் விழுந்தது.</verse>
				<verse number="45">அவர் மன்றாடிவிட்டு எழுந்து, தமது சீடர்களிடம் திரும்பவும் சென்றார். அப்போது அவர்கள் கவலையினால் சோர்வுற்று, நித்திரையாய் இருப்பதைக் கண்டார்.</verse>
				<verse number="46">அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் நித்திரை செய்கின்றீர்கள்? சோதனைக்கு உள்ளாகாதபடி, எழுந்திருந்து மன்றாடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="47">இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக்கொண்டு வந்தான். அவன் இயேசுவை முத்தம் இடுவதற்காக அவருக்குச் சமீபமாய் வந்தான்.</verse>
				<verse number="48">இயேசுவோ அவனிடம், “யூதாஸ், நீ மனுமகனை முத்தத்தினால் காட்டிக் கொடுக்கின்றாயோ?” என்றார்.</verse>
				<verse number="49">இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப் போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="50">அவர்களில் ஒருவன், தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கி, அவனது வலது காதை வெட்டினான்.</verse>
				<verse number="51">ஆனால் இயேசுவோ, “போதும், இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார்.</verse>
				<verse number="52">அப்போது இயேசு, தம்மைப் பிடித்துச் செல்ல வந்திருந்த தலைமை மதகுருக்களையும் ஆலயத்தின் காவல் அதிகாரிகளையும் சமூகத் தலைவர்களையும் பார்த்து, “நீங்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து என்னைப் பிடிப்பதற்கு, நான் ஒரு ஆபத்தான கொள்ளைக்காரனா?</verse>
				<verse number="53">நான் ஒவ்வொரு நாளும் உங்களுடனே ஆலய முற்றத்தில் இருந்தேன்; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் இது உங்கள் நேரம், இருள் அதிகாரம் செலுத்தும் நேரம்” என்றார்.</verse>
				<verse number="54">அவர்கள் அவரைப் பிடித்து, தலைமை மதகுருவின் வீட்டிற்குக் கொண்டுபோனார்கள். பேதுரு சற்றுத் தூரத்திலே பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="55">அந்த வீட்டு முற்றத்தின் நடுவில், சிலர் நெருப்பு மூட்டி, அதன் அருகே ஒன்றாய் உட்கார்ந்தார்கள். அப்போது பேதுருவும் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டான்.</verse>
				<verse number="56">பேதுரு அங்கே உட்கார்ந்திருப்பதை, ஒரு வேலைக்காரப் பெண் நெருப்பின் வெளிச்சத்திலே கண்டாள். அவள் அவனை உற்றுப் பார்த்து, “இவன், இயேசுவோடு இருந்தான்” என்றாள்.</verse>
				<verse number="57">ஆனால் பேதுருவோ அந்தப் பெண்ணை நோக்கி, “அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தான்.</verse>
				<verse number="58">சிறிது நேரத்தின் பின் வேறொருவன் அவனைக் கண்டு, “நீயும் அவர்களில் ஒருவன் தான்” என்றான். அதற்குப் பேதுரு அந்த மனிதனை நோக்கி, “இல்லை; நான் அவர்களில் ஒருவன் அல்ல” என்றான்.</verse>
				<verse number="59">ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், “நிச்சயமாகவே இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்” என்றான்.</verse>
				<verse number="60">அதற்குப் பேதுரு அந்த மனிதனை நோக்கி, “நீ எதைப் பற்றிப் பேசுகின்றாய் என்றே எனக்குத் தெரியாது” என்றான். அவன் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று.</verse>
				<verse number="61">அப்போது ஆண்டவர் திரும்பி, பேதுருவை நேருக்கு நேராய் பார்த்தார். உடனே, “இன்று சேவல் கூவுவதற்கு முன், நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் சொன்ன வார்த்தை, பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது.</verse>
				<verse number="62">அவன் வெளியே போய் மனம் வெதும்பி அழுதான்.</verse>
				<verse number="63">இயேசுவைக் காவல் செய்து கொண்டிருந்தவர்கள், தொடர்ந்து அவரை ஏளனம் செய்யவும் அடிக்கவும் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="64">அவர்கள் அவருடைய கண்களைக் கட்டிவிட்டு, “உன்னை அடித்தது யார் என்று இறைவாக்காகச் சொல்” என வற்புறுத்திக் கேட்டார்கள்.</verse>
				<verse number="65">அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள்.</verse>
				<verse number="66">பொழுது விடிந்தபோது, தலைமை மதகுருக்களையும் நீதிச்சட்ட ஆசிரியர்களையும் உள்ளடக்கிய யூத சமூகத் தலைவர்களின் கூட்டம் கூடியது. அவர்கள் இயேசுவை, தங்கள் நியாயசபைக்கு முன்பாக நிறுத்தி,</verse>
				<verse number="67">அவரிடம், “நீ மேசியா தானா? அப்படியென்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள். அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் அதை விசுவாசிக்க மாட்டீர்கள்.</verse>
				<verse number="68">நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும், நீங்கள் அதற்குப் பதில் சொல்ல மாட்டீர்கள்.</verse>
				<verse number="69">ஆனால் இப்போதிலிருந்தே, வல்லமையுள்ள இறைவனுடைய வலது பக்கத்தில் மனுமகன் அமர்ந்திருப்பார்” என்றார்.</verse>
				<verse number="70">அப்போது அவர்கள் எல்லோரும் அவரிடம், “அப்படியானால் நீ இறைவனின் மகனோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நானே அவர் என்பதை, நீங்களே சொல்லிவிட்டீர்கள்” எனப் பதிலளித்தார்.</verse>
				<verse number="71">அப்போது அவர்கள், “இதைவிட நமக்கு வேறு சாட்சிகள் தேவையா? அவனுடைய வாயிலிருந்தே அதை நாம் கேட்டோமே” என்றார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="23">
				<verse number="1">பின்பு கூடியிருந்த கூட்டத்தார் அனைவரும் எழுந்து, அவரைப் பிலாத்துவினிடம் கொண்டுபோனார்கள்.</verse>
				<verse number="2">அங்கே அவர்கள், “இவன் மக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்த முயன்றதை நாங்கள் கண்டோம். ரோமப் பேரரசனாகிய சீசருக்கு வரி செலுத்துவதை இவன் எதிர்ப்பதோடு, தானே மேசியாவாகிய அரசன் என்றும் சொல்லிக்கொள்கின்றான்” என அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.</verse>
				<verse number="3">எனவே பிலாத்து இயேசுவிடம், “நீ யூதர்களுடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீர் சொல்கின்றபடியேதான்” என்றார்.</verse>
				<verse number="4">பிலாத்து தலைமை மதகுருக்களையும், கூடியிருந்த மக்களையும் பார்த்து, “இவனுக்கு விரோதமாய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை” என்றான்.</verse>
				<verse number="5">ஆனால் அவர்களோ, “இவன் யூதேயா முழுவதிலும், கலிலேயா தொடங்கி இங்கு வரையிலும், தனது போதனையினாலே மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="6">அதைக் கேட்ட பிலாத்து, “இவன் ஒரு கலிலேயனா?” என்றான்.</verse>
				<verse number="7">இயேசு, ஏரோதுவின் நீதிச்சட்ட அதிகாரத்துக்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்தபோது, அவன் அவரை ஏரோதுவினிடத்திற்கு அனுப்பி வைத்தான். அவ்வேளையில் ஏரோதுவும் எருசலேமுக்கு வந்திருந்தான்.</verse>
				<verse number="8">ஏரோது, இயேசுவைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டான். ஏனெனில், நீண்ட காலமாக அவன் அவரைப் பார்க்க விரும்பியிருந்தான். அவன் அவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்ததனால், அவரால் செய்யப்படும் சில அற்புதங்களைப் பார்க்க விரும்பினான்.</verse>
				<verse number="9">அவன் அவரிடம், அநேக கேள்விகளைக் கேட்டான். ஆனால் இயேசுவோ அவனுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை.</verse>
				<verse number="10">தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் அங்கே நின்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்கள்.</verse>
				<verse number="11">அப்போது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு அலங்காரமான ஒரு மேலாடையை அணிவித்து, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள்.</verse>
				<verse number="12">அன்று முதல், ஏரோதுவும் பிலாத்துவும் நண்பர்கள் ஆனார்கள். அதற்கு முன் அவர்கள் இருவரும் பகைவர்களாய் இருந்தார்கள்.</verse>
				<verse number="13">பிலாத்து, தலைமை மதகுருக்களையும் ஆளுநர்களையும் மக்களையும் ஒன்றாக அழைத்து,</verse>
				<verse number="14">அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவனாக என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே இவனை விசாரித்தேன். ஆனால், இவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை.</verse>
				<verse number="15">ஏரோதுவும் இவன்மேல் குற்றம் எதையும் காணவில்லை. ஏனெனில், அவர் இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரணதண்டனை பெறக் கூடிய குற்றம் எதையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவாகிறது.</verse>
				<verse number="16">எனவே நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.</verse>
				<verse number="17">ஏனெனில், பண்டிகையின்போது அவர்களுக்காக அவன் ஒரு கைதியை விடுதலை செய்ய வேண்டியிருந்தது.</verse>
				<verse number="18">அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="19">பரபாஸ் என்பவன், பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலை செய்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.</verse>
				<verse number="20">பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி, திரும்பவும் அவர்களிடம் பேசினான்.</verse>
				<verse number="21">ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="22">மூன்றாவது தடவையாகவும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.</verse>
				<verse number="23">ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேலோங்கியது.</verse>
				<verse number="24">எனவே பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான்.</verse>
				<verse number="25">எனவே, அவர்கள் கேட்டுக் கொண்டபடி, கிளர்ச்சி செய்ததற்காகவும் கொலை செய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸ் என்பவனை விடுதலை செய்தான்; இயேசுவையோ அவர்களுடைய விருப்பப்படி செய்ய ஒப்படைத்தான்.</verse>
				<verse number="26">அவர்கள் இயேசுவை அழைத்துக்கொண்டு போகையில், நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியே சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவன் வந்து கொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மீது வைத்து, இயேசுவுக்குப் பின்னாக அதைச் சுமந்து போகும்படி செய்தார்கள்.</verse>
				<verse number="27">மக்கள் பெரும் கூட்டமாய் அவருக்குப் பின்னே போனார்கள். அந்த மக்கள் கூட்டத்தில், அவருக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள்.</verse>
				<verse number="28">இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்து, “எருசலேம் பெண்களே, எனக்காக அழ வேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.</verse>
				<verse number="29">ஏனெனில், ‘கருத்தரிக்க முடியாத பெண்களும், குழந்தையை பெறாத பெண்களும், பாலூட்டாத பெண்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும்.</verse>
				<verse number="30">“ ‘அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும் சொல்வார்கள்.’</verse>
				<verse number="31">ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்ய மாட்டார்கள்?” என்றார்.</verse>
				<verse number="32">குற்றவாளிகளான வேறு இரண்டு பேரும், மரணதண்டனைக்காக அவருடனேகூட கொண்டுபோகப்பட்டார்கள்.</verse>
				<verse number="33">அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலது பக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.</verse>
				<verse number="34">அப்போது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். அவர்களோ, அவருடைய ஆடைகளைச் சீட்டுப் போட்டு பங்கிட்டுக் கொண்டார்கள்.</verse>
				<verse number="35">இவைகளையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு நின்றபோது, ஆளுநர்களோ அவரை ஏளனம் செய்து, “இவன் மற்றவர்களை இரட்சித்தான்; இவன் இறைவனால் தெரிவு செய்யப்பட்ட அவருடைய மேசியாவாக இருந்தால், தன்னைத் தானே இரட்சித்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.</verse>
				<verse number="36">இராணுவ வீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு புளித்த திராட்சை ரசத்தைக் கொடுத்து,</verse>
				<verse number="37">“நீ யூதருடைய அரசனாய் இருந்தால், உன்னை நீயே விடுவித்துக்கொள்” என்றார்கள்.</verse>
				<verse number="38">அவருக்கு மேலாக இருந்த ஒரு அறிவிப்புப் பலகையில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது: இவர் யூதருடைய அரசன்.</verse>
				<verse number="39">அங்கே தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீர் மேசியா அல்லவா? உன்னையும், எங்களையும் காப்பாற்று” என்று அவரை பழித்துரைத்தான்.</verse>
				<verse number="40">ஆனால் மற்ற குற்றவாளியோ, அவனைக் கண்டித்து, “நீ இறைவனுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் இதே தண்டனைக்கு உட்பட்டிருக்கிறாயே.</verse>
				<verse number="41">நாம் நியாயப்படி தண்டனை பெற்றிருக்கிறோம். நமது செயல்களுக்கேற்றதையே பெற்றிருக்கிறோம். ஆனால் இவரோ, எந்தத் தவறும் செய்யவில்லை” என்றான்.</verse>
				<verse number="42">பின்பு அவன், இயேசுவிடம், “இயேசுவே, உமது அரசில் நீர் வரும்போது, என்னையும் நினைவில் வைத்துக்கொள்ளும்” என்றான்.</verse>
				<verse number="43">அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைச் சொல்கின்றேன், இன்றைக்கே நீ என்னுடன்கூட பரதீசில் இருப்பாய்” என்றார்.</verse>
				<verse number="44">அப்போது நடுப்பகல் வேளையாயிருந்தது, பிற்பகல் மூன்று மணி வரை பூமி முழுவதையும் இருள் மூடியிருந்தது.</verse>
				<verse number="45">சூரியன் ஒளி கொடுக்கவில்லை. ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.</verse>
				<verse number="46">இயேசு உரத்த குரலில், “பிதாவே, உமது கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கின்றேன்” என்று சத்தமிட்டு அழைத்தார். இதைச் சொல்லிவிட்டு, அவர் தமது இறுதி மூச்சை விட்டார்.</verse>
				<verse number="47">நூற்றுக்குத் தளபதி நடந்தவற்றையெல்லாம் கண்டு, “நிச்சயமாகவே, இவர் நீதிமான்” என்று இறைவனை மகிமைப்படுத்தினான்.</verse>
				<verse number="48">இந்தக் காட்சியைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மக்கள் எல்லோரும் அங்கு நடந்ததைக் கண்டபோது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="49">ஆனால் அவரை அறிந்தவர்களும், கலிலேயாவில் இருந்து அவரைப் பின்பற்றி வந்த பெண்களும் தூரத்தில் நின்று இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="50">நியாயசபையின் உறுப்பினர்களில் ஒருவனான, யோசேப்பு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் நல்லவனும், நீதிமானுமாய் இருந்தான்.</verse>
				<verse number="51">யூதேயாவின் ஒரு பட்டணமான, அரிமத்தியா என்ற இடத்தைச் சேர்ந்த அவன் இறைவனுடைய அரசுக்காகக் காத்திருந்தான். அவன் அவர்களுடைய தீர்மானத்திற்கோ, அவர்களுடைய செயலுக்கோ உடன்பட்டிருக்கவில்லை.</verse>
				<verse number="52">அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவினுடைய உடலைத் தரும்படி கேட்டான்.</verse>
				<verse number="53">பின்பு அவன் உடலைக் கீழே இறக்கி, அதை விலையுயர்ந்த ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கற்பாறையில் குடையப்பட்டிருந்த ஒரு கல்லறையில் வைத்தான். அக்கல்லறையில் இதுவரை எவருடைய உடலும் வைக்கப்படவில்லை.</verse>
				<verse number="54">அது சபத் ஓய்வுநாளுக்கு முந்திய நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது.</verse>
				<verse number="55">கலிலேயாவிலிருந்து இயேசுவுடன் வந்திருந்த பெண்கள், யோசேப்புக்குப் பின்னே சென்று, கல்லறையையும், அதில் அவருடைய உடல் எப்படி கிடத்தப்பட்டது என்பதையும் பார்த்தார்கள்.</verse>
				<verse number="56">பின்பு அவர்கள் வீட்டுக்குப் போய், நறுமணப் பொருட்களையும், வாசனைத் தைலங்களையும் ஆயத்தம் செய்தார்கள். ஆனால், ஓய்வு நாளானபடியினாலே, யூத நீதிச்சட்ட கட்டளையின்படியே, அவர்கள் ஒன்றும் செய்யாதிருந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="24">
				<verse number="1">பின்பு, வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிப் போனார்கள்.</verse>
				<verse number="2">அங்கே கல்லறையின் வாசலில் வைக்கப்பட்டிருந்த கல், புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.</verse>
				<verse number="3">அவர்கள் உள்ளே போனபோது, ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.</verse>
				<verse number="4">அவர்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று, மின்னலைப் போல் மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டு பேர் அவர்களின் அருகே நின்றார்கள்.</verse>
				<verse number="5">அந்தப் பெண்களோ பயந்து போய், முகத்தைத் தரையில் பதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருப்பவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?</verse>
				<verse number="6">அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்:</verse>
				<verse number="7">‘மனுமகன் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட வேண்டும்; பின்னர், மூன்றாம் நாளிலே திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.</verse>
				<verse number="8">அப்போது, அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் அவர்களின் ஞாபகத்திற்கு வந்தன.</verse>
				<verse number="9">அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பி வந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொருவரிடமும், மற்றவர்களிடமும் சொன்னார்கள்.</verse>
				<verse number="10">மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்றப் பெண்களும் அப்போஸ்தலர்களுக்கு இதைச் சொன்னார்கள்.</verse>
				<verse number="11">ஆனால் அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. ஏனெனில் இவர்கள் சொன்னது அவர்களுக்கு வெறும் பிதற்றலாகத் தோன்றியது.</verse>
				<verse number="12">ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் குனிந்து உள்ளே பார்த்தபோது, அங்கே, அவரைச் சுற்றியிருந்த விலையுயர்ந்த மெல்லிய துணிகள் மட்டுமே கிடப்பதைக் கண்டு, என்ன நடந்ததோ என்று வியப்புடன் தனக்குள்ளே யோசித்துக்கொண்டு திரும்பிச் சென்றான்.</verse>
				<verse number="13">இதே நாளிலே, சீடர்களில் இரண்டு பேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து பதினொரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.</verse>
				<verse number="14">அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்துப் பேசிக் கொண்டே போனார்கள்.</verse>
				<verse number="15">இப்படியாக, அவர்கள் இந்தக் காரியங்கள் குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடவே போனார்;</verse>
				<verse number="16">ஆனால், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.</verse>
				<verse number="17">அவர் அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து தீவிரமாக பேசிக்கொண்டு போகின்றீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன், அசைவற்று நின்றார்கள்.</verse>
				<verse number="18">அவர்களில் ஒருவனான கிலியோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் எருசலேமுக்கு வந்தவர்களில், கடந்த சில நாட்களாக அங்கு நடந்த காரியங்களைப் பற்றி அறியாத ஒரே ஒருவர் நீர்தானோ?” என்று கேட்டான்.</verse>
				<verse number="19">அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவருக்குப் பதிலாக: “நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக் குறித்தே சொல்கின்றோம்; அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள ஒரு இறைவாக்கினராக இருந்தார்.</verse>
				<verse number="20">தலைமை மதகுருக்களும் எங்கள் ஆளுநர்களும் அவருக்கு மரணதண்டனை கொடுக்கும்படி கையளித்து, அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்;</verse>
				<verse number="21">ஆனால் நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகின்றவர் அவரே என்ற நம்பிக்கையோடு இருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.</verse>
				<verse number="22">அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குப் போனார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="23">அங்கே அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், தாங்கள் இறைதூதர்களைக் கண்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதாக அந்த இறைதூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.</verse>
				<verse number="24">அப்போது எங்களோடு இருந்தவர்களுள் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே இருப்பதைக் கண்டார்கள். ஆனால் இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.</verse>
				<verse number="25">அப்போது இயேசு அவர்களிடம், “அறிவற்றவர்களே, இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்க முடியாதபடி, சிந்தனை குன்றியவர்களே!</verse>
				<verse number="26">மேசியா தமது மகிமைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக, அவர் இந்த வேதனைகளை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருந்ததே?” என்றார்.</verse>
				<verse number="27">பின்பு, மோசேயின் புத்தகங்கள் முதல், எல்லா இறைவாக்கினர்களின் புத்தகங்கள் வரை, வேதவசனங்கள் எல்லாவற்றிலும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்தவைகளை அவர் அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார்.</verse>
				<verse number="28">அவர்கள், தாங்கள் எதிர்நோக்கி போய்க் கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தொடர்ந்து அதற்கு அப்பால் போகின்றவர் போல தம்மைக் காட்டிக் கொண்டார்.</verse>
				<verse number="29">அப்போது அவர்கள், “நீர் எங்களுடன் தங்கும். பொழுது சாயப் போகின்றது; நேரமும் கடந்துவிட்டது” என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். எனவே அவர் அவர்களுடன் தங்குவதற்காக உள்ளே சென்றார்.</verse>
				<verse number="30">இயேசு அவர்களோடு உணவுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்திய பின், அதைத் துண்டுகளாக்கி அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.</verse>
				<verse number="31">அப்போது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போனார்.</verse>
				<verse number="32">அப்போது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கிக் காட்டியபோதும் நம்முடைய உள்ளங்கள் நமக்குள்ளே சுடர்விட்டு பிரகாசித்தன அல்லவா?” என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="33">அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.</verse>
				<verse number="34">அவர்கள் எல்லோரும், “ஆண்டவர் உண்மையாகவே உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்கும் காட்சியளித்துள்ளார்!” என்று சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="35">அப்போது இந்த இருவரும் வழியிலே தங்களுக்கு நடந்ததையும், இயேசு அப்பத்தைத் துண்டுகளாக்கி பங்கிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படியாக அடையாளம் கண்டுகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.</verse>
				<verse number="36">அவர்கள் இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம்” என்று சொன்னார்.</verse>
				<verse number="37">அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்து போனவரின் ஆவியைக் காண்பதாக நினைத்துக் கொண்டார்கள்.</verse>
				<verse number="38">அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழுகிறது?</verse>
				<verse number="39">என்னுடைய கைகளையும் கால்களையும் பாருங்கள். இது நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கின்ற எனக்கு சதையும் எலும்புகளும் இருக்கின்றன, ஆனால் ஒரு ஆவிக்கு அப்படி இருக்காதே” என்றார்.</verse>
				<verse number="40">இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.</verse>
				<verse number="41">அவர்களோ மனமகிழ்ச்சியாலும், வியப்பாலும் நிறைந்திருந்ததால், அவர்களால் அதை இன்னும் நம்ப முடியவில்லை. அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கின்றதா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="42">அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="43">அவர் அதை எடுத்து, அவர்களுக்கு முன்பாகச் சாப்பிட்டார்.</verse>
				<verse number="44">“நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்குச் சொன்னது இதுதான்: மோசேயினுடைய நீதிச்சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருப்பவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.</verse>
				<verse number="45">பின்பு, வேதவசனங்களை அவர்கள் விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.</verse>
				<verse number="46">இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: மேசியா வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.</verse>
				<verse number="47">பாவமன்னிப்பைப் பெறுவதற்கான மனந்திரும்புதல் குறித்து, எருசலேம் தொடங்கி எல்லா இனங்களுக்கும் அவருடைய பெயரில் அறிவிக்க வேண்டும்.</verse>
				<verse number="48">இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="49">என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் அணிவிக்கப்பட்டு வலிமை பெறும் வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.</verse>
				<verse number="50">இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.</verse>
				<verse number="51">இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.</verse>
				<verse number="52">அப்போது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மனமகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="53">அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.</verse>
			</chapter>
		</book>
		<book number="43">
			<chapter number="1">
				<verse number="1">ஆதியிலே வார்த்தையானவர் இருந்தார். அந்த வார்த்தையானவர் இறைவனுடன் இருந்தார். அந்த வார்த்தையானவர் இறைவனாயிருந்தார்.</verse>
				<verse number="2">அவர் ஆதியிலேயே இறைவனுடன் இருந்தார்.</verse>
				<verse number="3">அவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.</verse>
				<verse number="4">அவரில் வாழ்வு இருந்தது; அந்த வாழ்வே மனித இனத்திற்கு வெளிச்சமாயிருந்தது.</verse>
				<verse number="5">அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.</verse>
				<verse number="6">இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய பெயர் யோவான்.</verse>
				<verse number="7">தனக்கூடாக எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாக அந்த ஒளியைப் பற்றி சாட்சி கூறுகின்ற ஒரு சாட்சியாகவே அவன் வந்தான்.</verse>
				<verse number="8">அவன் அந்த ஒளியல்ல, மாறாக அவன் அந்த ஒளிக்கான ஒரு சாட்சியாக வந்தவன்.</verse>
				<verse number="9">ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் அந்த உண்மையான ஒளி, உலகத்திற்குள் வந்து கொண்டிருந்தது.</verse>
				<verse number="10">வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாகப் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை யாரென்று அறிந்துகொள்ளவில்லை.</verse>
				<verse number="11">அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.</verse>
				<verse number="12">ஆயினும் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கான உரிமையை அவர் கொடுத்தார்.</verse>
				<verse number="13">இப்பிள்ளைகள், இரத்த உறவினாலோ மனித தீர்மானத்தினாலோ புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்லர். மாறாக, இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="14">வார்த்தையானவர் மனித உடல் எடுத்து நமது மத்தியில் வாழ்ந்தார், அவரது மகிமையை நாங்கள் கண்கூடாகக் கண்டோம். கிருபையும் உண்மையும் நிறைந்த அந்த மகிமை, பிதாவின் ஒரே மகனுக்கே உரித்தான மகிமை.</verse>
				<verse number="15">யோவான் அவரைக் குறித்து சாட்சி கொடுத்து, “எனக்குப் பின் வருகின்றவர், என்னிலும் மேன்மையானவராய் இருக்கின்றார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னரே இருந்தவர்’ என்று இவரைப்பற்றியே நான் சொன்னேன்” என சத்தமிட்டுச் சொன்னான்.</verse>
				<verse number="16">அவருடைய கிருபையின் நிறைவிலிருந்து, நாம் எல்லோருமே ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறோம்.</verse>
				<verse number="17">ஏனெனில், நீதிச்சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் உண்மையுமோ இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வந்தது.</verse>
				<verse number="18">இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனுக்கு மிக நெருங்கியவரான அவரின் ஒரே மகனே அவரைத் தெரியப்படுத்தினார்.</verse>
				<verse number="19">எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள், யார் இந்த யோவான் என்று விசாரித்து அறியும்படி, மதகுருக்களையும் லேவியரையும் அவனிடம் அனுப்பினார்கள்; அப்போது அவன் சாட்சியாக,</verse>
				<verse number="20">“நான் மேசியா அல்ல” என்று அறிவித்தான். ஆம், அவன் அதனை மறுக்காமல் ஒளிவுமறைவின்றி அறிவித்தான்.</verse>
				<verse number="21">அப்போது அவர்கள் அவனிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியா அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான்.</verse>
				<verse number="22">இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி, நீர் ஒரு பதிலைத் தாரும். உம்மைக் குறித்து நீர் என்ன சொல்கின்றீர்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="23">யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலமாகப் பதிலளித்து, “ ‘கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள்’ என்று, பாலைநிலத்தில் கூப்பிடுகின்றவனுடைய சத்தம் நானே” என்றான்.</verse>
				<verse number="24">பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்</verse>
				<verse number="25">அவனிடம், “நீர் மேசியாவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் ஞானஸ்நானம் கொடுக்கின்றீர்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="26">யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="27">எனக்குப் பின் வருகின்ற அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல” என்றான்.</verse>
				<verse number="28">இவையெல்லாம் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த பெத்தானியாவில் நடைபெற்றன.</verse>
				<verse number="29">மறுநாளிலே, இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ, இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகின்றவர்.</verse>
				<verse number="30">‘எனக்குப் பின் வருகின்றவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கின்றார். ஏனெனில் அவர் எனக்கு முன்பே இருந்தவர்’ என்று நான் சொன்னபோது, இவரைக் குறித்தே சொன்னேன்.</verse>
				<verse number="31">நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்” என்றான்.</verse>
				<verse number="32">பின்பு யோவான், “ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய் பரலோகத்திலிருந்து இறங்கி, அவர்மீது தங்குவதைக் கண்டேன்.</verse>
				<verse number="33">தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் எனக்கு கூறியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்க மாட்டேன். ஆனால் என்னை அனுப்பியவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி, எவர் மேல் தங்குவதை நீ காண்கின்றாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கின்றவர்’ என்று சொல்லியிருந்தார்.</verse>
				<verse number="34">இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.</verse>
				<verse number="35">மறுநாளிலே, திரும்பவும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்று கொண்டிருக்கையில்,</verse>
				<verse number="36">இயேசு அவ்வழியாய் கடந்து போவதைக் கண்டு, “இதோ, இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.</verse>
				<verse number="37">அவன் இப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.</verse>
				<verse number="38">இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருவதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். “ரபீ” என்பதன் அர்த்தம் “போதகர்” என்பதாகும்.</verse>
				<verse number="39">இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், அவர் தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்போது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.</verse>
				<verse number="40">யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.</verse>
				<verse number="41">அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு, கிறிஸ்து என்று அர்த்தமாகும்.</verse>
				<verse number="42">அவன் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தான். இயேசு அவனை உற்று நோக்கி, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்ற சொல்லின் கிரேக்க மொழியாக்கம் பேதுரு என்பதாகும்.</verse>
				<verse number="43">மறுநாளிலே, இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.</verse>
				<verse number="44">அந்திரேயாவையும் பேதுருவையும் போலவே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவன்.</verse>
				<verse number="45">பின்பு பிலிப்பு, நாத்தான்வேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டுகொண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.</verse>
				<verse number="46">நாத்தான்வேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக் கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.</verse>
				<verse number="47">அப்படியே நாத்தான்வேல், தம்மை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக் குறித்து, “இவன் கபடம் ஏதுமில்லாத உண்மையான இஸ்ரயேலன்” என்றார்.</verse>
				<verse number="48">அப்போது நாத்தான்வேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தாயே; அப்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.</verse>
				<verse number="49">அப்போது நாத்தான்வேல், “போதகரே, நீரே இறைவனின் மகன், நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.</verse>
				<verse number="50">அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்தி மரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்கு கூறியதாலா நீ என்னை விசுவாசிக்கின்றாய்? நீ இதைவிட சிறப்பானவற்றைக் காண்பாய்” என்றார்.</verse>
				<verse number="51">மேலும் அவர் தொடர்ந்து, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், பரலோகம் திறந்திருப்பதையும், இறைவனுடைய தூதர்கள் மனுமகனிடத்தில் இருந்து மேலே போவதையும், அவரிடத்திற்கு இறங்கி வருவதையும் காண்பீர்கள்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">இவை நடந்து மூன்றாவது நாளிலே, கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரிலே ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.</verse>
				<verse number="2">இயேசுவும் அவருடைய சீடர்களும்கூட, அந்தத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.</verse>
				<verse number="3">விருந்தாளிகளுக்குப் பரிமாறப்படும் திராட்சை ரசம் தீர்ந்து போனபோது இயேசுவின் தாய் அவரிடம், “திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது” என்று சொன்னாள்.</verse>
				<verse number="4">அப்போது இயேசு, “அம்மணி, இதில் நான் தலையிடுவது அவசியமா? என் நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.</verse>
				<verse number="5">அவரது தாயோ வேலைக்காரரைப் பார்த்து, “அவர் உங்களுக்கு எதைச் சொல்கின்றாரோ, அதைச் செய்யுங்கள்” என்றாள்.</verse>
				<verse number="6">அவ்விடத்தின் அருகில், தண்ணீர் சேகரித்து வைக்கும் ஆறு கற்சாடிகள் இருந்தன. இவ்விதமான கற்சாடிகளையே யூதர்கள் தமது சம்பிரதாய சுத்திகரிப்புக்காக உபயோகித்தார்கள். அந்த கற்சாடி ஒவ்வொன்றும் இருபது, முப்பது குடம் தண்ணீர் கொள்ளக் கூடியவை.</verse>
				<verse number="7">இயேசு வேலைக்காரரிடம், “அந்த கற்சாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள்” என்றார்; அப்படியே அவர்களும் அவை நிரம்பி வழியும் அளவிற்கு நிரப்பினார்கள்.</verse>
				<verse number="8">அப்போது அவர் அவர்களிடம், “இதிலிருந்து அள்ளி, விருந்தின் மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்” என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.</verse>
				<verse number="9">விருந்தின் மேற்பார்வையாளன், திராட்சை ரசமாய் மாறியிருந்த அந்தத் தண்ணீரைச் சுவைத்துப் பார்த்தான். அது எங்கேயிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியாது; ஆயினும் தண்ணீரை நிரப்பிய வேலைக்காரருக்கே அது தெரிந்திருந்தது. அப்போது விருந்தின் மேற்பார்வையாளன், மணமகனை ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று,</verse>
				<verse number="10">அவனிடம், “எல்லோரும் சிறந்த திராட்சை ரசத்தையே முதலில் கொடுப்பார்கள். விருந்தாளிகள் தாராளமாகக் குடித்த பின்பு மலிவான ரசத்தைக் கொடுப்பார்கள். ஆனால் நீரோ, சிறந்த ரசத்தை இவ்வளவு நேரமாய் பரிமாறாமல் வைத்திருந்தீரே!” என்றான்.</verse>
				<verse number="11">இயேசு செய்த அற்புத அடையாளங்களில் இதுவே முதலாவதாகும். அதை அவர், கலிலேயாவிலுள்ள கானா என்ற ஊரிலே செய்தார். இவ்விதமாய் அவர் தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். இதனால் அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.</verse>
				<verse number="12">இதன்பின்பு இயேசு தம்முடைய தாயுடனும் சகோதரருடனும் தம்முடைய சீடருடனும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சில நாட்கள் தங்கினார்கள்.</verse>
				<verse number="13">யூதருடைய பஸ்கா என்ற பண்டிகைக் காலம் நெருங்கி வந்தபோது, இயேசு எருசலேமுக்குச் சென்றார்.</verse>
				<verse number="14">அங்கே ஆலய வளாகத்துக்குள் செம்மறியாடுகள், மாடுகள் மற்றும் புறாக்களை விற்பனை செய்கின்றவர்களைக் கண்டார். அத்துடன் நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபடுவோர் மேசை அருகே அமர்ந்திருப்பதையும் கண்டார்.</verse>
				<verse number="15">எனவே அவர் கயிறுகளினால் ஒரு சாட்டையைச் செய்து, அவர்கள் எல்லோரையும் அவர்களது செம்மறியாடு, மாடுகளுடன் ஆலயப் பகுதியில் இருந்து துரத்தினார். நாணயமாற்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் நாணயங்களையெல்லாம் அவர் கொட்டிச் சிதறடித்து, அவர்களுடைய மேசைகளைப் புரட்டித் தள்ளினார்.</verse>
				<verse number="16">புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றி விடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்றுவதை இத்தோடு நிறுத்துங்கள்!” என்றார்.</verse>
				<verse number="17">அப்போது, “உம்முடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னைத் தீயாக எரித்தது” என்று எழுதப்பட்டிருப்பது அவருடைய சீடர்களின் நினைவுக்கு வந்தது.</verse>
				<verse number="18">பின்பு யூதர்கள் அவரிடம், “நீர் இவைகளை எந்த அதிகாரத்தோடு செய்கின்றீர் என்பதை நாங்கள் அறியத்தக்கதாக, எங்களுக்கு என்ன அற்புத அடையாளத்தைச் செய்து காட்டுவீர்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="19">இயேசு அவர்களுக்குப் பதிலளித்து, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். நான் அதைத் திரும்பவும் மூன்று நாட்களில் எழுப்புவேன்” என்றார்.</verse>
				<verse number="20">அதற்கு யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு நாற்பத்தாறு வருடங்கள் எடுத்ததே. நீர் இதை மூன்று நாட்களில் எழுப்புவீரோ?” என்றார்கள்.</verse>
				<verse number="21">ஆனால் இயேசு தமது உடலாகிய ஆலயத்தையே இவ்விதம் குறிப்பிட்டுச் சொன்னார்.</verse>
				<verse number="22">அவர் இப்படிச் சொன்னதை, மரணித்தவர்களிலிருந்து அவர் உயிரோடு எழுந்த பின் சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் வேதவசனத்தையும் இயேசு பேசிய வார்த்தைகளையும் விசுவாசித்தார்கள்.</verse>
				<verse number="23">பஸ்கா பண்டிகையின்போது இயேசு எருசலேமில் இருக்கையில், அவரால் செய்யப்பட்ட அற்புத அடையாளங்களை அநேக மக்கள் கண்டு, அவருடைய பெயரிலே விசுவாசம் வைத்தார்கள்.</verse>
				<verse number="24">ஆனால் இயேசுவோ எல்லா மனிதரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி செயற்படவில்லை.</verse>
				<verse number="25">மனிதனைக் குறித்து, அவருக்கு யாரும் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் அவர் மனிதனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்திருந்தார்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">பரிசேயனும், யூத அதிகாரிகளில் ஒருவனுமான நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான்.</verse>
				<verse number="2">ஒரு நாள் இரவு அவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் இறைவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், இறைவனைத் தம்முடன் கொண்டிராத ஒருவரால், நீர் செய்கின்ற அற்புத அடையாளங்களை செய்ய முடியாது” என்றான்.</verse>
				<verse number="3">இயேசு அதற்குப் பதிலாக, “நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவனால் கண்டுணர முடியாது” என்றார்.</verse>
				<verse number="4">அப்போது நிக்கொதேமு அவரிடம், “வயதுசென்ற பின் ஒருவன் மீண்டும் பிறப்பது எப்படி? அவன் தன் தாயின் கர்ப்பத்திற்குள் இரண்டாவது தடவை போய் மீண்டும் பிறக்க முடியுமா?” என்றான்.</verse>
				<verse number="5">இயேசு அதற்குப் பதிலாக, “நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஒருவன் தண்ணீரினாலும், ஆவியானவரினாலும் பிறவாவிட்டால், அவன் இறைவனுடைய அரசுக்குள் போக முடியாது.</verse>
				<verse number="6">மனிதனால் பிறப்பது மனிதனாய் இருக்கும்; ஆனால் ஆவியானவரால் பிறப்பது ஆவியாய் இருக்கும்</verse>
				<verse number="7">‘நீங்கள் மறுபடியும் பிறந்திட வேண்டும்’ என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து நீ வியப்படையக் கூடாது.</verse>
				<verse number="8">காற்று தான் விரும்பிய இடத்தை நோக்கியே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்கிறாய். ஆனால் அது எங்கிருந்து வருகின்றது என்றோ, அது எங்கே போகின்றது என்றோ உனக்குத் தெரியாது. ஆவியானவரால் பிறந்த ஒவ்வொருவனது பிறப்பும் இப்படியே இருக்கின்றது” என்றார்.</verse>
				<verse number="9">அப்போது நிக்கொதேமு, “இது எப்படி சாத்தியமாகும்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="10">இயேசு அவனிடம், “நீ இஸ்ரயேல் மக்களுடைய ஆசிரியனாய் இருந்தும், உன்னால் இவைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லையா?</verse>
				<verse number="11">நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நாங்கள் அறிந்ததைப் பேசுகின்றோம். நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி சொல்கின்றோம். ஆயினும் நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="12">நான் உங்களுக்கு பூமிக்குரிய காரியங்களைக் குறித்துச் சொன்னதையே விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக் குறித்து நான் சொன்னால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?</verse>
				<verse number="13">பரலோகத்தில் இருந்து வந்தவரான மனுமகனைத் தவிர, ஒருவனும் ஒருபோதும் பரலோகத்திற்குள் போனதில்லை.</verse>
				<verse number="14">பாலைநிலத்திலே மோசே, பாம்பை மேலே உயர்த்தியதைப் போல மனுமகனும் மேலே உயர்த்தப்பட வேண்டும்.</verse>
				<verse number="15">அதனால், மனுமகனில் விசுவாசமாயிருக்கின்ற ஒவ்வொருவனும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.</verse>
				<verse number="16">“ஏனெனில், இறைவன் உலகத்தவர்களை அதிகமாய் நேசித்தபடியால், தனது ஒரே மகனைக் கொடுத்தார். அவரில் விசுவாசமாயிருக்கின்றவன் எவனோ, அவன் கெட்டழிந்து போகாமல், நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படியே அப்படிச் செய்தார்.</verse>
				<verse number="17">உலகத்தவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பளிக்க, இறைவன் தமது மகனை இவ்வுலகிற்கு அனுப்பவில்லை. அவர் மூலமாக உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அவரை அனுப்பினார்.</verse>
				<verse number="18">அவரில் விசுவாசமாயிருக்கின்ற எவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவர்களுக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனை நம்பவில்லை.</verse>
				<verse number="19">அவர்களின் நியாயத்தீர்ப்புக்கான காரணம் இதுவே: உலகத்திற்குள் ஒளி வந்தது. மனிதர்களோ ஒளியை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன.</verse>
				<verse number="20">தீயசெயலைச் செய்கின்ற ஒவ்வொருவனும், வெளிச்சத்தை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்திற்குள் வர மாட்டான். தன் தீய செயல்கள் பகிரங்கமாகி விடும் என்று அவன் பயப்படுகிறான்.</verse>
				<verse number="21">ஆனால் உண்மையின்படி வாழ்கின்றவனோ, வெளிச்சத்திற்குள் வருகின்றான். தன் செயல்கள் அனைத்தும், இறைவனின் விருப்பப்படியே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாகத் தெரியும்படி, அவன் வெளிச்சத்திற்குள் வருகின்றான்” என்றார்.</verse>
				<verse number="22">இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்கு வந்தார்கள். அங்கே அவர் சிறிது காலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.</verse>
				<verse number="23">சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில், தண்ணீர் அதிகமாய் இருந்ததால் அங்கே யோவானும் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தான். ஞானஸ்நானம் பெறுவதற்காக மக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="24">இது யோவான் சிறைக்குள் இடப்படும் முன்னே நடைபெற்றது.</verse>
				<verse number="25">யோவானுடைய சீடர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையில், சம்பிரதாய சுத்திகரிப்பைக் குறித்து விவாதம் ஏற்பட்டது.</verse>
				<verse number="26">யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் ஞானஸ்நானம் கொடுக்கின்றார். எல்லோரும் அவரிடம் போகின்றார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="27">யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.</verse>
				<verse number="28">‘நான் மேசியா அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள்.</verse>
				<verse number="29">மணப்பெண் யாருக்கு உரியவளோ, அவரே மணமகன். மணமகனின் தோழனோ, அவர் அருகே நின்று அவர் சொல்வதைக் கேட்கின்றான். அவன் மணமகனுடைய குரலைக் கேட்டு, மனமகிழ்ச்சி அடைகிறான். அதுவே எனக்குரியதான மனமகிழ்ச்சி. அது இப்போது நிறைவடைந்திருக்கின்றது.</verse>
				<verse number="30">அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்.</verse>
				<verse number="31">“மேலே இருந்து வருகின்றவர், எல்லோருக்கும் மேலானவராக இருக்கின்றார்; கீழே உலகத்திலிருந்து வருகின்றவனோ, உலகத்திற்கே சொந்தமாயிருக்கிறான். அவன் உலகத்திற்குரிய விதமாகவே பேசுகின்றான். பரலோகத்திலிருந்து வருகின்றவரோ, எல்லோரிலும் மேலானவராக இருக்கின்றார்.</verse>
				<verse number="32">அவர் தாம் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சி கூறுகிறார். ஆனால் அவருடைய சாட்சியையோ ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="33">அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்கின்றவனோ, இறைவன் உண்மையுள்ளவர் என்பதை உறுதிப்படுத்துகிறான்.</verse>
				<verse number="34">இறைவனால் அனுப்பப்பட்டவரோ, இறைவனுடைய வார்த்தைகளைப் பேசுகின்றார். ஏனெனில், இறைவன் அவருக்கு ஆவியானவரை அளவின்றிக் கொடுத்திருக்கிறார்.</verse>
				<verse number="35">பிதா மகனை நேசிப்பதால், அவர் எல்லாவற்றையும் மகனுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்.</verse>
				<verse number="36">இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கின்றவன் எவனோ, அவனுக்கு நித்திய வாழ்வு உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கின்றவன் எவனோ, அவன் அந்த வாழ்வைக் காண மாட்டான். ஏனெனில், இறைவனுடைய உக்கிர கோபம் அவன்மீது நிலைத்திருக்கும்” என்றான்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கின்றார் எனப் பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள்.</verse>
				<verse number="2">அந்தச் செய்தியை பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள் என்பதை இயேசு அறிந்தபோது யூதேயாவைவிட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.</verse>
				<verse number="3">(ஆயினும் உண்மையில் ஞானஸ்நானம் கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடர்களே அதைச் செய்தார்கள்.)</verse>
				<verse number="4">அவர் சமாரியா வழியாகப் போக வேண்டியிருந்தது.</verse>
				<verse number="5">எனவே, அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு, தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தினருகே இருந்தது.</verse>
				<verse number="6">அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்போது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.</verse>
				<verse number="7">அவ்வேளையில், சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் அள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="8">அப்போது அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்காக பட்டணத்திற்குள் போயிருந்தார்கள்.</verse>
				<verse number="9">அந்தச் சமாரியப் பெண் அவரிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர்கள் சமாரியருடன் பழகுவதில்லை.</verse>
				<verse number="10">அதற்கு இயேசு, “நீ இறைவனுடைய கொடையையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். அவர் உனக்கு வாழ்வளிக்கும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்று பதிலளித்தார்.</verse>
				<verse number="11">அப்போது அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் அள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கின்றது. வாழ்வளிக்கும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கும்?</verse>
				<verse number="12">எங்களுடைய தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இதிலிருந்து அவரும், அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள்.</verse>
				<verse number="13">இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கின்ற ஒவ்வொருவனுக்கும் மீண்டும் தாகமெடுக்கும்.</verse>
				<verse number="14">ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கின்றவனுக்கோ ஒருபோதும் தாகம் எடுக்காது. உண்மையாகவே, நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர், அவனுக்குள்ளே ஒரு நீரூற்றாய், நித்திய வாழ்வு வரை ஊற்றெடுக்கும்” என்றார்.</verse>
				<verse number="15">அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்போது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் அள்ளுவதற்கு நான் இங்கு வரவேண்டிய அவசியமும் ஏற்படாது” என்றாள்.</verse>
				<verse number="16">அப்போது அவர் அவளிடம், “நீ போய், உன் கணவனை அழைத்துக்கொண்டு வா” என்றார்.</verse>
				<verse number="17">அதற்கு அவள், “எனக்குக் கணவன் இல்லை” என்றாள். இயேசு அவளிடம், “உனக்குக் கணவன் இல்லை என்று நீ சொல்வது சரிதான்.</verse>
				<verse number="18">ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்போது உன்னுடன் வாழ்கின்றவனும் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார்.</verse>
				<verse number="19">அப்போது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்பது எனக்குப் புரிகின்றது.</verse>
				<verse number="20">சமாரியர்களான எங்களது முற்பிதாக்கள் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, எருசலேமிலேயே வழிபட வேண்டும் என்று சொல்கின்றீர்கள்” என்றாள்.</verse>
				<verse number="21">அதற்கு இயேசு: “பெண்ணே, நீ என்னை நம்பு. நீங்கள் பிதாவை இந்த மலையிலும் எருசலேமிலும் வழிபடாத ஒரு காலம் வருகின்றது.</verse>
				<verse number="22">சமாரியராகிய நீங்களோ அறியாததையே வழிபடுகின்றீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே வழிபடுகின்றோம். ஏனெனில், யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகின்றது.</verse>
				<verse number="23">ஆனால், உண்மையாய் வழிபடுகின்றவர்கள், பிதாவை ஆவியிலும் உண்மையிலும் வழிபடும் ஒரு காலம் வருகின்றது, அது இப்பொழுதே வந்துவிட்டது. ஏனெனில், அவ்விதம் தன்னை வழிபடுகின்றவர்களையே பிதா தேடுகிறார்.</verse>
				<verse number="24">இறைவன் ஆவியாய் இருக்கின்றார். அவரை வழிபடுகின்றவர்கள், ஆவியிலும் உண்மையிலும் அவரை வழிபட வேண்டும்” என்றார்.</verse>
				<verse number="25">அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வரவிருகின்றார். அவர் வரும்போது, எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.</verse>
				<verse number="26">அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகின்ற நானே அவர்” என்று அறிவித்தார்.</verse>
				<verse number="27">அப்போது அவருடைய சீடர்கள் திரும்பி வந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், “உமக்கு என்ன தேவை?” என்றோ “நீர் ஏன் அவளுடன் பேசுகின்றீர்?” என்றோ கேட்கவில்லை.</verse>
				<verse number="28">அப்போது அந்தப் பெண் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு, பட்டணத்திற்குள்ளே போய் அங்குள்ள மக்களிடம்,</verse>
				<verse number="29">“வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் மேசியாவோ?” என்றாள்.</verse>
				<verse number="30">அவர்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறி, அவர் இருந்த இடத்திற்கு வந்தார்கள்.</verse>
				<verse number="31">இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, உணவு அருந்துங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="32">அதற்கு அவர் அவர்களிடம், “நான் உண்பதற்கு, நீங்கள் அறியாத உணவு என்னிடம் இருக்கின்றது” என்றார்.</verse>
				<verse number="33">அப்போது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்து கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="34">இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவாகும்.</verse>
				<verse number="35">‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதன்பின் அறுவடை வந்து விடும்’ என்று, நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் உங்கள் கண்களை ஏறெடுத்து வயல்களை நோக்கிப் பாருங்கள்! அவை விளைந்து, அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கின்றன.</verse>
				<verse number="36">இப்போதும், அறுவடை செய்பவன் தன் கூலியைப் பெற்று, இப்பொழுதே நித்திய வாழ்வுக்கான விளைச்சலையும் அறுவடை செய்கின்றான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கின்றவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள்.</verse>
				<verse number="37">இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கின்றான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது.</verse>
				<verse number="38">நீங்கள் வேலை செய்து பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார்.</verse>
				<verse number="39">அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர்களில் அநேகர், இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் இவர் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக் குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள்.</verse>
				<verse number="40">எனவே அந்தச் சமாரியர்கள் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவர் அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார்.</verse>
				<verse number="41">அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள்.</verse>
				<verse number="42">அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நீ சொன்னதைக் கேட்டு நாங்கள் அவரை நம்ப வேண்டியதில்லை, அவர் சொன்னவற்றை நாங்களே இப்போது கேட்டோம். உண்மையிலேயே இவர் உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்து கொண்டோம்” என்றார்கள்.</verse>
				<verse number="43">இரண்டு நாட்களின் பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.</verse>
				<verse number="44">ஒரு இறைவாக்கினனுக்கு தனது சொந்த ஊரிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.</verse>
				<verse number="45">அவர் கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். பஸ்கா பண்டிகையின்போது, அவர் எருசலேமில் செய்ததையெல்லாம் கலிலேயர்கள் கண்டிருந்தார்கள். ஏனெனில் பண்டிகையின்போது அவர்களும் அங்கே இருந்தார்கள்.</verse>
				<verse number="46">இயேசு திரும்பவும் ஒருமுறை, கலிலேயாவிலுள்ள கானாவூருக்குச் சென்றார். அங்கேதான், முன்பு அவர் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியிருந்தார். அப்போது ஒரு அரச அதிகாரியின் மகன் கப்பர்நகூம் என்ற ஊரிலே நோயுற்று இருந்தான்.</verse>
				<verse number="47">இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று இந்த அதிகாரி கேள்விப்பட்டதும், அவன் அவரிடம் சென்று, மரணத் தறுவாயில் இருக்கும் தனது மகனை இயேசு வந்து குணமாக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டான்.</verse>
				<verse number="48">இயேசு அவனிடம், “நீங்கள் அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் கண்டாலொழிய, ஒருபோதும் விசுவாசிக்க மாட்டீர்கள்” என்றார்.</verse>
				<verse number="49">அதற்கு அந்த அரச அதிகாரி, “ஐயா, எனது பிள்ளை மரணிக்கும் முன்னே வாருங்கள்” என்றான்.</verse>
				<verse number="50">இயேசு அதற்குப் பதிலாக, “நீ திரும்பிப் போ. உன் மகன் உயிர் பிழைப்பான்” என்றார். அந்த மனிதன் இயேசுவின் வார்த்தையை நம்பி, புறப்பட்டுச் சென்றான்.</verse>
				<verse number="51">அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே அவனுடைய வேலைக்காரர் அவனைச் சந்தித்து, அவனுடைய மகன் குணமடைந்து உயிர் பிழைத்தான் என்ற செய்தியை அவனுக்கு அறிவித்தார்கள்.</verse>
				<verse number="52">தனது மகன் குணமடைந்த நேரத்தைப்பற்றி அவன் விசாரித்தபோது, அவர்கள் அவனிடம், “நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு, அவனுக்கிருந்த காய்ச்சல் நீங்கியது” என்றார்கள்.</verse>
				<verse number="53">இயேசு தன்னிடம், “உனது மகன் உயிர் பிழைப்பான்” என்று சொன்னதும், சரியாக அதே நேரம்தான் என்று, தகப்பன் புரிந்து கொண்டான். எனவே அவனும் அவனுடைய குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்தார்கள்.</verse>
				<verse number="54">இது இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்த பின் செய்த இரண்டாவது அற்புத அடையாளம் ஆகும்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது, அப்போது இயேசு எருசலேமுக்குச் சென்றார்.</verse>
				<verse number="2">எருசலேமிலே “ஆட்டு வாசல்” என்ற இடத்தின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரேய மொழியிலே பெதஸ்தா என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன.</verse>
				<verse number="3">அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுடையோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.</verse>
				<verse number="4">சில வேளைகளில், கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கி வந்து, அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே, அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் குணமடைவான்.</verse>
				<verse number="5">அங்கிருந்த ஒருவன், முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான்.</verse>
				<verse number="6">இயேசு அவனைக் கண்டு, அவன் அங்கே அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்து அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="7">அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு உதவி செய்ய எனக்கு ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், எனக்கு முன் வேறொருவன் இறங்கி விடுகிறான்” என்றான்.</verse>
				<verse number="8">அப்போது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார்.</verse>
				<verse number="9">உடனே, அந்த மனிதன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடந்து சென்றான். இது ஒரு ஓய்வுநாளில் நிகழ்ந்தது.</verse>
				<verse number="10">எனவே யூதர், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையைத் தூக்கிக்கொண்டு போவதை, நீதிச்சட்டம் தடைசெய்கின்றது” என்றார்கள்.</verse>
				<verse number="11">அதற்கு அவன், “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான்.</verse>
				<verse number="12">எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று, உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="13">குணமடைந்தவனுக்கோ, தன்னைக் குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில், இயேசு அந்த மக்கள் கூட்டத்திலிருந்து விலகிச் சென்றிருந்தார்.</verse>
				<verse number="14">பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “இதோ பார், நீ குணமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமான ஏதோவொன்று உனக்கு நேரிடலாம்” என்றார்.</verse>
				<verse number="15">பின்பு அந்த மனிதன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என யூதருக்குச் சொன்னான்.</verse>
				<verse number="16">இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="17">இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கின்றார்; நானும் வேலை செய்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="18">அவர் ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தகப்பன் என்றும் சொல்லி, தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர்கள் அவரைக் கொலை செய்ய இன்னும் அதிக முயற்சி செய்தார்கள்.</verse>
				<verse number="19">இயேசு அவர்களிடம்: “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எவைகளையெல்லாம் பிதா செய்கின்றதை மகன் காண்கின்றாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்ய மாட்டார்; பிதா எவைகளைச் செய்கின்றாரோ, அவைகளையே மகனும் செய்கின்றார்.</verse>
				<verse number="20">ஏனெனில், பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி, அவர் இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார்.</verse>
				<verse number="21">பிதா மரணித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு வாழ்வைக் கொடுக்கின்றார்.</verse>
				<verse number="22">மேலும், பிதா ஒருவரையும் நியாயம் தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார்.</verse>
				<verse number="23">எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவது போல, மகனையும் கனம் பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்குக் கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான்.</verse>
				<verse number="24">“நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கின்றவன் எவனோ, அவனுக்கு நித்திய வாழ்வு உண்டு. அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தைக் கடந்து, வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறான்.</verse>
				<verse number="25">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன். ஒரு காலம் வருகின்றது, அது இப்பொழுதே வந்துவிட்டது. மரணித்தவர்கள், இக்காலத்திலேதான் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கின்றவர்கள் வாழ்வு பெறுவார்கள்.</verse>
				<verse number="26">பிதா தம்மில்தாமே நித்திய வாழ்வுள்ளவராய் இருப்பது போல, மகனும் தம்மில்தாமே நித்திய வாழ்வுள்ளவராய் இருக்கும்படி செய்திருக்கின்றார்.</verse>
				<verse number="27">அவர் மனுமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும், பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார்.</verse>
				<verse number="28">“இதைக் குறித்து வியப்படைய வேண்டாம். ஏனெனில் காலம் வருகின்றது, கல்லறைகளில் இருக்கின்றவர்கள் எல்லோரும் அவருடைய குரலைக் கேட்டு,</verse>
				<verse number="29">வெளியே வருவார்கள். நற்செயல்களைச் செய்தவர்கள், வாழ்வு பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள், தண்டனைத்தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள்.</verse>
				<verse number="30">சுயமாய் நான் எதையும் செய்வதில்லை; பிதா சொல்கின்றபடி மட்டுமே, நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கின்றேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில், நான் என்னைப் பிரியப்படுத்த அல்ல, என்னை அனுப்பியவரை பிரியப்படுத்தவே நாடுகிறேன்.</verse>
				<verse number="31">“என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது.</verse>
				<verse number="32">எனக்காக சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கின்றார். என்னைப் பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன்.</verse>
				<verse number="33">“நீங்கள் யோவான் ஸ்நானகனிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் உண்மைக்காக சாட்சி கொடுத்தான்.</verse>
				<verse number="34">மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே, நான் இதைச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="35">யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் சிறிது காலம் அவனுடைய வெளிச்சத்தில் விருப்பத்துடன் மகிழ்ந்திருந்தீர்கள்.</verse>
				<verse number="36">“யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மேன்மையான சாட்சி எனக்கு இருக்கின்றது. நான் செய்து முடிக்கும்படி, பிதா எனக்கு கொடுத்திருக்கும் வேலையை நான் செய்கின்றேன். நான் செய்யும் அந்த வேலையே, பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றது.</verse>
				<verse number="37">என்னை அனுப்பிய பிதா தாமே, என்னைக் குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை,</verse>
				<verse number="38">அவருடைய வார்த்தை உங்களில் நிலைத்திருப்பதும் இல்லை. ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் விசுவாசியாமல் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="39">நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கின்றீர்கள். ஏனெனில், அவற்றில் நித்திய வாழ்வு உண்டு என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன.</verse>
				<verse number="40">ஆயினும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, என்னிடம் வர மறுக்கிறீர்கள்.</verse>
				<verse number="41">“மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்வதில்லை.</verse>
				<verse number="42">உங்கள் இருதயத்தில், இறைவன் மீது அன்பில்லை என்பதை நான் அறிவேன்.</verse>
				<verse number="43">நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை; ஆனால் இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.</verse>
				<verse number="44">ஒரே இறைவனிடமிருந்து வரும் புகழை நாடாமல், ஒருவர் மற்றொருவரிடமிருந்து வரும் புகழை நாடுகின்ற நீங்கள் எப்படி என்னை விசுவாசிப்பீர்கள்?</verse>
				<verse number="45">“பிதாவுக்கு முன்பாக, நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவார்.</verse>
				<verse number="46">நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறார்.</verse>
				<verse number="47">அவர் எழுதி வைத்திருப்பதையே விசுவாசிக்காத நீங்கள், நான் சொல்வதை எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">இவை நடந்த பின்னர், இயேசு திபேரியா கடல் என அழைக்கப்பட்ட கலிலேயா கடலின் மறுகரைக்குச் சென்றார்.</verse>
				<verse number="2">அவர் நோயாளிகளுக்கு செய்த அற்புத அடையாளங்களை கண்டிருந்ததனால், பெருங்கூட்டமாக மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்.</verse>
				<verse number="3">அங்கே இயேசு ஒரு மலைச்சரிவில் ஏறிப் போய், தமது சீடர்களுடன் உட்கார்ந்தார்.</verse>
				<verse number="4">அப்போது யூதருடைய பஸ்கா பண்டிகை சமீபித்திருந்தது.</verse>
				<verse number="5">இயேசு ஏறெடுத்துப் பார்த்தபோது, மக்கள் பெருங்கூட்டமாகத் தம்மிடம் வருவதைக் கண்டு, “இந்த மக்கள் சாப்பிடுவதற்கான உணவை நாம் எங்கே வாங்கலாம்?” என்று பிலிப்புவிடம் கேட்டார்.</verse>
				<verse number="6">ஏனெனில், தாம் செய்யப் போவதை அவர் ஏற்கெனவே தெரிந்திருந்தும், அவனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே அப்படிக் கேட்டார்.</verse>
				<verse number="7">பிலிப்பு அவருக்கு மறுமொழியாக, “ஒவ்வொருவருக்கும் சிறிதளவு கொடுப்பதாக இருந்தாலும், இருநூறு தினாரி பணத்துக்கு உணவு வாங்கினாலும் போதாதே” என்றான்.</verse>
				<verse number="8">அவருடைய சீடர்களில் இன்னொருவனான சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா அவரிடம்,</verse>
				<verse number="9">“இங்கே ஒரு சிறுவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு சிறு மீன்களும் இருக்கின்றன. ஆனால் அது இவ்வளவு பெருங்கூட்ட மக்களுக்குப் போதுமானதா?” என்றான்.</verse>
				<verse number="10">அதற்கு இயேசு, “மக்களை உட்காரச் செய்யுங்கள்” என்றார். எனவே மக்கள் புற்கள் நிறைந்த தரையில் உட்கார்ந்தார்கள். அவர்களில் ஆண்கள் மாத்திரம் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தார்கள்.</verse>
				<verse number="11">அப்போது இயேசு அந்த அப்பங்களை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்திய பின், அங்கு உட்கார்ந்திருப்பவர்களுக்கு தேவையான அளவு பகிர்ந்து கொடுத்தார். மீன்களையும் அவ்விதமாகவே கொடுத்தார்.</verse>
				<verse number="12">அவர்கள் எல்லோரும் திருப்தியாய் சாப்பிட்டு முடிந்ததும், அவர் சீடர்களிடம், “மீதியான அப்பத் துண்டுகளைச் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளில் ஒன்றையும் வீணாக்கக் கூடாது” என்றார்.</verse>
				<verse number="13">அப்படியே அந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களின் துண்டுகளிலிருந்து மக்கள் சாப்பிட்டதன் பின், மீதியானவற்றைச் சீடர்கள் சேர்த்தெடுத்து பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.</verse>
				<verse number="14">அவர் செய்த அந்த அற்புத அடையாளத்தை மக்கள் கண்டபோது, “நிச்சயமாக, இவரே உலகத்திற்கு வரவேண்டியிருந்த இறைவாக்கினர்” என்று சொல்லத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="15">அவர்கள் தம்மைப் பலவந்தமாய் தங்களுடைய அரசனாக்க எண்ணியிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, அவர்களைவிட்டு விலகி, திரும்பவும் தனியாக ஒரு மலைக்குச் சென்றார்.</verse>
				<verse number="16">மாலையானபோது, அவருடைய சீடர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து இறங்கி கடற்கரைக்குச் சென்றார்கள்.</verse>
				<verse number="17">அதற்குள் இருட்டிவிட்டது, ஆனால் இயேசுவோ அவர்களுடன் வந்து சேரவில்லை. எனவே அவர்கள் ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து கப்பர்நகூமை நோக்கிப் போனார்கள்.</verse>
				<verse number="18">அப்போது கடும் காற்று வீசி, கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.</verse>
				<verse number="19">அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை, துடுப்பு வலித்துச் சென்று கொண்டிருந்தபோது, இயேசு கடலின் மேல் நடந்து படகின் அருகில் வந்தார்; அவர்கள் அவரைக் கண்டு பயந்தார்கள்.</verse>
				<verse number="20">அவர் அவர்களிடம், “நான்தான்; பயப்பட வேண்டாம்” என்றார்.</verse>
				<verse number="21">அப்போது அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள், உடனே படகு அவர்கள் போய்ச் சேரவேண்டிய கரையை அடைந்தது.</verse>
				<verse number="22">கடலின் மறுகரையில் தங்கியிருந்த மக்கள் கூட்டத்தினர், அங்கே ஒரு படகு மட்டுமே இருந்தது என்பதையும் இயேசு தமது சீடர்களுடன் அதிலே ஏறவில்லை என்பதையும், சீடர்கள் மட்டுமே அதில் போனார்கள் என்பதையும் மறுநாள் தெரிந்து கொண்டார்கள்.</verse>
				<verse number="23">பின்பு திபேரியாவிலிருந்து சில படகுகள், ஆண்டவர் நன்றி செலுத்தி பகிர்ந்து கொடுத்த அப்பத்தை மக்கள் சாப்பிட்ட அந்த இடத்தின் அருகே வந்து சேர்ந்தன.</verse>
				<verse number="24">எனவே அங்கு ஒன்றுகூடி வந்த மக்கள், இயேசுவோ அவருடைய சீடரோ, அங்கு இல்லையென்று கண்டு, இயேசுவைத் தேடிக்கொண்டு, அப்படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குப் போனார்கள்.</verse>
				<verse number="25">கடலின் மறுகரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது, அவர்கள் அவரிடம், “போதகரே! எப்போது நீர் இங்கே வந்தீர்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="26">அப்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் அற்புத அடையாளங்களைக் கண்டதனால் அல்ல, இங்கே திருப்தியாய்ச் சாப்பிட்டதனாலேயே என்னைத் தேடுகிறீர்கள்.</verse>
				<verse number="27">அழிந்து போகும் உணவுக்காக வேலை செய்ய வேண்டாம். நித்திய வாழ்வு வரை நிலைத்து நிற்கும் உணவுக்காகவே வேலை செய்யுங்கள். அந்த உணவை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார். பிதாவாகிய இறைவன், அவர்மீது தமது அடையாள முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார்.</verse>
				<verse number="28">அப்போது அவர்கள் அவரிடம், “இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் எவற்றைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="29">இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நீங்கள் செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கும் ஒரே செயல் என்னவெனில், இறைவன் அனுப்பியவரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதே” என்றார்.</verse>
				<verse number="30">அப்போது அவர்கள் அவரிடம், “நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கும்படி, நீர் எங்களுக்கு என்ன அற்புத அடையாளத்தைக் கொடுப்பீர்? எதைச் செய்வீர்?</verse>
				<verse number="31">எங்கள் முற்பிதாக்கள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்களே; ‘அவர்கள் சாப்பிடுவதற்கு மோசே பரலோகத்திலிருந்து உணவு கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறதே” என்றார்கள்.</verse>
				<verse number="32">அப்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், பரலோகத்திலிருந்து உங்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல. என் பிதாவே பரலோகத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவைக் கொடுக்கின்றார்.</verse>
				<verse number="33">ஏனெனில் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து உலகத்துக்கு வாழ்வைக் கொடுக்கின்றவரே, இறைவன் தரும் உணவு” என்றார்.</verse>
				<verse number="34">அப்போது அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இந்த உணவை எப்போதும் எங்களுக்குத் தாருங்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="35">அப்போது இயேசு அவர்களிடம், “நானே வாழ்வளிக்கும் உணவு. என்னிடம் வருகின்றவன் ஒருபோதும் பசியுடன் போக மாட்டான். என்னில் விசுவாசமாயிருக்கின்றவன் ஒருபோதும் தாகமடைய மாட்டான்.</verse>
				<verse number="36">ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைக் கண்டும், இன்னும் என்னை விசுவாசிக்காதவர்களாகவே இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="37">பிதா எனக்குத் தருகின்ற அனைவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகின்ற எவரையும் நான் நிராகரிப்பது இல்லை.</verse>
				<verse number="38">ஏனெனில், நான் என்னுடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்வதற்காகவே பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன்.</verse>
				<verse number="39">அவர் எனக்குத் தந்திருப்பவர்கள் எல்லோரிலும் ஒருவரையேனும் நான் இழந்துவிடாமல், கடைசி நாளிலே அவர்களை எழுப்ப வேண்டும் என்பதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது.</verse>
				<verse number="40">மகனை கண்டுணர்ந்து மகனில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனும், நித்திய வாழ்வைப் பெறவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்” என்றார்.</verse>
				<verse number="41">“நானே பரலோகத்திலிருந்து இறங்கி வந்த உணவு” என்று அவர் சொன்னதால், யூதர்கள் அவரைக் குறித்து முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="42">அவர்கள் அவரைக் குறித்து, “இவர் யோசேப்பின் மகன் இயேசு அல்லவா? இவருடைய தகப்பனையும் தாயையும் நமக்குத் தெரியுமே. அப்படியிருக்க, ‘நான் பரலோகத்திலிருந்து வந்தேன்’ என்று இப்போது இவர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.</verse>
				<verse number="43">இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.</verse>
				<verse number="44">என்னை அனுப்பிய பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், ஒருவனும் என்னிடம் வர மாட்டான். என்னிடம் வருகின்றவனையோ, நான் கடைசி நாளில் எழுப்புவேன்.</verse>
				<verse number="45">‘அவர்கள் எல்லோரும் இறைவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று, இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே பிதா சொல்வதைக் கேட்டு, அவரிடம் கற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவனும் என்னிடம் வருகின்றான்.</verse>
				<verse number="46">இறைவனிடமிருந்து வந்தவரைத் தவிர, வேறு எவரும் பிதாவைக் கண்டதில்லை; அவர் மட்டுமே பிதாவைக் கண்டிருக்கிறார்.</verse>
				<verse number="47">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், விசுவாசிக்கின்றவனுக்கு நித்திய வாழ்வு உண்டு.</verse>
				<verse number="48">நானே வாழ்வளிக்கும் உணவு.</verse>
				<verse number="49">உங்கள் முற்பிதாக்கள் பாலைநிலத்தில் மன்னா என்னும் உணவை உண்டார்கள்; ஆயினும் அவர்கள் இறந்து போனார்களே.</verse>
				<verse number="50">ஆனால் இதோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த உணவு. இதை உண்பவன் மரணிப்பதில்லை.</verse>
				<verse number="51">நானே பரலோகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவு. எவனாவது இந்த உணவை உண்டால், அவன் என்றென்றும் வாழ்வான். உலகத்தாரின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் உணவு எனது உடலே” என்றார்.</verse>
				<verse number="52">அப்போது யூதர், “இவன் எப்படி தன் உடலை எங்களுக்குச் சாப்பிடக் கொடுப்பான்?” என்று தங்களுக்குள்ளே கடுமையாய் வாக்குவாதம் பண்ணத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="53">இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன். நீங்கள் மனுமகனின் உடலைச் சாப்பிட்டு, அவருடைய இரத்தத்தைக் குடிக்காவிட்டால், உங்களுக்குள்ளே வாழ்வு இருக்காது.</verse>
				<verse number="54">எனது உடலைச் சாப்பிட்டு, எனது இரத்தத்தைக் குடிக்கிற எவனுக்கும், நித்திய வாழ்வு உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன்.</verse>
				<verse number="55">ஏனெனில் எனது உடலே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம்.</verse>
				<verse number="56">எனது உடலை உண்டு, எனது இரத்தத்தைக் குடிக்கின்றவன் எவனோ, அவன் என்னோடு இணைந்திருக்கின்றான். நானும் அவனோடு இணைந்திருக்கின்றேன்.</verse>
				<verse number="57">உயிரோடிருக்கிறவராகிய பிதா என்னை அனுப்பினார், எனவே நான் உயிர் வாழ பிதாவே காரணம்; அதுபோல, என்னை உண்பவன் என்னாலே வாழ்வு பெறுவான்.</verse>
				<verse number="58">இதுவே பரலோகத்திலிருந்து வந்த உணவு. உங்கள் முற்பிதாக்கள் மன்னாவை உண்டும் இறந்து போனார்கள். ஆனால் இந்த உணவை உண்ணுகிறவனோ, என்றென்றும் வாழ்வான்” என்றார்.</verse>
				<verse number="59">அவர் கப்பர்நகூமிலே ஜெபஆலயத்தில் போதித்தபோது இவைகளைச் சொன்னார்.</verse>
				<verse number="60">இதைக் கேட்ட அவருடைய சீடர்களில் பலர், “இது ஒரு கடினமான போதனை. யாரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்கள்.</verse>
				<verse number="61">தமது சீடர்கள் இதைக் குறித்து முணுமுணுக்கிறார்கள் என்று இயேசு அறிந்து அவர்களிடம், “இது உங்களுக்குத் தடையாக இருக்கின்றதா?</verse>
				<verse number="62">மனுமகன், தான் முன்பிருந்த இடத்திற்கு மேலெழுந்து போவதை நீங்கள் கண்டீர்களானால், அது எப்படியிருக்கும்!</verse>
				<verse number="63">ஆவியானவரே வாழ்வைக் கொடுக்கின்றார்; உடலோ ஒன்றுக்கும் உதவாது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகள் ஆவியானவரையும் வாழ்வையும் கொண்டுள்ளன.</verse>
				<verse number="64">ஆயினும் உங்களில் சிலர் விசுவாசியாமல் இருக்கின்றீர்கள்” என்றார். ஏனெனில் இயேசு தொடக்கத்திலிருந்தே அவர்களில் யார் தம்மை விசுவாசிக்கவில்லை என்றும், யார் தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்றும் அறிந்திருந்தார்.</verse>
				<verse number="65">தொடர்ந்தும் அவர், “பிதா ஒருவனை அனுமதிக்காவிட்டால், ஒருவனாலும் என்னிடம் வர முடியாது என்று இதனாலேயே நான் உங்களுக்குச் சொன்னேன்” என்றார்.</verse>
				<verse number="66">அதுமுதல், அவருடைய சீடர்களில் பலர் அவரைப் பின்பற்றாமல் அவரைவிட்டுத் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="67">அப்போது இயேசு பன்னிரண்டு பேரையும் நோக்கி, “நீங்களும் போய்விட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="68">சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய வாழ்வின் வார்த்தைகள் உம்மிடம் அல்லவோ உள்ளன.</verse>
				<verse number="69">நீரே இறைவனின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கின்றோம்” என்றான்.</verse>
				<verse number="70">அப்போது இயேசு, “பன்னிரண்டு பேராகிய உங்களை நான் தெரிவு செய்யவில்லையா? ஆயினும் உங்களில் ஒருவன் பிசாசாய் இருக்கின்றான்!” என்றார்.</verse>
				<verse number="71">அவர் சீமோன் ஸ்காரியோத்தின் மகனான யூதாஸைக் குறித்தே இவ்விதம் சொன்னார். அவன் பன்னிரண்டு பேரில் ஒருவனாயிருந்தும், அவரைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனாய் இருந்தான்.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">இதற்குப் பின்பு, இயேசுவைக் கொலை செய்வதற்கு யூதத் தலைவர்கள் வழி தேடிக் கொண்டிருந்ததால், அவர் யூதேயாவுக்குப் போக விரும்பாமல், கலிலேயாவுக்குள் பயணம் செய்து கொண்டிருந்தார்.</verse>
				<verse number="2">ஆயினும், யூதரின் வழிபாட்டுக் கூடாரப் பண்டிகை சமீபித்தபோது,</verse>
				<verse number="3">இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீர் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, யூதேயாவுக்குச் செல்லும். அப்பொழுதே நீர் செய்யும் செயல்களை, உமது சீடர்கள் காண்பார்கள்.</verse>
				<verse number="4">பிரபலமடைய விரும்புகின்ற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீரோ இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதனால், நீர் உம்மை உலகத்துக்கு வெளிப்படுத்தும்” என்றார்கள்.</verse>
				<verse number="5">ஏனெனில், அவருடைய சொந்தச் சகோதரர்களும் அவரை விசுவாசிக்கவில்லை.</verse>
				<verse number="6">எனவே இயேசு அவர்களிடம், “எனது நேரம் இன்னும் வரவில்லை; ஆனால் உங்களுக்கோ எந்த நேரமும் ஏற்ற நேரமே.</verse>
				<verse number="7">உலகம் உங்களை வெறுக்க முடியாது. ஆனால், அது என்னையே வெறுக்கிறது. ஏனெனில், உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சி கொடுக்கின்றேன்.</verse>
				<verse number="8">இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்போது போகப் போவதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.</verse>
				<verse number="9">இதைச் சொல்லிவிட்டு, அவர் கலிலேயாவிலேயே தங்கியிருந்தார்.</verse>
				<verse number="10">ஆயினும் அவருடைய சகோதரர்கள் பண்டிகைக்குப் போன பின், அவரும் சென்றார். பகிரங்கமாக அல்ல, இரகசியமாகவே சென்றார்.</verse>
				<verse number="11">அந்தப் பண்டிகையிலே, யூதர்கள் அவரைத் தேடிக்கொண்டு, “அவர் எங்கே?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="12">கூடியிருந்த மக்களுக்கிடையில் அவரைக் குறித்து கருத்து வேறுபாடு இருந்தது. சிலர், “அவர் ஒரு நல்ல மனிதர்” என்றார்கள். மற்றவர்களோ, “அப்படியல்ல, அவன் மக்களை ஏமாற்றுகிறான்” என்றார்கள்.</verse>
				<verse number="13">ஆயினும், அவர்கள் யூதருக்குப் பயந்ததனால், ஒருவரும் அவரைப்பற்றி பகிரங்கமாக எதையும் பேசவில்லை.</verse>
				<verse number="14">பண்டிகையின் பாதி நாட்கள் முடிந்தபோது, இயேசு ஆலய முற்றத்திற்குப் போய் அங்கே போதிக்கத் தொடங்கினார்.</verse>
				<verse number="15">யூதரோ வியப்படைந்து, “படிக்காமலே இந்த மனிதனுக்கு, இவ்வளவு அறிவு எப்படி வந்தது?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="16">இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பியவரிடமிருந்தே வருகின்றது.</verse>
				<verse number="17">இறைவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவன் எவனும், எனது போதனை இறைவனிடமிருந்து வருகின்றதா, அல்லது நான் என் சுயமாய் சொல்கின்றேனா என்பதை அறிந்துகொள்வான்.</verse>
				<verse number="18">தனது சுய சிந்தனையில் பேசுகின்றவன், தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமைக்காகச் செயல்படுகின்றவன், உண்மையுள்ள மனிதனாய் இருக்கின்றான்; அவனில் பொய் எதுவுமில்லை.</verse>
				<verse number="19">மோசே உங்களுக்கு நீதிச்சட்டத்தைக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும், உங்களில் ஒருவனும் நீதிச்சட்டத்தைக் கைக்கொள்வதில்லை. நீங்கள் ஏன் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறீர்கள்?” என்றார்.</verse>
				<verse number="20">அப்போது கூடியிருந்த கூட்டம், “நீ பேய் பிடித்தவன். யார் உன்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?” என்றார்கள்.</verse>
				<verse number="21">இயேசு அவர்களிடம், “நான் ஒரு அற்புதத்தையே செய்தேன். அதனால் நீங்கள் எல்லோரும் வியப்படைந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="22">விருத்தசேதனத்தை மோசே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். நீங்கள் ஓய்வுநாளிலும், ஒருவனுக்கு விருத்தசேதனம் செய்கின்றீர்கள். (உண்மையில் விருத்தசேதனம் மோசேக்கு முன்னரே, யூதர்களின் முற்பிதாக்களின் காலத்திலிருந்து வருகின்றது.)</verse>
				<verse number="23">மோசேயின் நீதிச்சட்டம் மீறப்படாதபடி, ஒருவன் ஓய்வுநாளில் விருத்தசேதனம் பண்ணப்படலாம் என்கிறீர்கள். அப்படியானால், ஓய்வுநாளிலே ஒரு மனிதனை முழுவதும் குணமாக்கிய என்மேல் ஏன் கோபம்கொள்கின்றீர்கள்?</verse>
				<verse number="24">வெளித் தோற்றத்தின்படி நியாயத்தீர்ப்பு செய்வதை நிறுத்துங்கள். நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்யுங்கள்” என்றார்.</verse>
				<verse number="25">அப்போது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இவரையல்லவா அவர்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?</verse>
				<verse number="26">இதோ இங்கே இவர் பகிரங்கமாய் பேசுகின்றார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள், இவர்தான் மேசியா என்று உண்மையாய் அறிந்து கொண்டார்களோ?</verse>
				<verse number="27">ஆயினும் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் மேசியா வரும்போது, அவர் எங்கிருந்து வருகின்றார் என்று ஒருவனும் அறிய மாட்டானே” என்று பேசத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="28">அப்போது ஆலய முற்றத்தில் தொடர்ந்து போதித்துக் கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கிருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. ஆயினும், என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை.</verse>
				<verse number="29">நானோ அவரை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பியவர்” என்றார்.</verse>
				<verse number="30">அப்போது அவர்கள் அவரைக் கைது செய்ய முயன்றார்கள். ஆனாலும் ஒருவரும் அவர்மீது கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.</verse>
				<verse number="31">ஆயினும் கூடியிருந்த மக்களில் பலர், அவர்மீது விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “மேசியா வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அற்புத அடையாளங்களை மேசியா செய்வாரோ?” என்றார்கள்.</verse>
				<verse number="32">கூடியிருந்த மக்கள் அவரைக் குறித்து இப்படிப்பட்ட காரியங்களை தங்களுக்குள் மெதுவாய் பேசிக்கொண்டதை பரிசேயர்கள் கேட்டார்கள். எனவே தலைமை மதகுருக்களும், பரிசேயரும் அவரைக் கைது செய்யும்படி, ஆலயக் காவலரை அனுப்பினார்கள்.</verse>
				<verse number="33">அப்போது இயேசு, “இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். பின்பு என்னை அனுப்பியவரிடம் நான் போய் விடுவேன்.</verse>
				<verse number="34">நீங்களோ என்னைத் தேடுவீர்கள். ஆயினும் என்னைக் காண மாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கும் உங்களால் வர முடியாது” என்றார்.</verse>
				<verse number="35">அப்போது யூதர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, இவன் எங்கு போக இருக்கின்றான்? கிரேக்கருக்குள்ளே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களிடம் போய், அங்கே கிரேக்கருக்குப் போதிக்க போகின்றானா?</verse>
				<verse number="36">‘நீங்களோ என்னைத் தேடுவீர்கள், ஆயினும் என்னைக் காண மாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வர முடியாது’ என்று சொல்கின்றானே. அதன் அர்த்தம் என்ன?” என்று பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="37">பண்டிகையின் கடைசி நாளான, அந்த முக்கியமான நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “எவனாவது தாகமுள்ளவனாய் இருந்தால், அவன் என்னிடம் வந்து பானம் அருந்தட்டும்.</verse>
				<verse number="38">வேதவசனத்தில் சொல்லியிருக்கின்றபடி, என்னை விசுவாசிக்கின்றவனுடைய உள்ளத்திலிருந்து, வாழ்வளிக்கும் தண்ணீரானது நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.</verse>
				<verse number="39">தம்மில் விசுவாசமாய் இருக்கின்றவர்கள், பின்னர் பெறப் போகின்ற பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை.</verse>
				<verse number="40">அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களில் சிலர், “உண்மையிலேயே இவர் வர இருக்கின்ற இறைவாக்கினரே” என்றார்கள்.</verse>
				<verse number="41">வேறு சிலரோ, “இவரே மேசியா” என்றார்கள். ஆனால் இன்னும் சிலர், “மேசியா எப்படி கலிலேயாவிலிருந்து வர முடியும்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="42">“மேசியா தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்தும் வருவார் என்று வேதவசனம் சொல்கின்றது அல்லவா?” என்றார்கள்.</verse>
				<verse number="43">இவ்வாறு இயேசுவின் பொருட்டு மக்கள் கருத்து வேறுபட்டார்கள்.</verse>
				<verse number="44">சிலர் அவரைக் கைது செய்ய விரும்பினார்கள். ஆனாலும் ஒருவரும் அவர்மீது கைவைக்கவில்லை.</verse>
				<verse number="45">பின்பு ஆலயக் காவலர், தலைமை மதகுருக்களிடமும் பரிசேயரிடமும் திரும்பி வந்தபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று ஆலயக் காவலரிடம் கேட்டார்கள்.</verse>
				<verse number="46">அவர்கள் அதற்கு மறுமொழியாக, “அந்த மனிதன் பேசியது போல், ஒருவனும் ஒருபோதும் பேசியதில்லையே” என்றார்கள்.</verse>
				<verse number="47">அப்போது பரிசேயர்கள் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றிவிட்டானா?</verse>
				<verse number="48">ஆளுநர்களில் எவராவது, அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது அவனை விசுவாசிக்கின்றார்களா?</verse>
				<verse number="49">இல்லையே! ஆனால் இந்த மக்களோ நீதிச்சட்டத்தை அறியாதவர்கள். இவர்கள் மேல் சாபம் உண்டு” என்றார்கள்.</verse>
				<verse number="50">முன்பு இயேசுவிடம் போயிருந்தவனும், பரிசேயரைச் சேர்ந்தவனுமான நிக்கொதேமு அவர்களிடம்,</verse>
				<verse number="51">“ஒருவன் என்ன செய்கின்றான் என்று அறியும்படி முதலில் அவனை விசாரிக்காமல், அவனுக்கு நமது நீதிச்சட்டம் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கின்றதா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="52">அதற்கு அவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவைச் சேர்ந்தவனா? வேதவசனத்தை ஆராய்ந்து பார். கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் எவரும் வருவதில்லை என்பதை அப்போது கண்டுகொள்வாய்” என்றார்கள்.</verse>
				<verse number="53">பின்பு ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.</verse>
				<verse number="2">அதிகாலையிலே அவர் திரும்பவும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றி ஒன்றுகூடினார்கள். அவர் அவர்களுக்குப் போதிப்பதற்காக உட்கார்ந்தார்.</verse>
				<verse number="3">தகாத உறவில் ஈடுபட்டபோது பிடிபட்ட ஒரு பெண்ணை நீதிச்சட்ட ஆசிரியரும், பரிசேயரும் அப்போது அங்கு கொண்டுவந்து, அங்கிருந்த எல்லோருக்கும் நடுவில் அவளை நிறுத்தினார்கள்.</verse>
				<verse number="4">அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் தகாத உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிபட்டாள்.</verse>
				<verse number="5">இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று, நீதிச்சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்போது நீர் என்ன சொல்கின்றீர்?” என்றார்கள்.</verse>
				<verse number="6">இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவருவதற்கான, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார்.</verse>
				<verse number="7">அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததனால், அவர் நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் எவனாவது பாவம் இல்லாதவனாய் இருந்தால், அவன் முதலாவதாக இவள் மேல் கல்லெறியட்டும்” என்றார்.</verse>
				<verse number="8">அவர் திரும்பவும் குனிந்து தரையில் எழுதினார்.</verse>
				<verse number="9">அப்போது, இதைக் கேட்ட முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவில் நின்று கொண்டிருந்தாள்.</verse>
				<verse number="10">இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “பெண்ணே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.</verse>
				<verse number="11">அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்போது இயேசு அவளிடம், “நானும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்க மாட்டேன். போ, இனிமேல் பாவம் செய்யாதே” என்றார்.</verse>
				<verse number="12">திரும்பவும் இயேசு மக்களுடன் பேசத் தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கின்றேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்காமல், வாழ்வளிக்கும் வெளிச்சத்தைப் பெற்றிருப்பான்” என்றார்.</verse>
				<verse number="13">அப்போது பரிசேயர்கள் அவரிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றாயே; உனது சாட்சி உண்மையானதல்ல” என்றார்கள்.</verse>
				<verse number="14">இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன் என்றும், நான் எங்கே போகின்றேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ, நான் எங்கிருந்து வந்தேன் என்றும், எங்கே போகின்றேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="15">நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கின்றீர்கள்; நானோ ஒருவனையும் நியாயம் தீர்ப்பதில்லை.</verse>
				<verse number="16">அப்படியே நான் நியாயம் தீர்த்தால், எனது தீர்ப்பு சரியானதாகவே இருக்கும். ஏனெனில், நான் தனியாக நியாயம் தீர்ப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனே இருக்கின்றார்.</verse>
				<verse number="17">இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த நீதிச்சட்டத்திலே எழுதியிருக்கிறது.</verse>
				<verse number="18">நான் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றேன்; என்னை அனுப்பிய பிதாவும் எனக்கு சாட்சியாயிருக்கிறார்” என்றார்.</verse>
				<verse number="19">அப்போது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கின்றீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையும்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார்.</verse>
				<verse number="20">அவர் ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகின்ற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆயினும் ஒருவனும் அவரைக் கைது செய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.</verse>
				<verse number="21">திரும்பவும் இயேசு அவர்களிடம், “நான் போகின்றேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆயினும் நீங்கள் உங்கள் பாவத்திலேயே மரணமடைவீர்கள். நான் போகின்ற இடத்திற்கு உங்களால் வர முடியாது” என்றார்.</verse>
				<verse number="22">அப்போது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றானா? அதனால்தான், ‘நான் போகின்ற இடத்திற்கு உங்களால் வர முடியாது’ என்று சொல்கின்றானோ?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="23">அவர் தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல.</verse>
				<verse number="24">நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரணிப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; ‘நானே அவர்’ என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் மரணமடைவீர்கள்” என்றார்.</verse>
				<verse number="25">அப்போது அவர்கள் அவரிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்லி வருகின்றேனே.</verse>
				<verse number="26">உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிப்பதற்கும், என்னிடம் அநேக காரியங்கள் உள்ளன. ஆனால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். அவரிடமிருந்து கேட்டதையே நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன்” என்றார்.</verse>
				<verse number="27">அவர் பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகின்றார் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.</verse>
				<verse number="28">எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மனுமகனை மேலே உயர்த்திய பின்பு, நானே அவர் என்பதையும், சுயமாக நான் ஒன்றையும் செய்வதில்லை என்பதையும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கின்றேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.</verse>
				<verse number="29">என்னை அனுப்பியவர் என்னுடனே இருக்கின்றார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்போதும் செய்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="30">அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.</verse>
				<verse number="31">இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள்.</verse>
				<verse number="32">அப்போது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.</verse>
				<verse number="33">அப்போது அவர்கள் அவரிடம், “நாங்கள் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க, நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.</verse>
				<verse number="34">அதற்கு இயேசு பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன். பாவம் செய்கின்ற ஒவ்வொருவனும், பாவத்திற்கு அடிமையாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="35">குடும்பத்தில் அடிமை ஒருவன் நிரந்தரமாக இருப்பதில்லை; ஆனால் ஒரு மகனோ, அந்தக் குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="36">ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள்.</verse>
				<verse number="37">நீங்கள் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உங்கள் உள்ளத்தில் எனது வார்த்தைக்கு இடமில்லாததால், நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="38">எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கின்றீர்கள்” என்றார்.</verse>
				<verse number="39">அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால், ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள்.</verse>
				<verse number="40">ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த உண்மையை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே.</verse>
				<verse number="41">நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கின்றீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் முறைகேடான பாலுறவினால் பிறந்தவர்கள் அல்ல. இறைவனே எங்களுக்கிருக்கும் ஒரே பிதா” என்றார்கள்.</verse>
				<verse number="42">அப்போது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்போது இங்கே இருக்கின்ற நான், இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை. அவரே என்னை அனுப்பினார்.</verse>
				<verse number="43">நான் சொல்வதை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்? நான் சொல்வதைக் கேட்பதற்கு நீங்கள் மனதற்றவர்களாய் இருப்பதே அதற்குக் காரணம்.</verse>
				<verse number="44">நீங்கள் உங்கள் தகப்பனான பிசாசுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கின்றான். அவனுக்குள் உண்மையில்லாததால் அவன் உண்மையில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகின்றான். ஏனெனில் அவன் ஒரு பொய்யனும் பொய்களின் தகப்பனுமாக இருக்கின்றான்.</verse>
				<verse number="45">நானோ உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், ஆனாலும் நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="46">நான் பாவம் செய்தேனென்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள்?</verse>
				<verse number="47">எவன் இறைவனுக்கு உரியவனாய் இருக்கின்றானோ, அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கின்றான். நீங்களோ இறைவனுக்கு உரியவர்களாய் இல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கின்றீர்கள்” என்றார்.</verse>
				<verse number="48">அப்போது யூதர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பேய் பிடித்தவன் என்று, நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள்.</verse>
				<verse number="49">அதற்கு இயேசு, “நான் பேய் பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம் பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.</verse>
				<verse number="50">நான் எனது சுயமகிமையைத் தேடவில்லை; ஆயினும் எனக்காக அந்த மகிமையைத் தேடுகின்ற ஒருவர் இருக்கின்றார். அவரே நியாயம் தீர்க்கின்றவர்.</verse>
				<verse number="51">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எவனாவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் ஒருபோதும் மரணத்தைக் காண மாட்டான்” என்றார்.</verse>
				<verse number="52">அப்போது யூதர், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று இப்போது நாங்கள் நன்றாய் தெரிந்து கொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, எவனாவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் ஒருபோதும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கின்றாய்.</verse>
				<verse number="53">நீ எங்கள் தந்தை ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் இறந்தார், அப்படியே இறைவாக்கினரும் இறந்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="54">இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கின்ற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர்.</verse>
				<verse number="55">நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப் போலவே ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன்.</verse>
				<verse number="56">உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தார்; அதைக் கண்டு அவர் சந்தோஷப்பட்டார்” என்றார்.</verse>
				<verse number="57">அப்போது யூதர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.</verse>
				<verse number="58">அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னரே நான் இருக்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="59">இதைக் கேட்டவுடன், அவர்மீது எறிவதற்காக அவர்கள் கற்களை எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இயேசுவோ தம்மை மறைத்துக்கொண்டு ஆலயப் பகுதியைவிட்டு வெளியேறினார்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">இயேசு நடந்து போகையில், பிறந்ததிலிருந்தே பார்வையற்றிருந்த ஒருவனைக் கண்டார்.</verse>
				<verse number="2">அவருடைய சீடர்கள் அவரிடம், “போதகரே, இவன் பார்வையற்றவனாய் பிறந்தது யார் செய்த பாவத்தினால்? இவனுடைய பாவத்தினாலா? அல்லது இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="3">இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இவனுடைய பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அல்ல. இவனுடைய வாழ்க்கையில் இறைவனுடைய செயல்கள் வெளிப்படும்படியாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="4">பகல் வேளையாய் இருக்கும்போதே, என்னை அனுப்பியவருடைய வேலையை நாம் செய்ய வேண்டும். இரவு வருகின்றது, அப்போது ஒருவராலும் வேலை செய்ய முடியாது.</verse>
				<verse number="5">நான் உலகத்தில் இருக்கையில், நானே உலகத்தின் ஒளியாய் இருக்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="6">அவர் இவைகளைச் சொன்ன பின், தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார்.</verse>
				<verse number="7">பின்பு அவர் அவனிடம், “நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். சீலோவாம் என்பதன் அர்த்தம், “அனுப்பப்பட்டவன்” என்பதாகும். அவன் அப்படியே போய் கழுவி, பார்வையடைந்து வீடு திரும்பினான்.</verse>
				<verse number="8">அவனுடைய அயலவரும் முன்பு அவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததைக் கண்டவர்களும், “இங்கே உட்கார்ந்திருந்து பிச்சை கேட்டவன் இவன் அல்லவா?” என்றார்கள்.</verse>
				<verse number="9">சிலர், “இது அவன் தான்” என்றார்கள். இன்னும் சிலர், “இல்லை, இது அவனைப் போன்ற வேறொருவன்” என்றார்கள். ஆனால் அவனோ, “நான்தான் அவன்” என்றான்.</verse>
				<verse number="10">அப்போது அவர்கள் அவனிடம், “அப்படியானால் உனக்கு எப்படி பார்வை கிடைத்தது?” என்றார்கள்.</verse>
				<verse number="11">அதற்கு அவன், “இயேசு என்று அழைக்கப்படும் ஒருவர் சிறிதளவு சேறுண்டாக்கி, அதை என் கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் போய் கழுவும்படி எனக்குச் சொன்னார். அப்படியே நான் போய் கழுவியபோது, என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.</verse>
				<verse number="12">அப்போது அவர்கள் அவனிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது” என்றான்.</verse>
				<verse number="13">முன்பு பார்வையற்றிருந்த அந்த மனிதனை, மக்கள் பரிசேயரிடம் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="14">இயேசு சேறு உண்டாக்கி, அந்த மனிதனின் கண்களைத் திறந்த நாள் ஒரு ஓய்வுநாளாயிருந்தது.</verse>
				<verse number="15">எனவே பரிசேயரும் அவனிடம், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் எனது கண்களில் சேற்றைப் பூசினார். நான் அதைக் கழுவினேன். இப்போது நான் பார்க்கின்றேன்” என்றான்.</verse>
				<verse number="16">அப்போது பரிசேயரில் சிலர் இயேசுவைக் குறித்து, “இவன் இறைவனிடமிருந்து வந்தவனல்ல. ஏனெனில் இவன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லையே” என்றார்கள். அதற்கு மற்றவர்கள், “பாவியான ஒருவனால், இப்படிப்பட்ட அற்புத அடையாளங்களை எப்படிச் செய்ய முடியும்?” என்றார்கள். அதனால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது.</verse>
				<verse number="17">அவர்கள் மீண்டும் அந்த பார்வையற்றவனைப் பார்த்து, “உனது கண்களைத் திறந்தாரே, அவரைக் குறித்து நீ என்ன சொல்கின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு இறைவாக்கினர்” என்றான்.</verse>
				<verse number="18">அந்த மனிதனுடைய பெற்றோரை அழைத்து விசாரிக்கும் வரைக்கும், பார்வையற்றவனாய் இருந்தவன் இப்போது பார்வையடைந்திருக்கிறான் என்பதை யூதர்கள் நம்பவில்லை.</verse>
				<verse number="19">அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “இவன்தானா உங்கள் மகன்? இவன் பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று சொல்கின்றீர்களே, இப்போது எப்படி பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="20">அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="21">ஆனால் இவனால் இப்போது எப்படிப் பார்க்க முடிகிறது என்பதோ, இவனுடைய கண்களைத் திறந்தது யார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள். அவன் வயது வந்தவனாய் இருக்கின்றானே; அவனே தனக்காகப் பேசுவான்” என்றார்கள்.</verse>
				<verse number="22">அவனுடைய பெற்றோர் யூதருக்குப் பயந்தபடியினாலேயே இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவை எவனாவது மேசியா என ஏற்றுக்கொண்டால், அவன் ஜெபஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள்.</verse>
				<verse number="23">அதனாலேயே அவனுடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்; அவனையே கேளுங்கள்” என்று சொன்னார்கள்.</verse>
				<verse number="24">பார்வையற்றவனாயிருந்த அவனை அவர்கள் இரண்டாவது முறையாகவும் அழைத்து, “நீ இறைவனுக்கு மகிமையைக் கொடு. அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.</verse>
				<verse number="25">அதற்கு அவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்று மட்டும் தெரியும். நான் பார்வையற்றிருந்தேன், இப்போது பார்க்கின்றேன்!” என்றான்.</verse>
				<verse number="26">அப்போது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="27">அவன் பதிலளித்து, “ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மறுபடியும் ஏன் அதைக் கேட்கின்றீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டான்.</verse>
				<verse number="28">அப்போது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள்.</verse>
				<verse number="29">மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.</verse>
				<verse number="30">அதற்கு அவன், “இது மிகவும் விசித்திரமாக இருக்கின்றது! நீங்களோ, அவர் எங்கிருந்து வந்தவர் என்பதே தெரியாது என்கின்றீர்கள். ஆனால் அவரோ எனக்குப் பார்வை தந்து என் கண்களைத் திறந்துவிட்டிருக்கின்றார்.</verse>
				<verse number="31">பாவிகளின் மன்றாடலை இறைவன் கேட்பதில்லை என்பது நமக்குத் தெரியும். மாறாக தமது திட்டத்தைச் செய்கின்ற இறைபக்தியுள்ளவனின் மன்றாடலையே அவர் கேட்கின்றார்.</verse>
				<verse number="32">பிறந்ததிலிருந்து பார்வையற்றிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டு அவன் பார்வையடைந்ததாக, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதே இல்லை.</verse>
				<verse number="33">அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான்.</verse>
				<verse number="34">அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.</verse>
				<verse number="35">யூதர்கள் அவனை வெளியே தள்ளிவிட்டார்களென்று இயேசு கேள்விப்பட்டார். அவர் அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மனுமகனில் விசுவாசமாயிருக்கின்றாயா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="36">அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்போது நான் அவர்மீது விசுவாசம் வைக்கிறேன்” என்றான்.</verse>
				<verse number="37">அதற்கு இயேசு, “நீ அவரைக் கண்டிருக்கிறாய்; இப்போது உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறவரே அவர்” என்றார்.</verse>
				<verse number="38">அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கின்றேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான்.</verse>
				<verse number="39">அப்போது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கின்றவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார்.</verse>
				<verse number="40">அப்போது அவருடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றவர்களோ?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="41">அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்கள் மீது சுமத்தப்பட மாட்டாது; ஆனால் உங்களால் பார்க்க முடியும் என்று நீங்கள் சொல்கின்றபடியால், உங்களது குற்றம் நிலைத்திருக்கின்றது” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">மேலும் இயேசு, “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், செம்மறியாட்டுத் தொழுவத்திற்குள்ளே வாசல் வழியாய் உள்ளே போகாமல், வேறு வழியாய் ஏறி உள்ளே வருகின்றவன் திருடனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="2">வாசல் வழியாய் உள்ளே போகின்றவனே செம்மறியாடுகளின் மேய்ப்பனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="3">காவலாளி, மேய்ப்பனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். செம்மறியாடுகளும் அவனது குரலைக் கேட்கின்றன. அவன் தன்னுடைய செம்மறியாடுகளைப் பெயர் சொல்லி அழைத்து, அவைகளை வெளியே வழிநடத்திச் செல்கிறான்.</verse>
				<verse number="4">அவன் தனக்குச் சொந்தமான எல்லா செம்மறியாடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்ததும், அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய செம்மறியாடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப் பின்னே செல்கின்றன.</verse>
				<verse number="5">செம்மறியாடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்ல மாட்டாது; ஒரு அந்நியனது குரலானது யாருடையது என அவைகளினால் அடையாளம் காண முடியாததால், அந்த அந்நியனை விட்டு அவை ஓடிப் போகும்” என்றார்.</verse>
				<verse number="6">இயேசு இதை உவமையாகப் பேசி அவர்களுக்குச் சொன்னபோது, அவர் தங்களுக்கு என்ன சொல்கின்றார் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.</verse>
				<verse number="7">எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஆடுகளுக்கு வாசல் நானே.</verse>
				<verse number="8">எனக்கு முன்னே வந்த எல்லோரும் திருடரும் கொள்ளைக்காரருமாய் இருக்கின்றார்கள். ஆடுகள் அவர்களது குரலைக் காதுகொடுத்து கேட்கவில்லை.</verse>
				<verse number="9">நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகின்றவன் எவனோ, அவன் இரட்சிக்கப்படுவான். அவன் சுதந்திரமாய் உள்ளே வந்தும் வெளியே சென்றும் தனக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்வான்.</verse>
				<verse number="10">திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகின்றான்; நானோ, அவர்கள் வாழ்வடையும்படியாக, அதை அவர்கள் நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாக வந்தேன்.</verse>
				<verse number="11">“நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கின்றான்.</verse>
				<verse number="12">கூலிக்காக மேய்ப்பவனோ செம்மறியாடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகின்றதைக் காண்கின்றபோது, செம்மறியாடுகளை விட்டுவிட்டு ஓடிப் போகின்றான். அப்போது ஓநாயானது மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது.</verse>
				<verse number="13">அப்படிப்பட்டவன் கூலிக்காகவே மேய்ப்பதால், செம்மறியாடுகளைக் குறித்து அக்கறை இல்லாதவனாய் ஓடிப் போகின்றான்.</verse>
				<verse number="14">“நானே நல்ல மேய்ப்பன்; நான் என் செம்மறியாடுகளை அறிந்திருக்கிறேன். என்னுடைய செம்மறியாடுகள் என்னை அறிந்திருக்கின்றன.</verse>
				<verse number="15">பிதா என்னை அறிந்திருப்பது போல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், நான் செம்மறியாடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கின்றேன்.</verse>
				<verse number="16">இந்தத் தொழுவத்திற்குள் இருக்காத வேறு செம்மறியாடுகளும் எனக்கு உள்ளன. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலைக் கேட்டு நடக்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும்.</verse>
				<verse number="17">நான் என் உயிரைக் கொடுக்கின்றபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக்கொள்வேன்.</verse>
				<verse number="18">என் உயிரை ஒருவரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கின்றேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டேன்” என்றார்.</verse>
				<verse number="19">இந்த வார்த்தைகளை யூதர்கள் கேட்டபோது, அவர்களிடையே மீண்டும் பிரிவினை ஏற்பட்டது.</verse>
				<verse number="20">அவர்களில் பலர், “இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது, பைத்தியமும் பிடித்துவிட்டது, இவன் பேச்சை ஏன் கேட்கின்றீர்கள்?” என்றார்கள்.</verse>
				<verse number="21">மற்றவர்களோ, “இவை பேய் பிடித்தவனுடைய வார்த்தைகள் அல்லவே. பார்வையற்றவனுடைய கண்களைப் பிசாசினால் திறக்க முடியுமோ?” என்றார்கள்.</verse>
				<verse number="22">எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர் காலமாயிருந்தது.</verse>
				<verse number="23">இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.</verse>
				<verse number="24">அப்போது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “எவ்வளவு காலத்துக்கு ஒரு முடிவெடுக்க முடியாதபடி எங்களைச் சந்தேகத்தில் வைத்திருக்கப் போகின்றீர்? நீர் மேசியாவானால், அதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்றார்கள்.</verse>
				<verse number="25">அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் பெயரினால், நான் செய்கின்ற செயல்களே நான் யார் என்பதை உறுதி செய்கின்றன.</verse>
				<verse number="26">ஆயினும், நீங்கள் விசுவாசிக்காமல் இருக்கின்றீர்கள்; ஏனெனில் நீங்கள் என்னுடைய மந்தையைச் சேர்ந்த செம்மறியாடுகள் அல்ல.</verse>
				<verse number="27">எனது செம்மறியாடுகள் என் குரலைக் கேட்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவை என்னைப் பின்பற்றுகின்றன.</verse>
				<verse number="28">நான் அவைகளுக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கின்றேன். அவை ஒருபோதும் கெட்டழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்தெடுக்கவும் முடியாது.</verse>
				<verse number="29">அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது.</verse>
				<verse number="30">நானும் பிதாவும் ஒன்றே” என்றார்.</verse>
				<verse number="31">அப்போது யூதர்கள், அவரைக் கல்லெறிந்து கொல்லும் நோக்கில், மீண்டும் கற்களை எடுத்துக் கொண்டார்கள்.</verse>
				<verse number="32">ஆனால் இயேசுவோ அவர்களிடம், “என் பிதாவிடம் இருந்து பல நல்ல செயல்களை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளில் எதன் காரணமாக நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="33">அதற்கு யூதர்கள், “நல்ல செயல்களுக்காக அல்ல, ஒரு சாதாரண மனிதனாகிய நீ, உன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கின்றாயே! அவ்விதம் நீ இறைவனை நிந்தித்துப் பேசியதற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள்.</verse>
				<verse number="34">இயேசு அவர்களிடம், “நீங்கள் ‘தெய்வங்களாய்’ இருக்கின்றீர்கள் என்று உங்கள் நீதிச்சட்டத்தில் எழுதியிருக்கிறதல்லவா?</verse>
				<verse number="35">இறைவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களை, ‘தெய்வங்கள்’ என்று இறைவன் சொல்லியிருக்கின்றாரே. வேதவசனமும் தவறாக இருக்க முடியாதே.</verse>
				<verse number="36">அப்படியானால் பிதாவினால் தனக்கென வேறுபிரித்து, இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? நான் என்னை ‘இறைவனுடைய மகன்’ என்று சொன்னதால், நான் இறைவனை நிந்திக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னில் குற்றம் காணலாம்?</verse>
				<verse number="37">நான் என் பிதா செய்தவற்றைச் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.</verse>
				<verse number="38">ஆனால் அவைகளை நான் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும்கூட, என் செயல்களையாவது விசுவாசியுங்கள். அப்போது பிதா என்னில் இருக்கின்றார் என்பதையும், நான் பிதாவில் இருக்கின்றேன் என்பதையும், நீங்கள் அறிந்து விளங்கிக்கொள்வீர்கள்” என்றார்.</verse>
				<verse number="39">எனவே அவர்கள் திரும்பவும் அவரைக் கைது செய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ அவர்களுடைய பிடியில் அகப்படாமல் தப்பிச் சென்றார்.</verse>
				<verse number="40">பின்பு இயேசு, திரும்பவும் யோர்தானைக் கடந்து, ஆரம்ப நாட்களிலே யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு போய், அங்கே தங்கினார்.</verse>
				<verse number="41">அநேகர் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அற்புத அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக் குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கின்றது” என்றார்கள்.</verse>
				<verse number="42">அவ்விடத்திலே அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">லாசரு என்னும் ஒருவன் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். அவன் பெத்தானியா ஊரைச் சேர்ந்தவன். அவன் தனது சகோதரிகளான மரியாளுடனும் மார்த்தாளுடன் அங்கே வாழ்ந்து வந்தான்.</verse>
				<verse number="2">இந்த மரியாளே, பின்பு ஆண்டவரின்மீது வாசனைத் தைலத்தை ஊற்றி, அவருடைய பாதங்களைத் தன்னுடைய தலைமுடியினால் துடைத்தவள். இவளுடைய சகோதரனாகிய லாசருவே வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான்.</verse>
				<verse number="3">எனவே லாசருவின் சகோதரிகள், “ஆண்டவரே, நீர் நேசிக்கின்றவன் வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறான்” என்ற செய்தியை அனுப்பினார்கள்.</verse>
				<verse number="4">இயேசு இதைக் கேட்டபோது அவர், “இந்த வியாதி மரணத்தில் முடிவடையாது. இது இறைவனுடைய மகிமைக்கே, இதன் மூலமாக இறைவனுடைய மகனும் மகிமைப்படுவார்” என்றார்.</verse>
				<verse number="5">இயேசு, மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியிடத்திலும் லாசருவிலும் அன்பாயிருந்தார்.</verse>
				<verse number="6">ஆயினும் லாசரு வியாதியுடனிருக்கிறான் என்று அவர் கேள்விப்பட்டபோது, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் தங்கியிருந்தார்.</verse>
				<verse number="7">பின்பு அவர் தமது சீடர்களிடம், “திரும்பவும் நாம் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்றார்.</verse>
				<verse number="8">ஆனால் அவர்களோ, “போதகரே, சற்று முன்னதாகத்தான் யூதர்கள் உம்மீது கல்லெறிய முயன்றார்கள். திரும்பவும் நீர் அங்கே போகப் போகின்றீரோ?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="9">இயேசு அதற்கு மறுமொழியாக, “பகல் வேளையில் பன்னிரண்டு மணி நேரம் இருக்கின்றதல்லவா? பகல் வேளையில் நடக்கின்றவன் உலகத்தின் வெளிச்சத்தைக் காண்பதால், அவன் இடறி விழ மாட்டான்.</verse>
				<verse number="10">அவன் இரவில் நடக்கின்றபோது அவனுக்கு வெளிச்சம் இல்லாதபடியால், இடறி விழுகிறான்” என்றார்.</verse>
				<verse number="11">அவர் இதைச் சொல்லி முடித்த பின்பு, அவர் மேலும் சொன்னதாவது: “நம்முடைய சிநேகிதன் லாசரு நித்திரையாயிருக்கிறான்; நான் அங்கே போய், அவனை எழுப்பப் போகின்றேன்” என்றார்.</verse>
				<verse number="12">சீடர்கள் அதற்கு மறுமொழியாக, “போதகரே, அவன் நித்திரையாயிருந்தால் அவன் குணமடைவான்” என்றார்கள்.</verse>
				<verse number="13">இயேசு அவனுடைய மரணத்தைக் குறித்துப் பேசினார். அவருடைய சீடர்களோ, இயல்பான நித்திரையைக் குறித்தே அவர் சொன்னார் என்று நினைத்தார்கள்.</verse>
				<verse number="14">அப்போது இயேசு, “லாசரு இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லி,</verse>
				<verse number="15">“நான் அங்கே இல்லாததைக் குறித்து, உங்கள் பொருட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதற்கு அது உதவியாயிருக்கும். நாம் அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார்.</verse>
				<verse number="16">அப்போது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து, “வாருங்கள், நாமும் மரணிப்பதற்கு அவருடன் போவோம்” என்றான்.</verse>
				<verse number="17">இயேசு பெத்தானியாவுக்கு வந்து சேர்ந்தபோது, லாசரு கல்லறையில் வைக்கப்பட்டு, ஏற்கெனவே நான்கு நாட்களாகி விட்டன என்று கண்டார்.</verse>
				<verse number="18">பெத்தானியா எருசலேமிலிருந்து இரண்டு மைல்களுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது.</verse>
				<verse number="19">இறந்துபோன அவர்களுடைய சகோதரனின் பொருட்டு, மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் ஆறுதல் சொல்வதற்கு அநேக யூதர்கள் அங்கே வந்திருந்தார்கள்.</verse>
				<verse number="20">இயேசு வருகின்றார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திப்பதற்கு அவள் புறப்பட்டு வெளியே சென்றாள். ஆனால் மரியாளோ வீட்டிலேயே இருந்துவிட்டாள்.</verse>
				<verse number="21">மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் எனது சகோதரன் இறந்திருக்க மாட்டான்.</verse>
				<verse number="22">இப்போதும்கூட நீர் கேட்பது எதுவோ அதை இறைவன் உமக்குக் கொடுப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்றாள்.</verse>
				<verse number="23">அப்போது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் திரும்பவும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார்.</verse>
				<verse number="24">அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் நடைபெறும் உயிர்த்தெழுதலில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.</verse>
				<verse number="25">அப்போது இயேசு அவளிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கின்றவன், இறந்தாலும் வாழ்வான்.</verse>
				<verse number="26">உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கின்றவன் எவனும் ஒருபோதும் இறக்க மாட்டான். நீ இதை விசுவாசிக்கின்றாயா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="27">அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் இறைவனின் மகன், உலகத்திற்கு வரவேண்டிய மேசியா. நான் இதை விசுவாசிக்கின்றேன்” என்றாள்.</verse>
				<verse number="28">அவள் இதைச் சொன்ன பின்பு திரும்பிப் போய், தன்னுடைய சகோதரி மரியாளை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய், “போதகர் வந்திருக்கிறார். அவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்றாள்.</verse>
				<verse number="29">மரியாள் இதைக் கேட்டபோது, விரைவாய் எழுந்து அவரிடம் சென்றாள்.</verse>
				<verse number="30">இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், தான் மார்த்தாளைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார்.</verse>
				<verse number="31">வீட்டிலே மரியாளுடன் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறிய யூதர்கள், அவள் விரைவாய் எழுந்து புறப்பட்டுப் போவதைக் கண்டபோது, அவர்களும் அவள் பின்னே போனார்கள். அவள் துக்கம் அனுசரிக்க கல்லறைக்குப் போகின்றாள் என்றே அவர்கள் நினைத்தார்கள்.</verse>
				<verse number="32">இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் போய்ச் சேர்ந்தபோது, அவள் அவரைக் கண்டு, அவருடைய பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என்னுடைய சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றாள்.</verse>
				<verse number="33">அவள் அழுவதையும், அவளுடன் வந்திருந்த யூதர்கள் அழுவதையும் இயேசு கண்டபோது, அவர் உள்ளம் குமுறி ஆவியில் கலங்கி,</verse>
				<verse number="34">“அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாருங்கள், வந்து பாருங்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="35">இயேசு கண்ணீர்விட்டார்.</verse>
				<verse number="36">அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் அவனில் எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள்.</verse>
				<verse number="37">ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவன் மரணிக்காமல் தடுத்திருக்கலாமே!” என்றார்கள்.</verse>
				<verse number="38">இயேசு திரும்பவும் உள்ளம் குமுறியவராய் கல்லறைக்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது. அதன் வாசலிலே ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="39">இயேசு அங்கு நின்றவர்களைப் பார்த்து, “அந்தக் கல்லை அகற்றுங்கள்” என்றார். அப்போது இறந்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள், “ஆண்டவரே, இப்போது நாற்றம் வீசுமே. அங்கே அவனை வைத்து, நான்கு நாட்கள் ஆயிற்றே” என்றாள்.</verse>
				<verse number="40">அப்போது இயேசு, “நீ விசுவாசித்தால், இறைவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="41">எனவே அவர்கள் அந்தக் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “பிதாவே, என் மன்றாடுதலுக்கு ஏற்கெனவே நீர் பதில் அளித்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="42">நீர் எப்போதும் என் மன்றாடுதலை கேட்கின்றவர் என்பதை நான் அறிவேன். ஆயினும் இங்கு நிற்கிற மக்கள், நீரே என்னை அனுப்பினீர் என்று விசுவாசிக்கும்படி, அவர்களுக்காகவே இதைச் சொல்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="43">இயேசு இதைச் சொன்ன பின்பு, “லாசருவே, வெளியே வா!” என்று உரத்த குரலில் அவனை அழைத்தார்.</verse>
				<verse number="44">இறந்து போனவன் வெளியே வந்தான். அவனுடைய கைகளும் கால்களும் மென்பட்டு துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. அவனுடைய முகத்தைச் சுற்றியும் ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து, “பிரேதத் துணிகளை அவிழ்த்து, அவனைப் போக விடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="45">மரியாளைச் சந்திக்க வந்திருந்த பல யூதர்கள் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசம் வைத்தார்கள்.</verse>
				<verse number="46">ஆனால் அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்ததைக் குறித்துச் சொன்னார்கள்.</verse>
				<verse number="47">அப்போது தலைமை மதகுருக்களும் பரிசேயரும் நியாயசபையைக் கூட்டினார்கள். அவர்கள், “நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? இதோ இவன் பல அற்புத அடையாளங்களைச் செய்கின்றானே.</verse>
				<verse number="48">நாம் இப்படியே இவனைப் போகவிட்டால், எல்லோரும் இவனில் விசுவாசம் வைப்பார்கள். அப்போது ரோமர்கள் வந்து நமது ஆலயத்தையும், நமது இனத்தையும் அழித்து விடுவார்களே” என்றார்கள்.</verse>
				<verse number="49">அப்போது அந்த வருடத்தின் தலைமை மதகுருவான காய்பா எனப்பட்ட ஒருவன் அவர்களிடம், “நீங்கள் எதுவுமே தெரியாதவர்களாய் இருக்கின்றீர்களே.</verse>
				<verse number="50">நமது முழு இனமும் அழிவதைப் பார்க்கிலும், மக்களுக்காக ஒருவன் சாவது நல்லது என்று நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றீர்கள்” என்றான்.</verse>
				<verse number="51">இதை அவன் சுயமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அந்த வருடத்துத் தலைமை மதகுரு என்ற வகையில், யூத மக்களுக்காக இயேசு இறக்கப் போகின்றார் என்றும்,</verse>
				<verse number="52">அந்த மக்களுக்காக மட்டுமல்ல, சிதறி இருக்கின்ற இறைவனுடைய பிள்ளைகளை ஒன்றாக சேர்க்கும்படியாக இறக்கப் போகின்றார் என்றும் இறைவாக்காகவே அவன் சொன்னான்.</verse>
				<verse number="53">எனவே அன்றிலிருந்து அவர்கள் அவரைக் கொலை செய்வதற்குச் சூழ்ச்சி செய்தார்கள்.</verse>
				<verse number="54">ஆகவே இயேசு தொடர்ந்து யூதர்கள் மத்தியிலே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் பாலைநிலத்தின் அருகே உள்ள பகுதிக்குப் போய், அங்கே எப்பிராயீம் எனப்பட்ட ஒரு கிராமத்தில் தம்முடைய சீடர்களுடனே தங்கினார்.</verse>
				<verse number="55">யூதர்களுடைய பஸ்கா பண்டிகைக் காலம் நெருங்கி வந்தது. அப்போது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக தங்களுடைய சம்பிரதாய சுத்திகரிப்பைச் செய்துகொள்வதற்காக, அநேகர் நாட்டுப் புறத்திலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.</verse>
				<verse number="56">அவர்கள் இயேசுவைப் பார்க்க விரும்பி அவரைத் தேடினார்கள். அவர்கள் ஆலயப் பகுதியில் நின்றபடி ஒருவரையொருவர் பார்த்து, “இந்தப் பண்டிகைக்கு அவர் வருவாரா, வர மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="57">ஆனால் தலைமை மதகுருக்களும் பரிசேயர்களுமோ இயேசுவைக் கைது செய்யும்படி, அவர் இருக்கும் இடத்தை அறிந்தவர்கள் அதைத் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். இங்குதான் இயேசு இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பிய லாசரு வாழ்ந்தான்.</verse>
				<verse number="2">அங்கே அவர்கள் இயேசுவுக்கு விருந்து கொடுத்தார்கள். மார்த்தாள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். இயேசுவுடனே உணவுப் பந்தியில் அமர்ந்திருந்தவர்களிடையே லாசருவும் இருந்தான்.</verse>
				<verse number="3">அப்போது மரியாள், மிகவும் விலை உயர்ந்த நளதம் என்னும் வாசனைத் தைலத்தில் அரை லீட்டர் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் ஊற்றி, அவருடைய பாதங்களைத் தனது கூந்தலால் துடைத்தாள். அந்த வாசனைத் தைலத்தின் வாசனை வீட்டை நிரப்பியது.</verse>
				<verse number="4">ஆனால் இயேசுவின் சீடர்களில் ஒருவனும், பின்னர் அவரைக் காட்டிக் கொடுத்தவனுமாகிய யூதாஸ் ஸ்காரியோத்து இதை எதிர்த்து,</verse>
				<verse number="5">“இந்த வாசனைத் தைலத்தை முந்நூறு தினாரி பணத்துக்கு விற்று, அதை ஏன் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை?” என்றான்.</verse>
				<verse number="6">அவன் ஏழைகளைக் குறித்து அக்கறையுடையவனாய் இருந்ததனால் இதைச் சொல்லவில்லை; திருடனாயிருந்தபடியாலேயே இப்படிச் சொன்னான். பணப்பைக்குப் பொறுப்பாய் இருந்த அவன், அதில் போடப்படும் பணத்திலிருந்து தனக்காக எடுத்துக்கொள்வதுண்டு.</verse>
				<verse number="7">ஆனால் இயேசுவோ, “அவளைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுங்கள். என்னை அடக்கம் பண்ணும் நாளுக்கென்றே, அவள் இந்தத் தைலத்தை வைத்திருந்தாள்.</verse>
				<verse number="8">ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் நானோ, எப்போதும் உங்களுடன் இருக்கப் போவதில்லை” என்றார்.</verse>
				<verse number="9">இதற்கிடையில் இயேசு அங்கே இருக்கின்றார் என்று யூதர்கள் அறிந்து, ஒரு பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல, இறந்தோரிலிருந்து உயிருடன் அவர் எழுப்பிய லாசருவையும் பார்ப்பதற்காக வந்தார்கள்.</verse>
				<verse number="10">எனவே தலைமை மதகுருக்கள் லாசருவையும் கொல்வதற்குத் திட்டம் வகுத்தார்கள்.</verse>
				<verse number="11">ஏனெனில் லாசருவின் பொருட்டு யூதர்களில் பலர் இயேசுவிடம் போய், அவரில் விசுவாசம் வைத்தார்கள்.</verse>
				<verse number="12">மறுநாள் பண்டிகைக்காக வந்திருந்த பெருந்திரளான மக்கள், இயேசு எருசலேமுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள்.</verse>
				<verse number="13">அவர்கள் குருத்தோலைகளை எடுத்துக்கொண்டு, அவரைச் சந்திக்கப் புறப்பட்டு, “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகின்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “இஸ்ரயேலின் அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள்.</verse>
				<verse number="14">இயேசு ஒரு கழுதைக்குட்டியைத் தேடி, அதன்மீது உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது:</verse>
				<verse number="15">“சீயோன் மகளே, பயப்படாதே; இதோ உன்னுடைய அரசர் கழுதைக்குட்டியின் மேல் வருகின்றார்.”</verse>
				<verse number="16">ஆரம்பத்திலே அவருடைய சீடர்கள் இதையெல்லாம் விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு மகிமைப்படுத்தப்பட்ட பின்பே, இவையெல்லாம் அவரைக் குறித்து இறைவாக்கினரால் எழுதப்பட்டிருந்தன என்றும், இவற்றை மக்கள் அவருக்கு அப்படியே செய்தார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்.</verse>
				<verse number="17">இயேசு லாசருவைக் கல்லறையிலிருந்து அழைத்து, அவனை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியபோது, அவருடன் இருந்த மக்கள் கூட்டத்தினர் தொடர்ந்து அந்தச் செய்தியைப் பரப்பி வந்தார்கள்.</verse>
				<verse number="18">அவர் இப்படிப்பட்ட ஒரு அற்புத அடையாளத்தைச் செய்தார் என்று கேள்விப்பட்டதனால், அநேகர் அவரைச் சந்திப்பதற்குப் போனார்கள்.</verse>
				<verse number="19">அப்போது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதிருக்கிறதே. பாருங்கள்! உலகமே அவனுக்குப் பின்னால் போகின்றது” என்றார்கள்.</verse>
				<verse number="20">பண்டிகையிலே ஆராதிப்பதற்காகப் போனவர்களிடையே சில கிரேக்கர்கள் இருந்தார்கள்.</verse>
				<verse number="21">அவர்கள் பிலிப்புவினிடத்தில் வந்து, “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்” என்றார்கள். இந்த பிலிப்பு, கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.</verse>
				<verse number="22">பிலிப்பு போய் அந்திரேயாவுக்கு இதைச் சொன்னான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவிடம் இதைச் சொன்னார்கள்.</verse>
				<verse number="23">அப்போது இயேசு, “மனுமகன் மகிமைப்படுவதற்கான வேளை வந்துவிட்டது.</verse>
				<verse number="24">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், ஒரு கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால், அது தனியொரு விதையாகவே இருக்கும். ஆனால் அது செத்தாலோ, அநேக விதைகளை விளையச் செய்யும்.</verse>
				<verse number="25">தன் வாழ்வை நேசிக்கின்றவன், அதை இழந்து விடுவான். ஆனால் இந்த உலகத்திலே தன் வாழ்வை வெறுக்கின்றவனோ, நித்திய வாழ்வுக்கென அதைக் காத்துக்கொள்வான்.</verse>
				<verse number="26">எனக்குப் பணி செய்கின்றவன் எவனோ, அவன் என்னைப் பின்பற்ற வேண்டும். நான் எங்கே இருக்கின்றேனோ என்னுடைய ஊழியக்காரனும் அங்கே இருப்பான். எனக்குப் பணி செய்கின்றவனை என் பிதா கனம் பண்ணுவார்.</verse>
				<verse number="27">“இப்போது என் உள்ளம் கலங்கி இருக்கின்றது. நான் என்ன சொல்வேன்? ‘பிதாவே, இந்தத் துன்ப வேளையிலிருந்து என்னை காத்துக்கொள்ளும்’ என்று சொல்வேனோ? இல்லையே, இந்தக் காரணத்திற்காகத்தானே நான் வந்தேன்; இதற்காகவே நான் இவ்வேளைக்குள் போகப் போகின்றேன்.</verse>
				<verse number="28">‘பிதாவே உம்முடைய பெயரை மகிமைப்படுத்தும்!’ ” என்றார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தியிருக்கிறேன். அதைத் திரும்பவும் மகிமைப்படுத்துவேன்” என்று பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.</verse>
				<verse number="29">அங்கு கூடியிருந்த மக்கள் அதைக் கேட்டு, “வானத்தில் முழக்கம் உண்டாகியது” என்றார்கள். வேறு சிலரோ, “ஒரு இறைதூதன் அவருடனே பேசினான்” என்றார்கள்.</verse>
				<verse number="30">இயேசுவோ, “இந்தக் குரல் எனக்காக அல்ல, உங்களுக்காகவே தொனித்தது.</verse>
				<verse number="31">இதுவே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு ஏற்படும் வேளையாக இருக்கின்றது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி வெளியே துரத்தப்படுவான்.</verse>
				<verse number="32">ஆனால் நானோ, இந்தப் பூமியிலிருந்து மேலே உயர்த்தப்படும்போது, எல்லா மனிதர்களையும் என்னிடமாய் கவர்ந்துகொள்வேன்” என்றார்.</verse>
				<verse number="33">அவர் சந்திக்கவிருக்கும் மரணம் எவ்விதமான மரணம் என்பதை உணர்த்தவே அவர் இதைச் சொன்னார்.</verse>
				<verse number="34">அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், “மேசியா என்றென்றுமாய் இருப்பார் என்றே நீதிச்சட்டத்திலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மனுமகன் மேலே உயர்த்தப்பட வேண்டும் என்று நீர் எப்படிச் சொல்லலாம்? யார் இந்த மனுமகன்?” என்றார்கள்.</verse>
				<verse number="35">அப்போது இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலத்திற்கே வெளிச்சம் உங்களோடு இருக்கப் போகின்றது. இருள் உங்களை மூடிக்கொள்ளும் முன்னதாக, வெளிச்சம் உங்களுடன் இருக்கும்போதே, நீங்கள் அதில் நடந்துகொள்ளுங்கள். இருளிலே நடக்கின்றவன், தான் எங்கே போகின்றான் என்று அறியாதிருக்கிறான்.</verse>
				<verse number="36">வெளிச்சம் உங்களிடம் இருக்கும்போதே, அந்த வெளிச்சத்தில் நம்பிக்கை வையுங்கள். அப்போது நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக இருப்பீர்கள்” என்றார். இயேசு இவைகளைச் சொன்ன பின்பு, அவர் அவர்களைவிட்டுச் சென்று மறைந்துகொண்டார்.</verse>
				<verse number="37">இயேசு இத்தனை அற்புத அடையாளங்களை எல்லாம் அவர்களது கண்களுக்கு முன்னால் செய்த போதிலும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.</verse>
				<verse number="38">இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாக கூறப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியாகவே இது நடந்தது: “ஆண்டவரே, எங்களுடைய செய்தியை நம்பியவர் யார்? கர்த்தருடைய வலிய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?” என்று அவன் கூறியிருக்கிறான்.</verse>
				<verse number="39">இந்தக் காரணத்தினாலேயே அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. ஏனெனில் ஏசாயா வேறொரு இடத்தில் சொல்லியிருப்பதாவது:</verse>
				<verse number="40">“கர்த்தர் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிவிட்டார். அவர்களுடைய இருதயத்தையோ மரத்துப் போகச் செய்தார். இதனாலேயே அவர்கள் தங்களுடைய கண்களால் காண முடியவும் இல்லை. தங்கள் இருதயங்களினால் விளங்கிக்கொள்ள முடியவும் இல்லை. நான் அவர்களைக் குணமாக்கும்படி, அவர்களால் என்னிடம் மனந்திரும்பி வர முடியவும் இல்லை.”</verse>
				<verse number="41">ஏசாயா, இயேசுவின் மகிமையைக் கண்டு, அவரைக் குறித்து பேசியதால் இதைச் சொன்னார்.</verse>
				<verse number="42">ஆயினும் யூத அதிகாரிகளில் பலரும் அவரில் விசுவாசம் வைத்தார்கள். ஆனாலும் பரிசேயர்களின் பொருட்டு, அவர்கள் தங்கள் விசுவாசத்தைக் குறித்து வெளிப்படையாய் பேசவில்லை. அப்படிப் பேசினால், யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து தாங்கள் வெளியேற்றப்படலாம் என்று அவர்கள் பயந்தார்கள்.</verse>
				<verse number="43">ஏனெனில், அவர்கள் இறைவனிடமிருந்து வரும் புகழ்ச்சியைவிட, மனிதரிடமிருந்து வந்த புகழ்ச்சியை அதிகமாக விரும்பினார்கள்.</verse>
				<verse number="44">அப்போது இயேசு உரத்த குரலில் சொன்னதாவது: “ஒருவன் என்னில் விசுவாசம் வைக்கும்போது, அவன் என்னில் மட்டுமல்ல, என்னை அனுப்பியவரிலும் விசுவாசம் வைக்கிறான்.</verse>
				<verse number="45">அவன் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவன் காண்கின்றான்.</verse>
				<verse number="46">என்னில் விசுவாசம் வைக்கின்றவன், தொடர்ந்து இருளில் இராதவாறே, நான் இந்த உலகத்திற்கு ஒளியாய் வந்திருக்கிறேன்.</verse>
				<verse number="47">“என்னுடைய வார்த்தையைக் கேட்டும் அதைக் கைக்கொள்ளாதவனையோ, நான் நியாயம் தீர்ப்பதில்லை. ஏனெனில் உலகத்தை நியாயம் தீர்க்க நான் வரவில்லை. அதை இரட்சிக்கவே நான் வந்தேன்.</verse>
				<verse number="48">என்னை நிராகரித்து, என் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயம் தீர்க்கும் ஒன்று உண்டு; நான் பேசிய வார்த்தையே, கடைசி நாளில் அவனை நியாயம் தீர்க்கும்.</verse>
				<verse number="49">ஏனெனில் நான் என்னுடைய சுயவிருப்பத்தின்படி பேசவில்லை. என்னை அனுப்பிய பிதாவே நான் என்ன சொல்ல வேண்டும் என்றும், அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்றும் எனக்குக் கட்டளையிட்டார்.</verse>
				<verse number="50">அவருடைய கட்டளை, நித்திய வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று எனக்குத் தெரியும். எனவே பிதா, நான் எதைச் சொல்ல வேண்டும் என்றாரோ அவற்றை நான் அப்படியே சொல்கின்றேன்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">பஸ்கா பண்டிகை தொடங்க இருந்தபோது, இயேசு தாம் இந்த உலகத்தைவிட்டுப் புறப்பட்டு, பிதாவினிடத்திற்கு போகும்வேளை நெருங்கிவிட்டதை அறிந்திருந்தார். உலகத்திலே தமக்கு உரியவர்களை அன்பு செய்த அவர், கடைசி வரை அவர்களை அன்பு செய்தார்.</verse>
				<verse number="2">இரவு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி, சீமோனின் மகனாகிய யூதாஸ் ஸ்காரியோத்தின் உள்ளத்தை சாத்தான் ஏற்கெனவே ஏவிவிட்டிருந்தான்.</verse>
				<verse number="3">பிதா எல்லாவற்றையும் தனது வல்லமையின் கீழ் ஒப்புக்கொடுத்திருந்ததையும், தான் இறைவனிடத்திலிருந்து வந்ததையும், இறைவனிடத்திற்கே திரும்பிப் போகின்றதையும் இயேசு அறிந்திருந்தார்.</verse>
				<verse number="4">எனவே அவர் உணவுப் பந்தியிலிருந்து எழுந்து, தமது மேலாடையைக் கழற்றி வைத்துவிட்டு, இடுப்பிலே ஒரு துணியைக் கட்டிக் கொண்டார்.</verse>
				<verse number="5">அதன்பின், அவர் ஒரு பாத்திரத்திலே தண்ணீரை ஊற்றி, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவி, தம்முடைய இடுப்பிலே கட்டியிருந்த துணியினால் அவர்களுடைய கால்களைத் துடைக்கத் தொடங்கினார்.</verse>
				<verse number="6">அவர் சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப் போகின்றீரா?” என்றான்.</verse>
				<verse number="7">இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது எதுவென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ அதைப் புரிந்துகொள்வாய்” என்றார்.</verse>
				<verse number="8">அப்போது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார்.</verse>
				<verse number="9">அப்போது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மட்டுமல்லாது, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையும்கூட கழுவும்!” என்றான்.</verse>
				<verse number="10">அதற்கு இயேசுவோ, “குளித்தவன், தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாய் இருக்கின்றான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆயினும் எல்லோரும் அல்ல” என்றார்.</verse>
				<verse number="11">ஏனெனில் தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவன் யார் என்று அவர் அறிந்திருந்தார். அதனாலேயே, “நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.</verse>
				<verse number="12">அவர் அவர்களுடைய கால்களைக் கழுவி முடித்த பின், தம்முடைய உடையை அணிந்துகொண்டு, திரும்பவும் தமக்குரிய இடத்தில் உட்கார்ந்தார். பின்பு அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று உங்களுக்கு புரிகிறதா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="13">மேலும் அவர், “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும், ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கின்றீர்கள். நீங்கள் அப்படி அழைப்பது சரியே. ஏனெனில் நான் அவர்தான்.</verse>
				<verse number="14">ஆண்டவரும் போதகருமாயிருக்கின்ற நானே உங்கள் கால்களைக் கழுவியபடியால் நீங்களும் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவ வேண்டும்.</verse>
				<verse number="15">ஏனெனில் நான் உங்களுக்குச் செய்தது போலவே, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டுமென்று நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்திருக்கிறேன்.</verse>
				<verse number="16">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எந்த வேலையாளும் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல. எந்தத் தூதுவனும் தன்னை அனுப்பியவனை விடப் பெரியவன் அல்ல.</verse>
				<verse number="17">நீங்கள் இப்போது இவைகளை அறிந்திருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் இவைகளைச் செய்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” என்றார்.</verse>
				<verse number="18">இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிவு செய்தேன் என்று எனக்குத் தெரியும். ஆயினும் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கின்றான்’ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.</verse>
				<verse number="19">“அது நிகழும் முன்பதாகவே, இப்போது நான் அதை உங்களுக்குச் சொல்கின்றேன். ஏனெனில் அது நிகழும்போது, நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள்.</verse>
				<verse number="20">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நான் அனுப்புகின்ற எவனையாவது ஒருவன் ஏற்றுக்கொண்டால், அவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான். யாராவது என்னை ஏற்றுக்கொண்டால் அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கின்றான்” என்றார்.</verse>
				<verse number="21">இயேசு இதைச் சொன்ன பின்பு, அவர் ஆவியில் கலங்கியவராய், “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுக்கப் போகின்றான்” என்று வெளிப்படையாகச் சொன்னார்.</verse>
				<verse number="22">அவருடைய சீடர்களோ, அவர் யாரைக் குறித்துச் சொல்கின்றார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.</verse>
				<verse number="23">இயேசுவின் சீடர்களில் அவருக்கு அன்பானவனாக இருந்த ஒருவன், உணவுப் பந்தியிலே அவரின் மார்புப் பக்கமாய் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.</verse>
				<verse number="24">சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக் குறித்துப் பேசுகின்றார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான்.</verse>
				<verse number="25">எனவே அவன் இயேசுவின் பக்கமாய் சாய்ந்து, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="26">அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கின்றேனோ, அவன் தான்” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.</verse>
				<verse number="27">யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிக் கொண்ட உடனே, சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யப் போகின்றதை விரைவாய்ச் செய்” என்றார்.</verse>
				<verse number="28">ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னாரென்று உணவுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை.</verse>
				<verse number="29">யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கின்றார் என்று சிலர் நினைத்தார்கள்.</verse>
				<verse number="30">அப்பத்தை வாங்கிக் கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுச் சென்றான். அப்போது அது இரவு நேரமாயிருந்தது.</verse>
				<verse number="31">யூதாஸ் போன பின்பு இயேசு அவர்களிடம், “இப்போது மனுமகன் மகிமைப்படுகிறார்; இறைவனும் அவரில் மகிமைப்படுகிறார்.</verse>
				<verse number="32">இறைவன் அவரில் மகிமைப்பட்டால், இறைவனும் மனுமகனைத் தம்மிலே மகிமைப்படுத்துவார்; அவர் உடனே அவரை மகிமைப்படுத்துவார்.</verse>
				<verse number="33">“பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆயினும் நான் போகின்ற இடத்துக்கு உங்களால் வர முடியாது; இதை நான் யூதர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கின்றேன்.</verse>
				<verse number="34">“நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கின்றேன்: ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்தது போல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டும்.</verse>
				<verse number="35">நீங்கள் இப்படி ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.</verse>
				<verse number="36">அப்போது சீமோன் பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகின்றீர்?” என்று கேட்டான். இயேசு அதற்கு மறுமொழியாக, “நான் போகின்ற இடத்துக்கு என்னைப் பின்தொடர்ந்து வர உன்னால் இப்போது முடியாது. ஆனால் பிறகு என்னைப் பின்தொடர்வாய்” என்றார்.</verse>
				<verse number="37">அப்போது பேதுரு, “ஆண்டவரே, ஏன் என்னால் இப்போது வர முடியாது? நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான்.</verse>
				<verse number="38">அதற்கு இயேசு, “உண்மையிலேயே நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ? நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், காலையில் சேவல் கூவுகிறதற்கு முன்னதாக நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">“உங்கள் உள்ளம் கலங்குவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். இறைவனில் விசுவாசமாயிருங்கள்; என்னிலும் விசுவாசமாயிருங்கள்.</verse>
				<verse number="2">என்னுடைய பிதாவின் வீட்டிலே அநேக உறைவிடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாதிருந்தால், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தும்படி நான் அங்கு போகின்றேன் என்று உங்களுக்குச் சொல்லியிருப்பேனா?</verse>
				<verse number="3">நான் போய், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திய பின்பு, திரும்பவும் வந்து, நீங்கள் என்னுடன் இருக்கும்படி உங்களை அழைத்துச் செல்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள்.</verse>
				<verse number="4">நான் போகின்ற இடத்திற்கான வழியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்றார்.</verse>
				<verse number="5">தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகின்றீர் என்று எங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்க, அங்கு போகும் வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான்.</verse>
				<verse number="6">அதற்கு இயேசு, “வழியும், சத்தியமும், வாழ்வும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவிடம் வர முடியாது.</verse>
				<verse number="7">நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இப்பொழுதிலிருந்தே நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கின்றீர்கள்” என்றார்.</verse>
				<verse number="8">அதற்குப் பிலிப்பு, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்” என்றான்.</verse>
				<verse number="9">அப்போது இயேசு அவனிடம் சொன்னதாவது: “பிலிப்புவே, நான் இவ்வளவு காலம் உங்களோடிருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் கண்டிருக்கின்றவன் பிதாவைக் கண்டிருக்கிறான். அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லலாம்?</verse>
				<verse number="10">நான் பிதாவில் இருக்கின்றதையும், பிதா என்னில் இருக்கின்றதையும் நீ விசுவாசிக்கவில்லையா? நான் உங்களுக்குச் சொல்கின்ற இந்த வார்த்தைகள் என்னுடையதல்ல. அவை என் பிதாவின் வார்த்தைகளே. அவர் எனக்குள் இருந்து தமது செயல்களைச் செய்கின்றார்.</verse>
				<verse number="11">நான் பிதாவில் இருக்கின்றேன் என்றும், பிதா என்னில் இருக்கின்றார் என்றும் நான் சொல்லும்போது அதை நம்புங்கள்; இல்லாவிட்டால், நான் செய்த அற்புதங்களின் பொருட்டாவது, அதை நம்புங்கள்.</verse>
				<verse number="12">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், என்னில் விசுவாசம் வைக்கின்றவன், நான் செய்த செயல்களை அவனும் செய்வான். நான் என் பிதாவினிடத்திற்கு போகின்றபடியால், அவன் இவைகளைப் பார்க்கிலும் பெரிதான செயல்களையும் செய்வான்.</verse>
				<verse number="13">நீங்கள் என் பெயரில் எதைக் கேட்கின்றீர்களோ, அதை நான் செய்வேன். மகனால் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படியாக அதைச் செய்வேன்.</verse>
				<verse number="14">என்னுடைய பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.</verse>
				<verse number="15">“நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் கொடுக்கும் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள்.</verse>
				<verse number="16">நான் உங்களுக்காகப் பிதாவிடம் வேண்டிக்கொள்வேன். அப்போது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி, இன்னொரு உறுதுணையாளரை உங்களுக்குக் கொடுப்பார்.</verse>
				<verse number="17">அவரே உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர். இந்த உலகத்தார் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கின்றபடியால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் உங்களுடனும் உங்களுக்குள்ளும் இருப்பதால், நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="18">நான் உங்களை ஆதரவற்றவர்களாக விட்டுவிட மாட்டேன். நான் உங்களிடத்தில் திரும்பவும் வருவேன்.</verse>
				<verse number="19">இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காண மாட்டாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்வதால், நீங்களும் வாழ்வீர்கள்.</verse>
				<verse number="20">அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.</verse>
				<verse number="21">என்னுடைய கட்டளைகளை ஏற்று, அவைகளுக்குக் கீழ்ப்படிகின்றவர்கள் எவர்களோ, அவர்களே என்னில் அன்பாயிருக்கின்றவர்கள். என்னில் அன்பாயிருக்கின்றவர்களை பிதா அன்பு செய்வார். நானும் அவர்களில் அன்பாயிருந்து, என்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.”</verse>
				<verse number="22">அப்போது யூதாஸ் ஸ்காரியோத் அல்லாத மற்ற யூதாஸ் அவரிடம், “ஆண்டவரே, உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகின்றீரே, அது ஏன்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="23">அதற்கு இயேசு, “எவனாவது என்னில் அன்பாயிருந்தால், அவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிவான். என்னுடைய பிதா அவனில் அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடம் வந்து, அவனுடன் குடியிருப்போம்.</verse>
				<verse number="24">என்னில் அன்பாயிராதவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிய மாட்டான். நீங்கள் கேட்கின்ற இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் அல்ல; அவை என்னை அனுப்பிய பிதாவுக்குரிய வார்த்தைகள்.</verse>
				<verse number="25">“நான் உங்களுடன் இருக்கும்போதே இவைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன்.</verse>
				<verse number="26">ஆனால், என்னுடைய பெயரிலே பிதா அனுப்பப் போகின்ற பரிசுத்த ஆவியானவரான உறுதுணையாளர், உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்ன ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.</verse>
				<verse number="27">சமாதானத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகின்றேன்; என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றேன். உலகம் கொடுக்கும் விதமாய், நான் அதைக் கொடுக்கவில்லை. உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; பயப்படவும் வேண்டாம்.</verse>
				<verse number="28">“நான் உங்களைவிட்டுப் போகப் போகின்றேன் என்றும், உங்களிடத்தில் திரும்பி வருவேன் என்றும், நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவிடம் போகின்றதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில், பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.</verse>
				<verse number="29">அது நிகழும் முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன். அதனால் அது நிகழும்போது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள்.</verse>
				<verse number="30">இனிமேலும் நான் உங்களுடன் அதிகமாய் பேசப் போவதில்லை. ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதி வருகின்றான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை.</verse>
				<verse number="31">ஆயினும் நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டிருப்பதை மட்டுமே நான் செய்கின்றேன் என்றும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும். “எழுந்திருங்கள், இப்போது நாம் இங்கிருந்து போவோம்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">“நானே உண்மையான திராட்சை செடி. என் பிதாவே தோட்டக்காரர்.</verse>
				<verse number="2">என்னிலுள்ள கனி கொடாத ஒவ்வொரு கிளையையும் அவர் வெட்டிப் போடுகிறார். ஆனால், கனி கொடுக்கின்ற கிளைகளையோ, அவை இன்னும் அதிகமாய் கனி கொடுக்கும்படி, கத்தரித்துச் சுத்தம் பண்ணுகிறார்.</verse>
				<verse number="3">நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் ஏற்கெனவே சுத்திகரிக்கப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="4">என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் சுயமாகவே கனி கொடுப்பதில்லை; அது திராட்சைச் செடியில் நிலைத்திருக்க வேண்டும். நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் உங்களால் கனி கொடுக்க இயலாது.</verse>
				<verse number="5">“நானே திராட்சை செடி, நீங்களோ கிளைகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் அதிகமாய் கனி கொடுப்பான்; என்னையன்றி உங்களால் எதுவுமே செய்ய முடியாது.</verse>
				<verse number="6">எவனாவது என்னில் நிலைத்திராவிட்டால், அவன் வெட்டி எறியப்பட்டு வாடிப் போகின்ற ஒரு கிளையைப் போல் இருப்பான்; அப்படிப்பட்ட கிளைகள் சேர்த்து எடுக்கப்பட்டு, நெருப்பில் போட்டு எரிக்கப்படும்.</verse>
				<verse number="7">நீங்கள் என்னில் நிலைத்திருந்து, என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்குமானால், நீங்கள் விரும்பிய எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="8">நீங்கள் அதிகமாய் கனி கொடுத்து, என்னுடைய சீடர்கள் எனக் காண்பியுங்கள். இதுவே என் பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும்.</verse>
				<verse number="9">“பிதா என்னில் அன்பாயிருப்பதைப் போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன். இப்போது நீங்கள் என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.</verse>
				<verse number="10">நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறேன். அதுபோல நீங்களும் என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.</verse>
				<verse number="11">என்னுடைய மனமகிழ்ச்சி உங்களில் இருக்கும்படியாகவும், உங்களுடைய மனமகிழ்ச்சி முழுமை அடையவுமே இதை நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="12">நான் உங்களில் அன்பாயிருப்பதைப் போலவே, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்; இதுவே என்னுடைய கட்டளை.</verse>
				<verse number="13">ஒருவன் தன்னுடைய நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைப் பார்க்கிலும் பெரிதான அன்பு எவரிடத்திலும் இல்லை.</verse>
				<verse number="14">நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்தால், நீங்கள் எனக்கு நண்பர்களாயிருப்பீர்கள்.</verse>
				<verse number="15">நான் இனிமேலும் உங்களைப் பணியாட்கள் என்று சொல்லப் போவதில்லை. ஏனெனில் ஒரு பணியாள் தன் எஜமானுடைய வேலைகளை அறிய மாட்டானே. நானோ உங்களை நண்பர்கள் என்றே சொல்கின்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன்.</verse>
				<verse number="16">நீங்கள் என்னைத் தெரிவு செய்யவில்லை. நானே உங்களைத் தெரிவு செய்திருக்கின்றேன்; நீங்கள் போய் நிலையான கனி கொடுக்கும்படி உங்களை நியமித்தேன். நீங்கள் போய் நிரந்தரமான கனி கொடுங்கள். அப்போது நீங்கள் என் பெயரில் பிதாவிடம் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார்.</verse>
				<verse number="17">ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். இதுவே என் கட்டளை.”</verse>
				<verse number="18">“உலகம் உங்களை வெறுக்கும்போது, முதலில் அது என்னையே வெறுத்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="19">நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்களாய் இருந்தால், அது உங்களைத் தன்னுடையவர்களென்று ஏற்று, உங்களில் அன்பாயிருக்கும். ஆனால், நீங்கள் உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்தெடுத்து வேறு பிரித்தேன். அதனாலேயே உலகம் உங்களை வெறுக்கிறது.</verse>
				<verse number="20">நான் உங்களுடன் பேசிய வார்த்தைகளை நினைவில் வைத்திருங்கள்: ‘எந்த வேலையாளும் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல.’ அவர்கள் என்னைத் துன்புறுத்தினால், உங்களையும் துன்புறுத்துவார்கள். அவர்கள் என்னுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், உங்களுடைய வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவார்கள்.</verse>
				<verse number="21">அவர்கள் என்னை அனுப்பியவரை அறியாமல் இருக்கின்றார்கள். அதனாலேயே என் பெயரின் பொருட்டு உங்களைத் துன்புறுத்துவார்கள்.</verse>
				<verse number="22">நான் வந்து அவர்களுடனே பேசியிருக்காவிட்டால், பாவத்தின் குற்றம் அவர்கள்மீது சுமத்தப்பட மாட்டாது. ஆயினும் இப்பொழுதோ தங்கள் பாவத்தைக் குறித்து அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது.</verse>
				<verse number="23">என்னை வெறுக்கிறவன் என் பிதாவையும் வெறுக்கிறான்.</verse>
				<verse number="24">வேறு யாரும் செய்திராத அற்புதங்களை நான் அவர்கள் மத்தியில் செய்தேனே. அப்படி நான் செய்திராவிட்டால் அவர்கள்மீது பாவத்தின் குற்றம் சுமத்தப்பட மாட்டாது. ஆனால் இப்பொழுதோ அவர்கள் இந்த அற்புதங்களைக் கண்டிருந்தும், என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள்.</verse>
				<verse number="25">‘அவர்கள் காரணமின்றி என்னை வெறுக்கிறார்கள்’ என்று அவர்களுடைய நீதிச்சட்டத்தில் எழுதப்பட்டிருப்பது நிறைவேறும்படியே இப்படி நடந்தது.”</verse>
				<verse number="26">“நான் பிதாவினிடத்திலிருந்து உங்களிடத்திற்கு அனுப்பும் உறுதுணையாளர் உங்களிடம் வருவார். அப்போது பிதாவினிடத்திலிருந்து புறப்படும் உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர், என்னைக் குறித்து சாட்சி கொடுப்பார்.</verse>
				<verse number="27">நீங்களும் என்னைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் தொடக்கத்திலிருந்து என்னுடன் இருக்கின்றீர்களே.”</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">“நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப் போகாதபடி இதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="2">அவர்கள் உங்களை ஜெபஆலயங்களிலிருந்து வெளியே துரத்துவார்கள்; உண்மையாகவே, உங்களைக் கொலை செய்கின்றவனும், தான் இறைவனுக்கு பணி செய்வதாகவே எண்ணும் ஒரு காலம் வருகின்றது.</verse>
				<verse number="3">பிதாவையோ என்னையோ அவர்கள் அறியாததன் காரணமாக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள்.</verse>
				<verse number="4">ஆனாலும், அந்தக் காலம் வருகின்றபோது, நான் அதைக் குறித்து உங்களை எச்சரித்ததை நீங்கள் நினைவிற்கொள்வதற்கே இதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். நான் உங்களுடனேகூட இருந்ததனாலேயே, இதை உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லவில்லை.</verse>
				<verse number="5">இப்போது நான் என்னை அனுப்பியவரிடத்திற்குப் போகின்றேன். ஆயினும், ‘நீர் எங்கே போகின்றீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடம் கேட்கவில்லை.</verse>
				<verse number="6">நான் இவைகளைச் சொன்னதனாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="7">ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன்: உங்கள் நன்மைக்காகவே நான் உங்களைவிட்டுப் போகின்றேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உறுதுணையாளர் உங்களிடத்தில் வர மாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.</verse>
				<verse number="8">அவர் வரும்போது பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணர்த்துவார்:</verse>
				<verse number="9">அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதனால் பாவத்தைக் குறித்தும்,</verse>
				<verse number="10">இனிமேல் நீங்கள் என்னைக் காணாதவாறு பிதாவின் இடத்திற்கு நான் போகின்றபடியால் நீதியைக் குறித்தும்,</verse>
				<verse number="11">இந்த உலகத்தின் அதிபதி இப்போது நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.</verse>
				<verse number="12">“நான் உங்களுக்குச் சொல்வதற்கு இன்னும் அதிகம் உண்டு. அவற்றை எல்லாம் இப்போது உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.</verse>
				<verse number="13">ஆயினும் உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா உண்மைக்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேச மாட்டார்; தாம் கேட்கின்றதை மாத்திரமே பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்.</verse>
				<verse number="14">அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு அறிவிப்பார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார்.</verse>
				<verse number="15">பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன்.</verse>
				<verse number="16">“இன்னும் கொஞ்சக் காலத்தில், நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காண்பீர்கள்.”</verse>
				<verse number="17">அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “ ‘இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக் காலத்திலே என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகின்றேன்’ என்றும் சொல்கின்றாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="18">“இவர் கொஞ்சக் காலம் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="19">இதைக் குறித்து அவர்கள் தம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்று இயேசு அறிந்து கொண்டார். எனவே அவர் அவர்களிடம், “ ‘கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்கின்றீர்களா?</verse>
				<verse number="20">நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மனமகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும்.</verse>
				<verse number="21">பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால் வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனே, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டுவந்ததைக் குறித்து மனமகிழ்ச்சி அடைகிறாள்.</verse>
				<verse number="22">அவ்விதமாகவே நீங்களும் இப்போது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆயினும் நான் உங்களைத் திரும்பவும் காண்பேன். அப்போது நீங்கள் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஒருவனும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டான்.</verse>
				<verse number="23">அந்த நாளிலே நீங்கள் என்னிடம் எதையுமே கேட்க வேண்டியதில்லை. நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நீங்கள் என் பெயரிலே என் பிதாவிடம் எதைக் கேட்டாலும், அதை அவர் உங்களுக்குத் தருவார்.</verse>
				<verse number="24">இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்போது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மனமகிழ்ச்சியும் முழுநிறைவு பெறும்.</verse>
				<verse number="25">“இவைகளை எல்லாம் உவமைகள் மூலமாக உங்களுடன் பேசினேன். ஆனால் காலம் வருகின்றது. அப்போது நான் இப்படியான உவமைகளைக் கொண்டு பேச மாட்டேன். என் பிதாவைக் குறித்து தெளிவாக உங்களோடு பேசுவேன்.</verse>
				<verse number="26">அந்த நாளிலே நீங்களே என்னுடைய பெயரில் பிதாவிடம் கேட்பீர்கள். எனவே உங்களுக்காக நான் பிதாவிடம் கேட்க வேண்டியதில்லை.</verse>
				<verse number="27">நீங்கள் என்னில் அன்பாயிருந்ததனாலும், நான் இறைவனிடமிருந்து வந்தேன் என்று விசுவாசித்ததனாலும், பிதாவே உங்களில் அன்பாயிருக்கிறார்.</verse>
				<verse number="28">நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு, இந்த உலகத்திற்கு வந்தேன்; இப்போது உலகத்தைவிட்டு, பிதாவினிடத்திற்கு திரும்பிப் போகின்றேன்” என்றார்.</verse>
				<verse number="29">அப்போது இயேசுவினுடைய சீடர்கள், “இப்போது நீர் உவமையாகச் சொல்லாமல் தெளிவாய் பேசுகின்றீர்.</verse>
				<verse number="30">நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். அதனால் எவனும் உம்மிடத்தில் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. எனவே நீர் இறைவனிடமிருந்து வந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கின்றோம்” என்றார்கள்.</verse>
				<verse number="31">அதற்கு இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா?</verse>
				<verse number="32">ஆனால் ஒரு காலம் வருகின்றது, அது இப்போதே வந்துவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்படுவீர்கள். ஒவ்வொருவனும் அவனவன் வீட்டுக்கு ஓடிப் போவான். நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனிமையாய் இல்லை; ஏனெனில் என் பிதா என்னுடனே இருக்கின்றார்.</verse>
				<verse number="33">“நீங்கள் என்னில் சமாதானம் பெற்றவர்களாய் இருக்கும்படியே, இவைகளை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்திலே உங்களுக்கு துன்பங்கள் உள்ளன, ஆயினும் தைரியமாயிருங்கள். நான் உலகத்தை வெற்றி கொண்டேன்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="17">
				<verse number="1">இயேசு இதைச் சொன்ன பின்பு அவர் வானத்தை நோக்கிப் பார்த்து மன்றாடினார்: “பிதாவே, எனது வேளை வந்துவிட்டது. உமது மகன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய மகனை மகிமைப்படுத்தும்.</verse>
				<verse number="2">நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய வாழ்வைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர்.</verse>
				<verse number="3">ஒரே உண்மையான இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்திய வாழ்வு.</verse>
				<verse number="4">நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்து, பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்.</verse>
				<verse number="5">பிதாவே, உலகம் உண்டாகும் முன்பே எனக்கு உம்மிடம் இருந்த மகிமையினாலே, இப்போது நீர் என்னை உம்மில் மகிமைப்படுத்தும்.</verse>
				<verse number="6">“உலகத்திலிருந்து நீர் எனக்கு ஒப்புக்கொடுத்த இவர்களுக்கு, உம்மை நான் வெளிப்படுத்தினேன். உம்முடையவர்களாய் இருந்த இவர்களை நீர் எனக்குக் கொடுத்தீர். இவர்களும் நீர் கொடுத்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.</verse>
				<verse number="7">நீர் எனக்குத் தந்த அனைத்தும் உம்மிடத்திலிருந்தே வருகின்றது என்று இவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="8">ஏனெனில் நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் இவர்களுக்குக் கொடுத்தேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். நான் உம்மிடத்திலிருந்து வந்தேன் என்று இவர்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கின்றார்கள்.</verse>
				<verse number="9">நான் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். நான் உலகத்துக்காக மன்றாடவில்லை. நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். ஏனெனில் இவர்கள் உம்முடையவர்கள்.</verse>
				<verse number="10">என்னுடையதெல்லாம் உம்முடையதே, உம்முடையதெல்லாம் என்னுடையதே. இவர்கள் மூலமாய் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="11">நான் இனிமேலும் உலகத்தில் இருக்க மாட்டேன். நான் உம்மிடத்தில் வருகின்றேன். இவர்களோ இன்னும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். ஆகவே பரிசுத்த பிதாவே, நீர் எனக்கு உம்முடைய பெயரைக் கொடுத்தீரே. அந்தப் பெயரின் வல்லமையினாலே இவர்களைக் காத்துக்கொள்ளும். எனவே நாம் ஒன்றாய் இருப்பது போலவே இவர்களும் ஒன்றாய் இருக்கட்டும்.</verse>
				<verse number="12">நான் இவர்களோடு இருந்தபோது, நீர் எனக்குக் கொடுத்த உமது பெயராலே இவர்களைக் காப்பாற்றி பாதுகாத்து வைத்திருந்தேன். வேதவசனம் நிறைவேறும்படி அழிவின் மகனைத் தவிர வேறு ஒருவரையும் நான் இழந்து போகவில்லை.</verse>
				<verse number="13">“நான் இப்போது உம்மிடத்தில் வருகின்றேன். ஆயினும் இவர்கள் என்னுடைய மனமகிழ்ச்சியைத் தங்களுக்குள் முழுநிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி, நான் உலகத்தில் இருக்கும்போதே இவைகளைச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="14">நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல.</verse>
				<verse number="15">இந்த உலகத்தைவிட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை. ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="16">நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாதது போல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல.</verse>
				<verse number="17">சத்தியத்தினாலே இவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வார்த்தையே சத்தியம்.</verse>
				<verse number="18">நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பியது போல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்பியிருக்கிறேன்.</verse>
				<verse number="19">இவர்கள் உண்மையினாலே பரிசுத்தமாக்கப்படும்படி, இவர்களுக்காக நானும் என்னை பலியாக அர்ப்பணிக்கிறேன்.”</verse>
				<verse number="20">“நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடவில்லை. இவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாய், என்னில் விசுவாசம் வைக்கப் போகின்றவர்களுக்காகவும் மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="21">பிதாவே, நீர் என்னில் இருக்கின்றது போலவும், நான் உம்மில் இருக்கின்றது போலவும், அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும்.</verse>
				<verse number="22">நாம் ஒன்றாய் இருப்பது போலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.</verse>
				<verse number="23">இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்போது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.</verse>
				<verse number="24">“பிதாவே, நீர் எனக்குக் கொடுத்த இவர்கள், நான் இருக்கும் இடத்திலே என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் படைக்கப்படும் முன்னே நீர் என்னில் அன்பாயிருந்ததனால், நீர் எனக்குக் கொடுத்த மகிமையை இவர்கள் காண வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.</verse>
				<verse number="25">“நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியாவிட்டாலும் நான் உம்மை அறிவேன். நான் உம்மாலேயே அனுப்பப்பட்டேன் என்று இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="26">நீர் என்மேல் வைத்திருக்கும் அன்பு இவர்கள் மேல் இருக்குமாறும், நான் இவர்களில் இருக்குமாறும் நான் உமது பெயரை இவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து உம்மைத் தெரியப்படுத்துவேன்” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="18">
				<verse number="1">இயேசு மன்றாடி முடித்த பின்பு, தமது சீடர்களுடன் கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார். அதன் மறுபக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அவரும் அவருடைய சீடர்களும் அங்கே போனார்கள்.</verse>
				<verse number="2">அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் அந்த இடத்தை அறிந்திருந்தான். ஏனெனில் அந்த இடமானது, இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி ஒன்றுகூடும் ஒரு இடமாக இருந்தது.</verse>
				<verse number="3">எனவே யூதாஸ் இராணுவ வீரர்களில் ஒரு பிரிவினரையும், தலைமை மதகுருக்கள் மற்றும் பரிசேயர் ஆகியோருடைய அதிகாரிகளில் சிலரையும் தோட்டத்திற்கு அழைத்துக்கொண்டு, அந்த மரத்தோப்புக்கு வந்தான். அவர்கள் தீப்பந்தங்களையும் விளக்குகளையும் ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="4">இயேசு தமக்கு நடக்கப் போவதையெல்லாம் அறிந்து, அவர்களுக்கு முன்பாக வந்து, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார்.</verse>
				<verse number="5">அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நானே அவர்” என்றார். துரோகியான யூதாஸ் அவர்களுடன் நின்று கொண்டிருந்தான்.</verse>
				<verse number="6">“நானே அவர்” என்று இயேசு சொன்னபோது, அவர்கள் பின்னடைந்து தரையிலே விழுந்தார்கள்.</verse>
				<verse number="7">அவர் மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள்.</verse>
				<verse number="8">அதற்கு இயேசு, “நானே அவர் என்று உங்களுக்குச் சொன்னேனே. நீங்கள் என்னைத்தான் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போக விடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="9">“நீர் எனக்குக் கொடுத்தவர்களில் நான் ஒருவரையும் இழந்து விடவில்லை” என்று அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் நிறைவேறும்படி இது நடந்தது.</verse>
				<verse number="10">அப்போது சீமோன் பேதுரு, தன்னிடமிருந்த வாளை உருவி தலைமை மதகுருவின் வேலைக்காரனைத் தாக்கினான். அவனது வலது காது வெட்டுண்டது. அந்த வேலைக்காரனின் பெயர் மல்கூஸ்.</verse>
				<verse number="11">அப்போது இயேசு பேதுருவிடம், “உனது வாளை உறையிலே போடு!” என்று கட்டளையிட்டு, “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்திலிருந்து நான் பருகாதிப்பேனோ” என்றார்.</verse>
				<verse number="12">அப்போது இராணுவ வீரர்களும் அவர்களுடைய தளபதியும் யூத அதிகாரிகளும் இயேசுவைக் கைது செய்தார்கள். அவர்கள் அவரை பிணைத்துக் கட்டி,</verse>
				<verse number="13">முதலில் அவரை அன்னா என்பவனிடம் கொண்டுபோனார்கள். இந்த அன்னா, அந்த வருடத்துக்குரிய தலைமை மதகுருவான காய்பாவின் மாமன்.</verse>
				<verse number="14">“எல்லா மக்களுக்காவும் ஒரு மனிதன் இறப்பது நல்லது” என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன், இந்தக் காய்பாவே.</verse>
				<verse number="15">சீமோன் பேதுருவும் இன்னொரு சீடனும் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அந்தச் சீடன் தலைமை மதகுருவுக்கு அறிமுகமானபடியால், அவன் இயேசுவுடனே பிரதம மதகுருவின் வீட்டு முற்றத்திற்குள் சென்றான்.</verse>
				<verse number="16">ஆனால் பேதுருவோ வெளியே வாசல் அருகே நிற்க வேண்டியதாயிருந்தது. தலைமை மதகுருவுக்கு அறிமுகமான மற்றச் சீடன் திரும்பி வந்து, வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்த பெண்ணுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றான்.</verse>
				<verse number="17">வாசலில் இருந்த அந்த வேலைக்காரப் பெண் பேதுருவிடம், “நீயும் அந்த மனிதனின் சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்றாள். அதற்கு அவன், “நான் அவர்களில் ஒருவனல்ல” என்றான்.</verse>
				<verse number="18">அங்கே மிகவும் குளிராய் இருந்தது. அங்கேயிருந்த வேலைக்காரரும் காவலாளர்களும் குளிர்காயும்படி நெருப்பு மூட்டி அதைச் சுற்றி நின்றார்கள். பேதுருவும் அங்கே அவர்களுடன் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.</verse>
				<verse number="19">அவ்வேளையில் தலைமை மதகுரு, இயேசுவின் சீடர்களைக் குறித்தும் அவருடைய போதனையைக் குறித்தும் விசாரணை செய்தான்.</verse>
				<verse number="20">இயேசு அவனுக்கு சொன்னதாவது: “நான் உலகத்துடன் பகிரங்கமாகப் பேசினேன். யூதரெல்லோரும் ஒன்றுகூடி வருகின்ற ஜெபஆலயங்களிலும் எருசலேம் ஆலயத்திலும் எப்போதும் போதித்தேன். நான் இரகசியமாய் எதுவுமே சொல்லவில்லை.</verse>
				<verse number="21">நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி கேட்கின்றீர்கள்? நான் என்ன சொன்னேன் என்பதை, அதைக் கேட்டவர்களிடமே விசாரியுங்கள். நான் என்ன சொன்னேன் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.”</verse>
				<verse number="22">இயேசு இப்படியாக சொன்னபோது, அருகே நின்ற காவலாளி ஒருவன் அவருடைய முகத்திலே அறைந்தான். அவன், “தலைமை மதகுருவுக்கு இவ்விதமாகவா பதில் சொல்வது?” என்றான்.</verse>
				<verse number="23">அதற்கு இயேசு, “நான் எதையாவது தவறாகச் சொல்லியிருந்தால், தவறு என்னவென்று சொல். நான் பேசியது உண்மையானால், நீ ஏன் என்னை அடித்தாய்?” என்றார்.</verse>
				<verse number="24">அப்போது அன்னா, அவரை பிணைத்துக் கட்டப்பட்டவராகவே தலைமை மதகுருவான காய்பாவிடம் அனுப்பினான்.</verse>
				<verse number="25">சீமோன் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கையில் சிலர் அவனிடம், “நீ அவனுடைய சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டார்கள். “நான் அவருடைய சீடன் அல்ல” என்று பேதுரு மறுதலித்தான்.</verse>
				<verse number="26">தலைமை மதகுருவின் வேலைக்காரரில் ஒருவன், பேதுருவினால் காது வெட்டப்பட்டவனின் உறவினன். அந்த வேலைக்காரன் பேதுருவிடம், “நீ இயேசுவுடனே அந்தத் தோட்டத்தில் இருந்ததை, நான் கண்டேனே?” என்றான்.</verse>
				<verse number="27">அப்போது பேதுரு மீண்டும் மறுதலித்தான். அவ்வேளையில் உடனே சேவல் கூவிற்று.</verse>
				<verse number="28">பின்பு அவர்கள் இயேசுவை காய்பாவிடமிருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள். இதற்குள்ளாகப் பொழுது விடிந்துவிட்டது. யூதர்கள் பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு தங்களை தீட்டுபடாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதால், அவர்கள் அரண்மனைக்குள் போகவில்லை.</verse>
				<verse number="29">எனவே பிலாத்து வெளியே வந்து, “இந்த மனிதனுக்கு விரோதமாய், என்ன குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டான்.</verse>
				<verse number="30">அதற்கு அவர்கள், “இவன் குற்றவாளியாய் இல்லாதிருந்தால், நாங்கள் இவனை உம்மிடம் ஒப்படைத்திருக்க மாட்டோம்” என்றார்கள்.</verse>
				<verse number="31">அப்போது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் உங்கள் நீதிச்சட்டத்தின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “யாருக்கும் மரணதண்டனை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்கள்.</verse>
				<verse number="32">தமக்கு எவ்விதமான மரணம் ஏற்படப் போகின்றது என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தது.</verse>
				<verse number="33">பின்பு பிலாத்து அரண்மனைக்குள்ளே போய், இயேசுவைத் தன்னிடம் கொண்டுவரும்படி செய்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="34">அதற்கு இயேசு, “இதை நீராகவே கேட்கின்றீரா? அல்லது மற்றவர்கள் உம்மிடம் என்னைக் குறித்து இப்படிச் சொன்னார்களா?” என்று கேட்டார்.</verse>
				<verse number="35">அப்போது பிலாத்து, “நான் என்ன ஒரு யூதனா? உனது மக்களும் உனது தலைமை மதகுருக்களுமே உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நீ செய்தது என்ன?” என்று கேட்டான்.</verse>
				<verse number="36">அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அப்படியிருந்தால் யூதர்களிடம் நான் ஒப்புக்கொடுக்கப்படுவதைத் தடுக்க, எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது அரசோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார்.</verse>
				<verse number="37">அதற்கு பிலாத்து, “அப்படியானால், நீ ஒரு அரசன்தானே!” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் ஒரு அரசன் என்று நீரே சொல்கின்றீர். உண்மைக்கு சாட்சி கொடுக்கும்படியே நான் பிறந்தேன். அதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். உண்மைக்கு உரியவர்கள் ஒவ்வொருவரும் நான் சொல்வதை கவனித்துக் கேட்கின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="38">அதற்கு பிலாத்து, “உண்மை என்றால் என்ன?” என்று கேட்டான். அப்படிக் கேட்டுவிட்டு, அவன் மறுபடியும் வெளியே போய் யூதர்களிடம், “நான் இவனுக்கு எதிராய் குற்றம் சாட்டுவதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை.</verse>
				<verse number="39">ஆகவே பஸ்கா பண்டிகையின்போது ஒரு கைதியை நான் உங்களுக்காக விடுதலை செய்வது வழக்கமல்லவா? எனவே ‘யூதரின் அரசனை’ நான் விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="40">அதற்கு அவர்களோ, “இல்லை, அவனை அல்ல! பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அந்த பரபாஸ் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஒருவன்.</verse>
			</chapter>
			<chapter number="19">
				<verse number="1">பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான்.</verse>
				<verse number="2">இராணுவ வீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு மேலாடையை உடுத்தி,</verse>
				<verse number="3">மறுபடியும் அவரிடம் போய், “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள்.</verse>
				<verse number="4">மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதர்களிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகின்றேன்” என்றான்.</verse>
				<verse number="5">இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக் கொண்டும், கருஞ்சிவப்பு நிற மேலாடையை அணிந்து கொண்டும் வெளியே வந்தபோது பிலாத்து அவர்களிடம், “இதோ இந்த மனிதன்!” என்றான்.</verse>
				<verse number="6">தலைமை மதகுருக்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். அப்போது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான்.</verse>
				<verse number="7">அதற்கு யூதர்கள், “எங்களுக்கு ஒரு நீதிச்சட்டம் இருக்கின்றது. அதன்படி இவன் மரணிக்க வேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கின்றான்” என்றார்கள்.</verse>
				<verse number="8">பிலாத்து இதைக் கேட்டபோது இன்னும் அதிகமாய் பயந்தான்.</verse>
				<verse number="9">அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை.</verse>
				<verse number="10">அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேச மறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும் உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று உனக்குத் தெரியாதா?” என்றான்.</verse>
				<verse number="11">அதற்கு இயேசு, “பரலோகத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆகவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார்.</verse>
				<verse number="12">அப்பொழுதிலிருந்தே பிலாத்து, இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கின்றவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழுகிறான்” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="13">பிலாத்து இதைக் கேட்டபோது, இயேசுவை வெளியே கொண்டுவந்து தனது நீதி வழங்கும் அரியணையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரேய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது.</verse>
				<verse number="14">அன்று பஸ்கா பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான்.</verse>
				<verse number="15">ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கின்றீர்கள்?” என்று பிலாத்து கேட்டான். அதற்கு தலைமை மதகுருக்கள், “ரோம பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள்.</verse>
				<verse number="16">கடைசியாக, பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். எனவே இராணுவ வீரர்கள் இயேசுவைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.</verse>
				<verse number="17">இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரேய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது.</verse>
				<verse number="18">அங்கே அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடனேகூட வேறு இருவரை, அவருடைய இரு பக்கங்களிலும் அறைந்தார்கள். இயேசுவோ அவர்களுக்கு நடுவில் அறையப்பட்டார்.</verse>
				<verse number="19">பிலாத்து ஒரு அறிவிப்புப் பலகையைச் செய்து, அதைச் சிலுவையில் மாட்டினான். அதிலே, “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, யூதரின் அரசன்” என்று எழுதப்பட்டிருந்தது.</verse>
				<verse number="20">யூதரில் அநேகர் இந்த அறிவிப்பை வாசித்தார்கள். ஏனெனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகே இருந்தது. அந்த அறிவிப்பு எபிரேய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.</verse>
				<verse number="21">யூதரின் தலைமை மதகுருக்கள் பிலாத்துவிடம் போய், “யூதரின் அரசன் என்று எழுத வேண்டாம். இவன் தன்னை யூதரின் அரசன் என்று சொல்லிக் கொண்டான் என்று எழுதும்” என்றார்கள்.</verse>
				<verse number="22">அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.</verse>
				<verse number="23">இராணுவ வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்கு பங்குகளாகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ் வரை நெய்யப்பட்டதாயிருந்தது.</verse>
				<verse number="24">எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்கு என்று சீட்டுப் போட்டுப் பார்க்கலாம்” என்றார்கள். “அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள், எனது உடைக்காக சீட்டுப் போட்டார்கள்.” என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த இராணுவ வீரர்கள் செய்தார்கள்.</verse>
				<verse number="25">இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள்.</verse>
				<verse number="26">தமது தாயும், தாம் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அவர் தமது தாயிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்” என்றார்.</verse>
				<verse number="27">அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து, இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.</verse>
				<verse number="28">பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்து விட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி, “நான் தாகமாய் இருக்கின்றேன்” என்றார்.</verse>
				<verse number="29">அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை ரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற் பஞ்சை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள்.</verse>
				<verse number="30">இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும், அவர் தமது தலையைச் சாய்த்து இறுதி மூச்சை விட்டார்.</verse>
				<verse number="31">அது பஸ்கா பண்டிகைக்கான ஆயத்தம் செய்யும் நாளாயிருந்தது. மாலையானதும் ஓய்வுநாள் ஆரம்பிப்பதால், உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. (ஆரம்பிக்கப் போகும் நாள் ஒரு முக்கிய ஓய்வுநாளாய் இருந்தது) ஆகவே சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="32">எனவே இராணுவ வீரர்கள் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.</verse>
				<verse number="33">ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை.</verse>
				<verse number="34">ஆனாலும் அந்த இராணுவ வீரரில் ஒருவன் இயேசுவின் விலாவில் ஈட்டியினால் குத்தினான். அப்போது இரத்தமும் தண்ணீரும் உடனே வெளியே வந்தன.</verse>
				<verse number="35">இதை நேரில் பார்த்த ஒருவன் சாட்சி கொடுத்திருக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையானது, தான் சொல்வது உண்மை என்பதும் அவனுக்குத் தெரியும். நீங்களும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கின்றான்.</verse>
				<verse number="36">“அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கின்ற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன.</verse>
				<verse number="37">“தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை, அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” என்று இன்னொரு வேதவசனமும் சொல்கின்றது.</verse>
				<verse number="38">பின்பு, யூதருக்குப் பயந்ததனால் இரகசிய சீடனாயிருந்த, அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். அவன் வந்து, பிலாத்துவின் அனுமதியுடன் இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான்.</verse>
				<verse number="39">அவனுடன் முன்பு ஒருமுறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்த நிக்கொதேமுவும் கூடச் சென்றான். நிக்கொதேமு வரும்போது அகில் தூளும் வெள்ளைப்போளமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது ஏறக்குறைய, முப்பது கிலோ நிறையுடையதாயிருந்தது.</verse>
				<verse number="40">அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை விலையுயர்ந்த மெல்லிய துணிகளில் வைத்து, உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது.</verse>
				<verse number="41">இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.</verse>
				<verse number="42">அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாயிருந்ததாலும், அக்கல்லறை அருகிலிருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="20">
				<verse number="1">வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குச் சென்றாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.</verse>
				<verse number="2">எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடனிடமும் ஓடி வந்து, “கல்லறையிலிருந்து ஆண்டவரின் உடலை அவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.</verse>
				<verse number="3">எனவே பேதுருவும் மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிப் போனார்கள்.</verse>
				<verse number="4">அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடியபோதிலும் மற்றச் சீடன் பேதுருவை முந்திக்கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.</verse>
				<verse number="5">அவன் குனிந்து பார்த்தபோது விலையுயர்ந்த மெல்லிய துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை.</verse>
				<verse number="6">பின்பு அவனுக்குப் பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, அங்கு வந்துசேர்ந்ததும் கல்லறைக்கு உள்ளே சென்றான். அங்கே விலையுயர்ந்த மெல்லிய துணிகள் கிடப்பதை அவன் கண்டான்;</verse>
				<verse number="7">ஆனால் இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியோ விலையுயர்ந்த மெல்லிய துணிகளோடு அல்லாமல், தனியாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="8">அதன்பின்பு, முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே சென்றான். அவனும் கண்டு விசுவாசித்தான்.</verse>
				<verse number="9">ஆனால் இயேசு இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.</verse>
				<verse number="10">பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.</verse>
				<verse number="11">ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள்.</verse>
				<verse number="12">அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைதூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.</verse>
				<verse number="13">அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் ஆண்டவரை எடுத்துச் சென்று விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள்.</verse>
				<verse number="14">இதைச் சொல்லிவிட்டு அவள் திரும்பியபோது, இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.</verse>
				<verse number="15">அப்போது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டுபோயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துக்கொள்கிறேன்” என்றாள்.</verse>
				<verse number="16">அப்போது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரேய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.</verse>
				<verse number="17">அப்போது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிப் பிடிக்காதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகின்றேன்’ என்று அவர்களிடம் சொல்” என்றார்.</verse>
				<verse number="18">மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் ஆண்டவரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள்; ஆண்டவர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவள் அவர்களுக்குச் சொன்னாள்.</verse>
				<verse number="19">வாரத்தின் முதலாவது நாளாகிய அன்று, மாலை வேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததனால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம்!” என்றார்.</verse>
				<verse number="20">அவர் இதைச் சொன்ன பின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் ஆண்டவரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.</verse>
				<verse number="21">மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.</verse>
				<verse number="22">இதைச் சொல்லி, அவர் அவர்கள்மீது ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="23">நீங்கள் எவருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.</verse>
				<verse number="24">இயேசு அங்கே வந்தபோது பன்னிருவரில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா, சீடர்களுடன் இருக்கவில்லை.</verse>
				<verse number="25">எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால் அவனோ அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணி அடிக்கப்பட்ட காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்க மாட்டேன்” என்றான்.</verse>
				<verse number="26">இது நடந்து எட்டு நாட்களுக்குப் பின், இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும், இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்!” என்றார்.</verse>
				<verse number="27">பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப் பார். சந்தேகப்படுவதைவிட்டு, விசுவாசமுள்ளவனாயிரு” என்றார்.</verse>
				<verse number="28">அப்போது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.</verse>
				<verse number="29">அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதனால், விசுவாசிக்கின்றாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.</verse>
				<verse number="30">இயேசு தமது சீடரின் முன்னிலையில் பல அற்புத அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.</verse>
				<verse number="31">ஆனால் இயேசுவே மேசியா என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியுமே இவை எழுதப்பட்டிருக்கின்றன.</verse>
			</chapter>
			<chapter number="21">
				<verse number="1">இதற்குப் பின்பு, இயேசு திரும்பவும் தமது சீடர்களுக்கு திபேரியா கடல் அருகே காட்சியளித்தார். அது இவ்வாறு நடந்தது:</verse>
				<verse number="2">சீமோன் பேதுருவும், திதிமு என்று அழைக்கப்பட்ட தோமாவும், கலிலேயாவிலுள்ள கானா ஊரைச் சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், வேறு இரண்டு சீடர்களும் கூடியிருந்தார்கள்.</verse>
				<verse number="3">சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகின்றேன்” என்றான். மற்றவர்களும், “நாங்களும் உன்னுடன் வருகின்றோம்” என்றார்கள். எனவே அவர்கள் புறப்பட்டு ஒரு படகில் ஏறிப் போனார்கள். ஆனால் அந்த இரவு, அவர்கள் மீன்கள் எதையுமே பிடிக்கவில்லை.</verse>
				<verse number="4">அதிகாலையிலே இயேசு கடற்கரையிலே நின்றார். ஆனால் அவர் இயேசு என்பதை சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.</verse>
				<verse number="5">இயேசு அவர்களை அழைத்து, “பிள்ளைகளே, உங்களிடம் மீன்கள் ஏதாவது இருக்கின்றதா?” என்று கேட்டார். அவர்கள், “இல்லை,” என்றார்கள்.</verse>
				<verse number="6">“வலையைப் படகின் வலதுபுறமாக வீசுங்கள். அப்போது உங்களுக்கு மீன்கள் அகப்படும்” என்றார். அவர்கள் அப்படி செய்தபோது, ஏராளமான மீன்கள் அகப்பட்டன. அதனால் அந்த வலையை அவர்களால் இழுத்தெடுக்க முடியவில்லை.</verse>
				<verse number="7">அப்போது இயேசுவுக்கு அன்பான சீடன், “இவரே ஆண்டவர்” என்று பேதுருவிடம் கூறினான். “இவரே ஆண்டவர்” என்று சொன்னதை சீமோன் பேதுரு கேட்டதும், கழற்றி வைத்திருந்த மேலங்கியை இடையில் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தான்.</verse>
				<verse number="8">மற்றச் சீடர்களோ மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில் அவர்கள் கரையிலிருந்து அதிக தூரத்தில் இருக்கவில்லை. அவர்கள் ஏறக்குறைய இருநூறு முழ தூரத்திலேயே இருந்தார்கள்.</verse>
				<verse number="9">அவர்கள் கரைக்கு வந்தபோது, அங்கே எரிகின்ற நெருப்புத் தணலின் மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதையும், சில அப்பங்கள் இருப்பதையும் கண்டார்கள்.</verse>
				<verse number="10">இயேசு அவர்களிடம், “நீங்கள் பிடித்த மீன்களிலும் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றார்.</verse>
				<verse number="11">சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையை கரைக்கு இழுத்துக் கொண்டுவந்தான். வலை நூற்று ஐம்பத்து மூன்று பெரிய மீன்களால் நிறைந்திருந்தது. அவ்வளவு மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.</verse>
				<verse number="12">இயேசு அவர்களிடம், “வாருங்கள், எழுந்து உங்கள் காலை உணவை அருந்துங்கள்” என்றார். அவருடைய சீடர்களில் ஒருவரும் “நீர் யார்?” என்று கேட்கத் துணியவில்லை. அவர் ஆண்டவர் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.</verse>
				<verse number="13">இயேசு வந்து அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார். மீனையும் அப்படியே கொடுத்தார்.</verse>
				<verse number="14">இயேசு இறந்தோரிலிருந்து உயிருடன் எழுந்த பின்பு தமது சீடர்களுக்குக் காட்சியளித்தது இது மூன்றாவது முறையாகும்.</verse>
				<verse number="15">அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு இயேசு, சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ என்னில் உண்மையாகவே அதிக அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்” என்றான். அப்போது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்றார்.</verse>
				<verse number="16">இயேசு இரண்டாவது முறை அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்குத் தெரியும்” என்றான். அப்போது இயேசு, “என் செம்மறியாடுகளை மேய்ப்பாயாக” என்றார்.</verse>
				<verse number="17">மூன்றாவது தடவை அவர் அவனிடம், “யோவானின் மகனான சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டார். மூன்றாவது தடவையும், “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று இயேசு கேட்டதனால் பேதுரு துக்கமடைந்து, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறீர்” என்றான். இயேசு அவனிடம், “என் செம்மறியாடுகளைப் பராமரிப்பாயாக.</verse>
				<verse number="18">நான் உனக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நீ இளைஞனாய் இருந்தபோது, நீயே ஆடை அணிந்துகொண்டு, நீ விரும்பிய இடத்திற்குப் போனாய்; ஆனால் நீ முதிர்வயதாகும்போது, நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு ஆடை அணிவித்து, நீ போக விரும்பாத இடத்திற்கு உன்னை வழிநடத்திக்கொண்டு போவான்” என்றார்.</verse>
				<verse number="19">பேதுரு எவ்விதமான மரணத்தை ஏற்றுக்கொண்டு, இறைவனை மகிமைப்படுத்தப் போகின்றான் என்பதைக் காட்டும்படியே, இயேசு இதைச் சொன்னார். பின்பு அவர் அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.</verse>
				<verse number="20">பேதுரு திரும்பிப் பார்த்து, இயேசு அன்பு செலுத்திய சீடன் பின்னாலே வருவதைக் கண்டான். இந்தச் சீடனே இரவு விருந்தின்போது, இயேசுவின் மார்புப் பக்கமாய் சாய்ந்து, “ஆண்டவரே, உம்மைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவன் யார்?” என்று கேட்டவன்.</verse>
				<verse number="21">பேதுரு அவனைக் கண்டபோது, “ஆண்டவரே இவனைக் குறித்து என்ன சொல்கின்றீர்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="22">அதற்கு இயேசு, “நான் திரும்பி வரும் வரைக்கும் அவன் உயிரோடு இருக்கும்படி நான் விரும்பினால் அதுபற்றி உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.</verse>
				<verse number="23">இதனால் இந்தச் சீடன் மரணிக்க மாட்டான் என்ற பேச்சு சகோதரருக்குள்ளே இருந்தது. ஆனால் இயேசுவோ அவன் மரணிக்க மாட்டான் என்ற அர்த்தத்தில் சொல்லாமல், “நான் திரும்பி வரும்வரை இவன் உயிரோடிருப்பதை நான் விரும்பினால் அதுபற்றி உனக்கு என்ன?” என்றே சொன்னார்.</verse>
				<verse number="24">அந்தச் சீடனே இவற்றைக் குறித்து சாட்சி கொடுத்து, இவற்றை எழுதியவன். அவனுடைய சாட்சி உண்மையானது.</verse>
				<verse number="25">இயேசு வேறு பல காரியங்களையும் செய்தார். அவை ஒவ்வொன்றையும் எழுதினால், எழுதப்படும் புத்தகங்களை வைப்பதற்கு முழு உலகமும் போதாமல் போகும் என்று நான் எண்ணுகிறேன்.</verse>
			</chapter>
		</book>
		<book number="44">
			<chapter number="1">
				<verse number="1">தெயோப்பிலுவே, நான் முன்பு எழுதிய புத்தகத்தில், இயேசு ஆரம்பத்திலிருந்து அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்ததும், போதித்ததுமான அனைத்தையும்பற்றி எழுதினேன்.</verse>
				<verse number="2">தாம் தெரிவுசெய்த அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியானவராலே அந்நாள்வரை அறிவுறுத்தல்களைக் கொடுத்த பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.</verse>
				<verse number="3">அவர் வேதனை அனுபவித்து மரணித்த பின்பு, தம்மை அவர்களுக்கு காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை அநேக ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தார். அவர் நாற்பது நாட்கள் அவர்களுக்கு காட்சியளித்து, இறைவனுடைய அரசைக் குறித்துப் பேசினார்.</verse>
				<verse number="4">அவர்களுடன் இருந்தபோது, அவர்களுக்கு இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் எருசலேமைவிட்டு வெளியேறாதீர்கள், பிதாவின் வாக்குறுதியைக் குறித்து நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களே, அதற்காகக் காத்திருங்கள்;</verse>
				<verse number="5">ஏனெனில் யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தார், ஆனால் நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியானவரினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்.”</verse>
				<verse number="6">எனவே, சீடர்கள் இயேசுவோடு ஒன்றுகூடியபோது அவரிடம், “ஆண்டவரே, நீர் இஸ்ரயேலருக்குரிய பேரரசை மீண்டும் தரப்போகும் காலம் இதுவா?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="7">அதற்கு இயேசு அவர்களிடம்: “பிதா தமது அதிகாரத்தினால் நியமித்திருக்கின்ற நேரங்களையும், காலங்களையும் அறிகின்றது உங்களுக்குரியது அல்ல.</verse>
				<verse number="8">மாறாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும்போது, நீங்கள் வல்லமை பெற்று எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லை வரையிலும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.</verse>
				<verse number="9">இயேசு இதைச் சொன்ன பின்பு, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு மேகம் அவரை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டது.</verse>
				<verse number="10">இயேசு கடந்து சென்றுகொண்டிருக்கையில், அவர்கள் தொடர்ந்தும் வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே வந்து நின்று,</verse>
				<verse number="11">“கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டு இங்கே நிற்கிறீர்கள்? உங்களிடம் இருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவராகிய இயேசு திரும்பவும் உங்களிடம் வருவார். பரலோகத்திற்கு எவ்விதமாக போகின்றார் என்பதைக் காண்கின்றீர்களே. அவ்விதமாகவே அவர் திரும்பவும் வருவார்” என்றார்கள்.</verse>
				<verse number="12">பின்பு சீடர்கள், ஒலிவமலை எனப்பட்ட அந்தக் குன்றிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். பட்டணத்திலிருந்து ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரத்தில் ஒலிவமலை இருந்தது.</verse>
				<verse number="13">அவர்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள மேல் அறைக்குப் போனார்கள். அங்கே பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா; பிலிப்பு, தோமா, பர்த்தொலொமேயு, மத்தேயு; அல்பேயுவின் மகன் யாக்கோபு, யூதவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் வந்திருந்தார்கள்.</verse>
				<verse number="14">அவர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து மன்றாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பெண்களும், இயேசுவின் தாய் மரியாளும், இயேசுவின் சகோதரரும் இருந்தார்கள்.</verse>
				<verse number="15">இவ்வாறு கூடிய ஒரு நாளில், விசுவாசிகளின் நடுவே பேதுரு எழுந்து நின்றான். அங்கு ஏறக்குறைய நூற்றிருபது பேர் கூடியிருந்தனர்.</verse>
				<verse number="16">அவன் அவர்களிடம், “சகோதரரே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைக் குறித்து, பரிசுத்த ஆவியானவர் வெகு காலத்திற்கு முன்பு, தாவீதின் மூலமாய் பேசினார். அந்த வேதவசனம் நிறைவேற வேண்டியதாய் இருந்தது.</verse>
				<verse number="17">அவன் நம்மில் ஒருவனாய் கணிக்கப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.”</verse>
				<verse number="18">அவன் தனது கொடிய செயலுக்கு வெகுமதியாகப் பெற்ற பணத்தைக்கொண்டு, ஒரு வயல் வாங்கப்பட்டது; அவன் அங்கே தலைகீழாக விழுந்தான். அவனது வயிறு வெடித்து, குடல்கள் எல்லாம் வெளியே சிதறின.</verse>
				<verse number="19">எருசலேமிலுள்ள ஒவ்வொருவரும், இதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள், அந்த வயல் நிலத்தைத் தங்கள் மொழியில் அக்கெல்தமா என்று சொல்கின்றார்கள். அக்கெல்தமா என்றால், இரத்த நிலம் என்று அர்த்தமாகும்.</verse>
				<verse number="20">மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது: “ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக; அதில் ஒருவரும் குடியிருக்காதிருப்பார்களாக.’ அத்துடன், “ ‘அவனுடைய தலைமைத்துவ பணியை வேறொருவன் பொறுப்பெடுக்கட்டும்.’</verse>
				<verse number="21">எனவே ஆண்டவர் இயேசு, நமது மத்தியில் இருந்த காலம் முழுவதும், நம்முடனே இருந்தவர்களுள் ஒருவனைத் தெரிந்தெடுப்பது அவசியமாகும்.</verse>
				<verse number="22">யோவான் ஞானஸ்நானம் கொடுத்த காலத்தின் தொடக்கத்திலிருந்து, இயேசு நம்மிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் வரைக்கும், அவன் நம்முடனே இணைந்து பயணித்திருக்க வேண்டும். அவனும் நம்மைப் போலவே இயேசு உயிருடன் எழுந்ததற்கு சாட்சியாக இனிமேல் செயற்பட வேண்டும்” என்றான்.</verse>
				<verse number="23">எனவே அவர்கள் யுஸ்து என்னும் பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இருவரை முன்மொழிந்தார்கள்.</verse>
				<verse number="24">பின்பு அவர்கள் மன்றாடி, “கர்த்தாவே, நீர் எல்லோருடைய இருதயத்தையும் அறிந்திருக்கிறீர், இந்த இருவரில் நீர் யாரைத் தெரிவு செய்தீர் என்பதை எங்களுக்குக் காண்பியும்.</verse>
				<verse number="25">யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு போவதற்காக கைவிட்டுப் போன இந்த அப்போஸ்தல ஊழியத்தைச் செய்வதற்கு, நீர் தெரிவு செய்தவனை எங்களுக்குக் காண்பியும்” என்றார்கள்.</verse>
				<verse number="26">அதன்பின்பு, அவர்கள் சீட்டுப் போட்டார்கள். சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவன் மற்ற பதினொரு அப்போஸ்தலர்களுடனும் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள்.</verse>
				<verse number="2">அப்போது திடீரென, பலத்த காற்று வீசுவது போன்ற ஒரு சத்தம் வானத்திலிருந்து வந்து, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.</verse>
				<verse number="3">அவர்கள் நெருப்புப் போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தன.</verse>
				<verse number="4">அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="5">அந்நாட்களில், இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள், உலகில் உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் வந்து, எருசலேமில் தங்கியிருந்தார்கள்.</verse>
				<verse number="6">அவர்கள் அந்த சத்தத்தைக் கேட்டு, பெருங்கூட்டமாய் அங்கே வந்தபோது, தங்களுடைய சொந்த மொழிகளில் விசுவாசிகள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="7">அவர்கள் முற்றிலும் வியப்படைந்து, “இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற இவர்கள் எல்லோரும் கலிலேயர் அல்லவா?</verse>
				<verse number="8">அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கின்றோமே, அது எப்படி?</verse>
				<verse number="9">பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும் மற்றும் மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா,</verse>
				<verse number="10">பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லிபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும்,</verse>
				<verse number="11">இன்னும் யூதரும், யூத மார்க்கத்தைத் தழுவியவர்களும், அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாங்கள் எல்லோரும், நமது மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கின்றோமே!” என்றார்கள்.</verse>
				<verse number="12">அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.</verse>
				<verse number="13">ஆயினும் சிலர், விசுவாசிகளைக் குறித்து கேலி செய்து, “இவர்கள் அதிக திராட்சை ரசம் குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="14">அப்போது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூத மக்களே! எருசலேமில் வாழ்கிறவர்களே! உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்கின்றேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள்.</verse>
				<verse number="15">இந்த மனிதர்கள் நீங்கள் நினைப்பது போல் குடிபோதையில் இருப்பவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே!</verse>
				<verse number="16">இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டதே இப்பொழுது நிறைவேறுகிறது:</verse>
				<verse number="17">“ ‘இறைவன் சொன்னதாவது, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்போது உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள். உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.</verse>
				<verse number="18">அந்நாட்களில் எனது ஊழியர்களான ஆண்கள் மேலும் பெண்கள் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன், அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.</verse>
				<verse number="19">மேலே உள்ள வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன். கீழே உள்ள பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காட்டுவேன்.</verse>
				<verse number="20">சூரியன் இருண்டு போகும்; சந்திரன் இரத்தமாக மாறும். பெரிதானதும், மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே இவை நிகழும்.</verse>
				<verse number="21">அப்போது கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுகின்ற ஒவ்வொருவனும் இரட்சிக்கப்படுவான்.’</verse>
				<verse number="22">“சக இஸ்ரயேல் மனிதரே, இதைக் கேளுங்கள்: நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக்கொண்டு, இறைவன் உங்கள் மத்தியில் செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்கள் ஆகியவற்றினால் அவர் இறைவனால் அத்தாட்சி பெறப்பட்ட ஒருவர் என்பதை நிரூபித்தார். இது நீங்கள் அறிந்ததே.</verse>
				<verse number="23">இறைவன் தாம் தீர்மானித்த நோக்கத்திற்கும், தமது முன்னறிவுக்கும் இணங்க, அவரை உங்களிடம் கையளித்தார். நீங்களோ யூதரல்லாத கொடிய மனிதரின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலை செய்தீர்கள்.</verse>
				<verse number="24">ஆனால் இறைவனோ, அவரைச் சுற்றியிருந்த, மரணத்தின் பெரும் வேதனைக் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில் அவரைப் பிடித்து வைத்திருக்கக்கூடிய வல்லமை மரணத்திற்கு இல்லை.</verse>
				<verse number="25">தாவீது அவரைக் குறித்து கூறியிருப்பது: “ ‘நான் கர்த்தரை எனக்கு முன்பாக எப்போதும் கண்டேன். அவர் எனது வலது பக்கத்தில் இருக்கின்றபடியால் நான் அசைக்கப்பட மாட்டேன்.</verse>
				<verse number="26">அதனால் என் இருதயம் சந்தோஷத்தால் பூரித்து, என் நாவு பெருமகிழ்ச்சியடைகிறது. என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.</verse>
				<verse number="27">ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிட மாட்டீர். உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.</verse>
				<verse number="28">நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது பிரசன்னத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ என்பதே.</verse>
				<verse number="29">“சகோதரரே! இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றேன். நமது முற்பிதாவான தாவீது மரணித்து அடக்கம் பண்ணப்பட்டாரே. அவரது கல்லறையும், இந்நாள்வரை இங்கே இருக்கின்றதே.</verse>
				<verse number="30">ஆனாலும் தாவீது ஒரு இறைவாக்கினன். ஆதலால், தனது வழித்தோன்றல்களில் ஒருவரை, தனது அரியணையில் இறைவன் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அறிந்திருந்தார்.</verse>
				<verse number="31">நிகழப்போவதை அவர் முன்னரே கண்டு, மேசியாவின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசினார். அதனாலேயே மேசியா கல்லறையில் கைவிடப்படுவதில்லை என்றும், மேசியாவின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னார்.</verse>
				<verse number="32">இயேசுவை இறைவன் உயிர் பெற்றெழச் செய்தார். அதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="33">அவர் இறைவனின் வலது பக்கத்தில் மேன்மை பெற்றவராய் உயர்த்தப்பட்டு, பிதா வாக்குறுதி அளித்த பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்போது காண்கின்றபடியும் கேட்கின்றபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை எம்மீது ஊற்றியிருக்கிறார்.</verse>
				<verse number="34">தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆயினும் அவர், “ ‘கர்த்தர் என் ஆண்டவரிடம், சொன்னதாவது: எனது வலது பக்கத்தில் உட்காரும்,</verse>
				<verse number="35">நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திரும்’ என்றாரே.</verse>
				<verse number="36">“ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் எல்லோரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே இறைவன், ஆண்டவரும் மேசியாவுமாக ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.</verse>
				<verse number="37">அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றார்கள்.</verse>
				<verse number="38">அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள்.</verse>
				<verse number="39">இந்த வாக்குறுதி உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள எல்லோருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப் போகின்ற எல்லோருக்கும் இது உரியது” என்றான்.</verse>
				<verse number="40">அவன், இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்த கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை வேண்டிக்கொண்டான்.</verse>
				<verse number="41">பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றைய தினம் திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.</verse>
				<verse number="42">அவர்கள் அப்போஸ்தலர்களுடைய கற்பித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பகிர்ந்து உண்ணுதலுக்கும், மன்றாடுதலுக்கும் தங்களை இடைவிடாது அர்ப்பணித்தவர்களாய் இருந்தார்கள்.</verse>
				<verse number="43">எல்லோரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள், அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன.</verse>
				<verse number="44">விசுவாசிகள் எல்லோரும் ஒன்றிணைந்து இருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக் கொண்டார்கள்.</verse>
				<verse number="45">அவர்கள் தங்கள் சொத்துக்களையும் பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய்க் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="46">ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகளில் தங்களுக்குள் அப்பத்தைப் பங்கிட்டுக் கொண்டார்கள். அவர்கள் கபடமற்ற உள்ளத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய் சாப்பிட்டார்கள்.</verse>
				<verse number="47">அவர்கள் இறைவனைத் துதிக்கின்றவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகின்றவர்களை கர்த்தர் அவர்களுடன் சேர்த்ததால், அவர்களது எண்ணிக்கை பெருகிற்று.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">ஒரு நாள் பேதுருவும் யோவானும் மன்றாடுதலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது நேரம் பிற்பகல் மூன்று மணியாயிருந்தது.</verse>
				<verse number="2">அங்கே சிலர், பிறப்பிலேயே கால் ஊனமுற்ற ஒரு மனிதனை அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகின்றவர்களிடம், பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம்.</verse>
				<verse number="3">பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவர்களிடம் பணம் கேட்டான்.</verse>
				<verse number="4">பேதுரு அவனை உற்று நோக்கிப் பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான்.</verse>
				<verse number="5">அப்போது அந்த மனிதன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான்.</verse>
				<verse number="6">அப்போது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான்.</verse>
				<verse number="7">பின்பு அவனது வலது கையைப் பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பலமடைந்தன.</verse>
				<verse number="8">அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதன்பின் அவன் நடந்தும் துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குச் சென்றான்.</verse>
				<verse number="9">அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது,</verse>
				<verse number="10">இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசல் அருகே இருந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக் குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.</verse>
				<verse number="11">அவன் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கையில், மக்கள் எல்லோரும் வியப்படைந்தவர்களாய், சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடி வந்தார்கள்.</verse>
				<verse number="12">இதைப் பேதுரு கண்டபோது, அவர்களிடம், “இஸ்ரயேல் மனிதரே! நீங்கள் ஏன் இதைக் கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறைபக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே! அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கின்றீர்கள்?</verse>
				<verse number="13">ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். பிலாத்து அவரை விடுதலை செய்யத் தீர்மானித்த போதிலும், நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி கையளித்து, பிலாத்துவின் முன்பாக அவரை நிராகரித்தீர்கள்.</verse>
				<verse number="14">பரிசுத்தரும், நீதிமானுமாகிய அவரை நீங்கள் நிராகரித்து, மாறாக ஒரு கொலைகாரனை உங்களுக்காக விடுதலை செய்யும்படி நீங்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டீர்கள்.</verse>
				<verse number="15">வாழ்வின் அதிபதியை நீங்கள் கொலை செய்தீர்கள். ஆனால் இறைவனோ, அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="16">இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் அறிந்த இந்த மனிதன், நீங்கள் காண்கின்றபடி பலமடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும், அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே, நீங்கள் அனைவரும் காண்கின்றபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.</verse>
				<verse number="17">“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும், உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்.</verse>
				<verse number="18">ஆனாலும், தமது மேசியா துன்பங்களை அனுபவிப்பார் என அனைத்து இறைவாக்கினர்கள் மூலமாகவும் இறைவன் முன்னறிவித்ததை, அவர் இவ்விதமாகவே நிறைவேற்றினார்.</verse>
				<verse number="19">ஆகவே, மனந்திரும்பியவர்களாக இறைவனிடம் திரும்புங்கள். அப்போது உங்கள் பாவங்கள் கழுவப்படும், நீங்கள் புத்துணர்வடையும் காலங்கள் கர்த்தரிடமிருந்து உங்களுக்கு வரும்.</verse>
				<verse number="20">அவர் உங்களுக்காக ஏற்படுத்திய மேசியாவாகிய இயேசுவையும் உங்களிடம் அனுப்புவார்.</verse>
				<verse number="21">இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக, வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளித்தபடி, அவர் எல்லாவற்றையும் மீண்டும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை மேசியாவாகிய இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="22">ஏனெனில் ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினரை உங்களுக்காக உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார். அவர் சொல்வது அனைத்தையும் நீங்கள் கேட்க வேண்டும்.</verse>
				<verse number="23">அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ என்று மோசே சொல்லியிருக்கின்றாரே.</verse>
				<verse number="24">“சாமுவேல் தொடங்கி, அவருக்குப் பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள்.</verse>
				<verse number="25">நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது வழித்தோன்றலின் மூலமாக, பூமியிலுள்ள மக்களினத்தார் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று சொன்னாரே.</verse>
				<verse number="26">எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி, உங்களை ஆசீர்வதிக்கும்படி, முதன் முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார்” என்றான்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கையில், மதகுருக்களும் ஆலயக் காவலர் தலைவனும் சதுசேயரும் வந்தார்கள்.</verse>
				<verse number="2">இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று, அப்போஸ்தலர்கள் மக்களுக்கு போதித்து பிரசித்தப்படுத்தியதன் காரணமாக, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள்.</verse>
				<verse number="3">அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள்.</verse>
				<verse number="4">ஆனால், அவர்களுடைய வார்த்தையைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராய் இருந்தார்கள்.</verse>
				<verse number="5">மறுநாளிலே ஆளுநர்களும், சமூகத் தலைவர்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள்.</verse>
				<verse number="6">தலைமை மதகுருவாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன், பிரதம மதகுருவின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள்.</verse>
				<verse number="7">அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்கு முன் கொண்டுவரும்படி செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="8">அப்போது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம், “ஆளுநர்களே, சமூகத் தலைவர்களே,</verse>
				<verse number="9">கால் ஊனமுற்ற ஒருவனுக்கு இரக்கம் காட்டிய ஒரு செயல் குறித்தும், அவன் எப்படிக் குணமானான் என்று விளக்கம் தரவும் இன்று நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால்,</verse>
				<verse number="10">நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறிய வேண்டியது இதுவே: நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரினாலேயே இந்த மனிதன் உங்களுக்கு முன்பாகக் குணமடைந்தவனாய் நிற்கிறான். அவரையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இறைவனோ, அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்.</verse>
				<verse number="11">அப்படிப்பட்டவராகிய இயேசுவே, “ ‘கட்டடம் கட்டுகின்றவர்களாகிய உங்களால் நிராகரிக்கப்பட்ட கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’</verse>
				<verse number="12">இயேசுவிலேயன்றி, வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படியாக, வானத்தின் கீழ் மனிதரிடையே அவருடைய பெயரன்றி, வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.</verse>
				<verse number="13">பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் அதிக கல்வி கற்காத சாதாரண மனிதர்கள் என்பதையும் தெரிந்து கொண்டபோது, அவர்கள் மலைத்துப் போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.</verse>
				<verse number="14">ஆனால் குணமடைந்த மனிதனும் அங்கு இவர்களுடன் நிற்கின்றதை அவர்கள் கண்டதால் அவர்களால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.</verse>
				<verse number="15">எனவே, நியாயசபையிலிருந்து பேதுருவையும் யோவானையும் வெளியே போகும்படி உத்தரவிட்ட பின், அவர்கள் இந்த விடயத்தைக் குறித்து ஒருவரோடொருவர் கலந்துரையாடினார்கள்:</verse>
				<verse number="16">“நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? இவர்கள் ஒரு பெரிய அற்புத அடையாளத்தை செய்துள்ளார்கள் என்பதை எருசலேமில் வாழ்கின்ற எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். அதை நாமும் மறுக்க முடியாது.</verse>
				<verse number="17">ஆனால், இது தொடர்ந்தும் மக்களிடையே பரவாதபடி தடை செய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே இவர்கள் இனிமேல் யாருடனும் பேசக் கூடாது’ என்று நாம் இவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டார்கள்.</verse>
				<verse number="18">எனவே அவர்கள் திரும்பவும் பேதுருவையும் யோவானையும் உள்ளே அழைத்து, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.</verse>
				<verse number="19">ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள்.</verse>
				<verse number="20">நாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள்.</verse>
				<verse number="21">நடந்த அற்புதத்திற்காக மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் திரும்பவும் பயமுறுத்திவிட்டு, பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.</verse>
				<verse number="22">ஏனெனில், அற்புதமாய் குணமடைந்த அந்த மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.</verse>
				<verse number="23">பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களுடைய குழுவினரிடம் திரும்பிப் போய் தலைமை மதகுருக்களும் சமூகத் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.</verse>
				<verse number="24">அவர்கள் இதைக் கேட்டதும் ஒன்றாகத் தம் குரலை உயர்த்தியவர்களாக இறைவனை நோக்கி: “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்.</verse>
				<verse number="25">நீர் பரிசுத்த ஆவியானவர் மூலமாக உமது ஊழியரும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “ ‘இனங்கள் ஏன் கொதித்து எழுகின்றன? மக்கள் ஏன் வீணாகப் பயனற்ற சூழ்ச்சி செய்கின்றார்கள்?</verse>
				<verse number="26">பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆளுநர்களும்கூட, கர்த்தருக்கு விரோதமாகவும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’</verse>
				<verse number="27">நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே.</verse>
				<verse number="28">ஆனாலும், என்ன நடக்க வேண்டுமென உம்முடைய வல்லமையின்படியும் திட்டத்தின்படியும், நீர் முன்னதாகவே தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.</verse>
				<verse number="29">இப்போதும் கர்த்தாவே! அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்வீராக; உமது வார்த்தையை அதிக துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடுத்திடுவீராக.</verse>
				<verse number="30">உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் குணமாக்குவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது வல்லமையை செயற்படுத்துவீராக ” என்று மன்றாடினார்கள்.</verse>
				<verse number="31">அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசினார்கள்.</verse>
				<verse number="32">எல்லா விசுவாசிகளும் இருதயத்திலும் மனதிலும் ஒரே சிந்தனை உடையவர்களாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கோரவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய் பகிர்ந்து கொண்டார்கள்.</verse>
				<verse number="33">ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து, அப்போஸ்தலர்கள் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்து வந்தார்கள். அவர்கள் எல்லோர் மேலும் மிகுந்த கிருபை இருந்தது.</verse>
				<verse number="34">அவர்களுக்குள்ளே குறைவுள்ளவர்களென எவரும் இருக்கவில்லை. ஏனெனில் சொந்த நிலங்களையும் வீடுகளையும் கொண்டிருந்தவர்கள், காலத்திற்குக் காலம் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து,</verse>
				<verse number="35">அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அது அவரவர் தேவைக்கு ஏற்றபடி, தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.</verse>
				<verse number="36">சீப்புரு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர்கள் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், ஊக்குவிக்கும் மகன் என்று அர்த்தமாகும்.</verse>
				<verse number="37">இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">அப்போது, அனனியா என்னும் பெயருடைய ஒரு மனிதன் தனது மனைவி சப்பீராளுடன் சேர்ந்து ஒரு சிறு நிலத்தை விற்றான்.</verse>
				<verse number="2">விற்ற பணத்தில் ஒரு பகுதியைத் தனது மனைவியும் அறியத்தக்கதாக தனக்கென ஒளித்து வைத்துக்கொண்டு, மிகுதியைக் கொண்டுவந்து முழுவதையும் கொடுப்பது போல அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான்.</verse>
				<verse number="3">அப்போது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென ஒளித்து வைத்துக்கொண்டாயே.</verse>
				<verse number="4">அது விற்கப்படும் முன்பு, அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும் அந்தப் பணம் உன்னிடம் தானே இருந்தது. இப்படிப்பட்ட ஒரு செயலை திட்டமிட்டுச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான்.</verse>
				<verse number="5">அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்து போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று.</verse>
				<verse number="6">அப்போது இளைஞர்கள் முன்வந்து அவனது உடலைத் துணியில் சுற்றி, சுமந்துகொண்டு சென்று அடக்கம் செய்தார்கள்.</verse>
				<verse number="7">ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பின், நடந்தது என்ன என்பதை அறியாமல் அவனுடைய மனைவி உள்ளே வந்தாள்.</verse>
				<verse number="8">பேதுரு அவளிடம், “நிலத்தை விற்று, நீயும் அனனியாவும் பெற்றுக்கொண்ட பணம் இவ்வளவுதானா?” என்று கேட்டான். அதற்கு அவள், “ஆம், இவ்வளவுதான் அதன் விலை” என்றாள்.</verse>
				<verse number="9">அப்போது பேதுரு அவளிடம், “கர்த்தருடைய ஆவியானவரைச் சோதிப்பதற்கு நீயும் உடன்பட்டதெப்படி? பார்! உனது கணவனை அடக்கம் செய்தவர்கள் வாசற்படியிலே நிற்கின்றனர். அவர்கள் உன்னையும் சுமந்துகொண்டு செல்வார்கள்” என்றான்.</verse>
				<verse number="10">அந்த வினாடியே, அவளும் பேதுருவின் பாதத்தில் விழுந்து இறந்து போனாள். அப்போது அந்த இளைஞர்கள் உள்ளே வந்து, அவள் இறந்து கிடப்பதைக் கண்டு, அவளையும் வெளியே சுமந்துகொண்டு சென்று அவளது கணவனுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள்.</verse>
				<verse number="11">திருச்சபையோருக்கும், இந்த விடயத்தைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயம் ஏற்பட்டது.</verse>
				<verse number="12">அப்போஸ்தலர்கள் அநேக அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் மக்களிடையே செய்தார்கள். விசுவாசிகள் எல்லோரும் சாலொமோனுடைய மண்டபத்தில் கூட்டம் கூடுவது வழக்கமாயிருந்தது.</verse>
				<verse number="13">மக்கள் அவர்களை உயர்வாய் மதித்தபோதிலும், வேறு எவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை.</verse>
				<verse number="14">ஆயினும், அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர் மீது விசுவாசம் வைத்து அவர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், அவர்களின் எண்ணிக்கை பெருகிற்று.</verse>
				<verse number="15">அதன் பலனாக, மக்கள் தங்களுள் நோயுற்றிருந்தவர்களை வீதிகளுக்குக் கொண்டுவந்து, அவர்களைக் கட்டில்கள் மேலும் பாய்கள் மேலும் கிடத்தினார்கள். பேதுரு நடந்து போகையில், அவனுடைய நிழலாவது படும்படியே இப்படிச் செய்தார்கள்.</verse>
				<verse number="16">எருசலேமைச் சுற்றியிருந்த பட்டணங்களிலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் தங்களில் நோயுற்றிருந்தவர்களையும், தீய ஆவியினால் துன்புறுத்தப்பட்டவர்களையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லோரும் குணமடைந்தார்கள்.</verse>
				<verse number="17">அப்போது தலைமை மதகுருவும், சதுசேயர் பிரிவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்தார்கள்.</verse>
				<verse number="18">அவர்கள் அப்போஸ்தலர்களைக் கைது செய்து, பொதுச் சிறைச்சாலையில் அடைத்தார்கள்.</verse>
				<verse number="19">ஆனால் அந்த இரவில், கர்த்தருடைய தூதன் அந்தச் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே கொண்டுவந்தான்.</verse>
				<verse number="20">அவன் அவர்களிடம், “நீங்கள் போய் ஆலய முற்றத்தில் நின்று, இந்தப் புது வாழ்வின் செய்தி அனைத்தையும் மக்களுக்குச் சொல்லுங்கள்” என்றான்.</verse>
				<verse number="21">அவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே, அதிகாலையிலே ஆலய முற்றத்திற்குள் போய் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்கள். தலைமை மதகுருவும், அவனுடன் இருந்தவர்களும் அங்கே வந்து சேர்ந்தபோது அவர்கள் நியாயசபையை, அதாவது இஸ்ரயேல் மக்களின் எல்லா சமூகத் தலைவர்களையும் ஒன்றுகூட்டி, சிறையிலிருந்து அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி ஆள் அனுப்பினார்கள்.</verse>
				<verse number="22">ஆனால் ஆலயக் காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பி வந்து அதை அறிவித்தார்கள்.</verse>
				<verse number="23">திரும்பி வந்தவர்கள் அவர்களிடம், “சிறைச்சாலை பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதையும், சிறைக்காவலர் வாசல்களில் நின்று கொண்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். ஆனால் சிறைச்சாலைக் கதவுகளை திறந்தபோது, உள்ளே ஒருவரையும் நாங்கள் காணவில்லை” என்றார்கள்.</verse>
				<verse number="24">ஆலயக் காவலர் தலைவனும், தலைமை மதகுருக்களும் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, இதனால் என்ன நடக்கப் போகின்றதோ என யோசித்து மனக் குழப்பமடைந்தார்கள்.</verse>
				<verse number="25">அப்போது ஒருவன் வந்து, “பாருங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் ஆலய முற்றத்தில் நின்று மக்களுக்குப் போதிக்கிறார்கள்” என்று அறிவித்தான்.</verse>
				<verse number="26">அப்போது, ஆலயக் காவலர் தலைவன் ஆலயக் காவலருடன் போய் அப்போஸ்தலர்களைப் பிடித்து வந்தான். ஆயினும், அவர்கள்மீது வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள் மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள்.</verse>
				<verse number="27">அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, நியாயசபையின் முன்பாக நிறுத்தினார்கள். தலைமை மதகுரு அவர்களிடம் கேள்விகளைக் கேட்டான்.</verse>
				<verse number="28">அவன், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆயினும் நீங்கள் உங்கள் போதனையினாலே, எருசலேமை நிரப்பி விட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப் பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதி கொண்டிருக்கிறீர்கள்” என்றான்.</verse>
				<verse number="29">ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அவர்களிடம், “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்!</verse>
				<verse number="30">நீங்கள் சிலுவை மரத்தில் தொங்கவிட்டுக் கொலை செய்த இயேசுவை, நம்முடைய முற்பிதாக்களின் இறைவன் எழுந்திருக்கச் செய்தார்.</verse>
				<verse number="31">இறைவனோ அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுபுறத்தில் இருக்கும்படி மேன்மையளித்து உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும் பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார்.</verse>
				<verse number="32">இவற்றுக்கு நாங்களும், தமக்குக் கீழ்ப்படிகின்றவர்களுக்கு இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சி” என்றார்கள்.</verse>
				<verse number="33">அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து அப்போஸ்தலர்களைக் கொல்ல விரும்பினார்கள்.</verse>
				<verse number="34">ஆனால் அந்த நியாயசபையில் கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு பரிசேயன் இருந்தான். அவன் ஒரு நீதிச்சட்ட ஆசிரியனாகவும், எல்லா மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்தான், அவன் எழுந்து நின்று, சிறிது நேரத்திற்கு அப்போஸ்தலர்களை வெளியே கொண்டுபோகும்படி உத்தரவிட்டான்.</verse>
				<verse number="35">பின்பு அவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “இஸ்ரயேல் மனிதரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப் போவதைக் குறித்து கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="36">ஏனெனில் சில காலத்திற்கு முன்பு தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான். ஏறக்குறைய நானூறு மனிதர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய எல்லோரும் சிதறிப் போனார்கள். அந்தக் குழுவினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.</verse>
				<verse number="37">அவனுக்குப் பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள்.</verse>
				<verse number="38">எனவே, இப்போது இந்த விடயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே; இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்களைப் போக விடுங்கள்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயற்பாடும் மனிதரிடமிருந்து வந்ததானால் அது இல்லாமற் போகும்.</verse>
				<verse number="39">ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்த முடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கின்றவர்களாய் இருப்பீர்களே” என்றான்.</verse>
				<verse number="40">அங்கிருந்தவர்கள் அவன் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்போது அவர்கள் அப்போஸ்தலர்களை உள்ளே வரச் செய்து, சவுக்கினால் அடித்து, இயேசுவின் பெயரினால் பேசக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்களைப் போகவிட்டார்கள்.</verse>
				<verse number="41">அப்போஸ்தலர்கள் நியாயசபையை விட்டுப் போன பின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.</verse>
				<verse number="42">ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுவீடாகவும் சென்று இடைவிடாது போதித்து, இயேசுவே மேசியா என்ற நற்செய்தியைப் பிரசித்தப்படுத்தினார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">அந்நாட்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, அவர்களுள் கிரேக்க மொழி பேசும் யூதர்கள், தமது விதவைகள் அன்றாட உணவுப் பகிர்வில் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்று எபிரேய மொழி பேசும் யூதருக்கு எதிராக குறை கூறி முணுமுணுத்தார்கள்.</verse>
				<verse number="2">அப்போது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், சீடர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி, “அப்போஸ்தலர்களாகிய நாங்கள் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல், உணவுப் பந்தியில் பணி செய்வது சரியானது அல்ல.</verse>
				<verse number="3">சகோதரரே, ஆதலால் உங்கள் மத்தியிலிருந்து ஆவியானவரினாலும், ஞானத்தினாலும் நிறைந்தவர்களான அனைவரதும் நற்சான்று பெற்ற ஏழு பேரை தேர்வுக்குட்படுத்தி கவனமாகத் தெரிவு செய்யுங்கள். உணவுப் பகிர்வை செவ்வனே நிறைவேற்றுவதற்ககென அவர்களை நாங்கள் நியமிப்போம்.</verse>
				<verse number="4">நாங்களோ மன்றாடுவதற்கும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தைச் செய்வதற்கும் எங்கள் முழு நேரத்தையும் அர்ப்பணிப்போம்” என்றார்கள்.</verse>
				<verse number="5">அவர்கள் சொன்னது, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருப்தியளித்தது. எனவே அவர்கள் விசுவாசத்திலும், பரிசுத்த ஆவியானவரிலும் நிறைந்தவனான ஸ்தேவானைத் தெரிவு செய்தார்கள். அவனுடன் பிலிப்பு, பிரொகோர், நிக்கானோ, தீமோன், பர்மெனா ஆகியோரையும், யூத மார்க்கத்தைத் தழுவியிருந்த அந்தியோகியனான நிக்கொலாவையும் தெரிவு செய்தார்கள்.</verse>
				<verse number="6">பின்பு அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர்கள் அவர்களுக்காக மன்றாடி, அவர்கள்மீது தங்கள் கைகளை வைத்து அவர்களை நியமித்தார்கள்.</verse>
				<verse number="7">இறைவனுடைய வார்த்தை தொடர்ந்து பரவியது. சீடருடைய தொகையும் எருசலேமில் வெகுவாய்ப் பெருகியது, அநேக மதகுருக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.</verse>
				<verse number="8">அந்நாட்களில் ஸ்தேவான், இறைவனின் கிருபையும் வல்லமையும் நிறைந்தவனாக, மக்கள் மத்தியில் பெரிதான அதிசயங்களையும், அற்புத அடையாளங்களையும் செய்து கொண்டிருந்தான்.</verse>
				<verse number="9">ஆயினும், “சுதந்திரம் பெற்றவர்களின் யூத ஜெபஆலயம்” என்ற பிரிவைச் சேர்ந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அவர்கள் சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியாவின் மாகாணங்கள், ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த யூதர்களாய் இருந்தார்கள். அந்த மனிதர்கள் ஸ்தேவானுடன் விவாதம் செய்யத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="10">ஆனால், அவனிடமிருந்த ஞானத்தின் காரணமாகவும், அவன் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசியதனாலும் அவர்களால் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை.</verse>
				<verse number="11">எனவே அவர்கள் இரகசியமாக சிலரைத் தூண்டிவிட்டு, “இவன் மோசேக்கும் இறைவனுக்கும் விரோதமாக, அவர்களை நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.</verse>
				<verse number="12">இப்படியாக, அவர்கள் மக்களையும், சமூகத் தலைவர்களையும், நீதிச்சட்ட ஆசிரியர்களையும் ஸ்தேவானுக்கு எதிராகக் தூண்டிவிட்டார்கள். அதன்பின்பு அவர்கள் திடீரென வந்து, ஸ்தேவானைப் பிடித்து நியாயசபைக்கு முன்பாக அவனைக் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="13">அவர்கள் பொய்ச் சாட்சி கூறும்படி சிலரை ஏற்படுத்தினார்கள். அவ்விதம் ஏற்படுத்தப்பட்டவர்கள் “இவன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும், நீதிச்சட்டத்திற்கும் விரோதமாய் பேசுகின்றதை நிறுத்துவதாக இல்லை.</verse>
				<verse number="14">நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்றும், மோசே நமக்குக் கையளித்த நடைமுறைகளை மாற்றுவார் என்றும் இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.</verse>
				<verse number="15">அந்த நியாயசபையில் இருந்த எல்லோரும், ஸ்தேவானை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அவனுடைய முகம், ஒரு இறைதூதனுடைய முகத்தைப் போல் பிரகாசிப்பதை அவர்கள் கண்டார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">அப்போது தலைமை மதகுரு ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="2">அதற்கு அவன் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, நான் சொல்வதைக் கேளுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம், ஆரானிலே வாழ்வதற்கு முன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தபோதே மகிமையின் இறைவன் அங்கே அவருக்குக் காட்சியளித்தார்.</verse>
				<verse number="3">இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உனது நாட்டையும், உனது மக்களையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு வந்திடுவாயாக’ என்றார்.</verse>
				<verse number="4">“அவ்வாறே அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தார். அவருடைய தகப்பன் இறந்த பின், நீங்கள் இப்போது வாழ்கின்ற இந்த நாட்டிற்கு இறைவன் அவரை குடிபெயர்ந்திடச் செய்தார்.</verse>
				<verse number="5">இங்கே இறைவன் அவருக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச் சொத்தாகக் கொடுக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் ஆபிரகாமுக்குப் பிள்ளை இல்லாதிருந்தது. ஆனாலும்கூட, அவருக்கும் அவருக்குப் பின் அவருடைய தலைமுறையினருக்கும் இந்த நாட்டை உரிமையாகக் கொடுப்பேன் என இறைவன் வாக்குறுதியளித்தார்.</verse>
				<verse number="6">இறைவன் அவருடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களாய் அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள்.</verse>
				<verse number="7">ஆயினும் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணி செய்கின்ற அந்த இனத்தை நான் நியாயம் தீர்ப்பேன்’ என்றும், ‘அதன்பின் அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு வந்து இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ என்றும் கூறினார்.</verse>
				<verse number="8">பின்பு அவர், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, குழந்தை பிறந்து எட்டாம் நாளில் அப்பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்தார். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானார். யாக்கோபு பன்னிரண்டு கோத்திரங்களின் முற்பிதாக்களுக்குத் தகப்பனானார்.</verse>
				<verse number="9">“கோத்திரங்களின் முற்பிதாக்கள், யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால் அவர்கள் அவரை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, யோசேப்போடு இருந்தார்.</verse>
				<verse number="10">இறைவன் அவருடைய எல்லாத் துன்பங்களில் இருந்தும் அவரைக் காப்பாற்றினார். அவருக்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நன்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே பார்வோன், யோசேப்பை எகிப்தின் மீதும், தனது அரண்மனை முழுவதன் மீதும் ஆளுநராக நியமித்தான்.</verse>
				<verse number="11">“எகிப்து தேசம் முழுவதையும், கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது. நமது முற்பிதாக்களுக்கும் உணவு கிடைக்கவில்லை.</verse>
				<verse number="12">எகிப்திலே தானியம் இருக்கின்றது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவர் நமது தந்தையரை முதலாவது பயணமாக அங்கே போகும்படி அனுப்பினார்.</verse>
				<verse number="13">அவர்களது இரண்டாவது பயணத்தின்போது யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு வெளிப்படுத்தினார். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான்.</verse>
				<verse number="14">இதன்பின்பு யோசேப்பு தூதனுப்பி, கானான் நாட்டிலிருந்த தனது தகப்பனான யாக்கோபையும் தம்முடைய குடும்பத்தார் அனைவரையும் அழைப்பித்தார். அவர்கள் எல்லாருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள்.</verse>
				<verse number="15">இப்படியாக யாக்கோபு எகிப்திற்குப் போனார்; அங்குதான் அவரும், நமது முற்பிதாக்களும் மரணித்தார்கள்.</verse>
				<verse number="16">பிற்காலத்தில் அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கே வெகு காலத்திற்கு முன்பே ஆபிரகாம் வாங்கி வைத்திருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையை ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு, சீகேமில் வாழ்ந்த ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தார்.</verse>
				<verse number="17">“இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய் பெருகியது.</verse>
				<verse number="18">பின்பு, ‘யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத வேறொருவன், எகிப்திற்கு அரசன் ஆனான்.’</verse>
				<verse number="19">அவன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். தங்கள் குழந்தைகளை உயிரிழக்குமாறு எறிந்துவிட வேண்டுமென்று நமது முற்பிதாக்களை பலவந்தப்படுத்தி அவர்களை ஒடுக்கினான்.</verse>
				<verse number="20">“இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தார். அவர் இறைவனுக்கு முன்பாக அழகானதொரு குழந்தையாய் இருந்தார். மூன்று மாதங்களாக அவர் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டார்.</verse>
				<verse number="21">அவர் வெளியே கைவிடப்பட்டபோது பார்வோனின் மகள் அவரை எடுத்து தனது சொந்த மகனாக வளர்த்தாள்.</verse>
				<verse number="22">எனவே மோசே, எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத் தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவராய் இருந்தார்.</verse>
				<verse number="23">“மோசே நாற்பது வயதுடையவரானபோது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்கத் தன் உள்ளத்தில் தீர்மானித்தார்.</verse>
				<verse number="24">அவர்களில் ஒருவன் ஒரு எகிப்தியனால் அநியாயமாக துன்புறுத்தப்படுவதைக் கண்டார். அப்போது மோசே தாக்கப்பட்டவனை பாதுகாத்து, துன்புறுத்தியவனைப் பழிவாங்கும்படி அந்த எகிப்தியனைக் கொன்றார்.</verse>
				<verse number="25">தன்னுடைய சொந்த மக்களைத் தப்புவிப்பதற்காக, இறைவன் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என மோசே நினைத்தார். ஆனால் அவர்களோ அப்படி புரிந்துகொள்ளவில்லை.</verse>
				<verse number="26">மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நீங்கள் சகோதரர்கள் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று கூறி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றார்.</verse>
				<verse number="27">“ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவனோ, மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?</verse>
				<verse number="28">நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றது போல என்னையும் கொல்லப் பார்க்கின்றாயோ?’ என்று கேட்டான்.</verse>
				<verse number="29">மோசே இந்த பதிலைக் கேட்டதும், அவர் மீதியானுக்கு ஓடிப் போய், அங்கே ஒரு அந்நியனாக குடியிருந்தார். அங்கே அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.</verse>
				<verse number="30">“நாற்பது ஆண்டுகள் கடந்த பின், எரிந்து கொண்டிருந்த முட்செடியின் நெருப்புச் சுவாலையில் தோன்றிய, ஒரு இறைதூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்திலே நடந்தது.</verse>
				<verse number="31">மோசே இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தார். அவர் அதை இன்னும் நன்றாகப் பார்ப்பதற்காக அதன் அருகே சென்றார். அங்கே அவர் கர்த்தரின் குரலைக் கேட்டார். அந்தக் குரல்,</verse>
				<verse number="32">‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’ என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினார். அதைப் பார்க்க அவர் துணியவில்லை.</verse>
				<verse number="33">“அப்போது கர்த்தர் அவரிடம், ‘உனது காலணிகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="34">எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய துன்பத்தின் முனகலைக் கேட்டு, அவர்களை விடுதலை செய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்போது நீ வா, நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’ என்றார்.</verse>
				<verse number="35">“இந்த மோசேயைத்தான், ‘எங்கள்மேல் உன்னை ஆளுநராகவும், நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ என்று கேட்டு இஸ்ரயேலர்கள் நிராகரித்திருந்தார்கள். இவ்வாறு நிராகரிக்கப்பட்டவரையே அவர்களின் ஆளுநராகவும், மீட்பராகவும் இருக்கும்படி இறைவன் அனுப்பினார். முட்செடியில் இவருக்குக் காட்சியளித்த இறைதூதனானவர் மூலமாய், அவர் இதைச் செய்தார்.</verse>
				<verse number="36">மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே நடத்திச் சென்று, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைநிலத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தார்.</verse>
				<verse number="37">“இப்படிப்பட்ட மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினரை உங்களுக்காக உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்’ என்று சொன்னவர்.</verse>
				<verse number="38">இவரே, பாலைநிலத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைதூதனுடனும், நமது முற்பிதாக்களுடனும் இருந்தவர். இவரே நமக்குக் கொடுக்கும்படி, வாழ்வளிக்கும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவர்.</verse>
				<verse number="39">“ஆனால் நமது முற்பிதாக்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவரை நிராகரித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள்.</verse>
				<verse number="40">அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தி வந்த மோசேக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’ என்றார்கள்.</verse>
				<verse number="41">அக்காலத்திலேதான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்து, அதற்குப் பலிகளைக் கொண்டுவந்தார்கள். தங்கள் கைகளினாலே செய்த அந்தச் சிலையை வைத்துக்கொண்டு அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.</verse>
				<verse number="42">அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு இது ஒத்திருக்கின்றது: “இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைநிலத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது, எனக்கா பலிகளையும், காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்கள்?</verse>
				<verse number="43">நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும், உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித் திரிந்தீர்களே! இவைகளெல்லாம் நீங்கள் வணங்குவதற்கென செய்துகொண்ட விக்கிரகங்களே! எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தி அனுப்புவேன்.</verse>
				<verse number="44">“நமது முற்பிதாக்கள் பாலைநிலத்தில், தங்களுடன் சாட்சிக் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவர் பார்த்த மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது.</verse>
				<verse number="45">நமது முற்பிதாக்கள் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின் கீழ், யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது அதைத் தங்களுடன் எடுத்து வந்தார்கள். அந்த இனங்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம், நமது நாட்டில் தாவீதின் காலம் வரைக்கும் இருந்தது.</verse>
				<verse number="46">தாவீது, இறைவனின் தயவைப் பெற்றவராய் யாக்கோபின் இறைவனுக்கு தான் ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டார்.</verse>
				<verse number="47">ஆயினும் சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினார்.</verse>
				<verse number="48">“எப்படியும், அதி உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட வீடுகளில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வது போல்,</verse>
				<verse number="49">“ ‘வானம் எனது அரியணை, பூமி எனது பாதபீடம். நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்? என்று கர்த்தர் சொல்கின்றார். மேலும், நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?</verse>
				<verse number="50">இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’ என்கிறார்.</verse>
				<verse number="51">“அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் முற்பிதாக்களைப் போல, எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கின்றவர்களாகவே இருக்கின்றீர்கள்!</verse>
				<verse number="52">உங்கள் முற்பிதாக்களால் துன்புறுத்தப்படாத இறைவாக்கினர் எவராகிலும் இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்துச் சொன்னவர்களைக்கூட அவர்கள் கொலை செய்தார்களே. இப்போது நீங்களே நீதியானவரைக் காட்டிக் கொடுத்து கொலை செய்தீர்கள்.</verse>
				<verse number="53">இறைதூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட நீதிச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதற்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை” என்றான்.</verse>
				<verse number="54">அவர்கள் இதைக் கேட்டபோது மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள்.</verse>
				<verse number="55">ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவனாக, மேலே வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்கின்றதையும் அவன் கண்டான்.</verse>
				<verse number="56">“இதோ, நான் பரலோகம் திறந்திருப்பதையும், பிதாவின் வலது பக்கத்தில் மனுமகன் நிற்கிறதையும் காண்கின்றேன்” என்றான்.</verse>
				<verse number="57">இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் காதுகளை பொத்திக் கொண்டு உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப் போய்த் தாக்கினார்கள்.</verse>
				<verse number="58">பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக் கொண்டுபோய், அவன்மீது கல்லெறியத் தொடங்கினார்கள். அப்போது சாட்சிகள், தங்கள் உடைகளை சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்துவிட்டுப் போயிருந்தார்கள்.</verse>
				<verse number="59">ஸ்தேவான், “ஆண்டவர் இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் தொடர்ந்து அவன்மீது கல்லெறிந்து கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="60">பின்பு அவன் முழந்தாழிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்த வேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்ன பின்பு, விழுந்து மரணமடைந்தான்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">இப்படியாக, ஸ்தேவான் கொலை செய்யப்படுவதற்கு சவுலும் உடன்பாடாக இருந்தான். அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு எதிராக மிகுந்த துன்புறுத்தல் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறிப் பரவினார்கள்.</verse>
				<verse number="2">இறைபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணி, அவனுக்காக ஒப்பாரி வைத்து துக்கம் அனுஷ்டித்தார்கள்.</verse>
				<verse number="3">ஆனால் சவுலோ திருச்சபைக்குப் பாரிய சேதம் ஏற்படுத்தத் தொடங்கினான். அவன் வீடுவீடாகச் சென்று, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான்.</verse>
				<verse number="4">எருசலேமிலிருந்து சிதறிப் பரவியவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.</verse>
				<verse number="5">பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான்.</verse>
				<verse number="6">கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டு அவன் செய்த அற்புத அடையாளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் சொன்னவற்றை அவர்கள் எல்லோரும் கவனமாய்க் கேட்டார்கள்.</verse>
				<verse number="7">அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக் கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும், கால் ஊனமுற்றோர்களும் குணமடைந்தார்கள்.</verse>
				<verse number="8">இதனால் அந்தப் பட்டணத்திலே மிகுந்த மனமகிழ்ச்சி உண்டாயிற்று.</verse>
				<verse number="9">சீமோன் என்னும் பெயருடைய ஒருவன் சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கப் பண்ணிக்கொண்டிருந்தான். அவன் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக் கொண்டான்.</verse>
				<verse number="10">இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள்.</verse>
				<verse number="11">அவன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப் பண்ணினதால் அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.</verse>
				<verse number="12">ஆனால் பிலிப்பு, இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தியையும், இயேசு கிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக ஞானஸ்நானம் பெற்றார்கள்.</verse>
				<verse number="13">சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான். அவன், தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான்.</verse>
				<verse number="14">சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள்.</verse>
				<verse number="15">அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள்.</verse>
				<verse number="16">ஏனெனில், அதுவரை அவர்களில் எவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தார்கள்.</verse>
				<verse number="17">பேதுருவும் யோவானும் அவர்கள்மீது தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="18">அப்போஸ்தலர்கள் கைகளை வைத்து மன்றாடும்போது பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அப்போஸ்தலர்களுக்கு பணத்தைக் கொடுத்து,</verse>
				<verse number="19">“நான் எவர்கள் மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான்.</verse>
				<verse number="20">அப்போது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்!</verse>
				<verse number="21">இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே.</verse>
				<verse number="22">எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார்.</verse>
				<verse number="23">ஏனெனில் நீ மிகக் கசப்பான பொறாமை கொண்டவனாகவும் பாவத்தின் பிடியில் சிக்கியவனாகவும் இருப்பதை நான் காண்கின்றேன்” என்றான்.</verse>
				<verse number="24">அப்போது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான்.</verse>
				<verse number="25">பேதுருவும், யோவானும் சாட்சி கூறி கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="26">கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். இது ஒரு வனாந்தரப் பகுதி.</verse>
				<verse number="27">எனவே அவன் புறப்பட்டுப் போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடுவதற்காக எருசலேமுக்குச் சென்றிருந்தான்.</verse>
				<verse number="28">இவன் தனது வீட்டிற்குத் திரும்பிப் போகின்ற பயணத்திலே தனது தேரில் உட்கார்ந்து இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="29">பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்த தேரை நோக்கிப் போய், அதனுடன் இணைந்துகொள்” என்றார்.</verse>
				<verse number="30">அவ்விதமாக, பிலிப்பு ஓடிச் சென்று அதனுடன் இணைந்து கொண்டபோது, அந்த அதிகாரி இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. அப்போது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பது உனக்குப் புரிகிறதா?” எனக் கேட்டான்.</verse>
				<verse number="31">அதற்கு அவன், “யாராவது அதை எனக்கு விபரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி புரியும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான்.</verse>
				<verse number="32">அந்த அதிகாரி வாசித்துக் கொண்டிருந்த வேதவசனப் பகுதியில், “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் செம்மறியாட்டைப் போல் இருந்தார். முடி கத்தரிக்கின்றவனின் முன்னால் மௌனமாய் நிற்கும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல, அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.</verse>
				<verse number="33">அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. அவருடைய வழித்தோன்றலைக் குறித்து யாரால் என்ன சொல்ல முடியும்? அவருடைய உயிர், பூமியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதே” என்றிருந்தது.</verse>
				<verse number="34">அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைச் சொல்கின்றார்? தம்மைக் குறித்தா, அல்லது வேறு ஒருவரைக் குறித்தா? தயவுசெய்து எனக்குச் சொல்லும்” என்றான்.</verse>
				<verse number="35">அப்போது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான்.</verse>
				<verse number="36">அவர்கள் பயணிக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்போது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கின்றது. நான் ஏன் ஞானஸ்நானம் பெறக் கூடாது?” என்றான்.</verse>
				<verse number="37">அதற்குப் பிலிப்பு, “நீ உனது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அந்த அதிகாரி, “இயேசு கிறிஸ்து இறைவனுடைய மகன் என்று நான் விசுவாசிக்கின்றேன்” என்றான்.</verse>
				<verse number="38">எனவே அவன் தேரை நிறுத்தும்படி உத்தரவிட்டான். பிலிப்புவும் அந்த அதிகாரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.</verse>
				<verse number="39">அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, கர்த்தரின் ஆவியானவர் உடனடியாக பிலிப்புவை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார். அதன்பின் அந்த அதிகாரி பிலிப்புவைக் காணவில்லை. ஆயினும், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான்.</verse>
				<verse number="40">பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு செசரியாவைச் சென்றடைந்தான்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">இதற்கிடையில், சவுல் தொடர்ந்து ஆண்டவருடைய சீடர்களுக்கு பயமுறுத்தல்களும் கொலை அச்சுறுத்தல்களும் விடுத்து வந்தான். அவன் தலைமை மதகுருவினிடத்திற்குப் போய்,</verse>
				<verse number="2">கிறிஸ்துவின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஆண் பெண் யாராயிருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு கொடுப்பதற்கென கடிதங்களைப் பெற்றுக்கொண்டான்.</verse>
				<verse number="3">அவன் தன் பிரயாணத்தில் தமஸ்குவை நெருங்கிக் கொண்டிருக்கையில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது.</verse>
				<verse number="4">அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்போது, தன்னுடன் பேசுகின்ற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே! சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது.</verse>
				<verse number="5">அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ துன்புறுத்துகின்ற இயேசு நானே.</verse>
				<verse number="6">எனவே, இப்போது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்ய வேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்” என்றார்.</verse>
				<verse number="7">சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் எவரையுமே காணவில்லை.</verse>
				<verse number="8">சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவனுடைய கையைப் பிடித்து தமஸ்கு பட்டணத்திற்குள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள்.</verse>
				<verse number="9">அங்கே அவன் மூன்று நாட்களாய் பார்வையற்றவனாய் இருந்தான். அவன் எதையும் உண்ணவோ அருந்தவோ இல்லை.</verse>
				<verse number="10">தமஸ்குவிலே, அனனியா என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். ஆண்டவர் தரிசனத்தில் அவனை அழைத்து, “அனனியா!” என்றார். அதற்கு அவன், “ஆண்டவரே, இதோ இருக்கின்றேன்!” என்றான்.</verse>
				<verse number="11">அப்போது ஆண்டவர் அவனிடம், “நீ எழுந்து, ‘நேர்’ என்னும் தெருவில் இருக்கின்ற யூதாவின் வீட்டிற்கு போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த, சவுல் என்னும் பெயருடைய மனிதனைப்பற்றி விசாரி. அவன் இப்போது மன்றாடிக் கொண்டிருக்கிறான்.</verse>
				<verse number="12">அவன் ஒரு தரிசனத்திலே, அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து தன் மேல் கைகளை வைத்ததனால், தான் பார்வையைத் திரும்பவும் பெற்றுக்கொள்வதாகக் கண்டிருக்கிறான்” என்றார்.</verse>
				<verse number="13">அப்போது அனனியா, “ஆண்டவரே, நான் இவனைப்பற்றி அநேக செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எருசலேமிலே அவன் உமது பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="14">உமது பெயரைச் சொல்லி வழிபடுகின்ற எல்லோரையும் கைது செய்வதற்கு, தலைமை மதகுருவினிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான்.</verse>
				<verse number="15">ஆனால் ஆண்டவர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும், இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிவு செய்திருக்கின்றேன்.</verse>
				<verse number="16">எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று, நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.</verse>
				<verse number="17">ஆகவே அனனியா புறப்பட்டு, அந்த வீட்டைச் சென்றடைந்தான். அவன் சவுலின் மேல் தன் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ இங்கே வருகையில், வழியிலே உனக்குக் காட்சியளித்த ஆண்டவர் இயேசு, என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்; நீ திரும்பவும் பார்வை பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படியாகவுமே அவர் என்னை அனுப்பினார்” என்றான்.</verse>
				<verse number="18">உடனேயே சவுலின் கண்களில் இருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்போது அவனால் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் எழுந்திருந்து ஞானஸ்நானம் பெற்றான்.</verse>
				<verse number="19">பின்பு அவன் சிறிதளவு உணவைச் சாப்பிட்டு, தன் பலத்தைத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். சவுல் தமஸ்குவில் இருந்த சீடர்களுடன் சில நாட்களைக் கழித்தான்.</verse>
				<verse number="20">அவன் தாமதமின்றி உடனடியாக, இயேசு இறைவனின் மகன் என்று, யூத ஜெபஆலயங்களில் பிரசங்கிக்கத் தொடங்கினான்.</verse>
				<verse number="21">அவன் சொன்னதைக் கேட்ட எல்லோரும் வியப்புற்று, “எருசலேமிலே இயேசுவின் பெயரைச் சொல்லி வழிபடுகின்றவர்களை அழித்தவன் இவனல்லவா? இவன் இவர்களைக் கைது செய்து, தலைமை மதகுருவிடம் கொண்டுபோக அல்லவா இங்கே வந்தான்?” என்று கேட்டார்கள்.</verse>
				<verse number="22">ஆயினும் சவுல், மென்மேலும் வல்லமை பெற்று, தமஸ்குவிலே வாழுகிற யூதர்கள் அனைவருக்கும் இயேசுவே மேசியா என்று நிரூபித்து, அவர்களை மனந்தடுமாறச் செய்தான்.</verse>
				<verse number="23">இவ்வாறு பல நாட்கள் சென்ற பின்பு, யூதர்கள் ஒன்றுகூடி அவனைக் கொலை செய்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார்கள்.</verse>
				<verse number="24">சவுலோ அவர்களுடைய சூழ்ச்சி என்னவென்று அறிந்துகொண்டான். அவர்கள் அவனைக் கொலை செய்வதற்காக இரவும் பகலுமாக அந்த நகரத்தின் வாசல்களைக் கவனமாய் காத்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="25">ஆனால் அவனைப் பின்பற்றியவர்கள் இரவிலே அவனை அழைத்துக்கொண்டு போய், ஒரு கூடையில் வைத்து நகரத்தின் மதிலின் ஒரு இடைவெளியினூடாக இறக்கிவிட்டார்கள்.</verse>
				<verse number="26">அவன் எருசலேமுக்கு வந்தபோது, சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்களோ, இவனைக் குறித்துப் பயமடைந்திருந்தபடியால், உண்மையாகவே இவன் ஒரு சீடன் என்று நம்பவில்லை.</verse>
				<verse number="27">ஆனால் பர்னபா அவனை அழைத்துக்கொண்டு அப்போஸ்தலர்களிடம் வந்து, சவுல் எவ்விதம் தன் பயணத்தில் ஆண்டவரைக் கண்டான் என்பதையும், ஆண்டவர் எவ்விதம் அவனுடன் பேசினார் என்பதையும், அவன் எவ்விதம் தமஸ்குவில் இயேசுவின் பெயரில் பயமின்றி பிரசங்கித்தான் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான்.</verse>
				<verse number="28">எனவே சவுல் அவர்களுடன் தங்கி எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்து, ஆண்டவரின் பெயரில் துணிவுடன் பேசினான்.</verse>
				<verse number="29">அவன் கிரேக்க மொழி பேசும் யூதருடன் உரையாடி விவாதித்தான். அவர்களோ, அவனைக் கொலை செய்ய முயற்சித்தார்கள்.</verse>
				<verse number="30">சகோதரர் இதை அறிந்தபோது, அவர்கள் அவனை செசரியாவுக்கு அழைத்துக்கொண்டு போய் அவனுடைய சொந்த ஊராகிய தர்சுவுக்கு அனுப்பி வைத்தார்கள்.</verse>
				<verse number="31">அந்நாட்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய இடங்களில் இருந்த திருச்சபையானது சமாதானத்தை அனுபவித்து பலமடைந்தது. திருச்சபையோர் கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்து, பரிசுத்த ஆவியானவரால் ஊக்குவிக்கப்பட்டு திருச்சபை வளர்ந்து எண்ணிக்கையில் பெருகிற்று.</verse>
				<verse number="32">பேதுரு, நாட்டுப் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், லித்தாவில் இருந்த பரிசுத்தவான்களைச் சந்திக்கச் சென்றான்.</verse>
				<verse number="33">அங்கே, முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்த ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான்.</verse>
				<verse number="34">பேதுரு அவனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணப்படுத்துகிறார். நீ எழுந்து உன் படுக்கையை மடித்து வை” என்றான். உடனே, ஐனேயா எழுந்து நின்றான்.</verse>
				<verse number="35">லித்தாவிலும், சாரோனிலும் வாழ்ந்த எல்லோரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள்.</verse>
				<verse number="36">யோப்பாவிலே இருந்த சீடர்களில் தபீத்தா என்னும் பெயருடைய ஒரு சிஷ்யை இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளை தொர்க்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்போதும் நன்மை செய்கின்றவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கின்றவளாயும் இருந்தாள்.</verse>
				<verse number="37">அந்நாட்களில் அவள் சுகவீனமடைந்து இறந்து போனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது.</verse>
				<verse number="38">லித்தா, யோப்பாவுக்கு அருகே இருந்தது. எனவே, பேதுரு லித்தாவில் இருக்கின்றான் என்று சீடர்கள் கேள்விப்பட்டபோது இரண்டு பேரை அவனிடம் அனுப்பி, “தயவுசெய்து உடனே வாருங்கள்” என்று சொல்லச் சொன்னார்கள்.</verse>
				<verse number="39">பேதுரு அவர்களுடனே புறப்பட்டான். அவன் வந்து சேர்ந்தவுடனே, அவனை வீட்டின் மேலறைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். எல்லா விதவைகளும் அவனைச் சுற்றி நின்று அழுதார்கள். தொர்க்காள் உயிரோடு இருக்கையில், அவள் செய்த மேலாடைகளையும் மற்ற உடைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள்.</verse>
				<verse number="40">பேதுரு அவர்கள் எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, முழந்தாழிட்டு மன்றாடினான். அவன் இறந்த பெண்ணின் பக்கமாகத் திரும்பி, “தபீத்தா, எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டபோது எழுந்து உட்கார்ந்தாள்.</verse>
				<verse number="41">அவன் அவளுடைய கையைப் பிடித்து, அவள் நிற்பதற்கு உதவி செய்தான். பின்பு அவன் விசுவாசிகளையும் விதவைகளையும் அழைத்து, அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்படைத்தான்.</verse>
				<verse number="42">இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்.</verse>
				<verse number="43">யோப்பாவிலே தோல் பதனிடுகின்ற சீமோனுடன் பேதுரு பல நாட்கள் தங்கியிருந்தான்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">செசரியாவில், கொர்நேலியு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் இத்தாலியா படைப் பிரிவு எனப்பட்ட இராணுவப்படை அணியில் நூற்றுக்குத் தளபதியாய் இருந்தான்.</verse>
				<verse number="2">அவனும், அவன் குடும்பத்தவர்கள் எல்லோரும் பக்தியுள்ளவர்களும், இறைவனுக்குப் பயந்து நடக்கின்றவர்களுமாய் இருந்தார்கள். அவன் ஏழைகளுக்குத் தாராளமாய் கொடுக்கின்றவனாகவும், தவறாமல் எப்போதும் இறைவனிடம் மன்றாடுகின்றவனாகவும் இருந்தான்.</verse>
				<verse number="3">ஒரு நாள் பிற்பகல் மூன்று மணியளவில், அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அதிலே இறைவனின் தூதன் ஒருவனை அவன் மிகத் தெளிவாகக் கண்டான். அந்தத் தூதன், “கொர்நேலியு!” என்றான்.</verse>
				<verse number="4">கொர்நேலியு, பீதியடைந்தவனாய் அவனை உற்றுப் பார்த்து, “ஆண்டவரே இது என்ன?” என்றான். அதற்கு அத்தூதன், “உனது மன்றாடல்களும், ஏழைகளுக்கு நீ கொடுத்த நன்கொடைகளும் இறைவனுக்கு முன்பாக ஒரு நினைவுக் காணிக்கையாக வந்திருக்கின்றன.</verse>
				<verse number="5">ஆகவே இப்போது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி பேதுரு என அழைக்கப்படுகின்ற சீமோன் என்னும் பெயருடைய ஒரு மனிதனை அழைத்து வரும்படி சொல்.</verse>
				<verse number="6">அவன் தோல் பதனிடும் சீமோனுடன் தங்கியிருக்கிறான், அவனுடைய வீடு கடலோரமாய் இருக்கின்றது” என்றான்.</verse>
				<verse number="7">தன்னோடு பேசிய தூதன் போன பின்பு, கொர்நேலியு தனது பணியாட்களில் இருவரையும், தனது ஏவலாட்களில் ஒருவனான பக்தியுள்ள ஒரு இராணுவ வீரனையும் அழைத்தான்.</verse>
				<verse number="8">அவன் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினான்.</verse>
				<verse number="9">அவர்கள் பயணம் செய்து, மறுநாள் ஏறத்தாழ மத்தியான வேளையில் யோப்பா பட்டணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பேதுரு, வீட்டின் மேல்பகுதிக்கு மன்றாடுவதற்காகச் சென்றான்.</verse>
				<verse number="10">அவனுக்குப் பசியாய் இருந்தது. அதனால் அவன் எதையாவது சாப்பிட விரும்பினான். ஆனால் உணவு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அவன் ஒரு பரவச நிலைக்குள்ளானான்.</verse>
				<verse number="11">அப்போது வானம் திறந்திருப்பதையும், பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து பூமியை நோக்கி இறக்கி விடப்படுவதையும் அவன் தரிசனமாகக் கண்டான்.</verse>
				<verse number="12">அதற்குள் பூமியிலுள்ள நான்கு கால் மிருகங்களும், ஊரும் பிராணிகளும், வானத்துப் பறவைகளும் இருந்தன.</verse>
				<verse number="13">அப்போது ஒரு குரல், “பேதுரு, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது.</verse>
				<verse number="14">அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! நான் ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் உண்டதில்லை ” என்றான்.</verse>
				<verse number="15">இரண்டாவது முறையும் அந்தக் குரல் அவனுடன் பேசி, “இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே” என்றது.</verse>
				<verse number="16">இவ்விதம் மூன்று முறை நடந்தன. பின்பு அந்த விரிப்புத் துணி சடுதியாக திரும்பவும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</verse>
				<verse number="17">பேதுரு இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டைத் தேடி வந்து, அதன் வாயிலில் நின்றார்கள்.</verse>
				<verse number="18">அவர்கள், “பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரோ?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.</verse>
				<verse number="19">பேதுரு இன்னும் அந்தத் தரிசனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “சீமோன், மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.</verse>
				<verse number="20">எனவே நீ எழுந்து கீழே இறங்கிப் போ. நீ அவர்களுடன் போகத் தயங்காதே, ஏனெனில், நானே அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார்.</verse>
				<verse number="21">எனவே பேதுரு இறங்கிப் போய், “நீங்கள் தேடுகிற அந்த மனிதன் நான்தான். நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டான்.</verse>
				<verse number="22">அதற்கு அந்த மனிதர்கள், “நாங்கள் நூற்றுக்குத் தளபதியான கொர்நேலியுவிடமிருந்து வந்திருக்கிறோம். அவர் நீதிமானும் இறைவனுக்குப் பயந்து நடக்கின்றவருமான ஒருவர். அவர் யூத மக்கள் எல்லாரினதும் நன்மதிப்பைப் பெற்றவர். நீர் சொல்வதைக் கேட்கும்படி உம்மை அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்று ஒரு பரிசுத்த தூதன் அவருக்குச் சொல்லியிருக்கின்றார்” என்றார்கள்.</verse>
				<verse number="23">அப்போது பேதுரு, அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்குள் அழைத்தான். மறுநாள், பேதுரு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றான். யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரர்களும் அவர்களோடு போனார்கள்.</verse>
				<verse number="24">அடுத்த நாள் அவன் செசரியாவைச் சென்றடைந்தான். கொர்நேலியு அவர்களை எதிர்பார்த்து தனது உறவினர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஒன்றுகூட்டி வைத்திருந்தான்.</verse>
				<verse number="25">பேதுரு வீட்டிற்குள் போனதும் கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான்.</verse>
				<verse number="26">ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப் பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான்.</verse>
				<verse number="27">பேதுரு அவனுடன் பேசிக்கொண்டு உள்ளே போனபோது அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான்.</verse>
				<verse number="28">பேதுரு அவர்களிடம்: “யூதனொருவன் யூதரல்லாதவருடன் கூடிப் பழகுவதோ அல்லது அவர்களின் வீட்டிற்குப் போவதோ எங்கள் யூத நீதிச்சட்டத்திற்கு முரணானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நான் எவரையும் தூய்மையற்றவர் என்றோ, அசுத்தமானவர் என்றோ அழைக்கக் கூடாதென்று இறைவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.</verse>
				<verse number="29">எனவேதான் நான் அழைக்கப்பட்டபோது, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இங்கே வந்தேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று, நான் இப்போது தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="30">அப்போது கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன்பு நான் எனது வீட்டிலே, மாலை மூன்று மணியளவில் இதே நேரத்தில் மன்றாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று பிரகாசிக்கின்ற உடைகள் உடுத்திய ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான்.</verse>
				<verse number="31">அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாடுதலையும், நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் நினைவிற் கொண்டார்.</verse>
				<verse number="32">பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனை அழைத்து வர, யோப்பாவுக்கு ஆட்களை அனுப்பு. அவன் கடலோரமாய் வாழுகின்ற தோல் பதனிடும் சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்’ என்றான்.</verse>
				<verse number="33">எனவேதான் உடனடியாக உம்மை அழைத்து வர நான் ஆட்களை அனுப்பினேன். நீங்களும் தயவுடன் வருகை தந்தது நல்லதே. கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படி உமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கேட்கவே, இப்போது நாங்கள் எல்லோரும் இங்கே இறைவனுக்கு முன்பாக ஒன்றுகூடி வந்திருக்கிறோம்” என்றான்.</verse>
				<verse number="34">அப்போது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன்.</verse>
				<verse number="35">எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து சரியானதைச் செய்யும்போது அவர் அவர்களை ஏற்றுக்கொள்கின்றார்.</verse>
				<verse number="36">இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பிய செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் ஆண்டவராயிருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சமாதானத்தின் நற்செய்தியை அவர் அறிவித்தார்.</verse>
				<verse number="37">யோவான் ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கித்த பின் கலிலேயா தொடங்கி யூதேயா முழுவதிலும் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="38">இறைவன் எவ்விதம் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை பரிசுத்த ஆவியானவராலும், வல்லமையாலும் அபிஷேகம் செய்தார் என்பதையும், அவர் எவ்விதம் எங்கும் போய் நன்மை செய்தார் என்பதையும், இறைவன் தம்முடன் இருந்ததால் பிசாசின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்த எல்லோரையும் அவர் குணமாக்கினார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.</verse>
				<verse number="39">“யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசு கிறிஸ்து செய்த எல்லாவற்றுக்கும், நாங்கள் சாட்சிகளாய் இருக்கின்றோம். அவர்கள் இயேசுவை ஒரு சிலுவை மரத்தில் தொங்கவிட்டுக் கொலை செய்தார்கள்.</verse>
				<verse number="40">ஆனால் இறைவனோ மூன்றாம் நாளிலே அவரை இறந்தோரிலிருந்து எழுப்பி சிலருக்கு தென்படச் செய்தார்.</verse>
				<verse number="41">அவர் எல்லோருக்கும் தென்படவில்லை, ஆனால் இறைவனால் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட சாட்சிகளாகிய நாங்களே அவரைக் கண்டோம். அவர் இறந்தோரிலிருந்து எழுந்த பின்பு அவருடனே உணவு உட்கொண்டு அருந்திய நாங்களே அந்த சாட்சிகள்.</verse>
				<verse number="42">உயிர் வாழ்கின்றவர்களுக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாக தம்மையே இறைவன் நியமித்தார் என்று மக்களுக்குப் பிரசங்கித்து சாட்சி கூறும்படி இயேசு கிறிஸ்து எங்களுக்குக் கட்டளையிட்டார்.</verse>
				<verse number="43">அவரிடம் விசுவாசமாய் இருக்கும் ஒவ்வொருவனும் அவருடைய பெயரின் மூலமாக பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றான் என்று எல்லா இறைவாக்கினரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கின்றார்கள்” என்றான்.</verse>
				<verse number="44">பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கையில், அந்தச் செய்தியைக் கேட்ட எல்லோர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.</verse>
				<verse number="45">பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம் பெற்ற விசுவாசிகள், யூதரல்லாத மக்கள்மேலும் பரிசுத்த ஆவியானவர் நன்கொடையாக ஊற்றப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="46">ஏனெனில், அவர்கள் வேறு மொழிகளில் பேசுவதையும், இறைவனைத் துதிக்கின்றதையும் இவர்கள் கேட்டார்கள். அப்போது பேதுரு,</verse>
				<verse number="47">“இவர்கள் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறுவதை யாராவது தடை செய்யலாமா? நாம் பெற்றிருப்பது போலவே, இவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார்களே” என்று சொன்னான்.</verse>
				<verse number="48">எனவே, இயேசு கிறிஸ்துவின் பெயரிலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்குமாறு பேதுரு உத்தரவிட்டான். அப்போது அவர்கள், சில நாட்கள் தங்களுடன் தங்கியிருக்கும்படி பேதுருவைக் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">யூதரல்லாதவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும், யூதேயா முழுவதிலுமுள்ள சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.</verse>
				<verse number="2">எனவே பேதுரு எருசலேமுக்குப் போனபோது, விருத்தசேதனம் செய்துகொண்ட விசுவாசிகள் அவன்மீது குற்றம் சுமத்தி,</verse>
				<verse number="3">“நீ விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் சாப்பிட்டாயே” என்றார்கள்.</verse>
				<verse number="4">பேதுரு ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிக் கூறத் தொடங்கினான்:</verse>
				<verse number="5">“நான் யோப்பா பட்டணத்தில் மன்றாடிக் கொண்டிருந்தபோது, பரவசமடைந்து ஒரு தரிசனத்தைக் கண்டேன். பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, வானத்திலிருந்து இறக்கப்படுவதைக் கண்டேன். அது நான் இருந்த இடத்தை நோக்கி இறங்கி வந்தது.</verse>
				<verse number="6">நான் அதற்குள் பார்த்தபோது பூமியிலுள்ள நான்கு கால் மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், வானத்துப் பறவைகளையும் கண்டேன்.</verse>
				<verse number="7">அப்போது ஒரு குரல் என்னிடம், ‘பேதுரு எழுந்திரு. கொன்று சாப்பிடு’ என்று சொன்னது.</verse>
				<verse number="8">“நானோ, ‘இல்லை ஆண்டவரே! தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் நான் ஒருபோதும் உண்டதில்லை’ என்றேன்.</verse>
				<verse number="9">“வானத்திலிருந்து அந்தக் குரல் இரண்டாவது முறையும் என்னுடன் பேசி, ‘இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே’ என்றது.</verse>
				<verse number="10">இப்படி மூன்று முறை நடந்தன. பின்பு, அது திரும்பவும் வானத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது.</verse>
				<verse number="11">“அதேவேளையில் நான் தங்கியிருந்த வீட்டின் வாயிலில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="12">நான் அவர்களுடன் போகத் தயங்கக் கூடாது என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொன்னார். இந்த ஆறு சகோதரர்களும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் அந்த மனிதனுடைய வீட்டிற்குள் போனோம்.</verse>
				<verse number="13">அவனோ, எப்படியாக ஒரு இறைதூதன் தனது வீட்டிலே தனக்குக் காட்சியளித்தான் என்றும், அந்தத் தூதன், ‘பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனை அழைத்து வரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பு.</verse>
				<verse number="14">அந்த சீமோன் கொண்டுவரவிருக்கின்ற செய்தியினால், நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’ என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அவன் அறிவித்தான்.</verse>
				<verse number="15">“நான் பேசத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் தொடக்கத்தில் நமது மேல் இறங்கியதுபோலவே அவர்கள்மீதும் இறங்கினார்.</verse>
				<verse number="16">அப்போது, ‘யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்று ஆண்டவர் சொன்னதை நான் நினைவுபடுத்திக் கொண்டேன்.</verse>
				<verse number="17">எனவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இறைவன் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் இறைவனைத் தடுக்கின்ற வல்லமை எனக்கு உண்டோ?” என்றான்.</verse>
				<verse number="18">யூத விசுவாசிகள் இதைக் கேட்டபோது, அதற்குமேல் அவர்களுக்கு மறுப்பு ஏதும் இருக்கவில்லை, யூத விசுவாசிகள் இறைவனைத் துதித்து, “அப்படியானால் இறைவன் யூதரல்லாத மக்களுக்கும் வாழ்வு கொடுக்கும் மனந்திரும்புதலைக் கொடுத்திருக்கிறார்!” என்றார்கள்.</verse>
				<verse number="19">ஸ்தேவானுடைய மரணத்தின் பின் ஏற்பட்ட துன்புறுத்தலின் காரணமாக சிதறிப் பரவியவர்கள் பெனிக்கேயா, சீப்புரு தீவு, அந்தியோகியா வரை போனார்கள். அவர்களோ யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்.</verse>
				<verse number="20">ஆயினும் சீப்புரு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களில் சிலர் அந்தியோகியாவுக்குப் போய் கிரேக்கருடன் பேசத் தொடங்கி, ஆண்டவர் இயேசுவைக் குறித்த நற்செய்தியை அவர்களுக்குச் சொன்னார்கள்.</verse>
				<verse number="21">கர்த்தருடைய கரம் அவர்களுடன்கூட இருந்தது. பெரும் எண்ணிக்கையான மக்கள் விசுவாசித்து ஆண்டவரிடம் திரும்பினார்கள்.</verse>
				<verse number="22">இந்தச் செய்தி எருசலேமிலுள்ள திருச்சபையோரின் காதுக்கு எட்டியது. அப்போது அவர்கள் பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள்.</verse>
				<verse number="23">அவன் அங்கே போய்ச் சேர்ந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவனுடைய கிருபையின் செயல்களைக் கண்டான். அப்போது அவன் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் எல்லோரும் தங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினான்.</verse>
				<verse number="24">ஏனெனில் அவன் பரிசுத்த ஆவியானவரினாலும் விசுவாசித்தினாலும் நிறைந்த நல்ல மனிதனாக இருந்தான். இதனால் அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.</verse>
				<verse number="25">அதன்பின்பு பர்னபா சவுலைத் தேடி தர்சுவுக்குச் சென்றான்.</verse>
				<verse number="26">அவன் சவுலைக் கண்டுபிடித்து, அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். எனவே ஒரு வருடமாக பர்னபாவும் சவுலும் அங்குள்ள திருச்சபையுடன் சேர்ந்து, பெருந்தொகையான மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தியோகியாவிலேயே முதன்முதலில் சீடர்கள், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.</verse>
				<verse number="27">அந்நாட்களில் சில இறைவாக்கினர் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.</verse>
				<verse number="28">அவர்களில் ஒருவனான அகபு என்பவன் எழுந்து நின்று, உலகமெங்கும் ஒரு கடும் பஞ்சம் ஏற்படப் போகின்றது என்று பரிசுத்த ஆவியானவராலே முன்னறிவித்தான். அப்படியே ரோமப் பேரரசன் கிலவுதியுவின் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டது.</verse>
				<verse number="29">சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி, யூதேயாவில் வாழ்கின்ற சகோதரருக்கு உதவி செய்யத் தீர்மானித்தார்கள்.</verse>
				<verse number="30">பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள மூப்பர்களுக்கு நன்கொடையை அனுப்பி அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">அந்நாட்களில், ஏரோது அரசன் திருச்சபையைத் துன்புறுத்த எண்ணி சிலரைக் கைது செய்தான்.</verse>
				<verse number="2">அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளினால் வெட்டிக் கொலை செய்தான்.</verse>
				<verse number="3">அது யூதர்களை மகிழ்வித்தது என்று ஏரோது கண்டபோது, பேதுருவையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தான். இது புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகை நாட்களிலே நடந்தது.</verse>
				<verse number="4">ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் அடைத்து நான்கு காவற்குழுக்களால் காவல் செய்யப்படும்படி அவனை ஒப்படைத்தான். ஒவ்வொரு காவற்குழுவிலும் நான்கு இராணுவ வீரர்கள் இருந்தார்கள். பேதுருவைப் பஸ்கா பண்டிகையின் பின் வெளியே கொண்டுவந்து, பகிரங்கமாய் விசாரணை செய்வதற்கு ஏரோது எண்ணியிருந்தான்.</verse>
				<verse number="5">எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டிருந்தான், ஆனால் திருச்சபையாரோ அவனுக்காக இறைவனிடம் தீவிரமாக மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="6">ஏரோது, பேதுருவை விசாரணைக்குக் கொண்டுவர இருந்த நாளுக்கு முந்திய இரவிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், இரண்டு இராணுவ வீரர்களுக்கு நடுவில் நித்திரை செய்து கொண்டிருந்தான். வாசல் காவலரும் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="7">திடீரென, கர்த்தருடைய தூதன் ஒருவன் அங்கே தோன்றினான். அந்தக் காவல் அறையிலே ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி எழுப்பி, “விரைவாய் எழுந்திரு!” என்றான். உடனே பேதுருவின் கைகளைப் பிணைத்திருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன.</verse>
				<verse number="8">அப்போது தூதன் அவனிடம், “உனது ஆடைகளை அணிந்து, காலணிகளையும் போட்டுக்கொள்” என்றான். பேதுருவும் அப்படியே செய்தான். மேலும் தூதன் அவனிடம், “நீ உனது மேலாடையைப் போர்த்திக்கொண்டு, என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.</verse>
				<verse number="9">பேதுரு சிறையைவிட்டு அவனைப் பின்தொடர்ந்தான். ஆனால் அந்தத் தூதன் செய்வதெல்லாம் உண்மையாகவே நடக்கின்றன என்று அவன் அறியாதிருந்தான். அவனோ, தான் ஒரு தரிசனம் காண்பதாகவே எண்ணிக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="10">அவர்கள் முதலாம் காவலர் நிலையத்தையும் இரண்டாம் காவலர் நிலையத்தையும் கடந்து பட்டணத்திற்குப் போகின்ற இரும்பு வாசற்கதவு வரை வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்து அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் அதற்கூடாகக் கடந்து வெளியே போனார்கள். அவர்கள் ஒரு வீதியின் ஊடாக நடந்து சென்றபோது திடீரென அந்தத் தூதன் பேதுருவைவிட்டுச் சென்றான்.</verse>
				<verse number="11">அப்போது பேதுரு சுயநினைவடைந்து, “கர்த்தர் தமது தூதனை அனுப்பி ஏரோதுவின் பிடியிலிருந்தும், யூதர்கள் செய்ய நினைத்துக் கொண்டிருந்த எல்லாக் காரியங்களிலிருந்தும் என்னை விடுவித்திருக்கிறார் என்பதை இப்போது சந்தேகமின்றி அறிந்துகொண்டேன்” என்றான்.</verse>
				<verse number="12">அவன் இதை உணர்ந்தவுடனே மாற்கு என அழைக்கப்பட்ட யோவான் என்பவனின் தாயாகிய மரியாளின் வீட்டிற்குச் சென்றான். அங்கே, அநேக மக்கள் ஒன்றுகூடி மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="13">பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டியபோது அது யாரெனப் பார்ப்பதற்காக ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண் கதவருகே வந்தாள்.</verse>
				<verse number="14">அது பேதுருவின் குரல் என அவள் அறிந்ததும் மிகவும் மனமகிழ்ச்சியடைந்து, கதவையும் திறக்காமலே திரும்பி ஓடிப் போய், “பேதுரு வாசலருகே நிற்கிறார்!” என்று மற்றவர்களுக்கு பரபரப்புடன் சொன்னாள்.</verse>
				<verse number="15">அதற்கு அவர்கள் அவளிடம், “உனக்குப் பைத்தியம்” என்றார்கள். ஆனால் அவளோ தொடர்ந்து வாசலில் நிற்பது பேதுருவே என்று சொன்னபோது, “அப்படியானால், இது அவருடைய தூதனாயிருக்கும்” என்றார்கள்.</verse>
				<verse number="16">ஆனால் பேதுருவோ தொடர்ந்து தட்டிக் கொண்டே நின்றான். அவர்கள் கதவைத் திறந்து அவனைக் கண்டபோது வியப்படைந்தார்கள்.</verse>
				<verse number="17">அவர்களை அமைதியாய் இருக்கும்படி பேதுரு தன் கையினால் சைகை காட்டி, கர்த்தர் தன்னை எவ்விதமாய் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்பதை விபரமாய்ச் சொன்னான். பின்பு அவன், “இதை யாக்கோபுக்கும், மற்றச் சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்று சொல்லி, வேறொரு இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.</verse>
				<verse number="18">மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று இராணுவ வீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று.</verse>
				<verse number="19">ஏரோது அவனை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்காததனால், காவலரை குறுக்குவிசாரணை செய்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்தான். அப்போது ஏரோது, யூதேயாவிலிருந்து செசரியாவுக்குப் போய் அங்கே சில காலம் தங்கியிருந்தான்.</verse>
				<verse number="20">தீரு மற்றும் சீதோன் மக்கள் மேல் அவன் கடும் கோபமாக இருந்தான். அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, அவனைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அரசனின் அந்தரங்க பணியாளனான பிலாஸ்து என்பவனின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அரசனோடு சமாதானம் செய்ய விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் தமது உணவு விநியோகத்துக்காக ஏரோது அரசனின் நாட்டையே பெரிதும் சார்ந்திருந்தார்கள்.</verse>
				<verse number="21">குறித்த நாளிலே ஏரோது அரசருக்குரிய உடைகளை அணிந்து, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு பகிரங்க உரை ஒன்றை நிகழ்த்தினான்.</verse>
				<verse number="22">அப்போது அவர்கள், “இது ஒரு மனிதனின் குரல் அல்ல, தெய்வத்தின் குரல்” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.</verse>
				<verse number="23">உடனே கர்த்தருடைய தூதனொருவன் அவனை அடித்து வீழ்த்தினான். ஏனெனில், ஏரோது இறைவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆகவே, அவன் புழுக்களால் அரிக்கப்பட்டு மரணித்தான்.</verse>
				<verse number="24">ஆனால், இறைவனுடைய வார்த்தையோ தொடர்ந்தும் பெருகிப் பரவியது.</verse>
				<verse number="25">பர்னபாவும் சவுலும் தங்களுடைய பணியை முடித்து, மாற்கு என அழைக்கப்பட்ட யோவானையும் அழைத்துக்கொண்டு எருசலேமிலிருந்து திரும்பிப் போனார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூகி, இளவரசன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினரும் ஆசிரியர்களுமாக இருந்தார்கள்.</verse>
				<verse number="2">அவர்கள் கர்த்தரை வழிபட்டும் உபவாசித்தும் இருந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும், நான் அழைத்த ஊழியத்திற்காக எனக்கென வேறுபிரித்து விடுங்கள்” என்றார்.</verse>
				<verse number="3">எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடிய பின் தங்கள் கைகளை அந்த இருவர் மேலும் வைத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.</verse>
				<verse number="4">அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு செலூக்கியாவுக்குப் போய், அங்கிருந்து கப்பல் மூலமாக சீப்புரு தீவுக்குப் போனார்கள்.</verse>
				<verse number="5">அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது அங்குள்ள யூத ஜெபஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களின் உதவியாளனாய் அவர்களோடு இருந்தான்.</verse>
				<verse number="6">அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், போலி இறைவாக்கினனுமான பர்யேசு என்னும் ஒரு மனிதனைச் சந்தித்தார்கள்.</verse>
				<verse number="7">அவன், செர்கியு பவுல் என்ற ஆளுநருடன் இருந்த ஒருவன். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்து வர ஆளனுப்பினான்.</verse>
				<verse number="8">ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடை செய்ய முயற்சித்தான். (எலிமா என்றால், மந்திரவாதி என்று அர்த்தம்.)</verse>
				<verse number="9">அப்போது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, எலிமாவை நேரே உற்றுப் பார்த்துச் சொன்னதாவது,</verse>
				<verse number="10">“பிசாசின் பிள்ளையே, நீதியான எல்லாவற்றிற்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும், தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நீதியான வழிகளைப் புரட்டுவதை, நீ ஒருபோதும் நிறுத்த மாட்டாயோ?</verse>
				<verse number="11">இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கின்றது. நீ இப்போது பார்வையற்றவனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காண மாட்டாய்” என்றான். உடனே அவன் பார்வை மங்கி, இருள் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான்.</verse>
				<verse number="12">நடந்ததை அந்த அதிபதி கண்டபோது அவன் கர்த்தருடைய போதனையைக் குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.</verse>
				<verse number="13">பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடன் இருந்தவர்களும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குப் போனார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிச் செல்வதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுச் சென்றான்.</verse>
				<verse number="14">அவர்கள் பெர்கேவிலிருந்து பிசீதியாவைச் சேர்ந்த அந்தியோகியாவுக்குப் போனார்கள். ஒரு ஓய்வுநாளிலே அவர்கள் ஜெபஆலயத்திற்குள்ளே போய் உட்கார்ந்தார்கள்.</verse>
				<verse number="15">நீதிச்சட்டமும் இறைவாக்குகளும் வாசிக்கப்பட்ட பின்பு ஜெபஆலயத் தலைவர்கள் அவர்களுக்குச் செய்தி அனுப்பி, “சகோதரரே, உங்களிடம் மக்களை உற்சாகப்படுத்தக் கூடிய செய்தி ஏதும் இருந்தால் பேசுங்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="16">பவுல் எழுந்து நின்று, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிவிட்டுச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மனிதரே, இறைவனுக்குப் பயப்படுகின்ற மற்றவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.</verse>
				<verse number="17">இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது முற்பிதாக்களைத் தெரிவு செய்தார். அவர் அந்த மக்களை அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால் அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார்.</verse>
				<verse number="18">ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைநிலத்திலே அவர்களை சகித்துக் கொண்டார்.</verse>
				<verse number="19">கானானில் இருந்த ஏழு இனத்தவர்களை அழித்து, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்.</verse>
				<verse number="20">இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் எடுத்தன. “இதற்குப் பின், இறைவாக்கினன் சாமுவேலின் காலம் வரைக்கும் இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார்.</verse>
				<verse number="21">பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்போது அவர் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.</verse>
				<verse number="22">அவர் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவர் தாவீதைக் குறித்து சாட்சியாக, ‘ஈசாயின் மகனான தாவீது, என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன். அவன் எவற்றை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகின்றேனோ அவை எல்லாவற்றையும் அவன் செய்வான்’ என்று சொன்னார்.</verse>
				<verse number="23">“இந்த தாவீதினுடைய வழித்தோன்றல்களிலிருந்தே தாம் வாக்குறுதி அளித்தபடி, இயேசு என்னும் இரட்சகரை இறைவன் இஸ்ரயேலுக்கு அளித்தார்.</verse>
				<verse number="24">இயேசுவின் வருகைக்கு முன்னதாக மனந்திரும்புதலைக் குறித்தும் ஞானஸ்நானத்தைக் குறித்தும் எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் யோவான் பிரசங்கித்தான்.</verse>
				<verse number="25">யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப் பின் வருகின்றார். அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’</verse>
				<verse number="26">“சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கின்ற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="27">எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும் இயேசுவை யாரென அறியாதிருந்தனர். ஆயினும் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததன் மூலமாக ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள்.</verse>
				<verse number="28">அவருக்கு மரணதண்டனை கொடுக்கக் கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதும், அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="29">அவரைக் குறித்து எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்து முடித்த பின்பு அவருடைய உடலை சிலுவை மரத்திலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள்.</verse>
				<verse number="30">ஆனால் இறைவனோ அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்.</verse>
				<verse number="31">கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வரை வந்திருந்தவர்களுக்கு இயேசு பல நாட்கள் தென்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="32">“நாங்கள் உங்களுக்கு சொல்லும் நற்செய்தி என்னவெனில், இறைவன் நமது முற்பிதாக்களுக்கு வாக்குறுதி அளித்ததை,</verse>
				<verse number="33">இயேசுவை உயிருடன் எழுப்பியதன் மூலமாக அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இதை பற்றியே இரண்டாம் சங்கீதத்தில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது: “ ‘நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’</verse>
				<verse number="34">ஆனால் அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதைக் குறித்தோ வேதவசனங்களில்: “ ‘தாவீதுக்கு வாக்குறுதி செய்யப்பட்ட பரிசுத்தமானதும், நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன். ’ என இறைவன் செல்லியிருக்கிறார்.</verse>
				<verse number="35">அப்படியே இது இன்னுமொரு இடத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது: “ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காண நீர் விடமாட்டீர்.’</verse>
				<verse number="36">“தாவீதோ இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவர் மரணித்தாரே; அவர் தனது முற்பிதாக்களுடன் அடக்கம் பண்ணப்பட்டு, அவரது உடலும் அழிந்து போனது.</verse>
				<verse number="37">ஆனால் மரணித்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோ, அழிவைக் காணவில்லை.</verse>
				<verse number="38">“ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு’ என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்பதை, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.</verse>
				<verse number="39">மோசேயினுடைய நீதிச்சட்டத்தின் மூலமாய் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாக்கப்பட்டு, நீதிமான்கள் ஆக்கப்பட முடியாதிருந்த ஒவ்வொருவரும் இயேசுவை விசுவாசிப்பதன் மூலமாய் நீதிமான்களாக ஆக்கப்படுகிறார்கள்.</verse>
				<verse number="40">ஆயினும் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள்:</verse>
				<verse number="41">“ ‘ஏளனம் செய்வோரே, பாருங்கள்! நீங்கள் அதிசயப்படுங்கள், ஒழிந்து போங்கள். ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப் போகின்றேன். அந்தக் காரியத்தைப்பற்றி யாராவது உங்களுக்குச் சொன்னாலும் நீங்கள் ஒருபோதும் அதை நம்ப மாட்டீர்கள்’ ” என்று பவுல் சொன்னான்.</verse>
				<verse number="42">பவுலும் பர்னபாவும் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக் குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள்.</verse>
				<verse number="43">கூடியிருந்த மக்கள் கலைந்து போன பின் அநேக யூதர்களும், யூத மார்க்கத்தைத் தழுவிய பக்தியுள்ளோரும் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். பவுலும் பர்னபாவும் தங்களோடு வந்தவர்களுடன் பேசி அவர்களை இறைவனுடைய கிருபையில் தொடர்ந்து இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள்.</verse>
				<verse number="44">அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள எல்லோரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்குக் கூடியிருந்தார்கள்.</verse>
				<verse number="45">மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருப்பதை யூதர்கள் கண்டபோது பொறாமையினால் நிறைந்து பவுலை நிந்தித்துப் பேசி பவுல் கூறியவற்றுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="46">அப்போது பவுலும் பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் முதலாவதாக உங்களுக்கே அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கின்றது. ஆனால் நீங்கள் அதனை நிராகரித்து, நித்திய வாழ்வுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருப்பதனால், நாங்கள் திசைமாறி இப்போது யூதரல்லாத மக்களிடம் போகின்றோம்.</verse>
				<verse number="47">ஏனெனில், “ ‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும் என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி, நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்’ என்ற வசனத்தின்படி, கர்த்தர் எங்களுக்கு இதையே கட்டளையிட்டுள்ளார்” என்றார்கள்.</verse>
				<verse number="48">யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள். நித்திய வாழ்வுக்காக நியமிக்கப்பட்ட எல்லோரும் விசுவாசித்தார்கள்.</verse>
				<verse number="49">அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது.</verse>
				<verse number="50">ஆனால் யூதர்களோ இறைவனுக்குப் பயந்து நடந்த உயர் மதிப்புக்குரிய பெண்களையும், அந்தப் பட்டணத்திலுள்ள முதன்மை வாய்ந்த மனிதர்களையும் தூண்டிவிட்டு பவுலுக்கும் பர்னபாவுக்கும் துன்புறுத்தலை ஏற்படுத்தி, அந்தப் பிரதேசத்திலிருந்து அவர்களைத் துரத்திவிட்டார்கள்.</verse>
				<verse number="51">எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, தங்கள் காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="52">சீடர்களோ மனமகிழ்ச்சியினாலும், பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">பவுலும் பர்னபாவும் தமது வழக்கப்படியே, இக்கோனியாவிலும் யூத ஜெபஆலயத்திற்குப் போனார்கள். அங்கே அவர்கள் மிகுந்த ஆற்றலுடன் பேசினார்கள். அதனால் பெருந்தொகையான யூதர்களும் கிரேக்கர்களும் விசுவாசித்தார்கள்.</verse>
				<verse number="2">ஆனால் விசுவாசிக்க மறுத்த யூதரோ, யூதரல்லாத மக்களைத் தூண்டி சகோதரருக்கு எதிராக அவர்களுடைய மனங்களைக் கெடுத்தார்கள்.</verse>
				<verse number="3">ஆயினும் பவுலும் பர்னபாவும் கர்த்தருக்காகத் துணிவுடன் பேசிக்கொண்டு பல நாட்களை அங்கே கழித்தார்கள். கர்த்தர் அவர்களுக்கு அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்யக்கூடிய ஆற்றலைக் கொடுத்து தமது கிருபையின் செய்தியை உறுதிப்படுத்தினார்.</verse>
				<verse number="4">அந்தப் பட்டணத்தின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள். சிலர் யூதருடைய பக்கமும், மற்றவர்கள் அப்போஸ்தலர்களின் பக்கமும் சாய்ந்து கொண்டார்கள்.</verse>
				<verse number="5">பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும் அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதர்களும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="6">ஆனால் பவுலும் பர்னபாவும் அதைப்பற்றி அறிந்து லிக்கவோனியா நாட்டைச் சேர்ந்த லீஸ்திரா, தெர்பை ஆகிய பட்டணங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திற்கும் தப்பியோடினார்கள்.</verse>
				<verse number="7">அங்கே அவர்கள் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார்கள்.</verse>
				<verse number="8">லீஸ்திராவிலே, கால் ஊனமுற்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் பிறப்பிலேயே ஊனமுற்றிருந்ததால், ஒருபோதும் எழுந்து நடந்ததே இல்லை.</verse>
				<verse number="9">பவுல் பேசிக் கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். பவுல் அவனை உற்று நோக்கி அவனுக்குக் குணம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கின்றது என்று கண்டான்.</verse>
				<verse number="10">எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். உடனே அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.</verse>
				<verse number="11">கூடியிருந்தவர்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள்.</verse>
				<verse number="12">அவர்கள் பர்னபாவை கிரேக்க தெய்வமான சீயஸ் என்றும், பவுல் முக்கிய பேச்சாளனாய் இருந்ததால், அவனை எர்மஸ் என்றும் அழைத்தார்கள்.</verse>
				<verse number="13">அப்போது பட்டணத்திற்கு வெளியே இருந்த சீயஸ் தெய்வத்தின் கோயிலைச் சேர்ந்த மதகுரு, காளைகளையும் பூமாலைகளையும் பட்டணத்தின் வாசல்கள் அருகே கொண்டுவந்தான். ஏனெனில் அவனும், கூடியிருந்த மக்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலிகளைச் செலுத்த விரும்பினார்கள்.</verse>
				<verse number="14">அப்போஸ்தலர்களான பர்னபாவும் பவுலும் இதைக் குறித்துக் கேள்விப்பட்டபோது அவர்கள் அதிர்ச்சியடைந்து, தங்கள் உடைகளைக் கிழித்து, கூட்டத்துக்குள் சத்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள்.</verse>
				<verse number="15">“நண்பர்களே, நீங்கள் ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்? நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்களே. நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். நீங்களும் இந்தப் பயனற்ற காரியங்களைக் கைவிட்டு, உயிருள்ள இறைவனிடம் திரும்ப வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கின்றோம். ஏனெனில் அவரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்.</verse>
				<verse number="16">கடந்த காலத்தில் அவர் எல்லா இன மக்களையும் தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார்.</verse>
				<verse number="17">ஆயினும், அவர் தம்மைக் குறித்த எந்த ஒரு சான்றும் இல்லாமல் விட்டுவிடவில்லை: அவர் வானத்திலிருந்து உங்களுக்கு மழையையும், பருவ காலங்களில் அதற்குரிய விளைச்சலையும் கொடுத்து, தமது நன்மையைக் காண்பித்திருக்கிறார். அவர் நிறைவான உணவை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தினால் நிரப்பியிருக்கிறார்” என்றார்கள்.</verse>
				<verse number="18">இந்த வார்த்தைகளைச் சொல்லியும்கூட, கூடியிருந்த மக்கள் தங்களுக்குப் பலியிடுவதைத் தடுப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது.</verse>
				<verse number="19">அப்போது அந்தியோகியாவிலும், இக்கோனியாவிலுமிருந்து வந்த சில யூதர்கள், மக்கள் கூட்டத்தைத் தங்கள் பக்கமாய்த் திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் பவுலின் மேல் கல்லெறிந்து, அதனால் அவன் இறந்துவிட்டதாக எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள்.</verse>
				<verse number="20">ஆனால் சீடர்கள் வந்து அவனைச் சுற்றி நின்றபோது, அவன் எழுந்து திரும்பவும் பட்டணத்திற்குள் சென்றான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குப் போனார்கள்.</verse>
				<verse number="21">பவுலும் பர்னபாவும் அந்தப் பட்டணத்திலே நற்செய்தியைப் பிரசங்கித்து, பெருந்தொகையானவர்களைச் சீடராக்கினார்கள். பின்பு அவர்கள் லீஸ்திராவுக்கும், இக்கோனியாவுக்கும், அந்தியோகியாவுக்கும் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="22">அங்கே அவர்கள் சீடர்களைப் பலப்படுத்தி, “இறைவனுடைய அரசுக்குள் பிரவேசிக்க, நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்று சொல்லி விசுவாசத்திற்கு உண்மையாய் இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.</verse>
				<verse number="23">பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களை நியமித்து, உபவாசத்துடன் மன்றாடி, தாங்கள் நம்பிக்கை வைத்திருந்த கர்த்தருக்கு அந்த மூப்பர்களை ஒப்புவித்தார்கள்.</verse>
				<verse number="24">அவர்கள் பிசீதியா வழியாகப் போய், பின்பு பம்பிலியாவுக்கு வந்தார்கள்.</verse>
				<verse number="25">அவர்கள் பெர்கே பட்டணத்தில் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="26">அவர்கள் அத்தலியாவிலிருந்து கப்பல் மூலமாக அந்தியோகியாவுக்குத் திரும்பி வந்தார்கள். அவர்கள் பணி செய்யத் தொடங்க முன் இங்கேதான் இறைவனுடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். இப்போது அதை நிறைவேற்றி முடித்தவர்களாக திரும்பி வந்திருந்தார்கள்.</verse>
				<verse number="27">அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது திருச்சபையை ஒன்றுகூட்டி, தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். இறைவன் எவ்விதமாக விசுவாசத்தின் கதவை யூதரல்லாத மக்களுக்கும் திறந்தார் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார்கள்.</verse>
				<verse number="28">அங்கே அவர்கள் அதிக நாட்கள் சீடர்களுடனே தங்கினார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">சிலர் யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்து, “மோசே போதித்த முறைப்படி நீங்கள் விருத்தசேதனம் செய்யாவிட்டால் இரட்சிக்கப்பட முடியாது” என அங்கிருந்த சகோதரருக்குப் போதித்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="2">இதனால் அவர்களுக்கும், பவுல், பர்னபா ஆகியோருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் ஏற்பட்டன. எனவே இந்தக் கேள்வியைக் குறித்து அப்போஸ்தலர்களையும் மூப்பரையும் கலந்து பேசும்படி எருசலேமுக்குப் போவதற்கென பவுலும் பர்னபாவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுடனே சில விசுவாசிகளும் நியமிக்கப்பட்டார்கள்.</verse>
				<verse number="3">இப்படியாக திருச்சபை அவர்களை வழியனுப்பி வைத்தது. அவர்கள் பெனிக்கேயா வழியாகவும், சமாரியா வழியாகவும் பயணம் செய்யும்போது யூதரல்லாத மக்கள் எவ்விதம் கர்த்தரிடம் திரும்பி இருக்கின்றார்கள் என்பதை அங்கிருந்த சகோதர சகோதரிகளுக்கு அறிவித்தார்கள். இந்தச் செய்தி அவர்கள் எல்லோருக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது.</verse>
				<verse number="4">அவர்கள் எருசலேமைச் சென்றடைந்தபோது திருச்சபையினாலும் அப்போஸ்தலர்களினாலும் மூப்பர்களினாலும் வரவேற்கப்பட்டார்கள். பவுலும் பர்னபாவும் தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள்.</verse>
				<verse number="5">அப்போது பரிசேயர்கள் பிரிவிலிருந்து விசுவாசிகளாய் ஆகியிருந்தவர்களில் சிலர் எழுந்து நின்று, “யூதரல்லாத மக்களும் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டு மோசேயின் நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றார்கள்.</verse>
				<verse number="6">அப்போது அப்போஸ்தலர்களும், மூப்பர்களும் இந்த விடயத்தைக் குறித்து ஆலோசிப்பதற்கு ஒன்றுகூடினார்கள்.</verse>
				<verse number="7">அதிக நேரம் கலந்துரையாடிய பின்பு, பேதுரு எழுந்து நின்று அவர்களிடம் பேசத் தொடங்கினான்: “சகோதரரே, இறைவன் உங்கள் மத்தியிலிருந்து சிறிது காலத்துக்கு முன்பு ஒரு தெரிவைச் செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதரல்லாத மக்களும் என் உதடுகளிலிருந்து நற்செய்தியைக் கேட்டு விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக அவர் என்னைத் தெரிவு செய்தார்.</verse>
				<verse number="8">இருதயத்தை அறிகிற இறைவன், நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்தது போல் யூதரல்லாத மக்களுக்கும் கொடுத்து, அவர்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பித்தார்.</verse>
				<verse number="9">இறைவன் அவர்களுடைய இருதயங்களையும் விசுவாசத்தினால் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் காட்டாதிருந்தார்.</verse>
				<verse number="10">இப்படியிருக்க, நம்மாலோ நம் முற்பிதாக்களாலோ சுமக்க முடியாத நுகத்தை, யூதரல்லாத விசுவாசிகளின் கழுத்தின் மேல் சுமத்தி, இறைவனை ஏன் சோதிக்கிறீர்கள்?</verse>
				<verse number="11">உண்மையில் நாங்களும் அவர்களைப் போலவே ஆண்டவராகிய இயேசுவின் கிருபையின் மூலமே இரட்சிக்கப்படுகின்றோம் என்றே விசுவாசிக்கின்றோம்” என்றான்.</verse>
				<verse number="12">பின்பு பர்னபாவும் பவுலும் தங்கள் மூலமாக, யூதரல்லாத மக்கள் மத்தியில் இறைவன் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது கூடியிருந்த அனைவரும் மௌனமாய் இருந்தார்கள்.</verse>
				<verse number="13">அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு பேசத் தொடங்கினான்: “சகோதரரே, நான் சொல்வதைக் கேளுங்கள்.</verse>
				<verse number="14">எப்படியாக இறைவன் முதன்முறையாக யூதரல்லாத மக்களிலிருந்து தமது பெயருக்கென்று மக்களைத் தெரிவு செய்தார் என்பதை சீமோன் நமக்கு விபரமாய் சொல்லியிருக்கின்றான்.</verse>
				<verse number="15">இறைவாக்கினரின் வார்த்தைகளும் இவற்றிற்கு ஒத்திருக்கின்றன, அதன்படி:</verse>
				<verse number="16">“ ‘இதற்குப் பின்பு நான் திரும்பி வந்து, விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் கட்டுவேன். அதில் பாழடைந்து போனவற்றைக் கட்டுவேன். நான் அதைத் திரும்பவும் புதுப்பிப்பேன்.</verse>
				<verse number="17">அப்போது மற்றைய மக்கள் கர்த்தரைத் தேடுவார்கள், எனது பெயரை வைத்துக் கொண்டிருக்கிற யூதரல்லாத மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவார்கள் என்று இவற்றைச் செய்கின்ற கர்த்தர் சொல்கின்றார்’ என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="18">‘இதையெல்லாம் அவர் வெகு காலத்திற்கு முன் ஆதியிலிருந்தே அறிந்து வைத்திருக்கிறார்.’</verse>
				<verse number="19">“எனவே யூதரல்லாத மக்கள் இறைவனிடம் திரும்புகையில் நாம் அவர்களுக்கு அதிக சிரமங்களை அளிக்கக்கூடாது. இதுவே எனது தீர்மானம்.</verse>
				<verse number="20">ஆயினும், அவர்கள் விக்கிரகங்களினால் கறைப்பட்ட உணவிலிருந்தும், பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்தும் மற்றும் இரத்தம் சிந்தப்படாமல் நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடுவதிலிருந்தும், இரத்தத்தைச் சாப்பிடுவதிலிருந்தும் தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="21">ஏனெனில் ஒவ்வொரு பட்டணத்திலும், முற்காலத்திலிருந்து மோசேயின் இந்த நீதிச்சட்டங்கள் பிரசங்கிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒவ்வொரு ஓய்வுநாளிலும், ஜெபஆலயங்களில் அவை வாசிக்கப்படுகின்றனவே” என்றான்.</verse>
				<verse number="22">பின்பு அப்போஸ்தலர்களும், மூப்பர்களும் திருச்சபையோர் எல்லோரும் தங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து அவர்களை பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதற்காக அவர்கள் சகோதரர் மத்தியில் தலைவர்களாய் இருந்த பர்சபா எனப்பட்ட யூதாவையும் சீலாவையும் தெரிந்து கொண்டார்கள்.</verse>
				<verse number="23">அவர்களுடன் இவ்விதமாய் ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்: அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு, உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் எழுதுவதாவது: உங்களுக்கு வாழ்த்துதல்கள்.</verse>
				<verse number="24">எமது அதிகாரம் பெறாத சிலர், எங்களிடமிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்றும், தாங்கள் சொன்ன காரியங்களினாலே அவர்கள் உங்களுக்கு மனக் குழப்பத்தை உண்டாக்கி உங்களைக் குழப்பமடையச் செய்திருக்கின்றார்கள் என்றும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.</verse>
				<verse number="25">எனவே, நாங்கள் எல்லோரும் எங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து எங்கள் அன்புக்குரியவர்களான பர்னபாவுடனும், பவுலுடனும் அனுப்புவதற்கு இணங்கியிருக்கிறோம்.</verse>
				<verse number="26">இவர்கள், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்.</verse>
				<verse number="27">எனவே நாங்கள் எழுதுவதை வாயின் வார்த்தையினால் உறுதிப்படுத்தும்படி யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம்.</verse>
				<verse number="28">கீழ்க்காணும் முக்கியமானவற்றைத் தவிர, வேறு எந்தப் பாரத்தையும் உங்கள் மீது சுமத்தாமல் இருப்பது நலமென்று பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் தோன்றியது.</verse>
				<verse number="29">விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவிலிருந்தும், இரத்தத்தைச் சாப்பிடுவதிலிருந்தும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடுவதிலிருந்தும் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்தும் உங்களை நீங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது. உங்களுக்கு நலமுண்டாவதாக.</verse>
				<verse number="30">எனவே அவர்கள் வழியனுப்பப்பட்டு அந்தியோகியாவுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் திருச்சபையை ஒன்றுகூட்டி அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="31">அந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வாசித்து மக்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.</verse>
				<verse number="32">யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்தார்கள். எனவே அவர்கள் அந்த சகோதரர்களை ஊக்கப்படுத்துவதற்கும் தைரியப்படுத்துவதற்கும் பல காரியங்களைச் சொன்னார்கள்.</verse>
				<verse number="33">சிறிது காலம் அவர்கள் அங்கு தங்கியிருந்த பின் அங்கிருந்த சகோதரர்களது சமாதான ஆசீர்வாதத்துடன் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="34">ஆனால் சீலாவோ, அங்கேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான்.</verse>
				<verse number="35">பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சிறிது காலம் தங்கியிருந்து அங்கே வேறு பலருடன் சேர்ந்து கர்த்தரின் வார்த்தையை போதித்துக்கொண்டும், பிரசங்கித்துக் கொண்டும் இருந்தார்கள்.</verse>
				<verse number="36">சிறிது காலத்தின் பின், பவுல் பர்னபாவிடம், “நாம் கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கித்த எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்களிடம் திரும்பவும் போய் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றான்.</verse>
				<verse number="37">பர்னபா, மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போக விரும்பினான்.</verse>
				<verse number="38">ஆனால் பவுலோ, மாற்கு பம்பிலியாவிலே ஊழியத்தின் இடைநடுவிலே தங்களை விட்டுவிட்டு தங்களுடன் வராமல் போனதால் அவனை அழைத்துக்கொண்டு போவது நல்லதல்ல என்று நினைத்தான்.</verse>
				<verse number="39">இது குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்து போனார்கள். பர்னபா, மாற்குவை அழைத்துக்கொண்டு கப்பல் மூலமாக சீப்புரு தீவுக்குச் சென்றான்.</verse>
				<verse number="40">பவுலோ சீலாவைத் தெரிந்தெடுத்து, சகோதரர்களால் கர்த்தருடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு புறப்பட்டுச் சென்றான்.</verse>
				<verse number="41">பவுல் சீரியா, சிலிசியா வழியாகப் போய் திருச்சபைகளைப் பலப்படுத்தினான்.</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குச் சென்றான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன்.</verse>
				<verse number="2">லீஸ்திராவிலும், இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்கள், அவனைக் குறித்து நல்ல அபிப்பிராயம் உடையவர்களாய் இருந்தார்கள்.</verse>
				<verse number="3">பவுல் அந்தப் பயணத்திலே அவனையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போக விரும்பினான். எனவே அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் எல்லோரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள்.</verse>
				<verse number="4">அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பரும் எடுத்த தீர்மானங்களை அங்குள்ளவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.</verse>
				<verse number="5">இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பலமடைந்து நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின.</verse>
				<verse number="6">பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகளைக் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதபடி பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை செய்திருந்தார்.</verse>
				<verse number="7">அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது பித்தினியாவுக்குப் போக முயற்சி செய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை.</verse>
				<verse number="8">எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து துரோவா பட்டணத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="9">அந்த இரவிலே பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவி செய்யும்” என்று கெஞ்சிக் கேட்டான்.</verse>
				<verse number="10">பவுல் இந்த தரிசனத்தைக் கண்ட பின்பு உடனே நாங்கள் மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம்.</verse>
				<verse number="11">நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலில் புறப்பட்டு நேரே சாமோத்திராக்கேயை நோக்கிப் போனோம். மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம்.</verse>
				<verse number="12">அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற பிரதேசமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா மாவட்டத்தின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம்.</verse>
				<verse number="13">ஓய்வுநாளிலே மன்றாடுவதற்கு ஒரு இடம் இருக்குமென்று எதிர்பார்த்து பட்டணத்தின் வாயிலுக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். நாங்கள் அங்கே உட்கார்ந்து அங்கு கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம்.</verse>
				<verse number="14">நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக் கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச் சேர்ந்த அவள் செம்பட்டுத் துணி விற்பனை செய்கின்றவள். அவள் இறைவனை ஆராதிக்கின்றவளாயும் இருந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார்.</verse>
				<verse number="15">அவளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றபின் அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், என்னுடைய வீட்டில் வந்து தங்குங்கள்” என்று சொல்லி எங்களை இணங்க வைத்தாள்.</verse>
				<verse number="16">ஒருமுறை நாங்கள் மன்றாடும் இடத்திற்கு போய்க் கொண்டிருக்கும்போது முன்னறிவிக்கும் தீய ஆவியை தனக்குள்ளே கொண்டிருந்த ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவள் குறிசொல்வதன் மூலமாக, தனது எஜமானர்களுக்குப் பெரும் இலாபத்தைப் பெற்றுக் கொடுத்தாள்.</verse>
				<verse number="17">அந்தப் பெண், பவுலையும் எங்களையும் விடாமல் பின்தொடர்ந்து வந்து, “இவர்கள் அதி உன்னதமான இறைவனின் ஊழியர்கள். இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.</verse>
				<verse number="18">அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்து கொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் எரிச்சலடைந்து, அந்த ஆவியிடம், “இயேசு கிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளைவிட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்த ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது.</verse>
				<verse number="19">அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிப்பதற்கான தங்களின் வாய்ப்பு இல்லாது போய் விட்டது என்பதை அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தை கூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக் கொண்டுவந்தார்கள்.</verse>
				<verse number="20">அவர்கள் இவர்களை மாவட்ட நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர்கள் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள்.</verse>
				<verse number="21">ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="22">அப்போது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். மாவட்ட நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.</verse>
				<verse number="23">அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்த பின் பவுலையும் சீலாவையும் சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள்.</verse>
				<verse number="24">இந்த கட்டளைகளைப் பெற்ற அந்தச் சிறைக்காவலன், பவுலையும் சீலாவையும் உட்சிறையில் போட்டு அவர்களுடைய கால்களை மர விலங்குகளில் மாட்டி வைத்தான்.</verse>
				<verse number="25">ஏறக்குறைய நள்ளிரவு வேளை பவுலும் சீலாவும் மன்றாடிக் கொண்டும் இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருந்தார்கள். சிறையிலிருந்த மற்றைய கைதிகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="26">திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அத்திவாரங்கள் அசைந்தன. அப்போது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன.</verse>
				<verse number="27">சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவி, தற்கொலை செய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான்.</verse>
				<verse number="28">ஆனால் பவுலோ அவனை நோக்கிச் சத்தமிட்டு, “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கின்றோம்” என்றான்.</verse>
				<verse number="29">அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச் செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக் கொண்டு பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தான்.</verse>
				<verse number="30">அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமார் அவர்களே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="31">அதற்கு அவர்கள், “ஆண்டவர் இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். உன்னோடு உனது குடும்பத்தவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்றார்கள்.</verse>
				<verse number="32">பின்பு அவர்கள் அவனுக்கும் அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள்.</verse>
				<verse number="33">அந்த இரவு வேளையிலேயே, அந்தச் சிறைக்காவலன் அவர்களை அழைத்துக்கொண்டு போய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.</verse>
				<verse number="34">அந்தச் சிறைக்காவலன் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு உணவு கொடுத்தான். தானும் தன்னுடைய குடும்பத்தவர் அனைவரும் இறைவனில் விசுவாசம் வைத்ததைக் குறித்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.</verse>
				<verse number="35">பொழுது விடிந்ததும் மாவட்ட நீதிபதிகள், “அவர்களை விடுதலை செய்யுங்கள்” என்ற உத்தரவுடன், தமது அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள்.</verse>
				<verse number="36">சிறைக்காவலன் பவுலிடம், “மாவட்ட நீதிபதிகள் உங்களை விடுதலையாக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். நீங்களும் சீலாவும் சமாதானத்துடன் வெளியே போகலாம்” என்றான்.</verse>
				<verse number="37">ஆனால் பவுல் அந்த அதிகாரிகளிடம்: “நாங்கள் ரோம குடிமக்களாய் இருந்தபோதும், எவ்வித குற்ற விசாரணையும் இல்லாமல், எங்களை பொதுமக்கள் முன்பாக அடித்துச் சிறையில் போட்டார்கள். இப்போது இரகசியமாய் அவர்கள் எங்களை விடுதலையாக்கப் பார்க்கின்றார்களா? முடியாது! அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துக்கொண்டு போய் விடட்டும்” என்றான்.</verse>
				<verse number="38">அந்த அதிகாரிகள் இதை மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவித்தார்கள். பவுலும் சீலாவும் ரோம குடிமக்கள் எனக் கேள்விப்பட்டபோது, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.</verse>
				<verse number="39">எனவே மாவட்ட நீதிபதிகள் வந்து இவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, இவர்களைச் சிறையிலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போய், பட்டணத்தைவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="40">எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து லீதியாளின் வீட்டிற்குப் போனார்கள். அங்கே அவர்கள் சகோதர சகோதரிகளைச் சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுப் போனார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="17">
				<verse number="1">அவர்கள் அம்பிபோலி, அப்பொலோனியா ஆகிய பட்டணங்கள் வழியாக தெசலோனிக்கேயாவை வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு யூத ஜெபஆலயம் இருந்தது.</verse>
				<verse number="2">பவுல் தனது வழக்கத்தின்படியே அந்த யூத ஜெபஆலயத்திற்குள் போய் அங்கிருந்தவர்களுடன் மூன்று ஓய்வுநாட்களுக்கு வேதவசனத்திலிருந்து விவாதித்தான்.</verse>
				<verse number="3">மேசியா வேதனை அனுபவிக்க வேண்டியிருந்தது என்றும், இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டியிருந்தது என்றும் விளக்கமாய் கூறி அதை நிரூபித்தான். நான் உங்களுக்கு அறிவிக்கின்ற இந்த இயேசுவே மேசியா என்றும் கூறினான்.</verse>
				<verse number="4">சில யூதர்கள் இதை ஏற்றுக்கொண்டு, பவுலுடனும் சீலாவுடனும் சேர்ந்து கொண்டார்கள். அப்படியே, இறைவனுக்குப் பயந்த பெரும் எண்ணிக்கையான கிரேக்கரும், உயர் அந்தஸ்துடைய பெண்கள் பலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் மற்ற யூதர்களோ பொறாமைகொண்டு, சந்தை கூடும் இடங்களில் நிற்கும் சில பொல்லாத மனிதர்களின் உதவியுடன் ஒரு கலகக் குழுவை உருவாக்கி, பட்டணத்தில் குழப்பம் விளைவித்தார்கள். அவர்கள் பவுலையும் சீலாவையும் மக்கள் கூட்டத்திற்கு முன் கொண்டுவருவதற்காக, அவர்களைத் தேடி யாசோனுடைய வீட்டிற்கு விரைந்து ஓடினார்கள்.</verse>
				<verse number="6">ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, அவர்கள் யாசோனையும், வேறு சில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளுக்கு முன்பாக இழுத்து வந்து, “உலகம் முழுவதிலும் கலகத்தை உண்டாக்குகின்ற இந்த மனிதர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள்.</verse>
				<verse number="7">யாசோன் அவர்களைத் தனது வீட்டில் வரவேற்றிருக்கிறான். அவர்கள் இயேசு என்னும் வேறொரு அரசன் இருப்பதாகக் கூறி, சீசரின் சட்ட ஒழுங்குகளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.</verse>
				<verse number="8">கூடியிருந்த மக்களும், பட்டணத்து அதிகாரிகளும் இதைக் கேட்டபோது மிகவும் குழப்பமடைந்தார்கள்.</verse>
				<verse number="9">பின்பு அவர்கள், யாசோனையும் மற்றவர்களையும் பிணையில் போகவிட்டார்கள்.</verse>
				<verse number="10">அன்று இரவே சகோதரர்கள், பவுலையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, யூத ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.</verse>
				<verse number="11">பெரோயா பட்டணத்தைச் சேர்ந்தவர்கள், தெசலோனிக்கேயாவைச் சேர்ந்தவர்களைவிட சிறந்த குணமுடையவர்கள். அவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு பவுல் சொன்னது உண்மைதானோ எனக் கண்டறிவதற்கு ஒவ்வொரு நாளும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள்.</verse>
				<verse number="12">அநேக யூதர்கள் விசுவாசித்தார்கள், அப்படியே பெருந்தொகையான உயர் அந்தஸ்துடைய கிரேக்கப் பெண்களும், அநேக கிரேக்க ஆண்களும் விசுவாசித்தார்கள்.</verse>
				<verse number="13">பவுல், பெரோயாவில் இறைவனின் வார்த்தையைப் பிரசங்கிக்கிறான் என தெசலோனிக்கேயாவிலுள்ள யூதர்கள் அறிந்தபோது அவர்கள் அங்கேயும் போய் மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிட்டார்கள்.</verse>
				<verse number="14">உடனே சகோதரர்கள் பவுலை கடற்கரையோரப் பகுதிக்கு அனுப்பினார்கள். ஆனால் சீலாவும் தீமோத்தேயுவுமோ பெரோயாவில் தங்கியிருந்தார்கள்.</verse>
				<verse number="15">பவுலை அழைத்துக்கொண்டு போனவர்கள் அத்தேனே பட்டணம் வரைக்கும் அவனைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் திரும்பிப் போகும்போது, சீலாவும் தீமோத்தேயுவும் கூடிய விரைவில் தன்னிடம் வந்து சேர்ந்துகொள்ள வேண்டும் என்று பவுல் சொல்லி அனுப்பிய செய்தியைக் கொண்டுபோனார்கள்.</verse>
				<verse number="16">பவுல் அவர்களுக்காக அத்தேனே பட்டணத்தில் காத்திருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு மிகவும் மனம் குமுறினான்.</verse>
				<verse number="17">எனவே அவன் ஜெபஆலயத்திலுள்ள யூதர்களுடனும், இறைவனுக்குப் பயந்து நடந்த கிரேக்கருடனும் விவாதித்தான். அத்துடன் ஒவ்வொரு நாளும் சந்தை கூடும் இடத்தில், அங்கு வருகின்றவர்களுடன் விவாதித்தான்.</verse>
				<verse number="18">எப்பிக்கூர், ஸ்தோயிக்கர் எனப்பட்ட சில தத்துவஞானிகள் பவுலுடன் விவாதிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் சிலர், “இந்த வாயாடி என்ன சொல்ல விரும்புகிறான்?” என்றார்கள். மற்றவர்கள், “இவன் வேறு தெய்வங்களைப்பற்றி அறிவிக்கிறான் போலும்” என்றார்கள். பவுல் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்ததனால், அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.</verse>
				<verse number="19">எனவே அவர்கள் அவனை அரியோப்பாகு என்னும் மன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு அழைத்து வந்து, “நீ போதிக்கின்ற இந்த புதிய போதனை என்னவென்று நாங்கள் அறியலாமா?</verse>
				<verse number="20">நீ எங்களுக்கு சில விசித்திரமான கருத்துக்களைக் கொண்டுவந்திருக்கிறாய். எனவே, அவற்றின் அர்த்தம் என்ன என்று அறிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்” என்றார்கள்.</verse>
				<verse number="21">அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு வாழ்கின்ற வேறு நாட்டவர்களும் வேறொன்றும் செய்யாமல் ஏதாவது புதிதான சிந்தனைகளைக் கேட்பதிலும், சொல்வதிலுமே தங்களுடைய நேரத்தைக் கழிப்பவர்கள்.</verse>
				<verse number="22">எனவே, பவுல் அரியோப்பாகு மன்றத்தில் எழுந்து நின்று சொன்னதாவது: “அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்த மனிதரே! எல்லாவிதத்திலும் நீங்கள் சமய பக்தி உள்ளவர்கள் என்றே நான் காண்கின்றேன்.</verse>
				<verse number="23">ஏனெனில் நான் பட்டணத்தின் வழியாக நடந்து போகையில், நீங்கள் வணங்கியவைகளை கவனமாய்ப் பார்த்தேன். அப்போது அவைகளின் நடுவே, நான் ஒரு பலிபீடத்தைக் கண்டேன். அதில், ‘நாம் அறியாத ஒரு தெய்வத்துக்கு’ என எழுதப்பட்டிருந்தது. எனவே நீங்கள் அறியாமல் ஆராதிப்பதையே, நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன்.</verse>
				<verse number="24">“உலகத்தையும், அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவனே, வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராய் இருக்கின்றார். அவர் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் வாழ்கின்றவர் அல்ல.</verse>
				<verse number="25">அவருக்கு எவ்வித தேவையும் இல்லாதிருப்பதனால், மனித கைகளினால் செய்யப்படும் பணி அவருக்குத் தேவையில்லை. ஏனெனில் அவரே எல்லா மனிதருக்கும் உயிரையும், சுவாசத்தையும், தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றார்.</verse>
				<verse number="26">அவர் ஒரு மனிதனில் இருந்தே எல்லா மனித இனங்களையும் படைத்து, அவர்களை பூமி முழுவதிலும் குடியிருக்கச் செய்தார். அவர்களுக்குரிய காலங்களையும், அவர்கள் வாழ வேண்டிய இடங்களையும் அவரே தீர்மானித்து,</verse>
				<verse number="27">மனிதர்கள் தன்னை நாடித் தேட வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கின்றார். இப்படி தட்டுத் தடுமாறியேனும் தன்னை அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஆனாலும் நம்மில் ஒருவருக்கும் அவர் தூரமாய் இருப்பவர் அல்ல.</verse>
				<verse number="28">ஏனெனில், ‘நாம் அவரிலேயே வாழ்கின்றோம், அவரிலேயே செயல்படுகின்றோம், அவரிலேயே இருக்கின்றோம். உங்கள் புலவர்களில் சிலர் சொன்னது போல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம்.’</verse>
				<verse number="29">“எனவே நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருப்பதனால், அவர் மனிதனின் சிந்தனையினாலும் திறமையினாலும் வடிவமைக்கப்பட்டதான தங்கம், வெள்ளி மற்றும் கல்லால் செய்யப்பட்ட உருவத்துக்கு ஒப்பானவர் என நாம் எண்ணக் கூடாது.</verse>
				<verse number="30">கடந்த காலத்தில் இப்படிப்பட்ட அறியாமையை இறைவன் பொருட்படுத்தவில்லை; ஆனால் இப்பொழுதோ எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மக்களும் மனந்திரும்ப வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்.</verse>
				<verse number="31">ஏனெனில், இறைவன் தாமே உலகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பதற்கு ஒரு நாளை நியமித்திருக்கிறார். நியாயத்தீர்ப்பை வழங்குபவரையும் அவர் நியமித்திருக்கிறார். அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதன் மூலமாக அவர் எல்லா மனிதருக்கும் இதை நிரூபித்துக் காட்டியுமிருக்கிறார்” என்றான்.</verse>
				<verse number="32">இறந்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபோது, அவர்களில் சிலர் கேலி செய்தார்கள். மற்றவர்களோ, “இதைக் குறித்து நீ சொல்வதை நாங்கள் திரும்பவும் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள்.</verse>
				<verse number="33">அப்போது பவுல், அந்த மன்றத்தைவிட்டுச் சென்றான்.</verse>
				<verse number="34">சிலர் பவுலைப் பின்பற்றி விசுவாசிகளானார்கள். அவர்களில் அரியோப்பாகு மன்றத்தின் அங்கத்தவனான தீயோனீசியு எனப்பட்ட ஒருவன் இருந்தான். தாமரி என்னும் பெயருடைய ஒரு பெண்ணும், இன்னும் வேறு சிலரும் இருந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="18">
				<verse number="1">இதற்குப் பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு கொரிந்து பட்டணத்திற்குச் சென்றான்.</verse>
				<verse number="2">அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய ஆக்கில்லா தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதர்களும் ரோமைவிட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவ்விருவரையும் சந்தித்து,</verse>
				<verse number="3">அவர்களைப் போலவே தானும் ஒரு கூடாரத் தொழிலாளியானபடியால், அவர்களுடன் தங்கி வேலை செய்தான்.</verse>
				<verse number="4">ஒவ்வொரு ஓய்வுநாளன்றும் அவன் ஜெபஆலயத்திலே ஆதாரத்துடன் விவாதித்து, யூதர்களையும் கிரேக்கரையும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய முயற்சித்தான்.</verse>
				<verse number="5">சீலாவும் தீமோத்தேயுவும் மக்கெதோனியாவிலிருந்து வந்துசேர்ந்ததும், பவுல் நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமே தன் கவனத்தை முழுமையாகச் செலுத்தி, இயேசுவே மேசியா என்று யூதருக்குச் சாட்சி கூறினான்.</verse>
				<verse number="6">ஆனால் யூதர்கள் பவுலை எதிர்த்து அவனை நிந்தித்தபோது அவர்களுக்கு எதிராக அவன் தன் உடைகளை உதறி, அவர்களைப் பார்த்து, “உங்கள் அழிவின் இரத்தப் பழி உங்கள் தலைகளின் மேலேயே இருக்கட்டும்! இனி அந்தக் குற்றத்திற்கு நான் பொறுப்பல்ல, இனிமேல் நான் யூதரல்லாத மக்களிடம் போகப் போகின்றேன்” என்றான்.</verse>
				<verse number="7">பின்பு பவுல் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, பக்கத்திலுள்ள தீத்து யூஸ்து என்பவனுடைய வீட்டுக்குச் சென்றான். அவன் இறைவனை ஆராதிக்கின்ற யூதரல்லாத ஒருவனாக இருந்தான்.</verse>
				<verse number="8">ஜெபஆலயத் தலைவனான கிறிஸ்புவும், அவனுடைய குடும்பத்தார் அனைவரும் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்; பவுல் சொன்னதைக் கேட்ட அநேக கொரிந்தியரும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.</verse>
				<verse number="9">ஒரு நாள் இரவு ஆண்டவர், பவுலுக்கு தரிசனம் அளித்து, அவனிடம், “பயப்படாதே, தொடர்ந்து பேசிக் கொண்டேயிரு, மௌனமாயிராதே.</verse>
				<verse number="10">ஏனெனில் நான் உன்னுடனேகூட இருக்கின்றேன். ஒருவனும் உன்னைத் தாக்கப் போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப் போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் என்னுடைய மக்கள் அநேகர் இருக்கின்றார்கள்” என்றார்.</verse>
				<verse number="11">எனவே, பவுல் அங்கே ஒன்றரை வருடமாகத் தங்கியிருந்து, அவர்களுக்கு இறைவனுடைய வார்த்தையைப் போதித்தான்.</verse>
				<verse number="12">அகாயா மாகாணத்திற்கு கல்லியோன் என்பவன் அதிபதியாய் இருக்கையில் யூதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பவுலைத் தாக்கி, அவனை அதிபதியின் நீதி ஆசனத்தின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.</verse>
				<verse number="13">“இந்த மனிதன் யூதரின் நீதிச்சட்டத்திற்கு முரணான வழிகளில் இறைவனை ஆராதிக்கும்படி மக்களைத் தூண்டுகிறான்” என்று குற்றம் சாட்டினார்கள்.</verse>
				<verse number="14">பவுல் பேச முயலுகையில் கல்லியோன் யூதரைப் பார்த்து, “நீங்கள் சொல்வது ஒரு குற்றச் செயலாகவோ, அல்லது ஒரு பாதகமான குற்றமாகவோ இருந்தால், யூதராகிய நீங்கள் முன்வைக்கும் உங்கள் முறைப்பாட்டை நான் கேட்பது நியாயமாயிருக்கும்.</verse>
				<verse number="15">ஆனால் இதுவோ சொற்கள், பெயர்கள், உங்களுடைய யூத சமயசட்டம் ஆகியவற்றைக் குறித்த பிரச்சினைகளாய் இருப்பதால், இதை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட விடயங்களுக்கு நான் நீதிபதியாய் இருக்க விரும்பவில்லை” என்றான்.</verse>
				<verse number="16">எனவே அவன், மன்றத்திலிருந்து அவர்களை விரட்டிவிட உத்தரவிட்டான்.</verse>
				<verse number="17">அப்போது எல்லோரும் ஜெபஆலயத் தலைவனான சொஸ்தெனேயைப் பிடித்து மன்றத்தின் முன்பாக அடித்தார்கள். ஆனால் கல்லியோனோ அதைக் குறித்து எவ்வித அக்கறையையும் காட்டவில்லை.</verse>
				<verse number="18">பவுல் கொரிந்து பட்டணத்தில் தொடர்ந்து சில காலம் தங்கியிருந்தான். பின்பு அவன் அங்குள்ள சகோதரர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கப்பல் மூலமாக சீரியாவுக்குச் சென்றான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே போனார்கள். அவன் ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருந்தபடியால், கப்பலேறும் முன்பு கெங்கிரேயாவிலே யூத வழக்கத்தின்படி தன் தலையை மொட்டையடித்துக் கொண்டான்.</verse>
				<verse number="19">பின்பு அவர்கள் எபேசு பட்டணத்தை வந்தடைந்தார்கள். பவுல் பிரிஸ்கில்லாவையும் ஆக்கில்லாவையும் அங்கேயே இருக்கும்படி சொன்னான். பவுலோ அங்குள்ள ஜெபஆலயத்திற்குப் போய் ஆதாரங்களை முன்வைத்து, யூதர்களோடு உண்மைக்காக வாதாடினான்.</verse>
				<verse number="20">அவர்கள் அவனை அங்கு இன்னும் நீண்ட காலம் தங்கும்படி கேட்டபோது அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை.</verse>
				<verse number="21">ஆனால் அவன் அவர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு புறப்படுகையில், “இறைவனின் திட்டமானால் நான் திரும்பி வருவேன்” என்று வாக்குறுதி அளித்தான். அதன்பின் அவன் எபேசுவிலிருந்து ஒரு கப்பலில் பயணமானான்.</verse>
				<verse number="22">அவன் செசரியா துறைமுகத்தில் கரையிறங்கி, செசரியாவைச் சென்றடைந்து, அங்கிருந்து எருசலேமிலுள்ள திருச்சபைக்குப் போய் அவர்களுக்கு ஆசி கூறினான். பின்பு அங்கிருந்து, அந்தியோகியாவுக்குச் சென்றான்.</verse>
				<verse number="23">சில காலம் அந்தியோகியாவில் தங்கிய பின்பு அவன் புறப்பட்டு கலாத்தியா, பிரிகியா பிரதேசங்களுக்கூடாக ஒவ்வொரு இடமாகச் சென்று, எல்லா சீடர்களையும் தைரியப்படுத்தினான்.</verse>
				<verse number="24">இதற்கிடையில், அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ என்னும் பெயருடைய ஒரு யூதன் எபேசுவிற்கு வந்தான். அவன் ஒரு கல்விமானும், வேதவசனங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவனுமாய் இருந்தான்.</verse>
				<verse number="25">கர்த்தருடைய மார்க்கத்தைக் குறித்த அறிவுறுத்தலைப் பெற்றிருந்த அவன், இயேசுவைக் குறித்த காரியங்களை மிகுந்த ஆர்வத்துடன் பிழையின்றிப் போதித்தான். ஆயினும் அவன், யோவானுடைய ஞானஸ்நானத்தைப்பற்றி மாத்திரமே அறிந்திருந்தான்.</verse>
				<verse number="26">அவன் ஜெபஆலயத்திலே துணிவுடன் பேச ஆரம்பித்தான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அவன் பேசுவதைக் கேட்டபோது அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய், இறைவனுடைய மார்க்கத்தை அவனுக்கு இன்னும் அதிக தெளிவாய் விளக்கிக் கூறினார்கள்.</verse>
				<verse number="27">அப்பொல்லோ அகாயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர்கள் அவனை உற்சாகப்படுத்தி, அங்குள்ள சீடர்கள் அவனை வரவேற்கும்படி, அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்கள். அவன் அங்கு வந்துசேர்ந்து கிருபையின் மூலமாக விசுவாசிகளாய் ஆகியிருந்தவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தான்.</verse>
				<verse number="28">அவன் வேதவசனங்களிலிருந்து இயேசுவே மேசியா என்று நிரூபித்து பகிரங்க விவாதங்களில் யூதர்களுடன் பலமாய் வாதாடினான்.</verse>
			</chapter>
			<chapter number="19">
				<verse number="1">அப்பொல்லோ கொரிந்து பட்டணத்தில் இருக்கையில், பவுல் தரைவழியாகப் பிரயாணம் செய்து எபேசு பட்டணத்திற்கு வந்தான். அங்கே பவுல் சில சீடர்களைக் கண்டான்.</verse>
				<verse number="2">அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவியானவர் என்று ஒருவர் இருக்கின்றார் என்றுகூட நாங்கள் கேள்விப்படவில்லை” என்றார்கள்.</verse>
				<verse number="3">அப்போது பவுல், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானத்தைப் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யோவானுடைய ஞானஸ்நானம்” என்றார்கள்.</verse>
				<verse number="4">எனவே பவுல், “யோவானின் ஞானஸ்நானமானது, மனந்திரும்புதலின் ஞானஸ்நானமே. அவன் மக்களிடம், தனக்குப் பின்வருகின்றவரான இயேசுவிலேயே அவர்கள் விசுவாசம் வைக்க வேண்டும் என்று சொன்னான்” என்றான்.</verse>
				<verse number="5">அவர்கள் இதைக் கேட்டு, ஆண்டவர் இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.</verse>
				<verse number="6">பின்பு பவுல் அவர்கள்மீது தனது கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது இறங்கினார். அவர்கள் பிறமொழிகளைப் பேசி, இறைவாக்கு உரைத்தார்கள்.</verse>
				<verse number="7">அங்கே ஏறக்குறைய, பன்னிரண்டு பேர் இருந்தார்கள்.</verse>
				<verse number="8">பவுல் ஜெபஆலயத்திற்குள் சென்று துணிவுடன் பேசினான். அங்கே மூன்று மாதங்களாக இறைவனுடைய அரசைக் குறித்து, மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் விவாதித்துக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="9">ஆனால் அவர்களில் சிலர் பிடிவாதமுள்ளவர்களாகி விசுவாசிக்க மறுத்தார்கள். அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவின் மார்க்கத்தைக் குறித்து தீமையாய்ப் பேசினார்கள். எனவே பவுல் சீடர்களைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டுப் போய் திறன்னு என்பவனின் கல்விக்கூடத்திலே ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்களை நடத்தினான்.</verse>
				<verse number="10">இது இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இதனால், ஆசியா மாகாணத்தில் வாழ்ந்த யூதர், கிரேக்கர் அனைவரும் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டார்கள்.</verse>
				<verse number="11">இறைவன் பவுலைக் கொண்டு மிகப் பெரிய அற்புதங்களைச் செய்தார்.</verse>
				<verse number="12">பவுலின் உடலில் பட்ட கைக்குட்டைகளையும், மேலாடைகளையும் கொண்டுபோய் நோயாளிகள் மீது போட்டபோது அவர்களுடைய வியாதிகள் குணமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின.</verse>
				<verse number="13">அப்போது, பேய்களைத் துரத்தும் சில யூதர் வெவ்வேறு இடங்களுக்குப் போய் அசுத்த ஆவி பிடித்திருந்தவர்களின் மேல் ஆண்டவர் இயேசுவின் பெயரை உபயோகிக்க முயன்றார்கள். அவர்கள், “பவுல் பிரசங்கிக்கின்ற இயேசுவின் பெயராலே வெளியே வரும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று சொன்னார்கள்.</verse>
				<verse number="14">யூத தலைமை மதகுருவான ஸ்கேவாவின் ஏழு மகன்களே இவ்வாறு செய்தார்கள்.</verse>
				<verse number="15">ஒரு நாள் அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் அறிந்திருக்கிறேன்; ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது.</verse>
				<verse number="16">பின்பு அசுத்த ஆவியுள்ள மனிதன் அவர்கள்மீது பாய்ந்து, அவர்கள் எல்லோரையும் தாக்கி திணறடித்தான். அவன் அவர்களை அதிகமாக அடித்ததனால் அவர்கள் அந்த வீட்டை விட்டு இரத்தக் காயங்களுடன் உடைகளின்றி ஓடிப் போனார்கள்.</verse>
				<verse number="17">எபேசு பட்டணத்திலுள்ள யூதரும் கிரேக்கரும் இதை அறிந்தபோது அவர்கள் எல்லோருக்கும் பயமுண்டாயிற்று. ஆண்டவர் இயேசுவின் பெயர் மகிமைப்பட்டது.</verse>
				<verse number="18">விசுவாசித்தவர்களில் அநேகர் முன்வந்து தாம் கடைபிடித்து வந்த தீய வழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.</verse>
				<verse number="19">மந்திரவித்தையில் ஈடுபட்டிருந்த பலர், தங்களுடைய புத்தகச் சுருள்களைக் கொண்டுவந்து பகிரங்கமாக எரித்தார்கள். அந்தப் புத்தகச் சுருள்களின் பெறுமதியை அவர்கள் கணக்கிட்டபோது, ஐம்பதாயிரம் வெள்ளிக் காசு பெறுமதியுடையதாய் இருந்தது.</verse>
				<verse number="20">இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது.</verse>
				<verse number="21">இவையெல்லாம் நடந்ததன் பின், பவுல் மக்கெதோனியா, அகாயா நாடுகள் வழியாக எருசலேமுக்குப் போக ஆவியில் தீர்மானித்தான். “நான் அங்கு போன பின், ரோமுக்கும் போக வேண்டும்” என்று சொன்னான்.</verse>
				<verse number="22">அவன் தனது உதவியாளர்களில் தீமோத்தேயு, எரஸ்து ஆகிய இருவரையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பினான். தானோ ஆசியா மாகாணத்திலே இன்னும் சிறிது காலம் தங்கினான்.</verse>
				<verse number="23">அக்காலத்தில் கிறிஸ்துவின் மார்க்கத்தைக் குறித்து, ஒரு பெரிய குழப்பம் உண்டாயிற்று.</verse>
				<verse number="24">தேமேத்திரியு என்னும் பெயருள்ள ஒரு பொற்கொல்லன் இருந்தான். அவன் அர்த்தமிஸ் தேவதையின் கோவிலை வெள்ளியினால் வடிவமைத்து, அந்தத் தொழிலைச் செய்பவர்களுக்கு நல்ல வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தான்.</verse>
				<verse number="25">அவன் அந்தத் தொழில் செய்கின்றவர்களையும், இந்த வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், “மக்களே, இந்த வியாபாரத்திலிருந்து, நாம் நல்ல வருமானத்தைப் பெற்று வருகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="26">பவுல் என்பவன் கைகளினால் செய்யப்பட்டவை தெய்வங்கள் அல்ல என்று சொல்லி பெருந்திரளான மக்களை நம்பும்படி செய்து, தன் பக்கமாகத் திரும்பச் செய்திருக்கின்றான். எபேசுவில் மட்டுமல்ல, முழு ஆசியா மாகாணத்திலுமே அவன் இப்படிச் செய்திருக்கின்றான். இதை நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="27">நம் வியாபாரத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படும் ஆபத்து உருவாகியிருப்பது மட்டுமல்ல, மாபெரும் தேவதையான அர்த்தமிசின் கோவிலானது மதிப்பிழந்தும் போகப் போகின்றது. ஆசியா மாகாணத்திலும், உலகமெங்கும் வணங்கப்படும் அந்தத் தேவதையின் மகத்துவமும் இல்லாது போய்விடும்” என்றான்.</verse>
				<verse number="28">அவர்கள் இதைக் கேட்டபோது மிகவும் கோபம்கொண்டு, “எபேசியரின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="29">உடனேயே முழுப்பட்டணமும் கலவரமடைந்தது. கூடியிருந்த மக்களோ ஒன்றுதிரண்டு, பவுலுடன் பயணம் செய்தவர்களான மக்கெதோனியாவைச் சேர்ந்த காயு, அரிஸ்தர்க்கு என்பவர்களைப் பிடித்து, அரங்க மண்டபத்திற்குள் இழுத்துக்கொண்டு போனார்கள்.</verse>
				<verse number="30">பவுல் மக்கள் கூட்டத்திற்கு முன் போக விரும்பினான். ஆனால் சீடர்களோ அவனைப் போக விடவில்லை.</verse>
				<verse number="31">பவுலின் நண்பர்களான அந்த மாகாணத்தின் அதிகாரிகளில் சிலரும்கூட அவனை அரங்க மண்டபத்திற்குள் போக வேண்டாம் என்று கூறி அவனுக்குச் செய்தியனுப்பினார்கள்.</verse>
				<verse number="32">அங்கே கூடியிருந்த மக்கள் மிகக் குழப்பமடைந்திருந்தார்கள். சிலர் ஒன்றைச் சொல்லி சத்தமிட்டுக் கொண்டிருக்க, மற்றவர்களோ வேறு ஏதோ ஒன்றைச் சொல்லி சத்தமிட்டார்கள். அவர்களில் அநேகருக்குத் தாங்கள் ஏன் அங்கு வந்திருக்கிறார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை.</verse>
				<verse number="33">யூதரோ, அலெக்சாந்தர் என்பவனை கூட்டத்திற்கு முன்னே தள்ளிவிட்டார்கள். சிலர் அவனைப் பார்த்து, ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள். அப்போது அவன், நியாயத்தை எடுத்துக் கூறுவதற்காக மக்களை மௌனமாய் இருக்கும்படி சைகை காட்டினான்.</verse>
				<verse number="34">ஆனால் அவன் ஒரு யூதன் என்று அவர்கள் அறிந்தபோது இரண்டு மணி நேரமாக, “எபேசியர்களின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று ஒரே குரலில் சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="35">அந்த நகரத்தின் ஆணையாளர், மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி அவர்களிடம், “எபேசு பட்டணத்தாரே, மகா அர்த்தமிஸ் உருவச் சிலையானது வானத்திலிருந்து விழுந்தது என்பதையும், இந்த தேவதைக்கும் உருவச் சிலைக்கும் எபேசு பட்டணமே பாதுகாவலின் இடமாக இருக்கின்றது என்பதையும் இந்த முழு உலகமும் அறியுமே.</verse>
				<verse number="36">இவை மறுக்க முடியாத உண்மைகளாய் இருப்பதனால், நீங்கள் எதையுமே முன்யோசனையின்றி செய்யாமல் அமைதியாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="37">நீங்கள் இந்த மனிதரை இங்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். ஆனால் இவர்களோ ஆலயங்களைக் கொள்ளையடிக்கவும் இல்லை, நமது தேவதையை நிந்தித்துப் பேசவும் இல்லை.</verse>
				<verse number="38">எனவே தேமேத்திரியுவுக்கும் அவனுடைய சக தொழிலாளிகளுக்கும் எவர் மீதாவது ஒரு முறைப்பாடு இருக்குமானால் அதற்காக நீதிமன்றங்கள் திறந்தே இருக்கின்றன. அங்கே மாகாண அதிபதிகளும் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்களை அங்கே எடுத்துச் சொல்லட்டும்.</verse>
				<verse number="39">இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கு இருக்குமானல், அது சட்டமன்றக் கூட்டத்திலே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.</verse>
				<verse number="40">இன்று நடந்த இந்த சம்பவத்தினால் நாம் கலகம் செய்ததாக அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்படக் கூடிய ஒரு ஆபத்தில் இப்போது இருக்கின்றோம். அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டால், இந்தக் கலகம் நியாயமானது எனக் காட்ட நம்மால் முடியாது, ஏனெனில், நாம் சொல்லக்கூடிய காரணம் எதுவும் இல்லை” என்றான்.</verse>
				<verse number="41">அவன் இதைச் சொல்லி முடித்த பின்பு கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான்.</verse>
			</chapter>
			<chapter number="20">
				<verse number="1">கலகம் ஓய்ந்த பின் பவுல் சீடர்களை அழைத்து அவர்களை உற்சாகப்படுத்தினான். பின் அவர்களிடம் விடைபெற்று மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான்.</verse>
				<verse number="2">அவன் அந்தப் பகுதிகள் வழியாகப் போய் மக்களை அதிகமாய் உற்சாகப்படுத்திப் பேசினான். பின்பு அவன் கிரேக்க நாட்டிற்கு வந்தான்.</verse>
				<verse number="3">அங்கே அவன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஆயினும், அவன் கப்பல் மூலமாக சீரியாவுக்குப் புறப்பட இருக்கையில் யூதர்கள் அவனுக்கு எதிராய் சதி செய்தார்கள். அதனால் அவன், திரும்பி மக்கெதோனியா வழியாகப் போகத் தீர்மானித்தான்.</verse>
				<verse number="4">அவனுடனேகூட பெரோயா பட்டணத்தைச் சேர்ந்த பீருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த அரிஸ்தர், செக்குந்துஸ், தெர்பையைச் சேர்ந்த காயு, தீமோத்தேயு, ஆசியா மாகாணத்தைச் சேர்ந்த தீகிக்கு, துரோபீப் ஆகியோரும் போனார்கள்.</verse>
				<verse number="5">இவர்கள் எங்களுக்கு முன்பாகப் போய் துரோவா பட்டணத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.</verse>
				<verse number="6">ஆனால் நாங்களோ, புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகைக்குப் பின் பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் மூலமாகப் புறப்பட்டு ஐந்து நாட்களின் பின் துரோவா பட்டணத்திற்கு வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டோம். அங்கே நாங்கள் ஏழு நாட்கள் தங்கியிருந்தோம்.</verse>
				<verse number="7">வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பகிர்ந்துகொள்வதற்கு ஒன்றுகூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததனாலே, நள்ளிரவு வரை பேசிக் கொண்டேயிருந்தான்.</verse>
				<verse number="8">நாங்கள் கூடியிருந்த மேல்வீட்டு அறையிலே பல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.</verse>
				<verse number="9">ஐத்திகு எனப்பட்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து பவுல் தொடர்ந்து பேசுவதைக் கேட்டு ஆழ்ந்த நித்திரை மயக்கத்தில் இருந்தான். அவன் முழுவதுமாய் ஆழ்ந்த நித்திரைக்குள்ளானபோது மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தான். விழுந்தவனைத் தூக்கியபோது, அவன் இறந்திருந்தான்.</verse>
				<verse number="10">பவுல் கீழே இறங்கிப் போய் அந்த வாலிபன் மீது விழுந்து அவனைத் தனது கைகளினால் அணைத்துக்கொண்டு, அங்கே நின்றவர்களிடம், “பயப்பட வேண்டாம். இவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி அவனை அவர்களிடம் ஒப்படைத்தான்.</verse>
				<verse number="11">பின்பு அவன், மேல்மாடிக்குத் திரும்பவும் போய் விசுவாசிகளுடன் அப்பம் பகிர்ந்து சாப்பிட்டான். அவன் விடியும் வரை அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.</verse>
				<verse number="12">மக்கள் அந்த வாலிபனை உயிருடன் வீட்டிற்குக் கொண்டுபோனார்கள். அது அவர்களுக்கு பெரிதும் ஆறுதலாயிருந்தது.</verse>
				<verse number="13">பவுல் தரை வழியாக ஆசோ பட்டணத்திற்குப் போக ஏற்கெனவே தீர்மானித்திருந்ததால் நாங்கள் அவனுக்கு முன்னே கப்பலேறி ஆசோ பட்டணத்திற்குப் போனோம். அங்கே பவுலை எங்களுடனே கப்பலில் ஏற்றிக்கொள்வது எங்கள் நோக்கமாயிருந்தது.</verse>
				<verse number="14">ஆசோ பட்டணத்தில் அவன் எங்களை சந்தித்தபோது அவனையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்குப் போனோம்.</verse>
				<verse number="15">மறுநாள் நாங்கள் கப்பலில் கீயுஸ் தீவைப் போய்ச் சேர்ந்தோம். அதற்கடுத்த நாள் சாமு தீவைக் கடந்து அதற்கடுத்த நாள் மிலேத்து பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.</verse>
				<verse number="16">பெந்தெகொஸ்தே நாளிலே எருசலேமைச் சென்றடைய வேண்டுமென்று பவுல் ஆவலுடையவனாய் இருந்தான். ஆதலால் அவன் ஆசியா மாகாணத்திலே காலத்தைக் கழிப்பதைத் தவிர்த்துக்கொள்ள விரும்பி எபேசுவில் தரையிறங்காமல் கடந்து போகத் தீர்மானித்தான்.</verse>
				<verse number="17">பவுல், மிலேத்து பட்டணத்திலிருந்து ஆளனுப்பி, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் மூப்பர்களைத் தன்னிடம் வரவழைத்தான்.</verse>
				<verse number="18">அவர்கள் அவனிடம் வந்தபோது அவன் அவர்களைப் பார்த்து, “நான் ஆசியா மாகாணத்துக்கு வந்த நாள் தொடங்கி, உங்களுடன் இருந்த காலம் முழுவதும் எப்படி வாழ்ந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.</verse>
				<verse number="19">நான் அதிக தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்கு ஊழியம் செய்தேன். ஆனால் நான் யூதரின் சூழ்ச்சிகளினாலே மிகவும் சோதிக்கப்பட்டேன்.</verse>
				<verse number="20">உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கக் கூடிய எதையும், உங்களுக்கு பிரசங்கிப்பதற்கு நான் தயங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் வெளிப்படையாகவும், வீடுவீடாகச் சென்றும் உங்களுக்குக் கற்பித்தேன்.</verse>
				<verse number="21">யூதர், கிரேக்கர் ஆகிய இரு பிரிவினருக்கும், அவர்கள் மனந்திரும்பி, இறைவனிடம் திரும்ப வேண்டும் என்றும் நம் ஆண்டவர் இயேசுவில் விசுவாசமாய் இருக்க வேண்டும் என்றும் நான் அறிவித்தேன்.</verse>
				<verse number="22">“இப்போதும் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டவனாய், நான் எருசலேமுக்குப் போகின்றேன். அங்கே எனக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது.</verse>
				<verse number="23">நான் சிறையில் இடப்படுவேன் என்றும், துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும் பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன்.</verse>
				<verse number="24">ஆயினும் என் வாழ்வை மதிப்புக்குரிய ஒன்றாக நான் கருதவில்லை. எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடிக்கவும், ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். இறைவனுடைய கிருபையின் நற்செய்திக்கு சாட்சி கொடுக்கும் ஊழியத்தையே அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார்.</verse>
				<verse number="25">“இப்போது நான் உங்கள் மத்தியில் இறைவனுடைய அரசைப் பற்றிப் பிரசங்கித்ததைக் கேட்ட நீங்கள் எவரும், எனது முகத்தை இனி ஒருபோதும் காண மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன்.</verse>
				<verse number="26">ஆகவே உங்களில் யாராவது கெட்டழிந்து போனால் அந்த இரத்தப் பழி என்மேல் சுமத்தப்படாது என்று இன்று நான் உங்களுக்கு உறுதியாய் அறிவிக்கிறேன்.</verse>
				<verse number="27">ஏனெனில் இறைவனுடைய முழுத் திட்டத்தையும் உங்களுக்கு நான் அறிவிப்பதற்குத் தயங்கவில்லை.</verse>
				<verse number="28">உங்களைக் குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை மேற்பார்வையாளர்களாக நியமித்த, உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து பெற்றுக்கொண்டாரே!</verse>
				<verse number="29">நான் போன பின் உங்களிடையே கொடிய ஓநாய்கள் வரும் என்றும், அவை மந்தையைத் தாக்காது விடுவதில்லை என்றும் எனக்குத் தெரியும்.</verse>
				<verse number="30">தங்கள் பக்கமாய் சீடர்களை இழுத்துக்கொள்வதற்காக உண்மையைத் திரித்துக் கூறுகின்ற சிலர் உங்கள் மத்தியிலிருந்தும் எழும்புவார்கள்.</verse>
				<verse number="31">எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும் பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கை செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="32">“இப்போது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன். அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச் சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது.</verse>
				<verse number="33">எவருடைய வெள்ளிக்கோ, தங்கத்திற்கோ, உடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை.</verse>
				<verse number="34">என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும் என் கைகளினாலேயே வேலை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="35">நாம் இவ்விதம் கஷ்டப்பட்டு வேலை செய்தே வறியோருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் செய்த எல்லாவற்றிலும் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்தேன். ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் கொடுப்பதே அதிக ஆசீர்வாதம்’ என்று ஆண்டவர் இயேசு, தாமே சொன்னதையும் உங்களுக்கு நினைவுபடுத்தினேன்” என்றான்.</verse>
				<verse number="36">அவன் இதைச் சொன்ன பின்பு அவர்கள் எல்லோருடனும் முழந்தாழிட்டு மன்றாடினான்.</verse>
				<verse number="37">அவர்கள் எல்லோரும் அவனை அணைத்து முத்தமிட்டு அழுதார்கள்.</verse>
				<verse number="38">“நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காண மாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கின. பின்பு அவர்கள் அவனை அழைத்துக்கொண்டு கப்பல் வரைக்கும் போனார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="21">
				<verse number="1">நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலமாகப் புறப்பட்டு ஒரு நேர் திசையில் பயணம் செய்து கோஸ் தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து, பத்தாரா பட்டணத்திற்குப் போனோம்.</verse>
				<verse number="2">அங்கிருந்து பெனிக்கேயாவுக்கு ஒரு கப்பல் போவதைக் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம்.</verse>
				<verse number="3">நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, தெற்குப் பக்கமாக அதைக் கடந்து சென்று சீரியாவுக்குக் கப்பலில் பயணமாகி தீரு பட்டணத்தில் கரையிறங்கினோம். ஏனெனில் அங்கே கப்பலிலிருந்து பொருட்களை இறக்க வேண்டியிருந்தது.</verse>
				<verse number="4">அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால் எருசலேமுக்குப் போக வேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் நாங்களோ அங்கே தங்க வேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்போது அங்கேயிருந்த சீடர்கள் எல்லோரும், தங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் எல்லோரும் கடற்கரையில் முழந்தாழிட்டு மன்றாடினோம்.</verse>
				<verse number="6">பின்பு ஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.</verse>
				<verse number="7">நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆசி கூறி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.</verse>
				<verse number="8">மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட அந்த ஏழு பேரில் ஒருவன்.</verse>
				<verse number="9">அவனுக்கு திருமணமாகாத நான்கு மகள்மார் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.</verse>
				<verse number="10">அங்கே நாங்கள் சில நாட்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான்.</verse>
				<verse number="11">அவன் எங்களிடம் வந்து பவுலின் இடைப்பட்டியை எடுத்து அதனால் தனது கைகளையும் கால்களையும் பிணைத்துக்கொண்டு, “இந்த இடைப்பட்டிக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் இவ்விதமாய் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் கையளிப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கின்றார்” என இறைவாக்கு உரைத்தான்.</verse>
				<verse number="12">இதை நாங்கள் கேட்டபோது எருசலேமுக்குப் போக வேண்டாமென்று நாங்களும் அங்கிருந்த மக்களும் பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.</verse>
				<verse number="13">அப்போது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? ஆண்டவர் இயேசுவின் பெயரால் நான் எருசலேமில் கட்டி வைத்து சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, மரணிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.</verse>
				<verse number="14">நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததனால், “கர்த்தருடைய திட்டத்தின்படி நடக்கட்டும்” என்று கூறி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.</verse>
				<verse number="15">இதன்பின் நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.</verse>
				<verse number="16">செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், ஆரம்ப கால சீடர்களில் ஒருவனுமாய் இருந்தான்.</verse>
				<verse number="17">நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது அங்கிருந்த சகோதரர்கள் எங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.</verse>
				<verse number="18">மறுநாள் பவுலும் நாங்களும் யாக்கோபைச் சந்திப்பதற்குப் போனோம். எருசலேம் திருச்சபையின் மூப்பர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.</verse>
				<verse number="19">பவுல் அவர்களுக்கு ஆசி கூறி தனது ஊழியத்தின் மூலமாய் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விபரமாய் எடுத்துக் கூறினான்.</verse>
				<verse number="20">அவர்கள் இதைக் கேட்டபோது இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம், “சகோதரனே, யூதர்களில் ஆயிரக் கணக்கானோர் விசுவாசிகளாய் ஆகிருக்கிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கிறாய். அவர்கள் எல்லோரும் நீதிச்சட்டத்தைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்களாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="21">ஆனால், யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதர்களிடம் அவர்கள் மோசேயின் நீதிச்சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிப்பதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக் கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக் கூடாது என்றும் நீ போதிக்கின்றதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="22">ஆகவே நாம் செய்யக் கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.</verse>
				<verse number="23">எனவே நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கின்ற நான்கு பேர் எங்களிடம் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="24">இவர்களை அழைத்துக்கொண்டு போய் இவர்கள் செய்யும் சம்பிரதாய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் கலந்துகொள். இவர்களின் மொட்டையடிப்பதற்கான செலவையும் நீயே செலுத்து. அப்போது உன்னைப் பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கின்றாய் என்றும் எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.</verse>
				<verse number="25">அதேவேளை, யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்த எங்கள் தீர்மானத்தை நாங்கள் அவர்களுக்கு எழுதியிருக்கிறோம். அவர்கள் விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்க வேண்டும் என்றும், இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது என்றும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியை சாப்பிடக் கூடாது என்றும், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடக் கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.</verse>
				<verse number="26">மறுநாள் பவுல் அந்த மனிதர்களை அழைத்துக்கொண்டு போய், தானும் அவர்களுடனே சம்பிரதாய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்போது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்போது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குச் சென்றான்.</verse>
				<verse number="27">அந்த ஏழு நாட்கள் நிறைவுறும் அந்தக் காலத்தில் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டு, அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டு பவுலைப் பிடித்தார்கள்.</verse>
				<verse number="28">அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவி செய்யுங்கள்! நமது மக்களுக்கும், நீதிச்சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கின்றவன் இவன்தான். இதைவிட, ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இவன் இந்தப் பரிசுத்த இடத்தைத் தூய்மைக்கேடாக்கி விட்டான்” என்றார்கள்.</verse>
				<verse number="29">ஏனெனில், அவர்கள் எபேசியனான துரோபீமும் பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கொண்டுவந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.</verse>
				<verse number="30">முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது. எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடி வந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு போனார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.</verse>
				<verse number="31">அவர்கள் அவனைக் கொலை செய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது.</verse>
				<verse number="32">அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும் இராணுவ வீரர்களையும் அழைத்துக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடி வந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் இராணுவ வீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.</verse>
				<verse number="33">படைத்தளபதி வந்து அவனைக் கைது செய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு, அவன் யார் என்றும் அவன் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.</verse>
				<verse number="34">மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு, ஏதோ ஒன்றைச் சொன்னார்கள், மற்றவர்களோ வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தின் காரணமாக தளபதியினால் உண்மையை அறிய முடியவில்லை. எனவே பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.</verse>
				<verse number="35">பவுல் படிக்கட்டுகளினருகே வந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால் இராணுவ வீரர்கள் பவுலைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.</verse>
				<verse number="36">பின்னாலே சென்ற மக்கள் கூட்டத்தினரோ, “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="37">இராணுவ வீரர்கள் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?</verse>
				<verse number="38">சிறிது காலத்துக்கு முன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைநிலத்திற்கு வழிநடத்திச் சென்ற எகிப்தியன் நீதானா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="39">அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் பேச எனக்கு அனுமதி தர வேண்டும்” என்றான்.</verse>
				<verse number="40">தளபதியின் அனுமதியைப் பெற்று, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் எல்லோரும் அமைதியடைந்தபோது அவன் எபிரேய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.</verse>
			</chapter>
			<chapter number="22">
				<verse number="1">பவுல் அவர்களைப் பார்த்து, “சகோதரரே, தந்தையரே, எனது சார்பாக நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.</verse>
				<verse number="2">அவன் தங்களுடன் எபிரேய மொழியில் பேசுவதை கேட்டபோது, அவர்கள் மௌனமானார்கள். அப்போது பவுல் சொன்னதாவது:</verse>
				<verse number="3">“நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தவன், ஆயினும் எருசலேம் நகரத்திலே வளர்க்கப்பட்டவன். கல்விமானான கமாலியேலிடம், நமது முற்பிதாக்களின் நீதிச்சட்டத்தையும் அதன் வழக்கங்களையும் நுட்பமாகக் கற்றேன். இன்று நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பக்தி வைராக்கியமாய் இருப்பது போலவே, நானும் இருந்தேன்.</verse>
				<verse number="4">கிறிஸ்துவின் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு துன்பப்படுத்தி இருக்கின்றேன். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற ஆண்களையும் பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தேன்.</verse>
				<verse number="5">இதைக் குறித்து தலைமை மதகுருவும், நியாயசபையிலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து, தமஸ்குவிலுள்ள அவர்களைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைது செய்து, எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கு தமஸ்குவுக்குப் போனேன்.</verse>
				<verse number="6">“நண்பகல் நேரம், நான் தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது.</verse>
				<verse number="7">நான் தரையில் விழுந்தேன். அப்போது, ‘சவுலே! சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன்.</verse>
				<verse number="8">“அப்போது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்றேன். “அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார்.</verse>
				<verse number="9">என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆயினும், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.</verse>
				<verse number="10">“அப்போது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். “அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார்.</verse>
				<verse number="11">என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னை அழைத்துக்கொண்டு போனார்கள். ஏனெனில் அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்து போனேன்.</verse>
				<verse number="12">“பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் நீதிச்சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.</verse>
				<verse number="13">அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்க முடிந்தது.</verse>
				<verse number="14">“பின்பு அவன் என்னிடம்: ‘நமது முற்பிதாக்களின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படியும், நீதிமானாகிய அவரைக் காணும்படியும், அவர் வாய்மொழிந்த குரலைக் கேட்கும்படியும் அவர் உன்னைத் தெரிவு செய்துள்ளார்.</verse>
				<verse number="15">நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, எல்லா மனிதருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.</verse>
				<verse number="16">இப்போதும், நீ எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய்? எழுந்திரு, அவருடைய பெயரைச் சொல்லி அழைத்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள், பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.</verse>
				<verse number="17">“பின்பு நான் எருசலேமுக்கு திரும்பி வந்து ஆலயத்தில் மன்றாடிக் கொண்டிருக்கையில் ஒரு பரவச நிலையை அடைந்தேன்.</verse>
				<verse number="18">அப்போது நான் ஆண்டவரைக் கண்டேன். அவர் என்னிடம், ‘தாமதிக்காதே! எருசலேமைவிட்டு உடனே புறப்படு. ஏனெனில் இங்குள்ளவர்கள் நீ என்னைக் குறித்து சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்றார்.</verse>
				<verse number="19">“அப்போது நான், ‘ஆண்டவரே, நான் ஒவ்வொரு ஜெபஆலயத்திற்கும் போய் உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே.</verse>
				<verse number="20">உமக்காக இரத்த சாட்சியாய் இறந்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது, நானும் அங்கு நின்று அவர்களோடு உடன்பட்டேன். அத்துடன், அவனைக் கொன்றவர்களின் உடைகளுக்கும் நானே காவல் இருந்தேன்’ என்றேன்.</verse>
				<verse number="21">“அப்போது ஆண்டவர் என்னிடம், ‘நீ போ, நான் உன்னைத் தூரத்திலிருக்கிற யூதரல்லாதவர்களிடத்திற்கு அனுப்புவேன்’ என்று சொன்னார்.” இப்படியாக பவுல் தன் பேச்சை முடித்தான்.</verse>
				<verse number="22">பவுல் யூதரல்லாதவர்களைக் குறித்து சொல்லும்வரை கூடியிருந்தவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதன்பின்பு அவர்கள் உரத்த குரலில், “பூமியிலிருந்து இவனை அழித்து விடுங்கள். இவன் வாழ்வதற்குத் தகுதியற்றவன்!” என்று சத்தமிட்டார்கள்.</verse>
				<verse number="23">அவர்கள் இவ்வாறு கூக்குரலிட்டுக்கொண்டு, தங்கள் உடைகளைக் கழற்றி எறிந்தார்கள்; புழுதியை அள்ளி மேலே வீசினார்கள்.</verse>
				<verse number="24">அதனால் அந்தத் தளபதி, பவுலை முகாமுக்குள் கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். பின்பு கூடியிருந்த மக்கள் பவுலைப் பார்த்து இப்படியாகச் சத்தமிட்ட காரணம் என்னவென்பதை அறிவதற்காக, பவுலைச் சவுக்கால் அடித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டான்.</verse>
				<verse number="25">அவர்கள் அவனைச் சவுக்கால் அடிப்பதற்காக வாரினால் இழுத்துக் கட்டியபோது, பவுல் அங்கு நின்ற நூற்றுக்குத் தளபதியைப் பார்த்து, “குற்றவாளியாகக் காணப்படாத ரோம குடிமகன் ஒருவனை சவுக்கால் அடிப்பது சட்டபூர்வமானதா?” என்று கேட்டான்.</verse>
				<verse number="26">இதைக் கேட்ட நூற்றுக்குத் தளபதி, படைத்தளபதியிடம் சென்று, “நீர் செய்யவிருப்பது என்ன? இவன் ஒரு ரோம குடிமகன் அல்லவா?” என்று எச்சரித்தான்.</verse>
				<verse number="27">அப்போது அந்தத் தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோம குடிமகனா? அதை எனக்குச் சொல்” என்று கேட்டான். அதற்குப் பவுல், “ஆம், நான் ஒரு ரோம குடிமகன்தான்” என்றான்.</verse>
				<verse number="28">அப்போது அந்தத் தளபதி பவுலிடம், “நான் இந்த குடியுரிமையைப் பெற பெருந் தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டியிருந்தது” என்றான். அதற்கு பவுல், “நானோ பிறப்பினால் இந்தக் குடியுரிமையைக் கொண்டிருக்கிறேன்” என்றான்.</verse>
				<verse number="29">பவுலை விசாரிக்க இருந்தவர்கள், உடனே அவனைவிட்டு விலகிச் சென்றார்கள். ஒரு ரோம குடிமகனாகிய பவுலை, சங்கிலிகளால் கட்டுவித்ததை உணர்ந்தபோது அந்தப் படைத்தளபதி பயமடைந்தான்.</verse>
				<verse number="30">அடுத்த நாளிலே, பவுல் யூதர்களினால் குற்றம் சாட்டப்பட்டது ஏன் என்பதை சரியாக அறிந்துகொள்ள படைத்தளபதி விரும்பினான். அதனால் அவன் பவுலை சங்கிலிகளிலிருந்து விடுவித்து தலைமை மதகுருக்களையும் நியாயசபையிலுள்ள அனைவரையும் ஒன்றுகூடும்படி உத்தரவிட்டான். பின்பு அவன் பவுலைக் கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.</verse>
			</chapter>
			<chapter number="23">
				<verse number="1">பவுல் நியாயசபையில் உள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்கு முன்பாக எனது வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன்” என்றான்</verse>
				<verse number="2">அப்போது, தலைமை மதகுருவான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான்.</verse>
				<verse number="3">அப்போது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! இறைவன் உம்மை அடிப்பார். நீதிச்சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆயினும் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே நீதிச்சட்டத்தை மீறுகிறீரே!” என்றான்.</verse>
				<verse number="4">அப்போது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய தலைமை மதகுருவை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள்.</verse>
				<verse number="5">அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் தலைமை மதகுரு என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உங்கள் மக்களின் ஆளுநரைக் குறித்துத் தீமையாய்ப் பேச வேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.</verse>
				<verse number="6">பின்பு பவுல், அவர்களில் சிலர் சதுசேயர் என்றும் மற்றவர்கள் பரிசேயர் என்றும் அறிந்து, நியாயசபையில் உள்ளவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நான் ஒரு பரிசேயன், ஒரு பரிசேயனுடைய மகன். இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும் என்ற எனது எதிர்பார்ப்பின் காரணமாகவே, நான் இங்கு விசாரிக்கப்படும்படி நிற்கிறேன்” என்றான்.</verse>
				<verse number="7">அவன் இதைச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையில் விவாதம் மூண்டது. அங்கு கூடியிருந்தவர்களுக்குள்ளே ஒரு பிரிவினை ஏற்பட்டது.</verse>
				<verse number="8">ஏனெனில் சதுசேயர், இறந்தவர் உயிர்த்தெழுவதில்லை என்றும் இறைதூதர்கள், ஆவிகள் என்று எதுவுமில்லையென்றும் சொல்பவர்கள். ஆனால் பரிசேயரோ, இவைகளெல்லாம் உண்டென்று ஏற்றுக்கொண்டவர்கள்.</verse>
				<verse number="9">அங்கு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பரிசேயராய் இருந்த சில நீதிச்சட்ட ஆசிரியர்கள் எழுந்து நின்று மிகக் கடுமையாக விவாதித்தார்கள். அவர்கள், “இவனிடத்தில் நாங்கள் குற்றம் எதையும் காணவில்லை. ஒருவேளை ஒரு ஆவியோ, ஒரு இறைதூதனோ அவனுடனே பேசியிருக்கலாம்” என்றார்கள்.</verse>
				<verse number="10">அவர்களின் விவாதம் வன்முறையாக மாறியபோது, பவுலை அவர்கள் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்று தளபதி பயந்தான். அவன் அவர்களிடமிருந்து பவுலை விடுவித்து முகாமுக்குக் கொண்டுவரும்படி இராணுவ வீரருக்கு உத்தரவிட்டான்.</verse>
				<verse number="11">மறுநாள் இரவு ஆண்டவர், பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக் குறித்து சாட்சி கொடுத்தது போல், ரோம் நகரத்திலும் சாட்சி கொடுக்க வேண்டும்” என்றார்.</verse>
				<verse number="12">மறுநாள், சில யூதர்கள் காலையிலேயே ஒன்றுகூடி பவுலைக் கொன்றுவிட சூழ்ச்சி செய்தார்கள். தாங்கள் அதை நிறைவேற்றும் வரை சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லை என்றும், அதை நிறைவேற்றாவிடில் அது தங்களுக்கு சாபமாய் அமைவதாக என்றும் பொருத்தனை செய்துகொண்டார்கள்.</verse>
				<verse number="13">நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டார்கள்.</verse>
				<verse number="14">அவர்கள் தலைமை மதகுருக்களிடமும், சமூகத் தலைவர்களிடமும் சென்று, “நாங்கள் பவுலைக் கொலை செய்யும் வரை, எதையும் சாப்பிடுவதில்லை என்று பொருத்தனை செய்திருக்கின்றோம்.</verse>
				<verse number="15">இப்போது நீங்களும், நியாயசபையைச் சேர்ந்தவர்களும் பவுலின் வழக்கை இன்னும் தெளிவாய் விசாரிக்கப் போவதாகக் காண்பித்து, அவனை உங்களுக்கு முன்பாகக் கொண்டுவரும்படி படைத்தளபதியிடம் மனுச் செய்யுங்கள். அவன் இங்கே வருவதற்கு முன்பதாக, அவனைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்” என்றார்கள்.</verse>
				<verse number="16">ஆனால் பவுலின் சகோதரியின் மகன் இந்தச் சூழ்ச்சியைக் குறித்துக் கேள்விப்பட்டு, முகாமுக்குள் போய் இதைப் பவுலுக்குச் சொன்னான்.</verse>
				<verse number="17">அப்போது பவுல் நூற்றுக்குத் தளபதிகளில் ஒருவனை அழைத்து, “இந்த வாலிபனை படைத்தளபதியிடம் அழைத்துக்கொண்டு போ. இவன் தளபதியிடம் ஏதோவொன்றை அறிவிக்க வேண்டி இருக்கின்றது” என்றான்.</verse>
				<verse number="18">அப்படியே அவன் அந்த வாலிபனை படைத்தளபதியிடம் அழைத்துக்கொண்டு சென்றான். அந்த நூற்றுக்குத் தளபதி, படைத்தளபதியிடம், “சிறைக் கைதியாய் இருக்கின்ற பவுல் என்னை ஆளனுப்பி அழைப்பித்து, இந்த வாலிபனை உங்களிடம் அழைத்துக்கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டான். ஏனென்றால், உங்களிடம் சொல்ல ஏதோவொன்று இவனிடம் இருக்கின்றதாம்” என்றான்.</verse>
				<verse number="19">படைத்தளபதி அந்த வாலிபனின் கையைப் பிடித்து, ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று, “நீ எனக்கு சொல்ல விரும்புவது என்ன?” என்று கேட்டான்.</verse>
				<verse number="20">அதற்கு அவன், “பவுலைக் குறித்து இன்னும் அதிக தெளிவாய் விசாரணை செய்யப் போவதாகக் காண்பித்து, அவரை நியாயசபையின் முன்பாக நாளைக்குக் கொண்டுவர வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்வதற்கு யூதர்கள் இணங்கியிருக்கின்றார்கள்.</verse>
				<verse number="21">ஆனால், நீங்கள் அவர்களுக்கு சம்மதிக்க வேண்டாம். ஏனெனில் அவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பவுலை வழியில் கொலை செய்வதற்காக மறைந்திருக்கிறார்கள். அவரைக் கொலை செய்யும் வரை, தாங்கள் சாப்பிடுவதோ குடிப்பதோ இல்லையென்று அவர்கள் சபதம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது ஆயத்தமாகி அவர்களின் வேண்டுகோளுக்கு நீங்கள் சம்மதிக்க வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றான்.</verse>
				<verse number="22">படைத்தளபதி, “இதை நீ எனக்கு அறிவித்ததைப்பற்றி ஒருவருக்கும் சொல்லாதே” என்று அந்த வாலிபனை எச்சரித்து அனுப்பினான்.</verse>
				<verse number="23">பின்பு படைத்தளபதி, தனக்குக் கீழுள்ள நூற்றுக்குத் தளபதிகள் இருவரை அழைத்து அவர்களுக்கு உத்தரவிட்டதாவது: “இன்று இரவு ஒன்பது மணிக்கு செசரியாவுக்குப் போவதற்கு இருநூறு இராணுவ வீரரையும், எழுபது குதிரை வீரரையும், இருநூறு ஈட்டி ஏந்தும் வீரரையும் கொண்ட ஒரு படைப்பிரிவை ஆயத்தமாக்குங்கள்.</verse>
				<verse number="24">ஆளுநர் பேலிக்ஸினிடம் பவுலை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கு ஏற்றபடி பவுலுக்கும் குதிரைகளை ஆயத்தமாக்குங்கள்.”</verse>
				<verse number="25">அத்துடன் அந்த படைத்தளபதி ஒரு கடிதத்தை பின்வருமாறு எழுதினான்:</verse>
				<verse number="26">கிலவுதியு லீசியா ஆகிய நான், மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு எழுதுகின்றதாவது: வாழ்த்துதல்கள்.</verse>
				<verse number="27">இந்த மனிதன் யூதரால் பிடிக்கப்பட்டிருந்தான். அவர்கள் இவனைக் கொலை செய்ய முயற்சிக்கையில், இவன் ஒரு ரோம குடிமகன் என்று அறிந்து எனது இராணுவ வீரருடன் சென்று நான் இவனைக் காப்பாற்றினேன்.</verse>
				<verse number="28">அவர்கள் இவனைக் குற்றம் சாட்டுவது ஏன் என்று அறிய விரும்பி, நான் இவனை அவர்களுடைய நியாயசபைக்கு முன்பாகக் கொண்டுவந்தேன்.</verse>
				<verse number="29">அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு, அவர்களது சமய நீதிச்சட்டம் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. அவை மரணதண்டனைக்கோ, சிறைத்தண்டனைக்கோ உரிய குற்றச்சாட்டாய் இருக்கவில்லை.</verse>
				<verse number="30">கொலை முயற்சி சூழ்ச்சியொன்று இவனுக்கெதிராக செய்யப்படுவதாக எனக்கு அறிவிக்கப்பட்டபோது, உடனே நான் இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன். அத்துடன், இவனைக் குற்றம் சாட்டியவர்களிடம், இவனுக்கு விரோதமான தங்களது வழக்கை உம்மிடம் கொண்டுவரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="31">இராணுவ வீரர்களும் தங்களுக்கு இடப்பட்ட உத்தரவின்படியே, பவுலைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு பயணமாகி, அன்றிரவே அந்திப்பத்திரி பட்டணத்தைச் சென்றடைந்தார்கள்.</verse>
				<verse number="32">மறுநாள் குதிரை வீரரை அவனுடன் போகும்படி அனுப்பிவிட்டு மற்றவர்கள் தங்களது முகாமுக்குத் திரும்பினார்கள்.</verse>
				<verse number="33">குதிரை வீரர்கள் செசரியாவைச் சென்றடைந்தபோது, கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து பவுலையும் அவனிடம் ஒப்படைத்தார்கள்.</verse>
				<verse number="34">ஆளுநர் கடிதத்தை வாசித்துவிட்டு பவுல் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டான். அவன் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,</verse>
				<verse number="35">பவுலிடம், “உன்னைக் குற்றம் சாட்டுகின்றவர்கள் இங்கே வரும்போது நான் உனது வழக்கை விசாரிப்பேன்” என்றான். பின்பு அவன் ஏரோதுவின் அரண்மனையில் பவுலைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டான்.</verse>
			</chapter>
			<chapter number="24">
				<verse number="1">ஐந்து நாட்களுக்குப் பின்னர், தலைமை மதகுரு அனனியாவும், சமூகத் தலைவரில் சிலரும், தெர்த்துல்லு என்னும் பெயருடைய வழக்கறிஞனும் செசரியாவுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆளுநருக்கு முன் வைத்தார்கள்.</verse>
				<verse number="2">பவுல் அழைத்து வரப்பட்டபோது வழக்கறிஞனாகிய தெர்த்துல்லு, ஆளுநர் பேலிக்ஸின் முன்பாக தன் வழக்கை எடுத்துரைத்தான்: “மாண்புமிகு ஆளுநர் அவர்களே, உங்கள் ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக நாங்கள் சமாதானத்தை அனுபவித்து வருகின்றோம், உங்களுடைய முன்நோக்குள்ள நடவடிக்கையால் இந்த நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன.</verse>
				<verse number="3">எல்லா இடங்களிலும், எல்லாவிதத்திலேயும் இதை நாங்கள் மிகுந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.</verse>
				<verse number="4">நான் உங்களுடைய அதிக நேரத்தை விரயமாக்காமல் சுருக்கமாக சொல்கின்றேன். எனவே நான் சொல்வதைத் தயவாய் கேட்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.</verse>
				<verse number="5">“இந்த மனிதன் குழப்பம் விளைவிக்கின்றவனாய் இருப்பதை நாங்கள் கண்டோம்; உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் வாழுமிடங்களில் எல்லாம் இவன் கலவரங்களை தூண்டிவிடுகிறான். இவனே நசரேய மதப்பிரிவினரின் தலைவனாயிருக்கிறான்.</verse>
				<verse number="6">அத்துடன் எருசலேம் ஆலயத்தையும் தூய்மைக்கேடாக்க முயன்றான். அதனால் எங்கள் நீதிச்சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவே, நாங்கள் இவனைப் பிடித்தோம்.</verse>
				<verse number="7">ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக இவனை எங்கள் கைகளிலிருந்து இழுத்துக் கொண்டுபோய்,</verse>
				<verse number="8">இவன்மேல் குற்றம் சாட்டுகின்றவர்களை உங்களுக்கு முன் வரும்படி கட்டளையிட்டான். நீங்களே இவனை நேரடியாக விசாரிப்பதன் மூலமாக நாங்கள் இவனுக்கு எதிராகக் கொண்டுவரும் எல்லாக் குற்றச்சாட்டுக்களைப் பற்றியும் இவனிடமிருந்தே நீங்கள் விசாரித்து அறிந்துகொள்வீர்கள்.”</verse>
				<verse number="9">தெர்த்துல்லுவுடன் வந்திருந்த யூதர்களும் தொடர்ந்து அதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவனது குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தினார்கள்.</verse>
				<verse number="10">பவுல் பதிலளிக்கும்படி ஆளுநர் சைகை காட்டியபோது பவுல் சொன்னதாவது: “நீங்கள் பல வருடங்களாக இந்த நாட்டின் மேல் நீதிபதியாய் இருக்கின்ற அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று நான் அறிவேன். எனவே நான் மகிழ்ச்சியுடனே எனது சார்பாய் எனது எதிர்த்தரப்பு வாதத்தை முன்வைக்கின்றேன்.</verse>
				<verse number="11">நான் வழிபாடு செய்வதற்காக எருசலேமுக்கு சென்ற நாளிலிருந்து இன்றுவரை பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை என்பதனை இலகுவாக நீங்கள் விசாரித்து அறிந்துகொள்வீர்கள்.</verse>
				<verse number="12">நான் ஆலயத்திலே எவருடனும் விவாதம் செய்ததையோ, ஜெபஆலயங்களிலோ, பட்டணத்தின் வேறு இடங்களிலோ மக்களைக் கலவரம் செய்யத் தூண்டியதையோ என்னைக் குற்றம் சாட்டுகின்றவர்கள் கண்டறிந்ததில்லை.</verse>
				<verse number="13">இவர்கள் இப்போது எனக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுக்களை உங்களுக்கு முன்னால் நிரூபிக்கவும் இவர்களால் முடியாது.</verse>
				<verse number="14">ஆயினும் பிழையான மதப்பிரிவினை மார்க்கம் என்று இவர்கள் கருதுகின்ற கிறிஸ்துவின் மார்க்கத்தைப் பின்பற்றி, எங்கள் முற்பிதாக்களின் இறைவனை நான் வழிபடுகின்றேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். யூதர்களின் நீதிச்சட்டத்தில் கூறப்பட்டவற்றுடன், இறைவாக்கினரின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.</verse>
				<verse number="15">அவற்றின் அடிப்படையில், நீதிமான்களும் கொடியவர்களும் இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுவார்கள் என்ற இறைவனுக்குள்ளான நல் எதிர்பார்ப்பு, இவர்களைப் போலவே எனக்கும் இருக்கின்றது.</verse>
				<verse number="16">அதனால்தான் இறைவனுக்கு முன்பாகவும், மனிதனுக்கு முன்பாகவும் என் மனசாட்சியைச் சுத்தமுள்ளதாகக் காத்துக்கொள்ள நான் எப்போதும் பிரயாசப்படுகிறேன்.</verse>
				<verse number="17">“இப்பொழுது பல வருடங்களுக்குப் பின் என் மக்களிடம் திரும்பி வந்து, ஏழைகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்காகவும் காணிக்கைகளை செலுத்துவதற்காகவும் எருசலேமுக்கு சென்றேன்.</verse>
				<verse number="18">இதை நான் ஆலய முற்றத்தில் செய்துகொண்டிருக்கும் போதே இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது நான் சம்பிரதாய முறைப்படி சுத்தமாகவே இருந்தேன். என்னுடன் மக்கள் கூட்டம் எதுவும் இருக்கவில்லை. எந்தவிதமான குழப்பத்திலும் நான் ஈடுபடவும் இல்லை.</verse>
				<verse number="19">ஆனால் அச்சந்தர்ப்பத்தில் ஆசியா மாகாணத்திலிருந்து வந்திருந்த சில யூதர்கள் அங்கே இருந்தார்களல்லவா? அப்படி, எனக்கெதிராக அவர்களுக்கு ஏதாவது இருக்குமானால், அக்குற்றத்தை என்மேல் சுமத்துவதற்கு இங்கே உங்கள் முன்பாக அவர்கள் இருக்க வேண்டுமே.</verse>
				<verse number="20">அப்படியில்லாவிட்டால், நான் யூதர்களின் நியாயசபையின் முன் நின்றபோது என்னிடம் என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்று இங்கிருக்கும் இவர்களே கூறட்டும்.</verse>
				<verse number="21">‘இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இடம்பெறும் என்பதைப்பற்றியே இன்று நான் உங்களுக்கு முன்பாக விசாரணை செய்யப்படுகின்றேன்’ என்று நான் அவர்கள் முன்பாக நின்றபோது அன்று சத்தமிட்டுச் சொன்னேன். அதை மாத்திரமே அவர்கள் எனக்கெதிராகக் கொண்டுவரலாம்” என்று பவுல் சொல்லி முடித்தான்.</verse>
				<verse number="22">அப்போது கிறிஸ்துவின் மார்க்கத்தை நன்கு நுணுக்கமாக அறிந்திருந்த பேலிக்ஸ், “படைத்தளபதி லீசியா வரும்போது உங்கள் வழக்கிற்குத் தீர்ப்பு கூறுவேன்” என்று சொல்லி, விசாரணையை ஒத்தி வைத்தான்.</verse>
				<verse number="23">அத்துடன் பவுலைக் காவலில் வைக்கும்படியாகவும், ஆனாலும் அவனுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுக்கும்படியாகவும், அவனுடைய தேவைகளைக் கொடுத்து உதவுவதற்கு அவனது நண்பர்களை அனுமதிக்கும்படியாகவும் நூற்றுக்குத் தளபதிக்கு பேலிக்ஸ் உத்தரவிட்டான்.</verse>
				<verse number="24">சில நாட்களுக்குப் பின்பு, பவுல் பேசுவதைக் கேட்பதற்காக யூதப் பெண்ணான தன் மனைவி துருசில்லாளுடன் பேலிக்ஸ் வந்தான். அவன் பவுலை அழைத்து வரச்சொல்லி, கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தைக் குறித்து பவுல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="25">ஆனால் பவுலோ நீதியையும், தன்னடக்கத்தையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசியபோது பேலிக்ஸ் பயமடைந்தான். அவன் பவுலிடம், “இப்போதைக்கு இதுபோதும்! நீ போகலாம். வசதியான நேரம் கிடைக்கும்போது, நான் உன்னைத் திரும்பவும் கூப்பிடுவேன்” என்றான்.</verse>
				<verse number="26">அதேவேளை, பவுல் தனக்கு இலஞ்சம் கொடுப்பான் என்று அவன் எதிர்பார்த்து, பவுலை அடிக்கடி வரவழைத்து அவனிடம் பேசினான்.</verse>
				<verse number="27">இரண்டு வருடங்கள் கடந்த பின், பேலிக்ஸின் இடத்தில் பொர்க்கியு பெஸ்து என்பவன் பதவிக்கு வந்தான். ஆயினும் பேலிக்ஸ் யூதருக்குத் தயவு காட்ட விரும்பி, பவுலை சிறையிலே விட்டுச் சென்றான்.</verse>
			</chapter>
			<chapter number="25">
				<verse number="1">அந்த மாகாணத்திற்கு புதிய ஆளுநர் பெஸ்து வந்துசேர்ந்து மூன்று நாட்களின் பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான்.</verse>
				<verse number="2">அங்கே தலைமை மதகுருக்களும், யூதத்தலைவர்களும் அவனைச் சந்தித்து பவுலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்து, கெஞ்சி மன்றாடி,</verse>
				<verse number="3">பவுலை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டுவந்து தங்களுக்கு ஒரு சலுகை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், வழியிலேயே பவுலை மறைந்திருந்து கொல்ல அவர்கள் சூழ்ச்சி செய்திருந்தார்கள்.</verse>
				<verse number="4">பெஸ்து அவர்களுக்குப் பதிலளித்து, “பவுல் செசரியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். விரைவில் நானும் அங்கே போக இருக்கின்றேன்.</verse>
				<verse number="5">பவுல் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அங்கேயே வைத்து அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அவன்மீது சுமத்தட்டும்.” என்றான்.</verse>
				<verse number="6">எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் அவன் தங்கிவிட்டு செசரியாவுக்குச் சென்றான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, நீதி ஆசனத்தில் அமர்ந்து பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான்.</verse>
				<verse number="7">பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து வந்திருந்த யூதர்கள் அவனைச் சுற்றி நின்றார்கள். அவர்கள் அவன்மீது மிகக் கடுமையான அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை.</verse>
				<verse number="8">அப்போது பவுல், “நான் யூதருடைய நீதிச்சட்டத்திற்கு எதிராகவோ, எருசலேம் ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசர் சீசருக்கு எதிராகவோ எந்தக் குற்றமும் செய்யவில்லை” என தனது தரப்பு வாதத்தை முன்வைத்தான்.</verse>
				<verse number="9">ஆயினும் பெஸ்து, யூதர்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்ள விரும்பி, “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே எனக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து விசாரணை செய்யப்படுவதற்கு உடன்படுகிறாயா?” என பவுலிடம் கேட்டான்.</verse>
				<verse number="10">அதற்கு பவுல், “முறைப்படி விசாரணை செய்யப்பட வேண்டிய நீதிமன்றமாகிய சீசருடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நான் இங்கே ஏற்கெனவே நின்று கொண்டிருக்கின்றேனே! இங்கேயே நான் விசாரணை செய்யப்பட வேண்டும். நான் யூதருக்கு எதிராக எவ்வித குற்றமும் செய்யவில்லை என்பதை நீர் நன்றாய் அறிவீர்.</verse>
				<verse number="11">ஆயினும், மரணதண்டனை பெறுவதற்குரிய குற்றம் எதையாகிலும் நான் செய்திருந்தால், நான் மரணிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் எனக்கு எதிராக இந்த யூதர்களால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லையென்றால், அவர்களிடம் என்னை ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. இத்தால் பேரரசர் சீசரிடம் என் விசாரணையை நான் மேன்முறையீடு செய்கின்றேன்” என்றான்.</verse>
				<verse number="12">பெஸ்து தனது ஆலோசகர் சபையினருடன் கூடி ஆராய்ந்தபின் பவுலிடம், “நீ பேரரசர் சீசரிடம் மேன்முறையீடு செய்திருக்கின்றாய், பேரரசர் சீசரிடமே நீ போவாய்” என்றான்.</verse>
				<verse number="13">சில நாட்களின் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும் பெஸ்துவுக்கு வரவேற்பு அளித்திட செசரியாவுக்கு வந்தார்கள்.</verse>
				<verse number="14">அவர்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்ததால், பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து அவர்களுடன் கலந்துரையாடினான். அவன் அரசனிடம், “பேலிக்ஸ் தீர்ப்பு வழங்காது விட்டுச் சென்ற சிறைக் கைதி ஒருவன் இங்கே இருக்கின்றான்.</verse>
				<verse number="15">நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை மதகுருக்களும் யூத சமூகத் தலைவர்களும் அவனுக்கு விரோதமாய் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவந்து, அவனைக் குற்றவாளியாய் தீர்க்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="16">“அதற்கு நான், ‘ஒருவன், தன்மீது குற்றம் சாட்டுகின்றவர்களை நீதிமன்றத்தில் நேருக்கு நேராகச் சந்தித்து, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான, தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு முன் எவரையும் குற்றம் சாட்டுபவர்களிடம் கையளிப்பது ரோமரின் வழக்கம் அல்ல’ என்று அவர்களுக்குச் சொன்னேன்.</verse>
				<verse number="17">அதன்படி அவர்கள் இங்கே வந்து சந்தித்தபோது நான் தாமதப்படுத்தாமல் மறுநாளே நீதிமன்றத்தைக் கூட்டி, நீதி ஆசனத்தில் அமர்ந்து, அவனைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டேன்.</verse>
				<verse number="18">அவன்மீது குற்றம் சாட்டியவர்கள் எழுந்து நின்று தமது தரப்பினரின் வாதத்தை முன்வைத்தபோது, நான் எதிர்பார்த்த பயங்கரமான குற்றங்கள் எதனையும் அவர்கள் அவன்மீது சுமத்தவில்லை.</verse>
				<verse number="19">மாறாக அவர்கள் தங்களுடைய சொந்த மதத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் வலியுறுத்திக் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவரைக் குறித்துமே கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள்.</verse>
				<verse number="20">இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசாரணை செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன். ஆகவே அவனிடம் நான், ‘நீ எருசலேமுக்குப் போய் இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பற்றி அங்கே விசாரணை செய்யப்பட உடன்படுகிறாயா?’ என்று கேட்டேன்.</verse>
				<verse number="21">ஆனால் பவுலோ பேரரசர் சீசருடைய தீர்ப்புக்காக மேன்முறையீடு செய்து, அதுவரை தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டான். எனவே அவன் சீசரிடம் அனுப்பப்படும் வரைக்கும், அவனைத் தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான்.</verse>
				<verse number="22">அப்போது அகிரிப்பா அரசன் பெஸ்துவிடம், “அந்த மனிதன் சொல்வதை நானும் கேட்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு அவன், “நாளைக்கே அவன் பேசுவதை நீர் கேட்கலாம்” என்றான்.</verse>
				<verse number="23">மறுநாள் அகிரிப்பா அரசனும் பெர்னிக்கேயாளும், பெரும் அரச ஆடம்பரத்துடன், உயர் படைத்தளபதிகளும் பட்டணத்தின் உயர் மதிப்புக்குரிய மனிதர்களும் சூழ்ந்துவர, பார்வையாளர் அரங்கத்திற்குள் வந்தார்கள். பின்னர் பெஸ்து கட்டளையிட, பவுல் உள்ளே கொண்டுவரப்பட்டான்.</verse>
				<verse number="24">அப்போது பெஸ்து, “அகிரிப்பா அரசர் அவர்களே! இங்கே எங்களோடு இருப்பவர்களே! நீங்கள் அவதானிக்கின்ற இந்த மனிதனைக் குறித்து அனைத்து யூத சமூகத்தவர்களும் எருசலேமில் உள்ளவர்களும் இங்கே செசரியாவில் உள்ளவர்களும்கூட, என்னிடம் மனு சமர்ப்பித்து, ‘இவன் இனியும் உயிர் வாழக் கூடாது’ என்று கூக்குரலும் இட்டார்கள்.</verse>
				<verse number="25">ஆனால் மரணதண்டனை பெறுவதற்குத் தகுதியான எதையும் இவன் செய்யவில்லை என்று நான் கண்டுகொண்டேன். ஆனால் இவனாகவே ரோமப் பேரரசர் சீசருக்கு மேன்முறையீடு செய்திருக்கின்றபடியால், நான் இவனை ரோம் நகருக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன்.</verse>
				<verse number="26">ஆனாலும் இவனைப்பற்றி என்னை ஆள்பவராகிய பேரரசர் சீசருக்கு எழுதுவதற்குத் தீர்க்கமான காரணம் எதுவும் என்னிடம் இல்லை. எனவேதான், நான் இப்போது உங்கள் எல்லோருக்கும் முன்பாக விசேடமாக அகிரிப்பா அரசே! உமக்கு முன்பாக இவனைக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த முன்விசாரணையின் முடிவில் இவனைப்பற்றி எழுதுவதற்கு ஏதாவது எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.</verse>
				<verse number="27">ஒரு கைதிக்கு எதிரான தெளிவான குற்றப் பட்டியல் இல்லாமல், அவனை அனுப்புவது நியாயமற்றதாக எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.</verse>
			</chapter>
			<chapter number="26">
				<verse number="1">அப்போது அகிரிப்பா பவுலிடம், “உன் சார்பாக உரையாற்ற உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான். எனவே பவுல் தனது கையை உயர்த்திச் சைகை காட்டி தனது சார்பான வாதத்தை முன்வைத்தான்:</verse>
				<verse number="2">“அகிரிப்பா அரசே, யூதர்கள் என்மேல் சுமத்திய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்குமான எனது எதிர் வாதத்தினைக் கேட்பதற்கு மிகப் பொருத்தமானவராகிய உம்மிடம், இதை இன்று சமர்ப்பிக்கக் கிடைத்தது எனது பாக்கியமே.</verse>
				<verse number="3">ஏனெனில், யூதருடைய எல்லா சம்பிரதாயங்களையும் அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் நீர் நன்றாய் அறிந்திருக்கிறீர். எனவே, நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்படி உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றேன்.</verse>
				<verse number="4">“எனது இளமைப் பருவத்திலிருந்து என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் என் நாட்டிலும், பின்பு எருசலேமிலும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை எல்லா யூதர்களும் அறிவார்கள்.</verse>
				<verse number="5">நீண்ட காலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் விரும்பினால் நான் எங்கள் சமயத்திலுள்ள ஒரு கண்டிப்பான பிரிவின்படி, எப்படி ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை அவர்களே சாட்சியாகச் சொல்லலாம்.</verse>
				<verse number="6">ஆனால் இப்பொழுதோ, எங்கள் முற்பிதாக்களுக்கு இறைவன் வாக்குறுதி பண்ணியதில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இங்கே விசாரணை செய்யப்படுகிறேன்.</verse>
				<verse number="7">இந்த வாக்குறுதி நிறைவேறுவதைக் காணும் எதிர்பார்ப்புடனேயே எங்கள் பன்னிரண்டு கோத்திரத்தினரும் இரவும் பகலுமாய் இறைவனுக்கு ஆர்வத்துடன் பணி செய்கின்றார்கள். அரசே! அந்த நம்பிக்கையின் காரணமாகவே யூதர்கள் என்மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.</verse>
				<verse number="8">இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவதை நம்பமுடியாது என நீங்கள் எண்ணுவது ஏன்?</verse>
				<verse number="9">“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நானும் முன்பு எண்ணியிருந்தேன்.</verse>
				<verse number="10">அதையே நான் எருசலேமில் செய்தேன். தலைமை மதகுருக்களின் அதிகாரத்தைப் பெற்று பரிசுத்தவான்களில் பலரைச் சிறையில் அடைத்தேன். அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு எதிராக நானும் என் அங்கீகாரத்தை வழங்கியிருந்தேன்.</verse>
				<verse number="11">ஒவ்வொரு ஜெபஆலயத்திற்கும் போய், அவர்களைப் பல முறை தண்டனைக்கு உட்படுத்தி, இறைவனை நிந்தித்துப் பேசும்படி அவர்களை வற்புறுத்தினேன். அவர்களுக்கு எதிராக நான் கடுங்கோபம் கொண்டிருந்ததால், அவர்களைத் துன்புறுத்தும்படி வேறு நகரங்களுக்கும் சென்றேன்.</verse>
				<verse number="12">“இப்படியாக ஒருமுறை நான் தலைமை மதகுருக்களின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன்.</verse>
				<verse number="13">அரசே, நான் போகும் வழியில், நண்பகல் வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளி பிரகாசிக்கக் கண்டேன். அது சூரியனை விடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது.</verse>
				<verse number="14">நாங்கள் எல்லோரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரேய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே! சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்’ என்றது.</verse>
				<verse number="15">“அப்போது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, ‘நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.</verse>
				<verse number="16">இப்போது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் குறித்து நீ கண்டவற்றுக்கும் நான் உனக்குக் காண்பிக்கப் போகின்றவற்றுக்கும் சாட்சியாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="17">நான் உன்னை உன்னுடைய சொந்த மக்களிடமும், யூதரல்லாதவர்களிடமும் அனுப்புகிறேன். அவர்களிடமிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.</verse>
				<verse number="18">இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும், யூதரல்லாத மக்களும் திரும்பும்படி, நீ அவர்களது கண்களைத் திறக்கச் செய்யவே நான் உன்னை அனுப்புகிறேன். ஆகவே அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று என்மேல் வைத்த விசுவாசத்தினால், பரிசுத்தமாக்கப்பட்ட மக்களுடன் அவர்களும் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’ என்றார்.</verse>
				<verse number="19">“அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.</verse>
				<verse number="20">எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும் பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவிலும் இருந்தவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்ப வேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவித்தேன்.</verse>
				<verse number="21">இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலை செய்ய முயற்சித்தார்கள்.</verse>
				<verse number="22">ஆயினும், இன்றுவரை நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி அளித்துக்கொண்டு இருக்கின்றேன். இறைவாக்கினரும் மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கின்றேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை.</verse>
				<verse number="23">மேசியா வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய் தமது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்.”</verse>
				<verse number="24">இப்படியாக பவுல் தனது சார்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது பெஸ்து குறுக்கிட்டு, “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! உனது அதிக படிப்பினால் உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான்.</verse>
				<verse number="25">அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே! எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும் நியாயமுமானது.</verse>
				<verse number="26">அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் வெளிப்படையாகப் பேசுகின்றேன். நான் சொன்ன இவை எதுவுமே அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல.</verse>
				<verse number="27">அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்பது எனக்குத் தெரியும்” என்றான்.</verse>
				<verse number="28">அப்போது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே நீ என்னைக் கிறிஸ்தவனாக மாற்றிவிட நினைக்கிறாயா?” என்றான்.</verse>
				<verse number="29">அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும் என்னைப் போல் ஆக வேண்டும். ஆனால் அவர்களும் இவ்விதம் சங்கிலிகளால் கட்டப்படக் கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான்.</verse>
				<verse number="30">அரசன் எழுந்திருக்க, அவனுடனே ஆளுநரும் பெர்னிக்கேயாளும் அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களும் எழுந்தார்கள்.</verse>
				<verse number="31">அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில், “இவன் மரணதண்டனையையோ, சிறைத்தண்டனையையோ பெறுவதற்குத் தகுதியான எதையும் செய்யவில்லை” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.</verse>
				<verse number="32">அப்போது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேன்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.</verse>
			</chapter>
			<chapter number="27">
				<verse number="1">நாங்கள் கப்பல் மூலமாக இத்தாலியாவுக்குப் போக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது பவுலும் வேறு சில கைதிகளும் யூலியஸ் என்னும் நூற்றுக்குத் தளபதியினிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவன் ரோமப் பேரரசின் படைப்பிரிவைச் சேர்ந்தவன்.</verse>
				<verse number="2">நாங்கள் அதிரமித்தியம் ஊரிலிருந்து வந்த கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டோம். அது ஆசியா மாகாணத்தின் கரையோரத்திலுள்ள துறைமுகங்களை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த மக்கெதோனியனான அரிஸ்தர்க்கு என்பவனும் எங்களுடன் இருந்தான்.</verse>
				<verse number="3">மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகத்தில் இறங்கினோம். யூலியஸ், பவுலின் மேல் தயவு காண்பித்தான். அதனால் பவுல் தன் சிநேகிதர்களிடம் போகவும் தன் தேவைக்கு அவர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்ளவும் அவன் அனுமதித்தான்.</verse>
				<verse number="4">அங்கிருந்து நாங்கள் மீண்டும் புறப்பட்டு சீப்புரு தீவின் காற்று வீசாத பக்கமாகக் கடந்து சென்றோம். ஏனெனில், காற்று எங்களுக்கு எதிராய் வீசிக் கொண்டிருந்தது.</verse>
				<verse number="5">பின்பு சிலிசியா, பம்பிலியா நாடுகளின் பக்கமாயுள்ள நடுக்கடலைக் கடந்து சென்று லீசியா நாட்டிலுள்ள மீறா பட்டணத்தைச் சென்றடைந்தோம்.</verse>
				<verse number="6">அங்கே அந்த நூற்றுக்குத் தளபதி, அலெக்சந்திரியா பட்டணத்தைச் சேர்ந்த, இத்தாலிக்குச் செல்கின்ற ஒரு கப்பலைக் கண்டு, எங்களை அதில் ஏற்றினான்.</verse>
				<verse number="7">பல நாட்களாக நாங்கள் மெதுவாகப் பயணம் செய்து, கஷ்டப்பட்டு கினீது தீவுக்கு அப்பால் வந்து சேர்ந்தோம். காற்று எங்களுக்கு எதிராய் வீசி எங்கள் பாதையைத் தடை செய்தபடியால், சல்மோனே முனைக்கு எதிராகப் போய், கிரேத்தா தீவின் காற்று வீசாத பக்கமாகப் பயணம் செய்தோம்.</verse>
				<verse number="8">கஷ்டப்பட்டு அப்பகுதியைக் கடந்து, “பாதுகாப்புத் துறைமுகம்” எனப்பட்ட ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். அது லசேயப் பட்டணத்தின் அருகே இருந்தது.</verse>
				<verse number="9">பயணத்தில் அதிக காலம் சென்றதால், உபவாச காலம் கடந்துவிட்டிருந்தது. எனவே சீரற்ற காலநிலையில் கடல் பயணத்தை தொடர்வது ஆபத்தானது என்று பவுல் அவர்களை எச்சரித்து:</verse>
				<verse number="10">“நண்பர்களே, நமது கப்பற் பயணம் ஆபத்தானதாய் இருக்கும் என்று நான் உணருகின்றேன். கப்பலுக்கும் பொருட்களுக்கும் மட்டுமல்ல, நம் உயிர்களுக்கும் இழப்பு நேரிடலாம்” என்றான்.</verse>
				<verse number="11">ஆனால் நூற்றுக்குத் தளபதியோ பவுலின் ஆலோசனையைவிட, கப்பலோட்டியும் கப்பலின் உரிமையாளனும் சொன்னதையே ஏற்றுக்கொண்டான்.</verse>
				<verse number="12">நாங்கள் தங்கியிருந்த துறைமுகம் குளிர் காலத்தைக் கழிப்பதற்கு ஏற்றதாய் இல்லாததால், அங்கிருந்து கடந்து சென்று எப்படியாவது பெனிக்கேயைச் சென்றடைந்து, அங்கே குளிர் காலத்தைக் கழிக்கலாம் என கப்பலில் இருந்த பெரும்பாலானோர் தீர்மானித்தார்கள். பெனிக்கே துறைமுகமானது கிரேத்தா தீவில் இருந்தது. இது தென்மேற்காகவும், வடமேற்காகவும் பார்த்தபடி அமைந்திருந்தது.</verse>
				<verse number="13">தெற்கிலிருந்து காற்று மெதுவாய் வீசத் தொடங்கியபோது, அவர்கள் தங்கள் எண்ணம் நிறைவேறும் என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை ஏற்றி, கிரேத்தா தீவின் கரையோரமாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="14">ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே வடகிழக்கு கொண்டல் என்னும் பெருங்காற்று தீவுப் பக்கத்திலிருந்து மிகப் பலமாய் வீசிற்று.</verse>
				<verse number="15">கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டதால், காற்றை எதிர்த்து கப்பலை செலுத்த முடியவில்லை. எனவே காற்றின் திசையிலேயே கப்பலைச் செல்லவிட்டோம்.</verse>
				<verse number="16">கிலவுதா எனப்பட்ட ஒரு சிறிய தீவின் காற்று வீசாத பக்கமாக நாங்கள் கடந்து போகையில் கப்பலில் இருந்த உயிர்காப்பு படகை சிரமத்துடன் பாதுகாத்துக் கொண்டோம்.</verse>
				<verse number="17">எப்படியோ மாலுமிகள் அதைக் கப்பலுக்குள் தூக்கி எடுத்தார்கள். அதன்பின் கப்பல் உடையாதிருக்க, கப்பலை கயிறுகளால் இணைத்துக் கட்டினார்கள். சிர்த்திஸ் வளைகுடா பகுதியிலுள்ள மணல் திட்டுகளில் கப்பல் மோதிவிடுமோ என்று அவர்கள் பயந்து, விசேட நங்கூரத்தை இறக்கி, காற்றின் திசையிலேயே கப்பலைத் தானாகப் போகவிட்டார்கள்.</verse>
				<verse number="18">நாங்கள் புயலினால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டு அடிபட்டதால், மறுநாளிலே கப்பலில் ஏற்றி வந்த சரக்குகளை மாலுமிகள் கடலில் வீசத் தொடங்கினார்கள்.</verse>
				<verse number="19">மூன்றாம் நாளிலே, அவர்கள் தங்களுடைய கைகளினாலேயே கப்பலின் உபகரணங்களையும் வீசினார்கள்.</verse>
				<verse number="20">பல நாட்களாக சூரியனோ நட்சத்திரங்களோ காணப்படவில்லை. புயலும் வேகமாய் வீசிக் கொண்டிருந்தது. இதனால் நாங்கள் உயிர் தப்புவோம் என்ற நம்பிக்கையும் அற்றுப் போயிற்று.</verse>
				<verse number="21">பல நாட்களாக அவர்கள் உணவின்றி இருந்ததால், பவுல் அவர்கள் நடுவே எழுந்து நின்று, “நண்பர்களே, நீங்கள் எனது புத்திமதியைக் கேட்டு, கிரேத்தா தீவைவிட்டுப் புறப்படாமல் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இந்த சேதத்தையும் இழப்பையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம்.</verse>
				<verse number="22">ஆனாலும் இப்போது தைரியமாய் இருக்கும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், உங்களில் எவருக்கும் உயிரிழப்பு ஏற்படாது. கப்பலை மட்டுமே இழக்க நேரிடும்.</verse>
				<verse number="23">நேற்று இரவு என்மேல் உரிமையுள்ளவரும், என்னைத் தன் ஊழியத்தில் நியமித்தவருமான இறைவனின் தூதன் ஒருவன் என் அருகே வந்து நின்றான்.</verse>
				<verse number="24">அந்த தூதன் என்னிடம், ‘பவுலே பயப்படாதே, நீ ரோமப் பேரரசன் சீசருக்கு முன்பாக நிற்க வேண்டும். உன்னுடன் பயணம் செய்கின்ற அனைவரினது உயிரையும், இறைவன் உனக்குத் தயவாய் காப்பாற்றித் தருவார்’ என்றான்.</verse>
				<verse number="25">ஆகையால், தைரியமாயிருங்கள். தூதன் எனக்குச் சொன்னபடியே நடக்கும் என்று, நான் இறைவனில் விசுவாசமாயிருக்கின்றேன்.</verse>
				<verse number="26">ஆயினும், ஏதாவது ஒரு தீவில் நாம் கரை ஒதுங்குவோம்” என்று சொன்னான்.</verse>
				<verse number="27">பதினான்காம் நாள் இரவிலே ஆதிரியா கடலில் அலைந்து கொண்டிருந்தோம். நடு இரவானபோது மாலுமிகள் தாங்கள் ஒரு கரையை நெருங்கிச் சேர்வதாக உணர்ந்தார்கள்.</verse>
				<verse number="28">அவர்கள் கடலின் ஆழத்தை அளந்தபோது அது நூற்றிருபது அடி ஆழமாய் இருந்தது. சிறிது நேரத்தின் பின் அவர்கள் மீண்டும் அளந்து பார்த்தபோது அது தொண்ணூறு அடி ஆழமாய் இருந்தது.</verse>
				<verse number="29">நாங்கள் பாறைகளில் மோதி விடுவோம் என்று பயந்து அவர்கள் கப்பலின் பின்புறத்திலிருந்து நான்கு நங்கூரங்களை வெளியே போட்டார்கள். பின்பு பகலின் வெளிச்சத்திற்காக மன்றாடினார்கள்.</verse>
				<verse number="30">மாலுமிகள் கப்பலில் இருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டு, கப்பலின் முன் பகுதியிலிருந்த நங்கூரங்களை இறக்குவது போல் பாசாங்கு செய்து, உயிர்காப்பு படகைக் கடலில் இறக்கினார்கள்.</verse>
				<verse number="31">அப்போது பவுல் நூற்றுக்குத் தளபதியையும், இராணுவ வீரர்களையும் பார்த்து, “இந்த மனிதர்கள் கப்பலில் இல்லாது போனால், உங்களால் உயிர் தப்ப முடியாது” என்றான்.</verse>
				<verse number="32">உடனே இராணுவ வீரர்கள் உயிர்காப்பு படகைக் கட்டியிருந்த கயிற்றை வெட்டி, அதைக் கடலில் போகவிட்டார்கள்.</verse>
				<verse number="33">விடியற்காலையாகும்போது பவுல் அவர்கள் எல்லோரையும் பார்த்து, ஏதாவது உணவைச் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டான். அவன் அவர்களிடம், “பதினான்கு நாட்களாக நீங்கள் உணவு எதையும் சாப்பிடாமல், என்ன நடக்குமோ என்ற பயத்தோடு காத்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="34">இப்போது ஏதாவது உணவை உண்ணுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உயிர் தப்புவதற்கு அது உதவியாயிருக்கும். உங்களில் எவருக்கும், அவருடைய தலையிலுள்ள முடிக்குக்கூட ஒரு பாதிப்பும் நேரிடாது” என்றான்.</verse>
				<verse number="35">இதைச் சொன்ன பின், அவன் அப்பத்தை எடுத்து அவர்கள் எல்லோருக்கும் முன்பாக இறைவனுக்கு நன்றி செலுத்தினான். பின்பு, அதைத் துண்டுகளாக்கிச் சாப்பிடத் தொடங்கினான்.</verse>
				<verse number="36">அப்போது அவர்கள் எல்லோரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள்.</verse>
				<verse number="37">நாங்கள் எல்லோருமாக இருநூற்று எழுபத்தாறு பேர் அந்தக் கப்பலில் இருந்தோம்.</verse>
				<verse number="38">அவர்கள் தங்கள் பசியாறச் சாப்பிட்ட பின், கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் வீசி, அதன் பாரத்தைக் குறைத்தார்கள்.</verse>
				<verse number="39">பொழுது விடிந்ததும், அந்த இடம் எது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. ஆனால் மணல் நிறைந்த கரையுடன் ஒரு வளைகுடா இருப்பதை அவர்கள் கண்டு, முடியுமானால் கப்பலை அங்கே கரை சேர்க்கலாமென்று தீர்மானித்தார்கள்.</verse>
				<verse number="40">அவர்கள் நங்கூரங்களை அவிழ்த்து அவற்றைக் கடலில் விட்டார்கள். அதேவேளையில், சுக்கான்களைக் கட்டியிருந்த கயிறுகளைத் தளர்த்திவிட்டார்கள். பின்பு கப்பலின் முன்புற பாயை இழுத்து காற்றின் பக்கமாய் உயர்த்தி, கடற்கரையை நோக்கி கப்பலைச் செலுத்தினார்கள்.</verse>
				<verse number="41">கப்பல் ஒரு மணல் திட்டில் கரைதட்டி, தரையில் தங்கியது. கப்பலின் முன் பகுதி, அதில் புதைந்து அசையாது நின்றது. கப்பலின் பின்பகுதியோ, அலைகளினால் அடிபட்டு துண்டு துண்டாய் உடைந்தது.</verse>
				<verse number="42">கைதிகளில் எவரும் நீந்தித் தப்பிப் போகாதபடி, அவர்களைக் கொன்றுவிட இராணுவ வீரர்கள் திட்டமிட்டார்கள்.</verse>
				<verse number="43">ஆனால் நூற்றுக்குத் தளபதி பவுலின் உயிரைக் காப்பாற்ற விரும்பி அவர்கள் அவ்விதம் செய்யாதபடி அவர்களைத் தடை செய்தான். நீந்தக் கூடியவர்களை முதலில் கப்பலில் இருந்து பாய்ந்து கரை சேரும்படியாகவும்,</verse>
				<verse number="44">அதன்பின் மற்றவர்களை பலகைகளின் மேலும், உடைந்த கப்பல் துண்டுகளின் மேலும் ஏறி கரை சேரும்படியாகவும் அவன் உத்தரவிட்டான். இவ்விதம், அனைவரும் பாதுகாப்பாய் கரை சேர்ந்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="28">
				<verse number="1">நாங்கள் பாதுகாப்பாய் கரை சேர்ந்த பின்பு, அந்தத் தீவு மோல்ட்டா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம்.</verse>
				<verse number="2">அந்தத் தீவில் இருந்தவர்கள் அளவுகடந்த தயவை எங்களுக்குக் காண்பித்தார்கள். அங்கு மழையும் குளிருமாய் இருந்ததால், அவர்கள் குளிர் காய்வதற்கு நெருப்பு மூட்டி, எங்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.</verse>
				<verse number="3">அங்கே பவுல் ஒரு கட்டு விறகுகளைச் சேர்த்துக் கொண்டுவந்து, அதை நெருப்பிலே போட்டபோது விறகுக்குள் இருந்து ஒரு விரியன் பாம்பு, சூடு தாங்க முடியாமல் வெளியே வந்து, பவுலின் கையை சுற்றிக் கொண்டது.</verse>
				<verse number="4">பாம்பு அவனுடைய கையில் தொங்குவதை அந்தத் தீவில் இருந்தவர்கள் கண்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவன் ஒரு கொலைபாதகனாயிருக்க வேண்டும். இவன் கடலில் இருந்து தப்பியபோதும், நீதி இவனை உயிரோடு வாழ விடவில்லை” என்றார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் பவுலோ, அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவித தீங்கும் நேரிடவில்லை.</verse>
				<verse number="6">அந்த மக்களோ, அவன் வீங்கி திடீரென விழுந்து மரணமடைவான் என்று எதிர்பார்த்தார்கள். நீண்ட நேரமாகியும்கூட அவர்கள் எதிர்பார்த்தபடி அவனுக்கு எதுவும் நேரிடாததைக் கண்டு, அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டவர்களாக, “இவன் ஒரு தெய்வம்” என்றார்கள்.</verse>
				<verse number="7">அந்தத் தீவைச் சேர்ந்தவர்களுக்கு தலைவனாயிருந்த புபிலியு என்பவனுக்குச் சொந்தமான பெரிய தோட்டம் அருகாமையில் இருந்தது. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் அழைத்து மூன்று நாட்களாக எங்களுக்கு விருந்து உபசாரம் செய்தான்.</verse>
				<verse number="8">அவனுடைய தகப்பனோ, காய்ச்சலினாலும் இரத்த பேதியினாலும் நோயுற்று படுக்கையிலேயே கிடந்தான். பவுல் அவனைப் பார்க்கும்படி உள்ளே போய் மன்றாடிய பின் அவன்மீது தனது கைகளை வைத்து அவனைக் குணமாக்கினான்.</verse>
				<verse number="9">இது நடந்தபோது, அந்தத் தீவிலிருந்த மற்ற நோயாளிகளும் பவுலிடம் வந்து குணமடைந்தார்கள்.</verse>
				<verse number="10">அவர்கள் பல்வேறு விதங்களில் எங்களுக்கு அதிக மதிப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார்கள். சிறிது காலம் கழித்து நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது, எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் மனமுவந்து அளித்து, அவற்றைக் கப்பலில் ஏற்றினார்கள்.</verse>
				<verse number="11">மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்தத் தீவிலே குளிர் காலத்தைக் கழிப்பதற்காக வந்து தங்கியிருந்த ஒரு கப்பலில் நாங்கள் புறப்பட்டோம். அது அலெக்சந்திரியாவைச் சேர்ந்த கப்பல். அக்கப்பலின் முகப்பு, இரட்டைத் தெய்வங்களின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="12">நாங்கள் சீரகூசாவை சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.</verse>
				<verse number="13">பின் அங்கிருந்து புறப்பட்டு சுற்றிச் சென்று, ரேகியும் துறைமுகத்தை அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசியது. அதற்கடுத்த நாள் நாங்கள் புத்தேயோலி துறைமுகத்தைச் சென்றடைந்தோம்.</verse>
				<verse number="14">அங்கே நாங்கள் சில சகோதரர்களைச் சந்தித்தோம். அவர்கள் எங்களைத் தங்களுடன் ஒரு வாரம் தங்கும்படி அழைத்தார்கள். அதன்பின் நாங்கள் ரோம் நகரத்துக்குப் போனோம்.</verse>
				<verse number="15">அங்குள்ள சகோதரர்கள் நாங்கள் வருகின்றோம் என்று கேள்விப்பட்டு எங்களைச் சந்திக்கப் பயணமாய் புறப்பட்டு அப்பியூ சந்தை, முச்சத்திரம் ஆகிய இடங்கள் வரை வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி உற்சாகமடைந்தான்.</verse>
				<verse number="16">நாங்கள் ரோம் நகரத்தைச் சென்றடைந்தபோது, பவுல் ஒரு இராணுவ வீரனின் காவலின் கீழ் ஒரு வீட்டில் தனியாகத் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டான்.</verse>
				<verse number="17">மூன்று நாட்களின் பின், அவன் யூதர்களின் தலைவர்களை ஒன்றாக அழைத்தான். அவர்கள் ஒன்றுகூடி வந்தபோது பவுல் அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நம்முடைய மக்களுக்கு விரோதமாகவோ, நம்முடைய முற்பிதாக்களின் முறைமைகளுக்கு விரோதமாகவோ எதையுமே நான் செய்யாதபோதிலும் எருசலேமிலே கைது செய்யப்பட்டு, ரோமரிடத்தில் கையளிக்கப்பட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="18">அவர்கள் என்னை விசாரணை செய்து மரணதண்டனைக்குரிய குற்றம் எதையும் நான் செய்யாததனால், என்னை விடுவிக்க விரும்பினார்கள்.</verse>
				<verse number="19">ஆனால் யூதர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, நான் ரோமப் பேரரசர் சீசரிடம் மேன்முறையீடு செய்ய வேண்டியதாகி விட்டது. ஆயினும் என்னுடைய மக்களுக்கு விரோதமான குற்றச்சாட்டு எதுவும் என்னிடம் இருந்ததில்லை.</verse>
				<verse number="20">இதனாலேயே நான் உங்களைக் கண்டு, உங்களிடம் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். இஸ்ரயேலர் கொண்டுள்ள நல்ல எதிர்பார்ப்பின் காரணமாகவே, நான் இந்தச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.</verse>
				<verse number="21">அதற்கு அவர்கள், “உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அங்கிருந்து வந்த சகோதரர்களில் எவரும் உன்னைக் குறித்துத் தீமையான எதையும் அறிவிக்கவோ, சொல்லவோ இல்லை.</verse>
				<verse number="22">ஆயினும், உன்னுடைய கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஏனெனில், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் இந்த மதப் பிரிவின் மார்க்கத்திற்கு விரோதமாக பேசுகின்றதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள்.</verse>
				<verse number="23">அவர்கள் பவுலைச் சந்திக்க ஒரு நாளைக் குறித்து பவுல் தங்கியிருந்த இடத்துக்குப் பெரும் கூட்டமாக வந்தார்கள். அவன் காலையிலிருந்து மாலை வரை இறைவனுடைய அரசைக் குறித்து விபரமாய் அவர்களுக்கு அறிவித்தான். மோசேயுடைய நீதிச்சட்டத்திலிருந்தும், இறைவாக்கினரின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப்பற்றி எடுத்துக் காண்பித்து அவர்களை நம்ப வைக்க முயற்சித்தான்.</verse>
				<verse number="24">சிலர் அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள்; ஆனால் மற்றவர்களோ அதை நம்ப மறுத்தார்கள்.</verse>
				<verse number="25">அவர்கள் தங்களுக்குள்ளேயே கருத்து வேற்றுமை கொண்டவர்களாய் அவ்விடத்தைவிட்டுப் போக ஆரம்பித்தார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போவதற்கு முன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபோது, உங்கள் முற்பிதாக்களுடன் மிகவும் பொருத்தமாகத்தான் இப்படியாகக் கூறியுள்ளார்:</verse>
				<verse number="26">“ ‘இந்த மக்களிடத்தில் போய், “நீங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள். நீங்கள் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டீர்கள் என்று சொல்.”</verse>
				<verse number="27">ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் உணர்வற்றுப் போயிற்று; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கின்றார்கள், தங்களுடைய கண்களையும் மூடியிருக்கின்றார்கள். இல்லாவிட்டால், அவர்கள் தங்கள் கண்களால் பார்த்திருப்பார்கள். காதுகளால் கேட்டிருப்பார்கள். இருதயத்தால் அறிந்து உணர்ந்திருப்பார்கள். அவர்கள் என்னிடமாய் திரும்பியிருப்பார்கள். நான் அவர்களைக் குணமாக்கியிருப்பேன்.’</verse>
				<verse number="28">“ஆகையால், இறைவனுடைய இரட்சிப்பு யூதரல்லாத மக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் அந்த செய்தியைக் கேட்பார்கள் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”</verse>
				<verse number="29">பவுல் இதைச் சொல்லி முடித்ததும், யூதர்கள் மிகவும் கடுமையாக விவாதம் செய்துகொண்டு புறப்பட்டுப் போனார்கள்.</verse>
				<verse number="30">பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான்.</verse>
				<verse number="31">துணிச்சலுடன் தடை எதுவும் இன்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கற்பித்து வந்தான்.</verse>
			</chapter>
		</book>
		<book number="45">
			<chapter number="1">
				<verse number="1">கிறிஸ்து இயேசுவின் ஊழியரான பவுலாகிய நான், அப்போஸ்தலராக இருக்கும்படி இறைவனால் அழைக்கப்பட்டும் இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதற்கென்று விசேடமாக தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கின்றேன்.</verse>
				<verse number="2">இறைவன் இந்த நற்செய்தியை இறைவாக்கினர் ஊடாக பரிசுத்த வேதவசனங்களில் முன்கூட்டியே வாக்குறுதி அளித்துள்ளார்.</verse>
				<verse number="3">இந்த நற்செய்தி இறைவனுடைய மகனைப் பற்றியது; இவரே மனிதனாகத் தாவீதின் சந்ததியில் பிறந்த நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து.</verse>
				<verse number="4">இவர் பரிசுத்தத்தின் ஆவியினாலும், மரணித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை அடைந்ததாலும் இறைவனின் மகன் என்று வல்லமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளார்.</verse>
				<verse number="5">அவரின் பேரில் எல்லா இனத்தவர்களையும் விசுவாசத்தினாலே வரும் கீழ்ப்படிவான வாழ்விற்கு அழைப்பதற்கான கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் நாம் அவருக்கூடாக வரமாகப் பெற்றோம்.</verse>
				<verse number="6">இப்படியாக இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமாகும்படி அழைக்கப்பட்ட யூதர் அல்லாதோரில் நீங்களும் அடங்கி உள்ளீர்கள்.</verse>
				<verse number="7">இறைவனால் அன்பு செய்யப்பட்டு பரிசுத்தவான்களாக இருக்கும்படி அழைக்கப்பட்டுள்ள ரோம் நகரில் இருக்கின்ற, உங்கள் அனைவருக்கும் நான் எழுதுவதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உரித்தாகட்டும்.</verse>
				<verse number="8">முதலாவதாக, உங்கள் எல்லோருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாக என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால் உங்கள் விசுவாசத்தைக் குறித்து உலகம் எங்கும் பேசப்படுகிறது.</verse>
				<verse number="9">நான் மன்றாடுகின்ற எல்லா வேளைகளிலும் உங்களைத் தொடர்ச்சியாக நினைவுகூருகிறேன் என்பதற்கு இறைவனே சாட்சியாக இருக்கின்றார். அவருடைய மகனைப் பற்றிய நற்செய்திக்காகவே நான் என் ஆவியில் ஊழியம் செய்கின்றேன்.</verse>
				<verse number="10">இறைவனுடைய சித்தத்தின்படி நான் உங்களிடத்தில் வருவதற்கான வழி இப்பொழுதாவது திறக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="11">ஏனெனில் உங்களைப் பலப்படுத்துவதற்காக, ஆவிக்குரிய அன்பளிப்பை உங்களுக்கு வழங்குவதற்கு உங்களைக் காண நான் ஆவலாயிருக்கிறேன்.</verse>
				<verse number="12">இதனால் உங்களை நானும் என்னை நீங்களுமாக, நாம் ஒருவரையொருவர் விசுவாசத்திலே ஊக்குவிக்கலாம்.</verse>
				<verse number="13">பிரியமானவர்களே, நான் மற்ற இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியத்தின் பலாபலன்களைப் பெற்றது போலவே, உங்கள் மத்தியிலும் பலாபலன்களைப் பெறும் பொருட்டு அங்கே வருவதற்குப் பல முறை திட்டமிட்டேன்; ஆனாலும் இதுவரை வர முடியாதபடி தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதைக் குறித்து நீங்கள் தெரியாதிருப்பதை நான் விரும்பவில்லை.</verse>
				<verse number="14">கிரேக்கரோ, கிரேக்கர் அல்லாதவர்களோ, ஞானிகளோ, மூடர்களோ என்று பாராமல் அனைவருக்குமே நான் கடமைப்பட்டவனாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="15">அதனாலேயே ரோம் நகரில் இருக்கின்ற உங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆவலாயிருக்கிறேன்.</verse>
				<verse number="16">ஏனெனில் நற்செய்தியைக் குறித்து நான் வெட்கப்படவில்லை. அதுவே விசுவாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பைக் கொடுக்கின்ற இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. அந்த நற்செய்தி முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="17">“நீதிமான் விசுவாசத்தினாலே வாழ்வார்” என்று எழுதப்பட்டிருக்கின்றபடி, ஆரம்பம் முதல் இறுதி வரை விசுவாசத்தினாலே வருகின்ற இறைவனின் நீதியானது இந்த நற்செய்தியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="18">அவ்வாறே, மனிதர்கள் தங்களுடைய தீய செயல்களால் சத்தியத்தை அடக்கி வைப்பதால் இறைவனை மறுதலிக்கும் அவர்களுடைய நடத்தைக்கும் தீய செயல்களுக்கும் எதிராக, பரலோகத்திலிருந்து இறைவனுடைய கோபமும் வெளிப்படுத்தப்படுகிறது.</verse>
				<verse number="19">ஏனெனில் இறைவனைப்பற்றி அவர்கள் அறியக் கூடியவற்றை இறைவனே அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதால், அவை அவர்களுக்குத் தெளிவாக இருக்கின்றன.</verse>
				<verse number="20">உலகம் படைக்கப்பட்டது முதல் கண்ணுக்குப் புலப்படாத இறைவனின் தன்மைகளான அவருடைய நித்திய வல்லமை, இறை இயல்பு ஆகியன படைக்கப்பட்டவைகளிலிருந்து உணரக் கூடியதாய் உள்ளன. எனவே மனிதர்கள் தம் துர்நடத்தையை நியாயப்படுத்த வழியில்லை.</verse>
				<verse number="21">அவர்கள் இறைவனை அறிந்திருந்த போதிலும் அவரை இறைவன் என்று மகிமைப்படுத்தவோ, அவருக்கு நன்றி செலுத்தவோ இல்லை. இதனால் அவர்களது சிந்தனையில் பயனற்ற வாதங்கள் தோன்றி அவர்களது மந்தமான இருதயங்கள் உணர்வற்று இருளால் நிறைந்தன.</verse>
				<verse number="22">அவர்கள் தங்களை அறிஞர்கள் என்று திடமாக சொல்லிக் கொண்டாலும் மூடர்களாகி,</verse>
				<verse number="23">அழியாமையுடைய இறைவனின் மேன்மையான மகிமைக்கு மாற்றீடாக அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் உயிரினங்கள் போன்ற உருவங்களைச் செய்தார்கள்.</verse>
				<verse number="24">எனவே அவர்களுடைய இருதயத்தின் ஆசை வெறிகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்தும் அசுத்தமான உறவுகொள்ளும்படி இறைவன் அவர்களை துர்நடத்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார்.</verse>
				<verse number="25">ஏனெனில், அவர்கள் இறைவனைப் பற்றிய சத்தியத்தைப் பொய்யாக மாற்றி, படைக்கப்பட்டவைகளை வழிபட்டு பணி செய்தார்கள். படைத்தவரையோ விட்டுவிட்டார்கள். அவரே என்றென்றும் துதிக்கப்படத்தக்கவர். ஆமென்.</verse>
				<verse number="26">இதனால், இறைவன் வெட்கக்கேடான காம வேட்கைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களைக் கைவிட்டார். அவர்களுடைய பெண்கள் இயல்பான பாலுறவைவிட்டு, இயற்கைக்கு விரோதமான உறவால் அதை மாற்றீடு செய்தார்கள்.</verse>
				<verse number="27">அவ்விதமாகவே ஆண்களும் பெண்களுடனான இயல்பான பாலுறவைக் கைவிட்டு, ஆண்கள் மேல் ஆண்கள் வேட்கைகொண்டு, ஆண்களுடன் ஆண்கள் வெட்கக்கேடான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையினால் வருந்துகிறார்கள்.</verse>
				<verse number="28">மேலும் அவர்கள் இறைவனைப் பற்றிய உண்மை அறிவை ஏற்றுக்கொண்டு வாழ்வதைப் பயனுள்ளதாக எண்ணாதபடியால், இறைவன் அவர்களைச் செய்யத் தகாதவைகளைச் செய்கின்ற சீர்கெட்ட சிந்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார்.</verse>
				<verse number="29">அவர்கள் எல்லாவித அநியாயத்தினாலும் தீமையினாலும் பேராசையினாலும் சீர்கேட்டினாலும் நிறைந்தவர்களாகி, பொறாமையினாலும் கொலையினாலும் சண்டையினாலும் வஞ்சனையினாலும் பகையினாலும் நிறைந்தவர்களானார்கள்.</verse>
				<verse number="30">அவர்கள் அவதூறு பேசுகின்றவர்களாகவும், தூற்றுகின்றவர்களாகவும், இறைவனை வெறுக்கின்றவர்களாகவும், அவமரியாதை செய்கின்றவர்களாகவும், அகந்தை கொண்டவர்களாகவும், பெருமை பேசுகின்றவர்களாகவும், தீமை செய்யும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும்,</verse>
				<verse number="31">உணர்வில்லாதவர்களாகவும், உண்மை இல்லாதவர்களாகவும், அன்பில்லாதவர்களாகவும், ஈவிரக்கம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="32">இப்படிப்பட்டவைகளைச் செய்கின்றவர்கள் மரணத்துக்கே தகுதியானவர்கள் என்ற இறைவனுடைய நீதியான நியமத்தை புரிந்து கொண்டிருந்தாலும்கூட, இவைகளைத் தாங்கள் தொடர்ந்து செய்வது மட்டுமல்லாது, இவைகளைச் செய்கின்றவர்களையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">ஆகவே, மற்றவர்களை நியாயம் தீர்க்கும் மனிதனே, நீ யாராக இருந்தாலும், உன்னைத் தப்ப வைக்க காரணங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் நீ ஒரு நீதிபதியாக எந்தக் காரியங்களுக்காக மற்றவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குகின்றாயோ, அவற்றையே நீயும் தொடர்ந்து செய்யும்போது உனக்கு நீயே தண்டனைத்தீர்ப்பு வழங்குகிறாய்.</verse>
				<verse number="2">ஆனாலும், அந்தக் காரியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக இறைவன் வழங்கும் நியாயத்தீர்ப்பானது, சத்தியத்தை ஆதாரமாக கொண்டது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="3">ஆகவே அப்படிப்பட்ட செயல்களைச் செய்து வருகின்றவர்களை நியாயம் தீர்க்கின்ற மனிதனே, அவற்றை நீயே செய்துவிட்டு இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா?</verse>
				<verse number="4">அல்லது, உன்னை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துவதே இறைவனுடைய தயவின் நோக்கம் என்பதை உணராமல், அவருடைய தயவு, சகிப்புத் தன்மை, பொறுமை ஆகியவற்றின் செழுமையை ஏளனம் செய்கின்றாயா?</verse>
				<verse number="5">உன் பிடிவாதத்தினாலும் மனந்திரும்பாத இருதயத்தினாலும், இறைவனின் நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படப் போகின்ற அந்த கோபத்தின் நாளிலே, நீ அனுபவிக்கப் போகும் அவருடைய கோபத்தை இன்னும் அதிகமாய் குவித்துக்கொள்கிறாய்.</verse>
				<verse number="6">இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ற பலனைக் கொடுப்பார்.”</verse>
				<verse number="7">சளைக்காமல் நல்ல செயல்கள் செய்து மகிமையையும், மரியாதையையும், அழியாமையையும் தேடுகின்றவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார்.</verse>
				<verse number="8">ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தீமையைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் சீற்றமும் கடுங் கோபமுமே கிடைக்கும்.</verse>
				<verse number="9">தீமை செய்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் இன்னலும் கொடுந் துன்பமும் காத்திருக்கும். முதலில் யூதருக்கும் பின்பு யூதரல்லாத மக்களுக்கும் அது கிடைக்கும்.</verse>
				<verse number="10">ஆனால் நன்மை செய்கின்ற ஒவ்வொருவருக்கும் மகிமையும், மரியாதையும், சமாதானமும் காத்திருக்கும். அதுவும் முதலில் யூதருக்கும் பின்பு யூதரல்லாதோருக்கும் கிடைக்கும்.</verse>
				<verse number="11">ஏனென்றால், இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல.</verse>
				<verse number="12">நீதிச்சட்டத்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் பாவம் செய்கையில், அந்த சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக அழிவடைவார்கள். நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் பாவம் செய்கின்ற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயம் தீர்க்கப்படுவார்கள்.</verse>
				<verse number="13">ஏனெனில் நீதிச்சட்டத்தைக் கேட்கின்றவர்கள் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் அல்ல; நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவர்களே நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள்.</verse>
				<verse number="14">நீதிச்சட்டம் இல்லாத யூதரல்லாத மக்கள் இயல்பாகவே நீதிச்சட்டம் சொல்லுகின்றபடி செய்கின்றபோது அவையே அவர்களுக்கான சட்டம் ஆகின்றன.</verse>
				<verse number="15">சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் செயலில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சி கொடுக்கின்றது. அத்துடன் அவர்களுடைய சிந்தனைகளும் அவர்கள் குற்றம் உள்ளவர்களா குற்றம் அற்றவர்களா என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.</verse>
				<verse number="16">ஆகவே என்னுடைய நற்செய்தியின்படி நியாயம் தீர்க்கும் நாளில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மனிதர்களின் இரகசிய சிந்தனைகளைக் குறித்து இறைவன் இவ்வாறே தீர்ப்பளிப்பார்.</verse>
				<verse number="17">இப்போது நீ உன்னை யூதன் என்று அழைத்துக்கொண்டு, நீதிச்சட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இறைவனைக் குறித்து பெருமைப்பட்டுக்கொள்கின்றாய்,</verse>
				<verse number="18">நீதிச்சட்டத்தினால் நீ அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அவருடைய திட்டத்தை அறிந்து மேன்மையானது எது என ஆராய்ந்து ஏற்றுக்கொள்கின்றாய்.</verse>
				<verse number="19">அத்துடன், பார்வையற்றோருக்கு ஒரு வழிகாட்டி என்றும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் என்றும்,</verse>
				<verse number="20">நீதிச்சட்டத்தின் பரந்த அறிவையும் சத்தியத்தையும் பெற்றவன் என்றும், மூடர்களுக்கு அறிவைப் புகட்டுகின்றவன் என்றும், குழந்தைகளுக்கான ஆசிரியன் என்றும் உன்னை நீயே எண்ணிக்கொள்கிறாய்.</verse>
				<verse number="21">இப்படிப்பட்ட மனநிலையோடு மற்றவர்களுக்குப் போதிக்கின்ற நீ, உனக்கு நீயே போதித்துக்கொள்வதில்லையா? களவு செய்யக் கூடாதென்று பிரசங்கிக்கின்ற நீ, களவு செய்கின்றாயா?</verse>
				<verse number="22">தகாத உறவுகொள்ளக் கூடாதென்று சொல்லுகின்ற நீ, தகாத உறவுகொள்கின்றாயா? விக்கிரகங்களை அருவருக்கின்ற நீ, கோவில்களைக் கொள்ளையிடுகிறாயா?</verse>
				<verse number="23">நீதிச்சட்டத்தைக் குறித்து பெருமை பேசுகின்ற நீ, நீதிச்சட்டத்தை மீறுகின்றதனால் இறைவனை அவமதிக்கலாமா?</verse>
				<verse number="24">அதனால் இறைவாக்கினனால் முன்னர் எழுதியிருக்கின்றபடி, “உங்கள் பொருட்டு யூதரல்லாத மக்களிடையே இறைவனுடைய பெயர் நிந்திக்கப்படுகிறதே.”</verse>
				<verse number="25">நீதிச்சட்டத்தை நீ கடைப்பிடித்தால் விருத்தசேதனம் பெறுமதியானதுதான். ஆனால், நீ நீதிச்சட்டத்தை மீறுகின்றபோது, விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல் ஆகி விடுகிறாய்.</verse>
				<verse number="26">ஆகவே, விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் நீதிச்சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால் அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப் போல எண்ணப்பட மாட்டார்களோ?</verse>
				<verse number="27">தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில் நீ எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும், விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும்கூட நீதிச்சட்டத்தை மீறுகின்றவனாகி விட்டாயே.</verse>
				<verse number="28">வெளித் தோற்றத்தில் மாத்திரம் ஒருவன் யூதனாயிருந்தால் அவன் யூதனல்ல; வெறுமனே உடலின் வெளிப்புறத்தில் செய்யப்படும் விருத்தசேதனமானது விருத்தசேதனமே அல்ல.</verse>
				<verse number="29">ஒருவன் உள்ளத்தில் யூதனாயிருந்தால், அவனே யூதன். எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அன்றி பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இப்படிப்பட்டவனுக்கு மனிதரிடமிருந்து அல்ல இறைவனிடமிருந்தே புகழ்ச்சி வருகின்றது.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">அப்படியானால், யூதனாய் இருப்பதில் உள்ள மேன்மை என்ன? விருத்தசேதனத்தின் பயன் என்ன?</verse>
				<verse number="2">எல்லாவிதத்திலும் பல மேன்மைகள் உள்ளன. அந்த வகையில் முதலாவதாக இறைவனுடைய வெளிப்பாடுகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.</verse>
				<verse number="3">அப்படி இருந்தும் சிலர் அந்த உண்மைக்கு விசுவாசம் அற்றவர்களாய் நடந்தார்கள். அதனால் என்ன? அவர்களின் விசுவாசமின்மையால், இறைவனின் உண்மைத் தன்மை இல்லாது போய் விடுமா?</verse>
				<verse number="4">ஒருபோதும் அப்படி ஆகி விடாது! ஏனெனில் எழுதியிருக்கின்றபடி, “நீர் பேசும்போது நீதியுள்ளவர் என்பது புரியவும், நியாயம் விசாரிக்கும்போது வழக்கில் நீர் வெற்றி அடையவும்” மனிதர்கள் அனைவரும் பொய்யராகிப் போனாலும், இறைவனே உண்மையுள்ளவர் என்பது தெளிவாகட்டும்.</verse>
				<verse number="5">ஆனால் இதை வைத்துக்கொண்டு, நம்முடைய தீய நடத்தையே இறைவனுடைய நீதியை நன்கு வெளிக் கொண்டுவருகின்றது என்று எவராவது கூறுவார்களானால் நாம் என்ன சொல்லுவோம்? மனித வழக்கத்தில் இதைக் கூறுவதானால், இறைவன் நம்மீது தமது கோபத்தை வெளிக்காட்டுகின்றபோது, அவர் அநீதியானவர் என்றும் சொல்லலாமா?</verse>
				<verse number="6">ஒருபோதும் அப்படிச் சொல்லவே முடியாது! அப்படிச் சொல்வது சரியாக இருந்தால், இறைவனால் எப்படி இந்த உலகத்தை நியாயம் தீர்க்க முடியும்?</verse>
				<verse number="7">“என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்த்தி, அவருடைய மகிமையை மேலோங்கச் செய்கின்றது என்றால் இனியும் நான் ஒரு பாவி என்று ஏன் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்” என்று ஒருவர் வாதாடலாம்.</verse>
				<verse number="8">அப்படியென்றால் “நாம் தீமை செய்யலாமே, அதன்மூலமாக இறுதியில் நன்மை வரும் அல்லவா” என்றும் சொல்லலாமா? நாம் அப்படிச் சொல்வதாகத்தான் சிலர் அவதூறாகக் குற்றம் சாட்டுகின்றார்கள், அவர்கள்மீது தண்டனைத்தீர்ப்பு வருவது நீதியானதே.</verse>
				<verse number="9">எனவே யூதர்களாகிய நாங்கள் மற்றவர்களைவிட சாதகமான நிலையில் உள்ளோம் என்ற முடிவுக்கு வரலாமா? இல்லவே இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் பாவத்தின் கட்டுப்பாட்டின் கீழே இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கெனவே சுமத்திவிட்டோமே.</verse>
				<verse number="10">வேதவசனம் இதை இப்படிக் கூறுகிறது: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை,</verse>
				<verse number="11">புரிந்துணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகின்றவன் ஒருவனுமில்லை.</verse>
				<verse number="12">எல்லோரும் வழிவிலகி, ஒருமித்து தகுதியற்றவர்கள் ஆனார்கள். நன்மை செய்கின்றவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.”</verse>
				<verse number="13">அவர்களுடைய தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி, “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. அவர்கள் உதடுகளின் கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கின்றது.”</verse>
				<verse number="14">“அவர்களுடைய வாய் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றது.”</verse>
				<verse number="15">“அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன.</verse>
				<verse number="16">அழிவும் அவலமும் அவர்கள் வழிகளில் இருக்கின்றன.</verse>
				<verse number="17">சமாதானத்தின் வழியை அவர்கள் அறிய மாட்டார்கள்.”</verse>
				<verse number="18">“அவர்களுடைய கண்களில் இறைவனைப் பற்றிய பயம் இல்லை.”</verse>
				<verse number="19">நீதிச்சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம் நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்லப்படுகின்றன என்று அறிந்திருக்கிறோம். எனவே எவரும் எதிர்த்து வாதாடாமல் அனைத்து வாய்களும் மூடப்படவும், உலகிலுள்ள அனைவரும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்கவும் வேண்டும்.</verse>
				<verse number="20">ஏனெனில், நீதிச்சட்டத்தின்படி செய்கின்ற செயல் முயற்சிகளால் யாருமே இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுவதில்லை, மாறாக பாவத்தைப் பற்றிய உணர்வே நீதிச்சட்டத்தின் மூலமாக வருகின்றது.</verse>
				<verse number="21">இப்பொழுதோ நீதிச்சட்டத்துக்கு அப்பால் இறைவனின் நீதி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு நீதிச்சட்டமும், இறைவாக்குகளும் சாட்சி பகர்கின்றன.</verse>
				<verse number="22">விசுவாசிக்கின்ற எவருக்கும் இயேசு கிறிஸ்து மூலமாய் கிடைக்கின்ற இறைவனின் நீதி இதுவாகும், இதில் எவருக்கும் வித்தியாசம் இல்லை.</verse>
				<verse number="23">ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையின் தராதரத்தை அடையாமல் தொடர்ந்தும் வாழ்கின்றார்கள்.</verse>
				<verse number="24">ஆனாலும், விசுவாசிக்கின்ற அனைவருமே இறைவனுடைய இலவச அன்பளிப்பான கிருபையினால் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் ஊடாக நீதிமான்கள் ஆகிறார்கள்.</verse>
				<verse number="25">கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதனால் செலுத்தப்பட்ட பாவநிவாரணப் பலியாக அவரைப் பிரசித்தப்படுத்தி, அதன் பலனை மக்கள் விசுவாசத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மக்கள் முற்காலத்தில் செய்த பாவங்களை அவர் தமது பொறுமையின் காரணமாக தண்டிக்காமல் விட்டாலும், தாம் நீதி உள்ளவர் என்பதை இந்தப் பலியினால் வெளிப்படையாகக் காண்பித்துள்ளார்.</verse>
				<verse number="26">அவர் இவ்வாறு நீதியை நிறைவேற்றியதுடன் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்களை நீதிமான்கள் ஆக்குவதன் மூலமாகத் தமது நீதியான இயல்பையும் இக்காலத்தில் வெளிப்படையாகக் காண்பித்துள்ளார்.</verse>
				<verse number="27">எனவே எங்கள் தற்பெருமை எங்கே? அதற்கு இடமே இல்லாமல் போய் விட்டது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமான்கள் ஆக்கப்பட்டோம்? மனித முயற்சியின் சட்டத்தினாலா? இல்லவே இல்லை! விசுவாச சட்டத்தின் அடிப்படையிலேயே நீதிமான்கள் ஆக்கப்பட்டோம்.</verse>
				<verse number="28">ஆகவே நீதிச்சட்டத்தால் வரையறுக்கப்படுகின்ற மனித முயற்சிக்கு அப்பாற்பட்டிருக்கின்ற விசுவாசத்தினாலேயே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்ற தீர்க்கமான முடிவுக்கு வருகின்றோம்.</verse>
				<verse number="29">ஒருவேளை இறைவன் யூதர்களுக்கு மட்டுமே இறைவனாக இருக்கின்றாரோ? அப்படியல்ல, அவர் யூதர் அல்லாதவர்களின் இறைவனாகவும் இருக்கின்றார். ஆம், யூதரல்லாதவர்களுக்கும் இறைவன் அவரே.</verse>
				<verse number="30">இறைவன் ஒருவரே. ஆகவே விருத்தசேதனம் உள்ளவர்களையும், விருத்தசேதனம் அற்றவர்களையும் ஒரே விசுவாசத்தின் மூலமாக அவரே நீதிமானாக்குகிறார்.</verse>
				<verse number="31">அப்படியானால், விசுவாசத்தினால் நீதிச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி விடுகின்றோமா? ஒருபோதும் இல்லை! மாறாக, நீதிச்சட்டம் செல்லுபடியாகும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறோம்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">யூதர்களான எமக்கு மனித அடிப்படையில் முற்பிதாவாக இருக்கும் ஆபிரகாம், இந்த விடயத்தில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டது என்ன?</verse>
				<verse number="2">உண்மையிலேயே ஆபிரகாம் தமது செயல்களினால் நீதிமானாக்கப்பட்டிருந்தால் அவர் பெருமை பாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவர் பெருமை பாராட்ட இடமில்லை.</verse>
				<verse number="3">அவரைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது? “ஆபிரகாம் இறைவனை நம்பி விசுவாசித்தார், அதைக்கொண்டு அவர் அவரை நீதிமானாகக் கணக்கிட்டார்” என்கிறது.</verse>
				<verse number="4">வேலை செய்கின்றவனுக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம் ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை. அது அவனுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய கொடுப்பனவு.</verse>
				<verse number="5">ஆனால் ஒருவன் தன்னுடைய நல்ல செயல்களில் நம்பிக்கை வைக்காமல் அநியாயக்காரர்களை நீதிமானாக்கும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது.</verse>
				<verse number="6">நல்ல செயல்களினால் அல்லாமல் இறைவனால் நீதிமானாகக் கணக்கிடப்படுகின்ற மனிதனுடைய ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீதும் இவ்விதமாய் கூறுகிறார்:</verse>
				<verse number="7">“மீறுதல்கள் மன்னிக்கப்பட்டு, பாவங்கள் மூடப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="8">யாருடைய பாவத்தை கர்த்தர் கணக்கில் எண்ணாதிருக்கின்றாரோ, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”</verse>
				<verse number="9">இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு மாத்திரமா? அல்லது விருத்தசேதனம் அற்றவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசமே அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கின்றோம்.</verse>
				<verse number="10">அது எப்போது அவருக்கு நீதியாக கணக்கிடப்பட்டது? அவர் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதற்குப் பின்னரா? அல்லது அதற்கு முன்னரா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்ட பின்பு அல்ல, அதற்கு முன்பே அது நடந்தது.</verse>
				<verse number="11">ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாத நிலையில் இருந்தபோது விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, பின்னரே விருத்தசேதனத்தை பெற்றுக்கொண்டார். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறார். இதனால், அவ்விதமாகவே அவர்களுடைய விசுவாசமானது அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது.</verse>
				<verse number="12">அத்தோடு விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களில் ஒரு சாராருக்கும் அவர் தகப்பனாக இருக்கின்றார். இவர்கள் வெறுமனே விருத்தசேதனம் செய்தவர்களாய் மாத்திரம் இராமல், எமது தந்தையாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ள முன்னதாக நடந்த அதே விசுவாச அடிச் சுவட்டிலே நடப்பவர்களாயும் இருப்பவர்கள்.</verse>
				<verse number="13">ஆபிரகாம் உலகத்தை உரிமைச் சொத்தாக பெறுவார் என்ற வாக்குறுதியை அவரும் அவரது சந்ததியும் நீதிச்சட்டத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளவில்லை, விசுவாசத்தினால் வரும் நீதியின் மூலமாகவே பெற்றுக்கொண்டனர்.</verse>
				<verse number="14">ஏனெனில், நீதிச்சட்டத்தை பின்பற்றுபவர்களே சொத்துரிமை உடையவர்கள் எனின், விசுவாசம் அர்த்தமற்றதாகி, வாக்குறுதியும் பயனற்றதாகி விடும்;</verse>
				<verse number="15">நீதிச்சட்டம் இறைவனின் கோபத்தைக் கொண்டுவருவதே இதன் காரணம். ஆனால் நீதிச்சட்டம் இல்லாதபோது அதை மீறுவதும் இருப்பதில்லை.</verse>
				<verse number="16">ஆதலால் இறைவனின் வாக்குறுதி, விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு கிருபையில் தங்கியிருப்பதுடன், ஆபிரகாமின் வழிவந்த அனைவருக்கும் உரியது என்பதும் நிச்சயப்படுத்தப்பட்டது. அவ்விதமாக ஆபிரகாமின் வழிவந்தவர்கள் நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருந்தாலும், ஆபிரகாமின் விசுவாசத்தை உடையவர்களாக இருந்தாலும், எல்லோருமே வாக்குறுதிக்கு உரிமை பெற்றவர்கள். எனவே ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார்.</verse>
				<verse number="17">“அநேக இன மக்களுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று ஆபிரகாமைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கின்றவரும் இல்லாதவைகளை கட்டளையிட்டு உருவாக்குபவருமான இறைவனை விசுவாசித்த ஆபிரகாம், இறைவனின் பார்வையில் நம் அனைவருக்கும் தந்தையாய் இருக்கின்றார்.</verse>
				<verse number="18">“உனது சந்ததி இவ்விதம் எண்ணிக்கைக்கு அடங்காமல் இருக்கும்” என்று அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்கின்படியே, அநேக இனங்களுக்குத் தான் தந்தையாவேன் என்ற வாக்குறுதியில் நம்பிக்கை இழக்கக் கூடிய சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் ஆபிரகாம் விசுவாசித்தார். அதனால் அநேக இனங்களுக்குத் தந்தையானார்.</verse>
				<verse number="19">அவர் ஏறத்தாழ நூறு வயதுள்ளவராக இருந்தபோது தனது உடல் தளர்ந்து பிள்ளை பெறும் சக்தி அற்றதாகிவிட்டது என்றும், சாராளின் கருவறை கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிட்டது என்றும் அவர் உணர்ந்தபோதும், அவர் விசுவாசத்தில் தளரவில்லை.</verse>
				<verse number="20">இறைவனுடைய வாக்குறுதியைக் குறித்து அவிசுவாசத்தினால் அவர் தடுமாற்றமடையாமல், தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தி,</verse>
				<verse number="21">தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவர் முழு நிச்சயமாய் நம்பினார்.</verse>
				<verse number="22">இதனால்தான், “அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”</verse>
				<verse number="23">இந்த, “அவருக்கு கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் அவருக்காக மாத்திரம் அல்ல,</verse>
				<verse number="24">நமக்கும் சேர்த்தே அவை எழுதப்பட்டுள்ளன; நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரணித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன் மேல் விசுவாசம் வைக்கின்றவர்களாகிய நமக்கும், நமது விசுவாசமானது நீதியாகக் கணக்கிடப்படும் என்பதால், நமக்கும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளன.</verse>
				<verse number="25">எமது ஆண்டவர் இயேசு, அவரே எமது பாவங்களுக்காக மரணதண்டனை அடையும்படி கையளிக்கப்பட்டவர். நாம் நீதிமான்கள் ஆக்கப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டவரும் அவரே.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">ஆகவே, நாம் விசுவாசத்தின் மூலமாக நீதிமான்கள் ஆக்கப்பட்டிருக்கின்றபடியால், நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாய் இறைவனுடன் சமாதானமுள்ளவர்களாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="2">அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் விசுவாசத்தினால் பிரவேசித்து, அந்தக் கிருபையிலே நிலைபெற்று, இறைவனுடைய மகிமையில் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைகிறோம்.</verse>
				<verse number="3">அதுமட்டுமல்ல, நம்முடைய துன்பங்களிலேயும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் துன்பங்கள் சகிப்புத் தன்மையையும்,</verse>
				<verse number="4">சகிப்புத் தன்மை பரீட்சிக்கப்பட்ட நற்பண்பையும், பரீட்சிக்கப்பட்ட நற்பண்பு நல்ல எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் என்று நாங்கள் அறிந்து நம்முடைய பாடுகளிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.</verse>
				<verse number="5">இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற பரிசுத்த ஆவியானவர் மூலமாய் தம்முடைய அன்பை நம்முடைய இருதயங்களில் ஊற்றியிருக்கின்றபடியால் இந்த நல்ல எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தைக் கொடுக்காது.</verse>
				<verse number="6">இதோ, நாம் பலமற்றவர்களாய் இருக்கையிலே, குறித்த வேளையில் அநியாயக்காரர்களுக்காக கிறிஸ்து உயிரைக் கொடுத்தார்.</verse>
				<verse number="7">நீதிமானுக்காக ஒருவன் தனது உயிரைக் கொடுப்பது மிகவும் அரிது, ஆனாலும் நல்லவன் ஒருவனுக்காக ஒருவேளை யாராவது உயிரிழக்கத் துணியலாம்.</verse>
				<verse number="8">ஆனால், நாம் இன்னும் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக உயிரைக் கொடுத்ததன் மூலமாக இறைவன் நமது மேல் வைத்த தமது அன்பை தெரியப்படுத்துகிறார்.</verse>
				<verse number="9">இப்பொழுதோ நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்கள் ஆக்கப்பட்டிருக்கின்றபடியால் அவர் மூலமாய் இறைவனுடைய கோபத்திலிருந்து மீட்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!</verse>
				<verse number="10">நாம் இறைவனுக்கு விரோதிகளாய் இருக்கும்போதே அவருடைய மகனின் மரணத்தின் மூலமாய் நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், இப்போது இறைவனோடு நாம் ஒப்புரவாயிருக்கையில், கிறிஸ்துவின் வாழ்வின் மூலமாக நாம் மீட்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!</verse>
				<verse number="11">அதுமட்டுமல்ல, இப்போது இறைவனோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாய், நாம் இறைவனில் மகிழ்ச்சி அடைகிறோம்.</verse>
				<verse number="12">ஒரே மனிதன் மூலமாக உலகத்திற்குள் பாவம் நுழைந்தது. பாவத்தின் வழியாக மரணம் வந்தது. எல்லா மனிதரும் பாவம் செய்ததால் எல்லா மனிதருக்கும் மரணம் பரவியது.</verse>
				<verse number="13">நீதிச்சட்டம் கொடுக்கப்பட முன்னதாகவே பாவம் உலகத்திலே இருந்தது. ஆனால் நீதிச்சட்டம் இல்லாதிருந்தபோது, பாவம் கணக்கிடப்படவில்லை.</verse>
				<verse number="14">ஆனாலும் ஆதாம் தொடங்கி மோசே வரை வாழ்ந்தவர்கள் ஆதாம் செய்தது போல கட்டளையை மீறிப் பாவம் செய்யாதபோதிலும் மரணம் அவர்களையும் ஆட்சி செய்தது. வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒருவருக்கு ஆதாம் மாதிரியானவன்.</verse>
				<verse number="15">ஆனால் இலவச அன்பளிப்பான கிருபை வரத்தால் கிடைப்பதையும் ஆதாமின் மீறுதலினால் ஏற்பட்டதையும் ஒப்பிடவே முடியாது. எப்படியெனில் ஒரே மனிதனான ஆதாமின் மீறுதலினால் அநேகர் இறந்தார்கள். ஆனால் இறைவனுடைய கிருபையும், ஒரே மனிதனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பளிப்பாக கிடைக்கும் கிருபை வரமும் அதைவிட அதிகமாக அநேகர் மேல் பெருகி வழிகின்றன.</verse>
				<verse number="16">மேலும் இறைவனின் இலவசமான அன்பளிப்பான கிருபை வரத்தின் விளைவையும், ஒரு மனிதனின் மீறுதலின் விளைவையும் எந்த விதத்திலும் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் ஆதாமின் ஒரே மீறுதலின் பின் வந்த நியாயத்தீர்ப்பினால் குற்றத்துக்குத் தண்டனை வந்தது. ஆனால் எண்ணிக்கையற்ற மீறுதல்களின் பின் வந்த இறைவனின் இலவச அன்பளிப்போ நீதிமான்கள் என்ற தீர்ப்பைக் கொண்டுவந்தது.</verse>
				<verse number="17">ஒரே மனிதனின் மீறுதலின் மூலமாக மரணம் ஆளுகை செய்ததல்லவா. அப்படியானால் ஏராளமான கிருபையை தாராளமாக பெற்று இறைவனின் அன்பளிப்பால் நீதிமானாக்கப்பட்டவர்கள், அதைவிட அதிகமாக ஒரே மனிதனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக வாழ்க்கையில் ஆட்சி செய்வார்கள் அல்லவா!</verse>
				<verse number="18">ஆகையால், ஒரு மீறுதலின் பிரதிபலனாக எல்லா மனிதருக்கும் தண்டனையின் தீர்ப்பு உண்டானது போல இயேசுவின் நீதியான ஒரே செயலால் எல்லா மனிதருக்கும் நீதிமான்கள் என்ற தீர்ப்பும் வாழ்வும் வந்தன.</verse>
				<verse number="19">ஆகவே, ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையின் மூலமாக எண்ணிக்கையற்றவர்கள் பாவிகள் ஆக்கப்பட்டதுபோல ஒரு மனிதனுடைய கீழ்ப்படிதலின் மூலமாக, எண்ணிக்கையற்றவர்கள் நீதிமான்கள் ஆக்கப்படுவார்கள்.</verse>
				<verse number="20">பாவம் பெருகும்படி நீதிச்சட்டம் வந்தது, ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அவரின் கிருபை இன்னும் அதிகமாகப் பெருகிற்று.</verse>
				<verse number="21">மரணத்தின் மூலமாக பாவம் ஆளுகை செய்தது போல, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய வாழ்வைக் கொண்டுவரும்படி நீதியின் மூலமாக கிருபையும் ஆளுகை செய்கின்றது.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">ஆகவே நாம் இப்படிச் சொல்லலாமா? கிருபை அதிகமாக பெருகுவதற்காக தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருப்போம் எனலாமா?</verse>
				<verse number="2">ஒருபோதும் அது கூடாது. பாவத்தைப் பொறுத்தவரை இறந்துவிட்ட நாம், இனி எப்படித் தொடர்ந்தும் பாவத்தில் வாழ்வது?</verse>
				<verse number="3">கிறிஸ்து இயேசுவில் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்ட நாம் எல்லோரும், அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா?</verse>
				<verse number="4">பிதா தம்முடைய மகிமையினால் கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கச் செய்தது போல, நாமும் புதிதான ஒரு வாழ்வு வாழும்படியாகவே ஞானஸ்நானத்தின் மூலமாக மரணத்துக்குள் கிறிஸ்துவுடன் அடக்கம் செய்யப்பட்டோம்.</verse>
				<verse number="5">இவ்விதமாய், நாம் அவருடைய மரணத்திற்கு ஒப்பான மரணத்தில் அவருடன் இணைக்கப்பட்டிருந்தால், அவருடைய உயிர்த்தெழுதலுக்கு ஒப்பான உயிர்த்தெழுதலிலும் அவருடன் இணைக்கப்பட்டிருப்போம் என்பது உறுதி.</verse>
				<verse number="6">பாவத்திற்கு அடிமையாயிருந்த மனித இயல்பு, அதன் வல்லமையை இழந்து போகும்படியாக, நம்முடைய பழைய மனிதன் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டு இறந்துவிட்டான் என்பதை நாம் அறிவோம். இனி ஒருபோதும் நாம் பாவத்திற்கு அடிமைகளாக இராதபடிக்கே இப்படிச் செய்யப்பட்டது.</verse>
				<verse number="7">ஏனெனில் இறந்தவன் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="8">நாம் கிறிஸ்துவோடு மரணித்துப் போயிருந்தால், அவரோடு இணைந்து வாழ்வோம் என்றும் விசுவாசிக்கின்றோம்.</verse>
				<verse number="9">கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டிருப்பதால், அவர் இனிமேல் இறப்பதில்லை என்பதை அறிந்திருக்கிறோம். மரணத்துக்கு இனி அவர்மீது அதிகாரம் இல்லை.</verse>
				<verse number="10">அவர் மரணித்த மரணம், பாவத்துக்கு மரணித்த ஒரே முடிவான மரணம். ஆனால் இப்போது அவர் வாழ்கின்ற வாழ்வை இறைவனுக்கென்றே வாழ்கின்றார்.</verse>
				<verse number="11">அதேபோல நீங்களும் பாவத்தைப் பொறுத்தவரையில் இறந்தவர்களாகவும், கிறிஸ்து இயேசுவுக்குள் இறைவனுக்காக வாழ்கின்றவர்களாகவும் உங்களை எண்ணிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="12">எனவே, பாவமானது அதன் தீய ஆசைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்துவிடாதபடி, அழிந்து போகின்ற உங்கள் உடலில் பாவம் ஆளுகை செய்ய இடம் கொடுக்க வேண்டாம்.</verse>
				<verse number="13">உங்கள் உடலின் அங்கங்களை அநீதியின் கருவிகளாக தொடர்ந்து பாவத்துக்கு ஒப்புக்கொடுக்காமல், மரணித்தோரிலிருந்து வாழ்வு பெற்றவர்களாய் உங்களையே இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள். உங்கள் அங்கங்களையும் நீதியின் கருவிகளாக இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.</verse>
				<verse number="14">ஏனென்றால், நீங்கள் நீதிச்சட்டத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிராமல் கிருபைக்கு உட்பட்டிருப்பதால் பாவம் உங்களை ஆளுகை செய்யாது.</verse>
				<verse number="15">அப்படியானால், நீதிச்சட்டத்துக்கு உட்பட்டிராமல் கிருபைக்கு உட்பட்டிருக்கின்றபடியால் நாம் பாவம் செய்யலாமா? இல்லவே இல்லை.</verse>
				<verse number="16">யாருக்கு உங்களை கீழ்ப்படிகின்ற அடிமைகளாக ஒப்புக்கொடுக்கின்றீர்களோ அவர்களுக்கே நீங்கள் அடிமைகளாய் இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதுபோல நீங்களும் ஒன்றில் மரணத்திற்கு வழிநடத்துகின்ற பாவத்திற்கு அடிமைகளாக இருக்கின்றீர்கள் அல்லது நீதிக்கு வழிநடத்துகின்ற கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="17">ஆனால் ஒரு காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாய் இருந்தபோதிலும், பின்னர் உங்கள் முழு இருதயத்தோடு கீழ்ப்படிந்து, இறைவனின் போதனைக்கு உங்களை ஒப்புக்கொடுத்தீர்கள், அதற்காக இறைவனுக்கு நன்றி.</verse>
				<verse number="18">இப்போது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="19">உங்களுடைய பலவீனமான இயல்பின் காரணமாக நான் மனித வழக்கத்தின்படி உங்களுடன் பேசுகின்றேன். முன்பு ஒரு காலத்தில் நீங்கள் உங்கள் அங்கங்களை அசுத்தத்துக்கும், மேலும் மேலும் அதிகரிக்கும் இறைநெறி மீறுதல்களுக்கும் ஒப்புக்கொடுத்தீர்கள். ஆகவே இப்போது உங்கள் அங்கங்களை பரிசுத்தமாக்குதலுக்கு வழிநடத்தும் நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.</verse>
				<verse number="20">நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்த காலத்தில் இறைவனின் நீதியின்படி வாழும் வாழ்வுடன் எவ்விதத் தொடர்பும் அற்றவர்களாய் இருந்தீர்கள்.</verse>
				<verse number="21">அப்போது நீங்கள் செய்த காரியங்களுக்காக இப்போது வெட்கப்படுகிறீர்களே! அவற்றால் என்ன பலன் அடைந்தீர்கள்? அவற்றின் முடிவு மரணமே.</verse>
				<verse number="22">ஆனால், இப்பொழுதோ நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பெறும் பலன் உங்களை பரிசுத்தமாக்குதலுக்கு வழிநடத்தும். அதன் இறுதி விளைவோ நித்திய வாழ்வு.</verse>
				<verse number="23">பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவன் இலவசமாகத் தரும் கிருபை வரமோ, நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் நித்திய வாழ்வு.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">பிரியமானவர்களே, நீதிச்சட்டத்தைப் பற்றிய அறிவுள்ள உங்களுடனேயே நான் பேசுகின்றேன். ஒரு மனிதன் உயிரோடிருக்கும் வரையிலுமே நீதிச்சட்டம் அவன்மீது அதிகாரம் செலுத்துகின்றதென்று உங்களுக்குத் தெரியாதா?</verse>
				<verse number="2">உதாரணத்துக்கு, திருமணமான ஒரு பெண் அவளுடைய கணவன் உயிரோடிருக்கும் வரைக்குமே, சட்டத்தினால் அவனுக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்துபோனால் அந்த திருமணத்துக்குரிய சட்டங்களில் இருந்து அவள் விடுபடுகிறாள்.</verse>
				<verse number="3">எனவே தன் கணவன் உயிருடன் இருக்கையில் இன்னொருவருடன் வாழ்க்கை நடத்தினால் அவள் நடத்தை கெட்டவள் என அழைக்கப்படுவாள். ஆனால், அவளுடைய கணவன் இறந்த பின்னர் அவள் அந்தத் திருமணத்தின் சட்டத்திற்கு இப்போது உட்படாது இருப்பதால், அவள் இன்னொருவனைத் திருமணம் செய்தால் அவள் நடத்தை கெட்டவள் அல்ல.</verse>
				<verse number="4">எனக்குப் பிரியமானவர்களே, அவ்விதமாகவே நீங்கள் கிறிஸ்துவின் உடல் ரீதியான மரணத்தின் ஊடாக நீதிச்சட்டத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களானீர்கள். நீங்கள் வேறொருவருக்குச் சொந்தமாகி, அதாவது மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவருக்கு சொந்தமாகி, அதனால் நாம் இறைவனுக்கு கனி கொடுப்பதற்காகவே இது நடந்தது.</verse>
				<verse number="5">ஏனெனில், நாம் நம்முடைய பாவ மனித இயல்பின்படி வாழ்ந்தபோது, நீதிச்சட்டத்தினாலே தூண்டி விடப்பட்ட பாவ ஆசைகளே நம்முடைய அங்கங்களில் செயலாற்றின. அதனால் மரணத்திற்கு ஏதுவான கனியே பிறப்பிக்கப்பட்டது.</verse>
				<verse number="6">ஆனால் இப்பொழுதோ நாம் நம்மைக் கட்டி வைத்திருந்த நீதிச்சட்டத்திற்கு இறந்து, அதிலிருந்து விடுபட்டுள்ளோம். ஆகவே எழுதப்பட்ட பழைய சட்ட முறைமையின்படி இல்லாமல், ஆவியானவரின் புதிய வழியின்படி அவருக்குப் பணி செய்கின்றோம்.</verse>
				<verse number="7">அப்படியானால் நாம் என்ன சொல்லுவோம்? நீதிச்சட்டம் பாவம் எனச் சொல்லலாமா? நிச்சயமாக இல்லை, எனினும், நீதிச்சட்டம் இல்லாதிருந்தால் பாவம் என்றால் என்ன என்று எனக்குத் தெரிந்திருக்காது. “பிறருக்குரியவற்றில் ஆசைகொள்ளாதே” என்று நீதிச்சட்டம் சொல்லாதிருந்திருந்தால், பிறருக்குரியவற்றில் ஆசைகொள்வது பாவம் என்று நான் அறியாதிருந்திருப்பேன்.</verse>
				<verse number="8">ஆனால் கட்டளையின் மூலமாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாவமானது எனக்குள்ளே எல்லாவிதமான தவறான ஆசைகளையும் தூண்டிவிட்டது. ஏனெனில் நீதிச்சட்டம் இல்லாதவிடத்து பாவம் உயிரற்றது.</verse>
				<verse number="9">ஒரு காலத்தில் நீதிச்சட்டம் இல்லாதிருந்தபோது நான் உயிருள்ளவனாய் இருந்தேன். ஆனால் எப்போது நீதிச்சட்டம் வந்ததோ, அப்போது பாவம் உயிர் பெற்றது, நானோ உயிரற்றுப் போனேன்.</verse>
				<verse number="10">வாழ்வளிப்பதற்காக கொடுக்கப்பட்ட நீதிச்சட்டமே எனக்கு மரணத்தைக் கொண்டுவந்ததை நான் கண்டேன்.</verse>
				<verse number="11">ஏனெனில், நீதிச்சட்டத்தின் மூலமாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாவம் என்னை ஏமாற்றி, அந்த கட்டளையின் மூலமாக என்னைக் கொன்றது.</verse>
				<verse number="12">எனவே நீதிச்சட்டம் பரிசுத்தமானது. கட்டளை பரிசுத்தமும், நியாயமும், நல்லதுமானது.</verse>
				<verse number="13">அப்படியானால் நன்மையான ஒன்று, என் மரணத்துக்குக் காரணமாயிற்றா? இல்லவே இல்லை. உண்மையில் எது பாவம் என்பதை உணர்த்துவதற்காக பாவமே எனக்குள் மரணத்தை உருவாக்கியது. இதற்காக நன்மையான நீதிச்சட்டத்தை அது பயன்படுத்தியது. நீதிச்சட்டத்திலுள்ள கட்டளையின் மூலமாக பாவத்தின் அளவுகடந்த தன்மையை வெளிப்படுத்தவே இப்படிச் செய்தது.</verse>
				<verse number="14">நீதிச்சட்டம் ஆவிக்குரியது என்பதை நாம் அறிவோம். ஆனால் நானோ பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்ட, ஆவிக்குரிய இயல்பில்லாத மனித இயல்புடையவன்.</verse>
				<verse number="15">நான் செய்கின்றதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் செய்ய விரும்புகின்றதைச் செய்யாமல், நான் வெறுக்கின்றதையே செய்கின்றேன்.</verse>
				<verse number="16">நான் செய்ய விரும்பாததை செய்வேனாயின், நீதிச்சட்டம் நல்லது என்பதை அங்கீகரிக்கிறேன்.</verse>
				<verse number="17">எனவே நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே என்னை இப்படி நடக்கச் செய்கின்றது.</verse>
				<verse number="18">அதாவது, என் ஆவிக்குரிய தன்மையற்ற மனித இயல்பில் நன்மை குடிகொண்டிருக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டுமென்ற விருப்பம் என்னில் இருந்தும், அதனை செய்ய இயலாத நிலையிலிருக்கிறேன்.</verse>
				<verse number="19">நான் செய்ய விரும்புகின்ற நன்மையை செய்யாமல் செய்ய விரும்பாத தீமையை தொடர்ச்சியாக செய்கின்றேன்.</verse>
				<verse number="20">நான் செய்ய விரும்பாததை நானே செய்தால், அப்படிச் செய்வது நான் அல்ல, எனக்குள் குடிகொண்டிருக்கின்ற பாவமே அதைச் செய்கின்றது.</verse>
				<verse number="21">எனக்குள்ளே இப்படியான ஒரு நியதி செயற்படுகின்றதைக் காண்கின்றேன். நான் நன்மை செய்ய விரும்பும் போதெல்லாம், தீமையும் என்னுள்ளே நெருங்கி இருக்கின்றது.</verse>
				<verse number="22">என்னுடைய உள்ளான மனிதனில் இறைவனுடைய சட்டத்தில் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="23">ஆனால் என் அங்கங்களில் வேறொரு நியதி செயற்படுவதைக் காண்கின்றேன். அது எனது மனதின் நியதிக்கு எதிராகப் போராடி, என் அங்கங்களில் செயற்படுகின்ற பாவ நியதிக்கு என்னை அடிமைப்படுத்துகிறது.</verse>
				<verse number="24">பரிதாபகரமான மனிதன் நான்! இந்த மரண உடலில் இருந்து யார் என்னைத் தப்புவிப்பார்?</verse>
				<verse number="25">நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எனக்கு விடுதலை கொடுக்கின்ற இறைவனுக்கு நன்றி! எனவே நான் என் உள்ளத்தில் இறைவனுடைய நீதிச்சட்டத்திற்கு பணி செய்கின்றேன். ஆனால் என்னுடைய மனித இயல்பில் பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">ஆகவே, இப்போது கிறிஸ்து இயேசுவுடன் இணைந்து இருக்கின்றவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.</verse>
				<verse number="2">நீங்கள் கிறிஸ்து இயேசுவுடன் இணைந்து வாழ்வளிக்கும் பரிசுத்த ஆவியானவரின் சட்டத்தினால் பாவம் மற்றும் மரணம் என்னும் சட்டத்தின் அதிகாரத்தில் இருந்து விடுதலை அடைந்துள்ளீர்கள்.</verse>
				<verse number="3">பாவ மனித இயல்பினால் பலவீனமுற்ற நீதிச்சட்டத்தினால் செய்ய முடியாததை இறைவன் செய்து முடித்தார். எப்படியெனில் பாவத்தின் தண்டனையை நீக்குகின்ற பலியாக தன் சொந்த மகனை பாவ மனித இயல்புள்ள மனித சாயலில் அனுப்பியதன் ஊடாக பாவ மனித இயல்பிலுள்ள பாவத்திற்கு தண்டனைத்தீர்ப்பை வழங்கிவிட்டார்.</verse>
				<verse number="4">பாவ மனித இயல்பின்படி வாழாமல், ஆவியானவரின் வழியில் வாழும் எம்மில் நீதிச்சட்டத்திற்கு ஏற்ற நீதி நிறைவேற்றப்படவே இப்படிச் செய்தார்.</verse>
				<verse number="5">பாவ மனித இயல்பின்படி வாழ்கின்றவர்கள், தங்கள் மனதை பாவ மனித இயல்புக்கு உரியவற்றில் பதித்திருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியின்படி வாழ்கின்றவர்களோ ஆவியின் காரியங்களில் தங்கள் மனதைப் பதித்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="6">பாவ மனித இயல்பில் மனதைப் பதித்தால் விளைவது மரணம், ஆவியில் மனதை பதித்தாலோ விளைவது வாழ்வும் சமாதானமும் ஆகும்.</verse>
				<verse number="7">பாவ மனித இயல்புக்குக் கட்டுப்பட்டுள்ள மனம் இறைவனுடன் பகைமை கொண்டுள்ளது. அது இறைவனின் சட்டத்திற்கு அடங்கி நடப்பதில்லை, அப்படி நடக்கவும் இயலாதிருக்கிறது.</verse>
				<verse number="8">இவ்வாறு பாவ மனித இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றவர்களால் இறைவனைப் பிரியப்படுத்த முடியாது.</verse>
				<verse number="9">ஆனால் இறைவனின் ஆவியானவர் உங்களில் குடியிருப்பது உண்மையெனில், நீங்கள் பாவ மனித இயல்புக்கு கட்டுப்பட்டிராமல் ஆவியானவரின் கட்டுப்பாட்டிலே இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவனோ கிறிஸ்துவுக்கு உரியவனே அல்ல.</verse>
				<verse number="10">கிறிஸ்து உங்களில் இருந்தால், உங்கள் உடல் பாவத்தின் காரணமாக இறந்திருந்தாலும், ஆவியோ நீதியின் காரணமாக உயிர் பெற்றதாயிருக்கும்.</verse>
				<verse number="11">இயேசுவை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பிய அவர், உங்களில் குடிகொண்டிருக்கும் தமது பரிசுத்த ஆவியானவர் மூலமாய் உங்கள் மரணத்துக்குரிய சரீரத்துக்கு உயிர் கொடுப்பார்.</verse>
				<verse number="12">ஆகையால் பிரியமானவர்களே நாம் கடனாளிகளே, ஆனால் நம்முடைய பாவ மனித இயல்புக்கு கட்டுப்பட்டு வாழும்படியாக அந்த பாவ மனித இயல்பிற்குக் கடனாளிகள் அல்ல.</verse>
				<verse number="13">ஏனெனில் பாவ மனித இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் இறந்து போவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு உங்கள் உடலின் பாவ மனித செயல்களை முற்றாக நிறுத்தி கொன்றொழித்தால் வாழ்வீர்கள்.</verse>
				<verse number="14">ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுகின்றவர்களே இறைவனுக்கு உரிய பிள்ளைகளாக இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="15">நீங்களோ உங்களை திரும்பவும் பயமடையச் செய்யும் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், உங்களை தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்ற ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். அவராலே, “அப்பா, பிதாவே” என்று சத்தமிட்டுக் கூப்பிடுகின்றோம்.</verse>
				<verse number="16">நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சாட்சி அளிக்கின்றார்.</verse>
				<verse number="17">நாம் இப்போது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதனால் சொத்துரிமை உடையவர்களாயும் இருக்கின்றோம். நாம் இறைவனுடைய சொத்துக்கு உரிமை உடையவர்களாயும் கிறிஸ்துவோடு சக சொத்துரிமைக்காரர்களாயும் இருந்து, அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம்.</verse>
				<verse number="18">தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள், நம்மில் வெளிப்படப் போகின்ற மகிமையோடு ஒப்பிடத்தக்கவையல்ல என்றே நான் எண்ணுகிறேன்.</verse>
				<verse number="19">இறைவனுடைய பிள்ளைகள் வெளிப்படுத்தப்படுவதைக் காண, படைப்பானது ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றது.</verse>
				<verse number="20">ஏனென்றால், படைப்பானது பயனற்ற விரக்தி நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அது தனது சொந்த தெரிவினால் அப்படி ஆகவில்லை, அதை அந்த நிலைக்கு ஆளாக்கியவரினால் அவ்வாறு ஆயிற்று.</verse>
				<verse number="21">படைப்பானது சிதைவுக்கு அடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலையடைந்து, இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திர நிலையை அடையும் என்ற முன் எதிர்பார்ப்பினால் அப்படி செய்யப்பட்டது.</verse>
				<verse number="22">நாம் அறிந்தபடி, இதுவரை முழு படைப்பும் பிரசவ வேதனைப்பட்டுப் புலம்புகிறது.</verse>
				<verse number="23">படைப்பு மட்டுமல்லாது பரிசுத்த ஆவியானவரின் முதற்பலனைப் பெற்றிருக்கின்ற நாமும், சரீர மீட்பின் மூலமாக தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாகும்படி ஆவலோடு காத்திருந்து எமக்குள்ளே புலம்பித் தவிக்கிறோம்.</verse>
				<verse number="24">இந்த எதிர்பார்ப்போடு நாம் மீட்கப்பட்டோம். எமது முன் எதிர்பார்ப்பு இப்போதே தெரிகின்றதெனில் அது முன் எதிர்பார்ப்பு அல்ல. ஒருவரும் இப்போதே தெரிகின்ற ஒன்றை பின்பு வரும் என்று எதிர்பார்த்திருப்பதில்லை.</verse>
				<verse number="25">ஆனால் நம்மிடம் காணப்படாத ஒன்றை நாம் எதிர்பார்த்திருந்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.</verse>
				<verse number="26">அவ்விதமாகவே ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கின்றார். நாம் எதற்காக மன்றாட வேண்டும் என்று நாம் அறியாதிருக்கின்றபடியால், வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஆழ்ந்த பெருமூச்சோடு, ஆவியானவர் தாமே நமக்காகப் பரிந்து மன்றாடுகின்றார்.</verse>
				<verse number="27">பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி, பரிசுத்தவான்களுக்காகப் பரிந்து மன்றாடுகின்றபடியால் எமது மனதை ஆராய்ந்தறியும் இறைவன், ஆவியானவருடைய மனதையும் அறிந்திருக்கிறார்.</verse>
				<verse number="28">அத்தோடு இறைவனின் நோக்கத்தின்படி அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கின்றவர்களின் நன்மைக்காக அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன என்று அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="29">ஏனென்றால் தாம் முன்பே அறிந்தவர்களைத் தம்முடைய மகனின் சாயலுக்கு ஒத்திருக்கும்படி இறைவன் முன்குறித்திருக்கிறார். இறைவனின் அநேக பிள்ளைகள் மத்தியிலே கிறிஸ்து முதற்பேறானவராய் இருக்கும்படி இப்படிச் செய்தார்.</verse>
				<verse number="30">அவர் முன்குறித்தவர்களை அழைத்திருக்கிறார், இப்படி அழைத்தவர்களை நீதிமான்களாய் ஆக்கியிருக்கிறார்; நீதிமான்களாய் ஆக்கியவர்களை மகிமைப்படுத்தியிருக்கிறார்.</verse>
				<verse number="31">ஆகையால், இவைகளைப்பற்றி நாம் என்ன சொல்வோம்? இறைவன் நம் சார்பாக இருந்தால் நமக்கு எதிராய் இருப்பவர் யார்?</verse>
				<verse number="32">தமது சொந்த மகனைக்கூட விட்டுவைக்காமல் அவரை நம் எல்லோருக்காகவும் ஒப்படைத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்கு கிருபையாக வழங்காதிருப்பது எப்படி?</verse>
				<verse number="33">இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக யார் குற்றம் சுமத்த முடியும்? இறைவனே அவர்களை நீதிமான் என்று தீர்ப்பளித்துவிட்டாரே!</verse>
				<verse number="34">அவர்களைக் குற்றவாளிகளென்று தீர்ப்பவன் யார்? மரணித்தவரும், அதிலும் மேலாக உயிருடன் எழுப்பப்பட்டவருமான கிறிஸ்து இயேசு, இறைவனுடைய வலது பக்கத்தில் இருந்து நமக்காக பரிந்து மன்றாடுகிறாரே.</verse>
				<verse number="35">கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? துன்பமா, வேதனையா, துன்புறுத்தலா, பஞ்சமா, நிர்வாணமா, ஆபத்தா, கொடூர வன்முறையா?</verse>
				<verse number="36">“உமக்காக நாங்கள் நாள்தோறும் கொல்லப்படுகிறோம்; கொல்லப்படும் செம்மறியாடுகளைப் போல் எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறதே.</verse>
				<verse number="37">ஆனாலும் இவை எல்லாவற்றிலும், நம்மீது அன்பு வைத்தவரின் மூலமாய் நாம் வெற்றி மேல் வெற்றி அடைகின்றோம்.</verse>
				<verse number="38">ஏனெனில் மரணமோ வாழ்வோ, வானவர்களோ ஆளுகையோ, நிகழ்காரியமோ வருங்காரியமோ, வல்லமைகளோ,</verse>
				<verse number="39">வானத்திலோ ஆழத்திலோ அல்லது படைக்கப்பட்டவைகளில் உள்ள வேறு எதுவுமோ நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலிருக்கும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற உறுதி எனக்குண்டு.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">இப்போது நான் சொல்வது பொய்யல்ல, என் மனசாட்சியும் பரிசுத்த ஆவிக்குள்ளாக என்னோடு சேர்ந்து எனக்கு சாட்சி பகருகிறது. கிறிஸ்துவுக்குள் இணைந்திருப்பதால் நான் சொல்லும் உண்மை என்னவெனில்,</verse>
				<verse number="2">என் இருதயத்தில் ஆழ்ந்த சோகமும் நீங்காத மனவேதனையும் உள்ளன.</verse>
				<verse number="3">என்னுடைய பிறப்பினாலே எனக்குச் சொந்த இனத்தவராகவும், என்னுடைய சொந்த சகோதர சகோதரிகளாகவும் இருக்கும் யூத மக்கள் காப்பாற்றப்படுவதானது, நான் கிறிஸ்துவைவிட்டு சபிக்கப்பட்டு ஒதுக்கப்படுவதால் நிறைவேற்றப்படுமானால், அதற்கும் நான் தயார்.</verse>
				<verse number="4">இஸ்ரயேலர் எனப்பட்ட இவர்களே, இறைவனின் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் என்ற உரிமை பெற்றவர்கள். இறைவனின் மகிமை பிரசன்னம், உடன்படிக்கைகள் என்பவை இவர்களுக்கே கிடைத்தன. மோசேயின் நீதிச்சட்டம், ஆலய வழிபாடுகள், இறைவாக்குறுதிகள் என்பவற்றையும் இவர்களே பெற்றார்கள்.</verse>
				<verse number="5">முற்பிதாக்களும் இவர்களுடையவர்களே, அந்த முற்பிதாக்களின் மனித சந்ததியிலேயே கிறிஸ்துவும் வந்தார். கிறிஸ்துவே அனைத்துக்கும் மேலான இறைவன், என்றென்றும் துதிக்கப்படுபவர். ஆமென்.</verse>
				<verse number="6">இதனால் இறைவனுடைய வார்த்தையிலுள்ள வாக்குறுதிகள் நிறைவேறாமல் போயின என்ற முடிவுக்கு வரலாகாது. காரணம், முற்பிதாவாகிய இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே உண்மையில் இஸ்ரயேலர்கள் அல்ல.</verse>
				<verse number="7">அத்தோடு ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் அனைவருமே அவருடைய உண்மையான பிள்ளைகள் அல்ல. ஏனெனில், “ஈசாக்கின் ஊடாக வருவோரே உனது சந்ததி” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.</verse>
				<verse number="8">எனவே ஆபிரகாமின் மனித சந்ததியில் பிறக்கின்றவர்கள் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல, மாறாக இறைவனின் வாக்குறுதியின்படி உருவானோரே ஆபிரகாமுடைய சந்ததியென எண்ணப்படுகிறார்கள்.</verse>
				<verse number="9">ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பி வருவேன். அப்போது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குறுதி சொல்லப்பட்டது.</verse>
				<verse number="10">அதுமட்டுமல்ல, நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்ற ஒரே மனிதன் மூலமாக ரெபேக்காள் இரு பிள்ளைகளைக் கர்ப்பம் தரித்தாள்.</verse>
				<verse number="11">பிள்ளைகள் பிறக்கும் முன்னதாகவே, அதாவது அவர்கள் நன்மை தீமை ஒன்றும் செய்வதற்கு முன்பே அவ்விருவரில் ஒருவரை இறைவன் தெரிவு செய்தார். இறைவன் எந்த நோக்கத்திற்காக தெரிவு செய்தாரோ அந்த நோக்கத்தை எந்த மனிதனதும் நல்ல செயல்களினால் நிறைவேற்றாமல், இறைவனின் அழைப்பினாலே நிறைவேற்றும்படியாக,</verse>
				<verse number="12">“மூத்தவன் இளையவனுக்குப் பணி செய்வான்” என்று ரெபேக்காளுக்குச் சொல்லப்பட்டது.</verse>
				<verse number="13">அதேபோல், “நான் யாக்கோபை நேசித்து ஏசாவை வெறுத்தேன்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="14">ஆகவே நாம் என்ன சொல்லுவோம்? இறைவன் அநீதியுள்ளவரா? ஒருபோதும் இல்லை.</verse>
				<verse number="15">ஏனெனில் இறைவன் மோசேயிடம், “நான் யார்மேல் இரக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது இரக்கமாயிருப்பேன். நான் யார்மேல் மன உருக்கமாயிருக்க விருப்பமாயிருப்பேனோ, அவன்மீது மன உருக்கமாயிருப்பேன்” என்றார்.</verse>
				<verse number="16">ஆகவே, ஒருவர் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வது, மனித விருப்பத்திலோ முயற்சியிலோ அல்ல, இரக்கமுள்ள இறைவனிலேயே தங்கியிருக்கிறது.</verse>
				<verse number="17">ஏனெனில் இறைவன் பார்வோனிடம், “என்னுடைய வல்லமையை உன்னில் காண்பித்து, பூமியெங்கும் என்னுடைய பெயரை பறைசாற்றும் நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்” என்று சொன்னதை வேதவசனம் கூறுகிறது.</verse>
				<verse number="18">எனவே இறைவன் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறாரோ, அவனுக்கு அவர் இரக்கம் காட்டுகிறார். யாரைக் கடினமாக்க விரும்புகிறாரோ, அவனைக் கடினமாக்குகிறார்.</verse>
				<verse number="19">உங்களில் ஒருவன் என்னிடம், “அப்படியானால் இறைவன் ஏன் இன்னும் எங்களில் குற்றம் கண்டுபிடிக்கிறார்? இறைவனுடைய திட்டத்தை எதிர்க்க யாரால் முடியும்?” என்று கேட்கலாம்.</verse>
				<verse number="20">அப்படியானால் மனிதனே, இறைவனை எதிர்த்துப் பேசுவதற்கு நீ யார்? உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவனிடம், “ஏன் என்னை இப்படி உருவாக்கினாய்?” என்று கேட்கலாமா?</verse>
				<verse number="21">ஒரே களிமண்ணிலிருந்து ஒரு பாத்திரத்தை உயர்ந்த நோக்கத்திற்காகவும், மற்றொன்றை சாதாரண நோக்கத்திற்காகவும் உருவாக்குவதற்கு பாத்திரத்தை வனைபவனுக்கு உரிமை இல்லையா?</verse>
				<verse number="22">அழிக்கப்படுவதற்கு தயார் செய்யப்பட்ட, அதாவது இறைவனின் கோபத்தை அனுபவிக்க தகுதி உடையவர்களை இறைவன் அதிக பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இறைவன் தமது கோபத்தைக் காட்டவும் தமது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பியதால் இப்படிச் செய்திருக்கலாம் அல்லவா?</verse>
				<verse number="23">அத்துடன் இறைவன் முன்பே தன் மகிமைக்கென ஆயத்தம் செய்த மக்களுக்கு, அதாவது அவர் இரக்கம் செலுத்த விரும்புகின்ற மக்களுக்கு, தன் பெருநிறைவை வெளிப்படுத்தவும் இப்படிச் செய்திருக்கலாம் அல்லவா?</verse>
				<verse number="24">நாமும்கூட யூதர்களிலிருந்து மாத்திரம் அல்ல, யூதரல்லாதவர்களில் இருந்தும் இப்படியாக அழைக்கப்பட்டவர்களாய் இருக்கின்றோம் அல்லவா?</verse>
				<verse number="25">இதைப்பற்றியே ஓசியாவின் புத்தகத்திலே, “நான் என்னுடைய மக்கள் அல்லாதவர்களை ‘என்னுடைய மக்கள்’ என்றும்; அன்பில்லாத ஒருத்தியை ‘எனக்கு அன்பானவள்’ என்றும் அழைப்பேன்” என்று எழுதப்பட்டுள்ளது.</verse>
				<verse number="26">மேலும், “ ‘நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல’ என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டதோ, அதே இடத்தில், அவர்கள் ‘வாழும் இறைவனின் பிள்ளைகள்’ என அழைக்கப்படுவார்கள்” என்றும் எழுதப்பட்டுள்ளது.</verse>
				<verse number="27">இறைவாக்கினன் ஏசாயாவும் இஸ்ரயேலரைக் குறித்து, “இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை கடற்கரையின் மணலைப் போல் இருந்தாலும், எஞ்சியுள்ள சிறு குழுவினர் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள்.</verse>
				<verse number="28">கர்த்தர் பூமியின் மேல் தண்டனையை தீவிரமாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுவார்.”</verse>
				<verse number="29">ஏசாயா மீண்டும், “எல்லாம் வல்ல கர்த்தர் நமக்கு ஒரு சந்ததியை விட்டுவைக்காதிருந்தால், நாங்கள் சோதோமைப் போலும் கொமோராவைப் போலும் ஆகியிருப்போம்” என்று உரைத்திருக்கிறார்.</verse>
				<verse number="30">அப்படியானால் நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் அதைக் கண்டு அடைந்தார்கள். அது விசுவாசத்தின் மூலமாக வரும் நீதியே.</verse>
				<verse number="31">ஆனால் நீதியை அடையும்படி நீதிச்சட்டத்தைக் கடைப்பிடித்த இஸ்ரயேலரோ, முயற்சித்தும் அதை அடையவில்லை.</verse>
				<verse number="32">ஏன்? அவர்கள் அதனை விசுவாசத்தின் மூலமாகத் தேடாமல், நல்ல செயல்களினால் கிடைக்கும் என தேடி தடுக்கல்லில் தடுக்கி விழுந்தார்கள்.</verse>
				<verse number="33">இதைப்பற்றியே இப்படி எழுதப்பட்டுள்ளது: “இதோ நான் சீயோனிலே இடறுவதற்கான ஒரு கல்லையும் தவறுவதற்கான ஒரு கற்பாறையையும் வைக்கிறேன். அவரில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை.”</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">பிரியமானவர்களே, இஸ்ரயேலர் மீட்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய இருதயத்தின் ஆசையும் நான் இறைவனிடம் ஏறெடுக்கும் மன்றாடுதலுமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="2">இறைவனைக் குறித்த வைராக்கியம் அவர்களுக்கு இருந்தாலும், அது அவர்கள் உண்மையை உறுதியாகப் புரிந்து கொண்டதால் வந்த ஒன்றல்ல.</verse>
				<verse number="3">ஏனெனில், இறைவனின் நீதிமானாக்கும் முறைமையை அவர்கள் புரிந்துணர்ந்துகொள்ளாதவர்களாக, தாங்களே தங்களை நீதிமானாக்கிக்கொள்ள முயற்சிப்பதால், அவர்கள் இறைவனின் நீதிமானாக்கும் முறைமைக்குக் கட்டுப்படாதவர்களாக இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="4">ஏனென்றால் விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் நீதிமானாகும்படி, கிறிஸ்துவே நீதிச்சட்டத்தின் முடிவு.</verse>
				<verse number="5">நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்து நீதிமானாக்கப்படுவதைக் குறித்து மோசே இப்படிச் சொல்கிறார்: “ஒருவர் நீதிச்சட்டத்தின்படி வாழ்ந்தால், சட்டம் அவருக்கு வாழ்வளிக்கும்.”</verse>
				<verse number="6">ஆனால் விசுவாசத்தின் ஊடாக நீதிமானாக்கப்படுவதைக் குறித்தோ வேதவசனத்தில் இவ்விதமாய் சொல்லப்படுகிறது: “யார் பரலோகத்துக்கு ஏறிச் செல்வார்?” (அதாவது கிறிஸ்துவைக் கீழே அழைத்து வருவதற்காக) என்று உன் இருதயத்தில் யோசிக்காதே.</verse>
				<verse number="7">அல்லது, “யார் பாதாளத்துக்குள்ளே இறங்கிச் செல்வார்?” (அதாவது கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து எழுப்பி மேலே அழைத்து வருவதற்காக) என்றும் யோசிக்காதே.</verse>
				<verse number="8">வேதவசனம் உண்மையில் என்ன சொல்கின்றது? “இறைவனின் வார்த்தை உன் அருகே உள்ளது, அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கின்றது” என்கிறது. அந்த விசுவாசத்தின் வார்த்தையைத்தான் நாங்கள் பிரசங்கிக்கிறோம்.</verse>
				<verse number="9">அதாவது, “இயேசுவே ஆண்டவர்” என்று உங்கள் வாயினால் அறிவித்து, இறைவன் அவரை மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசித்தால் நீங்கள் மீட்கப் படுவீர்கள்.</verse>
				<verse number="10">உங்கள் இருதயத்தில் விசுவாசித்து நீதிமானாக்கப்படுகிறீர்கள். உங்கள் வாயினால் ஒப்புக்கொண்டு அறிவித்து மீட்கப்படுகிறீர்கள்.</verse>
				<verse number="11">“அவர்மீது விசுவாசம் வைக்கின்ற எவரும் வெட்கத்துக்குள்ளாவதில்லை” என வேதவசனம் சொல்கின்றது.</verse>
				<verse number="12">ஏனெனில் யூதருக்கும் யூதரல்லாதவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை. ஒரே இறைவனே எல்லோருக்கும் இறைவனாய் இருக்கின்றபடியால் அவரை அழைக்கின்ற அனைவருக்கும் அவருடைய ஆசீர்வாதங்களைத் தாராளமாக வழங்குகிறார்.</verse>
				<verse number="13">அதனால், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற யாவரும் மீட்கப்படுவார்கள்” என்று எழுதியிருக்கிறது.</verse>
				<verse number="14">ஆனால் தாங்கள் நம்பிக்கை வைக்காத ஒருவரிடம் தம்மை மீட்குமாறு அவர்கள் அழைப்பு விடுக்கக் கூடுமோ? இதுவரை அவரைப்பற்றி கேள்விப்படவே இல்லையெனில், எப்படி அவர்மீது நம்பிக்கை வைப்பார்கள்? எவராவது அவர்களுக்கு செய்தியை பிரசங்கிக்காவிட்டால் அவர்கள் அதைக் கேள்விப்படுவதும் எப்படி?</verse>
				<verse number="15">பிரசங்கிப்பவர்கள் அனுப்பப்படாவிட்டால், அவர்கள் எப்படி பிரசங்கிப்பார்கள்? அதனாலேயே, “நற்செய்தியைக் கொண்டுவருகின்றவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை” என்று எழுதப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="16">ஆனால் கேட்டவர்கள் எல்லோரும் நற்செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகவேதான் ஏசாயா, “கர்த்தாவே, எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?” என்றார்.</verse>
				<verse number="17">எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமாக விசுவாசம் வருகின்றது. அவர்கள் கேட்டது பிரசங்கிக்கப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தையின் மூலமாக வருகின்றது.</verse>
				<verse number="18">அப்படியானால் இஸ்ரயேலர் நற்செய்தியைக் கேள்விப்படவில்லையா என்று நான் கேட்கின்றேன்? ஆம், நிச்சயமாகவே அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஏனென்றால் வேதவசனம் இறைவனின் செய்தியைப்பற்றி, “செய்தியை கொண்டுவருகின்றவர்களின் குரல் பூமி எங்கும் சென்றது. அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் சென்றன” என்கிறது.</verse>
				<verse number="19">இஸ்ரயேலர்கள் அதை புரிந்துகொள்ளவில்லையா? என நான் கேட்கின்றேன். “ஒரு இனமாகக் கருதப்படாதவர்களைக்கொண்டு, நான் உங்களுக்கு எரிச்சலூட்டுவேன்; புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு இனத்தைக்கொண்டு, நான் உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்று இறைவன் மோசேயின் ஊடாகச் சொல்கின்றார்.</verse>
				<verse number="20">“என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன்” என இறைவன் சொன்னதை ஏசாயா துணிவுடன் சொல்கின்றார்.</verse>
				<verse number="21">ஆனால் இஸ்ரயேலரைக் குறித்தோ, “கீழ்ப்படியாத, பிடிவாதமுள்ள மக்களை நோக்கி, நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்” என்று இறைவன் சொன்னதையே அவர் அறிவித்தார்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">இறைவன் தம்முடைய மக்களான இஸ்ரயேலரை நிராகரித்துவிட்டாரா என நான் கேட்கின்றேன்? அப்படி இல்லை. ஏனென்றால் நானும் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, ஆபிரகாமின் சந்ததியில் வந்த இஸ்ரயேலனே.</verse>
				<verse number="2">இறைவன் தாம் முன்பே அறிந்த தம்முடைய மக்களைக் கைவிடவில்லை. எலியாவைப்பற்றி வேதவசனம் என்ன சொல்கின்றது என்றும், அவர் எவ்விதம் இஸ்ரயேலுக்கு விரோதமாக இறைவனை நோக்கி மன்றாடி வேண்டிக் கொண்டார் என்றும் அறியாதிருக்கிறீர்களா?</verse>
				<verse number="3">அவர், “கர்த்தாவே அவர்கள் உம்முடைய இறைவாக்கினரைக் கொலை செய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துவிட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்” என்றார்.</verse>
				<verse number="4">அதற்கு இறைவன், அவருக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, எஞ்சியிருப்பது நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழந்தாழிடாத, ஏழாயிரம் பேரை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்” என்றார்.</verse>
				<verse number="5">அப்படியே தற்காலத்திலும், கிருபையினால் தெரிவு செய்யப்பட்ட இஸ்ரயேலர்களில் சிலர் எஞ்சியிருக்கின்றார்கள்.</verse>
				<verse number="6">அவர்கள் தெரிவு செய்யப்பட்டது கிருபையினால் என்றால் அது அவர்களது நல்ல செயல்களினால் நடந்தது அல்லவே. நல்ல செயல்களால் அது நடந்ததென்றால் கிருபையானது உண்மையான கிருபையாக இராதே.</verse>
				<verse number="7">நடந்தது என்ன? இஸ்ரயேலர்கள் ஆர்வத்துடன் தேடியதை அடையத் தவறினார்கள். ஆனால் அவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் அதைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றவர்களின் மனங்களோ கடினமாக்கப்பட்டன.</verse>
				<verse number="8">எழுதியிருக்கின்றபடி, “இந்த நாள்வரை, இறைவன் அவர்களுக்கு ஒரு மந்தமுள்ள ஆவியையும், காண முடியாத கண்களையும், கேட்க முடியாத காதுகளையும் கொடுத்தார்.”</verse>
				<verse number="9">தாவீது இவர்களைக் குறித்தே, “அவர்களுடைய விருந்தே அவர்களைச் சிக்க வைக்கும் கண்ணிப் பொறியாகவும், அவர்கள் தடுக்கி விழும் கல்லாகவும், அவர்களது தண்டனையாகவும் மாறட்டும்.</verse>
				<verse number="10">அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்களை இருளடையச் செய்து, அவர்களுடைய முதுகு எந்நேரமும் சுமையால் கூனிப் போகச் செய்யும்” என்றார்.</verse>
				<verse number="11">அவர்கள் தடுக்கி வீழ்ந்தது ஒரு மீள முடியாத வீழ்ச்சியா என நான் கேட்கின்றேன்? இல்லவே இல்லை. அவர்களின் நெறி மீறுதலினாலே யூதரல்லாதவர்களுக்கு மீட்பு வந்தது. இது இஸ்ரயேலர்கள் பொறாமை அடைவதற்காகவே நடந்தது.</verse>
				<verse number="12">இஸ்ரயேலர்களுடைய மீறுதல் உலகத்திற்கு ஆசீர்வாதமாயும், அவர்களுடைய இழப்பு யூதரல்லாத மக்களுக்கு ஆசீர்வாதமாயும் இருக்குமானால், அவர்களுடைய முழுமையான உள்ளடக்கம் இன்னும் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும்.</verse>
				<verse number="13">இப்போது யூதரல்லாதவர்களாகிய உங்களோடு நான் பேசுகின்றேன். நான் யூதரல்லாத மக்களிடம் அனுப்பப்பட்ட அப்போஸ்தலனாய் இருப்பதால் என்னுடைய ஊழியத்தைக் குறித்துப் பெருமிதம் அடைகிறேன்.</verse>
				<verse number="14">அதன்மூலமாக எப்படியாவது இஸ்ரயேலர்கள் சிலருடைய பொறாமையைத் தூண்டி, அவர்களை காப்பாற்றும் நல்ல எதிர்பார்ப்பு எனக்குண்டு.</verse>
				<verse number="15">ஏனெனில் இஸ்ரயேலர்கள் நற்செய்தியை நிராகரித்தது உலகத்தின் ஒப்புரவாக்குதலுக்கு வழிவகுத்ததென்றால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது மரணித்தவர் உயிர்த்தெழுவது போல் இருக்குமல்லவா?</verse>
				<verse number="16">பிசைந்த மாவிலிருந்து எடுக்கப்பட்டு முதற்பலனாக அர்ப்பணிக்கப்பட்ட சிறிதளவு மாவானது பரிசுத்தமானது எனின் பிசைந்த மாவு முழுவதுமே பரிசுத்தமானதே. ஒரு மரத்தின் வேர் பரிசுத்தமானதெனின் அதன் கிளைகளும் பரிசுத்தமானவையே.</verse>
				<verse number="17">நல்ல ஒலிவ மரத்திலிருந்து சில கிளைகள் முறித்தெறியப்பட்டு, அதற்குப் பதிலாகக் காட்டு ஒலிவ மரத்தின் தளிர்களாகிய நீங்கள், எஞ்சிய கிளைகளிடையே ஒட்டு மரமாய் இணைக்கப்பட்டீர்கள். அதனால், இப்போது நல்ல ஒலிவ மரத்தின் வேரிலிருந்து வரும் சாரத்திலே நீங்களும் ஊட்டம் பெறுகிறீர்கள்.</verse>
				<verse number="18">எனவே நீங்கள் உங்களை மற்ற கிளைகளோடு ஒப்பிட்டு பெருமை அடையக் கூடாது. அப்படி நீங்கள் பெருமைப்பட்டால் வேருக்கு ஊட்டமளிக்கும் ஆதரவை கொடுக்கின்றவர்கள் நீங்கள் அல்ல, மாறாக வேரே உங்களுக்கு ஊட்டமளிக்கும் ஆதரவு என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="19">“நாங்கள் ஒட்ட வைக்கப்படும்படியாக அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டன” என்று நீங்கள் சொல்லலாம்.</verse>
				<verse number="20">உண்மைதான், ஆனால் அவர்கள் விசுவாசிக்காத காரணத்தினால்தான் முறித்து எறியப்பட்டார்கள். நீங்களோ விசுவாசித்ததனாலே மட்டுமே நிலைத்து நிற்கிறீர்கள். எனவே நீங்கள் பெருமைகொள்ளாமல் பயத்துடன் வாழுங்கள்.</verse>
				<verse number="21">இறைவன் இயற்கையான கிளைகளையே முறித்து எறிந்தாரெனில் உங்களை அவர் தப்ப விடுவது எப்படி?</verse>
				<verse number="22">ஆகவே இறைவனுடைய தயவையும், தீவிர கண்டிப்பையும் நன்கு கவனியுங்கள். அவர் வழிவிலகி வீழ்ந்தவர்கள் மேல் தீவிர கண்டிப்பையும், உங்கள் மேலோ தயவையும் காட்டுகிறார். அவருடைய தயவில் நீங்கள் தொடர்ந்து நிலைத்திராவிட்டால் உங்களையும் அவர் அகற்றி விடுவார்.</verse>
				<verse number="23">இஸ்ரயேலர் தங்கள் விசுவாசம் அற்ற வழியில் தொடர்ந்து செல்லாத நிலைக்கு வரும்போது, அவர்களும் மீண்டும் மரத்தோடு கிளைகளாக ஒட்டப்படுவார்கள். இறைவன் அவர்களைத் திரும்பவும் ஒட்ட வைக்க வல்லவராய் இருக்கின்றார்.</verse>
				<verse number="24">இயற்கையான காட்டு ஒலிவ மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட உங்களை, தோட்டத்தில் வளர்க்கும் ஒலிவ மரத்தில் இயற்கைக்கு மாறாக இறைவன் ஒட்ட வைத்தார் எனில், இயற்கையான கிளைகளைத் திரும்பவும் தங்கள் சொந்த ஒலிவ மரத்திலே ஒட்ட வைப்பது எவ்வளவு எளிதானது!</verse>
				<verse number="25">பிரியமானவர்களே, நீங்கள் உங்களை அறிவாளிகள் என்று எண்ணாமல், இந்த மறைபொருளை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். யூதரல்லாத விசுவாசிகளிலிருந்து முழுத் தொகையான மக்கள் வந்து சேரும் வரையில், இஸ்ரயேலர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் கடினப்பட்டிருப்பார்கள்.</verse>
				<verse number="26">இவ்விதமாய் எழுதியிருக்கின்றபடி எல்லா இஸ்ரயேலரும் மீட்கப்படுவார்கள்: “மீட்கின்றவர் சீயோனிலிருந்து வந்து, யாக்கோபின் இறை பற்றற்ற நிலையை நீக்கிவிடுவார்.</verse>
				<verse number="27">நான் அவர்களுடைய பாவங்களை நீக்கி விடும்போது, இதுவே நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை.”</verse>
				<verse number="28">நற்செய்தியைப் பொறுத்தவரையில், உங்கள் பொருட்டு அவர்கள் பகைவராய் இருக்கின்றார்கள். ஆனால் இறைவனின் கிருபைத் தெரிவினாலும், அவர்களது முற்பிதாக்கள் பொருட்டும் அதிகம் நேசிக்கப்படுகிறார்கள்.</verse>
				<verse number="29">இறைவனின் அழைப்பும் வரங்களும் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாதவை.</verse>
				<verse number="30">முன்பு நீங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமையினால் நீங்கள் இரக்கம் பெற்றிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="31">அதுபோலவே இஸ்ரயேலரும் இப்போது கீழ்ப்படியாமல் இருக்கின்றார்கள். இறைவன் உங்களுக்குக் காண்பித்த இரக்கத்தினால் அவர்களும் இரக்கம் பெறுவார்கள்.</verse>
				<verse number="32">ஏனெனில் இறைவன் எல்லா மனிதர் மேலும் இரக்கம் காட்டும்படி, எல்லா மனிதரையும் அவர்களது கீழ்ப்படியாமையின் தண்டனையில் கட்டி வைத்துள்ளார்.</verse>
				<verse number="33">ஆ! இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் எல்லை எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறிய முடியாதவை. அவருடைய வழிகளோ கண்டுபிடிக்க முடியாதவை.</verse>
				<verse number="34">“கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”</verse>
				<verse number="35">“இறைவன் தனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி, இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”</verse>
				<verse number="36">எல்லாமே அவரிடமிருந்து வந்தவை, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன. அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தைக்கொண்டு, உங்களை கேட்டுக்கொள்கின்றதாவது, உங்கள் உடல்களை பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமான உயிருள்ள பலியாகவும் ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு.</verse>
				<verse number="2">இந்த உலகத்தின் நடைமுறைகளுக்கு ஒத்து நடவாமல், சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகின்றதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் பகுத்தறியும்படி, உங்கள் மனம் புதுப்பிக்கப்படுவதால் முழுமையாக உருமாற்றம் அடையுங்கள்.</verse>
				<verse number="3">இறைவன் எனக்களித்த கிருபையின்படி உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்கின்றதாவது: அளவுக்கதிகமாய் உங்களைக் குறித்து உயர்வாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறைவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவின்படியே, மனத்தெளிவுடன் உங்களைக் குறித்து மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="4">நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கின்றது, அதில் பல அங்கங்கள் இருக்கின்றன. இந்த அங்கங்கள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை.</verse>
				<verse number="5">அதுபோலவே கிறிஸ்துவுக்குள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே உடலாகின்றோம். நாம் உடலின் பல்வேறு அங்கங்களாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் சொந்தமாயிருக்கிறோம்.</verse>
				<verse number="6">நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கின்றபடியால், இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம் பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும்.</verse>
				<verse number="7">அப்படியே சேவை செய்கின்றவன் சேவை செய்வதிலும், போதிக்கின்றவன் போதிப்பதிலும்,</verse>
				<verse number="8">உற்சாகப்படுத்துகின்றவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகின்றவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் ஆர்வத்துடன் நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும்.</verse>
				<verse number="9">உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்க வேண்டும். தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="10">ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள். ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம் பண்ணி நடவுங்கள்.</verse>
				<verse number="11">ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.</verse>
				<verse number="12">எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாய் இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள்.</verse>
				<verse number="13">தேவையிலிருக்கின்ற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.</verse>
				<verse number="14">உங்களைத் துன்புறுத்துகின்றவர்களை ஆசீர்வதியுங்கள். அவர்களைச் சபியாதிருங்கள்.</verse>
				<verse number="15">மகிழ்ச்சியாய் இருக்கின்றவர்களுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; அழுகின்றவர்களுடனே அழுங்கள்.</verse>
				<verse number="16">ஒருவரோடு ஒருவர் ஒரே மனதுள்ளவர்களாய் வாழுங்கள். பெருமைகொள்ளாமல், தாழ்ந்தவர்களுடனும் நட்புறவு கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனப் பெருமிதம் கொள்ளாதிருங்கள்.</verse>
				<verse number="17">யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அதற்குப் பதிலாக, நீங்களும் தீமை செய்ய வேண்டாம். எல்லா மனிதருடைய பார்வையிலும் சரியானதையே செய்யும்படி கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="18">இயலுமானால் உங்களால் முடிந்தவரை எல்லோருடனும் சமாதானமாய் இருங்கள்.</verse>
				<verse number="19">என் அன்பானவர்களே, பழிக்குப் பழிவாங்காமல் இறைவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடங்கொடுங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதில் செய்வேன் என்று கர்த்தர் சொல்கின்றார்” என்று எழுதியிருக்கின்றதே.</verse>
				<verse number="20">எனவே, “உங்கள் பகைவன் பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடுங்கள்; தாகமாயிருந்தால், அவனுக்கு அருந்தக் கொடுங்கள். இவ்விதம் செய்வதனால் நீங்கள் அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பீர்கள்.”</verse>
				<verse number="21">தீமை உங்களை ஆக்கிரமிக்க இடங்கொடாமல் தீமையை நன்மையினால் ஆக்கிரமியுங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">அரச அதிகாரங்களுக்கு அனைவரும் கீழ்ப்படிந்து நடவுங்கள். இறைவனே அனைத்து அதிகாரங்களுக்கும் மேலானவராக இருக்கின்றார். அதிகாரங்கள் அனைத்தும் அவராலே நிறுவப்பட்டுள்ளன.</verse>
				<verse number="2">ஆகையால் அதிகாரத்தை எதிர்க்கின்றவன், இறைவன் நியமித்ததை எதிர்க்கின்றான். அவ்விதம் எதிர்க்கின்றவர்கள் தங்கள் மேல் தண்டனையை வருவித்துக்கொள்கின்றார்கள்.</verse>
				<verse number="3">ஏனெனில், நன்னடத்தை உள்ளவர்களுக்கன்றி, துர்நடத்தையுள்ளவர்களுக்கே அதிகாரிகள் மோசமானவர்களாகக் காணப்படுகிறார்கள். அதிகாரத்திலுள்ளவர்களுக்குப் பயப்படாமல் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் நன்மை செய்து அவர்களது பாராட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="4">அதிகாரத்தில் இருக்கின்றவன் உங்களுக்கு நன்மை செய்வதற்கான இறைவனுடைய வேலைக்காரனாக இருக்கின்றான். நீங்கள் தவறு செய்தால், அவர்களுக்குப் பயப்படுங்கள். அவர்கள் ஆயுதத்தை வீணாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள், தீமை செய்கின்றவர்கள் மேல் இறைவனுடைய கோபத்தை வரப்பண்ணுகின்ற தண்டனையைக் கொடுக்கும் பிரதிநிதிகள்.</verse>
				<verse number="5">ஆகையால் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பது அவசியம். தண்டனை கிடைக்கும் என்பதற்காக மட்டும் அல்ல, நம்முடைய மனசாட்சியின் பொருட்டும் அடங்கி நடக்க வேண்டும்.</verse>
				<verse number="6">அதிகாரத்தில் உள்ளவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள். அவர்கள் இந்தப் பணிக்காக தங்களது முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். இதற்காக நீங்கள் வரியையும் செலுத்துகிறீர்கள்.</verse>
				<verse number="7">நீங்கள் ஒவ்வொருவனுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். நீங்கள் வரி செலுத்த வேண்டியிருந்தால் வரியைச் செலுத்துங்கள், சுங்க வரி செலுத்த வேண்டுமானால் அதைச் செலுத்துங்கள், மரியாதை செலுத்த வேண்டுமானால் மரியாதை செலுத்துங்கள், கனம் பண்ண வேண்டுமானால் கனம் பண்ணுங்கள்.</verse>
				<verse number="8">எவருக்கும் கடன்காரனாய் இராமல் ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்துவதில் மட்டும் கடன்பட்டவர்களாய் இருங்கள். ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால், நீங்கள் நீதிச்சட்டத்தை நிறைவேற்றுகிறீர்கள்.</verse>
				<verse number="9">“தகாத உறவுகொள்ளாதே,” “கொலை செய்யாதே,” “களவு செய்யாதே,” “அயலானுடையதை அபகரிக்க ஆசைகொள்ளாதே” என்ற கட்டளைகளும், வேறு கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவையெல்லாம், “நீ உன்னில் அன்பாயிருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாயிரு” என்ற ஒரே கட்டளையில் அடங்குகின்றன.</verse>
				<verse number="10">அயலவனில் அன்பு செலுத்துகின்றவன் பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டான். ஆகவே, அன்பே நீதிச்சட்டத்தை முழுநிறைவாக்குகிறது.</verse>
				<verse number="11">தற்போதைய காலத்தை புரிந்து கொண்டவர்களாய் இவைகளைச் செய்யுங்கள். உங்கள் தூக்கத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. நாம் விசுவாசிகளானபோது இருந்ததைவிட நமது இரட்சிப்பு இப்போது சமீபமாயிருக்கிறது.</verse>
				<verse number="12">இரவு கடந்து போயிற்று, பகல் சமீபமாயிற்று. எனவே இருளின் செயல்களை நம்மைவிட்டு அகற்றி, ஒளியின் ஆயுதத்தை அணிந்துகொள்வோம்.</verse>
				<verse number="13">ஒழுக்கக்கேடான களியாட்டங்களையும், குடிவெறியாட்டங்களையும், பாலியல் முறைகேடுகளையும், கேடுகெட்ட செயல்களையும், பிரிவினைகளையும், பொறாமைகளையும் அகற்றிவிட்டு பகலில் நடப்பவர்களைப் போல் ஒழுக்கமாய் நடப்போம்.</verse>
				<verse number="14">பாவ மனித இயல்பின் விருப்பத்தை திருப்திப்படுத்த இடம் கொடாமல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">விசுவாசத்தில் பலவீனமாயிருக்கின்றவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், கருத்து வேறுபாடுகளைக் குறித்து அவனுடன் வாதாடாமல் இருங்கள்.</verse>
				<verse number="2">ஒருவன் எல்லாவித உணவையும் உண்ணலாம் என நம்புகிறான். விசுவாசத்தில் பலவீனமாய் இருக்கின்றவனோ மரக்கறி உணவை மட்டுமே உண்ணுகிறான்.</verse>
				<verse number="3">எனவே உண்ணுகின்றவன் சில உணவுகளை தவிர்த்துக்கொள்கின்றவனை இகழ்வாகப் பார்க்கக் கூடாது. அதுபோல் உண்ணாதவனோ உண்பவன் மீது குற்றம் காணவும் கூடாது. ஏனெனில் இறைவன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறாரே.</verse>
				<verse number="4">இன்னொருவனுடைய வேலைக்காரனை நியாயம் தீர்க்க நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமான் அவனுக்கு பொறுப்பாளி. அவன் நிலைநிற்பான், ஏனெனில் இறைவன் அவன் நிலைநிற்க ஆற்றலைக் கொடுக்க வல்லவராய் இருக்கின்றார்.</verse>
				<verse number="5">ஒருவன் ஒரு நாளைவிட, இன்னொரு நாள் சிறந்தது என்று எண்ணுகிறான். ஆனால் இன்னொருவனோ, எல்லா நாட்களையும் ஒரேவிதமாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய மனதில் உள்ளதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="6">ஒரு நாளை சிறப்பானதாக எண்ணுகின்றவன், கர்த்தருக்காக அதைச் செய்கின்றான். உண்பவனும் கர்த்தருக்காகவே அதைச் செய்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அப்படியே அவற்றை உண்ணாமல் தவிர்த்துக்கொள்கின்றவனும், இறைவனுக்காக அதைச் செய்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான்.</verse>
				<verse number="7">நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில்லை, அத்தோடு நம்மில் எவரும் நமக்கென்று மரணிப்பதுமில்லை.</verse>
				<verse number="8">நாம் வாழ்ந்தாலும் கர்த்தருக்கென்றே வாழ்கின்றோம்; நாம் மரணித்தாலும் கர்த்தருக்கென்றே மரணிக்கின்றோம். எனவே நாம் வாழ்ந்தாலும், மரணித்தாலும் கர்த்தருடையவர்கள்.</verse>
				<verse number="9">கிறிஸ்து, மரணித்தவர்களுக்கும் உயிருடன் இருக்கின்றவர்களுக்கும் ஆண்டவராய் இருக்கும் பொருட்டே மரணித்து பின்னர் மீண்டும் உயிர் பெற்றார்.</verse>
				<verse number="10">இப்படியிருக்க நீ ஏன் உன் சகோதரனை நியாயம் தீர்க்கின்றாய்? ஏன் உன் சகோதரனை உதாசீனம் செய்கின்றாய்? ஏனெனில் நாம் எல்லோரும் இறைவனுடைய நீதி வழங்கும் அரியணைக்கு முன்பாக நிற்போம்.</verse>
				<verse number="11">இறைவாக்கினனால் எழுதியிருக்கின்றபடி: “ ‘ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக அடிபணிந்து மண்டியிடும்; ஒவ்வொரு நாவும் இறைவனை ஏற்று ஒப்புக்கொள்ளும்.’ இதை நான் வாழ்ந்திருக்கின்றபடியே ஆணையிட்டு சொல்கிறேன்” என்று கர்த்தர் சொல்கின்றார்.</verse>
				<verse number="12">எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்து இறைவனுக்குக் கணக்குக் கொடுப்போம்.</verse>
				<verse number="13">ஆகவே நாம் ஒருவரையொருவர் நியாயம் தீர்ப்பதை நிறுத்துவோம். உங்கள் சகோதரர்களுடைய வழியில் அவர்கள் தடுக்கி விழக் கூடிய தடைக்கல்லையோ, இடையூறையோ இடாதிருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="14">ஆண்டவர் இயேசுவுக்குள் நான் அறிந்து நிச்சயித்திருக்கின்றபடி, எந்த உணவும் தன்னிலே அசுத்தமானது அல்ல என்பதை நம்புகிறேன். ஆனால் எவனாவது எந்த உணவையும் அசுத்தமானது என நம்பினால், அது அவனுக்கு அசுத்தமானதாகவே இருக்கும்.</verse>
				<verse number="15">நீ உண்ணுகின்ற உணவின் காரணமாக உன் சகோதரன் மனவருத்தமடைந்தால், நீ அன்பு காட்டுகின்றவனாய் நடந்துகொள்ளவில்லை. நீ உண்ணும் உணவினால் அவனை நிலைகுலையப் பண்ணாதே, கிறிஸ்து அவனுக்காக மரணித்தாரே.</verse>
				<verse number="16">நீங்கள் நன்மை என எண்ணுகின்றதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்.</verse>
				<verse number="17">ஏனெனில் இறைவனுடைய அரசு உண்ணுவதைப் பற்றியதும் அருந்துவதைப் பற்றியதுமல்ல. அது நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்குள்ளான மனமகிழ்ச்சி என்பவைகளைப் பற்றியதே.</verse>
				<verse number="18">இவ்விதமாக கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கின்றவன் இறைவனின் பிரியத்தையும் மனிதரின் நன்மதிப்பையும் பெறுவான்.</verse>
				<verse number="19">எனவே நாம் சமாதானத்தை உண்டாக்குவதும், ஒருவர் மற்றவரை கட்டியெழுப்ப உதவுவதுமான காரியங்களில் ஈடுபட முயற்சி செய்வோம்.</verse>
				<verse number="20">உணவுக்காக இறைவனுடைய வேலையின் பலனை அழித்துவிட வேண்டாம். எல்லா உணவும் சுத்தமானதுதான், ஆனால் ஒருவன் உண்ணும் உணவு மற்றொருவனுக்குத் தடையாக இருக்குமானால், அதை அவன் உண்ணுவது தவறானதாயிருக்கும்.</verse>
				<verse number="21">இறைச்சியை உண்ணுவதோ, திராட்சை இரசத்தைக் குடிப்பதோ, அல்லது வேறு எதைச் செய்வதோ உனது சகோதரன் பாவத்தில் விழுவதற்குக் காரணமாய் இருக்குமானால், அவற்றைச் செய்யாதிருப்பது நல்லது.</verse>
				<verse number="22">இந்த விடயத்தில் நீ கொண்டிருக்கும் விசுவாசம் உனக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கட்டும். ஒருவன் நியாயமானதென்று தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றைக்கொண்டு, தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்காதிருக்க அவனால் முடியுமானால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.</verse>
				<verse number="23">ஆனால் யாரேனும் ஒருவன் தான் உண்ணுவதைக் குறித்து அது சரியா தவறா என்ற சந்தேகத்தோடு அதை உண்பானானால், அவன் தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கின்றவனாய் இருப்பான். ஏனெனில் அவன் அதை விசுவாசத்தோடு உண்ணவில்லை. விசுவாசம் இல்லாமல் செய்யப்படுகின்ற எல்லாம் பாவமே.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கின்ற நாம், நம்மைப் பிரியப்படுத்தாமல் பலவீனமாய் இருக்கின்றவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="2">நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் பொருட்டு விசுவாசத்தில் வளரச் செய்யும்படி அவனைப் பிரியப்படுத்த வேண்டும்.</verse>
				<verse number="3">கிறிஸ்துவும் தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என் மேலே விழுந்தன” என்று எழுதப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="4">நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும் உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாக உறுதியான எதிர்பார்ப்பு உள்ளவர்களாகும்படி முற்காலத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாம் நம்மை அறிவுறுத்தவே எழுதப்பட்டிருக்கின்றன.</verse>
				<verse number="5">பொறுமையையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், கிறிஸ்து இயேசு கொண்டிருந்ததைப் போன்ற ஒரு மனநிலையை உங்களுக்கிடையில் தருவாராக.</verse>
				<verse number="6">அப்போது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள்.</verse>
				<verse number="7">ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="8">நான் உங்களுக்கு கூறுவதாவது, இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்தி அவர் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார்.</verse>
				<verse number="9">இதனால், யூதரல்லாதவர்களும் இரக்கம் பெற்று இறைவனை மகிமைப்படுத்தும்படியாக இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “ஆகையால், நான் யூதரல்லாதவர்களிடையே உம்மைத் துதித்து, உமது பெயரில் துதிப் பாடல் பாடுவேன்.”</verse>
				<verse number="10">மேலும், “யூதரல்லாத மக்களே! அவருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.”</verse>
				<verse number="11">மேலும், “யூதரல்லாத மக்களே! நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள், அனைத்து மக்களும் அவரை புகழட்டும்.”</verse>
				<verse number="12">மேலும் ஏசாயா, “ஈசாயின் வேரும் மக்களை ஆளுகை செய்கின்றவருமான ஒருவர் தோன்றுவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கையுடையவர்களாய் இருப்பார்கள்” என்று சொல்கின்றார்.</verse>
				<verse number="13">பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் நல்ல எதிர்பார்ப்பு பெருகும்படி, நல்ல எதிர்பார்ப்பின் இறைவன், நம்பிக்கையினால் உண்டாகும் எல்லா மனமகிழ்ச்சியினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.</verse>
				<verse number="14">எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவு பெற்றவர்கள் என்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன்.</verse>
				<verse number="15">ஆனால் நான் சில விடயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைவூட்டுவதற்காக துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி,</verse>
				<verse number="16">யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் செய்கின்ற மதகுரு ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கின்றேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் செய்யப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன்.</verse>
				<verse number="17">ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் பொருட்டு, கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைவது நியாயமானதே.</verse>
				<verse number="18">யூதரல்லாதவரை கீழ்ப்படியப் பண்ணும்படியாக, என் மூலமாக வார்த்தையினாலும் மனித செயல்களினாலும் கிறிஸ்து நிறைவேற்றியதைத் தவிர வேறு எதைக் குறித்தும் பேசத் துணிய மாட்டேன்.</verse>
				<verse number="19">பலமான அடையாள அற்புதங்கள் மூலமாக ஆவியானவருடைய வல்லமையினாலே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் வரை கிறிஸ்துவின் நற்செய்திப் பணியை நிறைவேற்றினேன்.</verse>
				<verse number="20">அத்தோடு, வேறொருவர் போட்ட அத்திவாரத்தின் மேல் நான் கட்டாமல், கிறிஸ்துவைக் குறித்து அறிவிக்கப்படாத இடங்களிலே நற்செய்தியை அறிவிக்கவே விரும்புகிறேன்.</verse>
				<verse number="21">எழுதியிருக்கின்றபடி, “அவரைக் குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள். கேள்விப்படாதவர்கள் புரிந்துகொள்வார்கள்.”</verse>
				<verse number="22">நான் உங்களிடம் வருவதற்கு பல முறை முயன்றபோதும் அது தடைப்பட்டதற்கு இதுவே காரணம்.</verse>
				<verse number="23">ஆனால் இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் நான் பணி செய்ய இடமில்லை. அத்துடன் பல வருடங்களாக உங்களிடம் வர ஆவலாயிருந்தேன்.</verse>
				<verse number="24">எனவே நான் ஸ்பானியாவுக்குப் போகும் வழியில் உங்களிடம் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களோடு சிறிது காலத்தை மகிழ்ச்சியாய் கழித்த பின்பு அங்கிருந்து உங்கள் உதவியோடு எனது பயணத்தைத் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறேன்.</verse>
				<verse number="25">ஆனால் இப்போது எருசலேமில் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு பணி செய்வதற்காக நான் அங்கு போகின்றேன்.</verse>
				<verse number="26">மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள திருச்சபைகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களிடையே ஏழைகளாய் இருக்கின்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கின்றன.</verse>
				<verse number="27">அவர்கள் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அப்படிச் செய்வதற்கு அவர்கள் கடமைப்பட்டும் இருக்கின்றார்கள். ஏனெனில் யூதரல்லாத மக்கள் யூதர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கு பெற்றிருப்பதனால் இவர்கள் தங்கள் உலகப் பொருட்களை யூதர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.</verse>
				<verse number="28">எனவே நான் இந்தப் பணியை முடித்துக் கொண்ட பின்பு, அவர்கள் இந்தப் பண உதவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்திய பின் ஸ்பானியாவுக்குப் போகும் வழியில் உங்களையும் வந்து சந்திப்பேன்.</verse>
				<verse number="29">நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய முழுநிறைவான ஆசீர்வாதத்துடன் வருவேன் என்பது நிச்சயம்.</verse>
				<verse number="30">பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றதாவது: “எனக்காக இறைவனிடத்தில் மன்றாடி எனது போராட்டத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="31">யூதேயாவிலிருக்கின்ற அவிசுவாசிகளிடமிருந்து நான் தப்புவிக்கப்பட வேண்டும் என்றும், எருசலேமில் நான் செய்கின்ற பணி அங்கிருக்கிற பரிசுத்தவான்களுக்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுங்கள்.</verse>
				<verse number="32">அப்போது இறைவனுடைய திட்டத்தின்படியே நான் மனமகிழ்ச்சியுடன் உங்களிடம் வந்து உங்களுடன் சேர்ந்து உற்சாகமடைவேன்.</verse>
				<verse number="33">சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென்.</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">கெங்கிரேயா பட்டணத்திலுள்ள திருச்சபையில் ஊழியம் செய்கின்ற நமது சகோதரி பெபேயாளைக் குறித்து உங்களுக்கு நற்சான்று கொடுக்கின்றேன்.</verse>
				<verse number="2">பரிசுத்தவான்களை ஏற்றுக்கொள்கின்ற விதமாகவே கர்த்தருக்குள் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடமிருந்து அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அதை அவளுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவள் பலருக்கும், எனக்கும் உதவியாய் இருந்தவள்.</verse>
				<verse number="3">பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் என்னுடைய சக வேலையாட்கள்.</verse>
				<verse number="4">அவர்கள் எனக்காக உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். நான் மட்டுமல்ல, யூதரல்லாத மக்களின் திருச்சபைகள் எல்லாமே அவர்களுக்கு நன்றியுள்ளவைகளாய் இருக்கின்றன.</verse>
				<verse number="5">அவர்களுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற திருச்சபைக்கு எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். என் அன்புக்குரியவனான எப்பனெத்துக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். ஆசியாவில் முதலாவதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் அவனே.</verse>
				<verse number="6">மரியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் மிகவும் கடுமையாக உங்களுக்காக உழைத்தாள்.</verse>
				<verse number="7">எனது உறவினர்களான அன்றோனீக்கைக்கும், யூனியாவுக்கும் எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். இவர்களும் என்னுடன் சிறையில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களுக்குள்ளே இவர்கள் பெயர் பெற்றவர்கள். இவர்கள் எனக்கு முன்பே கிறிஸ்தவரானவர்கள்.</verse>
				<verse number="8">கர்த்தரில் நான் நேசிக்கின்ற அம்பிலியாவுக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="9">கிறிஸ்துவில் என் சக ஊழியனாய் இருக்கின்ற உர்பானுக்கும், என் அன்புக்குரிய நண்பன் ஸ்தாக்கிக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="10">சோதிக்கப்பட்டு கிறிஸ்துவில் உண்மையானவன் என நிரூபிக்கப்பட்டிருக்கின்ற அப்பெல்லேயுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="11">எனது உறவினன் ஏரோதியோனுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். கர்த்தரில் இருக்கின்ற நர்கீசுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="12">கர்த்தரில் கடுமையாக உழைக்கின்றவர்களான திரிபேனாளுக்கும். திரிபோசாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். மற்றும் கர்த்தரில் கடுமையாக உழைத்த எனது அன்பான பெர்சியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="13">ரூபுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அவன் கர்த்தரில் தெரிவு செய்யப்பட்டவன். அவனுடைய தாய்க்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் எனக்கும் தாயாய் இருந்தாள்.</verse>
				<verse number="14">அசிங்கிரீத்துவுக்கும், பிலெகோனுக்கும், எர்மேயாவுக்கும், பத்திரொபாவுக்கும், எர்மாவுக்கும், அவர்களோடு இருக்கின்ற சகோதரருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="15">பிலொலோகுக்கும், யூலியாளுக்கும், நேரேக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடிருக்கின்ற பரிசுத்தவான்களுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="16">ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான எல்லாத் திருச்சபைகளும் தங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.</verse>
				<verse number="17">பிரியமானவர்களே, நீங்கள் கற்றுக் கொண்டவற்றுக்கு முரண்பாடான விதத்தில் பிரிவினைகளை உண்டாக்கி உங்கள் வழியில் தடைக்கற்களை போடுகின்றவர்களைக் குறித்துக் கவனமாய் இருந்து, அவர்களைவிட்டு விலகியிருங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.</verse>
				<verse number="18">ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் நம்முடைய ஆண்டவர் கிறிஸ்துவுக்குப் பணி செய்யாமல், தங்கள் வயிற்றுப் பிழைப்பையே பார்த்துக்கொள்கின்றார்கள். தங்களுடைய வசப்படுத்தும் பேச்சுக்களினாலும், நயவஞ்சகத்தாலும் கபடமற்ற மக்களின் மனதை வஞ்சிக்கிறார்கள்.</verse>
				<verse number="19">உங்கள் கீழ்ப்படிதலைப்பற்றி எல்லோரும் அறிந்திருக்கின்றபடியால் நான் உங்களைக் குறித்துப் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஆனால் நீங்கள் நன்மையைக் குறித்து ஞானமுள்ளவர்களாயும், தீமையைப்பற்றி அறியாதவர்களாயும் இருப்பதுமே என் விருப்பம்.</verse>
				<verse number="20">சமாதானத்தின் இறைவன் விரைவில் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார். நமது ஆண்டவர் இயேசுவின் கிருபை உங்களோடு இருக்கட்டும்.</verse>
				<verse number="21">எனது சக ஊழியனான தீமோத்தேயு உங்களுக்குத் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அதுபோலவே, எனது உறவினர்களான லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.</verse>
				<verse number="22">இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நானும் கர்த்தரில் என் வாழ்த்துதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.</verse>
				<verse number="23">என்னையும், அவனுடைய வீட்டிலே ஒன்றுகூடுகின்ற திருச்சபையையும் உபசரிக்கின்ற காயுவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். இந்தப் பட்டணத்தின் அரசாங்க அதிபரான எரஸ்துவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான். நமது சகோதரனான குவர்த்தும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான்.</verse>
				<verse number="24">நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோரோடும் இருப்பதாக. ஆமென்.</verse>
				<verse number="25">கடந்த யுகங்களில் மறைபொருளாக வைக்கப்பட்டு, இப்போது வெளிப்பட்டிருக்கின்ற உண்மையின்படி இருக்கின்ற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும் உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கின்ற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும்.</verse>
				<verse number="26">அந்த மறைபொருளாயிருந்த உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்போது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கின்றது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிவதற்காகவே இது நடந்தது.</verse>
				<verse number="27">ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="46">
			<chapter number="1">
				<verse number="1">இறைவனின் விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாய் இருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும்,</verse>
				<verse number="2">கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கும், கிறிஸ்து இயேசுவுடன் இணைக்கப்பட்டதால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் ஆண்டவராய் இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி எல்லா இடங்களிலிருந்தும் ஒன்றிணைந்து ஆராதிக்கின்ற அனைவருக்கும் எழுதுவதாவது:</verse>
				<verse number="3">நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="4">கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்பதால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்போதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="5">நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சிலும், எல்லா அறிவிலும், எவ்வகையிலும் நிறைவானவர்களாக விளங்குகிறீர்கள்.</verse>
				<verse number="6">அதன் காரணமாக, கிறிஸ்துவைப் பற்றிய எங்களுடைய சாட்சியை இறைவன் உங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.</verse>
				<verse number="7">ஆகவே, நீங்கள் எந்த ஆவிக்குரிய வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="8">அதனால் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரை நீங்கள் குற்றம் சாட்டப்படாதவர்களாய் இருக்கும்படி, அவர் இறுதி வரை உங்களை உறுதியானவர்களாகக் காத்துக்கொள்வார்.</verse>
				<verse number="9">தமது மகனும் நமது ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.</verse>
				<verse number="10">பிரியமானவர்களே, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்வதாவது: நீங்கள் பேச்சிலும் சிந்தையிலும் உடன்பட்டிருந்து, உங்கள் மத்தியில் பிரிவினைகள் இல்லாமல் ஒரேவிதமாக சிந்தித்து தீர்மானிக்கின்றவர்களாக இருங்கள்.</verse>
				<verse number="11">பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உள்ளதாக குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.</verse>
				<verse number="12">நான் கூறுவது என்னவென்றால் உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான்.</verse>
				<verse number="13">கிறிஸ்து பிரிவுற்றிருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?</verse>
				<verse number="14">கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் எவருக்கேனும் நான் ஞானஸ்நானம் கொடுக்காதபடியால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="15">ஆகவே, என் பெயரால் ஞானஸ்நானம் பெற்றதாக உங்களில் ஒருவரேனும் சொல்ல முடியாது.</verse>
				<verse number="16">ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தது உண்மை. அதைவிட, வேறு யாருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை</verse>
				<verse number="17">கிறிஸ்து என்னை ஞானஸ்நானம் கொடுப்பதற்கல்ல, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். அத்தோடு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வல்லமையற்று போகாதவாறு மனித ஞானத்தை வெளிப்படுத்தும் சொற்பொழிவு ஆற்றுகின்ற வார்த்தைகளின்றி பிரசங்கிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார்.</verse>
				<verse number="18">அழிவின் பாதையில் போகின்றவர்களுக்கு சிலுவையின் செய்தியானது முட்டாள்தனமாகத் தோன்றுகின்றது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது.</verse>
				<verse number="19">ஆகவே, “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து, அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.</verse>
				<verse number="20">ஞானி எங்கே? தத்துவ ஆசிரியன் எங்கே? இந்த யுகத்தைச் சேர்ந்த வாதிடும் அறிஞன் எங்கே? உலக ஞானத்தை இறைவன் மடைமையாக மாற்றவில்லையோ?</verse>
				<verse number="21">இறைவனின் ஞானமான திட்டத்தின்படி ஞானத்தால் உலகம் இறைவனை அறிய முடியாததாயிருக்கையில், முட்டாள்தனமாகத் தோன்றுகின்ற எமது பிரசங்கத்தைக்கொண்டு, அதனூடாக விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை மீட்க இறைவன் விருப்பம் கொண்டார்.</verse>
				<verse number="22">யூதர்கள் அற்புத அடையாளங்களை கேட்கின்றார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்.</verse>
				<verse number="23">ஆனால் நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். இது யூதருக்குத் தடைக்கல்லாகவும் யூதரல்லாதவருக்கு முட்டாள்தனமானதாயும் இருக்கின்றது.</verse>
				<verse number="24">ஆனால், யூதரிலும் கிரேக்கரிலுமிருந்து அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும் இறைவனின் ஞானமுமாய் இருக்கின்றார்.</verse>
				<verse number="25">ஏனெனில் இறைவனின் அறிவீனம் மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பலவீனம் மனித பலத்திலும் மிகுந்த பலமுள்ளதாயிருக்கிறது.</verse>
				<verse number="26">பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபோது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்கள் அநேகரில்லை.</verse>
				<verse number="27">ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கித் தலைகுனியச் செய்யும்படி உலகின் முட்டாள்தனமானவைகளைத் தெரிவு செய்தார்; பலமுள்ளவர்களை வெட்கத்துக்குள்ளாக்கும்படி உலகின் பலவீனமானவைகளைத் தெரிவு செய்தார்.</verse>
				<verse number="28">இந்த உலகம் மதிப்புள்ளதாகக் கருதுபவற்றை பயனற்றவையாக்க, இந்த உலகத்தால் முக்கியமற்றதென எண்ணப்பட்ட, ஏளனத்துக்குரியதும் ஒன்றும் இல்லாததுமானவற்றை இறைவன் தெரிவு செய்தார்.</verse>
				<verse number="29">இப்படியாக ஒருவரும் இறைவனின் பிரசன்னத்தில் பெருமை பாராட்ட இடம் இல்லாமல் செய்தார்.</verse>
				<verse number="30">இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றீர்கள். அவரே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாக இருக்கின்றார்.</verse>
				<verse number="31">ஆகவே எழுதியிருக்கின்றபடி, “பெருமை பாராட்ட விரும்புகின்றவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">பிரியமானவர்களே, நான் உங்களிடத்தில் வந்து, இறைவனைப் பற்றிய சாட்சியை உங்களுக்குப் பிரசித்தப்படுத்தியபோது, பேச்சுத் திறனுடனோ அல்லது மனித ஞானத்துடனோ வரவில்லை.</verse>
				<verse number="2">ஏனெனில் நான் உங்களோடு இருந்தபோது சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் அறியாதிருக்க உறுதி கொண்டிருந்தேன்.</verse>
				<verse number="3">நான் உங்களிடத்தில் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்தோடும் வந்தபோது</verse>
				<verse number="4">என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் நாவன்மை உள்ள வார்த்தைகளாகவும் இருக்காமல் ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவனவாக இருந்தன.</verse>
				<verse number="5">ஏனென்றால் உங்கள் விசுவாசம் மனித ஞானத்தில் தங்கியிருக்காமல் இறைவனின் வல்லமையிலே தங்கியிருக்கும்படியாகவே அப்படிச் செய்தேன்.</verse>
				<verse number="6">நாங்கள் அறிவிப்பது இந்த யுகத்தின் ஞானமோ அல்லது இந்த யுகத்தை ஆளுகின்ற அழிந்து போகின்றவர்களின் ஞானமோ அல்ல. மாறாக முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் மெய்ஞானத்தின் செய்தியை அறிவிக்கிறோம்.</verse>
				<verse number="7">மறைபொருளானதும் ஒளித்து வைக்கப்பட்டதுமான இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றும் முன்பே நமது மகிமைக்கென நியமித்தார்.</verse>
				<verse number="8">யுகத்தை ஆளுகின்ற ஒருவரும் இதைப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால், மகிமையின் ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்களே.</verse>
				<verse number="9">ஆனால் எழுதியிருக்கின்றபடி: “தம்மை நேசிக்கிறவர்களுக்கு இறைவன் ஆயத்தமாக்கி வைத்திருப்பவைகளை எந்தக் கண்ணும் காணவுமில்லை, எந்தக் காதும் கேட்கவுமில்லை, எந்த ஒரு மனமும் கற்பனை செய்யவுமில்லை.”</verse>
				<verse number="10">இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழங்களையும் ஆராய்கிறார்.</verse>
				<verse number="11">ஒரு மனிதனுக்குள் இருக்கும் அவனுடைய ஆவியைத் தவிர அவனுடைய சிந்தனைகளை யாரால் அறிய முடியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறிய மாட்டார்கள்.</verse>
				<verse number="12">நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளாமல் இறைவன் நமக்கு உரித்தாகக் கொடுத்தவற்றை புரிந்துகொள்ளும்படி, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறோம்.</verse>
				<verse number="13">ஆகவே நாங்கள் மனித ஞானம் கற்பித்த வார்த்தைகளினால் பேசாமல் ஆவியானவர் கற்பித்த வார்த்தைகளினால் பேசி, ஆவிக்குரிய உண்மைகளை ஆவிக்குரியவற்றோடு ஒன்றிணைத்துக் காட்டுகிறோம்.</verse>
				<verse number="14">பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராத மனிதன், இறைவனின் ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவனுக்கு முட்டாள்தனமாகத் தோன்றும். அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில், அவை ஆவிக்குரிய ரீதியாகவே நிதானித்து அறியப்படுகின்றன.</verse>
				<verse number="15">ஆனால் ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து புரிந்துகொள்கின்றான். அவனையோ மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது.</verse>
				<verse number="16">ஏனெனில் வேதவசனம் சொல்கின்றபடி, “கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு, அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” ஆனால் நாமோ கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்களாய் இருக்கின்றோம்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">பிரியமானவர்களே, உங்களுக்கு நான் கூற முற்படுவதை நீங்கள் ஆவிக்குரியவர்கள் என எண்ணி கூற முடியவில்லை. மாறாக உலகத்தவர்களாய் கிறிஸ்துவுக்குள் வளருவதில் குழந்தைகளாய் எண்ணியே உங்களுக்குக் கூற வேண்டியுள்ளது.</verse>
				<verse number="2">நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இருக்காதபடியால், நான் உங்களுக்குத் திட உணவை கொடுக்காமல் பாலையே கொடுத்தேன். நீங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயாரான நிலையில் இல்லை.</verse>
				<verse number="3">ஏனெனில், நீங்கள் இன்னமும் உலகத்திற்குரியவர்களாக இருக்கின்றீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கின்றபடியால் உலகத்திற்குரிய சாதாரண மனிதர்களைப் போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்?</verse>
				<verse number="4">ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகின்றவன்” என்றும் மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகின்றவன்” என்றும் சொல்கின்றபடியால் நீங்கள் சாதாரண மனிதர்கள் அல்லவா?</verse>
				<verse number="5">அப்பொல்லோ யார்? பவுல் யார்? ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியை செய்கின்ற உங்களை விசுவாசத்திற்குள் வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள் தானே.</verse>
				<verse number="6">நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், இறைவனே அதை வளரச் செய்தார்.</verse>
				<verse number="7">எனவே நடுகின்றவனோ தண்ணீர் ஊற்றுகின்றவனோ பிரதானமானவர்கள் அல்ல, மாறாக வளரச் செய்கின்ற இறைவனே பிரதானமானவர்.</verse>
				<verse number="8">நடுகின்றவனுக்கும் தண்ணீர் ஊற்றுகின்றவனுக்கும் ஒரு நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள்.</verse>
				<verse number="9">நாங்கள் இறைவனின் சக வேலையாட்கள். நீங்களோ இறைவனின் வயல் நிலமும், இறைவனின் கட்டடமுமாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="10">இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி ஒரு கட்டட நிபுணனைப் போல அத்திவாரம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மீது கட்டுகின்றான். ஆனால் அதன்மீது கட்டுகின்ற ஒவ்வொருவனும் கவனமாயிருக்க வேண்டும்.</verse>
				<verse number="11">ஏற்கெனவே போடப்பட்ட அத்திவாரத்தைத் தவிர, வேறு அத்திவாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அத்திவாரம் இயேசு கிறிஸ்துவே.</verse>
				<verse number="12">ஒருவன் இந்த அத்திவாரத்தின் மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் கொண்டு கட்டலாம்.</verse>
				<verse number="13">ஆனால் கிறிஸ்துவின் நாளில், ஒவ்வொருவனும் செய்த வேலையின் தன்மை வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பே பரிசோதிக்கும்.</verse>
				<verse number="14">அவன் அத்திவாரத்தின் மேல் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான்.</verse>
				<verse number="15">அவன் கட்டியது எரிந்து போகுமாயின் அவன் நட்டமடைவான். ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை நெருப்புச் சுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனின் நிலைமையைப் போல் இருக்கும்.</verse>
				<verse number="16">நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?</verse>
				<verse number="17">யாராயினும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்து விடுவார். ஏனெனில் இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அந்த ஆலயம்.</verse>
				<verse number="18">உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது இவ்வுலக மதிப்பீட்டின்படி தன்னை ஞானமுள்ளவனாக எண்ணினால் முதலில் அவன் அறிவிலி ஆகியே பின்னர் ஞானியாகட்டும்.</verse>
				<verse number="19">ஏனெனில் இவ்வுலகத்தின் ஞானம் இறைவனின் பார்வையில் முட்டாள்தனமானதாக இருக்கின்றது. எழுதியிருக்கின்றபடி: “இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திற்குள்ளேயே சிக்க வைக்கிறார்.”</verse>
				<verse number="20">மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் பயனற்றவை என்று கர்த்தர் அறிவார்” எனவும் எழுதப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="21">எனவே இனிமேல் மனிதர்களைக் குறித்துப் பெருமைகொள்ள வேண்டாம்! எல்லாக் காரியங்களும் உங்களுடையவைதான்.</verse>
				<verse number="22">பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், இந்த உலகமானாலும், வாழ்வானாலும், மரணமானாலும், நிகழ்காலமானாலும், எதிர்காலமானாலும் எல்லாமே உங்களுடையதே.</verse>
				<verse number="23">நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து இறைவனுக்குரியவர்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">எனவே எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள் என்றும் இறைவனின் மறைபொருள்களை பிரசித்தப்படுத்துவதற்கு பொறுப்புடையவர்கள் என்றும் மக்கள் எண்ண வேண்டும்.</verse>
				<verse number="2">எப்போதும் பொறுப்பாளர் உண்மையுள்ளவர் என்று நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம்.</verse>
				<verse number="3">உங்களாலேயாவது, எந்த மனிதருடைய நீதிமன்றத்தினாலேயாவது நான் நியாயம் தீர்க்கப்படுவதை பெரிதாக எண்ணுவதில்லை. நானும் என்னைக் குறித்து நியாயத்தீர்ப்புச் செய்வதில்லை.</verse>
				<verse number="4">என் மனசாட்சி சுத்தமாயிருக்கிறது, அதனால் நான் குற்றமற்றவன் என்றில்லை. கர்த்தரே என்னை நியாயம் தீர்க்கின்றவர்.</verse>
				<verse number="5">எனவே, குறிக்கப்பட்ட காலம் வருமுன்பே நீங்கள் எவரையும் நியாயம் தீர்க்க வேண்டாம்; ஆண்டவர் வரும்வரை காத்திருங்கள். அவர் இருளில் மறைந்திருப்பவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து மனிதருடைய உள்ளங்களின் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தும்போது, ஒவ்வொருவனும் தனக்குரிய புகழ்ச்சியை இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வான்.</verse>
				<verse number="6">இப்போதும் பிரியமானவர்களே, என்னையும் அப்பொல்லோவையும் முன்னுதாரணமாக குறிப்பிட்டு உங்கள் நன்மைக்காகச் சொல்கின்றேன்; “எழுதியிருப்பதற்கு அப்பால் போக வேண்டாம்” என்பதன் கருத்தை நீங்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அப்போது ஒருவர் மற்றவரைவிட தன்னை மேலாக எண்ணாமல் இருப்பீர்கள்.</verse>
				<verse number="7">ஏனெனில், உங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் எனக் காண்பவர்கள் யார்? நீங்கள் வரமாகப் பெற்றுக்கொள்ளாத எது உங்களிடம் இருக்கின்றது? நீங்கள் அதை வரமாகப் பெற்றிருந்தால், அதை ஒரு வரமாகப் பெறாத ஒருவனைப் போல் ஏன் பெருமை பாராட்டுகிறீர்கள்?</verse>
				<verse number="8">உங்களுக்குத் தேவையானதெல்லாம் இருக்கின்றது! நீங்கள் செல்வந்தர்களாகிவிட்டீர்கள்! நாங்கள் இல்லாமல் நீங்கள் அரசர்களாகிவிட்டீர்கள்! நீங்கள் அரசர்களானால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து அரசாளலாமே.</verse>
				<verse number="9">நான் நினைக்கின்றபடி, இறைவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்கு நியமிக்கப்பட்டவர்களின் வரிசையின் இறுதியில் காட்சிப் பொருளாக நிறுத்தினார். நாங்கள் முழு உலகத்திற்கும் இறைதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் கண்காட்சி ஆனோம்.</verse>
				<verse number="10">கிறிஸ்துவுக்காக நாங்கள் அறிவீனர்கள். ஆனால் நீங்களோ கிறிஸ்துவில் ஞானமுள்ளவர்கள்! நாங்கள் பலவீனர், நீங்களோ பலசாலிகள்! நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், நாங்களோ அவமதிக்கப்படுகிறோம்!</verse>
				<verse number="11">இந்நேரம் வரையும் நாங்கள் பசியும் தாகமும் உள்ளவர்களாகவும், கந்தல் உடையுடன் துன்பப்பட்டவர்களாகவும், வீடற்றவர்களுமாகவும் இருக்கின்றோம்.</verse>
				<verse number="12">நாங்கள் எங்கள் சொந்தக் கைகளினால் கடுமையாக உழைத்து, மற்றவர்கள் எங்களைச் சபிக்கும்போது ஆசீர்வதிக்கிறோம். துன்புறுத்தப்படும்போது தாங்கிக்கொள்கிறோம்.</verse>
				<verse number="13">மற்றவர்கள் எங்களை அவதூறாய்ப் பேசுகின்றபோது, தயவுடன் பதிலளிக்கிறோம். இதுவரை நாங்கள் உலகத்தின் கழிவுப் பொருளாகவும் பூமியின் குப்பையாகவும் எண்ணப்படுகிறோம்.</verse>
				<verse number="14">நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்பதற்காக நான் இவற்றை உங்களுக்கு எழுதாமல், என் அன்பான பிள்ளைகளென எண்ணி உங்களை எச்சரிப்பதற்காகவே எழுதுகிறேன்.</verse>
				<verse number="15">கிறிஸ்துவுக்குள் உங்களுக்குப் பத்தாயிரம் பாதுகாவலர்கள் இருந்தாலும், தந்தைமார் அநேகர் இல்லை. நற்செய்தியின் மூலமாக நான் ஒருவனே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களுக்குத் தந்தையானேன்.</verse>
				<verse number="16">ஆகவே நீங்களும் என்னைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.</verse>
				<verse number="17">இதற்காகவே, எனக்கு அன்பானவனும் கர்த்தருக்குள் உண்மையுள்ளவனுமாகிய என் மகன் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். நான் எல்லாத் திருச்சபைகளிலும் எல்லா இடங்களிலும் போதித்து வருகின்ற கிறிஸ்து இயேசுவோடு இணைந்த என் வாழ்க்கை முறையை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.</verse>
				<verse number="18">நான் உங்களிடம் மீண்டும் வர மாட்டேன் என்று உங்களில் சிலர் கர்வம் கொண்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="19">ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால் நான் மிக விரைவில் உங்களிடம் வந்து இந்த கர்வம் கொண்டவர்களின் பேச்சை அல்ல, அவர்களின் பலத்தை அறிந்துகொள்வேன்.</verse>
				<verse number="20">ஏனெனில், இறைவனின் அரசு பேச்சிலே அல்ல, வல்லமையிலே தங்கியிருக்கிறது.</verse>
				<verse number="21">நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நான் உங்களிடம் பிரம்புடன் வர வேண்டுமா? அல்லது அன்புடனும் சாந்தமுள்ள ஆவியுடனும் வர வேண்டுமா?</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியோடு தகாத தொடர்பு வைத்திருக்கும் பாலியல் ஒழுக்கக்கேடு உங்கள் மத்தியில் இருக்கின்றதென்றுகூட சொல்லப்படுகிறது. ஏனைய மத நம்பிக்கையாளராலும் சகிக்க முடியாத விடயம் இதுவாகும்.</verse>
				<verse number="2">இதைப்பற்றி நீங்கள் கர்வம்கொள்கின்றீர்களே. மாறாக வேதனை அல்லவா அடைய வேண்டும்? இதைச் செய்தவனை உங்கள் ஐக்கியத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.</verse>
				<verse number="3">நான் சரீரத்திலே உங்களுடன் இல்லாதிருந்தாலும் ஆவியில் உங்களோடிருந்து, நான் அங்கு இருப்பது போல் இதைச் செய்தவனுக்கெதிராக தீர்ப்புச் செய்கின்றேன்.</verse>
				<verse number="4">ஆண்டவர் இயேசுவின் பெயரினால் நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, ஆவியில் நானும் உங்களோடு இருக்கின்றேன். நமது ஆண்டவர் இயேசுவின் வல்லமையும் உங்களோடு இருக்கின்றது.</verse>
				<verse number="5">ஆதலால் அப்படி நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, அவனுடைய உடல் அழிந்து கர்த்தரின் நாளிலே அவனது ஆவி இரட்சிக்கப்படும்படி அவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள்.</verse>
				<verse number="6">அப்படியிருக்க நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளித்த மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிப்புள்ளதாக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?</verse>
				<verse number="7">நமது பஸ்கா ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கின்றபடியால், நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாக இருக்கின்றீர்கள். அப்படி இருக்கின்றபடியால் பழைய புளித்த மாவை அகற்றி விடுங்கள்.</verse>
				<verse number="8">ஆகையால் நாம் பழைய புளித்த மாவாகிய தீமையோடும் கொடுமையோடும் அல்லாமல், புளிப்பில்லாத அப்பமாகிய மனத் தூய்மையோடும் உண்மையோடும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவோம்.</verse>
				<verse number="9">முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோருடன் கூடிப் பழக வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன்.</verse>
				<verse number="10">ஆயினும் இவ்வுலகத்து மக்களை நான் குறிப்பிடவில்லை. பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோர், பேராசையுடையோர், ஏமாற்றுக்காரர், விக்கிரகத்தை வழிபடுவோர் ஆகியோரைவிட்டு விலகுவதென்றால், இவ்வுலகத்தைவிட்டே விலக வேண்டியிருக்குமே.</verse>
				<verse number="11">ஆனால் இப்போது நான் உங்களுக்கு எழுதுகின்றதாவது, தன்னை ஒரு சகோதரன் என்று கூறிக்கொள்கின்றவன் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவனாகவோ, பேராசைக்காரனாகவோ, விக்கிரக வழிபாடு செய்கின்றவனாகவோ, பழிசொல்லித் தூற்றுகின்றவனாகவோ, குடிகாரனாகவோ, அல்லது ஏமாற்றுகின்றவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு நீங்கள் கூடிப் பழகக் கூடாது. அப்படிப்பட்டவனுடன் சேர்ந்து உணவு உண்ணவும் கூடாது.</verse>
				<verse number="12">திருச்சபைக்கு வெளியே இருக்கின்றவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்வது என் வேலையா? திருச்சபைக்கு உள்ளே இருக்கின்றவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்யவேண்டியது நீங்கள் அல்லவா?</verse>
				<verse number="13">திருச்சபைக்கு வெளியே இருக்கின்றவர்களைக் குறித்து இறைவனே தீர்ப்புச் செய்வார். ஆகையால், “அந்தக் கேடு கெட்டவனை உங்கள் மத்தியிலிருந்து துரத்தி விடுங்கள்.”</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">உங்களில் யாருக்காவது வேறொருவருடன் மனத்தாங்கல் இருந்தால், அவன் தனது சக பரிசுத்தவான்களிடம் போகாமல் தன் வழக்கை இறை நம்பிக்கையற்றவர்களின் முன்பாக தீர்ப்பதற்காக கொண்டுபோவதேன்?</verse>
				<verse number="2">பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தை நீங்கள் நியாயம் தீர்க்கப் போகின்றவர்களாய் இருக்கையில் சிறிய வழக்குகளை தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையா?</verse>
				<verse number="3">தூதர்களை நாம் நியாயம் தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அதைவிட மேலான இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை தீர்ப்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்களா?</verse>
				<verse number="4">ஆதலால், அத்தகைய வழக்குகள் உங்களுக்குள் இருக்கும்போது திருச்சபையின் பார்வையில் மதிப்பற்றவர்கள் முன்னாலே ஏன் அதனைக் கொண்டு செல்கிறீர்கள்?</verse>
				<verse number="5">நீங்கள் வெட்கத்துக்குள்ளாக வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கின்றேன். உங்களிடையே உள்ள பிணக்கைத் தீர்க்கக் கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையா?</verse>
				<verse number="6">மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகின்றானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாக இப்படிச் செய்கின்றான்.</verse>
				<verse number="7">உங்கள் மத்தியில் உள்ள ஒருவருக்கெதிரான இன்னொருவரின் வழக்கு உங்கள் தோல்வியடைந்த நிலையைக் காட்டுகிறது. மாறாக நீங்கள் ஏன் உங்களுக்கு எதிரான தீங்குகளை சகித்துக்கொள்ளக் கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் நீங்கள் ஏன் அதனை பொறுத்துக்கொள்ளக் கூடாது?</verse>
				<verse number="8">அப்படியிராமல் நீங்களே மற்றவர்களை ஏமாற்றி அநியாயம் செய்கின்றீர்கள். அதுவும் உங்கள் சகோதரருக்கும் அப்படிச் செய்கின்றீர்கள்.</verse>
				<verse number="9">அநியாயக்காரர்களுக்கு இறைவனுடைய அரசில் உரிமைப் பங்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாதிருங்கள். பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்களோ, சிலை வணக்கக்காரர்களோ, தகாத உறவில் ஈடுபடுகின்றவர்களோ, விலை ஆடவர்களோ, ஓரினச் சேர்க்கையாளர்களோ,</verse>
				<verse number="10">அல்லது திருடரோ, பேராசைக்காரர்களோ, குடிவெறியரோ, பழிசொல்லித் தூற்றுவோரோ, ஏமாற்றுக்காரரோ இறைவனுடைய அரசில் சொத்துரிமை பெற மாட்டார்கள்.</verse>
				<verse number="11">உங்களில் சிலரும் அவ்வாறே இருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரினாலும் நமது இறைவனின் ஆவியானவரினாலும் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்கள் ஆக்கப்பட்டீர்கள்.</verse>
				<verse number="12">“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு,” ஆனால் எல்லாமே பயனுள்ளவையல்ல. “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.” ஆனால் நான் ஒன்றுக்கும் அடிமைப்பட மாட்டேன்.</verse>
				<verse number="13">“வயிற்றுக்கு உணவும், உணவுக்கு வயிறும்” என்கிறீர்கள். ஆனாலும் ஒரு நாள் இறைவன் உணவையும் வயிறையும் அழித்து விடுவார். உடல், பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கு உரியதல்ல. அது ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்குரியவர்.</verse>
				<verse number="14">இறைவன் தமது வல்லமையினால் ஆண்டவர் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினாரே. அவர் நம்மையும் எழுப்புவார்.</verse>
				<verse number="15">உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் அங்கங்கள் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அவ்வாறிருக்க, கிறிஸ்துவின் அங்கங்களை நாம் விலைமாதுடன் இணைக்கலாமா? ஒருபோதும் கூடாதே.</verse>
				<verse number="16">தன்னை ஒரு விலைமாதுடன் இணைக்கின்றவன், அவளுடன் ஒரே உடலாய் இருக்கின்றான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கின்றபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.”</verse>
				<verse number="17">ஆனால் ஆண்டவருடன் தன்னை இணைத்துக்கொள்கின்றவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான்.</verse>
				<verse number="18">பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்குப் புறம்பானவை. ஆனால் பாலியல் பாவத்தைச் செய்கின்றவன் தன் சொந்த உடலுக்கு விரோதமாக செய்கின்றான்.</verse>
				<verse number="19">உங்கள் உடல் நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருக்கும் ஆலயமாய் இருக்கின்றது என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.</verse>
				<verse number="20">நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">நீங்கள் முன்பு எழுதிய காரியங்களைக் குறித்து நான் எழுதுவதாவது: “ஒருவன் ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்பில்லாமல் இருப்பது நல்லது.”</verse>
				<verse number="2">ஆனாலும் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கான சோதனை இருப்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியையும், ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் கணவனையும் உடையவர்களாக இருக்க வேண்டும்.</verse>
				<verse number="3">கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தாம்பத்திய உரிமையை வழங்க வேண்டும்.</verse>
				<verse number="4">மனைவியின் உடல் அவளுக்கு சொந்தமானதல்ல, அவளுடைய கணவனுக்குரியது. அதுபோலவே, கணவனின் உடல் அவனுக்கு சொந்தமானதல்ல, அவனுடைய மனைவிக்குரியது.</verse>
				<verse number="5">இருவரும் உடன்பட்டால் மன்றாடுதலில் ஈடுபடுவதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இணையாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் சுயகட்டுப்பாடற்றவர்களாக இருப்பதால் சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதபடி மீண்டும் இணைந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="6">இதை நான் ஒரு கட்டளையாக அல்ல, ஆலோசனையாகவே சொல்கின்றேன்.</verse>
				<verse number="7">எல்லா மனிதரும் என்னைப் போல் இருப்பதையே விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இறைவனிடமிருந்து தனக்குரிய வரத்தைப் பெற்றிருக்கிறான். அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், இன்னொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கின்றது.</verse>
				<verse number="8">இப்போது திருமணம் செய்யாதவர்களுக்கும் விதவைகளுக்கும் நான் சொல்வதாவது: அவர்களும் என்னைப் போல் தனிமையாய் இருப்பது நல்லது.</verse>
				<verse number="9">ஆனால் அவர்களால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதிருந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். வேட்கையுடன் வேகுவதைப் பார்க்கிலும் திருமணம் செய்வது நல்லது.</verse>
				<verse number="10">திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்தக் கட்டளையை நான் அல்ல, கர்த்தரே இடுகிறார்: ஒரு மனைவி தன் கணவனைவிட்டுப் பிரிந்து போகக் கூடாது.</verse>
				<verse number="11">ஆனால், அப்படி பிரிந்து வாழ்ந்தால், அவள் வேறு திருமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது தன் கணவனோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது.</verse>
				<verse number="12">மற்றவர்களைக் குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்வதாவது: எந்தவொரு சகோதரனும் அவிசுவாசியான ஒரு மனைவியை உடையவனாயிருந்து, அவள் அவனோடு வாழ விரும்புவாளாயின், அவன் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.</verse>
				<verse number="13">அவ்வாறே எந்தவொரு பெண்ணும் அவிசுவாசியான ஒரு கணவனை உடையவளாயிருந்து அவன் அவளோடு வாழ விரும்புவானாயின், அவள் அவனை விவாகரத்து செய்யக் கூடாது.</verse>
				<verse number="14">ஏனெனில் அவிசுவாசியான கணவன் தன் மனைவியின் மூலமாக பரிசுத்தம் ஆக்கப்படுகிறான். அதேபோல் அவிசுவாசியான மனைவியும் தன் கணவன் மூலமாக பரிசுத்தம் ஆக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் அவர்களுடைய பிள்ளைகள் அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்களே. ஆனால் அப்பிள்ளைகளோ பரிசுத்தமானவர்கள்.</verse>
				<verse number="15">அவிசுவாசி பிரிந்து போனால் போகட்டும். விசுவாசியான ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இதற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. இறைவன் நம்மைச் சமாதானத்துடன் வாழவே அழைத்திருக்கிறார்.</verse>
				<verse number="16">மனைவியே, உன் கணவரை மீட்டெடுப்பாயென உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவியை மீட்டெடுப்பாயென உனக்கு எப்படித் தெரியும்?</verse>
				<verse number="17">ஒவ்வொருவரும் கர்த்தர் நியமித்ததன்படியும், தங்களது அழைப்பின்படியும் வாழட்டும். இதுவே அனைத்து திருச்சபைகளுக்குமான எனது ஒழுங்கு.</verse>
				<verse number="18">ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்தவனா? அவன் விருத்தசேதனம் அற்றவனைப் போலாக வேண்டாம். ஒருவன் தான் அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யாதவனா? அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டாம்.</verse>
				<verse number="19">ஒருவன் விருத்தசேதனம் பெற்றிருப்பதோ, விருத்தசேதனம் பெறாமல் இருப்பதோ ஒன்றுமில்லை. அவன் இறைவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதே தேவையானது.</verse>
				<verse number="20">ஒவ்வொருவனும் இறைவனால் அழைக்கப்பட்டபோது தான் இருந்த நிலைமையிலேயே நிலைத்திருக்க வேண்டும்.</verse>
				<verse number="21">நீ அழைக்கப்பட்டபோது அடிமையாய் இருந்தாயா? கவலைப்பட வேண்டாம்; நீ சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டானால், அதைப் பெற்றுக்கொள்.</verse>
				<verse number="22">ஏனெனில் கர்த்தரால் அழைக்கப்பட்டபோது ஒருவன் அடிமையாயிருந்தால் அவன் கர்த்தரின் விடுதலை பெற்றவனாகிறான். அவ்வாறே அழைக்கப்படும்போது, விடுதலை பெற்ற ஒருவன் கிறிஸ்துவின் அடிமையாகிறான்.</verse>
				<verse number="23">நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே மனிதருக்கு அடிமைகளாகாதிருங்கள்.</verse>
				<verse number="24">சகோதரர்களே, ஒவ்வொருவனும் இறைவனுக்கு பொறுப்புள்ளவனாக எந்த நிலையிலே இறைவனால் அழைக்கப்பட்டானோ, அந்த நிலையிலேயே அவன் நிலைத்திருக்க வேண்டும்.</verse>
				<verse number="25">மணமாகாத பெண்களைக் குறித்தோ, நான் கர்த்தரிடமிருந்து கட்டளை எதையும் பெறவில்லை. ஆனால் கர்த்தருடைய இரக்கத்தினாலே உங்கள் நம்பிக்கைக்குரியவனாகிய நான், எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன்.</verse>
				<verse number="26">தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் ஒருவன் இருக்கின்றபடியே இருப்பது நல்லது என நான் எண்ணுகிறேன்.</verse>
				<verse number="27">நீ திருமணம் செய்திருக்கின்றாயா? அப்படியானால் விவாகரத்தை நாட வேண்டாம். திருமணம் செய்யாதிருக்கிறாயா? ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம்.</verse>
				<verse number="28">நீ திருமணம் செய்தால் பாவமல்ல. ஒரு கன்னிப்பெண் திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்கின்றவர்கள் இந்த வாழ்க்கையில் அநேக இன்னல்களை அனுபவிக்க வேண்டி நேரிடும். இந்த இன்னல்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.</verse>
				<verse number="29">பிரியமானவர்களே, நான் சொல்வது என்னவெனில், காலமோ குறுகியது. ஆகவே, இப்பொழுதிருந்தே மனைவி உடையவர்கள் மனைவி இல்லாதவர்கள் போலும்,</verse>
				<verse number="30">துக்கப்படுகின்றவர்கள் துக்கப்படாதவர்கள் போலவும், மகிழ்ச்சியோடு இருக்கின்றவர்கள் மகிழ்ச்சியற்றவர்கள் போலவும் இருக்க வேண்டும். வாங்குகின்றவர்கள் பொருளற்றவர்கள் போலவும்,</verse>
				<verse number="31">உலகத்தில் ஈடுபாடுள்ளவர்கள் ஈடுபாடில்லாதவர்கள் போலவும் இருக்கட்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் தற்போதைய நிலை கலைந்து போகின்றதே.</verse>
				<verse number="32">நீங்கள் கவலையற்றிருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். திருமணமாகாத ஒருவன், கர்த்தருடைய காரியங்களைக் குறித்தே அக்கறை உள்ளவனாயிருந்து கர்த்தரை பிரியப்படுத்த எண்ணுகிறான்.</verse>
				<verse number="33">ஆனால் திருமணம் செய்தவனோ, இவ்வுலகக் காரியங்களைக் குறித்து அக்கறை உள்ளவனாயிருந்து தன் மனைவியை பிரியப்படுத்த எண்ணுகின்றபடியால்,</verse>
				<verse number="34">அவனுடைய ஆர்வம் பிரிவுபட்டிருக்கிறது. திருமணமாகாத ஒரு பெண்ணும், ஒரு கன்னிப்பெண்ணும் கர்த்தருடைய காரியங்களைக் குறித்து அக்கறையாயிருந்து, உடலிலும் ஆவியிலும் தூய்மையாய் இருப்பதில் நோக்கமாயிருக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்த ஒரு பெண்ணோ இவ்வுலகக் காரியங்களைக் குறித்து அக்கறையாயிருந்து தன் கணவனை பிரியப்படுத்த எண்ணுகிறாள்.</verse>
				<verse number="35">உங்கள் சொந்த நன்மைக்காகவே நான் இதைச் சொல்கின்றேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. நீங்களோ கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சரியான வழியில் வாழ வேண்டும்.</verse>
				<verse number="36">ஒருவன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யாது தாமதிப்பது கண்ணியமற்ற செயலென எண்ணுவானாயின், அத்துடன் அவன் சுயகட்டுப்பாடு அற்றவனாகவும் இருப்பானாயின் அவன் விரும்புகின்றபடியே திருமணம் புரியலாம். அது பாவமில்லை. அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.</verse>
				<verse number="37">ஆனால், யாராவது சுயகட்டுப்பாட்டோடு தன் மனதில் திருமணம் அவசியம் இல்லையென்ற உறுதியான தீர்மானத்தோடு, தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இப்போதைக்குத் திருமணம் செய்வதில்லை எனத் தீர்மானித்தால், அவனும் சரியானதையே செய்கின்றான்.</verse>
				<verse number="38">ஆகவே பெண்ணைத் திருமணம் செய்கின்றவன் சரியானதையே செய்கின்றான். அவளைத் திருமணம் செய்யாதவனும் அதிக நலமானதைச் செய்கின்றான்.</verse>
				<verse number="39">தன் கணவன் உயிரோடிருக்கும் காலம் வரைக்கும், ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவே இருக்கின்றாள். ஆனால் அவளுடைய கணவன் இறந்துபோனால் தான் விரும்பும் யாரையாவது திருமணம் செய்வதற்கு அவளுக்குச் சுதந்திரம் உண்டு. ஆனால் அவள் திருமணம் செய்துகொள்பவன் கர்த்தருக்குச் சொந்தமானவனாக இருக்க வேண்டும்.</verse>
				<verse number="40">ஆனால் எனது அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே திருமணம் செய்யாதவளாய் இருந்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பாள். நானும் இறைவனுடைய ஆவியானவரைப் பெற்றிருக்கிறேன் என்ற எண்ணத்திலேயே கூறுகிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">இப்போது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைக் குறித்துப் பார்ப்போம். “நம் அனைவருக்கும் அறிவு உண்டு என்று” நமக்குத் தெரியும். இந்த அறிவு அகந்தையை ஏற்படுத்தும், ஆனால் அன்போ கட்டியெழுப்பச் செய்யும்.</verse>
				<verse number="2">தனக்கு ஏதேனும் தெரியும் என ஒருவன் எண்ணினால், அவன் தான் அறிய வேண்டியவிதத்தில் இன்னும் அதை அறியவில்லை.</verse>
				<verse number="3">ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகின்றவனை இறைவன் அறிவார்.</verse>
				<verse number="4">எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணுவதைப்பற்றி பார்ப்போம். “உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை,” இறைவன் ஒருவரே, அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதை நாம் அறிவோம்.</verse>
				<verse number="5">சிலரது எண்ணத்தின்படி, வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை பல உள்ளன. அதன்படி அவர்களுக்கு அநேக தெய்வங்களும் ஆள்பவைகளும் இருந்தாலும்,</verse>
				<verse number="6">நமக்கோ பிதாவாகிய ஒருவரே இறைவன். அவரிடமிருந்தே எல்லாம் வந்தன. அவருக்காகவே நாம் வாழ்கின்றோம். நமக்கு இயேசு கிறிஸ்துவாகிய ஒரே ஆண்டவர் இருக்கின்றார். அவர் மூலமாகவே எல்லாம் வந்தன. அவர் மூலமாகவே நாமும் வாழ்கின்றோம்.</verse>
				<verse number="7">ஆனால் எல்லோருக்கும் இந்த அறிவில்லை. சிலர் தாம் முன்பு வழிபட்ட விக்கிரகத்தை ஒரு பொருட்டாக எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்ட உணவை உண்கிறோமே என்ற பலவீனமான மனசாட்சியுடன் உண்ணும்போது அவர்களது மனசாட்சி அசுத்தமாகிறது.</verse>
				<verse number="8">உணவு எதுவுமே நாம் இறைவனை நெருங்க உதவுவதில்லை. அதை நாம் உண்ணாமல் விடுவதால் எதையும் இழந்து போவதில்லை. உண்பதால் நாம் எதையும் பெற்றுக்கொள்வதுமில்லை.</verse>
				<verse number="9">ஆனாலும், உங்களுடைய சுயஅறிவால் தீர்மானிக்கும் உரிமை பலவீனருக்கு தடங்கலாய் இராதபடி கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="10">இப்படிப்பட்ட அறிவுள்ளவனாகிய நீ, விக்கிரக கோவிலில் உணவருந்திக் கொண்டிருப்பதைப் பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால் அவனும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்குத் துணிவான் அல்லவா?</verse>
				<verse number="11">உன்னுடைய மிகையான அறிவின் காரணமாக பலவீனமான அந்த சகோதரன் அழிந்து போகலாம். கிறிஸ்து அவனுக்காகவும் மரணித்தாரே.</verse>
				<verse number="12">இவ்வாறாக, நீ உன் சகோதரர்களுக்கு எதிராகப் பாவம் செய்து, அவர்களுடைய பலவீனமான மனசாட்சியைப் புண்படுத்தினால், நீ கிறிஸ்துவுக்கு விரோதமாகப் பாவம் செய்கின்றாய்.</verse>
				<verse number="13">ஆகையால் நான் உண்ணும் உணவு என் சகோதரன் பாவம் செய்வதற்கு காரணமாக இருக்குமானால், நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இராதவாறு நான் மாமிச உணவே உண்ணாமல் இருக்கவும் தயார்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">எனக்கு சுதந்திரம் உண்டல்லவா? நானும் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? ஆண்டவருக்காக நான் செய்த ஊழியத்தின் பலாபலனாக இருப்பவர்கள் நீங்கள்தானே?</verse>
				<verse number="2">நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாய் காணப்படாவிட்டாலும், உங்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன்; ஆண்டவருக்குள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="3">என்மேல் நீதி விசாரணை செய்பவர்களுக்கு எனது பதில் இதுவே.</verse>
				<verse number="4">உண்ணும் உணவையும் அருந்தும் பானத்தையும் பெற எங்களுக்கு உரிமை இல்லையோ?</verse>
				<verse number="5">மற்ற அப்போஸ்தலர்களும், ஆண்டவருடைய சகோதரர்களும், கேபாவும் விசுவாசியான மனைவியை தங்களுடன் அழைத்துக்கொண்டு போவது போல நாமும் செய்வதற்கு உரிமை இல்லையோ?</verse>
				<verse number="6">வாழ்க்கைச் செலவுக்காக வேலை செய்யத் தேவை இல்லை என்ற உரிமை எனக்கும் பர்னபாவுக்கும் மாத்திரம் இல்லையோ?</verse>
				<verse number="7">எவன் தன் சம்பளப் பணத்தைத் தானே செலுத்தி இராணுவ வீரனாகப் பணி புரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களில் ஒன்றையும் உண்ணாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்?</verse>
				<verse number="8">இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கின்றேனோ? நீதிச்சட்டமும் இதைச் சொல்லவில்லையா?</verse>
				<verse number="9">“தானியக் கதிரைக் கதிரடிக்கும் எருதின் வாயைக் கட்ட வேண்டாம்” என்று மோசேயின் நீதிச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றதே. எருதுகளைக் குறித்தா இறைவன் கவலைப்படுகிறார்?</verse>
				<verse number="10">இதை அவர் நமக்காக சொல்லவில்லையா? நிச்சயமாக அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகின்றவனும், கதிரடிக்கின்றவனும் விளைச்சலில் பங்கடைவோம் என்ற எதிர்பார்ப்பில் வேலை செய்ய வேண்டும்.</verse>
				<verse number="11">நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரியதை விதைத்திருந்தால், உங்களிடமிருந்து எங்கள் அடிப்படைத் தேவைகளை அறுவடை செய்வது நியாயமற்றதோ?</verse>
				<verse number="12">உங்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்ளும் உரிமை மற்றவர்களுக்கு இருக்கும்போது அந்த உரிமை எங்களுக்கு இன்னும் அதிகமாக இருக்காதோ? ஆயினும், நாங்கள் இந்த உரிமையை பயன்படுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.</verse>
				<verse number="13">ஆலயத்தில் ஊழியம் செய்கின்றவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணி செய்கின்றவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா?</verse>
				<verse number="14">அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.</verse>
				<verse number="15">ஆனாலும் இந்த உரிமைகள் ஒன்றையேனும் நான் பயன்படுத்தவில்லை. மேலும், நீங்கள் எனக்குப் பொருளுதவி செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. ஏனெனில் நான் பெருமிதம் அடையக் கூடிய இந்த விடயத்தை இழப்பதைப் பார்க்கிலும், நான் மரணிப்பதே நலமாயிருக்கும்.</verse>
				<verse number="16">நான் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிப்பது கட்டாயக் கடமை. நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ பேரழிவு.</verse>
				<verse number="17">நான் பிரசங்கிப்பதை விருப்பத்தோடு செய்தால் அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பமின்றி செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன்.</verse>
				<verse number="18">அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமையை பெற்றுக்கொள்ளாமல், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதே வெகுமதி.</verse>
				<verse number="19">நான் எந்த மனிதனுக்கும் அடிமையாயிராத சுதந்திரமானவனாய் இருந்தும், அநேகரை வென்றெடுக்கும்படி எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக் கொள்கின்றேன்.</verse>
				<verse number="20">யூதர்களை வென்றெடுக்க யூதருக்கு நான் யூதனைப் போலானேன். நீதிச்சட்டத்திற்கு நான் கீழ்ப்படாத ஒருவனாயிருந்தும் நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை வென்றெடுக்க நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன்.</verse>
				<verse number="21">நீதிச்சட்டம் இல்லாதவர்களின் உள்ளத்தை வென்றெடுக்க, நானும் நீதிச்சட்டம் இல்லாதவன் போலானேன். நான் இறைவனுடைய சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல. ஆனாலும் நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவனாய் இருப்பதால் அப்படிச் செய்கின்றேன்.</verse>
				<verse number="22">பலவீனரை வென்றெடுக்க, பலவீனருக்கு நான் பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது வென்றெடுப்பதற்காக நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.</verse>
				<verse number="23">நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நானும் அவர்களுடன் ஒரு பங்கைப் பெறுவதற்காக நற்செய்தியின் பொருட்டே இதை நான் செய்கின்றேன்.</verse>
				<verse number="24">ஓட்டப் பந்தயத்தில் பலர் ஓடினாலும் ஒருவனே பரிசைப் பெறுவான் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள்.</verse>
				<verse number="25">போட்டிகளில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அழிந்து போகும் கிரீடத்தைப் பெறுவதற்காக சுயகட்டுப்பாட்டுடன் இருக்கின்றார்கள். ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கின்றோம்.</verse>
				<verse number="26">ஆதலால் நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப் போல ஓட மாட்டேன். காற்றை எதிர்த்து சண்டையிடும் குத்துச் சண்டை வீரனைப் போல் சண்டையிட மாட்டேன்.</verse>
				<verse number="27">மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கின்ற நானே, வெகுமானம் பெறத் தகுதியற்றவனாகி விடாதபடி என் உடலை அடக்கி, ஒடுக்கி கட்டுப்படுத்துகிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">பிரியமானவர்களே, யூதர்களாகிய நமது முன்னோர்கள் அனைவருமே மேகத்தின் கீழாக நடந்து செங்கடலைக் கடந்து சென்றார்கள் என்ற உண்மையை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை.</verse>
				<verse number="2">அவர்கள் எல்லோரும் மேகத்தினாலும், கடலினாலும் மோசேக்குள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.</verse>
				<verse number="3">அவர்கள் அனைவரும் ஒரே ஆவிக்குரிய உணவை உண்டு,</verse>
				<verse number="4">ஒரே ஆவிக்குரிய பானத்தை அருந்தினார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஆவிக்குரிய கற்பாறையிலிருந்தே அந்தப் பானத்தை அருந்தினார்கள். கிறிஸ்துவே அந்தக் கற்பாறை.</verse>
				<verse number="5">அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் பிரியமாய் இருக்கவில்லை. இதனால் அவர்கள் மரணித்து பாலைநிலத்தில் அவர்கள் உடல்கள் கிடந்தன.</verse>
				<verse number="6">அவர்கள் தங்கள் இருதயங்களில் தீமையான காரியங்களின் மேல் நாட்டம் கொண்டதுபோல நாமும் இராதவாறு, இவை நமக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன.</verse>
				<verse number="7">அவர்களில் சிலர் விக்கிரகத்தை வழிபடுகின்றவர்களாக இருந்தது போல நீங்களும் இருக்க வேண்டாம். “மக்கள் உண்பதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்து முறைகேடான விளையாட்டுக்களில் ஈடுபட எழுந்திருந்தார்கள்” என்று எழுதியிருக்கின்றது.</verse>
				<verse number="8">அப்படியே அவர்களில் சிலர் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதைப் போல நாமும் ஈடுபடாதிருப்போமாக. அதனால்தான் அவர்களில் இருபத்து மூவாயிரம் பேர் ஒரே நாளில் இறந்து போனார்கள்.</verse>
				<verse number="9">அவர்களில் சிலர் கிறிஸ்துவை சோதித்ததால் பாம்புகளினால் கொல்லப்பட்டது போல நாமும் சோதிக்காது இருப்போமாக.</verse>
				<verse number="10">அவர்களில் சிலர் அதிருப்தியுடன் குறை கூறி மரணதூதனால் கொல்லப்பட்டதைப் போல நாமும் குறை கூறாமல் இருப்போமாக.</verse>
				<verse number="11">அவர்களுக்கு நடந்த இக்காரியங்கள் அனைத்தும் ஒரு எடுத்துக்காட்டாய் இருப்பதோடு, கடைசிக் காலங்களில் வாழும் நமக்கு முன்னெச்சரிக்கையாக எழுதப்பட்டிருக்கின்றன.</verse>
				<verse number="12">ஆதலால் நிற்கின்றதாக எண்ணுகின்ற நீங்கள் விழுந்து விடாதபடி கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="13">மனிதர்களுக்கு ஏற்படுகின்ற சோதனையைத் தவிர வேறெந்த சோதனையும் உங்களுக்கு ஏற்படவில்லை. இறைவனோ உண்மையுள்ளவர். உங்களால் தாங்க முடியாத அளவுக்கு நீங்கள் சோதிக்கப்படாதவாறு, நீங்கள் சோதனைக்கு உட்படும்போது அதிலிருந்து தப்பித்துக்கொள்ளக் கூடிய ஒரு வழியையும் அவர் உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார். அதனால், உங்களுக்கு அதைத் தாங்கிக்கொள்ளக் கூடியதாயிருக்கும்.</verse>
				<verse number="14">ஆகையால் என் அன்பான நண்பர்களே, விக்கிரக வழிபாட்டைவிட்டு விலகி ஓடுங்கள்.</verse>
				<verse number="15">நான் அறிவாற்றலுள்ள மக்களுடனே பேசுகின்றேன். நான் சொல்வதை நீங்களே ஆராய்ந்து தீர்மானியுங்கள்.</verse>
				<verse number="16">நாம் நன்றி செலுத்தி ஆசீர்வாத கிண்ணத்தில் பங்குகொள்வது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதலாய் இருக்கின்றது அல்லவா? நாம் அப்பத்தைத் துண்டுகளாக்கிப் பகிர்ந்துகொள்வது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதலாய் இருக்கின்றது அல்லவா?</verse>
				<verse number="17">ஏனெனில், அப்பம் ஒன்றாய் இருப்பதனால், நாம் பலராய் இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே அப்பத்தில் பங்குகொள்கின்றபடியால் ஒரே உடலாயிருக்கிறோம்.</verse>
				<verse number="18">இஸ்ரயேலரை கவனித்துப் பாருங்கள். பலி செலுத்தப்பட்டதை உண்பவர்கள் பலிபீடத்தின் ஊடாக ஐக்கியம் அடைந்தார்கள் அல்லவா?</verse>
				<verse number="19">அப்படியானால் விக்கிரகத்துக்குச் செலுத்தப்பட்ட பலியை ஒரு பொருட்டாகவோ, அல்லது விக்கிரகத்தை ஒரு பொருட்டாகவோ நான் கருதுகிறேனா?</verse>
				<verse number="20">இல்லையே, அஞ்ஞானிகளின் பலிகள் இறைவனுக்கல்ல, பிசாசுகளுக்கே பலியிடப்படுகின்றன. அதனால், நீங்கள் பிசாசுகளுடன் பங்காளிகளாய் இருப்பதை நான் விரும்பவில்லை.</verse>
				<verse number="21">ஆண்டவருடைய கிண்ணத்திலிருந்தும் பிசாசுகளுடைய கிண்ணத்திலிருந்தும் நீங்கள் அருந்த முடியாது. ஆண்டவரின் பந்தியும், பிசாசுகளின் பந்தியும் ஆகிய இரண்டிலும் நீங்கள் பங்குள்ளவர்களாக முடியாது.</verse>
				<verse number="22">இவ்வாறு, நாம் ஆண்டவருடைய கோபத்தைத் தூண்டிவிட முயலுகிறோமா? நாம் அவரைவிடப் பலமுள்ளவர்களா?</verse>
				<verse number="23">“எல்லாவற்றையும் செய்ய எனக்கு அனுமதி உண்டு” என்று சொல்லப்படுகிறது. ஆனால் எல்லாமே பயனுள்ளதாயிராது. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு அனுமதி உண்டு.” ஆனால், எல்லாமே அனைவரும் வளர்ச்சியடைவதற்கு உகந்தவையல்ல.</verse>
				<verse number="24">ஒருவன் தனது நலனை மட்டுமே தேடாமல் மற்றவர்களது நலனையும் தேட வேண்டும்.</verse>
				<verse number="25">சந்தையில் விற்கும் எதையும் மனசாட்சியின் பொருட்டு எவ்வித கேள்வியும் கேட்காமல் நீங்கள் வாங்கி உண்ணலாம்.</verse>
				<verse number="26">ஏனெனில், “பூமியும், அதிலிருக்கும் ஒவ்வொன்றும் கர்த்தருடையவை.”</verse>
				<verse number="27">அவிசுவாசி ஒருவன் உங்களை உணவுக்கு அழைக்கும்போது அங்கு நீங்கள் போக விரும்பினால் உங்கள் முன்னால் வைக்கப்படுவதை மனசாட்சியின் பொருட்டு எவ்வித கேள்விகளையும் கேட்காமல் வாங்கி உண்ணுங்கள்.</verse>
				<verse number="28">ஆனால் எவனாவது உங்களிடம், “இது விக்கிரகத்துக்கு படைக்கப்பட்ட உணவு” என்று கூறுவானாயின், அந்த மனிதனுக்காகவும் மனசாட்சியின் பொருட்டும் அதை உண்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="29">நான் குறிப்பிடுவது உங்களுடைய மனசாட்சியை அல்ல, மற்றவனுடைய மனசாட்சியையே குறிப்பிடுகிறேன். அப்படியானால், தான் எதைச் செய்வது அல்லது செய்யக் கூடாது என்பதை மற்றொருவரின் மனசாட்சியை வைத்தா தீர்மானிக்க வேண்டும் என்றும்,</verse>
				<verse number="30">தான் நன்றியறிதலோடு பங்குபற்றும் உணவுப் பந்தியில் இறைவனுக்கு நன்றி செலுத்தி உண்கின்ற எதைக் குறித்தாகிலும் தன்மீது களங்கம் சுமத்தப்படலாமா என்றும் ஒருவர் கேள்விகளை எழுப்பலாமா?</verse>
				<verse number="31">இல்லை. நீங்கள் உண்டாலும், குடித்தாலும் வேறு எதைச் செய்தாலும், அவையனைத்தையும் இறைவனுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.</verse>
				<verse number="32">யூதர்களுக்கோ கிரேக்கர்களுக்கோ இறைவனுடைய திருச்சபைக்கோ யாருக்குமே இடையூறாய் இருக்க வேண்டாம்.</verse>
				<verse number="33">அவ்வாறே நானும் எல்லாவற்றிலும் ஒவ்வொருவரையும் பிரியப்படுத்தவே முயற்சிக்கிறேன். நான் என்னுடைய நன்மையை நாடுபவனாக இல்லாமல், பலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அநேகருடைய நன்மையை நாடி செயற்படுகிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.</verse>
				<verse number="2">நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் அதேவிதமாக பின்பற்றுவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.</verse>
				<verse number="3">ஒவ்வொரு மனிதனுக்கும் கிறிஸ்துவே தலைவராய் இருக்கின்றார், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனே தலைவனாய் இருக்கின்றான், கிறிஸ்துவுக்கு இறைவனே தலைவராய் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.</verse>
				<verse number="4">எனவே தன் தலையை மூடிக்கொண்டு மன்றாடுகின்றவனோ, அல்லது இறைவாக்கு உரைக்கின்றவனோ தன் தலையை அவமதிக்கிறான்.</verse>
				<verse number="5">ஒவ்வொரு பெண்ணும் தான் மன்றாடும்போது அல்லது இறைவாக்கு உரைக்கும்போது தன் தலையை மூடிக்கொள்ளாதுவிட்டால், தன் தலையை அவமதிக்கிறாள். அது அவளது தலை மொட்டையடிக்கப்பட்டதற்கு சமமாயிருக்கும்.</verse>
				<verse number="6">இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால் அவள் தன் தலைமுடியை கட்டையாக கத்தரித்துக்கொள்ள வேண்டும். அப்படியாக, தன் தலைமுடியை கட்டையாக கத்தரித்துக்கொள்வதோ, தலையை மொட்டையடிப்பதோ அவளுக்கு அவமானமாக இருந்தால் அவள் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="7">ஒரு ஆண் இறைவனுடைய சாயலும் மகிமையுமாய் இருக்கின்றான். எனவே தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் ஒரு பெண்ணோ ஆணின் மகிமையாய் இருக்கின்றாள்.</verse>
				<verse number="8">ஏனெனில் பெண்ணிலிருந்து ஆண் படைக்கப்படவில்லை, ஆணிலிருந்தே பெண்ணானவள் படைக்கப்பட்டாள்.</verse>
				<verse number="9">அத்தோடு, பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை. ஆணுக்காகவே பெண்ணானவள் படைக்கப்பட்டாள்.</verse>
				<verse number="10">எனவே தூதர்களின் பொருட்டு ஒரு பெண் அதிகாரத்துக்குட்பட்டவள் என்பதைக் காட்ட தன் தலையின்மேல் அதிகாரத்தின் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்.</verse>
				<verse number="11">எவ்வாறாயினும் கர்த்தருக்குள் ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண் இல்லாமல் ஆணோ இல்லை.</verse>
				<verse number="12">ஏனெனில் ஆணிலிருந்து பெண் படைக்கப்பட்டது போலவே பெண்ணிலிருந்து ஆண் பிறக்கிறான். ஆனால் எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன.</verse>
				<verse number="13">ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல் இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள்.</verse>
				<verse number="14">ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால் அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் போதிக்கிறதே?</verse>
				<verse number="15">ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="16">இதைக் குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால் எங்களுக்கோ இறைவனின் திருச்சபைக்கோ அப்படிப்பட்ட வழக்கம் இல்லை என்று அறியுங்கள்.</verse>
				<verse number="17">நான் உங்களுக்குக் கூறும் பின்வரும் அறிவுரைகளில் உங்களைப் புகழப் போவதில்லை, ஏனெனில் நீங்கள் ஒன்றுகூடி வருவது நன்மையைவிட தீமையையே உண்டாக்குகின்றது.</verse>
				<verse number="18">முதலாவதாக, நீங்கள் திருச்சபையாக ஒன்றுகூடும்போது உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன்.</verse>
				<verse number="19">உங்களில் உண்மையானவர்கள் யார் என்று அறியும் பொருட்டு உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்க வேண்டியது அவசியம்.</verse>
				<verse number="20">நீங்கள் ஒன்றுகூடும்போது உண்பது ஆண்டவருடைய திருவிருந்து அல்ல.</verse>
				<verse number="21">ஏனெனில் நீங்கள் அதை உட்கொள்ளும் வேளையில் ஒருவன் மற்றவனுக்காக காத்திராமல் சொந்த உணவை முந்தி உட்கொள்கிறான். இதனால் ஒருவன் பசியாயிருக்கிறான், மற்றொருவன் குடிவெறியில் இருக்கின்றான்.</verse>
				<verse number="22">உண்ணவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையோ? நீங்கள் இறைவனுடைய திருச்சபையை அவமதித்து, எளியவர்களை வெட்கத்துக்கு உள்ளாக்குகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்வேன்? இதைக் குறித்து நான் உங்களைப் பாராட்டுவேனா? நிச்சயமாக இல்லை.</verse>
				<verse number="23">ஆண்டவர் எனக்குக் கற்றுக் கொடுத்ததையே நான் உங்களுக்கு ஒப்புவித்தேன். ஆண்டவர் இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து,</verse>
				<verse number="24">நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைத் துண்டுகளாக்கி, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற என்னுடைய உடல், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.</verse>
				<verse number="25">அவ்விதமாகவே உணவருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம், என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை. இதை நீங்கள் அருந்தும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார்.</verse>
				<verse number="26">ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தை உட்கொண்டு, இந்தக் கிண்ணத்தில் அருந்தும் போதெல்லாம், ஆண்டவர் மீண்டும் வரும்வரை அவருடைய மரணத்தை பிரசித்தப்படுத்துகிறீர்கள்.</verse>
				<verse number="27">ஆகையால், எவனாவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தை உட்கொண்டு, ஆண்டவருடைய கிண்ணத்தில் அருந்தினால் அவன் ஆண்டவருடைய உடலுக்கும் அவருடைய இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் செய்கின்றவனாயிருப்பான்.</verse>
				<verse number="28">எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தை உட்கொண்டு, கிண்ணத்திலிருந்து அருந்தும் முன் தன்னை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.</verse>
				<verse number="29">ஏனெனில், ஒருவன் ஆண்டவருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல் இதை உட்கொண்டு அருந்துவானாயின், அவன் தன் மேல் நியாயத்தீர்ப்பை வரவழைத்துக் கொள்கின்றான்.</verse>
				<verse number="30">இதனாலேயே உங்களில் பலர் பலவீனப்பட்டும், வியாதிப்பட்டும் இருக்கின்றனர், உங்களில் சிலர் மரணமடைந்தும் உள்ளார்கள்.</verse>
				<verse number="31">ஆகவே, நம்மை நாமே ஆராய்ந்தறிந்தால் நாம் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாக மாட்டோம்.</verse>
				<verse number="32">அப்படியிருந்தும் நாம் கர்த்தரால் இப்போது நியாயம் தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்பட மாட்டோம்.</verse>
				<verse number="33">ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக உண்பதற்கு ஒன்றுகூடி வரும்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.</verse>
				<verse number="34">ஒருவன் பசியாயிருந்தால் அவன் வீட்டிலேயே உண்ண வேண்டும். அப்போது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது குற்றவாளியாக தீர்க்கப்பட மாட்டீர்கள். மற்ற விடயங்களைக் குறித்த அறிவுரைகளை நான் வரும்போது உங்களுக்குத் தருகிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">இப்போது பிரியமானவர்களே, ஆவியானவர் அருள்பவற்றைக் குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நான் விரும்பவில்லை.</verse>
				<verse number="2">நீங்கள் இறைவனை அறியாதவர்களாய் இருந்தபோது பேச முடியாத விக்கிரகங்களினால் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு தவறான வழியிலே நடத்தப்பட்டீர்கள்.</verse>
				<verse number="3">ஆகவே, இறைவனின் ஆவியானவரால் பேசுகின்ற எவனும் “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்ல மாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி எவராலும், “இயேசுவே ஆண்டவர்” என்று சொல்லவும் முடியாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன்.</verse>
				<verse number="4">ஆவியானவர் அளிக்கும் வரங்கள் பல்வேறு வகையானவை, ஆனால் ஆவியானவர் ஒருவரே.</verse>
				<verse number="5">செய்யப்படும் இறைபணிகளும் பல்வேறு வகையானவை, ஆனால் கர்த்தர் ஒருவரே.</verse>
				<verse number="6">அவற்றின் செயற்பாடுகளும் பல்வேறு வகையானவை, ஆனால் ஒரே இறைவனே அவற்றை எல்லோரிலும் செயற்படுத்துகின்றவர்.</verse>
				<verse number="7">பொதுவான நன்மைக்காகவே ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படையான செயற்பாடு கொடுக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="8">பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஒருவருக்கு ஞானத்தின் வார்த்தையும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர் மூலமாக அறிவை உணர்த்தும் வார்த்தையும்,</verse>
				<verse number="9">அதே ஆவியானவர் மூலமாக மற்றொருவருக்கு விசுவாசமும், இன்னொருவருக்கு குணமளிக்கும் வரங்களும்,</verse>
				<verse number="10">மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமையும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைத்தலும், இன்னொருவருக்கு ஆவிகளை பகுத்தறியும் ஆற்றலும், ஒருவருக்கு ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்றுமொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்றுமொழிகளை விளக்கிச் சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன.</verse>
				<verse number="11">இவையெல்லாவற்றையும், ஒரே ஆவியானவர் செயற்படுத்தி தாம் தீர்மானிக்கின்றபடியே ஒவ்வொருவருக்கும் இவற்றை பகிர்ந்து கொடுக்கின்றார்.</verse>
				<verse number="12">ஒரு உடல் பல அங்கங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கங்கள் பலவாயினும் ஒரே உடலாயிருப்பது போல கிறிஸ்துவும் ஒரே உடலாயிருக்கிறார்.</verse>
				<verse number="13">நாம் யூதராகவோ, கிரேக்கராகவோ, அடிமைகளாகவோ, சுதந்திரமுடைய ஒருவராகவோ இருந்தாலும் ஒரே ஆவியானவராலே ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். நாம் பருகி அனுபவிப்பதற்கு ஒரே ஆவியானவரே கொடுக்கப்பட்டிருக்கிறார்.</verse>
				<verse number="14">ஏனெனில், உடல் ஒரு அங்கமாயிராமல் பல அங்கங்களைக் கொண்டது.</verse>
				<verse number="15">காலானது, “நான் கையாக இல்லாததனால், நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால், அது உடலுக்குச் சொந்தமில்லாமல் போவதில்லை.</verse>
				<verse number="16">காதானது, “நான் கண்ணாக இல்லாததனால் நான் உடலுக்குச் சொந்தமல்ல” என்று சொன்னால். அது உடலுக்குச் சொந்தமில்லாமல் போவதில்லை.</verse>
				<verse number="17">முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால் கேட்கும் திறன் எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாக இருக்குமானால், அதற்கு முகரும் திறன் எங்கிருக்கும்?</verse>
				<verse number="18">ஆனால் இறைவனோ தாம் விரும்பியபடியே உடலின் அங்கங்களை, அவை ஒவ்வொன்றையும் முறையாக ஒருங்கமைத்திருக்கிறார்.</verse>
				<verse number="19">முழு உடலுமே ஒரே அங்கமானால் அது உடலாய் இருக்க முடியுமா?</verse>
				<verse number="20">அங்கங்கள் அநேகமாய் இருப்பினும் உடல் ஒன்றாகவே இருக்கின்றது.</verse>
				<verse number="21">எனவே கண்ணானது கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்ல முடியாது. அல்லது தலையானது காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்று சொல்ல முடியாது.</verse>
				<verse number="22">மாறாக பலவீனமாய் காணப்படுகின்ற உடலின் அங்கங்களே நமக்கு மிகவும் அவசியமாய் இருக்கின்றன.</verse>
				<verse number="23">உடலின் மதிப்புக் குறைந்த அங்கங்கள் என்று நாம் எவற்றை நினைக்கிறோமோ, அவற்றுக்கே நாம் அதிக மதிப்பு கொடுக்கின்றோம். உடலின் மறைவான அங்கங்களையே அதிக கண்ணியமாக எண்ணுகிறோம்.</verse>
				<verse number="24">அவ்விதமான எண்ணம் உடலின் மறைந்திராத அங்கங்களுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ மதிப்புக் குறைந்த அங்கங்களுக்கு அதிக மதிப்பைக் கொடுத்து உடலின் அங்கங்களை ஒன்றிணைத்துள்ளார்.</verse>
				<verse number="25">ஆகவே உடலில் பிரிவினை இல்லாமல் ஒன்று மற்றொன்றில் அக்கறையாய் இருப்பதற்காகவே அவ்வாறு உருவாக்கினார்.</verse>
				<verse number="26">ஆகையால், உடலின் ஒரு அங்கம் வேதனைப்படும்போது எல்லா அங்கங்களுமே வேதனைப்படுகின்றன. ஒரு அங்கம் மேன்மை பெறும்போது மற்றெல்லா அங்கங்களும் ஒன்றுசேர்ந்து மகிழ்கின்றன.</verse>
				<verse number="27">இப்போது நீங்கள் கிறிஸ்துவின் உடலாகவும், தனித்தனியே அதன் ஒரு அங்கமாகவும் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="28">ஆகவே, திருச்சபையிலே முதலாவதாக அப்போஸ்தலர்களையும், இரண்டாவதாக இறைவாக்கினர்களையும், மூன்றாவதாக ஆசிரியர்களையும் இறைவன் நியமித்தார். அதற்குப் பின்னால் அற்புதங்களையும், குணமாக்கும் வரங்களையும், உதவியாளர்களையும், நிர்வகிக்கும் வரங்களையும், பல்வேறு மொழி பேசுதலையும் ஏற்படுத்தினார்.</verse>
				<verse number="29">எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் இறைவாக்கினர்களா? அல்லது எல்லோரும் ஆசிரியர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கின்றார்களா?</verse>
				<verse number="30">எல்லோரும் குணமாக்கும் வரங்களைப் பெற்றிருக்கிறார்களா? எல்லோரும் ஆவியானவரால் வேற்றுமொழிகளைப் பேசுகின்றார்களா? எல்லோரும் அவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவர்களா? இல்லையே.</verse>
				<verse number="31">அதனால் மேன்மையான வரங்களை விரும்புங்கள். இன்னும், அதிக மேன்மையான வழியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">நான் பல்வேறு மனித மொழிகளிலும் இறைதூதர்களின் மொழிகளிலும் பேசினாலும் அன்பற்றவனாய் இருந்தால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலம், ஓசையெழுப்பும் கைத்தாளம்.</verse>
				<verse number="2">நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய், எல்லா மறைபொருள்களையும் எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளைப் பெயர்க்கும் விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பற்றவனாய் இருந்தால் நான் அறவே வெற்று மனிதன்.</verse>
				<verse number="3">எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்புள்ளவனாய் இல்லாது போனால், எனக்கு எப்பயனும் இல்லை.</verse>
				<verse number="4">அன்பு பொறுமையுள்ளது, தயவுள்ளது. அன்பு பொறாமையற்றது, தற்பெருமை பேசாது, அகந்தையாயிராது,</verse>
				<verse number="5">வீம்புகொள்ளாது, அது தன்னலமற்றது, இலகுவில் கோபமடையாது, வன்மம் வைத்திருக்காது;</verse>
				<verse number="6">தீமையில் மகிழ்ச்சியடையாமல், மெய்மையில் மகிழ்ச்சியடையும்.</verse>
				<verse number="7">அன்பு அனைத்தையும் தாங்கிக்கொள்ளும், அனைத்தையும் விசுவாசிக்கும், எப்போதும் எதிர்பார்ப்பு உடையதாய் இருக்கும். அன்பு அனைத்திலும் நிலைகுலையாது உறுதியாய் இருக்கும்.</verse>
				<verse number="8">அன்பு ஒருபோதும் தோல்வியடைந்து ஓயாது, இறைவாக்கு ஓய்ந்து போகும், வேற்றுமொழிகள் ஒழிந்து போகும், அறிவும் மறைந்து போகும்,</verse>
				<verse number="9">நமது அறிவு குறைவுள்ளது, நமது இறைவாக்கு உரைத்தலும் முழுமையற்றது.</verse>
				<verse number="10">நிறைவுள்ளது வரும்போது குறைவுள்ளது மறைந்து போகும்.</verse>
				<verse number="11">நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறு பிள்ளையைப் போலவே பேசினேன். ஒரு சிறு பிள்ளையைப் போலவே சிந்தித்தேன். ஒரு சிறு பிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான் ஒரு முழு வளர்ச்சி பெற்ற மனிதனானபோது சிறு பிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன்.</verse>
				<verse number="12">இப்போது ஒரு கண்ணாடியில் தெளிவற்ற விம்பத்தைக் காண்கின்றோம். பின்னால் வரும் காலத்தில், நாம் நேருக்கு நேராகப் பார்ப்போம். இப்போது பகுதியளவே அறிந்திருக்கிறேன். பின்னால் வரும் காலத்தில் நான் முழுமையாக அறிந்துகொள்வதோடு முழுமையாக அறிந்துகொள்ளப்படுவேன்.</verse>
				<verse number="13">இப்போது நிலைத்திருப்பவைகளான விசுவாசம், நல்ல எதிர்பார்ப்பு, அன்பு என்பவற்றுள் அன்பே மேன்மையானது.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">அன்பை நாடித் தேடுங்கள், ஆவிக்குரிய வரங்களில் அதிக விருப்பம்கொள்ளுங்கள், அதிலும் இறைவாக்கு உரைப்பதை அதிகமாக விரும்புங்கள்.</verse>
				<verse number="2">ஏனெனில், ஆவியானவர் கொடுக்கும் வேற்றுமொழியைப் பேசுகின்றவன் மனிதருடன் பேசாமல் இறைவனுடன் பேசுகின்றான். அவன் ஆவியில் மறைபொருள்களைப் பேசுகின்றபடியால் அவன் பேசுவது ஒருவருக்கும் புரிவதில்லை.</verse>
				<verse number="3">ஆனால் இறைவாக்கு உரைப்பவனோ, மனிதரைக் கட்டியெழுப்பவும் ஊக்கப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் பேசுகின்றான்.</verse>
				<verse number="4">வேற்றுமொழியைப் பேசுகின்றவன், தனது சொந்த வளர்ச்சிக்காக பேசுகின்றான். ஆனால் இறைவாக்கு உரைப்பவனோ, திருச்சபையை கட்டியெழுப்புகிறான்.</verse>
				<verse number="5">நீங்கள் ஒவ்வொருவரும் வேற்றுமொழிகளில் பேச வேண்டும் என்று நான் விரும்பினாலும், நீங்கள் இறைவாக்கு உரைப்பதையே அதிகமாய் விரும்புகிறேன். வேற்றுமொழிகளைப் பேசுகின்றவன் அதன் அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், இறைவாக்கு உரைக்கின்றவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறான். அதனால் திருச்சபை கட்டியெழுப்பப்படும்.</verse>
				<verse number="6">பிரியமானவர்களே, இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டையோ அறிவையோ இறைவாக்கையோ அல்லது ஒரு அறிவுறுத்தும் வார்த்தையையோ உங்களுக்கு வழங்காமல், நான் உங்களிடம் வந்து வேற்றுமொழிகளில் பேசினால் என்னால் நீங்கள் அடையும் நன்மையென்ன?</verse>
				<verse number="7">புல்லாங்குழல், வீணை போன்ற உயிரற்ற வாத்தியக் கருவிகளிலிருந்து உருவாகும் இசையானது, வேறுபட்ட சுரங்களை எழுப்பாவிட்டால், ஒருவன் அதன் இராகத்தை எப்படி அறிய முடியும்?</verse>
				<verse number="8">அப்படியே, யுத்தத்துக்கான எக்காள ஒலி தெளிவாக இல்லாவிட்டால் யுத்தத்திற்கு யார் தயாராவார்கள்?</verse>
				<verse number="9">அதேபோலவே நீங்களும், மற்றவர்களால் புரிந்துகொள்ளக் கூடிய வார்த்தைகளை உங்கள் உதடுகளால் பேசாவிட்டால், நீங்கள் பேசுவது என்னவென்பது இன்னொருவருக்கு எப்படிப் புரியும்? நீங்கள் காற்றில் பேசுவது போலிருக்குமே.</verse>
				<verse number="10">உலகத்தில் பல்வேறு மொழிகள் இருந்தாலும், அவற்றில் எதுவும் அர்த்தமற்றதல்ல.</verse>
				<verse number="11">எனவே, ஒருவன் பேசுகின்ற மொழியின் அர்த்தத்தை நான் அறிந்துகொள்ளாவிட்டால் அதைப் பேசுகின்றவனுக்கு நான் பிற நாட்டவனைப் போல் இருப்பேன். அவனும் எனக்கு பிற நாட்டவனைப் போல் இருப்பான்.</verse>
				<verse number="12">இது உங்களுக்கும் பொருந்தும். ஆகவே நீங்கள் ஆவிக்குரிய வரங்களின் மீது ஆர்வம் உள்ளவர்களாய் இருப்பதனால், திருச்சபையைக் கட்டியெழுப்பும் வரங்களில் தேர்ச்சியடைய முயலுங்கள்.</verse>
				<verse number="13">இதன் காரணமாகவே வேற்றுமொழியைப் பேசுகின்றவன் அதற்கு அர்த்தம் சொல்லும் ஆற்றலையும் பெற்றுக்கொள்ளும்படி மன்றாட வேண்டும்.</verse>
				<verse number="14">ஏனெனில், நான் வேற்றுமொழியில் மன்றாடும்போது, எனது ஆவி மன்றாடுகிறது. எனது மனமோ பயனற்றதாயிருக்கிறது.</verse>
				<verse number="15">ஆகவே நான் என்ன செய்யலாம்? நான் எனது ஆவியினாலும் மன்றாடுவேன், புரிந்துணர்வோடும் மன்றாடுவேன். ஆவியினாலும் பாடுவேன், புரிந்துணர்வோடும் பாடுவேன்.</verse>
				<verse number="16">அப்படி இல்லாவிட்டால், நீங்கள் உங்களுடைய ஆவியினாலே துதி செலுத்தும்போது ஒரு புதியவன் உங்கள் மத்தியில் இருந்தால், அவன் எப்படி உங்களது துதி செலுத்துதலுக்கு “ஆமென்” சொல்வான். ஏனெனில், நீங்கள் பேசுவது அவனுக்குப் புரியாதே.</verse>
				<verse number="17">நீங்கள் சிறப்பாக நன்றி செலுத்தலாம். ஆனால், அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே.</verse>
				<verse number="18">நான் உங்கள் எல்லோரையும்விட அதிகமாய் வேற்றுமொழிகளைப் பேசுகின்றபடியால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="19">ஆனால், திருச்சபையிலே வேற்றுமொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைவிட, மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக ஐந்து வார்த்தைகளை அறிவோடு பேசுவதையே விரும்புகிறேன்.</verse>
				<verse number="20">பிரியமானவர்களே, சிந்தனையிலே சிறு பிள்ளைகளாக இருக்காதீர்கள். தீமையைப் பொறுத்தவரை அதை அறியாக் குழந்தைகளாய் இருங்கள், சிந்தனையில் பெரியவராயிருங்கள்.</verse>
				<verse number="21">“வேற்றுமொழிகளைப் பேசுகின்றவர்களைக் கொண்டும், புரியாத உதடுகளைக் கொண்டும் இந்த மக்களுடன் நான் பேசுவேன். அப்போதும் இவர்கள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்று கர்த்தர் சொல்கின்றார்” என நீதிச்சட்டத்தில் எழுதியிருக்கின்றதே.</verse>
				<verse number="22">எனவே, வேற்றுமொழிகளைப் பேசுவது அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கின்றதேயன்றி, விசுவாசிகளுக்கு அல்ல. இறைவாக்கு உரைப்பதோ விசுவாசிகளுக்கே அன்றி, அவிசுவாசிகளுக்கு அல்ல.</verse>
				<verse number="23">எனவே திருச்சபையோர் எல்லோரும் ஒன்றுகூடும்போது எல்லோரும் வேற்றுமொழிகளைப் பேசினால், அங்கு வருகின்ற புதியவர்களும் அவிசுவாசிகளும் உங்களைப் பார்த்து புத்தி பேதலித்தவர்கள் என்று சொல்ல மாட்டார்களா?</verse>
				<verse number="24">ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைக்கும்போது அங்கு ஒரு அவிசுவாசியோ அல்லது புதியவனோ வந்திருந்தால், அவன் பாவ உணர்வடைந்து எல்லோராலும் அவன் நியாயம் தீர்க்கப்படுவான்.</verse>
				<verse number="25">அவனுடைய இருதயத்தின் இரகசியங்கள் வெளியாகும். அவன் முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, “உண்மையாகவே இறைவன் உங்கள் மத்தியில் இருக்கின்றார்!” என்று பிரசித்தப்படுத்துவான்.</verse>
				<verse number="26">ஆகையால் பிரியமானவர்களே, நாங்கள் எதைச் சொல்வோம்? நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, ஒருவன் ஒரு பாடலைப் பாடுகின்றான், மற்றொருவன் அறிவுறுத்தும் ஓர் வார்த்தையைக் கொடுக்கின்றான், இன்னொருவன் தான் பெற்ற வெளிப்பாட்டைத் தெரியப்படுத்துகின்றான், வேறொருவன் வேற்றுமொழியில் பேசுகின்றான், இன்னொருவன் அதை மொழிபெயர்க்கின்றான். இவை எல்லாம் திருச்சபையின் வளர்ச்சிக்காகவே செய்யப்பட வேண்டும்.</verse>
				<verse number="27">எவராவது வேறொரு மொழியில் பேசுவதாயிருந்தால் இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ ஒருவர் பின் ஒருவராய்ப் பேசவும், ஒருவர் அதை மொழிபெயர்த்துச் சொல்லவும் வேண்டும்.</verse>
				<verse number="28">ஆனால், மொழிபெயர்ப்பாளன் இல்லாதிருந்தால் பேசுகின்றவன் மௌனமாய் இருந்து தனக்குள்ளே இறைவனிடம் பேசட்டும்.</verse>
				<verse number="29">இறைவாக்கு உரைப்போரும், இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ பேசலாம். மற்றவர்களோ, சொல்லப்பட்ட செய்தியைக் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.</verse>
				<verse number="30">இவ்வாறு பேசிக் கொண்டிருக்கின்றவனுக்கு அருகே உட்கார்ந்திருக்கின்ற ஒருவருக்கு ஒரு வெளிப்பாடு கொடுக்கப்பட்டால், ஏற்கெனவே பேசிக் கொண்டிருக்கின்றவன் தான் பேசுவதை நிறுத்த வேண்டும்.</verse>
				<verse number="31">இப்படி நீங்கள் எல்லோரும் அறிவுறுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட, ஒருவர் பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம்.</verse>
				<verse number="32">இறைவாக்கு உரைப்போரின் ஆவிகள் இறைவாக்கு உரைப்போருக்கு கட்டுப்பட்டிருக்கின்றன.</verse>
				<verse number="33">இறைவன் ஒழுங்கின்மையின் இறைவனாயிராமல் சமாதானத்தின் இறைவனாயிருக்கிறார். எல்லாத் திருச்சபைகளிலும் இருக்கும் ஒழுங்கைப் போலவே,</verse>
				<verse number="34">திருச்சபைகளில் பெண்கள் மௌனமாக இருக்க வேண்டும். பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை. சட்டத்தின்படி அவர்கள் கட்டுப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="35">அவர்கள் எதைப் பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால் வீட்டில் தங்கள் சொந்த கணவரிடம் கேட்டு அறிந்துகொள்ளட்டும். ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது முறையற்றதாயிருக்கும்.</verse>
				<verse number="36">இறைவனுடைய வார்த்தை உங்களுடன்தான் ஆரம்பமாயிற்றோ? அல்லது உங்களிடம் மட்டும்தான் அது வந்து சேர்ந்ததோ?</verse>
				<verse number="37">உங்களில் யாராவது ஒருவன் தன்னை இறைவாக்கினன் என்றோ அல்லது ஆவிக்குரிய வரம் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது கர்த்தருடைய கட்டளைகள் என்பதை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="38">இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.</verse>
				<verse number="39">ஆகவே பிரியமானவர்களே, இறைவாக்கு உரைப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருங்கள். ஆனால் வேற்றுமொழிகளைப் பேசுவதையோ தடுக்க வேண்டாம்.</verse>
				<verse number="40">எல்லாக் காரியங்களும் ஏற்றவிதத்திலும், ஒழுங்காகவும் செய்யப்பட வேண்டும்.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">இப்போதும் பிரியமானவர்களே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதிலேயே உறுதியாய் நிற்கிறீர்கள்.</verse>
				<verse number="2">நான் உங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையில் நீங்கள் உறுதியாய் நின்றால், இந்த நற்செய்தியினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். அப்படியில்லாவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்.</verse>
				<verse number="3">நான் பெற்றுக்கொண்டவைகளும் மிக முக்கியமானவை என்பதால் உங்களுக்கு ஒப்படைத்தவைகளும் எவையெனில் வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடியே கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரணித்தார் என்பதும்,</verse>
				<verse number="4">அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும், வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதும்,</verse>
				<verse number="5">கேபாவுக்கு காட்சியளித்தார் என்பதும், பின்பு பன்னிரண்டு பேருக்குக் காட்சியளித்தார் என்பதுமே ஆகும்.</verse>
				<verse number="6">அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கு காட்சியளித்தார். அவர்களில் சிலர் மரணித்தாலும், பலர் இன்னும் உயிருடனே இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="7">பின்பு அவர் யாக்கோபுக்கும் அதற்குப் பின்பு எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார்.</verse>
				<verse number="8">இறுதியாக, குறைமாதத்தில் பிறந்தவனைப் போலிருக்கின்ற எனக்கும் காட்சியளித்தார்.</verse>
				<verse number="9">ஏனெனில், அப்போஸ்தலர்களில் நான் மிகக் குறைந்தவன். இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்திய நான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படவும் தகுதியற்றவன்.</verse>
				<verse number="10">ஆனால் இறைவனுடைய கிருபையினாலேயே நான் இப்போது இந்நிலையில் இருக்கின்றேன். அவர் எனக்குக் கொடுத்த கிருபை வீணாய்ப் போகவில்லை. நான் மற்ற எல்லோரையும்விட அதிகம் பாடுபட்டு ஊழியம் செய்தேன். ஆனால், அதை செய்தது நான் அல்ல, என்னோடிருக்கும் இறைவனுடைய கிருபையே அதைச் செய்தது.</verse>
				<verse number="11">எனவே நானாயிருந்தாலென்ன, அவர்களாயிருந்தாலென்ன இந்த நற்செய்தியையே நாங்கள் எல்லோரும் பிரசங்கிக்கிறோம். இதையே நீங்கள் விசுவாசித்தீர்கள்.</verse>
				<verse number="12">இறந்தோரிலிருந்து கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்த மனிதர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?</verse>
				<verse number="13">இறந்தவர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே.</verse>
				<verse number="14">கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண், உங்கள் விசுவாசமும் வீணானது.</verse>
				<verse number="15">அதுவுமல்லாமல், இறந்தோர் உயிரோடு எழுப்பப்படுவது இல்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பவில்லை. எனவே இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் கூறுகின்ற சாட்சி இறைவனைப் பற்றிய பொய்ச் சாட்சியாய் காணப்படுமே.</verse>
				<verse number="16">இறந்தோர் உயிரோடு எழுப்பப்படுவது இல்லையென்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை.</verse>
				<verse number="17">கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="18">அப்படியானால் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்களும் அழிந்து போனவர்களாய் இருப்பார்களே!</verse>
				<verse number="19">இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாய் இருப்போம்.</verse>
				<verse number="20">மெய்யாகவே கிறிஸ்து மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டு, நித்திரை அடைந்தவர்களில் முதற் பலனானார்.</verse>
				<verse number="21">ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வந்தது.</verse>
				<verse number="22">ஆதாமுக்குள் எல்லோரும் இறப்பதைப் போலவே கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.</verse>
				<verse number="23">ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள். கிறிஸ்துவே முதற்பலன். அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள்.</verse>
				<verse number="24">கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் அழித்து பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார். அப்போது முடிவு வரும்.</verse>
				<verse number="25">எனவே, இறைவன் எல்லாப் பகைவர்களையும் வெற்றிகொண்டு கிறிஸ்துவினுடைய கால்களின் கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்ய வேண்டும்.</verse>
				<verse number="26">அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன் மரணமே.</verse>
				<verse number="27">ஏனெனில் இறைவன், “எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்” என்று எழுதியிருக்கிறது. “எல்லாம்” அவருக்குக் கீழாக கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்று சொல்லும்போது அது இறைவனை உள்ளடக்கவில்லை என்பது தெளிவாகின்றது. ஏனெனில் இறைவனே எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தினார்.</verse>
				<verse number="28">இறைவன் இவற்றையெல்லாம் செய்த பின்பு அவருடைய மகனாகிய கிறிஸ்துவும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்திய அவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார்.</verse>
				<verse number="29">உயிர்த்தெழுதல் இல்லையெனில் மரணித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றவர்கள் என்ன செய்வார்கள்? மரணித்தவர்கள் ஒருபோதுமே உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் மரணித்தவர்களின் சார்பாக மற்றவர்கள் ஏன் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றார்கள்?</verse>
				<verse number="30">நாங்களும் ஏன் ஒவ்வொரு மணிநேரமும் உயிரைப் பணயம் வைக்கிறோம்?</verse>
				<verse number="31">நான் தினமும் மரண ஆபத்தைச் சந்திக்கிறேன். இதை நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில், உங்கள் மீது பெருமை பாராட்டுகிற நான் உண்மையாகச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="32">எபேசுவிலே நான் கொடிய மிருகங்களோடு போராடினேனே, நான் உலக நோக்கத்திற்காக மட்டுமே போராடியிருந்தால் எனக்குக் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன? இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது இல்லையென்றால் “நாம் நாளை இறந்து போகப் போகின்றோமே, எனவே நாம் உண்டு குடித்து வாழ்வோம்” என்று இருந்திருக்கலாம்.</verse>
				<verse number="33">ஏமாந்து போக வேண்டாம்: “கெட்ட சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.”</verse>
				<verse number="34">ஆகவே, புத்தியாய் நடவுங்கள். பாவம் செய்வதை நிறுத்துங்கள். உங்களில் சிலர் இறைவனைப் பற்றிய அறிவு இல்லாதவர்களாய் இருக்கின்றார்கள். உங்களுக்கு வெட்கம் ஏற்படவே இதைச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="35">ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம்.</verse>
				<verse number="36">மதியற்ற மனிதா, நீ விதைக்கிறது இறக்காவிட்டால் அது உயிர் பெற்று அதிலிருந்து முளை வராதே.</verse>
				<verse number="37">நீங்கள் விதைக்கும்போது வளரவிருக்கும் பயிரின் தண்டை விதைக்காமல் வெறும் விதையை, அதாவது கோதுமை மணியை அல்லது வேறு தானியத்தை அல்லவா விதைக்கிறீர்கள்.</verse>
				<verse number="38">ஆனால் இறைவன் தாம் தீர்மானித்தபடி, அதற்கு ஒரு உடலுருவம் கொடுக்கின்றார். ஒவ்வொரு விதைக்கும், அதற்குரிய பயிரை உடலாகக் கொடுக்கின்றார்.</verse>
				<verse number="39">உயிரினங்களது உடலின் தன்மை அனைத்தும் ஒரே விதமானவை அல்ல, மனித உடலின் தன்மை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும் பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் உள்ளது.</verse>
				<verse number="40">வானுலக உடல்கள் உண்டு, பூவுலக உடல்களும் உண்டு. வானுலக உடல்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உடல்களின் சிறப்பு இன்னொரு விதமானது.</verse>
				<verse number="41">சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது, நட்சத்திரங்களிலும் அதன் சிறப்பு ஒன்றுக்கொன்று வேறுபடுகிறது.</verse>
				<verse number="42">எனவே இறந்தவர்களின் உயிர்த்தெழுதலிலும் இவ்விதமாகவே இருக்கும். மரண அடக்கத்தில் விதைக்கப்படும் உடலானது அழிவுக்குரியது, எழுப்பப்படும் போதோ அது அழியாததாய் இருக்கும்.</verse>
				<verse number="43">அது மதிப்பற்றதாய் விதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் விதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது.</verse>
				<verse number="44">அது இயல்பான மனித உடலாய் விதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது. இயல்பான உடல் இருக்கின்றதே, அதுபோலவே ஆவிக்குரிய உடலும் இருக்கின்றது.</verse>
				<verse number="45">எனவேதான் வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ள ஒரு மனிதன் ஆனான்.” கடைசி ஆதாமோ, உயிர் கொடுக்கும் ஆவி ஆனார்.</verse>
				<verse number="46">ஆனாலும் ஆவிக்குரியது முதலில் வரவில்லை, இயல்புக்குரியதே முதலில் வந்தது. இயல்புக்குரியதற்குப் பின்னரே ஆவிக்குரியது வந்தது.</verse>
				<verse number="47">முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ பரலோகத்திலிருந்து வந்தவர்.</verse>
				<verse number="48">பூமியின் மனிதனைப் போலவே பூமியைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே பரலோகத்துக்குரியவர்களும் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="49">நாம் பூமியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் தன்மையை உடையவர்களாய் இருப்பது போலவே பரலோகத்திற்குரிய மனிதனின் தன்மையையும் பெறுவோம்.</verse>
				<verse number="50">பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவிக்கின்றதாவது: சரீரமும், இரத்தமும் இறைவனுடைய அரசை உரிமையாகப் பெற்றுக்கொள்வதில்லை. அழிவுக்குரியது அழியாமையை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது.</verse>
				<verse number="51">கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு மறைபொருளை வெளிப்படுத்துகிறேன். நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. மாறாக, நாம் எல்லோரும் உருமாற்றமடைவோம்.</verse>
				<verse number="52">கடைசி எக்காளம் தொனிக்கும்போது முன்பு மரணித்தவர்கள், கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் அழிவற்றவர்களாய் எழுப்பப்படுவார்கள். அப்போது நாமும் உருமாற்றமடைவோம்.</verse>
				<verse number="53">ஏனெனில் அழிவுக்குரிய உடல் அழியாமையை அணிந்துகொள்ள வேண்டும். மரணிக்கும் தன்மையுடையது மரணிக்காத நிலையை அணிந்துகொள்ள வேண்டும்.</verse>
				<verse number="54">அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளும்போதும், மரணத்துக்குரியது மரணிக்காத நிலையை அணிந்துகொள்ளும்போதும், “மரணம் வெற்றிக்குள் அடக்கப்பட்டது” என்று எழுதப்பட்ட வசனம் நிறைவேறும்.</verse>
				<verse number="55">“மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் விஷக் கொடுக்கு எங்கே?”</verse>
				<verse number="56">மரணத்தின் விஷக் கொடுக்கு பாவம். பாவத்தின் வல்லமை நீதிச்சட்டம்.</verse>
				<verse number="57">ஆனால், நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு வெற்றியைக் கொடுக்கின்ற இறைவனுக்கு நன்றி.</verse>
				<verse number="58">ஆகவே பிரியமானவர்களே! ஆண்டவரில் உங்கள் உழைப்பு வீணாகப் போகாதபடி, அசையாமல் உறுதியாய் நின்று ஆண்டவருடைய பணிக்கு உங்களை முற்றிலும் ஒப்புக்கொடுங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து கலாத்திய திருச்சபைகளுக்கு கொடுத்த அறிவுரையின்படியே நீங்களும் செய்யுங்கள்.</verse>
				<verse number="2">நான் வரும்போது பணம் சேகரிக்காதபடி, வாரத்தின் முதல் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய வருமானத்துக்கு ஏற்றபடி ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை ஒதுக்கி சேமித்து வையுங்கள்.</verse>
				<verse number="3">நான் அங்கு வரும்போது நீங்கள் அங்கீகரிக்கும் மனிதர்களிடம் உங்களது நன்கொடைகளைக் கொடுத்து, அறிமுகக் கடிதங்களோடு அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன்.</verse>
				<verse number="4">நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம்.</verse>
				<verse number="5">நான் மக்கெதோனியா வழியாகப் போக இருக்கின்றேன். மக்கெதோனியா நாட்டைக் கடந்து சென்ற பின் உங்களிடம் வந்து,</verse>
				<verse number="6">சிறிது காலம் உங்களுடன் தங்குவேன். அப்போது நான் தொடர்ந்து போக வேண்டிய எனது பயணத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்யலாம். ஏனெனில் ஒருவேளை குளிர் காலத்தை நான் உங்களுடனே கழிக்க நேரிடலாம்.</verse>
				<verse number="7">இப்பிரயாணத்தில் வெறுமனே உங்களைப் பார்த்துவிட்டு மட்டும் போவதில் எனக்கு விருப்பமில்லை. கர்த்தர் அனுமதிப்பாரென்றால் சிறிது காலம் உங்களுடன் கழிக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.</verse>
				<verse number="8">ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன்.</verse>
				<verse number="9">ஏனெனில், ஒரு பயனுள்ள பணிக்கான பெரிய வாசல் எனக்காகத் திறந்திருக்கின்ற அதேநேரம் என்னை எதிர்க்கின்ற அநேகரும் அங்கிருக்கிறார்கள்.</verse>
				<verse number="10">தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால், அவன் உங்களுடன் இருக்கையில் பயமின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் செய்கின்றது போலவே அவனும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கின்றானே.</verse>
				<verse number="11">ஆகவே ஒருவரும் அவனை இழிவாக நடத்தக் கூடாது. அவனை நான் மற்றச் சகோதரருடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றபடியால் என்னிடம் திரும்பி வரும்படி அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள்.</verse>
				<verse number="12">நம்முடைய சகோதரனான அப்பொல்லோவைக் குறித்து நான் சொல்கின்றதாவது: மற்றச் சகோதரரோடு அவனும் உங்களிடத்திற்கு வர அவனை நான் அதிகமாய் ஊக்குவித்தேன். ஆனால் இப்பொழுதோ உங்களிடத்தில் வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், தக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவன் உங்களிடத்தில் வருவான்.</verse>
				<verse number="13">கவனமாயிருங்கள், உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள், பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள்.</verse>
				<verse number="14">அனைத்தும் அன்போடு செய்யப்படட்டும்.</verse>
				<verse number="15">ஸ்தேவானுடைய குடும்பத்தினரே அகாயா நாட்டில் முதல் முதலாய் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். பரிசுத்தவான்களுக்குப் பணி செய்வதற்கென அவர்கள் தங்களையே ஒப்புவித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரியமானவர்களே, இப்போதும் நான் உங்களை வேண்டிக்கொள்கின்றதாவது:</verse>
				<verse number="16">இப்படிப்பட்டவர்களுக்கும், கர்த்தருடைய ஊழியத்தில் அவர்களுடன் இணைந்து பிரயாசப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் கீழ்ப்படிந்து நடவுங்கள்.</verse>
				<verse number="17">ஸ்தேவானும் பொர்த்துனாத்தும் அகாயுவும் இங்கு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், நீங்கள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.</verse>
				<verse number="18">அவர்கள் உங்களுடைய ஆவியை உற்சாகப்படுத்தியது போலவே, என்னுடைய ஆவியையும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை உயர்வாய் மதிக்க வேண்டும்.</verse>
				<verse number="19">ஆசியா பகுதியிலுள்ள திருச்சபைகள், உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவர்களுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற திருச்சபையோரும் ஆண்டவருக்குள்ளான தங்கள் மனப்பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.</verse>
				<verse number="20">இங்குள்ள எல்லாச் சகோதரரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்து தெரிவியுங்கள்.</verse>
				<verse number="21">பவுலாகிய நான், இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலேயே எழுதுகிறேன்.</verse>
				<verse number="22">யாராவது ஆண்டவரில் அன்பாயிருக்காவிட்டால் அவன் சபிக்கப்பட்டவன். ஆண்டவரே வாரும்!</verse>
				<verse number="23">நம்முடைய ஆண்டவர் இயேசுவின் கிருபை உங்களுடன் இருப்பதாக.</verse>
				<verse number="24">கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="47">
			<chapter number="1">
				<verse number="1">இறைவனுடைய விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான பவுலாகிய நானும், நம்முடைய சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்திலுள்ள இறைவனுடைய திருச்சபையினர், மற்றும் அகாயா நாடு முழுவதிலும் உள்ள பரிசுத்தவான்கள் அனைவருக்கும் எழுதுகின்றதாவது:</verse>
				<verse number="2">நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="3">நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருப்பவருக்கு துதி உண்டாவதாக. அவரே இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதல்களின் இறைவனுமாக இருக்கின்றார்.</verse>
				<verse number="4">நாம் இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆறுதலினாலே, எத்தகைய துன்பங்களை அனுபவிப்பவர்களையும் நாம் ஆறுதல்படுத்தும்படியாக, அவரே நம்முடைய எல்லா துன்பங்களிலும் நம்மை ஆறுதல்படுத்துகின்றவர்.</verse>
				<verse number="5">ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வேதனைகளில் நாம் அதிகமதிகமாய் பங்குகொள்வது போல, கிறிஸ்துவின் மூலமாக நமக்குக் கிடைக்கின்ற ஆறுதலும் அதிகமதிகமாய் பெருகி வழிகின்றது.</verse>
				<verse number="6">நாங்கள் துன்பப்பட்டால், அது உங்கள் ஆறுதலுக்கும் மீட்புக்குமே. நாங்கள் ஆறுதலடைந்தால், அது உங்கள் ஆறுதலுக்காகவே. அந்த ஆறுதலானது, எங்களுக்கு ஏற்பட்ட துன்பம் உங்களுக்கும் ஏற்படும்போது அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்ள உங்களுக்கு உதவி செய்யும்.</verse>
				<verse number="7">துன்பம் அனுபவிப்பதில் நீங்கள் எங்களுடன் பங்குள்ளவர்களாக இருப்பது போலவே ஆறுதல் அடைவதிலும் பங்குள்ளவர்களாக இருப்பீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருப்பதனால், உங்களைக் குறித்து உறுதியான எதிர்பார்ப்போடு இருக்கின்றோம்.</verse>
				<verse number="8">பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த வேதனைகளைக் குறித்து நீங்கள் அறியாமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப் போகத்தக்கதாக எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தோம்.</verse>
				<verse number="9">உண்மையிலேயே எங்களுக்கு மரணத் தீர்ப்பு வந்துவிட்டதாகவே நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் மீது அல்லாமல் இறந்தோரை எழுப்புகின்ற இறைவன் மீது நம்பிக்கைகொள்ளும்படியே இவ்வாறு நடந்தது.</verse>
				<verse number="10">அத்தகைய மரண ஆபத்திலிருந்தும் அவர் எங்களை விடுவித்தார். மீண்டும் அவரே எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கின்றது.</verse>
				<verse number="11">ஆதலால் நீங்களும் உங்களுடைய மன்றாடுதலினால் எங்களுக்கு உதவ வேண்டும். அப்போது பலருடைய மன்றாடுதலின் பலனாக இறைவன் எங்களுக்குக் கொடுத்திருக்கும் இந்த கிருபையுள்ள தயவுக்காக, அநேகர் எங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.</verse>
				<verse number="12">நாங்கள் பெருமிதம் அடைவதற்குக் காரணம் உண்டு: உலக வாழ்க்கையிலும், குறிப்பாக உங்களோடும் நாங்கள் உலக ஞானத்தோடு நடந்துகொள்ளாமல், இறைவனுடைய கிருபையினாலே பரிசுத்தமாகவும் உண்மையாகவும் நடந்தோம் என்று எங்கள் மனசாட்சி உறுதி செய்வதே அந்தக் காரணமாகும்.</verse>
				<verse number="13">அப்படிப்பட்ட நடத்தையின் காரணமாகவே, உங்களால் வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத எதையும் எங்கள் கடிதங்களில் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை.</verse>
				<verse number="14">நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் ஓரளவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமிதம்கொள்வது போலவே நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமிதம்கொள்ளும் அளவுக்கு, ஆண்டவர் இயேசுவின் நாளில் நீங்கள் எங்களை முழுமையாய் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு ஆகும்.</verse>
				<verse number="15">அது நடக்கும் என்ற நிச்சயத்துடன் நான் இருந்தபடியால், நீங்கள் இரு முறை கிருபையை அனுபவிக்கும் பொருட்டு என் பயணத்தில் முதலாவதாக உங்களிடம் வருவதற்கே திட்டமிட்டேன்.</verse>
				<verse number="16">அதன்படி, மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும் வழியில் உங்களிடம் வந்து உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன்.</verse>
				<verse number="17">எனவே, நான் தடுமாறுகின்ற அரை மனதுடன் இப்படித் திட்டமிட்டேன் என நினைக்கிறீர்களா? அல்லது, நான் ஒரே மூச்சில், “ஆம்” என்றும், அதே மூச்சில், “இல்லை” என்றும் மாற்றிச் சொல்லும் விதத்தில் மனித சிந்தனையில் திட்டங்களை வகுக்கின்றவனோ?</verse>
				<verse number="18">இறைவன் நம்பகமானவராக இருப்பது போலவே, நாங்கள் உங்களுக்கு அறிவித்த செய்தியும், “ஆம்” என்றும் “இல்லை” என்றும் ஒரே மூச்சில் சொல்வதாக இருக்கவில்லை.</verse>
				<verse number="19">இறைவனின் மகனான இயேசு கிறிஸ்துவை, நானும் சீலாவும் தீமோத்தேயுவும் உங்கள் மத்தியில் பிரசங்கித்தோமே, அவர் “ஆம்” என்றும் “இல்லை” என்றும் இராமல், எப்போதும் “ஆம்” என்றே இருக்கின்றார்.</verse>
				<verse number="20">இதனாலேயே இறைவனின் வாக்குறுதிகள் எல்லாம், கிறிஸ்துவில் “ஆம்” என்று இருக்கின்றன. அதனால் நாங்கள் இறைவனுக்கு மகிமையுண்டாக கிறிஸ்துவின் மூலமாக, “இது உண்மையிலும் உண்மை ” என்று சொல்கின்றோம்.</verse>
				<verse number="21">இப்போதும் இறைவனே எங்களையும், உங்களையும் கிறிஸ்துவுக்குள் நிலைப்படுத்தி, நம்மை அபிஷேகம் பண்ணி,</verse>
				<verse number="22">நம்மீது தமது முத்திரை அடையாளத்தைப் பதித்து, நமது இருதயங்களில் ஆவியானவரை உத்தரவாதமாய் கொடுத்திருக்கிறார்.</verse>
				<verse number="23">ஆனாலும் நான் முதலில் திட்டமிட்டபடி கொரிந்துவுக்கு வரவில்லை. ஏனெனில் என்னுடைய கண்டிப்பு உங்களுக்கு துன்பத்தைத் தந்துவிடக் கூடாது என்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பி வராமல் இருந்தேன். இதற்கு இறைவனை என் உயிர்மேல் சாட்சியாக அழைக்கின்றேன்.</verse>
				<verse number="24">இப்படியாக, நாங்கள் உங்களது விசுவாசத்தின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இல்லாமல், நீங்கள் உங்களது விசுவாசத்தில் உறுதியாக இருப்பதால், உங்களுடன் இணைந்து, உங்கள் மனமகிழ்ச்சிக்காகச் செயற்படுகின்றவர்களாகவே இருக்கின்றோம்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">ஆகவே, நான் உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் விதத்தில் இன்னொரு தடவை வருகை தரக் கூடாதென்று மனதில் தீர்மானித்தேன்.</verse>
				<verse number="2">என்னுடைய வருகையால் நான் உங்களைத் துக்கப்படுத்துவேனாகில், என்னை மகிழ்விக்கக் கூடியவர் யார்? என்னால் துக்கப்படுத்தப்பட்ட நீங்கள்தானே என்னை மகிழ்விக்கக் கூடியவர்கள்.</verse>
				<verse number="3">நான் உங்களிடம் வரும்போது என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் எனக்குத் துக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை முன்னர் எழுதினேன். ஏனெனில் என்னுடைய மகிழ்ச்சியே உங்கள் அனைவரதும் மகிழ்ச்சியாயிருக்கும் என்று, உங்கள் எல்லோரையும் குறித்த நிச்சயம் எனக்கு இருக்கின்றது.</verse>
				<verse number="4">நான் உங்களைத் துக்கப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் மீது வைத்திருக்கும் எனது அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக மிகுந்த துக்கத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன்.</verse>
				<verse number="5">யாராவது ஒருவன் துக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவு உங்கள் எல்லோரையும் துக்கப்படுத்தியிருக்கிறான். ஆனாலும் இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை.</verse>
				<verse number="6">அப்படிப்பட்டவனுக்கு உங்களில் அநேகரிடமிருந்து கிடைத்த தண்டனையே போதுமானது.</verse>
				<verse number="7">அவன் அதிக துக்கத்தில் ஆழ்ந்து விடாதபடி நீங்கள் அவனை மன்னித்து ஆறுதல்படுத்துங்கள்.</verse>
				<verse number="8">ஆனபடியால், நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை மீண்டும் உறுதிப்படுத்தும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.</verse>
				<verse number="9">நீங்கள் எப்படிப்பட்டவர்கள், நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிதல் உள்ளவர்களா என்று பரிசோதித்துப் பார்க்கவே என் கடிதத்தில் அவ்வாறு எழுதியிருந்தேன்.</verse>
				<verse number="10">நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் எதையாவது மன்னித்திருந்தால், அதை கிறிஸ்துவின் பிரசன்னத்தில் உங்களுக்காகவே மன்னித்திருக்கிறேன்.</verse>
				<verse number="11">சாத்தான் நம்மைத் தனது தந்திரத்தால் வஞ்சிக்காதபடி அவ்வாறு செய்தேன். ஏனெனில் சாத்தானின் வஞ்சகத் திட்டங்களை நாம் அறியாதவர்கள் அல்லர்.</verse>
				<verse number="12">நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத் துரோவா பட்டணத்துக்குப் போனபோது கர்த்தரால் எனக்கு ஒரு கதவு திறக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="13">ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால் என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனேன்.</verse>
				<verse number="14">கிறிஸ்துவின் வெற்றிப் பவனியிலே எம்மை கண்காட்சி ஊர்வலமாய் கொண்டு சென்று, எல்லா இடங்களிலும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் நறுமணத்தை எமக்கு ஊடாக பரவச் செய்கின்ற இறைவனுக்கே நன்றி.</verse>
				<verse number="15">ஏனெனில், மீட்கப்படுகின்றவர்கள் மத்தியிலும், அழிந்து போகின்றவர்கள் மத்தியிலும் நாம் இறைவனுக்கு கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்.</verse>
				<verse number="16">ஒரு சாராருக்கு மரணத்தை ஏற்படுத்தும் துர்நாற்றமாகவும் மறு சாராருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகவும் இருக்கின்றோம். இப்படிப்பட்ட பணியை செய்யும் ஆற்றலுள்ளவன் யார்?</verse>
				<verse number="17">ஆதலால், இலாப நோக்கத்துக்காக இறைவனுடைய வார்த்தையை வியாபாரப் பொருளாக்கி, அதை மாற்றிப் பேசுகின்ற அநேகரைப் போல் இராமல், இறைவனால் அனுப்பப்பட்டவர்களும், நேர்மையானவர்களும் இறைவனின் பார்வையில் கிறிஸ்துவுக்குள் பேசுகின்றவர்களுமாக இருக்கின்றோம்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">மறுபடியும் எங்களை நாங்களே பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சிலருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுவது போல, உங்களுக்கு கையளிப்பதற்கோ அல்லது உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கோ எங்களைக் குறித்த நற்சான்றுக் கடிதங்கள் அவசியமா?</verse>
				<verse number="2">நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டு, எல்லோராலும் அறிந்து வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="3">நீங்கள் எங்கள் ஊழியத்தின் விளைவாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு கடிதமாகக் காணப்படுகிறீர்கள். அது பேனா மையினால் அன்றி வாழும் இறைவனின் ஆவியினால் எழுதப்பட்டிருக்கிறது, கற்பலகைகளில் அன்றி மனிதனின் இருதய பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="4">இதுவே உண்மையான நிலைமை என்பதை குறித்து கிறிஸ்துவின் மூலமாக எமக்கு இறைவனில் நம்பிக்கை உண்டு.</verse>
				<verse number="5">நாங்கள், எங்களால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவர்கள் அல்லர். எங்கள் செயற்திறன் இறைவனிடமிருந்தே வருகின்றது.</verse>
				<verse number="6">அவர் எங்களை புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு அவசியமான திறன் உடையவர்கள் ஆக்கினார். அந்த புது உடன்படிக்கை, எழுத்துமூலம் எழுதி கொடுக்கப்பட்டதாக இராமல் ஆவிக்குரியதாயிருக்கிறது. முன்பு எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நீதிச்சட்டம் மரணத்தை அளிக்கிறது, ஆவியோ உயிரளிக்கிறது.</verse>
				<verse number="7">கற்களின் மேல் பொறிக்கப்பட்ட எழுத்துக்களினாலானதும் மரணத்தைக் கொண்டுவந்ததுமான அந்த பழைய ஊழியமானது மகிமையுள்ளதாய், இஸ்ரயேலர்களால் மோசேயின் முகத்தை நேராகப் பார்க்கக்கூட முடியாத, பிரகாசத்துடன் வந்தது. இறுதியில் மறைந்து போன அந்த மகிமையே அப்படிப்பட்டது எனில்,</verse>
				<verse number="8">ஆவியானவரின் ஊழியம் அதைவிட அதிக மகிமையுள்ளதாய் இருக்கும் அல்லவா?</verse>
				<verse number="9">மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் ஊழியம்கூட மகிமையுள்ளதாக இருக்குமானால், நீதியைக் கொண்டுவரும் ஊழியம் அதைவிட மகிமையுள்ளதாக இருக்கும்!</verse>
				<verse number="10">உண்மையில், ஒரு காலத்தில் மகிமையுள்ளதாக இருந்ததானது, அதைவிட மகிமையானது வந்ததால் மகிமை அற்றதாகிப் போனது.</verse>
				<verse number="11">இப்படியாக, மறைந்து போவதே மகிமையுடன் வந்தது என்றால், நிலையானது அதைவிட அதிக மகிமையுள்ளது அல்லவா!</verse>
				<verse number="12">ஆகவே, இத்தகைய எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் துணிவுடன் காணப்படுகிறோம்.</verse>
				<verse number="13">மறைந்து போகும் மகிமையை இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின் மேல் முகத்திரை போட்டுக் கொண்டதுபோல நாங்கள் போடுவதில்லை.</verse>
				<verse number="14">அவர்களது மனம் கடினப்பட்டிருந்தது. இன்றுவரை அந்த முகத்திரையானது அவர்கள் பழைய உடன்படிக்கையை வாசிக்கும்போது நீக்கப்படாமலேயே இருக்கின்றது. ஏனெனில் அது கிறிஸ்துவினால் மட்டுமே நீக்கப்படுகிறது.</verse>
				<verse number="15">மோசேயின் நீதிச்சட்டங்கள் வாசிக்கப்படும் போதெல்லாம் அவர்களுடைய இருதயங்கள் இன்றுவரை முகத்திரை இடப்பட்டனவாகவே இருக்கின்றன.</verse>
				<verse number="16">ஆனால் யாராயிருப்பினும் கர்த்தரிடத்தில் திரும்பும்போது அந்த முகத்திரை நீக்கப்படுகிறது.</verse>
				<verse number="17">இப்போதும், ஆவியானவரே கர்த்தர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கோ அங்கே விடுதலை உண்டு.</verse>
				<verse number="18">நாம் எல்லோரும் முகத்திரை இடப்படாத முகத்துடன் கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிப்பதோடு, மகிமையின் மேல் மகிமையடைந்து அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது ஆவியாயிருக்கின்ற கர்த்தரிடமிருந்தே வருகின்றது.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">ஆகவே, இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கின்றபடியால் நாங்கள் மனம் தளர்ந்து போவதில்லை.</verse>
				<verse number="2">நாங்கள் வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை ஏற்றுக்கொள்ளாமலும், ஏமாற்றுகின்றவர்களாய் இராமலும் இறைவனுடைய வார்த்தையை திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக் கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைக் குறித்து நாங்கள் நற்சான்று கொடுக்கின்றவர்களாக இருக்கின்றோம்.</verse>
				<verse number="3">எங்களுடைய நற்செய்தி முகத்திரையால் மூடியதைப் போல் மறைவானதாயிருந்தால், அது அழிந்து போகின்றவர்களுக்கே மறைவானதாயிருக்கிறது.</verse>
				<verse number="4">அவிசுவாசிகளாகிய அவர்களின் மனதை இவ்வுலகின் இறைவனாய் இருப்பவன் குருடாக்கியிருக்கிறான். அதனால் இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை அவர்களால் காண முடிவதில்லை.</verse>
				<verse number="5">நாங்கள் எங்களை பிரசங்கியாமல், இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும், எங்களையோ இயேசுவின் பொருட்டு உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம்.</verse>
				<verse number="6">“இருளின்மீது வெளிச்சம் பிரகாசிக்கட்டும்” எனக் கூறிய இறைவனே கிறிஸ்துவின் முகத்திலே உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கின்றார்.</verse>
				<verse number="7">ஆனாலும், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களுடையது அல்ல, இறைவனுடையது என்பதை அறியும்படி மட்பாண்டங்கள் போல் உடைந்து போகக்கூடிய நாங்கள் இந்தப் புதையலை பெற்றிருக்கிறோம்.</verse>
				<verse number="8">நாங்கள் அனைத்து பக்கத்திலும் நெருக்கப்பட்டும், நசுங்குண்டு போவதில்லை. குழப்பமடைந்தும், மனந்தளர்ந்து போவதில்லை.</verse>
				<verse number="9">துன்புறுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; வீழ்த்தப்பட்டும், அழிந்து போகவில்லை.</verse>
				<verse number="10">இயேசுவின் வாழ்க்கை எங்கள் உடலில் வெளிப்படும்படி, நாங்கள் எப்போதும் இயேசுவின் மரணத்தை எங்கள் உடலில் சுமக்கிறோம்.</verse>
				<verse number="11">இதனால், மரணத்துக்குரிய எங்கள் உடலில் அவருடைய வாழ்வு வெளிப்படும்படி, உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவின் பொருட்டு எப்போதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகின்றோம்.</verse>
				<verse number="12">இப்படியாகவே, மரணம் எங்களிலும் வாழ்வு உங்களிலும் செயலாற்றுகிறது.</verse>
				<verse number="13">“நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன்” என்று எழுதியிருக்கின்றபடி, அதே விசுவாசத்தின் ஆவியினாலே நாங்களும் விசுவாசிக்கின்றோம். ஆதலால் பேசுகின்றோம்.</verse>
				<verse number="14">ஏனெனில் ஆண்டவர் இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன் எங்களையும் உயிரோடு எழுப்பி, தமது பிரசன்னத்தில் உங்களுடன் சேர்த்து நிறுத்துவார் என்பதை அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="15">இவையெல்லாம் உங்களுக்காகவே நடைபெறுகின்றன. அதன்மூலமாக, கிருபையை பெற்றுக்கொள்கின்றவர்கள் பெருகும்போது நன்றி செலுத்துதலும் பெருகும். அதனால் இறைவனுக்கே மகிமையுண்டாகும்.</verse>
				<verse number="16">வெளிப்புறமாக நாம் உருவழிந்து போனாலும், எமது உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகின்றபடியால் நாங்கள் மனம் தளர்ந்து போவதில்லை.</verse>
				<verse number="17">ஏனெனில் நமக்குத் தற்காலிகமாய் ஏற்படுகின்ற பாரமற்ற சிறிய துன்பங்களானது, அவற்றோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத பாரம் நிறைந்த நித்திய மகிமையை விளைவிக்கின்றன.</verse>
				<verse number="18">எனவே நாங்கள் காணப்படுபவைகளை அல்ல, காணப்படாதவைகளையே நோக்கியிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">நாம் வாழ்கின்ற தற்காலிக வீடாகிய இந்த பூமிக்குரிய கூடாரம் அழிக்கப்பட்டாலும், நமக்கு இறைவன் அளிக்கின்ற கட்டடமாகிய நித்திய வீடொன்று உண்டு. அது மனித கைகளால் கட்டப்படாததும், பரலோகத்தில் உள்ளதுமாக இருக்கின்றது என்பதை அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="2">அதேநேரம், பரலோக வீட்டை அணிந்துகொள்ளும் ஏக்கத்துடன் இந்த கூடாரத்திலிருந்து தவிக்கிறோம்.</verse>
				<verse number="3">அவ்விதம் அணிந்து கொண்டோமானால், ஆடையற்றவர்களாய் காணப்பட மாட்டோம்.</verse>
				<verse number="4">இந்தக் கூடாரத்தில் இருக்கும் வரையில் ஏங்கித் தவிக்கிறோம். ஏனென்றால், இந்த ஆடையை களைந்துவிட வேண்டுமென்பதற்காக அல்ல, பரலோகக் குடியிருப்புக்குரிய ஆடையை அணிந்துகொள்ளவே விரும்புகிறோம். அப்போது மரணத்துக்குரியது வாழ்வினால் உள்வாங்கப்படும்.</verse>
				<verse number="5">இந்த முக்கிய நோக்கத்திற்காகவே இறைவன் எங்களை உண்டாக்கி, ஆவியானவரை உத்தரவாதமாய் எங்களுக்குத் தந்திருக்கிறார்.</verse>
				<verse number="6">ஆகையால் நாம் எப்போதும் மனத்தைரியத்தோடு இருப்பதுடன், உடலாகிய இந்த வீட்டில் குடியிருக்கும் வரை, கர்த்தரிடமிருந்து தொலைவில் இருக்கின்றோம் என்பதையும் அறிந்திருக்கின்றோம்.</verse>
				<verse number="7">ஏனெனில், நாம் கண்டு நடவாமல் விசுவாசித்து நடக்கின்றோம்.</verse>
				<verse number="8">நாங்கள் மனத்தைரியத்துடனேயே இருக்கின்றோம். இந்த உடலைவிட்டு அகன்று, கர்த்தரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.</verse>
				<verse number="9">எனவே நாங்கள் இந்த உடலில் குடியிருந்தாலும் அல்லது அகன்று போனாலும், அவருக்கு பிரியமாய் இருப்பதே எங்கள் நோக்கமாகும்.</verse>
				<verse number="10">ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்த நன்மையோ தீமையோ, அதற்கு ஏற்ற பலனைப் பெற்றுக்கொள்ளும்படி, நாம் எல்லோரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் அரியணைக்கு முன்பாக நிற்க வேண்டும்.</verse>
				<verse number="11">ஆகவே கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்னவென்பதை நாங்கள் அறிந்திருப்பதால், மனிதர்கள் மனந்திரும்பும்படியான பெருமுயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். இறைவன் எங்களை நன்கு அறிவார். அது உங்களுடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.</verse>
				<verse number="12">நாங்கள் மறுபடியும் உங்களுக்கு முன்பாக எங்களை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் நீங்கள் எங்களைக் குறித்து பெருமிதம்கொள்ள சந்தர்ப்பத்தையே உருவாக்குகிறோம். அப்போது இருதயத்தைப் பாராமல் வெளித் தோற்றத்தைக் குறித்துப் பெருமைப்படுபவர்களுக்கு உங்களால் தகுந்த பதில் கொடுக்க முடியும்.</verse>
				<verse number="13">நாங்கள் புத்தி சுவாதீனமற்றவர்கள் போன்று இருந்தாலும், இறைவனுக்காகவே அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனமுடையவர்களாக இருக்கின்றோம் என்றாலும், உங்களுக்காகவே அப்படியிருக்கிறோம்.</verse>
				<verse number="14">நம் எல்லோருக்காகவும் ஒருவர் மரணித்தபடியால் நாம் எல்லோருமே மரணித்திருக்கின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கின்றோம். அதனால் கிறிஸ்துவின் அன்பு எங்களை கட்டுப்படுத்தி ஆட்கொள்கின்றது.</verse>
				<verse number="15">அத்துடன், அவர் எல்லோருக்காகவும் மரணத்தைத் தழுவியதால், வாழ்கின்றவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக மரணித்து மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளோம்.</verse>
				<verse number="16">எனவே, இனிமேலும் ஒருவரையும் நாம் மனித கண்ணோட்டத்தில் மதிப்பிடுவதில்லை. முன்பு கிறிஸ்துவையும் மனித கண்ணோட்டத்தில் மதிப்பிட்டிருந்தாலும், இனி அவரை அவ்வாறு மதிப்பிடுவதில்லை.</verse>
				<verse number="17">இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புதிய படைப்பாய் இருக்கின்றான். இதோ பழையவை கடந்துபோக, புதியது தோன்றிற்று.</verse>
				<verse number="18">இவையெல்லாம் இறைவனிடமிருந்தே வருகின்றன. அவரே கிறிஸ்துவின் மூலமாய் எங்களைத் தம்முடனே ஒப்புரவாக்கி, இந்த ஒப்புரவாக்குகின்ற ஊழியத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்:</verse>
				<verse number="19">அதாவது இறைவன் மனிதருடைய பாவங்களை அவர்களுக்கெதிராகக் கணக்கிடாமல், கிறிஸ்துவின் மூலமாக உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கி, இந்த ஒப்புரவாக்கும் செய்தியை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.</verse>
				<verse number="20">நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருக்கின்றபடியால், இறைவன் எங்கள் மூலமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றபடி, இறைவனுடன் ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.</verse>
				<verse number="21">பாவமே இல்லாதவரை இறைவன் நமக்காகப் பாவமாக்கினார். நாம் அவரில் இறைவனின் நீதியாகும்படியாகவே இப்படிச் செய்தார்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">இறைவனது கிருபையை நீங்கள் பெற்றுக்கொண்டது வெறும் வீண் என்று ஆகிவிடக் கூடாது என இறைவனுடைய சக வேலையாட்களாகிய நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.</verse>
				<verse number="2">ஏனெனில், “என் தயவின் காலத்தில் நான் உங்கள் குரலைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்” என்று இறைவனே சொல்லியிருக்கின்றார். இதோ, இப்பொழுதே அவரது தயவின் காலம், இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.</verse>
				<verse number="3">எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறை கூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் தடைக்கற்களை இடுவதில்லை.</verse>
				<verse number="4">மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாக அனைவருக்கும் நிரூபித்துக் காண்பிக்கிறோம்: அதன்படி, அதிக சகிப்புத் தன்மையாலும் கஷ்டங்களிலும் துன்பங்களிலும் துயரங்களிலும்,</verse>
				<verse number="5">அடிவாங்கியதிலும், சிறை வைக்கப்பட்டதிலும், கலவரங்களை முகங்கொடுத்ததிலும், கடின வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை கொள்ளாமல் இருந்ததிலும், உணவின்றி பட்டினியாய் இருந்ததிலும் இறைவனின் உண்மையான ஊழியர்களென நிரூபித்துக் காண்பிக்கிறோம்.</verse>
				<verse number="6">தூய்மையிலும், விளங்கிக்கொள்வதிலும், பொறுமையிலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், உண்மை அன்பிலும்,</verse>
				<verse number="7">சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலது கையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும்,</verse>
				<verse number="8">மற்றவர்களால் மதிப்பையோ அவமதிப்பையோ, புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ எதை அடைகின்றவர்களாக இருந்தாலும், ஏமாற்றுக்காரர்களாக எண்ணப்பட்ட போதிலும் உண்மையுள்ள ஊழியர்களாகவும்,</verse>
				<verse number="9">அறியப்படாதவர்களாகக் காணப்பட்டாலும், நன்கு அறிமுகமானவர்கள் ஆகவும், மரணிக்கின்றவர்களாகக் காணப்பட்டாலும், தொடர்ந்து வாழ்கின்றவர்கள் ஆகவும், தாக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டாலும், கொல்லப்படாதவர்கள் ஆகவும்,</verse>
				<verse number="10">துக்கப்படுகிறவர்களாகக் காணப்பட்டாலும், மகிழ்ச்சி கொள்கின்றவர்கள் ஆகவும், ஏழைகளாகக் காணப்பட்டாலும், பலரைச் செல்வந்தர்கள் ஆக்குகின்றவர்கள் ஆகவும், ஒன்றும் இல்லாதவர்களாகக் காணப்பட்டாலும், அனைத்தும் உடையவர்களாகவும் இருக்கின்றோம்.</verse>
				<verse number="11">கொரிந்தியர்களே, நாங்கள் உங்களோடு வெளிப்படையாய் பேசியிருக்கிறோம். எங்கள் உள்ளம் முற்றிலும் திறந்திருக்கிறது.</verse>
				<verse number="12">நாங்கள் உங்கள் மீது அளவற்ற பாசத்தோடு இருந்தோம், ஆனால் நீங்களோ எங்கள் மீது அதேவண்ணம் பாசம் காட்டவில்லை.</verse>
				<verse number="13">உங்களை என் பிள்ளைகள் என்றே எண்ணி பேசுகின்றேன். உங்கள் உள்ளங்களைத் திறந்து பதிலுக்கு நீங்களும் அன்பு செய்யுங்கள்.</verse>
				<verse number="14">அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் அநியாயத்துக்கும் தொடர்புண்டோ? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமுண்டோ?</verse>
				<verse number="15">கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையே இணக்கமுண்டோ? விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் இடையில் பொதுத் தன்மையுண்டோ?</verse>
				<verse number="16">இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே உடன்பாடுண்டோ? வாழும் இறைவனின் ஆலயமாய் நாம் இருக்கின்றோமே. அதைக் குறித்து இறைவனே கூறியிருப்பதாவது: “நான் அவர்களுடன் வாழ்வேன். அவர்களிடையே உலாவுவேன். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.”</verse>
				<verse number="17">ஆகவே, “அவர்களைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருங்கள். அசுத்தமான எதையும் தொடாதீர்கள். அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன் என்று கர்த்தர் சொல்கின்றார்.”</verse>
				<verse number="18">மற்றும், “நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன். நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று, எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கின்றார்.”</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">ஆகையால் அன்பானவர்களே, இந்த வாக்குறுதிகள் நமக்கு இருக்கின்றபடியால், நம்முடைய உடலையும், ஆவியையும் அசுத்தப்படுத்துகின்ற எல்லாவற்றிலுமிருந்தும், நம்மைத் தூய்மையாக்கிக்கொண்டு, இறைபயத்துடன் பரிசுத்தத்தில் நிறைவடைவோம்.</verse>
				<verse number="2">உங்கள் இருதயங்களில் எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவருக்கும் தீமை செய்யவில்லை. நாங்கள் ஒருவரையும் கெடுக்கவில்லை. நாங்கள் ஒருவரையும் சுரண்டி வாழவுமில்லை.</verse>
				<verse number="3">நான் உங்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. நான் முன்பே உங்களுக்கு சொன்னபடி உங்களுடன் வாழவும், மரணிக்கவும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்குமளவுக்கு, நீங்கள் எங்கள் இருதயத்தில் இடம்பெற்றிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="4">உங்களைக் குறித்து எனக்கு அதிக நிச்சயம் உண்டு. உங்களைக் குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். உற்சாகத்தில் நான் நிறைந்திருக்கிறேன். அத்தோடு, எங்களது எல்லாத் துன்பங்களின் மத்தியிலும் என் மனமகிழ்ச்சிக்கு அளவேயில்லை.</verse>
				<verse number="5">நாங்கள் மக்கெதோனியாவை வந்து சேர்ந்தபோதும் எங்கள் உடலுக்கு ஓய்வு இல்லாதிருந்தது. வெளியே போராட்டங்கள், உள்ளத்திலோ பீதி என திரும்பிய பக்கமெல்லாம் துன்பங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன.</verse>
				<verse number="6">ஆனால் சோர்ந்து போனவர்களை ஆறுதல்படுத்துகின்ற இறைவன், தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார்.</verse>
				<verse number="7">அவனது வருகையால் மட்டுமல்ல, உங்களால் அவனுக்குக் கிடைத்த உற்சாகத்தினாலும் ஆறுதலடைந்தோம். என்னைப் பார்க்க நீங்கள் கொண்டிருக்கும் ஏக்கத்தையும், உங்கள் மனவேதனையையும், என்னைப் பற்றிய உங்கள் கரிசனையையும் அவன் எங்களுக்குச் சொன்னான். அதைக் கேள்விப்பட்டு நான் சொல்லொணா மகிழ்ச்சி அடைந்தேன்.</verse>
				<verse number="8">நான் எழுதிய கடிதம் உங்களை மனவேதனைப்படுத்தியிருந்தாலும், அப்படி எழுதியது குறித்து நான் வருத்தப்படவில்லை. எனது கடிதம் சிறிது காலத்துக்கு மாத்திரமே உங்களுக்கு வேதனை தந்தது. முதலில் அது எனக்கு வருத்தமாக இருந்தாலும்,</verse>
				<verse number="9">இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மனவேதனைப்பட்டதற்காக அல்ல, இறைவனின் எண்ணப்படி உங்கள் மனவேதனையானது, உங்களை மனந்திரும்புதலுக்கு இட்டுச் சென்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். எங்களால் உங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.</verse>
				<verse number="10">ஏனெனில் இறைவனுக்கேற்ற துக்கம் வேதனையாக இராமல், மனந்திரும்புதலை உருவாக்கி, நம்மை மீட்புக்குள் வழிநடத்துகிறது. ஆனால் உலகத்துக்குரிய துக்கமோ மரணத்தை உருவாக்கும்.</verse>
				<verse number="11">இறைவனுக்குரிய இந்தத் துக்கம் உங்களில் எத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனப் பாருங்கள். உங்கள் தூய்மையை நிரூபிப்பதற்காக எந்தளவு ஆர்வம், எந்தளவு கோபம், எந்தளவு எச்சரிக்கை, எந்தளவு ஏக்கம், எந்தளவு அக்கறை, எந்தளவு தண்டனை! இவ்வாறு இவ்வனைத்திலும் நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="12">எனவே நான் உங்களுக்கு எழுதினாலும், அந்தத் தீமையைச் செய்தவனுக்காகவோ, தீமையினால் பாதிக்கப்பட்டவனுக்காகவோ எழுதவில்லை. எங்களைக் குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கறை எத்தகையது என்பதை, இறைவனுக்கு முன்பாக நீங்களே அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதினேன்.</verse>
				<verse number="13">இவை எல்லாவற்றினாலும் நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம். நாம் ஆறுதலடைந்ததோடு, தீத்து உங்களால் தன் ஆவியில் உற்சாகமடைந்து மகிழ்ச்சியாய் இருக்கின்றான் என்பதைக் கண்டு நாங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தோம்.</verse>
				<verse number="14">உங்களைக் குறித்து அவனிடம் நான் பெருமையாகச் சொல்லி இருந்தவைகளைக் குறித்து, நான் வெட்கித் தலைகுனியும்படி நீங்கள் வைக்கவில்லை. அத்தோடு, நாங்கள் உங்களுடன் பேசிய அனைத்தும் உண்மையாக இருந்தது போல, உங்களைக் குறித்து தீத்துவுக்கு முன்பாக நாங்கள் பெருமையாகப் பேசியதும் உண்மையாயிற்று.</verse>
				<verse number="15">நீங்கள் எவ்விதம் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவனை வரவேற்றீர்கள் என்பதை அவன் நினைக்கும்போது, உங்கள் மீதுள்ள அவனது அன்பு மென்மேலும் பெருகுகிறது.</verse>
				<verse number="16">உங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">பிரியமானவர்களே, மக்கெதோனியாவிலிருக்கின்ற திருச்சபைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கின்ற கிருபையை நீங்கள் அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.</verse>
				<verse number="2">அவர்கள் கடுமையான துன்பத்தினால் சோதிக்கப்படுகையில் நிறைவான மனமகிழ்ச்சியுடனும், கொடிய வறுமையின் மத்தியில் பெருகி வழியும் தாராள மனதுடனும் கொடுத்தார்கள்.</verse>
				<verse number="3">அவர்கள் தங்களால் இயலுமான அளவு கொடுத்ததுமல்லாமல், சுயவிருப்பத்தோடு அதற்கு அதிகமாயும் கொடுத்தார்கள் என்பதற்கு நானே சாட்சி.</verse>
				<verse number="4">அத்தோடு, பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்த உதவிப் பணியில் பங்குகொள்ளும் பாக்கியம் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என அவர்கள் எங்களிடம் மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="5">நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக, அவர்கள் முதலில் கர்த்தருக்கும் அதன்பின்பு இறைவனுடைய சித்தத்தின்படி எங்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.</verse>
				<verse number="6">எனவே உங்களிடம் இந்த அன்பின் உதவிப் பணியை தொடங்கிய தீத்து, மீண்டும் உங்களிடமே திரும்பி வந்து அதை நிறைவு செய்யும்படி நாங்கள் அவனை ஊக்குவித்தோம்.</verse>
				<verse number="7">இப்பொழுதோ நீங்கள் விசுவாசத்திலும், பேச்சிலும், அறிவிலும், முழுநிறைவான ஆர்வத்திலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் சிறந்து விளங்குவதுபோலவே, தாராளமாய் கொடுப்பதிலும் சிறந்து விளங்குங்கள்.</verse>
				<verse number="8">இதை ஒரு கட்டளையாக நான் உங்களுக்குச் சொல்லாமல், உதவி செய்வதில் மற்றவர்கள் எவ்வளவு ஆவலாய் இருக்கின்றார்கள் என்பதை உங்களுக்குக் காண்பித்து, உங்கள் உண்மையான அன்பைக் கண்டறியவே இதைச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="9">நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் செல்வந்தராய் இருந்தபோதும் அவருடைய ஏழ்மையின் மூலமாக நீங்கள் செல்வந்தர்களாகும்படி அவர் ஏழையாகினார்.</verse>
				<verse number="10">எனவே, இந்த விடயத்தில் இதுவே நான் உங்களுக்குக் கொடுக்கும் சிறப்பான ஆலோசனை; இது உங்களுக்கு நன்மை தரும். ஒரு வருடத்துக்கு முன்பு இந்த வேலையை நீங்கள் தொடங்கி, அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்ய ஆரம்பித்தீர்கள்.</verse>
				<verse number="11">எனவே, இந்த வேலையை செய்து முடியுங்கள். இதைத் தொடங்குவதற்கு உங்களுக்கிருந்த ஆர்வத்தைப் போலவே, உங்களிடம் இருப்பதைக் கொடுத்து அதைச் செய்து முடியுங்கள்.</verse>
				<verse number="12">கொடுப்பதற்கு ஆவல் இருக்குமானால், ஒருவனிடம் என்ன இருக்கின்றதோ அதன்படி அவன் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும். அவன் தன்னிடம் இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை.</verse>
				<verse number="13">மற்றவர்களின் கஷ்டத்தைப் போக்க அந்த பாரத்தை உங்கள் மீது நாங்கள் சுமத்த விரும்பவில்லை. ஆனால், எல்லோரும் சமநிலையில் இருப்பதையே விரும்புகிறோம்.</verse>
				<verse number="14">இக்காலத்தில் உங்களுடைய நிறைவு மற்றவர்களின் தேவைகளுக்கு உதவுவது போல், அவர்களுடைய நிறைவும் உங்கள் தேவைக்கு உதவும், இதுவே சமநிலை ஒழுங்கு.</verse>
				<verse number="15">“அதிகமாய் சேர்த்தவனிடம், தேவைக்கதிகமாக இருந்ததில்லை. கொஞ்சமாய்ச் சேர்த்தவனிடம் குறைவாய் இருக்கவுமில்லை” என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.</verse>
				<verse number="16">எனக்கு உங்கள் மீது ஏற்பட்ட அதே கரிசனையை தீத்துவின் இருதயத்திலும் ஏற்படுத்திய இறைவனுக்கு நன்றி!</verse>
				<verse number="17">ஏனெனில் தீத்து எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதுமன்றி, தன்னுடைய சுயவிருப்பத்தின்படி அதிக ஆர்வத்துடன் உங்களிடம் வருகின்றான்.</verse>
				<verse number="18">நற்செய்தியை பிரசங்கிப்பதில் எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர் பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அவனுடன் அனுப்புகிறோம்.</verse>
				<verse number="19">அதுமட்டுமல்ல, கர்த்தருடைய பெயர் மகிமைப்படவும் எங்கள் நல்லெண்ணத்தை காண்பிக்கவும் செய்யப்படும் இந்த அன்பின் உதவிப் பணியில் எங்களுடனே நன்கொடையை எடுத்துச் செல்வதற்காக, திருச்சபைகளினால் அவன் நியமிக்கப்பட்டிருக்கிறான்.</verse>
				<verse number="20">தாராள மனதுடன் கொடுக்கப்படும் இந்த நன்கொடையை நாங்கள் கையாளும்போது, அதைக் குறித்து யாரும் எங்களைக் குறை சொல்லாதபடி,</verse>
				<verse number="21">நாங்கள் கர்த்தருடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதருடைய பார்வையிலும் நேர்மையுள்ளவர்களாகச் செயல்பட முயற்சிக்கிறோம்.</verse>
				<verse number="22">மேலும் நாங்கள், வேறொரு சகோதரனையும் அவர்களுடன் அனுப்புகிறோம். அவன் ஆர்வமுள்ள ஒருவன் என்பதை பலவிதங்களில் நிரூபித்திருக்கிறான். அவன் உங்களைப்பற்றி அதிக நன்னம்பிக்கையுடன் இருப்பதனால், இப்பொழுது அவன் இன்னும் அதிக ஆர்வமுள்ளவனாய் காணப்படுகிறான்.</verse>
				<verse number="23">தீத்துவைப் பொறுத்தவரை, அவன் உங்கள் நலனுக்காகப் பணி செய்யும் என்னுடைய பங்காளியும் சக ஊழியனுமாய் இருக்கின்றான். எங்கள் மற்றைய சகோதரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் திருச்சபையின் பிரதிநிதிகளும் கிறிஸ்துவுக்கு மகிமையுமாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="24">ஆகவே, இவர்களுக்கு உங்களுடைய அன்பை நிரூபித்துக் காட்டி, நாங்கள் உங்களைப்பற்றி கொண்டிருக்கும் பெருமிதத்தை திருச்சபைகள் அனைத்தும் கண்டுகொள்ளத்தக்கதாக வெளிப்படுத்துங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்தப் பணியைக் குறித்து, நான் உங்களுக்கு எழுத அவசியமில்லை.</verse>
				<verse number="2">ஏனெனில், உங்கள் ஆர்வம் எனக்குத் தெரியும். அதனால் மக்கெதோனியாவில் உள்ளவர்களுக்கு உங்களைக் குறித்துப் பெருமையாக சொன்னேன். அகாயாவிலுள்ள நீங்கள் கடந்த ஒரு வருடமாக ஆயத்தமாக இருக்கின்றீர்கள் என்று சொன்னபோது உங்கள் ஆர்வம் அவர்களில் அநேகரை உற்சாகப்படுத்தித் தூண்டியிருக்கிறது.</verse>
				<verse number="3">இந்த விடயத்தில் நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமையாய்ப் பேசியது வெறும் வார்த்தைகளாயிராமல், நான் அவர்களுக்குச் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாய் இருப்பதற்கு இந்த சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன்.</verse>
				<verse number="4">இல்லையென்றால், மக்கெதோனியாவில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் என்னுடன் வந்து உங்களை ஆயத்தமற்றவர்களாகக் கண்டால், உங்களில் இந்தளவு நம்பிக்கை வைத்ததற்காக நாங்கள் வெட்கித் தலைகுனிய நேரிடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை, அதுபோல நீங்களும் வெட்கித் தலைகுனிவீர்கள்.</verse>
				<verse number="5">எனவே, கட்டாயத்துக்காக கொடுத்ததாக இராமல், தாராள மனதுடன் கொடுக்கப்பட்டதாக காணப்படும்படி இந்தச் சகோதரர்கள் உங்களிடம் வந்து, நீங்கள் கொடுப்பதாக வாக்குறுதியளித்த நன்கொடையை ஆயத்தப்படுத்தும்படி இவர்களை முன்னதாக அனுப்புவது அவசியம் என்று நான் எண்ணினேன்.</verse>
				<verse number="6">கொஞ்சமாய் விதைக்கிறவன் கொஞ்சமாக அறுவடை செய்வான், தாராளமாய் விதைக்கிறவன் தாராளமாய் அறுவடை செய்வான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="7">எனவே, கட்டாயத்தின் பேரிலோ, விருப்பமில்லாமலோ கொடுக்காமல், ஒவ்வொருவனும் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். சந்தோஷமாய் கொடுக்கின்றவனிடம் இறைவன் அன்பாயிருக்கிறார்.</verse>
				<verse number="8">இறைவன் எல்லா கிருபையையும் உங்களுக்கு முழுநிறைவாய்க் கொடுக்க ஆற்றலுடையவராய் இருக்கின்றார். அதனால் நீங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் நிறைவுள்ளவர்களாக எல்லா நல்ல செயல்களிலும் பெருகுவீர்கள்.</verse>
				<verse number="9">இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது கொடைகளைத் தாராளமாய் கொடுத்திருக்கிறான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கின்றதே.</verse>
				<verse number="10">விதைக்கிறவனுக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் கொடுக்கின்ற இறைவன், உங்களுக்கு விதையை கொடுத்து அதை பெருகச் செய்து, உங்கள் நீதியின் அறுவடையையும் பெருகச் செய்வார்.</verse>
				<verse number="11">நீங்கள் எல்லாவிதத்திலும் தாராளமாய்க் கொடுக்கின்றவர்களாகும்படி அவர் உங்களை எல்லாவற்றிலும் வளமுள்ளவராக்குவார். அதன்படி, எங்கள் மூலமாக செய்யப்படும் உங்களது தாராள செயலானது, அநேகர் இறைவனுக்கு நன்றி செலுத்த ஏதுவாக அமையும்.</verse>
				<verse number="12">எனவே உங்களது இந்த உதவிப் பணியானது இறைவனுடைய மக்களின் தேவைகளைச் சந்திப்பதற்காக மட்டுமல்லாது, அதனால் அதிகமானவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்தி, நன்றி பெருகவும் காரணமாக அமையும்.</verse>
				<verse number="13">ஏனெனில் நீங்கள் அறிவித்த கிறிஸ்துவின் நற்செய்திக்கேற்ப கீழ்ப்படிவுள்ளவர்களாகத் தாராள மனதுடன் கொடுப்பதில், நீங்கள் அவர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டும் இருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த உதவிப் பணியின் மூலமாக உங்கள் பெருந்தன்மையை நிரூபித்திருப்பதற்காக அவர்கள் இறைவனுக்கு மகிமை செலுத்துவார்கள்.</verse>
				<verse number="14">அத்துடன், அவர்கள் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில், இறைவன் உங்களுக்குக் கொடுத்த அளவுகடந்த கிருபைக்காக உங்களுக்காக மன்றாடுவார்கள்.</verse>
				<verse number="15">அளவிட முடியாத இறைவனுடைய அன்பளிப்புக்காக அவருக்கு நன்றி உரித்தாகட்டும்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">உங்களுடன் நேருக்கு நேராகப் பேசும்போது தாழ்மையுடனும், உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது கடுமையாகவும் பேசுகின்ற பவுலாகிய நான், கிறிஸ்துவினுடைய சாந்தத்தோடும், தயவுடனும் உங்களை வேண்டிக்கொள்வதாவது:</verse>
				<verse number="2">நாங்கள் உலக வழக்கத்தின்படி நடக்கின்றோம் என்று எண்ணுகின்ற சிலருக்கு எதிராக, நான் அங்கு வரும்போது உறுதியுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லாதவாறு நடந்துகொள்ள உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.</verse>
				<verse number="3">நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், நாங்கள் உலகத்தாரைப் போல் போராடுகின்றவர்கள் அல்ல.</verse>
				<verse number="4">எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள் உலகத்து ஆயுதங்கள் அல்ல, மாறாக அவை அரண்களை அழிக்கக் கூடிய இறைவனுடைய வல்லமை பொருந்தியவையாய் இருக்கின்றன.</verse>
				<verse number="5">அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப் பற்றிய அறிவை அடைவதற்கு எதிராக இருக்கும் எல்லா அகங்காரமான எண்ணங்களையும் தகர்த்தெறிந்து, அனைத்து சிந்தனைகளையும் சிறைப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கின்றோம்.</verse>
				<verse number="6">நீங்கள் முழுமையாக கீழ்ப்படிந்த பின்பு, கீழ்ப்படியாத அனைத்துக்கும் தண்டனை கொடுக்க ஆயத்தமாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="7">நீங்கள் வெளித் தோற்றத்தின்படி பார்க்கின்றீர்கள். ஒருவன் தான் கிறிஸ்துவுக்குரியவன் என்று நம்பினால், அவனைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதை அவன் நினைவில்கொள்ளட்டும்.</verse>
				<verse number="8">கர்த்தர் எங்களுக்குக் கொடுத்திருக்கின்ற அதிகாரம் குறித்து நான் அளவுக்கதிகமாய் பெருமிதம் கொண்டாலும், அந்த அதிகாரம் உங்களைக் கட்டியெழுப்பவே அன்றி உங்களை அழித்து விடுவதற்காக அல்ல. எனவே அதைக் குறித்து நான் வெட்கத்துக்குள்ளாக மாட்டேன்.</verse>
				<verse number="9">நான் என் கடிதங்களினால் உங்களைப் பயமுறுத்துவதாக உங்களுக்குக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.</verse>
				<verse number="10">ஏனெனில், “அவனுடைய கடிதங்கள் கடுமையும், கண்டிப்புமானவை. ஆனால் நேரில் அவனது தோற்றத்தில் கம்பீரம் இல்லை, அவனுடைய பேச்சும் அர்த்தமுள்ளதாக இல்லை” என்று சிலர் சொல்கின்றார்கள்.</verse>
				<verse number="11">நாங்கள் உங்கள் அருகாமையில் இல்லாதபோது கடிதத்தின் மூலமாய் சொல்வதையே உங்களுடன் இருக்கும்போதும் செயலில் காட்டுவோம் என்பதை அப்படிப்பட்டவர்கள் புரிந்துகொள்ளட்டும்.</verse>
				<verse number="12">உங்கள் மத்தியில் தங்களை உயர்வாய்க் காட்டிக்கொள்கின்றவர்களுடன், எங்களை இணைத்துப் பார்க்கவோ அல்லது ஒப்பிட்டுப் பார்க்கவோ நாங்கள் துணிவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த அளவீடுகளினால் தங்களை மதிப்பீடு செய்து, தங்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கின்றபடியால், புத்தியில்லாதவர்களாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="13">ஆனால் நாங்களோ, எல்லைகளை மீறி பெருமிதம்கொள்வதில்லை. இறைவன் எங்களுக்கு நியமித்த அவரது பணியின் அளவுக்கு உள்ளடங்கியே பெருமிதம்கொள்கின்றோம், அதற்குள் நீங்களும் உள்ளடங்கலாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="14">நாங்கள் எல்லை மீறிப் போகவில்லை. நாங்கள் உங்களிடம் வராதிருந்தால் நாங்கள் எல்லை மீறிய பெருமை கொண்டவர்களாக இருந்திருப்போம். ஆனால் நீங்கள் இருக்கும் இடம் வரைக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியுடன் நாங்களே முதலில் வந்தோம்.</verse>
				<verse number="15">மற்றவர்கள் செய்த வேலையை நாங்கள் செய்ததாக சொல்லி, எல்லை மீறி பெருமைகொள்ளவில்லை. ஆனால், உங்களுடைய விசுவாசம் பெருகும்போது உங்கள் மத்தியில் ஊழியத்துக்கான எங்கள் செல்வாக்கும் பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு.</verse>
				<verse number="16">அப்போது உங்களுக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் நாங்கள் நற்செய்தியை பிரசங்கிக்கலாம். மற்றவர்களால் செய்யப்பட்ட ஊழியத்தைக் குறித்து பெருமிதம்கொள்ள எங்களுக்கு அவசியமில்லை.</verse>
				<verse number="17">வேதவசனம் சொல்கின்றபடி, “பெருமை பாராட்ட விரும்புகின்றவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”</verse>
				<verse number="18">ஏனெனில் தன்னைத் தானே பாராட்டிக்கொள்கின்றவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகின்றவனே ஏற்றுக்கொள்ளப்பட்டவன்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">என் மடைமையை சற்று நீங்கள் பொறுத்துக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். ஆம், சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="2">இறைவன் உங்கள் மீது கொண்டிருப்பதைப் போலவே, நானும் உங்கள் மீது ஆழமான அக்கறை கொண்டிருக்கின்றேன். ஏனென்றால், உங்களை மாசற்ற ஒரு கன்னிப் பெண்ணாக கிறிஸ்து எனும் ஒரே கணவருக்குத் திருமணம் செய்து கொடுக்க வாக்குறுதி அளித்திருக்கின்றேன்.</verse>
				<verse number="3">பாம்பின் தந்திரத்தால் ஏவாள் ஏமாற்றப்பட்டது போல, உங்கள் சிந்தனையானது கிறிஸ்துவில் உள்ள உண்மையானதும் தூய்மையானதுமான பக்தியிலிருந்து வழிவிலகிச் சென்றிடுமோ என்று நான் பயப்படுகிறேன்.</verse>
				<verse number="4">ஏனெனில் யாராவது உங்களிடம் வந்து, நாங்கள் பிரசங்கிக்காத மாறுபட்ட இயேசுவையோ, நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியல்லாத வேறொரு ஆவியையோ, நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியல்லாத வேறொரு நற்செய்தியையோ பிரசங்கிக்கும்போது அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்.</verse>
				<verse number="5">அந்த “மகா அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் தாழ்ந்தவனல்ல என எண்ணுகிறேன்.</verse>
				<verse number="6">நான் ஒரு பயிற்சி பெறாத பேச்சாளனாய் இருந்தாலும் அறிவற்றவன் அல்ல என்பதை எல்லாவற்றிலும் எல்லா வழிகளிலும் நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.</verse>
				<verse number="7">உங்களுக்கு எந்தச் செலவும் வைக்காமல் இலவசமாய் இறைவனுடைய நற்செய்தியை பிரசங்கித்து, நீங்கள் உயர்வடையும்படி என்னைத் தாழ்த்தியதுதான் நான் செய்த பாவமா?</verse>
				<verse number="8">உங்களுக்குப் பணி செய்வதற்காக நான் மற்ற திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படியாக உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="9">நான் உங்களுடன் இருக்கையில் எனக்குத் தேவையேற்பட்டபோது அதற்காக யாருக்கும் பாரமாயிருக்கவில்லை. எனக்குத் தேவையானதை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்து உதவினார்கள். எனவே, எவ்விதத்திலும் நான் உங்களுக்குப் பாரமாய் இருக்கவில்லை, அதுபோல இனிமேலும் உங்களுக்குப் பாரமாயிருக்க மாட்டேன்.</verse>
				<verse number="10">கிறிஸ்துவின் உண்மை எனக்குள் இருப்பதனால் நான் இப்படிப் பெருமிதமாய் பேசுவதை அகாயா பகுதியிலுள்ள எவரும் தடுக்க முடியாது.</verse>
				<verse number="11">நான் உங்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாதது ஏன்? நான் உங்களில் அன்பாய் இல்லாததாலா? நான் அன்பாய் இருப்பதை இறைவன் அறிவார்!</verse>
				<verse number="12">நாங்கள் எப்படி ஊழியம் செய்து வருகின்றோமோ, அப்படியே தாங்களும் ஊழியம் செய்வதாகப் பெருமை பேசிக்கொள்கின்றவர்கள், அப்படிச் சொல்லிக்கொள்ள வழியில்லாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்தும் செய்து வருவேன்.</verse>
				<verse number="13">ஏனெனில், இப்படிப்பட்ட மனிதர்கள் போலி அப்போஸ்தலர்கள், ஏமாற்றுக்காரர்கள், தங்களை கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களாக காட்டிக்கொள்ள மாறுவேடம் போட்டுக் கொண்டவர்கள்.</verse>
				<verse number="14">இதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானும் ஒளியின் தூதனைப் போல் வேடம் போட்டுக்கொள்கின்றான்.</verse>
				<verse number="15">எனவே அவனுடைய வேலைக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்கள் போல் வேடம் போடுவது ஆச்சரியமான ஒன்று அல்ல. அவர்களின் முடிவு அவர்கள் செயல்களுக்கேற்றதாய் இருக்கும்.</verse>
				<verse number="16">நான் மறுபடியும் சொல்கின்றேன், என்னை மதியற்றவன் என்று ஒருவரும் நினைக்க வேண்டாம். அப்படி நீங்கள் நினைத்தால் நானும் சற்று பெருமைப்பட்டுக்கொள்ள, என்னை மதியற்றவனாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="17">நான் கர்த்தருக்கு உரிய விதத்தில் பேசாமல் என்னுடைய தன்னம்பிக்கையால் பெருமையுடன் பேசும் மதியற்ற ஒருவனைப் போல பேசுகின்றேன்.</verse>
				<verse number="18">பலர் இயல்பான மனித சிந்தனைக்கு ஏற்ப பெருமை பேசுவதால் நானும் அவ்வாறு பெருமை பேசுவேன்.</verse>
				<verse number="19">நீங்களோ மகா புத்திசாலிகளாயிருந்து, மதியற்றவர்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.</verse>
				<verse number="20">உங்களை அடிமைப்படுத்துகின்றவனையும், உங்களைச் சுரண்டிப் பிழைக்கின்றவனையும், உங்களைத் தன்னுடைய நலனுக்காகப் பயன்படுத்துகின்றவனையும், உங்கள் மத்தியில் பெருமையாய் நடக்கின்றவனையும், உங்கள் முகத்தில் அடிக்கின்றவனையும் நீங்கள் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.</verse>
				<verse number="21">நாங்களோ இப்படியானவைகளைச் செய்ய முடியாதளவுக்குப் பலவீனர்கள் என்பதை நான் வெட்கத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், யாராவது எதைக் குறித்தாவது பெருமைப்படத் துணிந்தால் அவ்விதமாய் பெருமைப்பட்டுக்கொள்ள நானும் துணிவேன். இதை மதியற்ற ஒருவன் சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றேன்.</verse>
				<verse number="22">அவர்கள் எபிரேயர்களா? நானும் ஒரு எபிரேயன். அவர்கள் இஸ்ரயேலர்களா? நானும் ஒரு இஸ்ரயேலன். அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளா? நானும் அப்படியே.</verse>
				<verse number="23">அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அவர்களைவிட மிகச் சிறந்த ஊழியன். இதை புத்திபேதலித்த ஒருவன் சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றேன். நான் அதிகமாக உழைத்தவன், பல முறை சிறைப்பட்டவன், எண்ணற்ற அடி வாங்கியவன், அடிக்கடி மரணத்துக்கு முகம் கொடுத்தவன்.</verse>
				<verse number="24">நாற்பது அடிகளுக்கு ஒரு அடி குறைவாக, ஐந்து முறை யூதர்களினால் சவுக்கால் அடிக்கப்பட்டேன்.</verse>
				<verse number="25">மூன்று முறை தடிகளால் அடிக்கப்பட்டேன், ஒரு தடவை கல்லெறியப்பட்டேன், மூன்று முறை கப்பல் விபத்தில் அகப்பட்டேன், ஒருமுறை இரவும் பகலும் நடுக்கடலில் தத்தளித்தேன்.</verse>
				<verse number="26">அடிக்கடி தொடர் பயணங்களை மேற்கொண்டேன். ஆறுகளில் வந்த ஆபத்து, திருடர்களால் வந்த ஆபத்து, சொந்த யூத இனத்தவரால் வந்த ஆபத்து, மற்ற தேசத்து மக்களால் வந்த ஆபத்து, நகரங்களில் வந்த ஆபத்து, காடுகளில் வந்த ஆபத்து, கடலில் வந்த ஆபத்து, போலி கிறிஸ்தவ சகோதரர்களால் வந்த ஆபத்துகள் என எத்தனையோ ஆபத்துகளுக்கு முகங்கொடுத்தேன்.</verse>
				<verse number="27">கடினமாய் உழைத்து களைப்படைந்தேன், பல இரவுகள் தூக்கம் இழந்தேன், பசியோடும் தாகத்தோடும் இருந்தேன், பல முறை பட்டினி கிடந்தேன், குளிரிலும், ஆடையின்றியும் இருந்தேன்.</verse>
				<verse number="28">இவைகளைவிட எல்லாத் திருச்சபைகளையும் குறித்து எனக்கிருக்கும் கவலை நாள்தோறும் என்னை வாட்டி வதைக்கிறது.</verse>
				<verse number="29">ஒருவன் பலவீனனாக இருந்தால், அந்த பலவீனத்தை என்னால் உணர முடியாதோ? ஒருவன் பாவத்துக்குள் விழச் செய்யப்பட்டால், என் மனம் சீற்றம்கொள்ளாதிருக்குமோ?</verse>
				<verse number="30">நான் பெருமிதம்கொள்வதானால், எனது பலவீனத்தைக் காண்பிக்கும் காரியங்களைப் பற்றியே பெருமிதம்கொள்வேன்.</verse>
				<verse number="31">நான் சொல்வது பொய் அல்ல என்பதை இறைவனும் ஆண்டவர் இயேசுவின் பிதாவுமாய் இருப்பவர் அறிவார். அவரே எக்காலமும் துதிக்கப்பட வேண்டியவர்.</verse>
				<verse number="32">தமஸ்குவின் அரசனாகிய அரேத்தாவின் கீழ் ஆளுநராய் இருந்தவன் ஒருமுறை என்னைக் கைது செய்வதற்காக தமஸ்கு பட்டணத்தைச் சுற்றிக் காவல் ஏற்படுத்தியிருந்தான்.</verse>
				<verse number="33">ஆனால் நான் ஒரு கூடையில் வைக்கப்பட்டு பட்டணத்து மதிலில் இருந்த ஒரு ஜன்னலின் வழியாக இறக்கி விடப்பட்டு, அந்த ஆளுநரின் கையிலிருந்து தப்பினேன்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">நான் பெருமையாக பேசிக் கொண்டே இருப்பேன். அதில் நன்மை எதுவும் இல்லை என்றாலும், கர்த்தர் எனக்குக் கொடுத்த தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் குறித்து நான் சொல்ல வேண்டும்.</verse>
				<verse number="2">கிறிஸ்துவுக்குள் ஒரு மனிதனை எனக்குத் தெரியும். பதினான்கு வருடங்களுக்கு முன்பதாக அவன் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் தன் உடலோடு சென்றானோ, அல்லது உடலின்றி சென்றானோ நான் அறியேன்; இறைவனே அறிவார்.</verse>
				<verse number="3">இந்த மனிதனை எனக்குத் தெரியும். அவன் தன் உடலோடு சென்றானோ, அல்லது உடலின்றி சென்றானோ நான் அறியேன், இறைவனே அறிவார்.</verse>
				<verse number="4">அவன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு விபரிக்க முடியாததும், மனிதரால் உச்சரிக்க முடியாததுமான காரியங்களைக் கேட்டான்.</verse>
				<verse number="5">இப்படிப்பட்ட மனிதனைக் குறித்து நான் பெருமையாகப் பேசுவேன். ஆனால் என்னைக் குறித்தோ, என் பலவீனங்களைத் தவிர வேறு எதிலுமோ பெருமைப்பட மாட்டேன்.</verse>
				<verse number="6">அப்படி நான் பெருமையாகப் பேசினாலும் அது மடைமையாய் இருக்காது. ஏனெனில் நான் சொல்வது உண்மை. ஆனால் நான் அப்படி பேசப் போவதில்லை. மற்றவர்கள் என்னில் பார்க்கின்றதற்கும் கேட்கின்றதற்கும் மேலாக என்னைக் குறித்து அவர்கள் பெரிதாக எண்ணி விடாமல் இருக்க நான் அப்படி செய்யப் போவதில்லை.</verse>
				<verse number="7">எனக்குக் கொடுக்கப்பட்ட அதிமேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, நான் அகந்தைகொள்ளாதபடி, எனது உடலில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னை கொடுமைப்படுத்தும் சாத்தானின் தூதுவனாயிருக்கிறது.</verse>
				<verse number="8">அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்று முறை கர்த்தரிடம் மன்றாடினேன்.</verse>
				<verse number="9">ஆனால் அவர் என்னிடம், “என்னுடைய கிருபை உனக்குப் போதும். உன் பலவீனத்தில், என் வல்லமை முழு நிறைவாக விளங்கும்” என்றார். எனவே கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, நான் எனது பலவீனங்களைக் குறித்து அதிக மகிழ்ச்சியுடன் பெருமிதம்கொள்வேன்.</verse>
				<verse number="10">அதனால் கிறிஸ்துவுக்காக நான் அனுபவித்த பலவீனங்கள், அவமானங்கள், பாடுகள், துன்புறுத்தல்கள், இடர்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பலவீனமுள்ளவனாய் இருக்கும்போது பலமுள்ளவனாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="11">நான் மதியற்ற ஒருவனைப் போல் என்னை ஆக்கிக் கொண்டேன். நீங்களே என்னை அந்நிலைக்கு உள்ளாக்கினீர்கள். உங்களால் நான் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். நான் ஒரு வெற்று மனிதனாய் இருந்தாலும், உங்களுடைய இந்த “மகா அப்போஸ்தலர்களை” விட எவ்விதத்திலும் நான் குறைந்தவனல்ல.</verse>
				<verse number="12">உண்மையில், ஒரு அப்போஸ்தலன் என்பதை வெளிப்படுத்துகின்ற அடையாளங்களும், அற்புதங்களும், வல்லமையான செயல்களும் உங்கள் மத்தியில் மிகுந்த பொறுமையுடன் செய்தும் காட்டப்பட்டன.</verse>
				<verse number="13">மற்ற திருச்சபைகளைவிட நீங்கள் எந்த விதத்தில் குறைந்து போனீர்கள்? நான் உங்களுக்கு சுமையாக இருக்காத விடயத்திலா? இதுவே நான்விட்ட ஒரு குறையென்றால் இந்தத் தவறுக்காக என்னை மன்னியுங்கள்.</verse>
				<verse number="14">இப்போதும் நான் மூன்றாவது முறையாக உங்களிடம் வர ஆயத்தமாக இருக்கின்றேன். ஆனாலும், உங்களுக்கு பாரமாக இருக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கு வேண்டியது உங்களிடம் இருப்பவை அல்ல, நீங்கள்தான் எனக்கு வேண்டும். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்காக சேமித்து வைக்க வேண்டியதில்லை. பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்காக சேமித்து வைக்க வேண்டும்.</verse>
				<verse number="15">நான் என்னிடம் உள்ளவற்றை உங்களுக்காக மிக்க மகிழ்ச்சியோடு செலவு செய்வேன். என்னையும்கூட தந்து விடுவேன். இவ்விதமாக நான் உங்களில் அதிக அன்பாயிருக்கும்போது, நீங்கள் என்மீது காட்டும் அன்பு குறைந்து காணப்படலாமா?</verse>
				<verse number="16">எது எப்படியிருந்தாலும், நான் உங்களுக்குப் பாரமாய் இருக்கவில்லை. ஆனாலும் நான் ஒரு சூழ்ச்சிக்காரன் என்றும், உங்களைத் தந்திரமாய் பிடித்தேன் என்றும் பேசப்படுகிறது.</verse>
				<verse number="17">நான் உங்களிடம் அனுப்பிய யார் மூலமாவது உங்களிடமிருந்து நன்மை எதையும் தேடினேனா?</verse>
				<verse number="18">உங்களிடம் போகும்படி நானே தீத்துவைக் கேட்டுக் கொண்டேன். அவனுடன் மற்றச் சகோதரனையும் அனுப்பினேன். தீத்து உங்களிடமிருந்து நன்மை எதையும் தேடினானா? நாங்கள் ஒரே நோக்கமுள்ளவர்களாய் செயல்படவில்லையா? ஒரே பாதையைப் பின்பற்றவில்லையா?</verse>
				<verse number="19">உங்களுக்கு முன்பாக நாங்கள் எங்களை குற்றமற்றவர்களாக நிரூபிக்க முயற்சிக்கிறோம் என்றா எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? இறைவனுடைய பார்வையில், கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களாக இவைகளை பேசிக் கொண்டிருக்கிறோம். அன்பானவர்களே, உங்களைக் கட்டியெழுப்புவதற்காகவே நாங்கள் எல்லாவற்றையும் செய்கின்றோம்.</verse>
				<verse number="20">நான் உங்களிடம் வரும்போது ஒருவேளை நான் விரும்புகின்றபடி நீங்கள் காணப்படாதவர்களாகவும், நீங்கள் விரும்புகின்றபடி நான் காணப்படாதவனாகவும் இருப்பேனோ என்று பயப்படுகிறேன். அதாவது, உங்களிடையே வாக்குவாதம், பொறாமை, கோபம், சுயநலம், அவதூறு பேசுதல், புறங்கூறுதல், அகங்காரம், ஒழுங்கீனம் என்பன காணப்படுமோ என்றும் அஞ்சுகிறேன்.</verse>
				<verse number="21">நான் மீண்டும் உங்களிடம் வரும்போது, என்னுடைய இறைவன் உங்களுக்கு முன்பாக என்னைத் தாழ்த்தி விடுவாரோ என்று பயப்படுகிறேன். அத்தோடு, உங்களில் பலர் முன்பு செய்த பாவங்களான அசுத்தத்தையும், பாலியல் ஒழுக்கக்கேட்டையும், சிற்றின்ப ஆசைகளையும் விட்டு மனந்திரும்பாது இருப்பதைக் குறித்து நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்றும் அஞ்சுகிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">இத்துடன் மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வருகின்றேன். “எல்லா விடயமும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.”</verse>
				<verse number="2">எனது இரண்டாவது பயணத்தில் நான் அங்கு வந்திருந்தபோது, முன்பு பாவம் செய்தவர்களையும் மற்ற எல்லோரையும் நேரில் வைத்து எச்சரித்தேன், அதுபோல இப்போது நான் அங்கு இல்லாவிட்டாலும் முன்னதாகவே எச்சரித்து வைக்கிறேன். நான் மீண்டும் அங்கு வந்தால் அப்படிப்பட்டவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன்.</verse>
				<verse number="3">கிறிஸ்து என் மூலமாய்ப் பேசுகின்றார் என்பதற்கு அத்தாட்சி தேடுகின்றவர்களாய் இருக்கின்றீர்களே. கிறிஸ்து உங்களோடு பலவீனராக அன்றி அவர் உங்களோடு வல்லமையுள்ளவராக செயலாற்றுகின்றவராய் இருக்கின்றார்.</verse>
				<verse number="4">உண்மையில் அவர் பலவீன நிலையிலேயே சிலுவையில் அறையப்பட்டார், ஆனாலும் இறைவனுடைய வல்லமையால் உயிர் வாழ்கின்றார். அதேபோல உண்மையில் நாங்களும் அவருக்குள் பலவீனர்களாய் இருக்கின்றோம்; ஆனாலும் உங்களோடு செயல்படுகின்ற விடயத்தில் நாம் இறைவனுடைய வல்லமையினால் அவருக்குள் உயிர் வாழ்வோம்.</verse>
				<verse number="5">நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அதை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்வதில்லையா? அப்படி உணர முடியாவிட்டால் நீங்கள் சோதனையில் தோல்வியுற்றவர்கள்.</verse>
				<verse number="6">நாங்கள் சோதனையில் தோல்வியடையவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.</verse>
				<verse number="7">மேலும், நீங்கள் எந்த தீமையும் செய்யக் கூடாது என நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் சோதனையை எதிர்கொண்டவர்கள் என எங்களைக் காட்டிக்கொள்வதற்காக அல்ல, அப்படியே நாங்கள் தோல்வியடைந்தவர்கள் போல காணப்பட்டாலும், நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே உங்களுக்காக மன்றாடுகிறோம்.</verse>
				<verse number="8">ஏனெனில் உண்மைக்கு விரோதமாக எதையும் எங்களால் செய்ய முடியாது, உண்மைக்காக மட்டுமே செயல்படுகிறோம்.</verse>
				<verse number="9">நாங்கள் பலவீனர்களாகவும், நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் முழுநிறைவுள்ளவர்கள் ஆகும்படி மன்றாடுகிறோம்.</verse>
				<verse number="10">இவைகளை நான் தூரமாய் இருக்கும்போதே எழுதுகிறேன். அதற்குக் காரணம், நான் உங்களிடம் வரும்போது கர்த்தர் எனக்குத் தந்திருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களோடு கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்களை இடித்துப் போடுவதற்காக அன்றி உங்களை கட்டியெழுப்புவதற்காகவே எனக்கு அந்த அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="11">கடைசியாக பிரியமானவர்களே, மகிழ்ச்சியாயிருங்கள், முழுநிறைவுள்ளவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள், ஒரே மனதுடையவர்களாய் இருங்கள், சமாதானமாய் வாழுங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்திற்குமான இறைவன் உங்களுடனே இருப்பார்.</verse>
				<verse number="12">ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="13">பரிசுத்தவான்கள் எல்லோரும் தங்களுடைய வாழ்த்துதலைத் தெரிவிக்கிறார்கள்.</verse>
				<verse number="14">நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையும், இறைவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.</verse>
			</chapter>
		</book>
		<book number="48">
			<chapter number="1">
				<verse number="1">மனிதர்களிடமிருந்தோ அல்லது எந்தவொரு மனிதன் ஊடாகவோ அனுப்பப்படாமல், இயேசு கிறிஸ்துவின் ஊடாகவும், மரணித்தோரிலிருந்து அவரை உயிருடன் எழுப்பிய பிதாவாகிய இறைவனின் ஊடாகவும் அப்போஸ்தலனாக அனுப்பப்பட்ட பவுலாகிய நானும்,</verse>
				<verse number="2">என்னுடன் இருக்கும் எல்லா சகோதரர்களும் இணைந்து, கலாத்தியா நாட்டில் உள்ள திருச்சபைகளுக்கு எழுதுவதாவது:</verse>
				<verse number="3">நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="4">இயேசுவே, நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இத்தீமையான தற்காலத்திலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்காக நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர்.</verse>
				<verse number="5">அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.</verse>
				<verse number="6">கிறிஸ்துவினுடைய கிருபையினாலே உங்களை அழைத்தவரைக் கைவிட்டு, இவ்வளவு விரைவாக நீங்கள் வேறொரு நற்செய்தியின் பக்கமாக திரும்புவதை என்னால் நம்பக்கூட முடியவில்லை.</verse>
				<verse number="7">உண்மையில் அந்த வேறொரு செய்தி நற்செய்தியே அல்ல. சிலர் உங்களைக் குழப்பமடையச் செய்து, கிறிஸ்துவினுடைய நற்செய்தியைத் திரித்துக் கூற முயலுகின்றார்களே அல்லாமல் வேறொன்றும் இல்லை.</verse>
				<verse number="8">நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைவிட, மாறுபட்ட ஒரு நற்செய்தியை வானத்திலிருந்து வந்த ஒரு தூதனோ அல்லது அதை நாங்களே அறிவித்தாலும்கூட நாம் சபிக்கப்பட்டவர்களாகவே இருப்போம்.</verse>
				<verse number="9">நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருந்ததை இப்போது நான் மீண்டும் உங்களுக்கு சொல்கிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட மாறுபட்ட ஒரு செய்தியை எவராயினும் உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கட்டும்.</verse>
				<verse number="10">இப்போது நான் பெற முயற்சிப்பது மனிதருடைய அங்கீகாரத்தையா அல்லது இறைவனுடைய அங்கீகாரத்தையா? அல்லது நான் மனிதருடைய ஆதரவைத்தான் நாடித் தேடுகின்றேனா? நான் இன்னும் மனிதருடைய ஆதரவைப் பெற முயற்சிக்கின்றவனாய் இருந்தால், நான் கிறிஸ்துவினுடைய ஊழியனாய் இருக்கவே முடியாது.</verse>
				<verse number="11">பிரியமானவர்களே, நீங்கள் ஒன்றை அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியானது மனிதரின் ஆக்கம் அல்ல என்பதே அது.</verse>
				<verse number="12">நான் அந்த நற்செய்தியை எந்தவொரு மனிதனிடத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளவும் இல்லை, எந்தவொரு மனிதனும் அதை எனக்குப் போதிக்கவும் இல்லை. மாறாக இயேசு கிறிஸ்து எனக்குத் தெரியப்படுத்திய வெளிப்பாட்டின் மூலமாகவே நான் அதைப் பெற்றுக்கொண்டேன்.</verse>
				<verse number="13">நான் யூத மதத்தை பின்பற்றியபோது, முன்பு நான் எப்படி வாழ்ந்தேன் என்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறைவனுடைய திருச்சபையை நான் எவ்வளவு கொடுமையாய் துன்புறுத்தி அதை அழிக்க முயன்றேன் என்பதும் உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="14">அத்தோடு யூத மதத்தை பின்பற்றுவதில் எனது சமகால யூதர்களைவிட நானே அதிக தேர்ச்சி பெற்று இருந்ததோடு, நம்முடைய தந்தையர்களின் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதிலும் தீவிர ஆர்வம் உடையவனாக இருந்தேன்.</verse>
				<verse number="15">ஆனால் நான் தாயின் கருப்பையில் இருக்கும்போதே என்னை வேறு பிரித்த இறைவன், தம்முடைய கிருபையினால் என்னை அழைத்து,</verse>
				<verse number="16">கிறிஸ்துவை வெளிப்படுத்த பிரியம் கொண்டார். தம்முடைய மகனின் நற்செய்தியை யூதரல்லாத மக்களுக்கு நான் அறிவிப்பதற்காகவே இப்படிச் செய்தார். அப்போது அதைக் குறித்து நான் எந்த மனிதனிடமும் ஆலோசனை கேட்கவுமில்லை,</verse>
				<verse number="17">எனக்கு முன்னர் அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களைச் சந்திப்பதற்காக நான் எருசலேமுக்குப் போகவுமில்லை. மாறாக உடனே அரேபியாவுக்குச் சென்று, பின்பு தமஸ்கு பட்டணத்துக்குத் திரும்பினேன்.</verse>
				<verse number="18">மூன்று வருடங்களுக்குப் பின்பு நான் கேபாவைச் சந்தித்து அறிமுகமாவதற்காக எருசலேமுக்குப் போனபோது அவனுடன் பதினைந்து நாட்கள் தங்கினேன்.</verse>
				<verse number="19">ஆனால் ஆண்டவருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர மற்ற அப்போஸ்தலர்களில் வேறு ஒருவரையும் நான் அப்போது சந்திக்கவில்லை.</verse>
				<verse number="20">நான் உங்களுக்கு இப்போது எழுதுகின்றவை பொய்யல்ல என்பதை இறைவனுக்கு முன்பாக உறுதியாகக் கூறுகிறேன்.</verse>
				<verse number="21">பின்பு நான் சீரியா மற்றும் சிலிசியா என்ற பிரதேசங்களுக்கு போனேன்.</verse>
				<verse number="22">ஆனால் அப்போதும்கூட யூதேயா நாட்டிலிருக்கின்ற கிறிஸ்துவோடு இணைந்துள்ள திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன்.</verse>
				<verse number="23">“முன்பு எங்களைத் துன்புறுத்திய இவன், இப்பொழுது, தான் முன்பு அழிக்க முயன்ற விசுவாசத்தை பிரசங்கிக்கிறான்” என்று சொல்லப்படுவதை மட்டுமே அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.</verse>
				<verse number="24">அதனால், எனக்காக அவர்கள் இறைவனைத் துதித்தார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">பதினான்கு வருடங்களுக்குப் பின்பு தீத்துவையும் அழைத்துக்கொண்டு, பர்னபாவுடன் நான் மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.</verse>
				<verse number="2">நான் அதுவரை செய்த ஊழியமும் செய்து வருகின்ற ஊழியமும் எவ்விதத்திலும் பயனற்றதாய் போய்விடக் கூடாது என்பதற்காக, எனக்கு வழங்கப்பட்ட இறைவனின் வெளிப்பாட்டைப் பின்பற்றி அங்கு சென்றேன். யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கின்ற நற்செய்தியைக் குறித்து அங்கிருந்தவர்களுக்கு, அதிலும் குறிப்பாக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களுக்கு மாத்திரம் தனிப்பட்ட விதத்திலும் எடுத்துரைத்தேன்.</verse>
				<verse number="3">அவ்வேளையில் என்னுடன் இருந்தவன் தீத்து. அவன் ஒரு கிரேக்கன். அப்படி இருந்தும் விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி அவனையாகிலும் எவருமே கட்டாயப்படுத்தவில்லையே.</verse>
				<verse number="4">ஆனாலும், கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் அனுபவித்த சுதந்திரத்தை உளவு பார்த்து, எங்களை அடிமைப்படுத்தும் நோக்கத்துக்காக இரகசியமாய் சபையில் புகுந்திருந்த போலிச் சகோதரர்கள் இதைப்பற்றி குறை கூறினார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் நற்செய்தியின் உண்மை உங்களுக்காக காக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்குச் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை.</verse>
				<verse number="6">அத்தோடு, அங்கு முக்கியமானவர்களாக கருதப்பட்டவர்களும் என்னுடைய செய்தியுடன் வேறு எதையும் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளவில்லை. (இவர்கள் முன்பு எப்படிப்பட்டவர்களாய் இருந்திருந்தாலும் எனக்குப் பரவாயில்லை, இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல)</verse>
				<verse number="7">விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் பணி பேதுருவுக்கு ஒப்படைக்கப்பட்டது போல, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட்டதை சபையின் தலைவர்கள் கண்டார்கள்.</verse>
				<verse number="8">ஏனெனில் விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு அப்போஸ்தல ஊழியத்தைச் செய்ய ஆற்றல் அளித்து பேதுருவின் மூலமாக செயலாற்றிய இறைவனே, யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தல ஊழியத்தைச் செய்ய ஆற்றல் அளித்து என் மூலமாகவும் செயலாற்றினார்.</verse>
				<verse number="9">திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும் இறைவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையைக் கண்டார்கள். ஆகவே, விருத்தசேதனம் பெறாதவர்கள் மத்தியில் நானும் பர்னபாவும் சென்று ஊழியம் செய்ய வேண்டும் என்றும், விருத்தசேதனம் பெற்றவர்கள் மத்தியில் அவர்கள் ஊழியம் செய்வார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டு, எங்களையும் தங்களுடன் இணை ஊழியர்களாக வலதுகை கொடுத்து ஏற்றுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="10">வறுமையிலுள்ளவர்களை நினைவில்கொள்ள வேண்டும் என்று மட்டும் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதுவோ நானும் செய்வதற்கு ஆவலுடன் இருந்த ஒன்றல்லவா!</verse>
				<verse number="11">ஆனாலும் அந்தியோகியா பட்டணத்திற்கு கேபா வந்திருந்தபோது, அவன் செய்த குற்றத்திற்காக நான் நேரடியாகவே அவனை எதிர்த்தேன்.</verse>
				<verse number="12">யாக்கோபிடம் இருந்து சிலர் வருவதற்கு முன்பு அவன் யூதரல்லாத மக்களோடு சேர்ந்து உணவு உண்டான். ஆனால் அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதன குழுவுக்கு பயந்து யூதரல்லாத மக்களை விட்டு விலகியிருந்தான்.</verse>
				<verse number="13">இவ்விதமாக மற்ற யூதர்களும் கேபாவுடன் சேர்ந்து பாசாங்கு செய்தார்கள். இவர்களது பாசாங்கை பின்பற்றியதால் பர்னபாவும் தவறான வழியில் இழுத்து செல்லப்பட்டான்.</verse>
				<verse number="14">நற்செய்தியில் உள்ள உண்மையின் பாதையில் அவர்கள் செல்லாததை நான் கண்டபோது, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக கேபாவைப் பார்த்து, “நீ ஒரு யூதனாயிருந்தும் யூதனைப் போல் வாழாது, யூதரல்லாதவரைப் போல் வாழ்கின்றவன் அல்லவா? அப்படியிருக்க, யூதருடைய வழக்கங்களைக் கைக்கொள்ளும்படி, நீ யூதரல்லாத மக்களை எப்படி வற்புறுத்தலாம்?” என்றேன்.</verse>
				<verse number="15">“நாங்களோ யூதரல்லாத பாவ மக்களாய் இராமல், பிறப்பால் யூதர்களாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="16">அப்படியிருந்தும், நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களை செய்வதனால் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை, மாறாக கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாகவே நீதிமானாக்கப்படுகிறான் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே, நாமும் நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களை செய்வதனால் அன்றி, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக நீதிமான்கள் ஆக்கப்படும்படி கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளோம். ஏனெனில் ஒருவனும் நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களைக் கைக்கொள்வதனால் நீதிமானாக்கப்படுவதில்லை.</verse>
				<verse number="17">“கிறிஸ்துவில் நீதிமான்கள் ஆக்கப்பட வேண்டுமென்று நாடுகின்ற நாமும்கூட மற்றவர்களைப் போலவே பாவிகளாய் காணப்படுகின்றோம் என்றால், கிறிஸ்துவே அந்தப் பாவத்துக்குத் துணை ஊழியரானார் எனலாமா? ஒருபோதும் இல்லை!</verse>
				<verse number="18">மாறாக, நான் அழித்துப் போட்டதை மீண்டும் நானே கட்ட முயற்சி செய்வேனாயின், நான் நீதிச்சட்டத்தை மீறுகின்றவன் என்பதையே அது காட்டும்.</verse>
				<verse number="19">“நான் இறைவனுக்கென்று வாழும்படி நீதிச்சட்டத்தின் மூலமாக நீதிச்சட்டத்திற்கு இறந்தவனானேன்.</verse>
				<verse number="20">நான் கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டு மரணித்துவிட்டவன். இனிமேல் உயிர் வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் உயிர் வாழ்கின்றார். இப்போது இந்த உடலில் நான் வாழ்கின்ற வாழ்வானது, இறைவனுடைய மகன் மீதுள்ள விசுவாசத்தினால் வாழும் வாழ்வாகும். அவரே என்னை நேசித்து எனக்காகத் தம்மையே கொடுத்தவர்.</verse>
				<verse number="21">இறைவனுடைய கிருபையை நான் பயனற்ற ஒன்றாக மாற்றப் போவதில்லை. ஏனெனில் நீதிச்சட்டத்தின் மூலமாய் ஒருவன் நீதிமானாக்கப்பட முடியுமானால் கிறிஸ்து மரணித்தது வீணானதாய் இருக்கும் அல்லவா!”</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">மூடர்களான கலாத்தியரே! கண்கட்டுவித்தையினால் உங்களை ஏமாற்றியது யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்கள் கண்களுக்கு பகிரங்கமாக சித்திரித்துக் காட்டப்பட்டாரே!</verse>
				<verse number="2">நான் உங்களிடமிருந்து ஒன்றை அறிய விரும்புகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா?</verse>
				<verse number="3">நீங்கள் இந்தளவு அறிவீனர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்போது மனித முயற்சியினால் நிறைவேற்றி முடிக்கப் போகின்றீர்களா?</verse>
				<verse number="4">நீங்கள் வீணாகத்தான் அத்தனை பாடுகளையும் அனுபவித்தீர்களா? உண்மையில் அவை அர்த்தமற்றவையா?</verse>
				<verse number="5">பரிசுத்த ஆவியானவரை இறைவன் உங்களுக்குத் தந்து, உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்வது நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களினாலா அல்லது நீங்கள் கேட்டதை நீங்கள் விசுவாசிப்பதனாலா?</verse>
				<verse number="6">ஆபிரகாமைப் பாருங்கள், “அவர் இறைவனை விசுவாசித்தார், அந்த விசுவாசமே அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”</verse>
				<verse number="7">இதிலிருந்து, விசுவாசிக்கின்றவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="8">யூதரல்லாத மக்களை, அவர்களது விசுவாசத்தின் மூலமாக இறைவன் நீதிமான்கள் ஆக்குவார் என்பதனை முன்னரே அறிந்துகொண்ட வேதவசனம், “எல்லா இன மக்களும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று அந்த நற்செய்தியை முன்னரே ஆபிரகாமுக்கு அறிவித்தது.</verse>
				<verse number="9">எனவே விசுவாசம் உள்ளவர்களும் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடன் சேர்த்து ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.</verse>
				<verse number="10">நீதிச்சட்டத்தின் நல்ல செயல்களில் தங்கியிருக்கும் எல்லோரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “நீதிச்சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொண்டு, அதன்படி தொடர்ந்து வாழாத ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.</verse>
				<verse number="11">“நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” என்று எழுதியிருக்கின்றபடி, நீதிச்சட்டத்தால் இறைவனுக்கு முன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.</verse>
				<verse number="12">ஆயினும் நீதிச்சட்டமானது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டதொன்றல்ல. மாறாக, “நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவன் அவற்றால் வாழ்வு பெறுவான்” என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="13">“மரத்திலே தொங்க விடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கின்றபடியே கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நீதிச்சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார்.</verse>
				<verse number="14">அதன்படி, ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவன் வாக்குறுதியளித்த பரிசுத்த ஆவியானவரை விசுவாசத்தின் மூலமாக நாமும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே அப்படிச் செய்தார்.</verse>
				<verse number="15">பிரியமானவர்களே, அன்றாட நடைமுறையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். மனிதரால் எழுதப்பட்ட ஒரு உடன்படிக்கை உறுதி செய்யப்பட்ட பின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கிவிடவோ சேர்த்துக்கொள்ளவோ முடியாது.</verse>
				<verse number="16">அதேபோலத்தான் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டபோது வேதவசனமானது, “சந்ததிகளுக்கு” என்று பலரைக் குறித்துச் சொல்லாமல், “உன்னுடைய சந்ததிக்கு” என்று ஒருவரைக் குறித்தே சொல்கின்றது. அந்த ஒருவர் கிறிஸ்துவே.</verse>
				<verse number="17">நான் சொல்வது என்னவென்றால், இறைவன் முன்னதாகவே ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து வாக்குறுதியையும் கொடுத்து விட்டார். அதற்கு நானூற்று முப்பது வருடங்களுக்குப் பின் வந்த நீதிச்சட்டமானது முன்பு உறுதி செய்யப்பட்ட அந்த உடன்படிக்கையைத் தள்ளி வைக்கவோ, அந்த வாக்குறுதியை செல்லுபடியற்றதாக்கி விடவோ முடியாது.</verse>
				<verse number="18">இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச் சொத்தானது, நீதிச்சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுமானால், அது வாக்குறுதியின் அடிப்படையில் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் இறைவனோ தமது கிருபையினால் அதை ஒரு வாக்குறுதியின் மூலமாக ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.</verse>
				<verse number="19">அப்படியானால் அதன்பின் நீதிச்சட்டமும் கொடுக்கப்பட்டதே, அதற்கு என்ன காரணம்? வாக்குறுதிக்கு உரியவரான வழித்தோன்றலானவர் வரும்வரை உலகிலுள்ள மீறுதல்களை எடுத்துக்காட்டவே நீதிச்சட்டம் தேவைப்பட்டது. அது இறைதூதர்களைக் கொண்டு ஒரு மத்தியஸ்தர் மூலமாகக் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="20">இரு சாராருக்கு இடையே மத்தியஸ்தராக இருப்பவர் ஒரு சாராருக்கு மாத்திரம் உரியவரல்ல. ஆனால் இறைவனோ ஒருவரே.</verse>
				<verse number="21">அப்படியானால் நீதிச்சட்டம் இறைவனுடைய வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருபோதும் இல்லை! வாழ்வு தரும்படியான ஒரு நீதிச்சட்டம் கொடுக்கப்பட்டிருந்தால், உண்மையில் நீதிச்சட்டத்தின் மூலமாகவே நீதிமானாக்கப்படுவது உண்டாகியிருக்க வேண்டும்.</verse>
				<verse number="22">ஆனால் இயேசு கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாய் கிடைக்கும் வாக்குறுதி, விசுவாசிக்கின்றவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக வேதவசனமானது அனைத்தையும் பாவத்தின் கீழ் சிறை வைத்துவிட்டது.</verse>
				<verse number="23">விசுவாசம் வருவதற்கு முன்னதாக நாம் நீதிச்சட்டத்தினால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களாய், அந்த விசுவாசம் வெளிப்படுத்தப்படும் வரை அவதானத்துடன் காவல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தோம்.</verse>
				<verse number="24">நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும் பொருட்டு, கிறிஸ்துவின் காலம் வரும் வரையிலும் நீதிச்சட்டமானது எமக்கு ஒரு பிள்ளை பராமரிப்பாளரைப் போல இருந்தது.</verse>
				<verse number="25">ஆனால் இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டது என்பதனால் நாங்கள் இனிமேல் பிள்ளைப் பராமரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இல்லை.</verse>
				<verse number="26">நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின் மூலமாய், இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="27">ஏனெனில் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை ஆடையாய் அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="28">உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ, அடிமை அல்லாதவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வேற்றுமை இல்லாதபடி நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="29">நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்கின்றீர்களா? அப்படியானால் ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குறுதியின்படி சொத்துரிமை உடையவர்களாகவும் இருக்கின்றீர்கள்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">சொத்துரிமை உடையவன் சொத்து முழுவதற்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் பிள்ளைப் பருவத்தைக் கடக்கும் வரை ஒரு அடிமைக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லை.</verse>
				<verse number="2">எனவே அவனுடைய தந்தை நியமித்திருக்கும் காலம் நிறைவேறும் வரை, அவனது பாதுகாவலர்களுக்கும், அவனது நிதியை நிர்வகிப்பவர்களுக்கும் அவன் கீழ்ப்பட்டவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="3">இவ்விதமாய் நாமும் பிள்ளைகளாய் இருந்தபோது உலகத்தின் மூலக்கோட்பாடுகளுக்கு அடிமைப்பட்டிருந்தோம்.</verse>
				<verse number="4">குறித்த காலம் பூர்த்தியானபோது இறைவன் தம்முடைய மகனை பெண்ணிடத்தில் பிறக்கின்ற ஒருவராகவும், நீதிச்சட்டத்திற்கு கீழ்ப்பட்ட ஒருவராகவும் அனுப்பினார்.</verse>
				<verse number="5">நீதிச்சட்டத்திற்கு கீழ்ப்பட்டவர்களை மீட்பதற்காகவும், அவருடைய பிள்ளைகளாக நாம் தத்தெடுக்கப்படவுமே அவர் இதைச் செய்தார்.</verse>
				<verse number="6">நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதனால், “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகின்ற தமது மகனுடைய ஆவியை இறைவன் உங்களுடைய இருதயங்களுக்குள் அனுப்பி இருக்கின்றார்.</verse>
				<verse number="7">ஆகவே இனியும் நீங்கள் அடிமை அல்ல அவருடைய பிள்ளையாய் இருக்கின்றீர்கள். பிள்ளையாய் இருப்பதனால் இறைவனுக்கு ஊடாக சொத்துரிமை உடையவராகவும் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="8">முன்பு நீங்கள் இறைவனை அறியாதிருந்தபோது இயல்பாகவே தெய்வங்கள் அல்லாதவைகளுக்கு அடிமைகளாக இருந்தீர்கள்.</verse>
				<verse number="9">ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனை அறிந்திருக்கிறீர்கள், அதைவிட மேலாக அவரால் அறியப்பட்டும் இருக்கின்றீர்கள். இப்படியிருக்க, பலவீனமானதும் பெறுமதியற்றதுமான உலகத்தின் மூலக்கோட்பாடுகளுக்கு மீண்டும் செல்வது ஏன்? அவைகளுக்கு மீண்டும் அடிமைகளாக விரும்புகிறீர்களா?</verse>
				<verse number="10">நீங்கள் விசேட நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருடங்களையும் அனுசரித்து நடக்கின்றீர்களே!</verse>
				<verse number="11">நான் உங்களுக்காக துன்பதுயரங்களுடன் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன்.</verse>
				<verse number="12">பிரியமானவர்களே, என்னைப் போல் ஆகுங்கள் என்று உங்களைக் கேட்கின்றேன், ஏனெனில் நானும் உங்களைப் போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை.</verse>
				<verse number="13">நீங்கள் அறிந்திருக்கின்றபடி, எனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணத்தினாலேயே முதன்முதலில் உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்க முடிந்தது.</verse>
				<verse number="14">என்னுடைய உடல்நிலை உங்களுக்கு சோதனையாக இருந்தபோதும், நீங்கள் என்னை வெறுக்கவோ புறந்தள்ளவோ இல்லை. மாறாக இறைவனின் ஒரு தூதனைப் போலவும் கிறிஸ்து இயேசுவைப் போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.</verse>
				<verse number="15">அப்போது உங்களிடம் இருந்த ஆனந்தம் எங்கே? முடிந்தால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று சாட்சி கூறுவேன்.</verse>
				<verse number="16">சத்தியத்தை சொன்னதனாலே நான் உங்களுக்குப் பகைவன் ஆனேனா?</verse>
				<verse number="17">உங்கள் மீது அதிக அக்கறை காட்டுகின்ற அவர்கள் நல்ல நோக்கத்தோடு அன்றி, எங்களிடமிருந்து உங்களைப் பிரித்து நீங்கள் அவர்களில் அதிக ஆர்வம்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்கின்றார்கள்.</verse>
				<verse number="18">நல்ல நோக்கத்துக்காக அக்கறை காட்டுவது எப்போதும் நல்லது. ஆனால் நான் உங்களுடன் இருக்கும்போது மாத்திரம் அவர்கள் அக்கறை காட்டுவது முறையல்ல.</verse>
				<verse number="19">என் பிள்ளைகளே! கிறிஸ்து உங்களில் உருவாகும் வரைக்கும் உங்களுக்காக நான் பிரசவ வேதனைப்படுகிறேன்.</verse>
				<verse number="20">இப்போது நேரில் வந்து உங்களுடன் நல்லவிதமாகப் பேச அதிகம் விரும்புகிறேன். ஏனெனில் உங்களைக் குறித்து நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறேன்.</verse>
				<verse number="21">நீதிச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகின்ற நீங்கள், நீதிச்சட்டம் சொல்வதை அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள்.</verse>
				<verse number="22">ஆபிரகாமுக்கு இரண்டு மகன்மார் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தவன், மற்றவன் அடிமையல்லாத பெண்ணிடத்தில் பிறந்தவன் என்றும் எழுதப்பட்டிருக்கின்றதே.</verse>
				<verse number="23">அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவருடைய மகன் மனித விருப்பத்தின்படி பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவருடைய மகனோ இறைவனின் வாக்குறுதியின்படி பிறந்தான்.</verse>
				<verse number="24">இதை ஒரு உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும் இரண்டு உடன்படிக்கைகளுக்கு ஒத்திருக்கிறார்கள். ஒன்று சீனாய் மலையில் இருந்து வந்தது. அது அடிமைத்தனத்தின் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கின்றது.</verse>
				<verse number="25">அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு அடையாளமாய் இருப்பவள் ஆகார். அவள் இப்போது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கின்றாள். ஏனெனில் எருசலேமும் அதன் பிள்ளைகளுடன் அடிமைத்தனத்துக்குள் இருக்கின்றதே!</verse>
				<verse number="26">ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்திரமானவள். அவளே நம்முடைய தாய்.</verse>
				<verse number="27">ஏனெனில், “குழந்தைப் பேறு அற்றவளான பெண்ணே, நீ சந்தோஷப்படு; பிரசவ வேதனையை அனுபவிக்காதவளே, நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு; ஏனெனில், தன் கணவனுடன் வாழும் பெண்ணுக்கு இருப்பதைவிட, கைவிடப்பட்ட பெண்ணுக்கே அதிகமான பிள்ளைகள் இருக்கின்றார்கள்” என்று எழுதியிருக்கின்றதே.</verse>
				<verse number="28">பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குறுதியின் பிள்ளைகளாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="29">அக்காலத்தில் மனித விருப்பத்தின்படி பிறந்த மகன் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே இப்போதும் நடைபெறுகிறது.</verse>
				<verse number="30">ஆனால் வேதவசனம் என்ன சொல்கின்றது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பி விடு. ஏனெனில், அடிமைப் பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.”</verse>
				<verse number="31">ஆகவே பிரியமானவர்களே, நாம் அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் பிள்ளைகள்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">நாம் சுதந்திரமுடையவர்களாய் இருப்பதற்காகவே கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியிருக்கிறார். எனவே நீங்கள் உறுதியாய் நிலைத்திருங்கள். மீண்டும் நீங்கள் உங்களை அடிமைத்தன நுகத்தின் சுமைக்கு உட்படுத்தாதபடி காத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="2">பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்கின்றேன். நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்வதை ஏற்றுக்கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை.</verse>
				<verse number="3">நான் மீண்டும் சொல்கின்றேன், விருத்தசேதனம் செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவனும் நீதிச்சட்டம் முழுவதையும் கைக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறான்.</verse>
				<verse number="4">நீதிச்சட்டத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படுவதே வழியென்று நீங்கள் எண்ணினால் கிறிஸ்துவை விட்டொதுங்கி கிருபையிலிருந்து வீழ்ந்துவிட்டீர்கள்.</verse>
				<verse number="5">ஆனால் நாங்களோ, எதிர்பார்த்திருக்கும் நீதிக்காக பரிசுத்த ஆவியானவர் மூலமாய் விசுவாசத்தில் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.</verse>
				<verse number="6">ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமோ, விருத்தசேதனம் இல்லாமையோ ஒன்றுமில்லை. அன்பினால் செயற்படும் விசுவாசமே பயனுள்ளது.</verse>
				<verse number="7">இந்தப் பந்தயத்தில் நீங்கள் நன்றாய் ஓடிக் கொண்டிருந்தீர்கள். சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடை செய்தது யார்?</verse>
				<verse number="8">இவ்விதமாக செயற்படுவதற்கான தூண்டுதல் உங்களை அழைத்தவரிடம் இருந்து வந்ததல்ல.</verse>
				<verse number="9">“ஒரு சிறிதளவு புளித்த மாவானது பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்கி விடுகிறது.”</verse>
				<verse number="10">என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட எதையும் நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நான் உங்களைக் குறித்து கர்த்தரில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களைக் குழப்பமடையச் செய்கின்றவன் யாராயிருந்தாலும் அவன் தண்டனை அனுபவிப்பான்.</verse>
				<verse number="11">பிரியமானவர்களே, விருத்தசேதனம் அவசியமென்று சொல்லி நான் இன்னும் பிரசங்கித்தேன் என்றால், ஏன் நான் இன்னும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? அப்படிப் பிரசங்கித்திருந்தால் சிலுவையின் பொருட்டு உண்டாகும் எதிர்ப்பு நீங்கியிருக்குமே.</verse>
				<verse number="12">உங்களைக் குழப்பமடையச் செய்கின்றவர்களோ தங்களது ஆணுறுப்பை சேதம் செய்துகொள்ளட்டும்.</verse>
				<verse number="13">எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் சுதந்திரத்தை, பாவ மனித இயல்பை அனுபவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தாமல் அன்பினாலே ஒருவருக்கு ஒருவர் பணி செய்யுங்கள்.</verse>
				<verse number="14">“நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” என்ற ஒரே கட்டளையின் ஊடாக நீதிச்சட்டம் முழுவதுமே நிறைவேற்றப்படுகிறது.</verse>
				<verse number="15">ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து கடித்து விழுங்குகிற செயலை நிறுத்தாவிட்டால், நீங்கள் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள், எனவே கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="16">எனவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுங்கள். அப்போது பாவ மனித இயல்பின் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள மாட்டீர்கள்.</verse>
				<verse number="17">ஏனெனில் பாவ மனித இயல்பின் ஆசைகள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவைகளாகவும், பரிசுத்த ஆவியானவரின் ஆசைகள் பாவ மனித இயல்புக்கு எதிரானவைகளாகவும் உள்ளன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="18">ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டால், நீதிச்சட்டத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல.</verse>
				<verse number="19">பாவ மனித இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை. பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கை,</verse>
				<verse number="20">விக்கிரக வழிபாடு, மாந்திரீகம், பகைமை, தகராறு, அதீத பற்று, கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள்,</verse>
				<verse number="21">பொறாமை, குடிவெறி, ஒழுக்கக்கேடான களியாட்டம் போன்றவைகளே அவையாகும். நான் உங்களை முன்பு எச்சரித்தது போலவே இப்போதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றவர்கள் இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை.</verse>
				<verse number="22">ஆனால் ஆவியானவரின் கனியோ அன்பு, மனமகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், நம்பகத் தன்மை,</verse>
				<verse number="23">சாந்தகுணம், சுயகட்டுப்பாடு என்பனவாகும். இவைகளுக்கு முரணான எந்தவித சட்டமும் இல்லை.</verse>
				<verse number="24">கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் பாவ மனித இயல்பை அதன் தீவிர ஆசைகளோடும், முறைகேடான விருப்பங்களோடும் சேர்த்து சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="25">நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்பவர்களெனில், ஆவியானவருடனே ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைப்போமாக.</verse>
				<verse number="26">நாம் வீண்பெருமை கொள்ளாமலும், மற்றவர்களை எரிச்சல் மூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருப்போம்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">பிரியமானவர்களே, எவராவது பாவச் செயல்களில் ஒன்றில் ஈடுபட்டு அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவரை சாந்தமுள்ள மனதோடு மீண்டும் நல்வழிக்குக் கொண்டுவர வேண்டும். நீங்களும் சோதனைக்கு உள்ளாகாதபடி உங்களைக் குறித்து கவனமாக இருங்கள்.</verse>
				<verse number="2">ஒருவர் சுமையை இன்னொருவர் சுமந்து, கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுங்கள்.</verse>
				<verse number="3">உண்மையில் வெற்று மனிதனாக இருக்கும் ஒருவன் தன்னை மேன்மையானவனாக எண்ணிக்கொண்டால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான்.</verse>
				<verse number="4">ஒவ்வொருவனும் தான் செய்வதை தானே பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அப்போது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடாமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே பெருமையடையலாம்.</verse>
				<verse number="5">ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளியாவான்.</verse>
				<verse number="6">இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கின்றவர்கள், கற்பிக்கின்றவர்களுடன் தம்மிடமுள்ள சகல நன்மைகளையும் பகிர்ந்துகொள்வார்களாக.</verse>
				<verse number="7">ஏமாற வேண்டாம்; இறைவனை ஏளனத்துக்கு உள்ளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதனையே அறுவடை செய்வான்.</verse>
				<verse number="8">தன்னுடைய பாவ மனித இயல்புக்கு இசைவாக விதைக்கிற ஒருவன், பாவ மனித இயல்பிலிருந்து அழிவையே அறுவடை செய்வான். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் விருப்பத்தின்படி விதைக்கிற ஒருவனோ பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடை செய்வான்.</verse>
				<verse number="9">நன்மை செய்வதை விட்டுவிடாமல் அதில் சோர்வடையாதவர்களாய் இருந்தால், ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.</verse>
				<verse number="10">ஆகவே நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எல்லா மக்களுக்கும், விசேடமாக விசுவாச குடும்பத்தினருக்கு நன்மையை செய்வோமாக.</verse>
				<verse number="11">என்னுடைய சொந்தக் கைப்பட எவ்வளவு பெரிய எழுத்துக்களால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன் என்பதைப் பாருங்கள்.</verse>
				<verse number="12">தங்கள் மனித இயல்பின் ஊடாக நல்லதொரு வெளித் தோற்றத்தைக் காண்பிக்க முயலுகின்றவர்களே விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவினுடைய சிலுவையின் பொருட்டு துன்புறுத்தப்படாதபடியே இப்படிச் செய்கின்றார்கள்.</verse>
				<verse number="13">விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே நீதிச்சட்டத்தைக் கைக்கொள்ளாத போதிலும், உங்களுடைய உடலில் தாங்கள் பெருமிதமடைவதற்காகவே நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்வதை அவர்கள் விரும்புகிறார்கள்.</verse>
				<verse number="14">ஆனால் நானோ, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைத் தவிர வேறு எதைக் குறித்தும் பெருமைகொள்வதில்லை. அவரால் இந்த உலகமானது என்னைப் பொறுத்தவரையில் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்தைப் பொறுத்தவரையில் சிலுவையில் அறையப்பட்டவனாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="15">விருத்தசேதனம் செய்துகொள்வதோ, செய்யாமல் இருப்பதோ முக்கியமானவை அல்ல. புதிய படைப்பாவதே முக்கியமானது.</verse>
				<verse number="16">இந்த ஒழுங்குவிதிப்படி நடக்கின்ற அனைவர் மேலும், இறைவனுடைய இஸ்ரயேலர்கள் மேலும் சமாதானமும் இரக்கமும் உண்டாவதாக.</verse>
				<verse number="17">இனிமேலாவது ஒருவனும் எனக்குத் துன்பம் உண்டாக்காதிருக்கட்டும். ஏனெனில் இயேசுவின் தழும்புகளை நான் என் உடலில் சுமக்கின்றேனே.</verse>
				<verse number="18">பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="49">
			<chapter number="1">
				<verse number="1">இறைவனுடைய விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும் பவுல், எபேசு பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களாய் இருக்கின்ற பரிசுத்தவான்களுக்கு எழுதுகின்றதாவது:</verse>
				<verse number="2">நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="3">நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருக்கின்றவர் துதிக்கப்படுவாராக. அவர் பரலோகத்தில் உள்ள எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் கிறிஸ்துவில் இணைந்திருக்கின்ற நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.</verse>
				<verse number="4">நாம் இறைவனுடைய பார்வையிலே பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருக்க வேண்டும் என்பதற்காக உலகம் படைக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் நம்மை கிறிஸ்துவுக்குள் தெரிவு செய்தார். இறைவன் தம்முடைய அன்பின் காரணமாக,</verse>
				<verse number="5">இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவருடைய சொந்த பிள்ளைகளாக தத்தெடுத்துக்கொள்ள நம்மை முன்கூட்டியே நியமித்தார். இதை அவர் தமது சித்தத்தின்படியும், விருப்பத்தின்படியும் செய்தார்.</verse>
				<verse number="6">தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில் நமக்குத் தாராளமாக வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் காரணமாக, அவர் புகழப்படும்படியாக இதைச் செய்தார்.</verse>
				<verse number="7">இறைவனுடைய அளவற்ற மிகுந்த கிருபையின்படி, கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக அவராலேயே நமக்கு மீட்பு கிடைக்கிறது. அதனூடாக பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகிறோம்.</verse>
				<verse number="8">இறைவன் அந்தக் கிருபையை எல்லா ஞானத்துடனும், புரிந்துகொள்ளும் ஆற்றலுடனும் சேர்த்து நமக்கு நிறைவாகக் கொடுத்து,</verse>
				<verse number="9">தமது திட்டத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தினார். அத்திட்டமானது தமது விருப்பத்தின்படி கிறிஸ்துவுக்குள்ளாக அவர் செய்ய இருந்த அவருடைய நோக்கமாக இருந்தது.</verse>
				<verse number="10">அதன்படி, காலங்கள் நிறைவேறும்போது பரலோகத்திலும் உலகத்திலும் உள்ள எல்லாவற்றையும் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஒன்றுசேர்ப்பதே அந்தத் திட்டம்.</verse>
				<verse number="11">தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகின்ற இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்கூட்டியே நியமிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்கூடாக உரிமைச் சொத்தொன்றைப் பெற்றிருக்கிறோம்.</verse>
				<verse number="12">இதனால், கிறிஸ்துவில் முதன்முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் இறைவனுடைய மகிமைக்குப் புகழ் உண்டாக்குகின்றவர்களாய் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.</verse>
				<verse number="13">அப்படியே, நீங்களும் சத்திய வார்த்தையை, அதாவது உங்களுக்கு மீட்பைக் கொடுக்கின்ற நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்தபோது, வாக்குறுதி அளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே அவரில் முத்திரை அடையாளம் இடப்பட்டீர்கள்.</verse>
				<verse number="14">இறைவனுக்கு உரியவர்களாகிய நாம் மீட்கப்பட்டு நமக்குரிய உரிமைச் சொத்தை அடையும் வரை, பரிசுத்த ஆவியானவரே நாம் அதை அடைவதற்குரிய உத்தரவாதமாய் இருக்கின்றார். இறைவனுடைய மகிமைக்கு புகழ் உண்டாகவே இப்படிச் செய்தார்.</verse>
				<verse number="15">இக்காரணத்தினாலே ஆண்டவர் இயேசுவில் நீங்கள் வைத்திருக்கின்ற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர் மீதும் உங்களுக்கிருக்கின்ற அன்பையும் குறித்து நான் கேள்விப்பட்டதிலிருந்து,</verse>
				<verse number="16">உங்களை என் மன்றாடுதல்களில் நினைவுகூர்ந்து உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="17">நீங்கள் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறைவனாயிருக்கின்ற மகிமையுள்ள பிதாவை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள அவர் ஞானத்தையும் வெளிப்படுத்துதலையும் கொடுக்கும் ஆவியை உங்களுக்குத் தர வேண்டும் என மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="18">உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்திருக்கின்ற அந்த எதிர்பார்ப்பையும், பரிசுத்தவான்களால் அவருக்குக் கிடைக்கின்ற மகிமையான உரிமைச் சொத்தின் உயர்மதிப்பையும்,</verse>
				<verse number="19">அத்துடன் எந்த வல்லமையை கிறிஸ்துவில் செயற்படுத்தி, அவரை மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, பரலோக அரசிலே தமது வலது பக்கத்தில் இறைவன் உட்கார வைக்க பயன்படுத்தினாரோ,</verse>
				<verse number="20">அதே பெரிதான, அளவிட முடியாத வல்லமையை விசுவாசிக்கின்றவர்களாகிய நமக்கும் இறைவன் கொடுத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.</verse>
				<verse number="21">இவ்விதமாகவே, இந்தக் காலத்துக்கு மட்டுமல்ல இனி வரப்போகும் காலத்துக்கும் உரிய எல்லா ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் அரசாட்சிக்கும், மற்றும் பெயரிடப்பட்டிருக்கும் எல்லாப் பெயர்களுக்கும் மேலாக இறைவன் கிறிஸ்துவை உயர்த்தினார்.</verse>
				<verse number="22">மேலும், எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, திருச்சபையின் நலனுக்காக அனைத்தையும் ஆளுகை செய்கின்ற தலைமையாக அவரை நியமித்தார்.</verse>
				<verse number="23">அவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகின்றவர்; அவருடைய உடலாகிய திருச்சபை அவரால் முழுநிறைவடைகிறது.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">நீங்களோ ஒரு காலத்தில் உங்கள் நெறிமீறுதல்களினாலும் பாவங்களாலும் உயிரற்ற நிலையில் இருந்து,</verse>
				<verse number="2">அவற்றில் வாழ்ந்து வந்தீர்கள். இந்த உலகத்தின் வழிமுறைகளைக் கைக்கொண்டு, ஆகாயத்து ஆட்சியாளனின் வழிகளுக்கேற்ப வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அந்தத் தீய ஆவியானது இப்போது கீழ்ப்படியாதவர்களில் செயலாற்றுகிறது.</verse>
				<verse number="3">நமது பாவ மனித இயல்பிலிருந்து எழும் ஆசைகளின்படி வாழ்ந்து, எமது உடலிலும் சிந்தனையிலும் இருந்து எழுகின்ற இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றவர்களாக ஒரு காலத்தில் நாம் எல்லோரும் அவர்களிடையே வாழ்ந்து வந்தோம். அவர்களைப் போலவே நாமும் இறைவனுடைய கோபத்துக்கு உட்பட்டவர்களாய் இருந்தோம்.</verse>
				<verse number="4">ஆனால் மிகுந்த இரக்கமுடைய இறைவன், நம்மீது கொண்ட மிகுந்த அன்பின் காரணமாக,</verse>
				<verse number="5">நெறிமீறுதல்களினால் உயிரற்ற நிலையில் இருந்த நம்மை கிறிஸ்துவுடன் உயிரடையச் செய்தார். இறைவனுடைய கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டு இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="6">கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கின்ற நம்மை உயிருடன் எழுப்பி, அவரோடு பரலோகத்தின் உயர்வான இடங்களில் அமரும்படி செய்தார்.</verse>
				<verse number="7">கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கின்ற நமக்கு, அவர் காட்டிய தயவின் மூலமாக அவரது கிருபையின் அளவற்ற நிறைவை இனிவரும் காலங்களில் காண்பிக்கும்படியாகவே இதைச் செய்தார்.</verse>
				<verse number="8">விசுவாசத்தின் மூலமாய், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானது அல்ல. இது இறைவனுடைய கொடை.</verse>
				<verse number="9">இது மனித செய்கைகளினால் வந்தது அல்ல. ஆகையால் இதைக் குறித்து ஒருவரும் பெருமை பாராட்ட முடியாது.</verse>
				<verse number="10">ஏனெனில், நாம் செய்யும்படி இறைவனால் முன்னரே ஆயத்தம் செய்யப்பட்டதான நற்செயல்களைச் செய்கின்றவர்களாய் நாம் வாழும்படி, கிறிஸ்து இயேசுவில் படைக்கப்பட்ட இறைவனது கைவண்ணமாக நாம் இருக்கின்றோம்.</verse>
				<verse number="11">ஆகையால், தங்களை “விருத்தசேதனம் பெற்றவர்கள்” என்று சொல்லிக்கொள்பவர்களால், “விருத்தசேதனம் அற்றவர்கள்” என ஒரு காலத்தில் நீங்கள் அழைக்கப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களது விருத்தசேதனமோ மனித கைகளால் உடலில் மாத்திரம் செய்யப்பட்ட ஒன்று.</verse>
				<verse number="12">அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவோடு தொடர்பு இல்லாதவர்களாகவும், தெரிவு செய்யப்பட்ட மக்களாகிய இஸ்ரயேலருக்குரிய குடியுரிமை அற்றவர்களாகவும், வாக்குறுதியின் உடன்படிக்கைகளை பொறுத்தவரை அந்நியர்களாகவும், எதிர்பார்ப்பு இல்லாதவர்களாகவும், இறைவன் அற்றவர்களாகவும் இந்த உலகத்தில் வாழ்ந்தீர்கள்.</verse>
				<verse number="13">ஆனாலும், ஒரு காலத்தில் தூரமாய் இருந்த நீங்கள், இப்போது இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, கிறிஸ்துவின் இரத்தத்தால் அருகில் வந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="14">ஏனெனில் இரு பிரிவினராக இருந்த நம்மிடையே உள்ள சமாதானம் கிறிஸ்துவே. அவரே இரு பிரிவினரையும் ஒன்றாக்கித் தடையாயிருந்த பகைமைச் சுவரைத் தமது சரீர மரணத்தினாலே தகர்த்து,</verse>
				<verse number="15">கட்டளைகளும் விதிமுறைகளும் அடங்கிய நீதிச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்கினார். இந்த இரு பிரிவினரையும் தம்மில் இணைந்திருக்கும் ஒரு புது மனித இனமாக உருவாக்கி, சமாதானத்தை ஏற்படுத்தவே அப்படிச் செய்தார்.</verse>
				<verse number="16">தமது சிலுவை மரணத்தினால் இரு பிரிவினரையும் ஒரே உடலில் இறைவனுடன் ஒப்புரவாக்கி, அதனூடாக அவர்களிடையில் உள்ள பகைமையை கொன்று அழித்தார்.</verse>
				<verse number="17">அவர் வருகை தந்து, தூர விலகி இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும் சமாதானத்தை நற்செய்தியாகப் பிரசங்கித்தார்.</verse>
				<verse number="18">எனவே பிதாவை அணுகுகின்ற தகுதியை இரு பிரிவுகளைச் சேர்ந்த நாமும் ஒரே ஆவியானவரால் கிறிஸ்து மூலமாக பெற்றிருக்கிறோம்.</verse>
				<verse number="19">ஆகையால், யூதரல்லாதவர்களாகிய நீங்கள், இனி வெளிநாட்டவர்களோ தற்காலிக குடிமக்களோ அல்ல. இப்போது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாகவும், இறைவனுடைய குடும்ப அங்கத்தினர்களாகவும் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="20">மேலும், அப்போஸ்தலர்களையும் இறைவாக்கினர்களையும் அத்திவாரமாகக்கொண்டு கட்டப்பட்டு, கிறிஸ்து இயேசுவை அனைத்தையும் இணைக்கும் பிரதான மூலைக்கல்லாகக் கொண்ட கட்டடமாக இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="21">கிறிஸ்துவிலே அந்த முழுக் கட்டடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாகும்படி வளர்ச்சி பெறுகிறது.</verse>
				<verse number="22">கிறிஸ்துவிலே நீங்களும் இறைவன் குடியிருக்கும் இடமாக ஆவியானவரில் ஒன்றிணைத்து கட்டப்படுகின்றீர்கள்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">இதன் காரணமாகவே, யூதரல்லாத உங்களுக்காக பவுலாகிய நான் கிறிஸ்து இயேசுவின் கைதியாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="2">இறைவனின் கிருபையை உங்களுக்குக் கொண்டுவரும் பொறுப்பான வேலை எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.</verse>
				<verse number="3">முன்பு நான் சுருக்கமாய் எழுதியதைப் போலவே இந்த மறைபொருளானது வெளிப்படுத்தலின் மூலமாக எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது.</verse>
				<verse number="4">இதை வாசிக்கும்போது கிறிஸ்துவினுடைய மறைபொருளைக் குறித்து நான் பெற்றுள்ள நுண்ணறிவை நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.</verse>
				<verse number="5">இந்த மறைபொருள் இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது போல முன்னிருந்த தலைமுறையினருக்கு வெளிப்படுத்தப்படவில்லை.</verse>
				<verse number="6">நற்செய்தியின் ஊடாக, இஸ்ரயேல் மக்களைப் போன்றே யூதரல்லாத மக்களும் இறைவனின் உரிமைச் சொத்தில் கூட்டு வாரிசுகளாகவும், அவர்களோடு ஒரே உடலின் சக அங்கத்தினர்களாகவும், இயேசு கிறிஸ்துவுக்குள் இறைவனின் வாக்குறுதியில் ஒன்றிணைந்து பங்குகொள்கிறவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதே இந்த மறைபொருள்.</verse>
				<verse number="7">இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்ட அவரது கிருபையின் கொடையினால் நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன்.</verse>
				<verse number="8">இறைவனுடைய எல்லா மக்களையும்விட நான் குறைவானவனாக இருந்தும், கிறிஸ்துவின் அளவற்ற நிறைவைக் குறித்து யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்க இந்தக் கிருபை எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="9">மேலும், எல்லாவற்றையும் படைத்த இறைவனால் காலங்காலமாக மறைவாய் வைக்கப்பட்டிருந்த இந்த மறைபொருளின் திட்டத்தை எல்லோருக்கும் தெளிவுபடுத்தவும் இந்த ஊழியம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="10">இறைவனின் பலதரப்பட்ட ஞானத்தை, வான மண்டலங்களில் ஆளுகை செய்பவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் திருச்சபையின் மூலமாய் தெரியப்படுத்த வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும்.</verse>
				<verse number="11">இவ்விதமாக அவர் தமது நித்திய நோக்கத்தை நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றினார்.</verse>
				<verse number="12">கிறிஸ்து இயேசுவில் நமக்கிருக்கும் விசுவாசத்தினாலே, அவர் மூலமாக துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் இறைவனை நாம் அணுக முடிகின்றது.</verse>
				<verse number="13">எனவே உங்களுக்காக நான் அனுபவிக்கின்ற கஷ்டங்களே உங்களது பெருமையாய் இருப்பதனால், அவற்றைக் குறித்து நீங்கள் மனச்சோர்வு அடைய வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.</verse>
				<verse number="14">இந்தக் காரணத்துக்காக, பிதாவுக்கு முன்பாக முழந்தாழிட்டு மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="15">பரலோகத்திலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவரது வழித்தோன்றல்களாய் அவரிடமிருந்து தம் பெயரைப் பெறுகின்றன.</verse>
				<verse number="16">விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருக்கும்படி, இறைவன் தமது மகிமையின் நிறைவிலிருந்து தமது ஆவியானவர் மூலமாக வல்லமையைத் தந்து,</verse>
				<verse number="17">உங்கள் உள்ளார்ந்த மனிதனை உறுதியாகப் பலப்படுத்த வேண்டும் என்று அவரிடம் மன்றாடுகிறேன். இதனால் நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அத்திவாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="18">இவ்விதமாய் பரிசுத்தவான்கள் அனைவருடனும் சேர்ந்து, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு அகலமானது, நீளமானது, உயரமானது, ஆழமானது என்பதை விளங்கிக்கொள்ளும் வல்லமையை நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக,</verse>
				<verse number="19">அறிவாற்றல்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நீங்கள் இறைவனின் முழுநிறைவினால் முழுவதுமாய் நிரப்பப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="20">நமக்குள் செயலாற்றுகின்ற தம்முடைய வல்லமையினால், நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட அளவுக்கு எட்டாதளவு அதிகமாகச் செய்ய வல்லமையுள்ள அவருக்கே,</verse>
				<verse number="21">திருச்சபையில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக தலைமுறை தலைமுறை தோறும் என்றென்றுமாய் மகிமை உண்டாவதாக. ஆமென்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கின்ற நான் உங்களிடம் வேண்டிக்கொள்வதாவது: நீங்கள் இறைவனிடம் இருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடைய வாழ்க்கை வாழுங்கள்.</verse>
				<verse number="2">தாழ்மையும் சாந்தமும் நிறைந்தவர்களாய், பொறுமையுடன் அன்பினால் ஒருவர் மீது ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருந்து,</verse>
				<verse number="3">ஆவியானவரால் தரப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டை சமாதானத்தின் பிணைப்பினாலே காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்கின்றவர்களாக வாழுங்கள்.</verse>
				<verse number="4">நீங்கள் அழைக்கப்பட்டபோது ஒரே எதிர்பார்ப்பிற்கே அழைக்கப்பட்டது போல ஒரே உடலும் ஒரே ஆவியானவரும் உண்டு.</verse>
				<verse number="5">ஒரே கர்த்தரும் ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமுமே உண்டு.</verse>
				<verse number="6">எல்லாருக்கும் தந்தையாய் இருக்கின்றவரான ஒரே இறைவனும் இருக்கின்றார், அவர் எல்லோருக்கும் மேலாக இருந்து எல்லோரோடும் எல்லோருக்குள்ளும் செயலாற்றுகின்றவர்.</verse>
				<verse number="7">ஆனாலும் நம் ஒவ்வொருவருக்கும் அருளப்பட்டுள்ள கிருபை வரங்களோ, கிறிஸ்துவின் கொடைக்கு ஏற்ற அளவின்படி அருளப்பட்டுள்ளன.</verse>
				<verse number="8">அதனால்தான்: “அவர் மேலெழுந்து போனபோது, அநேகரைச் சிறைப்பிடித்து கைதிகளாகத் தம்முடன் கொண்டுசென்றார். மனிதருக்கு அவர் வரங்களையும் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="9">“அவர் மேலெழுந்து போனார்” என்றால், அதற்கு முன் அவர் பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்பது அர்த்தமாகிறது அல்லவா?</verse>
				<verse number="10">கீழே இறங்கிச் சென்றவரே பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பும் பொருட்டு எல்லா வானங்களுக்கும் மேலாக எழுந்து சென்றார்.</verse>
				<verse number="11">அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை இறைவாக்கினர்களாகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், இறை ஆசிரியர்களாகவும் திருச்சபைக்கு ஒப்புவித்தார்.</verse>
				<verse number="12">ஏனெனில், ஊழியத்தின் பணிகளைச் செய்வதற்கு இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதன் ஊடாக, கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையைக் கட்டியெழுப்புவதே அவரது நோக்கமாயிருந்தது.</verse>
				<verse number="13">இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப் பற்றிய அறிவிலும் விசுவாசத்திலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவைப் பெற்ற முதிர்ச்சியடைந்த மனிதராக வேண்டும் என்பதே அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.</verse>
				<verse number="14">அப்போது, நாம் தொடர்ந்தும் குழந்தைகளைப் போல் இருக்க மாட்டோம். அலைகளினால் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்படுவது போல், வெவ்வேறு போதனைகளாகிய காற்றினாலோ, மனிதரின் தந்திரமும் கபடமும் உள்ள ஏமாற்றும் சூழ்ச்சியினாலோ அலைக்கழிக்கப்பட மாட்டோம்.</verse>
				<verse number="15">மாறாக, அன்புடனே உண்மையைப் பேசுகின்றவர்களாய், நம் தலைவராயிருக்கின்ற கிறிஸ்துவுக்குள் எல்லா வகையிலும் வளர்ச்சியடைவோம்.</verse>
				<verse number="16">அவராலேயே முழு உடலும் மூட்டுகளினால் ஒன்றாக இணைக்கப்பட்டு, அங்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் முழு உடலும் வளர்ச்சியடையும் விதமாக அன்பில் கட்டப்படுகிறது.</verse>
				<verse number="17">எனவே, கர்த்தரில் இதை நான் வலியுறுத்திச் சொல்கின்றேன், நீங்கள் யூதரல்லாதவர்கள் வாழ்வது போல இனிமேல் வாழக் கூடாது, அவர்களது சிந்தனைகள் பயனற்றவை.</verse>
				<verse number="18">அவர்களுடைய பிடிவாதமான இருதயத்தின் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள அறிவீனத்தினால், அவர்களது சிந்தை புரிந்துகொள்ளும் தன்மை அற்றுப்போய் இருள் அடைந்துள்ளது. அவர்கள் இறைவன் தரும் வாழ்விலிருந்து தூர விலகி இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="19">அவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்களாகி, எல்லாவித அசுத்தமான செயல்களையும் ஆசை வெறியோடு செய்தவதற்காக தங்களை சிற்றின்பங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="20">ஆனால் நீங்களோ கிறிஸ்துவைப்பற்றி இவ்விதமாக அறிந்துகொள்ளவில்லை.</verse>
				<verse number="21">உண்மையில், நீங்கள் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டதும், போதிக்கப்பட்டதும் அவரில் இருக்கும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது.</verse>
				<verse number="22">உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், அது வஞ்சித்து கெடுக்கின்ற இச்சைகளால் சீர்கெடுவதால் உங்கள் பழைய மனித சுபாவத்தைக் களைந்துவிட வேண்டும் எனப் போதிக்கப்பட்டீர்கள்;</verse>
				<verse number="23">உங்கள் உள்ளத்தின் மனப்பான்மையில் நீங்கள் புதிதாக்கப்பட வேண்டும்.</verse>
				<verse number="24">இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிய மனிதனுக்குரிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="25">ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் பொய் சொல்வதைவிட்டு உங்கள் அயலவருடன் உண்மையையே பேச வேண்டும். ஏனெனில், நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தவர்களாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="26">“நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்துவிட வேண்டாம்.” பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணிய வேண்டும்.</verse>
				<verse number="27">பிசாசுக்கு ஒரு சந்தர்ப்பமும் கொடுக்க வேண்டாம்.</verse>
				<verse number="28">திருடன் இனி திருடக் கூடாது. மாறாக, அவன் தனது கைகளினால் பயனுள்ள வேலையைச் செய்து உழைத்து, தேவை உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.</verse>
				<verse number="29">தீமையான வார்த்தைகள் எதுவும் உங்கள் வாயிலிருந்து வெளியே வர வேண்டாம். மாறாக, கேட்பவர்கள் பயனடையும்படி அவர்களது தேவைக்கு ஏற்றவாறு, அவர்கள் வளர்ச்சியடைய உதவும் வார்த்தைகளையே பேசுங்கள்.</verse>
				<verse number="30">அத்துடன் இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துயரப்படுத்தாமல் இருங்கள், உங்கள் மீட்பின் நாளுக்காக அவரால் நீங்கள் முத்திரை இடப்பட்டுள்ளீர்கள்.</verse>
				<verse number="31">எல்லாவிதமான மனக்கசப்பு, சினம், கோபம், வாய்த் தர்க்கம், அவதூறான பேச்சு மற்றும் எல்லாவிதமான தீமையையும் விட்டுவிடுங்கள்.</verse>
				<verse number="32">ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும் மன உருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்தது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">ஆகவே, நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், அவருடைய மாதிரியைப் பின்பற்றுங்கள்.</verse>
				<verse number="2">கிறிஸ்து நம்மில் அன்பாயிருந்து, இறைவனுக்கு நறுமணமுள்ள காணிக்கையாகவும் பலியாகவும் நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். அதுபோல நீங்களும் அன்புள்ள வாழ்க்கை வாழுங்கள்.</verse>
				<verse number="3">பாலியல் ஒழுக்கக்கேடோ, எந்தவிதமான அசுத்தமோ, பேராசையோ எதைக் குறித்தும் உங்களுக்குள் ஒரு பேச்சும் அடிபடக் கூடாது. இப்படியாக பேசாமல் இருப்பதே இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு ஏற்றது.</verse>
				<verse number="4">அதேபோல, வெட்கக்கேடான செயலும், மூடத்தனமான பேச்சுக்களும், கீழ்த்தரமான கேலிப் பேச்சுக்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே ஏற்றது.</verse>
				<verse number="5">ஒழுக்கக்கேடாய் நடக்கின்றவனோ, தூய்மையற்றவனோ, சிலை வணக்கம் செய்பவனுக்கு ஒப்பாயிருக்கிற பேராசைக்காரனோ கிறிஸ்துவுக்கும் இறைவனுக்கும் உரிய அரசின் சொத்துரிமையில் எவ்வித பங்கும் பெறுவதில்லை; இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="6">வீண் வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இதன் காரணமாகவே, கீழ்ப்படியாதவர்கள்மீது இறைவனுடைய தண்டனை வருகின்றது.</verse>
				<verse number="7">எனவே, இப்படிப்பட்டவர்களோடு பங்காளிகளாய் இருக்க வேண்டாம்.</verse>
				<verse number="8">ஏனெனில் ஒரு காலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கின்றீர்கள். எனவே, வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள்.</verse>
				<verse number="9">(எல்லா நன்மையும் நீதியும் உண்மையும் வெளிச்சத்தின் கனியாக இருக்கின்றன)</verse>
				<verse number="10">எனவே, கர்த்தரை சந்தோஷப்படுத்துவது எது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="11">இருளின் பலனற்ற செயல்களில் பங்காளிகளாய் இருக்க வேண்டாம். மாறாக அவைகளை பகிரங்கப்படுத்துங்கள்.</verse>
				<verse number="12">ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்து சொல்வதற்குக்கூட வெட்கமாக இருக்கின்றது.</verse>
				<verse number="13">வெளிச்சத்தினால் உண்மை நிலை பகிரங்கமாகும்போது யாவும் வெளிப்படை ஆகின்றன.</verse>
				<verse number="14">ஏனெனில் தெளிவாய் வெளிப்படுத்தப்படுவதே வெளிச்சம். அதனால்தான், “நித்திரை செய்பவனே விழித்தெழு, இறந்தவர்களைவிட்டு உயிர்த்தெழு, கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்” என சொல்லப்பட்டுள்ளது.</verse>
				<verse number="15">எனவே நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள் என்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப் போல் வாழாமல், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள்.</verse>
				<verse number="16">நாட்கள் தீயதாக இருப்பதனால் கிடைக்கும் காலத்தை மிகவும் பயனுள்ளவிதத்தில் செலவிடுங்கள்.</verse>
				<verse number="17">அதனால், மதியற்றவர்களாய் நடக்காமல் அதற்குப் பதிலாக கர்த்தரின் விருப்பம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="18">மதுபானம் குடித்து வெறிகொள்ள வேண்டாம், அது சீர்கேட்டிற்கே வழிநடத்தும். மாறாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,</verse>
				<verse number="19">சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடு ஒருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள்.</verse>
				<verse number="20">நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் எப்போதும் எல்லாவற்றுக்காகவும் பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.</verse>
				<verse number="21">கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் காரணமாக ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.</verse>
				<verse number="22">எனவே மனைவியரே, ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள்.</verse>
				<verse number="23">ஏனெனில், கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பது போல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கின்றான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராகவும் இருக்கின்றார்.</verse>
				<verse number="24">அப்படியே, திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்க வேண்டும்.</verse>
				<verse number="25">கிறிஸ்து திருச்சபை மீது அன்பு காட்டி அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போல், கணவர்களே நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பாய் இருங்கள்.</verse>
				<verse number="26">திருச்சபையை வார்த்தையைக் கொண்டு தண்ணீரால் கழுவிச் சுத்திகரித்து, அதைப் பரிசுத்தம் ஆக்கும்படியாகவே அவர் தம்மை ஒப்புக்கொடுத்தார்.</verse>
				<verse number="27">எவ்வித கறையோ, சுருக்கமோ, வேறு எவ்வித குறையோ இல்லாமல் பரிசுத்தமும், குற்றமற்றதும், மகிமையானதுமான திருச்சபையாக அதைத் தம் முன் நிறுத்தவே தம்மை அதற்காக ஒப்புக்கொடுத்தார்.</verse>
				<verse number="28">இதேவிதமாக, கணவர்களும் தங்கள் சொந்த உடல் மீது அன்பு காட்டுவது போல் தங்கள் மனைவியர் மீது அன்பு காட்ட வேண்டும். தன் மனைவி மீது அன்பாயிருக்கின்றவன் தன்மீது அன்பாயிருக்கிறான்.</verse>
				<verse number="29">எவனும் தன் சொந்த உடலை ஒருபோதும் வெறுப்பதில்லை. மாறாக, தனது உடலுக்கு வேண்டியதைக் கொடுத்து அதைப் பராமரிப்பான். இதுபோலவே கிறிஸ்துவும் தமது திருச்சபையைப் பராமரிக்கிறார்.</verse>
				<verse number="30">நாமும் கிறிஸ்துவினுடைய உடலின் அங்கங்களாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="31">“இக்காரணத்தினால் ஒருவன் தன் தந்தையையும் தாயையும்விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான், இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள்.”</verse>
				<verse number="32">இது மிகவும் ஆழ்ந்த இரகசியம், இதை தெளிவுபடுத்திச் சொல்கின்றேன். உண்மையில் இது கிறிஸ்துவையும் திருச்சபையையும்பற்றிக் குறிப்பிடுகிறது.</verse>
				<verse number="33">எப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தன்மீது அன்பாயிருப்பது போல தன் மனைவி மீதும் அன்பாயிருக்க வேண்டும். மனைவியும் தன் கணவனை மதித்து நடக்க வேண்டும்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">பிள்ளைகளே! கர்த்தரைப் பின்பற்றுகின்றவர்களாக நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.</verse>
				<verse number="2">“உங்கள் தந்தையையும் தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குறுதியுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை.</verse>
				<verse number="3">“அதன்படி உங்களுக்கு நன்மை உண்டாகும்; இந்த உலகத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்” என்பதே அந்த வாக்குறுதி.</verse>
				<verse number="4">தந்தையரே! உங்கள் பிள்ளைகளுக்கு கோபமூட்டாதீர்கள். மாறாக, கர்த்தருக்குரிய முறையில் அவர்களை நெறிப்படுத்தி, அவரது அறிவுறுத்தல்களின்படி அவர்களைப் பராமரித்திடுங்கள்.</verse>
				<verse number="5">அடிமைகளே, நீங்கள் உண்மையான மனதுடன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல, இந்த உலகத்தில் உங்களுக்கு எஜமான்களாய் இருக்கின்றவர்களுக்கும் பணிவுடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள்.</verse>
				<verse number="6">தாம் மேற்பார்வை செய்யப்படும்போது மட்டும் கீழ்ப்படிகின்றவர்களைப் போலவோ அல்லது மனிதரை பிரியப்படுத்துவதற்காக மட்டும் கீழ்ப்படிகின்றவர்களைப் போலவோ இல்லாமல், இறைவனுடைய விருப்பத்தை முழு மனதோடு நிறைவேற்றும் கிறிஸ்துவின் அடிமைகளைப் போல கீழ்ப்படியுங்கள்.</verse>
				<verse number="7">நீங்கள் மனிதர்களுக்கு அல்ல, கர்த்தருக்குப் பணி செய்கின்றவர்களாக முழு உற்சாகத்தோடு பணி செய்யுங்கள்.</verse>
				<verse number="8">ஏனெனில் ஒருவன் அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக இருந்தாலும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் அதற்குரிய பலனை அவனவனுக்குக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="9">எஜமானரே, நீங்களும் உங்கள் அடிமைகளை அப்படியே நடத்துங்கள். அவர்களைப் பயமுறுத்த வேண்டாம். ஏனெனில், நீங்களும் அவர்களும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பக்கச்சார்பு அற்றவர் என்பதையும் அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="10">இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருங்கள்.</verse>
				<verse number="11">பிசாசின் தந்திரமான யுக்திகளை நீங்கள் எதிர்த்து நிற்கத் தக்கவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="12">ஏனெனில், நமக்கு இருக்கும் போராட்டம் மனிதர்களோடு அல்ல. அது தீமையான ஆளுகைகளுக்கும், உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருண்ட உலகில் ஆட்சி செய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதாகவும், வானமண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.</verse>
				<verse number="13">எனவே, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். அப்போது, தீமையின் நாளில் எதிரியின் தாக்குதலை எதிர்த்துப் போரிடவும், எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு உறுதியுடன் நிலைநிற்கவும் முடியும்.</verse>
				<verse number="14">ஆகவே உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள, சத்தியத்தை உங்கள் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டியாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்துகொண்டு,</verse>
				<verse number="15">சமாதான நற்செய்தியை அறிவிப்பதற்கான தயார் நிலையை உங்கள் காலணியாக அணிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="16">இவை அனைத்துடன், விசுவாசத்தை கேடயமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீயவன் எய்கின்ற நெருப்பு அம்புகளை உங்களால் அணைக்க முடியும்.</verse>
				<verse number="17">இரட்சிப்பைத் தலைக் கவசமாக அணிந்துகொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரால் தரப்பட்டிருக்கும் இறைவனுடைய வார்த்தையாகிய வாளை எடுத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="18">நீங்கள் அனைத்து வேளைகளிலும் எல்லாவிதமான மன்றாடல்களையும் வேண்டுதல்களையும் பரிசுத்த ஆவியானவரால் மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புடன் இருங்கள். பரிசுத்தவான்கள் அனைவருக்காகவும் எப்போதும் மன்றாடுங்கள்.</verse>
				<verse number="19">நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் நற்செய்தியின் மறைபொருளை தைரியமாக எடுத்துக் கூற, இறைவன் எனக்கு வார்த்தைகளைத் தரும்படி எனக்காகவும் மன்றாடுங்கள்.</verse>
				<verse number="20">அந்த நற்செய்திக்காகவே நான் இப்போது சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்ற இறை அரசின் ஒரு பிரதிநிதியாக இருக்கின்றேன். பேச வேண்டியவிதத்தில் நான் அதைத் தைரியமாக அறிவிக்க எனக்காக மன்றாடுங்கள்.</verse>
				<verse number="21">நமது அன்பு சகோதரனும், கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனுமான தீகிக்கு, என்னைப் பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பான். ஆகவே, நான் எப்படியிருக்கிறேன் என்றும் என்ன செய்கின்றேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.</verse>
				<verse number="22">நாங்கள் எப்படியிருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்லி, உங்கள் உள்ளங்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவே அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.</verse>
				<verse number="23">பிதாவாகிய இறைவனிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், விசுவாசத்தோடு இணைந்த அன்பும் சமாதானமும் சகோதரர் அனைவருக்கும் உரித்தாகட்டும்.</verse>
				<verse number="24">நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அழியாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.</verse>
			</chapter>
		</book>
		<book number="50">
			<chapter number="1">
				<verse number="1">பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவில் இணைந்திருக்கும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும், திருச்சபைத் தலைவர்களுக்கும், உதவி ஊழியர்களுக்கும், கிறிஸ்து இயேசுவின் அடிமைகளான பவுலும் தீமோத்தேயுவும் எழுதுவதாவது:</verse>
				<verse number="2">நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாகட்டும்.</verse>
				<verse number="3">நான் உங்களை நினைக்கும் போதெல்லாம் என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="4">உங்கள் எல்லோருக்காகவும் மன்றாடும் போதெல்லாம் எப்போதுமே மனமகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="5">ஏனெனில், முதல் நாளிலிருந்து இன்றுவரை நற்செய்திப் பணியில் நீங்கள் என்னோடு பங்காளர்களாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="6">உங்களில் இந்த நல்ல செயலைத் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசு திரும்பி வரும் நாள் வரை தொடர்ந்து செய்து முடிப்பார் என்ற மனவுறுதி எனக்கு உண்டு.</verse>
				<verse number="7">உங்கள் எல்லோரையும்பற்றி நான் இவ்வாறு நினைப்பது சரியானதே. ஏனெனில், நீங்கள் என் இருதயத்தில் இடம் பிடித்துவிட்டீர்கள். அத்துடன், என் சிறைவாசத்திலும் நற்செய்திக்காக நான் வாதிட்டுப் பேசி அதை உறுதி செய்வதிலும், எனக்கு இறைவன் அளித்த கிருபையில் நீங்கள் எல்லோரும் பங்குள்ளவர்களாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="8">கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே கனிவான அன்போடு உங்கள் எல்லோரையும் காண நான் எவ்வளவு ஆவலாக இருக்கின்றேன் என்பதற்கு இறைவனே சாட்சியாயிருக்கிறார்.</verse>
				<verse number="9">உங்கள் அன்பானது, அறிவாற்றலிலும் ஆழமான பகுத்தறிவிலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகுவதால்,</verse>
				<verse number="10">மிகச் சிறந்தது எதுவென நீங்கள் நிதானித்து அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுகிறேன். இதனால், கிறிஸ்து திரும்பி வரும் நாள் வரை தூய்மை உள்ளவர்களாகவும் குற்றம் சுமத்தப்படாதவர்களாகவும் வாழ்ந்து,</verse>
				<verse number="11">இறைவனுக்கு மகிமையையும் துதியையும் கொண்டுவரும்படி, இயேசு கிறிஸ்துவினால் வரும் நற்குணவியல்புகளால் நிறைந்தவர்களாய் இருக்க வேண்டும் என்பதே எனது மன்றாடல்.</verse>
				<verse number="12">பிரியமான சகோதர சகோதரிகளே, எனக்கு நடந்தவை உண்மையிலே நற்செய்தியானது தடைகளைத் தாண்டி பரவுவதற்கு உதவியாக இருந்தது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.</verse>
				<verse number="13">ஏனெனில் கிறிஸ்துவுக்காகவே நான் சிறையில் பிணைக்கப்பட்டிருக்கிறேன் என்பது அரண்மனைக் காவலர்கள் அனைவருக்கும், மற்றவர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.</verse>
				<verse number="14">மேலும் நான் சிறைக் கைதியாய் இருப்பதால், சகோதரர்களில் அநேகர் நற்செய்தியை இன்னும் பயமின்றி தைரியமாய் அறிவிக்க கர்த்தரிடத்தில் உறுதி அடைந்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="15">ஒரு சாரார் பொறாமையினாலும் போட்டி மனப்பான்மையினாலும் கிறிஸ்துவை அறிவிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் வேறு சிலரோ நல்ல எண்ணத்துடன் அறிவிக்கிறார்கள்.</verse>
				<verse number="16">இப்படிப்பட்டவர்கள் அதை அன்புடன் செய்கின்றார்கள். ஏனெனில் நற்செய்தியின் சார்பாக வாதாடியதாலே நான் இங்கே வைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="17">ஆனால் முதல் சாராரோ, சிறையில் பிணைத்து வைக்கப்பட்டுள்ள எனக்கு கஷ்டத்தை வருவிக்கும் எண்ணத்துடனேயே, இதய சுத்தி இல்லாது சுயநல நோக்கத்துடன் கிறிஸ்துவை அறிவிக்கிறார்கள்.</verse>
				<verse number="18">அதனால் என்ன? வஞ்சக நோக்கத்துடனோ, உண்மையான நோக்கத்துடனோ எல்லாவிதத்திலும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார், இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆமாம், இனிமேலும் தொடர்ந்தும் மகிழ்ச்சியடைவேன்.</verse>
				<verse number="19">ஏனெனில், உங்கள் மன்றாடுதலின் மூலமும், இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியின் மூலமும் இவை என் மீட்புக்கு வழியமைக்கும் என்று அறிவேன்.</verse>
				<verse number="20">நான் எந்த விதத்திலும் வெட்கித் தலைகுனிந்து போகக் கூடாது என்பதே எனது ஆவலும் எதிர்பார்ப்புமாக இருக்கின்றது. மாறாக நான் வாழ்ந்தாலும், இறந்தாலும் எப்போதும் போல இப்போதும் கிறிஸ்து என் வாழ்வினாலே மகிமைப்படுவதற்கு தேவையான முழு தைரியத்தைக் கொண்டவனாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="21">ஏனெனில், நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அதுவும் எனக்கு இலாபமே.</verse>
				<verse number="22">ஆனாலும், இந்த உடலில் நான் தொடர்ந்து உயிர் வாழ்ந்து வந்தால் பலன் தரும் பணி செய்ய முடியும். ஆகவே நான் எதைத் தெரிவு செய்வது என்று எனக்கே தெரியவில்லை.</verse>
				<verse number="23">இந்த இரண்டுக்கும் இடையே நான் சிக்குண்டு இருக்கின்றேன். இந்த உடலைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன், அதுவே மிகச் சிறந்தது.</verse>
				<verse number="24">ஆனாலும் உங்களுக்காக நான் இந்த உடலில் இருப்பது அதைவிட மிகவும் அவசியமாக இருக்கின்றது.</verse>
				<verse number="25">இதை நான் உறுதியாக நம்புவதால், உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் விசுவாசத்தினால் மனமகிழ்ச்சி பெருகுவதற்காகவும் பணி செய்ய உங்களுடன் நான் தொடர்ந்தும் இருப்பேன் என்று அறிவேன்.</verse>
				<verse number="26">எனவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால் என் பொருட்டு கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு அதிக மகிழ்ச்சிப் பெருமிதம் ஏற்படும்.</verse>
				<verse number="27">என்னதான் நடந்தாலும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு தகுதியுடைய விதத்தில் நடந்துகொள்ளுங்கள். அப்போது நான் உங்களைப் பார்க்க நேரில் வர முடிந்தாலும், வர முடியாத சந்தர்ப்பத்தில் உங்களைக் குறித்துக் கேள்விப்பட நேர்ந்தாலும், நீங்கள் நற்செய்தியின் விசுவாசத்திற்காக ஒரே ஆவியோடும் ஒரே மனதோடும் உறுதியாக நின்று ஒன்றுசேர்ந்து போராடுகிறீர்கள் என்றும்,</verse>
				<verse number="28">உங்களை எதிர்க்கின்றவர்களுக்கு எந்த விதத்திலும் பயப்படாமல் இருக்கின்றீர்கள் என்றும் நான் அறிய வேண்டும். அதுவே, அவர்களுடைய அழிவுக்கும் உங்கள் மீட்புக்குமான ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும்.</verse>
				<verse number="29">ஏனெனில், கிறிஸ்துவின்மீது நீங்கள் விசுவாசம் வைப்பதற்கு மட்டுமல்ல, அவருக்காகத் துன்பம் அனுபவிக்கும் பாக்கியமும் உங்களுக்குத் தயவாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="30">எனக்கு ஏற்பட்ட போராட்டத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அது எனக்கு இப்போதும் இருக்கின்றது என்பதையும் கேள்விப்படுகிறீர்கள். அதே போராட்டமே உங்களுக்கும் ஏற்படுகிறது.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதனால் ஊக்குவிக்கப்பட்டீர்கள், அன்பினால் ஆறுதல் அடைந்தீர்கள், ஆவியானவரின் ஐக்கியம் பெற்றீர்கள், பரிவும் கருணையும் பெற்றீர்கள் என்பது உண்மை அல்லவா?</verse>
				<verse number="2">எனவே ஒரே மனதோடும் ஒரே அன்போடும், உள்ளத்திலும் நோக்கத்திலும் ஒற்றுமையாயிருந்து, எனது மனமகிழ்ச்சியை முழுமையாக்குங்கள்.</verse>
				<verse number="3">எதையும் சுயநல இலட்சியத்திற்காகவோ வீண் பெருமைக்காகவோ செய்ய வேண்டாம். மாறாக, பணிவான உள்ளத்துடன், உங்களைவிட மற்றவர்களை அதிக மதிப்பிற்கு உரியவர்களாக எண்ணுங்கள்.</verse>
				<verse number="4">உங்கள் சொந்த நலன்களில் மட்டுமே அக்கறை காட்டாமல், நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடைய நலன்களிலும் அக்கறை காட்டுங்கள்.</verse>
				<verse number="5">ஒருவருக்கொருவர் உங்கள் உறவுகளில், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே மனப்பான்மையையே நீங்களும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.</verse>
				<verse number="6">அவர் தமது முழுமையிலும் இறைவனுக்குரிய தன்மையுள்ளவராக இருந்தபோதிலும், இறைவனுக்கு இணையாக இருக்கும் நிலையை விடாது பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என எண்ணவில்லை.</verse>
				<verse number="7">மாறாக, அவரே தன்னை வெறுமையாக்கி, ஒரு அடிமையின் நிலையை ஏற்றுக்கொண்டு, மனிதத் தன்மை உள்ளவரானார்.</verse>
				<verse number="8">அவர் மனித வடிவில் தோன்றி, உயிர் துறக்கும் அளவுக்கு, அதுவும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் அளவுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரே தன்னைத் தாழ்த்தினார்.</verse>
				<verse number="9">ஆகவே, இறைவன் அவரை அதிமேன்மையான நிலைக்கு உயர்த்தி, எல்லாப் பெயர்களையும்விட அதிமேன்மை தங்கிய பெயரை அவருக்கு வழங்கினார்.</verse>
				<verse number="10">அதனால் பரலோகத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள எல்லா முழங்கால்களும் இயேசுவின் பெயருக்கு அடிபணிந்து மண்டியிடும்.</verse>
				<verse number="11">பிதாவாகிய இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி, ஒவ்வொரு நாவும் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று ஒப்புக்கொள்ளும்.</verse>
				<verse number="12">என் அன்புக்கு உரியவர்களே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிந்து வந்திருக்கிறீர்கள் அல்லவா? அப்படியே நான் உங்களோடு இருக்கும்போது மட்டுல்ல, நான் இல்லாத இந்த சமயத்திலும் அதைவிட அதிகமாகக் கீழ்ப்படிந்து, பயத்துடனும் நடுக்கத்துடனும் முயற்சி செய்து உங்கள் இரட்சிப்பை முழுமை ஆக்குங்கள்.</verse>
				<verse number="13">ஏனெனில் இறைவனே தமது நல்ல நோக்கத்திற்கு ஏற்றபடி நீங்கள் செயலாற்றுவதற்கான விருப்பங்களையும் ஆற்றலையும் தந்து உங்களுக்குள் செயலாற்றுகிறார்.</verse>
				<verse number="14">எதையும் குறை சொல்லாமல் வாக்குவாதம் இன்றி செய்யுங்கள்.</verse>
				<verse number="15">அப்போதுதான், “நெறிகெட்டதும் சீர்கெட்டதுமான இந்தத் தலைமுறையினரிடையே” வாழ்வின் வார்த்தையைப் பற்றிப்பிடித்தவர்களாய், இருண்ட உலகிற்கு ஒளிதரும் நட்சத்திரங்களைப் போல, நீங்கள் குற்றமில்லாதவர்களும் தூய்மையானவர்களுமாய் இறைவனுடைய களங்கமில்லாத பிள்ளைகளாகத் திகழ்வீர்கள்.</verse>
				<verse number="16">அப்படி நீங்கள் வாழ்ந்தால், நான் ஓடிய ஓட்டமும் எனது உழைப்பும் வீண் போகவில்லை என்று கிறிஸ்து திரும்பி வரும் நாளில் பெருமிதம் அடைவேன்.</verse>
				<verse number="17">அத்துடன் இறைவனுக்கு நீங்கள் செலுத்திய பலியாகிய விசுவாசத்தின்மீது, எனது உயிரும் அவருக்கு ஒரு பானபலியாக ஊற்றப்பட்டாலும்கூட சந்தோஷப்பட்டு உங்கள் எல்லோருடனும் சேர்ந்து மகிழ்ச்சி அடைவேன்.</verse>
				<verse number="18">அதேபோல நீங்களும் சந்தோஷப்பட்டு என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைய வேண்டும்.</verse>
				<verse number="19">மேலும், ஆண்டவர் இயேசுவுக்கு சித்தமானால் தீமோத்தேயுவை விரைவில் உங்களிடம் அனுப்ப நான் எதிர்பார்த்திருக்கிறேன். அவன் மூலமாக உங்களைக் குறித்துக் கேள்விப்படும்போது நானும் உற்சாகமடைவேன்.</verse>
				<verse number="20">உங்கள் சுகநலன்களில் உண்மையான கவலைகொள்வதற்கு அவனைப் போல வேறு எவரும் என்னிடம் இல்லை.</verse>
				<verse number="21">ஏனெனில், எல்லாருமே தமது நலன்களிலே ஆர்வம் கொண்டிருக்கிறார்களே தவிர, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவைகளில் அக்கறை காட்டுவதில்லை.</verse>
				<verse number="22">ஆனால் தீமோத்தேயுவோ ஒரு பிள்ளை தன் தந்தையுடன் இணைந்து வேலை செய்வது போன்று நற்செய்திப் பணியில் என்னுடன் இணைந்து ஊழியம் செய்து, அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்கே தெரியும்.</verse>
				<verse number="23">ஆகவே, இங்கே எனக்கு என்ன நடக்கப் போகின்றதென்று நான் அறிந்தவுடன், அவனை உங்களிடம் அனுப்ப எதிர்பார்த்திருக்கிறேன்.</verse>
				<verse number="24">அத்துடன் நானும் விரைவில் அங்கு வருவேன் என்று கர்த்தரில் உறுதியாய் நம்பி இருக்கின்றேன்.</verse>
				<verse number="25">ஆனால் தற்போதைக்கு என் சகோதரனும், சக ஊழியனும், சக போர்வீரனும், என்னுடைய தேவைகளில் உதவி செய்யும்படி நீங்கள் அனுப்பிய உங்கள் தூதுவனுமான எப்பாப்பிராத்துவைத் திரும்பவும் உங்களிடம் அனுப்புவது அவசியம் என எண்ணுகிறேன்.</verse>
				<verse number="26">ஏனென்றால், அவன் உங்கள் எல்லோரையும் காண ஆவலாய் இருக்கின்றான். மேலும் அவன் சுகவீனமாய் இருந்ததை நீங்கள் கேள்விப்பட்டதனால் அவன் மிகவும் துக்கமடைந்திருக்கிறான்.</verse>
				<verse number="27">அவன் நோய்வாய்ப்பட்டு உயிர் இழக்கும் நிலையில் இருந்தது உண்மைதான். ஆனால் இறைவன் அவன்மீது இரக்கம் கொண்டார். அவனில் மட்டும் அன்றி, துக்கத்துக்கு மேல் துக்கம் ஏற்படாதபடி அவர் என்மீதும் இரக்கம் கொண்டார்.</verse>
				<verse number="28">ஆகையால் நீங்கள் மீண்டும் அவனைக் கண்டு சந்தோஷம் அடைவதற்காக, அவனை அனுப்புவதற்கு நான் மிகவும் ஆவலாய் இருக்கின்றேன். அப்போது நானும் கவலையின்றி இருப்பேன்.</verse>
				<verse number="29">எனவே, கர்த்தருக்குள் அவனை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அதிக மதிப்புக் கொடுங்கள்.</verse>
				<verse number="30">ஏனெனில் உங்களால் நேரில் வந்து செய்ய முடியாத உதவியை அவன் எனக்குச் செய்யும் பொருட்டு தனது உயிரையும் பணயம் வைத்தான். இவ்வாறு கிறிஸ்துவின் ஊழியத்திற்காக மரணத்தின் வாசல் வரை போய் வந்தான்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவதில் எனக்குச் சிரமம் ஏதும் இல்லை, அது உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.</verse>
				<verse number="2">பொல்லாத நாய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், தீமை செய்கின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், விருத்தசேதனம் செய்பவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.</verse>
				<verse number="3">ஏனென்றால் மனித முயற்சியில் நம்பிக்கை வைக்காமல் இறைவனின் ஆவியானவரது உதவியினாலே வழிபட்டு, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்.</verse>
				<verse number="4">உண்மையில், மனித முயற்சியில் நம்பிக்கை வைப்பதானால் அதற்குரிய தன்மைகள் என்னிடமும் உள்ளன. மனித முயற்சியின் மீது நம்பிக்கை வைப்பதற்குரிய தன்மைகள் தன்னிடம் இருப்பதாக எவராவது எண்ணுவாரானால், என்னிடம் அது அதிகமாகவே உள்ளது.</verse>
				<verse number="5">ஏனெனில், நான் பிறந்து எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டவன், இஸ்ரயேல் வம்சத்தைச் சேர்ந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன், நீதிச்சட்டத்தின்படி நான் ஒரு பரிசேயன்,</verse>
				<verse number="6">பக்தி வைராக்கியத்தின் காரணமாக திருச்சபையைத் துன்புறுத்தியவன், நீதிச்சட்டத்தின் அடிப்படையிலான நீதியின்படி குற்றமில்லாதவன்.</verse>
				<verse number="7">ஆனாலும், எனக்குப் பயன் தரும் என்று நான் எண்ணிய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக இப்போது பயன் அற்றவையாகக் கருதுகிறேன்.</verse>
				<verse number="8">அதுமட்டுமல்ல, என் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் ஒப்பிடும்போது மற்ற எல்லாமே ஒரு இழப்பு என்பதாகக் கருதி, அவருக்காக அவை எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டேன். கிறிஸ்துவை நான் ஆதாயமாகப் பெற, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன்.</verse>
				<verse number="9">அத்துடன் அவரோடு நான் இணைந்திருக்கவே விரும்புகிறேன். நீதிச்சட்டத்தினால் வரும் சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் ஊடாக வருகின்ற அவருடைய நீதியை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன். இந்த நீதியானது விசுவாசத்தின் அடிப்படையில் இறைவனிடம் இருந்து வருகின்றது.</verse>
				<verse number="10">நான் கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிந்துகொண்டவனாய், அவரைப் போலவே மரணத்திலும்கூட அவருடைய மரணத்துக்கு ஒத்திருந்து, அவர் அடைந்த வேதனைகளில் ஒன்றிணைந்து பங்குகொண்டு,</verse>
				<verse number="11">இப்படியாக ஏதோ ஒருவிதத்தில் நானும் இறந்தோரின் உயிர்த்தெழுதலை அடைய வேண்டும்.</verse>
				<verse number="12">இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலை அடைந்துவிட்டேன் என்றோ சொல்லவில்லை. மாறாக, கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை அடைவதற்காகத் தொடர்ந்து கடும் முயற்சி செய்கின்றேன்.</verse>
				<verse number="13">பிரியமானவர்களே, அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று நான் எண்ணவில்லை. ஆனால், நான் ஒன்றைச் செய்கின்றேன். கடந்துபோனவற்றை மறந்து, முன்னால் உள்ளவற்றை நோக்கி,</verse>
				<verse number="14">பரிசை வென்றெடுப்பதற்காக இலக்கை நோக்கி அயராது ஓடுகிறேன். இறைவன் கொடுக்கின்ற பரிசாகிய பரலோக வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, கிறிஸ்து இயேசுவின் மூலமாக அவர் என்னை அழைத்திருக்கிறார்.</verse>
				<verse number="15">எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும் இதே மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். எதைக் குறித்தாவது உங்களுக்கு வேறுபட்ட கருத்து இருக்குமானால் அதையும் இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.</verse>
				<verse number="16">எது எப்படியானாலும் நாம் ஏற்கெனவே அடைந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழ முயற்சிப்போம்.</verse>
				<verse number="17">பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு நீங்களும் இணைந்து, நாங்கள் உங்களுக்கு வாழ்ந்து காட்டிய முன்மாதிரியின்படி வாழ்கின்றவர்களைக் கவனத்திற்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="18">ஏனெனில் அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கின்றார்கள். இதைப்பற்றி அடிக்கடி உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். இப்போது மீண்டும் அதைக் கண்ணீருடன் சொல்கின்றேன்.</verse>
				<verse number="19">அவர்களது முடிவு அழிவு, அவர்களது தெய்வம் வயிறு, தமது வெட்கக்கேடானவைகளில் அவர்கள் பெருமைகொள்கின்றார்கள். உலகத்துக்கு உரியவைகளிலேயே சிந்தனையாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="20">ஆனால், நமது குடியுரிமை பரலோகத்தில் உள்ளது. அங்கிருந்தே இரட்சகராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரென ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.</verse>
				<verse number="21">அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரச் செய்கின்ற தம்முடைய வல்லமையான ஆற்றலினால், நமது பலவீனமான அழிவுக்குரிய உடல்களை அவரது மகிமையுள்ள உடலைப் போல மாற்றுவார்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">ஆகவே, என் அன்பு சகோதரர்களே! இப்படியே, கர்த்தரில் உறுதியாய் நில்லுங்கள். எனக்குப் பிரியமான நண்பர்களே! நீங்களே நான் காண விரும்புகின்ற என் மனமகிழ்ச்சியும், என் முயற்சியின் பலனுமாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="2">கர்த்தரில் ஒரே மனதுள்ளவர்களாய் இருக்கும்படி எயோதியாளிடமும் சிந்திகேயாளிடமும் கேட்டுக்கொள்கிறேன்.</verse>
				<verse number="3">ஆம், என் உண்மையுள்ள சக கூட்டாளியே, இந்தப் பெண்களுக்கு உதவி செய்யும்படி உன்னிடமும் கேட்கின்றேன். கிலெமெந்தோடும் எனது மற்ற சக ஊழியரோடும் சேர்ந்து இவர்களும் என்னுடன் நற்செய்திக்காகப் போராடினார்கள். இவர்கள் அனைவருடைய பெயர்களும் வாழ்வின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.</verse>
				<verse number="4">எப்போதும் கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். மீண்டும் உங்களுக்குச் சொல்கின்றேன்: மகிழ்ச்சியாய் இருங்கள்!</verse>
				<verse number="5">உங்கள் கனிவான குணம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் விரைவில் வருகின்றார்.</verse>
				<verse number="6">எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை மன்றாடுதலின் மூலமும், வேண்டுதலின் மூலமும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள்.</verse>
				<verse number="7">அப்போது, விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அனைத்துக்கும் அப்பாற்பட்டதான இறைவனுடைய சமாதானம், கிறிஸ்து இயேசுவோடு இணைக்கப்பட்டவர்களான உங்கள் இதயங்களையும் மனங்களையும் பாதுகாக்கும்.</verse>
				<verse number="8">இறுதியாக பிரியமானவர்களே, உண்மையானவை எவையோ, மதிப்பானவை எவையோ, சரியானவை எவையோ, தூய்மையானவை எவையோ, அன்பானவை எவையோ, பாராட்டுதலுக்குத் தகுந்தவை எவையோ, அத்துடன் மேன்மையும் புகழ்ச்சியுமானவை எவைகளோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.</verse>
				<verse number="9">நீங்கள் எவற்றை எல்லாம் என்னிடமிருந்து கற்றுக் கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டறிந்தீர்களோ அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்போது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார்.</verse>
				<verse number="10">மீண்டும் எனக்கு உதவி செய்ய, இப்பொழுதாவது உங்களுக்கு முடியுமாயிருப்பதைக் குறித்து கர்த்தரில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள், ஆனாலும் அதை வெளிக்காண்பிப்பதற்கு ஏற்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிவேன்.</verse>
				<verse number="11">எனக்கு ஏதோ தேவை இருப்பதால் இதைக் கூறவில்லை. ஏனெனில், நான் எந்தச் சூழ்நிலையிலும் மனநிறைவுடன் இருக்கக் கற்றுக் கொண்டேன்.</verse>
				<verse number="12">ஏழ்மையுடன் வாழவும் எனக்குத் தெரியும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார உணவு உண்டிருந்தாலும், பசியோடு பட்டினியாயிருந்தாலும், வாழ்வில் நிறைவோ குறைவோ எதுவாயிருந்தாலும், எப்போதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மனத்திருப்தியுடன் வாழும் இரகசியத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன்.</verse>
				<verse number="13">என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கின்றது.</verse>
				<verse number="14">ஆனாலும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்கு கொண்டது நல்லது.</verse>
				<verse number="15">மேலும் பிலிப்பியர்களே, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில் நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டபோது உங்களைத் தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும் எனக்கு உதவி செய்யவோ என்னிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளவோ இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="16">ஏனெனில், நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையில் எனக்குத் தேவை ஏற்பட்டிருந்தபோது, நீங்களே எனக்கு மீண்டும் மீண்டும் நன்கொடை அனுப்பினீர்கள்.</verse>
				<verse number="17">நான் உங்கள் நன்கொடையைப் பெற்றுக்கொள்வதை நாடவில்லை. மாறாக, உங்கள் கணக்கில் நற்பலன்கள் பெருக வேண்டும் என்றே விரும்புகிறேன்.</verse>
				<verse number="18">எனவே, நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் தேவைக்கு அதிகமாகவும் இருக்கின்றது. நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்று திருப்தி அடைந்திருக்கிறேன். அவை இறைவனைப் பிரியப்படுத்துகின்ற நறுமணமுள்ள காணிக்கையாகவும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க பலியாகவும் இருக்கின்றன.</verse>
				<verse number="19">என் இறைவன், தமது மகிமை நிறைந்த செல்வத்தின்படியே உங்கள் எல்லாக் குறைகளையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாக நிறைவாக்குவார்.</verse>
				<verse number="20">நமது இறைவனும், பிதாவுமாய் இருக்கின்றவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.</verse>
				<verse number="21">கிறிஸ்து இயேசுவில் இணைந்து இருக்கின்ற பரிசுத்தவான்கள் அனைவருக்கும் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். என்னுடன் இருக்கின்ற சகோதர சகோதரிகள் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.</verse>
				<verse number="22">பரிசுத்தவான்கள் அனைவரும், குறிப்பாக ரோமப் பேரரசன் சீசரின் அரண்மனையைச் சேர்ந்த பரிசுத்தவான்களும் உங்களுக்கு வாழ்த்துதலை அனுப்புகிறார்கள்.</verse>
				<verse number="23">ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="51">
			<chapter number="1">
				<verse number="1">இறைவனுடைய விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும், பவுலும் நமது சகோதரன் தீமோத்தேயுவும்,</verse>
				<verse number="2">கொலோசே பட்டணத்திலே கிறிஸ்துவில் இணைந்துள்ள பரிசுத்தவான்களுக்கும், உண்மை உள்ளவர்களாயிருக்கும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும் எழுதுவதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="3">உங்களுக்காக நாங்கள் மன்றாடும் போதெல்லாம், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்கின்றோம்.</verse>
				<verse number="4">ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் நீங்கள் கொண்டுள்ள அன்பையும் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம்.</verse>
				<verse number="5">இந்த விசுவாசமும் அன்பும் உங்களுக்கென பரலோகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதென நீங்கள் எதிர்பார்த்திருப்பதில் இருந்தே வருகின்றன. இந்த எதிர்பார்ப்பைப் பற்றி, உண்மையின் வார்த்தையாகிய நற்செய்தியின் ஊடாக நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="6">அந்த நற்செய்தியானது உங்களிடத்திலும் வந்திருக்கிறது. நீங்கள் அந்த நற்செய்தியைக் கேட்டு, இறைவனுடைய கிருபையை உண்மையாக விளங்கிக்கொண்ட நாளிலிருந்து, அது உங்களிடையே கனி கொடுத்து வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அதுபோலவே, இந்த நற்செய்தி உலகம் முழுவதும் பலன் கொடுத்து வருகின்றது.</verse>
				<verse number="7">இந்த நற்செய்தியை எங்கள் அன்புக்குரிய சக ஊழியனான எப்பாப்பிராத்துவிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். அவன் எங்கள் சார்பாக சேவை செய்யும் கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியன்.</verse>
				<verse number="8">பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் பெற்றிருக்கும் அன்பைக் குறித்தும் அவனே எங்களுக்குத் தெரிவித்தான்.</verse>
				<verse number="9">எனவே உங்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக தவறாமல் மன்றாடி வருகின்றோம். ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவால் நிரப்பப்பட வேண்டும் என்றே உங்களுக்காக இறைவனிடம் கேட்கின்றோம்.</verse>
				<verse number="10">மேலும், நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும். பல நற்செயல்களின் ஊடாக கனி கொடுத்து, இறைவனைப் பற்றிய அறிவில் வளர்ச்சி அடைந்து,</verse>
				<verse number="11">அவருடைய மகிமையான ஆற்றலிலிருந்து வரும் எல்லா வல்லமையினாலும் நீங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலமாக நீங்கள் மிகுந்த சகிப்புத் தன்மையும், பொறுமையும் உடையவர்களாய் இருந்து,</verse>
				<verse number="12">ஒளியில் இறைவனுடைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைச் சொத்தில் நீங்களும் பங்கு பெறும்படி உங்களைத் தகுதி உடையவர்களாக்கிய பிதாவுக்கு மனமகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துகிறவர்களாய் இருங்கள்.</verse>
				<verse number="13">ஏனெனில், அவரே நம்மை இருளின் ஆட்சிக்குட்பட்ட அதிகாரத்திலிருந்து விடுவித்து, அவருடைய அன்பான மகனின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார்.</verse>
				<verse number="14">அந்த மகனாலேயே நாம் மீட்பை, அதாவது பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகிறோம்.</verse>
				<verse number="15">கண்களால் பார்க்க முடியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. அவரே எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற் பேறானவர்.</verse>
				<verse number="16">இவர் மூலமே அனைத்தும் படைக்கப்பட்டன; வானத்திலும் பூமியிலும் உள்ள கண்ணுக்கு தென்படுகின்றவைகளோ, தென்படாதவைகளோ, அரசாட்சிகளோ, வல்லமைகளோ, ஆளுகின்றவர்களோ, அதிகாரங்களோ அனைத்துமே இவராலே இவருக்கென்றே படைக்கப்பட்டன.</verse>
				<verse number="17">இவரே அனைத்துக்கும் முன்பாக இருக்கின்றவர், இவரிலேயே அனைத்தும் ஒருங்கிணைந்து நிலைநிற்கின்றன.</verse>
				<verse number="18">இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையானவர். எனவே, அனைத்திலும் முதல் மேன்மை அடையும்படி, இவரே ஆரம்பமும் இறந்தவர்களிலிருந்து எழுந்த முதற் பேறானவருமாய் இருக்கின்றார்.</verse>
				<verse number="19">ஏனெனில் இறைவன், தமது முழுமை அனைத்தும் கிறிஸ்துவில் பூரணமாய் தங்கியிருப்பதை விரும்பினார்.</verse>
				<verse number="20">கிறிஸ்துவின் ஊடாக பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கி, அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் சமாதானத்தை உண்டாக்க இறைவன் விருப்பம் கொண்டார்.</verse>
				<verse number="21">நீங்களோ முன்பு இறைவனுடன் தொடர்பற்ற அந்நியராய் இருந்து, உங்கள் தீமையான நடத்தையினால் உங்கள் சிந்தையில் அவரைப் பகைத்து வாழ்ந்தீர்கள்.</verse>
				<verse number="22">ஆனால் இப்பொழுதோ அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் கறைபடாதவர்களாகவும் குற்றம் சாட்டப்படாதவர்களாகவும் தமக்கு முன்பாக நிறுத்துவதற்காக, கிறிஸ்துவின் மரணத்தினால் அவரின் மனித உடலிலே உங்களை ஒப்புரவாக்கினார்.</verse>
				<verse number="23">ஆகவே, நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல எதிர்பார்ப்புகளில் இருந்து சற்றும் விலகாமல் உங்கள் விசுவாசத்தில் உறுதியுடன் வேரூன்றி தொடர்ந்து நிலைத்திருங்கள். நீங்கள் கேட்ட இந்த நற்செய்தி, வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பவுலாகிய நான் அதை அறிவிக்கும் ஊழியனாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="24">உங்களுக்காக நான் படும் துன்பங்களைக் குறித்து இப்போது மகிழ்ச்சியடைகிறேன். கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபைக்காக அவர் அடைந்த துன்பங்களில் நானும் பங்குபற்றி, குறைவை நிறைவாக்கும் பொருட்டு எனது உடலிலும் வேதனைகளை அனுபவிக்கிறேன்.</verse>
				<verse number="25">இறைவனுடைய வார்த்தையை உங்களுக்கு முழுமையாக அறிவிக்கும் பொறுப்புடையவனாய் இறைவன் என்னை நியமித்ததால் நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன்.</verse>
				<verse number="26">இறைவனுடைய அந்தச் செய்தி, மனித அறிவுக்கு எட்டாத ஒன்றாக காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுதோ அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</verse>
				<verse number="27">இந்த மறைபொருளின் மகிமை நிறைந்த செல்வம் எப்படிப்பட்டது என்பதை யூதரல்லாதவர்களுக்கும் இறைவன் வெளிப்படுத்துகிறார். இதைத் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்த அவர் தீர்மானித்தார். பரலோக மகிமையில் பங்குகொள்வோம் என்ற உங்கள் எதிர்பார்ப்பை, உங்களுக்குள் வாழும் கிறிஸ்துவே உறுதி செய்கின்றார்.</verse>
				<verse number="28">அந்த கிறிஸ்துவையே நாம் அறிவித்து, ஒவ்வொருவரையும் அவருக்குள் முழுமை பெற்றவர்களாக நிறுத்துவதற்காக அவர்கள் எல்லோருக்கும் தவறுகளை அறிவுறுத்தி, வழிமுறைகளைக் கற்பித்து, எல்லா ஞானத்தோடும் கற்பித்து வருகின்றோம்.</verse>
				<verse number="29">இதற்காகவே எனக்குள் செயற்படுகின்ற கிறிஸ்துவின் ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடன், கடுமையாக உழைத்துப் போராடுகிறேன்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">உங்களுக்காகவும் லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கின்றவர்களுக்காகவும் இன்னும் என்னை நேரில் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவு போராடுகிறேன் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்.</verse>
				<verse number="2">அவர்கள் உள்ளத்தில் ஊக்கம் அடைந்து, அன்பினால் ஐக்கியப்பட்டு, அதனால் இறைவனுடைய மறைபொருளை உறுதியாகப் புரிந்துகொள்வதன் முழு நிறைவை பெறவேண்டும் என்பதே எனது நோக்கம். இறைவனுடைய அந்த மறைபொருள் கிறிஸ்துவே.</verse>
				<verse number="3">ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் அவருக்குள்ளே மறைந்திருக்கின்றன.</verse>
				<verse number="4">சரியானவை போல் தோன்றும் தவறான வாதங்களால் எவரும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="5">உடலால் நான் உங்களோடு இல்லையென்றாலும், ஆவியில் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் ஒழுங்குடன் இணைந்து நின்று கிறிஸ்துவில் வைத்திருக்கும் விசுவாசத்தில் உறுதியுடன் வேரூன்றி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.</verse>
				<verse number="6">எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் ஆண்டவராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரோடு தொடர்ந்து ஒன்றுபட்டு வாழுங்கள்.</verse>
				<verse number="7">நீங்கள் அவரில் வேரூன்றி, கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும், உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டபடியே விசுவாசத்தில் பலப்படுகின்றவர்களாகவும், நன்றியால் நிரம்பி வழிகின்ற மக்களாகவும் வாழுங்கள்.</verse>
				<verse number="8">எவரும் உங்களை தங்கள் வெறுமையான ஏமாற்றுப் பேச்சுக்களிலும் மனித தத்துவ ஞானங்களிலும் சிக்க வைத்து கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலகைக் கட்டுப்படுத்தும் ஆவிக்குரிய சக்திகளிலும் தங்கியுள்ளனவே அன்றி, கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.</verse>
				<verse number="9">ஏனெனில், இறைதன்மையின் முழுநிறைவும், உடல் உருவில் கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது.</verse>
				<verse number="10">ஆகவே, நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கின்றீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும் அதிகாரங்களுக்கும் மேலான தலைவராய் இருக்கின்றார்.</verse>
				<verse number="11">நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள், இதனால் உங்கள் பாவ மனித இயல்பு களையப்பட்டது. இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்படாமல் கிறிஸ்துவினால் உருவான விருத்தசேதனம் ஆகும்.</verse>
				<verse number="12">ஞானஸ்நானத்திலே நீங்கள் அவருடன் அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பிய இறைவனுடைய வல்லமையில் நீங்கள் வைத்த விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="13">உங்கள் மீறுதல்களிலும், பாவ இயல்பைக் களைகின்ற விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளாமையிலும் நீங்கள் இறந்தவர்களாக இருந்தீர்கள். அப்போது இறைவன் நம்முடைய எல்லா மீறுதல்களையும் மன்னித்து, உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார்.</verse>
				<verse number="14">நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்ததான கட்டளைகளைக் கொண்ட குற்றப் பத்திரத்தை நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாதொழித்து விட்டார்.</verse>
				<verse number="15">அவர், ஆளும் வல்லமைகளிடமிருந்தும் அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின் மேல் வெற்றிகொண்டு அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார்.</verse>
				<verse number="16">எனவே நீங்கள் உண்பது மற்றும் அருந்துவது குறித்தோ பண்டிகைகள், அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள் குறித்தோ எவரும் உங்களை நியாயம் தீர்க்க இடமளிக்க வேண்டாம்.</verse>
				<verse number="17">அந்த விதிமுறைகள் எல்லாம் வர இருந்த காரியங்களின் வெறும் நிழல் மட்டுமே. அவற்றின் உண்மை அர்த்தம் கிறிஸ்துவில் காணப்படுகின்றது.</verse>
				<verse number="18">பொய்யான தாழ்மையிலும், வானவர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கின்றவர்களால் நீங்கள் பெறவிருக்கும் உங்கள் வெகுமதியை இழந்து விடாதிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவன், தான் கண்ட தரிசனங்களைக் குறித்து அதிகமாய் விபரித்துச் சொல்கின்றான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம், வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது.</verse>
				<verse number="19">தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை அவன் இழந்துவிட்டான். கிறிஸ்துவினாலேயே முழு உடலும், மூட்டுக்களினாலும் தசை நார்களினாலும் ஒன்றிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்று, இறைவன் வளரச் செய்கின்றபடி அது வளர்ச்சி அடைகிறது.</verse>
				<verse number="20">கிறிஸ்துவுடனேகூட நீங்கள் இந்த உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மரணித்தவர்களாய் இருக்கின்றீர்கள். அப்படியானால், அதற்கு உட்பட்டவர்கள் போல் இன்னும் ஏன் அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகின்றீர்கள்?</verse>
				<verse number="21">“பயன்படுத்தாதே! இவற்றை சுவைக்காதே! தொடாதே!” என்று அவைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏன்?</verse>
				<verse number="22">இவை பயன்படுத்தப்பட்டு காலப்போக்கில் ஒழிந்து போகின்றவைகளைக் குறித்ததான கட்டளைகள். ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.</verse>
				<verse number="23">அவர்களின் இந்தக் கட்டளைகள், தாங்களே தங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட வழிபாட்டையும் பொய்யான தாழ்மையையும் உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில், ஞானமானவை போல் காணப்படுவது உண்மையே. ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆளுவதற்கு இவை பயன்படாது.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிருடன் எழுப்பப்பட்டிருக்கின்றபடியால், பரலோக காரியங்களையே விரும்பித் தேடுங்கள். அங்கே கிறிஸ்து, இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.</verse>
				<verse number="2">உலகத்துக்குரிய காரியங்களில் அன்றி, பரலோகத்துக்குரிய காரியங்களில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.</verse>
				<verse number="3">ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்பொழுதோ உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் இறைவனில் மறைந்திருக்கிறது.</verse>
				<verse number="4">உங்கள் வாழ்வாய் இருக்கின்ற கிறிஸ்து தோன்றும்போது, நீங்களும் அவருடனேகூட மகிமையில் தோன்றுவீர்கள்.</verse>
				<verse number="5">ஆகவே, உலக இயல்புக்குச் சொந்தமான பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கைகள், தீய ஆசைகள், விக்கிரக வழிபாடாகிய பேராசை ஆகிய அனைத்தையும் சாகடித்து விடுங்கள்.</verse>
				<verse number="6">இவைகளின் காரணமாகவே, இறைவனுடைய கோபத் தண்டனை வரப் போகின்றது.</verse>
				<verse number="7">முன்னர் வாழ்ந்த வாழ்வில், நீங்களும் அவ்விதமாகவே நடந்துகொண்டீர்கள்.</verse>
				<verse number="8">ஆனால் இப்பொழுதோ கடும் கோபம், சினம், கேடு செய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகிய நடத்தைகளை உங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றி விடுங்கள். ஆபாசப் பேச்சு உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரக் கூடாது.</verse>
				<verse number="9">ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செயல்களையும் உங்களிடமிருந்து களைந்துவிட்டு,</verse>
				<verse number="10">புதிதாக்கப்பட்ட மனிதனின் சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள். அந்த சுபாவமானது படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவினால் புதிதாக்கப்படுகிறது.</verse>
				<verse number="11">இந்தப் புதிதாக்கப்பட்ட நிலையில் கிரேக்கர், யூதர் என்றோ விருத்தசேதனம் பெற்றவர், பெறாதவர் என்றோ பிறஇனத்தவர் என்றோ பண்பாடற்றவர் என்றோ அடிமை, சுதந்திரக் குடிமகன் என்றோ எந்த வேறுபாடும் இல்லை. கிறிஸ்துவே இவர்கள் எல்லோரிலும் எல்லாமுமாய் இருக்கின்றார்.</verse>
				<verse number="12">ஆகவே இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அவரது அன்புக்குரியவர்களுமாய் இருக்கின்ற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="13">ஒருவரோடு ஒருவர் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். யாராவது ஒருவருக்கு எதிராக இன்னொருவருக்கு ஏதாவது ஒரு மனக்குறை இருக்குமானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; கர்த்தர் உங்களை மன்னித்தது போல, நீங்களும் மன்னியுங்கள்.</verse>
				<verse number="14">இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை அணிந்துகொள்ளுங்கள். இதுவே அனைத்தையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் இணைக்கிறது.</verse>
				<verse number="15">கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளுகை செய்யட்டும். ஏனெனில் இந்தச் சமாதானத்துக்காகவே நீங்கள் ஒரே உடலின் அங்கங்களாய் இருக்க அழைக்கப்பட்டீர்கள். எனவே நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.</verse>
				<verse number="16">கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் நிறைவாய் குடியிருக்கட்டும். நீங்கள் சகல ஞானத்தோடு சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி உங்கள் இருதயங்களில் இறைவனை நன்றியுடன் பாடுங்கள்.</verse>
				<verse number="17">நீங்கள் எதைப் பேசினாலும் எதைச் செய்தாலும் ஆண்டவர் இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்து, அவர் ஊடாக பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.</verse>
				<verse number="18">மனைவியரே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதுவே கர்த்தரை அறிந்தவர்களுக்குப் பொருத்தமானது.</verse>
				<verse number="19">கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள்.</verse>
				<verse number="20">பிள்ளைகளே! உங்கள் பெற்றோருக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகின்றது.</verse>
				<verse number="21">தந்தையரே! உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், அவர்கள் சோர்ந்து போவார்கள்.</verse>
				<verse number="22">அடிமைகளே, உலகத்தில் இருக்கின்ற உங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக, அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் கீழ்ப்படிகின்றவர்களாய் இராமல், கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு எப்போதும் கீழ்ப்படியுங்கள்.</verse>
				<verse number="23">நீங்கள் எதைச் செய்தாலும் அதை மனிதர்களுக்காகச் செய்யாமல் கர்த்தருக்காகவே செய்கின்றீர்கள் என முழு மனதோடு செய்யுங்கள்.</verse>
				<verse number="24">அதற்குரிய வெகுமதியாக கர்த்தரிடமிருந்து உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்துவாகிய ஆண்டவருக்கே நீங்கள் பணி செய்கின்றீர்கள்.</verse>
				<verse number="25">ஏனெனில் தவறு செய்கின்றவன் தான் செய்கின்ற தவறுக்கான தண்டனையைப் பெறுவான். இறைவனின் நியாயத்தீர்ப்பில் பக்கச்சார்பு காட்டப்படவே மாட்டாது.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">எஜமான்களே, உங்கள் அடிமைகளை நியாயமாகவும் சமமாகவும் நடத்துங்கள். ஏனெனில் பரலோகத்தில் உங்களுக்கும் ஒரு எஜமான் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.</verse>
				<verse number="2">விழிப்புள்ளவர்களாயும், நன்றி உள்ளவர்களாயும் தொடர்ந்து மன்றாடுங்கள்.</verse>
				<verse number="3">அதேசமயம், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளை நாங்கள் அறிவிக்கும்படி, நற்செய்தியை அறிவிக்கும் வழிகளை இறைவன் திறக்க வேண்டும் என்று எங்களுக்காகவும் மன்றாடுங்கள். இந்தப் பணிக்காகவே நான் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="4">நான் அந்த மறைபொருளைத் தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே அப்படியே செய்ய வேண்டும் என்பதற்காக மன்றாடுங்கள்.</verse>
				<verse number="5">விசுவாசிகள் அல்லாத வெளியாருடன் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள். எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="6">உங்களது உரையாடல் எப்போதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும் இருக்கட்டும். அப்போதுதான் அனைவருக்கும் தக்க பதிலைச் சொல்ல முடியும்.</verse>
				<verse number="7">என்னைப் பற்றிய செய்தி எல்லாவற்றையும் என் அன்புச் சகோதரனாகிய தீகிக்கு உங்களுக்குச் சொல்வான். அவன் கர்த்தரின் உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், எனது சக வேலைக்காரனாகவும் இருக்கின்றான்.</verse>
				<verse number="8">நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை உங்களுக்கு அறியத் தந்து, உங்களை உற்சாகப்படுத்தவே அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.</verse>
				<verse number="9">உங்களில் ஒருவனும், எங்கள் நம்பிக்கைக்குரிய அன்புள்ள சகோதரனுமான ஒநேசிமுவும் அவனுடன் வருகின்றான். அவர்கள் இங்கு நடப்பவை எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்வார்கள்.</verse>
				<verse number="10">என்னுடன் சிறையில் இருக்கும் அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறான். அப்படியே பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவும் வாழ்த்துதல்களை அனுப்புகிறான். (அவனைக் குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தல் பெற்றிருக்கிறீர்கள். அவன் உங்களிடம் வந்தால், அவனை ஏற்றுக்கொள்ளுங்கள்.)</verse>
				<verse number="11">யுஸ்து என அழைக்கப்படும் யேசுவும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறான். யூதர்களில் இவர்கள் மட்டுமே இறைவனுடைய அரசின் வேலையில் எனது சக ஊழியர்களாக இருக்கின்றார்கள்; இவர்கள் எனக்கு ஆறுதலாகவும் இருந்து வருகின்றார்கள்.</verse>
				<verse number="12">உங்களில் ஒருவனாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய ஊழியனாகவும் இருக்கின்ற எப்பாப்பிராத்து உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். நீங்கள் இறைவனுடைய சித்தம் முழுவதிலும் முதிர்ச்சியடைந்தவர்களும், முழு நிச்சயம் உடையவர்களுமாய் உறுதியாய் நிற்க வேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்காக எப்போதும் வருந்தி மன்றாடுகிறான்.</verse>
				<verse number="13">உங்களுக்காகவும் லவோதிக்கேயா மற்றும் எராப்போலியில் இருக்கின்றவர்களுக்காகவும் அவன் ஊக்கமாய் வேலை செய்கின்றான் என்பதற்கு நானே சாட்சி.</verse>
				<verse number="14">எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.</verse>
				<verse number="15">லவோதிக்கேயாவிலிருக்கின்ற சகோதரர்களுக்கும் நிம்பாவுக்கும் அவளுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="16">இந்தக் கடிதம் உங்களிடையே வாசிக்கப்பட்ட பின், லவோதிக்கேயாவிலிருக்கின்ற திருச்சபையிலும் இதை வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அதேபோல, லவோதிக்கேயாவில் இருந்து வருகின்ற கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.</verse>
				<verse number="17">“கர்த்தரிடம் நீ பெற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றும்படி பார்த்துக்கொள்” என்று அர்க்கிப்புவிடம் சொல்லுங்கள்.</verse>
				<verse number="18">பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என் கைப்பட எழுதுகிறேன். நான் சிறை வைக்கப்பட்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களுடனே இருப்பதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="52">
			<chapter number="1">
				<verse number="1">பவுல், சீலா, தீமோத்தேயு, ஆகிய நாங்கள் பிதாவாகிய இறைவனிலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலும் இணைந்து இருக்கின்ற தெசலோனிக்கேயருடைய திருச்சபைக்கு எழுதுவதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.</verse>
				<verse number="2">நாங்கள் எங்களுடைய மன்றாடுதல்களில் உங்களை நினைவுகூர்ந்து, உங்கள் எல்லோருக்காகவும் இறைவனுக்கு எப்போதும் நன்றி செலுத்துகிறோம்.</verse>
				<verse number="3">விசுவாசத்தினால் வரும் உங்கள் செயலையும், அன்பினால் உண்டான உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலுள்ள எதிர்பார்ப்பினால் உருவான உங்கள் சகிப்புத் தன்மையையும் நமது இறைவனும் பிதாவுமாயிருக்கின்றவருக்கு முன்பாக நாங்கள் எப்போதும் நினைவுகூருகிறோம்.</verse>
				<verse number="4">இறைவனால் அன்பு செலுத்தப்படுகின்ற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிவு செய்தார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="5">ஏனெனில், எங்களுடைய நற்செய்தி வெறும் வார்த்தைகளாக மட்டும் உங்களிடம் வந்து சேரவில்லை. மாறாக அது வல்லமையுடனும், பரிசுத்த ஆவியானவருடனும், உறுதியான நம்பிக்கையுடனும் உங்களிடத்தில் வந்தது. உங்களுக்காக, உங்கள் மத்தியில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="6">உங்களுக்கு ஏற்பட்ட கடும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெற்றுக்கொண்ட மனமகிழ்ச்சியுடன் நற்செய்தியை ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றி நடக்கின்றவர்களாகினீர்கள்.</verse>
				<verse number="7">இவ்விதமாக, மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் உள்ள விசுவாசிகள் அனைவருக்கும் நீங்கள் முன்மாதிரிகளாகினீர்கள்.</verse>
				<verse number="8">கர்த்தரின் செய்தி மக்கெதோனியாவுக்கும் அகாயாவுக்கும் மட்டுமல்லாது, எல்லா இடங்களில் உள்ளவர்களுக்கும் உங்களிடமிருந்து எதிரொலித்துப் பரவியிருக்கிறது. நீங்கள் இறைவனில் வைத்திருக்கும் விசுவாசம் எங்கும் தெரிய வந்திருக்கிறது. எனவே, இதைக் குறித்து நாங்கள் எதையும் சொல்ல வேண்டியதில்லை.</verse>
				<verse number="9">ஏனெனில், நாங்கள் உங்களிடம் வந்தபோது நீங்கள் எங்களை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைப்பற்றி அந்த மக்களே அறியத் தருகிறார்கள். நீங்கள் விக்கிரகங்களை வழிபடுவதைக் கைவிட்டு, உயிருள்ள உண்மையான இறைவனுக்கு அர்ப்பணித்துப் பணி செய்கின்றவர்களாக இறைவனிடம் எவ்விதமாக திரும்பினீர்கள் என்பது பற்றியும் அவர்கள் கூறி வருகின்றார்கள்.</verse>
				<verse number="10">அத்துடன், இறந்தவர்களிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்ட அவரது மகனாகிய இயேசு, பரலோகத்திலிருந்து வரும்வரை நீங்கள் காத்திருப்பதைப் பற்றியும் அறிவிக்கிறார்கள். இறைமகனாகிய இயேசுவே வரப்போகும் தண்டனைக் கோபத்திலிருந்து நம்மை காப்பாற்றுகின்றவர்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீண் போகவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.</verse>
				<verse number="2">உண்மையில் அங்கு வருவதற்கு முன்பதாக நாங்கள் பிலிப்பி பட்டணத்திலே துன்புறுத்தப்பட்டதும், அவமானப்படுத்தப்பட்டதும் உங்களுக்குத் தெரியும். பலத்த எதிர்ப்பின் மத்தியில், நமது இறைவனுடைய உதவியினாலே அவருடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கத் துணிவு பெற்றோம்.</verse>
				<verse number="3">ஏனெனில், எங்களுடைய போதனையானது தவறான ஒன்றையோ, ஒழுக்கக்கேடான நோக்கத்தையோ, அல்லது உங்களை ஏமாற்றுவதையோ அடிப்படையாகக் கொண்டதல்ல.</verse>
				<verse number="4">மாறாக, நற்செய்தியை ஒப்படைப்பதற்கு நம்பத்தகுந்தவர்களென இறைவனால் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களாக நாங்கள் பேசுகின்றோம். நாம் மனிதர்களை அன்றி, எங்கள் உள்ளங்களை பரிசீலித்து அறிகின்ற இறைவனைப் பிரியப்படுத்தவே முயலுகிறோம்.</verse>
				<verse number="5">நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாகப் புகழ்ந்து பேசியதும் இல்லை, பேராசை கொண்டவர்களாய் அதை மறைக்க முகமூடி அணிந்து வெளிவேடம் போட்டதும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்; இறைவனே இதற்கு சாட்சி.</verse>
				<verse number="6">உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் மனிதர்களின் புகழ்ச்சியைத் தேடியதில்லை. கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்ற முறையில், எங்களது அதிகாரத்தைப் பிரயோகித்து நாங்கள் உங்களுக்கு ஒரு பாரமாக இருந்திருக்க முடியும்.</verse>
				<verse number="7">ஆனால், பாலூட்டுகின்ற தாய் தன் குழந்தையைப் பராமரிப்பது போல, நாங்கள் உங்களிடம் கனிவாய் நடந்தோம்.</verse>
				<verse number="8">இவ்விதமாக, உங்களில் நாம் அதிக அன்பு கொண்டிருந்ததால், இறைவனுடைய நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி கொண்டோம். ஏனெனில், நீங்கள் எங்களது அன்புக்குரியவர்களாக ஆகிவிட்டீர்கள்.</verse>
				<verse number="9">பிரியமானவர்களே, நாங்கள் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்தது நிச்சயமாக உங்களுக்கு நினைவிருக்குமே. நாங்கள் யாருக்கும் பாரமாய் இராதவாறு, இரவும் பகலும் தொழில் புரிந்துகொண்டே இறைவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.</verse>
				<verse number="10">நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடம் நாங்கள் எந்தளவு பரிசுத்தமாகவும் நீதியுள்ளவர்களாகவும் குற்றம் சாட்டப்படாதவர்களாகவும் நடந்துகொண்டோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சி.</verse>
				<verse number="11">ஒரு தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போல, நாங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நடத்தினோம் என்பது உங்களுக்கே தெரியும்.</verse>
				<verse number="12">அதற்கமைய உங்களுக்கு அறிவுறுத்தலும் ஊக்குவிப்பும் தந்து, தம்முடைய அரசுக்குள்ளும் மகிமைக்குள்ளும் உங்களை அழைக்கின்ற இறைவனுக்கேற்ற வாழ்க்கை வாழுங்கள் என்று உங்களை வலியுறுத்தி வருகின்றோம்.</verse>
				<verse number="13">மேலும், நாங்கள் இறைவனுக்கு தொடர்ந்து நன்றி செலுத்துகிறோம். ஏனெனில், இறைவனின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதருடைய வார்த்தையாக அன்றி இறைவனுடைய வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். உள்ளபடியே அது இறைவனுடைய வார்த்தையே. உண்மையில் அதுவே விசுவாசிக்கின்றவர்களாகிய உங்களுக்குள்ளே வல்லமையுடன் செயலாற்றுகிறது.</verse>
				<verse number="14">பிரியமானவர்களே, யூதேயாவில் உள்ள கிறிஸ்து இயேசுவில் இணைந்திருக்கும் இறைவனுடைய திருச்சபைகள் செய்ததையே நீங்களும் பின்பற்றி நடந்துகொண்டீர்கள். அந்தத் திருச்சபைகள் யூதர்களால் துன்பப்பட்டது போலவே நீங்களும் உங்கள் சொந்த மக்களால் துன்பப்பட்டீர்கள்.</verse>
				<verse number="15">அந்த யூதர்களே ஆண்டவர் இயேசுவையும் இறைவாக்கினரையும் கொலை செய்தார்கள், எங்களையும் வெளியே துரத்தினார்கள். அவர்கள் இறைவனின் விருப்பத்திற்கு விரோதமாய் நடக்கின்றவர்களாகவும், அநேகருக்குப் பகைவர்களாகவும் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="16">ஏனெனில் யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்படி நாங்கள் நற்செய்தி அறிவிப்பதை அவர்கள் தடுக்கிறார்கள். இவ்விதமாக அவர்கள் எப்போதும் பாவத்துக்கு மேல் பாவம் செய்து தங்கள் பாவத்தை பெருக்கிக்கொள்கின்றார்கள். இறுதியாக, இறைவனுடைய தண்டனைக் கோபம் அவர்கள்மீது வந்திருக்கிறது.</verse>
				<verse number="17">பிரியமானவர்களே, சிறிது காலம் உங்களைவிட்டு நாங்கள் பிரிந்து தவித்தோம். நாம் உடலால் பிரிந்திருந்தோமே அல்லாமல் உள்ளத்தால் பிரிந்திருக்கவில்லை. உங்களை நேரில் காண மிகுந்த ஆவலோடு இருந்தபடியால் உங்களைப் பார்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம்.</verse>
				<verse number="18">ஆகையால், உங்களிடம் நாங்கள் வருவதற்கு, அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும் மீண்டும் அதற்கான முயற்சிகளை எடுத்தேன். ஆனாலும், சாத்தான் எங்களுக்குத் தடை ஏற்படுத்தினான்.</verse>
				<verse number="19">நம்முடைய ஆண்டவர் இயேசு வரும்போது அவருக்கு முன்பாக எங்களுடைய எதிர்பார்ப்பாகவும், மனமகிழ்ச்சியாகவும், எங்களுக்கு பெருமை சேர்க்கும் வெற்றிக் கிரீடமாகவும் இருக்கப் போகின்றவர்கள் யார்? அது நீங்கள் அல்லவா?</verse>
				<verse number="20">உண்மையில் நீங்களே எங்கள் மகிமையும் மனமகிழ்ச்சியுமாய் இருக்கின்றீர்கள்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">ஆகவே உங்களுடைய பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நாங்கள் மாத்திரம் அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு,</verse>
				<verse number="2">கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் இறைவனுக்காக வேலை செய்கின்ற எங்கள் சக ஊழியனும் சகோதரனுமாய் இருக்கின்ற தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். உங்களைப் பலப்படுத்தி, உங்களை உங்கள் விசுவாசத்தில் ஊக்கப்படுத்தி,</verse>
				<verse number="3">உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துன்பங்களால் உங்களில் எவரும் நிலைகுலைந்து போகக் கூடாது என்பதற்காகவே அவனை அனுப்பி வைத்தோம். இப்படியான துன்பங்கள் நமக்கு ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.</verse>
				<verse number="4">உண்மையில், நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை நாங்கள் உங்களுடன் இருந்தபோது முன்னரே உங்களுக்கு பல முறை சொல்லியிருந்தோம். அது அவ்விதமே நிகழ்ந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="5">ஆகையால் உங்கள் விசுவாசத்தின் நிலையைக் குறித்து ஏதும் அறியாதவனாய் இருந்ததால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாததனாலே உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்வதற்காக நான் தீமோத்தேயுவை அனுப்பினேன். ஏனெனில் ஏதாவது ஒருவிதத்தில் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் எங்களுடைய உழைப்பு வீண் போயிருக்குமோ என்றும் பயந்தேன்.</verse>
				<verse number="6">ஆனாலும் உங்களிடமிருந்து இப்போது திரும்பி வந்திருக்கின்ற தீமோத்தேயு, உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும் குறித்து நல்ல செய்தியையே கொண்டுவந்திருக்கிறான். எங்களைக் குறித்த நினைவுகள் உங்களுக்கு இனியவையாய் இருக்கின்றன என்றும், நாங்கள் உங்களைக் காண ஆவலாயிருப்பது போல, நீங்களும் எங்களைக் காண ஆவலாய் இருக்கின்றீர்கள் என்றும் அவன் எங்களுக்குச் சொன்னான்.</verse>
				<verse number="7">ஆகையால் பிரியமானவர்களே, எங்களுடைய இடர் மிகுந்த துன்பத்தின் மத்தியிலும் உங்களுடைய விசுவாசத்தைக் குறித்து கேள்விப்பட்டு, உங்களால் நாங்கள் உற்சாகமடைந்தோம்.</verse>
				<verse number="8">நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், உண்மையிலே எங்களுக்கு உயிர் வந்தது.</verse>
				<verse number="9">உங்களால் நமது இறைவன் முன்னிலையில் நாங்கள் அனுபவிக்கும் அனைத்து மனமகிழ்ச்சிக்கும் பிரதிபலனாக, உங்கள் பொருட்டு அவருக்கு எவ்விதமாய் எங்கள் நன்றியை செலுத்தப் போகின்றோமோ?</verse>
				<verse number="10">நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து, உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்படுத்துவதற்காக இரவும் பகலும் அதிக உத்வேகத்துடன் மன்றாடுகிறோம்.</verse>
				<verse number="11">இப்போது நம்முடைய பிதாவாகிய இறைவனும் ஆண்டவர் இயேசுவும், நாங்கள் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவாராக.</verse>
				<verse number="12">உங்கள் மீது கொண்டுள்ள எங்கள் அன்பு வளர்ந்து பெருகுவது போல, நீங்கள் ஒருவரில் ஒருவர் கொண்டுள்ள அன்பிலும், மற்றெல்லோரிடத்திலும் கொண்டுள்ள அன்பிலும் வளர்ந்து பெருக கர்த்தர் உங்களை வழிநடத்துவாராக.</verse>
				<verse number="13">நம்முடைய ஆண்டவர் இயேசு தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவரோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றம் சுமத்தப்படாதவர்களாகவும் பரிசுத்தர்களாகவும் இருப்பதற்கு அவர் உங்கள் இருதயங்களைப் பலப்படுத்துவாராக.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">பிரியமானவர்களே, இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்திருந்தோம். உண்மையிலே நீங்கள் அந்தவிதமாகவே வாழ்ந்து வருகின்றீர்கள். இயேசு கிறிஸ்துவின் பெயராலே நாம் இப்போது உங்களிடம் கேட்பதும் வேண்டிக்கொள்வதும் என்னவென்றால், இன்னும் அதிகம் அதிகமாய் அதைக் கடைப்பிடியுங்கள்.</verse>
				<verse number="2">ஆண்டவர் இயேசுவின் அதிகாரத்தின் கீழே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அந்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="3">நீங்கள் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். நீங்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டைத் தவிர்த்து,</verse>
				<verse number="4">ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாகவும் மதிப்புக்குரியதாகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க அறிந்திருக்க வேண்டும்.</verse>
				<verse number="5">இறைவனை அறியாத யூதர் அல்லாதவர்களைப் போல, கட்டுக்கடங்காத காம வேட்கைகொள்ளக் கூடாது;</verse>
				<verse number="6">இந்த விடயத்தில் எவரும் தன் சகோதரனுக்கோ சகோதரிக்கோ தவறிழைத்து ஏமாற்றி, அவர்களைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. நாங்கள் முன்னரே உங்களுக்கு சொல்லி எச்சரித்தபடி, இப்படிப்பட்ட பாவங்களைச் செய்யும் அனைவரையும் கர்த்தர் தண்டிப்பார்.</verse>
				<verse number="7">ஏனெனில், இறைவன் நம்மை அசுத்தமாய் வாழ்வதற்கு அல்ல, பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கே அழைத்திருக்கிறார்.</verse>
				<verse number="8">ஆகையால் இந்த அறிவுரைகளைப் புறக்கணிக்கிறவன் மனிதனை அன்றி, தம்முடைய பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கின்ற இறைவனையே புறக்கணிக்கிறான்.</verse>
				<verse number="9">மேலும், சகோதர அன்பைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை. ஏனெனில் ஒருவர் மீது ஒருவர் அன்பாய் இருப்பதைக் குறித்து, நீங்கள் இறைவனிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறீர்களே.</verse>
				<verse number="10">உண்மையில் மக்கெதோனியா எங்கும் இருக்கின்ற சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அன்பு காட்டுகிறீர்கள். ஆனால், பிரியமானவர்களே, நீங்கள் அதை இன்னும் அதிகமாய்ச் செய்ய வேண்டும் என உங்களை வேண்டிக்கொள்கிறோம்.</verse>
				<verse number="11">நாங்கள் உங்களுக்கு சொன்னது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதை உங்கள் குறிக்கோளாகக் கொண்டவர்களாகவும், உங்களுடைய சொந்த காரியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும், உங்கள் கைகளினால் உழைத்து வேலை செய்கின்றவர்களாகவும் இருங்கள்.</verse>
				<verse number="12">அப்போது உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் வெளியாட்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டியதில்லை.</verse>
				<verse number="13">பிரியமானவர்களே, மரணம் அடைகின்றவர்களைக் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்போது, எதிர்பார்ப்பு அற்ற மற்றவர்களைப் போல நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்.</verse>
				<verse number="14">இயேசு மரணித்து, உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கின்றோமே. அப்படியே, இயேசுவில் நம்பிக்கை வைத்தவர்களாய் மரணம் அடைந்தவர்களையும் இறைவன் அவருடனேகூட அழைத்து வருவார் என்றும் விசுவாசிக்கின்றோம்.</verse>
				<verse number="15">கர்த்தருடைய வார்த்தையின்படி நாங்கள் உங்களுக்குச் சொல்வதாவது, ஆண்டவருடைய வருகை வரைக்கும் இன்னும் உயிருடனிருக்கும் நாம், மரணம் அடைந்தவர்களுக்கு முன்பதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது உறுதி.</verse>
				<verse number="16">ஏனெனில் ஆண்டவர் தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் சத்தமான கட்டளை முழக்கத்துடன், பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, இறைவனுடைய எக்காள பேரிகை அழைப்புடன் வருவார். அப்போது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள்.</verse>
				<verse number="17">அதன்பின்பு நம்மில் அதுவரை உயிரோடிருப்பவர்கள் ஆகாயத்திலே ஆண்டவரைச் சந்திப்பதற்காக, அவர்களுடனே மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக நாம் என்றென்றும் ஆண்டவருடனேயே இருப்போம்.</verse>
				<verse number="18">ஆகவே, இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">மேலும், பிரியமானவர்களே இவை நிகழப் போகின்ற காலங்களையும் வேளைகளையும் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை.</verse>
				<verse number="2">ஏனெனில் இரவில் திருடன் வருகின்றதைப் போலவே கர்த்தருடைய நாள் வரும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.</verse>
				<verse number="3">“இதோ சமாதானம் பாதுகாப்பு” என்று மக்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி வருவது போல, திடீரென அவர்கள்மீது பேரழிவு வரும். அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாது.</verse>
				<verse number="4">ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருப்பவர்கள் அல்ல. அதனால், அந்த நாள் ஒரு திருடனின் வருகையைப் போல் உங்களை வியப்பிற்குள்ளாக்காது.</verse>
				<verse number="5">நீங்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கும் பகலுக்கும் சொந்தமானவர்களாய் இருக்கின்றீர்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ சொந்தமானவர்கள் அல்ல.</verse>
				<verse number="6">ஆகவே நாம் தூங்குகின்ற மற்றவர்களைப் போல் இராமல், விழிப்புடனும் நிதானத்துடனும் இருப்போமாக.</verse>
				<verse number="7">ஏனெனில் நித்திரை செய்கின்றவர்கள் இரவில் நித்திரை செய்வார்கள். மதுவெறிகொள்கின்றவர்கள் இரவிலே குடிபோதையில் இருப்பார்கள்.</verse>
				<verse number="8">ஆனால் நாமோ பகலுக்கு உரியவர்களாய் இருக்கின்றபடியால் நிதானத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், இரட்சிப்பின் எதிர்பார்ப்பைத் தலைக் கவசமாகவும் அணிந்துகொள்வோம்.</verse>
				<verse number="9">ஏனெனில் இறைவன் நம்மைத் தமது கோபத்தின் தண்டனையை பெறுவதற்காக அன்றி, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவே நியமித்திருக்கிறார்.</verse>
				<verse number="10">நாம் உயிருடன் இருந்தாலும், மரணம் அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படி நமக்காகவே அவர் உயிர் துறந்தார்.</verse>
				<verse number="11">ஆகையால் நீங்கள் இப்போது செய்துவருவது போலவே, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஒருவர் மற்றவரைக் கட்டி எழுப்புங்கள்.</verse>
				<verse number="12">பிரியமானவர்களே, இப்போதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்வதாவது, உங்கள் மத்தியில் கடினமாக உழைத்து, கர்த்தரில் உங்களை வழிநடத்தி, உங்களுக்குப் புத்திமதி சொல்கின்றவர்களை மதித்து நடவுங்கள்.</verse>
				<verse number="13">அவர்களுடைய உழைப்புக்காக, அவர்கள்மீது அதிக அன்பு காட்டி அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள்.</verse>
				<verse number="14">பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்வதாவது, ஒழுங்கீனமாய் இருப்பவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை ஆறுதல்படுத்துங்கள். பலவீனமாய் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். அனைவரிடமும் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்.</verse>
				<verse number="15">ஒருவரும் தீமையான செயலுக்குப் பதில் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக, எப்போதும் நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்ய முழு முயற்சி எடுங்கள். அதையே மற்ற எல்லோருக்கும் செய்யுங்கள்.</verse>
				<verse number="16">எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.</verse>
				<verse number="17">இடைவிடாது மன்றாடுங்கள்.</verse>
				<verse number="18">எல்லா சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள். இதுவே கிறிஸ்து இயேசுவின் ஊடாக நீங்கள் செய்ய வேண்டிய உங்களுக்கான இறைவனின் சித்தமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="19">ஆவியானவரின் அனலை அணைத்து விடாதீர்கள்.</verse>
				<verse number="20">சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யாமல்,</verse>
				<verse number="21">எல்லாவற்றையும் பரிசீலித்துப் பாருங்கள். நல்லதைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="22">எல்லாவிதமான தீயசெயல்களையும்விட்டு விலகியிருங்கள்.</verse>
				<verse number="23">சமாதானத்தின் இறைவன் தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்வரை, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றம் சாட்டப்படாததாகக் காக்கப்படுவதாக.</verse>
				<verse number="24">உங்களை அழைக்கின்றவர் நம்பிக்கைக்குரியவர், அவர் அப்படியே செய்வார்.</verse>
				<verse number="25">பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.</verse>
				<verse number="26">இறைவனுடைய மக்கள் அனைவருக்கும், பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துதல் தெரிவியுங்கள்.</verse>
				<verse number="27">இந்தக் கடிதத்தை விசுவாசிகள் அனைவருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.</verse>
				<verse number="28">நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="53">
			<chapter number="1">
				<verse number="1">பவுல், சீலா, தீமோத்தேயு ஆகிய நாங்கள், நம்முடைய பிதாவாகிய இறைவனிலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிலும் இணைந்து இருக்கின்ற தெசலோனிக்கேயருடைய திருச்சபைக்கு எழுதுவதாவது:</verse>
				<verse number="2">பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="3">பிரியமானவர்களே, நாங்கள் எப்போதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கின்றோம். அப்படிச் செய்வது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் அதிகமதிகமாக வளர்ச்சியடைகிறது. அத்துடன் நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகின்ற அன்பும் பெருகுகிறது.</verse>
				<verse number="4">ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துன்புறுத்தல்கள், வேதனைகள் ஆகியவற்றின் மத்தியிலும் உங்களுடைய மனவுறுதியையும் விசுவாசத்தையும் குறித்து இறைவனுடைய திருச்சபைகளில் நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம்.</verse>
				<verse number="5">இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு இவையெல்லாம் அத்தாட்சியாய் இருக்கின்றன. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய அரசுக்குத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள். அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள்.</verse>
				<verse number="6">இறைவன் நீதியுள்ளவர், உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகின்றவர்களுக்கு அவர் துன்பத்தைக் கொடுப்பார்.</verse>
				<verse number="7">துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். ஆண்டவர் இயேசு, பற்றியெரியும் நெருப்புடன் தமது வல்லமையுள்ள தூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது இது நிகழும்.</verse>
				<verse number="8">அப்போது, இறைவனை அறியாதவர்களையும் நம்முடைய ஆண்டவர் இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் அவர் தண்டிப்பார்.</verse>
				<verse number="9">அவர்கள் நித்திய பேரழிவைத் தண்டனையாகப் பெற்று, கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் அப்புறப்படுத்தப்படுவார்கள்.</verse>
				<verse number="10">அவர் தம்முடைய பரிசுத்த மக்கள் மத்தியில் மகிமைப்படும்படி வருவார். அந்நாளிலே கர்த்தரை விசுவாசித்த அனைவரது மத்தியிலும் அவர் வியப்புடன் அதிசயமாய் நேசிக்கப்படுவார். நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததால், அந்த மக்களோடு நீங்களும் அதில் பங்குகொள்வீர்கள்.</verse>
				<verse number="11">இதை மனதில் கொண்டவர்களாக, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட வேண்டும் என உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து மன்றாடி வருகின்றோம். அத்துடன் உங்களுடைய அனைத்து நல்ல நோக்கங்களையும், உங்களுடைய விசுவாசத்தின் தூண்டுதலினால் உண்டாகின்ற உங்களது அனைத்து செயலையும் இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவாக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.</verse>
				<verse number="12">நமது இறைவனிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் கிருபையினாலே நம்முடைய ஆண்டவர் இயேசுவின் பெயர் உங்களில் மகிமைப்பட வேண்டும் என்றும், நீங்கள் அவராலே மகிமைப்பட வேண்டும் என்றும் நாங்கள் மன்றாடுகிறோம்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நாம் அவரிடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதைக் குறித்தும் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுவேயாகும்:</verse>
				<verse number="2">எங்களுடைய போதனை எனக் கூறி, “கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டது” என ஒரு இறைவாக்கு உரைக்கப்பட்டாலோ, வாய்மொழியாக அறிவிக்கப்பட்டாலோ, அல்லது எங்களுடைய கடிதத்தில் உள்ளது எனச் சொல்லப்பட்டாலோ அதைக் குறித்து நீங்கள் நிலைதடுமாறவோ, பீதியடையவோ வேண்டாம்.</verse>
				<verse number="3">எவரும் எந்த விதத்திலும் உங்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கு எதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும் வரையில் அந்த நாள் வராது. அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன்.</verse>
				<verse number="4">இறைவன் என்று அழைக்கப்படுகின்றதும், வழிபாட்டுக்குரியதுமான அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக்கொள்வான். அதன்படி, இறைவனது ஆலயத்தில் இறைவனாக அமர்ந்திருந்து, தன்னை இறைவன் என பறைசாற்றிக்கொள்வான்.</verse>
				<verse number="5">நான் உங்களுடன் இருந்தபோது இவற்றைக் குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா?</verse>
				<verse number="6">அவனது ஏற்ற காலத்தில் அவன் வெளிப்படும்படி, அவனை இப்போது தடுத்து வைத்திருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும்.</verse>
				<verse number="7">ஏனெனில், இரகசியமாயிருக்கின்ற அந்த அக்கிரமம் ஏற்கெனவே செயற்படுகிறது. ஆனால் அதை இப்பொழுது தடுத்துக் கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும் வரை தொடர்ந்து அதைத் தடுத்துக் கொண்டே இருப்பார்.</verse>
				<verse number="8">அதற்குப் பின்பு, அந்த அக்கிரம மனிதன் வெளிப்படுவான். அவனை ஆண்டவர் இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினாலே ஒழித்து, தமது வருகையின் பிரகாசத்தினாலே அவனை அழித்து விடுவார்.</verse>
				<verse number="9">அந்த அக்கிரம மனிதன் வெளிப்படும்போது, சாத்தானுடைய செயலுக்குரிய விதத்தில் பலவித போலி அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்களைச் செய்து காட்டுவான்.</verse>
				<verse number="10">மேலும், அழிந்து போகின்றவர்கள் இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொண்டு, அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றபடியால் தீமையான செயல்களினால் ஏமாற்றப்படுவார்கள்.</verse>
				<verse number="11">இக்காரணத்தினாலே, ஏமாற்றுகின்ற மாய வலைக்குள் விழுவதற்கு இறைவன் அவர்களைவிட்டு விடுகிறார். அதனால் அவர்கள் அந்த பொய்யையே நம்புவார்கள்.</verse>
				<verse number="12">இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல் கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி அடைகின்ற அனைவரும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.</verse>
				<verse number="13">ஆனால், கர்த்தரின் அன்புக்குரியவர்களான பிரியமானவர்களே, உங்களுக்காக எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், சத்தியத்தை விசுவாசிப்பதனாலும் பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகின்ற செயலினாலும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் உங்களை ஆரம்பத்திலேயே தெரிவு செய்தார்.</verse>
				<verse number="14">நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையில் நீங்களும் பங்குடையவர்களாகும்படி, எங்களுடைய நற்செய்தியின் ஊடாக அவர் உங்களை அழைத்திருக்கிறார்.</verse>
				<verse number="15">ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உறுதியுடன் நின்று, வாய்மொழியாகவோ அல்லது கடிதம் ஊடாகவோ நாங்கள் உங்களுக்குக் கொடுத்த போதனைகளைக் கைக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="16">நம்மில் அன்பு காட்டி தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்திருக்கின்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும்</verse>
				<verse number="17">உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, அனைத்துவிதமான நற்செயலை செய்வதிலும், நல்வார்த்தை பேசுவதிலும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே விரைவாகப் பரவி மகிமைப்பட்டது போல, அது எங்கும் பரவ வேண்டும் என எங்களுக்காக மன்றாடுங்கள்.</verse>
				<verse number="2">கொடியவர்களும், தீயவர்களுமான இத்தகைய மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லோரிடமும் விசுவாசம் இல்லை.</verse>
				<verse number="3">ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாப்பார்.</verse>
				<verse number="4">நாங்கள் கட்டளையிடுகின்ற காரியங்களை நீங்கள் செய்கின்றீர்கள் என்றும், தொடர்ந்து செய்வீர்கள் என்றும் நாங்கள் கர்த்தரில் மனவுறுதி உடையவர்களாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="5">கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளாகவும், கிறிஸ்துவின் மனவுறுதிக்குள்ளாகவும் நடத்துவாராக.</verse>
				<verse number="6">பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகின்றதாவது: சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதன்படி நடந்துகொள்ளாதவர்களை விட்டு விலகியிருங்கள்.</verse>
				<verse number="7">எங்களுடைய முன்மாதிரியை எவ்விதமாய் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுடன் இருந்தபோது நாங்கள் சோம்பேறிகளாய் இருந்ததும் இல்லை,</verse>
				<verse number="8">யாரிடமும் நாங்கள் இலவசமாய் உணவைப் பெற்று உண்டதும் இல்லை. மாறாக, இரவும் பகலும் பாடுபட்டு உழைத்தோம். ஆகவே, உங்களில் யாருக்கும் நாங்கள் பாரமாய் இருந்ததில்லை.</verse>
				<verse number="9">இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால் அல்ல. மாறாக, நீங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தோம்.</verse>
				<verse number="10">ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோது, “வேலை செய்ய விருப்பம் இல்லாத ஒருவன் உண்ணவும் கூடாது” என்ற கட்டளையையே உங்களுக்குக் கொடுத்தோம்.</verse>
				<verse number="11">உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கின்றார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் ஒரு வேலையும் செய்வதில்லை, மற்றவர்களின் வேலையில் தலையிடுவதே அவர்களின் வேலையாகி விட்டது.</verse>
				<verse number="12">அப்படிப்பட்டவர்கள், ஒரு வேலையில் நிலைத்திருந்து தங்களின் உணவை தாங்களே உழைத்து உண்ண வேண்டும் என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம்.</verse>
				<verse number="13">பிரியமானவர்களே, நீங்களோ நல்லதைச் செய்வதில் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம்.</verse>
				<verse number="14">இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். அவன் வெட்கத்துக்குள்ளாகும்படி அவனோடு கூடிப் பழகாதிருங்கள்.</verse>
				<verse number="15">ஆனாலும், அவனை ஒரு பகைவனாக எண்ணாமல், ஒரு சகோதரனைப் போல் எண்ணி எச்சரியுங்கள்.</verse>
				<verse number="16">சமாதானத்தின் கர்த்தர் எப்போதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லோருடனும் இருப்பாராக.</verse>
				<verse number="17">பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என்னுடைய சொந்தக் கைப்பட எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்கள் அனைத்துக்கும் அடையாளம். நான் எழுதும் முறையும் இதுவே.</verse>
				<verse number="18">நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="54">
			<chapter number="1">
				<verse number="1">நமது மீட்பராகிய இறைவனும், நமது நல்ல எதிர்பார்ப்பின் காரணரான கிறிஸ்து இயேசுவும் கட்டளையிட்டபடி கிறிஸ்து இயேசுவுக்கு அப்போஸ்தலனாய் இருக்கின்ற பவுல்,</verse>
				<verse number="2">விசுவாசத்தில் எனக்கு உண்மையான பிள்ளையாக இருக்கின்ற தீமோத்தேயுவுக்கு எழுதுகின்றதாவது: பிதாவாகிய இறைவனிடமிருந்தும், நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் கிடைப்பதாக.</verse>
				<verse number="3">நான் மக்கெதோனியாவுக்குப் போனபோது உன்னிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டது போல, நீ எபேசுவிலே தங்கியிருந்தவாறு உண்மைக்குப் புறம்பான கோட்பாடுகளைக் கற்றுக் கொடுக்காதபடி அங்கே உள்ள சிலருக்கு கட்டளையிடு.</verse>
				<verse number="4">கட்டுக்கதைகளிலும், முடிவில்லாத வம்ச வரலாறுகளிலும் ஈடுபடுவதைவிட்டு விடும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. இவை வாக்குவாதங்களுக்கு வழிவகுக்குமே அல்லாமல், விசுவாசத்தினால் நடைபெறும் இறைவனின் திட்டத்தை முன்கொண்டு நடத்த வழிவகுக்காது.</verse>
				<verse number="5">அன்பே இந்தக் கட்டளையின் நோக்கம். அந்த அன்பானது தூய்மையான இருதயத்திலிருந்தும், நல்ல மனசாட்சியிலிருந்தும், உண்மையான விசுவாசத்திலிருந்துமே வெளிவருகின்றது.</verse>
				<verse number="6">சிலர் இவற்றைவிட்டு விலகி வீண் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்கள்.</verse>
				<verse number="7">அவர்கள் நீதிச்சட்ட ஆசிரியர்களாய் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் தாங்கள் எதைப் பற்றிப் பேசுகின்றோம் என்பதையும் தாங்கள் நிச்சயத்தோடு வலியுறுத்துவது என்னவென்றும் அறியாமல் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="8">நீதிச்சட்டம் நல்லது என்பதை நாம் அறிவோம். ஆனால் அதை ஒருவன் முறைப்படி பயன்படுத்த வேண்டும்.</verse>
				<verse number="9">நீதிச்சட்டம் நீதிமான்களுக்காக இயற்றப்படவில்லை. சட்டத்தை மீறுபவர்கள், கலகக்காரர்கள், இறைவனை மறுதலிப்பவர்கள், பாவிகள், பரிசுத்தம் இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், தங்கள் தந்தையை தாயைக் கொலை செய்பவர்கள், கொலைகாரர்கள்,</verse>
				<verse number="10">தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றவர்கள், அடிமை வியாபாரம் செய்கின்றவர்கள், பொய் பேசுகின்றவர்கள், பொய்ச் சத்தியம் செய்கின்றவர்கள் ஆகிய இவர்களுக்காகவும், நலமான கோட்பாட்டிற்கு எதிரான அனைத்து செயல்களுக்காகவுமே இயற்றப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="11">இந்த நலமான கோட்பாடானது, புகழ்ச்சிக்குரிய இறைவன் என்னிடம் ஒப்படைத்துள்ள மகிமையான நற்செய்திக்கு ஒத்ததாக இருக்கின்றது.</verse>
				<verse number="12">என்னைப் பலப்படுத்திய எனது ஆண்டவர் கிறிஸ்து இயேசுவுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவரது பணியில் என்னை நியமித்தார்.</verse>
				<verse number="13">முன்னொரு காலத்தில் நான் அவரை நிந்திக்கின்றவனாகவும், துன்புறுத்துகின்றவனாகவும், வன்முறைக்காரனாகவும் இருந்தேன். ஆனாலும் எனக்கு இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் எனது அறியாமையினாலும் அவிசுவாசத்தினாலுமே நான் அப்படி நடந்துகொண்டேன்.</verse>
				<verse number="14">நமது கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடும், அன்புடனும் சேர்த்து என்மீது நிறைவாக ஊற்றப்பட்டது.</verse>
				<verse number="15">நம்பத்தகுந்ததும், முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமான கூற்று இது: பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அந்தப் பாவிகளில் மிக மோசமான பாவி நானே.</verse>
				<verse number="16">ஆனாலும், என்மீது இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் நித்திய வாழ்வைப் பெறுவதற்கு கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைக்கப் போகின்றவர்களுக்கு, நான் ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே மிக மோசமான பாவியாகிய என்மீது அவர் அளவற்ற பொறுமையைக் காண்பித்தார்.</verse>
				<verse number="17">நித்திய அரசரும், அழிவில்லாதவரும், கண்ணுக்குப் புலப்படாதவருமான ஒரேயொருவரான இறைவனுக்கே கனம், மகிமை என்பன என்றென்றும் உரித்தாகட்டும். ஆமென்.</verse>
				<verse number="18">மகன் தீமோத்தேயு, முன்பு உன்னைப்பற்றிக் கூறப்பட்ட இறைவாக்கின்படியே நான் உனக்கு இந்த அறிவுறுத்தலைக் கொடுக்கின்றேன். இவற்றை நீ கைக்கொள்வதனால், நல்ல போராட்டத்தையும்,</verse>
				<verse number="19">விசுவாசத்தையும், நல்ல மனசாட்சியையும் பற்றிப்பிடித்துக் கொண்டு உறுதியுடன் போராடுவாய். சிலர் இவற்றை நிராகரித்ததால், பாறையில் மோதிய கப்பலைப் போல் தங்கள் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.</verse>
				<verse number="20">இமெநேயும், அலெக்சாந்தரும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களை நான் சாத்தானிடம் கையளித்திருக்கிறேன். இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்க அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்வதாவது; முதன்மையாக எல்லா மக்களுக்காகவும் வேண்டுதல் செய்யுங்கள், மன்றாடுங்கள், பரிந்து பேசுங்கள், நன்றி செலுத்துங்கள்.</verse>
				<verse number="2">அரசர்களுக்காகவும் அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறைபக்தியும் பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியுமான வாழ்க்கை வாழ முடியும்.</verse>
				<verse number="3">இதுவே சரியானதும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமானதுமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="4">எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதும், சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெற்று உணர வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம்.</verse>
				<verse number="5">ஏனெனில் இறைவன் ஒருவரே, இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் நடுவரும் ஒருவரே. அவரே மனிதனாக வந்த கிறிஸ்து இயேசு.</verse>
				<verse number="6">எல்லா மனிதர்களையும் மீட்பதற்கு ஈடான ஒன்றாக அவர் தன்னையே கொடுத்தார். இதுவே குறித்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட சான்றாக இருக்கின்றது.</verse>
				<verse number="7">இதற்காகவே நான் போதிக்கின்றவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக் கொடுக்கின்றவனாகவும் நியமிக்கப்பட்டேன். நான் சொல்வது உண்மை, பொய் சொல்லவில்லை.</verse>
				<verse number="8">எனவே ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாகவும், வாக்குவாதம் செய்யாதவர்களாகவும் பரிசுத்த கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலும் மன்றாட வேண்டும் என்பதே என் விருப்பம்.</verse>
				<verse number="9">அதேபோல பெண்கள் அடக்கமானதும், ஒழுக்கம் மற்றும் தகுதியானதுமான ஆடைகளையே அணிய வேண்டும் என்று விரும்புகிறேன். விதவிதமான சிகை அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலையுயர்ந்த ஆடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல்,</verse>
				<verse number="10">இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்குத் தகுந்தபடி, நற்செயல்களால் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="11">பெண்ணானவள் அமைதியாகவும், மிகுந்த பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="12">போதிக்கவோ, ஆண்களுக்குமேல் அதிகாரம் செலுத்தவோ பெண்ணுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். அவள் அமைதியாயிருக்க வேண்டும்.</verse>
				<verse number="13">ஏனெனில் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டான். அதற்குப் பின்பே ஏவாள் உருவாக்கப்பட்டாள்.</verse>
				<verse number="14">மேலும் ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு பாவத்திற்கு ஆளானாள்.</verse>
				<verse number="15">ஆனாலும் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் பெண்ணானவள் நிலைத்திருந்தால் பிரசவத்தின் ஊடாக மீட்கப்படுவாள்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">நம்பத்தகுந்த கூற்று இது: எவராவது மேற்பார்வையாளராக இருக்க விரும்பினால், அவர் சிறந்த பணியை விரும்புகிறார்.</verse>
				<verse number="2">எனவே மேற்பார்வையாளராக இருப்பவர் குற்றம் சாட்டப்படாதவராகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், தன்னடக்கம் உள்ளவராகவும், சுயகட்டுப்பாடு உடையவராகவும், மதிப்புக்குரியவராகவும், உபசரிக்கின்ற குணமுள்ளவராகவும், போதிக்கும் ஆற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="3">அவர் குடிகாரராகவோ, மற்றவர்களைத் தாக்குகின்றவராகவோ இல்லாமல் கனிவு உடையவராகவும், வாக்குவாதம் செய்யாதவராகவும், பண ஆசை இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="4">தனது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துகின்றவராகவும், அவரது பிள்ளைகள் எல்லாவிதத்திலும் அவருக்கு மதிப்பளித்து கீழ்ப்படிகின்றவர்களாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="5">ஒருவருக்குத் தனது சொந்தக் குடும்பத்தை நடத்துவது எப்படி எனத் தெரியவில்லை என்றால், இறைவனின் திருச்சபையை அவர் எப்படிப் பராமரிப்பார்?</verse>
				<verse number="6">அவர் புதிதாக மனமாற்றம் அடைந்த ஒரு விசுவாசியாய் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், அவர் வீண்பெருமை கொண்டவராகி, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக் கூடும்.</verse>
				<verse number="7">வெளியாட்களின் மத்தியிலும் அவர் நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும். அப்போது அவர் அவதூறுக்கு ஆளாகாமலும், பிசாசின் கண்ணிப் பொறியில் விழாமலும் இருப்பார்.</verse>
				<verse number="8">அதேபோல் உதவி ஊழியர்கள் மதிப்புக்கு உரியவர்களாகவும், உண்மைத் தன்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் மதுவெறி கொள்கின்றவர்களாகவோ, அநியாய இலாபம் ஈட்ட முயற்சிக்கின்றவர்களாகவோ இருக்கக் கூடாது.</verse>
				<verse number="9">விசுவாசத்தின் ஆழமான மறைபொருளை நல்ல மனசாட்சியுடன் பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="10">முதலாவது அவர்களைப்பற்றி ஆராய்ந்தறியப்பட வேண்டும்; அதன்பின்பு, அவர்களுக்கு எதிராக குற்றம் ஏதும் இல்லையென்றால் அவர்கள் உதவி ஊழியர்களாகப் பணி செய்யலாம்.</verse>
				<verse number="11">அதேபோல் அவர்களுடைய மனைவியரும், மதிப்புக்குரியவர்களாய் இருக்க வேண்டும். அவர்கள் அவதூறு பேசாதவர்களாகவும், தன்னடக்கம் உள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் நம்பத் தகுந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="12">ஒரு உதவி ஊழியர், தன் மனைவிக்கு உண்மையுள்ள கணவனாகவும் தனது பிள்ளைகளையும் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகின்றவராகவும் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="13">நல்ல முறையில் இந்த பணியைச் செய்கின்றவர்கள் உயர் மதிப்பைப் பெற்றுக்கொள்வதோடு, கிறிஸ்து இயேசுவில் வைத்திருக்கின்ற தங்கள் விசுவாசத்தில் மிகுந்த உறுதி அடைவார்கள்.</verse>
				<verse number="14">விரைவில் நான் உன்னிடம் வருவேன் என எதிர்பார்ப்போடு இருக்கின்றேன். ஆனாலும் நான் இந்த அறிவுறுத்தல்களை எழுதுகிறேன்.</verse>
				<verse number="15">ஏனெனில் ஒருவேளை நான் வர தாமதித்தால், இறைவனுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறிந்துகொள்ளும்படியே இதை எழுதுகிறேன். இந்தக் குடும்பமே வாழும் இறைவனின் திருச்சபையாய் இருக்கின்றது. அதுவே சத்தியத்தைத் தாங்கும் தூணும் அத்திவாரமுமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="16">இறைபக்தியைக் குறித்த மறைபொருள் மகத்தானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் மனிதனாக வெளிப்படுத்தப்பட்டார். ஆவியானவரால் நிரூபிக்கப்பட்டார். இறைதூதர்களுக்குக் காணப்பட்டார். யூதரல்லாதவர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார். உலகத்திலுள்ளவர்களால் விசுவாசிக்கப்பட்டார். அவர் மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">பரிசுத்த ஆவியானவர் தெளிவாகச் சொல்வது இதுவே: கடைசிக் காலங்களில் சிலர் விசுவாசத்தைக் கைவிட்டு வஞ்சிக்கும் ஆவிகளையும் பிசாசுகளின் போதனைகளையும் பின்பற்றுவார்கள்.</verse>
				<verse number="2">இப்படியான போதனைகள், வேடதாரிகளான பொய்யர்களின் வழியாகவே வருகின்றன. அவர்களுடைய மனசாட்சிகளோ சூடுபட்டு மரத்துப் போனவை.</verse>
				<verse number="3">திருமணம் செய்யக் கூடாதென்றும், குறிப்பிட்ட சில வகை உணவை உண்ணக் கூடாதென்றும் அவர்கள் சொல்வார்கள். ஆனால் விசுவாசிக்கின்றவர்களும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி சொல்லி உண்பதற்காகவே இறைவன் அவற்றைப் படைத்திருக்கிறார்.</verse>
				<verse number="4">ஏனெனில் இறைவன் படைத்த எல்லாம் நல்லவையே, நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டால் எதையும் ஒதுக்க வேண்டியதில்லை.</verse>
				<verse number="5">ஏனென்றால், இறைவனுடைய வார்த்தையினாலும் மன்றாடுதலினாலும் அது பரிசுத்தமாக்கப்படுகிறது.</verse>
				<verse number="6">இக்காரியங்களை சகோதர சகோதரிகளுக்கு அறியச் செய்தால் கிறிஸ்து இயேசுவின் நல்லதொரு ஊழியனாயிருப்பாய். விசுவாசத்தின் வார்த்தைகளிலும், நீ கைக்கொண்ட நல்ல போதனைகளிலும் ஊட்டம் பெற்றவனாக இருப்பாய்.</verse>
				<verse number="7">இறைபக்தியில்லாதவர்களின் கட்டுக்கதைகளிலும், கிழவிகளின் கட்டுக்கதைகளிலும் நீ சம்பந்தம் கொள்ளாதே. அதற்குப் பதிலாக இறைபக்தியில் உன்னைப் பயிற்றுவித்துக் கொள்.</verse>
				<verse number="8">உடற்பயிற்சி ஓரளவு பயன் தரும். ஆனால் இறைபக்தி எல்லாவிதத்திலும் பயனுள்ளது. அது தற்கால வாழ்வுக்கும், வருங்கால வாழ்வுக்கும் பயன் தரும் என்ற வாக்குறுதியைக் கொண்டுள்ளது.</verse>
				<verse number="9">இது நம்பத்தகுந்ததும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமான கூற்று.</verse>
				<verse number="10">இதற்காகவே நாம் கடினமாகப் பாடுபட்டு முயற்சி செய்கின்றோம். ஏனெனில் எல்லா மனிதர்களுக்கும், விசேடமாக விசுவாசிகளுக்கு இரட்சகராயிருக்கின்ற வாழும் இறைவனில் நாம் நமது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம்.</verse>
				<verse number="11">இந்தக் காரியங்களை நீ கட்டளையிட்டும், போதித்தும் கொண்டிரு.</verse>
				<verse number="12">நீ வாலிபனாய் இருப்பதால், யாரும் உன்னைத் தாழ்வாக எண்ண இடம் கொடாதே. அத்துடன் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.</verse>
				<verse number="13">நான் வரும் வரைக்கும் திருச்சபையில் வேதவசனங்கள் வாசிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், போதிப்பதிலும் கவனமாக ஈடுபட்டுக் கொண்டிரு.</verse>
				<verse number="14">மூப்பர் குழுவினர் உன்மேல் தங்கள் கைகளை வைத்தபோது, இறைவாக்கின் மூலமாக உனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தை அலட்சியம் செய்யாதே.</verse>
				<verse number="15">இந்தக் காரியங்களில் கவனத்தைச் செலுத்து; அவைகளுக்கு உன்னை முழுமையாக ஒப்புக் கொடு. அப்போது உன்னுடைய முன்னேற்றத்தை எல்லோரும் தெளிவாகக் கண்டுகொள்வார்கள்.</verse>
				<verse number="16">உன் வாழ்க்கை முறையைக் குறித்தும், உபதேசத்தைக் குறித்தும் அதிக கவனம் செலுத்து. அவைகளில் நிலைத்திரு, அப்படியிருந்தால் உன்னையும், நீ சொல்வதைக் கேட்கின்றவர்களையும் மீட்டுக்கொள்வாய்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">வயதில் மூத்தவர்களைக் கடுமையாகக் கண்டிக்காதே, அவர்களை உன் தந்தையைப் போல் மதித்து வேண்டுகோள் விடு. வாலிபர்களை உனது சகோதரர்களைப் போல் நடத்தி,</verse>
				<verse number="2">வயதில் மூத்த பெண்களைத் தாயாரைப் போலவும், இளம் பெண்களைச் சகோதரிகளைப் போலவும் எண்ணி தூய்மையாய் நடந்துகொள்.</verse>
				<verse number="3">உண்மையாகவே தேவையோடு இருக்கும் விதவைகளுக்கு வேண்டிய ஆதரவைக் கொடு.</verse>
				<verse number="4">ஆனால் எந்த விதவைக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், அவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதன் மூலமாக இறைபக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும். இப்படியாகத் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில் இதுவே இறைவனைப் பிரியப்படுத்தும் செயல்.</verse>
				<verse number="5">உண்மையாகவே ஆதரவு இன்றி தனித்து கைவிடப்பட்ட ஒரு விதவை, தனது எதிர்பார்ப்பை இறைவனிலே வைத்து இரவும் பகலும் மன்றாடி, அவரிடமே உதவியை நாடி நிற்பாள்.</verse>
				<verse number="6">ஆனால் உலகத்தின் இன்ப வாழ்வை விரும்புகின்ற விதவையோ, உயிரோடிருந்தாலும் நடைப்பிணமாகவே இருப்பாள்.</verse>
				<verse number="7">எவர் மீதும் குற்றம் சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு.</verse>
				<verse number="8">தன் உறவினர்களுக்கு, குறிப்பாக தனது குடும்பத்தவர்களுக்கு உதவி செய்யாத ஒருவன் தன்னுடைய விசுவாசத்தையே மறுதலிக்கின்றவனாகவும், விசுவாசமற்ற ஒருவனைவிட மோசமானவனாகவும் இருக்கின்றான்.</verse>
				<verse number="9">விதவைகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள் அறுபது வயதிற்கு மேற்பட்டவராயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருக்க வேண்டும்.</verse>
				<verse number="10">அத்துடன் தனது நற்செயல்களினால், அதாவது பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கின்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லாவிதமான நற்செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தி நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="11">இந்தப் பட்டியலில் இளம் விதவைகளை பதிவுசெய்து கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்ட ஆசைகளால் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கப்படும்போது, மறுமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.</verse>
				<verse number="12">இப்படியாக முதலில் கொடுத்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள்.</verse>
				<verse number="13">அதைவிட அவர்கள் சோம்பேறிகளாகி வீடுவீடாகத் திரிவதற்குப் பழகிக்கொள்வார்கள். சோம்பேறிகளாக மட்டுமல்ல, மற்றவர்களைக் குறித்து வீண் பேச்சு பேசுகின்றவர்களாகவும், மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுகின்றவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித் திரிவார்கள்.</verse>
				<verse number="14">எனவே இளம் விதவைகளுக்கு நான் கொடுக்கும் ஆலோசனை, அவர்கள் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்த வேண்டும். எதிரியானவன் அவமதித்துப் பேசுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.</verse>
				<verse number="15">ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி, சாத்தானைப் பின்பற்றிச் சென்று விட்டார்கள்.</verse>
				<verse number="16">விசுவாசியான ஒரு பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருப்பார்களானால், அவர்களை அப்பெண்ணே பராமரிக்க வேண்டும். அந்தப் பாரத்தை திருச்சபையின் மேல் சுமத்தக் கூடாது. அப்போதுதான் உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபையால் உதவி செய்ய முடியும்.</verse>
				<verse number="17">திருச்சபையை நல்லவிதத்தில் நடத்துகின்ற மூப்பர்களை, விசேடமாக பிரசங்கம் பண்ணுவதிலும் போதிப்பதிலும் ஈடுபடும் மூப்பர்களை இரட்டிப்பான மதிப்பிற்குத் தகுதியானவர்களாக எண்ண வேண்டும்.</verse>
				<verse number="18">ஏனெனில், “தானியக் கதிரைக் கதிரடிக்கும் எருதின் வாயைக் கட்ட வேண்டாம்” என்றும், “வேலை செய்பவன் தன் கூலியைப் பெற உரிமையுள்ளவன்” என்றும் வேதவசனம் சொல்கின்றது.</verse>
				<verse number="19">மூப்பர் ஒருவருக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே.</verse>
				<verse number="20">பாவம் செய்கின்ற மூப்பர்கள், எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள்ளப்பட வேண்டும். அப்போது அது மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும்.</verse>
				<verse number="21">இறைவனுக்கும், கிறிஸ்து இயேசுவுக்கும், தெரிவு செய்யப்பட்ட இறைதூதர்களுக்கும் முன்னிலையில் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: இந்த அறிவுறுத்தல்களைப் பாரபட்சமோ பக்கச்சார்போ இல்லாமல் கைக்கொள்.</verse>
				<verse number="22">அவசரப்பட்டு எவர் மீதும் கைகளை வைத்து விடாதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மை உள்ளவனாய் காத்துக்கொள்.</verse>
				<verse number="23">தொடர்ந்து தண்ணீரை மட்டும் குடிக்காமல் உனது வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படுகின்ற சுகவீனங்களுக்காகவும் கொஞ்சம் திராட்சை ரசத்தையும் அருந்து.</verse>
				<verse number="24">சிலருடைய பாவங்கள் வெளிப்படையாய் தெரிவதால், அவை நியாயத்தீர்ப்பிற்கு முதலில் வந்து சேருகின்றன. மற்றவர்களுடைய பாவங்களோ பின்னரே தெரிய வரும்.</verse>
				<verse number="25">அதேபோல, நல்ல செயல்களும் வெளிப்படையாய் தெரிய வரும், அப்படி வெளிப்படாதவைகள் தொடர்ந்தும் மறைந்திருக்க மாட்டாது.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">அடிமைத்தன நுகத்துக்குக் கீழ்ப்பட்ட எல்லோரும் தங்கள் எஜமான்களை எல்லாவிதமான மதிப்புக்கும் உரியவர்களாக எண்ண வேண்டும். அப்போது நமது இறைவனின் பெயருக்கும், எங்கள் கற்பித்தலுக்கும் எந்த அவதூறும் ஏற்படாது.</verse>
				<verse number="2">விசுவாசிகளான எஜமான்களின் கீழ் இருக்கும் அடிமைகளும், தங்கள் எஜமான்களை வெறும் சகோதரர்களாக மட்டும் எண்ணி அவர்களை மரியாதைக் குறைவாகக் கருதக் கூடாது. தங்களுடைய பணியினால் இலாபம் பெறும் எஜமான்கள், விசுவாசிகளாகவும் தங்கள் மீது அன்புள்ளவர்களாகவும் இருப்பதனால் அவர்கள் இன்னும் சிறப்பாகப் பணி செய்ய வேண்டும். நீ கற்பித்து, வற்புறுத்திக் கூற வேண்டியவை இவைகளே.</verse>
				<verse number="3">எவனாவது தவறான கோட்பாடுகளைக் கற்றுக் கொடுக்கின்றவனாகவும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலமான அறிவுறுத்தல்களுக்கும் இறைபக்திக்கு உகந்த கற்பித்தலுக்கும் உடன்படாதவனாகவும் இருந்தால்,</verse>
				<verse number="4">அவன் கர்வம் உள்ளவனும், எதையும் புரிந்துகொள்ளாதவனுமாய் இருக்கின்றான். வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் செய்வதிலும் தகராறு புரிவதிலும் அவன் அதிக விருப்பமுள்ளவன். இவற்றிலிருந்தே பொறாமை, சண்டை, அவதூறான பேச்சு, தீய சந்தேகங்கள்,</verse>
				<verse number="5">மற்றும் சீர்கெட்ட மனம்கொண்ட மனிதர்களுக்கு இடையில் அடிக்கடி எழுகின்ற முரண்பாடான பேச்சுக்களும் உண்டாகின்றன. இப்படிப்பட்டவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ளாதவர்களாய், இறைபக்தியை இலாபம் ஈட்டுவதற்கான ஒரு வழி என எண்ணுகிறார்கள்.</verse>
				<verse number="6">ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறைபக்தியே மிகுந்த இலாபம்.</verse>
				<verse number="7">ஏனெனில் இந்த உலகத்திற்கு நாம் எதையும் கொண்டுவரவுமில்லை, இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.</verse>
				<verse number="8">ஆகவே உணவும் உடையும் நமக்கு இருக்குமானால், அதிலே நாம் மனத்திருப்தி உள்ளவர்களாய் இருப்போமாக.</verse>
				<verse number="9">செல்வந்தர்களாக வேண்டும் என விரும்புகின்றவர்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிப் பொறிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் பலவிதமான ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரை நாசப்படுத்தி அழிவுக்குள் மூழ்கடிக்கின்றன.</verse>
				<verse number="10">ஏனெனில் பணத்தின் மீது ஆசைகொள்வதே எல்லாவிதமான தீமைக்கும் ஆணிவேராய் இருக்கின்றது. சிலர் இந்த ஆசையினால் விசுவாசத்தைவிட்டு விலகி, பலவிதமான துன்பங்களைத் தங்கள் மீது வருவித்துக் கொண்டார்கள்.</verse>
				<verse number="11">ஆனால் இறைவனுடைய மனிதனாகிய நீயோ இவை எல்லாவற்றையும்விட்டு விலகி ஓடு. நீதி, இறைபக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத் தன்மை, சாந்தம் ஆகியவற்றையே நாடித் தேடு.</verse>
				<verse number="12">விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வை உறுதியாகப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டிருக்கிறாய், அநேக சாட்சிகளுக்கு முன்பாக உன் விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கை செய்திருக்கின்றாய்.</verse>
				<verse number="13">எல்லாவற்றிற்கும் உயிர் கொடுக்கின்ற இறைவனின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவுக்கு முன்னால் நல்ல சாட்சியம் அளித்த கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளை கொடுக்கின்றேன்.</verse>
				<verse number="14">நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசு மீண்டும் வெளிப்படும் வரை, எந்தவிதமான களங்கத்துக்கோ குற்றச் சாட்டுக்கோ ஆளாகாமல் இந்தக் கட்டளையைக் கைக்கொள்.</verse>
				<verse number="15">இறைவனே குறித்த காலத்தில் அவரை வெளிப்படுத்துவார். இறைவனே ஆசீர்வதிக்கப்பட்ட ஒரே பேரரசர். அரசர்களுக்கெல்லாம் அரசர். ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவர்.</verse>
				<verse number="16">அவர் ஒருவரே அழிவில்லாத் தன்மை உடையவர், அணுக முடியாத ஒளியில் வாழ்பவர், ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனம், நித்திய வல்லமை என்பன என்றென்றும் உரித்தாகட்டும். ஆமென்.</verse>
				<verse number="17">இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கின்றவர்கள், அகந்தை உள்ளவர்களாய் இருக்கக் கூடாது என்று அவர்களுக்குக் கட்டளையிடு. அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின் மேல் வைக்காமல், நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நமக்கு நிறைவாகக் கொடுக்கும் இறைவனில் வைக்க வேண்டும் எனக் கட்டளையிடு.</verse>
				<verse number="18">அவர்கள் நன்மை செய்கின்றவர்களாகவும் நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் கட்டளையிடு.</verse>
				<verse number="19">இவ்விதமாக வருங்காலத்திற்காக உறுதியான அத்திவாரமாக அவர்கள் தங்களுக்குச் செல்வத்தை சேர்த்துக்கொள்வார்கள். இதனால் அவர்கள் உண்மையான வாழ்வை பற்றிக்கொள்ள முடியும்.</verse>
				<verse number="20">தீமோத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைக் கவனமாகக் காத்துக்கொள். இறைபக்தியில்லாத பேச்சுக்களிலும், அறிவு என பொய்யாக அழைக்கப்படுகின்ற முரண்பட்ட கருத்துகளிலுமிருந்து விலகியிரு.</verse>
				<verse number="21">சிலர் இவற்றை நம்பி ஏற்றுக்கொண்டு விசுவாசத்தைவிட்டு விலகிப் போயிருக்கிறார்கள். கிருபை உங்களுடனே இருப்பதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="55">
			<chapter number="1">
				<verse number="1">கிறிஸ்து இயேசுவில் உள்ள வாழ்வைக் குறித்த வாக்குறுதியின்படி, இறைவனுடைய சித்தத்தினால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்டிருக்கின்ற பவுல்,</verse>
				<verse number="2">எனது அன்பு மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுவதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனிடமிருந்தும், நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவினிடமிருந்தும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="3">இரவும் பகலும் எனது மன்றாடுதலில் இடைவிடாமல் உன்னை நினைத்து, என் முற்பிதாக்களைப் போல சுத்த மனசாட்சியுடன், நான் பணி செய்யும் என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="4">நீ கண்ணீர் சிந்தியதை நான் நினைவில்கொள்ளும்போது, உன்னைக் கண்டு நான் மனமகிழ்ச்சியடையும்படி மிகுந்த ஆவலாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="5">உனது உண்மையான விசுவாசம் என் நினைவில் வருகின்றது. இத்தகைய விசுவாசம் முதலில் உனது பாட்டி லோவிசாளிடத்திலும், உனது தாய் ஐனிக்கேயாளிடத்திலும் இருந்தது. இப்போது உன்னிடத்திலும் இருக்கின்றது என நம்புகிறேன்.</verse>
				<verse number="6">இக் காரணத்தினாலேயே, உனது மேல் நான் எனது கைகளை வைத்தபோது உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டு எரியச் செய்யும்படி உனக்கு நினைவூட்டுகிறேன்.</verse>
				<verse number="7">ஏனெனில், இறைவன் நமக்குப் பயப்படுகின்ற சுபாவத்தைக் கொடுக்கவில்லை. வல்லமையும், அன்பும், சுய ஒழுக்கமும் உள்ள சுபாவத்தையே தந்திருக்கிறார்.</verse>
				<verse number="8">எனவே நமது கர்த்தரைப்பற்றி சாட்சி சொல்வதற்கோ, அவருக்காகக் கைதியாக இருக்கும் என்னைக் குறித்தோ வெட்கப்படாதே. இறைவனின் வல்லமையில் சார்ந்திருந்து, நற்செய்திக்காகத் துன்பம் அனுபவிப்பதில் என்னுடன் பங்குகொள்.</verse>
				<verse number="9">அவரது சொந்த நோக்கத்தின் பொருட்டும் கிருபையின் பொருட்டும் அவர் நம்மை மீட்டெடுத்து பரிசுத்தமான ஒரு வாழ்வுக்கு அழைத்தாரேயன்றி, ஏதோ நாம் செய்த நல்ல செயல்களின் காரணமாக அல்ல. இந்த கிருபையானது யுகங்கள் உருவாகும் முன்பே கிறிஸ்து இயேசுவின் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="10">ஆனால் இப்பொழுதோ அந்த கிருபையானது நமது மீட்பராகிய கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் மரணத்தை அழித்து, நற்செய்தியின் மூலமாக வாழ்வையும் அழிவில்லாத் தன்மையையும் அறியச் செய்திருக்கின்றார்.</verse>
				<verse number="11">இந்த நற்செய்திக்காகவே, பிரசங்கியாகவும் அப்போஸ்தலனாகவும் ஆசிரியனாகவும் நான் நியமிக்கப்பட்டேன்.</verse>
				<verse number="12">இதன் காரணமாகவே இப்படியாகத் துன்பங்களை அனுபவித்து வருகின்றேன். ஆனால் அதற்காக நான் வெட்கப்படவில்லை. ஏனெனில் நான் விசுவாசிக்கின்ற அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடத்தில் ஒப்படைத்திருப்பதை, அவர் மீண்டும் வரவிருக்கும் நாள்வரை பாதுகாப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.</verse>
				<verse number="13">என்னிடமிருந்து நீ கேட்ட நலமான போதனைகளை மாதிரி வழிமுறையாக வைத்து, அதை கிறிஸ்து இயேசுவில் கொண்டுள்ள விசுவாசத்துடனும் அன்புடனும் பற்றிப் பிடித்துக்கொள்.</verse>
				<verse number="14">உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற நல்ல பொக்கிஷத்தை நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் காத்துக்கொள்.</verse>
				<verse number="15">ஆசியா பகுதியிலுள்ள பிகெல்லுவும், எர்மொகெனேயும் உட்பட அனைவரும் என்னைவிட்டு விலகிப் போனது உனக்குத் தெரியுமே.</verse>
				<verse number="16">ஒநேசிப்போருவின் குடும்பத்திற்குக் கர்த்தர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில் அவன் அடிக்கடி எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டினான். நான் விலங்கிடப்பட்டிருப்பதைக் குறித்து அவன் வெட்கப்படவில்லை.</verse>
				<verse number="17">அத்துடன் அவன் ரோம் நகரத்திற்கு வந்திருந்தபோது, என்னைக் கண்டுபிடிக்கும் வரை அதிக முயற்சி எடுத்துத் தேடினான்.</verse>
				<verse number="18">இறுதி நியாயத்தீர்ப்பின் நாளிலே, கர்த்தரிடத்திலிருந்து அவன் இரக்கத்தைப் பெறுவதற்கு கர்த்தர் அவனுக்கு உதவி செய்வாராக! அவன் எபேசுவிலே எனக்கு எந்தளவு உதவி செய்தான் என்பது உனக்கு மிக நன்றாகத் தெரியும்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">ஆகையால் என் மகனே, கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையின் மூலமாக நீ பலமடைவாயாக.</verse>
				<verse number="2">அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடம் கேட்டறிந்தவற்றை போதிக்கத் திறமையுடைய நம்பத்தகுந்த மனிதரிடத்தில் ஒப்படைத்து விடு. அவர்கள் அதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்.</verse>
				<verse number="3">கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனாகத் துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்.</verse>
				<verse number="4">போர்வீரனாகப் பணி செய்யும் எவனும், வேறெந்த விவகாரங்களிலும் ஈடுபட மாட்டான். ஏனெனில் தனது அதிகாரியைப் பிரியப்படுத்துவதே அவனது நோக்கமாயிருக்கும்.</verse>
				<verse number="5">அதேபோல விளையாட்டுகளில் போட்டியிடும் எந்த வீரனாயினும் விதிமுறைகளைக் கைக்கொள்ளாவிட்டால் வெற்றிக் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டான்.</verse>
				<verse number="6">கடினமாய் உழைக்கும் விவசாயியே விளைச்சலின் பங்கைப் பெறுவதற்கு முதல் தகுதியுடையவன்.</verse>
				<verse number="7">நான் சொல்வதைச் சிந்தித்துப் பார், ஏனெனில் இவை எல்லாவற்றைக் குறித்தும் அறிந்துகொள்ள கர்த்தர் உனக்கு புரிந்துணர்வைத் தருவாராக.</verse>
				<verse number="8">இயேசு கிறிஸ்துவை நினைவில் வைத்திரு. அவரே மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவர், தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே நான் பிரசங்கிக்கும் நற்செய்தி.</verse>
				<verse number="9">இதற்காகவே நான் ஒரு குற்றவாளியைப் போல் விலங்கினால் பிணைக்கப்பட்டு துன்பம் அனுபவித்து வருகின்றேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கினால் கட்டப்படவில்லை.</verse>
				<verse number="10">ஆகவே தெரிவு செய்யப்பட்டவர்கள், கிறிஸ்து இயேசுவின் மூலமாக கிடைக்கின்ற மீட்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்து வருகின்றேன்.</verse>
				<verse number="11">இது நம்பத்தகுந்த கூற்று: அவரோடு நாம் இறந்துவிட்டால், அவரோடு நாம் வாழ்ந்திருப்போம்.</verse>
				<verse number="12">துன்பங்களை நாம் சகிப்போமானால், அவருடன் நாம் ஆட்சியும் செய்வோம். கிறிஸ்துவை நாம் மறுதலிப்போமானால், அவரும் நம்மை மறுதலித்து விடுவார்.</verse>
				<verse number="13">நாம் அவருக்கு உண்மை அற்றவர்களாய்ப் போனாலும், அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருக்கின்றார். ஏனெனில், அவர் தமது நிலையிலிருந்து தம்மை மாற்றிக்கொள்வதில்லை.</verse>
				<verse number="14">இதையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இரு. வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் செய்ய வேண்டாமென இறைவனுக்கு முன்பாக அவர்களை எச்சரிக்கை செய். அப்படிப்பட்ட வாக்குவாதங்கள் கேட்கின்றவர்களைப் பாழாக்குமே அன்றி, அதனால் வேறு எவ்விதப் பயனும் இல்லை.</verse>
				<verse number="15">நீயோ வெட்கப்படாத ஒரு வேலையாளாக, சத்திய வார்த்தையைச் சரியாகக் கையாளுகின்றவனாக, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவனாக அவருக்கு முன்பாக நிற்பதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய்.</verse>
				<verse number="16">இறைபக்தியில்லாத வீண் பேச்சைவிட்டு விலகு. ஏனெனில் அது மென்மேலும் இறைவனை மறுதலிப்பதற்கே மக்களை வழிநடத்தும்.</verse>
				<verse number="17">அவர்களின் போதனை சதையழுகல் நோயைப் போல பரவும். இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்.</verse>
				<verse number="18">அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிச் சென்று விட்டார்கள். உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது எனச் சொல்லி சிலரது விசுவாசத்தைச் சீரழித்து வருகின்றார்கள்.</verse>
				<verse number="19">அப்படியிருந்தும் இறைவனின் உறுதியான அத்திவாரம் நிலைத்து நிற்கிறது: “தமக்குச் சொந்தமானவர்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்” என்றும், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயம் விலகவேண்டும்” என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளது.</verse>
				<verse number="20">ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மட்டுமல்லாமல் மரப் பாத்திரங்களும் மண் பாத்திரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில உயர்வான நோக்கங்களுக்காகவும், சில தாழ்வான உபயோகத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.</verse>
				<verse number="21">எவராவது தாழ்வானவைகளிலிருந்து முழுவதும் சுத்திகரிக்கப்பட்டிருந்தால், அவர் உயர்வான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரமாக இருப்பார். அவர் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்கு உகந்தவராகவும், எந்த நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்டவராகவும் இருப்பார்.</verse>
				<verse number="22">வாலிபப் பருவத்தின் தீய ஆசைகளைவிட்டு விலகி ஓடு. சுத்த இதயத்தோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றவர்களுடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித் தேடு.</verse>
				<verse number="23">முட்டாள்தனமானதும், அறிவற்றதுமான விவாதங்களில் கலந்துகொள்ளாதே. ஏனெனில் அவை சண்டைகளையே ஏற்படுத்தும் என்பது உனக்குத் தெரியும்.</verse>
				<verse number="24">கர்த்தரின் ஊழியன் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால், எல்லோரிடமும் அவன் தயவுள்ளவனாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும், தீமையைச் சகிக்கின்றவனாகவும் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="25">இறைவன் ஒருவேளை அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், எதிர்க்கின்றவர்களைக் கனிவுடன் அறிவுறுத்த வேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு வழிநடத்தி,</verse>
				<verse number="26">அது அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். அப்போது, தனது திட்டத்தைச் செய்ய, பிசாசினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற அவர்கள் கண்ணிப் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">ஆனாலும் கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் வரவிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்.</verse>
				<verse number="2">ஏனென்றால், மக்கள் தங்களில் மாத்திரமே அன்பு காட்டுகின்றவர்களாகவும், பண ஆசை உள்ளவர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், பெருமை உள்ளவர்களாகவும், பழித்துப் பேசுகின்றவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும்,</verse>
				<verse number="3">அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மை அற்றவர்களாகவும், அவதூறு பேசுகின்றவர்களாகவும், சுயகட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும்,</verse>
				<verse number="4">துரோகிகளாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், தலைக்கனம் பிடித்தவர்களாகவும், இறைவனை நேசிக்காமல் சிற்றின்பங்களை விரும்புகின்றவர்களாகவும்,</verse>
				<verse number="5">தோற்றத்தில் இறைபக்தி உள்ளவர்களைப் போல் காட்டிக்கொண்டாலும் அதன் வல்லமையை மறுதலிக்கின்றவர்களாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைவிட்டு விலகியிரு.</verse>
				<verse number="6">இப்படிப்பட்டவர்களே வீடுகளுக்குள் நுழைந்து மனவுறுதியில் பலவீனமான பெண்களைத் தம் வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்கள் பாவங்களால் நிறைந்தவர்களும், பலவித தகாத ஆசைகளினால் அலைக்கழிக்கப் படுகின்றவர்களுமாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="7">இவர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கின்றார்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தைத் திருத்தமாக அறிந்துகொள்ள இயலாதவர்கள்.</verse>
				<verse number="8">யந்நே, யம்பிரே என்பவர்கள் மோசேயை எதிர்த்து நின்றது போல, இந்த மனிதர்களும் சத்தியத்தை எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீர்கெட்ட மனமுடையவர்கள். விசுவாசத்தைப் பொறுத்தவரையில் புறக்கணிக்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="9">ஆனாலும் இவர்களால் இப்படி அதிக தூரம் போக முடியாது. ஏனெனில் அந்த இருவருக்கும் நடந்தது போல, இவர்களுடைய முட்டாள்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும்.</verse>
				<verse number="10">ஆனால் நீயோ எனது போதனைகளையும், நடத்தையையும், வாழ்வின் நோக்கத்தையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத் தன்மையையும் அறிந்திருக்கிறாய்.</verse>
				<verse number="11">அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய இடங்களில் எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களையும் பாடுகளையும், அதை நான் எப்படிச் சகித்தேன் என்பதையும் அறிந்திருக்கிறாய். ஆனால் அவை எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னை விடுவித்தார்.</verse>
				<verse number="12">உண்மையில், கிறிஸ்து இயேசுவில் இணைக்கப்பட்டவர்களாய் இறைபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகின்ற அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள்.</verse>
				<verse number="13">அதேவேளை தீய மனிதர்களும் வஞ்சகர்களும் மென்மேலும் கேடான நிலையடைவார்கள். அவர்கள் ஏமாற்றுகின்றவர்களாகவும், ஏமாற்றப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.</verse>
				<verse number="14">நீயோ கற்று, உறுதியாக நம்புகின்றவைகளைத் தொடர்ந்து கடைப்பிடி. ஏனெனில் நீ யாரிடமிருந்து அவற்றைக் கற்றுக்கொண்டாய் என்பதையும் அறிவாய்,</verse>
				<verse number="15">எப்படி, உன் குழந்தைப் பருவத்திலிருந்தே பரிசுத்த வேதவசனங்களை நீ அறிந்து வைத்திருக்கின்றாய் என்பதுவும் உனக்குத் தெரியும். அவை கிறிஸ்து இயேசுவின்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாக மீட்பைப் பெற்றுக்கொள்வதற்கு உன்னை ஞானமுள்ளவனாக்குகிறது.</verse>
				<verse number="16">வேதவசனங்கள் அனைத்தும் இறைவனின் உயிர் மூச்சினால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக் கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், தவறை திருத்துவதற்கும், நீதியாய் வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளவையாய் இருக்கின்றன.</verse>
				<verse number="17">அதனூடாக, இறைவனுடைய ஊழியன் எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்வதற்கு முழுமையான ஆயத்தத்தைப் பெற்றுக்கொள்கின்றான்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">இறைவனின் முன்னிலையிலும், உயிரோடிருக்கின்றவர்களையும் இறந்தவர்களையும் நியாயம் தீர்க்கவிருக்கும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் அவரது வருகையையும் அவருடைய அரசையும் முன்னிட்டு நான் உனக்கு ஆணையிட்டுக் கூறுவதாவது:</verse>
				<verse number="2">வார்த்தையைப் பிரசங்கம் பண்ணு. வாய்ப்பு உள்ள காலத்திலும் சரி, இல்லாத காலத்திலும் சரி; அதற்கு ஆயத்தமாய் இரு. தவறை உணர்த்து, கண்டனம் செய், ஊக்கப்படுத்து. இதை மிகுந்த பொறுமையுடன், கவனமான அறிவுறுத்தலின் ஊடாகச் செய்.</verse>
				<verse number="3">ஏனெனில் மக்கள் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளாத காலம் வரும். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் ஆசைகளுக்கிணங்க தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைச் சொல்கின்ற அநேக ஆசிரியர்களைத் தங்களுக்கென்று சேர்த்துக்கொள்வார்கள்.</verse>
				<verse number="4">அவர்கள் சத்தியத்தை கேட்பதிலிருந்து விலகி, கட்டுக்கதைகளையே காதுகொடுத்துக் கேட்பார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் நீயோ எல்லா சூழ்நிலைகளிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. கஷ்டங்களைத் தாங்கிக்கொள். நற்செய்தி ஊழியனுக்குரிய பணியைச் செய். உனது ஊழியத்தின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்று.</verse>
				<verse number="6">ஏனெனில் நான் ஒரு பானபலி போன்று ஊற்றப்படுவதானது ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது.</verse>
				<verse number="7">போராட்டத்தை நான் நன்றாகப் போராடினேன். ஓட்டத்தை ஓடி முடித்தேன். நான் விசுவாசத்தை பேணிக் காத்துக்கொண்டேன்.</verse>
				<verse number="8">இப்போது நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நீதிபதியாகிய ஆண்டவர், தாம் திரும்பி வரும் நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார். எனக்கு மட்டுமன்றி, அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற எல்லோருக்கும் தருவார்.</verse>
				<verse number="9">விரைவில் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய்.</verse>
				<verse number="10">ஏனெனில் தேமா இந்த உலகத்தின்மீது ஆசை வைத்து என்னைக் கைவிட்டு தெசலோனிக்கேயாவுக்குச் சென்று விட்டான். கிரேஸ்கே கலாத்தியாவுக்கும், தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டார்கள்.</verse>
				<verse number="11">லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கின்றான். மாற்குவையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு வா. ஏனெனில் அவன் ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பான்.</verse>
				<verse number="12">தீகிக்குவை நான் எபேசுவிற்கு அனுப்பியிருக்கிறேன்.</verse>
				<verse number="13">துரோவாவில் இருக்கின்ற கார்புவிடம் நான் விட்டுவந்த எனது மேலாடையையும், அத்துடன் என் புத்தகச் சுருள்களையும், முக்கியமாக தோற் சுருள்களையும் நீ வரும்போது எடுத்துக்கொண்டு வா.</verse>
				<verse number="14">உலோகத் தொழிலாளியான அலெக்சாந்தர் எனக்கு மிகவும் கெடுதல் செய்தான். அவனுடைய செயல்களுக்கான பிரதிபலனை கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார்.</verse>
				<verse number="15">நீயும் அவனைக் குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் நமது செய்தியை அவன் கடுமையாக எதிர்த்தான்.</verse>
				<verse number="16">எனது முதல் வழக்கு விசாரணையின்போது எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. எல்லோரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். அது அவர்களுக்கு எதிரான குற்றமாய் கணக்கிடப்படாதிருப்பதாக.</verse>
				<verse number="17">ஆனால் கர்த்தர் என் அருகில் நின்று எனக்குப் பலத்தைக் கொடுத்தார். அதனால் என் மூலமாக செய்தி முழுமையாக அறிவிக்கப்படவும், யூதரல்லாத மக்களும் அதைக் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன்.</verse>
				<verse number="18">ஆம், கர்த்தர் என்னை தீயவனின் தாக்குதல்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து, தமது பரலோக அரசுக்குள் என்னைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.</verse>
				<verse number="19">பிரிஸ்கில்லாளுக்கும், ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போரின் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துதல்களைச் சொல்.</verse>
				<verse number="20">எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோபீமு வியாதியாய் இருந்ததால் நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன்.</verse>
				<verse number="21">குளிர் காலத்துக்கு முன்பு இங்கு வந்து சேர முடிந்தளவு முயற்சி செய். ஐபூலூவும், புதேஞ்சும், லீனூவும், கலவுதியாளும், மற்ற எல்லா சகோதரர்களும் உனக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கின்றார்கள்.</verse>
				<verse number="22">கர்த்தர் உன்னோடு இருப்பாராக. கிருபை உன்னோடு இருப்பதாக.</verse>
			</chapter>
		</book>
		<book number="56">
			<chapter number="1">
				<verse number="1">இறைவனின் ஊழியராகவும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் இருக்கின்ற பவுலாகிய நான், இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களது விசுவாசத்தையும், இறைபக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அறிவையும் அடையவே இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.</verse>
				<verse number="2">இந்த விசுவாசத்துக்கும் அறிவுக்கும் அடிப்படையாக இருப்பது, நித்திய வாழ்வைப் பற்றிய எதிர்பார்ப்பு. பொய்யே சொல்லாதவராகிய இறைவன், அந்த நித்திய வாழ்வைக் குறித்து காலம் தொடங்கும் முன்னரே வாக்குறுதி அளித்திருந்தார்.</verse>
				<verse number="3">நம்முடைய இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையினாலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்கத்தின் மூலமாக, அவரால் நியமிக்கப்பட்டதான இந்தக் காலத்தில் இது வெளிப்படுத்தப்பட்டது.</verse>
				<verse number="4">பவுலாகிய நான், நமக்குள்ள பொதுவான விசுவாசத்தில் எனக்கு உண்மை மகனாய் இருக்கின்ற தீத்துவுக்கு எழுதுகின்றதாவது: பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="5">நான் உன்னைக் கிரேத்தா தீவில் விட்டுவந்ததற்குக் காரணம், முற்றுப் பெறாத வேலைகளைச் சரிசெய்யவும், நான் உனக்கு அறிவுறுத்தியதற்கு அமைய எல்லா நகரங்களிலும் மூப்பர்களை நியமிப்பதற்காகவுமே ஆகும்.</verse>
				<verse number="6">மூப்பராக நியமிக்கப்படுகின்றவர் குற்றம் சாட்டப்படாதவராகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்க வேண்டும். அவருடைய பிள்ளைகள் விசுவாசிகளாகவும், சீர்கேடானவர்கள் என்றோ கீழ்ப்படியாதவர்கள் என்றோ குற்றம் சாட்டப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="7">ஏனெனில் திருச்சபையைக் கண்காணிக்கும் பொறுப்பிலுள்ளவர், இறைவனின் வேலை ஒப்படைக்கப்பட்ட ஒரு ஊழியர் என்பதால், அவர் குற்றம் சாட்டப்படாதவராக இருக்க வேண்டும். அவர் தனது விருப்பத்தின்படி நடக்கின்றவராகவோ, முற்கோபக்காரராகவோ, குடிகாரராகவோ, மற்றவர்களைத் தாக்குகின்றவராகவோ, அநியாய இலாபம் ஈட்ட முயற்சிக்கின்றவராகவோ இருக்கக் கூடாது.</verse>
				<verse number="8">அதற்கு மாறாக அவர் உபசரிக்கின்ற குணமுள்ளவராகவும், நன்மையை விரும்புகின்றவராகவும், சுயகட்டுப்பாடு உள்ளவராகவும், நீதிமானாகவும், பரிசுத்தம் உள்ளவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="9">அத்துடன் தனக்குப் போதிக்கப்பட்ட நம்பத்தகுந்த செய்தியை அவர் உறுதியுடன் நம்பிப் பற்றிக்கொண்டவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுதே நலமான போதனையினால் அவர் மற்றவர்களை ஊக்கப்படுத்த முடியும். அதற்கு முரணாக இருப்பவர்களை மறுத்து சரியானதை எடுத்துச் சொல்ல முடியும்.</verse>
				<verse number="10">ஏனெனில், அநேகர் எதையும் ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், வீண் பேச்சுப் பேசுகின்றவர்களாகவும், ஏமாற்றுகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். குறிப்பாக அப்படிப்பட்டவர்கள் விருத்தசேதனத்தை வலியுறுத்துகின்றவர்களாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="11">அப்படிப்பட்டவர்களுடைய வாயை அடக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் போதிக்கக் கூடாதவற்றைப் போதித்து, குடும்பங்கள் அனைத்தையும் சீரழித்து விடுகிறார்கள். அநியாய இலாபம் பெறவே அவர்கள் இப்படிச் செய்கின்றார்கள்.</verse>
				<verse number="12">அவர்களைச் சேர்ந்த ஒரு இறைவாக்கினன், “கிரேத்தர்கள் எப்போதும் பொய் பேசுகின்றவர்கள், அவர்கள் கொடிய மிருகங்கள், சோம்பேறிகளான உணவுப் பிரியர்” என்று கூறியிருக்கிறான்.</verse>
				<verse number="13">இந்தக் கூற்று உண்மையானதே. ஆகவே அவர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டேயிரு. அப்போது அவர்கள் விசுவாசத்தில் உறுதியடைந்து,</verse>
				<verse number="14">யூதருடைய கட்டுக் கதைகளுக்கும், சத்தியத்தைப் புறக்கணிக்கின்ற மனிதர்களின் கட்டளைகளுக்கும் தங்கள் கவனத்தைச் செலுத்த மாட்டார்கள்.</verse>
				<verse number="15">தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையானதே. ஆனால் சீர்கெட்டுப் போனவர்களுக்கும், விசுவாசிக்காதவர்களுக்கும் எதுவுமே தூய்மையானதல்ல. உண்மையாகவே அவர்களுடைய மனங்களும், மனசாட்சிகளும் சீர்கெட்டிருக்கின்றன.</verse>
				<verse number="16">இறைவனைத் தாங்கள் அறிந்திருப்பதாக அவர்கள் சொல்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினாலே இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதியற்றவர்கள்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">ஆனால் நீயோ, நலமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்க வேண்டும்.</verse>
				<verse number="2">வயது முதிர்ந்த ஆண்கள் மனத் தெளிவு உள்ளவர்களாகவும், மதிப்புக்குரியவர்களாவும், சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும், விசுவாசத்திலும் அன்பிலும் சகிப்புத் தன்மையிலும் உறுதியுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக் கொடு.</verse>
				<verse number="3">அதேபோல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கை முறையானது பயபக்தியுடையதாய் இருக்க வேண்டும். அவர்கள் அவதூறு பேசுகின்றவர்களாகவோ மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இராமல், நல்லதைக் கற்றுக் கொடுக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.</verse>
				<verse number="4">அப்படிச் செய்வதால், இளம் பெண்களைத் தங்களுடைய கணவர் மீதும் பிள்ளைகள் மீதும் அன்பு காட்டுகின்றவர்களாகவும்,</verse>
				<verse number="5">சுயகட்டுப்பாடு உள்ளவர்களாகவும், தூய்மை உள்ளவர்களாகவும், வீட்டில் பொறுப்பு உள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றவர்களாகவும் இருக்கும்படி அவர்களால் பயிற்றுவிக்க முடியும். இவர்கள் இப்படி வாழும்போது இறைவனுடைய வார்த்தையை எவராலும் பழித்துரைக்க இயலாது.</verse>
				<verse number="6">அதேபோல இளம் ஆண்கள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க அவர்களை ஊக்கப்படுத்து.</verse>
				<verse number="7">நல்ல செயல்களைச் செய்து, எல்லாவற்றிலும் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இரு. உன்னுடைய போதனையில் நேர்மையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்து.</verse>
				<verse number="8">மற்றவர்கள் குற்றம் காண முடியாதபடி நலமான வார்த்தைகளைப் பேசு. அப்போது உன்னை எதிர்க்கின்றவர்கள் நம்மைக் குறித்து தீமையாய்ப் பேச வழியேதும் இன்றி வெட்கத்துக்குள்ளாவார்கள்.</verse>
				<verse number="9">அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என அவர்களுக்குக் கற்றுக் கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் விதமாக நடக்கவும், அவர்களுக்கு எதிர்த்துப் பேசாமலும்,</verse>
				<verse number="10">அவர்களிடமிருந்து எதையும் திருடாமலும், தாங்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதைக் காண்பிக்கத் தக்கதாகவும் நடந்துகொள்ள வேண்டும். அப்போது நம்முடைய மீட்பரான இறைவனைப் பற்றிய போதனை எல்லாவிதத்திலும் சிறப்பானது என்பதை அவர்களால் வெளிப்படுத்த முடியும்.</verse>
				<verse number="11">ஏனெனில், எல்லா மனிதருக்கும் மீட்பைத் தருகின்ற இறைவனுடைய கிருபை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="12">இந்தக் கிருபையானது இறைவனை மறுதலிக்கின்ற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லவும், இந்த உலக வாழ்வில் நாம் சுயகட்டுப்பாடும் நீதியும் உள்ளவர்களாய் இறைபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் நமக்குக் கற்றுத் தருகிறது.</verse>
				<verse number="13">நம்முடைய மகத்துவமான இறைவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, மகிமையுடன் வெளிப்பட இருக்கும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்குக் காத்திருக்கும் வரை நாம் அந்த வாழ்வை வாழக் கற்றுக்கொள்கிறோம்.</verse>
				<verse number="14">கிறிஸ்து நமக்காக தம்மையே கொடுத்தார். எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்வதற்கு ஆர்வமுள்ள அவருக்குச் சொந்தமான மக்களாகும்படி அவருக்கென்று தூய்மைப்படுத்தவுமே அவர் அப்படிச் செய்தார்.</verse>
				<verse number="15">இவைகளை நீ போதித்து, முழு அதிகாரத்தோடு கண்டித்து ஊக்கப்படுத்து. எவரும் உன்னைத் தாழ்வாக நோக்க இடம் கொடாதே.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">ஆளுகை செய்கின்றவர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அடிபணிந்திருக்கவும், கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருக்கவும் எல்லாவிதமான நல்ல செயல்களைச் செய்ய ஆயத்தமாக இருக்கவும் அவர்களுக்கு ஞாபகப்படுத்து.</verse>
				<verse number="2">ஒருவரையும் அவதூறாய் பேசாமலும், எல்லோருடனும் சமாதானமும் கனிவும் உடையவர்களாகவும், அனைவருக்கும் முன்பாக எப்போதும் தாழ்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என மக்களுக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்து.</verse>
				<verse number="3">நாமும்கூட ஒரு காலத்தில் மூடர்களாயும், கீழ்ப்படியாதவர்களாயும், ஏமாற்றப்பட்டவர்களாயும், பலவிதமான தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாயும் இருந்தோம். தீமை செய்யும் எண்ணமுடையவர்களாகவும், பொறாமை நிறைந்தவர்களாகவும், மற்றவர்களால் வெறுக்கப்படுகின்றவர்களாகவும், ஒருவரை ஒருவர் வெறுக்கின்றவர்களாகவும் வாழ்ந்தோம்.</verse>
				<verse number="4">ஆனால் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் கருணையும் வெளிப்பட்டபோது</verse>
				<verse number="5">நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அன்றி, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் நம்மை மீட்டெடுத்தார். மறுபிறப்பின் கழுவப்படுதல் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுப்பித்தல் மூலமாகவுமே அவர் நம்மை மீட்டார்.</verse>
				<verse number="6">அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய மீட்பரான இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவர் நம்மீது நிறைவாக ஊற்றினார்.</verse>
				<verse number="7">ஆகவே அவருடைய கிருபையின் மூலமாய் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டு, நித்திய வாழ்வு என்ற எதிர்பார்ப்பை சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்கின்ற அவருடைய வாரிசுகளாக வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார்.</verse>
				<verse number="8">இது நம்பத்தகுந்த கூற்று. ஆகவே, இவற்றை நீ வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனைச் சார்ந்திருக்கின்றவர்கள், நல்ல செயல்களை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்து அதிலே குறியாய் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் இவை நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன.</verse>
				<verse number="9">ஆனால் மூடத்தனமான கருத்து முரண்பாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், நீதிச்சட்டத்தைப் பற்றிய தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் அவை பயனற்றவை, வீணானவை.</verse>
				<verse number="10">பிரிவினை உண்டாக்குகின்றவர்களை எச்சரிக்கை செய், மேலும் இரண்டாவது முறையாகவும் எச்சரிக்கை செய். அதன்பின்பு அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாதே.</verse>
				<verse number="11">அப்படிப்பட்டவர்கள், சீர்கெட்டவர்களாகவும், பாவத்தில் வாழ்கின்றவர்களாகவும், தங்களைத் தாங்களே தண்டனைக்கு உட்படுத்திக்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று நிச்சயமாக அறிந்துகொள்.</verse>
				<verse number="12">அர்த்தெமாவை அல்லது தீகிக்குவை நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நிக்கொப்போலி நகரில் இருக்கும் என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய். ஏனெனில் குளிர் காலத்தில் நான் அங்கே தங்கியிருக்கத் தீர்மானித்திருக்கின்றேன்.</verse>
				<verse number="13">சட்ட வல்லுநனாகிய சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாமல் அவர்களுடைய பயணத் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்து அனுப்பி வை.</verse>
				<verse number="14">மற்றவர்களின் அன்றாட அவசிய தேவைகளில் கொடுத்து உதவத்தக்கதாக, நல்ல செயல்களைச் செய்ய நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பயனற்றதான வாழ்க்கை வாழக் கூடாது.</verse>
				<verse number="15">என்னோடு இருக்கும் எல்லோரும் உனக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். சக விசுவாசிகளான நம்மில் அன்பாய் இருக்கின்றவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல். கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.</verse>
			</chapter>
		</book>
		<book number="57">
			<chapter number="1">
				<verse number="1">கிறிஸ்து இயேசுவுக்காக கைதியாயிருக்கின்ற பவுலும், நமது சகோதரனாகிய தீமோத்தேயுவும், எங்கள் அன்புக்குரியவனும் சக ஊழியனுமாகிய பிலேமோனுக்கும்,</verse>
				<verse number="2">எங்கள் சகோதரியாகிய அப்பியாளுக்கும், எங்கள் சக படை வீரனாகிய அர்க்கிப்புவுக்கும், உனது வீட்டில் ஒன்றுகூடுகின்ற திருச்சபைக்கும் எழுதுகின்றதாவது:</verse>
				<verse number="3">நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.</verse>
				<verse number="4">உன்னை என்னுடைய மன்றாடல்களில் நினைக்கும் போதெல்லாம் என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.</verse>
				<verse number="5">ஏனெனில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் நீ வைத்திருக்கும் விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர் மீதும் நீ வைத்திருக்கும் அன்பையும் குறித்து நான் கேள்விப்படுகிறேன்.</verse>
				<verse number="6">நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் விசுவாசத்தினாலே, கிறிஸ்துவின் ஊடாக நாம் பெற்றிருக்கிற எல்லா நன்மைகளைக் குறித்தும் நீ முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="7">சகோதரனே, பரிசுத்தவான்களின் இருதயங்களை நீ புத்துணர்வு அடையச் செய்திருக்கின்றாய். உன்னுடைய அந்த அன்பு எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.</verse>
				<verse number="8">எனவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்துவுக்குள் எனக்குத் தரப்பட்டுள்ள அதிகாரத்துடன், எவ்வித தயக்கமும் இல்லாமல் நான் உனக்குக் கட்டளையிட முடியும். இருந்தாலும்,</verse>
				<verse number="9">அன்பின் அடிப்படையிலேயே நான் இந்த வேண்டுகோளை உன்னிடம் முன்வைக்க விரும்புகிறேன். எனவே வயதுசென்ற, அத்துடன் கிறிஸ்து இயேசுவின் பொருட்டு இப்போது கைதியாய் இருக்கின்ற பவுலாகிய நான்,</verse>
				<verse number="10">சிறையிலிருந்தபோது எனக்கு மகன் போல இருந்த ஒநேசிமுவுக்காக உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன்.</verse>
				<verse number="11">முன்பு அவன் உனக்குப் பயனற்றவனாய் இருந்தான். ஆனால் இப்போதோ உனக்கும் எனக்கும் பயனுள்ளவனாக இருக்கின்றான்.</verse>
				<verse number="12">என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன்.</verse>
				<verse number="13">நற்செய்திக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் எனக்கு உதவி செய்ய, உனக்குப் பதிலாக அவனை இங்கு என்னுடன் வைத்திருக்கவே விரும்பினேன்.</verse>
				<verse number="14">ஆனால் உன்னுடைய சம்மதம் இல்லாமல் நான் எதையும் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நீ செய்கின்ற எந்த உதவியையும் வற்புறுத்தலின் பேரில் செய்யாது, அதை மனமுவந்து செய்யவேண்டுமென்று எண்ணினேன்.</verse>
				<verse number="15">சிறிது காலம் அவன் உன்னைவிட்டுப் பிரிந்திருந்தமை, ஒருவேளை திரும்பவும் அவன் உன்னுடன் வந்து நிரந்தரமாகச் சேர்ந்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் இருக்கலாம்.</verse>
				<verse number="16">அதாவது இனி அவன் ஒரு அடிமையாக அன்றி அடிமையைவிட மேலாக, அன்புக்குரிய ஒரு சகோதரனாக இருப்பான். அவன் எனக்கு மிகவும் அன்புக்குரியவன், ஆனால் சக மனிதன் என்ற வகையிலும் கிறிஸ்தவ சகோதரன் என்ற வகையிலும், அவன் உனக்கு இன்னும் அதிக அன்புக்குரியவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="17">ஆகவே நீ என்னை உன்னுடைய ஐக்கியத்தில் ஒருவனாக எண்ணிக்கொள்வாயானால், என்னை ஏற்றுக்கொள்வது போல அவனையும் ஏற்றுக்கொள்.</verse>
				<verse number="18">ஒருவேளை அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது உனக்குக் கடன்பட்டிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துக்கொள்.</verse>
				<verse number="19">அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று பவுலாகிய நானே எனது சொந்தக் கைப்பட எழுதுகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில், உன்னையே நீ எனக்குக் கொடுக்க வேண்டியவனாய் இருக்கின்றாய் என்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை.</verse>
				<verse number="20">ஆம் சகோதரனே, கர்த்தருக்குள் உன்னாலே எனக்கு நன்மை கிடைக்கட்டும். கிறிஸ்துவுக்குள் உன் சகோதரனாகிய என் உள்ளத்தைப் புத்துயிர் அடையச் செய்வாயாக.</verse>
				<verse number="21">என் சொல்லுக்குக் கீழ்ப்படிவாய் என்ற மனவுறுதியுடன் இதை உனக்கு எழுதுகிறேன். நான் கேட்டுக்கொள்வதற்கும் அதிகமாகச் செய்வாய் என்று எனக்குத் தெரியும்.</verse>
				<verse number="22">மேலும் ஒரு வேண்டுகோள், எனக்கு ஒரு தங்கும் இடத்தை ஏற்பாடு செய். ஏனெனில் உங்களுடைய மன்றாடல்களின் விளைவாக நான் மீண்டும் உங்களிடம் வருவேன் என்று எதிர்பார்க்கின்றேன்.</verse>
				<verse number="23">கிறிஸ்து இயேசுவுக்காக என் சக கைதியாய் இருக்கும் எப்பாப்பிராத்துவும் உனக்கு வாழ்த்துதலை அனுப்புகிறான்.</verse>
				<verse number="24">அவ்விதமாகவே என் சக ஊழியர்களான மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா ஆகியோரும் வாழ்த்துதலை அனுப்புகிறார்கள்.</verse>
				<verse number="25">ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக.</verse>
			</chapter>
		</book>
		<book number="58">
			<chapter number="1">
				<verse number="1">இறைவன், முற்காலத்தில் பல முறை பல்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார்.</verse>
				<verse number="2">ஆனால், நம்மோடு இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார்.</verse>
				<verse number="3">இறைவனுடைய மகனே அவருடைய மகிமையின் ஒளியாயும், அவருடைய இறை இயல்பின் மிகத் துல்லியமான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றார். இவரே தம்முடைய வல்லமையான வார்த்தையினாலே எல்லாவற்றையும் பராமரித்துத் தாங்குகிறார். இவர் பாவங்களுக்கான சுத்திகரிப்பை ஏற்படுத்தி முடித்த பின்பு, பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.</verse>
				<verse number="4">இறைதூதர்களின் பெயர்களைவிட, தமது உரிமைச் சொத்தாக இவர் பெற்றுக்கொண்ட பெயர் மேன்மையானதாக இருக்கின்றது. அதற்கேற்ப, தூதர்களைவிட இவர் மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.</verse>
				<verse number="5">ஏனெனில் இறைவன் தூதர்களில் யாரையாவது பார்த்து, “நீர் என்னுடைய மகன், இன்று நான் உமக்குத் தந்தையானேன்” என்று எப்பொழுதாவது சொல்லியிருக்கின்றாரா? அல்லது, “நான் இவருடைய தந்தையாயிருப்பேன், அவர் என்னுடைய மகனாயிருப்பார்” என்று சொல்லியிருக்கின்றாரா?</verse>
				<verse number="6">மேலும் இறைவன் தம்முடைய முதற்பேறானவரை உலகத்திற்குள் கொண்டுவந்தபோது, “இறைவனுடைய தூதர்கள் எல்லோரும் அவரை வழிபட வேண்டும்” என்றார்.</verse>
				<verse number="7">ஆனால் இறைதூதர்களைக் குறித்து பேசும்போது இறைவன் சொல்கின்றதாவது, “அவர் தம்முடைய இறைதூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியர்களை தீச் சுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”</verse>
				<verse number="8">ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கின்றதாவது, “இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும். நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.</verse>
				<verse number="9">நீர் நீதியை விரும்பி, அநீதியை வெறுத்தீர். ஆகையால் இறைவனே, உமது இறைவனே உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து, உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்தி வைத்தார்.”</verse>
				<verse number="10">இறைவன் மேலும் சொன்னதாவது, “ஆண்டவரே, நீர் ஆதியிலே பூமிக்கு அத்திவாரங்களை அமைத்தீர், வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன.</verse>
				<verse number="11">அவையோ அழிந்து போகும், ஆனால் நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடையைப் போல பழையதாய்ப் போகும்.</verse>
				<verse number="12">அவற்றை ஒரு மேலாடையைப் போல் நீர் சுருட்டி வைப்பீர், அவை ஒரு ஆடையைப் போல் மாற்றப்படும், ஆனால் நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர். உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிவுறாது.”</verse>
				<verse number="13">இறைதூதர்களில் யாரைப் பார்த்து இறைவன், “நான் உமது பகைவரை உமது கால்களுக்கு கீழே உமது அரியணையின் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலது பக்கத்தில் அமர்ந்திரும்” என்று சொல்லியிருக்கின்றார்?</verse>
				<verse number="14">இறைதூதர்களெல்லோரும் சேவை செய்யும் ஆவிகள் அல்லவா? இரட்சிப்பை உரிமையாக்கிக்கொள்ளப் போகின்றவர்களுக்குப் பணிவிடை செய்யும்படி அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப் போகாமல் இருப்போம்.</verse>
				<verse number="2">இறைதூதர்கள் மூலமாய் பேசப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டபடியால் அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் ஒவ்வொரு முறையும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="3">அப்படியானால், கிறிஸ்துவின் ஊடாக வருகின்ற இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்ப முடியும்? இந்த இரட்சிப்போ ஆண்டவர் இயேசுவினாலேயே முதலாவதாக அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள்.</verse>
				<verse number="4">இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய விருப்பத்தின்படியே பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்து கொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார்.</verse>
				<verse number="5">வரப்போகும் உலகத்தைக் குறித்து நாம் பேசுகின்றோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.</verse>
				<verse number="6">வேதவசனத்தில் ஓரிடத்தில் இதைப்பற்றி இவ்வாறு உறுதியாக சாட்சி சொல்லப்பட்டுள்ளது: “இறைவனே! மனிதனில் நீர் கரிசனைகொள்வதற்கு அவன் யார்? மனுமகனில் நீர் அக்கறைகொள்வதற்கு அவர் எம்மாத்திரம்?</verse>
				<verse number="7">நீர் அவரை சில காலம் இறைதூதர்களைவிட தாழ்ந்தவர் ஆக்கினீர். அவரை மகிமையினாலும் மாண்பினாலும் முடிசூட்டினீர்.</verse>
				<verse number="8">எல்லாவற்றையும் அவர் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” என்கிறார். இறைவன் எல்லாவற்றையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, இறைவன் அவருக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவருக்கு இப்பொழுதே கீழ்ப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.</verse>
				<verse number="9">மரணத்தைத் தழுவியதால் இப்போது மகிமையினாலும் மாண்பினாலும் முடிசூட்டப்பட்டுள்ள இயேசுவையே இதில் நாம் காண்கின்றோம். அவரே சிறிது காலம் இறைதூதர்களிலும் சற்று சிறியவராக்கப்பட்டவர். இறைவனுடைய கிருபையினாலே அவர் எல்லோருக்காகவும் மரணத்தை அனுபவிக்கும்படியாகவே இப்படி நடந்தது.</verse>
				<verse number="10">இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன. எனவே, அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவருவதற்காக, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை வேதனை அனுபவிக்கச் செய்து, அதன்மூலமாக முழு நிறைவுள்ளவர் ஆக்கியது இறைவனுக்கேற்ற செயலே.</verse>
				<verse number="11">பரிசுத்தமாக்குகின்ற அவரும், பரிசுத்தமாக்கப்படுகின்றவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கம்கொள்ளவில்லை.</verse>
				<verse number="12">இயேசு அவர்களைக் குறித்து, “நான் உம்முடைய பெயரை எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன், திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்” என்கிறார்.</verse>
				<verse number="13">மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன்” என்றும், “இதோ நான் இருக்கின்றேன். இறைவன் எனக்குக் கொடுத்திருக்கின்ற பிள்ளைகளும் என்னுடன் இருக்கின்றார்கள்” என்றும் கூறியுள்ளார்.</verse>
				<verse number="14">பிள்ளைகள் இரத்தமும் சரீரமும் உடையவர்களாய் இருக்கின்றபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்கு கொண்டார். அவருடைய மரணத்தினால் மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருந்த பிசாசை அழிப்பதற்கும்,</verse>
				<verse number="15">தங்களுடைய வாழ்நாள் எல்லாம் மரணத்தைக் குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்வதற்காகவும் அவர் மனித இயல்பில் பங்கு கொண்டார்.</verse>
				<verse number="16">இயேசு உதவி செய்வது நிச்சயமாக இறைதூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே.</verse>
				<verse number="17">இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப் போலாக வேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில் அவர் இரக்கமும் உண்மையுள்ளவருமான தலைமை மதகுரு ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவர்த்தியைச் செய்வதற்காகவுமே, தம்முடைய சகோதரர்களைப் போலானார்.</verse>
				<verse number="18">இயேசு சோதனைக்குட்பட்டபோது வேதனைகளை அனுபவித்தபடியால், இப்போது சோதிக்கப்படுகின்றவர்களுக்கு அவர் உதவி செய்ய வல்லவராய் இருக்கின்றார்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கின்றவர்களான பரிசுத்த சகோதரர்களே, நமது விசுவாச அறிக்கையின்படி நாம் ஒப்புக்கொள்ளுகின்ற நமது அப்போஸ்தலரும் தலைமை மதகுருவுமாகிய இயேசுவிடம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.</verse>
				<verse number="2">இறைவனுடைய வீட்டார் அனைவருக்கும் மோசே உண்மையுள்ளவராக இருந்ததைப் போலவே, இயேசு தன்னை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.</verse>
				<verse number="3">ஒரு வீட்டைக் கட்டுகின்றவன் அந்த வீட்டைப் பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவனாய் இருப்பது போலவே, இயேசுவும் மோசேயைப் பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவராய் இருக்கின்றார்.</verse>
				<verse number="4">ஏனெனில் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவராலே கட்டப்படுகிறது. ஆனால் எல்லாவற்றையும் கட்டுகின்றவரோ இறைவனே.</verse>
				<verse number="5">“இறைவனுடைய வீட்டார் எல்லோருக்கும் மோசே ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து,” இனி வரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகின்றவற்றிற்கு சாட்சி கொடுக்கின்றவராகவே இருந்தார்.</verse>
				<verse number="6">ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டுக்கு பொறுப்பான உண்மையுள்ள மகனாய் இருக்கின்றார். நமது மன தைரியத்தையும், நாம் பெருமிதம்கொள்ளும் எதிர்பார்ப்பையும் நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு இருப்போமானால், நாமே இறைவனுடைய வீட்டாராயிருப்போம்.</verse>
				<verse number="7">ஆகையால் பரிசுத்த ஆவியானவர் சொல்கின்றபடி, “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,</verse>
				<verse number="8">நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். பாலைநிலத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில், கலகம் செய்தது போல் நடந்துகொள்ள வேண்டாம்.</verse>
				<verse number="9">அங்கே உங்கள் முற்பிதாக்கள் என் பொறுமையைச் சோதித்து, நான் நாற்பது ஆண்டுகளாக செய்தவைகளைக் கண்டார்கள்.</verse>
				<verse number="10">அதனாலேயே நான் அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன். நான் அவர்களைக் குறித்து, ‘இவர்கள் எப்போதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகின்றார்கள். இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ ” என்று சொன்னேன்.</verse>
				<verse number="11">“ஆகவே ‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை’ என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டு அறிவித்தேன்.”</verse>
				<verse number="12">ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவனும் வாழும் இறைவனிடமிருந்து வழிவிலகிச் செல்கின்றதான அவிசுவாசமுள்ள பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="13">பாவத்தின் வஞ்சனையினால் உங்களில் எவரும் மனக் கடினம் அடையாது இருக்கும்படி, “இன்று” என்று நீங்கள் சொல்லும்வரை, ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துங்கள்.</verse>
				<verse number="14">நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவு வரை உறுதியாய் பற்றிக்கொண்டால்தான் நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.</verse>
				<verse number="15">“இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் கலகம் செய்த சம்பவத்தின்போது நடந்துகொண்டதைப் போல் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்று சொல்லப்பட்டிருக்கின்றபடியே.</verse>
				<verse number="16">இறைவனுடைய குரலைக் கேட்டும், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தவர்கள் யார்? அவர்கள் எல்லோரும் மோசேயினால் எகிப்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் அல்லவா?</verse>
				<verse number="17">இறைவன் நாற்பது வருடங்களாக யார்மேல் கோபமாயிருந்தார்? பாவம் செய்தவர்கள்மேல் அல்லவா? அவர்களுடைய உடல்களும் பாலைநிலத்தில் மரணித்து விழுந்து கிடந்தனவே.</verse>
				<verse number="18">இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் என்று யாரைக் குறித்து இறைவன் ஆணையிட்டார்? கீழ்ப்படியாமல் போனவர்களைக் குறித்தல்லவா?</verse>
				<verse number="19">ஆகவே அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாகவே அவர்களால் பிரவேசிக்க முடியாமல் போயிற்று என்று நாம் காண்கின்றோம்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">ஆகவே இறைவன் அளிக்கும் இளைப்பாறுதலை நாம் பெறுவோம் என்ற வாக்குறுதி இன்னும் செல்லுபடியாகும் என்பதனால், உங்களில் ஒருவரும் அதை இழந்து போகாதவாறு நாம் எல்லோரும் எச்சரிக்கையாய் இருப்போமாக.</verse>
				<verse number="2">இஸ்ரயேலர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது போலவே நமக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட செய்தியோ அவர்களுக்கு எவ்வித பயனையும் அளிக்கவில்லை. ஏனெனில் செய்தியைக் கேட்டவர்கள் விசுவாசித்தவர்களோடு ஒன்றுபடவில்லை.</verse>
				<verse number="3">“அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை என்று என்னுடைய கோபத்திலே நான் ஆணையிட்டு அறிவித்தேன்” என்று இறைவன் சொன்னது நிறைவேறிற்று. ஆனால், விசுவாசம் உள்ளவர்களாகிய நாமோ, உண்மையாகவே இப்போது அந்த இளைப்பாறுதலுக்குள் உட்பிரவேசிக்கிறோம். அப்படியிருந்தும் இறைவனுடைய செயல்கள் உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே நிறைவாக்கப்பட்டு இருக்கின்றன.</verse>
				<verse number="4">ஏனெனில் ஏழாம் நாள் குறித்து ஓரிடத்தில், “ஏழாம் நாளில் இறைவன் தாம் செய்துகொண்டிருந்த எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="5">மேலும் மேற்கூறிய வசனங்களில், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை” என்றும் இறைவன் சொல்லியிருக்கின்றார்.</verse>
				<verse number="6">முற்காலத்தில் அறிவிக்கப்பட்ட நற்செய்தியை கேட்டவர்களின் கீழ்ப்படியாமையால் அவர்கள் அந்த ஓய்வுக்குள் உட்பிரவேசிக்க முடியாவிட்டாலும், இன்னும் வேறு சிலருக்கு சந்தர்ப்பம் உள்ளது.</verse>
				<verse number="7">ஆகையால் இறைவன் அதற்கென வேறொரு நாளை நியமித்தார். அதையே, “இன்று” எனக் குறிப்பிடுகிறார். அதனால்தான் நீண்ட காலத்திற்குப் பின்பு இறைவன், தாவீதின் மூலமாக பேசியபோது முன்பு கூறப்பட்டபடியே, “இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்றார்.</verse>
				<verse number="8">யோசுவா அவர்களுக்கு அந்த உண்மையான இளைப்பாறுதலை முன்பே கொடுத்திருந்தால், பிற்காலத்தில் வரப்போகும் இன்னொரு நாளைப்பற்றி இறைவன் சொல்லியிருக்க மாட்டார்.</verse>
				<verse number="9">ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனிமேல்தான் வர வேண்டியதாயிருக்கிறது.</verse>
				<verse number="10">ஏனெனில், இறைவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் ஒருவன், இறைவன் ஓய்ந்திருந்தது போலவே தனது வேலையிலிருந்தும் ஓய்ந்திருக்கிறான்.</verse>
				<verse number="11">ஆகையால், அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் வகையில், நாம் ஊக்கத்துடன் முயற்சி செய்வோம். முன்னோர்களுடைய கீழ்ப்படியாமையைப் பின்பற்றி, நாம் ஒருவரும் விழுந்து போகக் கூடாது.</verse>
				<verse number="12">ஏனெனில், இறைவனுடைய வார்த்தை உயிருள்ளதும், செயலாற்றல் உடையதுமாய் இருக்கின்றது. அது இரு பக்கமும் கூர்மையுள்ள வாளைவிடக் கூர்மையானது. அது ஆத்துமாவையும், ஆவியையும், எலும்பின் மூட்டுக்களையும், எலும்பின் உள் இழையங்களையும் பிரிக்கத்தக்கதாய் துளைத்துச் செல்கிறது; அது இருதயத்தின் சிந்தனைகளையும், உள்நோக்கங்களையும் நிதானித்துத் தீர்ப்பிடுகிறது.</verse>
				<verse number="13">அத்துடன் படைக்கப்பட்ட எந்த ஒரு உயிரினமும் அவருடைய பார்வையில் இருந்து மறைக்கப்படவில்லை. நாம் செய்த எல்லாவற்றிற்கும் நாம் இறைவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. அவரது கண்களுக்கு முன்பாக எதுவுமே மறைக்கப்படாமலும் எல்லாமே பகிரங்கமாயும் இருக்கின்றன.</verse>
				<verse number="14">ஆதலால் பரலோகத்திற்குள் சென்றிருக்கின்ற ஒரு தலைமை மதகுரு நமக்கு இருக்கின்றார். அவர் இறைவனுடைய மகனான இயேசுவே. ஆகவே நாம் விசுவாச அறிக்கையில் ஒப்புக்கொண்டவற்றை உறுதியாய் பற்றிக்கொள்வோமாக.</verse>
				<verse number="15">ஏனெனில் நமக்கிருக்கின்ற இந்த தலைமை மதகுரு நம்முடைய பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல. அவரோ நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதனைகளின் மூலமாகச் சென்றவர். ஆனால், அவர் பாவம் செய்யவில்லை.</verse>
				<verse number="16">ஆகவே நாம் இரக்கத்தைப் பெறவும், சரியான நேரத்தில் எமக்கு உதவக்கூடிய கிருபையைப் பெற்றுக்கொள்ளவும் இறைவனின் கிருபையின் அரியணையை துணிவுடன் அணுகுவோமாக.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">இஸ்ரயேலர்களின் தலைமை மதகுரு ஒவ்வொருவரும் மனிதர்களில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்கள் இறைவனுக்கு காணிக்கைகளையும் பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக, இறைவனுக்குரிய விடயங்களில் மக்களின் சார்பாக சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள்.</verse>
				<verse number="2">தலைமை மதகுரு தானும் பலவீனனானபடியால் அறியாமையில் இருக்கின்றவர்களுடனும், வழிவிலகிச் செல்கின்றவர்களுடனும் தயவுடன் நடந்துகொள்கிறவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="3">இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும், மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது.</verse>
				<verse number="4">இந்த மேன்மையான நிலையை ஒருவனும் தானாகவே அடைய முடியாது. ஆரோனைப் போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும்.</verse>
				<verse number="5">அவ்விதமாகவே கிறிஸ்துவும் தலைமை மதகுருவாகும் அந்த மகிமையைத் தாமே தமது விருப்பத்தின் பேரில் தமதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக் குறித்து சொல்லியிருக்கின்றதாவது, “நீர் என்னுடைய மகன், இன்று நான் உமக்குத் தந்தையானேன்.”</verse>
				<verse number="6">இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக் குறித்து, “நீர் என்றென்றும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி மதகுருவாய் இருக்கின்றீர்” என்று சொல்லியிருக்கின்றார்.</verse>
				<verse number="7">இயேசு பூமியில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி சத்தமாய்க் கதறி, கண்ணீர்விட்டு தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பின் காரணமாக அவருடைய மன்றாடுதல் கேட்கப்பட்டது.</verse>
				<verse number="8">இயேசு இறைவனின் மகனாய் இருந்தும்கூட தாம் அனுபவித்த பாடுகளின் மூலமாகவே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.</verse>
				<verse number="9">இப்படியாக இயேசு முழு நிறைவெய்திய பின்னர், தமக்குக் கீழ்ப்படிகின்ற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் மூலாதாரம் ஆகினார்.</verse>
				<verse number="10">இதற்காகவே அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி தலைமை மதகுருவாய் இருப்பதற்காக இறைவனாலே நியமிக்கப்பட்டார்.</verse>
				<verse number="11">இதைக் குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளக்குவது கடினமாயிருக்கிறது.</verse>
				<verse number="12">உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். திட உணவை அருந்த முடியாதவர்களாய், மீண்டும் பாலை அருந்தும் நிலைக்குத் திரும்பிவிட்டீர்கள்.</verse>
				<verse number="13">பாலை அருந்துகின்றவன் இன்னும் குழந்தையாகவே இருக்கின்றான். இதனால் அவன் நீதியைப் பற்றிய படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="14">முதிர்ச்சி அடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியின் மூலமாக, தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">ஆகவே, நாம் கிறிஸ்துவைப் பற்றிய ஆரம்ப போதனைகளை மறுபடியும் அத்திவாரமாக இடாமல், முதிர்ச்சி அடையும்படியாக இவைகளைத் தாண்டி முன்னேறிச் செல்வோம். அவ்வடிப்படைப் போதனைகளாவன: பயனற்ற செயல்களிலிருந்து மனந்திரும்பி இறைவன் மேல் விசுவாசம் வைத்தல்,</verse>
				<verse number="2">ஞானஸ்நானங்களைப் பற்றிய உபதேசம், மன்றாடுதலின்போது கைகளை வைத்தல், இறந்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளே.</verse>
				<verse number="3">இறைவன் அனுமதிப்பாராயின், நாம் இப்படியே முதிர்ச்சியடையும்படி முன்னேறிச் செல்வோமாக.</verse>
				<verse number="4">ஏனெனில் ஒரு காலத்தில் அறிவொளியைப் பெற்றவர்களாயும், பரலோகத்தின் கொடைகளை அனுபவித்தவர்களாயும், பரிசுத்த ஆவியானவரில் பங்கு பெற்றவர்களாயும்</verse>
				<verse number="5">இறைவனுடைய வார்த்தையின் நன்மையையும், வரப்போகும் யுகத்தின் வல்லமைகளையும் அனுபவித்தவர்கள்,</verse>
				<verse number="6">வழிவிலகிப் போவார்களானால், அவர்களை மறுபடியும் மனந்திரும்புதலுக்குள் வழிநடத்துவது இயலாத காரியமே. அவர்கள் இறைவனின் மகனைத் திரும்பவுமாய் சிலுவையில் அறைந்து, அவருக்கு பகிரங்க அவமானத்தை எற்படுத்துகிறார்கள்.</verse>
				<verse number="7">ஒரு நிலம் அதன்மீது அடிக்கடி பெய்யும் மழையைப் பருகி, அதில் பயிரிடுகின்றவர்களுக்கு பயனுள்ள விளைச்சலைக் கொடுக்குமானால் அது இறைவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறது.</verse>
				<verse number="8">ஆனால் முள்ளையும் முட்புதர்களையும் முளைக்கச் செய்கின்ற நிலமோ, பயனற்றதாகவும் சாபத்திற்குட்படும் ஆபத்தான நிலையிலும் உள்ளது; அது எரிக்கப்பட்டு தனது முடிவை அடையும்.</verse>
				<verse number="9">அன்புக்குரியவர்களே! நாங்கள் இவ்விதமாய் கடுமையாக பேசினாலும், நீங்கள் மேன்மையானவைகளையும் இரட்சிப்பைப் பற்றிய காரியங்களை பெற்றவர்களாயும் இருக்கின்றீர்கள் என உறுதியாய் நம்புகிறோம்.</verse>
				<verse number="10">உங்கள் வேலையையும், நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்வதனால் அவரிடத்தில் காட்டிய அன்பையும், நீங்கள் தொடர்ந்து உதவி வருவதையும் மறந்து விடுவதற்கு இறைவன் நியாயமற்றவர் அல்ல.</verse>
				<verse number="11">உங்களுடைய எதிர்பார்ப்பை நிச்சயமாக்கிக்கொள்ளும்படி, முடிவு வரை நீங்கள் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்தைக் காண்பிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.</verse>
				<verse number="12">நீங்கள் சோம்பேறிகள் ஆகிவிடக் கூடாது. விசுவாசத்தின் மூலமாயும், பொறுமையின் மூலமாயும் தங்களுக்கு வாக்குறுதி பண்ணப்பட்டதை உரிமையாக்கிக் கொண்டவர்களையே உங்களுக்கு முன்மாதிரியாகக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="13">இறைவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதியைக் கொடுத்தபோது இறைவன் தமது பெயரைக்கொண்டே ஆணையிட்டார். ஏனெனில் வேறு எந்தப் பெயரையும்கொண்டு ஆணையிடும்படியாக இறைவனைப் பார்க்கிலும் உன்னதமானவர் வேறு யாரும் இருக்கவில்லை. ஆதலால் இறைவன் தம் பெயரில் ஆணையிட்டு,</verse>
				<verse number="14">“நான் உன்னை அபரிமிதமாக ஆசீர்வதித்து, உன் சந்ததியை அதிகமாக பெருகச் செய்வேன்” என்றார்.</verse>
				<verse number="15">எனவே ஆபிரகாம் பொறுமையோடு காத்திருந்து, தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்.</verse>
				<verse number="16">மனிதர்கள் தங்களைப் பார்க்கிலும் பெரியவர் ஒருவரின் பெயரைக்கொண்டே ஆணையிடுவது வழக்கம். பேசப்பட்ட எல்லாவற்றையும் உறுதி செய்து, எல்லா வாக்குவாதங்களுக்கும் முடிவைக் கொண்டுவருவது இந்த ஆணையே.</verse>
				<verse number="17">இறைவன் தம்முடைய வாக்குறுதியின் வாரிசுகளுக்கு தமது நோக்கத்தின் மாறாத தன்மையை வெகு தெளிவாய்க் காண்பிக்க விரும்பினார். இதனாலேயே அவர் இதை ஒரு ஆணையினாலேயும் உறுதிப்படுத்தினார்.</verse>
				<verse number="18">எனவே இறைவன் இரண்டு மாறாத காரியங்களான வாக்குறுதியினாலும், ஆணையினாலும் இப்படிச் செய்தார். அவற்றைக் குறித்து, இறைவன் பொய் சொல்லுவார் என்பதோ முடியாத காரியம். எனவே நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த எதிர்பார்ப்பை பற்றிக்கொள்ள எல்லாவற்றையும்விட்டு ஓடி வந்த நாம், வெகுவாய் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார்.</verse>
				<verse number="19">நம்முடைய ஆத்துமாவுக்கு உறுதியும், பாதுகாப்புமான ஒரு நங்கூரம் போலுள்ள இந்த எதிர்பார்ப்பு ஆலயத்தின் திரைச்சீலைகளுக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடம் வரைக்கும் உள்ளே செல்லுகிறது.</verse>
				<verse number="20">நம்மைக் கடந்து எமக்கு முன்னோடியாக அங்கு போயிருக்கின்ற இயேசுவும், நமது சார்பாக அதற்குள் சென்றிருக்கிறார். அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றும் தலைமை மதகுருவாயிருக்கிறார்.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">மெல்கிசேதேக்கு என்பவர் சாலேம் பட்டணத்து அரசனாகவும் அதி உன்னதமான இறைவனின் மதகுருவாகவும் இருந்தார். ஆபிரகாம், போர்க் களத்தில் அரசர்களை கொன்றழித்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்து அவரை ஆசீர்வதித்தார்.</verse>
				<verse number="2">அப்போது ஆபிரகாம் தான் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். முதலாவதாக, மெல்கிசேதேக் என்ற இவரது பெயரின் பொருள், “நீதியின் அரசர்” என்பதாகும். அத்துடன் “சாலேமின் அரசர்” என்றால், “சமாதானத்தின் அரசர்” என்ற அர்த்தமும் இருக்கின்றது.</verse>
				<verse number="3">மெல்கிசேதேக்கிற்கு தந்தையோ, தாயோ, வம்ச வரலாறோ இல்லை. வாழ்நாட்களின் தொடக்கமோ, முடிவோ இல்லாத இவர் இறைவனுடைய மகனைப் போல் என்றென்றும் ஒரு மதகுருவாய் நிலைத்திருக்கிறார்.</verse>
				<verse number="4">நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமும்கூட போர்க் களத்தில் தான் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார் என்றால் மெல்கிசேதேக் எவ்வளவு உயர்ந்தவராக இருந்திருப்பார் என்பதைச் சிந்தியுங்கள்.</verse>
				<verse number="5">லேவியின் தலைமுறையினர்களில் மதகுருக்களாய் இருக்கின்றவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கை உரிமையோடு பெற்றுக்கொள்ளும்படி நீதிச்சட்டம் வலியுறுத்துகிறது. அந்த மக்கள் ஆபிரகாமின் சந்ததியைச் சேர்ந்தவர்களாக, அதிலும் தங்களது சொந்த சகோதரர்களாக இருந்தும், அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும்படி கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="6">ஆனால் மெல்கிசேதேக்கோ லேவியின் சந்ததியைச் சேர்ந்தவர் அல்ல. அப்படியிருந்தும், இவர் ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டதுடன் இறைவனிடமிருந்து வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமைக்கூட ஆசீர்வதித்தார்.</verse>
				<verse number="7">தாழ்ந்த நிலையில் உள்ளவனை, உயர்ந்த நிலையில் உள்ளவனே ஆசீர்வதிக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.</verse>
				<verse number="8">மதகுருக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இறந்து போகின்றவர்களாக இருந்தும் பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால் மெல்கிசேதேக்கைப் பொறுத்தவரையிலோ, இவர் என்றும் வாழ்கின்றவர் என அறிவிக்கப்பட்டு பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டார்.</verse>
				<verse number="9">ஒரு வகையில் பத்தில் ஒரு பங்கை முறைமையின்படி பெற்றுக்கொள்கின்ற லேவியும்கூட ஆபிரகாமின் மூலமாக பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தார் என்று சொல்லலாம்.</verse>
				<verse number="10">ஏனெனில் மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்தபோது, லேவி தன்னுடைய முற்பிதாவான ஆபிரகாமின் உடலுக்குள் இருந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம்.</verse>
				<verse number="11">நீதிச்சட்டமானது லேவியரின் குருத்துவப் பணி வழியாகவே இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கப்பட்டது. அக் குருத்துவப் பணியின் ஊடாக மக்கள் பூரணத்துவத்தை அடைந்திருக்க முடியுமெனில், லேவியரின் முற்பிதாவான ஆரோனுடைய குருத்துவ முறைமையின்படி தோன்றாமல் மெல்கிசேதேக்கின் குருத்துவ முறைமையின்படி இன்னுமொரு குரு தோன்ற வேண்டிய அவசியம் என்ன?</verse>
				<verse number="12">குருத்துவப் பணியின் ஒழுங்கு முறையே மாற்றப்படுகின்றபோது, நீதிச்சட்டத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டியதாயிருக்கிறது.</verse>
				<verse number="13">இவையெல்லாம் எந்தக் குருவை கருத்திற்கொண்டு சொல்லப்பட்டனவோ, அவர் லேவியின் கோத்திரமல்லாத வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் ஒருபோதும் பணியாற்றியதில்லை.</verse>
				<verse number="14">நம்முடைய ஆண்டவர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. மோசே மதகுருக்களைக் குறித்துப் பேசியபோது யூதாவின் கோத்திரத்தைக் குறித்து எதுவுமே சொல்லவில்லை.</verse>
				<verse number="15">மெல்கிசேதேக்கைப் போன்ற வேறொரு மதகுரு தோன்றிய விதத்திலிருந்தும் இதைப்பற்றி இன்னும் அதிக தெளிவு ஏற்படுகிறது.</verse>
				<verse number="16">மனிதரின் வழித்தோன்றலை நிர்ணயிக்கும் சட்டத்தின் அடிப்படையில் அல்லாமல், அழியாத வாழ்வின் வல்லமையினாலே கிறிஸ்து குருவாக வந்ததிலிருந்து இது விளங்குகிறது.</verse>
				<verse number="17">ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நீர் என்றென்றைக்கும் மதகுருவாய் இருக்கின்றீர்” என்று, அவரைப்பற்றிய உறுதிமொழி அறிவிக்கப்பட்டிருக்கின்றதே.</verse>
				<verse number="18">இவ்வாறு முந்திய கட்டளை பலவீனமானதாயும், பயனற்றதாயும் இருந்ததால் அது ஒதுக்கி வைக்கப்பட்டது.</verse>
				<verse number="19">நீதிச்சட்டமோ எதையும் முழுநிறைவுள்ளதாய் ஆக்கவில்லை. ஆனால் நாம் இப்போது இறைவனை அணுகும்படி ஒரு மேன்மையான எதிர்பார்ப்பு நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.</verse>
				<verse number="20">இந்தப் புதிய உடன்படிக்கையானது, அதைத் தருபவரால் ஆணையிட்டு உறுதிப்படுத்தப்படாது தரப்படவில்லை. முன்பிருந்த முறைமையின்படி மதகுருக்களாக நியமிக்கப்பட்டவர்களோ இப்படியாக ஆணையிட்டு உறுதிப்படுத்தப்பட்டு நியமிக்கப்படவில்லை.</verse>
				<verse number="21">ஆனால் இயேசுவோ மதகுருவாய் ஏற்படுத்தப்பட்டபோது இறைவனுடைய ஆணையின் மூலமாய் உறுதிப்படுத்தப்பட்டு நியமிக்கப்பட்டார். இறைவன் அவரைக் குறித்து, “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தமது மனதை மாற்ற மாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் மதகுருவாய் இருக்கின்றீர்’ ” என்றார்.</verse>
				<verse number="22">எனவே முன்னையதைவிட ஒரு சிறப்பான உடன்படிக்கையின் உத்தரவாதமாக இயேசுவே இருக்கின்றார்.</verse>
				<verse number="23">தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய முடியாதபடி மரணம் அவர்களைத் தடுத்ததால், பழைய முறைமையின்படி ஒருவரின் பின் ஒருவராக அநேக மதகுருக்கள் வந்தார்கள்.</verse>
				<verse number="24">ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கின்றவர். ஆனபடியால் அவர் நிரந்தரமான குருத்துவப் பணியை உடையவராயிருக்கிறார்.</verse>
				<verse number="25">ஆதலால், தம் மூலமாக இறைவனிடத்தில் வருகின்றவர்களை பரிபூரணமாய் இரட்சிக்க இயேசு வல்லவராய் இருக்கின்றார். ஏனெனில், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுவதற்காக இயேசு என்றென்றும் வாழ்கின்றார்.</verse>
				<verse number="26">இப்படிப்பட்ட தலைமை மதகுரு நமது தேவைக்குப் பொருத்தமானவராகவே இருக்கின்றார். இவர் பரிசுத்தமுள்ளவரும், குற்றம் சாட்டப்படாதவரும், தூய்மையானவரும், பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டவரும், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவருமாக இருக்கின்றார்.</verse>
				<verse number="27">மற்ற தலைமை மதகுருக்கள், முதலாவது தங்களுடைய பாவங்களுக்காகவும், பின்பு மனிதருடைய பாவங்களுக்காகவும் ஒவ்வொரு நாளும் பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களைப் போல், அவ்வாறு இயேசு பலி செலுத்த வேண்டியதில்லை. இவரோ தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தபோது அவர்களுடைய பாவங்களுக்காக ஒரே முறை பலியானார்.</verse>
				<verse number="28">ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, நீதிச்சட்டம் தலைமை மதகுருக்களாக நியமிக்கிறது; ஆனால் நீதிச்சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பரிபூரணராக்கப்பட்டுள்ள மகனையே நியமித்தது.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">இவ்வாறான ஒரு தலைமை மதகுரு ஒருவர் நமக்கு இருக்கின்றார் என்பதே நாங்கள் சொல்கின்றதான முக்கியமான கருத்து. அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.</verse>
				<verse number="2">கிறிஸ்துவாகிய இவர், அங்கே பரலோகத்திலுள்ள பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்கின்றார். அது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட உண்மையான இறைபிரசன்னக் கூடாரம். அது மனிதரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.</verse>
				<verse number="3">காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காகவே, ஒவ்வொரு தலைமை மதகுருவும் நியமிக்கப்படுகிறான். எனவே இயேசுவும் இப்படியாக இறைவனுக்கு அளிக்கும்படி ஏதோ ஒன்றைத் தம்மிடத்தில் வைத்திருக்க வேண்டியிருந்தது.</verse>
				<verse number="4">அவர் பூமியில் இருந்திருந்தால் ஒரு மதகுருவாய் இருந்திருக்க மாட்டார். ஏனெனில், நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டிருக்கின்றபடி காணிக்கைகளைச் செலுத்துகின்ற மதகுருக்கள் ஏற்கெனவே பூமியில் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் அவர்கள் பூமியில் இருக்கின்ற ஒரு பரிசுத்த இடத்திலேயே பணி செய்கின்றார்கள். அது பரலோகத்தில் உள்ள உண்மையான பரிசுத்த இடத்தின் மாதிரியும் நிழலும் மட்டுமே. இதனாலேயே மோசே அந்த இறைபிரசன்னக் கூடாரத்தை அமைக்கத் தொடங்கும் முன்னர் இறைவன் அவரிடம், “மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட அந்த மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்யும்படி நீ கவனமாயிரு” என்று எச்சரிக்கை கொடுத்தார்.</verse>
				<verse number="6">முன்னைய காலத்தில் மதகுருக்கள் செய்த ஊழியத்தைவிட இயேசு பெற்றுக்கொண்ட ஊழியம் மிக உயர்ந்தது. ஏனெனில், இயேசுவை நடுவராகக் கொண்ட புதிய உடன்படிக்கை, மேன்மையான வாக்குறுதிகளைக்கொண்டு ஏற்படுத்தப்பட்டது. அதனால், அது பழைய உடன்படிக்கையைப் பார்க்கிலும் சிறந்ததாயிருக்கிறது.</verse>
				<verse number="7">ஆகவே முதலாவது உடன்படிக்கையானது குறையற்றதாய் இருந்திருந்தால், இரண்டாவது உடன்படிக்கை ஒன்றை உருவாக்க அவசியம் ஏற்பட்டிருக்காது.</verse>
				<verse number="8">ஆனால், இறைவனோ மக்களில் குறைபாட்டைக் கண்டதனாலேயே, “கர்த்தர் அறிவிக்கின்றதாவது: இஸ்ரயேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையை நிறைவாக்கும் நாட்கள் வருகின்றன.</verse>
				<verse number="9">நான் அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக்கொண்டு வந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப் போல் இருப்பதில்லை. ஏனெனில், அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் அறிவிக்கிறார்.</verse>
				<verse number="10">அந்த நாட்களுக்குப் பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே என்று கர்த்தர் அறிவிக்கிறார். நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.</verse>
				<verse number="11">இனிமேல் ஒருவன் தன்னுடைய அயலானுக்கோ, அல்லது தனது சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது. ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்.</verse>
				<verse number="12">நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை இனி ஒருபோதும் நினைவில்கொள்வதில்லை.”</verse>
				<verse number="13">இந்த உடன்படிக்கையை “புதியது” என்று சொல்கின்றதனாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை காலாவதியாக்கினார். காலாவதியாகிக் கொண்டிருக்கும் எதுவும், பழைமையாகிக் கொண்டிருக்கும் எதுவும் விரைவில் மறைந்து போய்விடும்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">அந்த முதலாம் உடன்படிக்கைக்கென பிரத்தியேகமான இறைவழிபாட்டு முறைமைகளும் இந்த உலகத்தில் அதற்கென்று ஒரு பரிசுத்த இடமும் இருந்தன.</verse>
				<verse number="2">அங்கே இரு பகுதிகளைக் கொண்ட ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன் பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதனுள்ளேயே குத்துவிளக்கும், மேசையும், அதன்மீது படைக்கப்பட்ட விசேட அப்பங்களும் இருந்தன.</verse>
				<verse number="3">அங்கிருந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட மற்றைய பகுதி இருந்தது.</verse>
				<verse number="4">அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன. இந்தப் பெட்டகத்தினுள்ளே மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.</verse>
				<verse number="5">அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபையின் ஆசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும் விரிவாய் சொல்ல இப்போது இயலாது.</verse>
				<verse number="6">இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த போது, மதகுருக்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக அந்த வெளியறைக்குள் வழக்கமாக செல்வார்கள்.</verse>
				<verse number="7">ஆனால் மகா பரிசுத்த இடமான உள்அறைக்குள்ளே தலைமை மதகுரு மாத்திரம், அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் செல்வார். பலிகளின் இரத்தத்தை எடுத்துச் செல்லாமல் அவர் அதற்குள் போகவே முடியாது. இப்படியாக எடுத்துச் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் அவர் அதைச் செலுத்துவார்.</verse>
				<verse number="8">முன்மாதிரியாக முதல் வந்த இறைபிரசன்னக் கூடாரம் இருக்கும் வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன் மூலமாக காண்பிக்கிறார்.</verse>
				<verse number="9">இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும், பலிகளும் வழிபடுகின்றவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன.</verse>
				<verse number="10">இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட சரீரத்திக்கேற்ற சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம் வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன.</verse>
				<verse number="11">இப்போது நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள பெருநன்மைகளை அருளுகின்ற தலைமை மதகுருவாய் கிறிஸ்து வருகை தந்தபோது, அவர் மனிதனின் கரங்களினால் செய்யப்படாத அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாய் இல்லாத மேலானதும் நிறைவானதுமான இறைபிரசன்னக் கூடாரத்தின் ஊடாகவே சென்றார்.</verse>
				<verse number="12">அவர் முதலும் முடிவுமாக ஒரே தடவை மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசித்து வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தினால் அன்றி, தமது சொந்த இரத்தத்தினாலேயே இவ்வாறாக நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக் கொடுத்தார்.</verse>
				<verse number="13">வெள்ளாடுகள், காளைகள் ஆகியவற்றின் இரத்தம், சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மீது தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட இளம் பசுவின் சாம்பலும் அவர்கள்மீது தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது.</verse>
				<verse number="14">அப்படியானால், தம்மைத் தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரணித்த செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, வாழும் இறைவனை நாம் ஆராதித்து, அவருக்குப் பணி செய்யக் கூடியவர்களாக்கும்.</verse>
				<verse number="15">இவ்வாறு முதலாவது உடன்படிக்கையின் கீழிருந்தபோது, மக்கள் செய்த பாவங்களிலிருந்து அவர்களை மீட்கின்ற பலியாக இயேசுவின் மரணம் நிறைவேறியது. இதனூடாக அழைக்கப்பட்டவர்கள் எல்லோரும் இறைவனால் வாக்குறுதியளிக்கப்பட்ட நித்தியமான உரிமைச் சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படி, அவர் ஒரு புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கின்றார்.</verse>
				<verse number="16">ஒரு சட்டபூர்வ கடைசி விருப்பப் பத்திரத்தைப் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும்.</verse>
				<verse number="17">அதை எழுதியவர் உயிரோடிருக்கும் வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்த பின்பே அது நடைமுறைக்கு வரும்.</verse>
				<verse number="18">இதனாலேயே முதல் உடன்படிக்கையும் இரத்தம் சிந்துதல் இல்லாமல் செயற்படுத்தப்படவில்லை.</verse>
				<verse number="19">முதல் உடன்படிக்கை அறிமுகம் செய்யப்பட்டபோது மோசே எல்லாக் கட்டளைகளையும் இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தார். அதற்குப் பின்பு அவர் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை சிவப்புக் கம்பளித் துணியையும் ஈசோப்பு செடியையும்கொண்டு, அந்தப் புத்தகச் சுருளின் மேலும் எல்லா மக்களின் மேலும் தெளித்தார்.</verse>
				<verse number="20">தெளிக்கையில் அவர், “நீங்கள் கைக்கொள்ளும்படி, இறைவன் கட்டளையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்று சொன்னார்.</verse>
				<verse number="21">அவ்விதமாகவே மோசே அந்த இரத்தத்தை இறைபிரசன்னக் கூடாரத்தின் மேலும் அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின் மேலும் தெளித்தார்.</verse>
				<verse number="22">உண்மையாகவே, நீதிச்சட்டத்தின்படி எல்லாமே இரத்தம் சிந்துதலால் சுத்திகரிக்கப்பட வேண்டும். அதன்படி, இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை.</verse>
				<verse number="23">உலகில் இருந்த பரலோகக் காரியங்களின் நகல்களை இவ்விதமாய் பலிகளினால் சுத்திகரிப்பது அவசியமாயிருந்தது என்றால், பரலோகத்தில் அசலாக இருப்பது இதைவிட அதிமேன்மையான பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லவா?</verse>
				<verse number="24">உண்மையான இடத்தை ஒத்திருந்ததும், வெறும் நகலானதுமான மனித கைகளால் செய்யப்பட்ட ஒரு பரிசுத்த இடத்துக்குள் கிறிஸ்து செல்லவில்லை. மாறாக அவர் இறைவனின் முன்னிலையில் எமது சார்பாக தோன்றுவதற்காக இப்போது பரலோகத்திற்கு உள்ளேயே பிரவேசித்துவிட்டார்.</verse>
				<verse number="25">தலைமை மதகுரு, ஒவ்வொரு வருடமும் மிருகங்களின் இரத்தத்தோடு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வது போல கிறிஸ்துவும் திரும்பத் திரும்ப தம்மை பலியாகச் செலுத்தும்படி பரலோகத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை.</verse>
				<verse number="26">அப்படியிருக்குமானால் உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேக தடவைகள் இப்படியாக பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்போது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி முதலும் முடிவுமான ஒரே தடவை தோன்றியிருக்கிறார்.</verse>
				<verse number="27">ஒரு தடவை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="28">அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கும்படியாக கிறிஸ்துவும் ஒரு தடவை பலியாகச் செலுத்தப்பட்டார். அவர் இரண்டாம் தடவை வரவிருக்கிறார், ஆனால் மீண்டும் பாவத்தைச் சுமக்கும்படியாக அன்றி, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் வருவார்.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">மோசேயின் சட்ட விதிமுறைகளானது வரவிருக்கும் நல்ல விடயங்களின் ஒரு நிழல் மாத்திரமேயன்றி, அதன் யதார்த்தமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப தொடர்ச்சியாக செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகின்றவர்களை முழுமை பெறச் செய்ய நீதிச்சட்டத்தால் ஒருபோதும் இயலாதிருக்கிறது.</verse>
				<verse number="2">அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கின்ற மக்கள் ஒரே தடவையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக் குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்க மாட்டார்களே!</verse>
				<verse number="3">ஆனால் அந்தப் பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைவூட்டுவதாகவே இருந்தன.</verse>
				<verse number="4">ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிவிட முடியாது.</verse>
				<verse number="5">இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது அவர், “பலியையும், காணிக்கைகளையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்;</verse>
				<verse number="6">தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை.</verse>
				<verse number="7">அப்போது நான் புத்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கின்றபடி, ‘இதோ நான் இருக்கின்றேன். இறைவனே! உமது விருப்பத்தைச் செய்ய நான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னேன்” என்றார்.</verse>
				<verse number="8">முதலாவது அவர், “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும் நீர் விரும்பவும் இல்லை, அவற்றில் நீர் பிரியப்படவும் இல்லை” என்றார். ஆயினும் நீதிச்சட்டத்தின்படியே அவை செலுத்தப்பட்டன.</verse>
				<verse number="9">பின்பு அவர், “இதோ நான் இருக்கின்றேன், உமது விருப்பத்தைச் செய்ய நான் வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலில் விபரித்தவற்றை நீக்குவதற்காக இரண்டாவதாக விபரித்தவற்றை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார்.</verse>
				<verse number="10">இவ்விதமாக கிறிஸ்து இயேசு ஒரே தரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதன் மூலமாக, இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றியதனால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.</verse>
				<verse number="11">ஒவ்வொரு மதகுருவும், நாள்தோறும் இறை சந்நிதியில் நின்று தனது பணிகளைச் செய்கின்றான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத் திரும்ப செலுத்துகிறான்.</verse>
				<verse number="12">ஆனால் கிறிஸ்துவாகிய இந்த மதகுருவோ, எல்லா காலங்களுக்கும் சேர்த்து பாவங்களுக்கான ஒரே பலியை செலுத்தியதன் பின் இறைவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்.</verse>
				<verse number="13">அந்தவேளை முதல், “அவரின் எதிரிகள் அவரது அரியணையின் பாதபீடமாக ஆக்கப்படும் வரை ” அவர் அங்கே காத்திருக்கின்றார்.</verse>
				<verse number="14">ஏனெனில் பரிசுத்தமாக்கப்பட்டவர்களை ஒரே பலியினாலே அவர் என்றென்றும் பூரணப்படுத்தி விட்டார்.</verse>
				<verse number="15">பரிசுத்த ஆவியானவரும் இதைக் குறித்து நமக்கு சாட்சி கொடுக்கின்றார். அவர் முதலில் சொல்கின்றதாவது,</verse>
				<verse number="16">“அந்த நாட்களுக்குப் பின்பு, நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கின்றார்.”</verse>
				<verse number="17">பின்னும் அவர் தொடர்ந்து, “நான் அவர்களுடைய பாவங்களையும், சட்ட மீறுதல்களையும் இனி ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டேன்” என்றார்.</verse>
				<verse number="18">எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை.</verse>
				<verse number="19">ஆகையால் சகோதரரே, இயேசுவினுடைய இரத்தத்தின் மூலமாய் மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வதற்குத் தைரியம் நமக்கு உண்டு.</verse>
				<verse number="20">அவருடைய உடலாகிய திரைச்சீலையின் மூலமாக ஒரு புதிதான உயிருள்ள வழியை அவர் நமக்குத் திறந்திருக்கிறார்.</verse>
				<verse number="21">இப்போது இறைவனுடைய வீட்டுக்குப் பொறுப்பாக நமது மேன்மையான தலைமை மதகுரு இருக்கின்றார் என்பதால்,</verse>
				<verse number="22">இரத்தம் தெளிக்கப்பட்டதால், நமது இருதயத்திலிருந்து குற்ற மனசாட்சி நீக்கப்பட்ட சுத்த இருதயமும் சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலும் கொண்டவர்களாக, உண்மை உள்ளத்துடன் பரிபூரண விசுவாசத்தோடு இறைவனை அணுகிச் சேருவோமாக.</verse>
				<verse number="23">நமக்கு வாக்குறுதி கொடுத்தவர் வாக்கு மாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகின்ற நம்பிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.</verse>
				<verse number="24">அத்துடன் நாம் அன்பாயிருப்பதிலும், நற்செயல்களைச் செய்வதிலும், எப்படி ஒருவரை ஒருவர் தூண்டி எழுப்பலாம் என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.</verse>
				<verse number="25">சிலர் சபையாக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடுகின்றதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அப்படிச் செய்யாமல் கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதைக் காண்கின்றதனால் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாய் ஊக்குவிப்போம்.</verse>
				<verse number="26">நாம் சத்தியத்தை அறியும் அறிவைப் பெற்ற பின்னும் வேண்டுமென்றே பாவம் செய்துகொண்டு இருப்போமானால், இனிமேலும் பாவங்களை நீக்குவதற்கான பலி வேறொன்றும் இருக்காது.</verse>
				<verse number="27">ஆனால் பயப்படத்தக்கதான நியாயத்தீர்ப்பையும், இறைவனின் பகைவர்களைச் சுட்டெரிக்கின்றதான பற்றியெரியும் நெருப்பையுமே எதிர்நோக்க வேண்டும்.</verse>
				<verse number="28">மோசேயின் சட்டத்தை நிராகரித்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் குற்றம் நிரூபிக்கப்பட்டதும், இரக்கம் காட்டப்படாமல் மரணதண்டனை அடைந்தார்கள்.</verse>
				<verse number="29">அப்படியானால் இறைவனின் மகனை காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணி கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன், இன்னும் எந்தளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்பதைச் சிந்தியுங்கள்.</verse>
				<verse number="30">ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயம் தீர்ப்பார்” என்றும் சொல்லியிருக்கின்றவரை நமக்குத் தெரியும்.</verse>
				<verse number="31">வாழும் இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே.</verse>
				<verse number="32">நீங்கள் புதிதாக அறிவொளி பெற்ற ஆரம்ப நாட்களில் பல வேதனைகளின் மத்தியில் பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்றதை நினைவிற்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="33">சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறு சில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள் கொடுத்து நின்றீர்கள்.</verse>
				<verse number="34">சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது அவற்றைவிட மேன்மையானதும், என்றென்றும் நிலைத்திருக்கின்றதுமான உரிமைச் சொத்து உங்களுக்கு இருக்கின்றது என்பதை அறிந்திருந்ததனால், அதையும் மனமகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள்.</verse>
				<verse number="35">ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்து விடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும்.</verse>
				<verse number="36">நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்த பின் அவர் வாக்குக் கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள்.</verse>
				<verse number="37">ஏனெனில் “வருகின்றவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்க மாட்டார்.</verse>
				<verse number="38">ஆனால், “எனது நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள். அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப் போனால், நான் அவனில் பிரியமாயிருக்க மாட்டேன்” என்ற வேதவசனங்களை நாம் அறிவோம்.</verse>
				<verse number="39">நாமோ, விசுவாசத்திலிருந்து பின்வாங்கி அழிந்து போகின்றவர்களை அன்றி, விசுவாசித்து இரட்சிக்கப்படுகின்றவர்களை சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">விசுவாசம் என்பது நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக் குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது.</verse>
				<verse number="2">இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே, நமது முன்னோர்கள் இறைவனிடமிருந்து நற்சாட்சியைப் பெற்றுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="3">விசுவாசத்தினாலேயே, நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தமது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகின்றவை, காணப்படாதவற்றிலிருந்து உண்டாகின.</verse>
				<verse number="4">விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக் குறித்து நன்றாகப் பேசியபோது விசுவாசத்தினாலேயே அவன் நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் மரணித்தபோதும், இன்னும் அவனது குரல் பேசுகின்றது.</verse>
				<verse number="5">“விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார்.” இறைவன் அவரை எடுத்துக்கொண்டதனால், அவர் காணப்படாமற் போய் விட்டார். அவர் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு அவர் இறைவனுக்குப் பிரியமானவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார்.</verse>
				<verse number="6">விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்த முடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகின்றவர்கள், அவர் இருக்கின்றார் என்றும், அவர் தம்மை முழு மனதோடு தேடுகின்றவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கின்றவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.</verse>
				<verse number="7">விசுவாசத்தினாலேயே நோவா, இன்னும் காணப்படாத காரியங்களைக் குறித்து எச்சரிக்கப்பட்டபோது, தனது குடும்பத்தை இரட்சிக்கும்படி இறைபயத்துடனே ஒரு பேழையைச் செய்தார். அவர் தன்னுடைய விசுவாசத்தினாலேயே உலகத்தை தண்டனைத்தீர்ப்புக்குள்ளாக்கி, விசுவாசத்தினால் வரும் நீதிக்கு சொத்துரிமை உடையவர் ஆனார்.</verse>
				<verse number="8">விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச் சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகின்றேன் என்றுகூட அவர் அறியாதிருந்த போதிலும் கீழ்ப்படிந்து புறப்பட்டார்.</verse>
				<verse number="9">விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் பிறநாட்டில் இருக்கும் ஒரு அந்நியனைப் போல் வாக்குக் கொடுத்த நாட்டில் தனது குடியிருப்பை அமைத்தார். அவர் கூடாரங்களிலேயே குடியிருந்தார். அதே வாக்குறுதிக்கு உரிமையாளர்களான ஈசாக்கும், யாக்கோபும் கூடாரங்களிலேயே குடியிருந்தார்கள்.</verse>
				<verse number="10">ஏனெனில், வடிவமைத்துக் கட்டுபவரான இறைவன், தாமே உறுதியாய் அத்திவாரமிட்ட, அந்த நகரத்தையே ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.</verse>
				<verse number="11">சாராள் வயது சென்றவளும் குழந்தைப் பேறு அற்றவளுமாக இருந்தபோதும் குழந்தை பெறும் ஆற்றலைப் பெற்றாள். ஏனெனில் தனக்கு வாக்குறுதியைக் கொடுத்த இறைவன் வாக்கு மாறாதவர் என்று அவள் நம்பினாள்.</verse>
				<verse number="12">ஆபிரகாமின் உடல் வல்லமையிழந்து உயிரற்றது போல் இருந்தபோதும், வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரையிலுள்ள மணலைப் போலவும் எண்ணற்ற மக்கள் அந்த ஒரே மனிதனிலிருந்து தோன்றினர்.</verse>
				<verse number="13">விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும் அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குறுதி பண்ணப்பட்டதை அப்போது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக் கண்டு வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="14">இப்படி அறிவிக்கின்ற மக்கள் தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே எதிர்பார்த்து இருக்கின்றார்கள் என்பதைக் தெரியப்படுத்துகிறார்கள்.</verse>
				<verse number="15">தாங்கள் தேடுகின்ற நாடு தாங்கள் விட்டுப் புறப்பட்டு வந்த நாடே என அவர்கள் நினைத்திருந்தால், அவர்கள் அங்கு திரும்பிப் போகக்கூடிய தருணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.</verse>
				<verse number="16">ஆனால் அவர்களோ அதிலும் மேன்மையான நாட்டை, ஒரு பரலோக நாட்டையே தேடினார்கள். அதை அடையவே ஆசைப்பட்டார்கள். ஆகவே “அவர்களுடைய இறைவன்” என தாம் அழைக்கப்படுவதை இறைவன் வெட்கத்துக்குரியதாக எண்ணவில்லை. ஏனெனில் இறைவன், அவர்களுக்கென்று ஒரு நகரத்தை ஆயத்தம் செய்திருக்கின்றார்.</verse>
				<verse number="17">இறைவன் தன்னைச் சோதித்தபோது, ஆபிரகாம் விசுவாசத்தினாலே ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினார். வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்டவர் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்.</verse>
				<verse number="18">“ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” என்று இறைவன் அவருக்குச் சொல்லியிருந்தும்கூட, அவர் இதைச் செய்தார்.</verse>
				<verse number="19">இறந்தவர்களையும் உயிரோடு எழுப்ப இறைவனால் முடியும் என்று ஆபிரகாம் உணர்ந்திருந்தார். ஒரு வகையில் அவர் ஈசாக்கை மரணத்திலிருந்தே மீண்டும் பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம்.</verse>
				<verse number="20">விசுவாசத்தினாலேயே ஈசாக்கு, யாக்கோபினதும் ஏசாவினதும் எதிர்காலத்தைக் குறித்து ஆசீர்வதித்தார்.</verse>
				<verse number="21">யாக்கோபு, தான் மரணத் தறுவாயில் இருக்கையில் விசுவாசத்தினாலேயே யோசேப்பினுடைய மகன்மார் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார். பின்பு தனது கைத்தடியின் மேற்புறத்தில் சாய்ந்து கொண்டு வழிபட்டார்.</verse>
				<verse number="22">விசுவாசத்தினாலேயே யோசேப்பு, தனது முடிவு காலம் நெருங்கியபோது இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போவார்கள் என்பதைக் குறித்துப் பேசி, தனது எலும்புகளை நல்லடக்கம் செய்வதைக் குறித்து கட்டளை கொடுத்தார்.</verse>
				<verse number="23">மோசேயின் பெற்றோர், அவர் பிறந்தபோது விசுவாசத்தினாலேயே அவரை மூன்று மாதம் ஒளித்து வைத்தார்கள். அவர் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்து கொண்டதால் அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை.</verse>
				<verse number="24">விசுவாசத்தினாலேயே மோசே, வளர்ந்து பெரியவரானபோது தான் பார்வோனின் மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.</verse>
				<verse number="25">விரைவில் கடந்து போகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே மோசே தெரிவு செய்தார்.</verse>
				<verse number="26">கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது, எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான பெறுமதியுடையது என்றே கருதினார். ஏனெனில், அவர் வரப் போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தார்.</verse>
				<verse number="27">விசுவாசத்தினாலேயே மோசே, அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார். ஏனெனில், அவர் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவராய் மனவுறுதியுடன் இருந்தார்.</verse>
				<verse number="28">தலைப் பிள்ளைகளை அழிக்கும் இறைதூதன் இஸ்ரயேலரின் தலைப் பிள்ளைகளை தொடாதபடி, பஸ்காவையும் கதவு நிலைகளில் இரத்தம் தெளிப்பதையும் விசுவாசத்தினாலேயே மோசே கைக்கொண்டார்.</verse>
				<verse number="29">விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள், உலர்ந்த தரையில் நடப்பது போல் செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் அமிழ்ந்து போனார்கள்.</verse>
				<verse number="30">விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள், எரிகோ பட்டணத்தைச் சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன.</verse>
				<verse number="31">விசுவாசத்தினாலேயே ராகாப் என்ற விலைமாது, இஸ்ரயேல் ஒற்றர்களை வரவேற்று, இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுடனே கொல்லப்படாமல் தப்பினாள்.</verse>
				<verse number="32">இன்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் ஆகியோரைக் குறித்தும் மற்ற இறைவாக்கினரைக் குறித்தும் சொல்வதற்கு நேரமில்லை.</verse>
				<verse number="33">இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள், நீதியை நடைமுறைப்படுத்தினார்கள், வாக்குறுதி பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள், சிங்கங்களின் வாய்களைக் கட்டினார்கள்.</verse>
				<verse number="34">கொழுந்து விட்டெரியும் நெருப்பின் அனலை அணைத்தார்கள், வாள்முனைக்கும் தப்பினார்கள். அவர்களது பலவீனங்கள் பலமுள்ளதாய் மாற்றப்பட்டன. அவர்கள் யுத்தத்தில் வலிமையுடையவர்களாகி, அந்நிய படைகளைத் தோற்கடித்தார்கள்.</verse>
				<verse number="35">விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிருடனே பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறு சிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள்.</verse>
				<verse number="36">இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறு சிலர் விலங்கிடப்பட்டவர்களாய் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.</verse>
				<verse number="37">அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், உடல் இரண்டாகத் துண்டாடப்பட்டார்கள், வாளினால் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்.</verse>
				<verse number="38">இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து, குகைகளிலும் நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள்.</verse>
				<verse number="39">இவர்கள் எல்லோரும் தங்கள் விசுவாசத்தால் நற்பெயர் பெற்றார்கள். ஆனால் இவர்கள் ஒருவரும் வாக்குறுதி பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொள்ளவில்லை.</verse>
				<verse number="40">இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும் நம்முடன் ஒன்று சேர்ந்துதான் பூரணராக முடியும்.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">எனவே இப்படிப்பட்ட பெருந்திரளான சாட்சிகள் ஒரு மேகத்தைப் போல் நம்மைச் சுற்றி இருக்கின்றதனால், நம்மைத் தடை செய்கின்ற எல்லா பாரத்தையும், நம்மை இலகுவாய் சிக்க வைக்கின்ற பாவத்தையும் அகற்றிவிட்டு, நமக்காக நியமிக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டப் பந்தயத்தில் விடாமுயற்சியுடன் ஓடுவோம்.</verse>
				<verse number="2">விசுவாசத்தைத் தொடங்குபவரும், அதை நிறைவு செய்பவருமாகிய இயேசுவின்மீது நமது கண்களைப் பதிய வைப்போம். அவர் தமக்கு முன்பாக இருந்த மனமகிழ்ச்சியை நினைத்து, அவமானத்தை பொருட்படுத்தாமல் சிலுவையை சகித்து, இறைவனுடைய அரியணையின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.</verse>
				<verse number="3">நீங்கள் மனம் தளர்ந்து சோர்ந்து போகாதபடி பாவிகளிலிருந்து வந்த இப்படிப்பட்ட எதிர்ப்பைச் சகித்தவரான இயேசுவைக் குறித்துச் சிந்தியுங்கள்.</verse>
				<verse number="4">பாவத்தை எதிர்த்துப் போராடுவதில் இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.</verse>
				<verse number="5">ஒரு தந்தை தனது மகனோடு பேசுவதைப் போல் உங்களோடு பேசிய உற்சாகப்படுத்தும் வார்த்தையை நீங்கள் முழுமையாக மறந்துவிட்டீர்களா? அவர், “என் மகனே, கர்த்தர் உன்னைத் தண்டித்துத் திருத்தும்போது அதை அலட்சியப்படுத்தாதே. அவர் உன்னைக் கண்டிக்கும்போது மனந்தளர்ந்து போகாதே.</verse>
				<verse number="6">ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கின்றவர்களையே தண்டித்துத் திருத்துகிறார். தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.”</verse>
				<verse number="7">கஷ்டங்கள் வரும்போது, அவை உங்களைத் திருத்துவதற்காகவே வருகின்றன என்று அறிந்து சகித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவன் உங்களைத் தமது பிள்ளைகளாக நடத்துகிறார். தனது தந்தையினால் தண்டித்துத் திருத்தப்படாத மகன் எங்கே இருக்கின்றான்?</verse>
				<verse number="8">பிள்ளைகள் தண்டித்துத் திருத்தப்படுகிறார்கள். எனவே நீங்கள் அவ்விதம் தண்டித்துத் திருத்தப்படாவிட்டால் அவருடைய உண்மையான பிள்ளைகளாயிராமல் முறைகேடாய் பிறந்த பிள்ளைகளாய் இருப்பீர்கள்.</verse>
				<verse number="9">மேலும் நம்மைத் தண்டித்துத் திருத்திய உலகிற்குரிய தந்தையர் நம் எல்லோருக்கும் இருந்திருக்கிறார்கள். நாம் அவர்களை மதித்து நடந்தோம். அப்படியானால் நம் ஆவிகளுக்குத் தந்தையாய் இருக்கின்றவருக்கு நாம் பணிந்து நடந்து வாழ்வைப் பெறுவது எவ்வளவு அவசியம்?</verse>
				<verse number="10">நம்முடைய மனிதத் தந்தையர் சிறிது காலத்திற்குத் தமக்கு நலமாய்த் தோன்றியபடி, நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். ஆனால் இறைவனோ, நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளும்படியாக நம்முடைய நன்மைக்கென்றே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார்.</verse>
				<verse number="11">நாம் தண்டித்துத் திருத்தப்படும்போது அது அவ்வேளையில் மனமகிழ்ச்சியாயிருக்காமல் வேதனையுடையதாகவே இருக்கின்றது. ஆனால் பின்பு திருத்தப்பட்டவர்களுக்கு அது நீதி நிறைந்த சமாதான அறுவடையைத் தரும்.</verse>
				<verse number="12">ஆகவே தளர்ந்துபோன உங்கள் கைகளையும், பலவீனமான உங்கள் முழங்கால்களையும் பலப்படுத்துங்கள்.</verse>
				<verse number="13">கால் ஊனமானவர்கள் முற்றாகவே மூட்டுக்கள் விலகிவிடாமல் குணமடையும்படி, “உங்கள் பாதைகளை சரியான நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்.”</verse>
				<verse number="14">எல்லோருடனும் சமாதானமாய் வாழவும், உங்கள் நடத்தையில் பரிசுத்தமாய் இருக்கவும் எல்லா முயற்சியையும் செய்யுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவரும் கர்த்தரைக் காண முடியாது.</verse>
				<verse number="15">இறைவனுடைய கிருபையை ஒருவரும் இழந்துபோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் குழப்பத்தை விளைவித்து, பலரை மாசுபடுத்தும் கசப்புணர்வு வேரூன்றி முளைக்க இடம் கொடுக்காதீர்கள்.</verse>
				<verse number="16">உங்களில் யாரும் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாதபடி கவனமாயிருங்கள். ஒருவேளை உணவுக்காக மூத்த மகனுக்குரிய தன் பிறப்புரிமையை விற்றுவிட்ட ஏசாவைப் போல், இறைபக்தியில்லாதவனாய் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="17">நீங்கள் அறிந்திருக்கின்றபடி அவன் இந்த ஆசீர்வாதத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள விரும்பியபோதும், அவன் புறக்கணிக்கப்பட்டான். இந்த ஆசீர்வாதத்தை அவன் கண்ணீருடன் தேடியபோதும் அவனுக்கு அந்நிலையை மாற்ற முடியவில்லை.</verse>
				<verse number="18">நீங்கள் இப்போது வந்திருப்பது தொடக் கூடியதும், நெருப்பு பற்றி எரிகின்றதும், இருளும், மந்தாரமும், புயலும் சூழ்ந்துள்ள அந்த மலையின் பக்கம் அல்ல.</verse>
				<verse number="19">அங்கே எக்காளம் முழங்கியது, ஒரு குரல் வார்த்தைகளைப் பேசியது. கேட்டவர்கள் இன்னொரு முறை அந்தக் குரலைத் தாங்கள் கேட்கக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள்.</verse>
				<verse number="20">ஏனெனில், “அந்த மலையை ஒரு மிருகம் தொட்டாலும், அந்த மிருகம் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்” என்று சொல்லப்பட்ட கட்டளையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது.</verse>
				<verse number="21">அந்தக் காட்சி மிகவும் பயங்கரமாக இருந்ததனாலே மோசே, “நான் பயத்தினால் நடுங்குகிறேன்” என்று சொன்னார்.</verse>
				<verse number="22">ஆனால் நீங்களோ, இப்போது வாழும் இறைவனின் நகரமாயிருக்கின்ற பரலோக எருசலேமாகிய சீயோன் மலைக்கே வந்திருக்கிறீர்கள். ஆயிரம் ஆயிரமான இறைதூதர்கள் மகிழ்ச்சியாய் சபை கூடுதலுக்கும்,</verse>
				<verse number="23">பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்ற முதற்பேறானவர்களின் திருச்சபையிடமும், எல்லா மனிதருக்கும் நீதிபதியாய் இருக்கின்ற இறைவனிடமும், முழு நிறைவடைந்த நீதிமான்களின் ஆவிகளினிடமும்,</verse>
				<verse number="24">புதிய உடன்படிக்கையின் நடுவரான இயேசுவினிடமும், ஆபேலின் இரத்தத்தைவிட மேன்மையான வார்த்தையைப் பேசும் இயேசுவின் தெளிக்கப்பட்ட இரத்தத்தினிடமுமே நீங்கள் வந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="25">ஆகவே உங்களிடம் பேசுகின்ற இறைவனை மறுக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பூமியிலே அவர்களை எச்சரித்த வார்த்தைகளைக் கேட்க மறுத்தவர்களே தப்பித்துக்கொள்ள முடியவில்லை என்றால், பரலோகத்திலிருந்து எச்சரிப்பு கொடுப்பவருடைய வார்த்தைகளைக் கேட்க மறுத்தால், எப்படி நாம் தப்பித்துக்கொள்ள முடியும்?</verse>
				<verse number="26">அக்காலத்தில் இறைவனுடைய குரல் பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “நான் இன்னொரு முறை பூமியை மட்டுமல்ல, பரலோகத்தையும் சேர்த்து அசைப்பேன்” என்று வாக்குறுதி அளித்துள்ளார்.</verse>
				<verse number="27">“இன்னொரு முறை” என்ற வார்த்தை, அசைக்கப்படக் கூடிய படைப்புகள் அகற்றப்படும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. இதனால் அசைக்கப்பட முடியாதவை தொடர்ந்து நிலைத்திருக்கும்.</verse>
				<verse number="28">ஆகவே, அசைக்கப்படாத ஒரு அரசையே பெறுகின்றவர்களாகிய நாம் நன்றியுடையவர்களாய், இறைவன் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில், பயபக்தியுடனும் இறைபயத்துடனும் அவரை ஆராதிப்போம்</verse>
				<verse number="29">ஏனெனில், நமது இறைவனோ “சுட்டெரிக்கும் நெருப்பாய்” இருக்கின்றார்.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">ஒருவர் மீது ஒருவர், சகோதர அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள்.</verse>
				<verse number="2">அந்நியரை உபசரிக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததனால் சிலர் அறியாமல் இறைதூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="3">சிறையில் இருப்பவர்களை நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பது போலவும், துன்பப்படுகின்றவர்களை நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப் போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="4">திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப் படுக்கை தூய்மையாக காக்கப்பட வேண்டும். தகாத உறவிலும், பாலியல் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபடுகின்றவர்களை இறைவன் நியாயம் தீர்ப்பார்.</verse>
				<verse number="5">பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன், “நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலக மாட்டேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று சொல்லியிருக்கின்றாரே.</verse>
				<verse number="6">எனவே நாமும் மனத் தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்பட மாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்ய முடியும்” என்று சொல்வோம்.</verse>
				<verse number="7">உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக் கொடுத்த தலைவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையின் பிரதிபலனை யோசித்துப் பார்த்து அவர்களுடைய விசுவாசத்தையே நீங்களும் பின்பற்றுங்கள்.</verse>
				<verse number="8">இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கின்றார்.</verse>
				<verse number="9">பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால் வழிவிலகிப் போகாதிருங்கள். உண்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாத சடங்கு முறை உணவு வகைகளினால் அன்றி, கிருபையினால் நம்முடைய இருதயம் பலப்படுவதே நல்லது.</verse>
				<verse number="10">இறைபிரசன்னக் கூடாரத்தில் பணிபுரிகின்றவர்கள் அதிலிருந்து உண்பதற்கு உரிமையில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு.</verse>
				<verse number="11">தலைமை மதகுரு மிருகங்களின் இரத்தத்தை மகா பரிசுத்த இடத்திற்கு பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுபோகின்றான். ஆனால் மிருகங்களின் உடல்களோ முகாமுக்கு வெளியே எரிக்கப்படுகின்றன.</verse>
				<verse number="12">இவ்விதமே இயேசுவும்கூட நகர வாசலுக்கு வெளியே வேதனைகளை அனுபவித்து, தமது சொந்த இரத்தத்தின் மூலமாக மக்களைப் பரிசுத்தமாக்கினார்.</verse>
				<verse number="13">ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம்.</verse>
				<verse number="14">ஏனெனில் நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப் போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.</verse>
				<verse number="15">ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை ஏற்று ஒப்புக்கொள்கின்ற உதடுகளின் கனியை துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக.</verse>
				<verse number="16">நன்மை செய்ய மறக்க வேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிட வேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார்.</verse>
				<verse number="17">உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய அதிகாரத்திற்குப் பணிந்து நடவுங்கள். ஏனெனில், அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக, உங்கள் மீது கண்காணிப்பு செய்கின்றார்கள். உங்களைக் கண்காணிப்பது அவர்களுக்கு சுமையாக இல்லாது மனமகிழ்ச்சியாக இருக்கும்விதத்தில் நடந்துகொள்ளுங்கள். அவர்களுக்குச் சுமையாக இருப்பது உங்களுக்கு நன்மை தராது.</verse>
				<verse number="18">எங்களுக்காக மன்றாடுங்கள். எங்களுக்கு நல்ல மனசாட்சி உண்டு என்பதில் நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கின்றோம். எல்லா வழியிலும் நன்மதிப்புக்குரியவர்களாக வாழவே ஆசைப்படுகிறோம்.</verse>
				<verse number="19">நான் விரைவாக உங்களிடம் வந்து சேருமாறு நீங்கள் மன்றாட வேண்டும் என உங்களிடம் விசேடமாக வேண்டிக்கொள்கிறேன்.</verse>
				<verse number="20">நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் மூலமாக செம்மறியாடுகளின் பெரிய மேய்ப்பரான நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரணித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன்,</verse>
				<verse number="21">தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமான எல்லா நன்மையாலும் உங்களைப் பூரணப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தமது பார்வையில் பிரியமானதை நம்மில் நிறைவேற்றுவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.</verse>
				<verse number="22">சகோதரர்களே! நான் உங்களை எச்சரித்தும் ஊக்கப்படுத்தியும் எழுதியிருக்கின்ற இந்த வார்த்தைகளைச் சற்று பொறுமையாய் கேளுங்கள். ஏனெனில் சுருக்கமான ஒரு செய்தியையே நான் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.</verse>
				<verse number="23">நமது சகோதரன் தீமோத்தேயு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் விரைவில் வந்தால் நான் உங்களைப் பார்ப்பதற்கு அவனுடனேயே வருவேன்.</verse>
				<verse number="24">உங்கள் தலைவர்கள் அனைவருக்கும், இறைவனின் மக்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். இத்தாலியில் உள்ளவர்களும், உங்களுக்குத் தங்கள் வாழ்த்துதல்களைக் கூறுகிறார்கள்.</verse>
				<verse number="25">கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக! ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="59">
			<chapter number="1">
				<verse number="1">இறைவனுக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாய் இருக்கின்ற யாக்கோபு, வெவ்வேறு நாடுகளில் சிதறுண்டு வாழ்கின்ற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுவதாவது: வாழ்த்துதல்கள்.</verse>
				<verse number="2">பிரியமானவர்களே, நீங்கள் பல்வேறு சோதனைகளை சந்திக்கும் போதெல்லாம் அதை மிகுந்த மகிழ்ச்சியானதாக எண்ணுங்கள்.</verse>
				<verse number="3">ஏனெனில் உங்கள் விசுவாசத்துக்கு வரும் சோதனையானது உங்களில் மனவுறுதியை உண்டாக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="4">நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவராக இராமல் முழுமை பெற்று நிறைவுடன் இருக்குமாறு உங்கள் மனவுறுதி முழுமையாக உங்களில் செயலாற்றட்டும்.</verse>
				<verse number="5">உங்களில் ஒருவர் ஞானத்தில் குறைவுள்ளவராக இருந்தால் குற்றங்குறை பாராத எல்லோருக்கும் தாராளமாய்க் கொடுக்கின்ற இறைவனிடம் அவர் கேட்கட்டும். அப்போது அது அவர்களுக்குக் கொடுக்கப்படும்.</verse>
				<verse number="6">ஆனாலும் நீங்கள் கேட்கும்போது சந்தேகப்படாமல் விசுவாசத்துடன் கேளுங்கள், ஏனெனில் சந்தேகப்படுகின்றவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடலின் அலையைப் போன்றிருக்கிறார்கள்.</verse>
				<verse number="7">சந்தேகப்படுகின்றவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது.</verse>
				<verse number="8">அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்களாகவும், தங்கள் செயல்களிலெல்லாம் நிலையற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="9">தாழ்ந்த நிலையில் இருக்கின்ற ஒரு சகோதரன், தான் உயர்த்தப்பட்டிருப்பதில் மேன்மை பாராட்டட்டும்.</verse>
				<verse number="10">செல்வந்தனாய் இருக்கின்ற சகோதரனோ தன் தாழ்ச்சியில் மேன்மை பாராட்டட்டும். ஏனெனில் காட்டுப் பூவைப் போல் செல்வந்தன் மறைந்து போவான்.</verse>
				<verse number="11">கடும் வெப்பத்துடன் சூரியன் மேலே எழுகின்றபோது செடி வாடிப் போகின்றது; அதன் பூக்களும் உதிர்ந்து, அழகும் அழிந்து போகின்றது. இவ்விதமாகவே செல்வந்தனும் தனது செயல் முயற்சிகளின் இடையிலே மறைந்து போவான்.</verse>
				<verse number="12">சோதனையை உறுதியுடன் எதிர்கொள்ளும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன் சோதனையை எதிர்கொண்ட பின்பு இறைவன் தம்மீது அன்பாய் இருக்கின்றவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ள வாழ்வின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்வான்.</verse>
				<verse number="13">சோதிக்கப்படும்போது, “இறைவன் என்னைச் சோதிக்கிறார்” என்று ஒருவனும் சொல்லக் கூடாது. ஏனெனில் இறைவன் தீமையினால் சோதிக்கப்படக் கூடியவர் அல்ல, அவர் யாரையும் அப்படிச் சோதிக்கின்றவரும் அல்ல.</verse>
				<verse number="14">மாறாக, ஒவ்வொருவனும் தனது தீய ஆசையினால் தூண்டி இழுக்கப்பட்டு அதில் சிக்கிக்கொள்ளும்போது சோதிக்கப்படுகிறான்.</verse>
				<verse number="15">அந்தத் தீய ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது. பாவம் முழு வளர்ச்சியடைந்து மரணத்தை பிறப்பிக்கின்றது.</verse>
				<verse number="16">எனக்கு பிரியமானவர்களே, ஏமாற்றப்படாதிருங்கள்.</verse>
				<verse number="17">நன்மையானதும் முழுநிறைவானதுமான எந்தக் கொடையும் பரலோகத்திலிருக்கின்ற ஒளியின் பிதாவினிடத்திலிருந்து கீழிறங்கி வருகின்றது. அவரிடத்தில் மாறுபாடோ, மாற்றமடையும் நிழலோ இல்லை.</verse>
				<verse number="18">அவர் படைத்தவற்றிலே வரவிருக்கின்ற ஒருவித முதற்கனிகளாக நாம் இருக்கும்படி தமது சித்தத்தின்படி சத்திய வார்த்தையின் மூலமாக நம்மை ஈன்றெடுத்தார்.</verse>
				<verse number="19">பிரியமானவர்களே, நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால் அனைவருக்கும் கேட்பதில் துரிதமும், பேசுவதிலும் கோபப்படுவதிலும் தாமதமும் இருக்கட்டும்.</verse>
				<verse number="20">ஏனெனில், மனிதனுடைய கோபம் இறைவனின் நீதியை உருவாக்காது.</verse>
				<verse number="21">எனவே, நீங்களோ எல்லா அழுக்கையும், ஒழுக்கக்கேட்டையும் உங்களைவிட்டு அகற்றி, உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ள, உங்களுக்குள் நாட்டப்பட்டிருக்கும் வார்த்தையைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="22">நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்ளாமல், வார்த்தையை கேட்கின்றவர்களாக மாத்திரம் இல்லாமல், அதன்படி செய்கின்றவர்களாயும் இருங்கள்.</verse>
				<verse number="23">வார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், தன்னுடைய இயற்கையான முகத்தை கண்ணாடியில் பார்த்தும்,</verse>
				<verse number="24">அவ்விடத்தைவிட்டு சென்ற பின்பு தன் முகம் எப்படி இருந்தது என்பதை உடனே மறந்துபோன மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான்.</verse>
				<verse number="25">இந்த முழுநிறைவான விடுதலையின் சட்டத்தைக் கூர்ந்து கவனித்து, கேட்டதை மறந்து விடுகின்றவனாயிராமல் அதில் நிலைத்திருந்து, அதன்படி நடக்கின்றவனே தான் செய்யும் செயல்களில் ஆசீர்வதிக்கப்படுகிறான்.</verse>
				<verse number="26">யாராவது தங்களுடைய நாவை அடக்காமல், தங்களை பக்தி உள்ளவர்கள் என்று எண்ணினால், அவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தியும் பயனற்றது.</verse>
				<verse number="27">வேதனைப்படும் திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும் அவர்கள் படும் வேதனையில் பராமரிப்பதும், உலகத்தால் களங்கம் அடையாமல் தங்களைக் காத்துக்கொள்வதுமே பிதாவாகிய இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் தூய்மையான, மாசற்ற பக்தியாயிருக்கிறது.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கின்ற நீங்கள், பக்கச்சார்புள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டாம்.</verse>
				<verse number="2">உங்கள் திருச்சபையில், ஒருவன் தங்க மோதிரமும் பளபளப்பான உடை அணிந்தும், ஏழையான ஒருவன் கந்தல் உடையுடனும் வந்திருக்கும்போது,</verse>
				<verse number="3">நீங்கள் பளபளப்பான உடை அணிந்து வந்த மனிதனைப் பார்த்து, “நீங்கள் நல்ல இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்” என்றும், அந்த ஏழையைப் பார்த்து, “நீ அங்கே நில்” அல்லது “எனது காலடியில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால்,</verse>
				<verse number="4">நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு உள்ளவர்களாக தீய எண்ணத்துடன் மதிப்பிடுகின்றவர்கள் அல்லவா?</verse>
				<verse number="5">எனக்குப் பிரியமானவர்களே, கேளுங்கள். உலகத்தில் ஏழைகளாய்க் காணப்பட்டவர்களை இறைவன் விசுவாசத்தில் செல்வந்தர்களாகவும், அவரில் அன்பாயிருக்கின்றவர்களுக்கு வாக்குறுதியளித்தபடி இறையரசை சொத்துரிமையாகப் பெறுபவர்களாகவும் தெரிவு செய்யவில்லையா?</verse>
				<verse number="6">ஆனால் நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்கள் அல்லவா உங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்? அவர்கள் அல்லவா உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்கிறார்கள்?</verse>
				<verse number="7">அவர்கள் அல்லவா உங்களுக்கு அளிக்கப்பட்ட இறைவனின் சிறப்பான பெயரை நிந்திக்கிறார்கள்?</verse>
				<verse number="8">“உன்னில் அன்பாயிருப்பது போல், உன் அயலவனிலும் அன்பாயிரு” என்று வேதவசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற இந்த இறையரசின் சட்டத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்கின்றவர்களாய் இருப்பீர்கள்.</verse>
				<verse number="9">ஆனால் நீங்கள் பக்கச்சார்புள்ளவர்களாய் நடந்தால், பாவம் செய்து சட்டத்தை மீறியவர்கள் என்று நீதிச்சட்டத்தினால் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படுவீர்கள்.</verse>
				<verse number="10">ஏனெனில், யாராவது ஒருவன் நீதிச்சட்டத்தை முழுவதும் கைக்கொண்டு, ஒன்றில் மட்டும் தவறினால் அவன் முழுச் சட்டத்தையும் மீறிய குற்றவாளியாகிறான்.</verse>
				<verse number="11">“தகாத உறவுகொள்ளாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கின்றார். எனவே நீ தகாத உறவில் ஈடுபடாவிட்டாலும், கொலை செய்தால், நீ நீதிச்சட்டத்தை மீறியவன் ஆகின்றாய்.</verse>
				<verse number="12">விடுதலையின் சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் நியாயம் தீர்க்கப்படப் போகின்றபடியால் பேச்சிலும், செயலிலும் கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="13">ஏனெனில் இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பே கிடைக்கும். நியாயத்தீர்ப்பிற்கு மேலாக இரக்கமே வெற்றி பெறும்.</verse>
				<verse number="14">பிரியமானவர்களே! ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டு என்று சொல்வதோடு, அதற்கேற்ற நன்னடத்தையை கொண்டிராவிட்டால் அதனால் பயன் என்ன? அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா?</verse>
				<verse number="15">ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும், அன்றாட உணவின்றியும் இருக்கும்போது,</verse>
				<verse number="16">உங்களில் யாராவது அவர்களைப் பார்த்து, “சமாதானத்தோடு போய் வா. குளிர் காய்ந்துகொள், திருப்தியாக உணவருந்து” என்று சொல்லியும், அவரது உடலுக்குரிய தேவைகளைக் கொடுத்து உதவாமல்விட்டால், அதனால் பயன் என்ன?</verse>
				<verse number="17">இவ்விதமாய் விசுவாசம் நற்செயலுடன் சேர்ந்து இருக்காவிடின், அது மரணித்த விசுவாசமாகவே இருக்கும்.</verse>
				<verse number="18">ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கின்றது, என்னிடமோ, நற்செயல்கள் இருக்கின்றன” என்று சொல்வானாகில், அதற்கு நான், “நற்செயல் இல்லாத உன் விசுவாசத்தை எனக்கு காண்பி” என்றும், “நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய நற்செயல்களின் மூலமாய் உனக்குக் காண்பிப்பேன்” என்றும் சொல்வேன்.</verse>
				<verse number="19">ஒரே ஒரு இறைவன்தான் இருக்கின்றார் என்று நீ விசுவாசிக்கின்றாய். அது நல்லதுதான். பிசாசுகளும்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே.</verse>
				<verse number="20">மடைமையான மனிதனே! செயலற்ற விசுவாசம் பயனற்றது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ?</verse>
				<verse number="21">நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம், தன்னுடைய மகனாகிய ஈசாக்கை, பலிபீடத்தின் மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, தன்னுடைய செயலினால் அல்லவோ நீதிமான் என்று எண்ணப்பட்டார்?</verse>
				<verse number="22">ஆபிரகாமினுடைய விசுவாசமும், அவருடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவர் செய்த செயலினாலேயே அவருடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது.</verse>
				<verse number="23">இவ்விதமாய், “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தார். அந்த விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்று சொல்கின்றபடி வேதவசனம் நிறைவேறிற்று. அவர் இறைவனின் நண்பன் என அழைக்கப்பட்டார்.</verse>
				<verse number="24">எனவே, ஒருவன் விசுவாசத்தினால் மட்டுமன்றி அவன் செய்கின்ற செயலினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று காண்கின்றீர்கள்.</verse>
				<verse number="25">அவ்வாறே, ராகாப் எனப்பட்ட விலைமாது, இஸ்ரயேலரின் ஒற்றர்களை ஏற்றுக்கொண்டு, வேறு வழியாய் அவர்களை அனுப்பி வைத்த செயலினால், நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா?</verse>
				<verse number="26">உயிரற்ற உடலானது மரணித்துப் போன ஒன்று, அதைப்போலவே செயலற்ற விசுவாசமும் மரணித்த ஒன்றாக இருக்கின்றது.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">என் சகோதரரே, போதிக்கின்ற நாம் அதிக கண்டிப்புடன் தீர்க்கப்படுவோம் என்று நீங்கள் அறிந்து உங்களில் அநேகர் போதகர்கள் ஆகாதிருங்கள்.</verse>
				<verse number="2">நாம் எல்லோரும் அநேக விதங்களில் தவறிழைக்கிறோம். யாராவது ஒருவன் பேச்சுத் தவறாதவனாக இருந்தால், அவனே நிறைவான மனிதனும் தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவனுமாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="3">குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி அவைகளுடைய வாய்களில் கடிவாளம் போட்டு, அவைகளின் முழு உடலையும் கட்டுப்படுத்துகிறோம்.</verse>
				<verse number="4">கப்பல்களையும் பாருங்கள், அவை மிகப் பெரியவைகளாய் இருந்து பலத்த காற்றினாலே அடித்துச் செல்லப்பட்டாலும் கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான்.</verse>
				<verse number="5">அதேபோலவே நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருந்தாலும் பெருமளவில் பெருமை பேசுகின்றது. ஒரு சிறு நெருப்பு எவ்வளவு பெரிய காட்டையும் எரித்து விடுகிறது.</verse>
				<verse number="6">நாவும் நெருப்பாக இருக்கின்றது. நமது உடலின் அங்கங்களில் நாவு ஒரு தீமை நிறைந்த உலகம். அது ஒருவனது சரீரத்தை முழுவதுமாக சீர்கெடுத்து அவனுடைய முழு வாழ்வையும் எரித்து விடுவதோடு, நரகத்தின் நெருப்பினால் கொளுத்தப்படுகின்றதாயும் இருக்கின்றது.</verse>
				<verse number="7">எல்லாவிதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடல் வாழ் உயிரினங்களும் மனிதனால் கட்டுப்படுத்தப்பட்டன, கட்டுப்படுத்தப்படுகின்றன.</verse>
				<verse number="8">ஆனால் நாவையோ ஒருவனாலும் கட்டுப்படுத்த முடியாது. அது அடங்காத தீயதும், மரணத்தை விளைவிக்கும் நஞ்சாயும் இருக்கின்றது.</verse>
				<verse number="9">அதனாலே நமது ஆண்டவரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதனாலே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.</verse>
				<verse number="10">எனக்குப் பிரியமானவர்களே, ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகின்றன. இப்படி இருக்கக் கூடாதே.</verse>
				<verse number="11">ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா?</verse>
				<verse number="12">எனக்கு பிரியமானவர்களே, அத்தி மரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைக் கொடி அத்திப் பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல் உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதில்லை.</verse>
				<verse number="13">உங்களுக்குள்ளே ஞானமும் அறிவும் உள்ளவன் யார்? அவன் ஞானம் பிறப்பிக்கும் மனத்தாழ்மையினால் நல்ல நடத்தையினூடாக அதைக் காண்பிக்கட்டும்.</verse>
				<verse number="14">ஆனால், உங்கள் இருதயங்களில் கசப்பான வைராக்கியமும், சுயநலமான விருப்பமும் இருக்குமேயானால் அதைக் குறித்து பெருமைப்படாமலும், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசாமலும் இருங்கள்.</verse>
				<verse number="15">அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வந்ததல்ல. அது உலகத்துக்குரியதும், ஆவிக்குரிய தன்மையற்றதும், பேய்களுக்கு உரியதுமாக இருக்கின்றது.</verse>
				<verse number="16">ஏனெனில் எங்கே பொறாமையும், சுயநலமான விருப்பமும் இருக்கின்றதோ அங்கே ஒழுங்கீனமும், எல்லாவித தீய செயல்களும் இருக்கின்றன.</verse>
				<verse number="17">ஆனால் பரலோகத்திலிருந்து வருகின்ற ஞானமோ, முதலாவது தூய்மையானதாயும், பின்பு சமாதானம், தயவு, பணிவு, இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்தும், பக்கச்சார்பற்றும், போலியாக காணப்படாமலும் இருக்கின்றது.</verse>
				<verse number="18">சமாதானத்தை ஏற்படுத்துகின்றவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கின்றார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">உங்களிடையே சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏன் உண்டாகின்றன? உங்களுக்குள்ளே போரிடுகின்ற உங்கள் ஆசைகளினால் அல்லவா?</verse>
				<verse number="2">நீங்கள் விரும்பியும் பெற்றுக்கொள்ளவில்லை. அதனால் கொலை செய்கின்றீர்கள். நீங்கள் பொறாமை கொண்டும் கிடைக்கவில்லை. அதனால், வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் மன்றாடுவதில்லை. அதனால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="3">நீங்கள் கேட்டும் உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் தவறான நோக்கத்துடன் கேட்கின்றபடியால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="4">நடத்தை கெட்ட துரோகிகளே! உலகத்துடனான நட்புறவு இறைவனுக்கெதிரான பகைமை என்பதை அறியாமல் இருக்கின்றீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகின்றவன், இறைவனுக்கு பகைவனாகிறான்.</verse>
				<verse number="5">மேலும், “நம்மில் வாழும்படி இறைவன் நமக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவர், ஆழமான அக்கறையுள்ளவராக இருக்கின்றார்” என்று வேதவசனத்தில் காரணமில்லாமல் சொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?</verse>
				<verse number="6">அதனால், “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கின்றார்” என்று வேதவசனம் சொல்கின்றது.</verse>
				<verse number="7">எனவே இறைவனுக்கு அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்.</verse>
				<verse number="8">இறைவனிடம் நெருங்கி வாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரியுங்கள்.</verse>
				<verse number="9">துக்கப்பட்டு அழுது புலம்புங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாகவும், உங்கள் மகிழ்ச்சியைத் துக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="10">கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அப்போது அவர் உங்களை உயர்த்துவார்.</verse>
				<verse number="11">பிரியமானவர்களே, ஒருவரையொருவர் அவதூறாகப் பேசாதிருங்கள். யாராவது தனது சகோதரனுக்கு எதிராகப் பேசினால் அல்லது அவனைக் குற்றவாளியாகத் தீர்த்தால், அவன் இறைவனுடைய சட்டத்திற்கு எதிராய்ப் பேசுகின்றவனாகவும், இறைவனுடைய சட்டத்தையே நியாயம் தீர்க்கின்றவனாகவும் இருக்கின்றான். நீங்கள் இறைவனுடைய சட்டத்தைக் குற்றப்படுத்துகின்றபோது அதைக் கைக்கொள்கின்றவர்களாய் இல்லாமல் நியாயம் தீர்க்கின்றவர்களாய் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="12">ஒருவரே சட்டத்தைக் கொடுக்கின்றவரும், நீதிபதியுமாய் இருக்கின்றபடியால், அவரே நம்மை இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவராய் இருக்கின்றார். அப்படியிருக்க, உங்கள் அயலவனை நியாயம் தீர்க்க நீங்கள் யார்?</verse>
				<verse number="13">“இன்று அல்லது நாளை இந்தப் பட்டணத்திற்கு அல்லது அந்தப் பட்டணத்திற்கு போவோம். அங்கு ஒரு வருடம் தங்கியிருந்து, வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று சொல்லுகின்றவர்களே! கேளுங்கள்,</verse>
				<verse number="14">நாளைக்கு உங்களுக்கு என்ன நிகழும் என்று உங்களுக்குத் தெரியாதே. உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? சற்று நேரம் தோன்றி மறையும் மூடுபனி போல் நீங்கள் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="15">எனவே, “கர்த்தருக்கு விருப்பமானால், நாங்கள் உயிரோடிருந்து இதை அல்லது அதைச் செய்வோம்” என்றே நீங்கள் சொல்ல வேண்டும்.</verse>
				<verse number="16">இப்பொழுதோ நீங்கள் அகந்தைகொண்டு பெருமையாகப் பேசுகின்றீர்கள். இவ்விதம் பெருமையாக பேசுவது யாவும் தீமையானவை.</verse>
				<verse number="17">ஆகவே ஒருவன் நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் அது பாவம்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">செல்வந்தர்களே கேளுங்கள்! உங்கள் மீது வரப்போகும் துன்பங்களுக்காக அழுது புலம்புங்கள்.</verse>
				<verse number="2">உங்கள் செல்வம் அழிந்து, உங்கள் உடைகளை பூச்சிகள் அரித்தன.</verse>
				<verse number="3">நீங்கள் இந்தக் கடைசிக் காலத்தில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறீர்களே. துருப்பிடித்த உங்கள் தங்கத்திலும் வெள்ளியிலும் உள்ள துருவே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும். அது நெருப்பைப் போல் உங்கள் உடலை அரித்தொழித்து விடும்.</verse>
				<verse number="4">பாருங்கள், உங்கள் வயலை அறுத்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கத் தவறிய கூலிப்பணம் உங்களுக்கு எதிராகக் கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் அழுகைக்குரல், எல்லாம் வல்ல கர்த்தரின் காதுகளை எட்டியிருக்கிறது.</verse>
				<verse number="5">பூமியிலே நீங்கள் சொகுசாகவும் சுகபோகமாகவும் வாழ்ந்து, இறுதியில் கொல்லப்படுவதற்காகக் கொழுக்க வைக்கப்பட்ட ஒன்றைப் போல் உங்கள் இருதயங்களைக் கொழுக்கப் பண்ணினீர்கள்.</verse>
				<verse number="6">குற்றமற்ற மனிதரைக் குற்றவாளியாகத் தீர்த்து நீங்கள் கொலை செய்தீர்கள், அவர் உங்களை எதிர்க்கவில்லை.</verse>
				<verse number="7">ஆகையால் பிரியமானவர்களே! ஆண்டவருடைய வருகை வரைக்கும் பொறுமையாயிருங்கள். பாருங்கள்! பயிரிடுகின்றவன் நிலத்திலிருந்து பெருமதிப்புள்ள சிறப்பான நல்ல விளைச்சலை பெற்றுக்கொள்ள பருவத்துக்கு முந்திய மழைக்காகவும் பருவ மழைக்காகவும் பொறுமையோடு காத்திருக்கிறான்.</verse>
				<verse number="8">ஆண்டவருடைய வருகை நெருங்கிவிட்டபடியால், நீங்கள் பொறுமையோடு மனதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="9">பிரியமானவர்களே, நியாயாதிபதி வாசற்படியிலே நிற்கின்றபடியால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படாதபடி ஒருவருக்கு விரோதமாக இன்னொருவர் முறையிடாதிருங்கள்.</verse>
				<verse number="10">பிரியமானவர்களே, துன்பங்களை எதிர்கொள்ளும் பொறுமைக்கு முன்னுதாரணமாக, கர்த்தருடைய பெயரில் பேசிய இறைவாக்கினரை எடுத்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="11">நீங்கள் அறிந்திருக்கின்றபடி மனம் தளராதவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் எண்ணுகிறோமே. யோபு மனம் தளராததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டதோடு, இறுதியில் மன உருக்கமும் இரக்கமும் உள்ள கர்த்தர் அவனுக்கு வழங்கிய நல்ல முடிவையும் கண்டீர்கள்.</verse>
				<verse number="12">எனக்கு பிரியமானவர்களே, எல்லாவற்றிற்கும் மேலாக பரலோகத்தின் மேலோ, பூமியின்மீதோ அல்லது வேறு எதன்மீதோ சத்தியம் செய்ய வேண்டாம். நீங்கள் குற்றவாளிகளாய் தீர்க்கப்படாதபடி உங்கள் பேச்சு, ஆம் என்றால் “ஆம்” என்றும் இல்லை என்றால் “இல்லை” என்றும் இருக்கட்டும்.</verse>
				<verse number="13">உங்களில் யாராவது துன்பப்படுகிறீர்களா? அவர்கள் மன்றாடட்டும். யாராவது மகிழ்ச்சியாய் இருக்கின்றீர்களா? அவர்கள் துதிப் பாடல்களைப் பாடட்டும்.</verse>
				<verse number="14">உங்களில் யாராவது நோயுற்றிருக்கிறீர்களா? அவர்கள் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும். அவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி அவனுக்காக மன்றாடுவார்கள்.</verse>
				<verse number="15">விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாடல் நோயாளியைக் குணமடையச் செய்யும், கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.</verse>
				<verse number="16">ஆகவே நீங்கள், உங்களுடைய பாவங்களை ஒப்புக்கொண்டு ஒருவருக்கொருவர் அறிவித்து, நீங்கள் குணமடைவதற்காக ஒருவருக்காக ஒருவர் மன்றாடுங்கள். ஒரு நீதிமானின் மன்றாடல் வல்லமையுடையதாகவும், பயனை விளைவிக்கின்றதாகவும் இருக்கின்றது.</verse>
				<verse number="17">எலியாவும் நம்மைப் போன்ற ஒரு மனிதனே. அவன் பூமியின் மேல் மழை பெய்யக் கூடாது என்று உருக்கத்துடன் மன்றாடியபோது மூன்றரை வருடங்கள் மழை பெய்யவில்லை.</verse>
				<verse number="18">அவன் மீண்டும் மன்றாடியபோது வானம் மழையைப் பொழிந்தது, பூமி அதன் விளைச்சலைக் கொடுத்தது.</verse>
				<verse number="19">எனக்கு பிரியமானவர்களே, உங்களில் யாராவது சத்தியத்தைவிட்டு வழிவிலகிப் போகும்போது அவனை ஒருவன் நல்வழிக்கு மீட்டெடுத்துக் கொண்டுவந்தால்,</verse>
				<verse number="20">ஒரு பாவியை அவனுடைய வழியிலிருந்து திரும்பச் செய்கின்றவன், மரணத்திலிருந்து அவனது ஆத்துமாவை இரட்சித்து, ஏராளமான பாவங்களை மூடுகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.</verse>
			</chapter>
		</book>
		<book number="60">
			<chapter number="1">
				<verse number="1">இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும் இந்த உலகத்தில் அந்நியர்களாகவும் பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டும் இருக்கின்ற உங்களுக்கு எழுதுகின்றதாவது:</verse>
				<verse number="2">ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால், இயேசு கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும் அவருடைய இரத்தம் தெளிக்கப்பட்டு சுத்தமாக்கப்படவும் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கின்றீர்கள். கிருபையும், சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.</verse>
				<verse number="3">நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருக்கின்றவருக்கு துதி உண்டாவதாக! அவர் தமது மகா இரக்கத்தினாலே நமக்கு ஒரு புதிதான பிறப்பை, இயேசு கிறிஸ்துவை இறந்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்ததன் மூலமாக கொடுத்திருக்கிறார். இதனால், நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="4">அந்த நம்பிக்கையுடன் நமக்கென உரிமைச் சொத்தும் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப் போவதுமில்லை.</verse>
				<verse number="5">நீங்களோ, கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அந்த இரட்சிப்பு வரும்வரை விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள்.</verse>
				<verse number="6">இப்போது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் பொருட்டு நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருந்தாலும், இந்த இரட்சிப்பைக் குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள்.</verse>
				<verse number="7">தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தே போகின்றது. ஆனால் தங்கத்திலும் அதிக பெறுமதி வாய்ந்த உங்கள் விசுவாசம் உண்மையானது என நிரூபிக்கப்படுவதற்காகவே இந்த துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, இப்படியாக நிரூபிக்கப்பட்ட அந்த விசுவாசத்தின் காரணமாக துதி, மகிமை, மாண்பு உண்டாகவே இப்படி நேரிட்டது.</verse>
				<verse number="8">நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும் இப்போது அவரில் விசுவாசமாயிருக்கின்றீர்கள். வார்த்தைகளினால் விபரிக்க முடியாத மகிமையான மனமகிழ்ச்சியாலும் நிறைந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="9">இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.</verse>
				<verse number="10">உங்களுக்கு வரவிருந்த இந்தக் கிருபையைப் பற்றிச் சொன்ன இறைவாக்கினர்கள், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்தார்கள்.</verse>
				<verse number="11">தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்தும் அதைத் தொடர்ந்து வரப் போகின்ற மகிமையைக் குறித்தும் முன்னறிவித்தபோது, ஆவியானவர் எந்தக் காலத்தை, எந்தச் சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கின்றார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.</verse>
				<verse number="12">பிற்காலத்தில் வரவிருந்த உங்களுக்காகவே அவர்கள் ஊழியம் செய்தார்கள் என்பதும், அது தங்களுக்காக அல்ல என்பதும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள், உங்களுக்கு இப்போது கூறியவை இறைவாக்கினர்களுக்கு அப்பொழுதே வெளிப்படுத்தப்பட்டு விட்டன. இவற்றைக் காண்பதற்கு இறைதூதர்களும் பேராவலாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="13">ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்குத் தரப்படவிருக்கும் கிருபையின் மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.</verse>
				<verse number="14">நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகின்ற பிள்ளைகளாய் இருங்கள்.</verse>
				<verse number="15">உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருப்பதைப் போலவே, நீங்களும் உங்கள் எல்லா செய்கைகளிலும் பரிசுத்தமாக இருங்கள்.</verse>
				<verse number="16">ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கின்றதே.</verse>
				<verse number="17">ஒவ்வொருவருடைய செயலையும் பக்கச்சார்பு இன்றி நியாயம் தீர்க்கின்றவரை நீங்கள் பிதா என்று அழைத்து ஆராதிப்பதனால் இங்கே நீங்கள் அந்நியர்களாக வாழும் வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.</verse>
				<verse number="18">உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்து போகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை என்பதை அறிந்திருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="19">மாறாக களங்கமோ, குறைபாடோ இல்லாத செம்மறியாட்டுக் குட்டியானவராகிய கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள் என்பதையும் அறிந்திருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="20">உலகம் படைக்கப்படும் முன்பாகவே அவர் தெரிந்துகொள்ளப்பட்டவர், ஆனாலும் உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.</verse>
				<verse number="21">அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கின்றீர்கள். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படியாக இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.</verse>
				<verse number="22">நீங்கள் உங்கள் சகோதரர்களை உண்மையாக நேசிக்கும்படியாக சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து உங்கள் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்தியுள்ளீர்கள், ஆகவே ஒருவரில் ஒருவர் தூய்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.</verse>
				<verse number="23">நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் பிறப்பு அழிந்து போகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும், நிலைத்து நிற்பதுமானது.</verse>
				<verse number="24">ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களுடைய எல்லா மகிமையும் புல்வெளியின் பூக்களைப் போல் இருக்கின்றது. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,</verse>
				<verse number="25">ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது.” இந்த வார்த்தையே உங்களுக்கு நற்செய்தியாகவும் பிரசங்கிக்கப்பட்டது.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">இப்படியிருக்க அனைத்துத் தீமைகளையும், ஏமாற்றும் சுபாவத்தையும், வெளிவேடத்தையும், பொறாமையையும், எல்லாவிதமான அவதூறுப் பேச்சுக்களையும் உங்களைவிட்டு அகற்றுங்கள்.</verse>
				<verse number="2">புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல், தூய்மையான ஆவிக்குரிய பாலில் தாகமாய் இருங்கள். அப்போது அதன்மூலமாக உங்கள் இரட்சிப்பில் வளர்ச்சியடைவீர்கள்.</verse>
				<verse number="3">ஏனெனில் கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="4">இயேசுவே மனிதரால் நிராகரிக்கப்பட்ட, ஆனால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற வாழ்கின்ற கட்டடக் கல். அவரிடமே நீங்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="5">இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும் பரிசுத்த குருத்துவப் பிரிவாக உயிருள்ள கட்டடக் கற்களைப் போல ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள்.</verse>
				<verse number="6">ஏனெனில்: “பாருங்கள்! சீயோனிலே ஒரு கட்டடக் கல்லை வைக்கிறேன். அதுவே அனைத்தையும் இணைக்கின்ற, தேர்ந்தெடுக்கப்பட்டதும் விலைமதிப்பற்றதுமான பிரதான மூலைக் கல். அவரில் நம்பிக்கையாய் இருக்கின்றவன் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="7">விசுவாசிக்கின்ற உங்களுக்கு அது பெருமதிப்பிற்கு உரியது. ஆனால் விசுவாசிக்காதவர்களுக்கோ, “கட்டடம் கட்டுகின்றவர்களால் நிராகரிக்கப்பட்ட கட்டடக் கல்லே மூலைக் கல் ஆயிற்று.”</verse>
				<verse number="8">இது, “மனிதர்களை இடறச் செய்து, அவர்களை விழச் செய்கின்ற கற்பாறையாகவும் இருக்கின்றது.” அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததனாலேயே இடறுகிறார்கள். அப்படி இடறி விழுவதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டும் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="9">ஆனால் நீங்களோ, உங்களை இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் அழைத்தவரின் சிறப்பை அறிவிக்கும்படி தெரிவு செய்யப்பட்ட மக்களாகவும், இறை அரச குருத்துவப் பிரிவாகவும், பரிசுத்த இனமாகவும், இறைவனின் உரிமைச் சொத்தான சமூகமாகவும் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="10">முன்பு நீங்கள் மக்களாக இருக்கவில்லை, ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்கள். முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெறாதிருந்தீர்கள், ஆனால் இப்பொழுதோ இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.</verse>
				<verse number="11">பிரியமான நண்பர்களே! இந்த உலகத்தில் அந்நியரும், பிறநாட்டவருமாய் இருக்கின்ற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்களுக்கெதிராகப் போரிடுகின்றன.</verse>
				<verse number="12">வெளிப்படையான நன்னடத்தை உள்ளவர்களாக வாழுங்கள். அப்போது இறைவனை அறியாதவர்கள் உங்களை தீமை செய்கின்றவர்கள் என்று குற்றம் சாட்டினாலும், அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில் இறைவனை மகிமைப்படுத்துவார்கள்.</verse>
				<verse number="13">மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற எல்லா அதிகாரங்களுக்கும் கர்த்தரின் பொருட்டு பணிந்து நடவுங்கள். மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி,</verse>
				<verse number="14">அல்லது தீமை செய்கின்றவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கின்றவர்களைப் பாராட்டவும், அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள்.</verse>
				<verse number="15">ஏனெனில் நன்மை செய்வதன் மூலமாக நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்க வேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கின்றது.</verse>
				<verse number="16">சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள், ஆனால் அந்த சுதந்திரத்தை உங்கள் தீய வாழ்க்கைக்கு ஒரு மூடுதிரையாக பயன்படுத்தாதீர்கள். மாறாக இறைவனுக்கு பணி புரியும் அடிமைகளாக வாழுங்கள்.</verse>
				<verse number="17">அனைவருக்கும் உரிய மதிப்பு கொடுங்கள், விசுவாச குடும்பத்தாருடன் அன்பாய் இருங்கள், இறைவனுக்குப் பயந்திருங்கள், அரசனை மதித்து வாழுங்கள்.</verse>
				<verse number="18">அடிமைகளே! உங்கள் எஜமான்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். நல்லவர்களுக்கும் தயவுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல, கடுமையானவர்களுக்கும் அடங்கி நடவுங்கள்.</verse>
				<verse number="19">ஏனெனில் இறைவனை மனதில்கொண்டு, ஒருவர் தனக்கு அநீதியாக இழைக்கப்படும் வேதனையை சகிப்பாரானால் அது பாராட்டுக்குரியது.</verse>
				<verse number="20">ஆனால் நீங்கள் செய்த தவறுக்காக தண்டிக்கப்படுகின்றபோது அதைச் சகித்துக்கொண்டால் உங்களை பாராட்ட முடியுமா? மாறாக, நன்மை செய்து அதன் காரணமாக வேதனை அனுபவிக்கின்றபோது நீங்கள் அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியது.</verse>
				<verse number="21">இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்க வேண்டும் என்பதற்காக, கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகளை அனுபவித்து உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார்.</verse>
				<verse number="22">“அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.”</verse>
				<verse number="23">அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும் அவர் பழிவாங்கவில்லை. அவர் வேதனைகளை அனுபவித்தபோது அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கின்ற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார்.</verse>
				<verse number="24">நாம் பாவங்களுக்கு மரணித்தவர்களாக இனிமேல் நீதியின் வழியில் வாழ்வதற்காக அவர் தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின் மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள்.”</verse>
				<verse number="25">ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப் போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.” ஆனால் இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், பாதுகாவலருமாய் இருக்கின்ற கிறிஸ்துவிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">மனைவிமாரே! அவ்வாறே நீங்களும் உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்போது அவர்களில் எவராவது வேதவசனத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவராக இருந்தாலும், நீங்கள் ஒரு வார்த்தைகூட பேச அவசியமில்லாமல் உங்கள் நடத்தையினால் அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள முடியுமாக இருக்கும்.</verse>
				<verse number="2">தூய்மையும், பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும்.</verse>
				<verse number="3">தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலை உயர்ந்த உடைகளை அணிதல் ஆகிய வெளி அலங்காரத்தில் உங்கள் அழகு தங்கியிருக்கக் கூடாது.</verse>
				<verse number="4">உள்ளத்தின் அழகே, உங்களின் அழகாக இருக்க வேண்டும். சாந்தமும், அமைதியும் உள்ள ஆவியே, அழிந்து போகாத அழகைக் கொடுக்கின்றது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது.</verse>
				<verse number="5">ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய் முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அழகுபடுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் கணவரிடம் பணிவுடன் நடந்தார்கள்.</verse>
				<verse number="6">அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாக இருப்பீர்கள்.</verse>
				<verse number="7">கணவன்மாரே! அதுபோலவே நீங்கள் உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துணர்வோடு, அக்கறையாக வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாகவும், இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கின்றவர்களாகவும் இருப்பதனால் அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாடுதல்களுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.</verse>
				<verse number="8">இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒரே மனதுடையோராக இருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதர அன்பு காட்டுகின்றவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மை உள்ளவர்களாய் இருங்கள்.</verse>
				<verse number="9">தீமைக்குப் பதிலாக தீமை செய்ய வேண்டாம். அவமதிக்கப்பட்டதற்குப் பதிலாக அவமதிக்க வேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள்.</verse>
				<verse number="10">ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கின்றதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காண விரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுக்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="11">அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்ய வேண்டும். சமாதானத்தைத் தேடி, அதை நாடிச் செல்ல வேண்டும்.</verse>
				<verse number="12">ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மீது இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாடுதலை கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கின்றவர்களுக்கு எதிராய் இருக்கின்றது.”</verse>
				<verse number="13">நீங்கள் நன்மை செய்ய ஆவல் உள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வார்கள்?</verse>
				<verse number="14">ஆனால் நீங்கள் நீதியானதை செய்வதனால் துன்பம் அனுபவிக்க நேரிட்டாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனவே “அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.”</verse>
				<verse number="15">ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்று அவரை கனம் பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கின்ற ஒவ்வொருவருக்கும், பதில் சொல்வதற்கு எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள். ஆனால் தயவுடனும், மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.</verse>
				<verse number="16">நீங்கள் நல்ல மனசாட்சி உடையவர்களாயும் இருக்க வேண்டும். அப்போது கிறிஸ்துவுக்குள்ளான உங்களது நன்னடத்தையை இகழ்ந்து பேசுகின்றவர்கள் உங்களை அவதூறாகப் பேசியதற்காக வெட்கமடைவார்கள்.</verse>
				<verse number="17">தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது.</verse>
				<verse number="18">ஏனெனில், கிறிஸ்து எல்லாப் பாவங்களுக்காகவும் ஒரே முறை மரணித்தார். உங்களை இறைவனிடம் கொண்டு செல்லும்படியாக, நீதிமானான அவர் நீதியற்றவர்களுக்காக மரணித்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிரோடு எழுப்பப்பட்டார்.</verse>
				<verse number="19">அதில் அவர் சென்று, சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார்.</verse>
				<verse number="20">வெகு காலத்திற்கு முன்பு நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தபோதும் கீழ்ப்படியாதுபோன ஆவிகளே அவை. அந்தப் பேழையில் இருந்த சிலராகிய எட்டுப் பேர் மட்டுமே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள்.</verse>
				<verse number="21">அதேபோல அந்த நீரானது உங்களை இப்போது இரட்சிக்கின்றதான ஞானஸ்நானத்திற்கு ஒரு முன் அடையாளமாக இருக்கின்றது. இந்த ஞானஸ்நானம் உடலில் அழுக்கை நீக்குவதற்காக அல்ல, மாறாக இறைவனைப் பற்றிக்கொள்கின்ற தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாக இருக்கின்றது. இந்த ஞானஸ்நானமே இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே உங்களை இரட்சிக்கின்றது.</verse>
				<verse number="22">இயேசு கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலது பக்கத்தில் இருக்கின்றார். இறைதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">எனவே கிறிஸ்து தமது சரீரத்தில் துன்பத்தை அனுபவித்ததனால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், சரீரத்தில் துன்பப்படுகின்றவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்கின்றார்கள்.</verse>
				<verse number="2">அதனால் அவர்கள் பூமியிலே எஞ்சியுள்ள தமது வாழ்நாட்களிலே பாவ மனித இயல்பில் எழும் தீய ஆசைகளுக்காக வாழாமல், இறைவனுடைய விருப்பத்திற்காகவே வாழ்வார்கள்.</verse>
				<verse number="3">இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட உங்களுக்கு கடந்த காலத்தில் கிடைத்த நேரம் போதுமானதாக இருந்ததே! அக்காலத்தில் சிற்றின்ப வெறித்தனங்களிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், ஒழுக்கக்கேடான கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள்.</verse>
				<verse number="4">உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்போது தொடர்ந்தும் அதேவிதமான சீர்கேடு நிறைந்த வாழ்க்கையில் அவர்களுடன் இணைந்து மூழ்காதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக் குறித்து அவதூறாய் பேசுகிறார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் உயிர் வாழ்கின்றவர்களையும், மரணித்தவர்களையும் நியாயம் தீர்க்க ஆயத்தமாய் இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுக்க வேண்டும்.</verse>
				<verse number="6">இதன் காரணமாகவே இறந்தவர்களுக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகின்ற நியாயத்தீர்ப்பை அவர்கள் பெற்றிருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய விருப்பத்தின்படி வாழ முடியும்.</verse>
				<verse number="7">அனைத்துக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத் தெளிவு உடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள்.</verse>
				<verse number="8">எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது.</verse>
				<verse number="9">நீங்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறாமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள்.</verse>
				<verse number="10">வெவ்வேறு விதங்களில் அமைந்திருக்கின்ற இறைவனுடைய கிருபை வரங்களின் உண்மையான நிர்வாகிகளாக, நீங்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணி செய்யுங்கள்.</verse>
				<verse number="11">செய்தியைப் பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தைகளை பேசுபவனாகவே பேச வேண்டும். பணிவிடை செய்கின்றவன், இறைவன் கொடுக்கும் பலத்தின்படியே அதைச் செய்ய வேண்டும். அப்போது எல்லாக் காரியங்களிலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென்.</verse>
				<verse number="12">பிரியமானவர்களே! நீங்கள் பரீட்சிக்கப்படும்படி அனுபவிக்கும் சுட்டெரிக்கின்றதான துன்பங்களைக் குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு நடந்துவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம்.</verse>
				<verse number="13">கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்கள் எந்தளவு பங்குகொள்கின்றீர்களோ அந்தளவு சந்தோஷப்படுங்கள். அப்போது அவருடைய மகிமை வெளிப்படுகையில் நீங்கள் சந்தோஷமும் அதிக மனமகிழ்ச்சியும் அடைவீர்கள்.</verse>
				<verse number="14">கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் அவமதிக்கப்பட்டால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் இறைவனின் ஆவியானவர், அதாவது மகிமையின் ஆவியானவர் உங்களில் தங்கி வாழ்கிறாரே.</verse>
				<verse number="15">ஆனால் நீங்கள் அனுபவிக்கின்ற வேதனையானது, ஒரு கொலைகாரராக அல்லது கள்வராக அல்லது வேறு ஏதும் குற்றம் செய்தவராக அல்லது தேவையின்றி மற்றவருடைய விடயத்தில் தலையிட்டவராக இருந்ததால் வந்ததாக இருக்கக் கூடாது.</verse>
				<verse number="16">மாறாக கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால் அதைக் குறித்து வெட்கமடைய வேண்டாம். கிறிஸ்துவைப் பின்பற்றுபவன் என்ற பெயர் உடையவர்களாய் நீங்கள் இருப்பதைக் குறித்து இறைவனைத் துதியுங்கள்.</verse>
				<verse number="17">ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும். நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்!</verse>
				<verse number="18">வேதவசனத்தின்படி, “நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவதே கடினமானது என்றால், இறைபக்தியற்றவர்களதும், பாவிகளதும் முடிவு என்னவாகும்?”</verse>
				<verse number="19">ஆகவே இறைவனுடைய திட்டத்திற்கு இணங்க துன்பம் அனுபவிக்கின்றவர்கள், தங்களைப் படைத்த உண்மையுள்ளவரான இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">உங்கள் சக மூப்பராகவும் கிறிஸ்து அனுபவித்த துன்பங்களுக்கு சாட்சியாகவும், வெளிப்படப் போகும் மகிமையில் பங்குபற்றுபவராகவும் இருக்கின்ற நான், உங்கள் மத்தியில் இருக்கும் மூப்பர்களிடம் வேண்டிக்கொள்கின்றதாவது:</verse>
				<verse number="2">உங்களுடைய பராமரிப்பின் கீழ் இருக்கும் இறைவனுடைய மந்தையாகிய மக்களை மேய்ப்பவர்களாயிருந்து அவர்களைப் பராமரியுங்கள். நீங்கள் கண்காணிப்பாளர்களாகப் பணி செய்ய வேண்டியிருக்கின்றதே என்பதற்காக அல்லாமல், நீங்கள் அப்படி இருக்க வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றபடியால், மனவிருப்பத்துடன் கண்காணிப்பைச் செய்யுங்கள்; பணம் சம்பாதிக்கும் பேராசையுடன் அதைச் செய்யாமல் மனவிருப்புடன் அந்த ஊழியத்தைச் செய்யுங்கள்.</verse>
				<verse number="3">உங்களிடம் பொறுப்பளிக்கப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாய் இல்லாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள்.</verse>
				<verse number="4">அப்படி நடப்பீர்களானால், பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது ஒருபோதும் மங்கிப் போகாத மகிமையின் கிரீடத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.</verse>
				<verse number="5">இளைஞர்களே! அவ்வாறே நீங்களும் மூப்பர்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். நீங்கள் எல்லோரும் மற்றவர்களுடன் பழகும்போது மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், “பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார். ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கின்றார்.”</verse>
				<verse number="6">ஆகவே, இறைவன் உங்களை உரிய நேரத்தில் உயர்த்துவதற்காக, இறைவனுடைய வலிமை மிக்க கரத்தின் கீழே உங்களைத் தாழ்த்துங்கள்.</verse>
				<verse number="7">உங்கள் கவலைகளையெல்லாம் இறைவனிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மீது அக்கறை உள்ளவராய் இருக்கின்றார்.</verse>
				<verse number="8">தன்னடக்கம் உள்ளவர்களாயும், விழிப்புள்ளவர்களாயும் இருங்கள். உங்கள் பகைவனான பிசாசு, கர்ச்சிக்கின்ற சிங்கத்தைப் போல் யாரை இரையாக்கலாம் என்று தேடித் திரிகிறான்.</verse>
				<verse number="9">விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசை எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் உலகமெங்குமுள்ள உங்கள் சகோதர சகோதரிகளும் இதேவிதமான வேதனைகளை அடைந்து சகித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="10">எல்லாக் கிருபையையும் கொடுக்கின்ற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்படுத்தி பலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார்.</verse>
				<verse number="11">என்றென்றும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென்.</verse>
				<verse number="12">சீலாவின் உதவியுடனே நான் உங்களுக்குச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அவனை ஒரு உண்மையுள்ள சகோதரனாகவே நான் எண்ணுகிறேன். உங்களை உற்சாகப்படுத்தவும், இதுவே இறைவனின் மெய்யான கிருபை என்று உங்களுக்குச் சாட்சியாகக் கூறவும் இதை எழுதியிருக்கிறேன். எனவே, இந்தக் கிருபையில் நீங்கள் உறுதியாய் நிலைத்து நில்லுங்கள்.</verse>
				<verse number="13">உங்களுடனேகூட தெரிவு செய்யப்பட்ட புதிய பாபிலோனிலுள்ள திருச்சபையாரும், உங்களுக்கு தங்களது வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். அப்படியே என் மகன் மாற்குவும் வாழ்த்துதல்களை அனுப்புகிறான்.</verse>
				<verse number="14">ஒருவருக்கொருவர் பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துத் தெரிவியுங்கள். கிறிஸ்துவில் இருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="61">
			<chapter number="1">
				<verse number="1">இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் அப்போஸ்தலனும் ஆகிய சீமோன் பேதுரு, நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நீதியினால் எங்களைப் போன்ற விலைமதிப்பற்ற விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகின்றதாவது:</verse>
				<verse number="2">இறைவனையும், நம்முடைய ஆண்டவர் இயேசுவையும் அறிவதன் மூலமாக உங்களுக்கு கிருபையும் சமாதானமும் பெருகுவதாக.</verse>
				<verse number="3">அவர் தமது மகிமையினாலும் மேன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார். அழைத்தவரைப்பற்றி எமக்கு இருக்கும் அறிவின் மூலமாக நம்முடைய வாழ்க்கைக்கும் இறைபக்திக்கும் தேவையான எல்லாவற்றையும் அவருடைய இறைவல்லமை நமக்கு அளித்திருக்கிறது.</verse>
				<verse number="4">இப்படி எமக்கு அளிக்கப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே இறைவனுடைய அதிமேன்மையான, உயர்மதிப்புடைய வாக்குறுதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகளின் மூலமாக இந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொண்டு, தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.</verse>
				<verse number="5">இந்தக் காரணத்தினால், அதிக ஊக்கத்துடன் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பையும், நற்பண்புடன் அறிவையும்,</verse>
				<verse number="6">அறிவுடன் சுயகட்டுப்பாட்டையும், சுயகட்டுப்பாட்டுடன் விடாமுயற்சியையும், விடாமுயற்சியுடன் இறைபக்தியையும்,</verse>
				<verse number="7">இறைபக்தியுடன் சகோதர பாசத்தையும், சகோதர பாசத்துடன் அன்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="8">இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, இவை நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவும் பலனற்றவர்களாகவும் ஆகிவிடாதபடி உங்களைக் காத்துக்கொள்ளும்.</verse>
				<verse number="9">ஆனால் இந்தப் பண்புகள் இல்லாத ஒருவரோ, தனது முந்திய பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதை மறந்து போய், குறும்பார்வை குறைபாடுள்ளவராக அதாவது, அவர் பார்வையற்றவராக இருக்கின்றார்.</verse>
				<verse number="10">ஆகையால் பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும், கிருபையினால் தெரிவு செய்யப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள உறுதியாக இருங்கள். இவற்றை நீங்கள் செய்துவந்தால், ஒருபோதும் தடுக்கி வீழ்ந்துவிட மாட்டீர்கள்.</verse>
				<verse number="11">நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய அரசுக்குள் கௌரவமான வரவேற்பைப் பெற்றுக்கொள்வீர்கள்.</verse>
				<verse number="12">நீங்கள் இப்போது சத்தியத்தில் உறுதிப்பட்டவர்களாகவும், இவற்றை அறிந்தவர்களாகவும் இருக்கின்றீர்கள். ஆனாலும் நான் இவற்றை உங்களுக்கு தொடர்ந்தும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பேன்.</verse>
				<verse number="13">கூடாரமாகிய இந்த உடலில் நான் வாழும் வரை, உங்களுக்குள் அந்த நினைவை மீட்டெழுப்புவதே சரியென்று நான் எண்ணுகிறேன்.</verse>
				<verse number="14">ஏனெனில் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, விரைவாக நான் இந்தக் கூடாரத்தைவிட்டுச் செல்வேன் என்று அறிந்திருக்கிறேன்.</verse>
				<verse number="15">ஆகவே என்னுடைய மறைவுக்குப் பின்னர் நீங்கள் இவற்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்படி எல்லாவிதத்திலும் நான் முயற்சி செய்யப் போகின்றேன்.</verse>
				<verse number="16">நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்தும், அவருடைய வருகையைக் குறித்தும் நாங்கள் உங்களுக்கு அறிவித்தபோது தந்திரமாய் திட்டமிட்ட புனைகதைகளை நாங்கள் பின்பற்றாமல், அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாகவே பேசினோம்.</verse>
				<verse number="17">“இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்ற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு ஒலித்தபோது பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் மாண்பும் மகிமையும் பெற்றுக்கொண்டார்.</verse>
				<verse number="18">அவரோடு பரிசுத்த மலையில் நாங்கள் இருந்தபோது பரலோகத்திலிருந்து வந்த அந்த குரலைக் கேட்டோம்.</verse>
				<verse number="19">எங்களிடம் இன்னும் பல உறுதியான இறைவாக்குகள் உள்ளன. பொழுது புலர்ந்து உங்கள் இருதயங்களில் விடிவெள்ளி உதிக்கும் வரை இருளான இடத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தைப் போல அந்த வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தினால் நலன் பெறுவீர்கள்.</verse>
				<verse number="20">எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் ஒருவருடைய சுயமான பொருள் விளக்கம் அல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும்.</verse>
				<verse number="21">ஏனென்றால் இறைவாக்கு ஒருபோதும் மனித விருப்பத்தின்படி உண்டானது அல்ல. இறைவனுடைய மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரினால் உந்தப்பட்டு பேசினார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">முற்காலத்தில் மக்கள் மத்தியில் போலி இறைவாக்கினர்கள் இருந்தது போலவே, உங்கள் மத்தியிலே இப்போது தவறான போதனைகளை செய்பவர்கள் இருப்பார்கள். அழிவுக்குரிய பிழையான கொள்கைகளை அவர்கள் இரகசியமாய் புகுத்தி, தங்களை விலை கொடுத்து மீட்ட எல்லாம் வல்ல கர்த்தரை மறுதலித்து விரைவில் தங்கள் மீது அழிவை வருவித்துக்கொள்வார்கள்.</verse>
				<verse number="2">அநேகர் அவர்களுடைய ஒழுக்கக்கேடான நடத்தையைப் பின்பற்றுவதனால் சத்தியவழிக்கு அவதூறு ஏற்படும்.</verse>
				<verse number="3">பேராசை கொண்ட இவ்வாறான போலி போதகர்கள், புனையப்பட்ட கதைகளைச் சொல்லி உங்களிடம் தங்களுக்குச் சுயலாபம் தேடுவார்கள். அவர்களுக்குரிய தண்டனை நீண்ட காலமாகவே ஆயத்தமாயிருக்கிறது, அவர்கள்மீது வரவிருக்கும் அழிவு உறங்கிக் கொண்டிருக்கவில்லை.</verse>
				<verse number="4">பாவம் செய்த வானவர்களை இறைவன் தப்ப விடாமல் நரகத்திற்குள் தள்ளி, இருளின் சங்கிலிகளால் கட்டி, நியாயத்தீர்ப்புக்காக வைத்து,</verse>
				<verse number="5">இறைபக்தியற்ற மக்களின் மீது அவர் வெள்ளத்தை வரச் செய்தபோது, முற்காலத்தில் இருந்த உலகத்தையும் தப்பித்துக்கொள்ள விடாதவராய், நீதியைப் பிரசங்கித்த நோவாவையும் ஏழு பேர்களையும் அதிலிருந்து காப்பாற்றி,</verse>
				<verse number="6">சோதோம், கொமோரா பட்டணங்களுக்குத் தண்டனைத்தீர்ப்பு வழங்கி, அவற்றைச் சுட்டெரித்து சாம்பலாக்கினார். இறைபக்தியற்றவர்களுக்கு நிகழப்போவதை காண்பிப்பதற்காக அந்தப் பட்டணங்களை முன்னுதாரணமாக வைத்து,</verse>
				<verse number="7">அக்கிரமக்காரர்களின் நடத்தையினாலே மனமொடிந்து போன நீதிமானாயிருந்த லோத்தைக் காப்பாற்றினார்.</verse>
				<verse number="8">அந்த நீதிமான் நாளுக்குநாள் அவர்களில் தான் கண்டதும் கேட்டதுமான அநியாயச் செயல்களினாலே தன் நீதியான உள்ளத்தில் வேதனையடைந்தான்.</verse>
				<verse number="9">இறைபக்தியுள்ள மனிதரை சோதனைகளிலிருந்து காப்பாற்றவும், அநியாயக்காரர்களை நியாயத்தீர்ப்பின் தண்டனைக்கு உட்படுத்தவும் கர்த்தர் அறிந்திருக்கிறார்.</verse>
				<verse number="10">விசேடமாக பாவ மனித இயல்புக்குரிய சீர்கெட்ட ஆசையின்படி நடந்து அதிகாரத்தை அலட்சியம் செய்கின்ற இவர்கள், துணிகரமும் அகந்தையும் உள்ளவர்கள்; வானவர்களை பழித்துரைத்துப் பேசவும் பயப்படுவதில்லை.</verse>
				<verse number="11">ஆனால், இவர்களைவிட வலிமையும், அதிக வல்லமையுமுள்ள இறைதூதர்கள்கூட வானவர்களுக்கு எதிராகக் கர்த்தர் முன்னிலையில் அவதூறாக தீர்ப்பு சொன்னதில்லை.</verse>
				<verse number="12">ஆனால் இவர்களோ பிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்காகவே பிறந்திருக்கின்ற, அழிவை எதிர்நோக்கியிருக்கும் புத்தியில்லாத மிருகங்களைப் போல புரியாத விடயங்களில் அவதூறு பேசுகின்றார்கள். அழிவுக்குரிய மிருகங்களைப் போல் இவர்களும் அழிந்து போவார்கள்.</verse>
				<verse number="13">பகலின் வெளிச்சத்தில் சிற்றின்பக் களியாட்டத்தில் ஈடுபடுவதை இன்பமாக எண்ணுகின்ற இவர்கள், தங்கள் சிற்றின்பக் களியாட்டத்துக்காக உங்களுடைய விருந்துகளில் கலந்துகொள்ளும் அழுக்கும், கறையுமாயிருக்கின்றபடியால் தாங்கள் செய்த தீமைக்கேற்ற தீமையைப் பெறுவார்கள்.</verse>
				<verse number="14">இவர்கள் பாவத்தில் திருப்தி காணாத, தகாத உறவு நிறைந்த கண்களுடன் உறுதியற்றவர்களை தம்வசப்படுத்திக்கொள்ளும் பேராசையில் தேர்ச்சி பெற்ற இருதயத்தையுடைய சபிக்கப்பட்ட பிள்ளைகள் ஆவர்.</verse>
				<verse number="15">இவர்கள் நேர்வழியைவிட்டு விலகி நடந்து, அநீதியான கூலியைப் பெற ஆசைப்பட்ட பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றினார்கள்.</verse>
				<verse number="16">அவனுடைய மீறுதல் கண்டிக்கப்பட்டது. வாய் பேசாத ஒரு கழுதை மனிதக் குரலில் பேசி, அந்த இறைவாக்கினனின் புத்தியீனத்தைத் தடுத்தது.</verse>
				<verse number="17">இவர்கள் தண்ணீர் இல்லாத நீரூற்றுகளும், புயல் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பனிமூட்டங்களுமாய் இருக்கின்றார்கள். காரிருளே இவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="18">ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்பவரிடத்திலிருந்து இப்போது தப்பிப் பிழைத்து வந்த மக்களை இப்படிப்பட்டவர்கள் பெருமையான வீண் வார்த்தைகளைப் பேசி, அவர்களது உடலின் காம ஆசைகளைத் தூண்டிவிட்டு, அவர்களைத் தம் வசப்படுத்திக் கொள்கின்றார்கள்.</verse>
				<verse number="19">தாங்களே சீர்கேட்டிற்கு அடிமைகளாக இருந்துகொண்டு, இவர்கள் மற்றவர்களுக்கு விடுதலையை தருவதாக வாக்குறுதி கொடுக்கின்றார்கள். ஒருவன் எதனால் வெற்றி கொள்ளப்பட்டிருக்கின்றானோ, அதற்கே அவன் அடிமையாக இருக்கின்றான்.</verse>
				<verse number="20">நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டதன் மூலமாக உலகத்தின் சீர்கேட்டுக்குத் தப்பிய இவர்கள், மீண்டும் அதில் அகப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டால், இவர்களின் ஆரம்ப நிலைமையைவிட முடிவு மோசமாயிருக்கும்.</verse>
				<verse number="21">இவர்கள் நீதியின் வழியை அறிந்த பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளை விட்டுத் திரும்பிப் போவதைவிட நீதியின் வழியை அறியாதவர்களாகவே இருந்திருந்தால் அதிக நலமாய் இருந்திருக்கும்.</verse>
				<verse number="22">“நாய் தான் வாந்தி எடுத்ததையே மீண்டும் தேடிப் போகின்றது,” மற்றும், “நீரால் கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகின்றது” என்ற பழமொழிகள் இவர்களுக்கு உண்மையாகப் பொருந்தும்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">அன்புக்குரியவர்களே, இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். உங்கள் நினைவுகளை தூண்டி நினைவூட்டவே இந்த இரண்டு கடிதங்களையும் எழுதினேன்.</verse>
				<verse number="2">கடந்த காலத்தில் பரிசுத்த இறைவாக்கினர்களால் பேசப்பட்ட வார்த்தைகளையும், நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமானவர் உங்களுடைய அப்போஸ்தலர்கள் மூலமாய் கொடுத்த கட்டளைகளையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.</verse>
				<verse number="3">முதலாவதாக, கடைசி நாட்களில் ஏளனக்காரர்கள் வந்து ஏளனம் செய்து, தங்கள் தீய ஆசைகளின்படி நடந்துகொள்வார்கள்.</verse>
				<verse number="4">“திரும்பி வருவதாக அவர் வாக்குறுதி செய்தாரே, அது எங்கே? நம்முடைய முற்பிதாக்கள் மரணித்த காலத்திலிருந்து, படைப்பின் ஆரம்பத்தில் இருந்தது போலவேதான் எல்லாம் நடைபெறுகிறது” என்று சொல்வார்கள்.</verse>
				<verse number="5">ஆனால் அவர்கள் வெகு காலத்திற்கு முன்பே, இறைவனுடைய வார்த்தையாலே வானங்கள் உண்டாகின என்பதையும், பூமியானது தண்ணீரிலிருந்து பிரிந்தும், தண்ணீராலும் உண்டாக்கப்பட்டது என்பதையும் கவனிக்கத் தவறுகிறார்கள்.</verse>
				<verse number="6">இந்தத் தண்ணீரினாலேயே அப்போது இருந்த உலகம் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.</verse>
				<verse number="7">தற்காலத்து வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்பில் இடப்படுவதற்காகவே ஒதுக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பின் நாளில் இறைபக்தியற்றவர்கள் அழிக்கப்படும் வரைக்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.</verse>
				<verse number="8">என் அன்புக்குரியவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடங்களைப் போலவும், ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போலவும் இருக்கின்றன என்ற உண்மையை கவனிக்காமல் இருந்துவிட வேண்டாம்.</verse>
				<verse number="9">கர்த்தர் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கின்றார் என்று சிலர் சொல்கின்றபடி அவர் தாமதிக்காமல், ஒருவரும் அழிந்து போவதை விரும்பாமல் எல்லோரும் மனந்திரும்புதல் அடைய வேண்டும் என விரும்பியே உங்களைக் குறித்து பொறுமையாய் இருக்கின்றார்.</verse>
				<verse number="10">ஆனால், கர்த்தருடைய நாள் ஒரு திருடனைப் போல் வரும். வானங்கள் பேரிரைச்சலுடன் மறைந்தொழிந்து போகும், வானில் உள்ளவை எல்லாம் நெருப்பினால் எரிந்து அழிந்து போகும், பூமியும் அதில் உள்ளவை யாவும் தீக்கிரையாகும்.</verse>
				<verse number="11">இவ்விதமாக யாவும் அழியப் போவதனால், நீங்கள் எப்படிப்பட்ட மக்களாய் வாழ வேண்டியவர்கள் என சிந்தியுங்கள். நீங்கள் பரிசுத்தமும் இறைபக்தியுமுள்ளவர்களாய் வாழ்ந்து,</verse>
				<verse number="12">இறைவனுடைய நாள் விரைவாய் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள். அந்த நாளில் வானங்கள் எரிந்து அழிந்து போகும், வானில் உள்ளவை எரிந்து உருகிப் போகும்.</verse>
				<verse number="13">ஆனால் நாமோ, இறைவனுடைய வாக்குறுதியின்படி நீதி குடிகொண்டிருக்கும், புதிய வானங்களுக்காகவும், புதிய பூமிக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம்.</verse>
				<verse number="14">ஆகையால் அன்புக்குரியவர்களே, நீங்கள் இவைகளுக்காகக் காத்திருக்கின்றபடியால், அவர் முன்பாக குற்றமற்றவர்களாகவும், தவறற்றவர்களாகவும், சமாதானமுள்ளவர்களாகவும் காணப்படும்படி முயற்சி செய்யுங்கள்.</verse>
				<verse number="15">அத்தோடு, கர்த்தருடைய பொறுமை நமக்கு மீட்பு என்பதாக எண்ணுங்கள். அன்புச் சகோதரன் பவுலும், இறைவன் அவனுக்குக் கொடுத்த ஞானத்தின்படியே இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறான்.</verse>
				<verse number="16">அவன் தன்னுடைய எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக் குறித்து சொல்லியிருக்கின்றான். அதில் புரிந்துகொள்ள கடினமான சில காரியங்களும் அடங்கியிருக்கின்றன. அதனால் அறிவில்லாதவர்களும் உறுதியற்றவர்களும், மற்ற வேதவசனங்களுக்கு தவறான விளக்கமளிப்பது போல் இவற்றுக்கும் விளக்கமளித்து தங்களுக்கு அழிவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.</verse>
				<verse number="17">ஆகையால் என் அன்புக்குரிய நண்பர்களே! இதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கின்றபடியால், சட்டத்தை மீறுகின்றவர்களின் தவறுகளினால் வழிவிலகிப் போய், உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழாதபடி கவனமாயிருங்கள்.</verse>
				<verse number="18">நம்முடைய ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிகின்ற அறிவிலும், கிருபையிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இப்போதும், எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="62">
			<chapter number="1">
				<verse number="1">ஆரம்பத்தில் இருந்த வாழ்வு தரும் வார்த்தையை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களால் கண்டோம், உற்றுப் பார்த்தோம், எங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தோம்,</verse>
				<verse number="2">அந்த வாழ்வு வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கண்டு, அதைக் குறித்து சாட்சியளித்து, பிதாவோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்பட்டதுமான அந்த நித்திய வாழ்வை உங்களுக்கு அறிவிக்கிறோம்.</verse>
				<verse number="3">எங்களுடைய ஐக்கியம், பிதாவோடும் அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கின்றபடியால், நீங்களும் எங்களுடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம்.</verse>
				<verse number="4">அத்தோடு நமது மனமகிழ்ச்சி முழுநிறைவடையும்படி இவைகளை எழுதுகின்றோம்.</verse>
				<verse number="5">இறைவன் ஒளியாய் இருக்கின்றார். அவரில் சிறிதேனும் இருள் இல்லை என்பதே நாங்கள் அவரிடமிருந்து கேட்டதும், உங்களுக்கு அறிவிக்கின்ற செய்தியுமாயிருக்கிறது.</verse>
				<verse number="6">எனவே நாம் இறைவனுடன் ஐக்கியமாய் இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு இருளிலே நடந்தால், உண்மையின்படி வாழ்கின்றவர்களாக இராமல் பொய் சொல்கின்றவர்களாக இருப்போம்.</verse>
				<verse number="7">ஆனால், இறைவன் ஒளியில் இருப்பதைப் போல, நாமும் ஒளியிலே நடந்தால் நம்மிடையே ஐக்கியம் இருக்கும். இறைவனின் மகனாகிய இயேசுவின் இரத்தம் பாவம் அனைத்திலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கும்.</verse>
				<verse number="8">நாம் பாவமற்றவர்கள் என்று சொல்வோமேயானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நமக்குள் உண்மை இல்லை.</verse>
				<verse number="9">நம்முடைய பாவங்களை நாம் ஏற்றுக்கொண்டு இறைவனிடம் அறிக்கையிட்டால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவரும் நீதியுள்ளவருமாக இருக்கின்றார்.</verse>
				<verse number="10">நாம் பாவம் செய்யவில்லை என்று சொல்வோமேயானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறோம். அவருடைய வார்த்தை நமக்குள் இல்லை.</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்கும்படி இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். யாராவது பாவம் செய்தால், நீதியுள்ளவரான இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகின்றவராக இருக்கின்றார்.</verse>
				<verse number="2">நம்முடைய பாவங்களுக்காக மட்டுமல்ல, முழு உலகத்தினதும் பாவங்களுக்கான பாவநிவாரண பலி அவரே.</verse>
				<verse number="3">அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம்.</verse>
				<verse number="4">“இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று ஒருவன் சொல்லியும், இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் பொய்யன். சத்தியம் அவனுக்குள் இல்லை.</verse>
				<verse number="5">ஆனால் யாராவது அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு அவனில் உண்மையிலேயே நிறைவு பெறுகிறது. இவ்விதமாக நாம் இறைவனில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொள்கின்றோம்.</verse>
				<verse number="6">ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால் இயேசுவைப் போலவே தானும் நடக்க வேண்டும்.</verse>
				<verse number="7">அன்பானவர்களே, நான் உங்களுக்கு புதிய கட்டளையை அன்றி உங்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த பழைய கட்டளையையே எழுதுகிறேன். நீங்கள் ஏற்கெனவே கேட்ட உண்மை வார்த்தையே அந்தக் கட்டளை.</verse>
				<verse number="8">அதேநேரம், ஒரு புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன். இருள் அகன்று போகின்றது, மெய்யான ஒளி பிரகாசிக்கிறது, அது அவரிலும் உங்களிலும் காணப்படும் உண்மையாயிருக்கிறது.</verse>
				<verse number="9">ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில் இருக்கின்றான்.</verse>
				<verse number="10">தன் சகோதரனை நேசிக்கின்ற ஒருவனோ ஒளியில் இருக்கின்றான். மற்றவரை தடுக்கி விழச் செய்யும் எதுவும் அவனிடம் இல்லை.</verse>
				<verse number="11">ஆனால் தன் சகோதரனை வெறுக்கின்றவன் எவனோ, அவன் இருளுக்குள் இருந்து, இருளிலே நடக்கின்றான். இருள் அவனது கண்களை குருடாக்கியபடியால், தான் போகுமிடத்தை அறியாதிருக்கிறான்.</verse>
				<verse number="12">அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் பொருட்டு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.</verse>
				<verse number="13">தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கின்றவரை நீங்கள் அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, தீயவனை நீங்கள் வெற்றி கொண்டிருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.</verse>
				<verse number="14">அன்பான பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கின்றவரை நீங்கள் அறிந்திருக்கின்றபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும், இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருப்பதாலும், நீங்கள் தீயவனை வெற்றிகொண்டிருப்பதாலும், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.</verse>
				<verse number="15">உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்பு செலுத்த வேண்டாம். யாராவது உலகத்தில் அன்பு செலுத்தினால், அவனில் பிதாவின் அன்பு இல்லை.</verse>
				<verse number="16">ஏனெனில் உலகத்தில் உள்ளவைகளான மனித இயல்பின் ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய அனைத்தும் பிதாவிடமிருந்து வருவதில்லை, உலகத்திலிருந்தே வருகின்றன.</verse>
				<verse number="17">உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் மறைந்து போகின்றன. ஆனால் இறைவனுடைய விருப்பத்தைச் செய்கின்றவனோ என்றென்றும் வாழ்வான்.</verse>
				<verse number="18">அன்பான பிள்ளைகளே, இது கடைசி மணிநேரமாய் இருக்கின்றது. போலி கிறிஸ்து வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றபடி, போலி கிறிஸ்துக்கள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனால் இதுவே கடைசி மணி நேரம் என்று நாம் அறிந்துகொள்கின்றோம்.</verse>
				<verse number="19">நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால், அவர்கள் நம்முடையவர்கள் அல்ல. அவர்கள் நம்முடையவர்களாய் இருந்திருந்தால் நம்மோடு இருந்திருப்பார்கள். அவர்கள் பிரிந்து சென்றமை அவர்களில் எவருமே நம்முடையவர்கள் அல்ல என்பதைக் காண்பித்துவிட்டது.</verse>
				<verse number="20">ஆனால் நீங்கள் எல்லோரும் பரிசுத்தமானவரிடமிருந்து அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டவர்களாகவும் உண்மையை அறிந்துகொண்டவர்களாகவும் இருக்கின்றீர்கள்.</verse>
				<verse number="21">உங்களுக்கு உண்மை தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் அதை அறிந்திருப்பதனாலும், எந்தவொரு பொய்யும் உண்மையிலிருந்து வருவதில்லை என்பதாலுமே இதை நான் எழுதுகின்றேன்.</verse>
				<verse number="22">இயேசுவே, மனிதனாக வந்த கிறிஸ்து என்பதை மறுதலிப்பவனே அல்லாமல், வேறு யார் பொய்யன்? பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கின்றவனே போலி கிறிஸ்துவாயிருக்கிறான்.</verse>
				<verse number="23">மகனை மறுதலிக்கின்ற எவனும் பிதாவினுடையவன் அல்ல, மகனை அறிக்கையிடுகின்றவன் எவனோ அவனுடன் பிதா இருக்கின்றார்.</verse>
				<verse number="24">எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை உங்களில் நிலைத்திருக்கட்டும். அப்படியிருந்தால், நீங்கள் கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.</verse>
				<verse number="25">அவர் நமக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கின்ற நித்திய வாழ்வு இதுவே.</verse>
				<verse number="26">உங்களை ஏமாற்றி வழிவிலகப் பண்ணுகின்றவர்களை மனதிற்கொண்டே இவற்றை உங்களுக்கு எழுதுகிறேன்.</verse>
				<verse number="27">நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கின்றபடியால் யாரும் உங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியம் இல்லை; அந்த அபிஷேகம் உங்களுக்கு எல்லாவற்றையும் போதிக்கிறது. அது உண்மையாயிருக்கிறது, போலியானது அல்ல. அது உங்களுக்கு போதித்தபடியே அவரில் நிலைத்திருங்கள்.</verse>
				<verse number="28">இப்போதும் அன்பான பிள்ளைகளே, மீண்டும் அவர் தமது வருகையில் தோன்றும்போது நாம் மனவுறுதியுடனும் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கும்படி அவரில் நீங்கள் நிலைத்திருங்கள்.</verse>
				<verse number="29">இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கின்ற ஒவ்வொருவனும் அவரால் பிறந்திருக்கின்றான் என்பதை அறிவீர்கள்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">நாம் இறைவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுவதற்காக, பிதா நம்மீது வைத்த பேரன்பு எவ்வளவு பெரியது என்று பாருங்கள். அப்படியே நாம் அவரின் பிள்ளைகளாயிருக்கிறோம். உலகம் அவரை அறியாதிருப்பதால் நம்மையும் அறியாதிருக்கிறது.</verse>
				<verse number="2">அன்பானவர்களே, இப்போது நாம் இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கின்றோம். இனிமேல் எப்படி இருப்போம் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் வெளிப்படும்போது நாம் அவரைப் போலவே இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில், அவர் இருக்கின்றபடியே நாம் அவரைக் காண்போம்.</verse>
				<verse number="3">அவரில் இவ்விதமான நம்பிக்கையுடைய ஒவ்வொருவனும், கிறிஸ்து தூய்மையாய் இருப்பது போலவே தன்னையும் தூய்மையாக்கிக்கொள்கின்றான்.</verse>
				<verse number="4">பாவம் செய்கின்ற எவரும் நீதிச்சட்டத்தை மீறுகிறார்கள். நீதிச்சட்டத்தை மீறுவதே பாவம்.</verse>
				<verse number="5">ஆனால், நம்முடைய பாவங்களை நீக்கும்படி கிறிஸ்து வந்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவரிலோ, ஒரு பாவமும் இல்லை.</verse>
				<verse number="6">ஆகவே கிறிஸ்துவில் வாழ்பவன் தொடர்ந்து பாவம் செய்வதில்லை. தொடர்ந்து பாவம் செய்கின்ற எவனும் கிறிஸ்துவைக் கண்டதும் இல்லை, அவரை அறிந்ததும் இல்லை.</verse>
				<verse number="7">அன்பான பிள்ளைகளே, ஒருவரும் உங்களை ஏமாற்றி வழிவிலகச் செய்வதற்கு இடங்கொடுக்க வேண்டாம். நீதியானதைச் செய்கின்றவன், கிறிஸ்து நீதியுள்ளவராய் இருப்பதைப் போல அவனும் நீதியுள்ளவனாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="8">ஆனால் பாவம் செய்கின்றவனோ, பிசாசுக்குரியவனாக இருக்கின்றான். ஏனெனில், பிசாசு ஆரம்பத்திலிருந்தே பாவம் செய்கின்றான். பிசாசின் செய்கைகளை அழிக்கவே இறைவனின் மகன் தோன்றினார்.</verse>
				<verse number="9">இறைவனால் பிறந்த எவனும், தொடர்ச்சியாக பாவம் செய்ய மாட்டான். ஏனெனில் இறைவனுடைய வித்து அவனுக்குள் இருக்கின்றது. அவன் இறைவனால் பிறந்திருப்பதனால் தொடர்ச்சியாக பாவம் செய்ய முடியாது.</verse>
				<verse number="10">இவ்விதமாக, இறைவனுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் அறிந்துகொள்கின்றோம். நீதியைச் செய்யாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல; தமது சகோதரனில் அன்பு செலுத்தாத எவரும் இறைவனுடைய பிள்ளைகள் அல்ல.</verse>
				<verse number="11">நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தியாய் இருக்கின்றது.</verse>
				<verse number="12">காயீனைப் போல் இருக்க வேண்டாம். அவன் தீயவனுக்குரியவனாயிருந்து தன் சகோதரனைக் கொலை செய்தான். அவன் ஏன் தன் சகோதரனைக் கொலை செய்தான்? ஏனெனில் தனது செயல்கள் தீமையாய் இருந்தபடியினாலும், தனது சகோதரனுடைய செயல்கள் நீதியாய் இருந்தபடியினாலுமே அவன் அப்படிச் செய்தான்.</verse>
				<verse number="13">எனக்கு பிரியமானவர்களே, உலகம் உங்களை வெறுத்தால், அதைக் குறித்து நீங்கள் வியப்படையாதீர்கள்.</verse>
				<verse number="14">நாம் சகோதரரில் அன்பாயிருக்கின்றபடியால், மரணத்தைக் கடந்து வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். அன்பில்லாதோர் எவருமே மரணத்தில்தான் நிலைத்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="15">தனது சகோதரனையோ சகோதரியையோ வெறுக்கின்ற எவனும் கொலைகாரனாய் இருக்கின்றான். அவனுக்குள் நித்திய வாழ்வு இல்லை என்பதை அறிந்திருக்கிறீர்கள்.</verse>
				<verse number="16">அன்பு என்ன என்பதை, இயேசு கிறிஸ்து தமது உயிரை நமக்காகக் கொடுத்ததனால் நாம் அறிந்திருக்கிறோம். நாமும் நமது சகோதர உறவுகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.</verse>
				<verse number="17">வசதி படைத்த ஒருவன், தனது சகோதர உறவுகள் தேவையோடு இருப்பதைக் கண்டும், அவன் தனது இருதயத்தை அவர்களுக்காக திறக்காது போனால், இறைவனின் அன்பு அவனில் நிலைகொள்வது எப்படி?</verse>
				<verse number="18">அன்பான பிள்ளைகளே, வெறும் வார்த்தையினாலும் பேச்சினாலும் மட்டுமல்லாமல், நமது செயலினாலும் உண்மையினாலும் அன்பு காட்டுவோமாக.</verse>
				<verse number="19">இப்படியாக நாம் உண்மைக்கு உரியவர்கள் என்று அறிந்து, இறைவன் முன்னிலையில் எமது இருதயங்களை நிலைப்படுத்திக்கொள்ளலாம்.</verse>
				<verse number="20">ஏனெனில், நம்முடைய இருதயங்களே நம்மைக் குற்றவாளியாக தீர்க்கும்போதெல்லாம், இறைவன் நமது இருதயத்தைப் பார்க்கிலும் பெரியவராயிருந்து எல்லாவற்றையும் அறிவார்.</verse>
				<verse number="21">அன்பானவர்களே, நம்முடைய இருதயங்கள் நம்மைக் குற்றவாளிகளாய் தீர்க்காதிருந்தால் நாம் இறைவனுக்கு முன்பாக தைரியம் கொண்டிருந்து,</verse>
				<verse number="22">அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்றதனாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கின்றதனாலும் நாம் கேட்கின்ற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.</verse>
				<verse number="23">தமது மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதும், அவர் கட்டளையிட்டபடி ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்பதுமே அவருடைய கட்டளையாயிருக்கின்றது.</verse>
				<verse number="24">இறைவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றவர்கள் அவரில் நிலைத்திருக்கிறார்கள். அவரும் அவர்களில் நிலைத்திருக்கிறார். இவ்விதமாக இறைவன் நமக்குள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்குத் தந்த பரிசுத்த ஆவியானவரின் மூலமாக அறிந்திருக்கிறோம்.</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">அன்பானவர்களே, பல போலி இறைவாக்கினர்கள் உலகமெங்கும் பரவியிருக்கின்றபடியால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் இறைவனிடம் இருந்து வந்தனவா என்று அவைகளைச் சோதித்துப் பாருங்கள்.</verse>
				<verse number="2">இறைவனுடைய ஆவியை நீங்கள் இவ்விதமாக அறிந்துகொள்ள முடியும்: மனித உடலில் வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொரு ஆவியும், இறைவனிடமிருந்து வந்திருக்கிறது.</verse>
				<verse number="3">மனித உடலில் வந்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு ஆவியும் இறைவனிடமிருந்து வரவில்லை. இப்படியாக வரும் என்று நீங்கள் கேள்விப்பட்ட போலி கிறிஸ்துவின் ஆவி இதுவே, அது இப்பொழுதே உலகத்தில் இருக்கின்றது.</verse>
				<verse number="4">அன்பான பிள்ளைகளே, உலகத்தில் இருக்கின்றவனைவிட உங்களில் இருக்கின்றவர் பெரியவராய் இருக்கின்றார். அதனால், இறைவனுக்கு உரியவர்களாகிய நீங்கள் அந்த போலி இறைவாக்கினர்களை வெற்றி கொண்டீர்கள்.</verse>
				<verse number="5">அவர்கள் உலகத்திற்கு உரியவர்கள். ஆகவே அவர்கள் உலக நோக்கத்தின்படி பேசுகின்றார்கள். உலகமும் அவர்கள் சொல்வதைக் கேட்கின்றது.</verse>
				<verse number="6">நாம் இறைவனுக்கு உரியவர்கள். இறைவனை அறிந்தவர்கள் நாம் சொல்வதைக் கேட்கின்றார்கள். இறைவனை அறியாதவர்கள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை. இவ்விதமாக, சத்திய ஆவியையும் தவறான ஆவியையும் நாம் அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="7">அன்பானவர்களே, நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருப்போமாக. ஏனெனில் அன்பு இறைவனிடமிருந்து வருகின்றது. அன்பாயிருக்கின்ற ஒவ்வொருவரும் இறைவனால் பிறந்து, இறைவனை அறிந்திருக்கிறார்கள்.</verse>
				<verse number="8">அன்பில்லாதோர் இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் அன்பாகவே இருக்கின்றார்.</verse>
				<verse number="9">நாம் அவர் மூலமாக வாழ்வடையும்படி அவரது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பியதால், அவர் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.</verse>
				<verse number="10">நாம் இறைவனை அன்பு செய்தோம் என்பதல்ல, அவர் நம்மில் அன்பு காட்டி, நம்முடைய பாவநிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பியதே அன்பு.</verse>
				<verse number="11">அன்பானவர்களே, இறைவன் நம்மீது இந்தளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருக்கக் கடமைப்பட்டவர்கள்.</verse>
				<verse number="12">ஒருவரும் ஒருபோதும் இறைவனைக் கண்டதில்லை. நாம் ஒருவர் மீது ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நமக்குள் நிலைகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகின்றது.</verse>
				<verse number="13">அவர் தமது ஆவியை நமக்குக் கொடுத்திருக்கின்றதனால் நாம் அவரில் வாழ்கின்றோம் என்றும், அவர் நம்மில் வாழ்கின்றார் என்றும் நாம் அறிந்திருக்கின்றோம்.</verse>
				<verse number="14">பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதைக் கண்டு அதற்கு நாம் சாட்சி அளிக்கின்றோம்.</verse>
				<verse number="15">யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால் இறைவன் அவனில் வாழ்கிறார், அவனும் இறைவனில் வாழ்கின்றான்.</verse>
				<verse number="16">இவ்விதமாய், இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் அறிந்திருக்கிறோம், அதை நம்புகின்றோம். இறைவன் அன்பாகவே இருக்கின்றார். அன்பில் வாழ்கின்றவன், இறைவனில் வாழ்கின்றான், இறைவனும் அவனில் வாழ்கின்றார்.</verse>
				<verse number="17">இவ்விதமாய், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப்போல இருக்கின்றபடியால், நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியாயிருக்கும்படி, அன்பு நமக்குள் முழுநிறைவடைகிறது.</verse>
				<verse number="18">அன்பில் பயமில்லை. முழுநிறைவான அன்பு பயத்தை வெளியேற்றும். தண்டனைத்தீர்ப்பை குறித்தே பயமுண்டாகும். எனவே பயப்படுகின்றவன் அன்பில் முழுநிறைவானவன் அல்ல.</verse>
				<verse number="19">அவர் முதலில் அன்பாய் இருந்ததனாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம்.</verse>
				<verse number="20">“நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகின்ற ஒருவன் தனது சகோதரனை வெறுத்தால் அவன் பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவன், காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது.</verse>
				<verse number="21">இதனால், இறைவனிடத்தில் அன்பாயிருக்கின்றவன் தன் சகோதரரிடத்திலும் அன்பாயிருக்க வேண்டும் என்ற கட்டளையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">இயேசுவே மனிதனாக வந்த கிறிஸ்து என்று விசுவாசிக்கின்ற ஒவ்வொருவனும் இறைவனால் பிறந்திருக்கிறான். பிதாவில் அன்பாயிருக்கின்ற ஒவ்வொருவனும், பிதாவின் பிள்ளைகளிலும் அன்பாயிருக்கிறான்.</verse>
				<verse number="2">இறைவனில் நாம் அன்பாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதில் இருந்தே இறைவனுடைய பிள்ளைகளில் நாம் அன்பு கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும்.</verse>
				<verse number="3">இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அவரிடத்தில் அன்பாயிருப்பதாகும், அவருடைய கட்டளைகள் சுமையானவை அல்ல.</verse>
				<verse number="4">இறைவனால் பிறந்த அனைவரும் உலகத்தை வெற்றிகொள்வார்கள். நமது விசுவாசமே உலகத்தை வெற்றிகொள்ளும்.</verse>
				<verse number="5">இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கின்றவர்களே அல்லாமல் உலகத்தை வெற்றிகொள்கின்றவர்கள் யாராக இருக்க முடியும்?</verse>
				<verse number="6">இயேசு கிறிஸ்துவே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். தண்ணீரினால் மட்டுமல்ல, அவர் தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். இதைக் குறித்து ஆவியானவரும் சாட்சி கொடுக்கின்றார். ஏனெனில், ஆவியானவர் உண்மையுள்ளவர்.</verse>
				<verse number="7">ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று:</verse>
				<verse number="8">ஆவியானவர், தண்ணீர், இரத்தம்; இந்த மூன்று சாட்சிகளும் ஒருமைப்பட்டிருக்கின்றன.</verse>
				<verse number="9">நாம் மனிதனின் சாட்சியை ஏற்றுக்கொள்கின்றோமே, அப்படியானால் இறைவனே தமது மகனைக் குறித்து சாட்சி கொடுக்கின்றபடியால், இறைவனுடைய சாட்சி அதிலும் மேலானது அல்லவா!</verse>
				<verse number="10">இறைவனின் மகனாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கின்றவர்கள் இந்த சாட்சியை ஏற்றுக்கொள்கின்றார்கள். இறைவனை விசுவாசிக்காதவர்கள் யாரோ அவர்கள் இறைவனைப் பொய்யராக்கி இருக்கின்றார்கள். ஏனெனில் இறைவன் தமது மகனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை அவர்கள் நம்பவில்லை.</verse>
				<verse number="11">இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கின்றது என்பதே அந்தச் சாட்சி.</verse>
				<verse number="12">இறைவனுடைய மகனைக் கொண்டிருப்பவர்கள் வாழ்வு பெற்றவர்கள். இறைவனுடைய மகனைக் கொண்டிராதவர்கள் வாழ்வு இல்லாதவர்கள்.</verse>
				<verse number="13">இறைவனுடைய மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கின்றவர்களே! நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கின்றீர்கள் என்று அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.</verse>
				<verse number="14">நாம் அவருடைய விருப்பத்திற்கு இணங்க அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாடுதலைக் கேட்கின்றார் என்பதே இறைவனுக்கு முன்பாக நமக்குள்ள மனவுறுதியாய் இருக்கின்றது.</verse>
				<verse number="15">நாம் எதைக் கேட்டாலும் அவர் காதுகொடுத்து கேட்கின்றார் என்பதை நாம் அறிந்திருந்தால், நாம் கேட்டதை பெற்றுக்கொள்கின்றோம் என்றும் அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="16">மரணத்துக்கு இட்டுச் செல்லாத ஒரு பாவத்தை சக விசுவாசியொருவர் செய்வதை ஒருவர் கண்டு, அவருக்காக இவர் மன்றாடினால் இறைவன் அவருக்கு வாழ்வைக் கொடுப்பார். இது மரணத்துக்கு இட்டுச் செல்லாத பாவத்தைச் செய்தவருக்கேயாகும். மரணத்துக்கு இட்டுச் செல்லும் பாவமும் உண்டு. அதற்காக நீங்கள் மன்றாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை.</verse>
				<verse number="17">எல்லா அநீதியும் பாவமே. ஆனாலும் மரணத்துக்கு இட்டுச் செல்லாத பாவமும் உண்டு.</verse>
				<verse number="18">இறைவனால் பிறந்த யாரும் பாவத்தில் நிலைத்திருப்பதில்லை என்று நாம் அறிவோம். ஏனெனில் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர், அவர்களை காக்கிறார். தீயவனால் அவர்களைத் தொட முடியாது.</verse>
				<verse number="19">நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்றும், நம்மைச் சுற்றியிருக்கின்ற முழு உலகமும் தீயவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்றும் நாம் அறிந்திருக்கிறோம்.</verse>
				<verse number="20">நாம் மெய்யானவரை அறிந்துகொள்ளும்படி, இறைவனுடைய மகனின் வருகை நமக்கு புரிந்துணர்வைக் கொடுத்திருக்கிறது. அதனால், மெய்யானவரை அறிந்து மெய்யானவருக்குள் இருக்கின்றோம். இவரே மெய்யான இறைவனும், நித்திய வாழ்வுமாய் இருக்கின்றார்.</verse>
				<verse number="21">அன்பான பிள்ளைகளே, விக்கிரகங்களிலிருந்து உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுங்கள்.</verse>
			</chapter>
		</book>
		<book number="63">
			<chapter number="1">
				<verse number="1">மூப்பராகிய நான், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மதிப்புக்குரிய அம்மையார் அவர்களுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் எழுதுகின்றதாவது, சத்தியத்தின் பொருட்டு நான் உங்களில் அன்பாயிருக்கின்றேன். நான் மட்டுமல்ல, இறைவனின் சத்தியத்தை அறிந்த அனைவருமே உங்களில் அன்பாயிருக்கின்றார்கள்.</verse>
				<verse number="2">நம்மில் நிலைபெற்று, என்றென்றும் நம்மோடு நிலைத்திருக்கும் சத்தியத்தின் பொருட்டு:</verse>
				<verse number="3">பிதாவாகிய இறைவனிடமிருந்தும், பிதாவின் மகனாகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் வருகின்ற கிருபையும் இரக்கமும் சமாதானமும், நம் அனைவரோடும் சத்தியத்துடனும் அன்புடனும் இருப்பதாக.</verse>
				<verse number="4">பிதா நமக்குக் கட்டளையிட்டபடி, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்தியத்தின்படி நடப்பதைக் காண்பது எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.</verse>
				<verse number="5">இப்போதும் அன்பான அம்மையாரே! நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதாமல், நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நமக்கிருந்த கட்டளையையே எழுதுகிறேன்.</verse>
				<verse number="6">நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அன்பாகும். நீங்கள் ஆரம்பத்திலிருந்து கேள்விப்பட்டிருக்கின்றபடி இந்த அன்பிலே நாம் நடக்க வேண்டும் என்பதே அவருடைய கட்டளையாகும்.</verse>
				<verse number="7">ஏனெனில் இயேசு கிறிஸ்து மனித உடலெடுத்து வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாத பல ஏமாற்றுக்காரர்கள் உலகமெங்கும் சென்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எவனும் ஏமாற்றுக்காரனாகவும் போலி கிறிஸ்துவுமாக இருக்கின்றான்.</verse>
				<verse number="8">ஆகவே உங்கள் உழைப்பின் பலனை நீங்கள் இழந்து போகாமல், அதற்கான வெகுமதியை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும்படி விழிப்பாக இருங்கள்.</verse>
				<verse number="9">கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல், எல்லைமீறிச் செல்கின்ற எவனும் இறைவனை உடையவன் அல்ல. போதனையில் நிலைத்திருக்கின்றவனே பிதாவையும் மகனையும் உடையவனாயிருக்கிறான்.</verse>
				<verse number="10">உங்களிடம் வருகின்ற எவனாயினும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளவோ வரவேற்கவோ வேண்டாம்.</verse>
				<verse number="11">ஏனெனில், அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்கின்ற எவனும், அவனுடைய தீய செயலுக்குப் பங்களிப்பு செய்கின்றான்.</verse>
				<verse number="12">உங்களுக்கு எழுத வேண்டிய விடயங்கள் அநேகம் உள்ளன. அதற்காக நான் மையையும் காகிதத்தையும் பயன்படுத்த விரும்பவில்லை. நான் உங்களை நேருக்கு நேராக சந்தித்து பேசவே விரும்புகிறேன். அப்போது நமது மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்.</verse>
				<verse number="13">தெரிவு செய்யப்பட்ட உங்கள் சகோதரியின் பிள்ளைகளும், தங்களுடைய வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.</verse>
			</chapter>
		</book>
		<book number="64">
			<chapter number="1">
				<verse number="1">மூப்பராகிய நான், சத்தியத்தின்படி நான் நேசிக்கின்ற, என் அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுகின்றதாவது:</verse>
				<verse number="2">பிரியமானவனே! உன் ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பது போல், நீ உன் உடல் நலத்திலும், மற்றெல்லாவற்றிலும் ஆரோக்கியமாய் இருக்கும்படி நான் உனக்காக மன்றாடுகிறேன்.</verse>
				<verse number="3">சில சகோதரர்கள் வந்து, நீ சத்தியத்துக்கு உண்மையாயிருப்பதையும், அதன்படி தொடர்ந்து நடப்பதையும் சாட்சியாக சொன்னபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.</verse>
				<verse number="4">எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கின்றார்கள் என்று கேள்விப்படுவதைவிட, பெரிதான மனமகிழ்ச்சி எனக்கு இல்லை.</verse>
				<verse number="5">அன்பான நண்பனே, உன்னிடம் வருகின்ற சகோதரர்கள் உனக்கு அறிமுகம் அற்றவர்களாக இருந்தும், நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருக்கின்றாய்.</verse>
				<verse number="6">அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்து, திருச்சபைக்குச் சாட்சி சொல்லி இருக்கின்றார்கள். நீ இறைவனுக்கு ஏற்றவிதத்தில் அவர்களை வழியனுப்பி வைப்பாயாக.</verse>
				<verse number="7">ஏனெனில் அவர்கள் அவிசுவாசிகளிடமிருந்து எவ்வித உதவியையும் பெற்றுக்கொள்ளாமல், கிறிஸ்துவின் பெயருக்காக புறப்பட்டுச் சென்றார்கள்.</verse>
				<verse number="8">எனவே நாம் சத்தியத்துக்காக பங்களிப்புடன் பணியாற்றும்படி, அப்படிப்பட்டவர்களை உபசரிக்க கடமைப்பட்டவர்களாய் இருக்கின்றோம்.</verse>
				<verse number="9">இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் தியோத்திரேப்பு, தான் முதல்வனாயிருக்க விரும்பியதால் எங்கள் அதிகாரத்தை ஏற்கவில்லை.</verse>
				<verse number="10">எனவே, நான் அங்கு வரும்போது அவன் செய்வதைக் குறித்து எடுத்துச் சொல்வேன், அவன் எங்களைப்பற்றி அவதூறாய்ப் பேசித் திரிகிறான். அத்துடன் அவன் திருப்தியடையாமல், மற்ற சகோதரர்களை வரவேற்கவும் மறுக்கின்றான். அவர்களை வரவேற்கின்றவர்களையும் தடுத்து திருச்சபையிலிருந்து அவர்களை வெளியேற்றவும் செய்கின்றான்.</verse>
				<verse number="11">அன்பான நண்பனே, தீமையைப் பின்பற்றாமல் நன்மையைப் பின்பற்று. நன்மை செய்கின்றவன் இறைவனால் உண்டானவன். தீமை செய்கின்றவன் இறைவனைக் கண்டதில்லை.</verse>
				<verse number="12">தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றவன். சத்தியமும் அதற்கு சாட்சியாக இருக்கின்றது. நாங்களும் அவனைக் குறித்து நற்சாட்சி கொடுக்கின்றோம், எங்கள் சாட்சி உண்மையாய் இருக்கின்றது என்பதை நீ அறிவாய்.</verse>
				<verse number="13">நான் உனக்கு எழுதுவதற்கு அநேகம் உள்ளன. ஆனால் நான் அவற்றை மையினால் காகிதத்தில் எழுத விரும்பவில்லை.</verse>
				<verse number="14">உன்னை விரைவில் சந்திக்க எதிர்பார்க்கின்றேன். அப்போது நாம் நேருக்கு நேராகப் பேசலாம்.</verse>
				<verse number="15">உனக்கு சமாதானம் உண்டாவதாக. இங்குள்ள நண்பர்களும் வாழ்த்துகிறார்கள். நண்பர்களை பெயர்பெயராக வாழ்த்துவாயாக.</verse>
			</chapter>
		</book>
		<book number="65">
			<chapter number="1">
				<verse number="1">இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், யாக்கோபின் சகோதரனுமான யூதா, பிதாவாகிய இறைவனுக்குள்ளாக நேசிக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவுக்குள் காக்கப்பட்டவர்களுமான அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகின்றதாவது:</verse>
				<verse number="2">இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களிடம் பெருகுவதாக.</verse>
				<verse number="3">பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுத வேண்டுமென நான் ஆவலாய் இருக்கும்போது, பரிசுத்தவான்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த விசுவாசத்தைக் காத்துக்கொள்ள ஊக்கத்துடன் போராடும்படி உங்களுக்கு எழுத வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன்.</verse>
				<verse number="4">நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாக மாற்றி, ஒரே ஆண்டவரும் எஜமானுமாகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கின்ற இறைபக்தியற்ற சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்திருக்கிறார்கள். அவர்களுடைய அழிவு ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="5">இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.</verse>
				<verse number="6">அத்துடன், தங்களுடைய மேன்மையான அதிகாரத்தில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட வானவர்களையும் அந்த மாபெரும் நாளில் தீர்ப்பளிப்பதற்காக, நித்தியமான சங்கிலிகளால் பிணைத்து, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார்.</verse>
				<verse number="7">அதுபோலவே சோதோம், கொமோராவையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டுக்கும் இயல்புக்கு மாறான பாலுறவுக்கும் தங்களை ஒப்புக்கொடுத்து, நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு வேதனைப்படப் போகின்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="8">அதேவிதமாக, கனவு காண்கின்ற இவர்களும் தங்கள் உடலை அசுத்தப்படுத்தி, அதிகாரத்தை எதிர்த்து, மாட்சிமையான வானவர்களை அவதூறு செய்கின்றார்கள்.</verse>
				<verse number="9">ஆனால் தலைமைத் தூதனான மிகாவேல், மோசேயின் உடலைக் குறித்து பிசாசுடன் வாக்குவாதம் செய்தபோது, பிசாசுக்கு எதிராக அவதூறான எந்தவொரு குற்றச்சாட்டையும் கொண்டுவரத் துணியாமல் அவனிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று சொன்னான்.</verse>
				<verse number="10">ஆனால் இவர்களோ, தங்களால் விளங்கிக்கொள்ள இயலாத எல்லாவற்றுக்கும் எதிராக அவதூறாகப் பேசி, மானிட உணர்வினால் அறிந்துகொள்வதையே செய்து, அறிவற்ற மிருகங்களைப் போல அழிந்து போகின்றார்கள்.</verse>
				<verse number="11">இவர்களுக்கு ஐயோ பேரழிவு! இவர்கள் காயீனின் வழியில் நடந்து, பிலேயாம் தனது ஆதாயத்திற்காக செய்த தவறைத் தாங்களும் செய்ய விரைந்து, கோராகைப் போல கலகம் செய்து அழிந்து போகப் போகின்றார்கள்.</verse>
				<verse number="12">இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் பயமின்றி கலந்துகொண்டு அவற்றை மாசுபடுத்தி, தங்களையே மேய்க்கின்ற மேய்ப்பர்களாய் இருக்கின்றார்கள். இவர்கள் காற்றோடு செல்லும் நீரற்ற மேகங்கள். இவர்கள் இலையுதிர்ந்த, கனி கொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டு முறை உயிரிழந்து போன மரங்கள்.</verse>
				<verse number="13">இவர்கள் தங்கள் வெட்கக்கேட்டை நுரையாகத் தள்ளும் கொந்தளிக்கும் கடல் அலைகளும், வழிதப்பி அலைகின்ற நட்சத்திரங்களுமாய் இருக்கின்றார்கள். நிலையான காரிருளே இவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது.</verse>
				<verse number="14">ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையான ஏனோக்கு இவர்களைக் குறித்து இறைவாக்கு உரைத்து: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகின்றார்.</verse>
				<verse number="15">அனைவரையும் நியாயம் தீர்க்கவும், அவர்கள் அனைவரும் இறைபக்தியற்ற வழியில் செய்த இறைபக்தியற்ற அனைத்துச் செயல்களுக்காகவும் இறைபக்தியற்ற பாவிகள் அவரை எதிர்த்து பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும் நியாயத்தீர்ப்பளிக்க வருகின்றார்” என்றான்.</verse>
				<verse number="16">இவர்கள் முறையிடுகின்றவர்களும், குறை சொல்பவர்களும், தங்களுடைய தீய ஆசைகளின்படி நடக்கின்றவர்களும், சுய பெருமைகளை பேசுகின்றவர்களும், தங்கள் சுயநலனுக்காக மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்கின்றவர்களுமாக இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="17">பிரியமானவர்களே, நீங்கள் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் முன்னறிவித்தவைகளை நினைவில் வைத்திருங்கள்.</verse>
				<verse number="18">“கடைசிக் காலங்களில், ஏளனம் செய்கின்றவர்கள் இறைபக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படி நடப்பார்கள்” என்று அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே.</verse>
				<verse number="19">இவர்கள், பிரிவினை உண்டாக்குகின்றவர்களும், மானிட இயல்புள்ளவர்களும், ஆவியில்லாதவர்களுமாய் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="20">அன்பானவர்களே, நீங்களோ பரிசுத்த ஆவிக்குள் மன்றாடி, மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.</verse>
				<verse number="21">இறைவனின் அன்பில் நிலைத்திருந்து, நித்திய வாழ்வுக்காக நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்.</verse>
				<verse number="22">நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள்.</verse>
				<verse number="23">மற்றவர்களை தீயிலிருந்து வெளியே எடுத்து இரட்சியுங்கள், ஏனையவர்களுக்கு பயத்தோடு இரக்கம் காட்டுங்கள், பாவ மனித இயல்பினால் கறைபட்ட அவர்களது ஆடைகளையும்கூட வெறுத்துத் தள்ளுங்கள்.</verse>
				<verse number="24">உங்களை விழுந்து போகாதபடி காக்க வல்லவராயும், குற்றமற்றவர்களாய் மகிழ்ச்சியுடன் தமது மகிமையில் நிறுத்த வல்லவராயும் இருக்கின்ற,</verse>
				<verse number="25">நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும், யுகங்களுக்கு முன்பும், இப்போதும், என்றென்றும் உண்டாவதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
		<book number="66">
			<chapter number="1">
				<verse number="1">இது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு. விரைவில் நிகழவிருக்கும் சம்பவங்கள் என்ன என்பதைத் தமது ஊழியர்களுக்கு காண்பிப்பதற்காக, இறைவன் இந்த வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுத்தார். அவர் தமது தூதனை தமது ஊழியரான யோவானிடம் அனுப்பி இதை அவருக்குத் தெரியப்படுத்தினார்.</verse>
				<verse number="2">அவர் இறைவனுடைய வார்த்தையைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைக் குறித்தும் தான் கண்ட எல்லாவற்றையும் சாட்சியாக அறிவித்தார்.</verse>
				<verse number="3">இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதனால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கின்றவனும், இதைக் கேட்கின்றவர்களும், இதில் எழுதியிருப்பதைக் கடைப்பிடித்து நடந்துகொள்வோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="4">யோவானாகிய நான், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகின்றதாவது: இருக்கின்றவரும், இருந்தவரும், வரவிருகின்றவருமான அவரிடமிருந்து உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவருடைய அரியணைக்கு முன்பாக இருக்கின்ற ஏழு ஆவிகளிடமிருந்தும்,</verse>
				<verse number="5">இறந்தவர்களிடையே முதற்பேறானவரும், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கின்றவரும், உண்மையான சாட்சியுமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி,</verse>
				<verse number="6">நம்மை ஒரு அரசாகவும், தமது இறைவனும் பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி மதகுருக்களாகவும் நம்மை நியமித்திருக்கின்ற இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக. ஆமென்.</verse>
				<verse number="7">“இதோ, இயேசு மேகங்கள் மீது வருகின்றார்” அத்துடன், “எல்லாக் கண்களும் அவரைக் காணும், அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்;” பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் பொருட்டு புலம்புவார்கள்.” அது அப்படியே ஆகட்டும்! ஆமென்.</verse>
				<verse number="8">“தொடக்கமும் முடிவும் நானே, இருக்கின்றவரும் இருந்தவரும் வரப் போகின்றவருமாகிய எல்லாம் வல்லர் நானே” என்று இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார்.</verse>
				<verse number="9">கிறிஸ்துவில் நமக்குரிய துன்பத்திலும், இறையரசிலும், பொறுமையோடு சேர்ந்த சகிப்புத் தன்மையிலும் உங்கள் பங்காளியாயிருக்கும் உங்களின் சகோதரனான யோவானாகிய நான், இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்ததாலும், இயேசுவுக்கு சாட்சி என்ற காரணத்தாலும் நாடு கடத்தப்பட்டு பத்மு தீவில் இருந்தேன்.</verse>
				<verse number="10">கர்த்தருடைய நாளிலே நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில், எனக்குப் பின்னால் எக்காளத்தைப் போன்ற உரத்த சத்தமான ஒரு குரலைக் கேட்டேன்.</verse>
				<verse number="11">அது என்னிடம், “நீ காண்கின்றதை ஒரு புத்தகச் சுருளில் எழுதி, அதை எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய பட்டணங்களிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் அனுப்பு” என்று சொன்னது.</verse>
				<verse number="12">நான் திரும்பி என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபோது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன்.</verse>
				<verse number="13">அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே மனுமகனைப் போன்ற ஒருவர் நின்றார். அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம் வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி ஒரு தங்கப் பட்டியைக் கட்டியிருந்தார்.</verse>
				<verse number="14">அவருடைய தலைமுடி வெள்ளைக் கம்பளியைப்போல, உறை பனியைப்போல வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீச்சுவாலை போல் இருந்தன.</verse>
				<verse number="15">அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் ஒளிருகின்ற தூய்மையான வெண்கலத்தைப் போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப் போல் இருந்தது.</verse>
				<verse number="16">அவர் தனது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இரு பக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கின்ற சூரியனைப் போல் இருந்தது.</verse>
				<verse number="17">நான் அவரைப் பார்த்தபோது மரணமடைந்தவனைப் போல் அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்போது அவர் தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன்.</verse>
				<verse number="18">நானே வாழ்கின்றவர். நான் மரணித்தேன், ஆனால் இதோ நான் என்றென்றும் உயிருடன் வாழ்கின்றவராய் இருக்கின்றேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய சாவிகளை நானே வைத்திருக்கிறேன்.</verse>
				<verse number="19">“ஆகவே நீ பார்த்தவைகளையும், இப்போது இருப்பவைகளையும், இனிமேல் நிகழ இருப்பவைகளையும் எழுது.</verse>
				<verse number="20">நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள் மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின் மறைபொருள் இதுவே: ஏழு நட்சத்திரங்களும் ஏழு திருச்சபைகளின் இறைதூதர்களையும், ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகளையும் குறிக்கின்றன.”</verse>
			</chapter>
			<chapter number="2">
				<verse number="1">“எபேசு பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: ஏழு நட்சத்திரங்களை வலது கையால் உறுதியாகப் பிடித்திருக்கின்றவரும், ஏழு தங்க குத்துவிளக்குகளின் நடுவே உலாவுகின்றவரும் சொல்லும் வார்த்தைகள் என்னவென்றால்:</verse>
				<verse number="2">உனது செயல்களையும், உனது கடின உழைப்பையும், உனது விடாமுயற்சியையும் நான் அறிந்திருக்கிறேன். தீயவரை சகிக்க முடியாதிருக்கிறாய் என்பதையும், அப்போஸ்தலர்கள் அல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை நீ சோதித்து, அவர்கள் பொய்யான அப்போஸ்தலர்கள் என்பதை கண்டு கொண்டாய் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.</verse>
				<verse number="3">நீ விடாமல் முயற்சித்து, என்னுடைய பெயருக்காக பல இன்னல்களை சகித்துக் கொண்டாய். அந்த இன்னல்களால் நீ சலிப்படையவும் இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.</verse>
				<verse number="4">ஆனால் நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கின்றேன். உனது ஆரம்ப கால அன்பை நீ கைவிட்டுவிட்டாய்.</verse>
				<verse number="5">நீ எத்தகைய உயரத்திலிருந்து விழுந்துள்ளாய் என்பதை நினைத்துப் பார். மனந்திரும்பு, நீ ஆரம்பத்தில் செய்த செயல்களைத் திரும்பவும் செய். நீ மனந்திரும்பாவிட்டால், நான் உன்னிடம் வந்து, உன்னுடைய விளக்குத் தண்டை அதன் இடத்திலிருந்து அகற்றி விடுவேன்.</verse>
				<verse number="6">ஆனால் உன்னில் பாராட்டுதலுக்குரிய ஒன்று உண்டு. நிக்கொலாயரின் செயல்களை நீ வெறுக்கிறாய், அவர்களின் செயல்களை நானும் வெறுக்கிறேன்.</verse>
				<verse number="7">பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதை, கேட்பதற்குக் காதுள்ள எவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும். வெற்றி பெறுகின்றவர்களுக்கு நான் இறைவனுடைய பரதீசில் இருக்கின்ற வாழ்வின் மரத்திலிருந்து பழத்தைச் சாப்பிடும் உரிமையைக் கொடுப்பேன்.</verse>
				<verse number="8">“சிமிர்னா பட்டணத்திலிருக்கின்ற திருச்சபையின் இறைதூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: தொடக்கமும் முடிவுமாயிருக்கின்ற, மரணித்து மீண்டும் உயிரடைந்தவருடைய வார்த்தைகள் என்னவென்றால்:</verse>
				<verse number="9">உன்னுடைய துன்பத்தையும், வறுமையையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும், நீ செல்வந்தனாய் இருக்கின்றாய்! தங்களை யூதர்கள் என அழைத்துக்கொள்கிறவர்கள், உனக்கு விரோதமாய் அவதூறு பேசுவதை நான் அறிவேன். உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல, சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள்.</verse>
				<verse number="10">உனக்கு வரப் போகின்ற துன்பத்தைக் குறித்து பயப்படாதே. உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை பிசாசு சிறையில் போடுவான். நீங்கள் பத்து நாட்கள் துன்பத்தை அனுபவிப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். சாகும் வரை உண்மையுள்ளவனாய் இரு. அப்போது நான் உனக்கு வாழ்வின் கிரீடத்தைக் கொடுப்பேன்.</verse>
				<verse number="11">பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதை, கேட்பதற்குக் காதுள்ள எவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும். வெற்றி பெறுகின்றவர்கள் இரண்டாம் மரணத்தினால் பாதிக்கப்படுவதில்லை.</verse>
				<verse number="12">“பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: இரு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கின்றவரின் வார்த்தைகள் இவையே:</verse>
				<verse number="13">நீ வாழ்கின்ற இடத்தை நான் அறிந்திருக்கிறேன், அங்குதான் சாத்தானின் அரியணை இருக்கின்றது. ஆனாலும், நீ என்னுடைய பெயருக்கு உண்மையுள்ளவனாய் நிலைத்திருக்கிறாய். சாத்தான் குடியிருக்கின்ற உங்களுடைய பட்டணத்தில், என்னுடைய உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பா கொல்லப்பட்ட நாட்களிலும், நீ என்னில் வைத்த விசுவாசத்தைக் கைவிட்டுவிடவில்லை.</verse>
				<verse number="14">ஆனாலும், நான் உன்னில் சில குறைகளைக் காண்கின்றேன்: பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கின்றவர்கள் உன் நடுவே இருக்கின்றார்கள். இவனே இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை உண்ணச் செய்து, அவர்களை பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடச் செய்து, பாவத்திற்குள் விழச் செய்வதற்காக பாலாக் என்ற அரசனுக்குக் கற்றுக் கொடுத்தவன்.</verse>
				<verse number="15">அவ்விதமாகவே, நிக்கொலாயரின் போதனையைக் கைக்கொள்கின்றவர்கள் சிலரும் உன் மத்தியில் இருக்கின்றார்கள்.</verse>
				<verse number="16">ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால் விரைவில் நான் உன்னிடம் வந்து என்னுடைய வாயிலிருந்து வெளியேறும் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போர் செய்வேன்.</verse>
				<verse number="17">பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ள ஒவ்வொருவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும். வெற்றி பெறுகின்றவர்களுக்கு நான் மறைக்கப்பட்ட மன்னாவைக் கொடுப்பேன். அத்துடன் நான் அவர்களுக்கு வெள்ளைக் கல் ஒன்றையும் கொடுப்பேன், அதில் ஒரு புதுப் பெயர் எழுதப்பட்டிருக்கும், அக்கல்லைப் பெற்றுக்கொள்கின்றவர்கள் மாத்திரமே அப்பெயரை அறிவார்கள்.</verse>
				<verse number="18">“தியத்தீரா பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: தீச்சுவாலை போல் கண்கள் உள்ளவரும், துலக்கப்பட்ட வெண்கலத்தைப் போல் பாதங்கள் உள்ளவருமான இறைவனுடைய மகனின் வார்த்தைகள் இவைகளே.</verse>
				<verse number="19">உன்னுடைய செயல்களையும், உன்னுடைய அன்பு, விசுவாசம், நீ எனக்குச் செய்யும் ஊழியம், உன் விடாமுயற்சி என எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். நீ ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது அதிகமாய் ஊழியம் செய்கின்றதையும் நான் அறிந்திருக்கிறேன்.</verse>
				<verse number="20">ஆனாலும், உன்னில் நான் இந்த குறையைக் காண்கின்றேன்: தன்னை ஒரு இறைவாக்கினள் என்று சொல்லிக்கொள்கின்ற அந்தப் பெண் யெசபேலை நீ பொறுத்துக்கொள்கிறாய். அவள் தன்னுடைய போதனையினாலே என்னுடைய ஊழியர்களை, பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடவும், விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை உண்ணும்படியும் செய்து அவர்களைத் தவறாய் வழிநடத்துகிறாள்.</verse>
				<verse number="21">அவளுடைய பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்து மனந்திரும்ப அவளுக்குக் கால அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவளோ மனந்திரும்ப விரும்பவில்லை.</verse>
				<verse number="22">ஆகவே நான் அவளை நோய்ப் படுக்கையில் விழச் செய்வேன். அவளோடு தகாத உறவில் ஈடுபடுகின்றவர்கள் அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் கொடுந் துன்பத்தில் விழச் செய்வேன்.</verse>
				<verse number="23">நான் அவளுடைய பிள்ளைகளை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். அப்போது இருதயங்களையும், மனங்களையும் ஆராய்கின்றவர் நானே என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் ஏற்றவிதமாக நான் உங்களுக்குப் பதில் செய்கின்றவர் என்றும் எல்லா திருச்சபைகளும் அறிந்துகொள்ளும்.</verse>
				<verse number="24">அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாதவர்களாகவும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கின்ற காரியங்களை கற்றுக்கொள்ளாதவர்களாகவும் இருக்கின்ற தியத்தீரா பட்டணத்தில் உள்ள மற்றவர்களுக்கு நான் சொல்வதாவது: ‘உங்கள் மீது இதைத் தவிர நான் வேறு எந்தப் பாரத்தையும் சுமத்த மாட்டேன்,</verse>
				<verse number="25">நான் வரும்வரை உங்களிடமிருப்பதை பற்றிப்பிடித்துக் கொண்டவர்களாய் மாத்திரம் இருங்கள்.’</verse>
				<verse number="26">வெற்றி பெறுகின்றவர்களாய் முடிவு வரை என்னுடைய சித்தத்தைச் செய்கின்றவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றது போலவே, மக்கள் இனங்களின் மேல் அதிகாரம் கொடுப்பேன்.</verse>
				<verse number="27">‘அவர் அவர்களை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மட்பாண்டங்களைப்போல நொருக்கி விடுவார்’ என்ற வாக்குறுதியின்படி,</verse>
				<verse number="28">நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன்.</verse>
				<verse number="29">பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதை, கேட்பதற்குக் காதுள்ள எவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்.</verse>
			</chapter>
			<chapter number="3">
				<verse number="1">“சர்தை பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: இறைவனுடைய ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் பிடித்துக் கொண்டிருக்கின்றவருடைய வார்த்தைகள் இவைகளே: உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவன் என்று பெயர் பெற்றிருக்கிறாய், ஆனால் நீ இறந்தவனாய் இருக்கின்றாய்.</verse>
				<verse number="2">விழித்தெழு! மரணமடையும் தறுவாயில் எஞ்சியிருப்பவர்களைப் பலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை.</verse>
				<verse number="3">ஆகையால் நீ பெற்றுக்கொண்டவைகளையும், கேட்டவைகளையும் நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் ஒரு திருடனைப் போல் வருவேன். நான் எந்த நேரம் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறிய மாட்டாய்.</verse>
				<verse number="4">ஆனால், தங்களுடைய உடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தை பட்டணத்தில் இன்னும் உன்னிடம் இருக்கின்றார்கள். அவர்கள் தகுதி உடையவர்களானபடியால் வெண்ணிற ஆடை அணிந்தவர்களாய் என்னுடனே நடப்பார்கள்.</verse>
				<verse number="5">வெற்றி பெறுகின்றவர்களுக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படும். அவர்களுடைய பெயரை வாழ்வின் புத்தகத்திலிருந்து ஒருபோதும் நான் அழித்துவிட மாட்டேன். என்னுடைய பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவர்களுடைய பெயரை வெளிப்படுத்துவேன்.</verse>
				<verse number="6">பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதை, கேட்பதற்குக் காதுள்ள எவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்.</verse>
				<verse number="7">“பிலதெல்பியா பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: பரிசுத்தமானவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் சாவியை வைத்திருப்பவரும், ஒருவரும் பூட்ட முடியாதபடி திறக்கின்றவரும், ஒருவரும் திறக்க முடியாதபடி பூட்டுகின்றவரும் சொல்லுகின்ற வார்த்தைகள் இவைகளே:</verse>
				<verse number="8">உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். இதோ, உனக்கு முன்பாக நான் திறக்கப்பட்ட ஒரு கதவை வைத்திருக்கிறேன், அதை யாராலும் மூட முடியாது. உன்னிடம் சிறிதளவே வலிமை உண்டு என்று எனக்குத் தெரியும். நீ என்னுடைய வார்த்தையை கடைப்பிடித்தாய், என்னுடைய பெயரை மறுதலிக்கவில்லை.</verse>
				<verse number="9">இதோ, தங்களை யூதர்கள் என்று பொய்யாய் கூறிக்கொள்கின்ற யூதரல்லாத, சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்களை உன் கால்களில் வந்து விழச் செய்வேன். நான் உன்னை நேசித்தேன் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்வேன்.</verse>
				<verse number="10">பொறுமையுடன் சகிக்கும்படி நான் உனக்குக் கொடுத்த என் கட்டளையை நீ கைக்கொண்டாய். ஆகவே, பூமியில் உள்ளவர்களைச் சோதிக்கும்படியாக, முழு உலகத்தின் மேலும் வரப்போகும் கடும் துன்பத்திலிருந்து நானும் உன்னைப் பாதுகாப்பேன்.</verse>
				<verse number="11">நான் விரைவில் வருகின்றேன். உனக்குரிய கிரீடத்தை யாரும் எடுத்துக்கொள்ளாதபடி உன்னிடம் இருப்பதை பற்றிப் பிடித்துக்கொள்.</verse>
				<verse number="12">வெற்றி பெறுகின்றவர்களை என்னுடைய இறைவனின் ஆலயத்தில் ஒரு தூணாக நிறுத்துவேன். அவர்கள் இனி ஒருபோதும் அதைவிட்டு நீங்கிப் போக மாட்டார்கள். நான் அவர்கள்மீது என்னுடைய இறைவனின் பெயரையும், என்னுடைய இறைவனின் நகரத்தின் பெயரையும், அதாவது என் இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே இறங்கி வருகின்ற புதிய எருசலேமின் பெயரையும், என்னுடைய புதிய பெயரையும் எழுதுவேன்.</verse>
				<verse number="13">பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதை, கேட்பதற்குக் காதுள்ள எவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்.”</verse>
				<verse number="14">“லவோதிக்கேயா பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: வாக்கு மாறாத உண்மையான சாட்சியும், இறைவனின் படைப்பை ஆளுகை செய்கின்றவருமான ஆமென் என்பவரின் வார்த்தைகள் இவைகளே:</verse>
				<verse number="15">நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதே விரும்பத்தக்கது.</verse>
				<verse number="16">ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கின்றபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து துப்பி விடுவேன்.</verse>
				<verse number="17">‘நான் செல்வந்தன், நான் செல்வத்தைச் சம்பாதித்திருக்கிறேன், எனக்கு எவ்வித தேவையுமில்லை’ என்று நீ சொல்கின்றாய். ஆனால் நீயோ அவலமானவன், பரிதாபத்திற்குரியவன், ஏழ்மையானவன், பார்வையற்றவன், உடையற்றவன் என்பதை உணராதவனாய் இருக்கின்றாய்.</verse>
				<verse number="18">நீ செல்வந்தனாகும்படி நெருப்பினால் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள். அத்துடன் உன்னுடைய வெட்கக்கேடான நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள நீ அணிந்துகொள்வதற்கு வெண்ணிற ஆடைகளை வாங்கிக்கொள். நீ பார்வையை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி உன் கண்களில் பூசிக்கொள்வதற்குத் தைலத்தையும் வாங்கிக்கொள். இதுவே நான் உனக்குக் கொடுக்கும் ஆலோசனை.</verse>
				<verse number="19">நான் யார் மீது அன்பு செலுத்துகின்றேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே ஆர்வமுள்ளவனாய் இருந்து மனந்திரும்பு.</verse>
				<verse number="20">இதோ! நான் கதவுக்கு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது என்னுடைய குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவருடன் உணவருந்துவேன், அவரும் என்னுடன் உணவருந்துவார்.</verse>
				<verse number="21">நான் வெற்றியடைந்து என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பதுபோல, வெற்றி பெறுகின்றவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன்.</verse>
				<verse number="22">பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதை, கேட்பதற்குக் காதுள்ள எவனும் கேட்டுப் புரிந்துகொள்ளட்டும்.”</verse>
			</chapter>
			<chapter number="4">
				<verse number="1">இதற்குப் பின்பு நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக பரலோகத்திலே ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட எக்காளத்தைப் போல் தொனித்த அந்தக் குரல் என்னுடனே பேசுவதைக் கேட்டேன். “இங்கே மேலே வா, இதற்குப் பின் நிகழப்போவதை, நான் உனக்குக் காண்பிப்பேன்” என்று அக்குரல் ஒலித்தது.</verse>
				<verse number="2">உடனே நான் ஆவிக்குள்ளானேன். அங்கே எனக்கு முன்பாக பரலோகத்தில், ஒரு அரியணை இருந்ததைக் கண்டேன். அதன்மீது ஒருவர் அமர்ந்திருந்தார்.</verse>
				<verse number="3">அதில் அமர்ந்திருந்தவர் படிகக்கல் போலவும், மாணிக்கக்கல் போலவும் தோற்றமுடையவராக இருந்தார். அரியணையைச் சுற்றி, மரகதம் போன்ற ஒரு வானவில் பிரகாசித்தது.</verse>
				<verse number="4">அந்த அரியணையைச் சுற்றி இன்னும் இருபத்துநான்கு அரியணைகள் இருந்தன. அவைகளின் மீது இருபத்துநான்கு மூப்பர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் வெண்ணிற ஆடை அணிந்தவர்களாக, தங்கள் தலைகளில் தங்கக் கிரீடங்களை சூடியிருந்தார்கள்.</verse>
				<verse number="5">அந்த அரியணையிலிருந்து மின்னல்களும், பேரிரைச்சல்களும், முழக்கத்தின் சத்தங்களும் வந்துகொண்டிருந்தன. அரியணைக்கு முன்பாக ஏழு தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. இவைகளே இறைவனுடைய ஏழு ஆவிகள்.</verse>
				<verse number="6">அத்துடன், அரியணைக்கு முன்பாக பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல் ஒன்று இருந்தது. அதன் நடுவிலே அரியணையைச் சுற்றி நான்கு உயிரினங்கள் இருந்தன. அவற்றின் முன்பக்கமும் பின்பக்கமும் கண்களால் நிறைந்திருந்தன.</verse>
				<verse number="7">முதலாவது உயிரினம் சிங்கத்தைப் போலவும், இரண்டாவது உயிரினம் எருதைப் போலவும், மூன்றாவது உயிரினம் மனித முகம் போன்ற முகத்தை உடையதாகவும், நான்காவது உயிரினம் பறக்கின்ற கழுகைப் போலவும் இருந்தன.</verse>
				<verse number="8">இந்த நான்கு உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஆறு சிறகுகள் உடையனவாகவும், அவை கண்களால் நிறைந்தனவாகவும் இருந்தன. அவற்றின் சிறகுகளின் கீழேயும்கூட கண்கள் இருந்தன. இரவும் பகலும் இடைவிடாமல் அவை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தன: “ ‘எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,’ இவரே இருந்தவரும், இருக்கின்றவரும், வரப் போகின்றவருமானவர்.”</verse>
				<verse number="9">அந்த அரியணையில் அமர்ந்திருக்கின்றவரும், என்றென்றும் வாழ்கின்றவருமாகிய அவருக்கு அந்த உயிரினங்கள், மகிமை, கனம் நன்றி செலுத்தும் போதெல்லாம்,</verse>
				<verse number="10">இருபத்துநான்கு மூப்பர்களும் அரியணையில் அமர்ந்திருக்கின்றவருக்கு முன்பாக விழுந்து, என்றென்றும் வாழ்கின்றவராகிய அவரை வழிபட்டார்கள். அவர்கள் தங்கள் கிரீடங்களை அரியணைக்கு முன்பாகக் கழற்றி வைத்து:</verse>
				<verse number="11">“எங்கள் இறைவனாகிய கர்த்தாவே, மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீர் தகுதியுள்ளவரே. ஏனெனில், நீரே எல்லாவற்றையும் படைத்தீர். உம்முடைய சித்தத்தினாலேயே, அவை எல்லாம் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன,” என்று பாடினார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="5">
				<verse number="1">பின்பு அரியணையில் அமர்ந்திருப்பவரின் வலதுகையில் ஒரு புத்தகச் சுருள் இருப்பதை நான் கண்டேன். அது இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டிருந்தது.</verse>
				<verse number="2">அப்போது “இந்த முத்திரைகளை உடைத்து, புத்தகச் சுருளைத் திறப்பதற்குத் தகுதியுள்ளவன் யார்?” என்று உரத்த குரலில் அறிவித்துக்கொண்டிருந்த வல்லமையுள்ள ஒரு இறைதூதனைக் கண்டேன்.</verse>
				<verse number="3">ஆனால் அந்தப் புத்தகச் சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கோ பரலோகத்திலோ பூமியிலோ அல்லது பூமியின் கீழோ உள்ள ஒருவராலும் முடியவில்லை.</verse>
				<verse number="4">அந்தப் புத்தகச் சுருளைத் திறப்பதற்கோ, அதன் உள்ளே வாசிப்பதற்கோ, தகுதியுள்ளவர்கள் எவரும் காணப்படவில்லை என்பதால் நான் மிகவும் அழுதேன்.</verse>
				<verse number="5">அப்போது அந்த மூப்பர்களில் ஒருவன் என்னிடம், “அழாதே! இதோ, புத்தகச் சுருளையும் அதன் ஏழு முத்திரைகளையும் திறப்பதற்கு யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றிருக்கின்றார்” என்றான்.</verse>
				<verse number="6">பின்பு ஆட்டுக்குட்டியானவர் அந்த நான்கு உயிரினங்களாலும், இருபத்துநான்கு மூப்பர்களாலும் சூழப்பட்டு அரியணையின் நடுவில் கொல்லப்பட்ட தோற்றத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவருக்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்பட்ட இறைவனுடைய ஏழு ஆவிகள்.</verse>
				<verse number="7">ஆட்டுக்குட்டியானவர் வந்து அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டார்.</verse>
				<verse number="8">அவர் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வீணையையும், தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள். அத்தூபம் பரிசுத்தவான்களின் மன்றாடல்களைக் குறிக்கின்றது.</verse>
				<verse number="9">அந்த மூப்பர்கள் ஒரு புதிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்: “அந்தப் புத்தகத்தை எடுக்கவும், அதன் முத்திரைகளைத் திறக்கவும் நீர் தகுதியுள்ளவர். ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர். உம்முடைய இரத்தத்தினாலே எல்லா பின்னணியிலிருந்தும், எல்லா மொழியைப் பேசுகின்றவர்களிலிருந்தும், எல்லா நாட்டு மக்களிலிருந்தும், எல்லா பகுதியிலிருந்தும் மனிதர்களை இறைவனுக்கென்று விலை கொடுத்து வாங்கிக்கொண்டீர்.</verse>
				<verse number="10">நீர் அவர்களை ஓர் அரசாகவும், நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும் மதகுருக்களாகவும் நியமித்திருக்கின்றீர். அவர்கள் பூமியின்மீது ஆளுகை செய்வார்கள்.”</verse>
				<verse number="11">அதன்பின்பு நான் பார்த்தபோது, அரியணையையும் அந்த உயிரினங்களையும் மூப்பர்களையும் சுற்றிக் காணப்பட்ட இறைதூதர்களின் குரலைக் கேட்டேன். அவர்கள் எண்ணிக்கையில் ஆயிரங்கள் ஆயிரங்களாகவும், இலட்சங்கள் இலட்சங்களாகவும் இருந்தார்கள்.</verse>
				<verse number="12">அவர்கள் உரத்த குரலில்: “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும், செல்வத்தையும், ஞானத்தையும், வலிமையையும், மாண்பையும், மகிமையையும், துதியையும் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்!” என்று பாடினார்கள்.</verse>
				<verse number="13">பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின் கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும், “அரியணையில் அமர்ந்திருக்கின்றவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், மாண்பும், மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக!” என்று பாடுவதைக் கேட்டேன்.</verse>
				<verse number="14">அதற்கு, அந்த நான்கு உயிரினங்களும், “ஆமென்” என்று சொல்ல, அந்த மூப்பர்களும் பணிவுடன் விழுந்து வழிபட்டார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="6">
				<verse number="1">நான் பார்த்துக்கொண்டிருக்கையில், ஆட்டுக்குட்டியானவர் அந்த ஏழு முத்திரைகளில் முதலாவது முத்திரையைத் திறந்தார். அப்போது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, இடி முழக்கத்தைப் போன்ற குரலில், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன்.</verse>
				<verse number="2">அப்போது அங்கே எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை நிற்பதைப் பார்த்தேன். அதில் அமர்ந்திருந்தவன் ஒரு வில்லை பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் வெற்றி பெறுவதற்காக, ஒரு வெற்றி வீரனாக புறப்பட்டுச் சென்றான்.</verse>
				<verse number="3">ஆட்டுக்குட்டியானவர் இரண்டாவது முத்திரையைத் திறந்தபோது, இரண்டாவது உயிரினம், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன்.</verse>
				<verse number="4">அப்போது இன்னொரு குதிரை வெளியே வந்தது, அது கருஞ்சிவப்பு நிறமுடையதாய் இருந்தது. அதில் அமர்ந்திருந்தவனுக்கு பூமியிலிருந்து சமாதானத்தை நீக்கி விடுவதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது. மனிதர்கள் தாங்களே ஒருவரையொருவர் கொன்று விடும்படி அந்த வல்லமை அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவனுக்குப் பெரிய வாள் ஒன்றும் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="5">ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவது உயிரினம், “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக இதோ ஒரு கறுப்புக் குதிரை நின்றது. அதில் அமர்ந்திருந்தவன் தன் கையிலே தராசு ஒன்றைப் பிடித்துக் கொண்டிருந்தான்.</verse>
				<verse number="6">அப்போது மனிதனின் குரலில், “ஒரு நாட் கூலி பணத்துக்கு ஒரு கிலோ கிராம் கோதுமை, ஒரு நாட் கூலி பணத்துக்கு மூன்று கிலோ கிராம் வாற்கோதுமை. ஆனால் எண்ணெயையும் திராட்சை ரசத்தையும் சேதமாக்கி விடாதே!” என்று சொல்வதைக் கேட்டேன். அந்தக் குரல் அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்து வந்தது போலிருந்தது.</verse>
				<verse number="7">ஆட்டுக்குட்டியானவர் நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவது உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது.</verse>
				<verse number="8">அப்போது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நிற்பதைப் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயரிடப்பட்டிருந்தது. பாதாளம் அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும், பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை கொல்வதற்கு அவற்றுக்கு வல்லமை கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="9">ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையைத் திறந்தபோது, இறைவனுடைய வார்த்தையின் காரணமாகவும், சாட்சிகளாய் வாழ்ந்ததன் காரணமாகவும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன்.</verse>
				<verse number="10">அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமும் சத்தியமும் உள்ளவரான ஆண்டவராகிய கர்த்தாவே, பூமியில் குடியிருக்கின்றவர்களை எவ்வளவு காலத்துக்கு நீர் நியாயம் தீர்க்காமலும், எங்கள் இரத்தத்தை சிந்திய அவர்களைப் பழிவாங்காமலும் இருப்பீர்?” என்று கூக்குரலிட்டார்கள்.</verse>
				<verse number="11">அப்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வெண்ணிற ஆடை கொடுக்கப்பட்டது. அத்துடன், இன்னும் சிறிது காலம் அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஏனெனில், அவர்களுடைய சக ஊழியர்களும் சகோதரர்களுமானவர்களில் அவர்களைப் போலவே கொல்லப்பட வேண்டியவர்களின் முழு எண்ணிக்கை நிறைவாகும் வரை அவர்கள் பொறுத்திருக்கும்படி சொல்லப்பட்டது.</verse>
				<verse number="12">ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையைத் திறப்பதை நான் பார்த்தேன். அப்போது பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வேளையில், சூரியன் கறுப்புக் கம்பளியைப் போல் கறுத்தது, சந்திரன் இரத்தம் போல் சிவப்பானது.</verse>
				<verse number="13">பலத்த காற்றினால் அத்தி மரம் அசைக்கப்படும்போது, பழுக்காத அத்திக் காய்கள் வந்து விழுவது போல வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன.</verse>
				<verse number="14">புத்தகச் சுருள் ஒன்று சுருட்டப்படுவது போல வானம் சுருட்டப்பட்டு மறைந்து போனது. ஒவ்வொரு மலையும், தீவும் அவைகளுக்குரிய இடங்களிலிருந்து அகற்றப்பட்டன.</verse>
				<verse number="15">அப்போது பூமியில் உள்ள அரசர்களும், இளவரசர்களும், படைத் தலைவர்களும், செல்வந்தர்களும், வலிமையுள்ளவர்களும், அடிமைகளும், சுதந்திரக் குடிமக்களுமாகிய ஒவ்வொருவரும் குகைகளிலும் மலைகளின் நடுவே கற்பாறைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.</verse>
				<verse number="16">அவர்கள் அந்த மலைகளையும், கற்பாறைகளையும் பார்த்து, “நீங்கள் எங்கள்மேல் விழுங்கள். அரியணையில் அமர்ந்திருக்கின்றவருடைய பார்வையிலிருந்தும், ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!</verse>
				<verse number="17">அவருடைய கோபத்தின் பெரிதான நாள் வந்துவிட்டது. அதை யாரால் தாங்க முடியும்?” என்று சொன்னார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="7">
				<verse number="1">இதற்குப் பின்பு, பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு இறைதூதர்கள் நிற்கக் கண்டேன். அவர்கள் நிலத்தின் மீதோ, கடலின் மீதோ, மரத்தின் மீதோ காற்று வீசி அவைகளைச் சேதப்படுத்தாதபடி பூமியின் நான்கு திசை காற்றுகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="2">வேறொரு இறைதூதன் கிழக்கிலிருந்து வருவதைக் கண்டேன். வாழும் இறைவனுடைய முத்திரையை அவன் வைத்துக் கொண்டிருந்தான். நிலத்தையும் கடலையும் சேதப்படுத்துவதற்கு வல்லமை கொடுக்கப்பட்டிருந்த நான்கு இறைதூதர்களையும் அவன் உரத்த குரலில் அழைத்து,</verse>
				<verse number="3">“நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளில் நாங்கள் முத்திரையிடும் வரை நிலத்தையோ, கடலையோ, மரங்களையோ அழிக்க வேண்டாம்” என்றான்.</verse>
				<verse number="4">அப்போது முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன். இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தும் முத்திரையிடப்பட்டவர்கள் 1,44,000 பேர்:</verse>
				<verse number="5">யூதா கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், ரூபன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், காத் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,</verse>
				<verse number="6">ஆசேர் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், நப்தலி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், மனாசே கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,</verse>
				<verse number="7">சிமியோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், லேவி கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், இசக்கார் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும்,</verse>
				<verse number="8">செபுலோன் கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், யோசேப்பு கோத்திரத்திலிருந்து 12,000 பேரும், பென்யமீன் கோத்திரத்திலிருந்து, 12,000 பேரும் முத்திரையிடப்பட்டார்கள்.</verse>
				<verse number="9">இதற்குப் பின்பு நான் பார்த்தபோது எனக்கு முன்பாக எவராலும் எண்ண முடியாத அளவுக்குப் பெரும் திரளான மக்கள் கூட்டத்தினர் நின்று கொண்டிருந்தார்கள். எல்லா இடங்களையும் பின்னணிகளையும் நாடுகளையும் மொழிகளையும் சேர்ந்தவர்களாகிய அவர்கள், அரியணைக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வெண்ணிற ஆடை அணிந்தவர்களாய் தங்கள் கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்தவர்களாகவும் நின்று கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="10">அவர்கள் உரத்த குரலில்: “இரட்சிப்பானது அரியணையில் அமர்ந்திருக்கும் எங்கள் இறைவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்குமே உரியது” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.</verse>
				<verse number="11">அப்போது அரியணையைச் சூழ்ந்தும், மூப்பர்கள் மற்றும் நான்கு உயிரினங்களைச் சூழ்ந்தும் நின்று கொண்டிருந்த எல்லா இறைதூதர்களும், அரியணைக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு,</verse>
				<verse number="12">அவர்கள் சொன்னதாவது: “ஆமென்! துதியும், மகிமையும், ஞானமும், நன்றியும், மாண்பும், வல்லமையும், பலமும் எங்கள் இறைவனுக்கே என்றென்றும் உண்டாவதாக. ஆமென்!”</verse>
				<verse number="13">அப்போது, அந்த மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து, “வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறார்களே, இவர்கள் யார்? இவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.</verse>
				<verse number="14">அதற்கு நான், “ஐயா, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அப்போது அந்த மூப்பர் என்னிடம், “கொடிய உபத்திரவத்தின் மூலமாக வந்தவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவி, வெண்மையாக்கியவர்கள்.</verse>
				<verse number="15">அதனாலேயே, “இவர்கள் இறைவனுடைய அரியணைக்கு முன்னிருந்து, அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்கின்றார்கள். அரியணையில் அமர்ந்திருக்கிற அவர், அவர்களுடன் குடியிருந்து அவர்களுக்கு பாதுகாப்பாய் இருப்பார்.</verse>
				<verse number="16">அவர்கள் இனியொருபோதும் பசியாயிருக்க மாட்டார்கள், இனியொருபோதும், அவர்கள் தாகமாயிருக்கவும் மாட்டார்கள். வெயிலோ, எந்தக் கடுமையான வெப்பமோ, அவர்களைத் தாக்காது.</verse>
				<verse number="17">ஏனெனில், அரியணையின் நடுவிலிருக்கின்ற ஆட்டுக்குட்டியானவரே அவர்களின் மேய்ப்பராயிருக்கிறார். ‘அவர் அவர்களை வாழ்வு தரும் தண்ணீர் ஊற்றுகளுக்கு வழிநடத்திச் செல்வார்.’ ‘இறைவன் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்து விடுவார்’ ” என்றார்.</verse>
			</chapter>
			<chapter number="8">
				<verse number="1">ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் சுமார் அரைமணி நேரம் அமைதி நிலவியது.</verse>
				<verse number="2">அப்போது, இறைவனுக்கு முன்பாக நிற்கும் ஏழு இறைதூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.</verse>
				<verse number="3">இன்னொரு இறைதூதன் வந்து பலிபீடத்தின் அருகே நின்றான். அவன் தங்க தூபகிண்ணம் ஒன்றை வைத்திருந்தான். அரியணைக்கு முன்பாக இருக்கின்ற தங்கத்தினாலான பலிபீடத்தின் மீது, பரிசுத்தவான்கள் அனைவருடைய மன்றாடல்களைச் சேர்த்து தூபம் காட்டும்படி அவனுக்குப் பெருமளவு நறுமணத்தூள் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="4">அந்த இறைதூதனுடைய கையிலிருந்து தூபத்தின் புகை எழுந்து, பரிசுத்தவான்களுடைய மன்றாடல்களுடன் சேர்ந்து, இறைவனுக்கு முன்பாக மேல்நோக்கிச் சென்றது.</verse>
				<verse number="5">பின்பு அந்த இறைதூதன், தூபகிண்ணத்தை பலிபீடத்திலிருந்த நெருப்பினால் நிரப்பி பூமியின் மேல் அந்த நெருப்பை வீசினான். அப்போது இடிமுழக்கத்தின் சத்தங்களும், பேரிரைச்சல்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன.</verse>
				<verse number="6">பின்பு ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு இறைதூதர்களும் அவற்றை ஊதுவதற்கு ஆயத்தமானார்கள்.</verse>
				<verse number="7">முதலாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது, இரத்தம் கலந்த ஆலங்கட்டியும் நெருப்பும் தோன்ற, அவை பூமியின் மேல் வீசப்பட்டன. பூமியின் மூன்றில் ஒரு பங்கு எரிந்து போனது, மரங்களில் மூன்றில் ஒரு பங்கும் எரிந்து போனது, பசுமையான புற்கள் அனைத்துமே எரிந்து போயின.</verse>
				<verse number="8">இரண்டாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது, தீப்பற்றி எரிகின்ற பிரமாண்டமான மலை போன்ற ஒன்று கடலில் வீசப்பட்டது. கடலில் மூன்றிலொரு பங்கு இரத்தமாக மாறியது.</verse>
				<verse number="9">கடலில் வாழும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இறந்து போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கும் அழிந்து போனது.</verse>
				<verse number="10">மூன்றாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான், அப்பொழுது வானத்திலிருந்து ஒரு பெரிய நட்சத்திரம், ஒரு தீப்பந்தத்தைப் போல் எரிந்து கொண்டு விழுந்தது. அது இவ்வாறாக ஆறுகளின் மூன்றில் ஒரு பங்கின் மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது.</verse>
				<verse number="11">அந்த நட்சத்திரத்தின் பெயர் கசப்பு என்பதாகும். தண்ணீரின் மூன்றிலொரு பங்கு கசப்பாக மாறியது. கசப்பாக மாறிய அந்தத் தண்ணீரினால் மனிதர்களில் பலர் இறந்து போனார்கள்.</verse>
				<verse number="12">நான்காவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது சூரியனில் மூன்றில் ஒரு பங்கும், சந்திரனில் மூன்றில் ஒரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கும் பாதிப்படைந்தன. இதனால், அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருளடைந்தது. பகலின் மூன்றிலொரு பங்கும், இரவின் மூன்றிலொரு பங்கும் வெளிச்சம் இல்லாமல் போனது.</verse>
				<verse number="13">பின்பு நான் பார்த்தபோது, நடுவானத்திலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு உரத்த சத்தமிட்டு, “ஐயோ! ஐயோ! மற்ற மூன்று இறைதூதர்களினால் ஊதப்படப் போகின்ற எக்காள சத்தங்களினால், பூமியில் குடியிருக்கின்றவர்களுக்கு ஐயோ பேரழிவு வரப் போகின்றதே!” என்று சொல்வதைக் கேட்டேன்.</verse>
			</chapter>
			<chapter number="9">
				<verse number="1">ஐந்தாவது இறைதூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதினான். அப்போது வானத்திலிருந்து பூமியில் விழுந்திருந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன். பாதாளத்தின் நுழைவாசலுக்குரிய சாவி அவனிடம் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="2">அந்த பாதாளக்குழி திறக்கப்பட்டபோது, மிகப் பெரிய சூளையிலிருந்து எழுகின்ற புகையைப் போல் அதிலிருந்து புகை எழுந்தது. அந்தப் பாதாளக்குழியிலிருந்து எழுந்த புகையினால் சூரியனும், வானமும் இருளடைந்தன.</verse>
				<verse number="3">அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் வந்தன. பூமியிலுள்ள தேள்களுக்குரிய வல்லமையைப் போன்ற ஒரு வல்லமை அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="4">பூமியிலுள்ள புற்களுக்கோ, செடிகளுக்கோ, மரத்துக்கோ தீங்கு செய்யாமல், தங்கள் நெற்றிகளில் இறைவனுடைய முத்திரையைப் பெற்றிராத மனிதர்களுக்கு மாத்திரமே தீங்கு செய்யும்படி அவைகளுக்குச் சொல்லப்பட்டது.</verse>
				<verse number="5">அந்த மனிதர்களைக் கொல்வதற்கான வல்லமை அவற்றுக்குக் கொடுக்கப்படவில்லை. அவர்களை ஐந்து மாதங்களுக்கு சித்திரவதை செய்வதற்கு மாத்திரம் அவைகளுக்கு வல்லமை அளிக்கப்பட்டது. அவர்கள் அனுபவித்த அந்த வேதனை ஒரு தேள் கொட்டும்போது அனுபவிக்கும் வேதனையைப் போல் இருந்தது.</verse>
				<verse number="6">அந்நாட்களில் மனிதர்கள் மரணத்தைத் தேடுவார்கள், ஆனால் அவர்கள் அதைக் கண்டடைய மாட்டார்கள். அவர்கள் மரணத்தை விரும்புவார்கள், ஆனால் மரணமோ அவர்களைவிட்டு ஓடிப் போகும்.</verse>
				<verse number="7">அந்த வெட்டுக்கிளிகள் யுத்தத்திற்காக ஆயத்தமாக்கப்பட்ட குதிரைகளைப் போல் காணப்பட்டன. அவை தங்களுடைய தலைகளிலே தங்க கிரீடங்களைப் போன்ற ஒன்றை அணிந்திருந்தன. அவற்றின் முகங்கள் மனித முகங்களைப் போல் காணப்பட்டன.</verse>
				<verse number="8">அவைகளின் தலைமுடி பெண்களின் கூந்தலைப் போல் இருந்தது. அவைகளின் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போல் இருந்தன.</verse>
				<verse number="9">இரும்பு மார்புக் கவசங்களைப் போன்ற மார்புக் கவசங்கள் அவைகளுக்கு இருந்தன. அவைகளின் சிறகுகளின் இரைச்சலானது, அநேக குதிரைகளும் தேர்களும் யுத்தத்திற்கு விரைந்து செல்லும்போது ஏற்படும் இரைச்சலைப் போல் இருந்தது.</verse>
				<verse number="10">தேள்களுக்கு இருப்பது போல் அவைகளுக்கும் வால்களும் கொடுக்குகளும் இருந்தன. ஐந்து மாதங்கள் மனிதர்களை துன்புறுத்தக் கூடிய வல்லமை அவைகளின் வால்களிலே இருந்தது.</verse>
				<verse number="11">பாதாளக்குழியின் வானவனே அவைகளின் மீது அரசனாயிருந்தான். அவனுடைய பெயர், எபிரேய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் சொல்லப்பட்டது.</verse>
				<verse number="12">முதலாவது பேரழிவு கடந்து போயிற்று. இன்னும் இரண்டு பேரழிவுகள் வரவிருந்தன.</verse>
				<verse number="13">ஆறாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது இறைவனுக்கு முன்பாக இருந்த தங்கப் பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து வந்த ஒரு குரலைக் கேட்டேன்.</verse>
				<verse number="14">அது, எக்காளத்தை வைத்திருந்த ஆறாவது இறைதூதனிடம், “பெரிய நதியான யூப்பிரட்டீஸ் அருகே கட்டி வைக்கப்பட்டிருக்கின்ற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொன்னது.</verse>
				<verse number="15">அப்போது மனிதரில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படி, அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள். அவர்கள் இந்த வேளை, இந்த நாள், இந்த மாதம், இந்த ஆண்டுக்கென்று ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.</verse>
				<verse number="16">குதிரைப் படையின் எண்ணிக்கை இருபது கோடியாக இருந்தது. அவைகளின் எண்ணிக்கை சொல்லப்படுவது எனக்குக் கேட்டது.</verse>
				<verse number="17">என்னுடைய தரிசனத்தில் நான் கண்ட குதிரைகளும், குதிரை வீரர்களும் இவ்விதமாய் இருக்கக் கண்டேன். அவர்களுடைய மார்புக் கவசங்கள் தீயின் நிறமும் கருநீல நிறமும் கந்தகத்தைப் போன்ற மஞ்சள் நிறமும் உடையனவாக இருந்தன. அந்தக் குதிரைகளின் தலைகளோ சிங்கங்களின் தலைகளைப் போல் காணப்பட்டன. அவைகளின் வாய்களிலிருந்து நெருப்பும் புகையும் கந்தகமும் வெளிவந்தன.</verse>
				<verse number="18">அவைகளின் வாய்களிலிருந்து வந்த நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளினாலும் மனிதரில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டார்கள்.</verse>
				<verse number="19">அந்தக் குதிரைகளின் வல்லமையானது, அவைகளின் வாய்களிலும், அவைகளின் வால்களிலும் இருந்தது. அவைகளின் வால்களோ பாம்புகளைப் போல் இருந்தன, அவை தங்கள் தலைகளைக் கொண்டு காயத்தை ஏற்படுத்தின.</verse>
				<verse number="20">இந்த வாதைகளினால் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த மற்றவர்களோ, தங்கள் செயல்களைவிட்டு இன்னும் மனந்திரும்பாமல் இருந்தார்கள். அவர்கள் பிசாசுகளையும், தங்கம், வெள்ளி, வெண்கலம், கல், மரம் என்பனவற்றால் செய்யப்பட்டதும், பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாததுமான விக்கிரகங்களையும் வணங்குவதை நிறுத்தவில்லை.</verse>
				<verse number="21">அவர்கள் தங்களுடைய கொலைகளையோ, மந்திர வித்தைகளையோ, பாலியல் ஒழுக்கக்கேட்டையோ, களவுகளையோ, மற்ற எவற்றையும் விட்டு மனந்திரும்பவில்லை.</verse>
			</chapter>
			<chapter number="10">
				<verse number="1">பின்பு வல்லமையுள்ள இன்னொரு இறைதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதை நான் கண்டேன். அவன் மேகத்தை உடையாக அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கு மேலாக ஒரு வானவில் இருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் நெருப்புத் தூண்களைப் போலவும் இருந்தன.</verse>
				<verse number="2">அவன் திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகத்தை தனது கையில் வைத்திருந்தான். அவன் தன்னுடைய வலது காலைக் கடலிலும், தன்னுடைய இடது காலைத் தரையிலும் ஊன்றி வைத்தவாறு,</verse>
				<verse number="3">சிங்கம் கர்ச்சிப்பதைப் போல் உரத்த சத்தமிட்டான். அவன் சத்தமிட்ட போது, ஏழு இடி முழக்கங்களின் குரல்கள் உரைத்தன.</verse>
				<verse number="4">அந்த ஏழு இடிமுழக்கங்கள் பேசியபோது நான் அவற்றை எழுதுவதற்கு ஆயத்தமானேன். ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “ஏழு இடிமுழக்கங்களும் சொன்னதை முத்திரையிட்டு மறைத்து விடு, அதை எழுத வேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டேன்.</verse>
				<verse number="5">பின்பு கடலின் மேலும், தரையின் மேலும் நிற்கின்றவனாக நான் கண்ட அந்த இறைதூதன் தன்னுடைய வலது கையை பரலோகத்தை நோக்கி உயர்த்தி,</verse>
				<verse number="6">என்றென்றும் வாழ்கின்றவரைக் கொண்டு ஆணையிட்டான். வானங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவரைக் கொண்டு அவன் ஆணையிட்டுச் சொன்னதாவது: “இனிமேல் காலதாமதம் இருக்காது!</verse>
				<verse number="7">ஏழாவது இறைதூதன் தன்னுடைய எக்காளத்தை ஊதப் போகின்ற நாட்களிலே, இறைவனுடைய மறைபொருள் நிறைவேற்றப்படும். அவர் தம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினருக்கு அறிவித்தபடியே அவை நிறைவேறும்” என்றான்.</verse>
				<verse number="8">பின்பு பரலோகத்திலிருந்து நான் கேட்ட அந்தக் குரல், இன்னொரு முறை என்னுடனே பேசியது: “போ, கடலின் மேலும், தரையின் மேலும் நின்று கொண்டிருக்கின்ற அந்த இறைதூதனுடைய கையில் திறக்கப்பட்டு இருக்கின்ற அந்தப் புத்தகச் சுருளை எடுத்துக்கொள்” என்றது.</verse>
				<verse number="9">எனவே, நான் அந்த இறைதூதனிடம் போய், அந்தச் சிறிய புத்தகச் சுருளை எனக்குத் தரும்படி அவனிடம் கேட்டேன். அவன் என்னிடம், “நீ இதை எடுத்து உண்பாயாக. இது உன் வயிற்றில் கசப்பை ஏற்படுத்தும். ஆனால் உன் வாய்க்கு இது தேன் போல் இனிமையாயிருக்கும்” என்றான்.</verse>
				<verse number="10">நான் அந்த இறைதூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறிய புத்தகச் சுருளை எடுத்து, அதை உண்டேன். அது என் வாய்க்கு, தேன் போல் இனிமையான சுவையைக் கொடுத்தது. ஆனால் அதை நான் உண்டு முடித்த போதோ, அது என்னுடைய வயிற்றில் கசப்பை ஏற்படுத்தியது.</verse>
				<verse number="11">அப்போது, “பல மக்களைக் குறித்தும், பல மக்கள் இனங்களைக் குறித்தும், மொழியினரைக் குறித்தும், அரசர்களைக் குறித்தும் நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.</verse>
			</chapter>
			<chapter number="11">
				<verse number="1">அப்போது அளவுகோலைப் போன்ற ஒரு பிரம்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. பின்பு எனக்குச் சொல்லப்பட்டதாவது: “போ, இறைவனுடைய ஆலயத்தையும் பலிபீடத்தையும், அங்கே ஆராதனை செய்கின்றவர்களையும் கணக்கிட்டு அளவெடுத்துக்கொள்.</verse>
				<verse number="2">ஆனால், வெளிமுற்றத்தை விட்டுவிடு. அதை அளக்காதே. ஏனெனில், அது யூதரல்லாத மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் 42 மாதங்களுக்கு பரிசுத்த நகரத்தை மிதிப்பார்கள்.</verse>
				<verse number="3">நான் என்னுடைய இரண்டு சாட்சிகளுக்கும் வல்லமை கொடுப்பேன். அவர்கள் துக்க உடையை அணிந்துகொண்டு, 1,260 நாட்களுக்கு இறைவாக்கு உரைப்பார்கள்.”</verse>
				<verse number="4">பூமியின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கின்ற “இரண்டு ஒலிவ மரங்களும்” இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே.</verse>
				<verse number="5">யாராவது அவர்களுக்குத் தீங்கு செய்ய முயன்றால், அவர்களுடைய வாய்களிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அவர்களுடைய பகைவர்களை அழித்து விடும். அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகின்றவர்கள் இவ்விதமாகவே மரணமடைய வேண்டும்.</verse>
				<verse number="6">அவர்கள் இறைவாக்கு உரைக்கும் காலத்தில், மழை பெய்யாதபடி வானத்தை அடைத்து விடுவதற்கு வல்லமை உடையவர்களாய் இருப்பார்கள். அத்துடன் தண்ணீரை இரத்தமாக மாற்றுவதற்கும், தாங்கள் விரும்பியபோதெல்லாம் எல்லாவிதமான வாதைகளினாலும் பூமியைத் தண்டிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.</verse>
				<verse number="7">அவர்கள் தங்களுடைய சாட்சியை முடித்துக்கொண்டதும், பாதாளக்குழியிலிருந்து மேலே வருகின்ற மிருகம் அவர்களைத் தாக்கும். அது அவர்களை வெற்றிகொண்டு, அவர்களைக் கொன்றுவிடும்.</verse>
				<verse number="8">அப்போது அந்த சாட்சிகளின் உடல்கள், அந்தப் பெரிய நகரமான எருசலேமின் வீதியில் கிடக்கும். இந்தப் பெரிய நகரம் சோதோம் என்றும், எகிப்து என்றும் அடையாளமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திலேதான் அவர்களுடைய ஆண்டவரும் சிலுவையில் அறையப்பட்டார்.</verse>
				<verse number="9">அவர்களுடைய சடலங்களை எல்லா மக்களையும், கோத்திரங்களையும், மொழியினர்களையும், சமூகங்களையும், இனங்களையும் சேர்ந்தவர்கள் மூன்றரை நாட்களுக்கு உற்றுப் பார்ப்பார்கள். அந்த உடல்களை அடக்கம் செய்ய அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.</verse>
				<verse number="10">அந்த இரண்டு இறைவாக்கினரும் பூமியில் வாழ்கின்றவர்களை துன்புறுத்தி வேதனைப்படுத்தியதால், பூமியில் குடியிருக்கின்றவர்கள் அவர்களை ஏளனம் செய்து மகிழ்வார்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகளை அனுப்பி கொண்டாடுவார்கள்.</verse>
				<verse number="11">ஆனால் மூன்றரை நாட்களுக்குப் பின், இறைவனிடமிருந்து அவர்களுக்குள் உயிர்மூச்சு வந்தது. அவர்கள் காலூன்றி நின்றார்கள். அவர்களைக் கண்ட எல்லோரும், பெரும் அச்சம் கொண்டார்கள்.</verse>
				<verse number="12">பின்பு பரலோகத்திலிருந்து ஒரு குரல் அந்த இரண்டு சாட்சிகளையும் நோக்கி உரத்த சத்தமாக, “இங்கே மேலே வாருங்கள்” என்று சொன்னது. அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் ஒரு மேகத்தின் மேலேறிப் பரலோகத்துக்குப் போனார்கள்.</verse>
				<verse number="13">அந்நேரத்திலேயே, அங்கு ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தப் பட்டணத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது. அந்தப் பூமியதிர்ச்சியில் ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். அதற்குத் தப்பியவர்களோ, பெரும் அச்சம் கொண்டவர்களாய் பரலோகத்தின் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தினார்கள்.</verse>
				<verse number="14">இரண்டாவது பேரழிவும் கடந்து போயிற்று. மூன்றாவது பேரழிவோ விரைவாக வருகின்றது.</verse>
				<verse number="15">ஏழாவது இறைதூதன் தனது எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தமாய் குரல்கள் முழங்கி, “உலகத்தின் அரசு நமது கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய அரசாகி விட்டது. அவரே என்றென்றும் ஆளுகை செய்வார்” என்றன.</verse>
				<verse number="16">அப்போது இறைவனுக்கு முன்பாக, தங்களுடைய அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு,</verse>
				<verse number="17">அவர்கள் சொன்னதாவது: “இருக்கின்றவரும், இருந்தவருமான எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமக்கே நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால், நீர் உம்முடைய மிகுந்த வல்லமையை எடுத்துக் கொண்டவராய் ஆளுகை செய்யத் தொடங்கி விட்டீர்.</verse>
				<verse number="18">மக்கள் இனத்தார் சினம் கொண்டனர், உம்முடைய உக்கிர கோபம் வெளிப்பட்டது. இறந்தவர்களை நியாயம் தீர்ப்பதற்கான வேளை வந்துவிட்டது. உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும், உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கின்ற சிறியோர், பெரியோர் யாவருக்கும் வெகுமதி கொடுப்பதற்கான வேளையும் வந்துவிட்டது. பூமியை அழிக்கின்றவர்களை அழிப்பதற்கான வேளையும் வந்துவிட்டது.”</verse>
				<verse number="19">பின்பு பரலோகத்திலுள்ள இறைவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது. அப்போது அவருடைய ஆலயத்திலுள்ள அவருடைய உடன்படிக்கையின் பெட்டகம் காணப்பட்டது. அவ்வேளையில் மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கத்தின் சத்தங்களும், பூமியதிர்ச்சியும், பெரிய ஆலங்கட்டி மழையும் ஏற்பட்டன.</verse>
			</chapter>
			<chapter number="12">
				<verse number="1">பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது. சூரியனை ஆடையாக அணிந்திருந்த ஒரு பெண் காணப்பட்டாள். அவளது பாதங்களின் கீழே நிலா இருந்தது. அவளது தலையின்மேல், பன்னிரண்டு நட்சத்திரங்களைக்கொண்ட ஒரு கிரீடம் இருந்தது.</verse>
				<verse number="2">அவள் கர்ப்பிணியாக இருந்தாள். குழந்தை பெறப் போகும் பிரசவ வலியில் இருந்தபடியினால், அவள் வேதனையில் கதறினாள்.</verse>
				<verse number="3">அப்போது பரலோகத்திலே இன்னொரு அடையாளம் தோன்றியது. சிவப்பு நிறமுடைய மிகப் பெரிய இராட்சதப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் ஏழு தலைகளின் மீதும் ஏழு கிரீடங்கள் இருந்தன.</verse>
				<verse number="4">அதனுடைய வால், வானத்து நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை வாரி எடுத்து, அவைகளை பூமியின் மேல் வீசியெறிந்தது. பிரசவிக்கும் தறுவாயிலிருந்த அந்தப் பெண், குழந்தையைப் பெற்ற உடனே, அந்தக் குழந்தையை விழுங்குவதற்காக அந்த இராட்சதப் பாம்பு அவள் முன்னால் நின்றது.</verse>
				<verse number="5">“எல்லா மக்கள் இனங்களையும் இரும்புக் கோலால் ஆளுகை செய்யும்” ஒரு ஆண் பிள்ளையை அவள் பெற்றெடுத்தாள். அவளுடைய பிள்ளை மேலே இறைவனிடத்திற்கும், அவருடைய அரியணைக்கும் இழுத்துக்கொள்ளப்பட்டது.</verse>
				<verse number="6">அந்தப் பெண்ணோ பாலைநிலத்திற்குத் தப்பி ஓடினாள். அங்கு இறைவனால் ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்தில் 1,260 நாட்கள் பராமரிக்கப்பட்டாள்.</verse>
				<verse number="7">பரலோகத்தில் யுத்தம் தொடங்கியது. மிகாவேலும், அவனுடைய தூதர்களும் அந்த இராட்சதப் பாம்புக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். அந்த இராட்சதப் பாம்பும் அதன் தூதர்களும் எதிர்த்து யுத்தம் செய்த போதிலும்,</verse>
				<verse number="8">அவை வெற்றி பெறவில்லை. அதனால் பரலோகத்தில் தமது இடத்தை அவை இழந்து போயின.</verse>
				<verse number="9">அந்தப் பெரிய இராட்சதப் பாம்பு கீழே தள்ளப்பட்டது. இதுவே முழு உலகத்தையும் ஏமாற்றுகிற பழங்காலத்துப் பாம்பு. பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட இவனும், இவனுடைய தூதர்களும் பூமியிலே விழும்படி தள்ளப்பட்டார்கள்.</verse>
				<verse number="10">அப்போது பரலோகத்திலே உரத்த சத்தமான ஒரு குரல் இவ்வாறு ஒலிப்பதை நான் கேட்டேன்: “இப்போது, நமது இறைவனுடைய இரட்சிப்பும், வல்லமையும், அரசும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் வந்துவிட்டன. ஏனெனில் இறைவனுக்கு முன்பாக, இரவும் பகலும் நம்முடைய சகோதரர்களை குற்றம் சாட்டுகின்றவன், கீழே வீசித் தள்ளப்பட்டுவிட்டான்.</verse>
				<verse number="11">அவர்களோ ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலும், தங்களுடைய சாட்சியின் வார்த்தையினாலும் அவனை வெற்றிகொண்டார்கள். அவர்கள் தங்களுடைய உயிர் மீது ஆசை வைக்கவில்லை. அதனால் மரணத்துக்கும் அஞ்சவில்லை.</verse>
				<verse number="12">ஆகையால் பரலோகங்களே! அவைகளில் குடியிருக்கின்றவர்களே! நீங்கள் மகிழ்ச்சிகொள்ளுங்கள். பூமிக்கும் கடலுக்கும் ஐயோ பேரழிவு, ஏனெனில் பிசாசு கீழே உங்களிடம் வந்திருக்கிறான்! அவன் தன்னுடைய நாட்கள் கொஞ்சம் என்பதை அறிந்து, கடுங்கோபம் கொண்டிருக்கிறான்.”</verse>
				<verse number="13">தான் கீழே தள்ளப்பட்டு பூமியில் வீழ்ந்ததைக் கண்ட இராட்சதப் பாம்பு, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துரத்திச் சென்றது.</verse>
				<verse number="14">பாலைநிலத்திலே தனக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இடத்திற்குப் பறந்து போகக் கூடியதாக, அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய இராஜாளி பருந்தின் இரண்டு சிறகுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவள் அந்த இராட்சதப் பாம்பின் பிடியில் அகப்படாமல், அங்கே ஒரு காலமும் காலங்களும் அரைக் காலமும் பராமரிக்கப்படுவாள்.</verse>
				<verse number="15">அப்போது அந்த இராட்சதப் பாம்பு வெள்ளப் பெருக்கால் அந்தப் பெண்ணை வாரிக் கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து ஆறு போன்று தண்ணீரை அவளுக்குப் பின்னால் கக்கி விட்டது.</verse>
				<verse number="16">ஆனால் பூமியோ தன் வாயைத் திறந்து, அந்த இராட்சதப் பாம்பு தன் வாயிலிருந்து கக்கிய அந்தத் தண்ணீரை விழுங்கி, அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது.</verse>
				<verse number="17">அப்போது அந்த இராட்சதப் பாம்பு அந்தப் பெண்ணின் மேல் கடுங்கோபம்கொண்டு, இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்,</verse>
				<verse number="18">இயேசுவினுடைய சாட்சியைக் காத்துக்கொள்கின்ற அவளுடைய சந்ததியில் எஞ்சியிருக்கிற மற்றவர்களுக்கு எதிராக யுத்தம் செய்யப் போனது.</verse>
			</chapter>
			<chapter number="13">
				<verse number="1">அது கடற்கரையில் நின்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மிருகம் கடலில் இருந்து வெளியே வருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும், ஏழு தலைகளும் இருந்தன. அதன் பத்துக் கொம்புகளிலும், பத்து கிரீடங்கள் இருந்தன. அதன் ஒவ்வொரு தலையிலும் இறைவனை அவமதிக்கும் ஒரு பெயர் காணப்பட்டது.</verse>
				<verse number="2">நான் பார்த்த அந்த மிருகம் ஒரு சிறுத்தையைப் போல் காணப்பட்டது. ஆனால் அதன் கால்கள் கரடிகளின் கால்களைப் போலவும், அதன் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் காணப்பட்டது. இராட்சதப் பாம்பானது தனது வல்லமையையும் தனது அரியணையையும் தனது பெரிதான அதிகாரத்தையும் அந்த மிருகத்திற்குக் கொடுத்தது.</verse>
				<verse number="3">அந்த மிருகத்தின் தலைகளில் ஒன்றில் பாரதூரமான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது. ஆனாலும் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தக் காயம் குணமடைந்திருந்தது. உலகத்தார் அனைவரும் வியப்படைந்தவர்களாய் அந்த மிருகத்தைப் பின்பற்றிச் சென்றனர்.</verse>
				<verse number="4">அந்த மிருகத்திற்கு இராட்சதப் பாம்பு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அத்தோடு, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று சொல்லி அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கினார்கள்.</verse>
				<verse number="5">அந்த மிருகத்திற்குப் பெருமையான பேச்சையும், அவமதிப்பான வார்த்தைகளையும் பேசுகின்ற ஒரு வாய் கொடுக்கப்பட்டது. 42 மாதங்கள் தன் இஷ்டப்படி செயல்பட அதற்கு அதிகாரமும் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="6">அது இறைவனை நிந்திப்பதற்காகவும், அவருடைய பெயரையும் அவருடைய வாசஸ்தலத்தையும் பரலோகத்தில் வாழ்கின்றவர்களையும் அவதூறாய் பேசுவதற்காகவும் தன் வாயைத் திறந்தது.</verse>
				<verse number="7">பரிசுத்தவான்களை எதிர்த்து யுத்தம் செய்து, அவர்களை வெற்றிகொள்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அத்தோடு, ஒவ்வொரு கோத்திரத்தையும், மக்களையும், மொழியையும், நாட்டையும் சேர்ந்தவர்கள் மேல் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="8">உலகம் படைக்கப்பட்டதிலிருந்து எவர்களுடைய பெயர்களெல்லாம் ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான வாழ்வின் புத்தகத்தில் எழுதப்படவில்லையோ அவர்கள் எல்லோரும் அந்த மிருகத்தை வணங்குவார்கள்.</verse>
				<verse number="9">கேட்பதற்கு காது உள்ளவன் கேட்கட்டும். ஏனெனில்,</verse>
				<verse number="10">“எவராவது சிறைபிடிக்கப்பட விதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். எவராவது வாளால் கொல்லப்பட விதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வாளால் கொல்லப்படுவார்கள்.” ஆகவே, பரிசுத்தவான்கள் இந்நிலையில் பொறுமையும் விசுவாசமும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="11">பின்பு, பூமியிலிருந்து வேறொரு மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப் போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப் போல பேசியது.</verse>
				<verse number="12">இது, முதல் மிருகத்தின் முழு அதிகாரத்தையும் அதன் சார்பாகப் பிரயோகித்தது. அத்துடன், படுகாயமடைந்து குணமடைந்திருந்த அந்த முதல் மிருகத்தை பூமியும் அதில் குடியிருக்கின்றவர்களும் வணங்கும்படி செய்தது.</verse>
				<verse number="13">இந்த மிருகம் பெரிய அற்புத அடையாளங்களைச் செய்து, எல்லா மனிதரும் காணும்படியாக வானத்திலிருந்து பூமியின் மேல் நெருப்பு வந்து விழும்படியும் செய்தது.</verse>
				<verse number="14">முதல் மிருகத்தின் வல்லமையானது அதன் சார்பாக இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டதனால், இது அடையாளங்களைச் செய்து பூமியின் மக்களை ஏமாற்றியது. அத்தோடு, வாள்வெட்டால் காயமடைந்தும் இன்னும் உயிருடன் இருக்கின்ற அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ண அதற்கு ஒரு உருவச் சிலையைச் செய்யும்படி பூமியின் மக்களுக்கு உத்தரவிட்டது.</verse>
				<verse number="15">முதல் மிருகத்தின் உருவச் சிலையைப் பேச வைக்கவும் உருவச் சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் கொலை செய்யவும், அந்த உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கும் வல்லமையானது இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="16">அத்துடன் இந்த மிருகமானது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், குடியுரிமை பெற்றவர்கள், அடிமைகள் என எல்லோரும் தங்கள் வலது கையிலாவது தங்கள் நெற்றியிலாவது ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது.</verse>
				<verse number="17">இதனால், அந்த மிருகத்தின் பெயரை அல்லது அதன் பெயருக்குரிய எண்ணை அடையாளமாகப் பெறாத எவராலும் எதையும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது.</verse>
				<verse number="18">இதை புரிந்துகொள்ள ஞானம் தேவை. அறிவாற்றல் உடையவர் அந்த மிருகத்தின் எண்ணைக் கணக்குப் போட்டுப் பார்க்கட்டும். ஏனெனில் அது ஒரு மனிதனுக்குரிய எண். அந்த எண் 666 ஆகும்.</verse>
			</chapter>
			<chapter number="14">
				<verse number="1">பின்பு நான் பார்த்தபோது இதோ ஆட்டுக்குட்டியானவர், அங்கே சீயோன் மலையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருடைய பெயரும், அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர் அவருடன் நின்று கொண்டிருந்தார்கள்.</verse>
				<verse number="2">அப்போது, பரலோகத்திலிருந்து ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்து ஓடுகின்ற வெள்ளத்தின் இரைச்சலைப் போலவும், பலமாய் முழங்குகிற இடிமுழக்கத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தத் தொனி வீணை வாசிக்கின்றவர்கள் தங்கள் வீணைகளை மீட்டுகின்ற நாதம் போல் இருந்தது.</verse>
				<verse number="3">அரியணைக்கு முன்பாகவும், அந்த நான்கு உயிரினங்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் அவர்கள் ஒரு புதிய பாடலைப் பாடினார்கள். பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த 1,44,000 பேரைத் தவிர வேறு எவராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள முடியவில்லை.</verse>
				<verse number="4">அவர்கள் பெண்களால் தங்களைத் தீட்டுப்படுத்தாமல் தூய்மையைக் காத்துக்கொண்டவர்கள். ஆட்டுக்குட்டியானவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் அவரைப் பின்பற்றி போகின்றவர்கள். இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்குமான முதற்கனியாக, மனிதரிடையே இருந்து மீட்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="5">அவர்களுடைய வாய்களில் இருந்து ஒரு பொய்யும் வெளிப்படவில்லை. அவர்கள் எவ்வித குற்றமும் காணப்படாதவர்கள்.</verse>
				<verse number="6">பின்பு இன்னொரு இறைதூதன் நடுவானத்திலே பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவனிடம் பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களுக்கும், கோத்திரத்தினருக்கும், மொழியினருக்கும், நாட்டினருக்கும் பிரசித்தப்படுத்துவதற்கு நித்திய நற்செய்தி இருந்தது.</verse>
				<verse number="7">அவன் உரத்த குரலில், “இறைவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே மகிமையைக் கொடுங்கள். ஏனெனில் அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்துவிட்டது. வானங்களையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்தவரையே ஆராதனை செய்யுங்கள்” என்று சொன்னான்.</verse>
				<verse number="8">இரண்டாவது இறைதூதன் அவனைத் தொடர்ந்து வந்து, “ ‘விழுந்தது! மகா பாபிலோன் விழுந்து போயிற்று,’ அவளே தனது பாலியல் ஒழுக்கக்கேடு எனப்பட்ட கோப மதுவை, எல்லா மக்கள் இனத்தவரும் அருந்தும்படி செய்தவள்” என்றான்.</verse>
				<verse number="9">மூன்றாவது இறைதூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும் மிருகத்தின் உருவச் சிலையையும் வணங்கி, தனது நெற்றியிலோ அல்லது கையிலோ அதனுடைய அடையாளத்தைப் பெற்றுக்கொண்டால்,</verse>
				<verse number="10">அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான். அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான்.</verse>
				<verse number="11">அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் மேலே எழுந்துகொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவச் சிலையையும் வணங்குகின்றவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கின்றவர்களுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதல் இருக்காது.”</verse>
				<verse number="12">இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து இயேசுவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பரிசுத்தவான்கள், இந்நிலையில் பொறுமையோடு சகிப்புத் தன்மை உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.</verse>
				<verse number="13">அப்போது நான், பரலோகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இன்று முதல், கர்த்தரில் விசுவாசிகளாக மரணிக்கின்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது” என அது சொன்னது. அதற்கு பரிசுத்த ஆவியானவர், “ஆம், அவர்கள் தங்களுடைய கடின உழைப்பிலிருந்து இளைப்பாறுவார்கள். ஏனெனில் அவர்களுடைய நற்செயல்களும் அவர்களுடனேயேகூடப் போகும்” என்றார்.</verse>
				<verse number="14">பின்பு நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக ஒரு வெண்ணிற மேகத்தையும், அந்த மேகத்தின் மேல் மனுமகனைப் போல் ஒருவர் அமர்ந்திருப்பதையும் கண்டேன். அவருடைய தலையில் ஒரு தங்கக் கிரீடமும், கையில் கூர்மையான ஒரு அரிவாளும் இருந்தன.</verse>
				<verse number="15">அப்போது இன்னொரு இறைதூதன் ஆலயத்தைவிட்டு வெளியே வந்து மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவரை நோக்கி உரத்த சத்தமிட்டு அழைத்து, “உம்முடைய அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறுவடைக்கான காலம் வந்துவிட்டது. ஏனெனில் பூமியின் அறுவடை முற்றிவிட்டது” என்றான்.</verse>
				<verse number="16">எனவே மேகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவர் தனது அரிவாளை பூமியின் மேல் நீட்டினார். அப்போது பூமி அறுவடை செய்யப்பட்டது.</verse>
				<verse number="17">பரலோகத்திலுள்ள ஆலயத்திலிருந்து இன்னொரு இறைதூதன் வெளியே வந்தான். அவனும் கூர்மையான ஒரு அரிவாளை வைத்திருந்தான்.</verse>
				<verse number="18">வேறொரு இறைதூதன் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் நெருப்புக்குப் பொறுப்பாயிருக்கின்றவன். அவன் கூர்மையான அரிவாளை வைத்திருந்த இறைதூதனிடம் உரத்த குரலில், “உன்னுடைய கூர்மையான அரிவாளை எடுத்து, பூமியின் திராட்சைக் கொடியிலிருந்து திராட்சை பழக் குலைகளை அறுத்து சேர்த்துக்கொள். ஏனெனில், அதன் திராட்சைப் பழங்கள் பழுத்துவிட்டன” என்றான்.</verse>
				<verse number="19">அப்போது அந்த இறைதூதன், தனது அரிவாளை பூமியின் மேல் நீட்டி, பூமியின் திராட்சைப் பழங்களை வெட்டி எடுத்து, இறைவனுடைய கோபத்தின் பெரிய திராட்சை ஆலைக்குள் எறிந்தான்.</verse>
				<verse number="20">அவை நகரத்திற்கு வெளியே திராட்சை ஆலையில் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையிலிருந்து இரத்தம் வெளியே பெருக்கெடுத்து, குதிரைகளின் கடிவாளம் வரை உயர்ந்து பெருகி, சுமார் 296 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பாய்ந்தது.</verse>
			</chapter>
			<chapter number="15">
				<verse number="1">நான் பரலோகத்திலே பெரும் வியப்புக்குரிய இன்னுமொரு அடையாளத்தைப் பார்த்தேன்: ஏழு இறைதூதர்கள் ஏழு வாதைகளைத் தயார்படுத்தியவர்களாக நின்றார்கள். இவையே கடைசி வாதைகள். ஏனெனில் இவற்றுடன் இறைவனுடைய கோபம் நிறைவுபெறும்.</verse>
				<verse number="2">நெருப்பு கலந்திருந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். அதற்கருகில் அந்த மிருகத்தையும், அதன் உருவத்தையும், அதன் பெயருக்குரிய எண்ணையும் வெற்றிகொண்டவர்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட வீணைகளை வைத்திருந்தார்கள்.</verse>
				<verse number="3">அவர்கள் இறைவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள்: “எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே! உமது செயல்கள் பெரிதானவை. அவை வியக்கத்தகுந்தவை. மக்கள் இனங்கள் அனைத்துக்கும் அரசராய் இருக்கின்றவரே! உமது வழிகள் நீதியும் சத்தியமுமானவை.</verse>
				<verse number="4">கர்த்தாவே! யார் உமக்குப் பயப்படாதிருப்பார்கள்? யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடாதிருப்பார்கள்? ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா மக்கள் இனத்தவரும் வந்து உமக்கு முன்பாக ஆராதனை செய்வார்கள். ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”</verse>
				<verse number="5">இதற்குப் பின்பு நான் பார்த்தபோது பரலோகத்திலுள்ள ஆலயமாகிய சாட்சிக் கூடாரம் திறக்கப்பட்டது.</verse>
				<verse number="6">அந்த ஆலயத்திலிருந்து ஏழு இறைதூதர்கள் ஏழு வாதைகளைத் தங்களுடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர்கள் சுத்தமான, பிரகாசமுள்ள மென்பட்டு உடையை அணிந்திருந்தவர்களாய், தங்கள் மார்பைச் சுற்றி தங்கச் சால்வைகளைக் கட்டியிருந்தார்கள்.</verse>
				<verse number="7">அப்போது, அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, என்றென்றும் வாழ்கின்ற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்த ஏழு தங்கக் கிண்ணங்களை அந்த ஏழு இறைதூதர்களுக்குக் கொடுத்தது.</verse>
				<verse number="8">இறைவனுடைய மகிமையிலிருந்தும், அவருடைய வல்லமையிலிருந்தும் எழுந்த புகையினால் அந்த ஆலயம் நிறைந்திருந்தது. அந்த ஏழு இறைதூதர்களுடைய ஏழு வாதைகள் நிறைவேறும் வரை ஒருவராலும் அந்த ஆலயத்திற்குள் உட்பிரவேசிக்க முடியவில்லை.</verse>
			</chapter>
			<chapter number="16">
				<verse number="1">பின்பு, ஆலயத்திலிருந்து வந்த ஒரு குரல் அந்த ஏழு இறைதூதர்களிடம், “போங்கள், இறைவனுடைய கோபத்தின் ஏழு கிண்ணங்களையும் பூமியின் மேல் ஊற்றுங்கள்” என்று உரத்த சத்தமாய் சொல்வதைக் கேட்டேன்.</verse>
				<verse number="2">முதலாவது இறைதூதன் போய் தனது கிண்ணத்தில் உள்ளதைத் தரையில் ஊற்றினான். அப்போது மிருகத்தின் அடையாளம் உள்ளவர்கள் மேலும் அதன் உருவச் சிலையை வணங்கியவர்கள் மேலும் வேதனை உண்டாக்கும் கொடிய புண்கள் ஏற்பட்டன.</verse>
				<verse number="3">இரண்டாவது இறைதூதன், தனது கிண்ணத்தில் உள்ளதைக் கடலில் ஊற்றினான். அது இறந்தவனின் இரத்தத்தைப் போல் மாறியது. அப்போது கடலிலுள்ள எல்லா உயிரினங்களும் இறந்து போயின.</verse>
				<verse number="4">மூன்றாவது இறைதூதன், தனது கிண்ணத்தில் உள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றினான். அவையெல்லாம் இரத்தமாகின.</verse>
				<verse number="5">பின்பு தண்ணீருக்குப் பொறுப்பாயிருந்த இறைதூதன் இப்படியாக சொன்னதைக் கேட்டேன். அவன், “இருக்கின்றவரும், இருந்தவருமான பரிசுத்தரே! நீர் நீதியுள்ளவர். நீர் நியாயமுள்ளவராய் இந்த நியாயத்தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்.</verse>
				<verse number="6">இவர்கள் உமது பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும், இறைவாக்கினரின் இரத்தத்தையும் சிந்தியவர்கள். எனவே, நீர் அவர்களுக்கு இரத்தத்தைக் குடிக்கக் கொடுத்தது அவர்களுக்கு ஏற்ற தண்டனையே” என்றான்.</verse>
				<verse number="7">அப்போது பலிபீடத்திலிருந்து: “ஆம், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே! உமது நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவை” என்று பதில் உரைப்பதைக் கேட்டேன்.</verse>
				<verse number="8">நான்காவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை சூரியன் மேல் ஊற்றினான். அப்போது மனிதரை நெருப்பினால் சுட்டெரிக்கும் வல்லமை சூரியனுக்குக் கொடுக்கப்பட்டது.</verse>
				<verse number="9">அந்தக் கடும் வெப்பத்தினால் மக்கள் சுட்டெரிக்கப்பட்டபோது, அவர்கள் இந்த வாதைகளின் மேல் அதிகாரமுள்ள இறைவனின் பெயரை சபித்தார்களே தவிர, மனந்திரும்பி இறைவனுக்கு மகிமையைச் செலுத்த மறுத்தார்கள்.</verse>
				<verse number="10">ஐந்தாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை மிருகத்தின் அரியணையின் மேல் ஊற்றினான். அப்போது அவனுடைய அரசு இருளில் மூழ்கியது. வேதனையினால் மனிதர் தங்கள் நாவுகளைக் கடித்துக் கொண்டார்கள்.</verse>
				<verse number="11">அவர்கள் தங்களுடைய வேதனையின் காரணமாகவும், அவர்களின் புண்களின் காரணமாகவும், பரலோகத்தின் இறைவனை சபித்தார்களே தவிர, தாங்கள் செய்ததைவிட்டு மனந்திரும்ப மறுத்தார்கள்.</verse>
				<verse number="12">ஆறாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை, யூப்பிரட்டீஸ் எனப்பட்ட பெரிய ஆற்றின் மேல் ஊற்றினான். அப்போது கிழக்கிலிருந்து வரும் அரசர்களுக்கு வழியை ஏற்படுத்தும்படி அதன் தண்ணீர் வற்றிப் போயிற்று.</verse>
				<verse number="13">அதற்குப் பின்பு தவளைகளைப் போல் காணப்பட்ட மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன். அவை அந்த இராட்சதப் பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், அந்தப் போலி இறைவாக்கினனின் வாயிலிருந்தும் வெளியே வந்தன.</verse>
				<verse number="14">அவை அற்புத அடையாளங்களைச் செய்து காட்டும் பிசாசுகளின் ஆவிகள். எல்லாம் வல்ல இறைவனுடைய பெரிதான நாளில் அவருக்கு எதிராக நடக்கப் போகும் யுத்தத்திற்காக, உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்கும்படி அவை புறப்பட்டுச் சென்றன.</verse>
				<verse number="15">“இதோ, நான் ஒரு திருடனைப் போல் வருகின்றேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது ஆடைகளை அணிய ஆயத்தமாய் வைத்திருக்கின்றவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்போது அவன் நிர்வாணமாய் நடக்காமலும், பகிரங்கமாய் வெட்கத்துக்கு உள்ளாகாமலும் இருப்பான்.”</verse>
				<verse number="16">அதன்பின்பு, அவை எபிரேய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அரசர்களை ஒன்றுகூட்டிச் சேர்த்தன.</verse>
				<verse number="17">ஏழாவது இறைதூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை ஆகாயத்திலே ஊற்றினான். அப்போது ஆலயத்தில், அரியணையிலிருந்து வந்த ஒரு குரல் “செய்தாயிற்று!” என்று உரத்த சத்தமாய் சொல்வதைக் கேட்டேன்.</verse>
				<verse number="18">அப்போது மின்னல்களும் பேரிரைச்சல்களும் இடிமுழக்கங்களும் பெரிய பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன. மனிதர் பூமியில் தோன்றிய நாள்முதல் அதுபோன்ற பாரிய பூமியதிர்ச்சி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அந்த பூமியதிர்ச்சி அவ்வளவு பலமாய் இருந்தது.</verse>
				<verse number="19">மகா நகரமான பாபிலோன் மூன்று பகுதிகளாகப் பிளவுபட்டது. மற்ற மக்கள் இனங்களின் நகரங்கள் இடிந்து விழுந்தன. இறைவன் மகா பாபிலோனை நினைத்துப் பார்த்தவராய், திராட்சை மது நிரப்பி தம்முடைய கடுங்கோப கிண்ணத்தை அவளுக்குப் பருகக் கொடுத்தார்.</verse>
				<verse number="20">தீவுகள் அனைத்தும் மறைந்து போயின. மலைகள் காணப்படவில்லை.</verse>
				<verse number="21">வானத்திலிருந்து மிகப் பெரிய ஆலங்கட்டிகள் மனிதர்கள் மேல் வந்து விழுந்தன. அவை ஒவ்வொன்றும் சுமார் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அந்த ஆலங்கட்டியினால் ஏற்பட்ட வாதையின் காரணமாக மனிதர்கள் இறைவனை நிந்தித்தார்கள். ஏனெனில் அந்த வாதை மிகவும் கொடியதாய் இருந்தது.</verse>
			</chapter>
			<chapter number="17">
				<verse number="1">ஏழு கிண்ணங்களை வைத்திருந்த, அந்த ஏழு இறைதூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, அநேக நீர்நிலைகளின் மேல் உட்கார்ந்திருக்கிற மாபெரும் விலைமாதுக்கு கிடைக்கப் போகும் தண்டனையை நான் உனக்குக் காண்பிக்கிறேன்.</verse>
				<verse number="2">பூமியின் அரசர்கள் அவளுடன் தகாத உறவு கொண்டார்கள். அவளுடைய பாலியல் ஒழுக்கக்கேட்டின் திராட்சை மதுவினால் பூமியில் குடியிருக்கின்றவர்கள் போதையுற்றிருந்தார்கள்” என்றான்.</verse>
				<verse number="3">பின்பு தூதன் என்னை ஆவியானவரால் பாலைநிலத்துக்குக் கொண்டு சென்றான். அங்கே ஒரு பெண் சிவப்பு நிறமுள்ள ஒரு மிருகத்தின் மேல் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அந்த மிருகம் இறைவனை அவமதிக்கும் பெயர்களால் மூடப்பட்டிருந்தது. அதற்கு ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் இருந்தன.</verse>
				<verse number="4">அந்தப் பெண் ஊதா நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் ஆடை அணிந்தவளாய், தங்கத்தினாலும் மாணிக்கக் கற்களினாலும் முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டவளாய் இருந்தாள். அருவருப்பான காரியங்களினாலும், தன்னுடைய முறைகேடான பாலுறவின் அசுத்தத்தினாலும் நிறைந்திருந்த ஒரு தங்கக் கிண்ணத்தை அவள் தன் கையில் வைத்திருந்தாள்.</verse>
				<verse number="5">அவளுடைய நெற்றியிலே மறைபொருளான ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது: மாபெரும் பாபிலோன், விலைமாதுக்களுக்கும், பூமியின் எல்லா அருவருப்புகளுக்கும் தாய்.</verse>
				<verse number="6">அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தை, அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தத்தை அருந்தி மதுவெறி கொண்டிருந்ததை நான் கண்டேன். அவளைக் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன்.</verse>
				<verse number="7">அப்போது அந்த இறைதூதன் என்னிடம், “நீ ஏன் வியப்படைகிறாய்? அந்தப் பெண்ணையும், அவளை சுமந்து செல்கின்ற ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்ட மிருகத்தையும் பற்றிய மறைபொருளை நான் உனக்கு விளக்கிச் சொல்கின்றேன்.</verse>
				<verse number="8">நீ கண்ட அந்த மிருகம், முன்பு ஒரு காலத்தில் இருந்தது. இப்பொழுதோ இல்லை. ஆனால் அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து தன் அழிவுக்குச் செல்லும். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து வாழ்வின் புத்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்களாய் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் அதைக் காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில் முன்னொரு காலத்தில் இருந்த அந்த மிருகம் இப்போது இல்லை, ஆனால் இனி அது வரப் போகின்றது.</verse>
				<verse number="9">“இதை விளங்கிக்கொள்ள ஞானமுள்ள மனம் தேவை. அந்த ஏழு தலைகள், அந்தப் பெண் உட்கார்ந்திருக்கின்ற ஏழு மலைகளைக் குறிக்கின்றன.</verse>
				<verse number="10">அவை ஏழு அரசர்களாம். அவர்களில் ஐந்து பேர் வீழ்ச்சியடைந்தார்கள். ஒருவன் இப்போது இருக்கின்றான். மற்றவனோ இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு சிறிது காலம் மட்டுமே நிலைத்திருக்கும்.</verse>
				<verse number="11">முன்பு இருந்ததும், இப்போது இல்லாதிருக்கின்றதுமான அந்த மிருகமே எட்டாவது அரசன். அவன் அந்த ஏழு அரசர்களைச் சேர்ந்தவனாகவும், தனது அழிவை அடையப் போகின்றவனுமாய் இருக்கின்றான்.</verse>
				<verse number="12">“நீ கண்ட பத்துக் கொம்புகள், அரசை இன்னமும் பெற்றுக்கொள்ளாத பத்து அரசர்கள். ஆனால் அவர்கள் அந்த மிருகத்துடனே சேர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு அரசர்களாக அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.</verse>
				<verse number="13">அவர்கள் ஒரே நோக்குடையவர்களாயிருந்து, தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.</verse>
				<verse number="14">அவர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு எதிராக யுத்தம் செய்வார்கள். ஆனால் அவர் ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவரும், அரசர்களுக்கெல்லாம் அரசருமாய் இருப்பதால் அவர்களை அவர் வெற்றிகொள்வார். அவரைப் பின்பற்றுகின்றவர்களும் வெற்றிகொள்வார்கள். இவர்களே இறைவனால் அழைக்கப்பட்டவர்கள், தெரிவு செய்யப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்” என்றான்.</verse>
				<verse number="15">மறுபடியும் அந்த இறைதூதன் என்னிடம், “அந்த விலைமாது உட்கார்ந்திருந்த இடத்தில் நீ கண்ட அந்த தண்ணீரானது, மக்களையும் மக்கள் கூட்டத்தினரையும் இனங்களையும் பல மொழிகளைப் பேசுகின்றவர்களையும் குறிக்கின்றது.</verse>
				<verse number="16">நீ கண்ட மிருகமும் அந்த பத்துக் கொம்புகளும், அந்த விலைமாதின் மீது வெறுப்படையும். அவை அவளை அழித்து நிர்வாணமாக்கும். அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரித்து விடும்.</verse>
				<verse number="17">ஏனெனில் இறைவன் தமது நோக்கத்தை நிறைவேற்றும்படியாக இந்த எண்ணத்தை அவர்களுடைய இருதயங்களில் வைத்தார். அதன்படி, இறைவனுடைய வார்த்தைகள் நிறைவேறும் வரை அவர்கள் எல்லோரும் தங்களது ஆட்சி செய்யும் வல்லமையை அந்த மிருகத்திடம் கையளிப்பதற்கு உடன்பட வைத்தார்.</verse>
				<verse number="18">நீ கண்ட அந்தப் பெண் பூமியின் அரசர்கள் மேல் ஆட்சி செலுத்துகின்ற மாபெரும் நகரத்தைக் குறிக்கிறாள்” என்றான்.</verse>
			</chapter>
			<chapter number="18">
				<verse number="1">இதற்குப் பின்பு இன்னொரு இறைதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன். அவன் மிகுந்த அதிகாரம் உடையவனாயிருந்தான். அவனுடைய மாட்சிமையினால் பூமி பிரகாசமடைந்தது.</verse>
				<verse number="2">அவன் வல்லமையான குரலிலே சத்தமிட்டுச் சொன்னதாவது: “ ‘விழுந்தது! விழுந்தது! மாபெரும் பாபிலோன் விழுந்து போயிற்று!’ பிசாசுகளுக்கு அவள் உறைவிடமானாள். எல்லாத் தீய ஆவிகளுக்கும் இருப்பிடமானாள். அவள் அசுத்தமும் அருவருப்புமான எல்லாப் பறவைகளுக்கும், வெறுக்கத்தக்க மிருகங்களுக்கும் புகலிடமானாள்.</verse>
				<verse number="3">ஏனெனில் எல்லா மக்கள் இனங்களும் அவளது பாலியல் ஒழுக்கக்கேட்டின் மதுவினால் வெறி கொண்டார்கள். பூமியின் அரசர்கள் அவளோடு தகாத உறவு கொண்டார்கள். பூமியின் வர்த்தகர்கள் அவளுடைய மிதமிஞ்சிய சுகபோகங்களினால் செல்வந்தர் ஆனார்கள்.”</verse>
				<verse number="4">பின்பு பரலோகத்திலிருந்து வந்த இன்னுமொரு குரலைக் கேட்டேன், அது சொன்னதாவது: “ ‘என்னுடைய மக்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்,’ அப்போது நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்குகொள்ளாது இருப்பீர்கள். அவளுடைய வாதைகளும் உங்களுக்கு வராமலிருக்கும்;</verse>
				<verse number="5">அவளுடைய பாவங்கள் வானளவு குவிந்திருக்கின்றன. அவளுடைய குற்றங்களை இறைவன் நினைத்துப் பார்த்திருக்கிறார்.</verse>
				<verse number="6">அவள் மற்றவர்களுக்குக் கொடுத்தது போல் அவளுக்குத் திருப்பிக் கொடுங்கள். அவள் செய்ததற்குப் பதிலாக இரண்டு மடங்காக அவளுக்குச் செய்யுங்கள். அவள் கலந்து கொடுத்த கிண்ணத்தில் இரண்டு மடங்காக அவளுக்குக் கலந்து கொடுங்கள்.</verse>
				<verse number="7">எந்தளவு அவள் தன்னைத் தானே மேன்மைப்படுத்தி சொகுசாக வாழ்ந்தாளோ, அதேயளவு அவளுக்கு கடும் வேதனையையும் துக்கத்தையும் கொடுங்கள். அவள் தன் இருதயத்தில் பெருமிதத்தோடு, ‘நான் அரசியைப் போல் அமர்ந்திருக்கிறேன், நான் ஒரு விதவை அல்ல, நான் ஒருபோதும் துக்கப்படுவதில்லை’ என கூறிக்கொள்கிறாள்.</verse>
				<verse number="8">ஆகையால் ஒரே நாளிலே, அவளுக்குரிய வாதைகளான மரணமும் புலம்பலும் பஞ்சமும் அவள் மீது வரும். அவள் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவாள். ஏனெனில், அவளை நியாயம் தீர்க்கின்ற இறைவனாகிய கர்த்தர் வல்லமையானவர்.</verse>
				<verse number="9">“அவளுடன் தகாத உறவுகொண்டு, அவளுடைய சுகபோகத்தில் பங்கு கொண்ட பூமியின் அரசர்கள் அவள் சுட்டெரிக்கப்படுகின்ற புகையைக் கண்டு, அவளுக்காக அழுது புலம்புவார்கள்.</verse>
				<verse number="10">அவளுடைய கடும் வேதனையைக் கண்டு, அவர்கள் பயம் அடைந்தவர்களாய் தொலைதூரத்தில் நின்றபடி, “ ‘ஐயோ பேரழிவு, மகா நகரமே, ஐயோ பேரழிவு! பாபிலோனே, வல்லமையான நகரமே! ஒரு மணி நேரத்தில் உனக்கு அழிவு வந்துவிட்டதே!’ என்று கதறுவார்கள்.</verse>
				<verse number="11">“அவர்களுடைய வர்த்தகப் பொருட்களை வாங்க இனி யாரும் இல்லாத காரணத்தால், பூமியில் உள்ள வர்த்தகர்கள் அவளுக்காக அழுது புலம்புவார்கள்.</verse>
				<verse number="12">அவர்கள் ஈடுபட்ட வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், முத்துக்கள், மென்மையான நாரிழை பட்டு, ஊதாநிறத் துணி, பட்டுத்துணி, சிவப்புத்துணி; பலவித நறுமண மரங்கள், தந்தத்தாலும், விலையுயர்ந்த மரத்தாலும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும், பளிங்குக் கல்லினாலும் செய்யப்பட்ட பொருட்கள்,</verse>
				<verse number="13">கறுவா, வாசனைப் பொருட்கள், நறுமணத்தூள், வெள்ளைப்போளம், சாம்பிராணி, திராட்சை ரசம், ஒலிவ எண்ணெய், உயர்தர மாவு, கோதுமை, கால்நடைகள், செம்மறியாடுகள், குதிரைகள், வண்டிகள், அடிமைகள் மற்றும் மனித உயிர்கள் என்பன அடங்கியிருந்தன.</verse>
				<verse number="14">“அவர்கள், ‘நீ ஆசைப்பட்ட கனிகள் உன்னைவிட்டுப் போய் விட்டன. உனது சுகபோகமும் மகிமையும் மறைந்து போய் விட்டன. அவை இனியொருபோதும் திரும்பி வராது’ என்று சொல்வார்கள்.</verse>
				<verse number="15">இந்தப் பொருட்களை விற்று அவளிடமிருந்து செல்வத்தைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள், அவளுடைய வேதனையைப் பார்த்து பயமடைந்தவர்களாக தூரத்திலே நின்று கொண்டிருப்பார்கள்.</verse>
				<verse number="16">அவர்கள் அழுது புலம்பி, “ ‘ஐயோ பேரழிவு, ஐயோ பேரழிவு மகா நகரமே! மென்மையான பட்டாடையையும் ஊதாநிறத் துணியையும் சிவப்பு நிறத் துணியையும் அணிந்திருந்தவளே! தங்கத்தினாலும் மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தவளே!</verse>
				<verse number="17">ஒரு மணி நேரத்திலே இப்பேர்ப்பட்ட பெரும் செல்வம் பாழாய்ப் போனதே!’ ” என்று கதறுவார்கள். “கப்பல் தலைவர்கள் எல்லோரும், கப்பலில் பயணம் செய்கின்ற எல்லோரும், மாலுமிகளும், கடலில் தொழில் செய்கின்ற எல்லோரும் தூரத்தில் நின்று கொண்டிருப்பார்கள்.</verse>
				<verse number="18">அவள் சுட்டெரிக்கப்பட்டு அதனால் எழுகின்ற புகையை அவர்கள் கண்டு, ‘இந்த மகா நகரத்தைப் போல் எப்பொழுதேனும் ஒரு நகரம் இருந்ததோ?’ என்று கதறுவார்கள்.</verse>
				<verse number="19">அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை வாரி இறைத்து, அழுது புலம்பி, “ ‘ஐயோ பேரழிவு! ஐயோ பேரழிவு மகா நகரமே, கப்பல் உரிமையாளர்கள் எல்லோரும் அவளுடைய செல்வத்தினால்தானே செல்வந்தர்கள் ஆனார்கள்! ஒரு மணி நேரத்தில் அவள் பாழாய் போனாளே’ என்று கதறுவார்கள்.</verse>
				<verse number="20">“பரலோகமே, அவளைக் குறித்து மகிழ்ச்சியடைவாயாக! பரிசுத்தவான்களே, அப்போஸ்தலர்களே, இறைவாக்கினரே, நீங்களும் மகிழ்ச்சியடைவீர்களாக! அவள் உங்களுக்குச் செய்தவற்றுக்காக, இறைவன் அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்து விட்டார்.”</verse>
				<verse number="21">அப்போது வல்லமையுள்ள ஒரு இறைதூதன், பெரிய திரிகைக்கல் அளவுடைய ஒரு பாறாங் கல்லை எடுத்து அதைக் கடலில் எறிந்து அவன் சொன்னதாவது: “இதே போல, மாபெரும் நகரமான பாபிலோன், ஆவேசத்துடன் வீசி எறியப்படும். இனியொருபோதும் அது காணப்படாமல் போய்விடும்.</verse>
				<verse number="22">வீணை மீட்டுகின்றவர்களின் இசையும், இசைக் கலைஞர்கள், புல்லாங்குழல் ஊதுகிறவர்கள், எக்காளம் ஊதுகிறவர்கள் ஆகியோரின் இசையும் இனியொருபோதும் உன்னிடத்தில் ஒலிக்காது. எத்தொழில் துறையைச் சேர்ந்த எந்த தொழிலாளியும் இனியொருபோதும் உன்னிடத்தில் காணப்படுவதில்லை. திரிகைக்கல்லின் சத்தமும் இனியொருபோதும் உன்னிடத்தில் கேட்காது.</verse>
				<verse number="23">விளக்கின் வெளிச்சமும் இனியொருபோதும் உன்னிடத்தில் பிரகாசிக்காது. மணமகனின் குரலும், மணமகளின் குரலும் இனியொருபோதும் உன்னிடத்திலே கேட்காது. உன்னுடைய வர்த்தகர்களே உலகத்தில் முக்கியமானவர்களாக இருந்தார்கள். உன்னுடைய மந்திரச் சொற்களினால், எல்லா மக்கள் இனத்தவரும் தவறாக வழிநடத்தப்பட்டார்கள்.</verse>
				<verse number="24">இறைவாக்கினர்களினதும் பரிசுத்தவான்களினதும் இரத்தமும், பூமியிலே கொல்லப்பட்ட எல்லோருடைய இரத்தக் கறையும் அவளிடம் காணப்பட்டது.”</verse>
			</chapter>
			<chapter number="19">
				<verse number="1">இதற்குப் பின்பு, நான் பரலோகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பெரும் மக்கள் கூட்டத்தினரின் இரைச்சலைப் போல் இருந்தது: “அல்லேலூயா! இரட்சிப்பும், மகிமையும், வல்லமையும் நம்முடைய இறைவனுக்கே உரியவை.</verse>
				<verse number="2">ஏனெனில் அவருடைய நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை. தனது பாலியல் ஒழுக்கக்கேட்டினால் பூமியைச் சீர்கெடுத்துவிட்ட அந்த மாபெரும் விலைமாதுக்கு, இறைவன் தண்டனைத்தீர்ப்பு வழங்கிவிட்டார். தனது ஊழியரின் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக, அவர் அவளைப் பழிவாங்கியிருக்கிறார்.”</verse>
				<verse number="3">அவர்கள் மீண்டும் சத்தமிட்டு, “அல்லேலூயா! அவள் எரிக்கப்பட்டு அதனால் எழுகின்ற புகை, என்றென்றுமாய் மேல் நோக்கி எழுகிறது” என்றார்கள்.</verse>
				<verse number="4">அந்த இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு உயிரினங்களும் கீழே விழுந்து, அரியணையில் அமர்ந்திருந்த இறைவனை வழிபட்டார்கள். அவர்கள் சத்தமிட்டு, “ஆமென் அல்லேலூயா!” என்றார்கள்.</verse>
				<verse number="5">அப்போது அரியணையில் இருந்த ஒரு குரல், “இறைவனுடைய சகல ஊழியர்களே, அவருக்குப் பயப்படுகிறவர்களே, சிறியோர், பெரியோர்! நீங்கள் யாவரும் நம்முடைய இறைவனைத் துதியுங்கள்!” என்றது.</verse>
				<verse number="6">அதன்பின்பு, பெரும் மக்கள் கூட்டத்தினரின் இரைச்சலைப் போன்றதும், பாய்ந்து செல்லும் வெள்ளத்தின் இரைச்சலைப் போன்றதும், இடிமுழக்கத்தின் பெரும் ஓசையைப் போன்றதுமான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது உரத்த சத்தமிட்டு: “அல்லேலூயா! எல்லாம் வல்ல இறைவனாகிய நமது கர்த்தர் ஆளுகை செய்கின்றார்.</verse>
				<verse number="7">நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருப்போம். அவருக்கே மகிமையைச் செலுத்துவோம். ஏனெனில், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது. அவரது மணமகள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.</verse>
				<verse number="8">அவள் அணிந்துகொள்ளும்படி, பளபளப்பானதும் தூய்மையானதுமான மென்பட்டாடை அவளுக்குக் கொடுக்கப்பட்டது” என்று சொன்னது. அந்த மென்பட்டானது பரிசுத்தவான்களின் நீதிச் செயல்களைக் குறிக்கின்றது.</verse>
				<verse number="9">அப்போது அந்த இறைதூதன் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது!” என்றான். மேலும் அவன், “இது இறைவனின் சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னான்.</verse>
				<verse number="10">அப்போது, அவனை வணங்குவதற்காக நான் அவனுடைய பாதத்தில் விழுந்தேன். ஆனால் அவனோ என்னிடம், “நீ இப்படிச் செய்யாதே! இயேசுவுக்கு நற்சாட்சியாய் விளங்குகிற உன்னையும் உன் சகோதரர்களையும் போல, நானும் உங்களோடுகூட ஒரு சக ஊழியக்காரனாகவே இருக்கின்றேன். ஆகையால், இறைவனையே ஆராதனை செய்வாயாக. ஏனெனில் இயேசுவுக்கு சாட்சி கொடுப்பதே இறைவாக்கின் உள்ளார்ந்த எண்ணமாக இருக்கின்றது” என்றான்.</verse>
				<verse number="11">பின்பு நான் பரலோகம் திறந்திருப்பதைக் கண்டேன். எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக் குதிரை இருந்தது. அதன்மீது ஏறியிருந்தவர் உண்மையுள்ளவர் என்றும், உண்மையானவர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் நீதியுடன் நியாயம் தீர்த்து யுத்தம் செய்கின்றார்.</verse>
				<verse number="12">அவருடைய கண்கள், தீச்சுவாலை போல் இருந்தன. அவருடைய தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாத ஒரு பெயர் அவர்மீது எழுதப்பட்டிருந்தது.</verse>
				<verse number="13">இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஒரு அங்கியை அவர் அணிந்திருந்தார். “இறைவனுடைய வார்த்தை” என்பதே அவருடைய பெயர்.</verse>
				<verse number="14">பரலோகத்தின் படையணியினர் வெள்ளைக் குதிரைகளில் ஏறி அவருக்குப் பின்னால் சென்றனர். அவர்கள் வெண்மையும் தூய்மையுமான மென்பட்டாடை அணிந்திருந்தார்கள்.</verse>
				<verse number="15">அவருடைய வாயிலிருந்து மக்கள் இனங்களை வெட்டி வீழ்த்துவதற்கென கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டது. “அவர் அவர்களை ஒரு இரும்புச் செங்கோலினால் ஆளுகை செய்வார்.” அவர் எல்லாம் வல்ல இறைவனின் கோபம் என்னும் திராட்சை ஆலையை மிதிக்கிறார்.</verse>
				<verse number="16">அவருடைய அங்கியிலும் அவருடைய தொடையிலும் எழுதப்பட்டிருந்த பெயர் இதுவே: அரசர்களுக்கெல்லாம் அரசர், ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவர்.</verse>
				<verse number="17">அப்போது ஒரு இறைதூதன் சூரியனிலே நிற்பதைக் கண்டேன். அவன் நடுவானத்தில் பறக்கின்ற பறவைகளையெல்லாம் பார்த்து உரத்த குரலில், “வாருங்கள், இறைவனின் மகா விருந்திற்கு ஒன்றுகூடுங்கள்.</verse>
				<verse number="18">அப்போது அரசர்களினதும் படைத் தலைவர்களினதும் வலிமையான மனிதர்களினதும் குதிரைகளினதும் குதிரை வீரர்களினதும் சதையையும், சுதந்திரக் குடிமக்கள், அடிமைகள், பெரியவர், சிறியவர் ஆகிய எல்லா மக்களுடைய சதையையும் சாப்பிடுவீர்கள்” என்றான்.</verse>
				<verse number="19">அதன்பின்பு குதிரையில் ஏறியிருந்தவரையும் அவருடைய படையையும் எதிர்த்து யுத்தம் செய்யும்படியாக அந்த மிருகமும் பூமியின் அரசர்களும் அவர்களின் இராணுவங்களும் ஒன்றுகூடி இருப்பதைக் கண்டேன்.</verse>
				<verse number="20">ஆனால் அந்த மிருகமோ பிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த மிருகத்தின் சார்பாக அற்புத அடையாளங்களைச் செய்த போலி இறைவாக்கினனும் பிடிக்கப்பட்டான். இவனே மிருகத்தின் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்களையும் அதன் உருவச் சிலையை வணங்கியவர்களையும் தனது அற்புத அடையாளங்களினாலேயே ஏமாற்றியவன். பிடிபட்ட அவர்கள் இருவரும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரிக்குள் உயிருடன் வீசப்பட்டார்கள்.</verse>
				<verse number="21">எஞ்சியிருந்த மற்றவர்களோ, குதிரையில் அமர்ந்திருந்தவருடைய வாயிலிருந்து வெளிவந்த வாளினால் கொல்லப்பட்டார்கள். எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையை உட்கொண்டு திருப்தியடைந்தன.</verse>
			</chapter>
			<chapter number="20">
				<verse number="1">பின்பு பரலோகத்திலிருந்து ஒரு இறைதூதன் இறங்கி வருவதைக் கண்டேன். அவன் பாதாளத்தின் சாவியையும், கையிலே ஒரு பெரிய சங்கிலியையும் வைத்திருந்தான்.</verse>
				<verse number="2">அவன் பழங்காலத்துப் பாம்பை, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அந்த இராட்சதப் பாம்பைத் துரத்திப் பிடித்து, அதை ஆயிரம் வருடங்களுக்குக் கட்டி வைத்தான்.</verse>
				<verse number="3">அந்த ஆயிரம் வருடங்கள் முடியும் வரை மக்களை அவன் இனியும் ஏமாற்றாதபடி, அவனைப் பாதாளக்குழிக்குள் தள்ளி பூட்டியடைத்து, அதன்மீது முத்திரையையும் பதித்தான். அந்தக் காலம் முடிந்த பின்பு, சிறிது காலத்திற்கு அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.</verse>
				<verse number="4">நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் அமர்ந்திருந்த அரியணைகளைக் கண்டேன். அதன்பின்பு, இயேசுவுக்காக சாட்சி கொடுத்ததற்காகவும், இறைவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டதற்காகவும் தலை துண்டிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆத்துமாக்களையும் கண்டேன். இவர்கள் அந்த மிருகத்தையோ அதன் உருவச் சிலையையோ வணங்காதவர்கள்; தங்கள் நெற்றியிலோ அல்லது தங்கள் கைகளிலோ அவனுடைய அடையாளத்தைப் பெறாதவர்கள். இவர்கள் உயிர் பெற்று எழுந்து, கிறிஸ்துவுடனே ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்தார்கள்.</verse>
				<verse number="5">மரணித்த மற்றவர்களோ அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும் வரை உயிர் பெற்று எழுந்திருக்கவில்லை. இதுவே முதலாவது உயிர்த்தெழுதல்.</verse>
				<verse number="6">முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பரிசுத்தமுள்ளவர்களுமாய் இருக்கின்றார்கள். இவர்கள் மீது இரண்டாம் மரணத்திற்கு வல்லமை இல்லை. இவர்கள் இறைவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய மதகுருக்களாக இருந்து கிறிஸ்துவோடு ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.</verse>
				<verse number="7">அந்த ஆயிரம் வருடங்கள் முடிவடையும்போது சாத்தான் தன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவான்.</verse>
				<verse number="8">அவன் பூமியின் நான்கு பக்கங்களிலும் இருக்கின்ற கோகு மற்றும் மாகோகு தேச மக்களை ஏமாற்றுவதற்காகவும், யுத்தத்திற்காக அவர்களை ஒன்றுதிரட்டி சேர்ப்பதற்காகவும் புறப்பட்டுப் போவான். எண்ணிக்கையில் அவர்கள் கடற்கரை மணலைப் போல் இருப்பார்கள்.</verse>
				<verse number="9">அவர்கள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் கடந்து அணிவகுத்து வந்து, இறைவனுடைய மக்களின் முகாமையும், அவர் அன்பாயிருக்கின்ற நகரத்தையும் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால், வானத்திலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டெரித்துவிட்டது.</verse>
				<verse number="10">அவர்களை ஏமாற்றிய பிசாசானவன், கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரியில் தள்ளி வீசப்பட்டான். அங்கேதான் அந்த மிருகமும் போலி இறைவாக்கினனும் வீசப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவும் பகலும் என்றென்றும் அங்கே வேதனை அனுபவிப்பார்கள்.</verse>
				<verse number="11">பின்பு, பெரிய வெண்மையான அரியணையையும் அதில் அமர்ந்திருக்கின்றவரையும் கண்டேன். அவரது முன்னிலையில் பூமியும் வானமும் விலகியோடி, அவை இடமின்றிப் போயின.</verse>
				<verse number="12">பின்பு நான், மரணித்த பெரியோர்களும் சிறியோர்களும் அந்த அரியணைக்கு முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது புத்தகங்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் புத்தகம் என்ற இன்னொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அந்த புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தபடி, இறந்தவர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கேற்ப நியாயத்தீர்ப்பு பெற்றார்கள்.</verse>
				<verse number="13">கடலில் இறந்தவர்களை கடல் ஒப்படைத்தது. மரணமும் பாதாளமும் அவைகளுக்குள் இருந்த இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தாம் செய்த செயல்களுக்கேற்ப நியாயத்தீர்ப்பு பெற்றார்கள்.</verse>
				<verse number="14">பின்பு, மரணமும் பாதாளமும் நெருப்பு ஏரியில் தள்ளி வீசப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாவது மரணம்.</verse>
				<verse number="15">எவரது பெயர் வாழ்வின் புத்தகத்திலே எழுதப்படவில்லையோ, அவர் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டார்.</verse>
			</chapter>
			<chapter number="21">
				<verse number="1">பின்பு நான், “ஒரு புதிய வானத்தையும், ஒரு புதிய பூமியையும்” கண்டேன். ஏனெனில் முன்பு இருந்த வானமும் முன்பு இருந்த பூமியும் இல்லாமல் போயின. அங்கே கடலும் இல்லாமல் போனது.</verse>
				<verse number="2">அப்போது, புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அது தனது கணவனுக்காக அழகாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளைப் போல் ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="3">அப்போது அரியணையில் இருந்து ஒரு உரத்த குரல்: “இறைவன் தங்குகின்ற இடம் இப்போது மனிதருடன் இருக்கின்றது. அவர்களோடு அவர் குடியிருப்பார். அவர்கள் அவருடைய மக்களாயிருப்பார்கள். இறைவன் தாமே அவர்களுடன் இருந்து அவர்களுடைய இறைவனாயிருப்பார்.</verse>
				<verse number="4">‘அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் அவர் துடைப்பார். இனிமேல் மரணம் இருக்காது.’ புலம்பலோ, அழுகையோ, வேதனையோ இருக்காது. ஏனெனில், முன்பு இருந்த முறைமைகள் இல்லாமல் போயின” என்று சொல்வதைக் கேட்டேன்.</verse>
				<verse number="5">அரியணையில் அமர்ந்திருந்தவர், “இதோ நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்!” என்று சொன்னார். மேலும் அவர், “இதை எழுதி வை. ஏனெனில், இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன” என்றார்.</verse>
				<verse number="6">பின்பு, அவர் என்னிடம் சொன்னதாவது: “அது செய்து முடிந்தாயிற்று! நானே அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றேன். தாகமாய் இருக்கின்றவனுக்கு வாழ்வு தரும் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாக அருந்தக் கொடுப்பேன்.</verse>
				<verse number="7">வெற்றி பெறுகின்றவர்கள் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்வார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாயிருப்பார்கள்.</verse>
				<verse number="8">ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர்கள், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்கள், மந்திரவித்தைகளில் ஈடுபடுகின்றவர்கள், சிலைகளை வணங்குகின்றவர்கள், சகல பொய்யர்கள் ஆகிய இவர்கள் அனைவருக்கும் கந்தகம் எரிகின்ற நெருப்பு ஏரியே உரிய பங்காக அமையும். இதுவே இரண்டாவது மரணம்.”</verse>
				<verse number="9">அப்போது, கடைசி ஏழு வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு இறைதூதர்களில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, நான் உனக்கு ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப் போகும் மணமகளைக் காட்டுகிறேன்” என்றான்.</verse>
				<verse number="10">அப்போது, ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் என்னை ஒரு பெரிய உயர்ந்த மலைக்கு அந்த இறைதூதன் கொண்டு சென்றான். அவன் எனக்கு பரிசுத்த நகரமாகிய எருசலேம், இறைவனிடமிருந்து பரலோகத்தை விட்டு கீழே வந்துகொண்டிருந்ததைக் காண்பித்தான்.</verse>
				<verse number="11">அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. விலையுயர்ந்த மாணிக்கக் கல்லின் பிரகாசத்தைப் போலவும், படிகைக் கல்லைப் போலவும், பளிங்குக் கல்லைப் போலவும் அது மின்னியது.</verse>
				<verse number="12">அந்த நகரத்திற்கு உயர்ந்த பெரிய மதிலும், பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. அந்த வாசல்களில் பன்னிரண்டு இறைதூதர்கள் நின்றார்கள். அந்த வாசல்களில் இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.</verse>
				<verse number="13">அதன் மூன்று வாசல்கள் கிழக்கிலும், மூன்று வாசல்கள் வடக்கிலும், மூன்று வாசல்கள் தெற்கிலும், மூன்று வாசல்கள் மேற்கிலுமாக அமைந்திருந்தன.</verse>
				<verse number="14">அந்த நகரத்தின் மதிலானது பன்னிரண்டு அத்திவாரங்களின் மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின் மீது ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.</verse>
				<verse number="15">என்னுடன் பேசிய இறைதூதன், அந்த நகரத்தையும் அதன் வாசல்களையும் அதன் மதில்களையும் அளப்பதற்கு தங்கத்தினாலான ஒரு அளவுகோலை வைத்திருந்தான்.</verse>
				<verse number="16">அந்த நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவாயிருந்தன. அவன் அந்த கோலினால் நகரத்தை அளந்தான். அது 2,200 கிலோ மீட்டர் நீளமாய் இருந்தது, அவ்வாறே அதன் அகலமும் உயரமும் அதே அளவுடையதாக இருந்தன.</verse>
				<verse number="17">அவன் அந்த நகரத்தின் மதிலையும் அளந்தான். மனிதர் பயன்படுத்தும் அளவீட்டின்படி அது சுமார் 65 மீட்டர் அளவுடையதாக இருந்தது. அதுவே இறைதூதனின் அளவீடாகவும் இருந்தது.</verse>
				<verse number="18">அந்த மதில் படிகைக் கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரம் கண்ணாடி போன்ற தூய்மையான தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="19">அந்த நகரத்து மதில்களின் அத்திவாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதலாவது அத்திவாரம் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல்,</verse>
				<verse number="20">ஐந்தாவது கோமேதகக்கல், ஆறாவது பதுமராகக்கல், ஏழாவது சுவர்ணரத்தினக்கல், எட்டாவது படிகைப் பச்சைக்கல், ஒன்பதாவது புஷ்பராகக்கல், பத்தாவது வைடூரியக்கல், பதினோராவது இந்திர நீலக்கல், பன்னிரண்டாவது சுகந்திக்கல் என்பதாக இருந்தன.</verse>
				<verse number="21">அதன் பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் தனியொரு முத்தைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் பெரிய வீதி தெளிவான கண்ணாடியைப் போன்ற சுத்தத் தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.</verse>
				<verse number="22">அந்த நகரத்தில், நான் ஆலயத்தைக் காணவில்லை. ஏனெனில், எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அந்த நகரத்தின் ஆலயம்.</verse>
				<verse number="23">அந்த நகரத்தில் ஒளி கொடுக்க சூரியனோ சந்திரனோ அவசியமில்லை. ஏனெனில், இறைவனுடைய மகிமையே அதற்கு ஒளி கொடுக்கின்றது. ஆட்டுக்குட்டியானவரே அதன் விளக்கு.</verse>
				<verse number="24">மக்கள் இனங்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் அரசர்கள் தங்கள் மகிமையை நகரத்தினுள் கொண்டுசெல்வார்கள்.</verse>
				<verse number="25">அந்த நகரத்தின் வாசல்கள் ஒருநாளும் மூடப்படுவதில்லை. ஏனெனில் அங்கே இரவு இல்லை.</verse>
				<verse number="26">உலக மக்களின் மகிமையும் புகழ்ச்சியும் அதற்குள் கொண்டு செல்லப்படும்.</verse>
				<verse number="27">அசுத்தமான எதுவும் அதற்குள் ஒருபோதும் நுழையாது. வெட்கக்கேடானவற்றைச் செய்கின்றவனோ ஏமாற்றுகின்றவனோ அதற்குள் செல்ல மாட்டான். ஆனால், ஆட்டுக்குட்டியானவருடைய வாழ்வின் புத்தகத்தில் தங்களின் பெயர்கள் எழுதப்பட்டவர்கள் மட்டுமே அதற்குள் செல்வார்கள்.</verse>
			</chapter>
			<chapter number="22">
				<verse number="1">பின்பு அந்த இறைதூதன் வாழ்வு தரும் தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அது பளிங்கைப் போல் தெளிவாய் இருந்தது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து அது புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.</verse>
				<verse number="2">அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக அது பாய்ந்து ஓடியது. ஆற்றின் இரு புறமும், மாதம் ஒருமுறை பன்னிரண்டு விதமான பழங்களைக் கொடுக்கும் வாழ்வின் மரம் இருந்தது. அந்த மரத்தின் இலைகள் மக்களுக்கு குணமளிப்பதற்காக அமைந்திருந்தன.</verse>
				<verse number="3">அங்கே இனி சபிக்கப்பட்ட எதுவும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். இறைவனுடைய ஊழியர்கள் அவருக்குப் பணிவிடை செய்வார்கள்.</verse>
				<verse number="4">அவருடைய முகத்தை அவர்கள் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.</verse>
				<verse number="5">இனிமேல் இரவு இருக்காது. விளக்கின் வெளிச்சமோ சூரிய வெளிச்சமோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சி செய்வார்கள்.</verse>
				<verse number="6">அந்த இறைதூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும், உண்மையானவையுமாய் இருக்கின்றன. இறைவாக்கினரின் ஆவிகளுக்கு இறைவனாயிருக்கிற கர்த்தர், விரைவில் நிகழவிருக்கும் காரியங்களைத் தம்முடைய ஊழியர்களுக்குக் காண்பிப்பதற்காகத் தமது இறைதூதனை அனுப்பினார்” என்றான்.</verse>
				<verse number="7">“இதோ, நான் விரைவில் வருகின்றேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கின் வார்த்தைகளைக் கைக்கொள்கின்றவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”</verse>
				<verse number="8">யோவானாகிய நானே இதைக் கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தேன். நான் கேட்டும் பார்த்தும் முடிந்ததும், இவற்றை எனக்குக் காண்பித்த இறைதூதனை வணங்குவதற்காக அவனுடைய பாதத்தில் விழுந்தேன்.</verse>
				<verse number="9">ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னையும், இறைவாக்கினர்களாகிய உன் சகோதரர்களையும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகின்ற எல்லோரையும் போல, நானும் உங்கள் அனைவரோடும்கூட ஒரு சக ஊழியக்காரனாகவே இருக்கின்றேன். ஆகையால், இறைவனையே ஆராதனை செய்வாயாக” என்றான்.</verse>
				<verse number="10">பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கின் வார்த்தைகளை மூடி முத்திரையிட வேண்டாம். ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது.</verse>
				<verse number="11">அநியாயம் செய்கின்றவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும், சீர்கெட்டவன் தொடர்ந்து சீர்கெடட்டும், நியாயம் செய்கின்றவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும், பரிசுத்தமாய் இருக்கின்றவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.”</verse>
				<verse number="12">“இதோ, நான் வெகுவிரைவாய் வருகின்றேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கின்றது. அவனவன் செய்த செயலுக்கு ஏற்றபடி அவனவனுக்கு நான் பரிசளிப்பேன்.</verse>
				<verse number="13">நானே அல்பாவும் ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும் முடிவுமாய் இருக்கின்றேன்.</verse>
				<verse number="14">“வாழ்வு தரும் மரத்தின் பழத்தை உண்ணும் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கும் வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் தங்கள் உடைகளைக் கழுவி தூய்மைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.</verse>
				<verse number="15">நாய்களைப் போல் சீர்கெட்டவர்களும், மந்திரவித்தைக்காரர்களும், பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவோரும், கொலைகாரர்களும், சிலைகளை வணங்குகின்றவர்களும், பொய்யை நேசித்து பொய்யராய் வாழ்கின்ற அனைவரும் நகரத்திற்கு வெளியே இருப்பார்கள்.</verse>
				<verse number="16">“இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேராகவும், சந்ததியாகவும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாக இருக்கின்றேன்.”</verse>
				<verse number="17">ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கின்றவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாய் இருக்கின்ற எவரும் வரட்டும். விரும்புகின்ற எவரும் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாகப் பெற்றுக்கொள்ளட்டும்.</verse>
				<verse number="18">இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை இறைவன் அவனுக்குச் சேர்ப்பார்.</verse>
				<verse number="19">யாராவது இந்த இறைவாக்குப் புத்தகத்தின் வார்த்தைகளில் இருந்து எதையாவது நீக்கிவிட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிவிடுவார்.</verse>
				<verse number="20">இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கின்றவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகின்றேன்” என்கிறார். ஆமென். ஆண்டவர் இயேசுவே வாரும்.</verse>
				<verse number="21">ஆண்டவர் இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.</verse>
			</chapter>
		</book>
	</testament>
</bible>